/

காலம், இதழ் 56 – மு.நித்தியானந்தத்திற்கு ஓர் எதிர்வினை: அனோஜன் பாலகிருஷ்ணன்

காலம் இதழின் அட்டைப்படமாக கே.எஸ்.சிவகுமாரனின் புகைப்படத்தைப் பிரசுரித்து “கே.எஸ்.சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டு காலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது…” என்ற அடைமொழியுடன் பிரசுரித்துள்ளது. இந்த அடைமொழி, மு.நித்தியானந்தன் அவர்கள் அதே காலம் இதழில் எழுதிய “கே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம்” கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கட்டுரையை முழுவதும் படித்தபின்னர், அழுத்தமாக எதிர்வினை எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது.

கே.எஸ்.சிவகுமாரன் ஒரு பத்தி எழுத்தாளர். ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல்வேறு பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார். ஆனால், இலக்கியத்தில் புலமை கொண்டவர் இல்லை என்பதற்கு அவர் எழுதியிருக்கும் பதிவுகளே சாட்சி. ஏன் பதிவுகள் என்கிறேன் என்றால், அவரால் திறனாய்வோ அல்லது விமர்சனமோ எழுத முடிந்ததில்லை. அவரும் தான் எழுதுவதை விமர்சனம் என்றெல்லாம் கூறியதாகத் தெரியவில்லை. முன்னெச்சரிக்கையாகப் பத்தி எழுத்துகள் என்கிறார். இருந்தும் ‘கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில’ என்ற பெயரில் புத்தகமும் வெளியிடப்படுள்ளது.  இது ஒரு மோசடி. பத்தி எழுத்துகளுக்கான சுவாரஸ்யமும், தனிப்பார்வையும் அதிலில்லை. மேன்போக்கான எல்லோராலும் இலகுவில் எழுதிவிடக்கூடிய அறிமுகக்குறிப்புகளையே தொடர்ந்தும் அவர் வெவ்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.  அதனைத் திறனாய்வு/ மதிப்பீடு என்ற தலைப்பில் வெளியிடுவதை மோசடி என்கிறேன்.

கே.எஸ்.சிவகுமாரின் “அண்மைக்காலத்து ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்” நூலினை ஓர் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். பதினெட்டு சிறுகதை நூல்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பற்றி குறிப்புகளே கொடுத்திருக்கிறார். ஆம், அவை குறிப்புகளே. மூன்று, நான்கு வரிகளில் ஒவ்வொரு கதைகளைப் பற்றியும் குறிப்புகள் கொடுக்கிறார். அந்தக் குறிப்புகள் எளிய அபிப்பிராயங்கள்.

உதாரணங்கள் சில,

“காலம் காத்திருக்குமா” கதையில் சுயநலமிக்க ஓர் இளைஞனின் போக்கையும் அவன்மீது பாசங்கொண்ட தாயினதும் தங்கையினதும் மனோநிலையையும் ஆசிரியர் விளக்குகிறார்.

ஆசிரியர் உடுவை தில்லை நடராஜா “விருந்து” என்ற தமது கதையில் பணக்காரர்களின் மனோபாவத்தையும், இல்லாதவர்கள் மனோபாவத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

“சந்நிதி கோயில் சாப்பாடு” கதையில் வேஷதாரித் தனத்தைக் கிழித்துக் காட்டுகிறார். வலியாரும், மெலியாரும் மோதும் கட்டங்களில் நல்லதை உணர்த்துபவர்கள் மெலியர்கள்தான் என்ற ரீதியில் ஆசிரியர் தமது கதைகளைச் சமைக்கிறார். இக்கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இந்தக் குறிப்புகளை படிக்கும்போது, அறிமுகம் என்பதைத் தாண்டி, ஓர் அறிமுக வாசகர் தனது கற்பனையில் விரித்தெடுத்து வளர்ந்து செல்ல தூண்டுதல்கள், வழிகாட்டுதல்கள் இதிலில்லை என்பதை வாசிப்பு ஆர்வம் கொண்டவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். பாசங்கொண்ட தாயினதும், தங்கையினதும் பாசத்தின் மனநிலையை ஆசிரியர் விளக்குகிறார் என்பதைக் கண்டறிந்து சொல்வதில் என்ன தனித்துவமான பார்வை உள்ளது?, ஆரம்பப் பாடசலையில், ‘கதையின் சுருக்கத்தைச் சொல்க’ என்று கேட்கும் கேள்விகளுக்கு, பாலர் மாணவர்கள் கொடுக்கும் விடையைப் போல் அல்லவா உள்ளது இது?, இதனை ஏன் ஒரு இலக்கிய மதிப்பாளர் ஏன் செய்ய வேண்டும்? அவருக்கு மேலதிகமான பொறுப்புகள் உள்ளன அல்லவா?

இதுபோல மிகுதிக் குறிப்புகளை எடுத்து நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். இவற்றை கே.எஸ்.சிவகுமாரின் போதாமைகளாகச் சொல்லாம்.

அவருக்கு தனிப்பட்ட அவதானங்கள் என்று எதையும் தன் பதிவுகளில் சொல்லும் ஆற்றல் இல்லை என்பது ஒருபுறம் என்றால், இன்னொருபக்கம் அவர் உபயோகிக்கும் சொற்கள். ‘அற்புதமாக விளக்கியிருக்கிறார்’, ‘உன்னிப்பாக அவதானித்திருக்கிறார்’, ‘இனிய எளிமையான’, ‘கவித்துவ நடையைக்கொண்ட’, ‘மிகவும் சுவாரஸ்யமான…’ பலபலபல…etc போன்ற வார்த்தைகளை திரும்பத் திரும்பப் பயன்படுத்தி எழுதிப் பக்கத்தை நிறைக்கிறார். இதுவொரு துயரம் என்றால், மறுபக்கம் அவர் கொடுக்கும் ஆங்கிலக் கலைச்சொற்கள். இவற்றை உடனே பார்த்தால் பீதியைக் கிளப்பினாலும், அவை சரியாக எழுதப்படவில்லை.

உதாரணம்,

Uma varatharajan’s unorthodox Novel என்ற தலைப்பில் உமாவரதராஜன் பற்றி எழுதிய கட்டுரை, பின்வருமாறு ஆரம்பிக்கிறது.

Uma Varatharajan is an avant-garde writer in Tamil hailing from the East living in Kalmunai, now in retirement from being the Senior Manager of Singer in that area. He writes at leisure and an aesthete at heart with a natural bent towards humour and a slight mischievousness in sarcasm.

Avant-garde writer என்பது ஒரு காலகட்டத்தின் புதிய போக்கை தீர்மானித்தவரை குறிப்பிட பயன்படுத்துவது. சிவகுமாரன் தனக்கு அந்த வார்த்தை தெரியும்  என்பதற்காக இவற்றைப் பயன்படுத்துகிறார் என்ற அய்யமே ஏற்படுகின்றது. உமாவரதராஜன் நல்ல சிறுகதைகள் பலவற்றை எழுதி இருக்கிறார். ஆனால், அவரை Avant-garde writer என்பதற்குள் பொருத்த இயலாது.

திரைப்படங்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகள் பலதை கே.எஸ்.சிவகுமாரன் எழுதியிருப்பதை குறிப்பிட வேண்டும். உண்மையில் தேடுதல் ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஆரம்பக் கையேடாக அவை இருக்கலாம். இருத்தும் இக்குறிப்புகளும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. Documentary filmக்கு ‘புனையா மெய்விளக்கம்’ என்றொரு புதிய தமிழ் அர்த்த கண்டுபிடிப்பைச் செய்து சிவகுமாரன், சரிநிகரில் எழுதியபோது, ‘நட்சத்திரன் செவ்விந்தியன்’ அடுத்த சரிநிகரில் இவற்றிலுள்ள முரண்களை சுட்டிக்காட்டி விரிவாகவே எழுதி, பத்தி எழுத்துகளுக்குக் கூட தகுதியற்ற சிவகுமாரின் எழுத்துக்களை சரிநிகர் ஆசிரியர்கள் ஏன் வெட்டித்தனமாக வெளியிடுகிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.

உண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் பங்களிப்பு என்ன? ஒரு நவீன வாசகர் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

அ. அவரால் பத்தி எழுத்துகளை தொடர்ச்சியாக எழுத முடிந்தது.

ஆ. அவர் எழுதிய பத்திகள் எளிய அறிமுகக் குறிப்புகள்.

இ. இலக்கியத்திற்குள் நுழைபவர்களுக்கு சில தரவுகளைக் கொடுக்கக்கூடியது. (அதனைக் கொண்டு தீவீரமாக வாசித்து மேலேறிச் செல்வது வாசகர்களின் ஆர்வம் சார்ந்தது)

ஈ. ஆங்கிலத்தில் நல்ல புலமையானவர்.

இவற்றை அவரது ஆளுமைகளாகச் சொல்லலாம். அதைவிட பல்வேறு சர்வதேச பத்திரைகளில் எழுதியிருப்பதை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். ஈழ தமிழிலக்கிய எழுத்தாளர்களை சர்வதேச பத்திரிக்கைகளில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்பதை நாம் வரவேற்க வேண்டும். ஆனால், அவற்றிலும் பல்வேறு விடுபடல்கள், தனித்துவ பார்வைகள் இல்லாமல் எழுதப்பட்ட குறிப்புகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. அலை 33-ஆவது இதழில் அ.யேசுராசா எழுதிய எதிர்வினை ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.

<<நீண்டகாலமாக இலங்கைத் தமிழ் இலக்கியத் துறைகளைப்பற்றி எழுதிவரும் கே.எஸ் சிவகுமாரனின் மிக நீண்ட (33 பக்கங்கள்) செவ்வியொன்று, யப்பானிலுள்ள “நாகசாகி பல்கலைக்கழக வெளியீடொன்றில் – ஆங்கிலத்தில், வெளியாகி (ஜனவரி – 88) இருக்கிறது; லெறேய் ரொபின்சன் இச்செவ்வியினை நடாத்தியுள்ளார். பிறநாட்டு வெளியீடு ஒன்றில் எம்மவரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது, முக்கியத்துவம் பெறும் விடயம்தான்.

ஈழத்துக் கலாசாரச் சூழலைப்பற்றிச் சிவகுமாரன் தெரிவிக்கையில், சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, செ.கணேசலிங்கன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, பவானி, கோகிலா மகேந்திரன் ஆகியோரைப்பற்றி விரிவான விபரங்களைத் தருகிறார்: தெளிவத்தை ஜோசப், செ.யோகநாதன், இலங்கையர்கோன், அ.முத்துலிங்கம், செ. கதிர்காமநாதன், கே.கணேஷ், ஈழவாணன், ஈழகணேஷ் பற்றி ஒரளவு குறிப்புகள் தருகிறார். வேறு சிலரின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறார். ஆனால், முக்கியமான பலரைப்பற்றி எதுவுமே குறிப்பிடாதும் விட்டுவிடுகிறார். இயல்பாக, அவர்களது பங்களிப்பும் சரியாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். முக்கியமானவர்கள் விடப்பட்டிருப்பதால் இந்தச் செவ்வி அரைகுறையானதாக – திரிபுபட்ட தோற்றத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. முக்கியமாக விடுபட்டவர்கள் என்று பார்க்கையில்: 1) சிறுகதை: – அ.செ.மு., சி. வைத்திலிங்கம், க. தி. சம்பந்தன், எஸ்.பொன்னுத்துரை. மு. தளையசிங்கம், வரதர், மருதூர்க்கொத்தன், என். கே ரகுநாதன், நந்தி, கே.வி.நடராஜன், எம். எல். எம். மன் சூர், உமா வரதராஜன், ரஞ்சகுமார், நந்தினி சேவியர். 2) கவிதை – மஹாகவி, நீலா வணன், சண்முகம் சிவலிங்கம், மு. பொன்னம்பலம், தா.இராமலிங்கம், நுஃமான், இ.முருகையன், சு. வில்வரத்தினம், சேரன், சிவசேகரம், ஜெயபாலன். 3) பெண் எழுத்தாளர்- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், குந்தவை, செளமினி, கவிதா ஆகியோர் விடப்பட்டுள்ளனர். சஞ்சிகைகளில் மல்லிகைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அலை, புதுசு ஆகியன வெறும் பெயர்களாக வருகின்றன. ஆனால், இவ்விரண்டின் முக்கியத்துவம் – குறிப்பாக ஏனையவற்றிலிருந்து பெரிதும் மாறுபடும் – அழுத்தங் கொடுக்கும் விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறைகளைச் சித்திரிக்கும் படைப்புகள் பற்றியும் தனியாக – அதன் சமகால முக்கியத்துவம் கருதிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனல் ஒடுக்கும் இனத்தின் வன்முறையையும், ஒடுக்கப்படும் இனத்தின் வன்முறையையும் தவமுகச் சமப்படுத்தி, இரண்டையும் பயங்கரவாதம் என்றே, சிவகுமாரன் முத்திரையிடுகிறார்.>>

அ.யேசுராசாவின் இந்த எதிர்வினை முக்கியத்துவம் மிக்கது. இதழ்களுக்கு இடையிலான வேறுபாடுகள், அவற்றின் போக்குகள் பற்றி குறிப்பிடாமல் பொத்தம் பொதுவாக எழுதியிருப்பது சார்ந்து, யேசுராசா சொல்வது கவனத்தில் கொள்ள வேண்டியவை. ‘அலை’ அந்தக் காலகட்டத்தில் பல இலக்கிய உரையாடல்களைத் தீவிரமாக நிகழ்த்தியது. முக்கியமாக கா.சிவத்தம்பி, கைலாசபதி இவர்களது பிரச்சார போக்குக்கு எதிரான விவாத்தை நிகழ்த்தியது. இந்தத் தளங்களைத் தொட்டுப் பேசாமல் பொத்தம் பொதுவாக நேர்காணல்கள் கொடுப்பது இலக்கியத்திற்கு எதிரான செயல்பாடே.

02

ஓர் ஆளுமையை மதிப்பிடும்போது, அவர்களது நேர் அம்சங்களை சுட்டுவதோடு, மறையான அம்சங்களையும் கோடிட்டு மதிப்பிடுவதே முறையாகும். மதிப்பிடும்போது, நமது தர்க்கங்களை சுட்டி எழுதுவதே விவாதத்திற்குச் சரியாக இருக்கும். துரதிஷ்டவசமாக மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய இக்கட்டுரையில் தர்க்க விளக்கங்களைக் காண இயலவில்லை. அது கே.எஸ்.சிவகுமாரின் மீதான மதிப்பீட்டை நம்பகத்தன்மையை இல்லாமல் செய்கிறது.

இனி மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய கட்டுரைக்கு வருவோம். கட்டுரை இவ்வாறு ஆரம்பிக்கிறது.

“ஈழத்து இலக்கியத்தோப்பில்  வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ்.சிவகுமாரன்” பெரிய மரத்தோடு ஒப்பீட்டு றைம்மிங்காக நித்தியானந்தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். அது என்ன வைரம் பாய்ந்த தனி விருட்சம்? ஆழ வேரோடிய, கிளை விரித்த, குளிர் பரப்பிய எல்லாம் ஏன் வருகின்றன? கே.எஸ்.சிவகுமாரனின் ஆளுமையை ஒப்பீட்டுச் சொல்லவா? எனக்கு “இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்” என்ற திரைப்படப் பகிடியை இது நினைவு படுத்துகிறது. “ஈழத்தில் தனித்த ஆளுமை கே.எஸ்.சிவகுமாரன்” என்று எழுதிவிடலாம். இந்த ஒப்புமைகள் ஏன்? சரி டென்ஷன் ஆகாமல் மேலும் படிக்கலாம் என்று ஆரம்பிகும்போதுதான் இன்னும் பெரிய பெரிய புதிர்களும், ஆச்சரியங்களும் என்னைச் சூழ்த்து கொள்கின்றன.

அவற்றைச் சீராகப்பிரித்தறிந்து அணுக, மு.நித்தியானந்தன் எழுதிய இந்தப் பந்தியை ஓர் ஆராய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

<< சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History  என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.>>

சிவகுமாரன், என்ன சாரத்தைத் தருகிறார்? அது எந்த வகையில் நித்தியானந்தன் வியக்கும் வகையில் ஒரு பெரிய வாசிப்பாக இருக்கிறது?

<<Walter Sutton and Richard Foster என்போர் இணைந்து எழுதிய  Modern Criticism: Theory and Practice என்ற பாரிய நூலைப் பற்றிய தகவல்களைத் தருகிறார் கே.எஸ். சிவகுமாரன். Ceylon Daily News பத்திரிகையில் 1973இல் ஆறு இதழ்களில் எஸ்ரா பவுண்ட் பற்றி மேர்வின் த சில்வா, ரெஜி சிறிவர்தன ஆகிய இரு ஆங்கில விமர்சகர்களுக்கிடையே நடந்த இலக்கிய விவாதத்தைச் சுருக்கமாகத் தமிழ் வாசகர்களின் முன் வைத்த ஆர்வத்தை எப்படிப் பாராட்டுவது? >>

சரி பாராட்டுவது எல்லாம் இருக்கட்டும். அது என்ன பாரிய நூல் பற்றிய தகவல்? அந்த தகவலை நிந்தியானந்தன் எப்படி மதிப்பிடுகிறார்? இவை பற்றி ஒன்றுமே இங்கேயில்லையே!

<<தொடர்ச்சியான அந்த இலக்கிய விவாதத்தைக் கருத்தூன்றிக்  கிரகித்து, தமிழ் வாசகர்களை மிரட்டாமல், சுருக்கமாக – எளிமையாக அப்பெரும் இலக்கிய சர்ச்சையை, சாதாரண தமிழ் வாசகனுக்கு எடுத்துச்செல்லும் பணி எத்தகைய பணி! ஆழ்ந்த வாசிப்போடு, அதனை எளிமையாக – சுருக்கமாக தமிழில் வழங்குவதற்கு எத்தகைய ஆளுமை வேண்டும்! >>

அது என்ன தமிழ் வாசகர்களை மிரட்டுதல்? சுருக்கமாக எளிமையாக சொல்வது மிரட்டுதல் அல்ல என்றும், விரிவாக சொல்வது மிரட்டுதல் என்றும் மறைமுகமாக சொல்ல வருகிறாரா? அப்படி எவ்வகையில் எளிமையாகச் சொல்லி, தமிழ் வாசகர்களுக்கு சொல்லி மகத்தான பணியை ஆற்றியிருக்கிறார்? நித்தியானந்தன் வார்த்தைக்கு வார்த்தை பவுடர் அடித்துப் புகழ்கிறாரே தவிர, இது குறித்த தனது சொந்தக் கருத்தை சொல்லவே இயலவில்லையே!

இந்த வியப்போடு கட்டுரையைப் படித்து முடித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. மு.நித்தியானந்தன் அவர்கள் தரவுகளை சொல்லிக்கொண்டு, கே.எஸ். சிவகுமாரனை புகழ்கிறார். இவற்றில் அவரது மதிப்பீடு இல்லை. அதாவது, கே.எஸ் சிவகுமார் எழுதிய கட்டுரையின் சாரம் எப்படிபட்டது என்பதைச் சொல்லி, அதனைத் தனது புரிதலில் இருந்து மதிப்பிட வேண்டும். அது இங்கே நிகழவில்லை. இதே கட்டுரையை முற்றிலும் எதிராக மாற்றிப் பார்க்கலாம். உதாரணத்திற்கு இவ்வரிகளை எடுப்போம்,

<< சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History  என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். எத்தகைய வாசிப்பு இது.>>

இதனை இப்படி மாற்றலாம்,

<<சிவகுமாரன் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் Ralph Cohen எழுதிய New Directions in Literary History என்ற நூலில் Robert Weismann என்ற மார்க்சிய அறிஞர் எழுதிய Past Significance and Present Meaning in Literary History  என்ற கட்டுரையின் சாரத்தைத் தருகிறார். இது மிகவும் மோசமான வாசிப்பு.>>

இப்படி ஒரு வரியை மாற்றவே கட்டுரை மாறுகிறது. தனது சொந்தக் கருத்தைச் சொல்லும்போது, அதற்கான தர்க்கங்கள் இல்லாதபோது, அவை வெறும் வார்த்தை ஜாலங்களாக ஆகிவிடுகின்றன. சிவகுமாரன் என்ன சாரத்தைச் சொன்னார், என்பதின் மீதான நித்தியானந்தனின் சாரம் இங்கு இல்லை.

கே.எஸ். சிவகுமாரனது, சிறுகதைப் பத்தி குறிப்புகள் பற்றி எழுதியவை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத விமர்சனம். நித்தியானந்தன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

<<“கடந்த அறுபது ஆண்டுக்காலத்தில் ஈழத் தமிழிலக்கியத்தில் என்ன நடந்திருக்கிறது என்று அறிய விரும்புபவர்கள் கே.எஸ்.சிவகுமாரனின் நூல்களைத்தான் தேடிப்போக வேண்டும். அத்தகைய மதிப்பு வாய்ந்த பதிவு அது. நூற்றுக்கும் அதிகமான ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை அவர் விமர்சனத்திற்குட்படுத்தியிருக்கிறார். ஈழத்தில் வேறெந்த விமர்சகரும் இவ்வளவு பரந்த தளத்தில் விமர்சனத்தை மேற்கொண்டதில்லை.”>>

முன்னைய பகுதியில், சிவகுமாரன் எப்படி விமர்சனம் செய்கிறார், மூன்று நான்கு வரிகளில் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனைப் பரந்த தளம் என்று எந்த அடிப்படையில் நித்தியானந்தன் மதிப்பிடுகிறார் என்ற தர்க்கங்கள் கொடுக்கப்படவில்லை. உண்மையில், அதற்கான தர்க்கப்பூர்வ புள்ளிகளை வைக்காமல் வார்த்தை ஜாலங்களைச் செய்திருக்கிறார் என்பது துரதிருஷ்டவசமானது. இந்த வார்த்தை ஜாலங்களை இப்படிச் சொல்லலாம், மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரை, முக்கியமானவை, Archival material… போன்றவை.

மாலின் என்பவர் தன் ‘திறனாய்வுப் பார்வைகள்’ நூல் குறித்து சரிநிகரில் எழுதிய விமர்சனத்தை சிவகுமாரன் ‘நெஞ்சில் ஒரு முள்ளாக இது குத்தியது’ என்று விசனித்தார் என்று குறிப்பிட்டு, மாலினை பேஸ்புக் பேக் ஐடிக்கு ஒப்பாக குறிப்பிடுகிறார் நித்தியானந்தன். மாலின் எழுதிய குறிப்பை இச்சுட்டியில் படிக்கலாம்

மாலின் எழுதியது சார்ந்து நித்தியானந்தனின் விமர்சனம் என்ன?

இதோ…

<<சிவகுமாரனின் இந்தத் ‘திறனாய்வுப் பார்வைகள்’ என்ற நூலில்தான் விபுலானந்தரின் திறனாய்வு குறித்து 33 பக்கங்களில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. பாரதியின் புனைகதைகள் பற்றிய கட்டுரை புதியது. மெளனி, அ.ஸ.அப்துல் ஸமது, தெணியான் போன்றோர் பற்றிய பதிவுகள் முக்கியமானவை.  எஸ்.பொ.வின் ‘தீ’ நாவலுக்கு கே.எஸ். எழுதிய விமர்சன வரிகளில் ஒன்றைத்தானும் சொந்தமாக எழுத இயலாதவர்கள் பொய்ப் பெயர்களில் ஆழமில்லை என்று லேசாகத் தீர்ப்பளித்துவிடுகிறார்கள். எத்தனை இன்ச் ஆழம் என்று கொஞ்சம் சரியாகச் சொன்னால் வசதியாக இருந்திருக்கும்.      

மாலின் மாதிரிப் பேர்வழிகளை சிவகுமாரன்’ தற்காலிக அல்லது திடீர் விமர்சகர்’ என்று குறிக்கிறார். தங்களின் பெயரைப் போட்டு எழுதத் திராணியற்றவர்கள் இம்மாதிரி மறைந்து நின்று எழுதுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. Fake ID வகையறாக்கள்.>>

சிறந்த, புதிய, முக்கியமான இந்த வார்த்தைகளை எடுத்துவிட்டால், இதில் என்ன சாரம் உள்ளது? நித்தியானந்தனின் இந்த எதிர் விமர்சனமே சுவற்றில் அடிக்கப்படாத ஆணிகள். இதில் எங்கே ஆழம் கண்டுபிடிக்க!

மாலின் என்பவர் தொடர்ச்சியாக சரிநிகரில் பத்திகள், விமர்சனங்கள் எழுதி வந்திருக்கிறார் என்பதை சரிநிகரைப் புரட்டிப் பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். அவரைத் திடீர் விமர்சகராகச் சொல்ல இயலாது. புனை பெயரில் எழுதுகிறார் என்பதற்காக பேக் ஐடி வகையறாக்கள் என்று சொல்ல இயலாது. சிற்றிதழ், சஞ்சிகைகள் சூழலில் புனைபெயர் இயல்பானதே. அத்துடன் அவற்றுக்கு பொறுப்புக்கூறும் இடத்தில இதழின் ஆசிரியர் இருப்பார். இதனை பேஸ்புக் பேக் ஐடியுடன் ஒப்பிடுவது தவறானது.

ஒருவரை தனிப்பட்ட ரீதியில் புகழ்வதற்கும், விமர்சன ரீதியில் அவர் ஆற்றிய பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் இணைக்கும் புள்ளியில் நின்று விக்கிபீடியாத்தனமாக எழுதுவது மோசடித்தனமானது. கே.எஸ்.சிவகுமாரனுக்கு நிச்சயம், இதழியல் துறையிலும் சரி, ஈழ இலக்கியத்திலும் சரி ஓர் இடமுண்டு. அதனைத் தன்னுடைய மதிப்பீட்டில் இருந்து நித்தியானந்தன் மதிப்பிடத் தவறிவிட்டார். இது எதிர்கால சந்ததியைத் தவறாக வழிகாட்டுதல் ஆகும்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.