Al combate, corred, bayameses!

Que la patria os contempla orgullosa;

No temáis una muerte gloriosa,

Que morir por la patria es vivir.

En cadenas vivir es vivir

En afrenta y oprobio sumidos.

Del clarín escuchad el sonido:

A las armas, valientes, corred!

தோழர் வீரக்குட்டியின் உடலெங்கும் ஜிவ்வென்று விறுவிறுத்து ஏறியது இரத்தம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாய்ந்த அதே ரத்தம். உரக்க குரல் எழுப்புகின்றார்.

“பயோமோ  மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்… பயோமோ  மக்களே போருக்கு ஓடி வாருங்கள்..!”

தோழர் வீரக்குட்டிக்கு ‘ஓலா’ என்கிற ஒற்றை வார்த்தையை தவிர, ஸ்பானிய மொழியில் வேறு எதுவுமே தெரியாது.  ஆனாலும் அந்த தாளக்கட்டு அவருக்கு பரிச்சயமானது. முதன் முதலாக அவர் காதில் விழுந்த பாசறைப் பாடல்.  

புரட்சிக் கவிஞன் பெரூச்சோ, பயோமோ நகரத்தின் மத்தியில் மக்கள் கூடும்  இடத்தில், ஸ்பானியத்தின் எதேச்சதிகார அரசுக்கெதிராக மக்களைப் புரட்சிக்கு வாருங்கள், என்று குதிரையில் அமர்ந்தபடி இந்தப் பாடலைத்தான் உரக்கப் பாடுவான். 

கியூபத் தலைநகர் ஹவானாவுக்குத் தெற்கே இருக்கின்ற மதான்சா என்கிற சிறு நகரத்தின் எல்லையை ஒட்டிய கரும்புத் தோட்டத்துக்குள் தோழர் வீரக்குட்டி முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய எழுச்சி உணர்வை மீளவும் உணர்ந்த நிலையில் தன்நிலை மறந்து பாடுகிறார்.

“தாய்நாடு உங்களைப் 
பெருமையுடன் பார்க்கிறது.
பெருமைமிகு மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.” 

மதான்சா கரும்புத் தோட்டத்துக்குள் நின்று கரும்பு வெட்டும் கம்யூனிசத் தோழர்கள் தங்களை உற்சாகப்படுத்தப்  பாடிக் கொண்டிருக்கும் ஸ்பானியப் பாடலின் தமிழ் வடிவம்தான், தான் பாசறையில் பாடியது என்பதைத் தாளக்கட்டில் வைத்து உணர்ந்து விட்டார், தோழர் வீரக்குட்டி. 

சம உடமைச் சித்தாந்தத்தின் பால் நாட்டம் கொண்ட ஆயிரக்கணக்கான ஈழ நாட்டின் இளைஞர்களுக்கு கியூபாதான் லட்சிய ராச்சியம். காஸ்ரோதான் ஆதர்சிக்கப்பட்ட தலைவன். சேகுவேராதான் வழிகாட்டி. தோழர் வீரக்குட்டிக்கும்தான். கியூபாவைத் தரிசிக்க வேண்டும் என்பது அவரது நாற்பதாண்டுக் கனவு.

அவருக்கு ஏதோ செய்தது. பரபரப்பாக இருந்தார். கரும்புத் தோட்டத்துக்குள் குதித்துத் குதித்துப் போனார். கரும்பு வெட்டுபவர்களிடம் கத்தியை வாங்கி வேக வேகமாகக் கரும்பின் அடிப்பாகத்தை வெட்டிவிட்டுத் தொகையையும் வெட்டி எறிந்தார். வெட்டிக் கொண்டே பாடவும் செய்தார்.

“தாய்நாட்டுக்காகச் சாவதுதான்
உண்மையில் வாழ்வது.
விலங்குகளால் கட்டுண்டு வாழ்வது அவமானம், இகழ்ச்சிக்குள் சிக்கிக் கிடப்பது.”

தன்னையவர் புரட்சிக் கவிஞன் பெரூச்சோவாகவே உணர்ந்தார்.

எழுபதின் இறுதியாண்டுகளில் தோழர் வீரக்குட்டி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவெடுத்த பின், எல்லா இயக்கங்களின் அரசியல் கூட்டங்களுக்கும் போனவர்தான்.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மருத்துவம். நாட்டின் அனைத்து வளங்களும் சமமான முறையில் அனைத்து மக்களுக்கும் பங்கிடப்படும். கியூபா போன்றே மலரும் ஈழத்தில் இதுவேதான் நடைமுறைப்படுத்தப்படும். இதுவே எமது இயக்கத்தின் கொள்கை என்று தோழர் பத்மநாபா, கட்டைக் குரலில் சொன்னதுதான் தோழர் வீரக்குட்டிக்கு நம்பிக்கையாக இருந்தது. அதனால்தான் அவர் தோழர் பத்மநாபா தொடங்கிய இயக்கத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்து கொண்டார்.  

அரசியல் பயிலவும் ஆயுதப் பயிற்சி எடுக்கவும், தமிழ் நாட்டுக்கு செல்வதற்கு, மன்னார் பள்ளிக்குடா அந்தோனியார் கோயில் கடற்கரையில் இருந்துதான்  படகில் ஏறினார். ராமநாதபுரம் இருமேனி முனியாண்டி கோயிலுக்குப் பின்னான  கடலோரம் படகு அவரை இறக்கி விட்டதும், அந்தக் கடலோரப் பனங்காட்டு இருட்டுக்குள் நின்று அவரை வரவேற்றது தோழர் டக்ளஸ் தேவானந்தா.

உச்சிப்புளி டவுணுக்கு போனால்தான் ராமநாதபுரம் போய், காலையில் புதுக் கோட்டைக்கு போக முடியும். 

ஏதோ தான் பிறந்து வளர்ந்த ஊர் போல் எந்தத் தங்கு தடையும் இல்லாமல் தோழர் டக்ளஸ் ராமநாதபுரம் உச்சிப்புளி பனங்காட்டுக்குள் முன்நடந்து கொண்டிருக்கின்றார். தோழர் வீரக்குட்டி பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார். முன்னே செல்லும் தோழர் டக்ளஸ் பாடிக் கொண்டே செல்கின்றார்.

“ஈழ மக்களே…போருக்கு ஓடி வாருங்கள்…! ஈழ மக்களே.. போருக்கு ஓடி வாருங்கள்..!”

“தோழர் நீங்களும் சேர்ந்து பாடுங்கோ”

“தாய்நாடு உங்களைப் 
பெருமையுடன் பார்க்கிறது.
பெருமைமிகு மரணத்துக்கு அஞ்சாதீர்கள்.” 

தோழர் வீரக்குட்டியும் சேர்ந்து பாடுகின்றார். அப்போது அவருக்குத் தெரியாது, கியூபப் புரட்சிப் பாடலைத்தான் தோழர் டக்ளஸ் பாடுகின்றார் என்றும், பயோமோ என்கிற இடத்தில் ஈழத்தை பொருத்திப் பாடுகின்றார் என்றும். 

அது என்ன பந்தமோ தெரியவில்லை. அன்று ராமநாதபுரம் உச்சிப்புளிப் பனங்காட்டுக்குள் ஏற்பட்ட தோழமை, இன்று கியூபா வரை நீண்டு கொண்டே வருகிறது. 

எண்பதுகளின் மத்தியில் அனேகமானோர் ஈழப் போராட்டம் தோல்வியை தழுவப் போகிறது என்பதை உய்த்து உணரத் தொடங்கி விட்டார்கள். அப்படி உணர்ந்தவர்களில் தோழர் வீரக்குட்டியும் ஒருவர்

அதனால்தான் அவர் கனடாவில் அரசியல் தஞ்சம் அடைந்தார். ரொரண்டோவில் இருந்து வெறும் இரண்டரை மணிநேர விமானப் பயண தூரத்தில் இருக்கின்ற கியூபாவுக்கு போக வேண்டும் என்கிற உணர்வு அவருக்கு எழும் போதெல்லாம், தொலைநோக்கு அரசியல் சித்தாந்தம் இல்லாத விடுதலை இயக்கத் தலைமைகளால் தோற்றுப்போன ஈழக்கனவு அவரைத் துன்புறுத்தும். 

தோழர் பத்மநாபா இயக்கக் கொடியை வடிவமைக்கும் போதும் சரி, இயக்கத்தை விட்டு விலத்தி தனியாகத் தோழர் டக்ளஸ் தேவானந்தா கட்சி ஆரம்பித்து கட்சிக்காகக் கொடி வடிவமைக்கும் போதும் சரி, தோழர் வீரக்குட்டி கூடவே இருந்தார். நட்சத்திரம் பொறிக்கப்பட்ட இரண்டு கொடிகளிலும் கியூபத் தேசியக் கொடியின் சாயல் இருக்கும்படி செய்கின்ற அளவுக்கு கியூபாவின் முரட்டு விசுவாசிகள். கொடியில் மட்டும் கியூபாவைப் பின் தொடர்ந்து என்ன பயன்? பயோமோ மக்களுக்கு ஃபிடல் காஸ்ரோ பெற்றுக் கொடுத்த சோசலிச விடுதலையை ஈழ மக்களுக்கு கொடுக்கவில்லையே என்கிற உறுத்தல் அவரைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது.

உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது வெயில். பனை மரம் ஒன்றுதான் குறை. மற்றும் படி யாழ்ப்பாணம் மாதிரித்தான் இருக்கிறது கியூபாவும். கொஞ்சப் பனை விதைகளை ஊன்றி விட்டால் யாழ்ப்பாணம்தான் என நினைத்துக் கொண்டார். கரும்புத் தோகையின் நிழல் அவருக்கு இப்போது தேவையாக இருந்தது. வரப்பு மாதிரி இருந்த புல் மேட்டில் அமர்ந்து கொண்டு, தான் தங்கி இருக்கும் உல்லாச விடுதியில் வாங்கி வந்த பியர் கானை திறந்து மடமடவென்று குடித்தார். இன்னும் சில பியர் கான்களை கரும்பு வெட்டும் தோழர்களிடம் கொடுத்தார். அவர் புகைத்தல் பழக்கம் இல்லாதவர். இருந்தாலும் கியூபப் புரட்சியின் அடையாளமாக வாங்கி வைத்திருந்த சுருட்டை தீ மூட்டி புகையை உறிஞ்சி ஊதினார்.

“சங்கு ஒலிப்பதைக் கேளுங்கள்.
துணிவுள்ளவர்களே
போருக்கு ஓடி வாருங்கள்.”

கரும்பு வெட்டுபவர்களுக்கு தோழர் வீரக்குட்டியின் செயல் விசித்திரமாக இருக்கிறது. தங்களுக்குள் குசுகுசுத்துக் கொள்கின்றார்கள். அவரது தோற்றம், மொழியெல்லாம் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. “பிடல் காஸ்ரோ வாழ்க. கியூபா வாழ்க.” என முஸ்டியை உயர்த்தித் தன் உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றார்.

நூற்றிப்பதினாறு நாடுகள் பங்கேற்கும் பதின்னான்காவது அணிசேரா நாடுகளின் மாநாடு ஹவானாவில் நடக்க இருக்கிறது. ஐம்பத்தியைந்து நாடுகளின் தலைவர்கள் வருகின்றார்கள். அந்தத் தலைவர்களில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவும் உள்ளடக்கம். ராஜபக்சவுடன் சேர்ந்து தோழர் டக்ளஸ் தேவானந்தாவும் கியூபா வருகிறார் என்ற சேதி கேட்ட நாளில் இருந்தே தோழர் வீரக்குட்டி தூக்கம் இழந்து விட்டார். 

தானும் கியூபா போக வேண்டும் என்ற முடிவைத் தூக்கம் இல்லாத அந்த இரவொன்றில்தான் எடுத்தார். அது மட்டுமல்ல, தோழர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, கியூபா முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும். கிழக்கே ஹவானாவில் இருந்து மேற்கே குவாண்டனாமோ வரை. மதான்சா, வரதேரோ, கமகுவே, லஸ்தூனாஸ், பயோமோ, சாண்டியாகோ என்று நகரம் கிராமம் என்று போக வேண்டும். கியூப மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வியல் பற்றித் தானும் சேகுவேரா போன்று மோட்டார் சைக்கிள் டயறி எழுத வேண்டும், என்ற அவாவும் அவருக்குத் தலை விரிக்கத் தொடங்கிவிட்டது. 

தோழர் வீரக்குட்டி கனடாவில் வாழ்ந்தாலும் ‘ஈழ மக்கள் ஜனநாயக கட்சி’யின் இரண்டாம் கட்டத் தலைவர் என்பது இரகசியம் இல்லை. ஊத்தைப் பச்சை உடுப்பு காணாமல் போகும் வரை, பூட்ஸ் கால்களின் சத்தம் ஓயும் வரை, இலங்கைக்குப் போக மாட்டேன் என்றவர்களும் – தமிழீழம் மட்டுமே என் நாடு என்றவர்களும் – அடைந்தால் ஈழம் இல்லையேல் வீர மரணம் என்றவர்களும் – எனக்கு நாடே இல்லையென்றவர்களும், மேற்குலக நாடொன்றின் குடியுரிமையோடு  இலங்கை நாட்டின் குடியுரிமையையும் வாங்கி வைத்திருப்பது போன்று, தோழர் வீரக்குட்டியும் இரட்டைப் ‘பாஸ்போர்ட்’காரர்தான். கனடாவின் சிட்டிசன்தான் அவர். ஆனாலும் இலங்கை நாட்டின் குடியுரிமை கூட அவரிடம் உண்டு. வருடத்தில் ஆறு மாதங்கள் இலங்கையில்தான் கட்சி வேலைகளில் இருப்பார்.

“தோழர், நீங்களும் நானும் மோட்டார் சைக்கிளிலை கியூபா முழுக்கச் சுத்த வேணும். நீங்கள் மாநாடு முடிய என்னோட சேர்றீங்க. நான் அங்க வாறன். உங்கட அலுவல் முடிய ஒரு கிழமை, ரெண்டு பேரும் கியூபாவைச் சுத்தி அடிக்கிறம்.” தனது விருப்பத்தை தோழர் டக்ளசிடம் சொன்ன போது, அவரும் பிரியப்பட்டார். 

போராட்டம் ஆரம்பித்த காலங்களில் இப்படி அலைந்து திரிந்தது. பின்னான காலங்களில் புலிகளின் கொலை அச்சுறுத்தலிலே அரசியல் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது. மாநாடு முடிந்து, ராஜபக்ச இலங்கைக்குக் கிளம்பிப்போன பின் கியூபாவைச் சுற்றுவது சாத்தியம்தான் என்று தோன்றியது.

மாநாடு முடிந்ததும், அரசு முறைச் சந்திப்புக்களும் நிறைவடைந்த பின், இரண்டு தோழர்களும் சந்தித்து, திட்டப்படி மோட்டார் சைக்கிளில் கியூபாவைச் சுற்றுவதுதான் என முடித்துக் கொண்டனர். அணிசேரா மாநாடு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ரொரண்டோவை விட்டு கியூபாவுக்கு கிளம்பி விட்டார் தோழர் வீரக்குட்டி.  

கியூபாவின் உல்லாசத் தலங்களில் ஒன்றான வரேதேரோவில் தான் தங்கி இருக்கும் உல்லாச விடுதிக்குள்ளும் அதனைச் சுற்றி உள்ள கடலோரங்களிலும் இரண்டு நாட்கள் சுற்றித் திரிந்தார். மூன்றாம் நாள் இருப்புக் கொள்ளவில்லை. கொஞ்ச பியர் கான்களை வாங்கித் தோள் யையுள் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டார். டவுண் பஸ் ஒன்றில் ஏறினார்.  அது கடைசியாக எங்கு நிற்கிறதோ அங்கே இறங்கிக் கொள்ளலாம் என நினைத்தார். நினைத்த மாதிரியே கரும்புத் தோட்டத்தின் மத்தியில் நிற்கின்றார்.

கரும்புத் தோட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, ரேசன் பொருட்கள் வழங்கும் கூப்பன் கடைக்குப் போனார். கிராமிய பண்ட பரிமாற்றுச் சந்தைக்குப் போனார். தன்னிடம் இருந்த பியர் கானைக் கொடுத்து சுருட்டு பெற்றுக் கொண்டார். பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான முதலாளித்துவ காப்ரேட் போட்டி  வாழ்வியல் அனுபவத்துடனேயே போய்க் கொண்டிருந்தவருக்கு கம்யூனிச வாழ்வியல்  அனுபவம் பேரின்பமாகத்தான் இருந்தது. ‘சோசலிச கம்யூனிச ஈழம்’ மலராமல் போனதையிட்டு் மனச் சஞ்சலம் கொண்டார்.

தோழர் வீரக்குட்டி விடுதிக்கு வர இருட்டி இருந்தது. இரவு நேர உல்லாசத்துக்குப் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தது விடுதி. அதில் கவனத்தைச் சிதைக்காமல் இன்றைய அற்புத அனுபவத்தை பதிவு செய்ய வேண்டும். அவருடைய மோட்டார் சைக்கிள் டயறிக்கு இன்றைய அனுபவம், முன்னுரை என்னும் உற்சாக எண்ணத்துடன் அறைக் கதவைத்  திறந்தவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவருடைய அறை கலைக்கப்பட்டுக் கிடந்ததது. உடமைப் பைகள் திறக்கப்பட்டு அனைத்து உடுப்புகளும் பொருட்களும் சிதறிக் கிடந்தன.

லாச்சிகள் திறந்தபடியே இருந்தன. படுக்கை மெத்தையும் புரட்டப்பட்டுக் கிடந்தது. இத்தனை காலமும் கியூபா மீதிருந்த பெருமதிப்பு சில கணத்தில் உடைந்து போனது. குற்றங்கள் இல்லை, திருட்டு இல்லை என அவர் கேள்விப்பட்டதெல்லாம் பொய்யா? பதட்டமாக ஓடிப்போய் லாக்கரைப் பார்த்தார், அதன் குட்டிக்கதவும் திறந்தேதான் கிடந்தது. சீயூசி பேசோவும், டாலர்களும் அப்படியே இருந்தன. ஆனால் அவருடைய பாஸ்போர்ட் அங்கில்லை.

அவர் கேள்விப்பட்டிருந்தார், எங்களைப் போல் களவாக நாட்டை விட்டு வெளியேற, கம்யூனிச வாழ்க்கை மீதும் காஸ்ரோவின் அரசியல் மீதும் வெறுப்புற்று கள்ள பாஸ்போர்ட் மூலம் கியூபன்கள் நாட்டை விட்டு ஓடுகின்றார்கள் என்று. பதட்டமா கோபமா என உய்த்தறிய முடியாத மனநிலையில் அவர் இருந்தார்.

வேகமாகக் கீழ் இறங்கி வரவேற்பு மண்டபத்துக்குச் சென்றவர், உபசாரப் பெண்ணைப் பார்த்துக் கத்தினார். “என்ன ஹோட்டல் நடத்துகின்றீர்கள். எனது அறையைத் திறந்து எனது பாஸ்போர்டைத் திருடி இருக்கின்றார்கள். இதுதான் கியூபாவா. இந்த மோசமான அனுபவத்தைப் பெறவா நான் கனடாவில் இருந்து இங்கு வந்தேன். திரும்ப நான் எப்படி என் நாட்டுக்குப் போவேன்?” தன் வாழ்க்கைக் காலத்தில் இப்படியவர் கோபப்பட்டதேயில்லை. 

தோழர் வீரக்குட்டியின் கோபத்தை அவள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவள் பார்வை வேறு ஓரிடத்தில் நிலைத்து நின்றது. அவள் பார்வை நின்ற இடத்தில் நின்றிருந்த இருவர், தோழர் வீரக்குட்டிக்கு நெருங்கி வந்து இடதும் வலதுமாக நெருக்கிக் கொண்டு, மிக மெல்லிய சத்தத்தில் – 

“எந்த அசம்பாவிதமும் வேண்டாம். வெளியே நிற்கின்ற அந்தக் கறுப்பு வாகனத்தில் ஏறுங்கள்” என்றார், அந்த இருவரில் ஒருவர்.

சிந்திக்கும் திறன் மெல்லக் குறைவடைகின்றதாக அவர் உணர்ந்தார். ரஷ்யத் தயாரிப்பான அந்த லடா  வாகனத்தில் ஏறிக் கொள்கிறார். அது ஜீப்பா, அல்லது வானா, காரா? எந்த வடிவத்துக்கும் அடங்காமல் இருந்து. 

உள்ளே ஏறியதும் கைகளைப் பின்னே முறுக்கித்  திருப்பி  விலங்கிட்டு அமர வைக்கப்பட்ட போது அவரால் மறுப்பேதும் செய்ய முடியவில்லை. முனகினார். ஐம்பத்தி ஆறு வயது. உடல் மெல்லத் தளர்வடையத் தொடங்குகின்ற நேரம்.

வறண்ட தொண்டையை எச்சிலை முழுங்கி ஈரமாக்க முயல்கின்றார்.

“நீங்கள் யார்?”

வாகனத்தின் இரைச்சல் சத்தம் மட்டும்தான் கேட்டது.

“என்னை எங்கே கொண்டு போகின்றீர்கள்?” 

வெளிச்சமற்ற தெரு.

“நான் அறியலாமா?”

கும்மிருட்டு. வெளிச்சமற்ற தெருவில், அந்த ரஷ்ய தயாரிப்பான லடா வாகனம் விரைந்து கொண்டிருந்தது. மரண பயம் அவரைச் சூழ்ந்து விட்டது. மரண பயம்  அவருக்கொன்றும் புதில்லைத்தான். கியூபாவில் அதனை உணர்வதுதான் கொடும் வலியாக இருந்தது. முன்னம்  அனுபவித்த மரண பயத்தின் ஞாபக  நிழல் இமைக்குள் இறங்கியது. 

இலங்கைப் புலனாய்வுப் போலீசின் ஜீப் வண்டி, அடங்கிய ஊர்த் தெருவில் விரைவாக ஓடிக் கொண்டிருந்தது. கை விலங்கிடப்பட்ட தோழர் வீரக்குட்டி மரண பயம் பீடிக்க, விறைத்துப் போய் ஜீப் வண்டியின் தகரத் தரையில் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார். பூட்ஸ் கால்கள் அவர் உடலை மிதித்துக் கொண்டிருந்தன.

யாழ்ப்பாணம் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தது. யாழ் மேயர் துரையப்பா பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு முன்பாக, பிரபாகரனால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டு விட்டார் என்கிற செய்தி பரவிக் கொண்டிருந்தது. பெடியன்கள் தலைமறைவாகத் தொடங்கி விட்டார்கள். இந்த நேரம் இளைஞர்கள் பொலிஸில் மாட்டினால் சித்திரவதை, பின் வெலிக்கடைதான்.மரணமும் நிகழலாம்.

இலங்கை அரசின் கல்வித் தரப்படுத்தலால் யாழ்ப்பாணத்தின் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் போக முடியாமல் தடுக்கப்பட்டவர்களில் வீரக்குட்டியும் ஒருவராக இருந்தார். மாணவர்கள் புரட்சிக்குத் தயாராகி விட்டார்கள். 

 வீரக்குட்டி டியூசன் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையத்துக்குள் அதிரடியாக புகுந்த இலங்கைப் புலனாய்வுப் போலீசார், அவரை விலங்கிட்டு இருட்டுக்குள் நின்றிருந்த அந்த வாகனத்துக்குள் ஏற்றப்பட்டதும், தெரு விளக்குகள் அணைக்கப்பட்ட தெருவில்  அந்த ஜீப் விரைந்தது. இதே மாதிரி இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்ட அவரது நண்பன் புனிதன் எங்கேயென்று தெரியவில்லை. தன்னை இவர்கள் கொன்று விடுவார்களோ ? வெள்ளாப்பில்  அராலி சந்திலோ, அல்லது அல்லைப்பிட்டி சந்தியிலோ  தனது உடல் வீசப்பட்டு கிடக்கக் கூடுமோ? மரண பயம் பிடித்ததும் தொண்டைதான் முதலில் வறளும். 

அந்த ரஷ்யத் தயாரிப்பான லடா வாகனம் தெரு விளக்குகள் இல்லாத இருள் தெருவில் மிதமான வேகத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்தது. பகல் பொழுதில் உளக் கிளர்ச்சியை ஏற்படுத்திய கரும்புச் சோலைகள் பேய்க்காடாகத் தெரிந்தது இப்போது.

“நான் தாகமாக இருக்கிறேன். தண்ணீர் தருவீர்களா?”

இருளும் வெக்கையும் மரண பயத்தை இன்னும் கூட்டியது.

“நீங்கள் யார், என்னை எங்கே கொண்டு போகின்றீர்கள்?”

தோழர் வீரக்குட்டியின் எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. விசுவாசிக்கப்பட்ட தேசத்தில் யாருக்கும் தெரியாமல் தன் வாழ்க்கை அழிக்கப்படப் போகிறது என்பதை அவரது மனம் நம்பத் தொடங்கி விட்டது.

விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்களால் நாம் பயம் காட்டப்படுகின்றோம் என்பது மானுடத்தின் தோல்விதானே. மானுடம் தோற்ற நாட்கள் நினைவின் தொல்லையாக திரும்பத் திரும்பத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

சோழன் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான அந்தப் பேரூந்து, கும்பகோணத்து நெரிசல் தெருவில் ஊர்ந்து கொண்டிருந்தது.

வண்டி நிறைய நெரிசலான சனக்கூட்டம். வியர்வையில் தொப்பலாக நனைந்த தோழர் வீரக்குட்டி மரண பீதியில் சனக்கூட்டத்துக்குள் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாது மூளை உறைந்த நிலையில் நின்றிருந்தார். மகாமகம் கோயில் கோபுரம் தெரிந்தது. இறை நம்பிக்கயற்றவர். கும்பிடுவதா வேண்டாமா என முடிவெடுக்கும் முன்னே கோபுரம் காணாமல் போய்விட்டது.  அந்தப் பேரூந்துக்குள் பரபரப்பான இரைச்சலையும் விட , அவரது இதயப் படபடப்புத்தான் பெரிதாகக்  கேட்டது. அந்தச் சோழன் போக்குவரத்துக் கழக வண்டி எங்கே போகுதென்று தெரியவில்லை.

சூளைமேடு சாக்காரியா காலனியில்தான்  “ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையம்” இருந்தது. தோழர் வீரக்குட்டிதான் அலுவகத்தின் பொறுப்பாளராக இருந்தார். இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களையும், அரசின் அடக்குமுறை பற்றிய செய்திகளையும் இந்தியப் பத்திரிகைகளுக்கு வழங்கிக் கொண்டிருப்பது அவர்தான். 

கும்பகோணம் அலுவலகத்தில் இருந்து, தோழர் பத்மநாபா அவருக்கு அனுப்பிய கடிதத்தைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது. ‘ அனைத்துப் பொறுப்புகளையும் கேதீசிடம் ஒப்படைத்து விட்டுக் கும்பகோணம் வரவும்’ என்றிருந்தது.

கேதீஸ் தோழரிடம், அனைத்துப் பொறுப்புகளையும்  ஒப்படைத்துவிட்டுக் கும்பகோணம் போன போது தோழர் நாபா அங்கில்லை. 

“கரைக்குப் போய் இருக்கின்றார், யாழ்ப்பாணத்தில் அலுவல் முடித்து வருவதற்கு எப்படியும் ஏழெட்டு நாட்களாவது எடுக்கும். அவர் வரும் வரை உங்களைத் தங்கச் சொன்னார்.” என்றார்கள்.  

“தோழர், உங்கள இயக்கத்தை விட்டு நாபாத் தோழர் தூக்கிட்டார். டேவிட்சனுக்கும் அற்புதனுக்கும்  நீங்கள் உடந்தையாக இருக்கின்றீர்கள் என்று சந்தேகம்.” கும்பகோணத்தை சேர்ந்த கம்யூனிசத் தோழர் ஒருவர்தான், தோழர் வீரக்குட்டியின் காதில் வந்து குசுகுசுத்து விட்டுப் போனார்.

டேவிட்சனும் அற்புதனும் இயக்கத்தை விமர்சிக்கின்றார்கள், முரண்படுகின்றார்கள், கொள்கையை விட்டு இயக்கம் வேறு திசைக்குச் செல்கின்றதென்றெல்லாம் துண்டுப் பிரசுரம் வெளியிடுகின்றார்கள். பத்மநாபாக்கு எதிராக இயங்கி இயக்கத்தை உடைக்கப் போகின்றார்கள் என்றெல்லாம் தோழர் வீரக்குட்டி கேள்விப்பட்டதுண்டுதான். ஆனாலும் அவருக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் அவர் வாதம்.

டேவிட்சனும் அற்புதனும் அறிவுத்தளத்தில் இயங்கக்கூடியவர்கள். மிக இளம் பராயத்தில் இருந்தே ஈழ விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருப்பவர்கள். விளக்கம், விசாரணை, கலந்தாய்வு என்று எதுவும் இல்லாமல் குற்றச்சாட்டுகளுடன் அமைப்பில் இருந்து விலத்துவதற்கும், துரோகி எனக் கொல்வதற்கும் என்ன வேறுபாடு? தோழர் வீரக்குட்டி கடுமையாக விசனப்பட்டார்.

தன்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல்,  இயக்கத்தை விட்டு விலத்தியது அராஜகம். தோழர் பத்மநாபா மீது வைத்திருந்த அத்தனை நம்பிக்கையும் உடைந்து போனது. ஊர், குடும்பம், படிப்பு, என அனைத்தையும் விட்டு, ஈழ மக்கள் விடுதலையே முக்கியம் என இயக்கத்தில் இணைந்தது குற்றமோ என முதற் தடவையாக எண்ணம் வந்தது.

தோழர் பத்மநாபா இலங்கையில் இருந்து திரும்பும் வரை அவர் அங்கு காத்திருக்க அச்சப்பட்டார். புளொட் அமைப்புக்குள் நடக்கும் படுகொலைகள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த நேரம். கேள்வி கேட்போர், விமர்சனம் செய்வோர், முரண்படுவோர் எல்லோரும் தலைமைகளால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கும்பகோணத்தில் இருந்து கூப்பிடு தூரம்தான் ஒரத்தநாடு. தனது இயக்கதுக்குள்ளும் அது நடக்கக் கூடும். அலுவலகத்துக்குக் கீழிருக்கும் கிருஸ்ணா பேக்கரியில் இருந்து கேக் வேகுகின்ற வாசம் எப்போதும் சுகந்தமாக வீசும். இப்போது அது நர மாமிசம் கருகி நாறுவது போல் உணர்ந்தார். 

மரண பயம் எக்கணம் எங்கிருந்து தோன்றுமென்று தெரியாது. கணப்  பொழுதில் உடலில் துர் திரவம் ஊறியது. நாபாத் தோழர் வரும் வரைக்கும் அங்கிருப்பது அறிவிலித்தனம் என எண்ணியவர், மரண பயம் தொற்ற, எங்கே போதென்று தெரியாது எதிர்க்க வந்த சோழன் போக்குவரத்துக் கழகப் பேரூந்தில் ஏறித் தலைமறைவாகிப் போனார்.

விசுவாசமும் நம்பிக்கையும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது, அரசியல் என்பது விஞ்ஞானம். அறிவியல். பகுத்தாய்வும் தொலைநோக்குத் தெளிவும் மட்டுமே அரசியலில் நிலைக்கும். கற்பனாவாதம் அரசியலுக்கு எதிரி. தோழர் வீரக்குட்டிக்கு விளங்கியதோ தெரியவில்லை. அவரது அரசியல் நம்பிக்கைகள்  தகர்ந்து விட்டதாகவே எண்ணிக் கொள்கிறரார்.

அந்த  ரஷ்யத் தயாரிப்பான  லடா வாகனம் இருட்டுக் கட்டிடம் ஒன்றின் முன்பாக நின்றது. அக்கட்டிடத்தைச் சுற்றிலும் நிற்பது தென்னை மரமா, பாம் மரங்களா எனத் தெரியவில்லை. தலை விரித்த நீட்டு நீட்டுப் பேய்கள் மாதிரி அசைவற்று நின்றிருந்தன. காற்றில்லை. கடல் தூரத்தில் இருக்க வேண்டும். அத்தனை உஸ்ணம். அக்கட்டிடத்தின் உள்ளே தோழர் வீரக்குட்டி கொண்டு செல்லப்பட்டார். 

தாழ்ந்த அந்தக் கட்டிடத்துக்குள் ஆங்காங்கே சிலர் மேசை கதிரை போட்டு கணணி முன் இருந்து மங்கிய ஒளியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யாரும் யாருடனும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இரண்டு மேசைகளை கடந்து மூன்றாவது மேசைக்காரரிடம் தோழர் வீரக்குட்டியை அவர்கள் அழைத்துப் போனார்கள். அந்த மேசையில் இருந்தவர் இவர்கள் மூவரையும் எதிர்பார்த்திருந்திருப்பார் போலும். தலையை நிமிர்த்தாமல் விழியை மட்டும் நிமிர்த்தி தோழர் வீரக்குட்டியை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். அவர் பார்வைத் தோரணையின் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாதவராக இருந்தார். அவர் கையில் காணாமல் போன தோழர் வீரக்குட்டியின் பாஸ்போர்ட் இருந்தது. 

ஹோட்டலில் திருட்டுப் போன தனது பாஸ்போர்ட் எப்படி இங்கு இவர் கைக்கு வந்தது? யார் இவர்கள்? தோழர் வீரக்குட்டியைக் கொண்டு வந்தவர்களிடம் பாஸ்போர்ட்டும் சில கடித உறைகளும்  வழங்கப்பட்டது.

அந்த ரஷ்யத் தயாரிப்பான லடா வாகனத்தில் திரும்பவும் தோழர் வீரக்குட்டி ஏற்றப்பட்டார். கை மூட்டு இரண்டும் கழன்று விழுவது போல் வலித்தது. கும்மிருட்டுக்குள் மிதமான வேகத்தில் வாகனம் விரைந்தது. நடக்கின்ற செயல்கள் எதன்பால், எதனை நோக்கி என்கிற சிந்திக்கும் திறனற்ற நிலைக்கு மாறிக் கொண்டிருந்தார், தோழர் வீரக்குட்டி.

மரண பயம் முற்றியதும் தன்னிச்சையாக மூளை சில பழைய நினைவுகளை மீட்டி நிகழ்காலத்துடன் பின்ன ஆரம்பித்து விடும். 

தோழர் வீரக்குட்டியையும் தோழர் டக்ளஸ் தேவானந்தாவையும் ஏற்றிக் கொண்டு கனேடிய மத்திய அரச பொஸீஸ் (RCMP) வாகனம் விரைந்து கொண்டிருந்தது. ஏன் என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. 

சூளைமேட்டுத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இயக்கத்தை விட்டு விலக்கப்பட்ட தோழர் டக்ளஸ் தேவானந்தா,  இலங்கை போய் கட்சி ஆரம்பித்து அமைச்சரும் ஆகியிருந்தார்.

இயக்கத்தால் விலக்கப்பட்டு, முரண்பட்டு, போராட்டத்தால் சலிப்புற்று,  ஒதுங்கிக் கனடாவில் குடியேறி விட்ட தோழர்களைத் தனது கட்சியில் சேர்த்து, திரும்பவும் இயங்கலாம், மீள இணையலாம் வாருங்கள், எனத் தனது பழைய தோழர்களைத் தேடிக் கனடா வந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா, தோழர் வீரக்குட்டியின் வீட்டில்தான் தங்கியிருந்தார்.

கும்மிருட்டு சூழும் நவம்பர் மாதம். கூதல் கொளுத்திக் கொண்டிருந்தது. தோழர்கள் சூழ்ந்திருக்க, டக்ளஸ் தோழர் மீள் இணைவுக்கான காரணத்தை பழைய வீறாப்பு கொஞ்சமும் குறையாமல் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, கதவு படபடவெனத் தட்டப்படும் சத்தம் அதிர்ச்சியாக இருந்தது. கதவைத் திறந்த தோழர் வீரக்குட்டிக்குட்டிக்கு இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது. வீட்டைச் சுற்றி பொலீஸ்காரர்கள் நிறைந்திருந்தார்கள். தெருவெங்கும் சிவப்பு நீல நிற அவசர ஒளியை ஒளிர்ந்து கொண்டு கறுப்பு நிற பொலீஸ் வாகனங்களாக நிறைந்திருந்தது. 

“இங்கு யார் வீரக்குட்டி?” பொலீஸ் அதிகாரி கேட்டதும் தான்தான் என்றார் கேள்வி மனதோடு.

“இலங்கை அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா?”

“தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும். எங்களுடன் இருவரும் வாருங்கள்.”

பொலீஸ் அதிகாரிகள் அழைத்ததும் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை. கறுப்பு நிற வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். ரொரண்டோ தெருக்கள் ஒவ்வொன்றும் தோழர் வீரக்குட்டிக்கு அத்துப்படி. தங்களை ஏற்றிச் செல்லும் வாகனம் எத்திசையில், எந்தத் தெருவில் ஓடிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. பயம் இல்லை. ஆனாலும் எதற்குத் தங்களை அழைத்துச் செல்கின்றார்கள் என்கிற பதட்டம் இருக்கத்தான் செய்கிறது..

ரொரண்டோ ஏர்போர்ட் பக்கமிருக்கின்ற ‘அட்வல்  ரோட்டில்’  இருக்கின்ற RCMP யினரின் தலைமைக் காரியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும். தலைமை அதிகாரி முன் அமரவைக்கப்பட்டனர். 

தான்தான் ரொரண்டோ பிராந்தியத்துக்கான அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டவர்,

தோழர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.

“ஐரோப்பாவில் இருந்து சுக்ளா என்னும் விடுதலைப் புலி உறுப்பினர் கனடாவுக்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத் தகவல் சொல்கிறது. ஐரோப்பா போன்றே கனடாவிலும் அவர்களின் எதிர் கருத்தாளர்கள் கொல்லப்படலாம்.  அதனைத் தடுக்க நாங்கள் எச்சரிக்கையாக இருக்கின்றோம். நீங்கள் வெளிநாட்டு அமைச்சர். உங்களைப் பாதுகாக்கச் சொல்லி மேலிட உத்தரவு.”

“கொலை முயற்சிகளில் இருந்து அதிக முறை தப்புவதற்கு ஒலிம்பிக் போட்டியில் பரிசு உண்டானால் எனக்குத்தான் தங்கப்பதக்கம் கிடைக்கும், என்று பிடல் காஸ்ரோ நகைச்சுவையாகச் சொல்வார்.” என்று சொன்ன தோழர் டக்ளஸ், “காஸ்ரோவுக்கு தக்கப் பதக்கம் என்றால் எனக்கு வெள்ளிப் பதக்கம்” என்று இன்னும் நையாண்டியாகச் சொன்னார். ஆனால் தோழர் வீரக்குட்டியோ அதனை இரசிக்கும் மனநிலையில் இல்லை. 

உலகின் எந்த மூலைக்குப் போன பின்னும் பின்தொடரும் மரண பயத்தை விட்டொழிக்க முடியவில்லை. காலம் முழுவதும் மரண பயத்தைத் தூக்கித் திரியும் சபிக்கப்பட்ட தலைமுறையாகிப் போனோமே என்கிற கழிவிரக்கம் தோழர் வீரக்குட்டிக்கு மனதை அழுத்தியது. 

அந்த ரஷ்யத் தயாரிப்பானா லடா வாகனம் இயக்கத்தை நிறுத்தியிருத்தது. யாருமே சில நிமிடங்கள் பேசிக் கொள்ளவில்லை. தோழர் வீரக்குட்டியின் இதயம் இயங்குகின்ற சத்தத்தைத் தவிர வேறேதும் கேட்கவில்லை.

சில நிமிடங்கள் கடந்த பின் வாகனத்தின் கதவு திறக்கப்பட்டுத் தோழர் வீரக்குட்டி கீழ் இறக்கப்பட்டார். பிரமாண்ட வெளி. வெப்பக்காற்றோடு சேர்ந்து பெற்றோல் வாசனையும் வீசிற்று. தூரத்தில் வரிசையாக நீல நிறத்தில் வெளிச்சம் ஒளிர்ந்தது. அதே போன்று மறு திசையில் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது.

விமான ஓடு பாதை? துணுக்குற்றுத் திரும்பிப் பார்க்கிறார். பிரமாண்ட விமானம் ஒன்றின் அருகில் தான் இறங்கி நிற்பதை நெடு நேரம் கடந்துதான் உணர்ந்தார். அதுவும் ஏர் கனடா விமானம் என்பதை அவர் உணரவே இல்லை.

ஏற்கனவே இவர்கள் வருகையை எதிர்பார்த்த வண்ணம் விமானப் படிக்கட்டருகே  விமானியும் இன்னும் சிலரும் நிற்பதை தோழர் வீரக்குட்டி அவதானித்தாரா தெரியவில்லை.  நடப்பது எதுவும் இன்னமும் அவருக்குத் தெளிவில்லாமல்தான் இருந்தது.

வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டவர் விமானத்தில் ஏற்றப்பட்டு பின் இருக்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விமானம் வெறுமையாக பயணிகள் யாருமற்று இருந்தது. கைவிலங்கைக் கழற்றியவர்கள் தோழர் வீரக்குட்டியின் பாஸ்போர்ட்டையும் மூன்று காகித உறைகளையும் விமானியிடம் கொடுத்து விட்டு’ அவர்கள் அந்த ரஷ்யத் தயாரிப்பான லடா வாகனத்தில் ஏறிப் போயினர். 

கனேடிய இமிக்கிரேசன், ஏர்க்கனடா, ஏர்க்கனடா விமானி எனத் தனித்தனியாகத் தரப்பட்ட கடித உறைகளில் தனக்கான உறையைப் பிரித்துப் படித்தார் விமானி. அக் கடிதத்தின் மேலும் கீழும் போக முக்கிய பகுதி இப்படி இருந்து.

‘கனேடியக் குடியுரிமையாளரான ஆன்டன் மரியாம்பிள்ளைஎன்னும் இந்த நபரை மூன்று நாட்களாகத் தொடர்ந்து கண்காணித்ததில் இவரது நடவடிக்கைகள் மற்றைய உல்லாசப் பயணிகளிடத்தில் இருந்து மாறுபட்டிருந்தது. இவர் ஒரு அமெரிக்க உளவாளியாக இருக்கலாம் என நாங்கள் ஐயமுறுகிறோம். இது அமெரிக்க  C. I . A இன் “ஆபரேஷன் மங்கூஸ்” நடவடிக்கை. மேதகு, ஃபிடல் காஸ்ரோ மீதான 635வது கொலை முயற்சிக்கான முன்னேற்பாடு முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இவரை நாங்கள் கியூபாவை விட்டு வெளியேற்றுகின்றோம்.’

தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் உணராதவராக, விபரிக்க முடியாத மன நிலையில் – தோழர் வீரக்குட்டி, “கியூபா வீழுமெனில் – நாம் எல்லோரும் வீழ்வோம்” என, பாப்லோ நெருதாவின் கவிதை வரியை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

(இத்துடன் இந்தக் கதை முடிந்து விட்டது என நீங்கள் நினைக்கலாம். அப்படித்தான் நானும், முடித்து விடலாம் எனத்தான் நினைத்தேன்.) 

ஆனால்….

che guevara está fumando un puro

என உபதலைப்பிட்டு இக்கதை தொடரக் காரணம், இதுவரை நான் உங்களுக்கு சொன்ன கதையை இனித்தான் தோழர் வீரக்குட்டியிடம் நான் கேட்கப் போகிறேன். ஆமாம். அவரைத் தூக்கிக்கொண்டு ரொரண்டோவுக்கு பறக்கப் போகும் AC 2375 விமானத்தில்தான், நானும் கியூபாவில் இருந்து கனடா போகப் போகிறேன். இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் தோழர் வீரக்குட்டியின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில்தான் அமர்ந்து அவர் சொல்லப் போகும் கதையை கேட்கப் போகிறேன்.

ஹவானா சர்வதேச விமான நிலையம். 

ஒரு வார விடுமுறையை முடித்துக்கொண்டு ரொரன்டோ  வருவதற்காக விமானத்திற்குக் காத்திருக்கிறேன். துரு துருவென அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு திரியும் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஸ்பானியச் சிறுவன் என் கவனத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தான். 

கியூபச் சிறுவனின் கழுத்தில் ‘ஓம்’ பென்டனுடன் கூடிய தங்கச் சங்கிலி, மிகையான ஆச்சரியத்தைத் தந்தது. 

விமான ஏறு துறையின் விருந்தினர் பகுதியில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி பிரிவுத்துயரின் ஆற்றாமையில் தன்னை அவள் துறந்து கொண்டிருந்தாள். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகிதான் அவள். சிறிமா காலத்துச் சீத்தை என்பார்களே, அப்படி ஒரு வகை நீலத் துணியில் ஜட்டியா, டவுசரா என்று பிரித்தறிய முடியாததை இடுப்பில் மாட்டியிருந்தாள். மார்பில் மஞ்சள் ப்றாவும் அணிந்திருந்தாள். அந்த மஞ்சள் ப்றாவில் வெளிப்புறத்தில் செம்பருத்திப்பூக்கள்  மலர்ந்திருப்பது கூடுதல் அழகு. அவள் ஒரு கலாரசனைக்காரியாக இருக்க வேண்டும். வாலை வளைத்து வாயை ஆவென்று தீ கக்கும் சீன ட்ராகனை மார்பில் பச்சை குத்தி இருந்தாள். இணையின் கலவிச் சுவைக்கு பெரிதும் உதவக் கூடும் அந்த ட்ராகன்.

அவளும் என் கவனத்தைச் சிதைத்தும், கவர்ந்தும் கொண்டிருந்தாள். அவள் இன்னும் கூடிய ஆச்சரியத்தை என்னுள் மூட்டினாள். கியூபாவைச் சேர்ந்த ஒரு ஸ்பானியப் பெண்ணின் கழுத்தில் முப்பது பவுண் தாலிக்கொடி தொங்கினால் யார்தான் ஆச்சரியத்தின் எல்லையை அடையமாட்டார்கள்? ‘ஓம்’ டாலர் அணிந்த சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் அவள். 

அங்கு நான் ஒரு காட்சிப் பிழையைக் கண்டு கொண்டிருந்தேன். 

பிரிந்து செல்பவர், தேற்றத்தேற்ற அவள் தேம்பத்தேம்ப அழுதாள். கூட வந்த நண்பர்களைத் தேடினேன். உல்லாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, பிற அவதானிப்பு ஏதும் இன்றி ரமேசும் கருணாவும் மீளவும் மது குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மேலும் மது கொடுக்க வேண்டாம் என ரெஸ்ராரண்ட் காரர்களிடம் ராதிகா கட்டளை இடுவதைத் தூரக்கண்ணால் கண்டேன்.

அவர்களுக்கு ஒரு காட்சிப் புதினத்தைக் காண்பிக்கலாம் என்றால் அது முடியவில்லை.

விமானம் ஏறுவதற்கு அரை மணித்தியாலம் முன்பு, ‘டியூட்டி ப்ரி’ கடைக்கு ‘ஹவானா கிளப்’ றம் வாங்குவதற்காகச் சுற்றிக்கொண்டிருந்தபோது பின்னால் , “வணக்கம் அண்ண,” என்னும் தமிழ்க் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.

“அண்ணையும் ரொரண்டோவோ?” என்றார் அவர். நான் ஆமாம் என்று சொல்லும் முன்னே, 

“அவன் என்ர மகன்தான்” என்றார். நான் அவதானித்ததை அவர் அவதானித்திருக்கிறார்.

“உங்களுக்கும் இங்க கியூபால குடும்பம் இருக்கோ?”

“சேச்சே.. ப்ரன்ஸ், பமிலியோட வக்கேஷனுக்கு வந்தனான்..”

“நீங்கள் எப்படி இங்க கியூபால கல்யாணம்…?” என்று கேட்டேன்.

“இங்க அடிக்கடி வக்கேஷக்கு வாறனான். அப்ப பழக்கம். கனேடிய சிட்டிசன் எடுத்தாப்பிறகு இங்க வந்து இவள கட்டினனான். பழகிப்போட்டு ஏமாத்தி போட்டான் சிறிலங்கன், எல்லாரும் இப்படித்தான் எண்டு கதைச்சால் நாட்டுக்குக்தானே கூடாது.” என்று சொன்ன அவரது நல்ல மனசு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்கு எப்படியும் வயது நாற்பத்தைந்தைத் தாண்டி இருக்கும். வழுக்கையும் தொப்பையும் அவருக்கு மாறு பட்ட அழகை தந்தது.

“கியூபன் பெட்டையக் கட்ட உங்கட வீட்டாக்களோட பெரிய சண்டை போட்டிருக்க வேண்டி வந்திருக்கும் போல.” என்றேன்.

“சேச்சே.. அவங்க யாருக்கும் இது தெரியாது. இது என்ர ஓண் இண்றஸ்ட்.  ஊர்ல பள்ளிக்கூடம் போகேக்க பாத்த என்ர சாதிக்கார ஊர்ப்பெட்டையக் கனடாவுக்கு இறக்கி கட்டினனான். யுனிவர்சிட்டி போற மகள் எல்லாம் ரொரண்டோவில இருக்கினம்.” அவர் என்னவோ எளிமையாகத்தான் சொன்னார். நான் ஆச்சரியம் அடைந்ததற்கு அவர் என்ன செய்ய முடியும் ?

‘ஹவானா கிளப் றம்’ போத்தல்கள் இரண்டை கையிரண்டிலும் பிடித்த வண்ணம் எனக்கவர் முதுகைக் காட்டி, ரொரண்டோ செல்லவிருக்கும் AC 2375 விமானத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.  

அவர் அணிந்திருந்த சிகப்பு நிறச் சட்டையின் பின் பக்கம், கியூபா புரட்சி வென்ற பெருமிதத்தில் – 

‘சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தார் தோழர் சேகுவேரா.’

சக்கரவர்த்தி

சக்கரவர்த்தி கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் எழுத்தாளர். இவரின் ‘யுத்தசன்யாசம்’ என்ற கவிதை நூலும், ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன.

2 Comments

  1. உண்மைகள் உறங்காது என்பது கற்பனை கலந்த
    இக்கதை ஏனோ நினைவுகள் பின்னோக்கி செல்கின்றது அருமை அருமை வாழ்த்துக்கள்
    சக்கரவர்த்தி.

  2. சுவாரசியமாக வரையப்பட்ட சிறுகதை. அனைத்து உண்மைகளும் கதைக்கும், வாசிப்பிற்கும் தன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியது. சில சம்பவங்கள் எப்படியிருந்திருக்குமென எண்ணிப்பார்க்க முடிகிறது. ஒரு நாடகம் பார்த்தது போன்ற உணர்வு. தொடருங்கள் உங்கள் எழுத்துகளை.

உரையாடலுக்கு

Your email address will not be published.