/

முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விட, புத்திசாலிகளுக்கு எதிரியாக இருப்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன்: ஜோர்ஜ்.இ.குருஷேவ்

தாயகம் பத்திரிகை ஆசிரியருடனான நேர்காணல், நேர்கண்டவர் அனோஜன் பாலகிருஷ்ணன்

அதன் பக்க விளைவுகளாக எவற்றைச் சொல்வீர்கள்?

இதனால் அடிக்கடி ஹர்த்தால்கள் நடக்கும். வீட்டில் படுத்துக் கிடந்தபடியே நோகாமல் நொங்கு குடிக்கும் போராட்டம் அது. பாடசாலைகளுக்கு மாணவர்கள் போக மாட்டார்கள். கடைகள் பூட்டப்படும். அதனால் நகருக்கு பஸ்ஸில் யாரும் போக மாட்டார்கள். ஓடுகிற பஸ்களுக்கு கஸ்டமரி கல்லெறி நடக்கும். சில ஆர்வக் கோளாறுகள் ஏற்கனவே எண்ணிக்கை போதாமையால் பிந்தி வருகின்ற பஸ்களை எரிப்பார்கள். வழமையாக ஓடுகிற பஸ்களுக்கே சீட்டுகளை பிளேட்டால் வெட்டுகிறவர்கள் இவர்கள். அடுத்த நாள் பஸ் வராததற்கு சிங்கள பேரினவாத அரசை குறை சொல்ல அவர்களுக்கு தேவை இருந்தது.

அரச வேலையாட்களான யாழ்ப்பாணிகள்  அரசாங்கத்திற்கு விளக்கம் சொல்ல பயந்து, எப்படியோ சைக்கிளிலாவது போய் சேர்ந்து, கையெழுத்து வைத்து சம்பளம் வாங்கியபடியே, ஹர்த்தால் வெற்றி என்று ஈழநாட்டில் முழங்குவார்கள்.

அதை விட, அப்பா வாங்கி வரும் சுதந்திரனும், அந்தனி சில்லின் ஒரு தீப்பொறியும், இன்றைய தமிழ் தேசிய ஊடகங்கள் மாதிரி, ‘கலங்கியது சிங்களம்! ஆளப் போறான் தமிழன்!’ கதை விட்டுக்கொண்டிருந்தன.

தொழிலாளர்களையும் அரச அலுவலர்களையும் ஒன்று திரட்டி பொதுவேலை நிறுத்தம் என்று ஒன்றை யாழ்ப்பாணிகள் செய்ததாக எனக்கு நினைவில்லை. தமிழரசுக் கட்சிக்கு தொழிலாளர் அணியோ, தொழிற்சங்கங்களை கைக்குள் வைத்திருந்த சிங்களக் கட்சிகள் மாதிரி தொழிற்சங்கம் இருந்ததாகவோ, தமிழரசுக் கட்சி மே தினத்தைக் கொண்டாடியதாகக் கூடவோ எனக்கு நினைவில்லை.  இருந்தால் யாரும் நினைவூட்டலாம்.

ஹர்த்தாலோ எதுவோ, படிப்பு குழம்பக் கூடாது என்று வீட்டில் இருக்க விட மாட்டார்கள். பள்ளிக்கு போக வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். துரோகிகளான நானும் என் அண்ணை றொபின்சனும் பள்ளிக்கூடத்தடியில் பஸ்ஸிற்கு தனியாக காவல் இருப்போம். பஸ் வெறுமையாகவே வரும். ஏறும் போதே, கண்டக்டர் விரட்டிக் கலைப்பார்.  ‘போங்கோடா… வந்திட்டாங்கள்!’

தலைவரின் மரணம் மாதிரி அதற்கும் அத்தாட்சிப் பத்திரம் இல்லாததால் வீட்டில் நம்ப மாட்டார்கள். இரண்டு பேர் என்பதால் இரண்டு சாட்சிகளும் ஒரே கதையைச் சொல்வதால், பொது மன்னிப்பு அளிக்கப்படும்.

முதல் முதல் பெருவெற்றியாக தமிழ் தேசியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டாடிய, துரோகியாக்கிக் கொல்லப்பட்ட துரையப்பா, பாடசாலை முடிந்து ஊருக்கு பஸ்ஸிற்காக நிற்கும் போது, தினசரி நான்கு மணிக்கு தனது வெள்ளை பேர்ஜோ காரில் பின்னுக்கு உட்கார்ந்து போவார்.  கட்டாய ஓய்வு பெறாமல் தன்னுடைய பணிக் காலத்தை நீடிக்க வேண்டி என் அப்பா எந்த அறிமுகமும் இல்லாமல் சிபார்சுக் கடிதம் கேட்டுச் சென்ற போது, எந்த தயக்கமும் இல்லாமல் கொடுத்தவர் அவர்.

சிவகுமாரையும் தந்தை செல்வாவையும் வைத்து, பின்னைய புலிகள் மாதிரி பிண வியாபாரம் செய்த அதே மண்ணில் தான் துரையப்பாவுக்கும், சிங்கள அரசாங்க அதிபரான லயனல் பெர்னாண்டோவின் தாய்க்கும் அழுவதற்கு தானாய் சேர்ந்த கூட்டம் இருந்தது.

நாங்கள் பஸ்ஸில் போகும் காலங்களில் தான்  புலிகளின் வங்கிக் கொள்ளைகளும், குற்றப்புலனாய்வு பிரிவில் வேலை செய்தவர்கள் மீதான கொலைகளும் நடந்தன. இதனால், பஸ் பலாலி வீதியால் போகாமல் திசை திருப்பப்பட்டு, இராச பாதை வீதிக்கூடாக செல்லும். பாதுகாப்புக்கு இருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்ட பரமேஸ்வராச் சந்தி மக்கள் வங்கிக் கொள்ளை, இணுவிலில் நடந்த இரட்டை சண்முகநாதன் கொலைகள் எல்லாம் அந்தக் காலங்களில் நடந்தவை தான்.

பின்னர் ஒரு நீர்வேலிக்கு போன போது, இராசபாதையும் கரந்தன் றோட்டும் சந்திக்கும் இடத்தில் பனைகளுக்கு நடுவில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த புலோலி வங்கிக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட பஸ்ஸை றொபின்சன் அண்ணை எனக்கு காட்டினார்.

நான் இயக்கத்திற்கு ‘ஓடிப் போகாமல்’ இருந்ததற்கான காரணங்களில் இவையும் ஒன்று. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய சட்டத்திற்கு விரோதமான விடயங்களை செய்து கொண்டு, ஆயுதங்களை வைத்துக் கொண்டு கொலை செய்ய தயங்காத முன்பின் தெரியாதவர்களை நம்பி, ‘தனிநாடு எடுக்க’ வீட்டை விட்டு ஓடிப் போகத் தயாரில்லாத மனநிலை இவற்றில் இருந்து தான் உருவானது.

என் குடும்பத்தினர் பெரிய எதிர்பார்ப்புகளோடு இருந்த போதும், என்னால் பல்கலைக்கழகத்திற்கு போக முடியாமல் போய் விட்டது. எனக்கு உயிரியல் படிக்க விருப்பமில்லை, கணிதம் தான் விருப்பம், அதைப் படிக்கப் போகிறேன் என்ற போதும் என்னை ஒரு டாக்டராக வேண்டும் என்று என் திறமையை நம்பி கட்டாயப்படுத்தியிருந்தார்கள்.

என் ஆங்கில ஆசிரியரும், சிங்கள அரசின் பாடத்திட்டப்படி படிப்பித்த பாடங்களில், தமிழ்த் தேசிய உணர்வு மேடைகள் மூலமாக ஊட்டப்பட்டதால், வரலாறுகள் பற்றி கேள்வி கேட்டு தர்க்கம் செய்யும் போதெல்லாம், ‘எனக்கு தெரியாது. பாடத் திட்டத்தில இருக்கிறதை படிப்பிக்கிறன். நீ உதை விட்டுட்டு போய் சட்டம் படியடா!’ என்று சொல்வார். வீட்டுக்காரர் அதற்கு விரும்பியும் இருக்க மாட்டார்கள்.

என் ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லாம் எதிர்பார்த்து தான் இருந்தார்கள். இன்னும் கொஞ்சம் கவனமாகப் படித்திருந்தால் அது முடிந்திருக்கும். அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய் விட்ட கவலை இருந்தாலும், பல்கலைக்கழகம் போய் இன்னொரு படிச்ச முட்டாள் யாழ்ப்பாணியாக இருந்திருக்க மாட்டேன் என்றாலும், என்னுடைய அதிகாரத்தை கேள்வி கேட்கும் இயல்புகள் காரணமாக , புலிக்கு என்னைப் பற்றி போட்டுக் கொடுத்து,  ‘போட’ வைத்திருப்பார்கள்.

அங்கேயும் இந்த யாழ்ப்பாணி சாதி அடிப்படையில் எனக்கு என்ன செய்திருப்பான் என்பதை, அங்கு பணியாற்றிய என் அருட்தந்தை சகோதரன் மூலமாக அறிந்திருக்கிறேன்.

எனவே, வருத்தங்கள் அதிகமில்லை.

இன்றைக்கு நான் கற்றுக் கொள்ள விரும்பிய எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள இணைய உலகம் வழி செய்ததால், இன்றைக்கும் கற்றுக் கொண்டு தானே இருக்கிறேன்.

சாதியும் கடவுளும் என்று வரும் போது உங்கள் நிலைப்பாடு என்ன?

இன்றைக்கு என் நிலைப்பாடு இது தான்,

உன்னை உயர்ந்த சாதி என்றும் என்னை இழிந்த சாதி என்றும் உனக்கு சொன்ன கடவுள், ‘அவன் தான் உயர்ந்த சாதி, நீ அவனுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டிய இழிந்த சாதி’ என்பதை எனக்கும் வந்து சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில் பிரச்சனை இல்லை.

அதற்கு முன்னர், சில கணக்குகளை அந்த கடவுளுடன் தீர்க்க வேண்டியிருப்பதால், அவரும் என்னைச் சந்திக்காமல் இருப்பது நல்லது.

இன்னொரு மின்கம்பத்தில் அவரை சிலுவையில் அறைய வேண்டிய தேவை எனக்கு வராது.

‘ஜோர்ஜ் குருஷ்சேவ்’ என்கிற கம்னியூனிஸ பெயரை உங்கள் பெற்றோர் வைத்ததற்கு பின்புலம் ஏதும் உண்டா?

நாங்கள் எப்போதும் சுய நல சிந்தனையில்லாமல் சமூகமாக சிந்திக்க வேண்டும், பொதுநலன்களை வேண்டும் சமூக செயற்பாடுகளின் போது எங்களை முதன்மைப்படுத்தி பெயர் தேடுவதோ, சொந்த லாபம் பெறுவதற்கான முயற்சிகளோ இருக்கக் கூடாது,  அநீதிக்கு எதிராக போராட வேண்டும், பணம் மீதான ஆசை வந்து விடக் கூடாது, மற்றவர்கள் மீது பொறாமை உணர்வு கொண்டிருக்கக் கூடாது, ஏழ்மையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்,  எங்களை விட ஏழ்மையானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், தன்னம்பிக்கை வளரவும் இந்த ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நாங்கள் மேலெழவும், பொருளாதாரத்தை விட கல்வி தான் முக்கியமானது, வெறும் தத்துவம் பேசுவதை விட அதன்படி வாழ்வது தான் முக்கியமானது, மதம், சாதி, இனம் என்ற எதையும் வைத்து யாரையும் மதிப்பிடாமல் மனிதர்கள் என்றே எல்லாரையும் மதிக்க வேண்டும் என்ற சிந்தனைகள் எல்லாம் அவர்களிடம் இருந்து தான் எனக்கு வந்தது.

இதனால்  தான் சிறுவயதிலேயே தொழில் செய்து பணம் தேடும் வழக்கம் கொண்ட எங்கள் ஊரில், எங்களுக்கு எல்லாம் கல்வி கற்பித்து முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அவர்கள் அக்கறையாக இருந்தார்கள்.

என்னுடைய பெற்றோர் பெரிதும் படிக்காதவர்கள். ஐயா என்று அழைக்கும் என் தந்தையின் தகப்பனாரான அப்புவின் சகோதரரான ஞானப்பிரகாசம் எங்கள் குடும்பத்தினர் அப்பையா என்று அழைக்கும் ஞானதந்தையாக இருந்தார். தன் சகோதரர்களின் பேரப்பிள்ளைகளில் எங்கள் குடும்பத்தினர் மீதே அவர் வாஞ்சை அதிகம் கொண்டவராக இருந்தார். ஆசிரியரான அவர் தனக்கு பிள்ளைகள் இல்லாததால் கடைக்குட்டியான என்னை குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னோடு வைத்திருந்து வளர்த்தார். அவரைத் தான் நான் அப்பா என்று அழைப்பேன். அவரது மனைவியை ஆச்சி என்பேன். இவர்கள் என்னை தங்கள் பிள்ளையைப் போலவே வளர்த்து படிப்பித்தார்கள்.

ஐயா, அப்பா எல்லாம் அந்த ஏழ்மையான, கல்வியில் பின் தங்கியிருந்த கிராமத்தில் சமூக அக்கறையுடன் செயற்பட்டவர்கள். எங்கள் சமூகத்தில் படித்திருந்த மற்றவர்கள் போலன்றி, இவர்கள் தாங்கள் மட்டும் செழிக்க வேண்டும் என்ற சுயநலச் சிந்தனை இல்லாமல், சமூக சிந்தனையுடையவர்களாக இருந்தார்கள். கோயில் சார்ந்திருந்த சனசமூக நிலையங்கள், அவை சார்ந்த வாசிகசாலைகளில் எல்லாம் அவர்களின் பங்களிப்புகள் நிறைய இருந்தன. பின்னர் என் மூத்த அண்ணை கொர்னேலியஸ் கூட அவ்வாறான ஈடுபாட்டுடன் இருந்தார்.

ஐயா எப்போதுமே யாரையும் சந்திக்கும்போது, பிள்ளைகள் படிக்கிறார்களோ? என்று தவறாமல் கேட்பார். எனக்கு சிறுவயதில் தெரிந்த எங்கள் ஒரு குஞ்சப்புவின் மகன் புலிகளோடு சேர்ந்திருந்த போது, அவனை வழியில் கண்டு, உன் குடும்பம் ஏழ்மை நிலையில் இருக்கிறது, நீ அவர்களுக்கு உதவாமல் இப்படி இயக்கத்தில் இருக்கிறாயோ? என்று புத்தி சொன்னதற்காக, இரண்டு புலிகள் ஐயாவை மின்கம்பத்தில் கட்ட வீடு தேடி வந்த கதை உண்டு.

நான் தங்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துகிறேன் என்று ஐயாவை புலிகள் பிடித்துக் கொண்டு போய் வைத்திருக்க, குருவானவரான என் அண்ணை அது பற்றிக் கேட்கப் போன போது, நான் தங்களுக்கு எதிராக பத்திரிகை விடுகிறேன் என்று திமிராகக் கதைத்த முகாம் பொறுப்பாளர், கனடா வந்து உலகத் தமிழர் பொறுப்பாளராக குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்து, பிறகு வழமையான  தகடு கொடுத்தலால், பதவி இழந்து நடை மெலிந்து நண்ணிய கதைகள் எல்லாம் உண்டு.

ஐயா கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த விடயம் கூட எனக்கு நீண்ட காலத்தின் பின்னர் தான் வீட்டார் சொன்னார்கள்.

பஞ்சமர்கள் தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர் மகாசபை அமைப்பிலும் அது சார்ந்த போராட்டங்களிலும் அவர்களின் பங்களிப்புகள் இருந்தன. பஞ்சமர்களின் உரிமைப் போராட்டங்களில் இடதுசாரிகளின் பங்களிப்பு இருந்தபடியால், இவர்களும் இடதுசாரித் தத்துவங்களின் மீது ஈடுபாட்டுடன் இருந்தார்கள்.

என்னுடைய அண்ணன்மாரின் புத்தகச் சேகரிப்பு தொகுப்புகளில் லெனின், மாவோவின் புத்தகங்கள் எல்லாம் என, பைபிளோடு சிவப்பு புத்தகங்களும் என் வாசிப்புக்காக இருந்தன. மொஸ்கோ, பீகிங் என்ற தத்துவ விசாரணைகளுக்குள் போகாமல், ‘எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே!’ என்ற சிந்தனையோடு அவர்கள் இருந்ததால், அவர்கள் இந்த தத்துவார்த்த தகராறுகளுக்குள் தலை போட்டதில்லை.

இந்த பாதிப்பினால் தான் எங்களுக்கு ஸ்டாலின், லெனின், குருஷ்சேவ் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. குருஷ்சேவை கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு அப்போது பிரச்சனையாக இருக்கவில்லை. எனக்கும் பிரச்சனையாக இப்போதும் இருக்கவில்லை.

ஜி.ஜி.பொன்னம்பலம் பிரபல சைவ வேளாண்குடியினர். அவரது சகோதரரான பாலசுந்தரம் சைவ மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்காக ஜிஜி அவரைச் சுடத் துப்பாக்கியோடு திரிந்தார் என்று எனக்கு சமய பாடம் படிப்பித்த சின்னப்பு மிஸ் சொன்னார்.

அந்த பாலசுந்தரம் சுவாமி எங்கள் கோயிலில் இருந்த போது, என் அண்ணன் பிறந்து ஞானஸ்நானம் கொடுக்க கொண்டு சென்ற போது, ஜோசப் ஸ்டாலின் என்ற பெயரை வைக்க மறுத்து விட்டார்… கிறிஸ்தவர்களை அழித்த கம்யூனிஸ்டின் பெயரை வைக்க மாட்டேன் என்று.

வீட்டாரின் விடாப்பிடி காரணமாக, கோயிலில் ஞானஸ்நான அத்தாட்சிப் பத்திரத்தில் ஜோசப் பெர்னான்டோ என்றும், பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் ஸ்டாலின் என்றும் பெயர் வைக்கப்பட்டது.

அந்த ஸ்டாலின் இப்போது கத்தோலிக்க அருட்தந்தையாக இருக்கிறார்.

அந்த பாலசுந்தரம் சுவாமி இளைப்பாறி, சென்.பற்றிக்ஸ் கல்லூரிக் கட்டடத்தின் மேல் மாடியில் இருந்த போது, கழுத்து  திரும்ப முடியாத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை காணும்போதெல்லாம், God bless you, father! என்று அவரை நான் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தேன்.

அவரைப் போலவே, அங்கு இளைப்பாறியிருந்த, தாவீது அடிகளாரும், யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட போது மரணித்தவர், என்னால் அவ்வப்போது ஆசீர்வதிக்கப்பட்டவர் தான்.

எங்களை நற்பண்புகளோடு வளர்க்க வேண்டும் என்பதற்காக வறுமையில் என் குடும்பத்தினர் பல விடயங்களை அறிவுறுத்தியிருந்தார்கள்.

வைரவர் கோயில் கிடாய் வெட்டின்  போது, என் நண்பர்கள் எல்லாம் தூர இடங்களில் இருந்து வருவோரின் சைக்கிள்களைப் பாதுகாத்து கொடுப்பதற்கு  நாலு கம்பு நட்டு, கயிற்றால் கட்டி 25 சதம் அறவிடுவார்கள். நானும் என்னுடைய உழைப்பால் உயரும் உத்தமர் தம் தொழில் முனைவு எண்ணத்தில் அதற்கு பெரும் திட்டம் தீட்டிய போது, ‘உனக்கென்ன காசில ஆசை?’ என்று அந்த ஆசையில் மண் போட்டார்கள்.

தங்களுக்கு இடதுசாரிகளுடன் இருந்த தொடர்புகளைக் கூட அவர்கள் எங்கள் குடும்ப நலன்களுக்காக பயன்படுத்தியதில்லை. ரஷ்ய புலமைப்பரிசில்களைக் கூட எங்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று அவர்கள் எண்ணியதில்லை.  தந்தை இல்லாமல் தாயோடு வளர்ந்த எங்கள் சமூகத்தினர் ஒருவருக்குத் தான் இவர்கள் ரஷ்யா போக இவ்வாறு உதவி பெற்றுக் கொடுக்க, அவர் அங்கிருந்து ஊருக்கு வராமல் பின்லாந்து சென்று மணம் முடிந்து எந்த தொடர்பும் அற்றுப் போக, அவரை இணையத்தின் மூலமாக நான் கண்டுபிடித்த பெருங்கதை ஒன்றுண்டு.

அவர்கள் எனக்கு ஊட்டி வளர்த்த அந்தப் பண்புகள் தான் நான் பத்திரிகை நடத்தியபோதும், ஹொலிவூட் நிறுவனம் ஒன்றில் தொழிலாளர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய போதும் தனிப்பட்ட ரீதியில் குறை சொல்ல முடியாதபடிக்கு எனக்கு வழிகாட்டிகளாக இருந்தவை.

வறுமை போகும், வறுமையால் வந்த வடு போகாது என்பார்கள். எங்கள் குடும்பம் வறுமையில் இருந்ததால், பல அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது. சொந்த வீடில்லாமல் இன்னொரு குடும்பத்தின் வளவில் குடியிருக்க நேரிட்ட போது, நாங்கள் வசித்த குடிசையை எரித்து நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்ததுடன், தங்கள் பண வசதி மூலம் பொலிசாரின் உதவியைப் பெற்று, அப்பா, ஐயாவை எல்லாம் கைது செய்து விளக்க மறியலில் வைத்திருந்தார்கள்.

குழந்தைப் பருவத்தில் ஆச்சியுடன் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த அப்பாவைப் பார்க்க போன போது, அந்த துயரத்தின் கனத்தை அறிந்து கொள்ளாமல், தண்ணீரில் நனைத்து புத்தகத்தில் படத்தை பதிக்கின்ற தண்ணீர்ப்படம் ஆச்சி வாங்கித் தரவில்லை என்று சிறையில் இருந்த அப்பாவிடம் நீதி கேட்டிருக்கிறேன்.

வீடு எரிக்கப்பட்டு வீடிழந்த நிலையில் வீதியில் நின்ற எங்களை ‘ஸ்டாலின், லெனின், குருஷ்சேவ் மூவரும் நடுத்தெருவில்!’ என்று மித்திரனில் செய்தி வந்து, அந்த நேரத்திலேயே எங்களுக்கும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பதினைந்து நிமிடப் புகழ் கிடைத்தது.

இப்படி இரண்டு தடவைகள் வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் நிலை வந்தது.

இன்றைக்கும் எனக்கு துன்பம் வரும் போதெல்லாம், என்னுடைய ஐயா எப்படி பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு இப்படியான துன்பங்களை எதிர்கொண்டார் என்று நான் நினைப்பதுண்டு.

தங்களுடைய ஏழ்மை நிலைக்குள்ளாலும், யாழ்ப்பாணக் கிணற்றுக்கு அப்பால் உள்ள உலகங்களைக் காட்டியவர்கள் இவர்கள்.

சிறு வயதிலேயே தன் கடைக்குட்டித் தம்பியை ஆங்கிலப்படங்களுக்கு கூட்டிச் சென்றவர் என் மூத்த அண்ணை. என் ஆங்கில வாசிப்புகளுக்கு அண்ணை வாங்கி வந்த ஆங்கிலச் சஞ்சிகைகள் முக்கியமானவை. 

வாழ்க்கை பற்றியும், உளவியல் பற்றியுமான தத்துவ விசாரணைகளுக்கு அருட்தந்தையான அண்ணை இருந்தார். இந்த உரையாடல்களுக்காகவே அவர் குருமட மாணவனாக இருந்த காலத்தில் அவரைச் சந்திக்கப் போவேன். அவர் அடிக்கடி சொல்வார்… தத்துவஞானி போல பேசுவது எளிது, வாழ்வது தான் கஷ்டம்!

விஞ்ஞானம், தொழில் நுட்பம் பற்றி இருவருக்கும் இருந்த பொதுவான ஆர்வம் காரணமாக என் அண்ணன் றொபின்சனோடு எப்போதும் அது பற்றிய கருத்துப் பரிமாற்றம் இருந்தது.

இவர்கள் மூவருமே தங்களுடைய அறிவுத் தேடல் காரணமாக பிற்காலங்களில் பல்கலைக்கழகப் பட்டங்களை பெற்றுக் கொண்டார்கள்.

நான் அறிவைத் தேடிக் கொண்டிருந்தபடியால், பட்டங்கள் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

அவ்வாறன ஒரு கிராமத்தில் வளர்ந்திருந்தாலும், என் சகோதரிகள் பரந்த மனம் படைத்தவர்களாக, விசாலமான உலகைத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.

எனக்கு காதல் வந்த போதும், முதலில் சொன்னது என் அக்காமாருக்குத் தான். அவர்களும் தங்களின் வருங்கால மச்சாளைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்தார்கள்.

என்னுடைய முடிவுகள் எப்போதும் சரியானதாக, நியாயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

என் அப்பா என்னைப் பற்றி பலத்த கனவுகளுடன் இருந்தார். சிறுவனான என்னை பெரிய அரசியல் தலைவர்கள் வரும் கூட்டங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

டட்லி சேனநாயக்கா மயிலிட்டி துறைமுகம் திறக்க வந்த போதும், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அலங்கார ஊர்தி மின்வயர்களை அறுத்து இரண்டு பேர் இறந்த போதும், தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திறப்பின் போதும், ஜே.ஆர் முற்றவெளியில் பிரசாரத்திற்கு வந்து களனி யாத்திரை பற்றி கேள்வி கேட்டு மேடை இழுத்து முறிக்கப்பட்ட போதும், ஊரில் நடந்த தேர்தல் கூட்டங்கள் எல்லாவற்றுக்கும் என அப்பா என்னை பல அரசியல் கூட்டங்களுக்குக் கூட்டிச் சென்றிருந்தார்.

இருக்க சொந்தமான வீடு இல்லாதிருந்த போதும், அப்பா பத்திரிகை வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். எரிக்கப்பட்ட அந்த குடிசை வீட்டில், ஊரில் உள்ள பலரும் வந்து வாசிகசாலை போல் வாசித்துச் செல்லும் அளவுக்கு எல்லா பத்திரிகைகளுமே இருந்தன. தமிழ்நாட்டின் தி.மு.க உதயசூரியன் இதழ்கள் கூட இருந்தன. அந்தச் சிறுவயதிலேயே காமராஜர் இந்திரா பிரிவு எல்லாம் எனக்கு அத்துபடியாக இருந்தது.

எனக்கு வாசிக்கத் தெரிந்த காலம் முதல் வாசிப்பதற்கு எப்போதுமே பத்திரிகைகள், சஞ்சிகைகள் அந்த ஓலைக்குடிசையில் இருந்தன.

பின்னர் அண்ணன்மார் சேர்த்து வைத்திருந்த சிறுகதை, நாவல், கட்டுரைப் புத்தகங்கள் எல்லாம் எத்தனயோ தடவை என்னால் மறுவாசிப்பு, மீள்வாசிப்புகள் செய்யப்பட்டவை.

காந்தியின் சத்தியசோதனை எல்லாம் நாலாம், ஐந்தாம் வகுப்பு காலத்திலேயே வாசித்திருந்தேன். வாசிப்பு என்பது எனக்கு போதைப் பொருள் என்பது போல, சாப்பிடும்போதும் வாசித்து பேச்சு வாங்கியிருக்கிறேன்.

வெளிநாடு வந்து வீட்டுக்காரருக்கு பொருளாதார ரீதியாக பெரிதாக நான் எதையும் செய்ததில்லை. அவர்கள் அதைப் பற்றி என்னிடம் குறைப்பட்டதுமில்லை. அவர்களும் எப்போதும், உதவி தேவைப்படும் மற்றவர்களைப் பற்றிச் சொல்லி, அவர்களுக்கு நான் உதவி செய்ய வேண்டும் என்று தான் வேண்டிக் கொள்வார்கள்.

ஊரோடு ஒத்தோடி, புலிவாலில் தொங்கி பிழைப்பு நடத்திய பலர் இருக்க, பகுத்தறிவு இல்லா மிருகசாதி கேட்டுக்கேள்வி இல்லாமல் மண்டையில் போடும் என்ற நிலை இருந்த போதும்.

இப்படி ஒரு பத்திரிகை நடத்திய போது அவர்கள் என்னை நிறுத்தும்படியோ, தேவையில்லாத வேலை என்றோ சொன்னதில்லை.

நான் எதைச் செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்பதும், அதற்கான வகையில் தாங்கள் என்னை வளர்த்தோம் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்தது.

உங்களுக்கு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழும் சந்தர்பம் இருந்ததா?

என் அண்ணையோடு சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்த பண்டா அண்ணை எங்கள் குடும்பத்தினரின் அன்புக்குரியவராக இருந்தார். இவர் அந்தக் காலத்தில் ஈழநாட்டில், போயா நாட்களில் பண்டா நிலமே என்ற பெயரில் பௌத்த நற்சிந்தனை எழுதுகின்றவர். நாவலர் வீதியில் தன் பெற்றோருடன் வசித்து வந்தவர். அண்ணை அவரது குடும்பத்தினருக்கு தன் தோட்டத்து முந்திரிகைப் பழம் தந்து விடும் போது நான் தான் டிலிவரி. மிகவும் அன்பான பெற்றோர், நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அண்ணை இப்போதும் பண்டா அண்ணையுடன் நட்பில் உள்ளார்.

இதைப் போல, சுன்னாகம் பேக்கரியில் இருந்து கடைகளுக்கு பாண் கொண்டு வரும் மாத்தயாக்கள் எங்களோடு அன்பாக இருந்தார்கள். அவர்கள் எங்கள் வீதியால் போகும் போது, நாங்கள் சிரித்து கதைப்பதால் எங்களோடு நன்றாகப் பழகுவார்கள். அதில் ஒருவர் கிறிஸ்மஸ்க்கு எங்களுக்கு வீடு தேடி கேக் எல்லாம் கொண்டு வந்து தந்திருந்தார்.

என் சகோதரி களுத்துறையில் சிங்களப் பாடசாலையில் கற்பித்தவர். நான் அங்கு விடுமுறையில் ஒரு வெசாக் திருநாளின் போது அங்கு போயிருந்தேன். அக்கா தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருந்த ஐயா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்;ந்தவர். அக்காவோடு நின்ற போது, அவர் வீட்டுக்குப் போய் பத்திரிகை படிக்கப் போவேன். சோவியத் யூனியன் சிங்கள இதழ் எல்லாம் வைத்திருந்தார். மிகவும் அன்பான மனிதர்கள்.

இப்படி, எங்களுக்கு சாதி, இன, மத, மொழி வேறுபாடுகளை விட, மனிதர்கள் என்பதே எப்போதும் முக்கியமானதாக இருந்தது.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் 77 தேர்தல் வந்தது.

சிறிமா இரண்டு கொத்து அரிசி இலவசமாக தருவதாக சொன்னதை நம்பி மோசம் போய்,  அரை றாத்தல் பாணுக்கு அதிகாலையில் கியூவில் நின்றவர்களுக்கு ‘எட்டு இறத்தால் தானியம்’ சந்திர மண்டலத்தில் இருந்து என்றாலும் கொண்டு வருவேன் என்று ஜே.ஆர் சொன்னார்.

சிங்களவர்களுக்கு சோற்றுப் பிரச்சனை!

தமிழர்களுக்கு சோற்றை விட சுதந்திரம் முக்கியம்!

அப்படித் தான் கூட்டணியும் சொன்னது.

பிறகு புலிகளும் சொன்னார்கள்!

யுத்தம் முடிந்து அன்றாட உணவுக்கே அல்லாடுவோருக்கு, கொத்துரொட்டி, மட்டன் றோல் புலன் பெயர்ந்தோர் அதைத் தான் இப்போது சொல்கிறார்கள்.

வெற்றி அல்லது வீர மரணம்!

இடையில், தமிழனுக்கு வயிறு பசிக்காது!

அப்போதைய அரசியல் சூழலை எப்படி நினைவுகூர முடிகிறது?

மூன்று மாதத்தில் கர்ப்பம் மாதிரி, மூன்று மாதத்தில் தமிழீழம், பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று, மீண்டும் ஒரு முறை ஆள நினைத்த ஆண்ட பரம்பரை எல்லாம் ரத்த திலக மேடைகளில் முழங்கிய போது,  நானும் அப்பாவோடு போய், விடுப்பு பார்த்துக் கொண்டிருந்தேன். வரலாறுகள் மறந்து போன, ஈழத்தின் அந்த நேரத்து தலைசிறந்த கதைசொல்லிகள், கவிஞர்கள், விதூஷகர்கள் எவரையும் நான் தவற விட்டதில்லை.

ஆண்டை பரம்பரை ஆண்டி பரம்பரையான பின்னாலும், அவர்களில் இந்தியாவில் இருந்து அடிக்கடி அறிக்கை விடும் காசியும், மாடி வீடு கட்டும் மாவையும் மட்டுமே மிஞ்சிப் போய், இன்றைக்கும் பிழிந்து சக்கையான ஈழத் தேங்காய்ப்பூவில் சம்பல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குள் கட்சி மாறிய மார்ட்டின், தீபாவளிக்கு ஊருக்கு வரும் யாழ்ப்பாணிகள் மாதிரி தேர்தல் நேரத்தில் வந்திறங்கும் குமார் பொன்னம்பலம் இருவரும் யாழ்ப்பாணத்தில் வானத்தில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட யோகேஸ்வரனுடன் மோதிக் கொண்டனர்.

தினசரி ஐம்பதோ நூறோ, அத்தோடு மொக்கன் கடை சாப்பாடு என தினசரி சம்பளத்தில் குமார் பொன்னம்பலத்திற்கு பிரசாரம் செய்தவர்கள் சிலர் என்னோடு நல்லூர் ஐயரிடம் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தார்கள். ‘விருப்பமோ?, சேர்த்து விடுறம்’ என்ற போதும், நான் போகாததற்கு ‘காசில ஆசை வந்திடும்’ என்பது மட்டும் காரணமாக இருக்கவில்லை.

சத்தியம் வாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் வேட்டி, சேலை கொடுத்த குமாருக்கும், சாப்பாடு கொடுத்த மார்ட்டினுக்கும் யாழ்ப்பாணிகள் தகடு கொடுத்தார்கள்.

ஐயாயிரம் பேருக்கு தேர்தல் அன்று சாப்பாடு கொடுத்த மார்ட்டினுக்கு அறுநூறு வோட்டுகள் விழுந்ததாக நண்பன் ஒருவன் சொல்வான். மார்ட்டின் எங்கள் பாடசாலைக்கு மிக அருகில் எங்களுக்கு ஆங்கிலம் படிப்பித்த பிலிப் மாஸ்டரின் பக்கத்து வீட்டுக்காரர்.

யாழ்ப்பாணிக்கு சோற்றை விட, சுதந்திரம் முக்கியம் இல்லையா!?

தமிழ்நாட்டு வாக்காளனுக்கு இருக்கும் அடிப்படை நேர்மை கூட இல்லாமல், ஒருவரைச் சுத்தியதை பெருமைக்குரியதாக சொல்லி, தன் புத்திசாலித்தனத்தை மெச்சுகின்றவன் யாழ்ப்பாணி.

சாப்பாட்டில் நஞ்சு வைத்துக் கொல்வது  பெருமைக்குரிய போராட்ட வடிவமாக இருக்கும் போது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது ஒன்றும் தலை போகின்ற பிரச்சனை அல்லவே!?

மூன்று மாதத்தில் கர்ப்பமாகும் திட்டத்துடன், யாழ்ப்பாணிகள் வாக்களித்ததால், சிறிமாவின் கட்சி மண் கவ்வ, யாருமே எதிர்பாராமல் கூட்டணி எதிர்க்கட்சியானது.

பாராளுமன்றத்தையும் கடந்து ஐ.நா சபையில் ஈழம் எடுக்க சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று அந்தக் காலத்து யாழ்ப்பாணித் தேசிய ஊடகமான ‘ஆளப் போறாண்டா, தமிழன்’ சுதந்திரனின் கோவை மகேசன் கதை அளந்து கொண்டிருந்தார். ‘தம்பி பிரபாகரன் தமிழ் ஈழத்தை பெற்று அண்ணன் அமிர்தலிங்கத்தின் காலடியில் ஒப்படைப்பார்’ என்ற கோவை மகேசனுக்கு பின்நாளில் அண்ணன் அமிர் துரோகியாகி,  புலிகளின் நிதியுதவியில் வீரவேங்கை பத்திரிகை விட்டுக் கொண்டிருந்தார். அதை புலிகளும் வினியோகித்து அடுத்த பொங்கலுக்கு ஈழப்பிரகடனம் என்று வதந்தி பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த தேர்தலின் போது, மாடு சினைப்படுத்த ஊசி போட வரும் விவசாய திணைக்கள அதிகாரிகள் பயன்படுத்தும் சிறிய ஜீப் வண்டியான Mini Moke க்கை திருடி, எங்கோ வாக்குச் சாவடியில் நின்ற பொலிசாரின் துப்பாக்கியைப் பறித்து ஒரு கூட்டம் எங்கள் ஊருக்குள் மண் பாதைகளுக்குள் புழுதி கிளப்பி joy ride போய்க் கொண்டிருந்தது. அதன் துணிக் கூரைக்குள்ளால் துப்பாக்கியால் சுட்டுப் பழகிக் கொண்டிருந்தார்கள்.

அந்த வாகனத்தில் சிறுவயதில் இருந்தே எனக்குத் தெரிந்த, என் அண்ணனோடு படித்த எங்கள் ஊர் குலசிங்கம் விடுதலை வீரனாக வலம் வந்தார். இவரும் ஏதோ பெயர் தெரியாத இயக்கம் ஒன்றில் சேர்ந்து ஈழம் பிடிக்கப் போய், எங்கள் ஊரைச் சேர்ந்த இன்னொருவரால் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார். ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், இன்று யாருமே நினைவில் கொண்டிராத, களம் காணாமல் பலியானவர்களில் அவரும் ஒருவர்.

இவரைப் போல, என் அண்ணனோடு படித்த திலீபனின் ஊரைச் சேர்ந்த ஐயரான பால.நடராஜா ஈரோஸில் இருந்து எங்கள் ஊர் அண்ணன் ஒருவருடன் வந்து அரசியல் செய்து கொண்டிருந்தார். எங்கள் கோயிலில் நடந்த ஏதோ ஒரு கலைநிகழ்ச்சியில் அவரைப் பேச விட… ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த தமிழ்’ என்று பேச, சிறுவனான எனக்கு இதெல்லாம் சிறுபிள்ளைத் தனமான பேச்சு போல இருந்தது.

பின்னர் இவர் ஈபிடிபியில் இருந்த போது, கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். மரணத்தின் போது, அவரது பெண் குழந்தை தன் தங்கையை மடியில் வைத்திருந்த படம் ஒன்று என்னைக் கண் கலங்க வைத்தது.

ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும் 77 கலவரம் வந்தது. கொழும்பிலிருந்து கப்பலில் அகதிகளாக காங்கேசன்துறை வந்த தமிழ் தொப்புள் கொடிகளுக்கு இடையில் யாழ்ப்பாணிகள் வீட்டு வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி என் வீட்டிற்கு அருகில் வந்து சேர்ந்த மற்ற சாதி சிறுவன் ஒருவனை எனது கல்லூரியில் சேர்த்ததால், அவனைப் பாதுகாப்பாக கொண்டு போய் வருவதற்கு அப்பாவிடம் வந்து கேட்டிருந்தார்கள்.

வர வேண்டிய வெளவால்கள் எல்லாம் வைரவர் கோவிலடியில், எங்கள் ஊர் சாதிப்பிரச்சனையில் நடந்த கொலைக்கு துப்பாக்கியால் சுட்டு பழி வாங்கிய, எனக்கு ஒரு மாமா முறையான தாவடியார் பின்னி தொங்க வைத்த வலைகளுக்குள் மாட்டி, இறைச்சியாகிக் கொண்டிருந்தன.

இந்த நேரம் உயர்தர வகுப்பில், எனக்கு இரசாயனம் படிப்பித்த சாம் மாஸ்டரின் அபிமானத்திற்குரிய மாணவனாக நான் இருந்தேன். அவர் கண்டிப்பானவர், அவரிடம் கேள்வி கேட்கக் கூடாது என்ற விதிமுறைகளையும் கடந்து, துணிச்சலோடு கேள்வி கேட்பவன், இரசாயனவியலில் கெட்டிக்காரன் என்பது மட்டுமன்றி, சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த கதைக்கு விளக்கம் சொன்னவன் என்பதால், (அண்ணை தன்னோடு ஆங்கிலம் படிக்க கூட்டிக் கொண்டு போன திருநெல்வேலி முத்துலிங்கம் மாஸ்டர் சொன்னதன் உபயத்தில்,) என்னைப் பற்றி ஆசிரியர்களின் அறையில் விதந்துரைத்தது பற்றி, உயிரியல் ஆசிரியர் கனகசபாபதி வகுப்பில் வந்து சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தார்.

சாம் மாஸ்டரோடு ஜென்மப் பகை கொண்டிருந்த பௌதிக ஆசிரியரான ஞானம் மாஸ்டருக்கு இதனால் என் மீது தீராக்கோபம் இருந்தது.

சாம் மாஸ்டர் உறுப்பினராக இருந்த றோட்டரி கிளப் எங்கள் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்த களியாட்டவிழாவில் பொலிசாருக்கும் இளைஞர் கூட்டத்திற்கும் இடையில் நடந்த மோதலினால் தான் கலவரம் வந்தது என்று Time சஞ்சிகையில் வந்த செய்தியால் கோபம் கொண்டு, அதை வகுப்பில் கொண்டு வந்து எங்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தார். புலிக்கு வால் பிடித்திருந்தால், Time சஞ்சிகையை எரித்து தடை செய்வித்திருக்கலாம்!

அவர் ஜி.ஜியின் தீவிர ஆதரவாளர். ஜி.ஜி கைத்தொழில் அமைச்சராக இருந்து, சிங்களவர்களைப் பேய்க்காட்டி, பெரும் தொழிற்சாலைகளை வடக்கு கிழக்குக்கு கொண்டு வந்தது பற்றி சொல்லுவார். கூட்டணி ஜி.ஜியை துரோகியாக்கியது அவருக்கு கோபம். அதை பகிரங்கமாகவே சொல்வார்.

அவரது ஜென்ம விரோதி போட்டிக்கு லயன்ஸ் கிளப்பில் இருந்து, கூட்டணி ஆதரவாளராக இருந்ததால், வகுப்பில் கூட்டணி புகழ் பாடுவார். கனடாவில் பழைய மாணவர் சந்திப்பு விழாவில் அவர் வந்ததை அறிந்து, அவரை சந்திக்க நண்பர்கள் அழைத்த போது மறுத்திருந்தேன். அவர் இறந்த போதும் போய் அஞ்சலி செலுத்த தோன்றவில்லை.

கலவரக் கதைகள் புத்தகங்களாக வெளிவந்து Best Seller ர்களாகிக் கொண்டிருந்தன. இருந்தாலும், அகதிகளின் துயரத்தைப் பார்த்து இரத்தம் கொதித்து, இயக்கம் கட்டி ஓடிப் போக யாரும் விரும்பவில்லை. கூட்டணி ஐநாவிலோ, ஏலாட்டி இளைஞர் பேரவை சண்டை பிடிச்சோ ஈழம் எடுக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்தே இருந்தது.

பிறகு மெதுவாக கூட்டணிக்கு ஈழத்தை கர்ப்பம் தரிக்க வைக்க முடியாத அளவுக்கு வயது போவதை உணர்ந்தோ என்னவோ, மெதுமெதுவாக அகிம்சைப் போராட்டத்தை நம்பிப் பயனில்லை என்று ஆயுதப் போராட்ட சிந்தனை தலையெடுக்க தொடங்கியது.

இந்தக் காலத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

இந்தக் காலங்களில் பெரும்பாலான நேரங்களை யாழ்.நூலகத்தில் கழித்திருக்கிறேன். டியூசன் வகுப்புகள் முடிந்து மேலே இருந்த கேட்போர் கூடத்தில் Combine studies போட்டு, நண்பர்களுடன் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.

ஈழம் எடுத்துத் தர பாராளுமன்றம் அனுப்பப்பட்டோர், ஜே.ஆரினால் ஏமாற்றப்பட்டு, 81ல் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது, கந்தர்மடம் பகுதியில் வாக்களிப்பு நிலையத்தில் நின்ற இராணுவத்தினரை புலிகள் சுட்டு, இராணுவம் வந்து எரித்த வேலிகள் எல்லாம் நான் போகும் வழியில் கண்டவை தான்.

அப்போது நூலகமும் எரிக்கப்பட்டது. அது எனக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் உள்ளூர் வாசிகசாலைகள் என்னைக் கைவிட்டதில்லை.

அந்தக் காலத்தில் பொன்ட் இன்ஸ்டிடியூட்டில் டியூசனுக்கு போன போது, போகும் ஒழுங்கையில் ஒருவர் நின்று நாங்கள் பணம் கட்டியதை உறுதி செய்வார். அவர் நின்று Check பண்ணிய இடத்தில் இருந்த வீட்டுப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருந்ததால், கொஞ்ச நாளில் அவர் வேலையை விட்டுப் போனார்… அந்தப் பெண்ணையும் கூட்டிக் கொண்டு!

போனவர் வெலிங்டன் தியேட்டருக்கு அருகில் புதிய டியூட்டரி திறக்க, நானும் அங்கே போனேன். அங்கே மோட்டார் சைக்கிளில் ஹீரோ மாதிரி வந்து தாவரவியல் படிப்பித்த ஆசிரியர் எங்களோடு படித்த பெண் ஒருத்தியைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போனார். அது பெரும் வழக்காகி, மித்திரனில் ‘வயிற்றில் வளரும் குழந்தைக்கு நானே தந்தை!’ என்று தலையங்கம் பெற்று, அவரும் என்னைப் போலவே தன்னுடைய பதினைந்து நிமிடப் புகழைப் பெற்றுக் கொண்டார்.

அதை வைத்தே வகுப்பில் நான் கிண்டல் அடித்து சிரிப்பு காட்டிய போது, வாயை மூடிக் கொண்டிருந்தார் அந்த பந்தா காட்டிய ஆசிரியர்.

அங்கே எங்களோடு படித்த பெண் ஒருத்தி நாங்கள் வாசிக்கும் பேப்பர் எல்லாம் வாங்கிப் படிப்பாள். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் படித்த அவளை என் பாடசாலை நண்பர்கள் ‘சிறுக்கி’ என்று அன்போடு அழைப்பார்கள். அவளும் பின்னாளில் மாற்று இயக்கம் ஒன்றில் பெரும் புள்ளியாக இருந்தாள்.

அந்த நாளில் தமிழ் எழுத்துக்களும் கம்பியூட்டர்களும் இல்லாததால், ‘ஸ்கந்தா கல்லூரி’ காவலாளியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தேசிய மயமாக்கிய தட்டச்சு யந்திரமும், றோனியோ மெசினும் தான்  அன்றும் இன்றும் தேசிய ஊடக வடிவமான மொட்டைக் கடதாசிகளை அச்சிட்டு வினியோகிக்க வழி வகுத்தன. இப்படியாக, கல்லூரிகளில் பரீட்சைத் தாள் அடித்த றோனியா மெசின்கள் படிப்பை இடையில் நிறுத்திக் கொண்ட அறிவாளிகளின் விடுதலைச் சிந்தனைகளை படிச்ச யாழ்ப்பாணிகளுக்கு கொண்டு சென்றன.

அந்த டியூட்டரிக்கு முன்னால் இருந்த அச்சகத்தில் தான், நாங்கள் வகுப்பில் இருந்த வேளையில் புதிய பாதை சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரும் துப்பாக்கியைக் காட்டி ஒரு றோனியோ மெசினைக் கடத்தியிருந்தால், அச்சகத்திற்கு போக வேண்டிய தேவை இல்லாமல், அந்த மரணம் சம்பவித்திருக்காமல் இருந்திருக்கக் கூடும்.

சுட்டுக் கொல்லப்பட்டதும், அதற்கான காரண காரியங்களை நாங்கள் அறியும் அளவுக்கு எங்களை ஏதோ முக்கியமானவர்களாகக் கருதி, அஞ்சலிகளையும், கொன்றதற்கான காரணத்தையும் சுமந்த மொட்டைத் தமிழ்த் தேசிய ஊடகங்களை இரு தரப்பினரும் எங்கள் வகுப்புக்குள் இடையில், திறந்த வீட்டில் நாய் புகுந்த மாதிரி, புகுந்து வினியோகித்தனர்.

அங்கு படித்த நான் பின்னர் கனடாவில் பத்திரிகை விட்ட போது, வந்த ஏதோ செய்தி ஒன்றுக்காக செந்தாமரை பத்திரிகையை கியூறியஸில் கிண்டல் செய்திருந்தேன். ஒருநாள் பத்திரிகையைக் கடை ஒன்றில் வினியோகித்து வெளியே வந்த போது, நான் தான் அந்தப் பேர்வழி என்று அடையாளம் கண்டு, ‘நாங்கள் எல்லாம் ஒண்டு, பிறகு என்னத்துக்கு உப்பிடி?’ என்று கிண்டல் பண்ணியதற்கான தனது மனத் தாங்கலை என்னோடு பகிர்ந்து கொண்ட செந்தாமரையின் ஆசிரியர்…

பொன்ட் இன்ஸ்டிடியூட்டில் இருந்து பெண்ணை கூட்டிச் சென்று புதிய இன்ஸ்டிடியூட் வைத்திருந்தவர்!

வரலாறு எப்போதுமே வரலாற்று நாயகர்களை எதிர்பாராத வழிகளில் ஒன்றாகச் சேர்த்து விடுகிறது…

றோனியா மெஷின் கடந்த கம்பியூட்டர் யுகங்களிலும்!

இதற்குள் யாழ்ப்பாணத்திற்கு தொலைத்தொடர்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வீதியோரமாக தொலைபேசி வயர்களைப் புதைக்க கிண்டப்பட்ட குழி ஒன்றினுள் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியடியில் வைத்து, எங்கள் வீட்டுக்கு அருகாகச் செல்லும் பலாலி வீதியில் சென்ற இராணுவ வண்டித் தொடர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். 

அந்த வெடிச்சத்தம் எங்கோ இருந்த எங்கள் வீட்டு நிலத்தையும் அதிர வைத்தது.

பெரும் கலவரம். உயிர் அழிப்பு. சொத்து அழிப்பு.

வெலிக்கடைச் சிறைப் படுகொலை நடந்தது.

அந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

இன்றைக்கும் அந்த தாக்குதலின் நோக்கங்கள் பற்றி எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு. கொழும்பு எங்கும் சிறில் மத்தியூவின் அனுசரணையுடன் தமிழ் வர்த்தக நிலையங்கள் பற்றிய விபரங்கள் முன்னரே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. கலவரத்தின் போது லிஸ்ட் வைத்தே கடைகள் எரிக்கப்பட்ட கதைகள் உண்டு. கலவரம் முடிந்ததும், கைத்தொழில் அமைச்சரான அவரால் பல புதிய வர்த்தகங்களை சிங்களவர்கள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது பற்றி வீரகேசரியில் முன்பக்க மேல்பெட்டியில் செய்தி வந்திருந்தது.

மறுபுறத்தில் வெலிக்கடையில் இருந்து தப்பும் திட்டத்துடன் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று குட்டிமணி, தங்கத்துரையினர் சட்டத்தரணிகள் மூலமாக சொல்லி விட்டதாக பின்னர் கட்டுரைகள் வந்திருந்தன.

ஜே.ஆர் அரசு வொய்ஸ் ஒப் அமெரிக்காவின் வானொலி மீள் ஒலிபரப்பு கோபுரம் அமைப்பது இந்தியா மீதான உளவு முயற்சி என்று இந்தியா அச்சம் கொள்கிறது.

அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆலோசகராய் இருந்தார் என்று கனடிய மரண அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட, தந்தை செல்வாவின் மருமகனான ஏ.ஜே.வில்சன் ஜே.ஆரின் புதிய அரசியலமைப்பு வரைவதற்கான உதவிகளைச் செய்கிறார்.

எனவே விடுதலைக்காக பிரபாகரன் தீர்க்கதரிசனமாக சிந்தித்துத் தான் அந்த தாக்குதலை நடத்தினார் என்று அவருடைய மூளைக்குள் வாடகைக்கு குடியிருந்த அரசியல் புலநாய்வாலர்கள் அவிழ்த்து விட்டதை யாழ்ப்பாணிகள் இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த வித முன் யோசனையும் இல்லாமல் நடந்த இந்த தாக்குதலால் தமிழரின் தலைவிதி முழுமையாக மாற்றம் பெறுகிறது.

பெரும் கலவரம் நடந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் பாதிப்பும், கூட்டமைப்பு ஈழத்தை மூன்று மாதத்தில் கர்ப்பமாக்க முடியாது என்பது முடிவாகத் தெரிந்ததாலும், ஆயுத முனையில் அகிம்சை மெளனிக்கப்பட்டு, இயக்கங்கள் வளர ஆரம்பிக்கின்றன.

டியூட்டரியிலிருந்து பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடியவர் புதிய டியூட்டரி திறந்த மாதிரி… பெண்கள் விவகாரங்கள் உட்பட்ட பல விவகாரங்களினால் இயக்கங்கள் புதிது புதிதாய் எக்கச்சக்கமாய் தோன்றின.

‘உவரை விட நான் மணியாய் செய்வன்’ என்ற,

மற்றவர்களை விட தான் புத்திசாலி என்ற தன்னம்பிக்கை கொண்ட…

அறிவாளிகள் நிறைந்த பூமி!

ஆயுதங்களைப் பெறுவதற்கு முன்னால் தாங்கள் அறிவைப் பெறுகிறார்களோ இல்லையோ, யாழ்ப்பாணிகளின் அறிவைப் பெருக்க, இந்த இயக்கங்கள் றோனியோ மெசின்களை பெற்றுக் கொண்டன. சினிமா பாணி போஸ்டர்களும் மொட்டைக் கடதாசிகளுமாக யாழ்ப்பாணிகள் விடுதலை பற்றிய பெரும் கனவில் மிதந்தனர்.

இப்படி தானும் ஒரு இயக்கம் கட்டப் போகிறேன் என்று சொல்லித் திரிந்து, ஈழமாணவர் பொதுமன்றம் பாதயாத்திரை செல்கிறது என்றதும் தனது  One Man Army மாணவர் அமைப்பு சைக்கிள் யாத்திரை செய்யும் என்று வீரகேசரியில் அறிக்கை விட்ட, என் நண்பர்களின் நண்பனான, எனக்குத் தெரிந்த ‘வேங்கை ஆனந்தன்’ புலிகளால் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

கலவரத்தால் இடம் பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் திரும்பவும் போக மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்குகிறார்கள்.

அவர்களின் பகிஷ்கரிப்பையும் மீறி மீண்டும் கொழும்பு சென்று படித்த ஐந்து மாணவ ‘துரோகிகள் ஒழிக’ சுவரொட்டி வழமை போல, ஆஸ்பத்திரி பின் சுவரை அலங்கரிக்கிறது.

அந்த ஐவரில் ஒருவன், என்னோடு வகுப்பில் போட்டி போட்டுக் கொண்டு படித்து பல்கலைக்கழகம் போய் மருத்துவராகி, பெரும் சீதனம் வாங்கி, தற்போது அமெரிக்காவில் இருக்கும், அந்த தாடி ‘தாவீது டேவிட்’ சுவாமியாரின் சகோதரின் மகன்.

எங்களுக்கு ஒரு வகுப்பு மேல் படித்த அவனது சகோதரன் இராணுவத்தில் சேர்ந்து, பிரிகேடியராகி வவுனியாவில் இருந்த போது, பாடசாலை ஒன்றில் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக, சிறுகுழந்தையான மாணவி ஒருவருக்கு பரிசு கொடுக்கும் படத்தைப் போட்டு, அவரது கண்களில் காமம் வழிகிறது என்று, அவதூறு செய்வதற்காக புலிகளால் நடத்தப்பட்ட ‘கிணற்றில் விழுந்து வீரச்சாவு’ புகழ் நிதர்சனம் இணையத்தளத்தில் செய்தி வந்தது.

பின்னர் யுத்தம் முடிந்த நீண்ட நாட்களின் பின்னர், கனடாவில், மரணித்த மாவீரர்களுக்கு மெளன அஞ்சலி எதுவும் செய்யாமல், ‘நமோ நமோ மாதா’ தேசிய கீதம் பாடி தொடங்கி நடந்த எங்கள் கல்லூரி பழைய மாணவர் விழா ஒன்றில் அந்த இளைப்பாறிய பிரிகேடியரைக் கண்டேன்

இந்த உண்ணாவிரதம் நடந்த கொண்டிருந்த நேரம் வெளிநாடு போக பாஸ்போட் எடுக்க கொழும்பு போன போது, கண்டி வீதி, ஆஸ்பத்திரி வீதி சந்திக்கும் இடத்தில் பஸ்ஸை மறித்து, என்னையும் பகிஸ்கரிப்பை மீறி பல்கலைக்கழகம் போகும் துரோகி என்று மிரட்டி இறக்க முயன்றதையும், அந்த நேரம் தான் கடிமணம் புரிவதற்காய் தலைவர் தலைவியைக் கவர்ந்து சென்றார் என்பதையும் கியூறியஸில் எழுதியிருக்கிறேன்.

அடுத்த பக்கத்தில் தொடர்கிறது

1 Comment

  1. மிக முக்கியமான பதிவு. தமிழ் மக்கள் தேசிய இன விடுதலைக்கு முதல், தமிழ் மக்களுக்குள் சமத்துவ வாழ்வினை உறுதிப்படுத்தும் போராட்டத்தினை முதல் தொடங்கி இருக்க வேண்டும் எனும் முன் நிபந்தனையை முதலில் செய்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக முன்னிருத்தும் வாக்குமூலம் இது! இந்த நேர்காணலைப் படித்த பின் பல விடயங்களை பேச வேண்டும் என்கிற உந்துதல் வருகிறது! இதுவே ஒரு ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கான வாய்ப்பை திறந்து விடுவது இங்கு கவனிக்கத்தக்கது! ஆனாலும் இந்த மறுபரிசீலனை நடக்குமா என்பதே கேள்விக்குரியதே.., விரிவாக எழுதப்பட வேண்டிய பல காலகட்டங்கள், மாறும் அரசியல் போக்குகள், மாறா சாதிய ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் , தாயக, புகலிட அரசியல் ,சமூகச் சூழல்கள், முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என பல விடயங்கள் உள்ளன.நேர்காணல் சட்டென முடிந்த மாதிரி இருப்பது , “பந்தி முடிந்தது, பசிதான் தீரவில்லை” என்பது போல் இருந்தது.

    ஜோர்ஜ் குருஷோவ் எனப்படும் ஒரு சமூக மனிதனை, “ தாயகம்” பத்திரிகைப் பணிக்கு பின்னால் அறிந்து கொள்ள, சமூக ஆர்வலர்களுக்கு இந்தப் பதிவுகள் முக்கியமானதும், பயனுள்ளதுமாகும்!

உரையாடலுக்கு

Your email address will not be published.