/

முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விட, புத்திசாலிகளுக்கு எதிரியாக இருப்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன்: ஜோர்ஜ்.இ.குருஷேவ்

தாயகம் பத்திரிகை ஆசிரியருடனான நேர்காணல், நேர்கண்டவர் அனோஜன் பாலகிருஷ்ணன்

இந்தக் காலத்தில் தான் நீங்கள் ஆசிரியராக பணி செய்தீர்கள்?

உயர்தரம் படித்தும் பல்கலைக்கழகம் போகாமல் சும்மா வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறேன் என்று என் மாமா என்னை தான் கற்பித்து வந்த தனியார் டியூசன் சென்டர் ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்க சேர்த்து விட்டார். எந்த முன் அனுபவமும் இல்லாத எனக்கு தன்னம்பிக்கையைத் தந்தது என் மாமா தான்.

இதற்காகவே Wren and Martin னின் High School English Grammar ரையும்,Thomson and Martinet ட்டின் A Practical English Grammar ரையும், முன்பு அப்பா வீட்டில் வைத்திருந்த ஆறுமுகநாவலரின் இலக்கணச் சுருக்கம் மாதிரி கரைத்துக் குடிக்க வேண்டியிருந்தது.

அந்த நேரத்து சுப்பர் ஸ்டார்களாக மோட்டார் சைக்கிளில் வந்த ஹீரோ டியூசன் மாஸ்டர்களாக இல்லாமல், இன்றைக்கும் வெட்கப்படும் பெல்பொட்டமும் பாட்டா சிலிப்பருமாக நான் சைக்கிளில் போய் இரண்டு கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன்.

அங்கு உயர்தரத்தினருக்கு பொருளாதாரம் படிப்பித்துக் கொண்டிருந்த கிருஷ்ணானந்தன் என்னை தம்பி என்று அழைக்கும் அளவுக்கு அன்பு கொண்டிருந்தார். இந்திய இராணுவ காலத்தில் அவரை ஈ.பி.ஆர்.எல்.எப் இனர் சுட்டுக் கொன்றார்கள் என்று பின்னர் சொன்னார்கள்.

அங்கு படித்துக் கொண்டிருந்த தமிழ் கன்னியர் மடப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த இரண்டு பெண் பிள்ளைகள் வீட்டாருக்கு சொல்லாமல் டெலோவுக்கு ஓடிப் போயிருந்தார்கள். நல்ல காலம், என்னோடு ஓடிப் போயிருந்தால், திரும்பவும் மித்திரனில் பதினைந்து நிமிடப் புகழ் பெற்றோ, அல்லது இன்னொரு டியூட்டரி போட்டிக்கு திறக்க வேண்டியோ வந்திருக்கலாம்.

அங்கே வகுப்புகள் நடக்காத பகல் நேரங்களில் நான் இருப்பேன். அப்போது இரகசிய அரசியல் வகுப்புகள் நடக்கும். புலிகளின் ஆட்சேர்ப்பு அரசியல் வகுப்புகளுக்கு ஆசானாக திலீபன் வந்து கற்பித்துக் கொண்டிருந்தார். என்னை நன்கு தெரிந்த அவரின் மேதாவித் தனமான செடில் பார்வை எனக்குப் பிடிப்பதில்லை.  அவர் எங்கே அந்த அரசியலைக் கற்றுக் கொண்டார் என்பதும், இவர் கற்பித்த அரசியல் பிரபாகரனுக்கு புரிந்திருக்குமா என்பதும் எனக்கு எப்போதுமே ஒரு புதிராக இருந்தது.

இருந்தாலும் அந்த வகுப்புகள் பற்றி நான் தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. டியூட்டரி நடத்திய ஒருவர் பல்கலைக்கழக மாணவர், பலத்த புலி ஆதரவாளர். அவர் தான் அந்த வகுப்புகளுக்கு இடம் கொடுத்தவர்.

முன்பு புலிகளின் பலத்த ஆதரவாளர்களாக இருந்து தற்போது மனித உரிமைகள் பற்றி அதிகமாகப் பேசும் சிலரும் அந்த வகுப்புகளுக்கு வந்து போய் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் மாணவர்களோடு றோட்டோரமாய் நின்ற போது, இராணுவ வண்டித் தொடர் சந்தியில் திரும்ப நானும் வேலிப் பொட்டுக்கால் ஓட வேண்டியிருந்தது. அதன் பின்னர், உது எனக்கு பாதுகாப்பில்லை என்று சொன்ன போது, எனக்கும் விசயம் தெரிந்ததால், அந்த அரசியல் வகுப்புகள் அங்கே நிறுத்தப்பட்டன.

அவ்வாறான ஒரு மதிய நேரம் தான் புகையிரத நிலையத்திற்கு படையினரை அனுப்பச் சென்ற இராணுவ வண்டித் தொடர் மீது அடைக்கலமாதா கோயிலுக்கு அருகில் புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தினர். அந்த வெடிச்சத்த அதிர்வும், தொடர்ந்த துப்பாக்கிச் சூடுகளும் சுண்டிக்குளிக்கும் கேட்டது. கோயில் வீதியால் நானும் வீடு சேர்ந்தேன்.

மறுநாள் போன போது, வகுப்புகள் மூடப்பட, யோகேஸ்வரன் வீட்டுக்கு முன்னால் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள கழிவு வாய்க்கால்களுக்குள் சுட்ட உடல்களைப் போட்டு எரித்ததாக விடுப்புப் பார்த்தவர்களுக்குள்ளால் எட்டிப் பார்த்தேன். உடல்கள் தெரியவில்லை. ஆரியகுளம் புத்தவிகாரைக்கு அருகில் இருந்து இராணுவத்தினர் சுட தப்பியோட வேண்டியிருந்தது.

அங்கே கண்ட என் தம்பி முறையான அம்மாவின் சகோதரி ஒருவரின் மகனும் இன்னொரு மச்சானும் நின்றபோது, நீ ஏன் இங்க நிக்கிறாய்? என்று கேட்டேன். அவனை நான் தான் கடைசியாகக் கண்டேன். அவர்கள் இருவருமே காணாமல் போய் விட்டார்கள். அன்று கொல்லப்பட்ட பலரில் அவர்களும் இருக்கலாம். ஆனாலும் நீண்ட காலம் அவர்கள் உயிரோடு இருக்கக் கூடும் என்று அவனது வீட்டார் மை போட்டுப் பார்த்த நம்பிக்கையில் இருந்தார்கள்.

போன என்னைக் காணவில்லை என்று பயந்து கொண்டிருந்த என் வீட்டார் என்னைக் கண்டதும் நிம்மதியடைந்தார்கள். என் அண்ணை ஸ்டாலின் எதுவும் பேசாமல் நீண்ட நேரமாக இறுகக் கட்டியணைத்தபடி இருந்தார்.

மக்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?

மாதா கோவில் இராணுவ பீரங்கிகளால் தகர்க்கப்பட்டதை அறிந்த கரையூர் கத்தோலிக்கர்கள் ஒன்று திரண்டு போய், விகாரையை துவம்சம் பண்ணினார்கள். அது அவர்களாக ஏதோ உணர்ச்சி உத்வேகத்தில் செய்தது. எனக்கு தெரிந்த மக்கள் போராட்டம் யாழ்ப்பாணத்தில் அதுதான்.

புலி ஆதரவாளரான டியூட்டரிக்காரர், படிச்ச முட்டாள் படிக்காத முட்டாள்களுக்கு சொல்வது போல, அதைப் புலிகள் தான் ஒழுங்குபடுத்தி விட்டார்கள் என்று எனக்கு விளக்கம் சொன்னார்.

பல்வேறு இயக்கங்களும் றோனியோ மெசின் முடிந்து ஆயுதங்கள் கைக்கு கிடைக்க தொடங்கியதும், சீமெந்து தொழிற்சாலையில் கல்லுடைக்கும் வெடிமருந்துகளையும், பாடசாலை ஆய்வு கூடங்களையும் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டு, போட்டிக்கு குண்டு வைக்கத் தொடங்கியிருந்தன. 

டெலா என்ற இயக்கமும் திலீபனின் வீட்டுக்கு சமீபமாக குண்டு வைத்து காவல் இருந்தது. ஊரில் மக்கள் பெரும் பயப்பீதியில் இருக்க, பகல் நேரம் குண்டு வெடித்தது. எல்லோரும் அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தோட்டங்களில் ஒளிக்க ஓடினார்கள். அந்த இரவுகளில் நானும் நண்பர்களும் கோயிலில் படுத்துக் கொண்டோம்.

குண்டு வைத்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த, சென்.ஜோன்ஸ் மாணவனும், பல்கலைக்கழத்தில் பயின்று கொண்டிருந்தவருமான என் இனிமையான நண்பன் ‘தேவகுமாரும்’ தம்பியும் தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தாயும், சகோதரனும் தப்பித்துக் கொண்டார்கள். தம்பியாரை நான் மொன்றியலில் கண்டேன்.

இதற்குள் திடீரென்று ஜே.ஆர் அரசு தொழில் வங்கி என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, வேலை வாய்ப்பு தேடுவோர் இரண்டு ரூபா கட்டி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பதிவு செய்யலாம், வேலை வாய்ப்புகள் வரும்போது அந்தப் பட்டியலில் இருந்து ஆட்சேர்ப்பு நடக்கும் என்றதால் என் பெயரையும் பதிந்திருந்தேன்.

இரசாயனவியலில் தகுதி இருந்ததால், யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளன் பதவிக்கு விண்ணப்பிக்காமலேயே நேர்முகப்பரீட்சைக்கு வருமாறு அழைப்பு வந்தது. நானும் போன போது, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நேர்காணல் செய்து, தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பதவி ஏற்க வருமாறும் கடிதம் வந்திருந்தது.

ஏற்கனவே ஆங்கிலம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன், அதைவிட என்னோடு போட்டி போட்டுப் படித்த நண்பர்கள் அதே பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள் என்பதால் அங்கே போய் வேலை செய்வதில் இருந்த கூச்சம் காரணமாகவும், இதற்குள் படித்த மாணவி தந்த காதல் கடிதத்தால் காதல் வசப்பட்ட நிலையில் விட்டுப் போக விரும்பாமலும், பதவி ஏற்காமல் வீட்டில் ஏதோ காரணம் சொல்லி நழுவி விட்டேன்.

போயிருந்தால், உண்ணாவிரதக் கடத்தல்  உட்பட்ட யாழ்.பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட ஈழப் போரியல் வரலாற்றில் எனது பெயரும், நடித்த ‘மற்றும் பலரில்’ ஒருவனாக எங்காவது பொறிக்கப்பட்டிருக்கலாம்.

அந்த நாட்களில் ஆங்கிலம் கற்பித்தலும், திருத்தப்பட்டு ஒரு பக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்த யாழ்.நூலகமுமாகத் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மாநகரவாசிகளுக்கு மட்டுமே உள்ள நூலக உறுப்புரிமை அட்டையை, விதிகளை மீறிப் பெருமை கொள்ளும் யாழ்ப்பாணியப் பாரம்பரியப்படி, கரையூரில் உள்ள பாடசாலை நண்பனின் வீட்டு விலாசத்துடன் பெற்று, வாங்கிய புத்தகங்களுடன் ஒருநாள் வீடு போய்க்கொண்டிருக்கிறேன்.

அன்று எங்கள் ஊரில் குண்டு வைத்த டெலா இயக்கத்தின் தலைவர் ‘ஒபரோய் தேவன்’ புலிகளால் சுடப்பட்டிருந்ததால், (அவரது உடலை வீட்டுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டதாக ஞாபகம்!), திருநெல்வேலியில் அவரது வீட்டடியில் இருந்து விவசாயப்பண்ணை வரைக்கும் இராணுவ வாகனங்கள் தரித்து நின்றன. நானும் மடியில் கனம் இல்லாததால், மரியாதை நிமித்தமாகவேனும் இறங்கி நடக்காமல், சைக்கிளிலேயே கடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்பால் கொஞ்ச தூரம் போனதும், சைக்கிளிலிருந்து இறக்கி, நான் கொண்டு போன புத்தகங்களையும் சோதித்து விட்டு உட்கார்த்தி விட்டார்கள். என்னோடு பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு எதையும் சிந்திக்கத் தோன்றவில்லை. பயந்து எதைத் தான் செய்ய முடியும்? நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணம்!

இதற்குள் கடந்து போன பஸ்ஸில் இருந்த யாரோ என்னைக் கண்டு வீட்டில் சொல்ல… பெரும் களேபரமாகி விட்டது.

இராணுவத்தினர்  போகும் போது எங்களைப் போகச் சொல்லி விட்டார்கள்.

இக்காலங்களில் இயக்கங்களுக்கான ஆச்சேர்ப்புகள் எவ்வாறு நடைபெற்றன?

இயக்கங்கள் தொடங்கி ஆட்சேர்ப்பு அமளியாகி கொண்டிருந்தது. பக்கத்து ஊரில் வானைக் கொண்டு வந்து நிறுத்தி, திருவிழாவுக்கு போக விரும்புவோர் ஏறு என்ற மாதிரி, புளொட் இயக்கத்திற்கு ஆட்சேர்ந்ததாக அறிந்தேன்.

எங்கள் வீட்டுக்கு அருகில் மற்ற சாதியார்களின் பகுதியில் இருந்த செல்லப்பா வாசிகசாலை நான் அடிக்கடி செல்கின்ற இடம். அங்கு இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருந்த பொன்னம்பலம் மாஸ்டர், செல்லையா அண்ணை,  கச்சேரிப் பக்கம் உத்தியோகம் பார்த்த வாமதேவன் போன்ற பெரிய மனிதர்களோடு நானும் டெயிலி நியூஸ் வாசிப்பேன். ஒருநாள் இரவு, நாங்கள் இருக்கும் போது, சிலர் கூட்டம் வைக்கப் போகிறார்கள் என்றார்கள். நான் மெதுவாகக் கிளம்ப, செல்லையா அண்ணை, இரடா என்று இருத்தி விட்டார்.

வந்தவர்கள் அந்தப் பகுதியில் புளொட் இயக்கத்தை வளர்ப்பதற்காக முதன் முதலில் வந்திருக்கிறார்கள். தாங்கள் கழகம் என்ற அமைப்பை தொடங்கியிருப்பதாக கொள்கை விளக்கம் நடந்தது. நான் காதை எறிந்து விட்டு, டெயிலி நியூஸில் மூழ்கி இருந்தேன். அதில் வந்தவர்களில் முக்கியமானவர் வாசுதேவா. அவரது தம்பி பரமதேவா புலிகளில் இருந்து இறந்தவர். வாசுதேவா உமா மகேஸ்வரனோடு சேர்ந்து பல கொலைகளைச் செய்ததாக டேவிட் ஐயா புத்தகமே வெளியிட்டிருந்தார். பின்னர் வாசுதேவா மட்டக்களப்பில் புலிகளால் கொடுரமாகக் கொல்லப்பட்டவர். புலிகளோடு புரிந்துணர்வு ஏற்படுத்த முயன்று, புலிகள் வந்து இவர்களோடு விருந்துண்ட பின், தங்கள் இடத்திற்கு வரும்படி அழைத்து நயவஞ்சகமாகக் கொலை செய்தனர்.

சோற்றில் நஞ்சு வைத்த கூட்டம்! வேறென்ன சொல்ல!?

புளொட் நம் ஊரில் மற்ற சாதியாரிடத்தில் நன்றாக ஆதரவு பெற்றிருந்தது.

எங்கள் ஊரில் ஈ.பி.ஆர்.எல்.எப் வேரூன்றியது. நம் சாதி சனம் பலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். செழியன் எனது ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அவரும் அடிக்கடி இயக்க சம்பந்தமாக நமது ஏரியாவில் நடமாடினார். இவர்கள் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் மூலமாக புத்தூர் பக்கம் சம்பள உயர்வு கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர்.

என் பெரியம்மாவின் மகனான பாலா அண்ணை இயக்கத்தில் சேர்ந்து அரசியல் வகுப்புகளில் படித்து, எனக்கு அரசியல் படிப்பிக்க வெளிக்கிட்டு, என்னிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருந்தார்.

‘பாலா அண்ணை, எனக்கு உதெல்லாம் தெரியும்! நீங்கள் இப்ப தான் உதைப் படிக்கிறியள்!’

அவரோடு வரும் பத்மநாபா என் வீட்டுக்கு வரும் போது, அக்காவிடம் பேச்சு வாங்குவார்.

எங்கட பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு திரியிறியள், ஒண்டுமா விளங்கேலை என்று.

எந்த சலனமும் காட்டாமல் வந்து போவார். புழுதிக்குள் படுத்துக் கிடந்த சாரத்துடன் வந்து, எங்கள் வீட்டுச்சுவருக்கும் கிடுகு வேலிக்கும் இடையில் சாரத்தை மாற்றி, தோய்த்துக் காய வைத்து அதே சாரத்துடன் போவார்.

புலிகள் ஆட்சேர்ப்பில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தார்கள். புதிய ஏசியா சைக்கிள், மடிப்புக் கலையாத நைலோன் சேட்டுகள் சகிதம் பிரசாரத்திற்கு இருவர் ஊருக்குள் வந்து திரிந்தார்கள். அவர்களுக்கு பணக் கஷ்டம் எதுவும் இருந்ததாக தெரியவில்லை.

என் நண்பர்கள் சிலர் பசை வாளி காவுவதற்காக சேர்க்கப்பட்டார்கள். சில தடவைகள் இருட்டுக்குள் போஸ்டர்களும் ஒட்டினார்கள். எனக்கோ அதெல்லாம் பிடிக்கவில்லை. இவர்கள் இவ்வாறான ஒன்றுக்குள் போய் மாட்டுப்பட்டு அல்லல்படுவதை நான் விரும்பவில்லை. அவர்களும் ஒருவாறு அதற்குள்ளால் விடுபட்டு வெளிநாடு போய் சேர்ந்து விட்டார்கள். 

ஒரே சாரத்தோடு மக்களோடு மக்களாக மண்ணுக்குள் கிடந்த நாபா பின்னர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஊருக்குள் இயக்கம் கட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் போல, மடிப்புக் கலையாத சேர்ட்டுகளுடன் வந்து போனவர், பிரபாகரனோடு ‘தம்பி’ என்று நெருக்கமாக பழகி, பிரபாகரனால் இன்டலக்சுவல் என்று அழைக்கப்பட்ட அவர், கழற்றி விடப்பட்டு, கனடா வந்து இப்போது என் நல்ல நண்பராகி விட்டார்.

இப்படியாகத் தானே, நானும் தமிழீழப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களுடனும், வரலாற்று நாயகர்களுடனும் ஏதோ ஒரு வகையில் Forrest Gump மாதிரி சம்பந்தப்பட்டிருக்கிறேன்.

பாடசாலை நாட்களில் தொடங்கிய என் சினிமாக் கனவு மட்டும் நிறைவேறியிருந்தால், நானும் ஒரு குழந்தைப் போராளி என்று ‘கதை விடும் சொல்லி’யாகா விட்டாலும், டீன் ஏஜ் போராளி என்றாவது றீல் விட்டிருக்கலாம்!

இக்காலங்களில் தான் நாட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்தீர்கள் அல்லவா? இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஏன் தோன்றியது?

இந்த நாட்டில் எந்த எதிர்காலமும், உயிருக்கான பாதுகாப்பும் இல்லை என்ற நிலையில் இதிலிருந்து தப்பி, வெளிநாடு போக வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது.

அதனால், Computer Programming  கற்றுக் கொண்டிருந்தேன். அதற்கும், கொழும்பில்  I.C.M.A வகுப்புகள் நடத்தி பிரபலமான குமரன் மாஸ்டர் என்று நினைக்கிறேன், கலவரத்தின் போது எல்லாம் எரிக்கப்பட்ட பின்னால், பலாலி வீதியும் பிரதான வீதியும் சந்திக்கும் இடத்தில் இருந்த முன்னைய காப்புறுதி நிறுவனக் கட்டிடத்தில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை நிலையமும் கல்வி நிலையமும் ஆரம்பித்து, Computer Programming வகுப்புகளுக்கு விளம்பரம் போட்டிருந்தார்.

அதில் போட்டிப் பரீட்சை வைத்து ஐந்து பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று வேறு போட்டிருந்தது. அது பொது அறிவுப் பரீட்சையாக இல்லாமல், புத்திக்கூர்மையை அளவிடப் பயன்படும் IQ பரீட்சை போன்றதாக இருந்தது. குடாநாடெங்கும் இருந்து 250 பேருக்கு மேல் பரீட்சைக்கு வந்திருந்தார்கள்.

புலமைப்பரிசில் கிடைத்ததாக கடிதம் வந்து போன போது, அதிபர் உன்னைக் காண விரும்புகிறார் என்று வரவேற்பாளினிகள் சொன்னதால், மேலே அவரைக் காணப் போனேன்.

சைக்கிளில் பெடல் போடும்போது, காற்றடிக்கும் பம்ப் செருகும் இடத்தில் இருக்கும் கொழுக்கி இழுத்துக் கிழித்த பெல்பொட்டமும், செம்பாட்டுக் கால்களில் இருந்த பாட்டா சிலிப்பருமாக நின்ற என்னை மேலும் கீழும் பார்த்து விட்டுச் சொன்னார்…

அதிகூடிய புள்ளிகள் எடுத்தவரைப் பார்க்க விரும்பினேன்!

லண்டன் போவதற்கு எனக்கு உறவினர்களோ, ஸ்பொன்சர் செய்யக் கூடியவர்களோ இல்லாததால், முழம் சறுக்கி சாண் ஏறும் வாழ்க்கையில், மேலே தூக்கி விட யாரும் இல்லாமல், ஒவ்வொரு அடியும் நாங்களாகவே எடுக்க வேண்டிய நிலையில், அகதியாக ஐரோப்பா செல்வது தான் ஒரே வழியாகத் தென்பட்டது.

அதுவும் என் அக்காவின் கணவர் பணம் தந்ததால் மட்டுமே சாத்தியமாயிற்று. இல்லையெனில், எங்காவது சைக்கிளில் போகும் போது இராணுவத்தால் சுடப்பட்டோ, எனது வாய் கிடவாத காரணத்தால் ஏதாவது மின் கம்பத்தில் நான் கட்டப்பட்டோ இருக்கலாம். மற்ற இயக்கங்கள் மீதும் எனக்கு எந்தப் பிடிப்பும் இருந்ததில்லை.

எனவே, வெளிநாடு செல்வதற்கு என்னை தயார்படுத்த, Radio Deutshce Welle ரேடியோவிலும் ரூபவாகினியிலும் கற்பித்த ஜேர்மன் மொழி நிகழ்ச்சிகள் மூலமாக மொழி படிக்க, ஜேர்மன் தூதுவரகம், Goethe Institute, German Cultural Center எல்லாவற்றுக்கும் எழுதி புத்தகங்களை வரவழைத்து, யாழ்.நூலகத்தில் இருந்த புத்தகங்களையும் எடுத்து சுயமாகவே ஜேர்மன் மொழியும், மத்திய கல்லூரிக்கு பின்புறம் இருந்த Alliance Francais ல் பிரெஞ்சு மொழியும் கற்றுக் கொண்டிருந்தேன்.

ஜேர்மனிக்கு வரும் போது, கனடாவில் பல வருடங்கள் இருக்கும் தமிழர்கள் பலர் பேசும் ஆங்கிலத்தை விட, ஜேர்மன் மொழி பேச முடிந்திருந்தது. பதிவு செய்யப் போன இடத்தில், நான் முன்பு இருந்து விட்டு, திரும்பிச் சென்று, தலை மாறி வந்திருக்கிறேனோ என்று கூடச் சந்தேகப்பட்டார்கள்.

அகதிமுகாமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, தமிழ் அகதிகளை குடியமர்த்தியிருந்தார்கள். என்னோடு என் மைத்துனன் முறையானவனும் வந்திருந்தான். பின்னால் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

அங்கே புதிதாக வரும் அகதிகளுக்கு அதுவரையும் கேஸ் எழுதி அலுவலத்திற்கு மொழி பெயர்ப்பாளராகக் கூட்டிச் சென்று பெரிய ஆளாக மதிக்கப்பட்டிருந்த ஐயா என்பவர், எனக்கும் ஆங்கிலம் தெரியும் என்று என்னைக் கொண்டு கேஸ் எழுதி, அலுவலகத்திற்கு கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள் என்று கோபம் கொண்டு ஒரு நாள் இரவு குடித்து விட்டு திட்டிக் கொண்டிருந்தார்.

அந்த கேஸ் எழுதி, அவர்களுக்காக அகதி பதிவு அலுவலகத்தில் மொழி பெயர்ப்புக்கு போவதற்கும் என் சொந்த செலவு பஸ் காசில் தான் போய் வந்தேன். பியர் வாங்கித் தர முன் வரும் போதும் நான் குடிப்பதில்லை என்பதால் அதைக் கூட வாங்குவதில்லை.

இன்றைக்கு, வெறும் விண்ணப்பம் நிரப்பவே, இந்த அகதிக் குடிகளிடம், சட்டத்தரணிகளுக்கு ஆட்சேர்த்துக் கொடுக்கும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் நூற்றுக்கணக்கில் வாங்காமல் எதையும் செய்ய மாட்டார்கள்.

அகதி வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?

அது ஒரு இருண்ட காலமாகத் தான் இருந்தது.

வாசிப்பதற்கு எதுவும் இல்லை, கடிதங்கள் தவிர!

தொலைபேசி பதிவு இயந்திரத்தை வைத்துக் கொண்டு, இயக்கங்கள் செய்தி சேவை நடத்திக் கொண்டிருந்தன. அதற்கும் தொலைபேசிக்கு பணம் செலுத்தித் தான் கேட்க வேண்டும்.

பி.பி.சி கூட, தெளிவாகக் கேட்க முடியாது. அவர்களுடைய அலைவரிசைகள் எங்கள் நாடுகளை இலக்கு வைத்து ஏவப்படுவதால் அந்தப் பிரச்சனை.

அனுமதிக்கப்பட்ட சிறிய பிரதேசத்திற்கு வெளியே போக முடியாது. படிக்க முடியாது. வேலை செய்ய முடியாது. அகதிகளுக்கான உதவிப் பணத்திலேயே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

எதிர்காலம் பற்றி சூனியமான இந்த தலையிடிகளுக்குள் இயக்கங்களுக்கு பிரசாரம் செய்யவும் பணம் சேர்க்கவும் பலரும் வந்தார்கள்.

முதல் மாதம் உதவிப் பணம் கிடைத்ததும், நாங்கள் எல்லாரும் புலிகள் இயக்கத்திற்கு ஐந்து ஜேர்மன் மார்க் கொடுக்கிறோம் என்று ஐயா சொன்னதற்காக ஐந்து டொலர் கொடுத்தோம். அடுத்த மாதம் மைத்துனனும் நானும் கொடுக்க மறுத்ததுடன், அதுவரையும் பயத்தில் கட்டாயமாக கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் துணிவு வந்து நிறுத்திக்கொண்டார்கள்.

அந்த ஐந்து ஜேர்மன் மார்க்குகள் தான் புலிகளின் ஈழப் போராட்டத்திற்கான என் ஒரேயொரு பங்களிப்பு. 

ஆசிரியராக இருந்தததால், மாஸ்டர் என்ற பெயரோடு என்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. அதில் என் உறவினர்கள் பலரும் அடக்கம். இதனால், முகாமுக்குள் புலி முகவர்களாக இருந்தவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.

கூட்டம் வைத்து அரசியல் கற்பிக்க வந்து பீலா காட்ட முயன்றவர்களும் என்னுடைய துன்பங்களால் அடக்கியே வாசித்தார்கள்.

அப்படி காசு சேர்ப்பதற்கு பொறுப்பான ஒருவர் அடிக்கடி வந்து போனார். அவர் நேர்மையானவர் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் சிறுவயதிலேயே வந்து, அங்கேயே படித்து, ஜேர்மன் தோழியையும் கொண்டிருந்தவர். கொஞ்ச நாளில் அவரும் பணமோசடிக் குற்றச்சாட்டுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இன்னொரு முறை அந்தப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தவர் அரசியல் படிப்பிக்க வந்த போது, என்னோடு வாக்குவாதப்பட்டு, என்னை மிரட்டும் பாணியில் வெளியில வா என்று கூப்பிட, நானும் வெளியே போனேன். என்னுடைய கூட்டத்தின் பலம் தெரிந்ததால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

என்னுடைய பலம் தெரிந்ததால், பின்னர் பண்போடு மரியாதையாகப் பழகிக் கொண்டார். அவர் என்னை மாஸ்டர் என்றும் நான் அவரை அண்ணை என்றும் பரஸ்பரம் அழைத்துக் கொண்டோம்.

அந்த நேரம் இலங்கை அரசின் சுற்றுலாத்துறை, Bremen நகரில் நடந்த ஒரு கண்காட்சியில் காட்சி அறை ஒன்றை வைத்திருந்தது. எனவே இந்த புலிப் பிரமுகர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று அழைத்துப் போனார்கள். ஊருக்கு வெளியே போக தடை அமுலில் இருப்பதால், இடம் பார்க்க ஐந்து மார்க்குகள் தானே என்று போனேன். பஸ்ஸில் வைத்துத் தான் அவர்கள் தங்கள் திட்டத்தைச் சொன்னார்கள். அங்கே உள்ளே போய் காட்சியறையை அடித்து உடைப்போம் என்று திட்டம்.

செய்யப்போவது கிரிமினல் குற்றம், இருந்தாலும் பரவாயில்லை, உந்த இரத்த திலக கூட்டங்கள் எல்லாம் விடுப்பு பார்த்த அனுபவம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை வேறு.

இவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியதும் கூச்சலிட்டுக் கொண்டு ஓட, காவல் நின்ற பொலிசார் கதவை மூடி விட்டார்கள். வெறி கொண்ட வேங்கையர் கூட்டம் அடுத்த கதவுக்கும் ஓடியது. அதையும் பூட்டி விட்டார்கள்.

அடுத்த கதவுக்கும் ஓடியது. அது திறந்து கிடந்தது.

ஆனால் இந்த மாவீரர்கள் உள்ளே போகப் பயந்து வெளியே நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிறகென்ன? பொலிசார் எல்லாரையும் சுற்றி வளைத்து, பஸ்ஸில் ஏற்றி, நெடுஞ்சாலை வரை வந்து வழியனுப்பினார்கள்.

முயல் பிடிக்கிற நாய்களை மூஞ்சியிலே தெரியும்! இவர்களின் போராட்ட இலட்சணம் இவ்வளவு தான்.

அங்கே ஜேர்மன் மொழி தெரிந்த தமிழர் ஒருவர் எங்களோடு நின்று ஜேர்மன் மொழியில் கோசம் போட்டுக் கொண்டிருந்தார். அங்கே படித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னார்கள். அவருடைய திருவுருவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

என்னுடைய சந்தேகம் அவர் தான் தற்போது இங்கு பிரபலமான கொத்துரொட்டிக் கடை வைத்திருக்கிறவராக இருக்கும் என்பது!

இதற்குள் யாழ்.இந்துவில் கற்பித்த ஒரு ஆசிரியரின் மகன் என்னோடு இருந்தார். அவருடைய ஒன்று விட்ட சகோதரன் எங்கள் பாடசாலையில் என் வகுப்பு மற்ற பிரிவில் படித்தவர். அவர் புலி ஆதரவாளராக இருந்ததால், என்னுடைய கருத்துக்களால் அவர் என்னோடு மனக் கசப்புப் பட்டிருந்தார்.

ஒருநாள் அவர் அழுது கொண்டிருந்தார். ஊரில் இருந்த அவருடைய நண்பன் வீட்டுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, புலிகளோடு ஓடிவிட்டார் என்று.

இவருக்கோ சகோதரிகள் கொண்ட குடும்பத்தைப் பார்க்க வேண்டிய தேவை இருந்தது.

இருந்தும் தான் இயக்கத்திற்கு போகப் போகிறேன் என்று வசூல்ராஜாக்களிடம் சொல்லி விட்டார். அவர்களும் தாங்கள் ஏதோ இயக்க இரகசியங்களைக் காக்கும் முக்கியஸ்தர்கள் மாதிரி, பந்தா காட்டிக் கொண்டே அவருக்கு பெரும் நேர்முகப் பரீட்சை எல்லாம் வைத்தார்கள். அவரை தங்களோடு கூட்டிக் கொண்டு போய் சில நாள் வைத்திருந்து பின்னர் அனுப்பியிருந்தார்கள்.

தான் இரவுகளில் கதைக்கிறேனா, இரகசியங்களை உளறி  விடுவோனா என்று பார்க்க அழைத்துப் போனார்கள் என்று எனக்கு அவர் கதை சொன்னார்.

கொஞ்ச நாளில் தன் பதிவுகளை ரத்து செய்து விட்டு அவர் அங்கிருந்து இயக்கத்திற்கு போய் விட்டார். அவரைப் பின்னர் மாவீரர் சுவரொட்டிகளில் எங்கும் காணவில்லை. ஆனால், ஒருநாள் கனடாவில் தேடகம் அமைந்திருந்த வெலஸ்லிப் பகுதியில் இருண்ட நேரம் ஒன்றில் அவரைப் போல ஒருவரைக் கண்டேன். என்னவோ, அவர் தானா என்பதை அறிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. பழைய மனக்கசப்பு எனக்கும் மாறவில்லை! புலியாக இருந்தால் அதன் இயல்பு மாறாது என்ற எண்ணம் வேறு!

அங்கே தான் புலன் பெயர்ந்த யாழ்ப்பாணிகளின் உண்மை முகத்தைக் கண்டேன். இந்தப் போராட்டம் எப்படி திசை திரும்பும் என்பதை அப்போதே சரியாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

அகதிகளாக வந்துகொண்டிருப்பவர்கள் புலிகளை ஆதரித்தார்களா?

அகதிகளாக வந்திருந்தவர்களுக்கு தங்களுடைய அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இருந்தது. 

தங்களுடைய அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அங்கே பிரச்சனை தொடர வேண்டும் என்பதும், அதற்கான தாக்குதல்களை புலிகள் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள் என்பதால் அவர்களை ஆதரிப்பதில் அக்கறை அதிகமாக இருந்தது.

மற்ற இயக்கங்கள் மக்கள் போராட்டம் என்றெல்லாம் கதை விட்டு காலத்தைப் போக்கிக் கொண்டிருக்க, புலிகள் ‘camp அடிப்பது’ என்பது அடிக்கடி செய்தியாவதால், இலங்கையில் பிரச்சனை தொடர்ந்து நடப்பதால் அகதிகளைத் திருப்பி அனுப்ப இந்த நாடுகள் விரும்பாது என்பதால், புலிகளை ஆதரிப்பது இவர்களுக்கு தேவையாக இருந்தது.

தன்னுடைய அகதிக் கோரிக்கை பற்றி பயம் கொண்டிருந்தவர் ஒருவர், ‘ஏதும் Attack கள் இப்போதைக்கு நடக்காதோ?’ என்று வசூல்ராஜாக்களிடம் கேட்டதை நேரில் கண்டிருக்கிறேன்.

அகதிகள் திருப்பி அனுப்பப்பட போகிறார்கள் என்று செய்தி வந்தால், புலிகளுக்கு பணம் கொடுப்பது அதிகமாவது நடந்து கொண்டே இருந்தது. இதை பிரபாகரனோடு இருந்து கழட்டி விடப்பட்ட இண்டலெக்சுவல் நண்பர் எனக்கும் சொன்னார்… வெளிநாட்டில் இருந்து திருப்பி அனுப்பப் போவதாக செய்தி வந்தால், தங்களுக்கு வெளிநாட்டில் இருந்து திரட்டப்பட்ட பணம் அதிகமாக வரும் என்று.

இந்தக் கட்டத்தில், டெலோ போராளிகள் உயிரோடு எரிக்கப்பட்ட செய்திகள் எல்லாம் வந்தன. அது பற்றி யாரும் கொதித்தெழுந்ததாக நான் காணவில்லை. புலிகள் முழுமையாக போராட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராத அந்த நேரத்திலேயே, புலிகள் பக்கம் இவர்கள் சாய்வதற்கு, தங்கள் அகதிக் கோரிக்கை பற்றிய சுயநலம் காரணமாக இருந்தது.

இதனால், மற்ற இயக்கங்களை விட புலிகளுக்கு பணம் அதிகமாகப் பணம் கொடுப்பது நடந்து கொண்டிருந்தது. இந்த சமூகம் தன்னுடைய புதைகுழியை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு எந்த தீர்க்கதரிசன திறனும் வேண்டியிருக்கவில்லை.

சகோதரி குடும்பத்தினர் வந்ததும் அகதிகள் முகாமை விட்டு, அவர்களுடன் குடியிருக்கப் போய் விட்டேன்.

பின்னர் கனடா போகும் திட்டத்தில், எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, ஒரு மாதம் ஜேர்மன் முழுவதும் புகையிரத சீசன் டிக்கட் வாங்கி அலைந்து திரிந்தேன். மியூனிச் தவிர்ந்து நியூரம்பேர்க் வரை எல்லா இடங்களுக்கும், புகழ் பெற்ற சிவப்பு விளக்குப் பகுதியான சென்.போலி உட்பட, சென்றேன். என் காதலியின் அண்ணன் இருந்த இடத்தில் என் மைத்துனரின் நண்பர்கள் இருந்ததால், அங்கே போன போது, ‘என்னுடைய தங்கச்சி உன்னுடைய தங்கச்சியோடு படிச்சவ’ என்று கதை விட்டு, போய் சாப்பிட்டும் வந்தேன்.

அந்த இடத்தில் நான் போவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தமிழர் ஒருவர் படுக்கையில் வைத்து குத்திக் கொல்லப்பட்டார். அந்த அறையில் நான் தங்கியிருந்தேன்.

அவர் இயக்கம் ஒன்று நடத்திய கூட்டத்தில் முன்னால் உட்கார்ந்திருந்து கேள்வி கேட்டார் என்றும் அவர் முன்னர் இயக்கத்தில் இருந்து வந்தவர் என்றும் பல கதைகள் உலவின. கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவில்லை.

டிக்கட் செல்லுபடியாகும் ஒரு மாதம் நள்ளிரவுடன் முடிகிறது. புகையிரத நிலையத்தில் இருந்து வீடு போக, இன்னொரு புகையிரதம் எடுக்க வேண்டும். நள்ளிரவின் பின்னர் அந்த வழியில் புகையிரதம் இல்லை. இரவு ஸ்டேசனில் தங்கி, மறுநாள் போவதாயின் அதற்கு தனி டிக்கட் எடுக்க வேண்டும்.

என் சீட்டுக்குப் பின்னால் தமிழர் ஒருவரின் குரல் கேட்டது. அவரை ஏற்ற வந்த காரில், அவர் தன் வீட்டுக்கு செல்லும் வழியில் என்னை என் வீட்டில் கொண்டு வந்து இறக்கிச் சென்றார். அவர்… இயக்கக் கூட்டத்திற்கு  வந்து என்னோடு முரண்பட்டு வெளியே வரச் சொன்ன அதே ஆள். அண்ணை மாஸ்டரை பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.

கனடா வந்து ஒரு தடவை கடை ஒன்றுக்கு தாயகம் வினியோகிக்கச் சென்ற போது கடையொன்றின் கல்லாவில் அவரைக் கண்டேன். கடைச் சொந்தக்காரர் வேறு யாரோ! இவர் அங்கே நின்றார். அவர் என்னை அடையாளம் காணவில்லை.

அவர் என்ன காரணத்தினால், அவ்வாறான ஒரு பெரும் பதவியிலிருந்து இங்கே வந்தார் என்பது தெரியாது. பெரும்பாலும் பணமோசடிகள், பெண் பிரச்சனைகள் தானே புலிகளின் வழமையான குற்றச்சாட்டுகள். அவர் இங்கே உள்ள புலிகளின் உலகத்தமிழர் இயக்கத்தோடு உத்தியோகபூர்வமாக தொடர்பில் இருந்ததாக தெரியவில்லை.

இப்போது அவர் கனடாவில் நம்பிக்கை, நேர்மை, நாணயத்துடன் வீடு விற்றுக் கொண்டு இருக்கிறார். இவர் இயக்கத்திற்கு அனுப்பியவரை கனடாவில் திரும்பவும் கண்டால், வீடு வாங்க இருவரையும் அறிமுகப்படுத்தி அதற்கான கமிஷனை வாங்கும் எண்ணமும் உண்டு.

அவரைப் போலவே, எனக்கு பள்ளிக்கூடத்தில் எனக்கு தமிழ் படிப்பித்த ஆசிரியரின் மகனும் பின்னர் எங்கள் பாடசாலையில் படிப்பித்த ஆசிரியருமானவர், பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தராக இருந்து, பின்னர் கனடா வந்து கொஞ்சக் கால முக்கியஸ்தராக இருந்து, கோடீஸ்வரராகி, தற்போது ‘நம்பிக்கை, நாணயம், நேர்மையுடன்’ நகை விற்றுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே எனக்கு திருமணமாகியதால், அறிமுகத்தைச் சொல்லி, தாலிக்கொடி கழிவோடு வாங்க தேவையில்லையே என்ற கவலையும் உண்டு.

ஜேர்மனுக்கு அகதியாக வந்தபின்னர் அங்கிருந்து கனடா சென்று இருந்தீர்கள், அந்த அனுபவங்கள்?

ஜேர்மனியில் அகதி வாழ்வில் எந்த எதிர்காலமும் இருப்பதாக தெரியவில்லை. மற்ற இடங்களில் ‘சோசல் காசு கனக்க!’ என்று, ஊரில் வேலி பாய்ந்த தமிழர்கள் பலரும் நெதர்லாந்து, சுவிஸ் என்று களவாக போர்டர் பாய்ந்தார்கள். எனக்கோ அவையெல்லாம் சட்டியும் நெருப்பும் தான்.

பணம் எப்போதுமே எனக்கு பிரச்சனையாகத் தான் இருந்தாலும், பணம் என்பது ஒரு போதும் பிரச்சனையாக இருக்கவில்லை. (புரியாது! வாழ்க்கையின் ரகசியம் புரியாது!)

கனடா போகிறார்கள், அங்கே போனவுடன் பிரஜாவுரிமைப் பேப்பர் கொடுக்கிறார்கள் என்ற வதந்தி வேறு.

தமிழர்கள் எல்லாம் ‘எயர்போட்டுக்கால கொண்டு போய் விடுவியள் எண்டால்’ எவ்வளவு பணமும் கொடுக்க தயாராக இருந்தார்கள்… ஏதோ ஜேர்மனியிலயும் எயர்போட்டுக்கு உள்ளுக்க தமிழனுக்கு செல்வாக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில்!

மெய்பாதுகாவலர்கள் சகிதம் புலிகளுக்கு பணம் சேர்த்தவர்கள், ஜேர்மனிக்கு அகதியாய் வந்து புலிகள் இயக்கத்திற்கு போனவர்கள், பிரபாகரனுக்கே இண்டலெக்சுவல்களாக தெரிந்தவர்கள் எல்லாரினதும் இறுதிப் புகலிடம் கனடாவாக இருக்கும் போது…

பிரபாகரனும் தப்பிப் பிழைத்திருந்தால், கே.பியின் ஹெலிகொப்டர் ஐடியாவுக்கு நெடியவன் காசைக் கொடுத்திருந்தால், சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து இன்னொரு அன்னபூரணிக் கப்பலில் வந்திறங்கி, தஞ்சம் கோரி, ஆமைக் கொத்துரொட்டிக் கடை போட்டிருக்கக் கூடிய, வந்தாரை வாழ வைக்கும் பூமி!

ஆனால், நிறையக் கனவுகளோடு இருந்த, புகலிடம் இல்லாத இந்த அகதிக்கு கனடா வெறும் கனவாகவே இருந்தது.

காரணம், அதற்கும் பெருமளவு பணம் வேண்டுமே!

அகதிகளுக்கான சமூக உதவிப் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்?

அகதியாய் வாழ்ந்த சிற்றூரின் உல்லாசப் பயண முகவர் அலுவலகத்தில் ஓசியில் கிடைத்த ஐரோப்பிய வரைபடம் ஒன்றை…

முகாமைத் தாக்கப் போகும் தளபதிகளுக்கு தேசிக்காய் தலையர் கையில் பிரம்போடு கட்டளையிடுவது மாதிரி போஸ் கொடுப்பது போல…

அக்கா வீட்டு கோப்பி மேசையில் விரித்து வைத்துக் கொண்டு, எந்த துறைமுகத்திலிருந்து எங்கு கப்பல்கள் போகின்றன, எங்கிருந்து விமானங்கள் எங்கு போகின்றன என்பனவற்றை எல்லாம் கண்டறிந்து…

யாரையோ பிடித்து தலையை மாற்றிக் கொண்டு, (நானே அதையும் செய்திருக்கலாம்!) இம்முறை மற்ற அக்காவின் கணவரின் உபயத்தில் டிக்கட் காசை கடன் வாங்கிக் கொண்டு,

இதுவரை யாரும் போகாத பாதை ஒன்றைப் பிடித்து…

கப்பல் ஏறி, விமானம் ஏறி கனடா வந்து சேர்ந்தேன்.

அப்போது கூட, இடையில் பிடிபட்டு எங்காவது நாடு கடத்தப்படாமல் இருந்ததற்கும் கையில் கிடைப்பதையும், கண்டதையும் கற்கும் என்னுடைய அதீதமான வாசிப்புத் தான் காரணமாக இருந்தது என்பதை நீங்களும் என்னைப் போல நம்பாமல் இருக்கக் கூடும்.

மொன்றியல் விமானநிலையத்தில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக இருந்த பொன்னுத்துரையோ ஏதோ பெயர் கொண்ட பெண் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை நம்ப மறுத்தார். அவர் வெறும் மொழி பெயர்ப்பாளராக மட்டும் இல்லாமல் தன்னை ஒரு கனடிய எல்லை அதிகாரி என்ற நினைப்பில் என்னை குறுக்கு விசாரணை செய்தார். என்ன செய்வது?

தமிழனுக்கு கொஞ்ச அதிகாரம் கிடைத்தால் எப்படி ஆடுவான் என்பது எனக்கு முன் பின் தெரியாத விடயமும் அல்லவே!? (இப்ப, ஆடுவாள் என்று சொல்லப் போனால் அதற்கு விளக்கம் கொடுக்க அலைய வேண்டியிருக்கும்!)

கனடிய அதிகாரி என்னைப் போல பலரைக் கண்டிருந்ததாலோ, அல்லது நிறைகுடமாகவோ இருந்ததாலோ, அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது, இவ மட்டும் பெரும் பந்தா காட்டிக் கொண்டிருந்தா. அவரது மேசையில் உட்கார்ந்திருந்து அவருக்கும் தனக்குமான நெருக்கத்தோடு, எனக்கு இங்கிலிசு பேசியும் காட்டிக் கொண்டிருந்தார்.

விசாரணை முடிந்ததும், நான் எங்கே போவது என்று கேட்டேன். ‘இவ்வளவு தூரம் வந்தாய் தானே, நீ போகலாம்’ என்று விட்டார்கள்.

‘எயர்போட்டுக்கால உள்ளுக்க கொண்டு போய் விடுவாராம்!’, ‘போனால் அவங்கள் உடனேயே காம்பில விட்டு, பாஸ்போட் கையில தருவாங்கள்’ என்ற கதைகளை நம்பிய அதே தமிழர்கள் தான் ‘தலைவர் அடிச்சுப் பறிப்பார்’ ‘உள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறார்’ என்ற கதைகளை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

போவதற்கு இடம் இல்லை. பொக்கட்டில் எண்பது ஜேர்மன் மார்க்குகள் தான் இருந்தன.

அன்று என்னைப் போல வந்த, ஒருவரை அழைத்துச் செல்ல வந்த இரு தமிழர்கள் என் மேல் இரங்கி தங்களோடு அழைத்துக் கொண்டு போனார்கள். அதில் ஒருவர் என்னைக் கழற்றி விடுவதில் அக்கறையாக இருந்தார். மற்ற தம்பி இரக்கம் கொண்டவனாக இருந்தான். இரவு அங்கே தங்கி விட்டு, ‘கையில் பணம் இல்லை, தெரிந்தவர்கள் யாரும் இல்லை, அடுத்து என்ன செய்வது? எங்கே போவது?’ என்ற யோசனையில் மறுநாள் மாலை வீட்டுக்கு முன்னால் இருந்த வீதியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவர் கால் ஒன்றை இழுத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தார். யார் என்றால்… எங்கள் ஊர் இரத்தினசிங்கம் அண்ணை. உதைபந்தாட்ட மைதானத்தில் எங்களுக்கு பகிடிக் கதைகள் சொன்ன சுந்தரி அப்புவுக்குப் பின்னால் இந்துக்கல்லூரியில் வாச்சராக இருந்த அவர், கனடா வந்து நீண்ட காலம். அவர் தன் மனைவி, பிள்ளைகளை ஸ்பொன்சர் பண்ணிய போது, கனடிய தூதுவரகம் அவர்களுக்கு நான் இருந்த காலத்திலேயே கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தது. கடிதம் வரும் போதெல்லாம் தபால்காரரிடம் அது தங்களுக்கு இல்லை என்று அவரது மனைவி சொல்லி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். தபால்காரர் எங்களிடம் எல்லாம் கேட்பார். அவர்களுக்குத் தான் என்று சொன்னாலும், றிட்டேர்ன் டு செண்டர் தான். இப்படி அவர்கள் வந்த சந்தர்ப்பத்தை கோட்டை விட்டபடி இருந்தார்கள்.

அண்ணை என்னைக் கண்டதும் நான் அறிமுகப்படுத்த, ஆச்சரியப்பட்டதுடன், என் நிலையைச் சொல்ல, தன்னோடு வந்து இருக்கும்படி சொன்னார். (கனடிய தூதுவரக கடித விவகாரத்தையும் சொன்னேன்!)

இரத்தினசிங்கம் அண்ணையின் கடைசித் தம்பி தான் மினி மோக்கில் ஓடித் திரிந்து மட்டக்களப்பில் கொல்லப்பட்ட குலசிங்கம். தன்னுடைய கடைக்குட்டித் தம்பி கொல்லப்பட்ட விசயம் பற்றி என்னுடைய அண்ணைக்கு, தான் மட்டக்களப்புக்கு போய் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த போது, அண்ணையின் கடைக்குட்டித் தம்பியான நான் அண்ணையின் சைக்கிள் பாரில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதற்குள் என்னைக் கூட்டி வந்து தஞ்சம் தந்த தம்பி, ‘அண்ணை, கோயிலுக்கு போவம், வாங்கோ, அங்க உங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் வருவினம்’ என்று கூட்டிக் கொண்டு போனான்.

மொன்றியலின் இந்துக் கோவில் அது. அங்கே போனால், புலிகளின் பேப்பர் விற்றுக் கொண்டிருந்தவன் என் உயர் வகுப்பு நண்பன். கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டோம். என் நிலையைச் சொன்னதும் தன்னோடு வந்து இருக்கச் சொன்னான்.

இரத்தினசிங்கம் அண்ணைக்கும் நன்றி சொல்லி, தஞ்சம் தந்த தம்பிக்கும் நன்றி சொல்லி, அவனோடு இறுதிப்புகலிடம் அடைந்தேன். அவன் தான் வெல்பெயர் பதிந்து கொள்ளவும், தான் வேலை செய்த வெயர்ஹவுசில் வேலைக்கு சேரவும் வழி காட்டி விட்டான். சட்டப்படி குறைந்தளவு சம்பளத்துடன், மற்ற தமிழ், கயானிய, ஸ்பானிஷ் வந்தேறு குடிகளுடன் நானும், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகளை கனடிய பெரும்பெட்டிக் கடைகளுக்கு வினியோகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தேன்.

இந்த நண்பன் தான் சிவகுமாரின் உடலுக்கு வேப்பிலையால் ஆசிநீர் தெளித்த குருவானவரின் சகோதரன். நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவன்.

அவனோடு அங்கு வசித்த சகோதரன் தான் தற்போது மில்லியனர் ஊடகப் போராளியாகி, அந்த தேசியச் சொத்தை மக்களிடம் மீளவும் ஒப்படைக்க வேண்டும் என்று இன்றைக்கும் கோரும் மொட்டைக்கடதாசிகள், பேக் ஐடி பேஸ்புக் பதிவுகளின் கதாநாயகர்களில் ஒருவன். 

அவர்களோடு இருந்த போது, அவர்களின் அண்ணன் அமெரிக்காவில் இருந்து, தன் இத்தாலிய மனைவியுடன் வந்திருந்தார். புகையிரத நிலையத்திற்கு போன இராணுவத்திற்கு புலிகள் கண்ணிவெடி வைத்து, இராணுவம் தகர்த்த அடைக்கலமாதா கோயில் பங்குத் தந்தையாக அவர் இருந்த நாட்களில், பாடசாலையில் படித்த இவர்களோடு பாடசாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு நடந்து வரும் நாட்களில் அவரைச் சென்று சந்தித்து வந்திருக்கிறேன்.

அவரிடம், எங்கள் கோயிலில் அந்தக் காலத்தில் அவர் செய்த பிரசங்கம் ஒன்றையும் ஞாபகத்தில் இருத்தி சொல்லி, (போர் புரிய வந்த மன்னன் எதிரி நாட்டுப் படைகளை நோட்டம் விட அனுப்பிய ஒற்றன் திரும்பி வந்து, ‘மன்னா, அவர்கள் நிறையக் கூடாரங்கள் அடித்து விளக்குகள் வைத்துக் கொண்டிருக்கிறார்களே!’ என்று பயப்பட, மன்னன் சொன்னானாம், ‘பயப்படாதே, அவர்கள் தனித் தனியே கூடாரங்கள் அடித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்று அர்த்தம், அவர்களை வெற்றி கொள்வது சுலபம்’ என்றானாம். இதைப் பற்றி தாயகத்தில் ஏடு இட்டோர் இயலோ, கியூறியஸோ எழுதியிருக்கிறேன்! டம்ப்ளன் கதையும் அது தானே!?) சிவகுமாருக்கு வேப்பிலை அடிச்ச கதையையும் சொன்னேன்.

‘அடே, அது தமிழ் பண்பாடடா! தற்கொலை செய்தவன் அல்லே!? கோயிலுக்குள்ள கொண்டு போகேலாது தானே!?

என்னுடைய அண்ணை சுவாமி என்பதையும் சொன்னேன். என்னோடு மிகவும் நேசமானவராக இருந்தார். வழமை போல, தமிழ்ச் சம்பிரதாயப்படி அவரின் திருமண வீடியோவையும் கட்டாயத்தின் பேரில் முழுமையாகப் பார்த்தேன்.

நான் வந்த சில நாட்களில் தமிழர்கள் அகதிகளாக கப்பலில் வந்து நியூபவுண்ட்லாண்டில் இறங்கி, நாடே பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.  கொண்டு வந்த கப்பல்காரன் நடுக்கடலில் எல்லாரையும் இறக்கி விட, அவலப்பட்டு வந்து சேர்ந்தார்கள். நான் ஒரு போதும் அவ்வாறான உயிர்ப் பணய முயற்சிகளுக்கு போயிருக்க மாட்டேன். தொலைக்காட்சி எங்கும் தமிழ் அகதிகள் பற்றிய பேச்சாகவே இருந்தது.

இந்த விடயம் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய ஊடகங்களின் அக்கறையைக் கிளப்பியதால், யாழ்ப்பாணித் தமிழர்களுக்கு மட்டுமான சங்கமான உலகத்தமிழர் இயக்கத்தினரை கனடிய தொலைக்காட்சி வந்து பேட்டி கண்டது. அங்கு பொறுப்பாளர்களாக இருந்த தமிழ்ச்செல்வனின் தம்பியும், தற்போதைய உலகத்தமிழர் பத்திராதிபரும்  தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் “Tigers are protecting the tamil people” என்று திருப்பித் திருப்பி சொன்னதாக, ஊடகப் போராளி எனக்கு சொல்லி திட்டிக் கொண்டிருந்தார்.

அன்றைய இரவு தொலைபேசி செய்தியில், ‘கனடியத் தொலைக்காட்சியில் புலிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது, தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், புலிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்’ என்று செய்தி வெளியிட்டார்கள். இவர்கள் இருவரும் தான் கனடாவின் மூத்த தமிழ் குடிகளின் மூத்த முதல் அரசியல் அவதானிகள் என்று நினைக்கிறேன். பின்னர் 24 மணி நேர வானொலிகளும், தொலைக்காட்சிகளும் வந்த பின்னால், இந்த அவதானிகள் எல்லாம் தலைவரின் மூளைக்குள் குடியிருந்த ஆய்வாளர்கள் ஆகி, நாய் வாலர்கள் ஆகியது பிறிதொரு கதை.

அகதிகளின் வருகை உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் வந்ததால், அந்த நேரம் நானும் வந்து சேர்ந்ததால், அந்த அகதிகளுக்குள் நானும் இருக்கக் கூடும் என்று என்னை தேடியதாக என் அக்காமார் சொன்னார்கள். ஏனெனில் நான் எந்த வழியில் போகிறேன் என்பதை யாருக்கும் சொல்லவில்லை. காரணம், ஏற்கனவே சொன்னால் விசயம் தெரிந்த அறிவாளிகள் ‘உனக்கேன் தேவையில்லாத வேலை?’ என்று புத்திமதி கூறுவதுடன், முயற்சி தோல்வி அடைந்தால், ‘எனக்கு அப்பவே தெரியும்’ என்று தங்கள் மேதாவித் தனத்தை புகழ்வார்கள் என்பதால்!

எல்லோரும் போனாப் போலே, தாங்களும் சாமி மலைக்கு போகும் கூட்டம் வேறென்ன சொல்லும்?

நமக்கோ, புதிய பாதை வகுப்பதில் தானே எப்போதுமே கிக்கும் திறில்லும்!

இதற்குள், நண்பர்களிடம் என் காதலி பற்றியும் அவரது சகோதரி மொன்றியலில் எங்கள் கல்லூரியில் படித்த ஒருவரை மணம் முடித்து இருப்பது பற்றியும் சொன்ன போது, ‘பொறடா, வாறம்!’ என்று, எங்கேயே தேடிப்பிடித்து, மொன்றியலில் வெளிவந்த சஞ்சிகையில் வந்த, அவர்களின் காதல் கதையைக் கொண்டு வந்து காட்டினார்கள்.

அந்தக் காதல் தொடங்கிய மொன்றியல் கோயிலுக்கு நான் எப்போதும் போவேன்.

நிறைவேறி வரலாறு பெற்ற அந்தக் காதல் போல் அல்லாமல், என் காதல் கண்ணீரோடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால், என் கதையையும் என் பங்குக்கு பின்னர் தாயகத்தில் எழுதியிருந்தேன்.

அங்கிருந்த நாட்களில் ஒரு நாடகம் நடந்தது. பிரசவ வலியால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஆலோசனை சொல்கிறவர்கள் பற்றிய கதை. அன்றைய அரசியல் சூழலை கிண்டல் பண்ணி எழுதியது. அதில் புலிகளையும் கிண்டல் பண்ணியிருந்ததால், வழமை போல புலிகள் மிரட்டியதால், அதை எழுதியவர் நீண்ட காலம் தலைமறைவாக இருந்து, பின்னர் தாயகத்தில் எழுதினார்.

மொன்றியலிலும் ஆதிக்குடிகள் இலக்கிய சங்கம் அமைத்து தமிழ் வளர்த்துக் கொண்டிருந்தார்கள் என்று பின்னர் தான் அறிந்தேன். அன்றைக்கு போய் சேர்ந்திருந்தாலும், என்னை எழுதத் தெரிந்தவன் என்று, அங்கிருந்த இலக்கிய சென்ட்ரல் கொமிட்டிகள் ஏற்றுக் கொண்டிருக்குமோ என்பது சந்தேகமே!

மொன்றியலிலும் அகதி கோரிக்கை விசாரணை இழுத்தடிக்கப்பட்டது. அங்கும் எதிர்காலம் மலர்ச்சியானதாக தெரியவில்லை.

அகதிகள் தொகையாக வந்து குவிந்ததால், அவர்களை எல்லாம் விசாரித்து மினக்கெடாமல், அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் அறிவிப்பு வந்து, ஜூலை 31ம் திகதிக்கு முன்னர் வந்தோருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது.

நான் வந்தது 31ம் திகதி நள்ளிரவு என்பதுடன் எனது பதிவு ஆகஸ்ட் 1ம் திகதி என்பதால் எனக்கு பொதுமன்னிப்பு கிடைக்காமல் போனது என்பதில் நான் பிறப்பிலேயே எவ்வளவு அதிஷ்டக்காரன் என்பதை தெரிந்து கொள்ள முடியும். இப்படி வாழ்நாள் பூராவும் நான் எதைச் செய்தாலும், என்னை ஏதோ ஒன்று எப்போதுமே இழுத்து விழுத்தியபடி தான் இருக்கிறது. அது பற்றிய பெருங்கதைகளே உள்ளன.

சந்திர மண்டலத்துக்கு நாய் அனுப்பிய மாதிரி, என் நண்பன் ரொறன்ரோ வந்து, பாதை கிளியர் என்று அறிவித்ததும் நாங்களும் வந்து சேர்ந்தோம். ரொறன்ரோ வந்து குறைந்த அடிப்படைச் சம்பளத்துடன் வேலையைத் தேடிக் கொண்டேன்.

பின்னர் ஹொலிவூட் திரைப்படச் சுருள்களை கழுவும் ஜெமினி ஆய்வுகூடம் மாதிரியான பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.

எங்களோடு படித்த இன்னொரு நண்பனும் வந்து சேர்ந்து, பழைய பாடசாலை நண்பர்களை எல்லாம் சந்தித்து பெரும் கொண்டாட்டமாகவே அந்தக் காலம் இருந்தது.

பின்னர் என் சின்னம்மாவின் மகனான தம்பி வந்ததும் மற்ற நண்பர்களோடு போய் குடியிருந்தேன்.

அங்கே நான் ஐயா என்று இன்றும் பரஸ்பரம் அன்போடு அழைக்கும் தயா அண்ணை எங்களோடு இருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் என்ஜினியராகப் படித்த நடுவிலேயே விட்டு இயக்கத்திற்கு போனவர். சரியான கெட்டிக்காரர். 

அங்கே சனிக்கிழமைகளில் பல்வேறு முன்பின் தெரியாத நண்பர்கள் எல்லாம் கலந்து கொள்ளும் தண்ணீர் பார்ட்டிகள் நடக்கும். பார்ட்டிகளில் பெரும் பாடகர்களாக இருந்தோம். வெறியில் விலாசமாக பாட்டைத் தொடங்கி, இரண்டு வரிகளுக்கு மேல் தெரியாமல் திணறும் அம்பிகாபதிகளுக்கு தயா அண்ணை, பிராங்கிளின், நான் ஆகிய மூவரும் தான் கம்பர்களாக பாட்டை முடித்துக் கொடுப்போம். எங்களுக்குப் பாடத் தெரியும் என்பதை விட, பாட்டுத் தெரியும். (புரியாது, வாழ்க்கையின் ரகசியம்!)

காலையில் பத்திரிகை வினியோகம் செய்யும் தயா அண்ணை எனக்கு தினசரி ‘குளோப் அன்ட் மெயில்’ பத்திரிகை கொண்டு வந்து தருவார். அதை முழுயைமாக வாசித்த பின்னர் என் பின்நேர வேலைக்கு போவேன்.

இரண்டு  பேரும் ஒன்றாகச் சமைக்கும்போது தன் அரசியல் பற்றி சொல்வார். வன்னியில் இருந்த காலத்தில் மற்ற இயக்கத்தில் பொறுப்பில் இருந்த தானும் மாத்தயாவும் வழியில் அடிக்கடி சந்தித்துக் கொள்ள நேரிட்டதாகவும், இருவருமே இராணுவ நடமாட்டம் பற்றி தகவல் பரிமாற்றம் செய்ததாகவும் சொன்னார்.

அவர் தான் புளொட்டிலிருந்து பிரிந்து, புளொட் கொல்லத் தேடிய தீப்பொறி அமைப்பு முக்கியஸ்தர்களில் ஒருவரான கண்ணாடி சந்திரன்!

இலக்கியமோ, பத்திரிகையோ சம்பந்தப்படாத இந்த நீட்டிய முழக்கிய, பெரும் சுயபுராண ஆலாபனை எல்லாம், என்னையும் என் எழுத்துக்களையும் முப்பது வருடங்களாக தெரிந்து கொண்டவர்களுக்கு தேவைப்படாது. 

புத்திஜீவிகள் பல்வேறு முகாம் அடித்து  விளக்கு பிடிக்கும் இந்த தளத்தில், முன்பின் தெரியாத என்னைப் பேட்டி கண்டால், அவர்களும் என்னை ஏதோ இதுவரை தாங்கள் கேள்விப்பட்டிராத புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் என்று நினைத்து என் எழுத்துக்களை தாங்களும் வாசித்து ‘உச்ச இன்பம்’ கண்டதாக, பேட்டியை சிலாகித்து எழுதப் போகும் சங்கடங்களுக்கு அவர்களையும் ஆளாக்குவது மனச்சாட்சிக்கு விரோதமானது.

என்னை யாரென்று தெரியாமலேயே புலி எதிர்ப்புத் துரோகி என்று கடந்து போகும் புத்தியில்லாத ஜீவிகளுக்கு இதைச் சொல்லாமல், என் எழுத்துக்களைப் பற்றிச் சொன்னால் அடிநுனி தெரியாது.

மற்றும்படி, என்னைப் பற்றி இந்த யாழ்ப்பாணிகள் உயர்வாக எண்ண வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை.

ஏனெனில் முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விட, புத்திசாலிகளுக்கு எதிரியாக இருப்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன்.

அடுத்த பக்கத்தில் தொடர்கிறது

1 Comment

  1. மிக முக்கியமான பதிவு. தமிழ் மக்கள் தேசிய இன விடுதலைக்கு முதல், தமிழ் மக்களுக்குள் சமத்துவ வாழ்வினை உறுதிப்படுத்தும் போராட்டத்தினை முதல் தொடங்கி இருக்க வேண்டும் எனும் முன் நிபந்தனையை முதலில் செய்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக முன்னிருத்தும் வாக்குமூலம் இது! இந்த நேர்காணலைப் படித்த பின் பல விடயங்களை பேச வேண்டும் என்கிற உந்துதல் வருகிறது! இதுவே ஒரு ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கான வாய்ப்பை திறந்து விடுவது இங்கு கவனிக்கத்தக்கது! ஆனாலும் இந்த மறுபரிசீலனை நடக்குமா என்பதே கேள்விக்குரியதே.., விரிவாக எழுதப்பட வேண்டிய பல காலகட்டங்கள், மாறும் அரசியல் போக்குகள், மாறா சாதிய ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் , தாயக, புகலிட அரசியல் ,சமூகச் சூழல்கள், முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என பல விடயங்கள் உள்ளன.நேர்காணல் சட்டென முடிந்த மாதிரி இருப்பது , “பந்தி முடிந்தது, பசிதான் தீரவில்லை” என்பது போல் இருந்தது.

    ஜோர்ஜ் குருஷோவ் எனப்படும் ஒரு சமூக மனிதனை, “ தாயகம்” பத்திரிகைப் பணிக்கு பின்னால் அறிந்து கொள்ள, சமூக ஆர்வலர்களுக்கு இந்தப் பதிவுகள் முக்கியமானதும், பயனுள்ளதுமாகும்!

உரையாடலுக்கு

Your email address will not be published.