/

முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விட, புத்திசாலிகளுக்கு எதிரியாக இருப்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன்: ஜோர்ஜ்.இ.குருஷேவ்

தாயகம் பத்திரிகை ஆசிரியருடனான நேர்காணல், நேர்கண்டவர் அனோஜன் பாலகிருஷ்ணன்

தாயகத்தில் சர்வதேச அரசியல் பற்றியும் நிறைய எழுதி இருந்தீர்கள்; உங்கள் வாசிப்பு பரந்து விரிந்தது என்பதை புரிந்துகொள்ள இயல்கிறது. அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

என்னால் ஒரு பத்திரிகை நடத்த முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது என் வாசிப்புத் தான். வழமையான இரண்டு இதழ் மட்டுமே வெளிவரும் இலக்கிய முயற்சிகள் மாதிரி, உயர் வகுப்பில் தட்டச்சு சஞ்சிகையும், வெளிவந்த ஓரிரு கட்டுரைகளும் தவிர்ந்த எந்த விதமான எழுத்து அனுபவமும் இல்லாமல், பத்திரிகை அச்சிடும் தொழில்நுட்பம் பற்றி முழுமையான அறிவுகூட இல்லாமல் பத்திரிகை ஆரம்பித்தது அந்த பரந்துபட்ட வாசிப்பினால் கிடைத்த அறிவை நம்பித் தான்.

எனக்கு வாசிக்கத் தெரிந்த நாள் முதல் நான் வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் அப்பா எல்லா தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாமே தன் வறுமைக்குள்ளாலும் வாங்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட எங்கள் ஓலைக்குடிசை ஒரு வாசிகசாலை மாதிரியே இருந்தது. வாசிக்க வருவோருக்கு தேனீருடன்!

மூன்றாம், நாலாம் வகுப்பிலேயே எட்டாம் வகுப்பு தமிழ் புத்தகங்களில் உள்ள பாரதம், ராமாயணம் எல்லாம் வாசித்து முடித்திருந்தேன். அந்த வயதுகளுக்குள்ளேயே காந்தியின் சத்தியசோதனை முதல் பைபிள் வரை, கிடைத்தது எல்லாம் பல தடவைகள் என் மறுவாசிப்புகளுக்குள் அடங்கியது.

சிறுவயதிலேயே மித்திரன் முதலான வாசிப்புக் காரணமாக, விசயம் தெரியாத வயதில் பாலியல் என்றால் என்ன என்ற என் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அப்பாவும் ஐயாவும் முழிசிக் கொண்டு நின்றது இப்போதும் என் கண்ணுக்குள் நிற்கிறது.

நான் எதையும் வாசிப்பதை என் அப்பா தடுத்ததில்லை. மித்திரனில் தொடராய் வந்து புத்தகமாய் வந்த ஜி.நேசனின் பட்லி முதல் கொண்டு அப்பா என்னை வாசிக்க வைத்தார்.

சிறுவயதுக்குரிய அம்புலிமாமா, நற்கருணை வீரன் முதல் டீன் ஏஜ் வயதுக்குரிய குமுதம், விகடன் மட்டுமன்றி, கஸ்தூரியார் றோட்டுக் கடையொன்றில் நண்பர்கள் வாங்கி வந்த பலான கதைகள் வரைக்கும் என் வாசிப்பு பரந்து விரிந்தது.

யாழ்.நூலகம் மட்டுமன்றி, சுமார் இரண்டு மைல் நடந்து போகிற எங்கள் கிராமத்து வாசிகசாலைகள், சைக்கிளில் போகும் வழிகளில் ஆங்காங்கே உள்ள வாசிகசாலைகள் எல்லாம் எனது தேடலுக்கு தீனி போட்டவை.

வாசிப்பு என்பது எனக்கு ஒரு பழக்கமா, அல்லது போதையா என்று பிரிக்க முடியாதபடிக்கு, எப்போதும் எதையாவது வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

கனடா வந்ததும் முதன் முதலில் செய்தது ரைம், நியூஸ்வீக், றீடர்ஸ் டைஜஸ்ட் சஞ்சிகைகளுக்கு சந்தா கட்டியதுதான்.

வருடக்கணக்காக ரொறன்ரோ ஸ்டார் சந்தா கட்டி தினசரி வேலைக்கு கொண்டு போய் வாசித்திருக்கிறேன். முழுமையாக வாசிக்க குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது வேண்டும். நான் வாசிக்காத விளையாட்டுப் பகுதியை வாங்குவதற்கு என்றே சக வேலையாட்கள் காத்திருப்பார்கள்.

அரசியல் மட்டுமன்றி, சினிமா, விஞ்ஞான தொழில் நுட்பம், கலை, இலக்கியம், றொக் அன்ட் றோல் இசை என்ற என் பரந்துபட்ட ஆர்வங்கள் காரணமாக, விளையாட்டுத் தவிர்ந்த எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். விளையாட்டிலும் போர்முலா 1 கார்ப் பந்தயம் மட்டும் நான் ஆர்வமாக வாசிக்கும் ஒன்றாக இருந்தது. அதற்கு சிறு வயதில் என் அம்மா வாங்கித் தந்த ரேஸ் கார் பொம்மை காரணமாக இருக்கலாம். அது நீண்ட நாட்களின் பின்னர் எங்கள் தோட்டத்தில் கொத்தும்போது புதைபொருளாக வெளிவந்தது.

சிறுவயதிலிருந்தே அரசியல் மீதான ஆர்வம் அது பற்றி வாசிக்க என்னை அதிகமாகத் தூண்டியது. இது சுதந்திரனும், ஒரு தீப்பொறியும் யாழ்ப்பாணக் கிணற்றுக்குள் வைத்து உசுப்பேத்திய யாழ்ப்பாண தமிழ்த் தேசிய அரசியலையும் மீறி, சர்வதேச அரசியலிலும் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தது.

ஆங்கிலமொழி தடையாக இல்லாததால், சர்வதேச சஞ்சிகைகளை வாசித்ததால், எழுபது, எண்பதுகளில் நிக்கரகுவா, எல் சல்வடோர் போன்ற மத்திய அமெரிக்கா, லெபனான், ஈரான் ஈராக் யுத்தம், பலஸ்தீனம் போன்ற மத்திய கிழக்கு, சோவியத் சார்பு அரசைக் கவிழ்த்து காபூலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சண்டையிட்டு நிர்மூலமாக்கிய அமெரிக்க ஆதரவு பெற்ற முஜாகிதீன்கள், கிழக்கு ஐரோப்பாவில் போலந்தில் தொடங்கிய எழுச்சி, அமெரிக்க அரசியல், ஆபிரிக்காவில் அங்கோலா, லைபீரியா என்று அந்தக் காலத்து குளிர்யுத்த நேரங்களில் நடந்த சகல உலக அரசியல் விவகாரங்கள் எல்லாம் எனக்கு அத்துபடியாக இருந்தன.

நிக்கரகுவாவில் ஏடன் பாஸ்டோராவும், அங்கோலாவில் சாவிம்பியும் அமெரிக்கர்களால் விடுதலை வீரர்களாக சித்தரிக்கப்பட்டு அந்த நேரத்து ரைம் சஞ்சிகையில் நிறைய அவர்களைப் பற்றி எழுதப்பட்டு வந்தது. சாவிம்பி றீகனின் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த நாடுகளில் ஆட்சியிலிருந்த ரஷ்ய ஆதரவு அரசுகளைக் கவிழ்த்து, அங்குள்ள வளங்களை சூறையாட, சி.ஐ.ஏ இவர்களைப் பயன்படுத்தியது.

இதைப் போலத் தான் பிரபாகரனும் ரைம் சஞ்சிகையில் எழுதப்படும் அளவுக்கு புகழ் பெற்றார். பிரபாகரனை இந்திய சஞ்சிகைக்காக பேட்டி கண்ட அனிதா பிரதாப் பின்னர் ரைம் சஞ்சிகையில் செய்தியாளராக இருந்தார்.  கடைசியில் பிரபாகரனுக்கு இயற்கை கூட நண்பனாக இல்லாமலும், முள்ளிவாய்க்கால் வரைக்கும் வரலாறு தான் வழிகாட்டியாகவும் இருந்தது.

இதனை அப்போதே உங்களால் எதிர்வுகூற முடிந்திருந்ததா?

யாழ்ப்பாணிகளுக்கு பிரபாகரன் அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்ட விடுதலை வீரன் என்பதில் பெரும் மகிழ்ச்சி இருக்கும். அமெரிக்க சார்பு ஐ.தே.கட்சியுடன் தமிழ்த் தேசியம் கொண்டிருக்கும் கள்ளக் காதல், அமெரிக்காவின் மீதான பெருங்காதலால் வந்த ஒன்று தானே. தலைவர் அமெரிக்காவுக்கு திருகோணமலையைக் கொடுத்து விட்டு, ஈழம் எடுப்பார் என்ற நாய் வாலர்கள் இப்போதும் உள்ளார்கள்.

சமாதான முயற்சிகளுக்கு சாவுமணி அடித்த சாவிம்பி கடைசியில் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட கதையை, சர்வதேச விவகாரங்கள் பற்றி தாயகத்தில் தொடர்ந்து எழுதி வந்த உமாகாந்தன் நினைவாக, வெளியிட்ட விசேட தாயகத்தில் நான் எழுதியிருந்தேன். அது பிரபாகரனுக்கும் நடக்கும் என்பதைச் சொல்லியிருந்தேன். அந்த கட்டுரையில் சொல்லப்பட்டது போல, சாவிம்பியைப் போலவே, பிரபாகரனும் கொல்லப்பட்டிருந்தார்.

எண்பதுகளில் லைபீரியாவில் புரட்சிச் சதி செய்து, ஆட்சியைக் கைப்பற்றிய சாமுவேல் டோ, ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் கடற்கரையில் மரத்தூண்களில் கட்டி சுட்டுக்கொன்ற படங்கள் அப்போதைய சஞ்சிகைகளில் வந்தன. அதே டோவை சார்ள்ஸ் டெய்லரும், பிரின்ஸ் ஜோன்சனும் காதுகளை வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்ததை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை, நீங்கள் இன்றைக்கும் யூரியூப்பில் பார்க்கலாம்.

ஆபிரிக்க தேசிக்காய்த் தலையர்களை விட, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குரங்குகள் ஒன்றும் சிந்தனையில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை என்பதை நீங்கள் யாழ்ப்பாணத்தில் டயர்களுக்குள் உயிரோடு தூக்கி எறிந்ததைக் கண்டிருந்தால் தெரிந்திருப்பீர்கள்.

றீகனின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்த போது, அரபாத் விமானம் ஒன்றில் வைத்து ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியைப் பார்த்து, எங்களுக்கு ஏன் இப்படி தலைவர்கள் கிடைக்காமல் போனார்கள் என்று மனம் வெதும்பியிருக்கிறேன்.

74ம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சிங்கப்பூர் உதவிப் பிரதமர் சின்னத்தம்பி இராஜரத்தினம் ‘உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது’ என்று எங்கள் போராட்டத்தை மனதில் வைத்து சொன்னது, வீரகேசரியில் தலையங்கமாக வந்த விடயம், எனக்கு எப்போதுமே மனதில் இருந்திருக்கிறது. அப்போது நான் எட்டாம் வகுப்பு. அதைப் பற்றி தாயகத்தில் ஏடு இட்டோர் இயலும் எழுதியிருந்தேன்.

இதையெல்லாம் வாசித்த எனக்கு எங்கள் போராட்டம் எப்படியான முடிவுக்கு வரும் என்பதை ஊகிப்பதிலோ, அந்தப் போராட்டக் கொலைவெறிக்குள் என்னை பலி கொடுக்கக் கூடாது என்று முடிவாக இருப்பதிலோ, எந்த சிக்கலும் இருக்கவில்லை. ‘

கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி, மானே, படைத்தவனே பறித்துக் கொண்டாண்டி!’ என்பது போல, தங்களால் தங்கள் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ‘விடுதலை வீரர்கள்’, தங்களால் கட்டுப்படுத்த முடியாத தலையிடியாக மாறும்போது, அதே வல்லரசுகளால், அது அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவாக இருந்தாலும், அழிக்கப்படுவார்கள் என்பதை, இன்றைக்கும் உணர்ந்து கொள்ளாத யாழ்ப்பாணிகள், அமெரிக்கா வா, இந்துத்துவ இந்தியா வா என்று கொண்டிருக்கிறார்கள்.

இதை உணர்ந்து கொள்ள, நீங்கள் தீர்க்கதரிசியாகவோ, மேதகு மேதாவியாகவோ இருக்க வேண்டியதில்லை. வெறும் Common sense மட்டுமே போதும்.

புகைப்படக் கலை, சேதனப் பயிர்ச்செய்கை, Graphic design, இசை என்று உங்கள் ஆர்வம் நீண்டு செல்கிறது. இவற்றை எவ்வாறு அறிமுகம் செய்துகொண்டீர்கள்?

எல்லாரையும் போலவே, கற்பனை இலக்கியங்களை நான் வாசித்திருந்தாலும், என் வாசிப்பு அறிவுத் தேடலுக்கானதாகவும், சிந்தனை வளர்ச்சிக்குமானதாகத் தான் இருக்கிறது. இதனால், தற்போது புனைவு இலக்கியங்களை விட, அறிவுசார் நூல்களையும் கட்டுரைகளையும் வாசிப்பதிலேயே எனக்கு நாட்டம் அதிகமாக இருக்கிறது.

ஆசானை வாசிப்பதால் அறிவு கூடியது என்றோ, சாருவை வாசிப்பதால் சிந்தனை வளர்ந்தது என்றோ சொல்ல முடியுமா? இந்த புனைவு இலக்கிய வாசிப்பு எனக்கு மிகவும் குறைவானதாகவே தற்போது இருக்கிறது. அவசியமானவை எனக் கருதுபவை, என் நண்பர்களின் படைப்புகள் எல்லாமே நான் தவறாமல் வாசிப்பவை. அவற்றைக் கடந்து, பேஸ்புக்கில் ‘இதோ வாசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று செல்பி போடும் அளவில் தற்போது என் வாசிப்பு இல்லை.

முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வந்த என்னை அனோஜனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். நான் அனோஜன் எழுதியதை மட்டுமல்ல, வெளியில் சொன்னால் அனோஜன் சங்கடப்படக்கூடிய பின்னூட்டங்கள் வரை வாசித்திருக்கிறேன்.

இன்றைக்கு எனது வாசிப்பு ஆர்வம் குவாண்டம் பௌதிகம் வரையும் இருக்கிறது. இலக்கிய சர்ச்சையை விட, Quantum entanglement பற்றி நீங்கள் என்னோடு நிறைய விவாதிக்கலாம்.

நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற பல விடயங்களை, வாசிப்பு மூலமாகத் தான் கற்றிருக்கிறேன். புகைப்படக் கலை, சேதனப் பயிர்ச்செய்கை, Graphic design, இசை, பங்குச் சந்தை… எதுவாக இருந்தாலும், ஒரு கரை காணும் வரைக்கும் வாசித்துத் தள்ளியிருக்கிறேன்.

சினிமா ஆர்வம் காரணமாக, படத்தொகுப்பு முதல் Sound design வரைக்கும் வாசித்து கற்றிருக்கிறேன். என் வாசிப்புகள் எல்லாம் புத்தகம் எழுதும் அளவுக்கான அறிவு வரை என்னை கொண்டு சென்றிருக்கின்றன.

என் வேலையிடத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய போது, ஒன்ராறியோ மாகாணத்தில் தொழில் சட்டங்கள் பற்றி நிறைய வாசித்து தெரிந்து வைத்திருந்தேன்.

இந்த வாசிப்புத் தான் எனது தன்னம்பிக்கையை வளர்த்தவற்றில் முதன்மையானது. எந்த விடயம் பற்றிக் கதைத்தாலும், குறைந்த பட்சம் அமெரிக்காவையாவது குற்றம் சாட்டி, தானும் கருத்துச் சொல்ல வேண்டும் என்று துடிக்கும் யாழ்ப்பாணி மாதிரி இல்லாமல், எனக்கு தெரியாத விடயம் என்றால் அதைத் தெரியாது என்று சொல்லும் பக்குவத்தை தந்திருந்தது. தெரியாமல் இருந்தாலும், அதற்கான அறிவை எங்கே பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளும் அளவுக்கான அறிவையும் இந்த வாசிப்பு தந்திருக்கிறது.

கடைகளில் சீனி சுற்றிய பத்திரிகை, சஞ்சிகைத் துண்டுகளில் எத்தனையோ விடயங்களை வாசித்து அறிந்திருக்கிறேன். பொருட்களோடு வரும் Manuals நான் தவறாமல் வாசிப்பவை. புதிய பொருட்களை வாங்கும்போதும், பெரும் பரவசத்துக்குள்ளாகாமல், அதனோடு வரும் கைநூல்களை வாசித்து, அதைப் பயன்படுத்துவது எப்படி என்று வாசித்த பின்னர் தான் பொருட்களில் கை வைப்பேன்.

வேலையிடங்களில் தரும் காப்புறுதி பற்றிய விவரண நூல்களில் இருக்கும் விடயங்களை எல்லாம் என்னிடம் தான் முன்னர் என் சக தொழிலாளிகள் கேட்டு அறிந்து கொள்வார்கள். நான் நிச்சயம் வாசித்திருப்பேன் என்று அவர்களுக்குத் தெரியும். இப்போதும் தொழிற்சங்கத்தின் முகாமைத்துவத்துடனான ஒப்பந்தப் புத்தகம் கூட என் வாசிப்புக்கு தப்புவதில்லை.

அரசியல் பற்றிய வாசிப்பை விட, விஞ்ஞான தொழில்நுட்பம் பற்றிய வாசிப்பு இன்னொரு பக்கம். ரொறன்ரோவில் அப்போது மாதாந்தம் மூன்று இலவச கம்பியூட்டர் பத்திரிகைகள் வெளிவந்தன. நான் தவறாமல் வாசிப்பது மாத்திரமன்றி அவற்றை சேகரித்தும் வைத்திருந்தேன்.

இலங்கையில் இருந்தபோதுதான், அப்பிள் நிறுவனம் தனது மக்கின்ரோஷ் கணனிகளை 1984ல் அறிமுகப்படுத்தியது. ஜோர்ஜ் ஓர்வலின் 1984 நாவலில் உள்ள பெரிய அண்ணையின் ஆட்சியை தகர்த்தெறிவது போல அமைந்த தொலைக்காட்சி விளம்பரம் மிகவும் புகழ் பெற்றது.

நான் கம்பியூட்டர் புறோகிராமிங் படித்த கம்பியூட்டர்களில் அப்பிளின் ஆரம்ப கம்பியூட்டர்களும் அடங்கும். ஆனால் மக்கின்ரோஷ் புதிய user interface உடன் வந்தது பெரும் புரட்சியாகவே அமைந்தது.

இது பற்றி ரைம், நியூஸ்வீக் சஞ்சிகைகளில் வந்த கட்டுரைகளையும் டெயிலி நியூஸ் பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரத்தையும் பார்த்து, அந்தக் கம்பியூட்டர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பிச்சைக்காரப் பயலுக்கு அப்போதே தலைதூக்கியிருந்தது.

கனடாவில் Macuser, Macworld ஆகிய இரண்டு மாத சஞ்சிகைகளும் நான் வாங்கிச் சேகரித்து வைத்திருந்தேன். அதில் தான் மக்கின்ரோஷ் கம்பியூட்டர் அச்சுக்கலையில் புதுப்புரட்சி ஒன்றை உருவாக்கிய விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. Typesetter என்ற டைனோசார் கணனிகளில் பக்க வடிவமைப்பு செய்த நிலை போய், மேசையில் வைத்திருக்கும் கணனியிலேயே பக்க வடிவமைப்பு செய்யக் கூடிய மென்பொருளான PageMaker ரை Adobe உருவாக்கி இருந்தது. Desktop Publishing என்ற அந்த புரட்சி என்னைப் போன்ற சாமான்யர்களை எல்லாம் பத்திரிகை ஆசிரியராக்க வழி வகுத்தது. இதை விட, ஆங்கில எழுத்துக்கள் மட்டுமன்றி, மற்ற மொழிகளையும் அச்சில் பயன்படுத்தக் கூடிய font தொழில்நுட்பத்தையும் அந்த பொன்ட்களை வடிவமைக்கக் கூடிய மென்பொருளான Fontographer பற்றியும் அந்த சஞ்சிகைகளில் அறிந்து கொண்டேன். எனவே, தமிழ் எழுத்துக்களை நானே வடிவமைக்கலாம் என்ற நம்பிக்கை வந்த போதும், அந்த சஞ்சிகையின் பின்பக்கங்களில் வரும் விளம்பரங்களில், தமிழ் எழுத்துக்கள் விற்பனைக்கு இருக்கும் விடயத்தையும் அறிய முடிந்தது. இப்படி என் வாசிப்பு கடைசியில் நான் எதிர்பார்க்காத, ஒரு பத்திரிகை ஆசிரியனாக்கி விட்டிருந்தது.

என்னுடைய வாசிப்பு நான் எதிர்பாராத வகைகளில் எல்லாம் எனக்கு உதவியும் இருக்கிறது.

கனடா வரும்போதும், நோர்வேயில் பயண முகவரிடம் டிக்கட்டைப் பதிவு செய்த பின்னர், அங்கிருந்த ஆங்கில விமான நிறுவனத்தின் சுற்றுலா புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் பொழுது போகாமல்  வாசித்த போது தான் தெரிந்தது, என் பயணப் பையை முடிவிடத்திற்கு விலாசமிட்டு கையளிக்க வேண்டும் என்பது. இல்லாவிடில், அந்தப் பயணப் பையோடு லண்டனில் வெளியே வந்து, திரும்பவும் விமான நிலைய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டே மற்ற விமானத்தில் எற வேண்டி வரும். அந்த நேரம், லண்டனில் பரிசோதனை அதிகம் என்பதால், பலரும் பிடிபட்டு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

என்னுடைய அந்த அதீதமான வாசிப்புத் தான், அந்த தகவலை எனக்குத் தெரிய வைத்தது. இல்லாவிடில், நான் இலங்கையிலிருந்து வரும் போது கொண்டு வந்த புத்தகங்கள் ஒரு உலகச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பியிருக்கக் கூடும்.

சினிமா மீது உங்களுக்கு அந்தரங்கமான நாட்டம் இருந்தது அல்லவா?

ஆரம்பத்தில் பகலில் warehouse வேலை, மாலை றெஸ்ரோறன்ரில் கோப்பை கழுவும் வேலை, வார இறுதியில் செக்கியூரிட்டி கார்ட் வேலை என்று வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தாலும், கனடாவில் என்னுடைய சினிமாக் கனவை நிறைவேற்றுவதில் தான் என் முயற்சிகள் இருந்தன.

என் சினிமாக் கனவு ஊரில் இருக்கும்போதே முளை விட்ட ஒன்று. Steven Spielberg தென் கலிபோர்ணியா பல்கலைக்கழகத்திலும் (USC), Francis Ford Coppola கலிபோர்ணிய பல்கலைக்கழகம் லொஸ் ஏன்ஜலஸிலும் (UCLA) கற்றார்கள் என்பதால், அந்தப் பல்கலைக்கழங்களுக்கு எழுதி அவர்களின் சினிமாப் பிரிவின் விவரணப் புத்தகங்களை எடுப்பித்து வாசித்து கனவு கண்டு கொண்டிருந்தேன்.

இப்படி என் வறுமைக்குள்ளும் என் நினைப்புகள் பிழைப்பையும் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டே இருந்தன.

கனவு தான் காண்கிறோமே, அதை அடையார் சினிமாக் கல்லூரிக்குள்ளும், பூனே திரைப்படக் கல்லூரிக்குள்ளும் தான் பிச்சைக்காரத்தனமாக முடக்க வேண்டுமா என்ற நினைப்புத் தான்! அவற்றின் விளம்பரங்களை இலஸ்ட்ரேட்டட் வீக்லியிலும் பிலிமாலயாவிலும் கண்டாலும், அவை பற்றி அலட்டிக் கொண்டதேயில்லை.

ஆனால், கொழும்பில் கத்தோலிக்க அமைப்பான OCIC நடத்திய கற்கை ஒன்றில் சேர நடந்த முயற்சியும், யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு கற்பிப்பதாக வந்த விளம்பரத்தைப் பார்த்து வகுப்பு நடத்துவதாக சொன்னவரை கலாய்த்ததும் சுவாரஷ்யமான கதைகள்.

எங்கே படிக்க வேண்டும் என்பது முதல் சகல திட்டங்களும் என்னிடம் இருந்து, என்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தேன். அதற்கான மாலைநேர வகுப்புகள், பல்வேறு மாற்று சினிமாப் படங்களை தேடி பார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன்.

இன்று வரையும் தொடர்ந்து வைத்திருக்கும் ரொறன்ரோ நூலக அங்கத்துவ அட்டை புத்தகங்களை மட்டுமன்றி, உலக திரைப்படங்களையும் பெற உதவியது. இதைவிட, ரொறன்ரோவில் மாற்றுபத்திரிகையாக விளங்கிய NOW வார இதழ் இவ்வாறான சினிமா பற்றிய தகவல்களை தாங்கி வந்தது. நான் வேலை செய்த நகர் நடுப்பகுதியில் இந்த பத்திரிகை இலவசமாகக் கிடைக்கும். இதைவிட, இவ்வாறான படங்கள் கிடைக்கக் கூடிய வீடியோக்கடைகள் எல்லாம் தேடிப் பிடித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் வேலை செய்த திரைப்படச் சுருள் கழுவும் ஆய்வுகூடம் அப்போது பிரபல சினிமாத் தியேட்டர் தொடர்களின் நிறுவனமான Cineplex Odeon ற்கு சொந்தமாக இருந்தது. அப்போது வாராந்தம் இலவசமாக சினிமா பார்க்க பாஸ் தந்திருந்தார்கள். எனவே பல்வேறு பிரபல சர்வதேச இயக்குனர்களின் படங்களை பார்க்க முடிந்தது.

சினிமா தயாரிப்பிற்கு மக்கின்ரோஷ் கம்பியூட்டர்கள் தொழில்நுட்ப ரீதியாக பயன்படுத்தப்படுவதால் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதிலும் ஆர்வம் இருந்தது.

Best laid plans of men and mice often go awry.  என் விடயத்தில் சனி பகவான் கடாட்சம் நிறைய.

கனடிய பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொள்ள கனடிய குடிவரவுப் பத்திரம் பெற்றிருக்க வேண்டும். எனக்கோ அது குறித்த விசாரணைகளே நடக்காமல் இருந்தது. என்னோடு இருந்தவர்களுக்கு எல்லாம் அது கிடைத்து தங்கள் குடும்பத்தவர்கள், துணைவியர்களை அழைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அகதியாகவே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

எனவே, சினிமாக் கனவு நனவாகும் வரைக்கும், புதிதாக மக்கின்ரோஷ் கம்பியூட்டர்கள் தொடக்கி வைத்த Desktop Publishing புரட்சியைப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம், சனிபகவான் கிருபை காரணமாக, மனதில் தோன்றியது.

சிலருக்கு நாக்கில் சனி, சிலருக்கு கையில். எனக்கு மூளையில்!

தாயகம் புலம்பெயர் சூழலில் முன்னோடியான தமிழ் பத்திரிகையில் ஒன்று. தனிமனிதனாக செய்தி சேகரிப்பு, வடிவமைப்பு, அச்சாக்கம், விநியோகம் என்று பல்வேறு தளங்களில் செயற்பட நேர்ந்தது. அந்த அனுபவங்கள் பற்றி…

கனடாவில் இன்றைக்கும் தொடரும் பாரம்பரியப்படி Cut and paste பத்திரிகைகள் தான் அன்றும் வந்தன. ஆனால் அன்றைக்கு உண்மையாகவே மற்ற பத்திரிகைகளில் வந்த பத்திரிகை துண்டுகளை வெட்டி ஒட்டி அச்சிட்டபடி, புலிகளால் ஒரு பத்திரிகையும் ஈ.பி.ஆர்.எல்.எப் இனரால் ஒரு பத்திரிகையும் மாதாந்தம் வெளிவந்தன. வேறுவேறு பத்திரிகைகளில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டதால், கையெழுத்தை பிடிக்காத முடியாதபடிக்கு ஆட்கடத்தல்காரர்களால் அனுப்பப்படும் Ransom notes மாதிரித் தான் அவை இருந்தன.

தமிழ் எழுத்துக்களை ஒரே ஒரு அச்சகம் மட்டும் வைத்து ஏகபோகமாக தமிழர்களுக்கு சஞ்சிகைகள், புத்தகங்கள் அச்சிட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு தமிழர்களுக்கு அந்த தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருக்கவில்லை.

அப்பிள் தனது கறுப்பு வெள்ளை 9 அங்குலத் திரை இணைந்த கணனிகளுக்குப் பின்னர், முதன் முதலாக வண்ணம் கொண்ட வெண்ணிலவாக வெளியிட்ட Mac II கணனி ஒன்றை பெரும் தொகைப் பணம் கொடுத்து வாங்கி, அதில் பக்க வடிவமைப்பு செய்ய உதவும் PageMaker மென்பொருளை வாங்கி அதைப் பயன்படுத்துவது பற்றி கற்றுக் கொண்டேன்.

MacUser சஞ்சிகையில் விளம்பரம் போட்டிருந்த பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட்டுக்கு போன் அடிக்க, தனக்கு முப்பது டொலர் பணம் அனுப்பும்படி சொன்னார். அந்தக்காலத்து மூன்றரை அங்குல Floppy டிஸ்கில் தமிழ் எழுத்துக்கள் வந்து சேர்ந்தன.

அதுகூட, அவர் வெறும் கோடுகளால் வடிமைத்த எழுத்து மட்டுமே.

இதற்குள் ஊரில் இருந்த அண்ணனுக்கு எழுத, அவர் தமிழ் தட்டச்சு இயந்திர எழுத்து வடிவமைப்பின் போட்டோ பிரதி ஒன்றை ஏற்கனவே அனுப்பியிருந்தார்.

மூன்று நாட்களில் தமிழில் தட்டச்சிடப் பழகிக் கொண்டேன்.

எனக்கு இலக்கியம் செய்யும் நோக்கம் இருந்திருந்தால், காலாண்டு இதழ் விட்டு நோகாமல் நொங்கு குடித்து, இலக்கியப் பெருந்தகையாகியிருப்பேன். என்ன கொஞ்சம் விஸ்கி செலவாகியிருக்கும்!

சமூகத்தை திருத்த வேண்டும், புரட்சி செய்ய வேண்டும் என்ற நினைப்பிருந்தால், மாத சஞ்சிகை விட்டிருப்பேன். அதுவும் இரண்டு இதழோடு நின்று போயிருக்கும்.

நான் தொடங்க நினைத்தது செய்திப் பத்திரிகை. அதுவும் மாத இதழ்களுக்கு மத்தியில் வார இதழ்.

கொழும்பில் ஆங்கிலத்திலும், யாழ்ப்பாணத்தில் தமிழிலும் பிரபலமான தமிழ் கூறு நல்லுலகின் பத்திரிகையுலக ஜாம்பவான்களுக்கும், எல்லாரையும் போலவே, கனடாவே இறுதிப்புகலிடமாக இருந்தது. அவர்கள் தஞ்சம் அடைந்தது ரொறன்ரோவின் உலகத்தமிழர் புலி ஜாகையின் நிலக்கீழ் அறை தான். அங்கேயிருந்து தலைவர் அடிச்சுப் பறிச்சு மலரப் போகும் தமிழீழத்திற்காக, தமிழர்களின்  தலையையும் பொக்கட்டுகளையும், vacuum பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

நானும் அவர்களைப் போல, அங்கே போய் தஞ்சம் அடைந்திருந்தால், இன்றைக்கு மில்லியனர் ஊடகப்போராளியாக இல்லாவிட்டாலும், தலைவர் என் நேர்மையைக் கண்டு வியந்து, ஏதாவது ஒரு சுப்பர்மார்க்கட்டை என் பெயருக்கு எழுதி வைத்து, தலைவர் திரும்பி வரும்வரைக்கும் அந்த தேசியச் சொத்தை பாதுகாத்து வைத்து, இன்றைக்கும் நான் தாயகம் சுப்பர்மார்க்கட்டில் தாயகக் கடலில் விளைந்த விளைமீனை வெட்டி விற்பனை செய்து கொண்டிருக்கக் கூடும்.

பிழைப்பதற்கு மணியான அந்த ஐடியா எல்லாம் தோன்றாமல், தனியாகவே இதையெல்லாம் செய்து, உள்ளதையும் இழந்து துன்புற, சனி பகவான் மிகவும் அருள்பாலித்தார்.

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்.

எடுக்கிற தெய்வம் கோவணத்தையும் உருவிக் கொண்டு விடும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு.

என் வாழ்நாளில் அவ்வாறான ஒரு எண்ணமே இல்லாமல் இருந்த எனக்கு,  என்னையும் கடைசியில் ஓட்டாண்டியாக்கும் சனிபகவான் கிருபை, இப்படி ஒரு எண்ணத்தை  தோற்றுவித்தது.

கடைசியில் கோவணாண்டி என்றதும் தான் ஞாபகம் வருகிறது.

தலைவரும் நானும் ஒரே ராசி.

தாயகம் வெளிவந்து புலிகளுக்கு தலையிடியாகியதால், அதற்கு போட்டியாக தமிழ்த் தேசியத்தை முண்டு கொடுத்து நிமிர்த்த, ஆங்கிலப் பத்திரிகை ஜாம்பவான் ஆரம்பித்த பத்திரிகையின் முதல் இதழ் தலையங்கமே…

‘கேட்டையில் பிறந்தவன் கோட்டையைப் பிடிப்பான்’ என்பது தான்.

தலைவரைப் போன்றதொரு முடிவு வராமல் போனதற்கு, நான் கேட்டையில் பிறக்காததும் காரணமாக இருக்கலாம்.

முழுநேர வேலையும் செய்து கொண்டு இதெல்லாம் சாத்தியமா என்ற சந்தேகம் எல்லாம் இல்லாதபடிக்கு எனக்கு தன்னம்பிக்கை இருந்தது.

ஈழத்தின் தலைசிறந்த பத்திரிகை ஜாம்பவான்களுடன், ஜவான்கள், அம்பு, சேனை, தொண்டரடிதடிப்பொடிகள் என்றெல்லாம் வைத்திருந்த புலிகள் கூட நினைத்துப் பார்க்காத வார இதழை ஆரம்பிக்கும் அளவுக்கு!

அத்துடன், மற்றவர்களில் தங்கியிருந்தால், அவர்கள் எப்போதுமே என்னை பணயக் கைதியாக்கலாம் என்பதால், எல்லாவற்றையும் நானே கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு இருந்தது. தட்டச்சிடுவதற்கும், வடிவமைப்பதற்கும், எழுதுவதற்கும், வினியோகிப்பதற்கும் மற்றவர்களில் தங்கியிருந்தால், அவர்கள் எந்த நேரமும் என்னைக் காலை வாரலாம் என்ற எண்ணம், இந்த யாழ்ப்பாணிகளுடன் பிறந்து வளர்ந்ததால் ஏற்பட்டிருந்தது.

செய்திகளைப் பெறுவதும் இன்றைய நிலை போல இல்லை. BBC, Veritas போன்றன கூட, இலங்கைக்கே தங்கள் அலைவரிசையை இலக்கு வைப்பதால், இங்கே அவற்றைக் கேட்கவும் முடியாது. இதற்காக பெரும் செலவில் உலக சிற்றலை வரிசைகளை இழுக்கக் கூடிய வானொலி ஒன்றை வாங்கிக் கூட முயற்சித்துப் பார்த்தேன். வேலை செய்யவில்லை.

இலங்கையில் இருந்து வரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் தவிர வேறு எந்த மூலமும் இல்லாமல், தொடங்கிய முயற்சி அது. அந்த நேரம் கணனிகளுக்கு America Online போன்ற சேவைகளே இவ்வாறான செய்திகளை பெறக்கூடிய மூலமாக இருந்தது. அவ்வாறான ஒரு சேவையான Compuserve மூலமாக AP, Reuter செய்திகளைப் பெறக் கூடியதாக இருந்தது. அப்போதும் 300 BPS வேகத்துடன் தொலைபேசியில் இணைத்துத் தான் தொடர்பு கொள்ள முடியும். நான் 2400 BPS விலைகூடிய Modem வாங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். தற்போது அதை விட, லட்சம் மடங்கு வேக Modemம்கள் சாதாரணமாகி விட்டன.

தாயகம் என்ற பெயர் பத்திரிகைக்கு வைத்ததற்கு ஏதும் காரணங்கள் உண்டா?

பத்திரிகைக்கு தாயகம் என்ற பெயர் வைத்துக் கொண்டேன். கனடாவும் எங்களுக்கு ஒரு தாயகம் தானே என்ற எண்ணத்தில். அந்தப் பெயருடன் டெலோ அவ்வப்போது பத்திரிகை விட்டதாக பின்னர் தான் அறிந்தேன்.

இலங்கையில் இருந்த காலத்தில், அமெரிக்காவில் In Search of Excellence என்ற புத்தகம் பெரும் விற்பனை கண்டிருந்தது. அது பற்றி சஞ்சிகைகளில் வாசித்திருக்கிறேன். வர்த்தகத் துறையில் வெற்றி பெற்ற பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணிபுரிவோரைப் பேட்டி கண்டு எழுதிய புத்தகம். அதை கனடா வந்த பின்னால் வாசித்தும் இருக்கிறேன்.

கனடாவில் ஏற்கனவே வந்த தமிழ் பத்திரிகைகள் பிரசாரத்திற்கு பயன்பட்டதால், தமிழர்கள் உண்மையை அறிய வேண்டும் என்ற கருத்தில், In Search of Truth என்ற கருத்தில், ‘உண்மையைத் தேடி’ என்ற தாரக மந்திரத்தை தேர்ந்தெடுத்து, நடுநிலைப் பத்திரிகை என்று குறிப்பிட்டிருந்தேன்.

வெறும் விளம்பரங்களை நம்பிய பிழைப்பாக அதை நினைக்காமல், உண்மைச் செய்திகளை மகாஜனங்களுக்கு வழங்க வேண்டும் என்ற அந்த நினைப்பு என்னுடைய பின்னணிகளால் வந்த ஆளுமையின் பாதிப்பு தான்.

தமிழர்களின் அடையாளமாக, வணங்கி பொங்கலிடும் சூரியனைக் கருத்தில் கொண்டு சூரியனையும், குடியேறிய இடமான கனடாவின் அடையாளமான மேப்பிள் இலையையும் கொண்ட வடிவமைப்பு ஒன்றையும் செய்திருந்தேன். அந்த நேரம் ஏதோ நம்மாலானது!

சிறுவயதில் ஈழநாட்டிலோ எங்கோ, ஏடிட்டோரியல் என்பது தமிழ்ச் சொல் என்று வாரியார் சொன்னதாக வந்து, அதை என் அண்ணன் எனக்கு சொல்லியிருந்த ஞாபகத்தில், ஆசிரியர் தலையங்கத்திற்கு ஏடு இட்டோர் இயல் என்ற பெயரும் வைத்து, அது ‘காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!’ என்று காலத்தின் மீது பெரும் சுமையைச் சுமத்தும் தமிழ் ஊடகவியலாளர்கள் போல இல்லாமல், கருத்துச் செறிவானதாக, நீண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்த நேரம் நான் வாசித்த Toronto Sun ல் வரும் வாசகர் கடிதங்களுக்கு, ஆசிரியர்கள் நகைச்சுவையாக ஒரு வரியில் பதில் ஒன்றை அடைப்புக்குறிக்குள் இடுவார்கள். எனக்கு என்னவோ அது பிடித்துக் கொண்டது. எனவே, செய்திகளுக்கும் கீழே அவ்வாறான ஒரு வரிக் குறும்புக் குறிப்பு ஒன்றைப் போட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.

வழமையான, வாசகர்களிடம் இருந்து அன்னியப்பட்ட செய்திப்பத்திரிகையாக இல்லாமல், சுவாரஷ்யமாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு. பின்னர் அது செய்திகளின் மீதான கவனத்தை திசை திருப்பியதால், மூன்றாம் இதழில் அதை நிறுத்தி விட்டேன்.

விநியோகத்தில் என்ன வகையான சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்? 

பத்திரிகை விலைக்கு விற்கப்பட வேண்டும், அதை கொண்டு திரிந்து விற்பதற்கு நேரமில்லாததால், கடைகளில் போட்டு விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஓசியில் கொடுத்திருந்தால், அதன் பெறுமதி பலருக்கும் தெரிந்திருக்காது. புலிகள் வீடு தேடிப் போய், ஓசிப் பேப்பரைக் கொடுத்து கோவணத்தை உருவிய தமிழர்கள் எல்லாம் பிறகு சீட்டுக்காசு எடுத்து ஏவுகணை வாங்க பணம் கொடுத்தார்கள்.

வெளியிட்ட பின்னால், கேட்டுக் கேள்வி இல்லாமல், ஊரோடு ஒத்தோடி வால் பிடிக்கும் மந்தைக்கூட்ட அறிவுக்கொழுந்துகளுக்கு, ‘உதயசூரியன் எண்டா, கூட்டணிப் பத்திரிகையோ?,  அதென்ன நடுநிலை?,  உண்மையை நீர் எங்க தேடுகிறீர்? உமக்கு ஆசிரியர் தலையங்கம் எண்ட தமிழ் தெரியாதோ? அதென்ன செய்திக்கு கீழ உம்மட கருத்து? உமக்கு பேப்பர் அடிக்க ஆர் காசு தருகினம்?’  என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுடன், ‘அப்ப உம்மட தீர்வு என்ன?’ என்ற புத்திசீவிகளுக்கும் விளக்கம் சொல்ல வேண்டி வந்ததெல்லாம் பெருங்கதை.

பத்திரிகை விடும் எண்ணத்தில், வந்த மற்ற பத்திரிகைகளில் இருந்த விளம்பரங்களைப் பார்த்து அந்த வியாபார நிலையங்களுக்கு எல்லாம், அவர்களுக்கான விளம்பரங்களை வடிவமைத்து, கொண்டு போய், ‘நான் ஒரு பத்திரிகை தொடங்கப் போகிறேன். உங்களுடைய விளம்பரங்களை இப்படிப் போடலாம்’ என்று கேட்ட போது, என் தோற்றத்தைப் பார்த்தோ என்னவோ, அவர்கள் என்னால் ஒரு பத்திரிகையை நடத்த முடியும் என்பதை நம்ப மறுத்தார்கள். யேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நம்ப மறுத்த தோமாஸ் கூட அப்படி மறுத்திருக்க மாட்டார்.

எனவே முதல் இதழ் விளம்பரம் எதுவும் இல்லாமல் தான் வந்தது.

பத்திரிகையை Web முறையில் நியூஸ் பிரிண்டில் மலிவாக அச்சிடலாம் என்ற விபரம் கூடத் தெரியாமல், பக்கத்தில் இருந்த அச்சகம் ஒன்றில் பெரும் தொகைப் பணம் செலவிட்டு முதல் பிரதியை வெளியிட்டிருந்தேன்.

பத்திரிகை குறித்த வாசகர் கருத்தை அறிய தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்திருந்தேன்.

பத்திரிகை நடத்த வசதியாக பின்நேர வேலை இருந்தது. எனவே காலையில் பத்திரிகையை அச்சிட்டு, மறுநாள் வினியோகிக்கும் எண்ணத்துடன் வேலைக்குப் போய் நள்ளிரவு வீடு திரும்புகிறேன்.

என்னுடைய வீட்டுத் தொகுதியில் வசித்த தமிழர் ஒருவர் செக்கியூரிட்டி கார்ட் வேலை முடிந்து எலிவேட்டரில் சந்தித்த போது ‘அமிர்தலிங்கத்தைச் சுட்டுப் போட்டாங்கள்’ என்றார், ‘அது RAW தான் செய்திருக்கும்’ என்ற இலவச பின்னிணைப்போடு!

அட, சுடச் சுடச் செய்தி போட வேண்டுமே என்று இரவோடு இரவாக கொம்பியூசேர்வில் அசோசியேட்டட் பிரஸ் செய்தியை தேடிப் பிடித்து, அமிர்தலிங்கம் இறந்த செய்தியை இலவச இணைப்பாக ஒரு மஞ்சள் காகிதத்தில் போட்டோ கொப்பி அடித்து, திரும்பவும் கிளிப் அடித்துத் தான் அந்த முதலாவது இதழ் வெளிவந்தது.

அந்த மஞ்சள் பின்னிணைப்பை பார்த்தோ என்னவோ, பின்னர் இலக்கிய சந்திப்பு ஒன்றில் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற ஐரோப்பா வாழ் ஈழக் கவிஞர், தாயகத்தை ‘மஞ்சள் பத்திரிகை’ என்று அழைத்ததாக அறிந்தேன்.

கவிஞர்கள் கவித்துவமாகத் தானே கவிப்பார்கள்!

தமிழர்கள் எல்லாம் IBM கம்பியூட்டரை வாங்கி MS-DOSல், Lotus 123 பழகி முடித்த பின்னால், தூசி படாமல் துணியால் மூடி வைத்த ஒரு காலத்தில்…

 எவரையும் தெரியாமல், தனியாகவே கணனி மூலமாக பத்திரிகை விட்ட எனக்கு…

நான் வாழ்ந்த அதே குடிமனைக் கட்டடத் தொகுதியில் அடுத்த கட்டடத்தில், ஜாகை அமைத்து புலிக்கு பணம் சேர்த்த கலகத் தமிழர் கும்பல் இருந்ததோ, மற்ற கட்டடத்தில் இயக்கங்களில் இருந்து வந்து சஞ்சிகை நடத்தும் எண்ணத்தில் இருந்த ஒரு முன்னாள் போராளிகள் கூட்டத்திற்கு, பிரான்சில் சபாலிங்கம் அண்ணையும், உமாகாந்தன் அண்ணையும் முன்னோடிக் கவிஞனாக்கி, மொன்றியலில் மாத சஞ்சிகை விட்ட ஒருவர், பாலையாவுக்கு நாகேஷ் ‘கத்திமுனையில் இரத்தம், பசாசு முத்தம்’ படக்கதை சொன்ன மாதிரி, தட்டச்சு யந்திரம் வாங்கி சஞ்சிகை விடப் போவதாக கதை சொன்ன விசயமோ… தெரியாது.

பத்திரிகை வெளிவந்து முதலில் வந்த தொலைபேசி அழைப்பு தேடகம் நண்பர்களிடம் இருந்து தான். இவ்வாறான ஒரு பத்திரிகை வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், என்னைச் சந்திக்கவும் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.

‘மீண்டும் சந்திப்போமே!’ என்ற என்னுடைய ஏடு இட்டோர் இயலின் பாதிப்பு அது.

ஆதித் தமிழ் அகதி வந்தேறிகள் வந்திறங்கிய ரொறன்ரோவின் வெலஸ்லி எனப்படும் சென்.ஜேம்ஸ் நகரின் குடியிருப்புத் தொகுதியில் நான் வசித்த கட்டடத்திற்கு அருகில் தான் அவர்களின் அமைப்பு இருந்தது.

அடுத்து வந்தது, அடுத்த கட்டடத்தில் ஜாகை அமைத்து இயக்கத்திற்கு பணம் சேர்த்த புலிவால் கூட்டத்திடம் இருந்து.

மிரட்டும் தொனியில், வழமையான யாழ்ப்பாணிகளின் பாணியில், நீ என்ன கண்டனியோ? என்ற மாதிரி.

அமிர்தலிங்கத்தின் படுகொலை பற்றிய செய்தியின் கீழ், நான் முன்னர் குறிப்பிட்ட குறும்புக் குறிப்பாக ‘வளர்த்த கடாக்களுக்கே பலிக் கடாவோ?’ என்ற ஒற்றை வரிக் குறிப்புத்தான் அந்த வால்களுக்கு கடுப்பேற்றியிருந்தது. அதே புலிப் பாணியில் வெருட்டினால், நான் பயந்து விடுவேன், இல்லாட்டி தம்பிக்கு இருட்டடி போட்டால் விட்டுட்டுப் போடுவார் என்ற எண்ணம்.

நானோ பயமறியா இளம் கன்று. இதெல்லாம் எனக்கு புதிதானவை  தான். நான் யாரோடும் வாக்குவாதங்களுக்கே போகாதவன். இருந்தாலும், இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் கனடா வந்தும் பயப்பட வேண்டுமா என்ற வழமையான கிறுக்குத் தனம்.

இப்போ தானே அகதியாக வந்திருக்கிறேன். இவர்களும் என்னைப் போல, கொஞ்ச நாளைக்கு முன் தான் வந்திருப்பார்கள். இதற்குள் ஊருக்கு வா, கவனிக்கிறம் என்று மிரட்டவா முடியும்?

அந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படக் கூடிய ஆள் மாதிரியும் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இல்லாவிட்டால், ‘உன்ரை அட்ரசை சொல்லு, இப்ப வாறம்.’ என்றெல்லாம் அதே யாழ்ப்பாணப் பாணியில் மிரட்டியிருக்கக்கூடும்.

இருந்தாலும், உந்தக் காய் மற்றவர்கள் மாதிரி மசியிற காய் மாதிரி தெரியவில்லை என்பது புரிந்ததோ என்னவோ, மக்கின்ரோஷ் பற்றிய என் அறிவுப் பெருக்கை அறிந்து கொண்டு அந்த உரையாடல் முடிந்தது.

‘உங்கட கருத்தை எழுதி அனுப்புங்கோ, அடுத்த முறை போட்டு விடுறன்’ என்பதே அந்த மாவீரர்களுக்கு வெற்றிகரமாகப் பின்வாங்குவதற்கு போதுமானதாக இருந்தது.

தேடகம் நண்பர்கள் விடுத்த அழைப்பை ஏற்று பக்கத்துக் கட்டடத்துக்கு போன போது, என் தம்பி ‘முன்பின் தெரியாத ஆட்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தான்;. அங்கே போனபோது பல்வேறு சென்ட்ரல் கொமிட்டி மெம்பர்கள், தலைவர்களின் பொடிகார்ட்டுகள், இடதுசாரிக் கட்சியினர் என்று பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்த பலரை அறிமுகம் செய்தார்கள். முன்பின் இயக்க அரசியல் எதுவும் தெரியாத நான் அவர்களுக்கு ஒரு அதிசயப் பிறவியாக தோன்றியிருக்கக் கூடும்.

பின்னர் என்னிடம் வந்தார்கள். தாங்கள் என்ன வகையான உதவி செய்யலாம் என்று கேட்ட போது, எனக்கு வினியோகம் தான் சிக்கலானது, என் முழுநேர வேலையுடன் அது பெரிய வேலை என்பதால் அதற்கு உதவி செய்தால் நல்லது என்றேன். அப்போது என்னிடம் கைவசம் இருந்த பத்திரிகைகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.

மாலை நேரம், சின்ன யாழ்ப்பாணம் என்று பின்னர் அழைக்கப்பட்ட அருகில் உள்ள சந்திக் கடைகளுக்கு போன போது, வழியில் ஒருவர் போவோர் வருவோரை இடைமறித்து பத்திரிகை விற்றுக் கொண்டிருந்தார். என்னையும் மறித்து பத்திரிகை வாங்குமாறு கேட்டார். வேண்டாம் என்ற போது, ‘என்ன அண்ணை, நீங்கள் தமிழ் தானே!?’ என்று கேட்க, சிரித்துக் கொண்டே ‘நான் தான் உந்த பத்திரிகை ஆசிரியர்’ என்றேன்.

இதற்குள் அமிர்தலிங்கம் கொலை தொடர்பாக, கூட்டணியினர் ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். அதற்கு நானும், முதலில் எனக்கு போன் அடித்த தேடகம் நண்பரும் போனோம். போகும்போது, அங்கு போகின்றவர்கள் மீது கோபப் பார்வை வீசியவாறு ஒரு காடையர் கூட்டம் நிலக்கீழ் தொடர்வண்டி  நிலையத்திலிருந்து மண்டபம் வரை அணிவகுத்து நின்றது. அதே போல மண்டபத்திலும், பேசுகின்றவர்கள் புலிகளுக்கு எதிராக எதையும் பேசிவிடாதபடிக்கு பின்னால், வில்லனின் அடியாட்கள் மாதிரி தலையைச் சரித்தவாறே இன்னொரு கூட்டம் நின்றது.

இந்தக் கூட்டத்திற்கு பயந்து பேச்சாளர்கள் அடக்கியே வாசித்தனர். ஒரு சட்டத்தரணி ‘இளைஞர்களே, உங்களைத் தான் நம்பியிருக்கிறோம்’ என்று சமரசம் செய்ய முயன்றார். இன்னொரு சட்டத்தரணி ‘என் தலைவன் இறந்து விட்டான், அவனை நினைத்து அழுவதற்கான உரிமையைத் தாருங்கள்’ என்று ஒரு பிச்சைக்காரனைப் போல யாசித்தது என் மனதை விட்டு இன்னமும் அகலவில்லை.

இந்தக் கொலைவெறிக் காடையர் கூட்டத்திற்கு அடி பணியக் கூடாது என்ற ஓர்மத்தை எனக்குத் தந்த கணம் அது. பின்னர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது, அழ முடியாமல் இவர்கள் விக்கித்து நின்ற போது, ‘என் தலைவன் இறந்து விட்டான். அவனை நினைத்து அழுவதற்கான உரிமையைத் தாருங்கள்’ என்ற பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறேன்.

பக்கத்து கட்டடத்தில் இருந்து புலிக்கு காசு சேர்த்து சுருட்டி, விரட்டப்பட்டு, தனியே பத்திரிகை தொடங்கிய ஊடகவியலாளர் ஒருவர் தற்போதும் இருக்கிறார். அவர் முன்பு கூட்டணிக் கூட்டங்களில் பேசியவர் என்றும் அவர் வீட்டு சாமியறையில் அமிர்தலிங்கத்தின் படமும் வரவேற்பறையில் பிரபாகரனின் படமும் இருக்கும் என்று அவரோடு மேடைகளில் அண்ணா, தம்பி என்று கட்டியணைத்து முத்தமிடும் இன்னொரு பத்திரிகையாளர் எனக்கு சொன்னார்.

நேரடியாக என்ன வகையான அச்சுறுத்தல்கள் உங்களுக்கு வந்தன?

அந்தக் காலத்தில் போன் அடிப்பவர்களின் பெயர்கள் எங்கள் போன்களில் தெரியாததால், தொலைபேசிப் போராளிகள் அடிக்கடி நள்ளிரவில் போன் அடித்து இன்மொழி பேசுவார்கள். உயர்வகுப்பு வரைக்கும் தூஷணம் பேசியறியாத இந்த கடவுளின் பிள்ளை, ‘அண்ணை, நாங்கள் மரியாதையாத் தானே கதைக்கிறம், நீங்கள் ஏன் இப்பிடி பேசுறியள்?’ என்று கூறும் அளவுக்கு தூஷணம் கற்றுக் கொண்டது.

இப்படி தாயகம் பெரும் தலையிடியாக வந்ததைத் தொடர்ந்து கனடாவில் தாயக்தை தடை செய்கிறோம் என்று கடைகளுக்குப் போய், இயக்க அறிவித்தல் என்று மிரட்டியிருக்கிறார்கள். சில கடைகளில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பத்திரிகை வினியோகிக்கச் சென்ற என் தம்பி தாக்கப்பட்டான்.

இதையடுத்து தேடகம் நண்பர்கள் உலகத்தமிழர்களிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது இருவர் வந்தார்கள். ஒருவர் உலகத்தமிழர் தலைவராக இருந்தவர். பிரபாகரனின் ஊரைச் சேர்ந்தவர். அவர்கள் எங்கள் உரையாடல்களை பதிவு செய்து வன்னிக்கும் அனுப்பினார்கள்.

வந்தவர்களில் ஒருவர் ‘நீங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்’ என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் எனக்குத் தெரிந்து வந்த காலத்திலிருந்து எந்த வேலையும் செய்யாது, இயக்கத்திற்கு வேலை செய்வதே வேலையாகக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நாளில் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த தலைவரைப் பற்றி ஊரில் இருந்த தலைவருக்கு தகடு கொடுத்து அவர் பதவி விலக்கப்பட்டார். ‘போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள்’ என்றவர், தற்போது வங்குரோத்தான ஒரு விற்பனை நிலையத்தையும் சில கட்டடங்களையும் தலைவரிடம் ஒப்படைப்பதற்காக பத்திரமாக வைத்திருக்கிறார். தேசியச் சொத்துக்களான அவற்றை மக்களிடம் ஒப்படைக்குமாறு வரும் மொட்டை நோட்டீஸ்களிலும் அவர் குணசித்திரவேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு தடவை, தமிழ்க் கடைகள் தாயகத்தில் விளைந்த பொருட்கள் என்று விளம்பரங்களில் போடுவதைக் கிண்டல் அடித்து, தாயகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிரனேட்டுகள், ஏகே 47கள் மலிவாகக் கிடைக்கும், நாட வேண்டிய ஒரே இடம் இங்குள்ள பெரும் சந்தியொன்றில் உள்ள மரத்தடி என்று நகைச்சுவை விளம்பரம் ஒன்றைப் போட்டிருந்தோம்.

இந்த அறிவாளிகள் அந்தப் பத்திரிகையைக் கொண்டு போய் பொலிஸ் நிலையத்தில் காட்டியிருக்கிறார்கள். பொலிசாரும் என்னைத் தொடர்பு கொண்டு அது உண்மையா என்று கேட்டார்கள். நான் அதன் நகைச்சுவைத் தன்மையை அவர்களுக்கு விளக்க வேண்டியதாகி விட்டது. தாங்கள் அந்த விளம்பரத்தை நம்பி அந்தப் பகுதிக்கு இரகசியப் பொலிசாரையும் அனுப்பியதாக அவர்கள் கூறினார்கள்.

இதைவிட, கனடிய உளவுப் பிரிவுக்கும் இவர்கள் தகவல் கொடுத்து என்னை இரண்டு தடவைகள் விசாரித்தார்கள். அவர்களுக்கு என்னை விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை. எந்தப் பின்னணியும் இல்லாத ஒருவன் பத்திரிகை நடத்த விரும்புகிறான் என்பது அவர்களுக்கு புரிய முடியாத ஒன்றாக இருந்தது. இதை விட, எனது ரஷ்யப் பெயர் உண்மையானதா என்ற ஆராய்ச்சி வேறு. நான் ஏதோ கம்யூனிசப் புரட்சிக்கு வித்திடுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவைக் குறிக்கும் பெயரெச்சமான Intelligent க்கும். உளவு பார்ப்பதைக் குறிக்கும் பெயர்ச் சொல்லான Intelligence க்கும், இரு சொற்களும் ஒரே அடியிலிருந்து தோன்றியிருந்தாலும், எந்த சம்பந்தமும் இல்லாதிருப்பதை நான் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

இந்த உளவுப் பிரிவுக் கண்காணிப்புகளால் என் அகதிக் கோரிக்கைக்கான விசாரணை தள்ளிக் கொண்டே போனதால், ஊரில் இருந்த என் காதலியும் தன்னை மறந்து விடுமாறு கடிதம் வேறு எழுதியிருந்தாள்.

பிறகென்ன!? ஒரு நாள் அழுது விட்டு, அதைப் பற்றி தாயகத்தில் ஒரு கதையும் எழுதினேன்.

இந்த தாயகம் தடை விவகாரத்தின் போது, ஒருநாள் தேடகம் நூல் நிலையத்திலிருந்து நானும் தேடகம் நண்பர் ஒருவரும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போது, தமிழ்க் கடை ஒன்றில் தடை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு நின்ற கும்பல் ஒன்று எங்களை யாரோ அடையாளம் காட்ட, ஓடி வந்தது. வழியில் மறித்து எங்களை அடிப்பது போல கத்திப் பேசி, வழமை போல கேள்விகளுக்குப் பதில் இல்லாமல், ‘மாத்தயாவிட்ட இருந்து ஓடர் வந்திருக்கு. நீங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துறியள். நாங்கள் உங்கட பேப்பரை தடை செய்யிறம்’ என்று குமுறிக் கொண்டே போய் விட்டது.

பின்னர் கொஞ்ச நாளில் மாத்தயா புலிகளால் கைது செய்யப்பட்டார். மாத்தயாவின் கைது அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் குழம்பி கிளர்ந்தெழலாம் என்ற எண்ணத்தில், ஆங்கிலப் பத்திரிகை ஜாம்பவான் நடத்திய பத்திரிகையில் மாத்தயாவும் பிரபாகரனும் கட்டியணைத்து கண்ணீர் விட்டார்கள் என்று, ஞானதிருஷ்டியால் அறிந்த சஞ்சயன் பெயரில் புலன் பெயர்ந்த கண் கெட்ட திருதராட்டினன்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்த செய்திகளின் நோக்கம், அதில் உள்ள ஓட்டைகள் பற்றி எல்லாம் நாங்கள் தாயகத்தில் போட்டு உடைத்துக் கொண்டிருந்தோம்.

இப்படியாக தாயகத்தை தடை செய்த மாத்தயாவின் அவலநிலை பற்றி தாயகம் தான் எழுத வேண்டிய நிலை வந்தது.

எங்களை வழியில் மறித்து மிரட்டியவர்களில் ஒருவர் திரும்பவும் ஊருக்குப் போய் இயக்கத்தில் சேர்ந்து, மாத்தயாவோடு இருந்ததால், கைது செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

மாத்தயா விவகாரம் தலைவர் அடிச்சுப் பறிக்கப் போகும் ஈழத்திற்கு பங்கமாகி விடக் கூடாது என்று, கற்பனைக் கதை எழுதிய ஆங்கிலப் பத்திரிகை ஜாம்பவான் கொஞ்ச நாளில் புலிகளால் பேஸ்போல் மட்டையால் தாக்கப்பட்டு கால் முறிக்கப்பட்டது.

அனோஜன் பாலகிருஷ்ணன்

தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

1 Comment

  1. மிக முக்கியமான பதிவு. தமிழ் மக்கள் தேசிய இன விடுதலைக்கு முதல், தமிழ் மக்களுக்குள் சமத்துவ வாழ்வினை உறுதிப்படுத்தும் போராட்டத்தினை முதல் தொடங்கி இருக்க வேண்டும் எனும் முன் நிபந்தனையை முதலில் செய்திருக்க வேண்டும் என்பதை தெளிவாக முன்னிருத்தும் வாக்குமூலம் இது! இந்த நேர்காணலைப் படித்த பின் பல விடயங்களை பேச வேண்டும் என்கிற உந்துதல் வருகிறது! இதுவே ஒரு ஆரோக்கியமான மறுபரிசீலனைக்கான வாய்ப்பை திறந்து விடுவது இங்கு கவனிக்கத்தக்கது! ஆனாலும் இந்த மறுபரிசீலனை நடக்குமா என்பதே கேள்விக்குரியதே.., விரிவாக எழுதப்பட வேண்டிய பல காலகட்டங்கள், மாறும் அரசியல் போக்குகள், மாறா சாதிய ஒடுக்குமுறையும் புறக்கணிப்பும் , தாயக, புகலிட அரசியல் ,சமூகச் சூழல்கள், முள்ளிவாய்க்காலுக்கு முன்பு, பின்பு என பல விடயங்கள் உள்ளன.நேர்காணல் சட்டென முடிந்த மாதிரி இருப்பது , “பந்தி முடிந்தது, பசிதான் தீரவில்லை” என்பது போல் இருந்தது.

    ஜோர்ஜ் குருஷோவ் எனப்படும் ஒரு சமூக மனிதனை, “ தாயகம்” பத்திரிகைப் பணிக்கு பின்னால் அறிந்து கொள்ள, சமூக ஆர்வலர்களுக்கு இந்தப் பதிவுகள் முக்கியமானதும், பயனுள்ளதுமாகும்!

உரையாடலுக்கு

Your email address will not be published.