/

மு. தளையசிங்கத்தின் எழுத்துக்களை விளங்குதலென்பது அவரது காலத்தை விளங்குதலே ஆகும்: தேவகாந்தன்

மறைந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்துக்களை சமகாலத் தமிழ் வாசகனுக்குப் பரிச்சயமாக்குதலென்பதும், புதிய சூழ்நிலைமைக்கேற்ப அவர்களது படைப்புக்களை விமர்சனார்த்தமாக அணுகுதலென்பதும், இலங்கைத் தமிழ் இலக்கியத்தையும் புலம்பெயர் இலக்கியத்தையும் உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லும் விழுமிய நோக்கத்துக்கு  அனுகூலமாகக் கூடுமாயினும், அப் பணி மிகச் சிரமமானதென்பதில் ஐயமில்லை.

இந்த இலக்கிய நோக்கினை  நிறைவேற்றுதல் நாளதுவரையில்லாத ஒரு  கோட்பாட்டுத் தளத்திலேயே இயலுமாயிருக்குமென்பதை முதலில் கருத்திலிருத்தல்வேண்டும். தற்கால விமர்சனவெளியின் பல்திசை விகசிப்பு  இச் செயற்பாட்டின் சிலாக்கியத்தை முன்னறிவிப்புச் செய்வதாகக் கொள்ளமுடியும். அதாவது சோஷலிச யதார்த்தம், விமர்சன யதார்த்தம், பின் அமைப்பியல் அல்லது பின் நவீனத்துவமென்ற  புதிய விமர்சனக் கோட்பாடுகளினூடான ஆய்வின் வாசல் திறப்பை காலம் சாத்தியமாக்கியிருக்கிறது. அவ்வாறன்றி, ஆழ் விமர்சனமற்ற மரபார்ந்த வழியிலான மீள்வாசிப்பென்பது அதுவரையில் கண்டிருந்ததை மீளக்  காணுதலாகவும் நினைவூட்டலாகவும்தான் அமைந்துபோக முடியும்.

அதனால் மு.தளையசிங்கத்தின் எழுத்துக்களைத் துல்லியமாய் இனங்காட்டக்கூடிய கருதுகோட் தளங்களில் வைத்து இவ்வுரைக்கட்டு தன் கவனத்தைக் குவிக்கும். இது தளையசிங்கத்தை மட்டுமன்றி அவரது காலத்தை விளங்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கும். ஒருவேளை மு.தளையசிங்கம் உட்பட அக் கால தீவிர படைப்பாளிகளினால்கூட நிரப்பப்பட முடியாத இருள்வெளியாகவே அக் காலம் இருப்பதான மெய் அப்போது வெளித்தெரிய நேர்ந்தாலும்,  அவ்வாறு இனங்காணப்பட்டதை அதன் பெறுபேறாகக் கொள்வதுகூட ஒருவகையில் இலக்கிய விமர்சனத்திற்கு அனுகூலமானதாகவே இருக்கும்.

1.

மு.தளையசிங்கத்தின் புனைவெழுத்துக்களைவிட அவரது விமர்சனச் சார்புள்ளதும், இலங்கை இலக்கிய வரலாறு தழுவியதும், மெய்யுள் அல்லது மெய்முதல் வாத விளக்கங்கள் கொண்டதுமான கட்டுரைகளையே ‘மு.தளையசிங்கம் படைப்புகள்’ தொகுப்பு அதிகமாகவும் கொண்டிருக்கின்றதென்பதும், அவையே அவரது பிற இலக்கிய வகைமைகளைவிட  ஆழமானவையென்பதும் கவனிக்கப்படவேண்டும். அவரது புனைவுகளை எடுத்துக்கொண்டால் அவை நாவல், குறுநாவல், சிறுகதை, நாடகம், கவிதை ஆகியனவாகவுள்ளன. படைப்பின் தரத்துக்கு உயரும் ஓரிரு விமர்சனங்களும் தொகுப்பில் உளதாவதும் மெய்யே. கவிதை, நாடகமாதிய வகைப்பாடுகளை தொகுப்பில் அவற்றின் வகையின அடையாளப்படுத்தலுக்கான இணைப்புகளெனக் கருதி ஒதுக்கிவிட்டால், மீதியான எழுத்துக்கள் அவரது தீவிரமான எழுத்தின் அடையாளங்களாகின்றன. அவற்றின்மீது தனிக் கவனம் செலுத்துவது அவசியமானது.

1935 இலிருந்து 1973வரையாக முப்பத்தெட்டு ஆண்டுகளேயான தன் குறுகிய வாணாள் காலத்தில் அத்தனை அடர்த்தியும் ஆளுமையும் கொண்ட பக்கங்களைப் படைத்த தளையசிங்கத்தின் திறன் ஒரு தீவிர வாசகனை பிரமிக்க வைப்பது.  

அவரது மொத்த எழுத்துக்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல மூன்று பெரும் பாகங்களாக வகுத்துவிட முடியும். முதலாவது சிறுகதை நாவல், குறுநாவல், கவிதை விமர்சனம் ஆதியன. இரண்டாவது வகையாக அவரது மதிப்பீடுகள், விளக்கக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆதியனவற்றை எடுத்துக்கொள்ளலாம்.  மூன்றாவது வகைமைக்குள் அவரது சிந்தனை வெளிப்பாடுகளைக்கொண்ட மெய்யுள் கட்டுரைகள் அடங்குகின்றன.

2.

படைப்புகள் மற்றும் மதிப்பீட்டுக் கட்டுரைகளைவிடவும் மு.தளையசிங்கத்தின் மெய்யுள் சித்தாந்தமென்பது அவரது முக்கியமான வெளிப்பாடும், அவரின் அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கான சாங்கையும் கொண்டதென்ற  வகையில் அதிலிருந்தே  இவ்வுரைக்கட்டை ஆரம்பிப்பது பொருத்தமானது.

அவரது மெய்யுள் சித்தாந்தமானது அவர் சமூகச் செயற்பாடுகள் காரணமாக பொலிஸினால் கைதுசெய்யப்பட்டு விடுதலையான நாளிலிருந்து 1973இல் அவர் இறப்பதற்கு முன்பான சுமார் இரண்டு வருஷ காலத்தில் எழுதப்பட்டதென்றும்,  1974இல் அவர் இறந்த பின்னர் நூலாக்கம் பெற்றதென்றும் ‘மு.தளையசிங்கம் படைப்புக’ளின் தொகுப்பாசிரியர் மு.பொன்னம்பலத்தின் நூற் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. அது ஒரு சித்தாந்தத்தை முன்னிறுத்தி, விவாதங்களை எதிர்கொண்டு, அவற்றின் ஐயங்களை விளக்கி பரவலான அறிமுகத்திற்கும் பயில்வுநிலைக்கும் கொண்டுவர போதுமான காலமில்லை.

அந்த இரண்டாண்டுகளிலேயே அச் சிந்தனை அவருள் வேர் கொண்டது என எண்ணவும் தேவையில்லை. ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற அவரது இரண்டாம் கட்ட சிறுகதைகள் பிறந்தபோது அவரது எண்ணக் கருவில் ஒரு தேடலின் அடையாளமாக, மெய்யுள் சிந்தனையின் வெளிப்பாடு தொடங்கிவிட்டது எனச் சொல்லமுடியும். விஞ்ஞானம் – மெய்ஞ்ஞானம் ஆகியவற்றிற்கிடையிலான முரணாக முடியும் அக் கதை, துல்லியமாக மெய்யுளின் தொடக்கத்தையே சுட்டுகிறது. எனினும் ஓர் ஆத்மீக நெறிப்பட்ட சிந்தனையின் தர்க்கமுறைமையிலான ஸ்தாபிதத்திற்கு போதுமான காலத்தையோ விரிவையோ அது கொண்டிருக்கவில்லையென்பது நிஜம்.

இலங்கையில்போலவே தமிழ்நாட்டிலும் எண்பதுகளின் நடுப்பகுதியில்கூட மு.தளையசிங்கத்தின் மெய்யுள் சித்தாந்தம்பற்றி பெரிதான அறிதல் இருந்திருக்கவில்லை.  இலங்கை எழுத்தாளர்களாக அவர்கள் அதிகம் அறிந்திருந்ததும் கே.கணேசலிங்கன், செ.யோகநாதன், கே.டானியல், காவலூர் ஜெகநாதன் போன்றோராகவே இருந்தது. இது எண்பத்தைந்தளவிலான நிலையெனில், தொண்ணூறளவில்தான்  ‘இலக்கு’ வட்ட கருத்தரங்கில்  சுந்தர ராமசாமி வாசித்த கட்டுரையினாலும், பின்னர் அது  சமுதாயம் பிரசுரமாக ‘மெய்யுள்: ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீடாக வெளிவந்ததினாலும் சிறிது அறிமுகத்தை அடைகிறது.

அ.யேசுராசா மூலம் தனக்குக் கிடைத்த ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘மெய்யுள்’, ‘போர்ப் பறை’ ஆகிய மூன்றினதும் அடியாக அக் கட்டுரையை தான் எழுதியதாக சுந்தர ராமசாமியும் குறிப்பிட்டிருந்தார். இப்போது புரிதலின் தேவையுள்ள ஓர் அம்சமாக ‘மெய்யுள்’ சிலபேரிடத்திலாவது ஆகியிருந்தது. அது அவரது ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைத் தொகுப்பின் அறிமுகத்திற்கான வாசலைத் திறந்தது. ஆயினும் பெரிதான பிரஸ்தாபங்கள்  வாசகர்கள் மத்தியில் கிளர்ந்துவிடவில்லை.

பின்னால் புத்தாயிரத்தையொட்டி தமிழ்நாட்டு இலக்கியவுலகத்தின் கவனம் குவிந்த  ஊட்டி கருத்தரங்கு நடந்தது. ஊட்டியில் மு.தளையசிங்கம்பற்றிய மூன்று நாள் கருத்தரங்கினை ஜெயமோகனும் அவரது நண்பர்களும் நாராயண குருகுலத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அக் கருத்தரங்கிற்கு சென்னையிலிருந்த நானும், வெங்கட் சாமிநாதனும் சென்றிருந்தோம். செந்தூரம் ஜெகதீஸ், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகரன், கலாநிதி எம்.வேதசகாயகுமார், நிர்மால்யா மற்றும் குருகுலத்தைச் சேர்ந்த சுவாமி விநய ஆகியோர் கலந்துகொண்டனர்.

அக் கருத்தரங்கு முக்கியமான சில பதிவுகளைச் செய்தது. குறிப்பாக மு.தளையசிங்கத்தை இலக்கிய வட்டத்துள்ளிருந்து முகிழ்த்த ஒரு ஆன்மீகச் சித்தாந்தவாதியாக தமிழ்நாட்டில் அறிமுகமாக்கியது. அவரது சிறுகதைகள், நாவல், விமர்சனங்கள்பற்றிய பரந்த அவதானத்தையும் அது ஏற்படுத்தியது. முற்போக்கு அணி சாராத முக்கியமான படைப்புகளாக அவரது ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைகள் அடையாளம் காணப்பட்டன. இலங்கை இடதுசாரிப் படைப்பாளிகள்மீதான காட்டமான அவரது நிலைப்பாடு விரிவான பேசுபொருளாகியது.

பல வாசிப்பு அனுபவப் பகிர்வுகளும், அவரது சாதியெதிர்ப்பு வினைகளின் பதிவுகளுமாக அமர்வு இருந்தபோதும், மெய்யுள் சிந்தனைபற்றிய ஆய்வையும், அவரது தொகுப்பின் சில கதைகள்பற்றிய ஆழமான விமர்சனத்தையும் நிகழ்வில் முன்வைத்திருந்தது ஜெயமோகனது கட்டுரை. அது விரிவானது. இந்திய சிந்தனை மரபோடிணைத்து மெய்யுளின் சிறப்பினை, போதாமையினை தன் ஆழ்ந்த பார்வையில் முன்வைத்திருந்தது. எம்.வேதசகாயகுமாரின் கட்டுரையும் மு.தளையசிங்கத்தின் ‘யுதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைகளை மிக ஆழமான வாசிப்புக்கு எடுத்துக்கொண்டிருந்தது.

சுந்தர ராமசாமியின் ‘இலக்கு’ கருத்தரங்க கட்டுரை அப்போது வெளிவந்துகொண்டிருந்த சுந்தர ராமசாமியின்  ‘காலச்சுவ’ட்டில் வெளிவந்ததாக ஞாபகம். அது இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது. ஆனால் ‘மு.தளையசிங்கம் படைப்புக்க’ளின் தொகுப்பு நூலில் அக் கட்டுரையின் முதலாம் பகுதியே முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. இரண்டாவது பகுதி சில பத்திகளுடன் முடிந்துபோகிறது. முதல் பகுதி தளையசிங்கத்தின் படைப்புகள் பற்றியதாய் இருக்க, இரண்டாம் பகுதியே அவரது மெய்யுள் சிந்தனைபற்றிய விமர்சனத்தினைக் கொண்டிருந்தவகையில் அதுவே கட்டுரையின் முக்கியமான பகுதியெனத் தோன்றுகிறது. அந்தப் பகுதியிலேயே அது ஊதோப்பிய (Utopian) கற்பனைக்கு நிகரானதென்ற சுந்தர ராமசாமியின் அபிப்பிராயம் வெளிப்பட்டிருந்தது. ஜெயமோகன் அதை மறுத்து அது மீிமெய்யியல் சார்ந்த அகவயத் தரிசனமாகவே அமைகிறது என தன் கட்டுரையில் கூறியிருப்பார்.

3.

மெய்யுள் என்பதன் விரிவு ‘மெய் முதல் வாதம்’ என்பதாகும்.  பெயர் விவரிப்பிலும் மு.தளையசிங்கத்திற்கு சில குழப்பங்கள் இருந்ததை அவரது கட்டுரைகளில் காணமுடியும். அது இங்கு பிரதானமில்லை. முதலாளித்துவத்தினது கருத்து முதல் வாதத்திற்கும், பொதுவுடைமையின் பொருள் முதல் வாதத்திற்கும் தேவையான மெய்யை அதாவது சத்தியத்தை அளிக்கும் வல்லபம் வாய்ந்ததாய் மெய்யுள் இருக்கிறது என்கிறார் மு.தளையசிங்கம்.

மூன்றாவது பக்கமொன்றின் அவசியத்தை மரபிலக்கிய – முற்போக்கிலக்கிய விவாதத்தில் அழுத்தும் தளையசிங்கம், அதுபோலவே கருத்து முதல் – பொருள் முதல் வாத சித்தாந்தங்களின் இருமைக்கும் தேவையான ஒரு மூன்றாவது பக்கமாக மெய் முதல் வாதத்தைக் காண்கிறாரென நம்பமுடியும்.  இருமை எதிர்வுகள் இரண்டில் எந்த ஒன்றையுமே மு.தளையசிங்கம் நிராகரிக்கவில்லை, மாறாக உள்வாங்குகிறார் என்பதிலும் வாசக கவனமிருக்கவேண்டும். எந்த புறநிலையான ஆதாரத்தையும் தர்க்கபூர்வமான விவாதத்தையும் இதில் தளையசிங்கம் நிகழ்த்தவில்லை. அவரது அகநிலை விருப்பத்தினதும் நம்பிக்கையினதும் அடிப்படையில் சித்தாந்தம் முன்வைக்கப்படுகிறது. அதனால் அதைத் தகர்ப்பதற்குப்போலவே தாங்குவதற்கான வெளியையும் அது வாசகனுக்கு நல்குவதில்லை.

பூமி நாயகமாக சந்திர சூரிய கிரகங்கள் அதனைச் சுற்றுவதென்ற ஆதியாகமத்திற்கு எதிராக சூரியக் கிரகமே மய்யத்தில் உள்ளதென்ற உண்மை உயிர் விலை கொடுத்துத்தான் அன்றைய அறிவுலகத்தில் விஞ்ஞானிகளால் தாபிக்கப்பட முடிந்திருந்தது. இந்த நிலையிலிருந்து ஆன்மீகம் வேறென்றும், விஞ்ஞானம் பிறிதொன்றுமென நிறுவ நீண்ட காலத்தைத்   தொலைக்கவேண்டியிருந்தது. ஆன்மீகம் சூக்கும விதிகளையும், விஞ்ஞானம் தூல விதிகளையும் முன்வைத்து தம்மை நிரூபிக்கும்  வண்ணமாயிருந்தன. அதுவரைகால விஞ்ஞான உண்மைகள் புறவியற் தளத்தில் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டிருக்க, அகநிலையாக உணர்வாகும் ஆன்மீக உண்மைகள் கவர்ச்சிகரமான வாதங்களாலே நிரூபிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆன்மீக அனுபவமாக மு.தளையசிங்கம் அடைந்த சத்திய உண்மை, அல்லது பூரண சர்வோதயத் தரிசனமானது அகம் சார்ந்த அனுமானமாக மட்டுமே தேங்கிப்போகமுடியும். அதுவே அதன் தோற்ற காலத்திலிருந்து வரன்முறையாக நடந்து முடிந்திருக்கிற உண்மை.

இப்போது மெய் முதல் வாதமென்பது யாதுவென தளையசிங்கத்தின் வார்த்தைகளிலேயே காணலாம்: ‘(கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் ஆகிய) இரண்டினுள்ளும் அடங்காது இரண்டையும் அணைத்தும் கடந்தும் திருத்தியும் நிற்கும் புதுச் சித்தாந்தம். அதை மெய் முதல் வாதம் எனலாம்.’

இவற்றையெல்லாம் கொண்டு நோக்குகிறபோது ‘கிருத யுகம் எழுக மாதோ’ என்ற பாரதியின் கூவலே, ‘சத்தியம் எழுக’ என்ற தளையசிங்கத்தின் குரலிலும் உள்ளோடியுள்ளதாய்த் தோற்றப்படினும், அதை நிறுவும் தரவுகள் எங்கும் அவரால் முன்வைக்கப்பட்டிருக்காததில் அதன்மீதான எந்த ஈர்ப்பும் தமிழ்ச் சிந்தனையுலகத்தில் எழுவதில்லை. பாரதியின் கிருத யுக முன்வரவுக்கு சோவியத் யூனியனின் உதயம் அரசியல் மெய்ம்மையாக நின்றது. ஆனால் மெய்யுளானது இலங்கையில் சமுதாய மாற்றத்தை உசுப்பும் எந்தச் சாத்தியப்பாடான அடையாளத்தையும்கூட கொண்டிருக்கவில்லை.

அவர் முற்றுமுழுதுமாக தானடைந்த ஆன்மீக தரிசனத்தை நம்பியிருந்தார். அதுவொரு அதீத நம்பிக்கையாக இருந்தது. Aldous Huxley (1994-1963) என்ற ஆங்கிலேய இலக்கியவாதியின் ஆன்மீக விளைச்சலின் தேய்ந்திறுமானம்போல் மு.தளையசிங்கமென்கிற சிறந்த தமிழ்ப் படைப்பாளியின் ஆன்மிக உணர்வும் சென்று தேய்ந்திற்றது. இருவரது நம்பிக்கையின் வெளிப்பாடுகளும் சமூக  எதார்த்தமாக மாறவில்லையென்பதை தெளிவாக இங்கே காணக்கூடியதாய் இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, பரமஹம்ச மஹரிஷியின் சீடரான சசி என்பவரின் மறுபிறப்பே மு.த.வென அவரது அணுக்ககாரர்களாலும் சோதரராலும் வெளிப்படுத்தப்பட்டமையானது நம்பிக்கையின் அடிப்படையிலான அவ்வான்மீக கருதுகோள்களின் தகர்வுகள் உள்ளிருந்தே விரிந்தெழுந்ததைத் தெளிவாய்க் காட்டின.

4. 

1970களில் 13677 பேரை மக்கள் தொகையாகக்கொண்ட இலங்கையின் ஒரு சின்னத் தீவான புங்குடுதீவினில் பூரண சர்வோதய இயக்கமொன்றை  குரு ஶ்ரீநந்தகோபால கிரியிடம் தீட்சை  பெற்றுவந்து ஸ்தாபித்து, இயக்கத்தின் சார்பில் பொதுத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி மு.த. போட்டியிட வைக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மொழி சார்ந்த இணக்க சபையொன்று தலைமைக் குழுவில் இருக்கிறது, அதில் அங்கத்துவம் பெறுவதின் மூலம் இலங்கையின் மொழி  இனம்சார் பிரச்னைகளுக்கு சுலபமாகத் தீர்வினைக்கண்டுவிட முடியும் என்பதாக இருக்கிறது. அது அவரது  அதீத நம்பிக்கையின் விளைச்சலாகயிருந்ததைப் புரிந்துகொள்ள முடியும். அக் காலகட்டத்தில் அவரது சிந்தனைக் களம் வெகு வேகம்பெற்றிருந்தது என்பது உண்மையேயானாலும், சாதாரண அரசியலின் புரிதலிலிருந்து விலகிய பாதையில் நடந்திருந்ததென்பதை ஆரோக்கியமற்ற மனநிலையின் கூறாகவே எடுக்கவேண்டியதாகயிருக்கிறது.

இவற்றில் சில உண்மைகள் இருக்கின்றன. நாராயண குருபற்றிய நூலொன்றில் தீர்க்கதரிசிகள் மற்றும் ஆன்ம தரிசனம் கொள்பவர்களாய் இருப்பவர்களிடத்தில் தோன்றும் மனப் பிளவானது மிகுந்த உத்வேகத்துடன் செயலாற்றும் பாங்கினைக் கொண்டிருப்பதை பி.கெ.பாலகிருஷ்ணன் குறிப்பிடுவதாக ஜெயமோகன் கூறும் ‘ஈழ இலக்கியம்’ நூற் குறிப்பொன்று இங்கே ஞாபகம் கொள்ளத் தக்கது. அதைத் தொடரும் வார்த்தைகளும் முக்கியமானவை: ‘மு.தளயசிங்கத்தின் இறுதிக் காலகட்டத்தில் அவரைப்பற்றி ஒரு சக அறிஞர் எழுதிய கடிதம் மெய்யுளில் தரப்பட்டுள்ளது. அதில் அவரை மனப் பிளவு நோயால் பீடிக்கப்பட்டவரென்று அவர் குறிப்பிடுகிறார். அது சரிதான் என்பதற்கு மெய்யுளே சிறந்த சான்றேடு ஆகும். அதன் உன்மத்த நிலை ஒருபுறமிருக்க, நேரடியாகவே அது ஒரு மனப் பிளவு ஆவணம்’ (பக்கம்: 28, ஈழ இலக்கியம்).

மனநோயென்பது ஒரு நோயே அல்லவென இன்றைய மருத்துவ சாஸ்திரம் கூறுகிறது. பிறழ்வு என்பதும் பிளவு என்பதும் மனநிலைப் பாதிப்பின் இருவேறுபட்ட நிலைகள் என்பதையும் இந்த இடத்தில் மனங்கொள்ளவேண்டும்.

இந்த மனப் பிளவென்பது படைப்புக் கதி கூடிய ஒரு தருணமேயன்றி வேறல்ல. மிகப் புகழ் வாய்ந்த உலக எழுத்தாளர்கள் பலர் இந் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை முடிவுகள் சோகமாக இருந்ததேனும், படைப்பின் வீச்சு உலக இலக்கிய வரலாறு அவர்கள் பெயர்களைத் தாங்குமளவு உந்நதம் கொண்டிருந்தது. அவர்களே வெர்ஜினியா வுல்ஃப், எர்னஸ்ற் ஹெமிங்வே, ஸ்கொட் ஃபிற்செறால்ட், வில்லியம் ஸரயோன், சில்வியா பிளாத், எஸ்ரா பவுண்ட் மற்றும் லியோ டால்ஸ்டாய் ஆகியோர். தமிழ் இலக்கியவுலகில் நகுலன் மற்றும் ஆத்மாநாம் ஆகியோரின் நிலைமைகள் இவ்வாறிருந்ததென சிலர் கூறுவர்.

இத்தகு கோணத்திலும் தளையசிங்கத்தின் இறுதிக் கால ஆண்டுகள் ஆய்வு செய்யப்படலாம். உறவினர்கள் நண்பர்கள் அயலவர்களிடம் அது குறித்த ஈடுபாடான விசாரணை செய்வதற்கான அவசியம் இருக்கிறது. எழுந்தமானத்தில் எடுக்கிற முடிவுகளல்ல இவை. தமிழ்ப் புலத்தில் இவ்வாறான ஆய்வொன்று எப்போதும் வரவேற்கப்படுவதில்லை. அதற்கு இன்னும் சில காலம் தேவையென்பது மெய்யேயாயினும், உண்மை கண்டறியப்படவும் அந்தத் தளத்திலிருந்து இன்னும் மேலான கருத்துக்களின் அடைவுக்குமான வழி திறக்குமெனின் அதை முயற்சிப்பதில் தப்பில்லையெனவே எண்ணுகின்றேன்.

5.

ஆனால் அவரது சித்தாந்தம் சாத்தியமோ சாத்தியமில்லாததோ, வலுவானதோ அற்றதோ அதிலுள்ள இலக்கியம் சார்ந்த  கூறு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கதை, கவிதை நாவல் என்ற வடிவங்களை அழித்து சர்வோதய இலக்கியம் எழும் என்ற அவரது பிரகடனமானது ஏறக்குறைய வடிவமழித்த வடிவமென்ற பின் நவீனத்துவக் கோட்பாடாக அதை இனங்காண முடிவதிலிருந்து அந்த விருப்பம். பின்நவீனத்துவம் சிறுகதை, நாவல், மற்றும் கவிதையென படைப்பிலக்கியத்தை இனங்காணாது; அது அனைத்தையும் பிரதியாகவே பார்க்கும்.

மேற்கில் பின்நவீனத்துவம் வலிமைபெற்றுவந்த சமகாலத்தில் தமிழில் இந்த வடிவமற்ற இலக்கியப் போக்கை மு.தளையசிங்கம் முன்வைத்தார் என்பது முக்கியமானது. இவை கவனமற்றுப் போனமை துர்பாக்கியம். மேலும் அதை மு.தளயசிங்கமும் விரிவான தளத்தில் வாசக ஆய்வுக்கு மேற்குலக ஆய்வொழுங்குடன் இணைத்து முன்வைக்கவில்லை என்பதும் கவனமாகவேண்டிய கூறு. இவையெல்லாம்பற்றி பெருமைகொள்ள நிறைய இருக்கிறது. சிறப்பான நவீனத்துவ படைப்பாளிகளைக்கொண்ட தமிழ் நாட்டின் படைப்புலகத்திலிருந்து சித்தாந்தவாதியாக ஒருவர் முகிழ்க்காதவிடத்து, மெய் முதல் வாதம் என்ற சிந்தனாமுறையை முன் வைத்த மு.தளையசிங்கம்  குறித்து இலங்கைத் தமிழர் பெருமைப்படலாம். தமிழ்நாட்டிலே அதுபற்றிய அறிதலும் விளக்கமும் எண்பதுகளின் மேலேதான் ஆரம்பிக்கவே செய்தன. சிறுபத்திரிகையுலகத்தில் விளக்கமும் விவாதமும்கொண்ட பொருளானதும் அப்போதுதான். தமிழவனும், எஸ்.வி.ராசதுரையும், அ.மார்க்சும், ரவிகுமாரும், முனைவர் ந.முத்துமோகனும் பின்நவீனத்துவம்பற்றிய தமிழகப் பிரக்ஞையை உருவாக்கியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். ‘நிறப்பிரிகை’ இதழை பின்நவீனத்துவத்தின் மய்யச் சிற்றிதழாக அடையாளங்காண முடியும். இப் பிரக்ஞை இலங்கையில் ஒரு தசாப்தத்திற்கும் முன்னரே மு.த.வினால் முன்னெடுக்கப்பட்டமை விசேஷம்.

6.

மு.தளையசிங்கத்தினால் 1960இல் எழுதப்பட்ட ‘ஒரு தனி வீடு’ நாவலானது,  ‘கலைச் செல்வி’ சஞ்சிகைப் போட்டியில் முதலாவது பரிசுபெற்றது. மேலே  நீண்டகாலம் நூல் வடிவம் பெறாதிருந்த அந் நாவல், 1983இன் மேல் கி.ராஜநாராயணனைச் சென்று சேர்கிறது. கடைசியாக அது சமுதாயம் பதிப்பகத்தினால் நூலாக்கமும் பெறுகிறது. நூலின் முன்னுரையில் அது பதிப்பேறும்வரை அடைந்த அலைச்சலின் வரலாறு கி.ரா.வினால் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மு.தளையசிங்கத்தின் சிறுகதை முயற்சிகளின் பின் அவரது நாவல் முயற்சி இருந்திருக்கிறது என்று கொள்ளலாம்.

சிறுகதையினுள்ளும் இரண்டு வகையான சிறுகதைகளை இனங்காண முடியும். 1947 ஜுன் தொடங்கி வெளிவந்த ‘சுதந்திரன்’ பத்திரிகையானது கருத்துநிலை சாராது பல்வேறு எழுத்தாளர்களுக்கும் பிரசுரக் களமாயிருந்தது. மு.தளையசிங்கத்தினது சிறுகதைப் பிரவேசமும் ‘தியாகம்’ என்ற தலைப்பிலான சிறுகதை (1957)யுடன் அதில் ஆரம்பிப்பதாய்க் கொள்ளலாம். இவரின் இக் காலகட்டத்திய எழுத்துக்களை ஒரு வகையானதாக வகுப்பதே முறை. ‘புதுயுகம் பிறக்கிறது’ பெரும்பாலும் இதழ்களில் வராது தொகுப்புக்காக எழுதிய கதைகள் கொண்ட இரண்டாம் கட்டத்துக்கானவை. அவற்றின் தன்மை விசேஷமும் தனித்துவமாகத் தெரியக்கூடியது.

‘இரத்தம்’போன்ற சிறுகதைகளில் தமிழ்த் தேசிய உணர்வலை  அவ்வளவு துலக்கமாக இல்லையென்பது மெய்யேயாயினும், அதை சற்று அதிகமான கதைகளில், குறிப்பாக ‘பெப்.4’போன்றனவற்றில்,  காணக்கூடியதாயிருக்கிறது.

ஆனால் சிறுகதைகளில் துலக்கமின்றியிருந்த இந்த உணர்வுவானது, ‘ஒரு தனி வீடு’ நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதுவொன்றும் விமர்சனப்படுத்தப்படும் விஷயமுமில்லை. அரசியல்ரீதியான நடவடிக்கைகளைத் தேவையாக்கிய  அக்காலச் சூழலின் உணர்வுவிசையானது சில தளங்களிலேனும் உருவாகிக்கொண்டிருந்தது மெய்யே. அதனால் பிரதி தன்னில் அவ்வுணர்வலைகளை தன் அவதானத்தில் தவறவிடாது பதிவாக்கி  தன்னையோர் அரசியல் நாவலாக வெளிப்படுத்திக்கொண்டது. கவனிக்கவேண்டிய அம்சம் யாதெனில், நாவல் கட்டுமானத்தினுள் அர்த்தம் தக அமைந்து கலாபூர்வமாகும் விதமும், அதற்கான தேடலில் கிடைத்த உள்ளார்ந்த அனுபவ வெளிப்படும், நடைமுறை வாழ்வையொட்டிய அதன் தத்துவார்த்த விவரிப்புமேயாகும்.  

1956இன் பின்னாக வர்க்க முரண்பாட்டினை வற்புறுத்தியதும், தொழிற்சங்கப்  பிரச்னைகளை முன்னிறுத்தியதும், சாதீய கொடுமைகளை வெளிப்படுத்தியதுமான எழுத்துக்களே தமிழ்த் தேசியம் சார்ந்தவற்றைவிட அதிகமும்  வெளிவந்திருந்தன என்பது கவனிக்கப்பட்டது. அது சிறுகதைகளில் இருந்த அளவு நாவலில் இருக்கவில்லையென்பதும் தெளிவானது.

இக் காலத்தில் கவனம்பெற்ற ஒரு நாவலாகச் சொல்வதானால் க.அருள் சுப்பிரமணியத்தின் ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது’ (1973) நாவலை உடனடியாகச் சொல்லமுடியும். ஆயினும் கட்டமைப்பும், உணர்வு வெளிப்பாட்டுத் திறனும், அதற்கான நடையினையும்  மொழியினையும் நிஜமாகவே கொண்டிருந்த நாவலாக ‘ஒரு தனி வீ’ட்டையே சொல்லக்கூடியதாய் இருக்கிறது.

7.

1956இலிருந்து இடதுசாரி இலக்கியங்கள் பெருகுவதற்கான சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்கள் மிக்க வலுமையாக இருந்தனவென்பதை மறுப்பதற்கில்லை. வரலாறு நடந்துவந்த பாதையை உதாசீனம் செய்துவிட முடியாது. விருப்பமில்லாவிடினும் கடந்துசென்றேயாகவேண்டும். படைப்பிலக்கியத்துறைக்காக இல்லாவிடினும், விமர்சனத் துறைக்காக இது மிகவும் அவசியம். சரித்திரம் நடந்த பாதையை விமர்சிக்கலாம்; மாற்றமுடியாது.

அன்றைய காலவெளியை  இடதுசாரி அரசியலென்ற ஒற்றைப் படையாக அடக்க முடியும். இடதுசாரி அரசியல் வந்தால் இடதுசாரி இலக்கியமும், அதைத் தொடர்ந்து இடதுசாரி விமர்சனமும் வரவே செய்யும்தான். நற்போக்கோ மெய் முதல்வாதமோ அதிகாரம் பெற்றிருப்பினும் அவையவைக்கான விமர்சன முறைமைகள் அளவீடுகளாக அமைந்தேயிருக்கும். அதுவே இலங்கையில் 1956ஐத் தொடர்ந்த காலத்தில் நடந்தது. அது தேசிய முதலாளிகளின் கரங்கள் ஓங்கியிருந்த காலமாகும். ஆக, அக் காலம் அதற்கான இலக்கியத்தையும், அந்த இலக்கியம் தனக்கான திறனாய்வையும் முன்னிறுத்துவது தவிர்க்கமுடியாதது.

மேலும் அது மு.தளையசிங்கம் குறிப்பிட்டபடி ஏழாண்டுகளுக்கல்ல, சுமார் இருபதாண்டுகளாக கவிதை சிறுகதை நாவல் என பல தளங்களில்  விரிந்திருந்தது. அவ்வாதிக்க  காலத்தை 54இலிருந்து 73வரையாகச் சொல்ல முடியும். இதனுள்ளிருந்து தவிர்ந்த ஒரு வகைமையாக  நாடகத்துறையைக் கருதலாம்.

நிறுவனமயப்பட்டுப்போன இடதுசாரி விமர்சனத்தின் தூண்களாக i) பேரா. கா.சிவத்தம்பி (1932–2011)யும் ii) பேரா. க.கைலாசபதி (1933 – 1982)யும் இருந்தார்கள்.  ஏ.ஜே.கனகரத்ன (1934—2006) இடது கொள்கை சார்ந்தவராயினும் அவரை அமைப்புச் சாராத விமர்சகராகவே கொள்ளவேண்டும். பேராசிரியர்களின் சோஷலிச யதார்த்த வகைப்பட்ட  விமர்சனத் தேர்வுகளை நிர்தாட்சண்யமாய் இவர் நிராகரிக்கவே செய்திருந்தார். மேற்கத்திய விமர்சனம் சார்ந்த எந்த விமர்சன முறையும், குறிப்பாக நவீன விமர்சனம், அமைப்பியல் மற்றும் பின் அமைப்பியல் விமர்சனங்கள், ஆரம்பத்தில் இவர்கள் கவனத்தில் படவேயில்லை.

இக் காலகட்டத்தில் இரு பேராசிரியர்களதும் இலக்கிய வழிகாட்டலின் தேவை இருந்ததும் மெய். ஆனால் அந்த வழிகாட்டும் முகாமைத்துவத்தில் அவர்கள் செய்த தேர்வுகள் இலக்கியத்தின் அழகியலை முற்றாகப் புறமொதுக்கினவென்ற பரந்துபட்ட இலக்கியவாதிகளின் குறைகள் நியாயமாகவே தோன்றின. அதையும் பேரா. சிவத்தம்பி தன் பிற்காலத்தில் சில நேர்காணல்களில்  ஒப்புக்கொள்ளச் செய்திருந்தாரென்பது போற்றப்பட வேண்டியது. அந்த வாய்ப்பு பேரா.க.கைலாசபதிக்கு அவரது குறுகிய 49 ஆண்டுகளேயான வாணாள் காலம் வழங்கியிருக்கவில்லை.

இவற்றின் மீதான மு.தளையசிங்கத்தின் எதிர்வினைகள் நியாயமானவை. ஒரு தனி மனிதராக தன் கருதுகோளை முன்னிறுத்தி அவர் தன் இலக்கிய யுத்தத்தினைத் துவக்கியிருந்தார். ஒருவகையில் இதை தன் காலத்திற்காக அவர் கொடுத்த குரலாகவும் கொள்ளலாம். தன் முன்னிருந்த  இருளின்மேல் சரியான திசையின் பிரதிநிதியாயிருந்து வெளிச்சம் பாய்ச்ச காலத்தால் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

அதைச் செய்வதில் அவர் மிகுந்த இடர்ப்பாடுகளை எதிர்கொண்டாரென்பது உண்மையே. அவர் ஏற்கனவே ஓர் இடதுசாரி அனுதாபியாக இருந்தாரென்பது இந் நிலையில்  கவனிக்கப்பட்டது. அதை மாச்சரியங்களின் விளைவானதாக சுலபமாக ஒதுக்க முடிந்திருந்தது. ஆனால் அவரது யுத்தம் இடதுசாரி கோட்பாடுகளின்மீதாகவன்றி, கோட்பாட்டு நிறுவனங்களின் மேலானதாகவே இருந்தது. காலம் அந்த நியாயத்தை பின்னால் தெளிவுற நிரூபித்தது.  

8.

மு.தளையசிங்கத்தின் இலக்கியக் கட்டுரைகள் பலவற்றிலுமே இவ்வெதிர்க் குரலின் கீறுகளைக் காணமுடியுமெனினும் ‘விமர்சன விக்கிரகங்கள்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ மற்றும் ‘சோஷலிச யதார்த்தமும் முற்போக்கு இலக்கியமும்’, ‘நற்போக்கும் முற்போக்கும்’ போன்றவை தத்தம் பொருள்கள் குறித்து அழுத்தமாகச் சொல்லும் விமர்சனக் கட்டுரைகளாகும்.

முதலாவது கட்டுரையில் கனக செந்திநாதன், எஸ்.சிவகுமாரன், சில்லையூர் செல்வராசன், காவலூர் ராஜதுரை, எஸ்.பொன்னுத்துரை, ஏ.ஜே.கனகரத்ன, கலாநிதி க.கைலாசபதி ஆகிய அக்கால முக்கியமான விமர்சகர்களைப்பற்றிய விமர்சனத்தோடு, விமர்சனம் எப்படி அமையவேண்டும் என்பதான குறிப்புகளோடும் இருக்கின்றன.  ‘தினகர’னில் எழுதப்பட்ட இக் கட்டுரையின் பிற்பகுதியிலிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பிபற்றிய கருத்துக்கள் முழுமையாகவும் க.கைலாசபதிபற்றியவை பகுதியாகவும் நீக்கப்பட்டதான அடிக்குறிப்பு தொகுப்பு நூலிலுண்டு. ஆனால் நீக்கப்பட்ட அப்பகுதிகள் தொகுப்பிலும் பதிப்பாக்கமுடியாது போனமை துர்ப்பாக்கியம்.

‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரையே ஒரு விமர்சன வெளிப்பாடு இவ்வாறு அமையக்கூடாதென்பதின் அடையாளமாகவும் இருக்கிறதென நான் கருதுகிறேன். கனக செந்திநாதன்பற்றி அபிப்பிராயம் கூறுமிடங்களில் கருத்துக்களை அவர்மீதான நையாண்டியாக்குவது இலக்கிய நாகரிகத்தை வெளிப்படுத்துவதில்லை.

‘சோஷலிச யதார்த்தமும் முற்போக்கு இலக்கியமும்’ என்ற கட்டுரை கைலாசபதியின் எழுத்துக்களை நடுநிலையாக வரலாற்றுநிலை நின்று கணிக்கிறதென்பதை அறிவதற்ககான வரிகளைக் கொண்டிருக்கின்றது.  மார்க்சீய எதிர்ப்பாளரைப்போல், அதன் ஆதரவாளரையுமே அக் குறிப்புக்கள் அதிர்ச்சிகொள்ளச் செய்வன.  பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு அக் காலகட்டத்தின் அவசியமென்பதை மு.தளையசிங்கம் சரியாகவே வரையறுக்கிறார்.

‘கைலாசபதி கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒரு படி உயர்த்தியேதான் இருக்கிறார். அதை ஒப்புக்கொண்டுதான் கைலாசபதியின் செல்வாக்கைப்பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாகவேண்டும்’ (மு.த. தொகுப்பு நூல், பக்: 591) எனவும், ‘இலக்கிய வளர்ச்சிக்கு விமர்சனம் அவசியமானதென்பது கைலாசபதிக்கு முன்பும் இங்கு தெரிந்திருக்கலாம். ஆனால் செயலில் காட்டப்பட்டது கைலாசபதியின் வருகைக்குப் பின்னரேதான்’ (அதே தொகுப்பு, பக்: 593) எனவும், ‘1956ஐ ஒட்டிய காலம் அது. எழுத்தாளன் பத்திரிகைகளால் பழுதாக்கப்பட்ட காலம் அது. ஆனால் அது ககைலாசபதியின் வருகையோடு நின்றுவிட்டது. அதற்குப் பின் தன்னை உணரத் தொடங்கிய எழுத்தாளன் தன் சூழலின் முக்கியத்துவத்தையும் உணரத் தொடங்கிவிட்டான். அவனது சூழலுக்குரிய பிரச்சனைகள், பேச்சுவழக்கு எல்லாம் இலக்கியத்தில் ஏற வாய்ப்பு பிறந்தது. அதுவரை நின்ற இந்திய அபிநயம் திடீரென்று வெட்கப்படுமளவுக்கு நிர்வாணமாக்கப்பட்டது. 1956க்குப் பின் ஈழத் தமிழன் தன் உரிமைகளுக்காகத் தன் தனித்தன்மையைக் காட்டத் தொடங்கினான். பகீரதனும், பார்த்தசாரதியும் இங்கு வருவதற்கு முன்பே நாம் அவர்களுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டிருந்தோம். கைலாசபதி செய்த தொண்டு அது’ (மேற்குறிப்பிட்ட நூல், பக்: 595) எனவும் அவர் சொல்லியவை நிஜத்தின் தரிசனங்கள்; காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பதிவுகள்.

ஒரு திசைப் பயணிகளாகவிருந்தும் பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி க.கைலாசபதி இருவரில் பேரா. கா.சிவத்தம்பி மு.தளையசிங்கத்தினால் அவ்வளவு நிஷ்டூரமாய் ஒதுக்கப்படுவதின் காரணம் நூலில் எங்கேயும் வெளிப்படுவதில்லை. தனிமனித விருப்பு வெறுப்புக்களின் கூடுதல் வியாப்தியை பேராசிரியர் கா.சிவத்தம்பியின் விமர்சனங்கள் கொண்டிருந்ததைக் காரணமாய்ச் சொல்லலாமெனத் தெரிகிறது.

மூன்றாவது கட்டுரையான ‘நற்போக்கும் முற்போக்கு’முவில் எஸ்.பொன்னுத்துரையின் நற்போக்கு இலக்கியக் கொள்கையை முற்பகுதியிலும், அவரது இலக்கியப் போக்கு, குணவிஸ்தாரம், விமர்சனத்தின் தன்மை ஆகியவற்றை பிற்பகுதியிலும் விபரிக்கிறார் தளையசிங்கம். ஏறக்குறைய இருபத்தைந்து பக்கங்களில் நீளும் அக் கட்டுரைக்கு சமதையாய் பொன்னுத்துரையை விமர்சித்தவர் இதுவரை இலங்கை இலக்கிய உலகில் வேறுபேர் இல்லை. ஒருவரை ஆழமாகவும் காட்டமாகவும் விமர்சிக்கும் இந்தத் தன்மைகள் மு.த.வினது பிற்காலத்திலும் பெருமளவு மாறிப்போகவில்லை.

இவ் விமர்சனக் கட்டுரைகளில் சரி, வேறு கட்டுரைகளில் சரி தன் எழுத்துக்களுக்குரிய இடம் இலங்கை விமர்சகர்களால் தரப்படவில்லையென்ற மு.தளையசிங்கத்தின் முணுமுணுப்புகூட காணக் கிடைக்காது. ‘கலாநிதிகள்’ தன்னை ஒழித்துக்கட்ட முயலுகிறார்கள் என்பதுபோன்ற பிரலாபங்கள் எதுவும்கூட காணப்படுவதில்லை. ஆனால் ஒருவகை மனவுளைச்சலை தன் எழுத்துக்களுக்கான பத்திரிகையுலகத்தின் அங்கீகாரமின்மையின் அதிருப்தியால் அவர் அடைந்திருப்பது சாத்தியமென்றே படுகிறது. அதுபற்றிய குறிப்பொன்று அரசு வெளியீட்டின் ‘புதுயுகம் பிறக்கிறது’ தொகுப்பிலுள்ள எம்.ஏ.ரகுமானின் பதிப்புரையில் காணக் கிடைக்கிறது. அதனாலேயே ஒரு  நியாயமற்ற கோபத்தின் வீச்சு அவரிடத்தில் எப்போதும் இருந்திருப்பதன் சாத்தியம் தெரிகிறது.  அவரின் வெகுஜன எழுத்தினதும், இலக்கியத் தரமற்ற நூல்களினதும் மீதான தாக்குதலை அங்கிருந்து இனி இனங்காண முடியும்.

9.

மு.தளையசிங்கத்தினது இலக்கியப் பார்வையின் இன்னொரு முகத்தை கவிஞர் தா.இராமலிங்கத்தின் ‘காணிக்கை’ என்ற கவிதை நூலின் விமர்சன ஆய்வுரையில் காணலாம்.

காலாண்டுக்கான முதலாவது ‘ஏடு’ இதழில் தா.இராமலிங்கத்தின்  கவிதைகள் முழு நூலாக வெளிவந்தன. அந் நூலில் எஸ்.பொன்னுத்துரையின் முன்னீடும், நான் குறிப்பிட்ட மு.தளையசிங்கத்தின் ஆய்வுரையும் அடங்கியிருக்கின்றன. ‘மு.தளையசிங்கம் படைப்புகள்’ தொகுப்பிலும் அது உள்ளது.

புதுமெய்க் கவிதைகள் என்ற அடையாளத்துடன் வந்த அத் தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளுள் முக்கியமானதென ‘தூக்கட்டும் தூக்கட்டும்’ என்ற  கவிதையை தன் ஆய்வுரையில் அடையாளப்படுத்துகிறார் தளையசிங்கம். அது விரிவானது; ஆய்வின் எல்லை கடந்து விமர்சனமாவது; விமர்சன எல்லை கடந்து சென்றும் பிரதியைத் தகர்ப்பமைப்பு செய்வது.

கவிதை சற்று நீண்டது; 96 வரிகளைக் கொண்டிருக்கிறது. குறுங்காவியமாக விரியக்கூடிய வளம் அதிலுண்டு. ஆனாலும் அதை மீறிய அதன் இறுகிய வடிவம் இன்னும் ரசிக மனநிலையைக் கிளரச் செய்வதாகவே உள்ளது.

மிகப் பெரும் கனவுகளோடு இல்வாழ்வில் நுழைகிறாள் ஒரு பெண்.

‘மின்னுவது போலிருக்கும் , பாட்டம் ஓய்ந்து, சிலுநீரும் சிந்திவிடும்’ ஆண்மை(?)யாளனாக இருக்கிறான் கணவன்.

சமூகத்தின் சகல கலாச்சார அடுக்குகளையும் உடைப்பது தவிர பிறவியின் அந்த உத்தரிப்பிலிருந்தான மீட்சிக்கு வேறு உபாயமே இல்லையென ஆகின்றபோது அவள் தனக்கானவனைக் கண்டடைகிறாள்.

இருள்களுள் நடைபெறும் களவுச் சந்திப்புகளில் அவளது வாழ்வு உயிர்ப்புக் கொள்கிறது.

ஆனால் கலாச்சாரக் காவலர்களின் கண்காணிப்பு வலுக்க, அவனோடு உடன்செல்லல் தவிர வேறு மார்க்கம்  அவள் இல்லையென்று ஆகிப்போகிறாள். 

‘நிரைமீட்பேன்! நிரைமீட்பேன்! குறிசுட்ட மாட்டைக் கொண்டேகப் பாக்கிறியோ?’ என்று வாளொடு கிளர்ந்தெழுகிறான் சமூகத்தின் கலாச்சார விசை நரம்புகள்கொண்ட கணவன்.

யுத்தம் நடக்கிறது.

அவளது அலறலில் வேலியில் கூடும் அயல் விலக்குப்பிடிக்க வரவில்லை. காதலன் உயிராபத்து அடையும் தருணத்தில் அவள்  கணவனைக் கொன்றுவிடுகிறாள்.

கவிதை வெளிவந்த காலப் பகுதியில் தமிழ் நினைப்பின் உலைப்பில் உருத்திரபுரம் பகுதியில் நடைபெற்ற கோகிலாம்பாள் (செய்த) கொலை வழக்கு இருந்திருந்தது. அந்த வழக்கின் கதை நாயகியான கோகிலாம்பாளை இழுத்துவந்து தன் கவிதைப் பெண்ணுக்காக மு.தளையசிங்கம் வாதாடவிடுகிறார். இவள் அவளுக்காகவும், அவள் இவளுக்காகவும் வாதாடுவதுதான் உண்மையில் நடைபெறுவது. கவிதையே நிஜத்தில் நடந்த கோகிலாம்பாள் சம்பவத்தின் நியாயத்தைப் பேசுதாகிறதோவென வாசகனை அது எண்ணவைக்கிறது.

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் வாழ்வியல் அடக்குமுறைகளினால் சமூகத்தில் ‘கள்ளப் புருஷனோடு சேர்ந்து கணவனைக் கொன்றவள்’ என இழிபெயர் பெற்றிருந்த கோகிலாம்பாளை ஏறக்குறைய ஒரு புரட்சிக்காரியாகவே விமர்சனக் களத்தில் உலவ விடுகிறார் தளையசிங்கம். தமக்களிக்கப்பட்ட நியாயமான வாழ்வை வாழ்வதற்கு எவருக்குமுள்ள உரிமையை இங்கே ஓங்கி ஒலிக்கிறார் மு.த. அவரளவில் இன, மொழி ஒடுக்குதல்போல் பால் ஒடுக்குமுறையும்.

கவிதையில் வரும் ‘தூய்மை துலங்க – ஒரு , புதுயுகம் பிறக்கும்’ என்ற இரண்டு அடிகளின் விபரிப்புமூலம் தனது பூரண சர்வோதயத்தையும் பூடகத்தில் அடையாளமாக்குகிறார் அவர்.

தனியே குறை நிறைத் தேர்வினதாக முடியும் அதுவரை காலவரையான மரபார்ந்த தமிழ் விமர்சன முறையில், பிரதியுள்  ஒழிந்து நிற்கும் இதுபோன்ற அர்த்தத்தை வெளிக்கொண்டுவந்துவிட சாத்தியம் மிகக் குறைவு. அதற்கு மேலைநாட்டு நவீன விமர்சன முறையின் அணுகுமுறை தேவை. தளையசிங்கம் அணுகியுள்ள முறையானது பின்அமைப்பியலின் தகர்ப்பமைப்பு விமர்சன முறையென்றே கருதமுடிகிறது.  இவ் விமர்சனத்தை மு.தளையசிங்கம் எழுதிய காலப் பகுதியில்தான் மேலைநாட்டிலேயே, சித்தாந்தத் தளத்தில் அது தர்க்கபூர்வமாக தன்னைத் தாபித்துக்கொண்டிருந்தது என்பதை மறக்கக்கூடாது. பிரதியின் இந்த இடத்தில் கவிதையின் அர்த்தத்தை இடப்பெயர்ச்சி செய்து, தனது மெய்முதல் வாத கருத்துநிலையாகவும் மேனிறுத்துகிறார் அவர்.

விமர்சனம் படைப்பு நிலைக்கு சமாந்தரமாய் மு.தளையசிங்கத்தின் கரங்களில் ஏறிச் செல்கிறது என்பது மிகையான கூற்றல்ல.

10.

முடிப்புரையாகச் சொல்வதெனில், மெய்முதல்வாதமானது தன் தோற்ற அடையாளத்தை மட்டும் தமிழிலக்கிய வரலாற்றில் விட்டுச்சென்றிருக்க, அரை நூற்றாண்டுக்கும் மேலாகியும் அவரது சிறுகதைகள் சிலவும், விமர்சன எழுத்துக்கள் சிலவும் இலங்கைத் தமிழிலக்கியத்தை இன்றும் வளப்படுத்தும் வல்லபத்தோடு இருக்கின்றனஎன்பதைத் தயங்காமல் சொல்லமுடியும். இவற்றினுள்ளும் அவரது விமர்சன முறையை மிக முக்கியமானதாக நான் சொல்வேன். இவை தன் காலத்தின்மீது அவர் வீசும் வெளிச்சமாகவும் இருக்கிறன்றன. ஆம், மு.த.வை விளங்குதலென்பது அவர் காலத்தை விளங்குதலே ஆகும்.

0

ஜுன் 12, 2021

தேவகாந்தன்

தேவகாந்தன் ஒரு கவனிப்புக்குரிய ஈழத்து எழுத்தாளராவர். தற்சமயம் கனடாவில் வசித்துவருகிறார். இவர் ‘கனவுச் சிறை’ என்ற நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதீத கவனிப்பைப் பெற்றவர். ஈழத்து தமிழை தன் படைப்புகளில் சிரத்தையுடன் கையாள்பவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.