/

அரவமாகிய பாதையும் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வும்- ‘கையறு’ நாவலை முன்வைத்து: அழகுநிலா

வரலாறு புனைவாகவோ அபுனைவாகவோ மீண்டும், மீண்டும் எழுதப்படுகையில் அது படிப்பவரின் மனதில் அதுவரை இருந்த வரலாற்றை மறுபரிசீலனை செய்யவும் இன்னும் திறந்த மனதோடு வரலாற்றை அணுகவும் உதவுகிறது. வரலாறு என்பது யாரால் எழுதப்படுகிறது, எதற்காக எழுதப்படுகிறது என்பதையும் வாசிப்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை தற்போதைய சூழலில் அதிகரித்துள்ளது. மத, இன, அரசியல், அதிகார சார்பற்ற வரலாறு உண்மையில் இருக்கிறதா என்ற கேள்வியும் உடன் எழுந்து வருகிறது. ஆனால் அதே சமயம் வரலாறு மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட மனிதர்கள் எழுந்து வருகையில் அடக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட தங்களது இனச் சார்போடு வரலாறு எழுதுவது தவிர்க்க இயலாததாகவும் இன்றியமையாததாகவும் இருக்கிறது. இப்படி ஊடுபாவாக பல குழப்பங்களைக் கொண்டுள்ள வரலாற்றில் புனைவுக்கான இடம் என்பது அன்றும் இன்றும் முக்கியமானதாகவே இருந்து வருகிறது. ஒரு வரலாற்று புனைவு வருங்காலச் சந்ததியினருக்கு வரலாற்றைச் சொல்லும் ஓர் ஆவணமாக உருமாறுகிறது. நாவலாசிரியன் தான் திரட்டிய தரவுகள், தகவல்களைக் கொண்டு கற்பனை என்ற தூரிகையால் வரலாறு என்ற திரையில் மனித வாழ்வை ஓவியமாக வரைகிறான். அப்படி வரையப்பட்ட ஓர் ஓவியம்தான் ‘கையறு’ நாவல்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவை கைப்பற்றும் முனைப்புடன் மலாயாவிலிருந்து தாய்லாந்து, பர்மா வழியாக இந்தியாவை நோக்கி ஜப்பான் போட்ட சயாம் மரண ரயில் பாதையை மையமாக கொண்டு மலேசியச் சூழலில் ஏற்கனவே சில புனைவுகள் வெளியாகி உள்ளன. மரண ரயில் பாதை போடும் பணியில் தமிழர்கள் அடைந்த துயரங்களை அடிப்படையாகக் கொண்டு அ.ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ நாவலும் சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ நாவலும் எழுதப்பட்டுள்ளன. ரயில் பாதை போடும் பணி நடந்தபோது மலாயா ரப்பர் தோட்டத்திலிருந்த மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு அ.ரெங்கசாமியின் ‘புதியதோர் உலகம்’ நாவலும் சா.அன்பானந்தனின் ‘மரவள்ளிக்கிழங்கு’ குறுநாவலும் எழுதப்பட்டுள்ளன.

‘கையறு’ நாவலோ இந்த இரண்டு பேசுபொருள்களையும் இணையாகப் பேசிச் செல்கிறது. மலாயா மண்ணில் காலடி வைக்கும் ஜப்பானியர், ரப்பர் தோட்டத்தை கைவிட்டுவிட்டு ஓடும் பிரிட்டிஷார், எதிர்காலம் குறித்த கவலையோடும் அச்சத்தோடும் தோட்டத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழர்களென தொடங்கும் நாவல் தண்டவாளப் பாதை போடும் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் துயர்கள், வெறிச்சோடிய ரப்பர் தோட்டத்திலிருந்த மக்களின் வாழ்க்கைப்பாடுகள் என சூடுபிடித்து ஜப்பானது தோல்வியால் விடுதலை பெற்ற தொழிலாளர்கள் ரயிலில் மலாயா திரும்பும் காட்சியோடு நிறைவுறுகிறது.

2016 ஆம் ஆண்டில் கோ.புண்ணியவானின் ‘செலாஞ்சார் அம்பாட்’ நாவலை வாசித்துவிட்டு ‘வல்லினம்’ இதழில் எனது வாசிப்பனுபவத்தைக் கட்டுரையாக எழுதினேன். அப்போதிருந்த குறுகிய வாசிப்பு பின்புலத்தாலும் நாவலென்ற கலை வடிவத்தைக் குறித்த சரியான புரிதலின்மையாலும் அந்நாவலை பேசுபொருள் சார்ந்து மட்டுமே அணுகி இருக்கிறேனென இப்போது உணர்கிறேன். இந்த ஐந்து வருடங்களில் வாசிப்பின் எல்லைகள் விரிவடைந்து ‘நாவல்’ குறித்து நான் அடைந்திருக்கின்ற புரிதலிலிருந்து கோ.புண்ணியவான் ‘கையறு’ நாவல் மூலம் வடிவம் சார்ந்தும், மொழி சார்ந்தும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறாரென உறுதியாகச் சொல்ல முடியும்.

‘கையறு’ நாவலின் மிகப் பெரிய பலம் அதன் மொழி. ஏற்கனவே எடுத்தாளப்பட்ட பேசுபொருள், தெரிந்த சம்பவங்கள் இரண்டையும் மீண்டும் புனைவில் கொண்டு வருகையில் நாவலாசிரியன் தனக்கான மொழியைக் கண்டடைய வேண்டியது மிக முக்கியமானதாகவும் பெரும் சவாலாகவும் விளங்குகிறது. மொழியின் துணை கொண்டு மிக நுட்பமான விவரணைகள் மூலம் ஒன்றைக் காட்சிப்படுத்துவதன் வழியாக வாசிப்பவருக்கு மேலதிகமான அர்த்தத்தையும் உணர்வையும் கடத்துவதில் நாவலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு உதாரணமாக நாவலில் பல இடங்களைச் சுட்டிக்காட்ட இயலும். மகமாயி வந்திறங்கும் சாமிக்கண்ணு ஆற்றில் மூழ்கி எழுந்து ரப்பர் மர வேர்களைப் பற்றி கரையேறுகிறார். இக்காட்சி ரப்பர் மர வேர்தான் அவர்கள் வாழ்விற்கான ஆதாரமென்பதையும் அந்த வேரிலிருந்து பிடி நழுவியதால் அவர்கள் வறுமையெனும் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதையும் வாசகனுக்குச் சுட்டுகிறது. ‘தோட்டத் தமிழ்ப்பள்ளி’ என்ற பெயரில் தமிழ் என்ற வார்த்தையைக் காட்டுக்கொடி ஏறி மறைக்க முயன்று கொண்டிருக்கிறது என்ற காட்சியின் மூலம் வகுப்பறையில் ‘நிப்போன்’ என்ற காட்டுக்கொடி தமிழை எப்படி மறைக்கிறதென்பதை வாசகன் உணரமுடியும். சாம்பல் காட்டுக்கு மேல் கூர்நகங்களோடு பிணந்தின்னி கழுகுகள் பறக்கும் காட்சியின் மூலம் தோட்டக்காட்டில் நிறைந்துவிட்டிருக்கும் ஜப்பான் ராணுவத்தின் நோக்கத்தை வாசகன் அறிய முடியும். சயாம் காட்டில் மண்ணைக் கொத்தி கிளறுகையில் வெளிக்கிளம்பி தங்கள் விடுதலை பறிபோனதை நெளிந்தும் துள்ளியும் அறிவிக்கும் மண்புழுக்களைக் காட்டுகையில் புழுவிற்கும் கீழாக நடத்தப்பட்டாலும் தங்கள் எதிர்ப்பை எந்தவிதத்திலும் காட்ட இயலாமல் ஜப்பான் ராணுவத்தினரால் நசுக்கப்பட்ட கூலித்தமிழர்களின் துயரம் வாசகனை நிலைகுலையச் செய்யும். 

‘கையறு’ நாவலின் மற்றொரு சிறப்பம்சம் இனச் சார்பற்ற எழுத்து. ஜப்பானியர்கள் அனைவரும் கொடூரமானவர்கள், தமிழர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற கறுப்பு வெள்ளைப் பிரதியாக எழுதாமல் மனிதர்களின் கீழ்மைகளைப் பாரபட்சமின்றி பதிவு செய்கிறார் நாவலாசிரியர். ஜப்பான் ராணுவத்திடம் ஆட்களைக் காட்டிக்கொடுக்கும் கிராணி மேனன், கெம்பித்தாய்க்காக பார்வதியைக் காட்டிக் கொடுக்கும் கிராணி சிவதாஸ், தெரேசாவின் வறுமையைத் தனது உடற்பசிக்காக பயன்படுத்திக்கொள்ளும் மலாய்க்காரன், ஒரு சிறுமியைத் தனது முப்பது வயது மகனுக்கு மணம் முடிக்கும் சேதுவின் தாய், சாக்கன் இறந்துவிட்டானென பொய் சொல்லி செவத்தியைச் சீரழிக்கும் சாக்கனின் அண்ணன் மருது, சக நண்பர்கள் காட்டிக் கொடுக்கலாமென்ற சந்தேகத்தால் யாரிடமும் சொல்லாமல் தான் மட்டும் தனியாக தப்பித்துப் போகும் பக்கிரி போன்ற கதை மாந்தர்கள் வழியாக ஒரு சூழலும் அது தரும் அழுத்தமும் அறங்களையும் விழுமியங்களையும் காவு வாங்குவதை ‘கையறு’ சரியாக காட்சிப்படுத்தி உள்ளது. எழுத்தாளனின் குரல் ஓங்கி ஒலிக்காதது நாவலின் இன்னொரு சிறப்பம்சமாகும். கடைசி அத்தியாயத்தில் ஜப்பான் வீழ்ந்த வரலாற்றைச் சொல்லுமிடத்தைத் தவிர நாவல் முழுதும் தன்னை ஒரு பார்வையாளனாக மட்டும் நிறுத்திக் கொண்டு எழுதிச் சென்றுள்ளது நாவலுக்கு கூடுதல் பலத்தைத் தருகிறது.

எங்கோ எதற்காகவோ யாரோ யாருக்காவோ திட்டமிடும் போரும் நாடு பிடிக்கும் பேராசையும் தொலைதூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தினசரி கூலிகளின் வாழ்வில் கண்ணி வெடி போல வெடித்து அவர்களின் எதிர்காலத்தை சின்னாபின்னமாக்குகின்றன. போதிய உணவு கிடைக்காமல் ரொட்டி டின்னை முகர்ந்து, முகர்ந்து பார்த்துவிட்டு மூடி வைக்கும் சிறுவன் தாஸ், தனது பிள்ளைகளின் பசி தீர்க்க தன்னையே இரையாக்கும் தெரேசா, கெம்பித்தாயால் சீரழிக்கப்படும் பார்வதி, ருதுவானவுடன் ஜப்பானியர்களிடமிருந்து மறைத்து கொண்டு செல்லப்பட்டு அவசர, அவசரமாக தன்னை விட பதினைந்து வயது அதிகமானவனுக்குத் திருமணம் முடித்து வைக்கப்படும் சிறுமி ராசாத்தி, கம்யூனிஸ்டு என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்படும் இரண்டு வயதான விவசாய சீனக்கிழவர்கள், ஆதரவு தேடிப்போன இடத்தில் மருதுவால் சீரழிக்கப்படும் செவத்தி என தோட்டத்து மக்களின் வாதையை ‘கையறு’ வலியோடு பேசுகிறது.

கதாபாத்திரங்களின் வளர்ச்சி நிகழாமல் போனதை கையறு நாவலின் பலவீனமாக நான் உணர்ந்தேன். சில சம்பவங்களைச் சொல்ல மட்டுமே கதாபாத்திரங்ளைப் படைத்திருப்பது போல தோன்றுகிறது. ஒரு கற்பழிப்பைக் காட்ட பார்வதி, குழந்தை திருமணத்தைக் காட்ட ராசாத்தி, தன்னையே பலி கொடுக்கும் தியாக தாய்மையைக் காட்ட தெரேசா, ஜப்பானியரிடமிருந்து தப்பிக்கும் ஒருவரைக் காட்ட பக்கிரி, தோட்டம் திரும்பிய ஒருவரைக் காட்ட வேலையா என்ற அளவில்தான் பாத்திர வார்ப்பு நிகழ்ந்திருக்கிறது. அந்தந்த சம்பவம் முடிந்த பிறகு அவர்கள் அப்படியே கைவிடப்படுவது நாவலைச் சற்று கீழ் இறக்குகிறது. 

சயாம் மரண ரயில் சம்பவத்தோடு தொடர்புடைய முக்கியமான மற்றொரு வரலாற்று நிகழ்வு இந்திய தேசிய ராணுவத்தின் உருவாக்கமும் சுபாஷ் சந்திர போஸ் ஜப்பானியரோடு கொண்ட நெருக்கமும் ஆகும். தோட்டப்புறத்தில் ஜப்பானிய ராணுவத்திடமிருந்து தப்பிக்க வீட்டிற்கு வெளியே சுபாஷின் புகைப்படத்தை மாட்டுவது, “சுபாஷ் வந்தும் நம்மைப் பார்க்காமல் சென்றுவிட்டார், ஏமாற்றிவிட்டார்” என தண்டவாளப் பணியிலிருக்கும் ஒரு தொழிலாளி சொல்வது என இரண்டு இடங்களில் மட்டுமே சுபாஷ் கையறு நாவலில் பதிவாகி இருக்கிறார். மலேசிய எழுத்தாளர் சி.வடிவேல் தனது இருண்ட உலகம் என்ற சிறுகதையில் ஒரு காட்சியை விவரிப்பார். சயாம் மரண ரயில் பணிக்காகத் தமிழர்களை அடைத்துக் கொண்டு ஜப்பானிய ராணுவ வண்டி செல்ல “நேதாஜி! ஜிந்தாபாத்! டெல்லி சலோ!” என்ற உற்சாக முழக்கமிடும் தமிழர்களுடன் மற்றொரு ஜப்பான் ராணுவ வண்டி எதிர் திசையில் செல்லும். இப்படியாக ஒரு சிறுகதையே வரலாற்றை அதன் முழு வீச்சோடு அணுகுகையில் ‘கையறு’ நாவல் சயாம் மரண ரயில் வழியாக பயணித்த இந்திய தேசிய ராணுவத்தையும், சுபாஷ் சந்திர போஸின் மலாயா வருகையையும் இன்னும் விலாவாரியாகப் பேசியிருக்க வேண்டுமென்றே எண்ணுகிறேன்.

‘கையறு’ நாவலின் மற்றொரு சிக்கல் அது புறவயமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. கையறு என்ற தலைப்பின் ஆன்மாவை ஒட்டுமொத்த நாவலின் மொழியும் அதன் வழி மேலெழும் காட்சிகளும் வாசகருக்கு கடத்தி விடுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் கதாபாத்திரங்களின் அக உணர்வுகள் என்னவாக இருந்தன என்பதை ‘கையறு’ பேசவே இல்லை. மனிதர்களின் உளவியலைப் பேசுவதன் மூலம் தத்துவத்தை நெருங்கக் கூடிய புள்ளியைக் ‘கையறு’ தவறவிடுகிறது.

ஓர் உதாரணத்திற்கு சீனத் தொழிலாளி டேன் சூன் கெங்கைக் குறிப்பிடலாம். சீக்காளி கொட்டகையை எரித்து விடுமாறு ஜப்பானியரால் அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பல தொழிலாளர்கள் உயிரோடு இருக்கும் சீக்காளி கொட்டகையைக் கொளுத்தியும் விடுகிறார். ஆனால் அதற்குப் பிறகு அவரது அகத்திற்குள் என்னவிதமான மாற்றம் நிகழ்ந்தது அல்லது அவர் என்னவாக மாறிப்போனார் என்பதைச் சொல்வது நாவலில் மிக முக்கியமென கருதுகிறேன். தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் சூழலில் தனது கையால் பிணங்களைத் தூக்கிப் போட்டுக்கொண்டே இருக்கும் மனித மனதின் பிறழ்வை அல்லது வெறுமையை இன்னும் ஆழமாகப் பேச வேண்டிய தேவை இருந்தும் ‘கையறு’ அதை பேசாமல் கடந்துவிடுகிறது. இறந்து போனவர்களுக்காக நடுகல், சுமைதாங்கிக்கல் நடுவதன் வழியாக பண்பாட்டுக் கூறுகளைச் சொல்லும் அதே வேளையில் கடவுளும் கைவிட்ட மனிதனின் எண்ண ஓட்டங்களையும் சற்று கூடுதலாக பேசி இருந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.      

கோ.புண்ணியவான் தனது முந்தைய படைப்புகள் அனைத்திலிருந்தும் முன் நகர்ந்து கொடுத்துள்ள மிகச் சிறந்த படைப்பு ‘கையறு’. தண்டவாளப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தென்கிழக்காசிய தொழிலாளர்களும் வரலாற்றில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்ட அவர்களது பங்களிப்புகளும் உலகிற்குத் தெரியவும் இன்னும் சொல்லாமல் விடுபட்டுள்ள அவர்களது வரலாற்றைச் சொல்லவும் மலேசியாவிலிருந்து இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் எழுந்து வர ‘கையறு’ பெரும் ஊக்கமாக இருக்கும். ஒரு பாதையால் தங்களது வாழ்க்கைப் பாதையை இழந்தவர்களையும் தொலைத்தவர்களையும் ‘கையறு’ நமக்கு காட்டுகிறது. அப்பாதை நீண்ட பாம்பாக மாறி அங்கு வேலை செய்தவர்களை மூச்சு முட்ட இறுக்கியதையும் அது கக்கிய நஞ்சு மலாயா ரப்பர் தோட்டம் வரை பரவி அழித்த மக்களின் கையறு நிலையையும் பதிவு செய்துள்ள கையறுவின் வருகை மலேசிய நவீன இலக்கியச் சூழலின் வளர்ச்சியையும் ஆரோக்கியமான போக்கையும் தமிழ் இலக்கிய உலகிற்குப் பறை சாற்றுகிறது.

அழகுநிலா

அழகுநிலா தஞ்சை மாவட்டத்திலுள்ள செண்டங்காடு ஊரைச் சேர்ந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ‘ஆறஞ்சு’, ‘சங் கன்ச்சில்’ (சிறுகதைத் தொகுப்புகள்), ‘சிறுகாட்டுச் சுனை’ (கட்டுரைத் தொகுப்பு), ‘கொண்டாம்மா கெண்டாமா’, ‘மெலிஸாவும் மெலயனும்’, ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’, ‘பா அங் பாவ்’ (குழந்தை நூல்கள்) ஆகியவை இவரது நூல்களாகும்.

1 Comment

  1. மிகுந்த மெனக்கெடலோடு அழகுநிலா எழுதிய இந்த விமர்சனத்தால் கையறு நாவல் பரவலாகப் போய்ச் சேரும். இந்நாவல் சென்னை யாவரும் பப்லிகேசன் விற்பனை செய்கிறார்கள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.