/

காலத்தின் பெருந்திட்டம்- ஒரு குடும்பம் சிதைகிறது நாவலை முன்வைத்து: சுரேஷ் பிரதீப்

ஒரு பெருநாவல் எனக்கு அளிப்பது என்ன என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன். பெருநாவல்களின் முடிவு பெரும்பாலும் அகத்திற்குள் இன்னும் வாழும் கதை கேட்கும் சிறுவனக்கு உவப்பானதாக இருப்பதில்லை. முடிவு துயரம் நிரம்பியதாகவோ நம்பிக்கை ஊட்டுவதாகவோ அமைவதில்லை என்பது காரணமல்ல. ஒரு பெருநாவல் உண்மையில் ‘முடிவது’ இல்லை என்பதே இந்த உவப்பின்மைக்கு காரணம் என நினைக்கிறேன். ஒரு கதையில் இருந்து எவ்வளவு கசப்பானதாக இருந்தாலும் ஒரு அறிதல் நிகழ்ந்துவிட்டால் நம்மால் அதிலிருந்து வெளிவர முடிகிறது. ஆனால் ஒரு நல்ல நாவல் அத்தகைய அறிதல் எதையும் அளிப்பதில்லை. அது உத்தேசித்த உலகத்தை நமக்கு காட்டிவிட்டு பின்சென்று விடுகிறது. அவ்வுலகம் அந்த நாவல் கட்டமைத்துக் கொண்ட தர்க்கப்படி இயங்குகிறது. நாவலின் தர்க்கம் எவ்வளவு நம்பகத்தன்மையோடு இருக்கிறதோ அந்த அளவுக்கு நாவல் நமக்கு ‘உண்மையானதாக’ தோற்றம் தருகிறது. அந்த உண்மை எந்த அளவு நம்முடைய அன்றாடத்தில் இருந்து விலகி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாவல் நம்மை பரவசமோ எரிச்சலோ அடையச் செய்கிறது. அதாவது ஒரு நல்ல நாவல் ஒரே சமயம் தன்னை இயல்பானதாகவும் காட்டிக்கொண்டு இயல்பற்ற ஒன்றையும் சொல்லிக் கொண்டிருக்கிறது. வரலாறு, அறிபுனைவு, மீபுனைவு, தற்புனைவு போன்ற வகைமைகளில் ஒரு நாவல் எழுதப்படும்போது மேற்சொன்ன ‘இயல்பற்ற இயல்புத்தன்மையை’ ஒரு நாவலால் சற்று எளிதாக சாதிக்க முடியும். அன்றாடத்தில் நடக்க சாத்தியமில்லாத இந்த இயல்பற்ற இயல்புத்தன்மையைத்தான் நாம் மாய யதார்த்தம் என்று சொல்கிறோம். ஆனால் இயல்புவாத நாவல்களில் இந்த இயல்பற்ற இயல்புத்தன்மையை கொண்டுவருவது அவ்வளவு சுலபமானது அல்ல. ஏனெனில் இயல்புவாத நாவல்களில் அன்றாட நிகழ்வுகளைத்தாண்டி வேறெதுவும் இடம்பெறுவதில்லை. அன்றாடத்தை சொல்லிக் கொண்டே அதைமீறிய ஒன்றை வாசகனை உணரச் செய்வது இயல்புவாத ஆக்கங்களின் மிகப் பெரிய சவால். தமிழில் எழுதப்பட்ட இயல்புவாத யதார்த்தவாத படைப்புகளில் அன்றாடத்தை மீறும் தன்மை மிகக்குறைவு. நம்முடைய நாவலாசிரியர்கள் தவறவிடுவது எதை என்பதை எஸ் எல் பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலை வாசிக்கும்போது உணர முடிகிறது.

ஒரு குடும்பம் சிதைகிறது (கிரகபங்கா) என்ற நாவலின் தலைப்பில் சொல்லப்படும் சிதையவிருக்கும் குடும்பம் கங்கம்மாவுடையது தான் என்று நாவலின் முதல் அத்தியாயத்திலேயே நமக்குத் தெரிந்து விடுகிறது. கிரிராஜ் கிஷோரின் சதுரங்க குதிரை போல ஒரு குடும்பத்தின் சிதைவை கால மாற்றத்தின் விளைவாகவோ மண்ணும் மனிதரும் போல தனி மனித இருண்மையின் விளைவாகவோ இந்த நாவல் சித்தரிக்கவில்லை. மாறாக கங்கம்மாவின் குடும்பம் சிதைந்து அழிவது விதிக்கப்பட்ட ஒன்று என்பதைப் போல நாவல் பேசிச் செல்கிறது.

கங்கம்மா என்ற கணவனை இழந்த ஓரளவு நிலபுலன்கள் கொண்ட இளம் விதவை தன்னுடைய மகன்களான சென்னிகராயன் அப்பண்ணய்யா ஆகிய இருவருடன் ராமஸந்திர கிராமத்தில் வசித்து வருகிறாள். முதல் அத்தியாயத்திலேயே மகன்களை ‘தேவடியா மகன்களே’ என்று அவள் அழைக்கும்போதே நாவல் தொடங்கி விடுகிறது எனலாம். என் வாசிப்பில் ஒரு நாவல் ‘தொடங்கும்’ இடம் எனக்கு மிக முக்கியமானது. எழுதப்படும் முதல் வரியில் பெரும்பாலான நாவல்கள் தொடங்கி விடுவதில்லை. நாவல் பேசும் மையச்சிக்கல் வெளிப்படும் இடம்தான் உண்மையில் நாவலின் தொடக்கம். இந்த நாவல் பேசும் மையச்சிக்கல் என்ன?

இந்நாவலில் கவித்துவமான இடங்களோ தத்துவ தரப்புகளின் மோதலோ இல்லை. விவசாயம் செய்து பிழைக்கும் மக்களைக் கொண்ட கிராமத்தில் நாவல் நிகழ்ந்தாலும் சூழல் விவரணைகளோ இயற்கை வர்ணனைகளோ இல்லை.தமிழில் எழுதப்பட்ட இயல்புவாதப்படைப்புகளுடன் – பிறகு, செடல், அஞ்சலை – ஒப்பிட்டால் இந்த நாவல் நமக்கு காட்டும் உலகம் மேம்போக்கானது என்று சொல்லி விடலாம். இருபதுக்கும் அதிகமான முதன்மைக் கதாப்பாத்திரங்கள் கொண்ட நாவலில் யாருடைய முகமும் வாசகனின் மனதில் பதியும்படியான விவரிப்புகள் இல்லை. ஆனால் நாவலை வாசித்துச் செல்லும்போது இவை எதுவுமே நாவலின் குறைகளாகத் தெரியாமல் நாவல் எடுத்துக்கொண்ட பேசுபொருளுக்கு வலுசேர்ப்பதைக் காண்கிறோம்.

அம்மாவுடன் ஏற்பட்ட சண்டையால் கங்கம்மாவின் இரண்டாவது மகன் அப்பண்ணய்யா ஊர் தோட்டங்களுக்கு தீ வைத்துவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அதை அவனுடைய அண்ணன் சென்னிகராயனே ஊரிடம் சொல்லி விடுகிறான். கங்கம்மாவின் கணவர் விட்டுச்சென்ற மொத்த சொத்துகளையும் பிணத்தை கழுகுகள் பிய்த்துத் தின்பதுபோல ஊர் பிய்த்துத் தின்கிறது. வாரிசு என்கிற அடிப்படையில் சென்னிகராயனுக்கு வரவேண்டிய அவனுடைய தந்தை பார்த்த கணக்குப்பிள்ளை வேலையை சிவலிங்கன் தான் எடுத்துக்கொண்டு தர மறுக்கிறான். சிவே கவுடன் கங்கம்மாவின் நிலங்களை அடகுபிடித்து திருப்பித்தர மறுக்கிறான். பைரப்பா காட்டும் இந்த கிராமச் சித்தரிப்பு எதிர்மறையானது. ஊரில் ஒவ்வொருவரும் இன்னொருவரை அடித்துப் பிடுங்க காத்திருப்பவர்களாக தந்திரம் நிறைந்தவர்களாகவே வருகின்றனர். மாதேவய்யா, சர்வக்கா, நரசம்மா என ஒரு சிலரிடமே அறவுணர்வு இருக்கிறது.

கங்கம்மாவின் குடும்பத்தை அதன் சரிவிலிருந்து மீட்கும் ஏறத்தாழ ஒரு ‘மீட்பரை’ப் போன்றே கண்டி ஜோசியர் இந்த நாவலில் வருகிறார். நிலங்கள் அனைத்தையும் இழந்த மகனுக்கு வேலையையும் பெற முடியாத கங்கம்மாவின் குடும்பத்துக்கு தன் மகள் நஞ்சம்மாவை கொடுக்கிறார். மருமகனுக்கு கணக்குப்பிள்ளை வேலையையும் பெற்றுத் தருகிறார். ஆனால் சென்னிகராயரால் அவ்வேலையை சரியாகச் செய்ய முடிவதில்லை. கங்கம்மாவின் அவரச புத்தியால் நிலம் வீடு என அனைத்தையும் இழந்து குடும்பம் வீதிக்கு வருகிறது. இரண்டாவது மகன் அப்பண்ணய்யாவின் மனைவி அவனை விட்டுச் செல்கிறாள். கணவனின் கணக்குப்பிள்ளை வேலையைப் பயன்படுத்தி சிதைந்த குடும்பத்தை மீட்க நஞ்சம்மா தன்னுடைய இறுதிச்சொட்டு ஆற்றல்வரை செலவழித்துப் பாடுபடுகிறாள். அவளாலும் அக்குடும்பம் சிதைவதை தடுக்க முடிவதில்லை.

இந்த நாவலின் களம் என்பது கங்கம்மாவின் குடும்பம் தன்னுடைய சிதைவிலிருந்து மீண்டு வருவதற்கான தருணங்களால் நிறைந்திருக்கிறது. தொடக்கத்தில் பிறருடைய சுரண்டலால் அக்குடும்பம் நொடித்துப் போவது போலத்  தெரிந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அச்சிதைவு ‘விதியின் செயலோ’ என்று நம்மை சந்தேகப்பட வைப்பதுதான் நாவலின் வெற்றி.

கங்கம்மாவிற்கோ அவளுடைய மகன்கள் சென்னிகராயர் மற்றும் அப்பண்ணய்யாவுக்கோ யாரும் உதவுவதில்லை. மாறாக அவர்களின் முட்டாள்தனத்தை பயன்படுத்திக்கொண்டு கூடுமானவரை அவர்களை ஏய்க்கவே நினைக்கின்றனர். ஆனால் நஞ்சம்மா தலையெடுக்கத் தொடங்கியதும் நாவலில் அவளுக்கு நன்மை செய்கிறவர்கள் கண்ணுக்குத் தெரிகின்றனர். குண்டே கவுடர் நஞ்சம்மா தன் மூன்று குழந்தைகளுடன் குடியிருக்க இடம் தருகிறார். அவ்வூருக்கு வரும் ஆசிரியர் குழந்தைகள் படிக்க உதவுகிறார். மாதேவய்யா எல்லா வகையிலும் நஞ்சம்மாவுக்கு உதவியானவராக இருக்கிறார். கணக்குப்பிள்ளையின் உயரதிகாரியான ஷேக்தார்கூட அவளுக்கு உதவவே செய்கிறார். ஆனால் ப்ளேக் விஸ்வரூபம் எடுத்து நஞ்சம்மாவின் குடும்பத்தை அழிக்கிறது.

நாவலின் பாத்திரப்படைப்புகள் தனித்துவமானவை. ஒவ்வொரு பாத்திரமும் இன்னொன்றிலிருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டிருக்கும் விதம் அபாரமானது. உதாரணமாக நஞ்சம்மாவின் தந்தை கண்டி ஜோசியர். ஒரு புராண காலப் பாத்திரம் போல குதிரையில் சுற்றுகிறார். தன் ஊர் கணக்குப்பிள்ளையை அடித்துக் கொன்றுவிட்டோமோ என்ற பயத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் காசியில் சுற்றுகிறார். ஊருக்குத் திரும்பியதும் மறுபடியும் தன்னிடம் பிரச்சினை பண்ணும் ஊர் கணக்குப்பிள்ளை தலையில் மலத்தைக் கொட்டுகிறார். ஏவல் பில்லிசூன்யம் செய்து சம்பாதிக்கிறார். ஒரு இருபதாண்டு கால இடைவெளியில் நடைபெறும் இந்த நாவலில் ஒவ்வொரு பாத்திரமும் இதுபோன்ற உருமாற்றங்களை அடைகின்றன. பைரப்பா நாவலின் நம்பகத்தன்மையை இந்த பாத்திர உருமாற்றங்கள் வழியாகவே சாதிக்கிறார். நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான அம்சம் பிளேக். பிளேக்கை மாரியம்மனாக மக்கள் நினைக்கிறார்கள். பிளேக் வந்ததும் மொத்த ஊரும் ஊரைவிட்டு வெளியேறி குடிசை அமைத்து வாழ்கிறது. ஊரில் எலி விழுவது நின்றதும் மீண்டும் ஊருக்குள் செல்கின்றனர்.

உழைத்து மட்டுமே வாழ்ந்த நஞ்சம்மாவின் குடும்பத்தையும் பிளேக் விட்டுவைப்பதில்லை. ஒன்றுக்கும் உதவாத கணவனை வைத்துக்கொண்டு மகளின் திருமணத்தை முடிக்கிறாள். புத்திசாலியான மகனையும் பேரழகியான மகளையும் பிளேக்கிற்கு பலி கொடுக்கிறாள். சாகப் போகிறவள் மூன்றாவது பிள்ளை விசுவனை எண்ணி ஊர் திரும்புகிறாள். அவளும் பிளேக்கால் தாக்கப்பட்டு இறப்பதுடன் நாவல் முடிகிறது.

ஒரு குடும்பத்தின் அழிவு என்று மட்டுமே இந்த நாவலைப் பார்க்க முடியவில்லை. நஞ்சம்மா போன்ற ஒரு காவியத்தன்மை கொண்ட நாயகியால் கூட அக்குடும்பத்தை மீட்க முடிவதில்லை. அப்படியெனில் அங்கு நிகழ்வது அனைத்துமே ஏற்கனவே ‘திட்டமிடப்பட்ட’ ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. நஞ்சம்மா தன் குடும்பத்தை மெல்ல மெல்ல மீட்கும் தருணங்களில் பிளேக் வந்து மொத்தமாக அவள் கனவுகளைச் சூறையாடுகிறது. அப்படியெனில் அக்குடும்பம் அழிய வேண்டும் என்பது யாருடைய முடிவு?

நண்பர் ஜெயவேலிடம் இந்த நாவலைப் பற்றி பேசியபோது நஞ்சம்மா கீதை அருளப்பட்ட அர்ஜுனனின் பெண் வடிவம் என்று சொன்னார். கீதையில் சொல்லப்பட்டும் ஒரு லட்சிய உருவத்தின் செயல் வடிவமாகவே நஞ்சம்மா வருகிறாள். பெண்மையின் குண இயல்புகளாக சொல்லப்படும் எந்த அம்சமும் நஞ்சம்மாவிடம் இல்லை. சொல்லப்போனால் ‘தாய்மையின் துயர்’ கூட அவளிடம் அவ்வளவாக வெளிப்படவில்லை. தன்னுடைய இரண்டு குழந்தைகள் இறந்ததும் மூன்றாவது மகன் விசுவனை நரசிக்கு தத்துக்கொடுத்து ‘எனக்கு குழந்தை இருப்பது இவளுக்குப் பிடிக்கல போலிருக்கு’ என்றுதான் தெய்வத்தை திட்டுகிறாள். நான் வாசித்த எந்த ஒரு நவீனத்துவ நாவலை விடவும் இந்த நாவல் மிகத்தீவிரமாக இருத்தலியல் சிக்கலைப் பேசுகிறது. ஆனால் நாவலின் தத்துவத் தளம் இருத்தலியம் அல்ல. செவ்வியல் ஆக்கங்களின் அம்சங்கள் எதுவும் நாவலில் வெளிப்படவில்லை என்றாலும் செவ்வியல் தன்மையை இந்நாவல் அடைகிறது. அதை எவ்வாறு இந்த நாவல் சாதிக்கிறது?

பொதுவாக செவ்வியல் ஆக்கங்கள் நன்மையும் தீமையும் கலந்ததாக வாழ்க்கையைச் சித்தரிக்கும் தன்மை கொண்டிருக்கும். இந்நாவலில் வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்மறைத் தன்மையுடன்தான் அணுகப்படுகிறது. எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவராலும் லட்சியவாதியாலும் தடுத்த நிறுத்த முடியாத ஒரு அழிவினை நாவல் சொல்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு மகாபாரத்துடன் ஒரு தொடர்பிருப்பதாகத் தோன்றுகிறது. குருக்ஷேத்திர போர் நிகழாமல் தடுக்கப்படுவதற்கான எண்ணற்ற காரணிகள் மகாபாரத்துக்குள் உள்ளன. ஆனால் நிகழும் ஒவ்வொரு சம்பவமும் போரை நோக்கியே அனைவரையும் உந்துகிறது. ஒரு மிகப்பெரிய அழிவு நிகழ்கிறது. ஏறத்தாழ இந்நாவலில் நிகழ்வதும் அதுதான். மகாபாரதத்தில் மிகப்பெரிய மதியூகியான  கிருஷ்ணனால் எப்படி போரைத் தடுக்க முடியாமல் போகிறதோ அதுதான் நஞ்சம்மாவுக்கு நடக்கிறது. எத்தகைய மாமனிதரும் காலத்தின் முன் சிறுத்துப் போகும் சித்திரத்தை வழங்குவதால் இந்நாவலை மகாபாரத்துடன் ஒப்பிடலாம். இந்நாவலின் செவ்வியல் தன்மைக்கும் அதுதான் காரணம். காலத்தின் பெருந்திட்டத்தின் (அல்லது திட்டமின்மை) முன் மனித எத்தனங்கள் ஒன்றுமில்லாமல் போவதே சித்தரித்து இருப்பதால் ஒரு குடும்பம் சிதைகிறது எக்காலத்துக்குமான ஆக்கமாக மாறிவிடுகிறது.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர். ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

1 Comment

  1. சுரேஷ் பிரதீப் அவர்கள் விமர்சனம் மிக அற்புதம். உங்களை பற்றி இந்த விமர்சனத்தின் மூலம் தான் அறிகிறேன். மேலும் உங்கள் நட்பும், உங்கள் எழுத்தை வாசிக்கவும். ஆவல். உங்கள் அலை பேசி எனக்கு அனுப்புங்கள். மீண்டும் சந்திப்போம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.