/

மொழியை அனுபவமாக்கும் ஜெயமோகனின் மாயப்பொன்: எம்.எல்.ஜானி

தமிழில்: ஜெயராம், இரம்யா

பி.ராமன் மொழியாக்கம் செய்து மலையாளத்தில் வெளியாகிய ஜெயமோகனின் ‘மாயப்பொன்’ சிறுகதைத்தொகுப்புக்கு ஜானி எம்.எல் எழுதிய விமர்சனக் கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது.

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் புழங்கும் பிரதேசங்களில் அம்மொழிகள் கலந்து இசையாகவும் அருவமாகவும் மாறும் சந்தர்பங்கள் அமையப் பெறுகிறது. கடற்கரையில் ஈரம் அலையுடன் இறங்கி மறைவது போல இரு மொழிகள் கலக்கும் இடங்கள் காணக்கிடைக்கின்றன. மொழிகளின் உச்ச சாத்தியங்களிலிருந்து அவற்றைப் பார்க்கும் போது அவை வேறு தளங்களுக்கு அகன்று அகன்று தனக்கான இடத்தை தேடிக் கொள்ளும் கலவை மொழிகளாக இருக்கின்றன. 

இருமொழிகள் கலந்த பண்பாட்டைச் சேர்ந்த மனிதர்களில் இரு வரலாறுகளின் தொடர்ச்சியையும் இரு மொழிகள் இணைந்தொழுகும் மொழி அழகையும் பார்க்க முடியும். வார்த்தைப் பிரயோகங்கள் தவறிவிட்டது என்று முதலில் தோன்றும் கவிதை வரிகள் கூர்ந்து வாசிக்கும் தோறும் மேலான அர்த்தத்தை அளிப்பது போல இம்மொழிகளில் அனுபவத்தின் செறிவை உணர முடியும். ‘மாயப்பொன்’ என்ற ஜெயமோகனின் பத்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பு அவ்வனுபவங்களை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

தமிழகத்துடன் கலந்து விட்ட பழைய தென் திருவிதாங்கூர் நிலப்பகுதி மனிதர்களின் அனுபவங்களையும் வரலாற்றையும் அதன் யதார்த்த தன்மை சிறிதளவும் குறையாமல் ஜெயமோகன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார். கொரோனா ஊரடங்குத் தனிமையை வெல்ல தன் சக எழுத்தாளர்களிடம் தினமும் ஒரு கதை எழுத கேட்டுக் கொண்டதுடன் தானும் அதை பின்பற்றி தொடர்ந்து நூறு கதைகள் எழுதினார் ஜெயமோகன். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து கதைகளையே பி. ராமன்  மொழிபெயர்த்துள்ளார். தமிழ்-மலையாளம் கலவை மொழியின் சுவை மற்றும் இக்கலவை மொழி நிலை நிற்கும் நாஞ்சில் நாட்டின் சிறப்புகள் குன்றாமல் பி. ராமன் வெற்றிகரமாக மொழிபெயர்த்திருப்பதை வாசிப்பில் உணர முடிகிறது. ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுபவர். ஆனால் இந்த பத்து சிறுகதைகளை தானே மொழிபெயர்க்காமல் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவரிடம் கையளித்திருப்பது அந்த மொழியின் அனுபவத்தை தக்க வைப்பதற்கு உதவுகின்றது. தன்னைத் தான் மொழிபெயர்ப்பதால் வரும் சிக்கலையும் இதன் மூலம் களைந்திருக்கிறார். 

இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு மெல்ல கோலோச்சும் காலகட்டம் இது. அதனால் படைப்பாளியின் பெயருடன் மொழிப்பெயர்பாளனின் பெயரும் நூல்களின் அட்டைகளில் காணமுடிகிறது. படைப்புகளின் வீச்சால் இது நடக்கிறது. இங்கே தன் படைப்பில் ஒன்றிவிடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நேசையன் என்ற சாராயம் காய்ச்சுபவனின் கதை ‘மாயப்பொன்’ சிறுகதையில் சொல்லப்படுகிறது. அவன் நித்தமும் தான் காய்ச்சுவதிலேயே அரிய சுவையுடைய சாரயத்தை மீளக் காய்ச்சி கண்டடைய எத்தனிக்கிறான். அதை எதிர்பாராது கைவரப்பெற்ற ஒரு இரவில் மற்றவர்களிடம் பிரகடனப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தானே குடித்துவிடுகிறான். அந்த தருணத்தில் மென்முடிகள் நிலவில் பொன் என ஒளிவிட, தீ மின்னும் கண்களுடன், அமர்ந்தநிலையிலேயே ஆளுயரத்தில், அவனருகே தெரிந்த பெரும்புலியை  மாயப்பொன் தருணமாக கதையில் வடித்துள்ளார். புலி என்பது இங்கே படைப்பாளிக்கு காலமாகும். ‘இருளே! என்னை விழுங்கு!’ என்று காலத்தை நோக்கி அலறியவனின் அதே மண்ணில் அதிகாரமும், குடும்பமும், நாடும் இல்லாதவன் காலப்பெரும்புலிக்கு முன்னால் கீழடங்குகிறான். எழுத்தாளன் என்பவன் காலத்தின் முன்னால் மட்டுமே தன் படைப்பாற்றலை வைத்து அடிபணிய வேண்டும் என்று ஜெயமோகன் இக்கதையினூடாக மறைமுகமாக உணர்த்துகிறார்.

கலையால் தன்னை நிரப்பிக் கொண்டவர்களின் சுவிசேஷமாகவும் கலகக் குரலாகவும் இந்தக் கதைகளை வாசிக்கலாம். ஏற்கனவே இருக்கும் அதே அச்சில் தன்னையும் வார்த்தெடுத்துக் கொள்ளும் சலிப்பூட்டும் சமூகத்தை நோக்கி பரிகசிக்கும் கதாபாத்திரங்களை ஜெயமோகன் படைப்பதை வியப்புடன் மட்டுமே பார்க்க முடிகிறது. அதிலும் அதிகார உச்சங்களில் இருப்பவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக  கலைஞர்களே அவர்களுக்காக கொடி பிடிக்கவும் வியந்தோதவும் ஆரம்பித்திருக்கும் மானங்கெட்ட இன்றைய காலத்தில்.

“தேவன்” என்ற முதல் கதையில் ஒரு பழமை வாய்ந்த வீட்டின் பூசைஅறைச் சுவரில் அழிந்து போன தேவியின் உருவத்தை வரைந்து கொடுப்பதற்கு வரும் மாணிக்கம் என்ற ஆசாரியைப் பின்தொடரும் இசக்கியம்மை என்ற கிழவியைப் பற்றிக் கூறும் இக்கதை பேசுவது சிவ-சக்தி வெளிப்பாட்டை ஆகும். தேவியை அழைத்தால் வரும் அளவிற்கு ஆற்றல் உள்ள தேவனாக மாணிக்கம் உள்ளார். வருடங்கள் முன்பு இறந்து போன இசக்கியம்மையின் மகளை தன்னால் திருப்பிக் கொண்டு வர முடியும் என்ற மாணிக்கத்தின் உறுதி தான் கதையின் மையம். இசக்கியம்மை சைவ வழிபாட்டில் உள்ள யட்சியாகவும் ஆசாரி மாடனும் ஆக உள்ளார். 

 ‘குருவி’ என்ற கதையும் முக்கியமானது. நன்றாக சால்டரிங் செய்யத் தெரிந்த மாடன் பிள்ளை(மாடன் பிள்ளை இங்கே சிவனின் நடராஜ அம்சமாகவும் அவர் செய்யும் சால்டரிங் வேலைகள் பிரபஞ்ச உருவாக்கத்தின் நடராஜ நடனமுமாகத் தெரிகிறது) தன்னை ஒரு கலைஞன் என்று சொல்லிக் கொள்கிறார். சாராயத்தை தன் படைப்பாகக் கருதும் நேசையனை இது ஞாபகப்படுத்துகிறது . குடி மற்றும் மேலதிகாரியுடன் அடங்கிப் போகாமை முதலிய காரணத்தால் இப்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இறுதியில் மத்திய அமைச்சர் வரும் போது  ஃபைபர் கம்பிகளை கலைநயத்தோடு சால்டரிங் செய்ய மாடன் பிள்ளையின் உதவி தேவையாகிறது. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு குருவியின் அற்புதமான கூட்டை மாடன் பிள்ளை பார்க்கிறார். “நீயும் குருவிதாண்டே” என்ற வரிகளைக் கேட்டு அழுகிறார். கலைநயத்தோடு சால்டரிங் கம்பிகளை இணைத்து உருவாக்கப்படும் அந்த வேலையை குருவி கட்டும் கூட்டோடு ஒப்பிட்டு தன்னையும் ஒரு குருவியென்றே உணர்கிறார். 

மாடன் பிள்ளை தன்னை வரையறுத்துக்  கூறும்போது “வே, நான் மனுசன் இல்ல. நான் ஆர்ட்டிஸ்டு. நான் மனுசன் இல்லவே. நான் பாவி. நான் கேடுகெட்ட குடிகார நாயி. நான் அசிங்கம் பிடிச்ச மிருகம்.. பண்ணி. நான் புளுவாக்கும். பீயிலே நெளியுத புளு, நான் சாத்தானாக்கும். பேயாக்கும். சங்க கடிச்சு ரெத்தம் குடிக்குத மாடனாக்கும். என்ன மயிரானாலும் உம்மையும் உங்காளுகளையும் மாதிரி மண்ணாப்போன மனுசனா இருக்கமாட்டேன் வே…” என்கிறான். 

ஜெயமோகனின் இக்கதைகளில் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் மீதான சமூகத்தின் அணுகுமுறை மற்றும் அதன் மீதான விமர்சனம் ஆகியவை உட்பொதிந்துள்ளது. கலைஞன் சமையல்காரனாக இருந்தாலும் பந்தல் போடுபவனாக இருந்தாலும் மதிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும் கதையாக நிறபொலி (தமிழில்: சூழ்திரு) விளங்குகிறது. இந்தக்கதையின் வழி ஒரு பிரதேசத்தின் ஒட்டுமொத்த உணவுச் சுவையையும் ஜெயமோகனால் விவரித்துவிட முடிகிறது.  மாத்ருபூமியின் வெளியீடாக வந்திருக்கும் இந்த கதைத் தொகுப்பு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை

ஜானி

ஜானி எம்.எல் மலையாளத்தில் எழுதிவரும் எழுத்தாளர், விமர்சகர் ஆவார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.