புறப்படல்

நெடுந்தொலைவிலிருந்து

வந்திருந்தன நாவாய்கள் 

நீ புறப்படத் தயாராயிருந்தாய்

ரோஜாக்கள், மல்லிகைகள் என

எதனையும் இனி எடுத்துச் செல்ல முடியாது

குறைந்த பட்சம்  அவற்றின் வாசங்களையாவது

ஒரு குடுவைக்குள் அடைத்துக் கொண்டு போக

நீ பிரயத்தனப்பட்டாய்

கூட்டிலிருந்த குருவிகளைத் திறந்து விட்டாய்

அவையொரு நாளில்

ஏழு கடல் தாண்டி நீ இருக்கும்இடத்திற்கு

வந்து சேரும் என்றாய்

ஒரு பிடி மண் உன் ஞாபகத்திற்குத் தேவைப்பட்டது

நினைவுகளைத் துறப்பதற்கு யாரால் முடியும்?

இனியெப்போதும் வர முடியாது

எனத் தோன்றிய இந்த இடத்தினை

தெருவுக்கு வெளியே

ஒரு பார்வையாளனாய் நீ கடந்து போகும்

இந்தக் கணத்தினை அருளிய காலத்தை

சிறு வெறுப்போடு நினைவு கூர்கிறேன்

0

கைவிடப்பட்டநிலம்

ஊரெல்லையில் உயர்த்தி அடைக்கப்பட்ட

தகர வேலிகளுக்கு மேலாக

தேக்கம்பூக்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தபோது

பாம்பொன்றின் விசித்திர மணம்

முற்றத்தில் பரவத் தொடங்கியிருந்தது

படமெடுத்தாடிய நாகத்தைக் கனவில் கண்டதாய்

ஊரவன்  ஒருவன் கூறிய போது

புலன்கள் யாவும் கூருற்றன

கை விட்ட நிலங்களில்

கறையான் ஏறிப் படர்ந்திருக்கும்

என நினைத்தோம்  

பாம்புகளின் புகலிடமாயிருக்கும் என

நினைத்துக் கூடப் பார்த்திருக்கவில்லை

அங்கே இப்போது

வளை முகடுகளான கோபுரங்கள்

வான் தொட்டுக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்

செங்காவிப் பூக்களின் நேசமற்ற வாசனை

நெடு மரமொன்றில் கிளம்பி

புகைகளாய் அலைவதாகவும்

எங்கள் வீடுகளின் முற்றங்களில்

புகை வீச்சம் அதிகமாயிருப்பதாகவும்

ஊரெல்லையில் விறகு வெட்டச் சென்றவர்கள்

வந்து சொன்னார்கள்

காட்டுச் செடிகளைப் பற்றிக் கவலையேயில்லை

போகுமொரு நாளில் வெட்டியெறியலாம்

ஆனால் அரூபமான கரங்கள்

வளர்ந்துகொண்டேயிருக்கின்ற

அந்த நெடு மரத்தின் விஷப்புகை பற்றித்தான் யோசிக்காமலிருக்க முடியவில்லை

0

அப்படியேஆகுக

ஒற்றைத்துணி போர்த்தபடி

சோர்ந்து அமர்ந்திருக்கிறாய்

கண்களில் தெரியும் வலியை

உன்னால் மறைக்க முடியவில்லை

குரல் வளையிலிருந்து  எழுகின்ற

தாகத்திற்குத் தடையிட்டிருக்கிறாய்  

ஆனாலும்,

தருவதை மறுக்காமல்

நீ பருக வேண்டித்தானிருக்கிறது

உனக்குப் பசி உணர்வில்லாவிட்டாலும் கூட

அவர்கள் தருவதை நீ உண்ண வேண்டும்

உனக்கொரு போர்வையை

அவர்கள் தான் கொடுத்தார்கள்

அது இல்லாமலிருந்தாலும், இருந்தாலும்

அதைப்பற்றி உனக்கொன்றுமில்லை.

அவர்களுக்கு

உன் உடலை மறைப்பதை விட

உடலிலிருக்கின்ற காயங்களை

மறைக்க வேண்டியிருக்கிறது

உனது தாகத்தை, பசியைத் தமது காமத்தை

மறைக்க வேண்டியிருக்கிறது

அதனால் அந்த ஒற்றைப் போர்வையை

அவர்கள் உனக்குத் தந்திருக்கிறார்கள்

ஆனால், நான் அறிவேன்

உணர்வற்ற அந்தக் கண்களில்

என்னால் அறிய முடிகிறது

நீ இல்லாமல் போயிருந்தால்

தோற்றுப்போன உன் கண்களின் காயத்தை

உலகம் பார்த்திருக்காதென்று,

நீ ஒரு புகையைப் போலக் 

கரைந்து போக  விரும்பியிருந்தாய் என்பதையும்,

அந்தப் புகையிலிருந்தொரு நச்சுப்பதார்த்தத்தை

அவர்களின் நாசிக்குள் நீ

ஊற்றியிருக்க வேண்டுமென்றும்

நானும் தான் விரும்பினேன்

அது, உனதல்ல

எனது துரதிருஷ்டம்

ஆயுதங்கள் அற்ற காலத்திற்குத்

திரும்பியிருந்தாலும்,

எப்போதும்

நான் நினைப்பது இதைத்தான்.

வரங்களை வழங்கும் கடவுள் ஒருவன்

எந்த மதத்தில் இருப்பானாகிலும்

ஒரு யுத்த களத்தின் இறுதியில்

கை விடப்பட்ட பெண்கள் மீது

கருணையைப் பொழியட்டும்

அந்தப் பெண்கள் நீராவியாகவோ,

புகையைப் போலவோ

கரைந்து போகட்டும்

யுத்த காலத்தில் பிறந்ததற்கான

தண்டனை ஒன்று இருக்கத்தான் வேண்டுமெனில்

அது அப்படியே ஆகட்டும்

0

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

1 Comment

  1. மிக அருமையான கவிதைகள்! இந்தக் கவிஞரது கவிதைகள் அறிமுகமாவது எனக்கு இதுதான் முதல் முறை.

    “புறப்படல்” – Imagery at its best!.
    கைவிடப்பட்டநிலம் – நல்ல கவிதை
    அப்படியேஆகுக – உள்மனக் கொந்தளிபின் உச்சம்

    புதுமையான சொற்பிரயோகங்கள் கூடுதல் அழகையும், உணர்வையும் சேர்க்கின்றன: நாவாய், அருளிய காலத்தை சிறு வெறுப்போடு,
    நேசமற்ற வாசனை, அரூபமான கரங்கள், நச்சுப்பதார்த்தம் என்பன.

    ‘கை விட்ட நிலங்களில்’  என்பது ‘கைவிடப்பட்ட’ என்று இருக்க வேண்டுமோ?

    மனதில் மாயாது நிற்கும் வரிகள் இவை:

    வரங்களை வழங்கும் கடவுள் ஒருவன்
    எந்த மதத்தில் இருப்பானாகிலும்
    ஒரு யுத்த களத்தின் இறுதியில்
    கை விடப்பட்ட பெண்கள் மீது
    கருணையைப் பொழியட்டும்

    கவிஞர் தாட்சாயணிக்கு அன்புநிறை வாழ்த்துகள்!

    ~ந. சந்திரக்குமார்

Leave a Reply to N. Chandrakumar Cancel reply

Your email address will not be published.