சமனற்ற நீதியின் கீழ் சரியும் தராசு : தாட்சாயணி

‘மனிதனைக் காட்டுங்கள், குற்றத்தை நான் கண்டுபிடிப்பேன்’ என்பது ஸ்டாலின் காலத்து சோவியத் யூனியன் ஆர்.ஜி.பி தலைவர் லவர்னிட்டி பெரியாவின் பிரபலமானதும், மோசமானதுமான கூற்றாகும். அதனை இன்னொரு வடிவத்தில் ஹார்வாட்  பல்கலைக்கழகப் பேராசிரியரான அலன் டெர்கோவிட்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் தங்களது கட்டற்ற சுதந்திரத்தால் முதலில் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கவும், பின்னர் சட்டப் புத்தகங்களைப் புரட்டி  ஒரு குற்றத்தைக் கண்டு பிடித்து அதை அந்த மனிதன் மீது சுமத்துவதற்கும் எளிதில் தூண்டப்படுகிறார்கள்’.

மேற்படி கூற்றுக்கள் தரும் அர்த்தம் எந்தவொரு மனிதனையும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடியது. அவற்றின் நேரடி பாதிப்பிற்குள்ளாகி, சமமற்ற நீதி என அமெரிக்காவின் நீதி முறையை விமர்சனத்திற்குள்ளாக்கும் ராஜ் ராஜரட்ணம் மேலும் இவ்வாறு கூறுகிறார்.

அமெரிக்காவில் இன்று 4700  இற்கு மேற்பட்ட சட்ட முறைகள் உள்ளன. அங்குள்ள அரச தரப்பு வழக்கறிஞர்களின் மிரட்டல்கள் நண்பர்களை எதிரியாக்கவும், குடும்ப உறுப்பினர்களை அரசுத்தரப்பு சாட்சி ஆக்கவும், ஊழியர்களை மலம் தின்னும் புறாக்கள் ஆகவும் ஆக்குகின்றன. குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 97 % தாம் குற்றவாளிகள் என மன்றாடுவதன் மூலம் குறைந்தபட்ச தண்டனை பெறுகின்றனர்.

நாகரிகத்தின் உச்சத்திலிருக்கும் அமெரிக்காவில்  இவ்வாறான கோளாறுகள் நீதித் துறையில் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

2009 இல் உலகம் முழுவதும் பொருளாதாரக் கட்டமைப்பு  அதல பாதாளத்தில் வீழ்ந்த போது, அமெரிக்க வங்கி, நிதி நிறுவனங்கள் திவாலாகின. அமெரிக்காவின் பல லட்சம் மக்கள் வீடுகள், வாழ்நாள் சேமிப்புக்களை இழந்து வீதிக்கு வந்தார்கள். நாடு முழுவதும் கொந்தளிப்பும், கொதிப்பும் பரவியிருந்தன. அக் கொந்தளிப்பை மக்களிடமிருந்து மடை மாற்றுவதற்கு அரசுக்குத் தேவைப்பட்டது பெரு மில்லியனர் மீதான ஊழல் குற்றச்சாட்டு. அதில் சிக்கிக் கொண்ட ராஜ் ராஜரட்ணம் எனும் தொழில் அதிபரின் மனப் போராட்டமும், தன் மீது சுமத்தப்பட்ட மனச் சாட்சியற்ற குற்றச்சாட்டுகளைப் பொய்யென  நிரூபிக்க முயன்ற போது எழுந்த கேள்விகளும், குமுறல்களுமே  அமெரிக்காவின் சமமற்ற நீதியை உலகிற்குத் துலாம்பரமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறன.

நீதி ஏன் ஒவ்வொருவருக்கும் சமனற்றதாக இருக்கிறது? அதிகாரங்கள் தமதிச்சைப்படி தானும், தன் வாழ்வுமென வாழ்ந்து கொண்டிருக்கும் சாமானிய மனிதனை எதற்காகப் பேரச்சம் நிலவும் சூழலுக்குள் தள்ளி அவனை நீதியின் மறு  புறத்தில் குப்புற  வீழ்த்த முயற்சிக்கின்றன எனப் பல்லாயிரம் கேள்விகள் உருக் கொள்கின்றன.

சாமானியர் என்றால் அன்றாட வாழ்விற்காக அல்லாடுபவர் அல்ல. பில்லியனர் என்று பட்டம் சூட்டப்பட்டவர். அதன் மூலம் பணத்தில் புரளும் ஒருவர் என்பது எளிய மனிதர்களுக்கு  ஒரு துவேஷத்தை ஏற்படுத்தக் கூடிய விடயம். இங்கு முற்பராவில் நான் சாமானியர் என்பது அதிகார நாடொன்றின் முன் இனத்தால், தேசத்தால் சாமானியராகிப் போன தென்னாசியாவின் கண்ணீர்த்துளி போல் நின்றிலங்குகின்ற இலங்கையில் பிறந்த ஒருவர் அமெரிக்காவில் குடியிருந்தாலும், அந்நாட்டின் அதிகாரத்தின் முன் அவர் கிள்ளுக்கீரை என்றாகிய சாமானியத் தன்மையை மட்டுமே.

பதினொரு வயது வரை இலங்கையில் பூர்வீகத்தைக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து தமிழகத்திலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தன் கல்வியைத் தொடர்ந்து விடுமுறையில் தாய்நாடு வந்த காலத்தில் கொடிய இனப்பிரச்சினையின் கோர முகத்தைத் தரிசித்துத் தன் நாட்டிலே  அந்நியனாக உணர்ந்து, அமெரிக்காவின் நியூ ஜோர்க்கில்  தன் வாழிடத்தைத் தக்க வைத்துத் தன் தொழிலையும், முதலீடுகளையும் அந்நாட்டிலேயே ஆரம்பித்து அதுவே தன் நாடென நம்பி வாழ ஆரம்பித்த ஒருவருக்கு அந்நாடு கொடுத்த தண்டனை அவமானகரமானது.

நீதி ஒவ்வொரு தடவையும் செத்துச், செத்துப் பிழைக்கிறது. நீதியையும், நேர்மையையும் சொல்லிச் சொல்லி வளர்த்த பெற்றோருக்கு மூத்த மைந்தனாகப் பிறந்து எதையும் எதிர் கொண்டு வளர்ந்த ஒருவர் பேரிடிகளால் தாக்கப்படுவது என்பது மனரீதியாகப் பலஹீனத்தை அடைவது. எப்போதும் வெற்றியையே சந்தித்து வரும் ஒருவர், உலகளாவிய ரீதியில் பணத்தாலும், கௌரவத்தாலும் ஈட்டியிருக்கின்ற சமூக அந்தஸ்து ஒரு நொடியில் அரசத் தரப்புப்புலனாய்வாளர்களால் குலைக்கப்பட்டு மேலும், மேலும் பொய்களால் மெருகூட்டப்படுகிறது. அரசுத்தரப்போ, அரச வழக்கறிஞரோ சரிந்து கிடைக்கும் தமது பொலிவை மீட்டுக் கொள்வதற்குத் தேர்ந்து கொள்ளும் வழி முறையாக, பிரபலமான சாதாரணரை மிஞ்சிய வளர்ச்சி கொண்ட பெருமித மிக்க  பொறாமைப்படத் தூண்டத்தக்க ஒருவர் மீது பழி சுமத்தக் காத்திருந்து அவர் மீதான சேற்றைப் பூசியிருக்கிறார்கள். நீதியின் பால் நின்று கொண்டிருக்கும் ஒருவரைத்தவிர , வேறொருவராகவிருப்பின் அந்தச் சேற்றைக் கழுவுவதற்காக அதனைப் பூசியது தாமேயென ஒத்துக் கொண்டிருப்பர். ஆனால், ஓர்மம் மிகுந்த நேர்மையாளனாகிய ஒருவன் எதிர்த்து நின்று தன்னைச் சூழ்ந்த பொய்கள் நடுவே மீள்வதற்குப் போராடுகின்றான். அதுவே சமனற்ற நீதியாக நீதி தேவதையின் தராசைச் சரிய வைக்கிறது.

ராஜ் ராஜரட்ணம் 2009  இல் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பின் சிறையிலிருந்த ஏழு வருடங்களும் தன்னுடைய வாழ்வையும், அவமானத்தையும், சிதைவுகளையும் மனதில் சீர் தூக்கி எழுதிய தொகுப்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு 2023  இல் சமனற்ற நீதியாக வெளியிடப்பட் டிருக்கிறது.

குற்றவாளிகளின் தண்டனைக்கூடமாக இருக்கின்ற சிறைச்சாலைகள் அவர்களைத் திருத்தி அமைப்பதற்கான தனிமையையும், அச் சூழலில் ஒறுக்கப்படும் போது மனது நல்லவற்றைத் தேர்வதற்குமான பயிற்சிக் காலமுமாக அமைவதுண்டு. சிறை என்பது ஒரு விதத்தில் குற்றவாளிகள் மீதான அசூயையைக் கிளம்புவதாக இருந்தாலும், தேச விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரைக்கும் தியாகிகள் தண்டனை பெற்ற இடமாகவும், அவ்வகையில் அது கெளரவம் பெறும் இடமாகவும் அமைந்திருந்தது. அக்காலம் குற்றவாளிகளின் மனத்தைச் செம்மைப்படுத்துவதற்காகவென எதிர்பார்க்கப்பட்டாலும், சுதந்திரப் போராட்ட காலத் தியாகிகள் விடயத்தில் பல்வேறு கடித இலக்கியங்கள் முளைத்த விளை நிலம் எனவும் சொல்ல முடியும், குடும்பம், சமூகம், போராட்டம் என்று அலைந்து கொண்டே இருப்பவர்களுக்கு சிறைச்சாலை வெளியுலக தரிசனத்தை மறுத்தாலும், அவர்களின் சிந்தனையைக் கூர் தீட்டி , அற்புத படைப்புக்களை வெளிக் கொணரும் வெளியாகவும் திகழ்கிறது. நேருவின் கடிதங்கள் பிரசித்தி பெற்றதையும், காந்திஜியின் சுயசரிதத்தையும் இவ்வகையில் குறிப்பிடலாம். இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளாகப் பல வருடங்கள் வாடுபவர்கள் கூட, ஏனைய குற்றவாளிகளோடு ஒன்றிணைய முடியாமல் தனித்த ஒரு உலகத்தைத் தங்களுக்குள் சிருஷ்டித்துச் சிறை தந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான இலக்கியத்தைப் படைத்து வருகின்றனர்.

ராஜ் ராஜரட்ணம் அரசியல் கைதியல்ல. சுதந்திர போராட்ட வீரருமல்ல.அமெரிக்காவில் ஒரு பெரும் தொழில் அதிபராகத் திகழ்ந்தவர். பல்வேறு வியாபாரக் குழுமங்களைப் பொறுப்பேற்று வணிகத்தில் பெரியதொரு புள்ளியாகவிருந்தவர்.அவர் மீது அமெரிக்க அரசினால் குற்றம் சுமத்தப்படுகிறது. குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் போது தண்டனை குறைக்கப்படுகிறது. அதற்காகக் குற்றம் இழைக்காதவரால் எவ்வாறு குற்ற ஒப்புதல் வழங்க முடியும்.சிறு வயதில் பெற்றவர்களால் போதிக்கப்பட்ட நீதி உணர்வை மேவி அவரால் தன்னால் இழைக்கப்படாத குற்றங்களுக்கு உரிமை கோர முடியவில்லை. நியாயம் வெல்லும் எனும் அவ்வுணர்வினைக் கடைசி வரை மனதில் கொள்கிறார். எனினும் ஒரு நிரபராதிக்கான தண்டனை பதினொரு வருடங்களுக்கு மேல் தீர்ப்பளிக்கப்பட்டு நீதி தேவதையைச் சோதனை செய்கிறது.

சினிமாவில் நாம் பார்க்கின்ற கதாபாத்திரங்கள் கற்பனையானவை. அதீத புனைவுகள் என நாம் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. ஆனால், அதற்கு சற்றும் குறையாத விதத்தில் ராஜ் ராஜரட்ணத்திற்கெதிரான சதிவலையில் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் தம்மை நடித்துக் கொண்டிருந்தன.

தன்னுடைய சுயசரிதத்தை எழுதுவதற்கு ராஜ் ராஜரட்ணத்திற்கு உடனடியாகவே நேரமும், மனமும் வாய்த்திருக்குமெனச் சொல்ல முடியாது. பெரும் உழைப்பாளியும், திறமைசாலியுமான ராஜரட்ணம் தனக்கெதிரான வழக்கை நடத்துவதற்கான வழக்கறிஞர்களைத் தேர்வதிலும், மன உளைச்சல்களிலிருந்து விடுபட்டு விடுதலை பெறவும், தன் வியாபார நிறுவனத்தை மீட்கவும், அதில் முதலிட்டுள்ள நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் தவிர்க்கவும், குடும்ப நலன் பேணவும்  தன் நேரத்தைச் சிந்திப்பதில் குவித்திருக்க முடியும். ஆனாலும், அதற்கும் மிஞ்சி இருக்கும் நேரம் உறக்கத்தைப் பறித்து, மனதைப் பிறாண்டி வலி கொடுத்திருக்கக் கூடும். அந்த வலியிலிருந்து மீள்வதற்கான வழியாகவும், இன்னும்   பல்லாயிரம் பேர் இவ்வாறான சிக்கல்களில் இனியும் விழக்கூடாது என்பதற்காகவும் ராஜ் ராஜரட்ணம் இந்நூலை எழுதியிருக்கக் கூடும்.

இதனை எழுதத் தொடங்கிய பிறகு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மீள மனதில் மீட்டி எழுதுவதற்கு ஒரு நாளில் ஒரு மணித்தியாலத்திலிருந்து மூன்று மணித்தியாலங்கள் வரை அவர் செலவளித்திருக்கிறார்.

நியாயமானவர்களுக்கு, நியாயமே கிட்டும் என்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை எவ்வளவு? தனது காலத்தில் பதினொரு வருடங்களை ஒருவர் அதற்குப் பலி கொடுத்திருக்கிறார் என்பது அறத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு வலிதான எதிர்மறை உணர்வுகளைக் கொடுத்து விடுவதை இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை.

உட்தகவல்   வணிகம் மேற்கொண்டோர் எனக் குற்றம் சாட்டப்பட்ட ராஜ் ராஜரட்ணம் எதிர்கொண்ட மனிதர்கள் சுவாரஸ்யமானவர்கள். அவர் எதிர்கொள்ள நேரிட்ட சம்பவங்களும், சவால்களும் தமிழ் சினிமாவின் பரபரப்பை விட அதிகம் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவை.

ப்ரீத் பராரா எனப்படும் அரசதுறை வழக்கறிஞர்  இவ்வழக்கின் மூலம் தானே நிதி ஊழல்களிலிருந்து அமெரிக்க மக்களை மீட்க வந்த மீட்பர் போலத் தன்னை இனங் காட்டிக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளும் நாடகத்தனமான  வேடங்கள் அவரையொரு கோமாளியாகச் சித்தரிக்கின்றன. ராஜ் ராஜரட்ணத்தைக் குற்றவாளியாக்க வேண்டும். அதன் பின்னணியில் தன் தலைக்குப் பின் ஒளிவட்டங்களை சுழல வைக்க வேண்டும் எனும் அவாவினால் நிதி தொடர்பான வழக்கொன்றில், குற்றவியல் வழக்கொன்றில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட தொலைபேசி ஓட்டுக் கேட்டல் விடயத்தை முன்னிறுத்தி வழக்கை நடத்திச்செல்வதும், அதுவும் துண்டு துண்டான உடைவுச் செய்திகளைக் கொண்டு அவர் மீது குற்றம் சுமத்துவதும், உண்மையான ஆவணங்களைப் பரிசீலிப்பதை விடுத்து, குற்றம் சுமத்துவதற்கு ஒரு மனிதன் கிடைத்து விட்டான் எனும் ரீதியிலே வழக்கைக் கொண்டு நடத்துவதும் வோல் ஸ்ட்ரீட் ஷெரீப் எனும் பட்டத்தை ப்ரீத் பராரா  சூடத் தவித்தார் என்பதும் சமமற்ற நீதியில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

பிரதிவாதிகளையும், சாட்சிகளையும் மிரட்டிப் பணிய வைக்கும் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் எப்.பி.ஐ பற்றியும், வெள்ளிக்கிழமை அதிகாலைக் கைதுகள் குறித்தும் சினிமாக்களில்  சித்தரிக்கப்படுவதைக் காட்டிலும் அதிக வேகத்தில் ‘சமமற்ற நீதி’ யில் தரிசிக்க முடிகிறது.

விசாரணைக் கைதியை ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் காட்சிப் பிராணியாக்கி  அவமானப்படுத்தும் அவமான நடை ஒரு மானமிக்க மனிதனுக்கு எவ்வளவு தளர்ச்சியை உருவாக்கும் என உணர்ந்தே அவனை மனத் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கிக் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் முகமாக அவமான நடை மேற்கொள்ள வைக்கப்படுகிறது. நியாயமான முறையில் தன் நிறுவனத்தைக் கட்டுக் கோப்போடு நடத்தித் தர்ம ஸ்தாபனங்களுக்கும் தன் வருமானத்தின் ஒரு பங்கை உதவி, சுனாமி வீட்டுத்திட்டங்கள் பலவற்றில் கை கொடுத்த  பெருந் தொழில் அதிபராக இருக்கும் மனிதாபிமானமிக்க மனிதன் ஊடகங்களிலும், பொதுவெளிகளிலும் ஒளி வீச்சுகளால் அள்ளப்பட்டுக் கவிழ்ந்த தலையோடு ஊழல் பெருச்சாளியாக இனங் காணப்படுவது அவனுக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தும் என்பதை  அமெரிக்க அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அறிந்தே அதனை அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்கு வேண்டியது கிளர்ச்சியடைந்திருக்கும் மக்களுக்குக் கை நீட்டிக் காட்டுவதற்கு ஒரு இரை. அந்த இரையாக அகப்பட்டவர் மீது அவர்கள் அக்கறைப்படுவதில் ஏதும் பொருள் இருக்கிறதா என்ன?

இவ்விடயத்தில் பொய்யைப் பணமாக்கும் அவசரத்திலும், பொறுப்பற்ற தன்மையிலும் இருக்கும் ஊடகங்களைப் பற்றி குறிப்பிட வேண்டியிருக்கிறது. சமூகப் பொறுப்பிலிருக்கின்ற மிகப் பொறுப்பு வாய்ந்த துறையாகிய ஊடகம் சற்றும் பொறுப்பற்றுக் கிளிப்பிள்ளை போல  அரசுத்தரப்பின் பக்கம் மட்டுமே நிற்பதெனில் அவ்வூடகத்துறை பற்றி சிலாகிப்பதற்கு என்ன இருக்கிறது?

எந்தவொரு மனிதரும் இன்னொருவரிடம் பேசுவதற்கு அந்தரங்கமான விடயங்கள் இருக்கும். சில விடயங்கள் சில மனிதர்களுக்கிடையில் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. அவ்வாறே ‘இரகசியமாக வைத்திருங்கள்’ என்று கூறப்படும் ஒற்றைச் சொல்லைத் திரித்து வைத்து விளையாடும் விளையாட்டை எப்.பி.ஐ தீவிரமாகப் பற்றிக் கொண்டது.

ஆவணங்கள் ஒருவருக்கான நற்சான்றுப்பத்திரங்கள் அல்ல எனக் கூறிய எப்.பி.ஐ  இட்டுக் கட்டிய பொய்களை மட்டும் ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக்க எவ்வாறு பயன்படுத்தின எனும் தீராத ஆச்சரியம் அமெரிக்க அரச சட்டங்களின் மீது ஒரு வடுவாகப் படிகிறது.

இவ் அபுனைவு நூலில் வரும் பாத்திரங்கள் புனைவுகளில் வருகின்ற எந்தவொரு பாத்திரத்திற்கும் குறைந்தவர்கள் அல்ல.

அச்சுறுத்தலுக்குப் பயந்து வாக்குமூலத்தை மாற்றிய அனில்குமார் ஆகட்டும், இன்டெல் நிறுவனத்திலிருந்து கலியன் நிறுவனத்திற்கு வரத் திட்டமிட்டுக் காய் நகர்த்திய ரூமி கான் ஆகட்டும், திட்டமிட்டுத் தொலைபேசி அழைப்புகளில் சிக்க வைக்க முயன்ற அலி பார் ஆகட்டும், நாடகப்பாணியில் பேசி ஆண்களைக் கவர்ந்திழுக்கும் டானியல் கேசி ஆகட்டும், மேலும் வோற்றன் பள்ளி சகபாடிகளாயிருந்து கலியனில் நுழைந்த ராஜீவ் கோயல், ஆடம் ஸ்மித் ஆகட்டும், ஒவ்வொருவரும் ராஜ் ராஜரட்ணத்தின் வழக்கில் சிலந்தி வலைகளாகப் பின்னப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க சட்டத்துறையின் இன்னொரு குறைபாடு ஜூரிகள் முறை. பல்வேறு துறைகளிலிருப்போரையும் ஜூரிகள் ஆக்கியிருந்தாலும், இப்பங்குச்சந்தை பற்றிய அனுபவம் சிறிதுமில்லாதவர்கள் அது பற்றிய நுட்பங்களை அறியாதிருந்தமையும், நீண்ட நேர விளக்கத்தைப் பெற முடியாத சலிப்புற்ற நிலையும் ராஜ் ராஜரட்ணத்திற்குப் பாதகமான விளைவுகளை பெற்றுத் தந்தன. இவ்வழக்கிலிருந்த முரண் நகையாக ராஜ் ராஜரட்ணம் சுட்டிக் காட்டுவது, இவ்வழக்கை எடுத்து நடத்திய ப்ரீத் பராரா சில வருடங்களின் பின்னர் நிதித்தொழில் வழக்குகளில்   அவமான நடை அவசியமில்லை என ஒத்துக் கொண்டதாகும். மேலும் அமெரிக்காவில் அதுவரைக்கும் நடந்த ஆகப் பெரிய நிதி மோசடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை விட இக் குற்றச்சாட்டுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக உச்சமாகவிருந்தது. ஒரே குற்றத்திற்கு இருவேறு தண்டனைகள் வழங்கப்பட்டமையையும் இவ்வழக்கில் தான் பார்க்க முடியும். சிறிது காலத்தின் பின் அவரது சகோதரரான ரங்கன் மீது இக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் போது, அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுகிறார். அப்போது இருந்தது வேறு ஜூரி சபை என்பது மட்டுமே வேறுபாடு.

ஒரு கட்டுக் கோப்பான நிறுவனத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, சமூக முன்னேற்றத்தில் நாட்டமுள்ள மனிதன் ராஜ் ராஜரட்ணம் என்பதற்கான சான்றுகள் நூலில் தெளித்து விடப்பட்ட புள்ளிகளாக விகசிக்கின்றன. தன் நிறுவனத்தில் பங்குச்சந்தை கூடுவதற்கு முன்பாக காலை 8 .25 மணி முதல் 9 .25 மணிவரை அலுவலருக்கான கண்டிப்பான கூட்டத்தை நடத்தும் ராஜ் ராஜரட்ணம் அதில் தாமதமாகக் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு டொலர் அபராதம் விதிக்கிறார். அவரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவ்வாறு சேர்க்கப்படும் பணம் தொண்டு   நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பப்படுகிறது. பதினெட்டுத் தேசிய இனங்களைச் சேர்ந்தோருக்கு அவர் தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கியிருந்தார். இவ்வாறாக அவரது ஒவ்வொரு நாளும் எவ்வாறு நகர்கிறது எனும் சித்திரத்தின் மூலம் அம்மனிதனின் நல்லியல்புகளை அறிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்கா என நாம் அண்ணாந்து வியந்து நோக்கும் ஒரு நாட்டில் சட்ட நிறுவனங்கள் எவ்வாறு பணம் தின்னிக் கழுகுகளாக செயற்படுகின்றன என்பதையும், 1300  ஒளிப்பதிவுத் துண்டுகளை வைத்து இவ்வழக்கு எவ்வாறு ஒருவருக்கு எதிராகத் திரிக்கப்படுகிறது என்பதையும், வரி ஏய்ப்பிலிருந்து விடுதலையாவதற்காக  குற்றவாளிகள் எவ்வாறாக சட்டபூர்வமாக ஏமாற்றும் கலைக்குள் உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் இந்நூல் பட்டவர்த்தனப்படுத்துகிறது. அமெரிக்காவின் ப்ராடி விதிப்படி அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் பிரதிவாதி குற்றமற்றவர்  எனும் ஆதாரங்கள் கிடைப்பின் உடனடியாகப் பிரதிவாதியின் வழக்கறிஞருக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனும் உத்தரவு உள்ளது. ஐம்பது வருடங்களின் பின்னும் இதற்கு வழக்கறிஞர்கள் கட்டுப்படுவதில்லை என்பது வழக்கறிஞர்கள் பற்றிய ஒவ்வாமையை மேலும் அதிகரிக்கிறது.

இழைக்கப்படாத குற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக அக் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தால் தன்னால் விடுதலை பெற்றிருக்க முடியும் எனத் தெரிந்தும் ராஜ் ராஜரட்ணம் அதனை ஒத்துக் கொள்ளவில்லை. நீண்ட சிறைவாசத்தின் பின் அவர் வெளியே வந்த   போது தன்னோடு எடுத்து வந்தது ‘சமனற்ற நீதி’ எனும் தன்னுடைய போராட்ட வாழ்வின் தடங்களையே. அத் தடங்கள் நாளைய மனிதனுக்குச் சொல்லும் செய்திகள் மிகப்பல.     

                                                                   

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

1 Comment

  1. நல்ல அறிமுகக் குறிப்பு . படிக்கயிலேயே மனம் கலங்கி விட்டது.

உரையாடலுக்கு

Your email address will not be published.