/

ஒளியுறிஞ்சப்பட்ட புலர்காலைகளின் நிலத்திலிருந்து : தாட்சாயணி

ஒளியின் முதல் துளி அரும்பி வழியும் புலர்காலைகளின் மீது வலி சொட்டுச் சொட்டாய்ப் படர்ந்திருந்த நிலம் ஈழம். ஒவ்வொரு காலையும் விடியும் போதே, இருண்ட துயரங்களால் நிறைந்து எதிர்கொண்டு நடந்த அக்காலங்களை நினைவு கொள்கையில் கூர் கொள்கிறது இயல்வாணனின் புலர்காலையின் வலி.தொண்ணுறுகளின் நடுக்கூறிலிருந்து இரண்டாயிரங்களின் பிற்பகுதி வரை தன் மனதை அசைத்த வலிகளின் நரம்புகளைக் கீறியெடுத்து வாசகர் கரங்களில் வைக்கிறார் இயல்வாணன். சொற்களின் பெருக்கு இயல்பாக அவரது பேனாவிலிருந்து இறங்கி ஓட ஆரம்பிக்கிறது.சில கணங்களில் அது நிற்கிறது. தடைப்புறுகிறது. அக்கணங்களில் பின் தொடரும் நாமும் நிற்கிறோம். வலி ஒரு ஊசியாக நெஞ்சில் தைத்துச் செல்கிறது. ஒரு புலர்காலை விடியும் தருணத்திலேயே வலியைத் தருவது எவ்வாறெனக் காட்டுவதோடு இயல்வாணனின் பணி முடிந்து விடுகிறது. மீதமிருப்பது வாசகனின் கடமையல்லவா?

கிராமங்கள் ஒவ்வோர் மனதின் ஆழ்மனத்தோடும் ஒன்றியிருக்கின்றன. கிராமங்கள் என்றால் அந்த மண், அதில் வாழும் பறவைகள், விலங்குகள் வேறு உயிரிகள் என்பவற்றோடு அந்த மண்ணுடன் இயைந்த செயற்பாடுகள், அங்கிருக்கும் வாழ்க்கைக்கோலங்கள் எல்லாமும் உள்ளடங்கியவை தானே. இங்கும் கதைசொல்லியின் மனதில் உயிர்த்திருக்கும் விடயங்கள் நமக்கு நெருக்கமானவை.உற்சாக ஊற்றாக இருக்கின்ற ஊருக்குள் திடீரென்று ஊடுருவும் மாற்றங்களுள் நவீன விவசாயமும், யுத்தமும் முக்கியமானவை.அதுவரைக்கும் அங்கிருந்த விவசாயிக்கு நேசமான பறவைகள் உரப்பாவனையால் செத்தொழிந்து போவது போல, போர் அங்குள்ள மனிதர்களையும் விழுங்கி விடுகிறது, குறிப்பாக செல்வியை. குஞ்சரப்பா போன்றவர்கள் இயற்கை விவசாயத்தின் நம்மாழ்வாராக ஊருக்குள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன விவசாயத்திற்கு ஆசைப்படுவோருக்கு குஞ்சரப்பா ஒரு மாரித்தவளை மாதிரி. அப்படியே கத்திக் கத்தி மாரித் தவளைக்கு வருவது போலும் இறப்பே அவருக்கும் வாய்த்து விடுகிறது.

கதைசொல்லியின் பார்வையில் அடிக்கடி தட்டுப்படும் செண்பகம் குரலாலும் தோற்றத்தாலும் அழகற்றது. அதன் மண்ணிறச் சிறகுகளும், சோடாச் சிவப்புநிறக் கண்மணிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.செண்பகம் அழகற்ற பறவையல்ல. அதன் அசைவு ரசிக்கத் தக்கதல்லதென்றும், அதன் குரல் வசீகரமற்றதாகவும் கதைசொல்லியால் அது சுட்டப்பட்டாலும் அதை நோக்கிய அவனது ஈர்ப்பு ஒரு போதும் குறைவற்றது என்பதையே அவன் செண்பகமே, செண்பகமே பாடலைப் பாடும் போது வாசகனால் உய்த்துணர முடிகிறது. நகரமயமாக்கல் அருக வைத்த பறவையினங்களில் செண்பகமும் முக்கியமானது.இப்போது அபாயகரமாக அழிந்து வருவதாக அதனையும் குறிப்பிடுகிறார்கள். தமிழீழம் தேசியப்பறவையாக அங்கீகரித்திருந்த செண்பகத்தின் அழிவின் தொடக்க காலத்தை உணர்ந்தோ அல்லவோ தன் கதையில் அருமையான சூழலியல் குறியீடாக்கியிருக்கிறார் இயல்வாணன். வசந்த காலத்தில் முருங்கை பூத்துக் காய்க்கும் போது, சாம்பல் படிவுகளாய் அடியில் மொய்த்துக் கிடக்கும் மயிர்க் கொட்டிகள், அவை உடலில் பட்டால் ஏற்படும் சுணை, ஊர்ப்புறங்களில் காவோலையால் தீ மூட்டி அவற்றை அழித்தல், செண்பகங்கள் வெகு எளிதாக அம்மயிர்க் கொட்டிகளைப் பிடித்துத் தின்று அழித்து விடும் உணவுச் சங்கிலியின் செயன்முறை எனப் புலர்காலையின் பனிப்பொழுதில் மங்கித் தெரியும் காட்சிகள் வாசகனின் நினைவுகளைக் கிளறக் கூடியவை.

அனுபவஸ்தர்களான கிராமத்து மனிதர்களிடம் எந்தக் காலத்திலும் சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் ரயில் ஓடாத தண்டவாளத்திற்குப் பக்கத்து மதகில் சாவதானமாகக் கத்தி தீட்டிக் கொண்டிருக்கும் தம்பரப்பா இரண்டாம் உலக யுத்த அனுபவங்களை நினைவு கூருவது ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் எங்கள் பாட்டன், பாட்டிகள் எமக்குச் சொன்ன அனுபவங்களுக்கு நிகரானது. கதை கேட்கும் அனைவரையும் அக்கால நினைவுகள் தீண்டுகின்றன.வெள்ளையர்,யப்பானியர், இந்தியர், சிங்களவர் எனத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட யுத்தத்தின் விளைவுகள் ஒவ்வொரு காலத்திலும் கரும்புகைக் குண்டுகளாய் கிராமங்களில் ஊடுருவியிருக்கின்றன. யப்பான்காரன் கொழும்புத் துறைமுகத்தில், திருமலைத் துறைமுகத்தில் போட்ட குண்டுகளின் கரும்புகை இப்போதைய நினைவில் மெல்லிய புகைப்படலமாகக் கிளம்புகிறது. உயிர்களின் அவலமும், வெட்டப்பட்ட பானா வடிவப் பதுங்குகுழிகளும் எக்காலத்தும் ஒன்று தானே. வெள்ளைக்காரர் நம்மவரின் பட்டையிறைப்பினை வேடிக்கை பார்த்து இளநீர் வாங்கிப் பருகிப் பண்டமாற்றாக சவர்க்காரம், சிகரெட்டைக் கொடுத்த நினைவுகளை சொல்லும் தம்பரப்பா மூலம் இன்னல் காலத்து நகைச்சுவைகளும் மனம் நனையக் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணத்துச் சீதன மனப்பாங்கின் வழி வந்த ஆண், சீதனத்திற்கும் மேலதிகமாகத் திருமணச் செலவையும் பெண் வீட்டாரே ஏற்க வேண்டும் எனும் ஆணாதிக்க மனோபாவத்தின் விளைவாகச் சீரழியும் குடும்பத்தையும் இயல்வாணன் வெளிச்சத்திற்கு கொண்டு வர மறுக்கவில்லை. பனை பூக்கும் காலத்திற்குப் பின்பதான காலங்களில் குடித்து விட்டுத் தெரு வழியே புலம்பி வரும் பெரும்பாலான அடித் தட்டு வர்க்க ஆண்களின் அலப்பறைகளும், அதன் விளைவாகக் குன்றி விடும் மனைவி குழந்தைகளுமென விரியும் இக்களம் வேலிகளில் கறையான்களென முளைத்து மறையும் கண்களையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை. எவ்வளவு தூஷண வார்த்தைகள் தன் மீது வந்து விழுந்தாலும்,கணவனை ஊரார் கண்முன் அவமானப்பட விடாமல் உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் இருபதாண்டுக்கு முற்பட்ட ஒரு பெண், அவளது மனதில் தாலி குறித்து இருக்கும் புனித பிம்பம், அதற்குப் பிந்திய தலைமுறையிடம் கோபத்தை ஏற்படுத்தினாலும் இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும் அவள், அதனாலேயே மனம் நொந்து நோய்க்குத் தன்னைப் பலி கொடுக்க முன் வந்து விடுகிறாள். இத்தனை பிள்ளைகள் பிறந்த பின்பும் திருமணச் செலவுகளைக் கட்டி முடிக்காததால் தாய் தன்னிடம் கடன்காரியாக இருப்பதை நினைவுறுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு குடிகாரத் தந்தை தன் பிள்ளைகளுக்கு இறுதியில் கொண்டு சேர்க்கப் போவது என்ன? அவர் தான் குடிகாரர். அவர் இழந்த நினைவைச் சமப்படுத்திப்பிள்ளைகளிடத்தே நல்ல உணர்வுகளை விதைக்கச் சம்மதிக்கிறாளா அம்மா? அந்தக்கால அம்மாவின் இந்தப் பண்பு அவளுடைய மகளிடம் கூடச் செல்வாக்குச் செலுத்தாது என்பதை ‘அக்கா’ பாத்திரத்தின் உரையாடலினூடு அழுத்திச் சொல்கிறார் இயல்வாணன்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை என்பது,பிள்ளைகளின் திறனை வளர்ப்பதற்குப் பதிலாகப் பெற்றோர்களதும், ஆசிரியர்களதும், பாடசாலைச் சமூகத்தினதும் கௌரவப் பரீட்சையாக அமைவதை, ஈழச் சூழலில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அவதானிக்க முடியும். அதன் விளைவாகப் பிள்ளைகள் வதைக்கப்படுவதையும், உள ஆற்றல்படுத்தலுக்கான தேவைக்குட்படுத்தப்படுவதையும் காண்கிறோம். பந்தயக் குதிரைகள் என இயல்வாணன் சரியாகவே அடையாளப்படுத்தியிருக்கிறார். கல்விப் பின்புலத்தில் ஒரு ஆசிரியராக, அதிகாரியாகக் கடமையாற்றும் அவரால் ஒரு பிள்ளையைச் சரியாகவே அவதானிக்க முடிவதுடன் கதையில் அப்பிள்ளை அங்குள்ள போட்டிச் சூழலைக் கடந்து செல்லக் கூடிய நிலையில், தான் வாசித்த நல்ல புத்தகங்களின் வழிகாட்டலில் நிமிர்ந்து நிற்கிறான் என்பதைப் பூடகமாக உணர முடிகிறது.

சின்னஞ்சிறு குடில்கள் முளைத்த அகதிமுகாம்கள் யுத்தகாலத்தில் எங்கும் தானிருந்தன.அவற்றை நிர்வகித்த கரங்கள் மட்டும் ஒரு தரம் போராட்டக்காரரிடமும், மறு தடவை இராணுவத்திடமுமென இடம் மாறின. நிர்வகித்த கரங்கள் யாருடையவை என்பதை மிக இலகுவாகவே சொல்லி விடலாம். அதற்கேற்றபடி இருக்கும் அங்கு தங்கி வாழ்பவர்களது ஊசலாட்டம். சின்னஞ்சிறிசுகள் ஆயுதங்களைத் தொட்டுப் பார்ப்பதும், போராளிகள் தோள்களில் வாஞ்சையாகத் தொற்றிக் கொள்வதும் காலகாலமாக ஒவ்வொரு போராளியின் நினைவிலும் ஊறிக்கிடப்பது போலவே, அந்தச் சின்னஞ் சிறுவர் நினைவுகளிலும் படர்ந்திருக்கிறது. குலப்பெருமையும், மீண்டு தப்புதலுமெனப் புலப்பெயர்வில் ஒழிந்து கொண்ட சமூகத்தைத் துறந்து சனத்துக்குப் போராடுபவனது தாகத்திற்குத் தண்ணீர் தரவும், ஊரில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தானே போராட்டம் வேர் ஊன்றி வளர்ந்தது.ஒரு காலத்தைய நினைவுகளின் ஈரம் கண்களை மூடித் திளைக்க வைக்கிறது.

உச்சத்தில் இருக்கும் ஒரு சந்ததியின் வாழ்வு எப்போதுமே உச்சத்தில் இருப்பதில்லை. அதன் கொடி வழி வரும் அடுத்த தலைமுறை வீழ்ச்சியைச் சந்திக்காமல் போகாது. இது வரலாறு நமக்குத் தரும் பாடம். பட்டொளி வீசிப் பிரகாசித்த எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து மண்ணோடு மண்ணாகின. சாம்ராஜ்யங்கள் அப்படியிருக்க சாமானிய மனிதனின் சரித்திரம் மட்டும் இக்கணக்கில் தப்பி விடுமா? பூதப்பிள்ளை உடையார் குடும்பத்தின் குலப் பெருமை அவரது அதிகாரத்தின் வழி நகர்ந்து, உடுப்பிட்டிக்குச் சென்று வந்த போது பிடித்த கைரகப் பேயினால் அவர் இரத்தம் கக்கி இறக்கின்ற போது தன் அந்திமத்தை நெருங்குகின்றது. அவர் இறந்தது பஞ்சமியில். பஞ்சமியில் இறப்பவர்கள் கூட இன்னும் ஐந்து பேரைக் கொண்டு செல்வார்கள் என்பது ஊர் வழக்கு. உடையாரின் மகளுக்கு வாய்த்தவன் மலேஷியா போன பிறகு, உடையாரம்மாவும் இறக்க, இரு தூய மரபும் துய்ய வந்த மகள் செல்லாச்சிப்பிள்ளை தனித்துப் போகிறாள். இருந்தாலும் உடையார் பரம்பரையல்லவா? பரம்பரைக் கௌரவமும், ஆளுகையும் தந்த துணிச்சல் தனித்து வாழ்தலில் அவளுக்கு அச்சம் தரவில்லை. எனினும் கணவன் திரும்பி வரவேண்டும் எனும் பெண்மைக்குரிய இயல்பான இறைநேர்த்தி, யாப்பன்காரனை யுத்தத்தை மலேஷியா மீது திருப்ப வைக்க, அப்புத்துரையை ஊர் நோக்கித் திருப்பி அனுப்புகிறது. தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும் ஊழ் வாய்த்ததில் அவனும் இறக்கிறான். இறுதி அரசியாக அந்த வீட்டைத் தனியே ஆண்ட செல்லாச்சியும் ஒரு நாள் பாயில் இறந்து கிடந்த பிறகு, அந்த வீடு போராளிகளிடம் சென்று அதற்கும் பிறகு இராணுவத்திடம் கை மாறி, கதைசொல்லியின் கண் முன் மண் மேடாகக் கிடக்கிறது.புலர்காலையின் வலியின் அழியாத தடம் அந்த வீடிருந்த மண்மேடு.

யுத்தகாலங்கள் வயதுகளைத் தின்ற பெருவலி ஈழத்து இளைஞர்களின் மனதில் ஒரு காலமும் அற்றுப் போகாது. அவ்வாறு நாள்கள் முழுவதையும் தின்ற ஒரு காலத்தின் பதிவு முடவன் நடை. விடிகாலையில் வீட்டை விட்டுப் புறப்படும் கதைசொல்லி இடைவெளியில் பதினோரு சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.இங்கு சொல்லப்பட்டவற்றை விட சொல்லப்படாதவை அதிகம். அந்தப் பதினோரு காவல் அரண்களில் இறங்கி, ஏறி நடந்து வாகனத்தில் இடத்தைப் பறி கொடுத்து பயணிக்கிற கடினத்தைத் தவிர அந்தப் பயணத்திற்கிடைப்பட்ட நேரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத்திருக்க வேண்டும் என்றும், ஒரு போராளி பிடிபடவோ, ஒரு குண்டு வீச்சு நிகழாமலோ இருக்க வேண்டும் என்றும் மனம் பிரார்த்திப்பதென்பது ஒவ்வொரு பயணியினதும் முடவன் நடை மீதான அங்கலாய்ப்புத் தான். முடவன் நடைக்கு, காவலரண்கள் தடை போட்ட காலங்கள் போலவே ‘கொன்வே’ எனும் வாகனத் தொடரணி பெருஞ்சாலைகளை மறித்த காலங்களும் இருந்தன.பலாலி வீதி, கண்டி வீதி போன்ற வீதிகளூடு பயணிப்போர், இரவு ஒன்பது, பத்து மணிக்குத் தம் குழந்தைகள் உறங்கிய பின்னரே வீடு போய்ச் சேர்வர் என்பதையும் இங்கு நினைவூட்டல் தகும்.
அன்றாடங்களின் பிரச்சினை எளிய குடும்பமொன்றை எவ்வாறு தாக்கும் என அறிந்துள்ள நமக்கு யுத்தம் பலியெடுத்த குடும்பத்தில் ஏற்பட்ட தாக்கத்தைப் பேசும் போது இதயம் கூசாதா…? அத்தகைய துயரைப் பேசுகிறது ‘வெளிக்கும்’ எனும் கதை. குடும்பத்தலைவன் அற்றுப் போன குடும்பத்தில் ஒற்றைத்தாய் ஒவ்வொரு வருடமும் பூவாணங்களும் , வெடிகளும் கொடுத்துத் தன் குழந்தைகளின் புதிய வருடத்திற்கு ஒளியேற்றுகிறாள். யுத்தம் ஏற்படுத்தும் பொருளாதாரத்தடை, அதிகரித்த விலையேற்றம் ஒரு கட்டத்தில் கதைசொல்லிக்குப் புது வருடமே இல்லை என்றாக்குகிறது. இழுத்து, இழுத்துத் தேய்ந்த பதினெட்டு வருடங்களையும் சலித்துக் கொள்ளும் கதைசொல்லி தான் உயிர்த்திருப்பதன் அர்த்தம் அடுத்த புதுவருடத்திலாவது பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறான். புலர்காலையின் பனியை மீறி விழும் முதல் துளியின் ஜொலிப்பு இது.
போர் துரத்தத் துரத்த இடம் பெயர்ந்த ஒரு காலகட்ட வாழ்வு, பெயர்க்கப்பட்ட தண்டவாளங்கள் மீது கூடப் புதிய குடிசைகளைக் கட்டியெழுப்பியது. இந்தியப்படை நாடு மீண்ட காலகட்டத்திலேயே, இந்திய ஜவான்களை ஏற்றிக் கொண்டு சென்ற புகையிரதங்களைச் சிறுமியராயிருந்த நண்பிகளோடு வேடிக்கை பார்த்த நினைவு என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு வந்த இளம் சந்ததி யாழ்ப்பாணத்தில் ரயிலைக் கண்டே இருக்கவில்லை. தண்டவாள சிலிப்பர்கட்டைகள் பிடுங்கப்பட்டுப் பதுங்குகுழிகளுக்கு மேல் அரண்களாக்கப்பட்டன.யாழ் இடப்பெயர்வின் போது வரிசை, வரிசையாகத் தண்டவாளப் பாதைகளில் குடிசைகள் எழுந்தன. மாவிட்டபுரத்தில் தன் சொந்த வீட்டில் இருந்த போது தினமும் புகையிரதக் கூவலில் கண் விழிக்கும் கந்தையர் ரயிலின் எஞ்சின் பெட்டி போலக் குடிசைகளுக்கெல்லாம் முகப்பாக அந்த ரயில் பாதையில் குடிசை அமைத்து வாழ்ந்ததென்பது எவ்வளவு முரண் நகை. யுத்தம் முடிந்த மீள்குடியேற்றக் காலங்களில் புகையிரதப் பாதையில் குடிசையமைத்து இருந்தவர்களும் தனியான ஒரு வகுதியனராகக் கருதப்பட்டு அவர்களுக்கும் மீள் குடியேறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டமை இன்னொரு தனிக்கதை.

சாதாரண எளிய மனிதர்களிடத்தில் போராடும் உந்துசக்தியைக் கொண்டு வந்து சேர்த்தது எது? குருதியும், நிணமும் பெருகச் செய்யும் யுத்தம் அத்தனை அழகானதா என்ன? இளமையும், அழகும்,உணர்வுகளும் பொதிந்த காதலும் வாழ்வும் இருப்பின் அவற்றைத்தான் யுத்தத்தை விட அதிகமாக மனிதர்கள் தேர்வு செய்யக் கூடும். அப்படியொரு இனிய குடும்பத்தையும், வாழ்வையும் அணியாகக் கொண்ட ஒரு உழைப்பாளி அக்குடும்பத்திற்காகத் தன் உயிரைப் பிழிந்து உழைப்பதைத் தானே தன் வாழ்விற் கிடைத்த வரமாகக் கொள்வான். இயற்கையின் புயலுக்குள்ளும், எதிர்ப்பிற்குள்ளும் கட்டுமரமேறி இரவின் இருளை வென்று வாழ்வை வெல்லும் தைரியம் மிக்க அவனை எதிரியின் குண்டுகளும், ஷெல்களும் விரட்டி, விரட்டி அவனது வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. நிறைமாதக் கர்ப்பிணியான அவன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவன் தான் எதையாவது தர வேண்டும்? திரும்பத், திரும்ப முயற்சித்தும் அவனைத் தொழில் செய்ய விடாது விரட்டுகின்றன எறிகணைகள். வீடு திரும்பும் அவனுக்கு மனைவியோடு சிறு முரண். தூண்டில் மீன் பிடிக்கக் காத்திருப்பவனிடம் பிள்ளையிடம் தூதனுப்பி சாப்பிட அழைக்கிறாள் மனைவி. சில மீன்களையாவது பிடித்துக் கொண்டே வருவதாக ஓர்மத்துடன் சொல்லியனுப்புகிறான். அவன் திரும்பி வரும் போது எஞ்சியிருப்பது என்ன? இடிந்த கற்குவியலும்,சிதைந்த உடல் பாகங்களும், கொல்லையில் கட்டியிருந்த ஆட்டின் உடலும் மட்டுமே . புலர்காலை பலியெடுத்த அவன் குடும்பத்தின் நிழலையேனும் இனி அவனால் தொட்டுணர முடியுமா…? பதில்களற்ற கேள்விகளே, வாழ்க்கை முழுவதையும் தின்று தீர்க்கின்றன.

அடுக்கடுக்கான இறப்புகளும், சிதைவுகளும் காணும்தோறும் பலவீனமான இதயங்களின் அடுக்குகள் குலைந்து விடுகின்றன. இராசம்மா அக்காவுக்கு ஏற்படும் உளப்பிறழ்வு சமூகத்தில் அவள் கண்ட யத்தத்தின் மூர்க்கத்தால் விளைந்தது. யுத்தம் என்ன செய்யும் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரிகிறது. அதனால் தான் தன் குடும்பத்திலிருக்கின்ற, சமூகத்திலிருக்கின்ற யாரை நோக்கியும் அந்த யுத்தம், கொடூர வாளை வீசிவிடக்கூடும் என அஞ்சுகிறாள். அது அவள் பிள்ளைகளை மட்டுமல்ல. அவ்வூரிலுள்ள எந்தப் பிள்ளைக்குமான எச்சரிக்கைக் கூவல். யுத்தத்திற்கான எதிர்க்குரல்.அதைப் புரிந்து கொள்ளும் போது தான் அவள் மீதான அனுதாபத்தை விட, யுத்தகாரணர்கள் மீதான எதிர்க்குரலை உலக அரங்கில் பதிவு செய்ய முடியும்.

புலர்காலையின் வலியாக இயல்வாணன் தொட்டுச் சென்ற எதுவும் எம் மண்ணில் பிறந்தவர்களுக்கு அந்நியமானதல்ல. காலங்களின் ரணங்கள் மீது ஒத்தடம் கொடுக்க யாருமில்லாத வேளையில் இவ்வாறான எழுத்துக்களே கொஞ்சமேனும் வலியை ஒற்றியெடுக்கின்றன. அப்போது ஒற்றியெடுத்த எழுத்துக்கள் மீது படர்ந்திருந்த வலி இப்போது வாசிக்கும் போது மீளத் தொற்றிக் கொள்கிறது. எழுத்தாளனுக்கு வேறென்ன பணி இருக்கப் போகிறது? காலத்தைக் கலைத்துக் கலைத்து நிகழ்காலத்தின் கனவுகள் மீது கடந்த காலத் துயரைப் பேசுவதைத் தவிர.

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.