/

எலிகள் இரவில் தூங்கும்: வோல்ப்கங் போர்சாட் – தமிழில் நிரூபா

இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் 1947 ல் யேர்மன் எழுத்தாளர் வோல்ப்கங் போர்சாட் (Wolfgang Borchert) எழுதிய சிறுகதை (Nachts schlafen die Ratten doch). யேர்மன் மொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தனிமையில் விடப்பட்ட சுவரில் அந்தத் துளைவிழுந்த யன்னல் இளம் மாலை வெய்யிலில் மெல்லிய சிகப்பு நிறத்தில் தகித்தது. உடைந்து செங்குத்தாக கிடந்த புகைபோக்கித் துண்டுகளிடையே தூசிப்படலங்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. இடிந்துநொறுங்கிய துவள்களிலான பாலைவனம் அமைதியாகத் தூங்கிக்கொண்டிந்தது. யூர்கன் கண்களை மூடியவாறு நன்றாக தூங்கியவாறு இருந்தான். திடீரென யாரோ வந்து தன் முன்னிலையில் இருட்டாக அமைதியாக நிற்பதை உணர்ந்தான்.

“இப்ப என்னைப் பிடித்திட்டினம்.” என்று அவன் நினைத்துக்கொண்டான். மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தபோது, சற்றுப் பழசான காற்சட்டை அணிந்திருந்த இரு கால்களை மட்டும் தெரிந்தன. அவனுக்கு முன்னே மிக வளைந்து நின்ற அந்தக் கால்களையே அவனால் பார்க்கமுடிந்தது. அவன் சற்றுத் துணிவுடன் கண்களை அந்தக் காற்சட்டை அணிந்த கால்களின் மேல்நோக்கி நகர்த்தியபோது அங்கு வயதுமுதிர்ந்த ஒருவர் நின்றிருப்பதைக் கண்டான். அவரது கையில் ஒரு கத்தியும், ஒரு கூடையும் இருந்தன. விரல் நுனிகளில் மண் ஒட்டியிருந்தது.

“நீ இங்குதானே தூங்குகின்றாய்?” அந்த மனிதர் கேட்டுவிட்டு மேலிருந்து கீழே பார்த்தார். யூர்கன் கண்களைச் சிமிட்டி அந்த மனிதரது கால்களினூடே தெரிந்த சூரியனைப் பார்த்து “இல்லை. நான் தூங்குவதில்லை. நான் இங்கு காவல்காக்கவேண்டும்.” என்றான்.

அந்த மனிதர் தலையாட்டிவிட்டு, “அதக்குத்தான் நீ இந்தப் பெரிய தடியை வைத்திருக்கின்றாயா?” என்றார்.

 “ஆம்!” உற்சாகத்துடன் தடியை இறுக்கிப் பிடித்தவாறு பதிலளித்தான் சிறுவன்.

“எதை நீ காவல்காக்கின்றாய்?”                   

 “அது என்னால் சொல்ல முடியாது.” அவன் அந்தத் தடியைச் கரங்களால் மேலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

“பணத்திற்குத்தானே?”

அந்த மனிதர் கூடையைக் கீழே வைத்துவிட்டு கத்தியை அவரது காற்சட்டையின் அடிப்பகுதியில் அங்குமிங்குமாகத் துடைத்தார்.

“இல்லை. பணத்திற்காகவல்ல.” யூர்கன் அலட்சியமாகக் கூறினான். “முற்றிலும் வேறு ஒன்றுக்காகத்தான்.”

“அப்படியா? அப்ப என்னத்திற்கு?”           

“என்னால் கூறமுடியாது. அது வேறொன்றிற்காகத்தான்.”

“சரி. சொல்லவேண்டாம். இந்தக் கூடையில் என்ன இருக்கின்றது என்பதை நானும் சொல்லப்போவதில்லை.” அந்த மனிதர் தனது காலால் கூடையைத் தட்டிவிட்டவாறு கத்தியை மடித்தார்.

“அந்தக் கூடையில் என்ன இருக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடிகின்றது.” யூர்கன் அலட்சியமாகச் சொன்னான். “முயல்ச் சாப்பாடுதானே?”

“ஆம், எப்படிக் கண்டுபிடித்தாய்!” என்று ஆச்சரியம் அடைந்தார். “நீ ஒரு கெட்டிக்காரன்தான். “உனக்கு எத்தனை வயது?”

“ஒன்பது.”

“ஓ….ஒன்பதென்றால்… மூன்று தர ஒன்பது எவ்வளவு என்பதும் உனக்குத் தெரியுமல்லவா?”

“ஆம்” என்றான் யூர்கன். “யோசிப்பதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ள இதையும் சொன்னான்: “இது மிகவும் இலகு” கூறியபடி அந்த மனிதரின் கால்களுக்கு ஊடே பார்த்தான். “மூன்று தர ஒன்பது அப்படித்தானே?” மீண்டும் கேட்டான். “இருபத்தி ஏழு. எனக்கு உடனேயே தெரிந்துவிட்டது.”

“சரிதான்.” என்றார் அவர். “அத்தனை முயல்கள் என்னிடம் இருக்கின்றன.

யூர்கன் வாயைச் சுழித்தான். “இருபத்தி ஏழா?”

“நீ அவற்றைப் பார்க்கலாம். அவற்றில் பல குட்டிகளும் உள்ளன. பார்க்க விருப்புகின்றாயா?”

“என்னால் முடியாது. நான்தான் காவல்காக்கவேண்டுமே.” என்றான் யூர்கன் உறுதியற்று.

“எல்லா வேளையுமா  இரவிலுமா?”

 “எப்போதுமே இரவிலும் கூட.”  என்றவாறு வளைந்த கால்களை மேலே நிமிர்ந்து பார்த்தான் யூர்கன். “சனிக்கிழமையிலிருந்து” என்றான் ரகசியமாக.

“அப்ப நீ வீட்டுக்குச் செல்வதில்லையா? நீ சாப்பிடவேணுமல்லவா?”

 யூர்கன் ஒரு கல்லை எடுத்தான். அங்கே ஒரு பாதிப் பாண் இருந்தது. அத்துடன் ஒரு தகரப்பெட்டியும்.

“நீ சிகறெட் பத்துவதுண்டா?” உன்னிடம் புகையிலை குடிக்கும் குழாய் உள்ளதா?

யூர்கன் தனது தடியை இறுகப் பிடித்தவாறு பயத்துடன் கூறினானன் “நான் பீடி சுருட்டுவேன். குழாய் பிடிப்பதில்லை.”

“அனியாயம்,” அந்த மனிதர் தனது கூடையை நோக்கிக் குனிந்தார். “முயல்களை நீ பார்த்திருக்கலாம்தான். அதிலும் அந்தக் குட்டிகளை…. சிலவேளை உனக்கென்று ஒரு முயலை நீ எடுத்திருக்கலாம். ஆனால் உன்னால்த்தான் இங்கிருந்து வரமுடியாதே..”

 “இல்லை. இல்லை..” என்று கவலையுடன் சொன்னான்.

அவர் அந்தக் கூடையைத் மேலே தூக்கிச் சரிப்படுத்தினார். “சரி நீ இங்கேயேதான் இருக்கவேண்டுமென்றால் என்னசெய்வது.” அவர் புறப்பட ஆயத்தமானார்.

“நீங்கள் யாரிடமும் சொல்லமாட்டீர்களென்னறால் சொல்கிறேன்…எலிகளுக்காகத்தான்” என்றான் அவசரத்துடன்.

அவர் வளைந்த கால்களை  பின்னோக்கி  சில அடிகளாக எடுத்து வைத்து “எலிகளுக்காகவா?” என்றார்.

“ஆம். அவை இறந்த உடல்கைளை உண்ணுமல்லவா. மனிதர்களின் உடல்களை. அப்படித்தான் உயிர்வாழ்கின்றன.”

“யார் உனக்கு அவ்வாறு சொன்னது?”

 “எனது ஆசிரியர்.”

அப்போ நீ எலிகளுக்காகவா காவல்காக்கின்றாய்?”

“அவைகளுக்காகவல்ல. “அவன் மெதுவாகச் சொன்னான்.”என்னுடைய சகோதரன் அங்கு கீழே ஆழத்தில் கிடக்கின்றான். அங்கே.” யூர்கன் தனது தடியால் இடிந்துவிழுந்து கிடந்த சுவர்களைக் காண்பித்தான். எங்கள் வீட்டுக்குமேல் குண்டு விழுந்தது. திடீரென நிலவறையில் வெளிச்சம் மறைந்துவிட்டது. அவனும்தான். நாங்கள் அழைத்தோம். என்னைவிட அவன் மிகச் சிறியவன்.”

அந்த மனிதர் மேலிருந்து அவனது பறட்டைத் தலை முடியைப் பார்த்தார். பின்னர் திடீரெனச் சொன்னார்: “எலிகள் இரவில் தூங்குமென்று உனது ஆசிரியர் கூறவில்லையா?”

“இல்லை.” யூர்கன் கிசுகிசுத்தான். அவன் மிகவும் சோர்வாகவிருந்தான். “இதை அவர் சொல்லவில்லையே.”

“ஓ..” என்றார் மனிதர். “அவருக்கு இது தெரியவில்லையென்றால் அவர் என்ன ஆசிரியர். இரவில் எலிகள் தூங்குமல்லோ. இரவில் நீ வீட்டுக்குச் செல்லலாம்.  இரவில் அவை எப்போதும் தூங்கும். இருட்டாகிவிட்டால் தூங்கும்.”

 இடிந்துகிடந்த துவள்களிடையே யூர்கன் தடியால் கிளறித் துளை போட்டான்.  ‘சின்னக் கட்டில்கள். அவை அனைத்தும் சின்னக் கட்டில்கள்.’ என்று நினைத்துக்கொண்டான்.

“உனக்குத் தெரியுமா? நான் இப்போது விரைவாக முயல்களுக்கு உணவு கொடுத்துவிட்டு, இருண்டதும் உன்னை வந்து அழைத்துச் செல்கின்றேன். சிலவேளை ஒன்றைக் கொண்டுவரலாம். சின்னக் குட்டியை. அல்லது நீ என்ன நினைக்கின்றாய்?”

யூர்கன் இடிந்து கிடந்த தூள்களுக்கிடையில் தடியால் ஓட்டைபோட்டான்.  வெள்ளை, சாம்பல் நிற, சாம்பல்வெள்ளைக் குட்டி முயல்கள். “எனக்குத் தெரியவில்லை.” அவன் மெதுவாகச் சொன்னவாறு வளைந்த கால்களைப் பார்த்தான். “உண்மையாகவே அவைகள் இரவில் தூங்குமென்றால்….”

அந்த மனிதர் இடிந்த மதிலைத் தாண்டிச் சென்று வீதியில் நடந்தார். “நிட்சயமாக.”அங்கிருந்தவாறு சொன்னார். “உங்களது ஆசிரியருக்கு இது தெரியவில்லையெனில் அவர் மூட்டை கட்டிக்கொண்டு போகவேண்டியதுதான்.”

அங்கு யூர்கன் எழுந்துநின்று கேட்டான். “எனக்கு ஒரு முயல்  கிடைக்குமென்றால்… சிலவேளை ஒரு வெள்ளை..?”

“நான் முயல்கின்றேன்” சென்று கொண்டிருக்கையில் கத்தினார்.” ஆனால் நீ அவ்வளவு நேரமும் இங்கே காத்திருக்கவேண்டும். உன்னோடு நான் பின்னர் வீட்டுக்குச் செல்வேன், சரிதானே? எவ்வாறு முயல்க்கூடு செய்வதென்பதை உனது தந்தையாருக்கு நான் சொல்லவேண்டும். நீங்கள் அதை தெரிந்துவைக்கவேண்டும்.”

“ஆம்.” யூர்கன் கத்தினான். “நான் காத்திருக்கின்றேன். இன்னும் நான் காவல்காக்கவேண்டும். இருட்டும்வரையில்… நான் நிட்சயமாகக் காத்திருப்பேன். அவன் மீண்டும் கத்தினான். “எங்கள் வீட்டில் பலகையும் வைத்திருக்கின்றோம் “பெட்டிப் பலகைகள். “அவன் உரத்துக் கூறினான்.

ஆனால் அது அந்த மனிதருக்குக் கேட்கவில்லை. அவர் தனது வளைந்த கால்களால் சூரியனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அது மாலையில் சிவந்திருந்தது. அது அவரது கால்களினூடே பிரகாசிப்பதை அவனால் பார்க்கமுடிந்தது. அவ்வளவு வளைந்திருந்தன அவை. அந்தக் கூடை உற்சாகமாக முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தது. முயல் உணவு அதற்குள் இருந்தது. பச்சை முயல் உணவு! அத இடிந்த தூள்களின் தூசியினால் சற்று சாம்பலாகியிப்போயிருந்தது.

நிரூபா

நிரூபா கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். ‘சுணைக்கிது’ , ‘இடாவேணி’ ஆகிய சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.