ஆதித் தாய் பெருமையுடன் மனங்களைப் படைத்தாள். அவ்விடத்தே அவள் குறிகளையும் படைத்தாள். அக் குறிகள் அவளை நோக்கிப் பாய்ந்தன. அன்றே ஆதித் தாய் மரணித்துவிட்டாள். முட்டாள்கள் அதைத் தற்கொலையென்று அறிவித்தார்கள். தங்களை கடவுகள் படைத்தனரென பிரகடனப்படுத்தினர். ஆனால் ஆதித் தாயின் மனம் பூமியின் ஆழத்தில் புதைந்துகிடந்தது. அது மனிதர்களை இப் பூமிக்கு வளங்கிக்கொண்டேயிருந்தது. மனிதத்தை மேவி குறிகளே வளர்ந்துகொண்டிருந்தன.
000
மறுபக்கம் ஆதியைத் தேடியது எனது கை. வெறுமை தூங்கிக்கொண்டிருந்தது. அவன் எழுந்து சென்று நீண்ட நேரம் ஆகியிருக்கலாம். நான் தூக்கத்தைக் கட்டியணைத்தது அவனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்திருக்கலாம். அந்த இடைவெளியில்தான் அவன் விசமங்கொண்டு எழுந்துசென்றிருக்கவேண்டும். அவன் இப்ப என்ன செய்துகொண்டிருப்பான் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. வீட்டின் பின் பக்கமாக நரம்புகள் கொதிக்க உலாவிக்கொண்டிருப்பான்; அல்லது வசிப்பறையில் இருந்து கைத்தொலைபேசியுடன் சேட்டைசெய்துகொண்டிருப்பான்.
‘கொறட்டை விட்டு வேற நான் நித்திரைகொண்டிட்டன். ச்சா…அவனுக்குப் பேய்க் கோபமாய் வந்திருக்கும்…’ நான் உணர்ச்சியற்ற சடப்பொருள் மாதிரி என்று நினைச்சுப் புறுபுறுத்தபடி போயிருப்பான்.
எழுந்து சென்று கண்ணாடிக் கதவுக்கு மறுபக்கம் வெளி உலகத்தில் அவனைத் தேடினேன். குவிந்திருந்த பனி யாருக்காகவோ காத்திருந்தது போல் என்னைப் பார்த்துச் சிரித்தது.
‘பாவம். இந்தக் குளிருக்குள்ள எங்க போயிருப்பானோ தெரியாது.’
வீட்டுக் கூரையின் நுனியில் பனிக்கட்டிகள் கூர் கூராக முளைத்திருந்தன. வெளியில் சென்று அவற்றை உடைத்து எறியவேண்டும்போலிருந்தது.
நேற்றைய இரவு பொறுமையற்றுத் துள்ளிக்குதித்தது. அவனது முத்தப் பூக்களைக் கௌவிக்கொள்ள ஆசை திரண்டிருந்தது.
அவனது சூடு என்னில் பற்றிக்கொள்ளத் தயாரானபோது, அவள் சிறுமி என்னைப் பிடித்து இழுத்தாள்.
அவனை நான் தள்ளிவிட்டேன். சூடு பயந்து ஓடியது.
‘ச்சா…இன்றைக்கும் இப்படிக் குழம்பிப்போச்சு.’
‘திரும்பி வந்தால் கதைக்கமாட்டான்….இரண்டு நாளைக்கு எரிஞ்சு விழுவான்….பின்னர்….பெரிய சண்டை வரும். ஐயோ நினைக்கவே பயமான இருந்தது…’
000
தன்னிலை மறந்து காற்றில் பறக்கும் ஒரு இறகைப்போன்று மனதைத் திறந்து ஒரு சிரிப்பைப் பறக்க விடவேண்டும். நான் எத்தனை முறை முயற்சித்தும் முடியவில்லை. மனந்திறந்து சிரிப்பதென்பது…
உடலை லேசாக்கி தண்ணீரில் மிதப்பதுபோலவும், அந்த உடலை அலைகள் வந்து அள்ளிச் சென்று மீண்டும் கரைக்குத் தள்ளுவதுபோலவும் இருக்குமாம். அப்படியொரு சிரிப்புத்தான் எனக்கு வேண்டும்.
என்னை எது இழுத்துப்பிடிக்கின்றது.…..?
மனதைத் திறந்து என்னால் ஏன் சிரிக்க முடியவில்லை?
நான் சிரிக்கின்றேன். ஆம் சிரிக்கின்றேன்; ஆனால் என்னால் அதை உணரமுடியவில்லை. வாயைத் திறந்து சிரிக்கின்றேன். ஆனால் அந்த சிரிப்பு மனதிலிருந்து வரவில்லை. மனம் என்னை விட்டு எங்கோ தொலைவில் விறைத்துக்கிடக்கின்றது.
இதற்கெல்லாம் அந்தச் சிறுமிதான் காரணம். என் சிரிப்பைப் பிடுங்கிவைத்திருப்பவளும் அவள்தான். எனக்குள் இருக்கின்ற அவளினுடைய அழுகைதான் என்னுடைய சிரிப்பை வலியாக மாற்றிவிடுகின்றது.
இதோ! அந்தச் சிறுமியின் அழுகைச் சத்தம் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டது. அந்த அழுகை எப்போதுமே எனது நெஞ்சுச் சுவர்களை உதைகின்றது. ஒரு சிறுமியின் அழுகையைக் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி என்னால் சிரிக்க முடியுமா?
அன்று எனக்கு எத்தனை வயதென்று சரியாகத் தெரியாது. ஆனால் பத்துப் பதினொரு வயதிருக்கலாம். அப்போதுதான் அவள் எனக்குள் வந்தாள். அவள் வந்த அந்தக் கணத்திலிருந்து அழுகைச் சத்தம் எனக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. என்னால் நிம்மதியாக உறங்க முடியாது, என் அழகிய சிரிப்புக்களை மனதைத் திறந்து பறக்கவிட முடியாது…என்னால் சரியாக இயங்கவே முடியாது.
எப்போதும் ஒரு மூலையிலிருந்து அழுதுகொண்டிருப்பாள். அவள் முன்னரேயே என்னுள் இருந்தவளா?அவள் அழுகைச் சத்தம் கேட்கத் தொடங்கிய பின்னர்தான் அவளைக் நான் உணரத்தொடங்கினேனா? சில நேரங்களில் விம்மி விம்மி அழுவாள். அது எனக்கு மட்டும்தான் கேட்கும். அவளுக்குக் கத்தியழவேண்டும் போலிருக்கும். எவ்வளவுதான் முயன்றாலும் அவளால் கத்தியழ முடிவதில்லை. “ஒருநாள் நான் சத்தமாகக் கத்தியழவேண்டும்.” என்பாள்.
எப்படி என்னால் மனதைத் திறிந்து என் சிரிப்பைப் பறக்கவிட முடியாமல் இருக்கின்றதோ, அதே போன்று அவளாலும் மனம் விட்டு அழவும் முடியவில்லை என்பாள். அழவும் சிரிக்கவும் முடிவதே மனிதருக்கான பெருங் கொடைதான்.
அவள் பொருமிக்கொண்டிருக்கும்போது அவளுக்குள் எரிமலையொன்று குமுறிக்கொண்டிருப்பதுபோல் சத்தங்கள் எனக்குள் கேட்கும். அது ஒரு கணத்தில் வெடித்துச் சிதறிவிடாதா என்றே காத்திருப்பேன். ஆனால் அது வெடிக்கவும் மாட்டாது அடங்கியும்போகாது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நிற்கும். நெஞ்சு இறுகி வலிக்கும். பின் என் காலும் கையும் விறைத்து அசைவற்றுப்போய்விடும். நானும் சிறுமியும் உறைந்துபோயிருப்போம்.
000
ஆதி என்னுள் இருக்கும் காந்த சக்தியை தன்வசப்படுத்தியிருந்தான். அவன் உடல் கொதித்துக்கொண்டிருந்தது. இப்படி ஒரு அணைப்பிற்காக எத்தனையோ தடவைகள் ஏங்கியிருக்கிறேன். அவன் அருகாமையில் நெஞ்சு நெசவுத் தறிபோல் அடிக்கத்தொடங்கியது.
இப்போது அவன் என்னை இறுக்கி அணைத்துக்கொண்டான். இந்த நேரத்தில்தான் அவள் சிறுமி விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டாள்.
“ஏன் அழுகிறீர்?” என்று கேட்டான் ஆதி. இந்தக் கேள்வியை நாம் இணைந்த இந்த இரண்டு வருடங்களாகக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நானும் “தெரியாது.” என்கின்ற பதிலையே சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.
“காரணம் தெரியாமல் ஆரும் அழுவினமோ?” என்றான். என்னிடம் பதில் இல்லை. அவனுக்கு புரியாத ஒரு துணையாக எமது உறவு தொடர்ந்தது.
விறைத்த பிணம்போல உடல் குளிர்ந்துபோனது. அவன் கையைத் தள்ளிவிட்டேன். ஆனால் அவன் நிறுத்தவில்லை. வெறிகொண்டு என்மீது பாய்ந்தான். சிறுமி வீரிட்டுக் கத்தினாள்.
நிறைய நாட்கள் மெளனமாவும் இருப்பாள் சிறுமி. பெற்றோர்கள் இழந்த ஆதவரற்ற பிள்ளைபோல அந்த மௌனம் ஓரத்தில் அனாதரவாய்க் கிடக்கும். அந்த நேரத்தில் நானும் எனது வேலைகளில் தீவிரமாக ஈடுபடுவேன். அவளது மௌனத்தை எனது மௌனம் கட்டி அணைக்கும். அவளைத் தடவிக்கொடுத்து ஆறுதற்படுத்தும். அப்பொழுதெல்லாம் அவள் மெதுவாக அசையும் மூச்சில் கோபம் கலந்து கணலாய் வெளியேறுவதை உணர்ந்திருக்கின்றேன். அவளது கண்கள் மூடியிருந்தாலும் கண் முட்டைகள் வீங்கித் பெருத்திருக்கும். நான் அவளை வாரியணைத்து மடியில் படுத்தித் தூங்கவைப்பேன்.
சிறுமி கதறக் கதற என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது…அவன் இப்போது என்னை விழுங்கிக்கொண்டிருந்தான்.
000
இன்னொருநாள்…
இரண்டு இதழ்கள் மற்ற இரண்டு இதழ்களோடு உரசிக்கொண்டிருந்தன. காம நடனமாட நானும் அவனும் தயாராகிக்கொண்டிருந்தோம். காமமே வலியைத் தின்று முழுமையான ஒரு சிரிப்பைத் தர முடியும் என்று கொஞ்சம் நம்பிக்கை எனக்கிருந்தது.
நடனம் உச்சத்தில் சூடு பிடித்தது. உடல்கள் இரண்டும் நடனச் சூட்டில் கொதித்துக் குமுறின. இந்த நேரத்தில் சிறுமி உள்ளிருந்து முனகிக்கொண்டிருந்தாள். இந்த நேரத்திலா இவள் முனகவேண்டும்? நான் பொருட்படுத்தாமல் தொடர்ந்தேன் நடனத்தை. வேண்டாமென்று பிடிவாதமாகச் சிணுங்கினாள். கத்தினாள் நாம் நிறுத்தும்வரையில்…
நான் அவனைத் தள்ளி விட்டேன். அவனுக்குக் கோபம் கொப்பளித்தது.
“நீர் ஒரு சைக்கோவா?” என்றான் ஆதி.
எனக்கும் கோபம். என்மீதும் அவள் மீதும். காம நடனத்தை இடை நிறுத்தியதால் அந்த காம உலகமே திரண்டு கொப்பளித்தது. தயவுசெய்து என்னை விட்டுப் போய்விடு என்று அவள் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டேன்.
அந்தச் சிறுமி அமைதியாக அழுதுகொண்டிருந்தாள். அவள் உதடுகள் புண்ணாகி இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. அவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். தான் அழுவதை என்னால் மட்டும்தான் உணரமுடியுமென்பாள். அவளால் தனது அழுகையை உணரமுடிவதில்லை என்பாள்.
“இஞ்ச பார். அவன்கள் என்னை என்னவெல்லாம் செய்திருக்கின்றான்கள்.” அவள் உடல் முழுவதும் நெகக் கீறல்கள். அந்தக் கீறல்க் காயங்களைக் கண்ட என் கண்கள் பயந்து மூடிக்கொண்டன. என் உடல் நடுகியது. அவளை என்னால்த் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. உடலைச் சுருட்டிக்கொண்டேன். அன்று உணவு, தண்ணியற்றுக் கிடந்தோம் காலை வரை.
000
“கதைச்சுக் கொண்டிருபீர். பிறகு எங்கேயோ யோசினை போயிடும்?” என்ன நடக்கிது? எனக்கு ஒண்டும் விளங்கேல்லை. நீர் சாதாரணமாய் இருக்கிறேல்ல. நீர் சிரிச்சு சந்தோசமாய் இருக்கிறதும் குறைவு…”
சாதாரணம்!
எனது கண் வாய் பற்கள் எல்லாம் அசைந்து சிரிப்பென்ற சம்பவத்தை பூக்க முயன்றன. யாரும் சிரித்தால் பதிலுக்குச் சிரிக்கவேண்டும். ஆனால் அந்தச் சிரிப்பு அடி மனதிலிருந்து வருவதல்ல. ஒரு வாயும், கண்ணும், பற்களும்தான் சிரிப்பை உண்டாக்கலாமெனில் இன்று எத்தனையோ சிரிப்புக்களை உற்பத்திசெய்யலாம். அவ்வாறு சிரிப்புக்களை உற்பத்திசெய்யும் மனிதர்கள் ஏராளம் இருந்தார்கள். சிலர் சிரிப்புத் தொழிற்சாலையே வைத்திருப்பவர்கள்.
அவன் சொல்வது அவனளவில் நியாயம்தான். சிறுபராயத்தை அதன் அழகு குலையாமல் வாழ முடியாமல் போனது பற்றி எத்தனை தடவைகள் சொல்லியும் அவன் அதை “கோழிப் பீயை மிதிப்பதுபோல் மிதித்துவிட்டுக் கடந்து செல்லும். நடந்ததையே நினைத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.” என்பான். ஆனால், ஒவ்வொரு தடவையும் கோழிப் பீ என் பாதங்களில் ஒட்டிக்கொண்டு வந்தது.
“நான் என்ன சொன்னாலும் உமக்கு விளங்காது?” இருவருக்குமிடையில் சண்டையும் கூடவே கோழிப் பீயைப்போல் ஒட்டிக்கொண்டே வந்துவிடும்.
காம நடனத்தைச் சரிவர நடத்தினாலேயொழிய இந்த வாழ்வு செழிப்படையாது. அவள் வந்து நின்று அழுதாலோ, குழறினாலோ இடைநிறுத்தாமல் ஆடியே ஆகவேண்டும்.
அவனோடு காம நடனத்தை ஆடினேன். மார்புகள் நொந்தன. உடல் பாராமாகி எங்கோ பாதாளத்தில் விழுந்தது. ஆட்டத்தின் முடிவில் மறுபக்கமாகத் திருப்பிக் கிடந்து அழுதேன்.
சிறுமியின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவள் என் தலையை வாரிவிட்டாள்.
000
எனக்கு முன்னால் இருக்கும் அவருக்கு அறுபது வயதிருக்கும். கிழக்கு ஐரோப்பிய நாடொன்று அவரது பிறப்பிடம். அவர் சிரிக்கும்போது முழுமையான ஒரு சிரிப்பை உதிர்ப்பதுபோல் இருந்தது. அந்தச் சிரிப்பைத் திரும்பத் திரும்பப் பார்க்கவேண்டும்போலிருந்தது. நெளிந்து வளைந்த வெண் கூந்தல் பளபளத்தது. உளவியலாளர்கள் எப்போதும் அமைதியான முகத்துடன் இருப்பதைப் பார்க்கும்போது அவர்களால் மனதாரச் சிரிப்புக்களை உதிர்ப்பது இலகுவானது என்றே நினைப்பேன்.
மனசு நிறைந்த சிரிப்பு எப்படி இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது. நான் சிறு பராயத்தில் எப்பவுமே சிரித்தபடி, கலகலவென்று இருப்பேனாம் என்று அம்மா சொல்லுவார். அந்தச் சிரிப்பு முழுமையானதாக இருந்திருக்குமா?
சென்ற இரண்டு கிழமைகளும் இந்த உளவியலாளருடம் பேசியது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவள் சிறுமி உறக்கமற்றிருந்தாள். இரவு நேரங்களில் எழும்பியிருந்து என்னைத் தொந்தரவுசெய்தாள். பகல்களில் நிறையத் தாகமாக இருக்கின்றது என்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடித் திரிந்தாள்.
அவள் ஒரு காம நடனத்தைக் கூட எனது துணையுடன் நிம்மதியாக ஆட விடுவதில்லை. என்னை நிம்மதியாக உறங்கவோ, வேறு வேலைகள் செய்யவோ விடுவதில்லை. எப்போதுமே அழுகைச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருப்பதால் என்னால் எதையும் முழுமையாகச் செய்யமுடியவில்லை. அவள் எனக்குத் தேவையில்லை. அவளை என்றைக்குமாகப் பிரிந்துவிட நீங்கள் எனக்கு உதவுவீர்களா? என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
அவர் என் கண்களை மூடி. அவளைப் பற்றிய நுண்ணிய அவதானிப்புகளை தன்னிடத்தில் பகிரச் சொன்னார்.
எனக்கு அவளைப் பற்றி யோசிப்பதே சிரமமாக இருந்தது. ஏதோ ஒரு பாலைவனத்தில் நடப்பது போலான உணர்வு. புதையும் கால்களை சிரமத்துடன் தூக்கி வைத்து நடையைத் தொடர்ந்தேன். என்னையும் அவளையும் தவிர யாருமற்ற அந்தப் பாலைவனம் வெறிச்சோடியிருந்தது. தூரத்தில் சுடுமணலில் அவள் கிடந்தாள். எனது கால்கள் பாரமாகிக்கொண்டிருந்தன. ஆனாலும் நடந்து அவளை அண்மித்தபோதுதான் தெளிவாகத் தெரிந்தது. அவளை ஒரு பெரிய பாம்பு இறுகச் சுற்றி வைத்திருந்தது. அவள் பாம்பிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயன்று கதறிக்கொண்டிருந்தாள். ஆனால் பாம்பு விடவில்லை. நான் அவளைக் காப்பாற்றக் கால்களை எட்டி வைக்க முனைந்தபோது கால்கள் கனத்தன. அசைக்க முடியவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன் நான் தோள்வரைக்கும் புதைந்துபோயிருப்பதை!
கண்களைத் திறந்தேன். கண்ணீர் நைகாரா நீருற்றுப்போல் பாய்ந்தது. அவர் என் கரங்களைத் தடவிக் கண்ணீரைத் துடைக்க ‘ரிசூ’ தந்தார். நான் புதைந்த மண்ணிலிருந்து மீண்டெழுந்து வீடு சென்றேன்.
000
இன்று எப்படியாவது அவளிடன் பேசி அவளை என்னை விட்டுப் பிரியுமாறு கேட்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். உளவியலாளப் பெண்மணி கையில் தேனீர்க் குவளையுடன் சிரித்தபடி இருந்தார் என் முன்.
என் கண்கள் தணிந்தன. நீண்ட நேரமாக அவளைத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. திடீரெனப் பயமுறுத்துவதுபோல் எனக்கு முன் வந்து நின்றாள். கட்டையாக வெட்டப்பட்டிருந்த தலை முடி பரட்டையடித்துப்போயிருந்தது. கண்கள் சிவந்து முழிகள் வெளியே தள்ளிவிடும்போல் இருந்தன. அவள் போட்டிருந்த சட்டை தாறுமாறாகக் கிழிந்திருந்தது. எப்படியும் ஒரு பத்து பதினைந்து வருடங்களாவது பழைமைவாய்ந்த சட்டை அது.
“உன்னைப் பார்க்க எனக்குப் பயமாக இருக்கின்றது. நீ யார்?” என்று கேட்டேன்.
அவள் மட்டமானதொரு சிரிப்புச் சிரித்தாள். பின்னர் கவலையான முகத்துடன்,
“வடிவாகப் பார். உனக்குத் தெரியாதா? எனது பெயர் ஜீவி. நீ எழுதிய சுணைக்கிது கதையில் நான் வாழ்கின்றேன். மழை ஏன் வந்தது கதையில் நான் இன்னும் பயந்துகொண்டிருக்கின்றேன். இன்னும் நீ என்னை உணரவில்லையா?” என்று கேட்டாள்.
அதன் பின் அவள் தனது சட்டையைப் பிடுங்கி எறிந்தாள்.
“நான் ஓர் வித்தியா. நான் ஓர் அஸீபா. நான் ஓர் கோணேஸ்வரி. இங்க பார் என் உடல் முழுவதும் காயங்கள். அவன்கள் என் உடம்பில் எந்தவொரு அங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எனக்கு இத்தனை காயங்கள்? நான் ஒரு சிறுமி. என்னால் எப்படி இத்தனை காயங்களையும் தாங்கிக்கொள்ள முடியும் சொல்? சரியாக நோகுது.” அவள் விம்மி விம்மி அழுதபடி நின்றிருந்தாள். அவள் அடிவயிற்றிலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்துகொண்டிருந்தது.
அவளைப் பார்க்க முடியாமல் கண்கள் வலியெடுத்தன. உடல் நடுங்கியது. தலை விறைத்தது. எனது சட்டையில் ஒரு துண்டைக் கிழித்து அவளில் போர்த்தினேன். துணி முழுவதும் சிகப்பாக மாறிவிட்டது.
“உன்னைப் பார்க்க எனக்குக் கவலையாக இருக்கின்றது. நீ இந்தச் சமூகத்தின் படைப்பு. அவர்களே உனக்குப் பதில் தரவேண்டியவர்கள். அவர்கள் உன்னை உருவாக்கியதற்காக வெட்கப்படவேண்டியவர்கள். எனக்குள் ஏன் வந்தாய்? என்னால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. தூங்க முடியவில்லை. எனது வாழ்க்கையை வாழ விடு. தயவுசெய்து நீ என்னைவிட்டுப் போய்விடு.” என்றேன்.
நான் சுயநலமுடையவள். என்னோடு இவ்வளவு காலமும் வாழ்ந்த இந்தச் சிறுமியை இப்படியான ஒரு நிலையில் தன்னந் தனியே அனுப்பி வைக்க முடிவுசெய்தேன். நான் மற்ற மனிதர்களைப் போன்று வாழ ஆசைப்பட்டேன்.
சிறுமி பேசினாள், “நீ சின்னதாக இருந்தபோது உன்னை ஊஞ்சலில் வைத்து உன் விருப்பத்திற்கு மாறாக அவன் உயர உயர ஆட்டியபோது நீ கதறியழுத கணத்திலேயே நான் உனக்குத் தேவைப்படுவேனென்று நினைத்து உனக்குள் ஓடிவந்துவிட்டேன். இன்னொருவன் உன்னைக் கோடிக்குள் வைத்து விரட்டினான். இறுகப் பிடித்து உன் விருப்பமில்லாமல் உன்னை எங்கெங்கோவெல்லாம் தொடுகையில் நான் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெிலனில் நானொரு சிறுமி. நான் இயலாமல் சுருண்டு உனக்குள்ளேயே படுத்துவிட்டேன். நீதான் நான். நான்தான் நீ. உனதழுகை எனதழுகையாக இருந்தது. எனது வலி உனது வலியாக இருந்தது. அதனால் உன்னுடன் தங்கிவிட்டேன். இன்றுவரையில் நான் தொந்தரவாகவே இருந்திருக்கின்றேன். இனிப் போய்விடுகின்றேன்.”
அவள் பேசியது துயரமாக இருந்தது. நெஞ்சுக் சுவர்கள் சுருங்கிச் சுருங்கி அழுதன. சிரிப்பைப் சோடனை செய்யும் முகம், வாய், பற்களும் வலித்தன. ஆனாலும் அவள் போகவேண்டியவளே.
உளவியலாளரிடமிருந்து விடைபெற்றேன். அவர் முகத்தில் சாந்தம் தொங்கியது. புன்னகை பூத்த முகத்துடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். உளவியலாளர்களே இப்படித்தான் சாந்தம் பூசியவர்கள்.
வீட்டுக்கு வந்து ஆதியிடன் நடந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்பவெல்லாம் அவன் என்னைக் கூடுதலாகப் புரிந்துகொள்கின்றான். அவன் என்னைத் தன் மடியில் சாய்த்து வருடிக்கொடுத்தான். அவனுடைய வருடல்கள் எனக்குப் பிடித்திருந்ததற்குக் காரணம் ஒரு சிறுமியைத் தடவுவதுபோல் நேசத்துடன் தடவினான் என்பதே. நல்ல வருடல்கள் எப்போது காயங்களை மாற்றும்போலும் என்றுணர்ந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் இவன் அவளை எப்படிப் பார்க்கின்றானோ? இந்த வருடல் அவளை என்ன செய்யுமோ என்கின்ற சின்னச் சந்தேகமும் அச்சமும் எழுந்தன. ஆனாலும் நம்பிக்கை என்ற ஒரு பிடியிருந்தது. நான் அமைதியாக அவன் மடியில் தூங்கிக்கொண்டிருந்தேன்.
இப்பவெல்லாம் அவளின் விம்மல்கள் எங்கோ தூரத்தில் ஒலித்துக்கொண்டிருந்தன. அவள் போனாளா? இருக்கின்றாளா? தெரியவில்லை. அவள் படுத்திருந்த மூலையில் அவளது கிளிஞ்ச சட்டை தனியே கிடந்தது.
பின்னர் சந்தித்த நாட்களில் ஒரு முழுதான சிரிப்பை என்னால் எப்போதுமே பூக்கவே முடியவில்லை என்றாலும் சுமாராகச் சிரித்தேன். அவன் வருடல்கள் தொடர்ந்தன.
சிறுமிகளான வித்தியா, அசீபா, ஜீவி போன்றவர்கள் வந்து நினைவுகளை இடைமறித்தார்கள். சின்னதில் நான் மனசாரச் சிரித்த ஞாபங்கள் வந்துபோயின.
அன்று என்னருகில் இருந்த பெரியவர்கள் நினைத்திருந்தால் என் முழுமையான சிரிப்பைத் தொடரவிட்டிருக்கலாம். அது இப்போது சுயமாக எங்கெல்லாமோ பறந்துதிரிந்திருக்கும்.
000
வெண் கூந்தல் பெண்மணியை மீண்டுமொருமுறை பார்க்கச் சென்றிருந்தேன்.
“நானும் ஒரு முறை மனசாரச் சிரிக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.” என்று அவர் சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.
அவர் முகத்தில் வித்தியா தெரிந்தாள்.
நிரூபா
நிரூபா கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். ‘சுணைக்கிது’ , ‘இடாவேணி’ ஆகிய சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.