முயங்குதல் அல்லது  மாயப்பெருநதி

கடலை வரைந்தாள்.

அதற்கு

கண்கள் என்று பெயரிட்டாள்.

பின்னிரவில்  அதற்குள்

நிலவு எழுந்தது.

நட்சத்திரங்கள் வெள்ளி மீன்களாகி

நீந்தத் தொடங்கின.

செழும்புப் பச்சை நிறம் கொண்ட

ஜின் ஒன்றின் நீராடல்.

திரண்ட மேனியில்

சிறு ஒளித் துணுக்குகள் 

வைரக்கல் மூக்குத்தி போல்

மின்னியது.

அதன் சாம்பல் நீலக் கண்ணோரம்

சுருமா கசிந்தது.

அலைகள் முரண்டின. 

புரண்டெழுந்தன.

பின் மயிலிறகாய்

கரை வருடின.

மீள முடியாத ஒரு

மாயப்பாதை

உள்ளே

விரிந்து கொணடே சென்றது.

அவள்

மீண்டும் பெயரிட்டாள்

‘மந்திரக் குடுவை’

19 /10/2021
08.36 காலை

0

உம்மா

கீழே நீலப் பெருங்கடல் புள்ளியாய்

சுருங்குகிறது.

எம்பி மேலெழும்

துக்கம்  கண்களூடாக

திரள்கிறது.

நெஞ்சாங்கூட்டுக்குள்

படபடத்துக்கொண்டிருக்கும்

சாம்பல் புறாவை

நீவிக்கொடுக்கிறேன்.

இன்னும் ஐயாயிரம் மைல்கள்

கடந்தாக வேண்டும்

குளிர்ந்த இனிப்பற்ற ஒரேஞ்  ஜூஸ்

வருகிறது.

ஏலக்காய் மணக்கும் 

சூடான தேனீர்

காலொடிந்த சிட்டுக் குருவிக்கு

மஞ்சள்கட்டு

பூனைகளுக்கு

மீனும் ஆணமும் பிசைந்த சோறு

விரித்த கூந்தலை 

வலிக்காமல் வாரி

இரட்டைப்பின்னல்

…………..

சாப்பாடு, கரண்டிச் சந்தடிகள் 

கலகலக்கும் ஜோடிகள்

குழந்தைகள்

என்னைத் தவிர எல்லாருமே

சந்தோசமாக இருப்பது

யார் குற்றம்?

போய் சேரும் கடைசிப் புள்ளியில்

இருக்கும்

காட்சிகள் கன்னபின்னா என்று

மனதுக்குள் சுற்றியலைகின்றன

இரட்டைக் கொய்யா மர  வீடு

பெருக்க பெருக்க வளரும் முற்றம்

உள் கூடத்தில் வெண் துணி போர்த்திய  கட்டில்

அண்ணாந்து பார்க்கிறேன்.

கனிந்து தொங்கும் செம்மாம்பழ மரம்

திறந்த கதவுகளுடன் சிறு குருவிக் கூண்டு

ஆடுகிறது.

2022 Feb

ஷமீலா யூசுப் அலி

‘ஷமீலா யூசுப் அலி’ தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். கவிதைகள், ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர். FemAsia இணைய இதழின் ஆசிரியர்.

2 Comments

  1. உம்மா கவிதையை வாசிக்கும் போது மனம் கனக்கிறது.

  2. //சாப்பாடு, கரண்டிச் சந்தடிகள்

    கலகலக்கும் ஜோடிகள்

    குழந்தைகள்

    என்னைத் தவிர எல்லாருமே

    சந்தோசமாக இருப்பது

    யார் குற்றம்?//

உரையாடலுக்கு

Your email address will not be published.