அம்மாவிற்கு ஒரு போன் வந்தது.

அவளுக்குச் சரிவரப் புரியாமல், என்னிடம்தான் செல்லைக் கொடுத்தாள். யாரோ நீலகண்டன் என்பவர் கேரளாவில் இருந்து பேசினார். கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் தமிழ் என்பதில் விஷயம் கூடி வந்தது. அவர்களுக்குத் தெரிந்த பலரையும் விசாரித்து இந்த எண்ணை அடைந்திருக்கிறார்கள். கடைசியாக அம்மா வேலை செய்த கல்லூரியில் அவர்களுக்குக் கிடைத்தது. எனது சகோதரி திலோத், உன் அம்மாவுடன் கூடப்படித்தவர்கள், உடல் நலம் சரியில்லை, உன் அம்மாவைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறாள். விஷயம் இதுதான். இதைக் கேட்டதும் சொல்வதற்கு ஒன்றும் தோன்றாமல் நான் ஒருகணம் திகைக்கவே, அவர் மெதுவாகக் கேட்டார், உடைந்த தமிழில், சந்தேகமாக. “உன் அம்மா உயிரோடு இருக்குல்ல?“

அம்மாவிடம் சொன்னேன்.

தலையாட்டிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க போனார்கள்.

நானும் கொஞ்சம் சுடுதண்ணீரைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு மகள்கள் விளையாடிக்கொண்டிருந்த முற்றத்துக்குப் போனேன். பிள்ளைகள் இருவரும் பாட்டி வீடென்றால் தங்களை மறந்து ஆடுவார்கள். வலுக்கட்டாயம் பண்ணி வெந்நீரைக் குடிக்கவைக்கும்போது இருவருக்கும் காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். என்னையறியாமல், தொற்றுக் காலத்தின் பயமுறுத்தல்களை ஒப்பித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் பாட்டுக்கு விளையாடியது எரிச்சலாக இருந்தது. கோபமாகத் திரும்பிவந்தேன். அம்மா என் வருகைக்கு காத்துக்கொண்டு நின்றிருக்கிறாளோ?

“கேரளாக்கு போவ முடியுமா?“

அண்ணனுக்கு போன் செய்தேன். அவன் இதெல்லாம் விளையாட்டில்லை என்று துவங்கிப் புள்ளிவிவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான். கேரளாவில் தொற்று கோரத் தாண்டவமாடிக் கொண்டிருப்பதைச் சொன்னான். சாவு எண்ணிக்கைகளை எல்லாம் அவன் விவரித்துக்கொண்டிருந்தபோது, அவன் ஒரு தொலைக்காட்சியாக இருந்திருந்தால், அணைத்துப் போட்டிருப்பேன். அதெல்லாம் சாத்தியமான காரியமில்லை என்று அம்மாவை நான் திகைக்கச் செய்வதற்கு முன்பே  “நீயும் நானும் போலாம். வா!“ என்றாள் அம்மா. அதற்கு அப்புறம் முடியாதா என்கிற அம்மாவின் பார்வை என்னைத் துளைத்தது. அவள் அழகி. எப்போதும் என்னைத் தன்னுடைய ஆளுமையால் ஆட்கொண்டிருப்பவள். உண்மையில் அவளை மறுக்க யாராலும் முடியாது. அப்பா இறந்து போனதற்கு அப்புறம் அவளுடைய ஒளி இன்னமும் அதிகமாயிற்று. யாரிடமும் ஏதாவது ஒரு தேவைக்கு நிற்காதவள் இப்படி ஒன்றைக் கேட்கும்போது சும்மா இருந்துவிட முடியாது.

என் கணவர் திரும்பிவந்ததும் சொன்னேன்.

அவர் வழக்கமான விஷயங்களை அடுக்கத் துவங்கியதும் இடைமறித்துக் கொஞ்சம் அதட்ட வேண்டியிருந்தது. சரசரவெனப் பல காரியங்களையும் பார்க்க வேண்டியிருந்தது. கேரளா சென்றதும் சூழ்ந்த அரசு சம்பிரதாயங்கள் மலைக்கவைத்தன. நாங்களே பணம் கட்டுவதாகச் சொல்லி ஒரு நடுத்தர ஓட்டலில் மூன்று நாள் அவர்கள் பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் எனக்கு தொற்றுக்கான அத்தனை நடைமுறைகளும் பல்வேறு கற்பனைகளை எழுப்பி, மனதை அசைத்துக்கொண்டிருந்தன. கனவுகளில் யாரோ ஒருவன், பாம்பைப் போலிருந்தவன் மரணமுகம் தரித்து, கைகள் விரித்து, கால்களைத் தூக்கி பாலே ஆடிச் சுழன்றான். திடுக்கிட்டு விழித்து வேறு பக்கம் புரண்டு படுத்தாலும் அன்று இரவெல்லாம் அந்த ஆட்டம் தொடர்ந்தது. அம்மா நல்ல தூக்கம்தான். தூக்க மாத்திரைகள் பழக்கமிருக்கிறது. உபயோகித்தார்களா என்பது தெரியவில்லை. பொதுவாகவே அவர்களை எல்லா தரப்பிலும் இருந்து அறிந்துகொள்ள முடியாது. அவர்கள் படித்த கான்வென்டில்தான் திலோத், அவர்களும் படித்தார்கள்.  அந்த காம்பவுண்டுக்குள் அவரையும், அவருடைய தோழியையும் வைத்து நாடகம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். அது சரியாக உருக்கொள்ளவில்லை. அம்மாவின் புத்தகங்களை எடுத்துப் படிப்பதுபோலச் சிலநேரம் அவருடைய டைரிகளை கூடப் படிப்பதுண்டு. அதில் தென்படுகிற அவருடைய இலக்கிய அபிப்ராயங்கள் மூலம் வரித்துக்கொண்ட அம்மாவைத்தான் அதிகமாகப் புழங்குகிறேன் என்று சொல்ல வேண்டும். நாங்கள் கிளம்ப வேண்டிய அன்று நான் அதிகாலையில் எவ்வளவு ஆழத்தில் அசைந்துகொண்டு கிடந்திருந்தேன் என்பது தெரியவில்லை, திடுக்கிட்டு விழித்ததும் அம்மா எனது தலையை வருடி விட்டுக்கொண்டிருந்தாள்.

“கிளம்ப வேண்டாமா?“ என்றாள்.

அழகான ஊர்களைக் கடந்துசென்றோம். சாலைகள் சுத்தமாக இருந்தன. திலோத் வீட்டிலிருந்து காரோடு வந்த அந்த சேட்டன் வண்டி ஓட்டுவதில் மிகவும் லாவகம். வேறு வீடு வாங்கி நகரத்தில்தான் இருந்தார்களாம். திலோத்தின் வேலைக்கு அது உபயோகமாக இருந்திருக்கிறது. அவளுக்கு உதவியாக இருந்த அவளுடைய கணவர் அங்கேதான் டெக்ஸ்டைலில் பணம் பண்ணுவார். இப்போது குடும்பத்தார் முழுவதும் சொந்த வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இல்லத்தே வீடு என்றார்கள். அது ஒரு சாதியக் கூறு என்பது தெரியாமலில்லை. அங்கே சேர்ந்ததும் அங்கே இருப்பவர்களின் தாக்குவது போன்ற நிறம் நிச்சயமாக உறுத்தியது. ஆயினும் தலையசைத்துத் தங்களுக்கு நடுவே நிறுத்திக்கொண்டார்கள். நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா முகத்தில் இருப்பது என்னவென்று சொல்ல முடியவில்லை.

வீட்டின் முற்றத்தில் வைத்துக் குளிப்பாட்டி வெயிலில் உலர வேண்டி உட்காரவைத்திருக்கிறார்கள். மொட்டை அடித்திருக்கிறார்கள். அதில் வயலட் வட்டங்கள் இருந்தன. கரிந்த அடையாளங்கள் இருந்தன. இரண்டு மிடறு இளநீர் குடித்தது நிற்கவில்லை. அவளுடைய புருஷனும் வேறு பெண்களும் தாங்கிப் பிடித்திருந்தார்கள். கூர்ந்து பார்க்கும்போது நோயைக் கடந்த ஒரு திடம் அவரிடமிருப்பது திண்ணம். நடனப் பயிற்சிகள்தான் உடலின் வடிவத்தை இப்படி வியக்கும்படி நிறுத்தியிருக்க வேண்டும். மருந்து கொடுத்தார்கள். முனகல்களுடன் கண்கள் இழுத்துக்கொண்டு போயிற்று. ஒரு மூதாட்டி அம்மாவின் தோளில் இடித்து முன்னே போகச் சொன்னாள்.

மற்றவர்களும் அதற்குக் காத்திருந்தார்கள்.

“திலோ! ஓபன் தி ஐஸ் டி! நான் மாரி வந்திருக்கேன்! மெட்ராஸ், மெட்ராஸ்ல இருந்து!“

அவர்களின் கண் திறந்தது. ஒரு கணம், நம்ப முடியாத ஒரு கூர்மையான பார்வை. அதற்கு அப்புறம் இரண்டு கைகளையும் தூக்கியது ஒரு அழைப்பாக இருந்தது. அம்மா அந்த வளையத்துள் நுழைய அவர்கள் அம்மாவைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டார்கள். அம்மா நடுங்குவது யாருக்குமே தெரிந்தது.

திலோத் :  கண்டோ ?

அம்மா :   ம்

திலோத்  : இதல்லா ஜீவிதம். பட்ஷே இதும் ஜீவிதம் !

அம்மா  :  நத்திங் வில் ஹாப்பன்ட் டூ யூ. பயப்படாத !

திலோத் :  பயம் எல்லாம் இல்லை. வலி !

இருவரும் கண்ணோடு கண் பார்க்கிறார்கள். உடலெல்லாம் ஒருமுறை தூக்கி வாரிப் போட்டு நடுங்கிய பிறகு

திலோத் : ரொம்ப வலிக்குது என்ட ஸ்கைலாப்பே !

நாங்கள் ஒரு வாரம் அங்கே இருந்துவிட்டுதான் வந்தோம். மக்கள் நன்றாக கவனித்துக்கொண்டார்கள். இருவருக்குமான நட்பைப்பற்றிப் பலரும், பல கோணங்களில் கேட்டவாறே இருந்தார்கள். அம்மா எல்லோரிடமும் சலிக்காமல் பேசிக்கொண்டிருந்தாள். மனம் ஒருமைப்பட்டுவிட்டால் மொழியாவது, ஒன்றாவது! நான் இரண்டு கவுன் போட்ட பெண்களின் ஆட்ட பாட்டங்களை, சண்டை சச்சரவுகளை கற்பனையில் நாடகம் பண்ணிக் கொள்ள முடிந்தது. சென்னைபோலச் சந்தோஷமாக இருக்கச் சுக சௌகர்யமான ஒரு பிரதேசம் உண்டா? திலோத்தைப் புதைத்த இடத்தில் ஒரு விளக்கு கொளுத்திவிட்டு நின்ற அம்மாவை அணைத்து, காரில் ஏற்றினேன்.

குடும்பத்தார் எங்களுக்கு பிளைட் டிக்கெட் போட்டிருந்தார்கள்.

சென்னைக்கு வந்த பிறகு அம்மாவின் முகத்தில் ஒரு வேதனையிருந்தது. அவர்கள் யாராவது ஏதாவது கேட்டால், அதை மறைக்க முற்பட்டுத் தோல்வியடைவதும் தெரிந்தது.. இதற்கெல்லாம் என்ன செய்ய முடியும் நம்மால்? ஒருநாள் ஒரு இளைப்பாறலான நேரத்தில் கூகிள் செய்து ஸ்கைலாப்பைக் காட்டினேன். அது ஒரு நேரத்தில் நமது பூமியைத் தாக்குவதாக இருந்த ஒரு தீர்ந்துபோன ராக்கெட். அது வரும் வேகத்தையும் அதன் விளைவுகளையும் அரசுகளால் கணிக்க முடியவில்லை. அறிவியல், தொழில்நுட்ப நிபுணர்கள் எல்லோருமே உதடு பிதுக்கினார்கள். மனம் உடைந்தவர்களின் காதுகளில் குரல் கேட்பதுபோல மரண முழக்கம் கேட்டவாறிருக்கையில் வாழ்க்கை புரண்டு படுத்தது என்றால் மிகையில்லை, அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அநேகமாக மனித வாழ்க்கை பூண்டற்றுப் போய்விடும் என்கிற அளவில் பேச்சுகள் முற்றி, இறுதியாக அது விழக் கூடிய நாளும் வந்தது.

“அன்று பகல் எனது வீட்டுக்கு வந்த திலோத், எனது அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வெளியே அழைத்துச்சென்றாள். அப்போது நாங்கள் கல்லூரியில் இணைந்த இரண்டாம் வருடம். ஹாஸ்டல் இருக்கிறவள்களைத் தேடிப் போனால் ஒருத்திகூட இல்லை. ஜனங்களே இல்லாமல் தெருக்கள் எல்லாம் வெறிச்சிட்டுக் கிடந்தன. நாங்கள் பேசிப்பேசி அலுத்து விடாமல் நடந்தோம். எங்கோ திறந்துகிடந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். அமாவாசையோ, பவுர்ணமியோ ரஜினிக்குப் பைத்தியம் பிடித்துவிடும், அவர் தன்னையே கட்டிப்போட்டுக்கொள்ளுவார். தர்மயுத்தம் என்பது படத்தின் பெயர். பெரிய ஆச்சரியம், அங்கே பத்துப்பேர் கூட கூட்டமில்லை. டிக்கெட் வாங்கிக் கொண்டு படம் பார்த்து முடித்தோம். அந்த நாளை மறக்கவே முடியாது. வீட்டிற்கு வந்தவுடன் செம்மையான திட்டு. அவளுக்கு அடியே கிடைத்தது.   “

“ஸ்கைலாப் அன்றுதான் கடலில் விழுந்ததா?“

“படத்தின் இடைவேளையில் காப்பி சாப்பிட வெளியே வந்தபோதே அங்கு பணி புரிபவர்கள் சொல்லிவிட்டார்கள். அது அட்லாண்டிக் கடலிலோ எங்கோ விழுந்துவிட்டது. ரேடியோக்களில் இருந்த ரன்னிங் கமெண்ட்ரி எல்லாம் ஓய்ந்துவிட்டிருந்தது. படம் விட்டு வெளியே வந்தால், என்ன சொல்லுவது? தியேட்டரின் வாசல்களை எல்லாம் அடைத்துக்கொண்டு, அப்புறம் தெருவெல்லாம் ஜனம்! அடுத்த காட்சிக்கு நிற்கிறார்கள். எல்லோருடைய முகத்திலும் என்ன ஒரு சிரிப்பு?

நான் அம்மாவின் பரவசத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“மறக்க முடியாது“ என்று மறுபடி சொன்னதையும்.

ஒரு உடல்நலம் குன்றிய ஒருவருக்கு நீங்கள் ஆறுதல் சொல்ல வந்து இருக்கிறீர்கள். அவருடைய மார்பில் சாய்ந்துகொண்டிருக்கிறீர்கள். அவர் அப்படியே உங்கள்மீது சரிந்து இறந்துபோகிறார். நீங்கள், அதற்கு அப்புறம் கனக்காமல் இருக்க முடியாது. நீங்கள் ஒருவேளை அதை ஆற்றிகொண்டிருக்க வாய்ப்பிருக்க, உங்கள் நினைவுகளைத் துருவியவாறு நான் உங்களிடம் அதுபற்றிப் பேசுகிறேன். என்ன நடக்கும்?

அம்மாவிற்கு அன்று இரவு ஹார்ட் அட்டாக் வந்தது.

தொற்றின் பிடியிலிருந்த மருத்துவமனைகள், அந்தக் கெடுபிடிகளுக்கு நடுவிலும் காசு பிடுங்கின. அதில் படித்தவர், பாமரர் பேதமேயில்லை. ஒரு உயிரை வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டு நீடிக்காமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்தோம். அண்ணன் தன்னிடமிருந்த மொத்தக் காசையும் செலவு செய்தான். அம்மா ஒத்துழைத்தார் என்றே சொல்ல வேண்டும். உறுதியுடன் பிழைத்துவந்தார் என்பேன்.

ஆனால் அந்த இடைவெளியில் நான் ஒரு டைரியைக் கைப்பற்றினேன்.

நானும் எனது கணவருமாக ஒரு கவிதையை உடைத்துச் சில்லு நூறாக்கி அந்த உண்மையைத் தனியாக எடுத்தோம். தியேட்டர் பற்றினதுதான். என்னை எனது திலோத்தமா முழுமையாகத் தின்று தீர்த்தாள் என்கிறாள் என் அம்மா.

மரண காலங்கள் முடிந்த பிறகு, நான் எனது குடும்பத்தாருடன் எனது வீட்டுக்குச் சென்றாக வேண்டுமில்லையா?. என்னவோ தோன்றுகிறது. அவளைப் பார்த்துக்கொண்டே, அவளுடன் வசிக்க வேண்டும். 

மணி எம். கே. மணி

சென்னையில் வசித்துவரும் மணி எம். கே. மணி, திரைப்பட துறையில் பணியாற்றிவருகிறார்.  திரைப்படங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.  ‘ஆஷஸ் & டைமண்ட்ஸ், மதுர விசாரம், மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ ஆகிய புனைவு நூல்கள் உற்பட பல கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.