/

ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்

ஒழுக்கத்தை ஏந்தி அலையும்

ஒரு மங்கல உறுப்பு இல்லாத இவனை

ஊனம் என விளிப்பதில்

தவறில்லைதான்

நகரம்

நால்வழிச் சாலையில்

கொடு நாற்றமெழ மலங்கழிப்பதை

உணருமிவன் நாசி

நாய்களின் முகத்திலமர்ந்து கொண்டு

தெருத்தெருவாய் ஓடுகிறது.

மதுபானக் கடையிலிருந்து

கழுத்து சுளுக்கித் திரும்பிய

திடீர் போதகர்கள்

மூடி எறிந்த வெற்றுக் குப்பிகள்

நீர்நிலையின்  அலை விளிம்பினில்

ஆடும் நடனத்தில்

மோதிய மீன்கொத்தியின்

உடைந்த அலகில் இவனுமிருந்தான்.

மலைப்பாம்பின் உடலுக்குள்

புகுந்துகொண்ட

திறந்தவெளிச் சந்தைகள்

குளிரேறும் அறைகளுக்குள்

சுருண்டிருப்பது கண்டு

மல்லித் தழைபோல்

மறுகி மலைக்கிறது

இந்த

கேவலமான கற்கால நெஞ்சம்.

விளைச்சலுக்குப் போனவனும்

வேட்டைக்குப் போனவனும்

ஏறிய பேருந்தில்

ஒருவன் காலை ஒருவன் மிதிக்க

கட்டிப்புரண்டு சண்டை.

கிழிந்த சட்டைப்பையிலிந்து

சிதறிய நாணையங்களையெடுத்து

தனக்குத் தெரிந்த ஊருக்கு

சீட்டு கிழிக்கிறார் நடத்துனர்

பூமி சமாதானமாய் சுழல்கிறது

தனக்குத் தானே சட்டையைக்

கிழித்தபடி

பேருந்திலிருந்து

தன்னை உதைத்து வெளியே விழுகிறான் இந்த பைத்தியக்காரன்.

2

கனத்த இருளில்

ஒரு நிலவைப் பொருத்தி வைத்துவிட்டு

பகலில் இசையைப் படரவிடுகிறேன்

தலை செல்லும் இடமெங்கும்

ஔிவட்டமாய் பௌர்ணமி.

பையப் பின்வாங்கும் கதிரொளி

கன்னங்களில் சோவையாய்

வெளிறியது.

நிலவை உவந்தும்

கதிரைப் பழித்தும்

நான் ஒரு கவிதை எழுதினேன்.

சுடு வெய்யிலின்

இசையற்ற மலட்டுத்தனத்தை

அதில் தர்க்கித்திருந்தேன்.

ஒரு வீட்டின்

கூரை வார்க்கும் எத்தனத்தில்

அங்குமிங்கும் ஓடிச்சுமப்பவனின்

உச்சி தொடங்கி

நெற்றியிலிறங்கி

புருவங்களில் தேங்கி

நாசியில் சறுக்கி

வாயில் விழுந்து

கழுத்தை நனைத்து

மார்பில் நெளியும் நீர்ப் புழுக்களை

வரிகளாய் எழுத எழுதத்

துடைத்துக் கொண்டேயிருக்கிறேன்

வழிந்து வழிந்து

இடை உள்ளாடை நனைத்திறங்கி

கால் பெருவிரல் நகத்தில்

திகைக்கும் ஒரு பெருந்துளி வியர்வையை

வீசிப் புறங்காலால் அடிக்கிறேன்.

உயர்ந்து செல்லும்

உப்பில் மணக்கும் நீர்ப்பந்து

சூரியனில் மோதி உடைகிறது

பாவம் அந்த கதிர்வட்டம்

கன்னம் சிவந்திருக்க

மாலையைப் பிறப்பித்தது.

~~~~~~~

3

மயிர்

தலையில் ஒற்றை மயிருள்ளவன்

மிச்சமிருக்கும்

வெற்றிடங்களை

கைகளால் தடவி தடவி மெருகேற்றுகிறான்

அவன் மொட்டையன்று

ஒரு மயிர் இருக்கிறது.

அவன் துறவியுமன்று

துறப்பதற்கு இன்னுமொன்றிருக்கிறது.

கொண்டையாக தலையில்

சுமந்து திரிகிறானே

அது ஓரிழை என்றால்

யாரேனும் நம்புவார்களா

அவனது தலைக்கு

வேறெங்கும் கிளைகளில்லை.

ஒற்றை மயிரை விழுங்கினால்

வயிற்றினுள்

ஏராளம் மயிர் முளைக்குமென்று

பாட்டி சொல்

மயிர் வழித்தடத்தில்

தடுமாறி நடந்து முடிகிறது மயிர்

முடியாமலிருக்கிறது முடி.

4

என்வீட்டு மொட்டை மாடியிலிருந்து

பிரகாசிக்கும் நட்சத்திரமொன்றைக்

குறிபார்த்து

வலுவெல்லாம் திரட்டிக்

கல்லெறிந்தேன்

கல்லும் நானும்

அரைவட்டமடித்தபடி

கீழே விழுந்தோம்

பொத்தென்று என் தலையில் விழுந்த

நட்சத்திரம்

தனது ராட்சத உடலை

இனி எப்படி வானுக்கு வழங்குவதென

குழம்பிக் குமைந்து

பகலின் தெருக்களில்

வெளிறிக் கிடக்கிறது.

5

அர்த்தநாரி

உயிர் வகிர்ந்திருக்கும்

உறக்கத்திலிருந்த என் செவியருகே

கைதட்டும் அழைப்பொலி.

பதறி விழித்து

‘நாகர் கோயில் ஒண்ணு’ என்கிறேன்

இடையினச் சிரிப்பொலிச் சிதற

‘நாரோயிலுக்கு நாரோயில்லருந்து

டிக்கட் எடுக்காண்டாம் ராசா’

தலை வருடி முன் மலர்ந்த

உள்ளங்கையில்

நெஞ்சைப் பிடுங்கி வைப்பது போல்

பணமெடுத்துக் கொடுத்தேன்

இறங்கிட  எழுந்தபோது  அகலாத அவளு(னு)டலில்

மெலிதாய் மோதிய எனதுடல்

இருபாதியாய் பிளந்து

பேருந்தின் இருபுற படிக்கட்டிலும்

இறங்குவதை உயிர்நாடி உணர்கிறது.

பிள்ளைக் குளவிக் கூடு வனையும்

மகப்பேறு மருத்துவமனைகளின் வெளிச்சத்தில்

நகரம் தாலாட்டொன்றின்

லயத்திலசைகிறது என ஒருவன்

தகவலுரைக்கிறான்.

அன்றிருந்த இடம்

இன்றிருக்கும் இடம்

ஒத்தவை

மறுத்தவை

சுகித்தவை

முகம் சுழித்தவை என

இரண்டும் கெட்டிருக்கும்

இரண்டில் ஒன்றியிருக்கும்

ஒன்றும் கிட்டாதிருக்கும்

இந்த மனதை எங்குபோய் தொலைப்பதென தளும்புகையில்

மதுபானக் கடை வரிசையில் நின்றிருந்தேன்

குப்பி கிடைத்துத் திரும்பினால்

‘எங்க கர்ண மகராசா வாராரு

காசயள்ளி தருவாரு’

கைதட்டி தோள்தொட்ட குரலின்முன்

மிச்சமிருந்த சில்றைகளோடு

மிகப்பெரிய காணிக்கைப்

பெட்டியினுள் விழுகிறேன்.

ராஜன் ஆத்தியப்பன்

வல்லன்குமாரன்விளையைச் சேர்ந்த கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் கடைசியில் வருபவன், கருவிகளின் ஞாயிறு என்ற சிறுகதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு கவிதைகளை மொழியாக்கமும் செய்துவருகிறார்

3 Comments

  1. அருமையான கவிதைகள். வல்லனின் கூர்மையான மொழி இன்னும் செறிவு உடையதாக மாறி இருக்கிறது. உடல் இரண்டாக பிளந்து இரு புற படிக்கட்டுகளில் இறங்குவது புனைவுக்கும் ஓர்மைக்கும் இடையே நிறுத்திச் செல்கிறது. நட்சத்திரம் கல்லாகி கல் நட்சத்திரமாகி, தன்னுடலை வானுக்கு ஒப்புக் கொடுக்கும் படிமம் தொன்மத்தில் கொண்டு நிறுத்துகிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.