/

கானகத்தின் குரல்: கே.என்.செந்தில்

“ஒரு நாடு அதன் மக்களால், கட்டிடங்களால், தொழிற்சாலைகளால் மட்டும் ஆவதல்ல. அதன் ஆறுகள், குளங்கள், காடுகள், மலைகள், பாலைவனங்கள் இவற்றாலும் ஆனது. இவை தான் ஒரு நாட்டின் அடையாளம்.”

-மா.கிருஷ்ணன்.

பால்ய வயதில், ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் தூர்தர்ஷனில் போடப்படும் படத்திற்காக வாரத்தின் ஆறரை நாள்களும் சில வேண்டுதல்களுடன் காத்திருப்போம். அந்நேரத்தில் மின்சாரம் போய்விடக்கூடாது, இடியுடன் கூடிய மழை வந்து விடக்கூடாது, தெருவில் சுபநிகழ்ச்சிகளோ, துக்க சமாச்சாரங்களோ சண்டை சச்சரவுகளோ நடந்து விடக்கூடாது, டிவி பார்க்க வழக்கமாகச் செல்லும் வீடுகளிலிருப்போர் எங்கும் சென்றுவிடக்கூடாது, மிகக்குறிப்பாக எங்கள் இதயங்களை துளைக்கும் ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ அம்பு வந்து விடவே கூடாது என ‘கூடாது’களின் வரிசை அப்படியே நீண்டு செல்லும். ஆனால் விளம்பரங்களை ஒருபோதும் வெறுத்ததில்லை. ஏனெனில் அவற்றைக் கூட  கண் இமைக்காது வாய் பிளந்து பார்த்துக் கிடந்த நாள்கள் அவை. எப்போதுமே எரிச்சலூட்டுபவை நடுவே குறுக்கிடும் ‘செய்திகள்’. உடனேயே, ’சூடான’ டிவிப்பெட்டி ’ஆறுவதற்’காக அணைக்கப்பட்டுவிடும். மீண்டும் குழுமும் போது சோதனை வேறு வடிவத்தில் காத்திருக்கும். ‘காணாமல் போனவர்க’ளைப் பற்றிய அறிவிப்பின் ஊர்வலம் தொடங்கும். புகைப்படத்திலிருப்பவர்களின் வயது, தோற்றத்தின் அடிப்படையில் சுற்றிலுமிருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு அனுதாப ஓட்டுகளோ ஏச்சுகளோ ’உச்’ கொட்டல்களோ சாபங்களோ கிடைக்கும். ஆனால் அதில் ஒரு நல்வாய்ப்பு எப்போதுமிருந்தது. ’காணாமல் போனவர்கள்’ எனும் சொற்பிரயோகத்திலேயே அவர்கள் என்றேனும் கிடைக்கக்கூடும் என்கிற நம்பிக்கை தொக்கிக் கொண்டிருப்பது தெரியும். ஆனால் ’அற்றுப் போனது’ எனச் சொல்லிவிட்டால் இப்புவியில் இனி காணவே முடியாமல் முற்றாகவே அழிந்து விட்டது என்றேயாகும். அவ்விழப்பிற்கு ஈடே கிடையாது.  அப்படி ஒரு உயிரி அற்றுப்போகிறது (’ஒரு வாழிடத்திற்கு ஏற்றாற் போல், உடலமைப்பைப் பெற்று பல்லூழிகாலமாகப் பரிணாமத் தகவமைப்பின் மூலம், ஒரு தனித்துவத்துடன் உருவான ஓர் உயிரினம், முற்றிலுமாக அழிந்து போவது தான் அற்றுப்போதல்’-பக்-173) என்றால் அதன் மதிப்பையோ சீரழிவின் கோரத்தையோ இச்சமூகம் உணர்திருக்கிறதா? குற்றவுணர்ச்சி கொண்டிருக்கிறதா?

சூழலியல் ஒழுங்கமைவுகள் குலைக்கப்பட்டதாலும் கண்ணில் படுகிறவையெல்லாம் கைக்குள் அடங்க வேண்டும் என்கிற மனிதவெறியாலும் உண்டான கெடுநிலையே இது.  டார்வினின் புகழ்பெற்ற கோட்பாடான ‘வலியது வாழும்’ (Survivel of the fittest) என்பதைச் சொல்லி இதிலிருந்து தப்பி விட முடியாது. ஏனெனில் காட்டின் வலிய விலங்கான வேங்கையை இரண்டாம் உலகப்போருக்குப் பின் துப்பாக்கி உரிமம் பரவலாக வழங்கப்பட்டதையடுத்தும் ‘வீரத்தின்’ பொருட்டும் கொன்று குவிக்கப்பட்டதன் எண்ணிக்கை நம்பவியலாத அளவிற்கு பலமடங்கு பெரிது. இது இப்படியெனில் மனிதர்களுக்குத் தீங்கிழைக்காத மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பெரிய பறவையினமான டோடா எங்கும் ஓடி ஒளியாத இயல்புடையது. எனவே மாபெரும் அளவில் அவை அழிக்கப்பட்டன. இன்று அற்றப்போனவை பட்டியலுக்குள் சென்றுவிட்டன. அத்தீவிற்கு மனிதர்கள் அளித்த பரிசு அது. காண்டாமிருகத்தைக் கொன்று குவித்தது கூட அப்படித்தான். ஒரே இடத்திற்கு அன்றாடம் வந்து சாணிபோடும் பழக்கம் கொண்டது காண்டாமிருகம். எனவே மறைந்திருந்து ஆற அமர கொல்வது எளிதாகப்போய்விட்டது. இப்போது அஸ்ஸாமில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. காட்டுக்கோழியின் வண்ணமயமான இறக்கை, தூண்டில் மீன் பிடிப்பதில் பயனபடுத்தப்பட்டதால் பிரிட்டிஷ் அரசு காலத்தில் ஒரே ஆண்டில் 50000 காட்டுக் கோழிகள் கொல்லப்பட்டன. நம் பங்கிற்கு அதை அற்றுப்போகச் செய்தாகி விட்டது. இந்த அழிவின் கதைக்கு முடிவேயில்லை. சுயலாபத்தின் பக்கங்களில் தற்பெருமையின் மையால் பொறுப்பின்மையின் வெளிச்சத்தில் மனிதர்கள் எழுதிய கதையாகும் இது. இக்கதையின் முற்றுப்புள்ளிக்காக எண்ணற்ற விவாதங்கள், பல்லாண்டு ஆய்வுகள், அரசின் திட்டங்கள், தன்னார்வலர்களின் செயல்பாடுகள் போன்றவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு தமிழக அளவிலும் இந்திய நிலப்பரப்பிலும் தோன்றிய கானுயிர்லாளர்களில் முன்னோடியாகக் கருதப்படும் தியடோர் பாஸ்கரின் இயற்கையியல் சார்ந்த எழுத்துக்கள் ஆற்றிய பங்களிப்பு வலுவானது. அவ்வெழுத்துக்களின் தொகுப்பையே இக்கட்டுரை பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது. 

டார்வின் சென்றிரங்கிய கலபகாஸ்தீவிலிருந்த உயிரினங்கள் வகைகளாலும் இனங்களாலும் அவரை வியக்க வைத்தன. நுட்பமான மாற்றங்களிலிருந்து பாரிய வேறுபாடுகள் வரை அவை பெற்றிருந்தன. அங்கு காணப்பட்ட ஆமைகள் ஒரு மனிதன் ஏறியமர்ந்து பயணம் செய்யக்கூடிய அளவில் மிகப்பெரிதாக இருந்திருக்கின்றன. வேறு உயிரினத் தொகுதிகள் உருவாகி வளர்ந்த போது சூழமைவுகள் சார்ந்து தற்போதைய உருவை அவை அடைந்திருக்கின்றன எனலாம். ஒரு உயிரியின் அரிய இருப்பைக் காலி செய்வதென்பது அதன் பரிணாமத்திற்கு தேவைப்பட்ட பல நூற்றாண்டுகளின் மீது தாக்குதல் நிகழ்த்துவது போலத்தான். ஹைதராபாத்தில் 1931ல் கூட காடுகளில் மிக அதிக அளவில் புலிகள் சுற்றித்திரிந்ததை தன் சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் சலீம் அலி. இன்று அதன் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படிக்கு இல்லை.

வளமான காடுகளில் தான் அபரிமிதமான வகைவகையான விலங்குகள், தாவரங்கள், பறவைகளுடன் இன்னபிற சிற்றுயிர்களும் செழிக்க இயலும். அப்படிச் செழித்தவை, அரியவை, அழிந்தவை, அழிவின் விளம்பில் உள்ளவை பற்றியெல்லாம் அவ்வப்போது சீற்றத்துடனும் மிகுதியாக ஆழந்த கரிசனத்துடனும் அக்கறையுடனும் எழுதப்பட்டிருக்கும் தியடோர் பாஸ்கரனின் கானுயிர் படைப்புகளில் புள்ளினங்களும் ஏனைய பிற உயிரிகளும் அவற்றின் வகைபேதமான இனங்களுடன் குணவிசேஷங்களுடன் வாழ்க்கை முறைகளுடன் பவனி வருகின்றன. இவ்வெழுத்து செறிவான மொழிநடையில் அமைந்திருக்கிறது என்பதே இதன் அழகும் சிறப்புமாகும். அதனாலேயே மனக்கிளையில் அமர்ந்த புள்ளினங்கள் அங்கிருந்து எழுவதேயில்லை. விலங்குகள் கூட முன்னர் படிந்து போன அர்த்தங்களிலிருந்தும் விளக்கங்கலிருந்தும் வெகுதூரம் விலகி வாசகரின் அருகில் வந்துவிடுகின்றன. கிட்டத்தட்ட அவற்றின் மூச்சுக் காற்றை புறங்கழுத்தில் உணருமளவிற்கு. இவற்றின் ஜீவதாரமான காடுகள் எவ்வாறு சூறையாடப்பட்டன? மிஞ்சியவற்றைக் காத்துக் கொள்வது யாரிடம் உள்ளது? என்கிற வினாவை எழுப்பி உரையாடலைத் தொடர்வது பாஸ்கரனின் எழுத்தியல்பாக உள்ளது. அழிவுக்கு பாதை சமைத்தவர்கள் மீதான கோபம் மட்டுமல்ல, உயிரிகளையும் தாவரங்களையும் காபந்து செய்ய தங்கள் வாழ்வின் ஒரு பகுதியையே அர்ப்பணித்த ஆளுமைகளின் அரிய பணிகளின் மேல் பாராட்டுணர்வும் கொண்டவர் அவர். ‘புதிய கானுயிர் ஆர்வலராக’ பரிணமித்திருக்கும் இக்கட்டுரையாளர் அதற்காக வெவ்வேறு புள்ளிகளைத் தொட்டும் கோடிழுத்தும் தழுவியும் பிற நூல்களின் வழி பெற்ற சான்றாதாரங்களைத் துணைக்கழைத்துக் கொண்டாலுமே கூட  அந்நூல்களை நாடிச் செல்வதற்கானத் தொடக்கமாகவும் பின்னணியாகவும் தியடோர் பாஸ்கரனின் ‘கையிலிருக்கும் பூமி’ என்கிற இயற்கையியல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பே இருந்துள்ளது. இக்கட்டுரையின் ஆதார ஸ்ருதியாகவும் அடிநாதமாகவும் இருப்பதுவும் அந்நூலே. அவ்வாறு இந்த ஆர்வலரின் ஈடுபாடுகளைக் கூர்திட்டிக் கொள்ளவும் அகழ்ந்து செல்லவும் காரணமாக இருந்த இந்நூலுக்கு நன்றியாகவும் இக்கட்டுரை அமைய வேண்டும் என உளமார விரும்புகிறார். இதன் துணைச்சேர்க்கைகளாக ’இந்திய நாயினங்கள்’ என்ற தனிநூலும் இரு மொழியாக்கப் புத்தகங்களும் அமைந்துள்ளன. 

காட்டுயிர் பற்றிய செழித்த பார்வையும் விரிந்த நோக்கும் ’நுண்மான் நுழைபுலம்’ கொண்ட அணுகுமுறையும் இக்கட்டுரைகளுடன் ஒன்றச் செய்கின்றன. இவையனைத்துமே தரவுகளின் தொகுப்பிலிருந்தோ தகவல்களின் குவியல்களிலிருந்தோ எடுத்துத் தூவப்பட்டவையல்ல. மாறாக பாஸ்கரனின் சொந்த அனுபவத்திலிருந்து விளைந்தவை. அதுவே கானியியலாளர்களில் அவரைத் தனித்துவமுடையவராகவும் அவ்வகை எழுத்துகளுக்கு ஒருவித முன்னோடியாகவும் கருத வைக்கிறது. வெற்றுப் புள்ளிவிவரங்களின் பட்டியல்கள் அளிக்கும் ஒவ்வாமையை நினைத்தால் இவ்வெழுத்தின் தனிச்சிறப்பு புரியவரலாம். இதற்குள்ளும் புள்ளிவிவரங்கள் இருக்கின்றன தான். அவை தன் தரப்பை எடுத்துச் சொல்ல ஒரு முகாந்திரமாகத் தான் பயனபடுகின்றதே அன்றி முதன்மையாக அல்ல.

0 0 0

“மனிதர் உணவிற்காக மட்டுமே வேட்டையாடிய போது அவர்களும் ஒரு இரைகொல்லி போல செயல்பட்டனர். அதனால் காட்டுயிர்களுக்கு பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பதினாறாம் நூற்றாண்டில் துப்பாக்கி வந்து, வேட்டை ஒரு சாகசப் பொழுதுபோக்காக உருவான பின் பிடித்தது கேடுகாலம்”. (பக்.167).

திருட்டு வேட்டையாடிகளால் கானுயிர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் பாஸ்கரன் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தே இவ்வழிவுகள் தொடங்கிவிட்டன எனச் சான்றுகளுடன் நிறுவுகிறார். அதாவது யானையும் புலியும் இல்லாத நாட்டிலிருந்து வந்தவர்கள் வேட்டையை வீரம் செறிந்த செயலாகவும் புலியை ‘எதிர்ப்பின் குறியீடாகவும்’ கண்டிருக்கின்றனர். அவர்களை அண்டிப்பிழைத்த – குனி என்றால் படுத்து விடும் இயல்பு கொண்ட – விசுவாசிகளான உள்ளூர் ஆட்சியாளர்கள் அவர்களின் அடியொற்றி கண்மூடித்தனமாக வேட்டையில் ஈடுபட்டனர். எவரேனும் புதிய அலுவலர் பதவி ஏற்றாலோ ஏதேனும் விருந்து வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டாலோ அதில் புலி வேட்டை மிக முக்கியமான பங்கு வகிக்கும். ஆட்கொல்லி அல்லாத சிவிங்கிப்புலியை கொன்று அதன் வாலைக் கொண்டு வந்து காட்டினால் ஆங்கிலேய அரசு ரூ.18 கொடுத்தாகச் செய்திகள் உள்ளனவாம். இன்று அற்றுப் போன விலங்குகளில் ஒன்று சிவிங்கிப்புலி. உண்மையில் காடுகளின் அழிவிற்கு 25% வேட்டையே காரணமாகும். அந்த வேட்டைகளுக்குத் தொடக்கமாக இருந்த வெள்ளையர்களின் நாட்டில் யானையைக் குறித்த ஒற்றைச் சொல் தான் இருந்தது. ஆனால் தமிழில் 40 வகைச் சொற்கள் உள்ளன என்கிறார் தியடோர். தாம்ஸ் ட்ரவுட்மன் நூலுக்கு(’யானைகளும் அரசர்களும்’) முன்னுரை எழுதிய ஆ.இரா. வேங்கடாசலபதியோ 150 சொற்கள் இருக்கின்றன எனக் கூறி அவற்றைப் பட்டியலும் இட்டிருக்கிறார்(அதில் தும்பிக்கையை துதிக்கை எனப் பிழையாகக் குறிப்பிட்டுள்ளார் சலபதி). இத்தகைய வளமானவர்களை அவர்கள் ஒருபுறம்  பொருளாதாரரீதியாகச் சுரண்டினார்கள் என்றால்  காட்டுயிர் சார்ந்து செழித்தோங்கி இருந்தவர்களின் அறிவீனத்தை ஆதிக்கத்தால் சூறையாடினார்கள் எனலாம். இவ்வளவு கெடுதல்களுக்கு பின்னரும் கூட நல்வாய்ப்பாக ஆங்கிலம் போல தமிழில் வேட்டை இலக்கியம் வளரவில்லை. ஏனெனில் அது கானுயிர்களின் மேல் விழிப்புணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக ஒரு வித அலட்சியத்தையும் சாகச மனநிலையையும் தன்முனைப்பையுமே உருவாக்கின. அவர்கள் தங்கள் நூல்களில் சுவாரஸ்யத்திற்காக ‘சரடு’ விடுகின்றனர் என விமர்சிக்கிறார் பாஸ்கரன். அவற்றை மெய்யென நம்பி ஒரு கூட்டம் துப்பாக்கி எடுத்திருந்தால் சூழலியல் மேலும் கடுஞ்சேதத்தைச் சந்திருக்கக் கூடும்.

சுதந்திரம் அடைந்தபின்பும் கூட நிலைமை முன்னேறுவதற்கு மாறாக முன்னிலும் மோசமடைந்தது. புதிய அரசு கொண்டு வந்த அணைகள், நீர்மின் திட்டங்கள் போன்றவற்றால் வாழிடம் துண்டாடப்பட்டது மட்டுமல்லாமல் காடுகள் நீரில் மூழ்கின. விடுதலைக்குப் பின் ‘பயிர்பாதுகாப்பு’க்காக வழங்கப்பட்ட துப்பாக்கி லைசன்ஸ்கள் புலிகளின் எண்ணிக்கைக்கு வேட்டு வைத்தன. அடுத்த 25 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேட்டை உச்சத்திற்குச் சென்றது. அரிய உயிர்கள் பின்னொதுங்கி அற்றுப் போயின. நேபாளத்தில் 1911ல் பிரிட்டிஷ் அரசு யானைகளைக் கொண்டு புலிகளை வேட்டையாடி அவற்றின் இறந்த உடல்கள் வரிசையாகக் கிடந்தப்பட்டிருப்பதற்கு முன் யானையின் மேலமர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரவுட்மன்னின் ‘யானைகளும் அரசர்களும்’ நூலில் உள்ளது.  டில்லியில் 1969ல் 100 நாடுகள் பங்கேற்ற பன்னாட்டு மாநாடு ஒன்றில் குவிமையமாகயும் பேசுபொருளாகவும்  காட்டுயிரிகளின் அன்றைய நிலை விவாதிக்கப்பட்டது. 1971ல் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதும் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததும் செய்வதறியாது திகைத்த பல தேசத்தவர்களும் 1972ல் ஸ்டாக்ஹோம் நகரில் சுற்றுச்சூழல் மாநாட்டில் குழுமினர். இதுவே சூழலியல் இயக்கத்தின் தொடக்கம். இதிலும் கூட மனிதர்களின் சுயநலமே முக்காடு போட்டு அமர்ந்திருப்பதைக் காணலாம். அங்கு தான் காடுகள், காட்டுயிர் பாதுகாப்பின் அவசியம் போன்றவை உலகத் தலைவர்களின் கவனத்துக்கு வந்தன.  1972ல் இந்தியாவில் இயற்றப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் உயிரிகளின் வாழிடத்திற்கும் பெருக்கத்திற்கும் காரணமாக மாறியது. வேட்டை முற்றாக தடை செய்யப்பட்டது. ஆனால் காப்பி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வனவுயிர்கள் அலைகழிக்கப்பட்டன. ஜோராக நடந்த வெட்டுமரத் தொழிலும் அதற்காக போடப்பட்ட சாலைகளும் காடுகளைச் சிதைத்து விட்டிருக்கின்றன.  

”மழைக்காடைகள் அடையும் முன் எழுப்பும் ஒலி, கச்சேரிக்கு ஆயத்தமாகும் இசைக்கலைஞர் ஒருவர், சித்தாரின் ஒலியை விட்டு விட்டு மீட்டுவது போல அந்த வெளியை நிரப்பிக் கொண்டிருந்தது”(பக்.86).

அப்படியானால் காடுகள் எந்தளவுக்கு மனிதர்களுக்கு முக்கியம் என்கிற கேள்வி எழுமல்லவா.! தமிழகத்தின் புவியியல் அமைப்பில் மிக முக்கியமான இடம் மேற்குத் தொடர்ச்சி மலையே. காட்டுயிர்களின் உயிரோட்டம் நிரம்பிய வாழிடம் அது. வெவ்வேறு இடங்களில் நீளும் இம்மலைத்தொடரில் மட்டும் ஆறு சரணாலயங்கள் உள்ளன. இங்குள்ள மழைக்காடுகளே நீரைச் சேமித்து மண்ணுக்கும் மனிதர்களுக்கும் வழங்குகின்றன. இதை  ‘நீர் தொட்டி போல’ எனக் குறிப்பிடும் பாஸ்கரன் செழுமையான பல்லுயிரியத்தில் 18 பகுதிகள் இம்மலைத்தொடரிலேயே அமைந்துள்ளது என்கிறார். இந்த ‘மாபெரும் தொட்டி’யில் சேகரமாகும் நீரே நிலங்களுக்கு வருகின்றன. மொத்த நிலப்பரப்பில் 33% காடுகளாக இருப்பதற்கு பதிலாக அதில் பாதி 17.5% மட்டுமே உள்ளதற்கான் ஆதாரங்கள் இருக்கின்றன. இதிலும் சிறுபகுதியே கானுயிர் புகலிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில் இவ்விடங்கள் எத்தகைய கண்காணிப்புக்கும் பாதுகாப்புக்கும் உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும்..! ஆனால் நடந்ததோ வேறு. ஆனைமலையில் காணப்படும் கருமந்தி, பாறைகளிலும் மழைநீர் சூழவும் வாழும் வரையாடு போன்றவை அரிய விலங்குகளின் பட்டியலில் சேர்ந்துவிட்டன. கடந்த நூற்றாண்டில் கழிமுகங்களில் வாழ்ந்த உப்பு நீர் முதலை அற்றுப்போய்விட்டது என இந்நூலின் முதல் கட்டுரையே சொல்லி விடுகிறது. படிப்பறிவு கொண்ட ஒரு சிவில் சமூகத்திற்குக் காட்டுயிர் பற்றிய புரிதல்கள் மேலோட்டமானவையாகவும் ஊடகச் செய்திகளின் நுனிப்புல் வாசிப்பால் உருவானவையாகவுமே உள்ளன. வாஸ்தவத்தில் தியடோர் பாஸ்கரனின் எழுத்துகள் அளிப்பது கசப்பான உண்மைகளை மட்டுமல்ல, இவ்வளவு வளமும் வியப்பூட்டும் வாழ்க்கை முறைகளும் கொண்ட பல்லுயிரிகளின் ஒத்திசைவுகளையும் அவற்றின் இயல்புகளையும் அலட்சியபடுத்துவதன் வழியாக நாம் தவறவிடும் அளப்பரிய செல்வக்களஞ்சியத்தையும் தான். இவ்வுலகிடமும் உயிர்களிடத்தும் நேசம் மிகக் கொண்டிருந்தாலன்றி இவ்வெழுத்து சாத்தியமில்லை. அதனால் தான் பொதுப்புத்தியில் ஆந்தைகளைக் காண்பதும் அதன் குரலைக் கேட்பதும் அபசகுணம் எனப் படிந்திருக்கையில் அதன் குரல் பண்டிட் செளராஷியா கச்சேரி ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழலை ஊதி ஊதிப் பார்ப்பது போலுள்ளது என எழுதியிருக்கிறார்.  சில இடங்களில் புகார் தொனி கூட வந்துவிடுகிறது. பின்னே,  19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் தொப்பிகளில் சொறுகிக் கொள்ளும் ஒற்றை இறக்குக்காக ஆயிரக்கணக்கானக் கொக்குகள் கொல்லப்பட்டதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா என்ன? மழைக்காடுகள் அழிக்கப்பட்டதைக் கூட ஒரு தகவல் போல தான் சில இடங்களில் தருகிறார்.   ஆனால் அவை மனதில் எழுப்பும் அலைகளோ சீற்றம் மிக்கவையாக இருக்கின்றன. தமக்கென்று பிரத்யேகமான உணர்வுகளும் உணர்ச்சிகளும் மொழியும் அமைந்துவிட்டதாலேயே மேம்பட்ட வாழ்முறையைத் தனதாக்கிக் கொண்டிருக்கும் மனித இனம் சூரியனுக்குக் கீழே இருப்பவையனைத்திற்கும் சொந்தம் பாராட்டி கபளீகரம் செய்யச் செலவிடும் பன்மணிநேரங்களில் குறிப்பிட்ட சில தினங்களை ஒதுக்கி நமக்குச் சற்றும் குறையாத,  சளைக்காத வாழ்க்கையை சிறு பூச்சியிலிருந்து பெரிய விலங்குகள் வரையிலான காட்டுயிர்களும்  மேற்கொள்கின்றன என்கிற பேருண்மையை அறிய நேர்ந்தால் நாணத்தாலும் தாம் விளைவித்த கேடுகளின் பெருந்தொகையையும் எண்ணிச் சொற்களுக்காக அல்லாட வேண்டியதிருக்கும். மிகக்குறிப்பாக பறவைகளின் உலகம். அவற்றிலுள்ள இனங்கள், பலவகையிலான ஆனால் உள்ளூர அவைகளுக்கிடையே உருவாகியிருக்கும் இசைமையின் வழியாக தங்கள் சிறிய வாழ்க்கையில் எத்தகைய அபூர்வமானத் தருணங்களைக் கொண்டிருக்கின்றன என்பது மெல்ல புரியவரும்.

“மனிதர் இல்லாமல் இவ்வுலகு இருக்கலாம். ஆனால் பறவைகள் இல்லாமல் இருக்க முடியாது”.

-சலீம் அலி.

பூச்சிகளுடையதே இவ்வுலகு. அதில் மனிதரும் வசிக்கின்றனர் என்கிறார் பாஸ்கரன். இப்பூச்சிகள் சுற்றுச்சுழலைப் பேணுவதில் பெரும்பங்காற்றுகின்றன. ஆனால் அவை கட்டுபடுத்தப்படாது போகுமெனில் உலகு முடிவுக்கு வந்துவிடும். பறவைகள் இவற்றை இரையாகக் கொள்வதாலேயே சூழலின் சமநிலைப் பேணப்படுகிறது. இரை கிடைக்கும் அளவையையொட்டியே உயிர்களின் வாழிடமும் பெருக்கமும் முடிவாகின்றன. புள்ளினங்கள் கார்காலம் முடிந்ததும் இனப்பெருக்கத்தைத் தொடங்குகின்றன. அவை வேடந்தாங்கலில் தங்குவதன் காரணத்தை அரைநூற்றாண்டுக்கும் முன்பே(1961) எழுதியிருக்கும்  பறவையியல் முன்னோடியும் காலஞ்சென்ற நாவலாசிரியர் அ. மாதவையாவின் புதல்வருமான மா.கிருஷ்ணன் குஞ்சுகளுக்கு அதன் எடையைக் காட்டிலும் அதிக இரைத் தேவைப்படும் எனவும் அதைத் தேடி அலைவது சிரமம் என்றும் அதனாலேயே நீர்நிலையிருக்கும் மரங்களில் அவை கூடு கட்டுகின்றன என்கிறார். இங்கு கிடைக்கும் மீன்கள், தவளைகள், நத்தைகள் போன்ற சிற்றுயிர்களைக் குஞ்சுகளுக்கு ஊட்ட ஏதுவாகிறது. மேலும் இதில் பாதுகாப்புக் காரணமும் அடங்கியுள்ளது. அடிமரம் நீரில் மூழ்கியிருப்பதால் இரைவிலங்குகளான கீரி, பூனை போன்றவைகளிடமிருந்து தப்ப முடியும். ஆன போதும் இந்த தேர்ந்தெடுப்பு அவற்றின் உள்ளுணர்வு சார்ந்ததாக இல்லாமல் இயல்பூக்கத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. இன்று வேடந்தாங்கல் மாறிவிட்டிருந்தாலும் கூட எங்கு கூடு கட்டுவது என்பதையும் வறட்சிக் காலங்களில் இரை தேடவும் பறவைகள் அந்த இயல்பூக்கத்தையொட்டியே அச்சூழலுக்கேற்ப முடிவெடுக்கின்றன. இத்தகைய தன்மைகள் பறவைகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல. காட்டு வளத்தின் மிகச் சிறந்த குறியீடாக விளங்கும் பெரும் பூனையினமான புலிகள் முதல் இன்ன பிற விலங்குகளும் கூட தம் வாழிடத்தை இரை கிட்டும் சாதகங்களையொட்டியே அமைத்துக் கொள்ளும் இயல்புடையவை. இரைவிலங்குகளுக்கும் இரைகொல்லிகளுக்கும் உள்ள சமநிலை பரிணாமரீதியில் பன்னெடுங்காலமாக இயற்கையாக உருவாகி வந்தது என்கிறார் உயிரியியலாளர் உல்லாஸ் காரந்த் (கன்னட இலக்கியத்தின் முன்னோடி சிவராம காரந்தின் மகன்). விதிவிலக்காகவும் ஆச்சரியமாகவும் உள்ளது என்னவெனில் எறும்புகள், கறையான், குளவி போன்றவை ஒன்றாகச் சேர்ந்தே தங்கள் குடியிருப்புகளை அமைக்கும் என்பதே. இன்னும் சொல்வதென்றால் மரங்கொத்தியின் கூட்டினருகே தங்கள் இருப்பிடத்தை அமைக்கும் எறும்புகள் அவற்றின் முட்டைகளை ஏதும் செய்வதில்லை. சில சமயங்களில் பிற பறவைகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கக் கூடச் செய்கின்றன. மரங்கொத்திகளும் எறுப்புகளின் வாழிடங்களைப் பகையாகக் கருதுவதில்லை.

காட்டுயிர்கள் செழித்து வாழ அடந்த கானகங்கள் இன்றியமையாதவை. அவை மனிதர்களுக்கு சம்மந்தமற்றவையோ அப்பாற்பட்டவையோ மனிதர்களுக்காகவே படைப்பட்டவையோ அல்ல. இன்னும் கூறுவதெனில் பூமிக்கும் அதன் உரிமையாளராகக் கருதிக் கொள்ளும் இனத்திற்கும் ஆதார ஜீவனே கானகமும் அங்குள்ள பல்லுயிரியமும் தான். அவற்றை தேவைக்கேற்பவும் தேவையற்றும் அழித்து அடைந்தவைகளை விடவும் இழந்தவைகளின் மதிப்பு கணக்கிட இயலாத அளவிற்கு பெரிது. உதாரணமாக உலகிலேயே நீண்ட தூரம் வேகமாக ஓடக்கூடிய வெளிமான்(blackbunk)களின் எண்ணிக்கை ஒரு காலத்தில் இந்தியாவில் 40 லட்சமாக இருந்துள்ளது. இன்று வாழ்பவை 25000 மட்டுமே.  இவை அபரிமிதமாகக் குறையும் போது இவற்றை பிரதான இரையாகக் கொண்ட, புதர்களை வாழிடமாகக் கொண்டிருந்த பெரும் பூனையினமான சிவிங்கிப்புலி அற்றுப்போன அட்டவணைக்குச் சென்றுவிடுகிறது. காட்டின் அரசனாக சிங்கம் கருதப்படலாம். ஆனால் வேங்கை வாழும் காடுகளே பல்லுயிர்தன்மை நிரம்பியவையாகக் கருத முடியும். வாழும் சூழலுக்கு நிலைத்தன்மை அளிப்பவை பல்லுயிரிகளே என்பதால் வேங்கை தன் உயிரியல்புக்கேற்ப வாழவும் அதன் வழியாக கானகம் பெருகவும் தோதான வழிவகைகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அவை அழிவின் விளிம்பிற்கு செல்வதற்குண்டான செயல்களிலேயே ஈடுபட்டோம். இயற்கையின் உன்னத படைப்புகளில் ஒன்று வேங்கை. அதற்குரிய இரைவிலங்குகளான இளம்பிராயத்து காட்டெருது, புள்ளிமான், கடம்பைமான், கேளையாடு, காட்டுபன்றி ஆகியவை மிகுந்திருக்கும் காடுகளிலேயே புலி எண்ணிக்கை மெச்சத்தக்கதாக இருக்கும். இவ்விரைகள் உள்ள காடுகளில் இயல்பாகவே பிற உயிரிகளும் பெருகியிருக்கும். புலிகளை மெனக்கெட்டு பாஸ்கரன் பேசுவதால் சிற்றுயிரிகளை அவர் சாதாரணமாகக் கருதுகிறார் எனப் பொருளில்லை. சில எறும்புகள் மகரந்தச் சேர்க்கைக்கும் விதை பரப்பும் வேலையிலும் ஈடுபடுவதன் மூலம் காடுகள் வளம்மிக்கவையாக இருப்பதில் தன் முதன்மை பங்கை ஆற்றுபவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மிகச்சிறு சிற்றுயிரியான கறையான்கள் முதல் மாபெரும் நீலத்திமிங்கலம் ஈறாக அவைகளின் இருப்பிடத்திற்கு உகந்த முறையில் தம் இனங்களுக்கிடையிலான உறவு கொண்டு உயிர்வாழ்வதற்கான பயணத்தை மேற்கொள்கின்றன. ஒரு புற்றில் லட்சக்கணக்கான கரையான்கள் வசிக்கின்றன. வியப்பு என்னவெனில் இவையனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதே. அதாவது அனைவருக்கும் ஒரே பெற்றோர். இவற்றில் பல பிரிவுகள் இருக்கின்றன. அதாவது வேலைக்காரர்கள், படைப்பிரிவினர், தளபதிகள் என்பதாக. அதிலும் கூட குருடு, வலுவில்லாதவை என பிரிந்து விடுகின்றன. படைப்பூச்சிகளே வாசல்களில் காவல் காத்து நிற்கின்றன. பழுது நேருமென்றால் இவை தான் சீர் செய்கின்றன. புற்று நடுவே ராணி வீற்றிருக்கிறது. ராணி, தப்பிச் செல்ல இயலாத அரண்களுக்கு நடுவே வாழ்கிறது. ஒரு தேர்ந்த செஸ் ஆட்டக்காரனிடம் ராணி சிறை பிடிக்கப்பட்டிருக்கிறது என தோராயமாகச் சொல்லலாம். மேலும் வாய்ப்புக் கிடைத்தால் கூட வெளியேற முடியாத அளவுக்கு  அதன் உடல் பெரிதாக இருக்கும். நம்ப முடியாத அளவில் முட்டைகளை இடுகிறது. சுமார் கால் லட்சத்திற்கும் மேல். ஆமாம்.30000 முட்டைகள். ராணியை கவனமாகப் பராமரிக்கவில்லையெனில் இவற்றில் பலதும் இறந்து விடும். எனவே பல வேலைக்காரக் குழுக்கள் மும்மரமாக இயங்குகின்றன. தேவையான உணவைக் கொண்டு வந்து தருகின்றன.

இனப்பெருக்க செயல் திறனுடைய, குளவி அளவு பெரிதாக இருக்கும் பூச்சியே ராஜா கரையானாக இருக்கிறது. பெண் பூச்சியின் அருகிலிருக்கும் தகுதி இதற்கு மட்டுமே. மழையினாலோ வேறு பூச்சிகளாலோ பிற பிராணிகளாலோ தொந்தரவோ ஆபத்தோ ஏற்பட்டால் படைப்பிரிவு துரிதமாகச் செயல்பட்டு எச்சரிக்கை செய்கிறது. எறும்புகள் போலவே தான் பாதையில் மணத்தை (எறும்புகள் ஒருவித திரவத்தை வெளியேற்றும்) தடயமாக விட்டுச் செல்கின்றன. இவற்றையே குருட்டுக் கரையான்கள் பின் தொடர்ந்து உணவிருக்கும் இடத்தை அறிந்து வாழ்கின்றன.

தமக்குத் தோதான வாழத் தகுதியான இடங்களிலேயே இவை தம் மாளிகைகளை நிர்மாணிக்கின்றன. முட்டையிலிருந்து புழுக்கள் வெளியேறியதும் பெற்றோர் பூச்சிகள் அவைகளுக்கு உணவை அளிக்கும். அவை சுவர்களைக் கட்ட வளர்ச்சி அடைந்ததும் அரச தம்பதிகள் மீண்டும் இணை சேர்ந்து முட்டையிடும் பணியை மேற்கொள்வதால் மெல்லமெல்ல கரையான குடியிருப்பு உருவாகி விடுகிறது.

30 மீட்டர் நீளமும் இருபத்தைந்து யானைகளின் எடையும் கொண்ட நீல திமிங்கலங்கள் ஆதிகால பூச்சித் தின்னிகளின் வம்சாவழிகளே. திமிங்களிலிலேயே ஆகப் பெரியது இது தான். 

ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால் சில திமிங்கலங்கள் பாடவும் செய்யும் என்பதே. உறுமல்களும் உச்சஸ்தாயில் அமைந்த கீச்சொலிகளும் நீண்ட இழு ஒலிகளும் உண்டு. இவ்வொலிகளை அவை ஏதோ மந்திர உச்சாடணம் போல மணிக்கணக்கில் எழுப்புகின்றன. சுரலயங்கள் எனப்படுகிற சுரங்களின் மாற்றமற்ற ஒலியதிர்வுகள் அப்பாடலில் நிறைந்துள்ளது. தொடர்ந்து இவற்றை இசைக்கின்றன. ஒரு முழு பாடலுக்கு பத்து நிமிடம் கூட ஆகலாம். மேலும் ஒவ்வொரு திமிங்கலத்திற்கும் தனித்தனியாக பிரத்யேகப் பாடல் உண்டு.

அடுத்த வசந்த காலத்தில் அவை பாடும் போது சுரலய வரிசைகள் வித்தியாசப்படுகின்றன. சில சமயங்களில் அந்த பாடலின் ஒலி பிரம்மாண்டமானதாக இருக்குமாம். மேலே மிதந்து கொண்டிருக்கும் படகில் அது பேரதிர்வுடன் எதிரொலிக்கவும் செய்யும். அப்போது அவை எழுப்பும் பிலாக்கண, அழும் ஒலி வேறு எங்கிருந்தோ வருவதாகவே பலருக்கும் தோன்றக்கூடும். நீரின் ஆழத்தில் ஊடுருவிச் செல்ல முடியுமானால் அது நீலக் கடலுக்குள் ஊசலாடியபடியே இருப்பதை காணும் பேறு கிடைக்கலாம் என்கின்றனர். அது எழுப்பும் ஒலி பேராலய இசைக் கருவியின் ஊதுகுழாய்க்குள் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை அளித்து நம் உடலை ஊடுருவிச் சென்று நரம்புகளை உலுக்குமாம். நம் உடலின் ஒவ்வொரு அணுவும் அந்த ஒலியில் ஊறித் திளைப்பது போல புளகாங்கிதம் ஏற்படுமாம்.

இவற்றில் வியத்தகு விஷயம் என்னவெனில் சேய்களைக் காப்பதில் அவற்றை ஈன்ற, முட்டையிட்ட தாய் காட்டும் அளப்பரிய ஈடுபாடும் பிணைப்புமே. எவ்வாறு உயிர்களிடத்தே இந்த ஒற்றுமை உருவாகியிருக்கும் அல்லது எந்த மரபுத் தொகுதியினுள் இப்படியான ஏற்பாடு எந்த பரிணாமத்தில் செல்களின் தகவமைப்பு இவ்வாறாக ஆகியிருக்கும் என்பதை யூகமாகக் கூட சொல்லிவிட முடியாது எனத் தோன்றுகிறது. டைனோசர்கள் காலந்தொட்டே வாழ்ந்துவரும் தொன்மையான உயிரியான முதலைகள் தம் சந்ததிகளை மிக கவனமாகப் பேணும். மேலும் அவை இனப்பெருக்கத்திற்கென்றே சிறிய நீர்பரப்பைத் தெரிவு செய்து ரோந்து வந்து கொண்டிருக்கும். வேறு ஆண் முதலைகளை எதிர்கொண்டால் அதனுடன் பெருஞ்சத்ததுடன் போரிடும். பெண் தன்னை நெருங்குகையில் உணர்ச்சிமிக்க பரவசத்தை ஆண் அடைகிறது. பிறகு பெண் முதலை      முட்டையிடுவதற்கு ஓரிடத்தை பிரத்யேகமாக அமைத்து குழி தோண்டுகிறது. இரவில் அங்கு சிறுஇடைவெளியில் வரிசையாக முட்டைகளை இட்டு அக்குழியில் செடிகொடிகளைப் பரப்பி அடையாளத்திற்காக சிறுநீர் பெய்கிறது. குட்டிகள் வெளிவரும் சமயத்தில் முட்டையின் விரிசல் ஒலியையும் அவை எழுப்பும் ஒலியையும் முதலில் தாய் முதலையே அறிகின்றது. பிற விலங்குகளிலிருந்து காத்து அவற்றிற்கு உணவாக தவளைகளையும் மீன்களையும் கொடுத்துக் காவல் புரிகின்றது.  

கூண்டுகளைக் கட்டுதல், முட்டைகளை அடைகாத்தல் இரண்டையுமே பெரும்பாலான புள்ளினங்களில் ஆண்-பெண் இருபாலாரும் சமபங்கு வகித்தாலும் குஞ்சுகளைச் சீராட்டுவதும் தன் உயிருக்கு நிகராக காபந்து செய்வதும் பெண் பறவைகளே. இரண்டுமே இரை தேடிச் செல்லுமென்றாலும் பேடை கூடுதல் அக்கறையுடன் செயல்படும். தன் வீட்டிற்கருகில் பாதையில் அடைகாத்து முட்டையிட்ட ஆட்காட்டிக் குருவி அவற்றை எப்படி பிற இரைகொல்லிகளிடமிருந்து காத்தது என பாஸ்கரன் தன் கட்டுரையொன்றில் (’தரையில் ஒரு கூடு’) எழுதியிருக்கிறார். தாக்கவரும் பருந்துகளைக் கூட விரட்டிவிடும் ஆற்றல் வால்நீண்ட கருங்குருவிக்கு உண்டாம். ஆபத்து சமயத்தில் தாய் பறவை சத்தமிடும். உடனேயே குஞ்சுகள் தங்களை மறைத்துக் கொள்ளும். வெவ்வேறு காரணங்களுக்காக பறவைகள் குரல் எழுப்பும். தன் குஞ்சுகளுக்காகவும் தன் இனத்தாரிடம் தொடர்பு கொள்ளவும்  பிற இனப்பறவைகளுக்கு தன் இடம் இதுவென கூறவும் இனப்பெருக்க சமயத்திலுமாக தனித்தனிக் குரல்களில் கூவும். வெகுதொலைவிலிருந்து வலசை வரும் பறவைகள் கூட ஒலியெழுப்பும். இவை குஞ்சுகள் மீது எப்போதுமே உணர்ச்சிவயமான பிணைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஒரு கூட்டிலுள்ள முட்டைகளோ குஞ்சுகளோ முழுக்க அழிந்துவிட்டதும் துக்கங்கொண்டு காலத்தைப் போக்குவதில்லை. உடனேயே புதிய கூடு கட்டவும் முட்டை இடவும் தொடங்கிவிடும். இனப்பெருக்கம் மாபெரும் இயற்கைத் தூண்டுதல் என்கிறார் சலீம் அலி. புலிகள் உள்ளிட்ட விலங்குகளும் இவ்வாறு தான். ஆனால் யானைகள் மனிதர்களைப் போலவே உறவுகளிடம் விலக்கமுடியாத அன்பைக் கொண்டிருக்கின்றன. யானைகள் மோதும் போது தற்செயலாக குட்டி இடையில் வந்துவிட்டால் ஏதேனுமொரு கொம்பன் யானை அக்குழந்தையை தன் தும்பிக்கையால் தூக்கி பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு பிறகே மோதலைத் தொடரும் என அக்பர் காலத்தில் இருந்த யானைகளைப் பற்றி வியத்தகு குறிப்பொன்று உள்ளது. இறந்த தன் குட்டியிடம் ஒருவரையும் நெருங்கவிடாமல் தன் மேல் போட்டுக் கொண்டு பல இடங்களுக்கு தாய் யானை அலைந்த நிகழ்ச்சி ரமேஷ் பேடியின் நூலில் இருக்கிறது. பெண் யானை ஒன்று இறந்துவிட்ட தனது குட்டியை இரு நாட்கள் தூக்கிக்கொண்டு திரிந்தது. மேயும் போதும் நீருக்காகவும் குட்டியைக் கீழே கிடத்தி விட்டு மீண்டும் தூக்கியபடி அலைந்திருக்கிறது. மற்றொரு முறை யானையின் பிளிறல் கேட்டு சென்ற வனத்துறையினர் அங்கு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் நாக்கைத் தொங்கப்போட்டபடித் தாக்குவதற்குத் தயாராக நிற்பதைக் கண்டிருக்கின்றனர். சினத்துடன் நிற்கும் யானையை நெருங்கவும் அவற்றிற்கு பயம். மறுநாளும் அவை அங்கேயே அதே நிலையில் நிற்பதைக் கண்டனர். பிறகே இறந்து விட்ட குட்டி யானையை அதன் தாய் பாதுகாத்துக் கொண்டிருந்ததை அறிந்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகே முற்றுகையைக் கைவிட்டு சிங்கங்கள் சென்றிருக்கின்றன. அப்போது தாய் யானை எழுப்பும் பிளிறல் நெஞ்சை உலுக்கி மனதை அறுத்துவிடும்படி இருக்கும்.

0 0 0

பறவைகளும் விலங்குகளும் இணையிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க மேற்கொள்ளும் வழிகள் அலாதியானவை. மனிதர்கள் உருவாக்கிய காதல் கதைகளை, மோக மயக்கங்களை வெகுகாலம் முன்பே அவை தம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கின்றன என்கிற வியப்பும் அவற்றை நாம் தான் திரும்ப நடித்து வருகிறோமோ என்கிற ஐயமும் ஒருங்கே எழமாலில்லை. இனப்பெருக்க காலத்தில் பல துணைகள் சேரும் பறவைகளே மிகுதி. அங்கே ஒழுக்கவிதிகள் என ஏதுமில்லை. ஏகாந்திகளாக அவைக் கூடிக்களிக்கும். இந்திய பறவையியல் முன்னோடியான சலீம் அலிக்கு பத்து வயதிருக்கையில் (1906-07) வளர்ப்புத் தந்தையிடமிருந்து சிறிய துப்பாக்கியொன்று அவருக்குப் பரிசாகக் கிடைக்கிறது. சுட்டுப் பழகிய பின் வீட்டுப்பொந்தில் பெண் குருவி முட்டைகளை அடைக்காக்க, வாயிலில் காவலுக்கு அமர்ந்திருந்த ஆண் குருவியைச் சுட்டு விடுகிறார். அது இறந்ததும் மற்றொரு ஆண்குருவியை பெட்டை சேர்த்துக் கொள்கிறது. அதையும் சுடுகிறார். அடுத்த துணை வந்து சேர்கிறது. குண்டுக்கு இரையாகிறது. மீளவும் ஒரு ஆண் குருவி அமர்ந்திருக்கக் காண்கிறார். அந்த வாரத்தில் மட்டும் 8 ஆண் குருவியைச் சுட்ட போதும் தன் முறைக்காக காத்திருக்கும் ஆண் குருவி இறந்த குருவியின் இடத்தை நிரப்பி விட்டது அவருக்குப் புரிய வருகிறது. குருவிகள் இனப்பெருக்கக் காலத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறதென்றால் சேவல், மயில் போன்றவையும் ஏகபத்தினி விரதத்தை அனுசரிக்காதப் பறவைகளாகவே உள்ளன. இவற்றில் சில பறவைகளில் பெண் கையே ஓங்கி நிற்பதும் நடக்கிறது. காடை அவற்றிலொன்று. வல்லூறு, ராசாளி போன்றவற்றிலும் பேடையே வலுவிலும் அளவிலும் சிறந்தது மட்டுமல்ல நல்ல பராக்கிரமசாலியும் கூட. இந்த இணைகளை வசீகரிக்க ஆண் பறவைகளின் வித்தைகள் அபாரமாகவும் மனிதர்களைக் கேலி செய்வது போலுமுள்ளது. பறக்காத பறவையினமான பெங்குவின் ஒன்றே போலிருக்கும் தன் இனத்தவரில் பெண்களை அடையாளம் காண அழகிய வழிகளை வைத்திருக்கிறது. கூழாற்கற்களைப் பொறுக்கி எடுத்து வந்து நடையிட்டு பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறது. அப்பறவை கோபங்கொண்டு விரட்டினால் அது ஆணென அறிந்து கொள்ளும். ஒருவேளை பொருட்படுத்தாது நின்றால் இப்போதைக்கு நாட்டமில்லை எனப் புரிந்து கொண்டு அப்பெண் பறவையிடமிருந்து விலகி பரிசை எடுத்துக் கொண்டு நகர்ந்து விடுகிறது.

தூக்கணாங்குருவி நெல் இலைக் கொண்டு கூம்புவடிவ , பார்வையை அள்ளும் அழகிய கூண்டை மிக நுட்பமாக பின்னும். ஆண் குருவி கூடு கட்டும் அழகைப் பார்த்துத் தீராது. இதன் கூப்பிடு தொனி ‘சிட்-சிட்-சிட்’ என கிளிகளை ஒத்திருக்கும்.  அதற்கு வாயில் வைப்பதற்கு முன்  பேடையை அழைத்து வந்து காட்டும். தன் பங்கிற்குத் திருத்தங்கள் மொழிந்த பிறகு பெண் தன் துணையை தெரிவுசெய்யும். இதில் சுவாரஸ்யம் ஆண் ஏககாலத்தில் ஐந்து கூண்டுகளைக் கட்டி ஒரே சமயத்தில் ஐந்துடனும் குடித்தனம் நடத்தும். இவற்றின் நடத்தைகள் குதூகலம் அளித்தாலும் சிலந்தி போன்ற பூச்சியினத்தில் தலைகீழாக நடைபெறுகிறது. ஆண் சிலந்தி தன் பார்வையாலேயே தன் நோக்கத்தை பெண் சிலந்திக்கு அளித்துவிடும். அதைப் பெண் சிலந்தி கண்ணுற்றதும் அதன் பேரிடுக்குகள் பிரகாசமாக ஒளிரும். ஆண் சிலந்தி ஒரு பூச்சியை இரையாகப் பிடித்து மெல்லிய நுண்ணிழைகளால் கட்டி ஒரு பரிசுப்பொருளாக்கி எச்சரிக்கையோடு பெண் சிலந்தியை அணுகிப் பரிசளிக்கும்.  அதை ஏற்கும் பெண் சிலந்தி அப்பரிசைப் பிரிப்பதில் கவனம் செலுத்துகையில் அதன் மேல் பாய்ந்து அழுத்தி தன் இழைகளால் பிணைத்துவிடும். காரியம் சாதித்ததும் உடனேயே அகன்று விட்டால் ஆண் உயிர் பிழைக்க முடியும். இல்லையெனில் பெண் சிலந்திக்கு உணவாக ஆகும் அபாயத்தைச் சந்திக்க நேரிட்டு விடும்.  ஏனெனில் பெண் ஆணை விடவும் பெரிது. தனக்கு இஷ்டமில்லாத காதலனைக் கொன்று புசிக்கவும் தயங்காது. எனவே இயற்கையாகவே அதிக மூளை வேகம் கொண்ட ஆண் இதை உணர்ந்து தப்பி ஓடிவிடும்.  போலவே பூச்சியினங்கள் சிலவற்றில் பெண் தன் உடலில் ஒருவித மணத்தை உருவாக்குகின்றன. ஆண் தன் பெரிய உணர்வுறுப்புகளின் வழியாக அறிந்து கொள்ளும். அந்த மணத்திற்கு 11 கிமீ வரை செல்லும் ஆற்றல் உண்டு. பனங்காடைகள் தன்னை நோக்கி நிற்கும் பேடையின் முன் ஆகாயத்தில் கரணம் அடித்து ஈர்க்க முயற்சிக்கும். கிளிகளோ தம் கால்களை மாற்றி மாற்றி வைத்து கரகம் ஆடுவது போலக் காட்டும். சிலது புழுவையோ பழத்தையோ கொணர்ந்து காதலிக்கு சமர்ப்பிக்கும். 

பட்டுப்பூச்சி அபாரமான வண்ணங்களைக் கொண்ட இறக்கைகளால் இணையைக் கவர்ந்திழுக்க முனையும். மிகக் குறிப்பாக அவற்றின் கண்கள். இங்குமே கூட ஆண் பூச்சியே பெண்ணைத் தேடிச் செல்லும்.

பூச்சியினங்கள் பெரும்பாலும் செவிடுகள் என்றால் அவற்றின் சில ஒலிகளை ஏககாலத்தில் கேட்க நேர்ந்தால் அவை இரைச்சலிடுகின்றன என்பதைக் கண்டுகொள்ளலாம்.  அது மிகவும் உரத்து இருக்கும். எனவே பலவிதமான பூச்சிகள் ஒன்றிணைந்து எழுப்பும் ஓசை மொத்தக் கானகத்திலேயே பேரிரைச்சலை உண்டு பண்ணிவிடும்.  ஆனால் இவ்விரைச்சல்களில் இசையின் விப்ர அடுக்குகள் பொதிந்துள்ளன. நம் செவியால் உணரமுடியாத ஒலிகளின் இடைவெளியை மிகத் துல்லியமாக சில்வண்டுகளால் அறிந்து கொள்ள முடியும். ஓசையிலேயே சீரான லயத்தை ஏற்படுத்திவிடும் பூச்சிகள் அதன் வேறுபாடுகளையும் ஒலியமைப்புகளையும்  கொண்டே தம் இனத்தைத் தெரிந்து கொள்கின்றன. ஏனெனில் பல்லாயிரக்கணக்கான இனங்கள் உள்ளன. குறிப்பிட்ட இசையொலியை எழுப்பும் ஆண் பூச்சியின் எல்லைக்குள் பிறிதொரு ஆண் நுழைவதில்லை. அங்கு பெண்பூச்சிகளே காதலுடன் பறந்து வரும்.

விதிவிலக்காக ஒழுக்கச் சமன்பாட்டை தவறாது கடைபிடிக்கும் சில பறவைகளும் உள்ளன. ஆஸ்திரேலியாவில் மட்டும் வாழ்கிற கறுப்பு அன்னங்கள்(Swan) தன் மொத்த ஆயுளையும்  ஒரே இணையுடன் மட்டும் கழிக்கின்றன. போலவே வேடந்தாங்கலில் கூடு கட்டி வசிக்கும் அன்றில் பறவையின் வாழ்க்கைத் துணை ஒரே ஒரு பெட்டையே.

சாரஸ் பறவை பாலே நடனக்கலைஞர் போல நடனம் ஆடி தன் பெட்டையைக் தன்னை நோக்கி ஈர்க்கும் இயல்புடையது. உலகிலேயே பறக்கும் புள்ளினங்களில் உருவத்தில் பெரியதும் உயரத்தில் சராசரி மனிதனுக்கு நிகராக உள்ளனதுமான சாரஸ் ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து விட்டால் முழு வாழ்நாளும் அந்த ஒற்றை இணையுடன் மட்டுமே வாழும். எப்போதும் ஜோடியுடனேயே காணப்படும். இருந்துமென்ன..! கண் முன்பே இப்பறவை அரிதாகிக் கொண்டு வருகிறது.  இளம் தம்பதிகளுக்கிடையே பிணக்கு நேர்ந்தால் பெரியவர்கள் சாரஸ் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்து காட்டுவார்களாம்.  இக்கட்டுரை (’கிரெளஞ்சவதம்’)யின் இறுதியில் பாஸ்கரன் கவிஞராக மலர்ந்து இப்பறவையைப் பார்த்துக் கேட்கிறார்,

“சாரஸ்! நிஜமாகவே உங்களுக்கு எப்போதும் ஒரு துணைதானா?

சபலமற்றதா உங்கள் வாழ்வு?

உங்களுக்குள் பொறாமையே கிடையாதா?

உறவின் பூகம்பங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

சாரஸ்….ஓ..சாரஸ் ! நீங்களும் உங்களை நேசிப்பவர்களை இம்சிப்பதுண்டா ?”

0 0 0

இரையைப் பொறுத்தமட்டில்  காகம் போன்ற பறவைகள் உலோகம் நீங்கலாக எது கிடைத்தாலும் உட்கொள்ளும். தேனீக்களில் இரை தேடும் பொறுப்பு வேலைக்காரித் தேனீக்களைச் சார்ந்ததாகும். ராணித் தேனீ மட்டுமே முட்டைகளை இடும். காற்றில் இரைக்காக அலைந்து அதைக் கண்டுகொண்டு விட்டால் பிற தோழர்களுக்குச் சுட்டிக்காட்ட இரை முன் ரீங்காரம் இட்டபடி அழகிய நடனமொன்றினை ஆடும். பூக்களின் மேல் தேனீக்களின் நடன அசைவுகளை பலருமே பார்த்திருக்கக்கூடும். கறையான் போல ஒரே தம்பதி, தேனீக்களில் ஒரே ராணித் தேனீ போன்ற கணக்குகள் எல்லாம் பறவைகளிடத்து எடுபடாது.

பறவையினங்களில் ஒரே இனத்தைச் சார்ந்தவையே தமக்குள் உறவு பூண்டு குஞ்சுப் பொறிக்கும். இவற்றில் சிலவற்றிற்கு கூடு கட்டுதல் திருவிழா போல. அப்போது பழைய சிறகுகளை உதிர்த்துவிட்டு புதிய ஆடையை அணிந்து கொள்ளும். அக்குஞ்சுகளுக்கு சிறகு முளைத்ததும் அவை தன் வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிடும். ஆயினும் அதுவரை எவ்வளவு தப்பிப்பிழைக்கின்றன என்பதே முக்கியமான வினாவாகும். இது பெரிய விலங்குகளுக்கும் பொருந்தும். இட்ட முட்டைகளில், ஈன்ற குட்டிகளில் மிஞ்சுபவை சராசரியாக 40-50% மட்டுமே. அது அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லாதிருப்பதற்குரிய வழிகள் என்ன என்பதையொட்டிய வாசிப்பையும் தியடோரின் எழுத்துக்களுக்கு அளிக்க முடியும். அந்த ஆபத்து நேராதிருக்க காட்டுயிர்கள் அபூர்வங்களாகவும் அதிசயங்களாகவும் மாறாமல் நம்மை போல புவியில் சாதாரணமாக வாழ வந்தவர்கள் என்கிற போதம் வேண்டும்.

பறவைகள் உலகில் ‘இடப்பெயர்வு’ என்பது இத்துறை சார்ந்த வல்லுனர்களுக்கே இன்றும் விளங்காத புதிர். உலகின் பல்வேறு முனைகளிலிருந்து வலசை வரும் பறவைகள் (இவை எந்த தேசத்தவை என அடையாளம் காண காலில் வளையம் மாட்டப்படுகிறது. இன்று Chip பொருத்தப்பட்டு விண்கோள் மூலம் அதன் பயணத்தை ஆராய்வது நடந்துகொண்டிருக்கிறது) இரைக்காக மட்டும் வரும், கூடு கட்டாது. வருடத்திற்கொரு முறை பல ஆயிரம் மைல்கள் கடல்களையும் மலைகளையும் கடந்து பயணிக்க தூண்டுதலை எங்கிருந்து பெறுகிறது? எந்த திசையில் வழியில்  செல்லவும் திரும்பவும் வேண்டும் என்பதையெல்லாம் எப்படி முடிவெடுக்கின்றன என்பதற்கு பலரும் விடை கூற முயன்றாலும் சரியான பதில் கிடைத்தபாடில்லை. துல்லியமாக இல்லையெனினும் உண்மைக்கருகில் செல்லும் ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ரூபர்ட் ஷெல்ட்ரேக்  எனும் அமெரிக்க அறிவியல் விஞ்ஞானியின் ‘உருவாக்கம் சார்ந்த காரணநிலை’ என்கிற கருதுகோளை முன்வைத்து இதைப் புரிந்து கொள்ள முயலலாம். 1920களையொட்டிய ஆண்டுகளில் இங்கிலாந்தில் பால் விநியோகம் தொடங்கப்பட்ட அடுத்த 20 ஆண்டுகளில் நீலக்கொண்டைப் பறவைகள் மூடிகளைக் கிழித்துப் பாலேடுகளை உண்ணத் தொடங்கின. பிறகு தென் இங்கிலாந்தைச் சார்ந்த பறவைகளிடமும் இப்பழக்கம் பரவி அவை அதை உள்ளூரில் பரப்பியது. 1930களில் மொத்த இங்கிலாந்திற்கும் பரவிவிட்டதாம்.  இது புலன்சாரா மன இயக்கமாக (Telepathy) இருக்கலாம் என்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஹாலந்தையும் விட்டு வைக்கவில்லை. அரசியல் காரணங்களால் ஹாலந்தில் பால் விநியோகம் நிறுத்தப்பட்டது. 1948வரை அரசியல் நிலைமையில் மாற்றமில்லை. அப்பறவையின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளே. மீண்டும் புட்டிப்பால் விநியோகம் தொடங்கியபோது 2,3 வருடங்களுக்குள்ளாகவே பறவைகள் பாலை பழையபடித் திருடத் தொடங்கிவிட்டனவாம். முதல் தடவையை விடவும் மிக வேகமாக அத்திருட்டு நடந்ததாம். அப்பறவையின் தலைமுறை 8,9 ஆண்டு காலம் வாழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை எனும்போது இது எவ்வாறு நிகழ்ந்திருக்க முடியும்.?மரபுச் சங்கிலியில், செல்களில் பதிவாகியிருந்த பழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு விரைவாகச் சென்று சேர்ந்திருக்குமா? தோராயமாக ஆம் என்றால் பறவையின் வலசையும் அப்படியான ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது? உறுதியாக இல்லையெனினும் உத்தேசமாக சாதகத்தின் சதவீதம் சற்றே அதிகமிருப்பதாகத் தோன்றத் தானே செய்கிறது. இவ்வாறு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் துல்லியமான உண்மையை இன்றும் அறியமுடியவில்லை.

ஐம்பது விலங்குகள் கொல்லப்பட்டால் இவ்வுலகில் ஒரு புலி குறைகிறது என அர்த்தம்

-உல்லாஸ் கரந்த்

ஒப்புநோக்க பெரிய விலங்குகளுக்கு ஆபத்து சற்றுக் கூடுதலாகவே இருக்கின்றன. கூட்டமாகச் சுற்றும் இயல்பு கொண்ட சிங்கம், யானை போன்ற விலங்குகளை விடவும் மறைவான அடர்ந்த காட்டிற்குள் வசிக்கும் புலியைக் காப்பது அந்த காட்டின் வளத்தை மேம்படுத்துவதற்கு இணையானது என்கிறார் உல்லாஸ் காரந்த். கள ஆய்வின் அடிப்படையிலும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையின் பாற்பட்டும் உரிய தரவுகளுடனும் போற்றத்தக்க விளக்கங்களுடனும் இவர் எழுதிய நூல் ‘கானுறை வேங்கை’. மொழியாக்கம் தியடோர் பாஸ்கரன். கர்நாடகத்திலுள்ள நாகரஹொளெ சரணாலயத்தைக் களமாகக் கொண்டு முனைவர் பட்டம் பெற்ற உல்லாஸ் இந்தியாவின் தலைசிறந்த உயிரியியலாளர் என மதிக்கப்படுபவர். நம் நாட்டில் இவரே புலிகளைக் கணக்கெடுக்கும் ரோடியோ கழுத்துப்பட்டையை வெற்றிகரமாகச் செய்து காட்டியவர். துப்பாக்கி மருந்து மூலம் புலியை மயக்கமடையச் செய்து சில சோதனைகளுக்குப் பின் அதன் கழுத்தில் பட்டையைக் கட்டுவார்கள். அது தனி அலைவரிசையில் செயலாற்றிக் கொண்டிருக்கும். 2,3 ஆண்டுகளில் அதுவாகவே விழுந்து விடும். இதன் மூலம் அதுவரை வேங்கை உலகின் தெரியாத பல உண்மைகள் வெளிவந்ததோடு கள ஆய்வில் புரட்சியே உருவாயிற்று. ஆட்கொல்லியாகவும் கொடூர மிருகமாகவும் சித்தரிக்கப்படும் புலி உண்மையில் தன் வாழிட எல்லைக்கு அண்மையில் வரும் மனிதர்களை கர்ஜனை மூலம் எச்சரிக்க மட்டுமே செய்கிறது.  பிறகு விலகிச் சென்றுவிடும் இயல்புடையது. அதற்குரிய இரை கிடைக்காது பசியில் அலையும் போது மனிதன் எதிர்பட்டால் அவனை அடிக்கும். ஆனால் புலி முதற்கொண்டு பிற மிருகங்களின் அழிவிற்கு முதன்மை பொறுப்பும் காரணமும் மனிதனே. ஒரு மகாராஜா தான் ஆயிரம் புலிகளை வேட்டையாடிக் கொன்றதைக் கொண்டாட பெரிய விருந்தே நடத்தியிருக்கிறார். ஜிம் கார்பெட் தான் பணியாற்றிய ஊர்களில் கொன்ற புலிகளை ஒரு மர்மநாவலுக்குரிய சுவாரஸ்யத்துடன் எழுதி வைத்திருக்கிறார். இத்தனை பாதகங்களுக்கிடையில் அவை குட்டிகளாக இருக்கும் போதே கூட பிற இரை விலங்குகளின் மூலமும் திடீர் வெள்ளம் போன்ற இயற்கைக் காரணங்களினாலும் சூழும் அபாயத்திலிருந்து தாய் புலியே காக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. அதற்காகவே மிக எச்சரிக்கையுடன் குட்டி போடும் இடத்தைத் தெரிவு செய்கிறது. ஒரு வருடத்திற்கு தன் நிழலிலேயே குட்டிகளை வைத்துக் கொள்கிறது. வாழிடம் தேடியலையும் காலகட்டமே அபாயங்கள் நிறைந்ததாகும். ஆண் புலி இதற்காக வெகு தூரம் அலையும். இச்சமயத்திலேயே இவை வெவ்வேறு காரணங்களால் இறக்கின்றன.

பல்வேறு வித ஒலிகளை சமிக்ஞைகளை உண்டாக்கி தன் இனத்துடன் தொடர்பு கொள்ளும் புலிகள் தன் நடமாட்டத்திற்குரிய இடத்தை வாலை உயர்த்தி மூத்திரமும் நெடியும் கலந்த ஒரு வித திரவத்தைப் பீய்ச்சுவதன் மூலம் பிறவற்றிற்கு அறிவிக்கிறது. மற்ற விலங்குகளுடன் தொடர்பு கொள்ள புலி நெடியை சமிக்ஞைகளை விட்டு செல்கிறது. அதன் தோல் சுரப்புயிலிருந்து வெளியாகும் வாசனை, அதன் வேறு உடல் பாகங்களிலும் அதிகமாகவே இருக்குமாம். இந்த நெடியை மரங்கள், புதர்கள், பிற புலிகளின் உடலில் தேய்ப்பதன் மூலம் பிறவற்றிற்கு தன் இருப்பை அறிவிக்கின்றன என்கிறார் கார்ந்த் (’புலியின் தாடையிலும் முன் முகத்திலும் கண்களுக்கு மேலும் கம்பிகள் போல நீண்டிருக்கும் குச்சம் முடிகள், வெகு அருகில் இருப்பவற்றை உணரும்படி செய்கின்றன. கருக்கிருட்டிலும் அடந்த புதர்களின் ஊடாகவும் செல்ல இந்த மீசைமுடி ஊற்றுணர்ச்சி உறுப்பாக செய்ல்படுகிறது’-பக்.63).  அருகிலிருந்தால் முகபாவம், உடல்மொழி, வால் அசைவுகளால் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன.

இதில் மூத்த ஆண்புலிகளுக்கே புணர்ச்சிக்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அதிகமிருக்கும். இங்கும் கூட ஒரு ஆணுக்கு இரு புலிகள் எனும்படி வாழ்கின்றன. ஒரு சமயம் குட்டியின் அருகில் வந்த வேறொரு ஆண் புலியை தாய்ப்புலி அடித்தே கொன்றிருக்கிறதாம். அவை சுயேட்சேயாக நடமாடும் காலம் வரை தாய்ப்புலி கருத்தரிக்கவும் இணை சேரவும் விரும்புவதுமில்லை. ஆச்சரியம் என்னவெனில் அதே தாய்ப்புலி அடுத்த குட்டிகளை ஈன்ற பிறகு வளர்ந்த முந்தைய குட்டிகள் எதிர்ப்பட நேர்ந்தால் அவற்றை தாக்குமாம். எனவே தாயின் எல்லைக்குள்ளேயே அவை நடமாடும். புலி தன் வேட்டையில் மிகுந்த கவனத்துடன் இருக்கும். சிறிது தப்பினாலும் உயிராபத்து ஏற்பட்டுவிடும். காட்டெருது, காட்டெருமை (இரண்டும் வெவ்வேறு)யைத் தாக்கும் போது இலக்கு தவறினால் புலிக்கு பலத்தக் காயம் ஏற்பட்டு சில மாதங்களிலேயே உயிர் விடும்.  தவிரவும் சிங்கம் போல மந்தையாக திரிவதால் (’சிங்கம் சிங்கிளா தான் வரும்’ என்பதெல்லாம் மடத்தனமான வசனம்) தன் சகாக்கள் கொண்டு வருவதன் எச்சத்தை காயமடைந்த சிங்கம் தின்று உயிர் வாழும். ஆனால் புலி தனித்த விலங்கு. எனவே அதன் முடிவு நிச்சயப்பட்டது போலாகும். முள்ளம்பன்றியின் முட்கள் கிழித்தாலும் விஷயம் அவ்வளவே தான். இவ்வளவுக்கு பிறகு 10% மட்டுமே இரைவேட்டையில் வெற்றி பெறுகிறது என்கிறார் ஆசிரியர்.  இன்று புலி வேகமாக அழிந்து வந்தாலும் கூட அவற்றைக் காக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மற்ற பூனையினங்களைப் போலவே புலியின் செவியும் கூர்மையானது. எந்த அசைவும் தப்பாது. அவற்றின் வாழிடத்தைச் சிதைத்த பிறகு கூட ஏலக்காய், காப்பி, டீ எஸ்டேட்டுகளில் வாழப்பழகிவிட்டன. எனினும் அவற்றின் இடங்களில் மனிதர்கள் குடியேறிவிட்டு புலி எதிர்கொள்ளல் சார்ந்த அச்சத்தையும் பீதியையும் உருவாக்குவது தான் நடந்து வருகிறது. உறைவிட ஆக்கரிப்பு, காடுகள் அழிப்பு, அதனால் இரை விலங்குகள் போதாமல் போவது போன்றவையே அதன் அழிவுக்கு காரணமாக அமைகின்றன. உல்லாஸ் பகிரும் ஒரு புள்ளிவிவரம் திடுக்கிற வைக்கிறது. நூலின் ஓரிடத்தில் 100 புலிக்குட்டிகளில் வயதாவது 60ஆக இருந்தால் பருவத்தை எட்டுவது 54 ஆக இருக்கிறது. அதிலும்  முழு வளர்ச்சி அடைவது 20 மட்டுமே என்கிறார். அப்படியென்றால் எந்தளவு பாதுகாப்பு வேண்டியதிருக்கும் என எண்ணிக்கொள்ளலாம். புலி ஒரு மகத்தான கலாச்சாரக் குறியீடு என்றும் அது அழிந்துவிடும் என்றால் அதற்குரிய பழி முழுமுற்றாக மனிதர்களை மட்டுமே சார்ந்தது என்கிறார் உல்லாஸ் காரந்த்.  ஆனால் உல்லாஸ் மீது இந்நூலுக்குப் பிறகு WWF (World Wildlife Fund – உலக இயற்கை நிதியம்) சார்ந்து தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டுமிருக்கின்றன.

0 0 0

கண்டதுமே கண் விரிந்து உள்ளம் நிறையும் காட்டுயிர்களில் யானைக்கு நிகர் வேறேதுமில்லை. இவ்வளவுக்கும் அது வளர்ப்பு இனம் கூட அல்ல. எனவே தான் சுதந்திரமாகக் காடுகளில் திரியும் யானைகளைப் பிடித்து வேலைக்கு பழக்குகின்றனர். அதிலும் ஆப்பிரிக்க யானைகள் மனித பவுசுக்கு மசியாது. ஆசிய யானைகளையே பழக்க முடியும். வேங்கைக்கு இணையாகக் காடுகள் செழிக்க யானைகள் பேருதவு புரிகின்றன. தாவர உண்ணியான யானை மரங்களையும் மூங்கிலையும் ஒடித்து பசியாறும். அப்போது சிதறும் தழைகள் பிற உயிர்களுக்கு உணவாகி விடுகிறது. உணவிற்காக கிளைகளை முறிப்பதால் சூரியக் கதிர்கள் கானகத்திற்குள் நுழைந்து தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அவற்றைப் புசிக்க பிற தாவர ஜீவன்கள் காத்திருக்கின்றன. இம்மாபெரும் செயலை ஆற்றும் விலங்கைத் தான் பிச்சையெடுக்க வைக்கிறோம். தார்சாலைகளில் உருக்கும் வெயிலில் சங்கிலிகள் குலுங்க நடக்க வைக்கிறோம். முற்கால இந்திய மன்னர்களின் முடியாட்சியின் அடையாளமாக இருந்த ஒரே விலங்கு யானை. அத்தகைய பெருமையை பெற்றிருந்த உயிரி யாசகத்துக்கு தும்பிக்கை ஏந்தும் நிலைக்கு எவ்வாறு தள்ளப்பட்டது என்கிற வினா இயல்பாகவே எழலாம். அதற்கான விளக்கத்தை ஆதாரத்துடன் தன் நூலில் அளிக்கிறார் தாமஸ் ட்ரவுட்மன். பிரிட்டிஷார் இந்தியாவைக் கைப்பற்றிய பின் பல மன்னர்களுக்கும் ஓய்வூதியம் அளித்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். குறைந்த வருமானத்தில் இந்திய அரசர்களால் யானையைப் பராமரிக்க இயலவில்லை. கொட்டடிகளை மூடிவிட்டு யானைகளை மாவுத்தன்களிடமே கொடுத்து விட்டனர். அவர்கள் ஊர் ஊராகச் சென்று யானையை மீண்டும் அடிமை வேலைக்கு அனுப்பிப் பொருளீட்டினர். அப்படித்தான் திருமணங்களிலும் வேறு சுபநிகழ்ச்சிகளிலும் கோவில் திருவிழாக்களிலும் அவை பங்கேற்றன. பிறகு பிச்சைக்கு பழக்கியதும் நடந்தது.

கோவில், சர்க்கஸ் மற்றும் இன்னபிற பொது இடங்களில் காண்பது போல யானைத் தனித்து வாழும் உயிரியல்ல. குறிப்பாக குட்டியாக இருக்கையில் அது மிகவும் பாதிக்கப்படுவது தனிமையாலேயே. எப்போதும் கூட்டத்துடனேயே சுற்றும் இயல்பு கொண்ட யானைகள் மனிதர்களைப் போலவே உறவுமுறைகளுடன் வாழ்கின்றன. இதை பிரசவ நேரத்தில் காணமுடியும். சுற்றிலும் நிற்கும் யானைகளில் பாட்டி, பெரியம்மா, அத்தை, சித்தி, மாமா, சகோதர, சகோதரிகளாகச் சூழ்ந்திருந்து பிறந்த குட்டியைத் தொட்டும் முகர்ந்தும் அன்பைப் பொழியும். இவர்களில் மூத்த பெண் யானையே தலைமை வகிக்கும். சில சமயங்களில் கொம்பன் ஆண் யானையும் பொறுப்புக்கு வருவதுண்டு. புலி போலவே மூத்த ஆண் யானைக்கே இனப்பெருக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம். 22 மாதங்கள் சினைக்காலம் என்பதால் 4 ஆண்டுகளுக்கொருமுறையே குட்டி ஈனும். தாய் யானை தன் குட்டியை 10 ஆண்டுகள் வரை பிரியாதிருக்கும். தாய் இல்லாது போனால் அதன் தோழி அக்குட்டியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.  யானைக் கூட்டமாக செல்லும் போது அமைதியாக பாதைகளில் முன்னேறுகின்றன என்பது போல பலருக்கும் தோன்றலாம். ஆனால் அவை தமக்குள் அகஒலி (Infra Sound) அதிர்வுகளால் ஆன மொழியில் தொடர்பு கொள்ளும். அபாரமான மோப்ப சக்தி உடைய யானையின் பார்வைத் திறனை அந்தளவு சொல்லமுடியாது என்றாலும் செவித்திறன் மிகக்கூர்மையானது. இதில் மா.கிருஷ்ணனின் ‘காட்டானை’ (மழைக்காலமும் குயிலோசையும்) மிகச் சிறப்பானது. அவரும் கள ஆய்வு, நூல்கள் வழியாக விஷயஞானத்தை அடைந்திருந்தாலும் கூட இன்றைய நவீன ஆய்வுகள் முன்வைக்கும் பல தகவல்களை அன்றே முன் உணர்ந்து எழுதியிருப்பது தான் வியப்பிற்குரியாதாக உள்ளது.

வேட்டைகளில் யானைகள் பெருமளவு கொல்லப்பட்டிருந்தாலும் அவை இன்றும் வாழ இந்திய அரசர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை இதிகாச உதாரணங்களாலும் வரலாற்று நிகழ்ச்சிகளை முன்வைத்தும் செய்யப்பட்ட ஆய்வு நூலே தாமஸ் டிரவுட்மன்-னின்‘யானைகளும் அரசர்களும்’ (மொழிபெயர்ப்பு: ப.ஜெகநாதன், சு. தியடோர் பாஸ்கரன்). உலகிலுள்ள 50000 யானைகளில் இந்தியாவில் மட்டும் 30000 யானைகள் இருப்பதாகக் குறிப்பிடும் டிரவுட்மன் அதிலும் தென்னிந்தியாவிலேயே முதன்மைப் பங்கை வகிக்கின்றது என்கிறார். மன்னர்களின் படையில் அவை ராஜமரியாதையைப் பெற்றிருந்தன. மெளரியர் காலத்தில் அதன் நிலை உச்சத்திற்குச் சென்றது. ஆம். அரசர் தவிர பிறர் எவரும் யானைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. மெளரியர்களே போர்யானைகளின் பெருமையை உலகறியச் செய்தவர்கள். முகலாய அரசர்களின் படைகள் பெரும்பாலும் குதிரையையும் யானையையுமே சார்ந்திருந்தன. மிகக்குறிப்பாக யானைகளை. ஏனெனில் குதிரைகளை பெரும்விலைகொடுத்து அரபு தேசங்களிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. யானைகள் நம் தேசத்து விலங்கல்லவா..! அவற்றை பிடித்து பழக்கி படையில் சேர்த்தனர். யானை என்கிற பெரிய விலங்கு வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களில் அந்த அரசர்களின் படையில் எவ்வாறு இடம்பெற்றின என்பதற்கான விரிவான சரித்திர ஆதாரங்கள் இந்நூலில் உள்ளன.  ‘யானையைப் போல வேறெந்த விலங்கும் முடியாட்சியில் அடையாளப்படுத்தப்படவில்லை’ என்கிற வரியின் வரலாற்றுத் தொகுப்பே இந்நூல் எனலாம். போர்யானைகளுக்கு உலகளவில் ஏற்பட்ட பெரும்பெயரை பல ஆய்வறிஞர்களின் புத்தகங்களின் வழியாக அதற்கான சரித்திரக் காரணங்களை ஆராய முற்பட்ட நூல் எனவும் கொள்ளலாம்.

மன்னராட்சி முறை, அதன் கொள்கை, கோட்பாடுகளை விளக்கும் மிகப்பழைய நூல் ‘அர்த்த சாஸ்திரம்’. அதில் யானைகளைப் பற்றிய விவரங்கள், பராமரிப்பு வழிவகைகள், பணியாளர்களின் செயல்முறைகல் விளக்கப்பட்டிருக்கின்றன. அதை ஒரு கையேடாகக் கொண்டு அன்றைய அரசர்கள் செயல்பட்டிருக்கின்றனர்.  யானைகளைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை எனச் சொல்லப்பட்டிருந்தது. போர்யானைகளுக்காக காடுகளை பாதுகாக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இச்செயல் வேட்டையாடிகளை அடையாளம் கண்டு கானகத்தைக் காத்தது. இருபது வயது யானைகளே பழக்குவதற்கு ஏற்றவை என்பதால் காட்டிலிருந்து பிடித்து வந்து பழக்க மாவுத்தன்களும் இதர பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். அறுபது வயதான ஆரோக்கியம் நிரம்பிய யானைகளின் மீதே அரசர்கள் அமர விரும்பினர்.  எனவே காடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. எனவே கானுயிர்களுக்கும். ஒரு விலங்கு அரசர்களின் படையில் கொண்ட செல்வாக்கு காரணமாக மொத்த சூழலையுமே உயிர்ப்புடன் வைத்திருந்தது எனச் சொல்லலாம். அந்த அர்த்தசாஸ்திரம் நூலிலுள்ள யானை பராமரிப்பை அக்பர் அப்படியே பின்பற்றினார். அதற்குச் சிறப்பான இடத்தைத் தந்திருந்தார். படையிலுள்ள யானைகளைத் தவிர்த்து மன்னருக்கென்றே 101 யானைகள் இருந்தன. அவருக்கு ஒதுக்கப்பட்ட யானைகளில் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு இறந்தால் அதன் பராபரிப்பாளனான மாவுத்தனுக்கு மூன்று மாத சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தன் சொந்த யானைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்கிற வினாப்பட்டியலை (இதில் 15 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.) அளித்து அதற்குண்டான பொறுப்பு அலுவலர் விடையளிக்க வேண்டும் என்கிற ஏற்பாடு இருந்திருக்கிறது. அக்கேள்விகள் நூலில் உள்ளது.

அந்நாள்களில் உயர்குடிகளின் விலங்காகவே யானை விளங்கியது என்றாலும் யானையை காதல் பரிசாக ஒரு பெண் பெறுவது அவளுக்கு கெளரவமாகப் பார்க்கப்பட்டது. பிறகு புதிதாக எழுதப்பட்ட கவிதை நூலின் கையெழுத்துப் பிரதியை யானை மீது வைத்து ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு எடுத்துச்சென்ற பொற்காலம் அன்றிருந்துள்ளது. அரசரின் முன்னணி படையில் பெரும் கெளரவத்துடன் நின்றிருந்த யானை பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரங்களை ஏற்றுவதற்கானப் பயன்பாட்டிற்கு வந்தது. பிறகு கோவில்களில் கையேந்த பணிக்கப்பட்டது. புலவர்களுமே கூட ஆட்சியாளார்களையும் தனவந்தர்களையும் புகழ்ந்துபாடி பரிசில் பெறுவது தானே நடந்தது.

வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்பட்டதும் தந்த வேட்டையும் யானைகள் அழிவுக்குக் காரணமாக அமைந்தாலும் இன்றும் கூட மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே அதிகளவு யானைகள் காணப்படுகின்றன. அதற்கு 31 காப்புக் காடுகளே இன்றுள்ளன. அதுவே யானை-மனிதர் எதிர்கொள்ளல் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகவும் ஆகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வழிகள் ஆராய்ந்தாலும் அதன் வாழிடங்களை துண்டாடும் போது அது விவசாய நிலங்களுக்குள் புகுகிறது. அதற்கு மிக விருப்பமான உணவான கரும்பு பயிரிடப்பட்டிருக்கும் போது அது ஆவலாக ஓடிவரவே செய்யும். இந்த பிரச்சினையைத் தீர்க்கும் போது அது யானைகளை மட்டுமல்ல மொத்த காடுகளையும் பிற காட்டுயிர்களையும் காக்க வழி வகுக்கும். 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நிலைத்திருந்த யானைகளின் எண்ணிக்கை காலனிய ஆட்சிக்குப் பின்பே பின்னடைவைச் சந்தித்தது. சாகச வேட்டையே முதன்மைக் காரணம். நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு உத்தமர் 1000 யானைகளைச் சுட்டுக் கொன்றதற்கான வரலாற்றுப் பதிவு கூட உள்ளது.  பல இடர்களைத் தொடர்ந்து சந்தித்தாலுமே கூட யானை இந்திய நிலப்பரப்பில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் செழித்து பெருகவே வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது. 

0 0 0

‘நினைவுச்சின்னமொன்றைக் காணவேண்டுமென்றால் உங்களைச் சுற்றிப் பாருங்கள்’

-ஹ்யூகோ வுட்-டின் கல்லறை வாசகம்.

கிழக்கிந்தியக் கம்பெனி வழியாக வியாபாரிகளாக நுழைந்த பிரிட்டிஷார் ஆள்பவர்களாக மாறிய பிறகு வெப்பநாட்டின் கோடைகாலத்தைச் சமநிலத்தில் கழிக்க முடியாமல் தேடியலைந்து அமைத்துக் கொண்டவைகளே மலைவாசஸ்தலங்கள் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். விதிவிலக்காக 1857 எழுச்சிக்குப் பின் பயந்து தப்பி ஓடி பாதுகாப்பிற்கான புகலிடமாகக் கண்டடைந்ததே ஏற்காடு. அந்த மலைகளில்  அடர்ந்திருந்த மரங்களையும் வளங்களையும் கண்டு மலைத்து விட்டனர். காடுகளை ஒரு வருமான மூலதனமாகவே காலனி அரசு பார்த்தது. கொடைக்கானலை தெரிந்து கொள்ள 1857ல் சர்வேக்கு அனுப்பப்பட்ட அதிகாரியும் ஆனைமலைக்கு 1820ல் சென்ற இரு ஆங்கிலேயர்களும்(இவ்விரு சர்வேக்களிலும் பி.எஸ் வார்டு என்பவர் இருந்தார்) கொடுத்த விபரங்கள் மேல்நிலை அதிகாரிகளுக்கு உற்சாகமூட்டின. பிறகென்ன, அழிவின் அத்தியாயம் ஆரம்பமானது. மரங்கள் லட்சக்கணக்கில் வெட்டப்பட்டன. ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு படையுடன் போரில் ஈடுபட்டிருந்த நேரம் அது. யுத்தக் கப்பல்களுக்காகவும் மரத்தண்டவாளங்களுக்காகவும் உயர்ரக மரங்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. சென்னையிலிருந்து சென்ற மரங்கள் காரணமாகவே வாட்டர்லூ சண்டையில் இங்கிலாந்து வென்றது என்கிற வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குகாவின் கூற்றை இங்கு எடுத்தாள்கிறார் பாஸ்கரன். ஆனைமலையில் வெட்டப்பட்டவை சரிவுகளிலிருந்து நதிக்குள் தள்ளிவிடப்பட்டு மிதவையாகி கொச்சிக்கு சென்றது. பின் கப்பல்களில் அனுப்பப்பட்டது.  அவ்விடமே பின்னர் ‘டாப்ஸ்லிப்’ என்றாகியது. இங்கே 11 கிமீ தண்டவாளம் அமைத்து யானைகள் மூலம் ரயில்களில் ஏற்றி அவை கொண்டு செல்லப்பட்டனவாம். வேட்டையாடிகள் உண்டாக்கிய அழிவுகள் ஒருபுறம் என்றால் காடுகளை நிர்மூலமாக்கிய இத்தகைய சுரண்டல் இன்னொரு புறம் தீவிரமாக நடந்திருக்கின்றன. ஆனால் ஆங்கிலேயர்களை வெறும் தீமையின் முகங்களாக மட்டும் பாஸ்கரன் கருதவில்லை. அவர்களில் சிலர் காடுகளுக்கும் கானுயிர்களுக்கும் தம் வாழ்வை அளித்திருக்கின்றனர். அவர்களின் ஆளுமைச்சித்திரத்தைத் தனிக்கட்டுரைகளாகவே வழங்கியிருக்கிறார் பாஸ்கரன்.  வாசிப்பவர் உள்ளத்தில் அவர்கள் ஒரு வளமான மரமென உயர்ந்து நிற்கின்றனர். இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய ஹ்யூம் ICS தேறி அதிகாரியாக வந்திறங்கியிருந்தாலும் அவரது முதன்மை உந்துதல் பறவைகளே. பல்வேறு பறவையினங்களை அடையாளம் கண்டவர் அவர். அவற்றிற்கென்றே அன்று தனி இதழை நடத்தி பறவை ஆர்வலர்கள் பலருடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். அபூர்வமான நூல்களை எழுதியிருமிருக்கிறார். தன் வாழ்நாளின் ஒருபகுதியையே செலவிட்டு மேற்கொண்ட அவரது அரிய (6300 பாடம் செய்யப்பட்ட பறவைகள், 500 பறவைக்கூண்டுகள், 18500 முட்டைகள், 400 விலங்குத் தோல்கள்)சேகரிப்பு இன்றும் லண்டனில் உள்ளது. அவரையொட்டி அவரது பாதிப்பினால் பறவையியலாளர்கள் வரிசை இந்தியாவில் தோன்றியது. ஹ்யூமின் பங்களிப்பு அளப்பரியதென்றால் அவரை விட ஒருபடி மேலாக ஹ்யூகோ வுட் (Hugo Wood) தான் நேசித்த காடிருக்கும் ஆனைமலையிலேயே தன் உடல் புதைக்கப்படவேண்டுமென உயில் எழுதி வைத்தார். முன்னர் பல்லாயிரம் மரங்கள் வெட்டப்பட்ட ஆனைமலைக்கு பணி நிமித்தம் அரசு அவரை அனுப்பியது. அங்கு சென்றதும் மரவெட்டுதலைத் தடுத்து நிறுத்திய வுட், காடுகளைச் சுற்றி வருகையில் தன் ஊன்றுகோலால் தரையைக் குத்திக் குழி செய்து பாக்கெட்டிலிருந்த தேக்கு மர விதைகளை போட்டு மூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். விளைவாக காடுகள் செழித்தன. ஆனைமலைக் காட்டுப்பிரதேசம் காப்பற்றப்பட்டது. சென்னைக்கருகே பாம்பு பண்ணை அமைத்து சீரிய ஆய்வுகள் மேற்கொண்டு அறியாத பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர் ராமுலஸ் விட்டேக்கர். அழிந்து வந்த சில முதலையினங்களைத் (கரியால் முதலை, முகத்துவார முதலை) தன் பண்ணையின் மூலம் காப்பாற்றி பெரும்பங்காற்றினார். இவரது தீவிர முயற்சினாலேயே கடல் ஆமைகளைக் கொல்வது நின்றது. காசிரங்காவில் கிட்டத்தட்ட அழிவுநோக்கிச் சென்றுவிட்டிருந்த காண்டாமிருகத்தை மீட்டவர் அன்றைய வைஸ்ராய் கவர்னரின் மனைவி மேரி விக்டோரியா. அங்கு பலமணி நேரம் சுற்றியபின்னரும் காண்டாமிருகத்தைக் காண முடியாத மேரி அவற்றிற்கு நேர்ந்ததென்ன என்பதை யூகித்திருந்தார். உடனேயே அங்கு வேட்டை தடுக்கப்பட்டது. கணவரிடம் பேசி அதை சரணாலயமாக அறிவிக்கச் செய்தார். இன்று அங்கு 1700 க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் உள்ளன. மொரிசீயஸ் தீவில் ஏழாகச் சுருங்கி எஞ்சியிருந்த வல்லூறு அழிநிலையிலிருந்தது. அங்கு கார்ல் ஜோன்ஸ் என்கிற ஆங்கிலேய இளைஞர் அனுப்பப்படுகிறார். அங்கு சென்றபோது அவரைச் சந்திக்கிறார் பாஸ்கரன். திட்டம் விளங்குகிறது. அப்பறவையின் முட்டைகளைத் தேடிச் சேகரித்து ஐரோப்பிய வல்லூறு மூலம் அடைகாத்து பின் காட்டில் விடுவதே அது. 2006 ல் அத்தீவில் 150க்கும் மேற்பட்ட வல்லூறுகள் இருக்கின்றன.

காந்தியின் மதிப்பிற்குரிய அவரது அணுக்க நண்பர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பாவை பலரும் பொருளியல் அறிஞராக அறிந்திருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை, கிராமப் பொருளாதாரம் போன்றவற்றில் அவரது சிந்தனைகள், பெருந்திட்டங்களை பற்றிய தீர்க்கத்தரிசனப் பார்வைகள் போன்றவையே அவரைச் சூழலியலாளராக முன்னிருத்துபவை. இந்நூலில் குமரப்பா இல்லாதிருந்திருந்தால் கூட சற்று முனைந்தால் அவரைத் தெரிந்து கொள்ள முடியும், ஆனால் தாவரங்களுக்காக தன்னையே அளித்த பி.கே. மேத்யூ செய்து காட்டியதென்ன என்பதற்கு தியடோர் பாஸ்கரன் போன்ற ஒருவர் தேவையாகயிருக்கிறார். தாவரங்களின் ஆராய்ச்சிக்காக ஆயுளின் பெரும்பகுதியைச் செலவிட்ட மேத்யூ அவற்றிற்குரிய தமிழ்ப்பெயர்களின் பட்டியலையும் வெளியிட்டார்(அவற்றில் ஒன்றின் பெயர் ‘தேவடியாள் முள்’ (Alternanthere pungenes) என்பது). போலவே சில குறிப்பிட்ட உயிரிகள் மீது தொடர்ந்து நடந்து வரும் ஆய்வுகள் அவற்றின் தற்போதைய நிலை, சூழலியல் மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டியவை குறித்தெல்லாம் தெளிவை அளித்துவிடுகின்றன. ஜஹாங்கிர் தான் வளர்த்த வெளிமானுக்கு(blackbuck) நினைவாலயமே கட்டியிருக்கிறார்.  பெரிய விலங்குகளுக்கு மட்டும் தனித்த ஆய்வுகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் சூழலில் தேவாங்கு குறித்து சிந்து ராமகிருஷ்ணன், மூங்கணத்தான் என்கிற அரிய உயிரி பற்றி கார்த்திகேயன், செந்நாய் குறித்து ஜான்சிங் பிணந்திண்ணிக் கழுகுகளின் மீதான ஆய்வு முனைவர் பட்டம் பெற்ற ராபர்ட் இன்னும் சிலருமாக, அரியவை அழிவுவரை செல்லாதிருக்க இயன்ற பங்கேற்பை நல்குகின்றனர். கானுயிர் செல்வங்களை மீதான இத்தகைய ஆத்மார்த்தமான ஈடுபாடுகளே அவற்றின் மதிப்புமிக்க இருப்புக்கு வழிகோலுகின்றன போலும்.

0 0 0

மனிதருடன் உணர்ச்சிப்பூர்வமான உறவைக் கொண்டிருப்பவை நாய்களும் பூனைகளும். அவை மனிதர்களை வெகு நுட்பமாக அறிந்திருக்கும். பல வீடுகளில் – குறிப்பாக வயோதிகர்களுக்கு – வெறுமையின் மருந்தாகவும் தனிமை நீக்கியாகவும் இவையே உள்ளன. இவற்றின் மீது சொந்தக் குழந்தைகளுக்கு நிகராக அன்பைப் பொழிபவர்களைப் பலரும் பார்த்திருக்கலாம். இந்த நாய்களின் வரலாறு பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிடுகின்றன. இவற்றின் எலும்புகளை ஆராய்ந்தவர்கள் 27000-40000 வருடத்திற்கு முந்தையவை என்கின்றனர். இது கூட இந்திய சமவெளிகளிலேயே நிகழ்ந்துள்ளது. அதற்கு ஆதாரமாக இதன் மூதாதையான ஓநாய் இந்தியாவில் வாழ்ந்ததை அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். தியடோர் பாஸ்கரின் ‘இந்திய நாயினங்கள்’ எனும் நூல் வரலாற்று நோக்கில் பல இனங்களையும் அதன் தோற்றங்களையும் ஆராய்கிறது. முதலில் வேட்டை விலங்காகவே இருந்த நாய் காலனிய அரசு வந்த பின்னரே வீட்டு விலங்காக மாறியிருக்கிறது. உலகெங்கும் இரு வகையான நாய்களே உள்ளன எனக்கூறும்(மோப்ப நாய், பார்வை நாய்) பாஸ்கரன், இந்தியாவிலுள்ளது பார்வை நாய் என்கிறார். இனக்கலப்பினாலேயே உருண்டையாக (அ) சதுரமாக இருந்த முகம் கூர்மையான நீண்ட முகமாக மாறி இருக்கிறது. இனக்கலப்பில்லாத நாயின் சிற்பம் தாராசுரம் கோவிலும் உள்ளதாம். பிரித்தானிய அதிகாரிகள் கலப்பில்லாத இந்திய நாயினங்களின் தனித்துவத்தை உணர்ந்து அக்கூறுகள் மாறாமல் வைத்திருக்க வேண்டும் என விரும்பியிருக்கின்றனர். உள்ளூர் இனங்கள் சில அற்றுப் போனதற்கானக் குறிப்பும் இந்நூலிலுள்ளது. போதிய அக்கறையின்மையும் மேலை நாட்டு நாய்கள் மீதான மோகமும் உள்ளூர் இனங்களை உதாசீனம் செய்ய காரணமாயின. அதனாலேயே காலப்போக்கில் அற்றும் போயின. இந்திய அரசால் 72ல் கொண்டு வரப்பட்ட காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் வேட்டையைத் தடை செய்ததால் அதற்காகவே கிராமப்புறங்களில் நாய் வளர்த்து வந்தவர்கள் ஒதுங்கி விட்டனர். குறிப்பாக இருவகையான நாய் வேட்டைகள் உள்ளன. காட்டில் தனியாக தங்கி ஈடுபடுவது(தங்கல் வேட்டை), பலர் இணைந்து கூட்டாக ஈடுபடுவது(கூட்டு வேட்டை).

காலனி அரசால் இறக்குமதி செய்யப்பட்ட அயல் தேச நாய்களைக் கண்டு அவர்களின் விசுவாசிகளாகவும் அவர்களை ’போலச் செய்தும்’ வாழ்ந்து வந்த மேல்தட்டு வர்க்கத்தினரும் சமஸ்தான மன்னர்களும் உள்ளூர் இனங்களை கண்டு கொள்ளாமல் புறமொதுக்கியதால் மெதுவாக அவை இல்லாமலேயே போய்விட்டன. இந்தியாவின் மாறுபட்ட பருவநிலை, புவியியல் கூறுகள் உள்ள பகுதிகளில் தோன்றி, வெவ்வேறு உடற்கூறுகளுடன் பல நாயினங்கள் உருவாயின. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் கலப்பினமே இருக்கவில்லையாம்.

வரலாற்றைக் காணும் போது நாய் செல்லப்பிராணியாக இருந்திருக்கவில்லை என்கிறார் பாஸ்கரன். அதற்கான சரித்திர ஆதாரங்களை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளோடு அளிக்கும் அவர், இலக்கியங்களிலும் சிற்பங்களிலும் அரிதாகவே தென்படுவதால் அதற்கு கீழான இடமே வழங்கப்பட்டது என்கிறார்.  நாய்களைக் கீழாக காணும் பார்வையே இங்கு நிலவியது.

விதிவிலக்காக சில சரித்திர உண்மைகள் இருக்கின்றன. உதாரணமாக மொகலாய மன்னர் ஜாஹான்கீர் தன் தர்பாரிலிருந்த பிரிட்டிஷ் தூதுவரிடம் இங்கிலாந்திலிருந்து உயர்ரக நாய்களைத் தருவித்து தரும்படி கோர அவரும் மாஸ்டிஃப் இன நாயை அரசருக்குப் பரிசாக அளித்திருக்கிறார். அது உண்பதற்கு வெள்ளித் தட்டையும் இரு பணியாளர்களையும் நியமித்தாராம் மன்னர்.

நாய்களுக்கும் நுண்சில்லு(Microchip) பயன்படுத்தப்பட்டு அதன் விபரங்கள் அதில் பதியப்படுகின்றன. அது கழுத்தில் தோலுக்கு அடியே பொருத்தப்படுகிறது. இது உள்ளூர் இனங்களின் பெருக்கத்திற்கும் அவற்றை அழிவிலிருந்து காப்பற்றவும் உதவுகிறது. அதற்காக மேற்கொண்டிருக்கும் பணிகளை விளக்கமாகவே உரிய தரவுகளுடன் நூலில் கொடுத்திருக்கிறார் பாஸ்கரன்.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இறக்குமதி செய்யப்பட்ட அயல்தேச நாய்களால் உள்ளூர் இனங்கள் கவனிக்கப்படாது போய் அப்படியே மறைந்து விட்டிருக்கின்றன. 25 தனித்துவ நாயினங்களைச் சுட்டிக் காட்டும் பாஸ்கரன் அவை பயன்பாட்டு நாய்கள், வீட்டு நாய்கள், வேட்டை நாய்கள் என 3 பிரிவுகளாக உள்ளன என்கிறார். இங்குள்ளவை அனைத்துமே பயன்பாட்டு நாய்களே. பன்னாட்டு அளவில் எனக்கொண்டால் பார்வை நாய்கள், மோப்ப நாய்கள் என இரு பிரிவுகளாகச் சுட்டப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள சில இனங்களுக்கு (ராஜபாளையம்) மோப்ப சக்தி அதிகம் உண்டு எனினும் அவையும் கூட வேட்டையில் பார்வையையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பொதுவாகவே நம் நாட்டில் உள்ளவற்றை பார்வை நாய்கள் என்று விடலாம்.

இமையமும் அதற்கு அப்பாலும் தமிழகத்து கோடிவரை இந்த இனங்கள் பரவியிருக்கின்றன. இதன் சிறப்பியல்புகளைப் பற்றி பேசும் போது அவற்றைச் சுட்டி ஜாதிகள் என்கிற சொல்லை பயன்படுத்துகிறார். வெவ்வேறு உள்ளூர் இனங்களை வேறுபடுத்திக் காட்ட ஜாதி என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. பிற இந்திய மொழிகளிலும் இப்பிரச்சினை உள்ளது.

ஹிமாலய மாஸ்டிஃப் இன நாய்கள் ஓநாய்களை விரட்டவும்  சிறுத்தைகளையே  கொல்லவும் கூடிய வலுக் கொண்டவை. மந்தைகளைக் காக்க வளர்க்கப்பட்டன. சேவல் சண்டை போல கடந்த நுற்றாண்டில் பகிரங்கமாகவும் இன்றும் கூட சில இடங்களில் ரகசியமாகவும் நடந்தப்படும் நாய்ச்சண்டையில்  கூச்சி இனம் ஈடுபடுத்தப்படுகிறது. பந்தயத் தொகையோ மிகப்பெரிது.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாளையக்காரர்கள் கோம்பை இன நாயை போற்றினர் என்றும் நாய்க்கு மாற்றாக ஒரு குதிரையைக் கூட கொடுக்கத் தயங்காதவர்களாக இருந்தனர் எனவும் அன்றைய மதராஸிலிருந்த ஆங்கில அதிகாரி எழுதிய நூலிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் பாஸ்கரன்.

திபெத்தில் உள்ள நாயினங்களே மிகவும் பெயர் பெற்றவையாம். அங்கு நாய் ஒரு புனித விலங்கு. இந்நூலில் தெளிவான புகைப்படங்களுடன் அதன் தோற்றம், இனம் போன்றவற்றை விளக்கி இருந்தாலும் இக்கட்டுரையாளர் சிப்பிப்பாறை, ராஜபாளையத்தை மட்டுமே பார்த்திருக்கிறார். கோம்பையை பார்த்த நினைவும் இருக்கிறது. இவை நீங்கலாகச் சிலவற்றை திரைப்படங்களிலும் உயர்குடிகளின் கார்களின் ஜன்னல்களிலுமே கண்டு இன்னது எனத் தெரியாமல் வெறும் வேடிக்கையாளனாகவே இருந்துள்ளார்.  மிகவும் பரிச்சியமும் சுமூக உறவும் கொண்டிருப்பது தெரு நாய்களிடமே. உயிரிகளிலேயே பாஸ்கரன் கடுங்கோபம் கொள்வது தெருநாய்களிடத்து தான். அவை வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும் என்பதைப் பல இடங்களில் வற்புறுத்துபவராக இருக்கிறார். ஏனெனில் வெறிநாய் கடிக்கு மருந்தே கிடையாது. நேரடியாக சொர்க்கவாசல் திறந்துவிடும். இவை சுற்றுச்சுழலுக்கு விளைவிக்கும் கெடுதிகளே அநேகம். இந்நூலில் தெருநாய்களுக்கென்றே சற்று நீண்ட தனி அத்தியாயமே உள்ளது. சென்ற வாரம் இரவு 11.30 மணியளவில் பூனையின் தொடர் கத்தல் கேட்டது. அதன் ஒலி குழந்தையினுடையது போன்றிருந்தால் இணையைக் கூட ஒலி எழுப்புகிறதோ என்றிருந்தேன். சட்டென்று நாய்களின் குரைப்பொலி கேட்டதால் ஏதோ தவறாகப் படவே புத்தகத்தை வைத்து விட்டு எட்டிப் பார்த்தேன். குட்டிப் பூனையின் குதறிய பாதி உடலை வாயில் பற்றி நின்றிருந்த நாயைச் சுற்றிலும் பிற நாய்களும் தன் பங்கையோ அல்லது பிடுங்கவோ குரைத்துக் கொண்டிருந்தன. அரைமணிக்கு முன்பு தான் குட்டி தாய்க்கு அருகில் அமர்ந்திருந்ததைப் பார்த்திருந்தேன்.  தாய் பூனை ஓட்டின் மீது அங்குமிங்கும் பதற்றத்துடன் இறைஞ்சிய குரலில் கதறியபடி காப்பற்ற வழியற்று நடந்து கொண்டே இருந்தது.  பிறகு குட்டிப்பூனையை கவ்வி ஓடிய நாயை மொத்த நாய்களும் விரட்டிச் சென்றன. அந்த இரவு முழுக்கவுமே உறக்கமின்றி புரண்டு கொண்டே இருந்தேன். விபத்துக்களில் குறிப்பிட்ட சதவீதம் தெருநாய்களாலேயே ஏற்படுவதை பலருமே அறிந்திருக்கலாம்.

பூச்சிகளையும் எறும்புகளையும் நுட்பமாகப் பேசியிருக்கும் பாஸ்கரனின் மொத்த எழுத்துகளிலும் மனிதர்களின் செல்லப்பிராணியான பூனை இரண்டே இடங்களில் மட்டும் வருகிறது. தன் நெருங்கிய உறவினர் மரணத்தறுவாயில் தன் அறையில் பூனை வேண்டும் எனக் கேட்டு அதை நிறைவேற்றும் போது புதிய வீட்டிற்குச் சென்று பொருட்களை ஒழுங்கு செய்வதற்குள் பூனை காணாமல் போய்விட்டது என்பதைச் சொல்வதற்கும். பிறகு அப்பூனை(பெயர் மைக்கண்ணி)  இரவில் அதுவாகவே திரும்ப வந்து விடுகிறது. இதைப் படித்ததும் ஜப்பானிய நாவலாசிரியர் முரகாமியும் அவர் தந்தையும் தாங்கள் வளர்த்த பூனையைக் கடற்கரையில் விட்டு வந்து அவர்கள் இல்லம் வருவதற்கு முன்பே அது வீட்டின் முன் காத்திருந்ததை பேசும் கட்டுரை நினைவுக்கு வந்தது.

0 0 0

“ஒவ்வொரு உயிரினமும் பல்லூழிகாலமாக இயற்கையின் பரிணாம தகவமைப்பில் உருவானதே”

காடுகளை மரங்கள் நட்டு உருவாக்க முடியாது. சில விதைகள் அதன் கடினத்தன்மையை விலங்குகளின் உணவுக்குழாயில் சென்று சேர்ந்து வெளிவருவதன் மூலம் இழக்கின்றன. அவ்விதைகளாலேயே காடு பெருகும். போலவே மிருகக் காட்சிச்சாலையில் வைத்து இனப்பெருக்கம் செய்வதன் மூலம் விலங்குகளின் எண்ணிக்கை உயராது. அவற்றிற்கு இயற்கையான உயிரோட்டம் நிரம்பிய வாழிடத்திலேயே தனக்கானதை எடுத்துக் கொண்டு சுற்றுச்சுழலுக்கும் அளிக்க முடியும். இவ்விலங்குகள் வேட்டைத் தவிர்த்த பிற காரணிகளாலும் கொல்லப்படுவதும் மறைந்து போவதும் தொடரவே செய்கின்றன. அவற்றில் தலையாயது காட்டுயிர்களின் கள்ளச் சந்தை வணிகமே என்கிறார் பாஸ்கரன். ஏனெனில் போதைப் பொருள் சந்தைக்கு பிறகு பணம் கொழிக்கும் வர்த்தகம் இதுவே. மனிதர்களின் நோய்களைத் தீர்க்கவும் ஆயுளைக் கூட்டவும் ஏதேனுமொரு உயிரியின் உறுப்புகள் மருந்தாகப் பயன்படுகின்றன என்கிற நம்பிக்கையால் அவை கொல்லப்படுகின்றன. அதிலும் மிக முக்கியமாக ஆண்மையை விருத்தி செய்வதற்காகவே பல விலங்களின் பாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காண்டாமிருகத்தின் ஒற்றைக் கொம்பை பொடி செய்து சாப்பிட்டால் ஆண்மை பெருகுமாம். காண்டாமிருகத்தின் கொம்பால் செய்த குப்பியில் பானத்தைக் குடித்தால் அதில் விஷம் கலந்திருந்தால் காட்டிக் கொடுத்துவிடும் என்பது பொய் என்று கூட உணராதிருந்திருக்கின்றனர். லேகியத்திற்காக கருமந்திகள்(மூட்டுவலிக்கு அருமருந்து என நம்பினர்) கொல்லப்படுவது வாடிக்கை. புலிகள்  தோலுக்காகவும் அவற்றின் எலும்பைப் பொடி செய்து உண்டால் ஆண்மை விருத்தி அடையும் என்பதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன. ஆந்தைகளின் ஒவ்வொரு உடற்பாகமும் தனித்தனியாகப் பயனளிக்கும் எனக்கருதி சடங்குகளில் உபயோக்கின்றனர். தேவாங்கின் மண்டையோட்டைப் பொடி செய்து உண்டால் தாது வீர்யம் பெருகும் எனும் நப்பாசை அதன் மறைவுக்கு காரணமாக அமைகிறது. அபூர்வமான உயிரியான சோலைமந்தியை நாட்டு வைத்தியத்திற்காக கொல்கின்றனர். யானையின் தந்தம் மட்டுமல்ல அதன் வால் ரோமத்தை மோதிரத்தில் சுற்றிக் கொண்டால் அதிர்ஷ்டம் என நினைத்து அதற்குக் குழி பறிக்கின்றனர். பேசும் கிளிகளுக்கு பெரிய விலை கிடைக்கும் என்பதால் அவை அயல் நாடுகளில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. ஆமைரத்தம் மூல வியாதியைப் போக்கும் என நம்பிய தூத்துக்குடிக் கடற்கரைவாசிகள் அவற்றைக் கடலிலிருந்து பிடித்து உயிருடன் கழுத்தைக் கீறிக் குடித்திருக்கின்றனர். ஒரு காலத்தில் இதற்காக நீண்ட வரிசை காத்திருக்குமாம். செல்லப்பிராணிகளான பேசும் மைனா, கிப்பன் குரங்கு, நட்சத்திர ஆமைகளுக்கு மவுசு அதிகம். தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவிலிருந்து பஞ்சவர்ணகிளிகளும் பேசும் கிளிகளும் இங்கு கடந்தி வரப்படுகின்றன. திமிங்கலங்களோ இறைச்சிக்காகவும் மெழுகிற்காகவும் கொல்லப்பட்டன.

0 0 0

எதிர்ப்பு தெரிவிக்காது அப்படியே நின்ற பாவத்திற்காக மனிதர் கண்ணில் பட்ட அடுத்த 85 ஆண்டுகளில் டோடோ பறவை(டோடோவால் பறக்க முடியாது மட்டுமல்ல அதற்கும் குரலும் கிடையாது. குரலற்ற மற்றொரு பறவை நத்தைக்குத்தி நாரை ) அற்றுப் போயிற்று. இது ஐந்தறிவு உயிரிக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியப் பழங்குடிகளான அபாரிஜினர்களுக்கு நடந்ததும் இதுவே. தங்கள் நம்பிக்கைக்கும் கலாச்சாரத்திற்குமேற்றபடி அமைத்துக் கொண்ட வாழ்க்கையைப் போற்றி பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்தனர். இங்கிலாந்துச் சிறைகளில் இடமின்றி அங்கிருந்த கைதிகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்து ஆஸ்திரேலியாவில் இறக்கியது பிரிட்டிஷ் அரசு. அவர்களை பழங்குடிகள் எதிர்க்கவேயில்லை. வழமையான அன்றாடங்களில் ஈடுபட்டனர். எனவே அழிவு தொடங்கியது. அவர்களது இனமே அற்றுப் போகும் நிலை நோக்கித் தள்ளினர். 1788ல் வந்தேறிகளாக நுழைந்த ஆங்கிலேயர்கள் 1829ல் குடியேறினர். ஆங்கிலேயர்கள் குடியேறிய தாஸ்மானியாவில் இன்று ஒரு அபராஜினிகள் கூட கிடையாது. அப்பகுதியில் அந்த இனமே அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சிலர் மட்டுமே வாழ்கின்றனர். நகரத்திலோ அப்பூர்வகுடிகள் நடைபிணங்களாகத் திரிகின்றனர். பிறகு அவர்களின் புதிய தலைமுறை கிளம்பி வந்து கேள்வி எழுப்பிற்று. கலைஞர்கள் தங்கள் படைப்புகளால் உலகமெங்கும் எடுத்துச் சென்றனர். பிறகு அந்த அரசு மன்னிப்புக் கோரியது. ஆனால் அழிந்தவை மீளாது என்பதோ எளிய உண்மை. பிறகு பல்லேறு காரணங்களால் அழிந்துபட்டவைகளுக்கும் அற்றுப்போனவைகளுக்கும் எந்த அரசேனும் மன்னிப்புக் கோரியதா என்பதும் தெரியவில்லை. ஆஸ்திரிலேயர்களால் மட்டுமல்ல அங்கு வாழும் இந்தியர்களாலும் இகழ்ச்சிக்கு உள்ளானவர்கள் அப்பூர்வகுடிகள்.

இங்கு காடுகளைக் காப்பதற்கும் அவற்றை காட்டுயிர்களுக்கு ஏற்றதாக பெருகச் செய்வதற்கும் பழங்குடிகளின் துணையும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.  ஏனெனில் அவை அவர்களது வாழ்க்கையின் பகுதி.  காடுகளைத் துண்டாடுவதோ வனப்பாதுகாப்புக் காரணம் காட்டி அவர்களை வெளியேற்றுவதோ அம்மக்களை நிர்மூலமாக்கிவிடும். எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் சமூகம் களத்தில் இறங்கி திட்டத்தை முறியடித்தது போல வனவாசிகளுக்கு நிகழவில்லை. ஆங்கிலேய அரசு அவர்களை அடிமை போல நடத்தினர்.  பத்திரம் இல்லாத காரணம் காட்டி குடியிருப்புகளிலிருந்து விரட்டியது. அங்கு இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை விற்று வாழ்ந்தவர்கள் மீது வனத்துறை திருட்டு முத்திரைக் குத்தியது. சுதந்திரத்திற்குப் பிறகும் இது தொடர்ந்தது. இன்று பலரும் தம் வேரை இழந்து நகரங்களில் ஏதிலிகளாக வாழ்வதை பலருமே கண்டிருக்கக்கூடும். அவர்களுக்கு காடு சார்ந்த பணிகளை வழங்குவதன் மூலம் திருட்டு வேட்டைகளைத் தடுப்பது மட்டுமின்றி உரிய கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த முடியும். பெரியார் சரணாலயத்தைச் சார்ந்த சில அதிகாரிகள் அவர்களை வழிகாட்டிகளாக நியமித்து அதைச் செய்துமிருக்கிறார்கள். குறிப்பாகக் காடுகளை அழித்து பெருந்திட்டங்கள் தீட்டப்படும் போது அங்குள்ள உயிரிகள் மட்டுமல்ல இம்மக்களும் வாழ்வைத் தொலைக்கின்றனர். மாற்று ஏற்பாடுகளுக்குத் தரப்பட்ட உறுதி காற்றோடு போகும் என்பது யாருக்குத் தெரியாது? உலகறிந்த போபால் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கே உரிய இழப்பீடு அளிப்படாத தேசத்தில் இந்த வாக்குறுதிகள் வெறும் நாடகமே. உண்மையில் ஒரு சாரார் எண்ணிக்கொண்டிருப்பது போல இம்மக்களால் வளங்கள் சுரண்டப்படுவதில்லை. மாறாக வசதிக் கொண்டோராலேயே அவை காலியாகின்றன என்கிறார் பாஸ்கரன். பல கிலோமீட்டர்கள் நடந்து விறகு பொறுக்குபவர்களும் பழம் பறிப்பவர்களும் எந்தச் சீர்கேட்டையும் உருவாக்குவதில்லை. டூரிஸம் எனும் பெயரால் காட்டின் அமைதியைக் குலைப்பவர்களும்  அதை மாபெரும் குப்பைக் கிடங்காக மாற்றுபவர்களும்  படித்த வகுப்பினரே. இதிலுள்ள மையமான பிரச்சினை வனத்துறை மத்திய அரசிடம் அன்றி மாநில அரசிடம் இருப்பதே என பாஸ்கரன் மட்டுமல்ல மா.கிருஷ்ணன் தன் காலத்திலேயே சொல்லி சென்றிருக்கிறார். எனவே தான் 2006ல் இம்மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட காட்டுயிர் சட்டம் ஏடுகளிலேயே ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறது.

0 0 0

ஊடகங்கள் மிக அலட்சியமாகப் பொறுப்பற்று வார்த்தைகளைக் கையாளும் போதும் விலங்குகளின் பெயர்களை அறியாமல் திணறி பொத்தாம் பொதுவாக ஒன்றைச் சொல்லித் தப்பிக்கும் போதும் அவ்வுயிர்களோடு தம் வாழ்வைப் பிணைத்துக் கொண்டிருக்கும் ‘படிக்காத’ இச்சமூகமே தெளிவுடன் உரிய விளக்கங்களை அளிப்பவர்களாக உள்ளனர். போர்யானைகளையும் சவாரி யானைகளையும் பராமரிக்கப் பணியாளர்கள் இருந்தனர் என்றும் அந்த எழுவரில் முதன்மை இடம் வனவாசிகளுக்கு அளிக்கப்பட்டதென்றும் தன் நூலில் எழுதியிருக்கிறார் தாமஸ் டிரவுட்மன். தெரியாத ஒன்றை ‘அபூர்வ உயிரினம்’ என்றோ ‘வினோத விலங்கு’ என்றோ செய்திகள் வெளியிடுவது போதாதென்று ‘மிருகங்களின் அட்டகாசம்’, ‘யானையின் ஊடுறுவல்’ எனச் செய்தி வெளியிட்டு பீதியூட்டுகின்றன. கூகையைப் பற்றித் தெரியாத ஊடகவியலாளர்கள் அதன் ஆங்கிலப்பெயரை அப்படியே கவிழ்த்துப் போட்டு தமிழாக்கிய வேடிக்கைகளும் நடந்திருக்கின்றன. ‘King Cobra’ வை ராஜநாகம் ஆக்கியது போல(‘கருநாகம்’ என்பதே சரி).  அச்சூழலில் வாழும்  இம்மனிதர்களாலேயே அவற்றின் பெயர்கள் துலக்கமடையும். உதாரணமாக டால்பினுக்குரிய நல்ல தமிழ் பெயரான ஓங்கில் எனத் தெரிய வந்தது மீன்வர் ஒருவரிடமிருந்தே. தொண்டையில் பொட்டுப் போல சிவப்பு நிறம் கொண்ட பறவையின் தமிழ்பெயரை வினவிய போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த  வழிகாட்டியே ‘மணிகண்டன்’ என்றிருக்கிறார். சோலைமந்தி என்கிற பாரம்பரிய தமிழ்பெயரால் சுட்டுவது சிங்கவால் குரங்கைத் தான் என அவர் அறிந்தது வனவாசி ஒருவரிடமிருந்தே. யானைகள் அட்டகாசம் என பரவலாகச் சொல்லப்படும் போது ஒரு இதழ் மட்டும் வாழிடம் தேடும் யானைகள் என தலைப்பிட்ட்டிருக்கிறதை சுட்டுகிறார். 

இயற்கைவாதியான, ஊடக மொழியில் சொன்னால் ’அனிமல் ப்ளேனட்’ புகழ் எர்வின் இறந்ததை செய்தியாக வெளியிடும் போது கூட  ’ஒரு விஷ மீன் தாக்கி’ என்றே எழுதியிருக்கின்றனர். அதை மேம்படுத்த எந்த வழியையும் மேற்கொள்வதில்லை என்கிற கவலையை பல இடங்களில் பகிர்ந்து கொள்பவராகவே இருக்கிறார் பாஸ்கரன்.  அப்பிழையைச் சுட்டிக்காட்டும் பாஸ்கரன் சென்னையிலேயே காணக்கூடிய ‘திருக்கை மீன்’ என்பதை தேடி அறியும் ஆர்வம் அவர்களுக்கு இல்லை, அதை மேம்படுத்திக் கொள்ளும் முனைப்பையும் அவர்கள் மேற்கொள்ளாது உள்ளனர் என கவலையுடன் பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாகப் பறவைகளுக்கு பெயரிடும் போது பலவற்றையும் ஆராய வேண்டியிருக்கலாம். உதாரணமாக இந்தியாவில் மட்டுமே வாழும் பறவையான கானமயிலே முதலில் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பெயரிலேயே (Indian Bustard) தேசமும் உள்ளது ஒரு காரணம். ஆனால் அச்சுப் பிழையாலும் உச்சரிப்பாலும் பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதியதால் அக்கெளரவம் மயிலுக்குப் போய்ச் சேர்ந்தது.

தன் நூலில் பல்லேறு பறவையினங்களுக்குரிய பெயர்களை செவ்வியல் இலக்கியத்திலிருந்து அளிக்கும் தமிழகப் பறவையியலாளர்களில் ஒருவரான முனைவர். க.ரத்னம், பறவைகளைப் பட்டியலிட்ட எம்.ஏ.பாட்சாவைத் துணைக்கழைத்துக் கொண்டு ஒரே இனத்தைச் சேர்ந்தது எனினும் வெண்முதுகுக் கழுகை ‘பாறு’ என்றும் செந்தலைக் கழுகை ‘எருவை’(பிணந்திண்ணிக் கழுகு) என்றும் சுட்டுகிறார். உருவில் சிறிய வல்லூறுவை ‘எழால்’ என்கிறார். இவற்றை செவ்வியக்கியப்பாக்களை உதாரணமாகக் காட்டி அப்பறவைகளின் இயல்புகளையும் தன் நூலில் அளித்துள்ளார் ரத்னம்.  நூலில் முதல் கட்டுரையிலிருந்து தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று சுற்றுச்சூழல், காட்டுயிர் பாதுகாப்பு குறித்து விவாதிக்க அதற்கானத் துறைச் சொற்கள் உருவாக்கப்படவேயில்லை என்பது. சங்க இலக்கியத்திலும் பாரம்பரியமாகவும் பறவைகளுக்கும் விலங்குகளுக்குரிய பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன என்ற போதும் நகர்மயமான தலைமுறை உருவான போது அந்த மரபுச் சங்கிலி அறுந்திருக்கலாம் (இக்கட்டுரையாளரே கூட அதன் சாட்சி தான்). ஆனால் புதிய நூலொன்றில் சரியான சொற்கள் இடம்பெற்றிருந்தால் உவகையுடன் சுட்டிக்காட்டத் தவறுவதுமில்லை. நூலிலுள்ள சில மதிப்புரைகள் கட்டுரையின் அழகுடனேயே எழுதப்பட்டிருக்கின்றன. எலியைக் குறிக்க ‘கொறிவிலங்குகள்’ என்றும் இரவில் நடமாடும் ஜந்துக்களை ‘இரவாடிகள்’ எனவும் ச.முகமது அலியின்(’பல்லுயிரியம்’ என தனிநூலையே எழுதியிருப்பதோடு ‘காட்டுயிர்’ என்கிற இதழையும் நடத்தி வருகிறார்) பிரயோகங்களை எடுத்துக் காட்ட தயங்குவதேயில்லை. இச்சொற்களின் பயன்பாட்டை எளிய மக்களின் அன்றாடங்களில் ஒன்றாகப் புழங்கச் செய்வதே சூழலியல் சார்ந்த உரையாடல்கள்  மேல்தட்டு மக்களுக்கே உரியது என்கிற தவறான புரிதலைக் களைய வழிவகுக்கும். அந்த உயர்குடியினரோ சாலைகளை மறிக்கும் மரங்களை வெட்டக்கூடாதென போராடுவதையும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதையுமே கானுயிர் பாதுகாப்பு என நம்புகின்றனர். மரக்கறி உணவை வற்புறுத்தும் வரைக்கும் அதை எடுத்துச் சென்றிருக்கின்றனர். ருக்மணி அருண்டேல் போன்றவர்களால் உண்டாக்கப்பட்ட பிராணிநலன் சங்கத்திற்கும் கானுயிர் வளத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட சாராரின் உணவுப்பழக்கம் மட்டுமே. இக்கட்டுரைக்காக இணையத்தில் குறிப்புகள் ஏதேனும் கிடைக்குமா எனத் தேடிய போது சில ஆங்கிலக் கட்டுரைகளின் இணைப்புகள் கிடைத்தன. எண்ணியது போலவே அவை அசைவ உணவை விட்டொழிக்க சொன்னது மட்டுமல்ல பால் உள்ளிட்ட திரவங்களையும் அப்பட்டியலில் சேர்ந்திருந்தது. பெரிய வணக்கத்தை அளித்து விட்டு அவ்வகையான எழுத்திலிருந்து வெளியேறும் தெளிவை அளித்தவை பாஸ்கரனின் எழுத்துக்களே. பிறகு இணையத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாகவே சூழலியல் சீரழிகின்றது என்பது இவர்கள் கூறும் மற்றொரு பொய். ஆனால் உண்மை நேரடியானதும் நெருக்கமானதுமாகும். இதற்கு மிக முக்கியமான காரணர்கள் நடுத்தர வர்க்கத்தினரே. காடுகளின் அழிவினால் எப்போதுமே பாதிப்பிற்குள்ளாவது ஏழை எளியவர்களும் பின்னணியற்றவர்களும் தான். நீரின்றி காலிக்குடங்களுடன் அலைபவர்கள் வேறு யார்? பெரும் மழைப்பொழிவுக்குப் பிறகும் கோடை காலத்தில் நீரின்றி போவதும் அம்மழை கொண்டு வரும் நீர் நிதானமாக இல்லாமல் ஓட்டமாகச் செல்வதற்கும் மணற்கொள்ளைக்கும் தொடர்பு இருக்கிறது. அள்ளப்பட்ட மணலின் மேல் வெள்ளம் எப்படி நின்று செல்லும்? பாஸ்கரன் பிறந்து வளர்ந்த ஊரின் ஆறான அமராவதி கண் முன்னேயே வறண்டு போனதை இரு கட்டுரைகளில் பேசியிருக்கிறார் பாஸ்கரன். இந்தக் கொள்ளையில் அந்த நதிக்கு என்ன ஆயிற்று என்பதை கரூர் நகரத்தையொட்டிய செட்டிபாளையம் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்த எஸ்.நீலகண்டன் அந்த நூலில் ‘ஆறும் ஊறும்’ என்கிற தனிப்பகுதியையே ஒதுக்கி அமராவதியையும் மணற்கொள்ளையையும் விரிவாக பேசியிருக்கிறார்.

பல்லாண்டுகளாக புழக்கத்திலிருக்கும் சில கற்பிதங்களை இந்நூல் வழி உடைத்திருக்கிறார். தொன்மை காலந்தொட்டே வாழ்ந்து வரும் பல்லி விஷமில்லாதது. சமையல் செய்யும் பாத்திரம், காய்கறிகளின் இலட்சணம் ஆகியவையே வாந்தி பேதி மயக்கத்திற்கு காரணமேயன்றி பல்லிகள் அல்ல என்கிறார் பாஸ்கரன். இதன் மூலமாக பல்லாண்டுகளாகப் புழக்கத்திலிருந்த கற்பிதத்தை உடைத்திருக்கிறார். பல்லிக்கும் பஞ்சாங்கத்துக்கும் இருக்கும் உறவைப் பற்றி ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். ஏதுமில்லை. யாருக்கு நல்ல நேரமோ.?! அவ்வாறு மேலும் சில தோற்றமயக்கங்களை  புனைவுகளை அன்னம் என்கிற பறவை சங்க இலக்கியங்களில் தட்டுப்படுமேயன்றி எந்த நீர்நிலைகளில் காணப்படாது. ஏனெனில் அப்படியொன்று இல்லையாம். Swan தான் அன்னம் என வழங்கப்படுகிறது. அப்பறவையின் மீது ஏற்றிச் சொல்லப்படும் பலவும் புலவர்களின் கற்பனையே. பாம்புக்கடியில் நிச்சயம் உயிரிழப்பு ஏற்படும் என்பதும் மிகையே. எவ்வளவு விஷத்தை உடம்பில் ஏற்ற வேண்டும் என்பதைக் கூட பாம்பு தான் முடிவு செய்யுமாம். பெரும்பாலானவை 10-15% விஷம் மட்டுமே உள்ள பொய்க்கடி என ராமுலஸ் சொல்கிறார். அதனால் தான் மந்திரித்துக் கட்டும் கயிறுகளுக்கும் சடங்குகளுக்கும் உயிர் பிழைக்கும் அதிசயம் நிகழ்கிறது. 

சங்க இலக்கியப் பாடல்களும் குறள்களும் பாரதியின் வரிகளும் ஊடாடி வரும் போது அது தனிச்சுவையைக் கட்டுரைகளுக்கு அளித்து விடுகிறது. ஆவணப்படுத்துதல் போலவே பல இடங்கள் தென்பட்டாலுமே கூட ஆங்காங்கே தென்படும் கவித்துவமும் செறிவானக் காட்சிகளை சொற்களால் எழுப்பிக் காட்டும் திறனும் அக்காட்சிகளின் மீதான ஆவலைத் தூண்டுகின்றன.   சில கூர்மையான நவீன உலகின் உவமை கூற விழைந்ததன் பொருளை மேலும் துலங்கச் செய்கிறது. சில கட்டுரைகள் வாசிக்கும் போது ஏன் தியடோர் பாஸ்கரன் புனைவெழுத்தாளராக மலரவில்லை என்கிற அங்கலாய்ப்பு எழத்தான்  செய்கிறது. குறிப்பாக வாழ்க்கைச் சித்திரத்தை புற உலகின் காட்சிகளையொட்டி எழுதியிருக்கும் ’வீட்டைச் சுற்றிலும் காட்டுயிர்’ என்கிற கட்டுரை. ஆனால் அவர் புனைவாசிரியராக ஆகாமல் போனதற்கானக் காரணமும் இந்நூலிலேயே கண்டு கொள்ளலாம். வெவ்வேறு கட்டுரைகளில் காணப்படும் சில தகவல்கள், புள்ளிவிவரங்கள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்பது அதன் மீதான முக்கியத்துவத்தை உணரவைக்கத்தான் எனினும் ‘கூறியது கூறலாக’ போய்விடுகிறது. இந்நூலை ஒரு அர்த்தத்தில் கானுயிர்களின் மீதான வரலாற்று ஆவணமாகவும் கருத முடியும். ஜிம் கார்பெட் உள்ளிட்ட வேட்டை இலக்கியக்காரர்களின் நூல்களை ‘கதை விடுதல்’ என விமர்சிக்கும் பாஸ்கரன், ‘எனது இந்தியா’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் அதைக் குறிப்பிடாமல் நழுவி விட்டாரோ என்று தோன்றுகிறது. நூலின் பின்னட்டைக்குறிப்பு சொல்வது போல ‘வேட்டை குறைவாகவும் இலக்கியம் அதிகமாகவும்’ உள்ளது காரணமாக இருக்கலாம். அக்குறிப்பு உண்மை தான். யுவனின் மிக நல்ல மொழியாக்கம். தவறவிடக்கூடாத நூல் அது.

ஒவ்வொரு வருடப் பிறப்பையும் காட்டில் கழிப்பதை குடும்ப வழக்கமாகக் கொண்டிருக்கும் பாஸ்கரன் அதன் பொருட்டு இந்தியா மட்டுமல்ல  அயல் தேசங்களிலும்  வேறு கண்டங்களிலும் கானுயிர்களின் மீதான நேசத்தில் சுற்றியிருக்கிறார். தன் அனுபவங்களைப் பின்னணியாகக் கொண்டே கட்டுரைகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பாஸ்கரன் அந்த பயணத்தில் அவர் உண்ட உணவுகளை மறக்காமல் குறிப்பிட்டு விடுகிறார். காசிரங்கா சென்று திரும்பும் வழியில், நைரோபியை அடுத்த ஊரில் இஸ்ரேல் பாலைவனத்தில் (இஸ்ரேல் பற்றி இரு கட்டுரைகள் உள்ளன. இரண்டிலுமே வெவ்வேறு உணவுகள். அதிலொன்றில் செய்முறை விளக்கம் கூட தரப்பட்டிருக்கிறது) பசியாறியதை மறக்காமல் எழுதியிருக்கிறார். கானுயிர்களே முதன்மை நோக்கம் என்றாலும் ஒரு பயண அனுபவத்தில் உணவு இடம்பெறுவதை (பலரும் உணவை பிரதானமாக்கி விடுவார்கள்) முக்கியமானதாகத் தோன்றுகிறது.

வெவ்வேறு இடங்களில் பாஸ்கரன் கண்ட காட்சிகளை அவரது எழுத்தில் சந்திக்கும் போது அங்கு நாம் இல்லாதிருப்பதன் இழப்புணர்வும் அக்காட்சிகள் கிளர்த்தும் எண்ணங்களால் அபாரமான மன உந்துதலும் ஒரே சமயத்தில் ஏற்பட்டதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். உபவிளைவாக ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்..’ என்கிற மீசைக்கவியின் வரியை இனிப்பு மிட்டாய் போல உள்ளம் குதுப்பிக் கொண்டிருந்தையும் உணர்ந்தேன். தன் முன்னோடியான மா. கிருஷ்ணனின் இறப்புச் செய்தியை அறிந்து ஏரியும் பட்சிகளும் பிராணிகளும் நிரம்பிய இடத்திலிருந்து மானசீகமாக அவருக்கு விடை அளிப்பது ஒரு கவித்துவத் துயராக மனதில் பதிகிறது.

பறவை ஆர்வலர்களுக்கு ஒரு பழக்கம் உண்டாம். அதாவது அதுவரை பார்த்திராத ஒன்றை கண்டுவிட்டால் தங்களிடமுள்ள பறவைகள் பட்டியலில் (Life List) அதை Lifer எனக் குறிப்பிடுவார்களாம். தமிழில் இத்தனை விரிவாக சூழலியல், காடு, கானுயிர் அதையொட்டிய பல்வேறு விஷயங்களை பேசியவர் அநேகமாக இல்லை என்று சொல்லிவிடலாம் அல்லது அவர்கள் இப்படி பல புள்ளிகளைத் தொட்டுக் காட்டி எழுதிக் கொண்டு சேர்க்க முனையவில்லை. அவ்வகையில் இந்த மொத்தக் கட்டுரைகளின் தொகுப்பின் முன் Lifer என தயங்காமல் எழுதி வைக்கலாம்.

எளிதில் காணக்கிடைக்காத சில உயிரிகளின் படங்களுடன், பல புள்ளினங்கள், விலங்குகளின் படங்கள் நூலில் இடம்பெற்றிருக்கின்றன. பிழைகளற்ற நேர்த்தியான நூலாக உயிர்மை பதிப்பகம் இந்நூலைச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.

கையிலிருக்கும் பூமி- சு. தியடோர் பாஸ்கரன் – இயற்னை சார்ந்த கட்டுரைகள் – பக். 560.00 விலை ரூ. 600.00 உயிர்மை பதிப்பகம், சென்னை

இந்திய நாயினங்கள் –சு. தியடோர் பாஸ்கரன் – ஒரு வரலாற்றுப் பார்வை – விலை. ரூ.190.00 காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

மொழியாக்கங்கள் :

கானுறை வேங்கை- கே. உல்லாஸ் கரந்த்- தமிழில் : சு. தியடோர் பாஸ்கரன். விலை. ரூ.250.00. காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

யானைகளும் அரசர்களும் – தாமஸ் ஆர்.டிரவுட்மன் – தமிழில் : ப.ஜெகநாதன், சு. தியடோர் பாஸ்கரன். விலை. ரூ.290.00. காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

உதவியவை :

  1. பரிணாமத்தின் பாதை – டேவிட் அட்டன்பரோ – தமிழில் : டோரதி கிருஷ்ணமூர்த்தி – யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை.
  2. ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சலீம் அலி – தமிழில் : நாக. வேணுகோபாலன் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
  3. பறவை உலகம் – சலீம் அலி, லயீக், ஃபதேஹ் அலி – தமிழில் : எம்.வி. இராசேந்திரன் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
  4. மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன் : தொ-ர் – சு. தியடோர் பாஸ்கரன் – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  5. பறவைகளும் வேடந்தாங்கலும் – மா.கிருஷ்ணன் – ப-ர் : பெருமாள்முருகன் – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  6. தமிழிகச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம் – தமிழினி பதிப்பகம், சென்னை
  7. ரூபர்ட் ஷெல்ட்ரேக்கின் சில சிந்தனைகள் – சுந்தர ராமசாமி – மனக்குகை ஓவியங்கள் – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  8. அழியும் பேருயிர் : யானைகள்- ச. முகமது அலி, க.யோகானந்த் – இயற்கை வரலாறு அறக்கட்டளை, பொள்ளாச்சி
  9. எனது இந்தியா –ஜிம் கார்பெட் – தமிழில் : யுவன் சந்திரசேகர் – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  10. யானை காடுகளின் அரசன் – ரமேஷ் பேடி –  தமிழில் – ஓ.ஹென்றி பிரான்சிஸ்- நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
  11. ஒரு நகரமும் ஒரு கிராமமும் – கொங்கு பகுதியில் சமூக மாற்றங்கள்-எஸ். நீலகண்டன் – சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், காலச்சுவடு, நாகர்கோவில்.
கே.என்.செந்தில்

கே.என்.செந்தில் படைப்பிலக்கியத்திலும்,படைப்பிலக்கிய விமர்சனத்திலும் தொடர்ச்சியாக சீராக இயங்கும் படைப்பாளி. கூர்மையான சொல்முறை கொண்ட இவருடைய கதைகள் சிறுகதையின் வடிவம் சார்ந்த எல்லைகளை விரிவாக்குகின்றன

5 Comments

  1. மிகச்சிறப்பான விரிவான கட்டுரை. வனவிலங்கு வாரம் கொண்டாடப்படும் சமயத்தில் இதை வாசிக்கக்கிடைத்தது பெரும் நிறைவை அளிக்கிறது. ஏராளம் புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். அறிவியல் , இயற்கை சார்ந்த பொதுக்கட்டுரைகளை எப்படி எழுதவேண்டும் என்று கேள்விஎழுந்தால் இதை காட்டலாம். Excellent and extraordinary!

  2. நல்ல கட்டுரை. தியோடர் பாஸ்கரன் அவருடைய நூல்களின் விமர்சனக் கட்டுரையாக இல்லாமல் அவருடைய எழுத்திற்கும், ஆய்விற்கும் செலுத்தப்பட்ட மரியாதையாகத்தான் இருக்கிறது. படித்துக்கொண்டு வரும்போது சில இடங்களில் புன்னகை வரும்போது அடுத்த பத்தியிலியே மனம் கனக்க ஒரு வரி வந்துவிடுகிறது. உண்மையான கானுயிர் ஆர்வலர்களை விட்டுவிட்டு அதிகாரிகளும் அமைச்சர்களும் போடும் திட்டங்கள் எப்படி சரியாக இருக்கும். பெரிய கட்டுரையாக இருந்தாலும் படிப்பதற்கு எந்தத் தடையும் இல்லாமல் சரளமாக படிக்க முடிகிறது. வாழ்த்துக்கள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.