/

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது என் நாடு மீதான காதலை நான் துறந்தேன்: ஷெஹான் கருணாதிலக்க

தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

The Seven Moons of Maali Almeida, 2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.

ஷெஹான் கருணாதிலக்கவின் த செவன் மூன்ஸ் ஒவ் மாலி அல்மெய்தா (சர்வதேச ரீதியில் Sort Of Books in August 2022) அதிக பாராட்டுதல்களைப் பெற்ற அறிமுக படைப்பான Chinaman: The Legend of Pradeep Mathew (2011) என்ற நூலின் தொடர்ச்சியாகும். முதலில் இந்த நூல் 2020-ஆம் ஆண்டு   Chats with the  என்ற தலைப்பில் இந்திய உப கண்டத்தில் வெளியிடப்பட்டது. இந்த நாவலானது 1989-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த இருண்டகாலத்தின் நகைச்சுவை கலந்த பேய்க் கதையாக அமைந்திருந்ததுடன் அதில் தீவிரமடையும் இன மோதல்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மத்தியில் அகப்பட்டு பேய்களும் மனிதர்களும் பெரும் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். 

ஒக்டோபர் 17ஆம் திகதி  “மாலி அல்மெய்டாவின் ஏழு நிலவுகள்” நாவல் விருதுக்காக அறிவிக்கப்பட முன்னர் செப்டெம்பர்  6ஆம் திகதி 2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது. இந்த அங்கீகாரம் கிடைத்த சமயத்தில் தான்;  பேரழிவு தரும் பொருளாதார நெருக்கடி நிலையுடன் கூடிய  பல சமூக அரசியல் எழுச்சி நிலை  மத்தியில் இலங்கை மக்கள் கொண்டாடி மகிழ முடியாத பெரும் துன்பநிலைகளை வெளிப்படுத்தும் தலைப்புச் செய்திகளை, இலங்கையானது சர்வதேச அரங்கில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இவ்வுரையாடலின் போது  Chats With The Dead எவ்வாறு  The Seven Moons Of Maali Almeida ஆக  மாறியது என்பது குறித்தும் தனது படைப்பு பற்றியும் விடயங்களை வெளிப்படுத்தினார். இலங்கையில் காணப்படுகின்ற நிரந்தரமான வன்முறைச் சூழலும் நாட்டின் ஸ்தம்பித நிலையும் அவற்றின்  பிரதிபலிப்பும் எப்படி தன்னை ஓர் படைப்பை நோக்கி செலுத்தியது என்பது குறித்தும், நாட்டின் நெருக்கடி மிக்க நிலை மற்றும் எழுச்சிப் பெறும் போராட்டங்களின்  சுமையை  இலக்கிய ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும்  தாங்கிக் கொண்டமை  குறித்தும் இங்கு அவர் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

The Seven Moons of Maali Almeida புத்தகம்  Chats With The Dead  என்ற புதிய பெயரில் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. எவ்வாறு இந்த திருத்தம் நிகழ்ந்தது?

நான் இந்த புத்தகத்தை பல்வேறு பதிப்புகளில் எழுதுவதற்காக நீண்ட காலத்தை செலவழித்தேன். 2015ம் Devil Dance நூல் Gratian விருதுக்கு 2015ல் பட்டியலிடப்பட்டது. அது பின்பு இந்திய உப கண்டத்தில்  Chats With The Dead  மாற்றம் பெற்று வந்தது. இந்நூலுக்கு சர்வதேச வெளியிட்டாளர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு போராட வேண்டியிருந்தது. பெருமளவானவர்கள் இலங்கையின் அரசியல் மிகவும் மர்மமாகவும் குழப்பமானதாகவும் இருப்பதாகக் கூறி அதனைக் கடந்து சென்றனர். சிலரோ வரலாறும். சொற்களின் அமைவும் மேற்கத்தேய வாசகர்களுக்கு புரிந்துகொள்ள கடினமானதாக இருக்கும் என்று கூறினர்.

இறுதியாக Sort of Books அதை வெளியிட ஒப்புக்கொண்டது. ஆனால் அவர்களும் மேற்கத்தேய வாசகர்களுக்கு பரீட்சயமானதாக இருக்க வேண்டும் என்றனர். கிரிக்கெட் பற்றி அறியாத ஒருவர்  புத்தகத்தை வாசித்த பின்பு அதனை அவர் பின்பற்றும் அளவுக்கு அந்நூல் இருக்க வேண்டும் என்று Chinaman ஐ தொகுக்கும் போது எனக்கு கூறப்பட்டு அதுவே என்  நோக்கமாகவும் இருந்தது. இதனால் தான் அதன் அனைத்து துணுக்குகளும் கிரிக்கெட்டின் அடிப்படையை கூறுகின்றன. எனவே  சுருக்கமாகக் கூறுவதானால் இலங்கையைப் பற்றியும் கிழக்கத்தேய வரலாறுகள் பற்றியும்  எதுவும் தெரியாத ஒருவர் இந்த நூலை வாசித்து அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.  

என்ன நடந்தது என்றால், உலகளாவிய பெருந்தொற்று நிலை எங்கள் காலவரையறையை பின்னோக்கி தள்ளிக் கொண்டே சென்றதுடன், நாங்கள் இரண்டு வருடங்களாக அதனை திருத்திக்கொண்டே இருந்தோம். ஆனால் அதே நூல் தான் என்று என்னால் கூற முடியும்.  இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் காரணமாக மிகவும் அணுகக் கூடியதாக மாறியது. ஒரே நூல் இரு வேறுபட்ட தலைப்புகளில் வருவது சற்று குழப்பமானது தான். ஆனால் இறுதியில் The Seven Moons of Maali Almeida தலைப்பினைக் கொண்ட  நூலாக வெளியாகியது.

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற நெருக்கடியான விடயங்கள், புத்தகத்தின் உள்ளடக்கத்தில் காணப்படுகின்ற 1980களின் பிற்பகுதியை  நினைவூட்டும் விதமாக கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இவ் நினைவுகளின் மீட்டலை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்கள்? 

நான் ஓரளவுக்கு கோழையாக இருந்ததே 1989 ஐத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம். இறந்தவர்கள் என்ன பேசுவார்கள் என்ற அடிப்படை ஊகத்துடன் நான் 2009ல் நிகழ்ந்த போரின் முடிவைப் பற்றி எழுத விரும்பினேன். ஆனால் அதில் ஈடுபட எனக்கு தைரியம் இருக்கவில்லை. 1989 எனக்கு “பாதுகாப்பான” காலப்பகுதியாகத் தோன்றியது.  ஏனெனில் அக்காலப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான கதாநாயகர்களும், எதிரிகளும் இறந்துவிட்டனர். நான் எழுதுவதற்கும் நடைபெற்று முடிந்தவைகளுக்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைத்தேன். மோசமான விடயங்கள்  எப்படி நடைபெறலாம் ,அது  எச்சரிக்கைக் கதையாக எவ்வாறு  அமையலாம் என்ற ஆர்வத்தை அது தூண்டும் விதமாக இருக்கும் என்றும் நான் நம்பினேன்.

ஆனால் சமாந்தரங்களை சற்று குறைத்துக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றோம். அத்துடன் நிலைமை மிகவும் வேகமாக  மோசமாகி வருகின்றது. ஆனால் ஆட்கள் காணாமற்போகும், சடலங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் காலகட்டம் இன்னும் வரவில்லை. படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் அருகாமை கட்டத்தில் நாங்கள் இல்லை. அவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்ற போது எனக்கு 14 வயதாக இருக்கும். அப்பொழுது எனக்கு அரசியல் தெரியாது. எனது பெற்றோர்களிலும் உறவினர்களிலும் நான் அச்சத்தைப் பார்த்தேன். அதனால் 1989ல் நாங்கள்   இருக்கின்றோம் என்று நான் கருதவில்லை. ஒப்பீடு பற்றி சிந்திக்க தேவையில்லை என்று நான் நம்புகின்றேன். 

நாட்டின் ஸ்தம்பித நிலை பற்றியும்  அதன் வன்முறையைப் பற்றியும் பேசும் இரண்டு நாவல்களை எழுதிய உங்களுக்கு இப்பொழுது நாடு  பற்றியும், அதன் கடந்த காலம் பற்றியும், அதன் வரலாற்று நகர்வுகள் பற்றியும் ஈடுபாடு உள்ளதா?

நான் தனிப்பட்ட ரீதியில் இன்னும் நாடு பற்றிய ஆழ்ந்த வெறுப்பு உணர்வைக்  கொண்டிருக்கின்றேன். அவ்வாறே சில காலங்களாக தொடர்ந்து இருந்தும் வருகின்றேன். நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும். போர், ஊரடங்கு சட்டம், குண்டு வெடிப்புகள் ஆகியவற்றுடன் தான் எங்கள் தலைமுறை வளர்ந்தது. நாங்கள் கொழும்பில் அடைக்கலம் பெற்றாலும், இந்த சாபமான போரிலிருந்து இந்த நாட்டை விடுவிக்க முடியாது என்பதை நாங்கள் தெரிந்து வைத்திருந்தோம். ஆம், அதேபோல்தான் எமது வாழ்நாளில்  நடந்தது. போர் முடிந்து 12 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், கடந்த காலத்திலிருந்து நாங்கள் பாடங்கள் எதனையும் இன்னும்  கற்றுக் கொள்ளவில்லை. 

சிறுபான்மையினரைத் தூண்டிவிட்டமை, ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடைபெற்றமை எம்மில் பலரை ஏமாற்றமடையச் செய்தன. ஜனநாயக ரீதியில் வாக்களித்து ராஜபக்சவை வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கை மிகுந்த தருணம் ஒன்றிருந்தது. ஆனால் ஒவ்வொரு தலைவர்களும் குழம்பிக்கொண்டிருந்தமையினால் எல்லாம் மாறிப்போனது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது  உண்மையில் என் நாடு மீதான காதலை நான் துறந்தேன். அதற்கு பின்னர் எவ்வாறான நாடகங்கள் நடைபெறும், அதில் யார் பங்குபெறுவார்கள் இனி நாட்டுக்கு என்ன நடக்கும்  என்று என்னால் காண  முடிந்தது. 

நீங்கள் சாதகமான பக்கத்தைப் பார்க்க விரும்பினால், நாவலாசிரியர்கள் கதைகளுக்காக ஏங்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இலங்கையின் ஸ்தம்பித நிலையும் அபத்தமான நிலையும் தொடர்ச்சியாகவே அவர்களின் கதைகளின் கருவாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட ரீதியில் தப்பிக்கும் மனப்பான்மையுடன் நான் இந்த கதைகளை எனது அறையில் இருந்து எழுதுகின்றேன். ஏனெனில் நாட்டுடன் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று நான் உணரவில்லை. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்று நான் நினைக்கவில்லை. இவற்றை எழுதுகின்றோம், அதனை அடுத்த தலைமுறையைச் சேர்ந்த யாராவது ஒருவர் வாசிக்கக் கூடும் என்பது மட்டுமே ஒரே நம்பிக்கையாக உள்ளது.

இலங்கை பற்றிய எடுத்துக்காட்டுக்களை அரகலய போராட்டம் மாற்றி விட்டதாகக் கருதுகின்றீர்களா? சிலவேளைகளில் கடந்த காலத்தின் அழுத்தங்களின் வெடிப்பாகவே மக்கள் பாரியளவில் ஒன்று திரண்டனரா?

பாதுகாப்பான இடைவெளியில்  ஜுலை 9ம் திகதி நான்  அங்கிருந்தேன். நான் ஒரு செயற்பாட்டாளர் அல்ல. அத்துடன் நான் தைரியசாலியும் அல்ல. ஆனால் அதன் பகுதியாக இருந்ததால் அதன் தாக்கங்களைத் தடுக்க முடியவில்லை. அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அங்கு ஏதோ காற்றில் சில நாட்கள் இருந்தது பற்றி தெரியும்.  ஆனால் வரலாறு அந்த இயக்கங்களுக்கு கருணை காட்டும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் எவ்வளவு தான் காதல் கற்பனையை உருவாக்கியிருந்தாலும் அது நல்லவிதமான முடிவை  எட்டவில்லை. நெப்போலியனுக்கு பிரெஞ்சு புரட்சி வழிவிட்டது. எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு அரபு வசந்தம் வழியமைத்தது. அவற்றையெல்லாம் பார்க்கும் போது நம்பிக்கைக் கொள்வதற்கு எனக்கு அச்சமாக இருக்கின்றது. 

தற்போது பல்லைக் கடித்துக் கொண்டு, இருப்பதை வைத்துக்கொண்டு வாழ வேண்டும். அடுத்த தேர்தல் எப்பொழுது வரும் அல்லது அதனை எங்களால் நடத்த முடியுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அனைத்து வாக்காளர்களும் ஒரு அணிக்கு வாக்களிப்பதனை விட தெளிவான திட்டங்கள் மற்றும் கொள்கைகளுடன் கூடிய சில புதிய மாற்றங்களைப் பார்க்க விரும்புகின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். நூற்றாண்டு விழா இயக்கத்தினர் குறித்து நான் மகிழ்வடைந்தேன். பிரச்சினைகளில் ஈடுபட்டு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் இளைஞர்கள் அடங்கிய கட்சியைப் பார்ப்பது  புத்துணர்வை தருகின்றது. தற்சமயம் நாங்கள் அடுக்குகளை மாற்றிக் கொண்டிருக்கின்றோம். பலரிடம் கடன்களைப் பெறுகின்றோம். ஆனால் நீண்ட கால சிந்தனைகள் இல்லை. இது இன்னொரு  தலைமுறையையும் தரைமட்டமாக்கும்  நிலையை நோக்கி அடியெடுத்து வைத்தாலும்  ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 

எந்தளவுக்கு   அரசின்  பிரசாரங்கள் திறமையாக இயங்கின என்ற விடயம் இந்த நூலில் நுட்பமாக வருகின்றது. ஜனதா விமுக்தி பெரமுனவும் விடுதலைப்புலிகளும் வன்முறைகள் நிறைந்த அராஜக சக்திகளாக எவ்வாறு   வடிவமைக்கப்பட்டார்களோ, அது போன்று தற்போது அரகலயவும் வடிவமைக்கப்படுகின்றது. இறுதியில் அரசு வெற்றிப்பெற்றதாக நீங்கள் உணர்ந்துகொள்கின்றீர்கள்.

இந்த நூலில் சூட்சுமமாகக் கூறப்படும் பல  உருவகங்களில் ஒன்று சூதாட்டக்காரர். அவர் எந்த கடவுளையும் நம்பவில்லை. அவர் வாய்ப்புகள் மீது நம்பிக்கை கொள்கின்றார் மற்றும் வாய்ப்புகளைப் பெற விளையாடுகின்றார். ஆனால் சூதாட்டக்காரராக இருந்தாலும் வீடு தான் இறுதியில் வெல்லும் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அவர் இன்னும் திரும்பி வந்து பணத்தை கீழே வைத்துவிட்டு இந்த இரவு தான் சிறந்த இரவு என்று நம்புகின்றார். இங்கு சிலவேளைகளில் சமாந்தரமான ஒற்றுமை இருக்கக் கூடும். அரசு எப்பொழுதும் வெற்றி பெறும். ஆனாலும் நாங்கள் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் அடையப் போவது தனிச்சிறப்புக்குரியதாகவே இருக்கும். 

அரகலயவின் பூதாகரமாக சித்தரிப்பினால் எமது வர்க்கப் பேதங்கள் மிகவும் தெளிவாக ஊடுருவி வெளிவந்தன.  கதாப்பாத்திரத்தின் தொடக்கப்புள்ளியாக The Seven Moons of Maali Almeida இல் சொய்ஸா இருந்தார். அவரின் மரணம் பற்றி இன்றும் பேசப்படுகின்றது. ஏனெனில் அவர் எங்களை சேர்ந்த ஒருவர். அவர் கிராமங்களில் உள்ள சாதாரண சிறு பையன்களைப் போன்றவரோ யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர்களைப் போன்றவரோ  அல்ல. ஆனால் அரசு திடீரென எங்களின் ஒருவரின் பின்னால் தொடர்ந்து வந்தது. அது பற்றி இன்றும் பேசப்படுகின்றது எழுதப்படுகின்றது.  அரசுக்கு இந்த விதி தெரியும் என்று நான் உணர்கின்றேன். அவர்கள் பாதுகாப்பின்றி இருப்பவர்களை பின்தொடர்வார்கள்.   

நீங்கள் சிரித்துவிட்டு கடந்து செல்ல வேண்டும்.  அவ்வாறு இல்லாவிடின் நீங்கள் அழ நேரிடும் என்பது தான் இலங்கையின் கலாசாரமா?

ஒரு சில வழிகளில் இது தான் விடயம் என்று தெரிகின்றது. சமீபத்தில் மிகவும் மோசமாக எரிப்பொருளுக்கான வரிசைகள் இருந்தன. ஆனால் அவை சுவாரஸ்யமான இடங்களாக மாறி இருந்தன. அவர்கள் மிகவும் பதற்றத்துடன், விரக்தியுடன், கோபத்துடன் இருந்தனர். ஆனால் வெளிப்படையாகவே அங்கு சீட்டுக்கட்டு விளையாடும், நகைச்சுவைகளால் சிரிக்க வைக்கும், நட்புக்களை உருவாக்கிக் கொள்ளும் பலரும் இருந்தனர். நானும் இணையத்தினூடாக வட்ஸ்அப்பில் பகிரப்பட்ட அரகலய பற்றிய மீம்ஸ்களையும் நகைச்சுவைகளையும் பார்த்து ரசித்தேன். அவற்றில் சில சிறந்ததாக இருக்கவில்லை. ஆனால் இந்த இக்கட்டான சிந்தனைகளின் மத்தியிலும்  செய்தி சுழற்சியினூடாக மீம்ஸ்களை உருவாக்க முடியும் என்பது ஒப்பீட்டளவில் அண்மைக்காலத்தில் வெளிப்பட்ட தனித்துவமானதொரு விடயம் என்றே கூறலாம். 

இதில் தான் இலங்கையின் புன்னகை இருக்கின்றது. நாங்கள் எல்லாவற்றிற்கும்  புன்னகைப்பது பற்றி நான் அடிக்கடி சந்தேகம் கொள்கின்றேன். ஆனால், சுற்றுலாப் பயணிகளோ நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றும், நாங்கள் மிகவும் நட்பானவர்கள் என்றும் மக்களை நன்கு வரவேற்கும் தேசம் என்றும் தவறாக கருதிக்கொள்கின்றனர். ஆனால் நாங்கள் கோபமாக இருக்கும் போதும் சந்தேகம் கொள்ளும் போதும் புன்னகைக்கின்றோம். இறுக்கமான முகத்தைக் காட்ட எங்களுக்கு விருப்பமில்லை. எங்களுக்கு  நேருக்கு நேரான மோதல் பிடிக்காது. இதனால் நாங்கள் உள்ளே வெறித்தனமாக இருந்தாலும் வெளியில் புன்னகைக்கின்றோம்.

தனிப்பட்ட ரீதியில் கார்ல் முல்லரைப் போன்று நகைச்சுவைக் கொண்ட இலக்கியத்தை பெரிதும் விரும்பி ரசிக்கின்றேன். மற்றும் அதன்பால் ஈர்க்கப்படுகின்றேன். இந்த நாவல்கள் இரண்டினதும் கதை சொல்பவரின் தேர்வும் அதையே வெளிப்படுத்துகின்றது என்று நினைக்கின்றேன். முதலாமவர் ஒரு குடிகார மாமன், மற்றவர் மறைவாகவே இருக்க விரும்பும் ராணி. இவர்கள் இருவரும் நகைச்சுவை உணர்வுக்கும் கெட்ட புத்திக்கும் பெயர் போனவர்கள். ஒருவேளை அது தான் என் உணர்வுமாகும். நான் ஒரு கட்டுரை எழுதும் போதும் தூய ஊடக ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில்லை. கேலி செய்யவோ புத்திசாலித்தனமாக பேசவோ நான் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிப்பேன். அவ்வாறில்லாவிடின் இலங்கை பற்றிய வாசிப்புகள் மிகவும் அச்சமானதாகவே  அமைந்துவிடும்.   

தற்போது உங்கள் திட்டம் என்ன? விரைவில் நீங்கள் தரப்போவது என்ன?

புக்கரின் நீண்ட பட்டியல் காரணமாக  திடீரென முகவர்களும் வெளியீட்டாளர்களும் எனது அழைப்புகளுக்கு பதில் அளிக்கின்றார்கள். Chats With The Dead வெளிவந்த போது பெருந்தொற்று காலம் என்பதால் யாரிடமிருந்தும் எந்தவிதமான அழைப்புகளும் வரவில்லை. 

என்னிடம் சிறுகதைகள் தொகுதி ஒன்று உள்ளது. அது Birth Lottery, உப கண்டத்தில் ஒக்டோபரும் பிற இடங்களில் அடுத்த ஆண்டும் வெளிவரும். நான் மூன்றாவது நாவலை எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனது கணிப்பின்படி அது தொடர்பில் நான் எந்தவிதமான வாக்குறுதியையும் தர விரும்பவில்லை. 800 என்ற முத்தையா முரளிதரனின் திரைப்படம் நீண்ட நாட்களாக தடைப்பட்ட நிலையில் அண்மையில் படமாக்கப்பட்டது. திரைக்கதையை நான் எழுதிய போதிலும் நான் தயாரிப்பு பணிகளில் ஈடுபடவில்லை. அது சிறப்பாக வரும் என்று நம்புகின்றேன்.  அத்துடன் சிறுவர்களுக்கான நூல்கள். அதுவே என் அவசரமான பணி. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு வெளியீடுகளைச் செய்வேன். 

Chinamanக்குப் பிறகு நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், காசோலைகளை எதிர்பார்த்து  நூல்களை எழுதக் கூடாது. ஏனெனில் அது ஒரு போதும் நடைபெறாது. நீங்கள் அடுத்ததை நோக்கி நகர வேண்டும். எப்பொழுதும் எதையாவது செய்துகொண்டே இருங்கள். ஏதாவது ஒன்று வெற்றியளிக்கும். ஆனால் இப்பொழுது நான் எனது பயணத்தை ரசித்து மகிழ்கின்றேன். இந்த பயணம் செப்டெம்பரில் முடிவடைவதற்கான வாய்ப்பு உள்ளது. நான் அதனை பட்டியலிட விரும்பவில்லை. நான் சூதாட்டக்காரனாக மற்றுமொரு ஆறாம் இலக்கத்தை உருட்டிப் பெற்றாலும் பரவாயில்லை. என்னிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உணர்வுடன் இருக்கின்றேன். 

(The Seven Moons of Maali Almeida புக்கர் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட போது இந்த நேர்காணல் முதன் முதல் புரொன்ட்லைனில் வெளியானது)

பிரியதர்ஷினி சிவராஜா

சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.