/

ஆனந்த் குமார் கவிதைகள்

1

பண்டிகைக்கு முந்தைய தினம்
காற்றே இல்லை
*

மாடியில்
சருகுகளை கூட்டி
அள்ளிப் போடுகையில்
கவனித்தேன்
எப்போதும் கையிலிருந்து
அடம்பிடித்துப் பிடுங்கும்
அந்த
காற்று இல்லை

இங்கேயேதான்
எத்தனையோ
பண்டிகை முன்பு
ஏறி வருகையில்
உள்ளம் பதற
மாடி விளிம்பில்
நின்றுகொண்டு
பக்கத்து மரத்தின்
இலைபறித்துக் கொண்டிருந்த
அந்தச் சின்னஞ்சிறு காற்று
இன்று
இல்லவேயில்லை

2

நிறுத்து

குழந்தையின் சிரிப்பு சத்தம்
முதலில் கேட்டது
அம்மாவின் சிரிப்பு
அதன்பின்

பின்பு அம்மா சொன்னாள்
“போதும் போதும்
சிரித்தது போதும்..”

குழந்தை இன்னும் சிரித்தது
அம்மா அதட்டினாள்
“போதும்..
சிரிப்பை நிறுத்து”

குழந்தை தொடர்ந்து சிரித்தது
“ரொம்ப சிரித்தால்
பிறகு அழுவாய்”
அம்மா எச்சரித்தாள்

குழந்தை இப்போது
பெரிதாய் சிரித்தது
“சிரிப்பை நிப்பாட்டுகிறாயா இல்லையா..”
அம்மாவிற்கு கோபம் வெடித்தது

குழந்தையால் சிரிப்பை
நிறுத்த முடியவில்லை
“நிறுத்து முதலில்”
குழந்தையின் உடல்மீது
அம்மாவின் அடி விழும்
சப்தம் கேட்டது

குழந்தை ஒருவழியாய்
அழத்தொடங்கியது

*

3

எந்த பரபரப்பின் இடையிலும்
மின்சாரம் போய்விட்டால்
கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது
தலை போகிற காரியங்களுக்கு
கிடைக்கும் ஓய்வு
தலையைக் காக்கிறது

இருள் கொட்டியதும்
குழந்தைகள் ஏன்
அவ்வளவு உற்சாகமாய்
கூச்சலிடுகிறார்கள்

இருளின் நடுவில்
ஏற்றிவைத்த சுடரோ
நிலைத்தே நிர்பதில்லை
மொத்த வீட்டையும் அதுதான்
உறுதியிழக்கச் செய்கிறது

இருள் போல
இயல்பான அமைதியை
எதுவும் தருவதில்லை

இருள் கொடுக்கும்
நம்பிக்கைக்கு எதிராய்
காரணங்களே இல்லை.

*

4

இருளில்
மலை வரைவது
இன்னும்
ஆழமான இருளை

ஆனந்த் குமார்

கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.