/

சார்ல்ஸ் சிமிக் கவிதைகள்

மொழியாக்கம் –  தீபா

சார்லஸ் சிமிக் அமெரிக்கவை சேர்ந்த புலிட்செர் பரிசு பெற்ற கவிஞர். இருபத்திற்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள், ஏழு கட்டுரை தொகுப்புகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். உலக இலக்கியத்தில், கடந்த ஐம்பது வருடங்களின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். தன் படைப்பாக்கச் செயல் குறித்து சார்லஸ் சிமிக் இப்படி சொல்கிறார். “காகிதத்தில் நீங்கள் வார்த்தைகளை எழுத துவங்கும்போது, தொடர்புப்படுத்தும் செயலொன்று மேலெழுந்து கைப்பற்றுகிறது. அதற்கு பிறகு தீடீரென்று பல்வேறு ஆச்சர்யங்கள் தோன்றுகின்றன. திடீரென்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள். கடவுளே, இது எப்படி என் தலைக்குள் நுழைந்தது? எப்படி இந்த பக்கத்தில் அது வந்தது?’அது என்னை எங்கே அழைத்துச் செல்கிறதோ அங்கே நான் போகிறேன்.”

அர்த்தம்

பட்டு போன மரங்கள் நிரம்பிய பூங்காவில்
அவர்கள் கண்ணாமூச்சி விளையாடிய நாளில்
கண்டுபிடிக்க முடியாமல் போன
சிறுவன் போல, அர்த்தம் ஒளிந்திருக்கிறது

நாங்கள் தோற்றுவிட்டோம்! என்று அவர்கள் கூச்சலிட்டார்கள்.

இருட்டாகிக் கொண்டு வந்தது
சிறுவனை வெளியே கொண்டு வர
அவன் அம்மாவை அழைக்க வேண்டியதாகியது
முதலில் அம்மா மிரட்டி பார்த்தாள்
பின்னர் அவளும் அஞ்சினாள்

நீண்ட நேரத்துக்குப் பிறகு, கடைசியில் ஒரு சுள்ளி முறியும் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்
அவர்கள் முதுகுக்கு பின்னால் அந்த சத்தம் கேட்டது.
அங்கே இருந்தது அது!
குள்ளனொருவனின் கற்சிலை, நீருற்றில் ஒரு தேவதை என.  

O

ஒரு கடிதம்

அன்புள்ள தத்துவவாதிகளே, சிந்திக்கும்போது நான் துயரடைகிறேன்.
உங்களுக்கும் அப்படி நடக்கிறதா?
நான் என் பற்களை, அறியமுடியாத பொருள்நிலைக்குள், ஆழப்பதித்துக் கொண்டிருக்கும்போது
என் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக யாராவது ஒரு பழைய தோழி வந்துவிடுகிறாள்
நான் வானைப் பார்த்துக் கத்துகிறேன் “ஆனால் அவள்தான் உயிருடனே இல்லையே”

குளிர்கால வெளிச்சம் என்னை அந்த வழியில் போக வைத்தது
ஒரே மாதிரியான சாம்பல்நிறப் போர்வைகளால் மூடியிருக்கும் படுக்கைகளை நான் பார்த்தேன்
கடுகடுப்பாய் தோன்றிய ஆண்கள், நிர்வாணமான ஒரு பெண்ணை இறுக பிடித்திருப்பதையும்
அவள் மேல் ரப்பர் குழாயில் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதையும் பார்த்தேன்
அது அவளை தணித்து சமாதானப்படுத்துவதற்காகவா அல்லது தண்டிப்பதற்காகவா?

என் நண்பன் பாப்-ஐ சந்திக்கச் சென்றபோது என்னிடம் சொன்னான்: “உருவங்களின் மயக்கத்தை கடந்தே நாம் உண்மையை எட்ட முடியும்”
முதலில் குதூகலமடைந்தாலும், பின்னரே எனக்குப் புரிந்தது
அத்தகைய உபவாசம் எனக்கு சாத்தியமே கிடையாது
ஏற்கனவே ஜன்னல் வழியே நான் வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருப்பதைக் கவனித்தேன்

பாப்-ன் தந்தை, அவர்களுடைய நாயை நடைக்கு அழைத்துச் சென்றார்
அவர் வலியுடன் நடந்தார்; நாய் அவருக்காய் காத்திருந்தது
பூங்காவில் வேறு யாருமே இல்லை
முடிவில்லாத வடிவங்கள் கொண்ட காய்ந்த மரங்கள் மட்டுமே இருந்தன
சிந்திப்பதை மேலும் சிரமமாக்கியபடி.

O

அணிவகுப்பின் இசை

நம்முடைய வரலாறு அவலமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.
பெரு முரசறையுங்கள், நண்பர்களே!
பேரழிவு காலத்தின் குதிரைவீரர்களே,
உங்கள் குதிரைகளின் வாலைப் பிடித்து இழுப்பதுதான் எவ்வளவு வேடிக்கையாக இருந்தது!
பூமியே நடுநடுங்கியது.

பிரம்மாண்டமான கோபுரங்கள் சரிந்து விழுந்தன.
அரசர்கள் மற்றும் அரசிகளின் பின்புறச் சூடு
இன்னும் விலகாத அரியணைகளின் கோபுரங்கள்,
நம் தத்துவவாதிகள் உட்கார்ந்து யோசித்த
கழிவறை இருக்கைகளின் கோபுரங்கள் கூடத்தான்.

குப்பைக்கூளங்களை முடிவின்மை நோக்கி இழுத்துச் செல்லும்,
குதிரைளும் சாரதிகளும் அணிந்திருந்த
கருப்பு முகமூடிகளை
நாம் வாய்பிளந்து நோக்கினோம்

பெரு முரசறையுங்கள், நண்பர்களே!
நித்தியமான மகிழ்ச்சியின் சதுக்கத்தில்
ஒரு பெண் அலறிக் கொண்டு ஓடினாள்
ரத்தக்கறை படிந்த சட்டையைக் கட்டியணைத்தபடி.

O

வெள்ளை அறை

வெளிப்படையானதே நிரூபிக்க
சிரமமானது. பலரும்
மறைந்திருப்பவற்றை விரும்புகிறார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன்.
நான் செவிகொடுத்திருந்தேன், மரங்களுக்கு.

அவற்றிடம் ஒரு ரகசியம் இருந்தது.
அதை என்னிடம்
வெளிப்படுத்த அவை தயாராய் இருந்தன. பிறகு,
அதை வெளிப்படுத்தவில்லை.

கோடைக்காலம் வந்தது. என் தெருவோரம்
நின்ற ஒவ்வொரு மரமும் தனக்காய்
ஓரு ஷெஹருஸாதை வைத்திருந்தது. என் இரவுகள்
அவர்கள் வனத்தின் ஒரு பகுதியாய் இருந்தன.

கதை-சொல்லுதல்; நாம் நுழைந்து கொண்டிருந்தோம்
இருண்ட வீடுகளுக்குள்.
மேலும் மேலும் இருண்ட வீடுகள் வந்தன.
குரலழிந்தும், கைவிடப்பட்டும்.

கண்களை மூடியவாறு ஒருவர்
மேல் தளங்களில் இருக்கிறார்.
அந்த எண்ணமும் அதன் ஆச்சர்யமும்
என்னைத் தூங்கவிடாமல் செய்கின்றன

எப்போதும் வெள்ளை ஆடை உடுத்தியிருக்கும்
அப்பெண் சொன்னாள்,
உண்மை நிர்தாட்சணயமாகவும் வறண்டும் இருக்கிறது.
அவள் தன் அறையைவிட்டு அதிகம் வெளியே வருவதில்லை.

தம் உருவம் மாறாமல், நீண்ட இரவினை தாக்குபிடித்த
ஓன்றோ இரண்டோ பொருட்களை
சூரியன் சுட்டிக்காட்டுகிறது
அவை மிக மிக எளிமையான பொருட்கள்

தம் வெளிப்படைத்தன்மையால் சிரமமாய் தெரிபவை.
அவை ஓசையே எழுப்புவதில்லை.
“முழுமையானது” என்று சொல்வார்களே
அப்படியான ஒரு நாள் அது.

கருப்பு ஹேர்-பின்களாகவும், கையகலக் கண்ணாடியாகவும்
பல் உடைந்த சீப்பாகவும்
மாறுவேடம் அணிந்திருப்பது கடவுள்கள்தானா?
இல்லை! அது அப்படி அல்ல.

பொருட்கள் வெறுமனே பொருட்களாகவே இருக்கின்றன
மரங்கள் இரவுக்காய் காத்திருக்கும்
பிரகாசமான வெளிச்சத்தில்
அவை மௌனமாய் கிடக்கின்றன, கண்ணிமைக்காமல்.

* ஷெஹருஸாத் (Scheherazade) – ஆயிரம் அரேபிய இரவுகளின் கதைசொல்லி பெண்.
O

முட்டைக்கோஸ்

அவள், தலையை
பாதியாக வெட்டத் தயாராக இருந்தாள்.
ஆனால் நான் அவளை மறுபரிசீலனை செய்ய வைத்தேன்
அவளிடம் சொன்னேன்,
“முட்டை கோஸ், ஒரு மர்மமான காதலைக் குறிக்கிறது”

அல்லது அது போல் வேறேதோவொன்றை அந்த சார்ஸ்ல் ஃபோரியேர் சொல்லியிருக்கிறார்
இப்படி வினோதமும் அற்புதமும் கலந்த பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்
அதனால்தான் மக்கள் அவரை முதுகுக்கு பின்னால் பைத்தியம் என்றழைத்தனர்

அதன்பிறகு, நான் அவள் பின்னங்கழுத்தில் முத்தமிட்டேன்
மிக மென்மையாக.

அதன்பிறகு அவள் முட்டைகோஸை இரண்டாகத் துண்டித்தாள்
தன் கத்தியால் ஒரே வெட்டாக வெட்டி.

O

பாபிலோன்

ஒவ்வொருமுறை நான் பிரார்த்தனை செய்யும்போதும்
இந்த பிரபஞ்சம் பெரிதாகிற்று.
நானோ சிறியதாகிக் கொண்டு வந்தேன்.

என் மனைவி கிட்டத்தட்ட என்னை மிதித்தேவிட்டாள்.
தலைசுற்றும் உயரத்தில்
அவள் கால்கள் வளர்ந்து மேலெழுவதை நான் பார்த்தேன்.
இடையிலிருக்கும் அவள் ரோமம்
கடவுளின் தாடி போல மினுங்கியது.
அவள், பாபிலோனைச் சேர்ந்தவள் போல தோன்றினாள்.

“ஓவ்வொரு நிமிடமும் நான் சிறியதாகி வருகிறேன்” என்று
கத்தினேன். ஆனால் அவளுக்குக் கேட்கவில்லை.
இறக்கை கொண்ட சிங்கங்களுக்கும் ஸிகாரட்டுகளுக்கும் நடுவே,
நிறம் வரைந்த அவள் கண்களால் பைத்தியம் பிடித்த வானியலாளர்கள் மத்தியில்
அவளுக்கு என் குரல் கேட்கவில்லை

* ஸிகாரட்டுகள் (ziggurats) – பண்டைய மெசோபட்டாமியா நகரில் பிரமிட் வடிவில் எழுப்பப்பட்ட கட்டிடங்கள். கோயில் சன்னிதி போன்றது.

O

விண்ணுலகின் கண்காணிப்பாளர்கள்

என் காலடிகளை அவர்கள் கவனத்துடன் எண்ணுகிறார்களா?
காற்புள்ளிகள் பிரித்த பல பூஜ்ஜியங்களினாலான
ஓர் எண்ணிக்கைக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிட்டார்களா?
அருகாமையிலுள்ள நட்சத்திரத்தை நான் ஏற்கனவே வந்தடைந்துவிட்டேனா?

எனக்காக என் முதல் காலடிகளில் ஒன்றை
தயவு செய்து நினைவுகூருங்கள்.
அன்றைய தினம் இஸ்திரியிட்டு உடுத்திய கோட் சூட் எனக்கு வேண்டும்.
அம்மா என் கைகளை இறுகப் பற்றியிருக்க விரும்புகிறேன்.

அந்த திறந்த சவப்பெட்டியில் இருப்பது
என் பாட்டியாக இருக்க வேண்டும். அவள் கைகளில் தோல் தடித்திருந்தது.
நாங்கள் கருப்பு ஷீக்கள் போட்டு நடந்துச் சென்ற தரையை
சுத்தமாய்த் துடைத்து துடைத்து.

அவளை முத்தமிடும் பொருட்டு என்னைத் தூக்கியெடுப்பார்கள் என்று
நான் முன்னால் வைத்த மூன்று குட்டிக் காலடிகள்.
உடனே நான் பின்வாங்கிய, அதே அளவிலான, மூன்று குட்டிக் காலடிகள்.
பின்வாங்கிக் கொண்டேயிருக்கும் எல்லையற்ற வெளியில், அவை, இன்னமும் எதிரொலிக்கின்றனவா?

இந்தச் சாம்பல் நிற அட்லாண்டிக் கரையில்
புரிந்துகொள்ளமுடியாதவாறு உட்கார்ந்திருக்கும் பெரிய நாயால்
இன்னமும் என் புதிய ஷீக்கள் கீச்சிடுவதை
உலகின் இன்னொரு பக்கத்திலிருந்து கேட்கமுடிகிறதா?

O



சோளக்கொல்லை பொம்மை

கடவுள்மறுக்கப்பட்டபோதும் பிசாசு மறுக்கப்படவில்லை.

இந்த வருடத் தக்காளிகளை ஒருவர் நிச்சயம் பார்க்க வேண்டும்.
பற்கள் பதித்து அவற்றை கடி, மார்த்தா,
ஒரு பழுத்த ஆப்பிளை கடிப்பது போல.
ஒவ்வொரு வாய் கடித்த பிறகும் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்.

தக்காளிச்சாறு உன் கன்னம் வழியே வழிந்து
உன் திறந்த மார்புகளை எட்டினால்,
சமையலறை கழுவுதொட்டியில் குனிந்து நின்றுக் கொள்.

உன் கணவனை அங்கிருந்து நீ பார்க்கலாம்
காலி வயலின் திக்கற்ற முடிவில் வந்து நிற்கிறான், அவன்.
தன் முன்னே தன் இருண்ட எண்ணங்களில் ஒன்று
சோளக்கொல்லை பொம்மை என கைகள் விரித்து நிற்பதைக் கண்டவாறு.

O

சார்லஸ் சிமிக்

சார்லஸ் சிமிக் அமெரிக்கவை சேர்ந்த புலிட்செர் பரிசு பெற்ற கவிஞர். இருபத்திற்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள், ஏழு கட்டுரை தொகுப்புகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். உலக இலக்கியத்தில், கடந்த ஐம்பது வருடங்களின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறா

உரையாடலுக்கு

Your email address will not be published.