/

நவபாஷாணாம் – நெடுங்கவிதை – விக்ரமாதித்யன்

“Sin”

“was an escape from emptiness”

குற்றாலநாதருக்கு

ஓயாத மண்டையிடி

சுக்குவென்னீர் குடித்தால்

சொஸ்தப்படுமா

அருவிக்கரையிலிருந்து 

அவன் காலி பண்ணினாலென்ன

தலைவலிக்காரனோடு எப்படித்தான் காலம்

தள்ளுகிறாளோ குழல்வாய்மொழி

ஜயன் வரவுக்காக

அம்மை காத்து நிக்கிறாள்

சமுத்ரக்கரையோரம்  சிவப்புக்கல் மூக்குத்தி மினுங்க

அன்று கண்ட மேனி அழியாது

வெள்ளைத்தாள் கறுப்பு மை

சிவப்பு ரத்தம் மஞ்சள் முகம்

பச்சை மண் நீலமேகம்

பழுப்பு நிறம் சப்தஸ்வரம்

ஏழுகுதிரை பூட்டிய தேரில் வருகிறான்

எங்கள் சூரியதேவன்

எனக்கோ

அட்டவணைப்படுத்தப்பட பொழுதுகள்

சதுர வாழ்கையில்

சலிப்புத்தட்டினால்

“கவிதையென்பது

வார்த்தை விளையாட்டு”

“இந்த 5 – பி பஸ்ஸில் போகிற

எத்தனை பேருக்கு இலக்கியம் தெரியும்”

“இதையெல்லாம் மறந்துவிட்டு

இருக்கலாம் வாருங்கள்”

“வீடு குடும்பம் பிரதானம்

பிறகுதான் எதுவானாலும்”

உலகத்தின்  துக்கத்தை

ஒருவரியில் எழுத முடியுமா

எழுதுவதற்குத்தானே

யோசித்துக் கொண்டிருக்கறேன்

பன்னாடையாறியுமோ

பதநீர் ருசி

O

நான்

சாமி

எப்படி

தெரியுமா

நான்

நெப்போலியன்

எப்போது

புரியுமா

போச்சு

சுடா

சரியாப்

போச்சு

ஆமா… மா

ஆமா… மா

என்ன

ஆமா

ஆ… ங்

ம்… ம்

பச்சைச்செடிகள் வாசம்போல

பெண்ணுடம்பு

பச்சைக் கொடிகள் பின்னல் போல

பெண்மனசு

பச்சைமரங்கள் ஆயுசுபோல

பெண் வாழ்வு

பச்சையோ பச்சைதானே

பெண்

பச்சையைப்பற்றி இன்னமும் எழுத

பைத்யக்காரனா என்ன நான்

கிளிகள் அழகு

கிளிகள் அழகு

கதிர்கள் இழப்பு

கதிர்கள் இழப்பு

கிளிகளை விரட்டு

கிளிகளை விரட்டு

கதிர்களைக் காப்பாற்று

கதிர்களைக் காப்பாற்று

ச்சோ ச்சோ ச்சோ

ச்சோ ச்சோ ச்சோ

தம்பதி சமோதராக வாழ்வது யோகம்

தனிந்து வாழநேர்வது பாவம்

O

இமய

மலை

விந்திய சாத்பூரா

மலைத்தொடர்

மேற்குத்

தொடர்ச்சி மலை

கங்கை

நிதி

காவரி

யாறு

தாம்ரவருணித்

தண்ணீர்

அரபிக்
கடல்

வங்காள

விரிகுடா

இந்துமகா

சமுத்திரம்

செம்மண்

பூமி

கரிசல்

காடு

தீர

வாசகம்

தாய்

நாடு

மக்கள்

தலைவர்

இன

வுணர்வு

மொழிப்

பற்று

ஏக

இந்தியா

ஜனநாயக

சோசலிஸம்

ஆளும்

கட்சி

எதிர்

கட்சி

அடடட

டடடா

எத்தனை

வார்த்தைகள்

எவ்வளவு

ஏமாற்றுகள்

அங்கணக்

குழி

நிலைவாசல்

படி

சத்திரத்துச்

சோறு

சினிமாப்

பாட்டு

மேடைப்

பேச்சு

சமய

புரம்

மேல்

மருவத்தூர்

கொல்

லூர்

திருப்

பதி

திருத்

தணி

காசி

ராமேஸ்வரம்

இன்னும் என்ன வேண்டும்

இந்த சோகைத் தமிழருக்கு

சிங்கத்தை

சுண்டெலிபோல நடத்தாதீர்

தங்கத்தை

தரையில் வீசியெறியாதீர்

ஒரு

குடும்பம்

ஒரு

தேசம்

ஜனங்கள்

பாவம்

திராவிட பாரம்பர்யம்

திசைமாறிய பரிதாபம்

வார்த்தைகளில்

வாழும் ஜாதி

ஓலைக்குடிசைகளில்

வாழும் ஜாதி

ஓலைக்குடிசைகளில்

ஒளியும் காற்றும் தாராளம்

வளர்ந்த பிஹாரி வயிறுபிழைக்க

வருகிறான் கல்கத்தாவுக்கு

ஏழைப்பிள்ளைமார் வீடுகளில்

ஏகமாய் மூட்டைப்பூச்சிகள்

போய்ச் சேர்ந்தான்

புதுமைப்பித்தன்

வந்து நிற்கிறான்

விக்கிரமாதித்யன்

கும்மியடி

கோலாட்டம் போடு

குலவையிடு

குரங்காட்டம் ஆடு

0

கடலோரம் உப்பளம்

காண்பதெல்லாம் தனி வெள்ளை

வெட்டவெளிப் பொட்டலிலே

காயுதடி மிளகாய்ப்பழம்

பாக்குமரங்களைச் சுற்றி

மிகளுக்கொடிகள்

எலுமிச்சைப்பழத்துக்கு எப்படி

இந்த நிறம் வந்தது

இனிப்புக் கொடுத்து

இன்பம் கொண்டாடுகிறார்

பந்தலிலே படருதடி

பாகற்காய்

அறுசுவை

நவரசம்

வகைப்படுத்தி வைத்தபடியே

வாழ்கிறார் மக்கள்

சீட்டுக்

கட்டு

மேள

தாளம்

பன்னீர்

செம்பு

சந்தனப்

பேளா

குத்துவிளக்கு

மஞ்சள்கிழங்கு

ஜெகதலப்

பிரதாபன்

மதன

காமராஜன்

மாங்காய்

மடையன்

தேங்காய்

திருடன்

சொன்னானே சும்மா இரு என்று

சொன்னானே நாதன்

மலை

இருக்கிறது சும்மா

மண்

இருக்கிறது சும்மா

மரம்

இருக்கிறது சும்மா

பேசுகிறாய்

நீ

செய்கிறாய்

நீ

அனுபவி அனுபவி

அழுத்திச் சாகும்வரை

பாப புண்ணியம்

நல்லது கெட்டது

கற்பித்தபடி வாழ்ந்தால்

தப்பிப்பாய்

சித்தம் போக்கு சிவன் போக்கானால்

செத்தாய்

வண்டி

ஓடுது

கப்பல்

போகுது

மைதானத்தில்

விளையாடுகிறார்

குளத்தில்

குளிக்கிறார்

வயலை உழுது

விதையை விதைத்து

உரத்தை வைத்து

கெடுத்த கதைக்கு அழுகிறது உலகம்

எத்தனை பேர் சேர்ந்து

கொன்றார் கர்ணனை

கர்ணனைக் கொன்றது போல

கொள்கிறார் என்னையும்

வீதியென்றால்

தேரோட வேண்டும்

வித்தையென்றால்

தேர்ச்சிகொள்ள வேண்டும்

இலக்கணம் வகுத்து

இழவு சனியன்

பட்டினத்தாரே பட்டினத்தாரே

பற்றுத்தீரே பற்றுத்தீரே

பற்றவைத்தேனே பற்றவைத்தேனே

படுகின்றேனே படுகின்றேனே

சித்தருக்குண்டோ

சிரிப்பும் அழுகையும்

தெம்மாங்கு பாடி

தேசமெங்கும் சுற்றவேண்டும்

தீராமைகளை

தீவைத்துப் பொசுக்கவேண்டும்

அழுதழுது

ஓய்ந்தது ஆவி

தொழுது தொழுது

ஒழிந்தது ஜீவன்

போட்டி

போடும் மனுஷன்

கோட்டி

போடும் மனுஷன்

கோட்டி

கொள்ளும் மனுஷன்

கோட்டி

கொள்ளும் கருவிள்

நிலாச் சோறு

நெய்ச் சோறு

பாலச் சோறு

மோர்ச் சோறு

சோறென்று சொன்னதும்

குழம்பு ஞாபகம் வருவதேன்

இம்மைக்கும் மறுமைக்குமென்

அம்மையே காப்பு

சின்னஞ்சிறுவனை  அபிமன்யுவை

சூழ்ந்து மறித்துக் கொன்றார் சூழ்ச்சியால்

அரவான் களப்பலியானான்

அஸ்வத்தாமன் சிசுக்கொலை செய்தான்

தொடையைப் பிளந்து

துரியோதனைக் கொன்றான் பீமன்

விட்டுவைத்தார்களா பிதாமகர் பீஷ்மரை

விதுரநீதி எடுபட்டதா விகர்ணன் நியாயமும்

யாராளுவதென்பதுதானே சண்டை

நாடாளுமன்ற காலமென்றாலும்

முடிந்ததா பாரதம்

தொடருது துன்பதுன்பமாய்

ஒண்ணும் இல்ல

ஒண்ணும் இல்ல

எல்லாம் இருக்கு

எல்லாம் இருக்கு

என்ன செய்ய

என்ன செய்ய

சாவு சாவு

சுயத்தைக் காப்பாற்றித் தொலை

சாமிக்கு என்ன வேணும்

என்ன வேணும் சாமிக்கு

சாமி சமாதியாகணும்

சமாதியாகணும் சாமி

இன்னுமா

மலையேறல சாமி

கடல்தாண்டிப்

போச்சுங்கிறம்ல

தேவலையா

ஏன் இப்படி

சரியா

போச்சுங்கிறம்ல

அப்ப

இதுக்கு முன்ன தப்பா இருந்துச்சா

அந்த

விசாரணைக் கழுதைல்லாம் இப்ப இதுக்கு

அதனால

ஒண்ணுமில்ல

ங்ம்… சரி சரி சரி

சரி சரி சரி … ம்ங்

எல்லோரும் நல்லவரே எல்லோரும் நல்லவரே

இருப்பு இருந்தால் எல்லோரும் நல்லவரே

மாலிக்காபூர்

செங்கிஸ்கான்

அலெக்ஸாண்டர்

ஜூலியஸ் சீஸர்

நெப்போலியன்

ராபர்ட்கிளைவ்

ஹோகயா ஹோகயா

ஹோகயா ஹோகயா

 O

டாபர்

சிவப்புப் பல்பொடி

மார்கோ

சோப்

கொழும்புத்

தேங்காயெண்ணெய்

குடிகூரா

பவுடர்

வெளுத்த

வேட்டி சட்டை

பசியாறலாம்

தூங்கலாம்

ரஜினி படம்

பார்க்கலாம்

கல்யாண வீடுகளுக்கு

போகலாம்

யோசித்தால்

உருப்படவா

படுவா

ராஸ்கல்

போக்கிரிப்

பயலே

மலர்ந்த முகமே

வாழ்க்கையின் லட்சியம்

காலம் பொன் போன்றது

கடமை கண் போன்றது

எதையும் தாங்கும்

இதயம் வேண்டும்

நானே வழியும் சத்யமும்

ஜீவனுமாய் இருக்கிறேன்

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

உன்மத்தம் கொண்ட ‘ஓரி’

உருக்குலைஞ்சு போச்சு சாரி

என்ன இது இந்த

மனுஷனுக்கு வந்த சோதனை

காசா

லேசா

பெண்ணினல்லாளோடும்

பெருந்தகை இருந்தக்கால்

மண்ணினல் நல்ல வண்ணம்

வாழ அட்டியேது

Supressed sex is the

Curse of the mind

0

அப்புறம்

சப்பரம்

மானாமதுரையில்

மருக்கொழுந்த காணும்டா

வீணா விண்ணானம் பண்ணாதீங்கடா

வெங்கம்பயல்களா

என்னடா ஆச்சு உனக்கு

உனக்கு என்னடா ஆச்சு

மண்ட காஞ்சு போச்சு

மத்ததப் பத்தி என்ன பேச்சு

சும்மா

பேசிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்

தானே

பாடலாம்

தனக்குத்

தானே பேசலாமா

மறை கழன்றுவிட்டது

மாப்பிள்ளை

ஓம் சிவாய நமஹ

ஓம் சிவாய நமஹ

ஓம் சிவாய நமஹ

எல்லாம்

நன்மைக்கே

நல்ல

புடுங்கி தத்துவம்டா மச்சான்

என்ன ஆச்சரியம்

ஏககாலத்தில் உயரமும் சரிவும்

செதுக்கு

செதுக்கு

எதுக்கு

எதுக்கு

கேள்வி கேட்காதே

பதிலே இல்லை

ஆயாசமும்

அன்னக்களையுமா இருக்கு

பாயசத்தோடு

விருந்து இருக்கா

பித்தம் தெளிய

மருந்தொன்று இருக்குதா

வருத்தம் தீர

வழியேதும் உண்டா

எழுதி எழுதி

என்ன கண்டாய் நீ

கொஞ்ச நேரம்

ஓய்வெடுத்துக் கொள்வோமா

சாய்வு

நாற்காலி எங்கே

சப்ர

மஞ்சக் கட்டிலெங்கே

எங்கே எங்கே

சாத்துக்குடிச்சாறு எங்கே

அங்காடி நாய்போல

அலைஞ்சு திரிஞ்சாச்சில்ல

ஆம்பிளை சிங்கம்போல

வாழ வேண்டாமா

ஓசையிலிருந்து

பாஷை

பாஷையிலிருந்து

படைப்பு

வீடு நாடு காடு ஓடு

அடுத்த வரி எப்படி எழுத

கொழுந்து வெற்றிலை

பிஞ்சுக் கத்தரிக்காய்

நனி பிஞ்சு

கனிந்த பழம்

பிக்ஷாடனராகப் புறப்பட்டுவிட்டான் சிவன்

தாருகாவனத்து ரிஷிபத்தினிகள் செருக்கடக்க

நில் கவனி புறப்படு

புறப்பட்டுப் போ

போய் வா

வந்து நில் நின்று பிடி

உன்னோடு

ஒரே தொந்தரவா போச்சுடா

நல்ல வேளை

ஏகப்பட்டது இல்லையே

என்னது

என்ன இது

உத்தரமல்லாம்

சரியாத்தான் இருக்கு

கதவுதான்

நின்னுகிட்டே இருக்கு

உப்புத்தண்ணீரும் நல்லதண்ணீரும் கலந்தால்

என்ன ஆகும்

பசு

பால் தரும்

பால் தருவது

தாயல்லவோ

கோமாதாவை

கும்பிடுவோம்

உயிர்

வளர்ப்பான் சூரியன்

சூரிய நமஸ்காரம்

செய்வோம்

கஷ்டமான கவிதையெழுதுவதை விட்டுவிட்டு

இஷ்டமாகக் கழுதைமேய்க்கப் போகிறேன் இப்போதே

அறுந்து அறுந்து

போகிறது பிரக்ஞைகாலம்

சுமை தாளாது

முறிந்ததென் அச்சு

பால்

விஷமானது போலென் இருப்பு

தலைக்கு வைத்தால்

தலையணை

காலுக்கு

போட்டால்

பழக

அலுத்தால் புதுக

புதுக புதுசுக்கு

எங்கே போக

விட்ட காடிருக்க

விடாத காடு வழியாகப் போய்விடுவேன்

சுடுகாட்டுப் பேயும்

சொந்தம் கொண்டாடும்

சாபத்துக்கும்

விமோசனம் உண்டு

பாபத்துக்கும்

பிராயச்சித்தம் உண்டு

எனக்கு

எதுவுமே இல்லையா

இலைப்பச்சை

கிளிப்பச்சை

ராமர் கலர்

என்பாள் அம்மா

அம்மாவின் குணம்

அப்பாவின் பலவீனம்

இரண்டும் எப்படி

இணைந்தது என்னிடம்

எத்திவிட

யாருக்குத்தான் முடியாது

ஏந்தி வைத்துக்கொள்ளத்தான்

எல்லோராலும் முடியாது.

சூரிய வெளிச்சத்தில்

நடுங்கள் செடிகளை

படரும்படி

பார்த்துக்கொள்ளுங்கள் கொடிகளை

மரங்களை

விட்டு வையுங்கள்

மறப்பது இயல்பு

நினைவு வைத்திருப்பது பிசகு

ஜனங்களைப் பாருங்கள்

எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்கள்

பட்ட பாடு

கெட்ட கேடு

தாலிநூலெல்லாம் விற்றுப்போட்டவள் பிள்ளை

தறுதலையாய் மாறித் திரிவது தகுமோ

இதையா

வாழ்க்கையென்று சொல்கிறீர்கள்

இது ஒரு பானமென்றால்

இவ்வளவு கசப்பான பானம் இல்லவே யில்லை

இது ஒரு நதியென்றால்

இப்படி வறண்ட நதி கிடையவே கிடையாது

சவங்கல் பிழைப்புக்கும்

சல்லிப்பயல் வாழ்க்கைக்குமா

வந்து பிறந்தது

வளர்ந்து ஆளானது

சருகுகளை

சேகரிப்பதற்குள்

குளிர்

விட்டுப் போயிற்று போ

புலப்பத்தில்

கொண்டுபோய் வைத்துவிட்டது

மருந்து

மாயம் (செய்யும்)

அற்புதம் நிகழாமல் போகாது

எப்போதாவது

செம்பருத்திப் பூவேன் இப்படி

சிவந்து பூக்கிறது

மோகம் வளர்க்காமல் இருக்காதா

மல்லிகைப் பூ

கடலின் மனம்

அலைகளில்

இல்லாதவனாய் இருப்பதுதான்

பொல்லாதவனாக்கிற்று இவனை

வெளியில் இரைதேட

வரும் பாம்புக்கு உள்ளெல்லாம் புற்று

புணைந்து தணிந்த

பின்னே கடிக்குமா நல்லபாம்பு

இலக்கியத்தில்

சோதனை செய்கிறவர் மத்தியில்

இவன்

வாழ்க்கையில்

சோதனை எதுவுமே

சோதனைதான்

‘செத்துப் பிழைத்து

செத்துச்செத்துப் பிழைத்து

சிரிப்பாய்

சிரிக்கும்படி ஆனதடி

ஜென்மமெடுத்தது

போதுமடி

சூன்யத்தில்

நிலைகொள்ளுமா நவகிரகங்கள்

“ஞாயிறு திங்கள் செவ்வாய்

புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பிரண்டும்

உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே”

***

(உதகமண்டலம் புவமணிக்கண்ணன் நினைவுக்கு)

(‘கல்குதிரை’ – 4 ,  1989 டிசம்பர் 1990 ஜனவரி, பிப்ரவரி)

விக்ரமாதித்யன் அனுமதியுடன் மீள் பிரசுரம் செய்கிறோம். அவருக்கு நன்றி.

1 Comment

  1. பெரும்பாலான மனிதர்களுக்கான ஓலம்…

    சபாஷ் ஐயா விக்கிரமாதித்தன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.