/

சந்தை தெருவில் ஸ்பினோசா: ஐசக் பாஷேவிஸ் சிங்கர்

தமிழில் டி.ஏ. பாரி

டாக்டர் நஹும் ஃபிட்செல்சன் வார்சாவின் சந்தை தெருவில் அமைந்துள்ள தன்னுடைய சிறிய மாடி அறையில் முன்னும் பின்னும் நடைபோட்டுக் கொண்டிருந்தார். சாம்பல்நிற தாடியுடன் தோற்றமளிக்கும் குள்ளமான சற்றே கூன்விழுந்த மனிதரான டாக்டர் ஃபிட்செல்சனுக்கு பிடரியில் ஆங்காங்கே ஆவலுடன் மிச்சமிருக்கும் கொஞ்சம் முடியைத் தவிர மற்ற இடங்களில் பெரும்பாலும் வழுக்கை விழுந்துவிட்டிருந்தது. அவரது மூக்கு  அலகைப்போல வளைந்தும் கண்களோ ஒரு பெரிய பறவையினுடையது போல பெரிதாகவும் கருமையுடனும் படபடத்தன. அதுவொரு வெக்கையான கோடைக்கால மாலையாக இருந்தபோதிலும் டாகடர் ஃபிட்செல்சன் முட்டிவரை நீளும் கருப்பு கோட்டும் விரைப்பான கழுத்துப்பட்டையும் அதன் மீது வில்வடிவ முடிச்சு கொண்ட ஒரு டையும் (bow tie) அணிந்திருந்தார். கதவிலிருந்து மெதுவாக நடந்து சாய்கூரையின் அடியில் அமைந்த உயரமான ஜன்னலுக்கும் அங்கிருந்து மீண்டும் கதவுக்கும் நடந்தார். ஒருவர் வெளியே பார்க்க ஒன்றின்மேல் ஒன்றாக பல அடிகள் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. அங்கு ஒரு பித்தளை பிடிப்பானில் வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியின் தழலைச் சுற்றி பல்வேறு பூச்சிகள் மொய்த்து கொண்டிருந்தன. அவ்வப்போது ஏதேனும் ஒரு பூச்சி நெருப்புக்கு மிக அருகே சென்று தன் ரக்கைகளை எரித்துக் கொண்டுவிடும் அல்லது மேலும் இன்னொன்றோ முழுதாக பற்றிக்கொண்டு ஒருகணம் திரியில் சுடர்விட்டு எரிந்து மறையும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் டாக்டர் ஃபிட்செல்சனின் முகம் சுளித்தது. சுருக்கம் விழுந்த அவரது முகம் இழுத்துக் கொள்ள, தனது திருத்தப்படாத மீசைக்கடியில் உதட்டை கடித்துக் கொண்டார். இறுதியாக பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து பூச்சிகளை நோக்கி வீசினார்.

“அங்கிருந்து விலகி செல்லுங்கள், அடிமுட்டாள்களே” அவர் வசைபாடினார். “இங்கு உங்களை சூடேற்றிக் கொள்ள முடியாது, உங்களை நீங்களே எரித்துக் கொள்ள மட்டுமே செய்வீர்கள்.”

பூச்சிகள் கலைந்து சென்றாலும் அடுத்த நொடியே மீண்டு வந்து நடுங்கும் தழலைச் சுற்றி வட்டமிட்டன. டாக்டர் ஃபிட்செல்சன் சுருக்கம் விழுந்த தனது நெற்றியின் வியர்வையை துடைத்துவிட்டு பெருமூச்சுடன் சொன்னார், “மனிதர்களைப் போலவே அவையும் அந்தந்த தருணத்தின் இன்பத்தைத் தவிர வேறெதையும் கருதுவதில்லை.” மேசையில் லத்தீனில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் திறந்து கிடந்தது. அகலமான ஓரக்கோடுகள் கொண்ட அதன் பக்கங்களில் டாகடர் ஃபிட்செல்சனின் குறிப்புகளும் விளக்கங்களும் சிறிய எழுத்துகளில் இடம்பெற்றிருந்தன. ஸ்பினோசாவின் ‘அறவியல்’ எனும் அந்த புத்தகத்தை டாக்டர் ஃபிட்செல்சன் கடந்த முப்பது வருடங்களாக பயின்று வருகிறார். அவருக்கு அதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு கருத்தும் அதன் ஆதாரமும் துணை முடிவுகளும் அதுபற்றிய குறிப்புகளும் என அனைத்தும் மனப்பாடகத் தெரியும். ஒரு குறிப்பிட்ட பத்தியை தேட முற்படும் போதெல்லாம் அவரால் அப்பகுதியை பெரிய முயற்சி ஏதுமில்லாமல் நேரடியாகவே எடுத்துப் பார்க்க முடிந்தது. ஆனால் எப்படியிருந்தாலும் அவர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மணிக்கணக்காக தன் மெலிந்த கரங்களில் ஒரு பூதக்கண்ணாடியுடன் வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டும் ஆமோதித்துக் கொண்டும் அறவியலை படித்தார். உண்மை என்னவெனில் டாக்டர் ஃபிட்செல்சன் எவ்வளவு தூரம் அப்புத்தகத்தை பயின்றாரோ அவ்வளவு தூரம் அவருக்கு அதில் குழப்பமான வாக்கியங்களும் தெளிவற்ற பத்திகளும் புலனாகாத குறிப்புகளும் தென்பட்டன. ஒவ்வொரு வாக்கியத்திலும் இதுவரை ஸ்பினோசாவின் எந்த மாணவராலும் கண்டெடுக்கப்படாத புதிய அர்த்த சாத்தியங்களை கொண்டிருந்தன. காண்ட்-உம் (Kant) அவரது சீடர்களும் தூய அறிவின் தரப்பில் முன்வைத்த அனைத்து விமர்சனங்களையும் அந்த தத்துவவாதி முன்னரே யூகித்திருப்பதாகப் பட்டது. டாக்டர் ஃபிட்செல்சன் அறவியல் நூலுக்கு ஒரு உரை எழுதிக் கொண்டிருந்தார். அவரது மேசை இழுப்பறைகள் முழுக்க வரைவுகளாலும் குறிப்புகளாலும் நிறைந்திருந்தாலும் அவரால் எப்போதுமே அந்த வேலையை முடிக்க இயலும் எனத் தோன்றவில்லை. வருடக்கணக்காக அவரை பீடித்திருந்த வயிற்று வலியோ நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அவருக்கு இரண்டு வாய் ஓட்ஸ் கஞ்சி எடுத்துக் கொண்டாலே வயிற்று வலி வர தொடங்கிவிட்டிருந்தது. ”சொர்க்கத்தில் இருக்கும் கடவுளே, இது கடினம், மிகமிகக் கடினம்,” தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவரது குரல் மறைந்த அவரது தந்தையான ரப்பி திஷேவிட்ஸைப் போலவே ஒலிக்கும். “இது ரொம்பவும் கஷ்டம்”

இறப்பு குறித்து டாக்டர் ஃபிட்செல்சனுக்கு அச்சமில்லை. முதலாவதாக அவர் தன் இளமையை முழுமையாகவே கடந்துவிட்டிருந்தார். இரண்டாவதாக அறவியலின் நான்காவது பாகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, “ஒரு சுதந்திர மனிதன் இறப்பு குறித்து சற்றும் குறைவாக எண்ணுவதில்லை மேலும் அவனுடைய ஞானமானது வாழ்வை தியானிப்பதால் அடைவதேயன்றி இறப்பை அல்ல.” மூன்றாவதாக சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் “மனித மனம் மனித உடலோடு சேர்த்து முழுவதுமாக அழிந்துவிடுவதில்லை, அதன் சில பகுதிகள் எப்போதைக்குமாக எஞ்சியிருக்கும்.” இருப்பினும் டாக்டர் ஃபிட்செல்சனின் வயிற்றுப்புண் (அல்லது அது புற்றுநோயாக இருக்கலாம்) அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தது. அவருடைய நாக்கு எப்போதும் உலர்ந்துபோய் வெளுத்திருந்தது. அடிக்கடி ஏப்பம் விட்டார், அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான நாற்றத்துடன் இருந்தது. நெஞ்செரிச்சலும் தசைப்பிடிப்புகளும் அவரை துன்புறுத்தின. சில சமயம் வாந்தி வருவது போன்றும் சில சமயம் பூண்டு, வெங்காயம் மற்றும் பொரித்த உணவுகளுக்கான பசியையும் அவர் உணர்ந்தார். உணவுக்குப் பின் கொஞ்சம் துருவிய கேரட் எடுத்துக் கொள்வது அவருக்கு உதவியது. பின்னர் படுக்கையில் ஒருபக்கம் தலையை தொங்கவிட்டபடி வயிறு அழுந்தும் வகையில் குப்புற படுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த வீட்டு வைத்தியங்கள் எல்லாம் அவருக்கு தற்காலிக நிவாரணத்தையே அளித்தன. அவர் ஆலோசித்த சில மருத்துவர்களும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே தெரிவித்தனர். ”அவை வெறும் நரம்பு பிரச்சனைகள், நீங்கள் நூறு வயதுவரை வாழலாம்.” என்றனர்.

ஆனால் இந்தக் குறிப்பிட்ட கோடைக்கால இரவில் டாக்டர் ஃபிட்செல்சன் தன்னுடைய பலம் குறைந்து வருவதை நிச்சயமாக உணர்ந்தார். அவரது முழங்கால் நடுக்கத்துடனும் நாடித்துடிப்பு பலவீனமாகவும் இருந்தது. வாசிப்பதற்கு அமர்ந்த போது அவரது பார்வை மங்கி எழுத்துருக்கள் பச்சையிலிருந்து பொன்னிறத்துக்கு மாறின. வரிகள் அலைவுற்று ஒன்றின் மீது ஒன்று புகுந்து இடம்மாறி மர்மமான முறையில் அங்குள்ள பிரதி மறைந்துவிட்டது போல வரிகளுக்கிடையே வெற்றிடம் உருவானது. தகரக் கொட்டகையில் இருந்து நேரடியாக கீழிறங்கும் வெப்பம் தாளமுடியாததாக இருந்தது. டாக்டர் ஃபிட்செல்சன் ஒரு கணப்பு அடுப்புக்குள் இருப்பதை போல உணர்ந்தார். பலமுறை அவர் ஜன்னலுக்கான நான்கு படிகள் மீதேறி தலையை வெளியே நீட்டி மாலைத் தென்றலின் சுகந்தத்தை உள்வாங்கினார். தன் மூட்டுகளில் நடுக்கத்தை உணரும் வரை அந்நிலையிலேயே நிற்பார். ”ஓ என்னவொரு இனிமையான தென்றல்” என்றோ “உண்மையில் மகிழ்ச்சிகரமானது” என்றோ தனக்குள் சொல்லிக்கொண்டு கொண்டு ஸ்பினோசா கூறியதை நினைவுகூர்வார். ஸ்பினோசாவை பொருத்தவரை அறமென்பதும் மகிழ்ச்சிகரமானதும் ஒன்றே, ஒரு மனிதன் செய்யக்கூடிய ஆகச்சிறந்த அறச்செயல் என்பது அறிவுக்கு முரணாகாத வகையில் ஏதேனும் மகிழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதே.

(2)

ஜன்னலுக்கு அருகே இருக்கும் உச்சிப்படியில் நின்று கொண்டு வெளியே பார்க்கும் டாக்டர் ஃபிட்செல்சனால் இரண்டு உலகங்களை காண முடிந்தது. அவருக்கு மேலே சுவர்க்கம் போன்ற வான்வெளியில் அடர்த்தியாக விண்மீன்கள் பரவியிருந்தன. டாக்டர் ஃபிட்செல்சன் ஒருபோதும் முழுக்கவனத்துடன் வானியலை கற்றவர் அல்ல ஆனால் அவரால் பூமியைப் போன்ற கோள்களையும் சூரியனைப் போல தூரத்தில் நிலைகொண்டு நூறு அல்லது ஆயிரம் வருடங்கள் கழித்து ஒளி நம்மை வந்தடையும் விண்மீன்களையும் பிரித்தறிய முடியும். வான்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையை குறிக்கும் விண்மீன் குழுக்களை அவர் அடையாளம் கண்டுகொண்டார். டாக்டர் ஃபிட்செல்சனிடம் அவர் சுவிட்சர்லாந்தில் படிப்பை மேற்கொள்ளும்போது வாங்கிய சிறிய ரக தொலைநோக்கி ஒன்று இருந்தது, குறிப்பாக அதன்வழி நிலவைக் காண்பெதன்பது அவருக்கு பிடித்தமான செயல். அவரால் நிலவின் பரப்பில் சூரிய ஒளியில் ஒளிவிடும் எரிமலைகளையும் நிழல்படிந்த இருண்ட பள்ளத்தாக்குகளையும் தெளிவாக காண முடிந்தது. அதன் விரிசல்களையும் பனிப்பாறை பிளவுகளையும் பார்த்துக் கொண்டிருப்பதில் அவர் சலிப்புற்றதே இல்லை. அவருக்கு அவை ஒரே சமயம் அருகில் இருப்பது போலவும் தொலைவில் இருப்பது போலவும் முக்கியமானவையாகவும் முக்கியமற்றவையாகவும் பட்டன. அவ்வப்போது ஒரு எரிநட்சத்திரம் வான்வெளியின் இடையே அகன்ற வில்லின் பாதையில் பயணித்து தன் பயணச்சுவட்டை எஞ்சவிட்டு மின்னி மறையும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஏதேனும் விண்கல் ஒன்று நம் வளி மண்டலத்தை அடைந்திருப்பதை டாக்டர் ஃபிட்செல்சன் அறிந்து கொள்வார், ஒருவேளை முழுக்க எரிந்து சாம்பலாகாத அதன் சிறிய பகுதிகள் பெருங்கடலிலோ பாலைவனத்திலோ அல்லது மனிதவாசமே இல்லாத ஏதேனும் பகுதியிலோ விழுந்திருக்கலாம். டாக்டர் ஃபிட்செல்சனின் கூரையின் பின்பக்கத்தில் தோன்றி காட்சியளித்து வந்த விண்மீன்கள் மெதுவாக கூரைக்கு நேர்மேலே உயர்ந்து வீதியின் நடுப்பகுதியில் அமைந்துள்ள அவ்வீட்டின்மேல் மின்னிக் கொண்டிருந்தன. ஆம் டாக்டர் ஃபிட்செல்சன் மேல்நோக்கி சுவர்க்கம் போன்ற வான்வெளியைப் பார்த்தபோது அதன் எல்லையில்லாத விரிவை உணர்ந்தார், ஸ்பினோசாவை பொருத்தவரை அத்தகைய விரிவென்பது கடவுளின் தன்மைகளில் ஒன்று. தான் ஒரு பலவீனமான அற்ப மனிதனாக இருந்தாலும் தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே இருக்கும் இந்த எல்லையில்லா பருப்பொருளின் ஒரு மாற்றநிலையே என்றும், எப்படியிருந்தாலும் பிரபஞ்சத்தின் சிறுபகுதியென்றும், விண்ணுலக இருப்புகளின் அதே பருப்பொட்களால் உருவானவன் என்றும் எண்ணிக் கொள்வது டாக்டர் ஃபிட்செல்சனுக்கு உற்சாகமாக இருந்தது. எந்த அளவுக்கு இறைவடிவின் பகுதியாக அவர் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவரை அழிக்க முடியாது என்பதை அவர் அறிவார். டாக்டர் ஃபிட்செல்சன் அம்மாதிரி சந்தர்ப்பங்களில் Amor dei Intellecctualis எனும் நிலையை அடைந்தார், தத்துவவாதி ஆம்ஸ்டெர்டாமை பொருத்தவரை அதுவே மனிதமனம் அடையக்கூடிய உச்சபட்ச உன்னத நிலை. டாக்டர் ஃபிட்செல்சன் ஆழமாக மூச்சிழுத்து தன் இறுக்கமான கழுத்துப்பட்டை அனுமதித்த வரை தலையை உயர்த்தியபோது இந்த பூமியடனும் சூரியனுடனும் பால்வெளியின் விண்மீன்களுடனும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட தொலைதூர விண்மீன் மண்டலங்களுடன் இணைந்து தானும் சுழல்வதாக உணர்ந்தார். அவரது கால்கள் எடையிழந்து லேசானதும் பாதங்கள் தரையின் பிடிப்பிலிருந்து நழுவி எல்லையின்மைக்குள் பறந்து விடுவோமோ என பயந்தது போல இரு கைகளாலும் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டார்.

டாக்டர் ஃபிட்செல்சன் வானத்தை நோக்குவதில் சலிப்புற்றதும் அவரது பார்வை கீழே இருக்கும் சந்தைத் தெருவின் மீது விழுந்தது. யானாஷ் சந்தையிலிருந்து இரும்பு வீதி வரை நீளும் எரிவாயு விளக்குகளின்  ஒளிப்புள்ளிகளாலான வரிசையை அவரால் காண முடிந்தது. கரிய தகரக்கூரைகளின் மேலே இருக்கும் புகைபோக்கிகளிலிருந்து மெல்லிய புகை வெளியேறியது. அடுமனையாளர்கள் தங்கள் அடுப்பை சூடேற்றுகையில் ஆங்காங்கே கரும்புகையினூடே தீப்பொறிகள் தோன்றின. ஒரு கோடைக்கால மாலையைப் போல அந்தத் தெருவானது வேறெப்போதும் கூட்டநெரிசலுடனும் இரைச்சலுடனும் இருப்பதில்லை. திருடர்கள், விபச்சாரிகள், சூதாடிகள் மற்றும் சோம்பேறிகளால் வேலியிடப்பட்ட சதுக்கத்தை மேலிருந்து பார்க்கையில் எவ்வித வடிவ ஒழுங்கிற்குள்ளும் வராத சிக்கலான முடிச்சுகள் போல காட்சியளித்தது. ஓர் இளைஞன் ஆபாசமாக சிரிக்க பெண்கள் கீச்சுக்குரலில் கூச்சலிட்டனர். சிறு பீப்பாயில் எழுமிச்சை பானத்தை கூவி விற்றுக் கொண்டிருந்த வியாபாரியின் குரல் அவ்வப்போது பொதுவான இரைச்சலின் ஊடே இடைவெட்டி ஒலித்தது. ஒரு தர்பூசணி வியாபாரி முரட்டுத்தனமான குரலில் கத்த அவர் பழத்தை வெட்ட பயன்படுத்தும் நீளமான கத்தியிலிருந்து இரத்தம் போன்ற சாறு வடிந்தது. சிறிய இடைவெளிகளில் தெரு மீண்டும் மீண்டும் மேலும் கிளர்ச்சியடைந்து அமைந்தது. தறிகெட்டு ஓடாமலிருக்கும் பொருட்டு இறுக பிணைக்கப்பட்ட கட்டுறுதிவாய்ந்த கறுப்பு குதிரைகளால் இழுத்து செல்லப்பட்ட தீயணைப்பு வண்டிகள் அதன் கணமான சக்கரங்கள் தடதடக்க விரைந்து சென்றன. அதன் பிறகு சைரன் ஒலியின் அலறலுடன் ஓர் அவசரஊர்தி வந்தது. பின்னர் அங்கிருந்த ரவுடிகள் சிலர் தங்களுக்குள் சண்டையிட்டதால் போலீஸை அழைக்க வேண்டியிருந்தது. ஒரு கொள்ளையடிக்கப்பட்ட வழிபோக்கன்  உதவிக்காக கூவிக்கொண்டே ஓடினான். விறகுகள் ஏற்றப்பட்ட சில சுமைவண்டிகள் அடுமனைகள் இருக்கும் பகுதியின் முற்றங்களுக்கு வரவேண்டியிருந்தது, ஆனால் குதிரைகளால் உயரமான தடைகளின் மேல் வண்டியை இழுக்க முடியாததால் ஓட்டுனர்கள் அவற்றை ஆபாசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே தங்களின் சாட்டைகளால் விலாசினர். தடதடக்கும் குளம்புகளில் தீப்பொறி கிளம்பியது. ஏழு மணியைக் கடந்து வெகுநேரம் ஆகிவிட்ட இந்நேரமானது கடைகளை அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நேரமாகும், இருப்பினும் உண்மையில் வியாபாரமே அப்போதுதான் துவங்கியிருந்தது. வாடிக்கையாளர்கள் பின்வாசல் வழியாக திருட்டுத்தனமாக அனுமதிக்கப்பட்டனர். தெருவில் இருக்கும் ரஷ்ய போலீஸ்காரர்களோ ஏற்கனவே லஞ்சம் பெற்றுக்கொண்டு இதை கண்டும் காணாமல் இருந்தனர். வியாபாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் பொருட்களை விற்கும் முனைப்பில் அடுத்தவரை விஞ்சும் வகையில் கூவிக்கொண்டிருந்தனர்.

”தங்கம், தங்கம், தங்கம்,” அழுகிய ஆரஞ்சுகளை வணிகம் செய்த ஒரு பெண்மணி கிரீச்சிட்டாள்.

”சக்கரை, சக்கரை, சக்கரை,” கரகரப்பான குரலில் கத்திய வியாபாரியின் பிளம்ஸ் பழங்கள் தேவைக்கதிகமாக பழுத்துவிட்டிருந்தது.

”தலை, தலை, தலை,” மீன்களின் தலையை விற்கும் பையன் ஒருவன் உறுமினான்.

டாக்டர் ஃபிட்செல்சன் மேலிருந்து பார்க்கும்போது வீதியின் இடையே மாடியில் இருக்கும் ஹசிடிக் (ஒரு யூதப்பிரிவு) படிப்பு கூடத்தின் ஜன்னல்களின் வழியே நீண்ட ஓரக்குடுமி வைத்திருக்கும் பையன்கள் முன்னும் பின்னும் ஆடியபடி புனித மறைகளை உரத்த குரலில் பாட்டு போன்ற மெட்டில் ஓதிக் கொண்டிருப்பதும் ஒருவரையொருவர் பழிப்பு காட்டுவதும் தெரிந்தது. கீழே இருக்கும் சத்திரத்தில் கசாப்புக்காரர்களும் சுமைதூக்குபவர்களும் பழ வியாபாரிகளும் பியர் அருந்திக் கொண்டிருந்தனர். பின்னனியில் சத்தமான இசை ஒலிக்க குளியலறையிலிருந்து நீராவி வெளியேறுவது போல சத்திரத்தின் திறந்த கதவுகளின் வழியே ஆவி மேலெழுந்தது. சத்திரத்திற்கு வெளியே பிக்பாக்கெட்காரர்கள் போதையிலிருக்கும் காவலாளிகளிடமும் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு திரும்பும் தொழிலாளிகளிடமும் தங்கள் கைவரிசையை காட்டினர். ஆண்கள் சிலர் தோள்களில் விறகுக் கட்டுகளை சுமந்து செல்வதை கண்டதும் டாக்டர் ஃபிட்செல்சனுக்கு நரகத்தில் தங்கள் சிதைக்கு தாங்களே நெருப்புமூட்டும் கட்டாயத்துக்கு ஆளான சபிக்கப்பட்டவர்கள் குறித்து நினைவுக்கு வந்தது. திறந்த சாளரங்களின் வழியே தடிமனான ரெக்கார்ட் பிளேயர்கள் அதன் கோரமான இசையை பொழிந்தன. கிறித்தவ இறைப்பாடல்களும் ஆபாசமான நாட்டார் பாடல்களும் மாறி மாறி ஒலித்தன.

டாக்டர் ஃபிட்செல்சன் இந்த கூச்சல்களை மெலிதாக எட்டிப்பார்த்துவிட்டு காதைப்பொத்திக் கொண்டார். எவ்வித ஒழுங்குமற்ற மனிதகும்பலின் இத்தகைய நடத்தையே அறிவுக்கெதிரான முதன்மை எதிரி என்பதை அவர் அறிவார். இந்த மக்கள்திரள் இருப்பதிலேயே அற்பமான இன்பங்களில் திளைத்துக்கொண்டும் குடித்துவிட்டு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டும் இருக்கின்றனர், மேலும் ஸ்பினோசாவை பொருத்தவரை உணர்ச்சிப்பெருக்கு எப்போதுமே நல்லதல்ல. அவர்கள் தேடி ஓடிய இன்பங்களுக்கு மாற்றாக இறுதியில் அவர்கள் அடைந்ததென்னவோ நோயும், சிறையும், அறியாமையால் உருவாகும் அவமானங்களும் துன்பங்களும்தான். இங்குள்ள கூரைகளில் சுற்றித்தெரியும் பூனைகளும்கூட நகரின் பிற பகுதிகளிலிருக்கும் பூனைகளைக் காட்டிலும் கொடூரமாகவும் அதிக ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்வதாகப் பட்டது. ஈற்றரைப் பெண்களின் குரலில் ஊளையிடும் அவை பிசாசுகளைப் போல திருட்டுத்தனமாக சுவர்களில் ஏறி கூரைகளின் அடிப்பகுதிகளிலும் மாடியின் முற்றங்களிலும் நுழைந்தன. அதிலொரு ஆண் பூனை டாக்டர் ஃபிட்செல்சனின் ஜன்னலில் நின்று ஊளையிட்டதில் அவர் திடுக்கிட்டு நடுங்கிவிட்டார். டாக்டர் ஜன்னலிலிருந்து கீழிறங்கி ஒரு துடைப்பதை கையிலெடுத்து கருணையற்ற அந்த விலங்கின் மின்னும் பச்சைக் கண்களின் முன்னே ஆட்டினார். “வெளியே போ, அறிவுகெட்ட காட்டுமிராண்டியே!” என கூச்சலிட்டு அந்த பூனை வெளியே ஓடிமறையும் வரை துடைப்பத்தின் கைப்பிடியால் கூரையை தட்டியபடி இருந்தார்.

(3)

டாக்டர் ஃபிட்செல்சன் தத்துவம் பயின்றுவிட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நக்ரிலிருந்து வார்சாவுக்கு திரும்பிய போது அவருக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டது. அவர் ஸ்பினோசாவை பற்றி முக்கியமான ஒரு புத்தகத்தை எழுதி வருவதை நண்பர்கள் அறிந்திருந்தனர். போலந்து மொழியில் இயங்கிவரும் ஒரு யூத இதழ் அவரை பங்களிப்பாற்ற அழைத்திருந்தது. பல பணக்கார வீடுகளுக்கு அடிக்கடி சென்றுவரும் விருந்தினராகவும் வார்சாவின் யூத ஜெப ஆலயத்தின் தலைமை நூலகராகவும் அவர் இருந்தார். அப்போதே அவர் கொஞ்சம் வயதாகிவிட்ட இளைஞராக இருந்தாலும் திருமண பொருத்தம் பார்ப்பவர்கள் அவருக்கு பல பணக்கார பெண்களை பரிந்துரைத்தனர். ஆனால் டாக்டர் ஃபிட்செல்சன் அம்மாதிரி சந்தர்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஸ்பினோசாவை போல தானும் யாரையும் சாராமல் தனித்திருக்கவே அவர் விரும்பினார். அவ்வாறே இருந்தும் வந்தார். ஆனால் ஆசாரங்களுக்கெதிரான அவருடைய சிந்தனைகளால் அவருக்கும் ரப்பிக்குமிடையே (யூத மதகுரு) முரண்பாடு ஏற்பட்டதால் நூலகர் பதவியிலிருந்து அவர் விலக நேர்ந்தது. அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு ஹீப்ரு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்கான தனி வகுப்புகள் எடுத்தே அவர் தம் செலவினங்களை சமாளித்து வந்தார். பின்னர் அவர் நோயுற்ற போது பெர்லின் யூத சங்கம் அவருக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு ஐநூறு பணம் வழங்க வாக்களித்தது. இதுவும் அவருடன் தத்துவம் பயின்ற பிரபலமான டாக்டர் ஹில்டெசைமரின் தலையீட்டால் மட்டுமே சாத்தியமானது. அவ்வளவு சிறிய தொகையில் வாழ்க்கை நடத்தவேண்டி இருந்ததால் டாக்டர் ஃபிட்செல்சன் அந்த சிறிய மாடியறைக்கு குடிபெயர்ந்து ஒரு மண்ணெண்ணெய் அடுப்பில் தனக்கான உணவை தானே சமைக்கத் தொடங்கினார். அவரிடம் பல இழுப்பறைகள் கொண்ட ஒரு அலமாரி இருந்தது, அதில் ஒவ்வொரு அறையின் மீதும் அதிலிருக்கும் உணவுப்பொருளின் பெயர் எழுதியிருக்கும் – கோதுமை மாவு, அரிசி, பார்லி, வெங்காயம், கேரட், உருளைகிழங்கு, காளான். வாரம் ஒருமுறை டாக்டர் ஃபிட்செல்சன் தன்னுடைய அகலமான கருப்புநிற வட்டத்தொப்பியை அணிந்தபடி ஒருகையில் கூடையும் மறுகையில் ஸ்பினோசாவின் அறவியல் நூலுமாக அவருக்கான சாமான்கள் வாங்க சந்தைக்கு சென்று வந்தார். பொருட்களுக்காக காத்திருக்கையில் அவர் அறவியலை திறந்து படிக்க ஆரம்பித்து விடுவார். அவரைப்பற்றி அறிந்த வியாபாரிகள் அவரை தங்கள் கடைகளுக்கு ஈர்க்க சைகை காட்டி முயற்சித்தனர்.

”அருமையான வெண்ணெய்கட்டி டாக்டர், உங்கள் நாவிலேயே உருகிவிடும்”

”சுத்தமான காளான்கள் டாக்டர், நேரடியாக காட்டிலிருந்து”

”டாக்டருக்கு வழி விடுங்கள் பெண்களே” கசாப்புகடைக்காரன் சத்தமிடுவான். “தயவுசெய்து வழியை மறிக்காதீர்கள்.”

ஹீப்ரு ஆசிரியர்களும் பிற அறிவுஜீவிகளும் அடிக்கடி வந்துசெல்லும் ஒரு மாலைநேர காபி விடுதிக்கு நோயின் ஆரம்ப நாட்களில்கூட டாக்டர் ஃபிட்செல்சன் சென்று கொண்டிருந்தார். அங்கு அமர்ந்து பாதிக் கோப்பை கருப்பு காபி அருந்தியவாறே சதுரங்கம் ஆடுவது அவருக்கு பிடித்தமான வழக்கம். சிலசமயம் புனித சிலுவை வீதியிலுள்ள புத்தககடைக்கு சென்று வருவார், அங்கு அனைத்து வகையான பழைய புத்தகங்கள் மற்றும் இதழ்களும் சகாய விலையில் கிடைக்கும். ஒருமுறை அவருடைய பழைய மாணவன் ஒருவன் அவரை ஒரு மாலை நேரத்தில் உணவு விடுதியில் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான். டாக்டர் ஃபிட்செல்சன் வருகை தந்தபோது அங்கிருந்த நண்பர் குழுவையும் ரசிகர்களையும் கண்டு ஆச்சர்யபட்டு போனார், அன்றைய சந்திப்பின் தலைமையாக அவரை அமரவைத்து அனைவரும் அவரைப் பற்றி உரையாற்றினர். ஆனால் இவையெல்லாம் நடந்தது நீண்ட காலத்துக்கு முன்பு. தற்போது மக்களுக்கு அவர்மீது ஆர்வமில்லை. அவர் தன்னைத்தானே முழுமையாக தனிமைபடுத்திக் கொண்டு ஒரு மறக்கப்பட்ட மனிதராக ஆகிவிட்டிருந்தார். 1905 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது சந்தைத் தெருவின் இளைஞர்கள் போராட்டங்களை நடத்தினர், காவல் நிலையத்தின் மீது குண்டு வீசி தடுப்பரண்களை தகர்த்ததால் வாரநாட்களில் கூட கடைகள் அடைக்கப்பட்டன, அவரது தனிமை மேலும் அதிகரித்தது. நவீன யூதம் தொடர்பான அனைத்தையும் அவர் வெறுக்க ஆரம்பித்தார் – சீயோனியம், பொது உடைமைக் கோட்பாடு, அரசின்மைவாதம். கேள்விக்குரிய இந்த இளைஞர்களை பார்க்கும் போதெல்லாம்  சமூகம் என்ற அமைப்பை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படும் எவ்வித ஒழுங்குமற்ற அறியாமை கும்பலின் பிரதிநிதியாக அல்லாமல் வேறெப்படியும் அவருக்குத் தோன்றவில்லை, சமூகம் என்ற அமைப்பில்லாமல் நம்முடைய குறைந்தபட்ச இருப்புகூட சாத்தியமில்லை. அவர் இன்னமும் ஒரு ஹீப்ரு இதழை அவ்வபோது படித்து வந்தாலும் பைபிளிலோ யூத வேதத்திலோ எந்த வேரும் இல்லாத நவீன ஹீப்ருவின் மீது அவருக்கு கண்டனமே இருந்தது. போலந்து மொழியின் எழுத்துக்கூட்டலும் மாற்றமடைந்திருந்தது. மதிப்புமிக்க ஆன்மீகவாதிகள் என்று கருதப்பட்டவர்கள் கூட தங்கள் சுய அறிவை விடுத்து கலவரக் கும்பலுக்கு துணைபோக தங்களால் இயன்றளவு முயற்சிப்பதாக டாக்டர் ஃபிட்செல்சன் முடிவுக்கு வந்தார். இச்சமயத்திலும் சில நாட்களுக்கொருமுறை நூலகத்திற்குச் சென்று தத்துவம் குறித்து எழுதப்பட்ட நவீன வரலாறுகளை புரட்டிப் பார்ப்பார். ஆனால் பேராசிரியர்கள் ஸ்பினோசாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை, தவறாக மேற்கோள் காட்டுகிறார்கள் மற்றும் தேங்கிப்போன தங்கள் சொந்த சிந்தனைகளை அந்த தத்துவாதியின் மீது ஏற்றுகிறார்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்தார். அறிவின் பாதையில் செல்பவர்களுக்கு கோபம் என்பது தேவையற்ற ஒரு உணர்ச்சி என அறிந்திருந்தாலும் அவர் சட்டென சீற்றம் கொண்டு தன்னருகே இருக்கும் புத்தகத்தை தள்ளி விடுவார். ”முட்டாள்கள்,” கோபத்தில் முணுமுணுப்பார், “கழுதைகள், அற்பர்கள்.” இனிமேல் நவீன தத்துவம் பக்கம் தலை வைப்பதில்லை என்று சபதமேற்பார்

(4)

மூன்று மாதங்களுக்கொருமுறை மணியார்டர் மட்டும் கொண்டு வரும் ஒரு பிரத்யேக தபால்காரன் டாக்டர் ஃபிட்செல்சனுக்கு என்பது ரூபில்கள் கொண்டுவருவான். தனக்கென ஒதுக்கப்பட்ட காலாண்டுத் தொகையை அவர் ஜூலை துவக்கத்திலேயே எதிர்பார்த்தார், ஆனால் நாட்கள் செல்ல செல்ல அரும்பு மீசையும் பளபளக்கும் பித்தான்களும் கொண்ட அந்த உயரமான மனிதன் வராததைக் கண்டு அவருக்குள் பதற்றம் அதிகரித்தது. அவரிடம் ஒரு வெள்ளிக்காசே எஞ்சியிருந்தது. யாருக்குத் தெரியும் – அனேகமாக பெர்லின் சங்கம் அவருக்கான உதவிதொகையை ரத்து செய்திருக்கலாம்; ஒருவேளை டாக்டர் ஹில்டெசைமர் இறந்திருக்கலாம், கடவுளே அவ்வாறு நடக்காமலிருக்கட்டும்; அஞ்சல் துறையில் ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்கான மூலக்காரணம் உண்டு என்பதை டாக்டர் ஃபிட்செல்சன் அறிவார். எல்லாமே தீர்மானிக்கப்பட்டவை, எல்லாமே அவசியமானவை எனும்போது இதில் அறிவின் பாதையில் செல்லும் மனிதனுக்கு கவலைப்பட எந்த உரிமையும் இல்லை. எப்படியிருந்தாலும் கவலைகள் அவருடைய மூளைக்குள் நுழைந்து ஈக்களைப்போல ரீங்கரித்தன. மோசமான சந்தர்ப்பம் இன்னும் மோசமானால் ஒருவேளை அவர் தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றியது, ஆனால் ஸ்பினோசா தற்கொலையை அங்கீகரிக்கவில்லை என்பதை நினைவுகூர்ந்தார் மேலும் அவ்வாறு செய்பவர்களை தங்கள் சொந்த வாழ்வை கெடுத்துக் கொள்பவர்களுடன் ஒப்பிட்டிருந்தார்.

ஒருநாள் டாக்டர் ஃபிட்செல்சன் ஒரு தொகுப்பு புத்தகம் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்த போது மக்கள் போர் குறித்து பேசிக் கொண்டிருப்பதை கேட்டார். செர்பியாவில் எங்கோ ஓரிடத்தில் ஒரு ஆஸ்திரிய இளவரசன் கொல்லப்பட்டதை அடுத்து செர்பியர்களுக்கு ஆஸ்திரியர்கள் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர். மஞ்சள்நிற தாடியும் அலைபாயும் மஞ்சள் கண்களும் கொண்ட கடையின் முதலாளியான இளைஞன் “நாம் ஒரு சிறிய போரை சந்திக்கப் போகிறோம்” என்று அறிவித்துவிட்டு எதிர்காலத்தில் தட்டுப்பாடு வரக்கூடுமென்பதால் டாக்டர் ஃபிட்செல்சனை உணவுப்பொருட்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினான்.

எல்லாம் விரைவாகவே நடந்தது. டாக்டர் ஃபிட்செல்சனுக்கு ஒரு செய்தித்தாள் வாங்க நான்கு வெள்ளி செலவழிக்கலாமா வேண்டாமா என்பதே முடிவெடுக்க இயலாத நிலையில் போருக்கான தயாரிப்புகள் குறித்து அதற்குள்ளாகவே சுவரொட்டிகள் தென்பட்டன. போருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக உலோக அட்டைகளை மார்பில் குத்தியபடி நடமாடும் ஆடவர்களை வீதியில் காண முடிந்தது. அவர்களின் மனைவிகள் அழுதுகொண்டே பின்தொடர்ந்தனர். ஒரு திங்கட்கிழமை டாக்டர் ஃபிட்செல்சன் தன்னிடமிருக்கும் இறுதி நாணயங்களை வைத்து ஏதேனும் உணவு வாங்க கீழிறங்கி வீதிக்கு வந்தபோது கடைகள் அடைத்திருப்பதைக் கண்டார். கடையின் உரிமையாளர்களும் அவர்களின் மனைவிகளும் ஏன் எந்த சாமான்களும் கிடைக்காது என்பதை விளக்கினர். ஆனால் சில விசேஷ வாடிக்கையாளர்கள் மட்டும் ஒருபக்கமாக அழைத்துச் செல்லப்பட்டு பின்வாசல் வழியாக அனுமதிக்கபட்டனர். வீதியில் எல்லாம் ஒரே குழப்பம் தான். வாளை உருவியபடி குதிரைகளில் போலீஸ்காரர்கள் உலா வருவதை காண முடிந்தது. பேரரசரின் உத்தரவின் பேரில் சத்திரத்தில் இருப்பு வைத்திருந்த சாராயம் முழுக்க சாக்கடையில் ஊற்றப்பட்டதால் சத்திரத்தை சுற்றி ஒரு பெருந்திரள் கூடியிருந்தது.

டாக்டர் பிட்செல்சன் தனது பழைய காபி விடுதிக்கு சென்றார். ஒருவேளை அவருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய தெரிந்தவர்கள் யாரேனும் அங்கு வரக்கூடும். ஆனால் அவருக்கு தெரிந்த ஒரு நபரைக் கூட அங்கு காணவில்லை. முன்னொரு காலத்தில் அவர் நூலகராக பணியாற்றிய யூத ஜெப ஆலயத்தின் ரப்பியை காண தீர்மானித்து அங்கு சென்றபோது ஆறுபக்க தொப்பியணிந்த கோயில் பணியாளரோ ரப்பி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்தார். டாக்டர் ஃபிட்செல்சனுக்கு நகரில் வேறுசில பழைய நண்பர்கள் இருந்தபோதிலும் ஒருவரும் வீட்டிலிருக்கவில்லை. நீண்டதூரம் நடந்ததில் பாதங்கள் வலித்தன; கண்முன்னே கருப்பு பச்சை புள்ளிகள் தோன்ற மயக்கம் வருவதுபோல தோன்றியது, தலைசுற்றல் நிற்கும்வரை சற்றுநேரம் காத்திருந்தார். வழிப்போக்கர்கள் அவரை தள்ளிக்கொண்டு சென்றனர். கருப்பு கண்களுடன் ஓர் உயர்பள்ளி மாணவி அவருக்கு ஒரு நாணயம் கொடுக்க முயன்றாள். போர் அப்போதுதான் தொடங்கியிருந்தாலும் சிப்பாய்கள் எட்டுபேர் கொண்ட குழுக்களாக முழு சீருடையில் அணிவகுத்து சென்றனர் – அவர்கள் மீது புழுதி படிந்திருக்க சருமம் வெயிலினால் சிவந்திருந்தது. பக்கவாட்டில் நீர்குடுவைகள் பிணைந்திருக்க மார்பின் குறுக்கே தோட்டா வரிசைகளை அணிந்திருந்தனர். துப்பாக்கி முனைகள் மெல்லிய பச்சை ஒளியில் சுடர்விட்டன. அவர்கள் சோகமான குரலில் பாடினர். சிப்பாய்களுடன் சேர்ந்து எட்டு குதிரைகளால் இழுக்கப்பட்ட பீரங்கிகளும் வந்தன; அவற்றின் பார்வையற்ற துவாரங்கள் அபாயகரமான இருளை சுவாசிப்பதாகப் பட்டது. டாக்டர் ஃபிட்செல்சனுக்கு குமட்டலெடுத்தது. வயிறு வலி அதிகரித்து குடல் வெளியே வந்துவிடும் போல் தோன்றியது. முகத்தில் குளிர்ச்சியான வியர்வை தோன்றின.

”நான் இறந்து கொண்டிருக்கிறேன்,” அவர் நினைத்தார். “இதுவே முடிவு.” ஒருவழியாக அவர் தன்னைத் தானே உந்திக் கொண்டுவந்து வீட்டிலிருக்கும் இரும்பு கட்டிலில் மூச்சிரைப்புடன் படுத்துகிடந்தார். அவர் உறக்கத்திலாழ்ந்திருக்க வேண்டும் ஏனெனில் தன் பிறந்த ஊரான திஷேவிட்ஸ் – இல் இருப்பதான கற்பனை அவருக்குத் தோன்றியது. அவருக்கு தொண்டை வலி இருந்ததால் அவருடைய அம்மா கழுத்தை சுற்றி ஒத்தடம் கொடுப்பதில் ஈடுபட்டிருந்தார். வீட்டில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அவரால் கேட்க முடிந்தது; ஏதோவோர் விளக்கு குறித்தும் எப்படி ஒரு தவளை அவரை கடித்தது என்பது குறித்தும் பேசப்பட்டன. அவர் வெளியே செல்ல விரும்பினார் ஆனால் கத்தோலிக்க ஊர்வலம் சென்று கொண்டிருப்பதால் வீட்டிலிருப்பவர்கள் அவரை அனுமதிக்கவில்லை. நீண்ட அங்கிகளை அணிந்த மனிதர்கள் இருமுனைக் கோடாரிகளை கையிலேந்தியபடி ஒரே குரலில் லத்தீனில் பாடியவாறே புனித நீரை தெளித்துச் சென்றனர். சிலுவைகள் சுடர்ந்தன; புனித காட்சிகள் காற்றில் அலையடித்தன. ஒரே சமயம் தூபம் மற்றும் பிணங்களின் நறுமணம் காற்றில் வீசியது. திடீரென வானம் செந்தழலாக சிவந்து மொத்த உலகமும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மணிகள் ஒலித்தன; மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். கீச்சொலி எழுப்பியபடி பறவை கூட்டங்கள் தலைக்குமேல் பறந்தன. டாக்டர் ஃபிட்செல்சன் திடுக்கிடலுடன் விழித்தெழுந்தார். உடல் வியர்வையால் நனைந்திருக்க தொண்டை மெய்யாகவே வலித்தது. அவருடைய இந்த மகத்தான கனவுக்கும் அவருக்கு நடப்பதற்குமான தர்க்கபூர்வ தொடர்பையும் அதன் உள்ளார்ந்த அர்த்ததையும் யோசிக்க முயற்சித்தார், ஆனால் அவை எதுவுமே பொருள்படவில்லை. ”ஐயோ, மூளையென்பது தொடர்பற்ற உளறல்களின் கிடங்கு,” டாக்டர் ஃபிட்செல்சன் நினைத்தார். “இந்த பூமி பைத்தியக்காரர்களுக்கே உரியது.”

அவர் மீண்டும் ஒருமுறை கண்களை மூடினார், மீண்டுமொருமுறை உறங்கி மீண்டுமொரு கனவு கண்டார்.

(5)

காலத்தின் விதிகள் டாக்டர் ஃபிட்செல்சனின் இறுதியை அதற்குள்ளாக தீர்மானித்திருக்கவில்லை.

டாக்டர் ஃபிட்செல்சனின் மாடியறையின் இடப்பக்கமாக இருண்ட இடைவழியின் பின்னனியில் கதவு ஒன்று இருந்தது, கலைசலான பெட்டிகளும் கூடைகளும் கிடக்கும் அப்பகுதியில் எப்போதும் வதங்கிய வெங்காயம் மற்றும் சலவைசோப்பின் வாடை இருந்து கொண்டிருக்கும். இந்தக் கதவுக்கு பின்னே அக்கம்பக்கத்தவர்களால் பிளாக் டோப் என்றழைக்கப்பட்ட ஒரு முதிர்கன்னி வாழ்ந்து வந்தாள். உயரமான மெலிந்த பெண்ணான டோப்பின் நிறம் அடுமனையாளனின் சட்டுவத்தின் கருமையை  ஒத்திருந்தது. அவளுடைய மூக்கு உடைந்தும் மேலுதட்டில் மீசையும் அரும்பியிருக்க ஆண்களின் கரகரப்பான குரலில் பேசினாள், ஆண்களின் காலணிகளையே அணிந்து வந்தாள். பலவருடங்களாக அவள் வீட்டு வாசலுக்கே வரும் ரொட்டி வியாபாரியிடம் வாங்கிய ரொட்டிகள், சுருளப்பங்கள் மற்றும் பேகல்களை1 (bagels) விற்று வாழ்ந்து வந்தாள். ஆனால் ஒருநாள் அவளுக்கும் ரொட்டி வியாபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அவள் தன் தொழிலை சந்தைப்பகுதிக்கு மாற்றி தற்போது அவித்த முட்டையில் செய்யப்படும் ஒருவித  சமோசாக்களை வியாபாரம் செய்கிறாள். பிளாக் டோப்பிற்கு ஆண்களிடம் அதிர்ஷ்டம் இருக்கவில்லை. இரண்டு முறை அவளுக்கு வெதுப்பகத்தின் பணிபயில்பவர்களுடன் நிச்சயம் நடந்திருந்தாலும் இரு சந்தர்பங்களிலுமே அவர்கள் தங்கள் திருமண ஒப்பந்தத்தை திருப்பியளித்துவிட்டனர். கொஞ்ச காலத்திற்கு பிறகு அவளுக்கு ஒரு கிழவனிடமிருந்து திருமண ஒப்பந்தந்திற்கான அழைப்பு வந்தது. ஜன்னல், கதவுகளுக்கு கண்ணாடி பொருத்துபவனான அந்தக் கிழவன் தன்னை விவாகரத்து ஆனவன் என்று அறிவித்திருந்தான், ஆனால் பின்னாளில் அவனுக்கு இன்னமும் ஒரு மனைவி இருப்பது தெரியவந்தது. பிளாக் டோப்பிற்கு அமெரிக்காவில் ஒரு அத்தை மகன் இருந்தான், காலணி தயாரிப்பவனான அவனிடமிருந்து கடிதங்கள் வருவதாக அவள் அடிக்கடி பெருமையுடன் சொல்லிக் கொண்டாலும் அவள் வார்சாவை விட்டு வெளியேறவில்லை. சுற்றியிருக்கும் பெண்களால் தொடர்ந்து கிண்டலடிக்கப்பட்டாள் “உனக்கு எதுவும் நடக்கப் போவதில்லை டோப். ஒரு வயதான வேலைக்காரியாக சாவதே உன் விதி.” பதிலுக்கு அவளும், “நான் எந்த ஆணுக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அவர்களெல்லாம் அழுகிப் போகட்டும்” என்றாள்.

அன்றைக்கு மதியம் டோப்பிற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. பொதுவாக அவள் கடிதத்தை படித்து காட்ட தையல்காரன் லெய்சரிடம்தான் போவாள். அன்றைக்கு லெய்சர் வெளியே சென்றிருந்ததால் டாக்டர் ஃபிட்செல்சனிடம் போகலாம் என யோசித்தாள், அவர் ஒருபோதும் வழிபாட்டிற்கு சென்றவரில்லை என்பதால் அவரை பக்கத்துவீட்டுக்காரர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர் என்று நினைத்திருந்தனர். அவள் டாக்டரின் அறைக்கதவை தட்டியபோது எந்த பதிலும் வரவில்லை. ”அந்த மாற்றுசிந்தனைக்காரர் ஒருவேளை வெளியே சென்றிருக்கலாம்” டோப் யோசித்தாள், இருப்பினும் மற்றொரு முறை தட்டியபோது கதவு லேசாக நகர்ந்தது. அவள் உள்ளே நுழைந்து சற்றே பயத்துடன் நின்றாள். டாக்டர் ஃபிட்செல்சன் தன் முழு உடையுடன் படுக்கையில் கிடந்தார். முகம் மெழுகைப்போல மஞ்சளாக இருந்தது, குரல்வளை நன்றாகவே துருத்திக்கொண்டிருக்க தாடி மேல்நோக்கி கலைந்திருந்து. டோப் வீறிட்டு அலறினாள், அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்துவிட்டாள் – இல்லை அவரது உடல் அசைந்தது. டோப் உடனே மேசையில் இருந்த குவளையை எடுத்துக்கொண்டு இடைவழிக்கு ஓடிச்சென்று குழாயில் தண்ணீர் பிடித்து விரைந்து வந்து மயக்கமாய் கிடந்தவரின் முகத்தில் தெளித்தாள். டாக்டர் ஃபிட்செல்சன் தலையை உதறிவிட்டு கண்களை திறந்தார்.

”உங்களுக்கு என்ன ஆயிற்று?” டோப் விசாரித்தாள். ”உடம்பு சரியில்லையா?”

”உதவிக்கு மிக்க நன்றி. இல்லை.”

“உங்களுக்கு குடும்பம் இருக்கிறதா? நான் அவர்களை அழைக்கிறேன்.”

”குடும்பம் இல்லை” டாக்டர் ஃபிட்செல்சன் சொன்னார்.

அடுத்த தெருவில் இருக்கும் நாவிதரை அழைத்துவர டோப் விரும்பினாலும் நாவிதரின் துணை தேவையில்லை என்று டாக்டர் மறுத்துவிட்டார். அன்றைய தினம் முட்டைகள் கிடைக்காததால் டோப் சந்தைக்கும் போகவில்லை, எனவே ஒரு நல்ல காரியம் செய்ய முடிவெடுத்தாள். நோயுற்ற அவரை படுக்கையிலிருந்து கீழிறங்க உதவி செய்துவிட்டு மெத்தைவிரிப்பை சரி செய்தாள். பின்பு டாக்டர் ஃபிட்செல்சனின் உடையை களைந்துவிட்டு மண்ணெண்ணெய் அடுப்பில் அவருக்காக சூப் தயாரித்தாள். சூரியன் ஒருமுறைகூட டோப்பின் அறையில் நுழைந்ததில்லை ஆனால் இங்கோ மங்கலான சுவர்களில் ஒளிச்சதுரங்கள் பிரகாசித்தன. தரை சிவப்பு வண்ணத்தில் இருந்தது. கழுத்தைச் சுற்றி அகலமான பட்டைகள் அணிந்தவரும் நீண்ட கூந்தலும் உடையவருமாகிய ஒருவரின் படம் கட்டிலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தது. ”வயதானவராக இருந்தாலும் தன் இடத்தை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறார்” அங்கீகரிக்கும் விதமாக டோப் வீட்டைச்சுற்றி நோட்டமிட்டாள். டாக்டர் ஃபிட்செல்சன் அறவியல் புத்தகத்தை கேட்டதும் ஆர்வமின்றி எடுத்துக் கொடுத்தாள். அது யூதரல்லாத மாற்று மதத்தவரின் வழிபாட்டு நூல் என உறுதியாக நம்பினாள். அதன்பிறகு பரபரப்பாக இயங்கத் தொடங்கிய டோப் ஒரு வாளி நிறைய தண்ணீர் கொண்டுவந்து தரையை துடைத்துவிட்டாள். டாக்டர் ஃபிட்செல்சன் சாப்பிட்டார், உணவுக்கு பின் அவர் தெம்பாக உணர்ந்ததும் டோப் அவளின் கடிதத்தை படித்துக்காட்ட சொல்லி கேட்டாள்.

கையில் நடுக்கத்துடன் காகிதத்தை பிடித்தபடி, அவர் அதை பொறுமையாக வாசித்தார். அது டோப்பின் அத்தை மகன் நியூயார்க்கிலிருந்து எழுதியது. அவன் மீண்டும் ஒருமுறை அவளுக்கு ஒரு “முக்கியமான விஷயம்” குறித்த கடிதத்தை எழுதப்போவதாகவும் அமெரிக்காவிற்கு ஒரு டிக்கெட் அனுப்பப்போவதாகவும் எழுதியிருந்தான். அதற்குள்ளாக அவனுடைய வழக்கமான வரிகளை டோப் அறிந்திருந்ததால் அந்த வயதானவர் அவனுடைய கிறுக்கல்களை வாசிக்க உதவினாள். “அவன் பொய் சொல்கிறான்” டோப் சொன்னாள். “அவன் என்னை மறந்துபோய் வெகு காலம் ஆகிறது.” மாலையில் டோப் மீண்டும் வந்தாள். கட்டிலுக்கு அருகே இருந்த நாற்காலியில் ஒரு பித்தளை பிடிப்பானில் மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டிருந்தது. சுவர்களிலும் கூரையிலும் செந்நிற நிழல்கள் ஆடின. டாக்டர் ஃபிட்செல்சன் கட்டிலில் சாய்ந்தமர்ந்து ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். மெழுகுவர்த்தியின் வெளிச்சம் அவருடைய முகத்தில் பொன்னிற ஒளி வீசியதில் முகம் பிளவுற்று இரு பகுதிகளாக தெரிந்தது. ஜன்னல் வழியாக உள்ளே வந்துவிட்ட பறவை ஒன்று மேசையில் அமர்ந்திருந்தது. ஒருகணம் டோப் பயந்துவிட்டாள். இந்த மனிதன் அவளை சூனியக்காரிகளை பற்றி யோசிக்க வைத்துவிட்டார், மாயக்கண்ணாடிகளும் பிணங்கள் நள்ளிரவில் எழுந்துவந்து பெண்களை பயமுறுத்துவதும் அவள் மனதில் ஓடின. இருப்பினும் சில அடிகள் அவரை நோக்கி முன்னகர்ந்து விசாரித்தாள், “எப்படி உள்ளது? சரியாகிவிட்டதா?”

”ஓரளவு பரவாயில்லை. நன்றி.”

”நீங்கள் உண்மையிலேயே மதமாற்றம் ஆனவரா?” அந்த வார்த்தைக்கான பொருள் உறுதியாக தெரியாவிட்டாலும் அவ்வாறு கேட்டாள்.

”நானா, மதமாற்றமா? இல்லை, மற்ற யூதர்களைப் போல நானும் ஒரு யூதன் தான்,” டாக்டர் ஃபிட்செல்சன் பதிலளித்தார்.

டாக்டரின் வாக்குறுதிகள் டோப்பை அந்த வீட்டில் ஆசுவாசமாக உணரச் செய்தன. அவள் மண்ணெண்ணெய் கேனை கண்டெடுத்து அடுப்பை பற்ற வைத்தாள், அதன்பிறகு அவளது அறையிலிருந்து ஒரு டம்ளர் பால் எடுத்து வந்துவிட்டு கோதுமை உப்புமா செய்ய ஆரம்பித்தாள். டாக்டர் ஃபிட்செல்சன் தொடர்ந்து அறவியலை படித்தார் ஆனால் அன்றைய மாலை அவர் வாசித்த கோட்பாடுகளும் அதன் ஆதாரங்களும் அதற்கு தொடர்புடைய அடிக்குறிப்புகளும் வரையறைகளும் எதுவும் பொருள்படவில்லை. நடுங்கும் கரங்களுடன் அவர் புத்தகத்தை கண்களுக்கு நேரே உயர்த்தி வாசித்தார், ”மனித உடலின் ஒவ்வொரு மாற்றம் குறித்த யோசனையானது மனித உடல் பற்றிய போதுமான அறிவை சார்ந்திருப்பதில்லை… மனித மனத்தின் ஒவ்வொரு மாற்றம் குறித்த யோசனையானது மனித மனம் பற்றிய போதுமான அறிவை சார்ந்திருப்பதில்லை.”

(6)

எந்த நாளும் இறப்பு வந்துவிடலாம் என்பதில் டாக்டர் ஃபிட்செல்சன் தற்போது உறுதியாக இருந்தார். அவர் தன் உயிலை தயார் செய்தார், அவருடைய அனைத்து புத்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் ஜெப ஆலயத்தின் நூலகத்திற்கு எழுதி வைத்தார். அவருடைய உடைகளும் அறைக்கலன்களும் டோப்பிற்கு சேரும் ஏனெனில் அவள் அவரை கவனித்துக் கொண்டவள். ஆனால் இறப்பு வரவில்லை. பதிலாக அவரது ஆரோக்கியம் மேம்பட்டது. டோப் தனது சந்தை வியாபாரத்திற்கே திரும்பினாள். இருப்பினும் அந்த வயதானவரை ஒருநாளில் பலமுறை வந்து பார்த்தாள், அவருக்கு சூப் தயாரித்துவிட்டு ஒரு கோப்பை தேனீர் அருந்தகொடுத்து போர் பற்றிய செய்திகளை சொல்லத் துவங்கினாள். ஜெர்மானியர்கள் காலிஷ், பெண்டின் மற்றும் செஸ்டெக்கோவ் ஆகிய பகுதிகளை கைப்பற்றியதோடு வார்சாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஒரு அமைதியான காலைப்பொழுதில் பீரங்கிகளின் அதிர்வொலிகள் கேட்கக்கூடும் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அதோடு கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக டோப் கவலைப்பட்டாள். ”பூச்சிகளைப் போல அவர்கள் மடிந்து விழுகிறார்கள்,” அவள் சொன்னாள். “பெண்களுக்கு கொடுமையான காலம் இது.”

ஏனென்று தெரியாமலையே அந்தக் கிழவரின் மாடியறை அவளை மிகவும் ஈர்த்து வந்தது. புத்தக அலமாரியிலிருந்து பொன் விளிம்பிட்ட புத்தகங்களை எடுத்து தூசு தட்டி ஜன்னலோரமாக காய வைப்பது அவளுக்கு பிடித்தமான வேலை. பின்னர் ஜன்னலருகே இருக்கும் தொலைநோக்கி வழியாக பார்ப்பாள். டாக்டர் ஃபிட்செல்சனிடம் பேசிக் கொண்டிருப்பதும் அவளுக்கு மகிழ்ச்சியளிப்பது தான். அவர் தான் கல்வி பயின்ற சுவிட்சர்லாந்தைப் பற்றி அவளிடம் சொன்னார், கடந்து வந்த மகத்தான நகரங்கள் பற்றியும் கோடையிலும் பனியால் மூடப்பட்டிருக்கும் உயரமான மலைகள் குறித்தும் பேசினார். அவருடைய தந்தை ஒரு ரப்பியாக இருந்தவர் என்பதால் அவரும் பொதுக்கல்விக்கு முன்பே ஒரு மரபான யூத கல்லூரியான யேஷிவாவில் பயின்றிருப்பதாக சொன்னார். அவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என அவள் கேட்டதற்கு இட்டிஷ் மொழியுடன் சேர்த்து அவரால் ஹீப்ரு, ரஷ்ய, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் முடியும் என தெரிய வந்தது. அவருக்கு லத்தீனும் தெரியும். இந்த அளவுக்கு கல்வி கற்ற ஒரு மனிதன் சந்தை தெருவில் ஒரு மாடியறையில் வசிக்க நேரிட்டதை டோப்பால் நம்ப இயலவில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட அவளுக்கு ஆச்சர்யம் அளித்தது என்னவென்றால் அவருக்கு ”டாக்டர்” பட்டம் இருந்தாலும் அவரால் மருந்துசீட்டுகள் எழுதிதர முடியாது என்பதுதான். “நீங்கள் ஏன் உண்மையான டாக்டராக ஆகக் கூடாது?” என்று அவரிடம் கேட்பாள். “நான் ஒரு டாக்டர் தான்,” என்பார். “உடல்நல மருத்துவரில்லை அவ்வளவுதான்.” “என்ன மாதிரியான டாக்டர்?” “தத்துவத்தில் முனைவர்.” அவளுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்காவிட்டாலும் அது மிகவும் முக்கியமானதாகப் பட்டது. ”ஓ! என் ஆசிர்வதிக்கப்பட்ட அன்னையே,” அவள் ஆச்சர்யத்துடன் கேட்பாள், “உங்களுக்கு எங்கிருந்து இப்படியொரு மூளை கிடைத்தது?”

பிறகொரு மாலை நேரத்தில் டோப் அவருக்கான தேனீரும் தின்பண்டங்களும் பரிமாறிய வேளையில் அவள் எங்கிருந்து வருகிறாள், அவளுடைய பெற்றோர்கள் யார் மற்றும் அவள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் விசாரித்தார். டோப்புக்கு ஆச்சர்யமாக இருந்தது, அவளிடம் யாரும் இம்மாமாதிரியான கேள்விகளை கேட்டதில்லை. அவள் தன்னுடைய கதையை அமைதியான குரலில் சொல்லியபடி இரவு பதினொரு மணிவரை தங்கியிருந்தாள். அவளுடைய தந்தை யூத கசாப்பு கடைகளில் சுமைதூக்குபவராக வேலை பார்த்தவர். தாய் இறைச்சி கூடத்தில் கோழி இறகை பிடுங்குபவளாக இருந்தாள். சந்தை தெருவில் எண். 19ல் உள்ள நிலவறையில் அவர்களின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவளுக்கு பத்து வயதாக இருக்கும் போதே ஒரு பணிப்பெண்ணாக ஆகிவிட்டாள். அவள் வேலைபார்த்த வீட்டுக்காரனோ கடைவீதியில் உலாவும் திருடர்களிடமிருந்து வாங்கிய திருட்டு பொருட்களை வியாபாரம் செய்பவனாக இருந்தான். டோப்பிற்கு ரஷ்ய ராணுவத்திற்கு சென்று திரும்பியே வராத ஒரு அண்ணனும் உண்டு. அவளது அக்கா ப்ராகாவில் ஒரு குதிரைவண்டிக்காரனை மணந்து பிள்ளைபேற்றின் போது இறந்துவிட்டாள். 1905 இல் நிழலுலகத்தினருக்கும் புரட்சிக்காரர்களுக்குமிடையே நடைபெற்ற சண்டைகளை பற்றி டோப் கூறினாள், குருட்டு இட்சேவும் அவனுடைய கும்பலும் எவ்வாறு கடைகளில் மாமூல் வசூலித்தனர் என்றும், சனிக்கிழமை பின்மதியத்தில் உலாவும் வாலிப பையன்கள் மற்றும் பெண்கள் அவர்களின் பாதுகாப்பிற்கு பணம் கொடுக்கவில்லையென்றால் ரவுடிகள் அவர்களை தாக்கியது குறித்தும் பேசினாள். பெண்களை வண்டிகளில் கடத்தி சென்று அர்ஜென்டினாவில் விற்கும் விபச்சார தரகர்களை பற்றி சொல்லும் போது சில தரகர்கள் அவளையும் விபச்சாரத்திற்குள் இழுக்க முயற்சித்ததாகவும் ஆனால் அவள் தப்பியோடிவிட்டதாகவும் சத்தியம் செய்தாள். அவளுக்கு நேர்ந்த ஆயிரம் கொடுமைகளை பட்டியலிட்டாள். அவள் திருடப்பட்டிருக்கிறாள்; அவளுடைய காதலன் திருடப்பட்டிருக்கிறான்; ஒருமுறை போட்டியாளன் ஒருவன் அவளுடைய ரொட்டி கூடையில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டான்; அவளது சொந்த அத்தை மகன், காலணி தயாரிப்பவன், அமெரிக்கா செல்வதற்கு முன் அவளிடம் நூறு ரூபிள்கள் ஏமாற்றிவிட்டான். டாக்டர் ஃபிட்செல்சன் பொறுமையுடன் அனைத்தையும் கவனமாக கேட்டார். அவளிடம் கேள்விகள் கேட்டு எதையோ மறுக்கும் விதமாக தலையசைத்துவிட்டு முனகினார்.

”சரி, உனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா?” இறுதியாக அவளிடம் கேட்டார்.

“எனக்குத் தெரியவில்லை,” அவள் பதிலளித்தாள். “உங்களுக்கு உள்ளதா?”

”ஆம், நான் நம்புகிறேன்.”

”பின்பு ஏன் நீங்கள் ஜெப ஆலயத்திற்கு செல்வதில்லை?”

”கடவுள் எங்கும் இருக்கிறார்,” அவர் கூறினார். “ஜெப ஆலயத்தில், சந்தை தெருவில், இந்த அறையிலும் கூட. நாமே கடவுளின் பகுதிதான்.”

“இம்மாதிரி விஷயங்களை பேச வேண்டாம்,” டோப் குறுக்கிட்டாள். ”நீங்கள் என்னை பயமுறுத்துகிறீர்கள்.”

உடனே அவள் அறையை விட்டு நீங்கியதும் டாக்டர் ஃபிட்செல்சன் அவள் உறங்க சென்றுவிட்டாள் என்றே நினைத்தார். ஆனால் அவள் இரவு வணக்கம் சொல்லாமல் போனது மட்டும் அவருக்கு வினோதமாக இருந்தது. ”அநேகமாக என் தத்துவங்களால் அவளை துரத்தியடித்து விட்டேன்,” என்று நினைத்தார். அடுத்த நொடியே அவளுடைய காலடியோசை கேட்டது. ஒரு வியாபாரியை போல கைநிறைய துணிமூட்டைகளை தூக்கிக் கொண்டு டோப் உள்நுழைந்தாள்.

”இதையெல்லாம் உங்களிடம் காட்ட ஆசைப்பட்டேன்,” என்றாள். ”இவை என் துணிமணிகள்.” நாற்காலியின் மேல் துணிகளை விரிக்கத் துவங்கினாள் – கம்பளி, பட்டு, வெல்வெட். ஒவ்வொரு ஆடையாக எடுத்து உடல்மேல் பொருத்திக் காண்பித்தாள். உள்ளாடைகள், காலணிகள், அணிகலன்கள் என  ஒவ்வொன்றைப் பற்றியும் அவரிடம் சொல்வதற்கு அவளுக்கு ஏதேனும் இருந்தது.

“நான் வீணடிப்பவள் அல்ல,” டோப் தொடர்ந்தாள். “நான் சேமிப்பவள். அமெரிக்கா செல்லுமளவிற்கு என்னிடம் பணம் உள்ளது.”

பின்பு அவளது முகம்சிவக்க அமைதியாகிவிட்டாள். டாக்டர் ஃபிட்செல்சனை தன் ஓரக்கண்களால் கூச்சத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்தாள். டாக்டரின் உடல் குளிர் காய்ச்சல் வந்ததுபோல நடுங்கத் தொடங்கியது. ஆமோதிக்கும் தொனியில், “மிகவும் அருமை, அழகான பொருட்கள்.” என்றார். அவருடைய நெற்றி சுருங்க இரு விரல்களால் தாடியை அலைந்தார். பற்களற்ற அவரது முகத்தில் சோகமான புன்னகை தோன்ற படபடக்கும் பெரிய கண்களுடன் மாடியறை ஜன்னலின் வழியாக தூரத்தில் ஏதோவொன்றை வெறித்துப் பார்த்தார், அதே சோக புன்னகையுடன்.

(7)

பிளாக் டோப் ஒருநாள் ரப்பியின் தனி அறைக்கு வந்து டாக்டர் ஃபிட்செல்சனை மணக்கவிருப்பதாக அறிவித்தபோது ரப்பியின் மனைவி அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவே நினைத்தாள். ஆனால் அந்த செய்தி அதற்குள்ளாகவே தையல்க்காரன் லெய்சரை அடைந்து அங்கிருந்து பேக்கரிக்கும் மற்ற கடைகளுக்கும் பரவிவிட்டிருந்தது. ”பழைய வேலைக்காரி” க்கு பெரிய அதிர்ஷ்டம் அடித்திருப்பதாக சிலர் நினைத்தனர், டாக்டரிடம் நிறைய பணம் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். வேறுசிலரோ டாக்டர் ஒரு சீர்குலைந்த கிழவர் என்றும் அவளுக்கு பால்வினை நோய் அளித்துவிடுவார் என்றும் பரப்பினார்கள். டாக்டர் ஃபிட்செல்சன் திருமணத்தை சிறிய அளவில் அதிக ஆடம்பரமில்லாமல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தாலும் ரப்பியின் கூடத்தில் அதிக எண்ணிக்கையில் விருந்தினர்கள் கூடியிருந்தனர். பொதுவாக அரைக்கால்சட்டையும் தலையின் மேல் காகித தொப்பிகளும் அணிந்து வெறும்கால்களுடன் சுற்றிவரும் பேக்கரி பணியாளர்கள் தற்போது வெளிர்நிற சூட்களுடன் வைக்கோல் தொப்பிகளும் மஞ்சள்நிற ஷூக்களும் மிகையாக பளபளக்கும் கழுத்துப்பட்டைகளும் அணிந்து கொண்டு பெரிய கேக்குகள் மற்றும் கலன்கள் நிறைய இனிப்பு பிஸ்கட்டுகளும் எடுத்து வந்திருந்தனர். போர்க்காலத்தில் மது தடைசெய்யப்பட்டிருந்தாலும் அவர்களால் எங்கிருந்தோ ஒரு குப்பி வோட்காவையும் எடுத்து வர முடிந்திருந்தது. மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் ரப்பியின் கூடத்தில் நுழைந்தபோது கூட்டத்தில் மெல்லிய சலசலப்பு எழுந்தது. அங்கிருந்த பெண்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அவர்கள் காணும் மணப்பெண்ணானவள் இதுவரை அவர்கள் அறிந்த பெண்ணல்ல. டோப் அணிந்திருந்த அகலமான வட்ட தொப்பி செர்ரி பழங்களாலும் திராட்சைகளாலும் இறகுகளாலும் கச்சிதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜரிகையுடன் கூடிய வெண்பட்டாலான ஆடை அணிந்திருந்தாள். கால்களில் பொன்னிறத்தாலான உயர் குதிகால் காலணிகள் அணிந்திருக்க அவளது மெல்லிய கழுத்தில் அழகிய முத்துமாலை தொங்கியது. இதோடு முடிந்துவிடவில்லை: முகத்திரையால் முகம் மறைந்திருக்க விரல்கள் மோதிரங்களாலும் கற்களாலும் மின்னின.  அவள் கிட்டத்தட்ட வியன்னா ஹாலில் மணம்புரிந்து கொள்ளும் பணக்கார மணப்பெண்களைப் போலவே காட்சியளித்தாள். பேக்கரி பணியாளர்கள் கிண்டலடிக்கும் வகையில் விசிலடித்தனர். டாக்டர் ஃபிட்செல்சனை பொருத்தவரை அவர் கருப்பு கோட்டும் அகன்ற காலணிகளும் அணிந்திருந்தார். அவரால் தடுமாறியபடிதான் நடக்க முடிந்தது, டோப்பின் மீது சாய்ந்துகொண்டு நடந்து வந்தார். வாசற்கதவு வழியாக நுழைகையில் கூட்டத்தை பார்த்து பயந்து பின்வாங்க எத்தனித்தார் அதற்குள் டோப்பின் முன்னாள் முதலாளி அவரை அணுகிவிட்டார், “உள்ளே வாருங்கள், வாருங்கள் மாப்பிள்ளை. வெட்கப்பட வேண்டாம். நாங்களெல்லாம் தற்போது உங்கள் சகோதரர்கள்.”

வழக்கமான் விதிகளின்படி திருமண விழா நடைபெற்றது. பளபளக்கும் மென்பட்டுத்துணியாலான அங்கியை அணிந்திருந்த ரப்பி திருமண ஒப்பந்தத்தை எழுதி முடித்ததும் மணப்பெண்ணும் மாப்பிளையும் சம்மதத்தின் அடையாளமாக அவருடைய கைக்குட்டையை தொட்டனர். ரப்பி பேனா முனையை துடைத்துவிட்டு மூடிவைத்தார். தெருவிலிருந்து கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்த சுமைதூக்குபவர்கள் விதானச்சீலைகளை தூக்கிப் பிடித்தனர். டாக்டர் ஃபிட்செல்சன் தன் இறப்பு நாளின் நினைவாக வெள்ளை அலங்கார அங்கியை அணிந்தததும் சடங்குகளின்படி டோப் அவரை ஏழுமுறை சுற்றி வந்தாள். உருகும் மெழுகுவர்த்தியின் ஒளி சுவர்களில் மினுங்கியது. நிழல்கள் தள்ளாடின. திராட்சை ரசத்தை கின்னத்தில் ஊற்றியபடி வாழ்த்து பாடலை சோகமான மெட்டில் ரப்பி ஓத தொடங்கினார். டோப் ஒரேயொரு முறை மட்டும் விசும்பினாள். பிற பெண்களை பொருத்தவரை கைகளில் கைக்குட்டையோடு முகம்சுளித்தபடி நின்றனர். பேக்கரி பையன்கள் தங்களுக்குள் நகைச்சுவைகளை கிசுகிசுத்ததும் ரப்பி கண்டிக்கும் விதமாக வாயில் விரலை வைத்துக் காண்பித்து பேசுவது தடை செய்யப்பட்டிருப்பதாக இட்டிஷ் மொழியில் முனகினார். இறுதியில் மணப்பெண்ணின் விரலில் திருமண மோதிரத்தை அணிவிப்பதற்கான தருணம் வந்தது ஆனால் மாப்பிள்ளையோ நடுங்க ஆரம்பித்ததால் டோப்பின் ஆள்காட்டி விரலை கண்டுபிடிப்பதற்கு அவர் தடுமாற வேண்டியிருந்தது. சடங்குகளின் படி அடுத்த நிகழ்வானது கோப்பைகளை உடைப்பதாக இருந்தது, டாக்டர் ஃபிட்செல்சன் எத்தனைமுறை உதைத்தும் கிண்ணம் உடையவில்லை. இளம்பெண்கள் தலைகுணிந்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கலகலப்பாக சிரித்தனர். இறுதியில் ஒரு பணியாள் தன் பாதங்களால் கிண்ணத்தை விசையுடன் மிதித்ததில் அது நொறுங்கி சிதறியது. ரப்பியாலும் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை. திருமண நிகழ்வு முடிந்ததும் விருந்தினர்களுக்கு வோட்காவும் இனிப்பு பிஸ்கட்டுகளும் அளிக்கப்பட்டன. டோப்பின் முன்னாள் முதலாளி டாக்டர் ஃபிட்செல்சனிடம் வந்து, “மசேல் டொவ்1 மாப்பிள்ளை. மனைவி அளவுக்கே உங்களுக்கு அதிர்ஷ்டமும் அமையட்டும்.” என்றார். “நன்றி, நன்றி,” டாக்டர் ஃபிட்செல்சன் முனகினார், ”ஆனால் நான் எவ்வித அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்கவில்லை.” அவர் விரைவிலேயே தன் மாடியறைக்கு திரும்பிவிட வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தார். வயிற்றில் ஒருவித அழுத்தத்தையும் மார்பில் வலியையும் அவரால் உணர முடிந்தது. முகம் வெளிறியது. டோப் தீடிரென கோபமடைந்தாள். முகத்திரையை விலக்கிவிட்டு கூட்டத்தினரை நோக்கி கத்தினாள், “எதைப் பார்த்து நகைக்கிறீர்கள்? இது ஒன்றும் நாடக அரங்கு அல்ல.” பரிசுகள் சுற்றி வைக்கப்பட்டிருந்த பஞ்சு பொதியை எடுத்துக் கொள்ளாமலேயே அவள் தன் கணவனுடன் ஐந்தாவது மாடியிலிருக்கும் அவர்களின் அறைகளுக்கு சென்றாள்.

டாக்டர் ஃபிட்செல்சன் அவரது அறையில் புதிதாக தயார் செய்யப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்து அறவியலை படிக்கத் துவங்கினார். டோப் தன்னுடைய அறைக்கே மீண்டாள். அவருக்கு வயதாகிவிட்டதையும் நோய்மையால் பலம் குறைந்திருப்பதையும் மருத்துவர் அவளிடம் தெரிவித்திருந்தார். அவர் அவளிடம் எதையும் உறுதியளிக்கவில்லை. எவ்வாறாகினும் அவள் பட்டுத்துணியாலான இரவு உடை அணிந்தபடி தோள்களில் கூந்தல் புரள அலங்கார காலணிகளுடன் திரும்பி வந்தாள். டாக்டரின் அறைக்குள் நுழைகையில் முகத்தில் புன்னகையுடன் சற்றே கூச்சமும் தயக்கமும் இருந்தது. நடுக்கத்தில் டாக்டர் ஃபிட்செல்சனின் கைகளிலிருந்து அறவியல் புத்தகம் நழுவியது. மெழுகுவர்த்தி அணைக்கப்பட்டதும் டோப் கைகளால் இருட்டில் துழாவி டாக்டர் ஃபிட்செல்சனை அணைத்து உதட்டில் முத்தமிட்டாள். ”என் இனிய கணவரே,” அவரிடம் கிசுகிசுத்தாள், “மசேல் டொவ்2.”

அன்றிரவு நிகழ்ந்ததை ஓர் அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.  நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் இயற்கையின் விதிகளின் படியே நடக்கிறது என்ற கொள்கையில் மட்டும் டாக்டர் ஃபிட்செல்சன் உறுதியாக இருந்திருக்காவிட்டால் ப்ளாக் டோப் அவரை வசியம் செய்துவிட்டாள் என்றே நினைத்திருப்பார். நீண்ட காலமாக உபயோகமற்றுப்போயிருந்த அவருடைய ஆற்றல்கள் விழித்தெழுந்தன. ஆசிர்வதிக்கப்பட்ட திராட்சை ரசத்தை அவர் ஒரேயொரு மிடறு அருந்தியிருந்தாலும் போதையிலிருப்பது போல உணர்ந்தார். டோப்பை முத்தமிட்டு அவளிடம் காதலைப் பற்றி பேசினார். க்லோப்ஸ்டாக், லெஸ்ஸிங் மற்றும் கோத்தேவிலிருந்து எப்போதோ மறுந்தவிட்ட மேற்கோள்கள் அவரது நாவில் எழுந்தன. அழுத்தங்களும் வலிகளும் மறைந்தன. அவர் டோப்பை தன்னருகே இழுத்தணைத்துக் கொண்டு மீண்டும் தன் இளமைக்கே திரும்பிவிட்டவராய் இருந்தார். டோப் மகிழ்ச்சியின் மயக்கத்தில் இருந்தாள். டோப் அழுதபடியே அவரிடம் அவருக்கு புரியாத வகையில் வார்சாவின் பேச்சுவழக்கில் கிசுகிசுத்தாள். அதன்பிறகு டாக்டர் ஃபிட்செல்சன் இளம்வயதில் மட்டுமே சாத்தியமாகும் வகையிலான ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்துவிட்டார். அவர் சுவிட்சர்லாந்தில் இருப்பதாக கனவு கண்டார் – அங்கு மலையேறிக் கொண்டிருந்தார், ஓடினார், விழுந்தார், காற்றில் பறந்தார். விடியலில் அவர்  கண்விழித்தபோது யாரோ அவருடைய காதில் ஊளையிட்டது போல் இருந்தது. டோப்தான் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள். டாக்டர் ஃபிட்செல்சன் விரைவாக படுக்கையிலிருந்து எழுந்தகன்று தனது நீண்ட இரவு அங்கியை அணிந்தபடியே ஜன்னலை நோக்கி நடந்தார், படிகளின் மீதேறி ஆச்சர்யத்துடன் வெளியே பார்த்தார். சந்தை தெரு உறக்கத்திலிருந்தது, ஆழ்ந்த அமைதியுடன் சுவாசிப்பதாகப் பட்டது. எரிவாயு விளக்குகள் மின்னி அணைந்தன. கடைகளின் கருப்புநிற கதவுகள் இரும்பு கம்பிகளால் சாத்தப்பட்டிருந்தன. குளிர்ந்த தென்றல் வீசியது. டாக்டர் ஃபிட்செல்சன் மேல்நோக்கி வானத்தைப் பார்த்தார். கருமையான நுழைவாயில் போன்ற வானத்தில் அடர்த்தியாக விண்மீன்கள் விதைக்கப்பட்டிருந்தன – பச்சை, சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களில் அவை இருந்தன. சிலவை சிறிதாகவும் சில பெரிதாகவும் சில விண்மீன்கள் துடித்துக் கொண்டும் சில நிலையாகவும் இருந்தன. அடர்த்தியான கூட்டங்களாக சிலவும் தனியாக சிலவும் இருந்தன. அந்த உயர் உலகில் ஒரு குறிப்பிட்ட டாக்டர் ஃபிட்செல்சன் என்பவர் தன் அந்திம நாட்களில் ப்ளாக் டோப் எனும் ஒருவரை மணம்புரிந்தார் என்பதை நிச்சயம் யாரும் பெரிதாக கவனித்ததாக தெரியவில்லை. மேலிருந்து காண்கையில் பெரும்போரே கூட ஒரு தற்காலிக நிலைமாற்றமாகவே தெரியும். எல்லையற்ற விண்வெளியில் எண்ணற்ற நிலையான விண்மீன்கள் தங்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து செல்கின்றன. இந்த ஒளிவிடும் மையத்தை சுற்றி பல்வேறு எரிவிண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள் வட்டமிடுகின்றன. பிரபஞ்ச நிகழ்வுகளில் உலகங்கள் பிறந்து மடிகின்றன. விண்மீன் படலத்தின் சலனங்களில் எங்கோ ஒரு புதிய உலகம் உருவாகிறது. அவ்வப்போது ஒரு விண்மீன் தன் பாதையிலிருந்து விலகி வானின் குறுக்கே தன் ஒளிர்பாதையை எஞ்சவிட்டு செல்கிறது. இந்த ஆகஸ்டு மாதத்தில் பல எரிவிண்மீன்கள் விழுந்தபடி இருக்கின்றன. ஆம், அகன்று விரிந்த தெய்வீக பொருளுக்கு துவக்கமுமில்லை முடிவுமில்லை; அது தன்னளவில் முழுமையானது, பிரிக்கப்பட முடியாதது, காலமற்றது, எல்லையில்லாதது. பிரபஞ்சமெனும் மாபெரும் கொதிகலனில் அதன் அலைகளும் குமிழிகளும் அறுபடாத காரண காரிய உறவுகளின் விதியை பின்பற்றியபடி மாற்றத்தை நோக்கி நடனமிட்டன, தன் தவிர்க்கமுடியாத ஊழுடன் டாக்டர் ஃபிட்செல்சனும் இதன் பகுதியாக இருந்தார். டாக்டர் கண்களை மூடி தென்றல் காற்று நெற்றிவியர்வையை குளிரச் செய்வதையும் தாடியை வருடி செல்வதையும் அனுபவித்தபடி நின்றார். நள்ளிரவின் காற்றை ஆழமாக சுவாசித்துவிட்டு நடுங்கும் கைகளை ஜன்னல் நிலையில் ஊன்றியபடி முணுமுணுத்தார், “புனிதரான ஸ்பினோசாவே, என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு முட்டாளாகிவிட்டேன்.”

பேகல்1 – Bagel – வட்டவடிவிலான ஒருவகை ரொட்டிச்சுருள்

மசேல் டொவ்2 – Mazel tov – யூதர்கள் சுப நிகழ்வுகளுக்கு பின்பு வாழ்த்து சொல்ல பயன்படுத்தப்படும் சொல்.

ஐசக் பாஷேவிஸ் சிங்கர்

ஐசக் பாஷேவிஸ் சிங்கர்  ( 1904 - 1991) போலந்து நாட்டில் பிறந்த அமெரிக்க எழுத்தாளரான இவர் இட்டிஷ் மொழியில் நாவல்கள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார். வார்சா ரப்பினிக்கல் செமினரியில் பாரம்பரிய யூதக் கல்வியைப் பெற்றார். அவரது முதல் நாவலான சாத்தான் இன் கோரே (1932) ஐ வெளியிட்ட பிறகு 1935 இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து நியூயார்க்கில் உள்ள ஒரு இட்டிஷ் செய்தித்தாளுக்கு எழுதினார். பெரும்பாலும் தொடர்ந்து இட்டிஷ் மொழியில் எழுதி வந்தாலும் தனிப்பட்ட முறையில் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மேற்பார்வையிட்டார். போலந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள யூதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இவரது படைப்புகள், மகத்துவுமான உண்மைகளை எளிமையாக சென்று தொடுபவை.  இவருக்கு 1978 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவருடைய ஷோஷா (1974) நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Gimpel the Fool, and Other Stories (1957), The Spinoza of Market Street (1961), Short Friday (1964), The Seance (1968), A Crown of Feathers (1973), Old Love (1979), and The Image, and Other Stories (1985) ஆகியன இவருடைய முக்கியமான சிறுகதை தொகுப்புகள்.

டி.ஏ. பாரி

டி.ஏ. பாரி, அவ்வப்போது சில ஆங்கில சிறுகதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார். பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட்டு வரும் இவர் ஈரோட்டில் வசிக்கிறார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.