வசந்த காலம் வந்துவிட்டால் நகரத்துவாசிகள் யாவரும் தோள்களில் பெட்டியை சுமந்தபடி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கில் கிளம்பிவிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் புகைப்படம் எடுக்க வேண்டியது – பெரிய வேட்டை கிடைத்த வேட்டைக்காரனைப் போல களிப்புடன் அவர்கள் திரும்ப வருவதை பார்க்க வேண்டும்; கழுவப்பட்ட புகைப்படத்தை காண்பதற்காக எதிர்பார்ப்புடன் நாட்கணக்கில் காத்திருப்பார்கள். கண்முன்னால் ஒரு கையாளக்கூடிய உடைமையாக புகைப்படங்களை பார்த்த பின்பே தாங்கள் செலவிட்ட தினத்தின் பயன்மதிப்பை அவர்கள் அடைந்ததாகத் தோன்றும். அதன் பின்னரே அந்த மலை அருவியோ, மணலில் விளையாடும் குழந்தையின் அசைவோ, மனைவியின் கால்களில் ஒளிரும் சூரிய ஒளியின் பிரதிபலிப்போ மீண்டும் நிகழமுடியாத ஓர் அபூர்வத்தன்மையை அடைகிறது, அதுபோக இனிமேல் யாரும் அதை சந்தேகிக்கவும் முடியாது. பிற அனைத்தும் நம் நம்பகமற்ற நினைவின் நிழலில் மூழ்கி மறைந்துவிடக் கூடும்.
புகைப்படங்கள் எடுக்கும் வழக்கமில்லாத அன்டோனியோ பராகி தன் பெரும்பான்மை நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களை பார்க்கும் போது தனிமை வளர்ந்தபடியே இருப்பதை உணர்ந்தான். அவன் வாரம்தோறும் சில விவாதங்களை கேட்க நேர்ந்தது, குறிப்பிட்ட ஃபில்டரை பயன்படுத்துவதால் கிடைக்கும் துல்லியத்தின் பொருட்டு அதைப் புகழ்வது அல்லது காமிரா தொழில்நுட்பத்தில் ஒளியை படம்பிடிப்பதில் உருவாகும் மாற்றங்கள் போன்றவை.. உரையாடலில் ஒரு குரல் ஒலிக்கும் போதே, நேற்றுவரை அவனுடைய கிண்டல்களை ரகசியமாக ஆமோதித்து பகிர்ந்து கொண்டவர்களின் குரல்களும் எதிர்பாரா திசைகளிலிருந்து ஒலித்து அவனை அதிர வைக்கும். அவனுக்கோ இந்த செயல்பாடு முற்றிலும் ஆர்வத்தை தூண்டாத, ஆச்சர்யங்கள் ஏதுமற்ற ஒன்றாகத் தோன்றியது.
தொழில்ரீதியாக பார்த்தால் அன்டோனியோ பராகி ஓர் உற்பத்தி நிறுவனத்தின் வணிகப் பிரிவில் நிர்வாகியாக இருப்பவன், ஆனால் அவனுடைய முதன்மையான ஈடுபாடு என்பது சிறிதும் பெரிதுமான தற்கால நடப்புகளைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பதிலும், சிக்கலான அதன் தகவல்களிலிருந்து பொதுவான காரணிகளை உய்த்தறிந்து தன் விமர்சனங்களை பகிர்ந்து கொள்வதிலுமே இருந்தது. சுருக்கமாக சொன்னால் மனப்பாங்கில் அவன் ஒரு தத்துவவாதி, தன் சொந்த அனுபவத்திலிருந்து மிகவும் அயலான நடப்புகளாக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள தன் முழு கவனத்தையும் அர்பணிக்கக் கூடியவன். தற்போது புகைப்படம் எடுப்பவர்கள் பற்றிய அவனது சிந்தனையில் அவர்களின் சாரம்சமான ஏதோ ஒன்று அவனுக்கு போக்கு காட்டுவதாய் தோன்றியது, ஏதோவோர் ரகசிய ஈர்ப்பினால் உந்தப்படவர்களாய் தொடக்கநிலை புகைப்படக்காரர்களின் வரிசையில் புதியவர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருந்தனர்; சிலர் தாங்கள் அடைந்து வரும் தொழில்நுட்ப, கலாபூர்வமான தேர்ச்சி குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ள வேறு சிலரோ நேர்மாறாக தாங்கள் வாங்கிய காமிராவின் இயங்கு திறனே அனைத்திற்கும் காரணம் என்றனர். அந்த காமிராக்கள் (அவர்களை பொருத்தவரை) தேர்ச்சியற்ற கைகளால் இயக்கப்பட்டாலும் கூட மாஸ்டர்பீஸ்களை உருவாக்கும் திறன் வாய்ந்தவை (தேர்ச்சியற்றவர்கள் என அவர்கள் தங்களையே அறிவித்துக் கொண்டனர், ஏனெனில் அவர்களின் பெருமிதம் இயந்திர கருவியின் செயல்திறனை அதிகப்படுத்திக் காட்டுவதில் இருக்கும்போது, தனிப்பட்ட திறன் அதற்கு ஈடாக கீழிறங்குவது ஏற்புடையதே). அவர்கள் திருப்தி அடைவதற்கு இவை இரண்டுமே காரணமாக இருக்கமுடியாது என்பதை அன்டோனியோ பராகி புரிந்துகொண்டான்: உண்மை வேறெங்கோ உள்ளது.
எதிலிருந்தோ ஒதுக்கி வைக்கப்பட்டவனைப் போல அவன் தன் தனிப்பட்ட திருப்தியின்மைக்கான காரணங்களை கண்டறியும் முகமாக புகைப்படக் கலையை ஆராயத் துவங்கினான். இது ஓர் எல்லைவரை சுய ஏமாற்று நாடகம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவனை தன் நண்பர்களிடமிருந்து பிரிக்கும் வேறொரு காரணம் வெளிப்படையாகவே இருந்தது.
நடந்தது இதுதான்: அவன் வயதில் உள்ள அவனுக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராக திருமணம் செய்துகொண்டார்கள், அன்டோனியோ பேச்சிலராகவே நீடித்தான்.
இருப்பினும் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கிடையிலும் சந்தேகமில்லாமல் ஒரு தொடர்பு உள்ளது, கேமிரா மீதான ஆர்வம் பெரும்பாலும் இயல்பாக உண்டாகும் அளவுக்கே, தந்தைமை அல்லது தாய்மையின் விளைவால் உடலியல்ரீதியாகவே உண்டாகிறது. குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வந்தவுடன் பெற்றோருக்குத் தோன்றும் முதல் உள்ளுணர்வுகளில் ஒன்று, அதை புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது. வளர்ச்சியின் வேகத்தை பொருத்து குழந்தையை அடிக்கடி புகைப்படம் எடுக்க வேண்டியிருக்கும், ஏனெனில் ஆறுமாத கைக்குழந்தையைப்போல மாறிக்கொண்டே இருப்பதும் நினைவிலிருந்து நழுவுவதும் வேறில்லை, விரைவிலேயே அழிக்கப்பட்டு எட்டுமாதக் குழந்தை அவ்விடத்தை எடுத்துக் கொள்ளும், அதன்பிறகு ஒரு வயது; பெற்றோரின் கண்களுக்கு அனைத்து லட்சணங்களும் பொருந்தி வந்திருப்பதாய் தோன்றும் மூன்று வயது குழந்தையின் படம், நான்கு வயது ஆகும்போது பின்னகர்வதை தவிர்க்க முடியாது. கண நேரத்தில் மறைந்துவிடும் இந்த அற்புதங்களெல்லாம் புகைப்பட ஆல்பத்தில் மட்டுமே வரிசையாக சேமிக்கப்படலாம்; அவை ஒவ்வொன்றும் பிறிதுடன் ஒப்பிடமுடியாதவை, தன்னளவில் முழுமைகொள்ள துடிப்பவை. கறுப்பு வெள்ளை அல்லது முழுநீல வண்ணக் காட்சியாக, அசைவின்மையின் சட்டகத்திற்குள் தங்கள் குழந்தைகளை சுருக்குவதில் பெற்றோர்கள் பேரார்வம் காட்டினர். ஆனால் புகைப்பட ஆர்வலனாகவோ தந்தையாகவோ அல்லாத அன்டோனியோவுக்கு, அந்த கருப்பு கருவிக்குள் உறைந்திருக்கும் அசட்டுத்தனமான ஒன்றை நோக்கிய ஓட்டமே இதில் பிரதானமாக இருப்பதாக பட்டது. அதேசமயம் குடும்ப அமைப்பு – புகைப்படம் சார்ந்து அன்டோனியோ கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் அவசரமானவை, யாரிடமும் விவாதிக்கப்படாதவை: இல்லையெனில் இதில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர் பேச்சிலரான தான்தான் என்பதை உணர்ந்திருப்பான்.
அன்டோனியோவின் நண்பர்கள் வட்டத்தில், வாரஇறுதிகளை நகரத்துக்கு வெளியே, ஒரு குழுவாக செலவிடுவதை நெடுங்காலமாகவே ஒரு மரபாக கடைபிடித்து வந்தனர். அவர்களுள் பலரின் மாணவப் பருவம் முதலே தொடர்ந்துவரும் இவ்வழக்கத்தில் பின்னர் அவர்களின் காதலிகள் சேர்க்கப்பட்டனர், அதன் பின்னர் அவர்களின் மனைவிகளும் குழந்தைகளும் சேர்க்கப்பட, பாலூட்டும் தாதி பெண்களும் செவிலித்தாய்களும் கூட, சில சமயங்களில் மனைவியின் வீட்டார்கள், ஆண்களும் பெண்களுமென புதிதாக அறிமுகமாகும் சுற்றத்தார்களும் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பழக்கமாகவே மாறிவிட்ட இந்த ஒன்றுகூடல் இதுவரை ஒருமுறை கூட தவறியதில்லை. அன்டோனியோவும் இத்தனை வருடங்களில் எதுவும் மாறிவிடாதது போலவும், அவர்கள் பழைய நாட்களின் அதே இளம் நண்பர்கள் குழுதான் என்பதாக பாவனை செய்தான். கிட்டத்தட்ட வெவ்வேறு குடும்பங்களின் கூட்டாக ஆகிவிட்ட அக்குழுவில் அவன் மட்டுமே ஒரேயொரு தாக்குப்பிடிக்கும் பேச்சிலர்.
மலைகளுக்கோ கடற்கரைக்கோ அவர்கள் செல்லும் சுற்றுலாக்களில் அடிக்கடி இது நிகழும், குடும்பமாகவோ அல்லது பல குடும்பங்கள் கூட்டாகவோ குழு புகைப்படம் எடுப்பதற்கான நேரம் வரும், உடனே ஒரு வெளியாளிடம் உதவி கேட்பார்கள், வழிபோக்கராக இருக்கலாம், ஏற்கனவே தங்களை நோக்கி ஃபோக்கஸ் செய்து வைக்கப்பட்ட காமிராவில் அவர் பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அன்டோனியோ தன் சேவையை அளிக்க தயங்க மாட்டான்: ஒரு தந்தை அல்லது தாயின் கைகளிலிருந்து அவன் காமிராவை வாங்கிக் கொள்ள, அவர் இரண்டாம் வரிசையிலிருக்கும் தன் இடம்நோக்கி ஓடுவார், இரண்டு தலைகளுக்கு நடுவே தன் தலையை நுழைந்தபடியோ அல்லது குழந்தைகளுடன் முட்டியிட்டு அமர்ந்தோ தன் இருப்பை உறுதி செய்வார்; பின்னர் அன்டோனியோ, இதற்கென்றே படைக்கப்பட்ட தன் விரலின் மீது முழு கவனத்தையும் குவித்து, அழுத்துவான். ஆரம்ப நாட்களில், அவன் தன் கைகளை அசௌகரியமான முறையில் விறைப்பாக வைத்திருந்ததால் அது காமிராவின் கோணத்தை மாற்றி பின்னணியில் இருக்கும் கப்பலின் பாய்மரங்களையோ மலைத்தொடரின் கோபுரங்களையோ படம் பிடித்துவிடும், அல்லது அத்தை மாமாக்கள் தாத்தா பாட்டிகளுடைய தலை துண்டிக்கப்பட்டிருக்கும். அவன் இதை வேண்டுமென்றே செய்கிறான் என்று குற்றம்சாட்டப்பட்டான், அவர்களை மோசமாக கிண்டல் செய்வதாக எண்ணி அவனை எல்லாரும் வசைபாடினர். உண்மை அதுவல்ல: அவன் தன் விரலை அனைவரின் கூட்டு எதிர்பார்ப்பை நிறைவேற்றும் எளிய கருவியாக பயன்படுத்தவே நினைத்தான், ஆனால் அதேசமயம் புகைப்படத்தை நிர்ணயிப்பவனாய் தன் தற்காலிக நிலையின் முக்கியத்துவத்தை பயன்படுத்தி, புகைப்படம் எடுப்பவர்கள் மற்றும் எடுக்கப்படுபவர்கள் இருவருக்குமே அவர்களுடைய செயலின் உண்மைத்தன்மை குறித்து உபதேசிக்க விரும்பினான். விரல்கள் அவனுடைய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு விரும்பிய அளவு தனித்து செயல்படும் நிலையை அடைந்ததும், அவனால் சில நல்ல புகைப்படங்களை எடுக்க முடிந்தது. (சில தற்செயல் வெற்றிகளால் வ்யூஃபைண்டர்கள், ஒளிமானிகள் போன்றவற்றை அலட்சியமான உறுதிப்பாட்டுடன் கையாளும் நிலையை எட்டியிருந்தான்) இனி, அவன் தன் வாதங்களை சுதந்திரமாக முன்வைக்கலாம்.
“ .. ஏனெனில் ஒருமுறை நீங்கள் தொடங்கிவிட்டால்,” உபதேசிக்கும் தொனியில் தொடங்கினான், “அதன்பிறகு நிறுத்துவதற்கு உங்களிடம் எந்தக் காரணமும் இல்லை. அழகாகத்தெரிவதால் நாம் ஒரு காட்சியை புகைப்படம் எடுப்பதற்கும், நாம் புகைப்படம் எடுத்துவிட்டதால் அது அழகாக தெரிவதற்குமான வேறுபாடு மிகவும் நொய்மையானது, இரண்டிற்கும் இடையே ஓடுவது மெல்லிய கோடுதான். பீட்டர் ஒரு மணற் கோட்டை கட்டும் போது அவனை நீங்கள் புகைப்படம் எடுப்பது சரியென்றால், கோட்டை சரிந்துவிடும் போது அவன் அழுவதையும் படம் எடுக்க வேண்டும், அல்லது தாதிப் பெண் வந்து மணலில் புதைத்திருக்கும் சிப்பிகளை எடுத்துக் காட்டி அவனை சமாதானபடுத்துவதை புகைப்படம் எடுக்காமலிருக்க உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. ‘ஆ, எவ்வளவு அழகானது! இதைக் கண்டிப்பாக புகைப்படம் எடுக்க வேண்டும்!’ என்று நீங்கள் சொல்லும் போதே புகைப்படம் எடுக்கப்படாத யாவும் இழக்கப்பட்டவை என்ற நிலைப்பாட்டிற்கு அருகே வந்துவிடுகிறீர்கள். அத்தருணம் உண்மையில் நிகழவேயில்லை என்பதுபோல, அப்படியென்றால், உண்மையில் வாழ வேண்டுமெனில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகைப்படங்களை எடுத்தாக வேண்டும். அந்த அளவு புகைப்படம் எடுப்பதற்கு அதற்கான தருணங்களை உருவாக்கியபடி அதற்கெனவே நீங்கள் வாழ வேண்டும், அல்லது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் புகைப்படம் ஆக்குவது பற்றி நீங்கள் பரிசீலிக்க வேண்டும். முதலாவது அபத்தத்தை நோக்கி இட்டு செல்லும்; இரண்டாவதோ நம்மை பைத்தியமாக்கிவிடும்.”
“இங்கு பைத்தியமாக இருப்பதும் அபத்தமாக பேசுவதும் நீதான்,” நண்பர்கள் சொன்னார்கள், “அதற்கும் மேலாக, எங்களை எரிச்சலூட்டுபவன்.”
“கண்பார்வையில் கடந்துசெல்லும் ஒவ்வொன்றையும் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில்,” யாரும் அவன் சொல்வதை கேட்காவிட்டாலும் அன்டோனியோ தொடர்ந்து விளக்குவான், “ஒருவருக்கு இருக்கக்கூடிய சாத்தியமான எளிய வழி என்பது குறைந்தபட்சம் நிமிடத்திற்கு ஒரு புகைப்படம் எடுப்பதுதான், காலையில் கண்விழிப்பது முதல் தூங்கப்போவதுவரை எடுக்க வேண்டும். எதையும் தவறவிடாமல் ஒரு நம்பகமான நாட்குறிப்பைப் போல படச்சுருளில் அனைத்தையும் பதிவு செய்வதற்கான வழி இது மட்டுமே. நான் புகைப்படங்கள் எடுப்பதாக இருந்தால், இதை செய்யவே துணிவேன், அது என்னை பைத்தியமாக ஆக்கினாலும் சரி. ஆனால் நீங்கள் எல்லோரும் இதில் குறிப்பிட்ட தேர்வை முன்வைக்கிறீர்கள். என்ன மாதிரியான தேர்வு அது? ரம்மியமான சூழல் எனும் தேர்வு, ஆற்றுப்படுத்துவது, இயற்கையுடன் இயைத்திருப்பது, குடும்பம், சொந்த ஊர் போன்ற தேர்வுகள். புகைப்படத்திற்கு தோதான காட்சியை மட்டும் நீங்கள் தேர்வு செய்வதில்லை; வாழ்க்கையின் மீது செய்யப்படும் தேர்வு அது, எனவே அதில் பலவற்றை ஒதுக்கி வைக்கிறீர்கள். கொந்தளிப்பான மோதல்கள், முரண்பாட்டின் முடிச்சுகள், விழைவுகளின் லட்சியத்தின் ஒவ்வாமையின் உணர்ச்சிமிகு தருணங்கள் தவறவிடப்படுகின்றன. பைத்தியக்காரத்தனத்திலிருந்து உங்களை நீங்களே தற்காத்து கொண்டதாய் எண்ணுகிறீர்கள், ஆனால் நீங்கள் விழுவதோ சராசரித்தனத்தில், மனச்சோம்பலின் புதைகுழியில்.”
இரண்டு பெண்கள் பெஸ்ஸி என்பவளும் லிடியா என்பவளும் அவனை அணுகினர், ஒருவள் யாரோ ஒருவரின் முன்னாள் மச்சினி, மற்றொருவள் யாரோ ஒருவரின் முன்னாள் செயலர். அவர்கள் அலைகளில் பந்து விளையாடும் போது இயல்பாக தெரியும்படி தங்களை படம் (snapshot) எடுக்க கேட்டுக் கொண்டனர். அவன் ஒப்புக்கொண்டான், ஆனால் அதற்குள் வாழ்வின் ஓட்டத்தில் எடுக்கப்படும் இயல்பாக படங்களுக்கு எதிராகவும் அவன் மனதிற்குள் ஒரு கோட்பாடு உதித்ததால் அதை அந்த இரண்டு புதிய நண்பர்களிடமும் கடமையுணர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டான்:
“சீரான தொடர்ச்சியுடன் இருக்கும் உங்கள் நாளின் ஓட்டத்திலிருந்து நொடிப்பொழுது அளவுள்ள இந்த தற்காலிக துண்டுகளை வெட்டி எடுக்க உங்களை எது தூண்டுகிறது? பந்தை வீசி பிடித்தபடி, நீங்கள் தற்காலத்தில் வாழ்கிறீர்கள், ஆனால் சட்டகத்தின் பரப்புக்குள் வந்ததும் விளையாட்டின் இயல்பான மகிழ்ச்சியால் நீங்கள் திளைக்கப்போவதில்லை, மாறாக எதிர்காலத்தில் உங்களை நீங்களே மீண்டும் பார்க்கப் போவது பற்றி எண்ணுகிறீர்கள், இருபது வருடம் கழித்து உங்களை நீங்களே ஒரு மஞ்சள்நிற மரச் சட்டகத்தில் மறுகண்டுபிடிப்பு செய்வது பற்றி.. நிஜவாழ்க்கை போன்றே தோற்றம் தரக்கூடிய, இயல்பான படங்களுக்கான தேடல் என்பதே இயல்புத்தன்மையை அழித்துவிடும், நிகழ்காலம் விரட்டப்பட்டிருக்கும். படமாக்கப்பட்ட தருணத்திற்கு உடனடியாக நினைவேக்கத்தின் இயல்புகள் வந்துவிடுகிறது, காலத்தின் சிறகுகளில் உவகை பறந்துவிட்டிருக்க, ஒரு நினைவுச்சின்னத்தின் தன்மையை எட்டிவிடுகிறது, நேற்றைக்கு எடுத்த படமாக இருந்தாலும் நிலைமை அதுதான். படம் பிடிக்கப்படுவதற்கென்றே நீங்கள் வாழும் வாழ்க்கை, அதற்குள்ளாக அதுவும் தன்னளவில் ஒரு நினைவுச்சின்னமாக மாறத் தொடங்கிவிடும். போஸ் கொடுத்து எடுக்கப்படும் உருவப்படத்தை (portrait) விட இயல்பான புகைப்படம் (snapshot) அதிக உண்மையானது என்று நம்புவது தவறான அபிப்ராயம்…”
இவ்வாறு சொல்லிக்கொண்டே, விளையாட்டின் அசைவுகளையும் நீர்பரப்பில் அலையும் சூரிய ஒளியின் அபாரமான பிரதிபலிப்புகளையும் படம்பிடித்தபடி அன்டோனியோ இரு பெண்களையும் சுற்றி வந்தான். பெஸ்ஸி பந்தை எட்டிப்பிடிப்பதற்காக கழுத்தளவு நீரில் இருக்கும் இன்னொரு பெண்ணின் மீது உந்திப் பாய்ந்தாள், அலைகளின் மேலே பறப்பதைப் போல அவளின் பின்புறத்தை அண்மைக் காட்சியில் படம்பிடித்தான். இந்த பார்வைகோணத்தை தவறவிடாமல் இருக்க நீரில் இறங்கிய அன்டோனியோ, காமிராவை கையில் தூக்கி பிடித்தபடி மூழ்கிவிடாமல் இருக்க போராட வேண்டியிருந்தது.
“எல்லாமே நன்றாக வந்திருக்கிறது, அதிலும் இந்தப் படம் அற்புதம்,” படங்களை ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் வாங்கிப் பார்த்தபடி பேசிக் கொண்டனர். சில நாட்கள் கழித்து அவர்கள் புகைப்பட ஸ்டுடியோவில் சந்திப்பதாக ஏற்பாடாகியிருந்தது. “உனக்கு நன்றாக வருகிறது; நீ மேலும் எங்களை படம் எடுக்க வேண்டும்.”
அன்டோனியோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான், காட்சியளித்து – அதாவது போஸ் (Pose) கொடுத்து எடுக்கப்படும் பத்தொன்பதாம் நூற்றாண்டு படங்களுக்கு திரும்புவது அவசியம், அப்படங்களில் காட்சியளிக்கும் விதத்திலேயே அவர்களின் சமூக அந்தஸ்தும் நடத்தையும் புலப்பட்டுவிடும். புகைப்படங்களுக்கு எதிரான விவாதங்களை அவன் அக்கருவியை வைத்து உள்ளிருந்தபடியே தான் நிகழ்த்த முடியும், ஒருவகை படங்களுக்கு எதிராக இன்னொன்றை முன்வைத்தபடி.
“எனக்கு பழைய பாக்ஸ் காமிரா கிடைத்தால் நன்றாக இருக்கும்,” அவன் தன் தோழிகளிடம் சொன்னான், “முக்காலியின் மீது நிற்க வைக்கும் வகை. இப்போதும் அதை தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமா?”
“ம்ம்ம், ஏதேனும் பழைய இரும்பு கடையில் கிடைக்கலாம்..”
“போய் பார்க்கலாம் வா.”
வழக்கத்திற்கு மாறான பொருளை தேடிப் போவது பெண்களுக்கு குதூகலமாய் இருந்தது; பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் அவர்கள் தேடி அலைந்தனர், முன்னாள் தெருப் புகைப்படக்காரர்களிடம் விசாரித்து அவர்களின் தனிப்பட்ட இருப்பிடங்களுக்கே சென்றனர். பொருட்களின் கல்லறை போன்று தோற்றமளித்த அவ்விடங்களில் உபயோகமற்ற மரத் தூண்கள், மங்கிப்போன நிலக்காட்சிகளுடன் திரைச்சீலைகள் என சிதறிக் கிடந்தன; பழைய புகைப்படக்காரர்களின் ஸ்டுடியோவுடன் தொடர்புடையதாய் தென்பட்ட அனைத்தையும் அன்டோனியோ வாங்கினான். இறுதியில் அவன் எதிர்பார்த்த பாக்ஸ் காமிராவும் கிடைத்தது, கூடவே விளக்கு பொருத்தும் வசதியுடன். அது சரியாக வேலை செய்வதாகவே தோன்றியது. பெண்களின் உதவியுடன் தன்
அபார்ட்மெண்டில் உள்ள அறையில் ஸ்டுடியோவை அமைத்தான், இரண்டு நவீனரக ஸ்பாட்லைட்டுகள் தவிர பிற அனைத்துமே பழைய பாணி சாதனங்கள்.
அவனுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்துவிட்டது. “நாம் இங்கிருந்து தொடங்கலாம்,” அவன் பெண்களிடம் விளக்கினான். “நம் முன்னோர்கள் போஸ் கொடுத்த விதத்தில், புகைப்படங்களுக்கு குழுக்களை ஒழுங்குபடுத்தி அமைக்கும் விதத்தில் எல்லாம் ஒரு சமூகக் காரணியோ, மரபு, ரசனை அல்லது பண்பாட்டின் தொடர்ச்சியோ இருந்தது. ஒரு முறைமைசார் புகைப்படத்தில் – திருமணம், குடும்ப புகைப்படம் அல்லது பள்ளியில் எடுக்கப்படும் கூட்டுப் புகைப்படங்களில் அவரவர் பாத்திரத்திற்கான முக்கியத்துவமோ அல்லது நிறுவனத்தின் முக்கியத்துவமோ வெளிப்படும். அதே சமயம் அவையெல்லாம் எவ்வளவு தூரம் பொய்யானவை அல்லது அதிகாரத்தால் மேலிருந்து கீழாக திணிக்கப்பட்டவை என்பதையும் நாம் பார்க்கலாம். நான் சொல்ல வருவது இதுதான்: நாம் ஒவ்வொருவரும் நமக்குள் யாராக இருக்கிறோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தவும், இன்று எதை மறைக்க விரும்புகிறோமோ அதை பொருட்படுத்தாமல், பிரக்ஞைபூர்வமாக இல்லாமலிருக்க, இம்முறையில் நாம்…”
“உனக்கு போஸ் கொடுக்க யார் வர வேண்டும்?”
“நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு வாங்க, நான் சொல்ல வரும் விதத்தில் உங்களை சில படங்கள் எடுக்கிறேன்.”
“உன் மனதில் என்ன இருக்கு என்பதை வெளிப்படையாக சொல்லிவிடு?” திடீரென லிடியா சந்தேகத்துடன் கேட்டாள். ஸ்டுடியோ அமைந்தவுடன் இப்போதுதான் அவளுக்கு இந்த ஏற்பாடுகள் யாவற்றின் மீதும் ஒருவித அச்சம் பரவியது. “நீ விரும்பியபடி காட்சி கொடுக்கும் மாடல்களாக நாங்க வருவோம்னு எதிர்பார்த்தா அது கனவிலும் நடக்காது!”
பெஸ்ஸி அவளுடன் சேர்ந்து சிரித்தாள், ஆனால் மறுநாளே அன்டோனியோவின் அபார்ட்மெண்ட்டிற்கு அவள் மட்டும் தனியாக திரும்ப வந்தாள்.
நாரிழைத்துணியாலான வெண்ணிற ஆடை அணிந்து வந்திருந்தாள், சட்டைப்பையிலும் கைப்பகுதியின் விளிம்புகளிலும் அழகான சித்திரத்தையல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூந்தலை சீராக பிரித்து காதோரத்தில் ஒதுக்கியிருந்தாள். தலையை ஒரு பக்கமாக சரித்து கபடத்துடன் சிரித்தாள். உள்ளே அனுமதித்தவுடன் அன்டோனியோ அவளின் நடத்தையை மதிப்பிட துவங்கினான், அவளின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தும் பண்புநலன்களை கண்டறியும் ஆர்வம் அவனுக்கிருந்தது. அவள் சற்றே நாணத்துடனும் சற்றே கிண்டலாகவும் இருப்பதாகப் பட்டது.
அங்கிருந்த பெரிய வசதியான நாற்காலியில் அவளை அமர வைத்துவிட்டு, அவன் காமிராவின் பின்னாலிருந்த கறுப்புத் துணிக்குள் தலையை நுழைத்துக் கொண்டான். அந்த பாக்ஸ் காமிராவின் பின்புற கண்ணாடி பரப்பில், படச்சுருளில் எப்படி பதிவாகுமோ அவ்வாறான காட்சிபிம்பம் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. சற்றே மங்கலாக, அமானுஷ்ய உணர்வளிப்பதாக கால இட எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டதாக அக்காட்சிபிம்பம் தோன்றும். அன்டோனியோவுக்கோ பெஸ்ஸியை முற்றிலும் புதிதாக பார்ப்பது போலத் தோன்றியது. அவள் இமைகளை சரிப்பதிலும் கழுத்தை நீட்டி முன்னால் வருவதிலும் எதையோ கரந்து வைத்திருப்பவளைப்
போன்ற பணிவு வெளிப்பட்டது. அவள் புன்னகைக்கையில் அச்செயல்பாட்டின் அடியிலேயே அப்புன்னகையும் கூட மறைந்து கொண்டது.
“அந்தப் பக்கமாக, அப்படித்தான். இல்லை தலையை இன்னும் கொஞ்சம்; கண்கள் மேல்நோக்கி. இல்லை கொஞ்சம் கீழே.” அக்கருவியின் ஊடாக தேடும்பொழுது சட்டென அன்டோனியோவுக்கு விலைமதிப்பற்ற ஏதோவொன்று பெஸ்ஸியிடம் இருப்பதாய் தோன்றியது, தன்னளவில் முழுமையானது.
“இங்கு உன் நிழல் விழுகிறது; வெளிச்சத்தின் பக்கம் போ.. இல்லை, முன்பிருந்ததே பரவாயில்லை.”
பெஸ்ஸியை எடுக்க சாத்தியமான பல புகைப்படங்கள் இருந்தன அதேபோல படம்பிடிக்க சாத்தியமேயில்லாத பல பெஸ்ஸிக்களும் இருந்தனர், ஆனால் அவன் தேடியதோ இவை இரண்டையும் உள்ளடக்கிய தனித்துவமான ஒரு புகைப்படம்.
“என்னால் முடியவில்லை,” காமிராவின் பின்னிருந்து தடுமாற்றத்துடன் புகார் செய்யும் தொனியில் அவன் குரல் எழுந்தது, “இனிமேலும் என்னால் முடியாது; உன்னை என்னால் சரியாக படம்பிடிக்க இயலவில்லை.”
கருந்துணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நிமிர்ந்தான். அவன் சென்ற வழியில் பல தவறுகள் இருந்தன. மிகச்சரியாக அந்த முகபாவனையில், உடல்மொழியில் அவளை படம்பிடிக்கும் முனைப்பில் அவன் பல்வேறு உணர்வுகளால் அலைகழிக்கப்பட்டான், கேலிகள், மனவோட்டங்கள்.. இயல்பான புகைப்படம் எடுக்க முயற்சி செய்பவர்கள் மாதிரியே அவனும் கைக்கு சிக்காமல் பறந்து கொண்டிருக்கும் வாழ்வை சட்டகத்தில் பிடிக்க முயல்பவனாய் மாறிப் போனான், கிடைக்க வாய்ப்பில்லாத ஒன்றை தேடுபவன்.
சரியான பாதைக்கு அவன் எதிர்திசையில் பயணித்திருக்க வேண்டும்: ஓர் உருவப்படத்தை வெறுமனே அதன் முகமதிப்பின் அடிப்படையில் அணுகவேண்டும், சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாய் தெரிபவற்றை மட்டும் கொண்டு. வழக்கத்தின் முகமூடியிலிருந்து தப்பிசெல்லாத படங்கள். அவ்வாறான முகமூடி முதன்மையாக சமூக வரலாற்று காரணிகளின் விளைவு என்பதால், தன்னை “உண்மையானது” என அறிவித்துக் கொள்ளும் எந்தப் படத்தை விடவும் அது அதிக உண்மைத்தன்மை கொண்டது. அதன் அர்த்தங்களோ கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுபவை. அன்டோனியோ தன் ஸ்டுடியோவை அமைத்ததன் உள்நோக்கமும் துல்லியமாக இதே காரணத்திற்காகத் தானே?
அவன் பெஸ்ஸியை கவனித்தான். அவளுடைய தோற்றத்தின் வெளிப்புற அம்சங்களிலிருந்து அவன் தொடங்க வேண்டும். பெஸ்ஸியின் உடையை சீரமைத்து அவளை தயார்படுத்தும் போது அவன் ஒன்றை கண்டுகொண்டான் – அக்காலகட்டத்தில் பரவலாக நினைவேக்கத்தன்மை மீது ஒருவித ஆர்வம் இருந்தது, அதாவது முப்பது வருடங்களுக்கு முந்தைய நாகரீக பாணிக்கு சத்தமில்லாமல் சென்றுவிடுவது. யோசித்துப் பார்த்தால் இதிலிருக்கும் நகைமுரண் புரியும். புகைப்படம் இந்த ஆர்வத்தை அல்லவா அடிக்கோடிட வேண்டும்? இதை எப்படி சிந்திக்காமல் போனான்?
அன்டோனியோ தேடிப்பிடித்து ஒரு டென்னிஸ் ராக்கெட்டை எடுத்து வந்தான். பெஸ்ஸி டென்னிஸ் ராக்கெட்டை கையில் பிடித்தபடி, முக்கால் பங்கு திரும்பிய நிலையில், அஞ்சல் அட்டையில் தோன்றுவது போன்ற முகபாவத்துடன் நிற்க வேண்டும். காமிராவின் துணிக்கு அடியிலிருந்து பெஸ்ஸியின் பிம்பத்தை பார்த்த அன்டோனியோவுக்கு அவளின் மெலிந்த உருவம் காட்சிக்கு பொருந்தி போவதும், அதேசமயம் அக்காட்சி உருவாக்கிய பொருத்தமற்ற அம்சங்களும் ஆர்வத்தை தூண்டின. அவன் பலமுறை அவள் நிற்கும் விதத்தை மாற்றி மாற்றி அமைத்தான், டென்னிஸ் ராக்கெட்டின் வடிவத்துடன் கை கால்களின் அமைப்பு கொண்டுள்ள உறவை ஆராய்ந்தும் பின்னணியில் இருக்கும் சிலவற்றை கருத்தில் கொண்டும் இதை செய்தான். (அவன் மனதில் உதித்த லட்சிய அஞ்சல் அட்டையில் டென்னிஸ் மைதானத்தின் குறுக்கே ஓடும் வலை இருந்திருக்கும், ஆனால் தற்போது நாம் அதிகம் எதிர்பார்க்கமுடியாது. அன்டோனியோ ஒரு டேபில் டென்னிஸ் மேசையை வைத்தே இதை செய்யவேண்டி இருந்தது.)
ஆனால் இப்போதும் அவன் சரியான திசையில் செல்வதாக உணரவில்லை: ஒருவேளை அவன் படம்பிடிக்க முயற்சிப்பதும் கடந்தகால நினைவுகளைத்தான் அல்லவா, இன்னும் சொல்லப்போனால் தொலைதூர நினைவுகளின் மங்கலான எதிரொலிகளை சேகரிக்கும் முயற்சிதானே இதுவும்? ஞாயிற்றுக்கிழமை புகைப்படக்காரர்களின் செயல் எதிர்கால நினைவுத் துணுக்குகளாக நிகழ்காலத்தில் வாழ்வது. அதை மறுத்து அவன் சென்ற பாதை அதேயளவு போலியான செயலை நோக்கிப் போகிறதா, அதாவது நினைவுமீட்டலுக்கு ஓர் உருவம் கொடுத்து அதை நிகழ்காலத்தின் இடத்தில் நிறுத்துவதைத்தானே கண்ணெதிரே அவன் செய்து கொண்டிருக்கிறான்?
“ நகர்! ஒரே இடத்தில் கம்பம் மாதிரி நிக்காதே! கொஞ்சம் ராக்கெட்டை உயர்த்திப் பிடியேன்! டென்னிஸ் விளையாடுவதாக பாவனை செய்!” அவன் சட்டென சீற்றம் கொண்டவனாய் ஆகிவிட்டான். போஸ்களை மிகைப்படுத்துவதன் வழியாகவே புறவயமான அன்னியத்தன்மையை அடைய முடியும் என்பதை கண்டுகொண்டான். ஓர் அசைவை பாதிவழியில் செயற்கையாக உறைய வைப்பதன் வழியாகவே அசைவற்றதன், உயிரற்றதன் மனப்பதிவை அவன் உண்டாக்க முடியும்.
அவனது ஆணைகள் தெளிவில்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருந்தாலும் பெஸ்ஸி அவற்றை எவ்வித எதிர்ப்புமின்றி கடைபிடித்தாள். அவளின் இந்த ஒட்டுதலின்மை ஒருவகையில் தான் இந்த ஆட்டத்தில் இல்லை என்பதை அறிவிப்பதாக இருந்தது, இருந்தாலும் கணிக்கமுடியாத நகர்வுகள் கொண்ட தன்னுடையதற்ற அவ்வாட்டத்தில், ஒருவாறு விருப்பமின்மையை உணர்த்தியபடி தன் சொந்த ஆட்டத்தை அவள் ஆடிக் கொண்டிருந்தாள். தற்போது பெஸ்ஸியிடம் அன்டோனியோ கை கால்களை இப்படியும் அப்படியுமாக மாற்றி வைக்க சொல்லி தொடர் ஆணைகள் இடுவது அவளுடைய எளிய ஒத்துழைப்பின் எல்லைகளை தாண்டிச் சென்றது. மேலும் மேலும் என தொடர்ந்த இவ்வன்முறையால் அவள் எந்நேரத்திலும் உடைந்து சீற்றம் கொள்ளப்போகிறவளாய் தோன்றினாள்.
அண்டோனியாவுக்கு கனவு காண்பது மாதிரி இருந்தது, புதைக்கப்பட்ட இருட்டின் ஆழத்திலிருந்து அவன் அந்த சாத்தியமற்ற டென்னிஸ் வீராங்கனையை கண்ணாடி சட்டகத்திற்கு கொண்டு வர தீவிரமாக யோசித்தான். கனவில் நடப்பது மாதிரி ஆழத்து நினைவுகளிலிருந்து ஓர் இருப்பு வெளிவந்து, அது அடையாளம் காணப்பட்டதும் சட்டென வேறொன்றாக மாறிவிடுவதைப் போல, உருமாற்றம் அடைவதற்கு முன்னர் அது என்னவாக உருவம் கொள்ளப்போகிறது என்பது தெரியாததால் அதன்மீது அச்சம் படர்வதைப் போல.
கனவுகளை படம்பிடிக்கவா அவன் விரும்பினான்? இவ்வெண்ணம் அவனை நிலைகுலைய வைத்தது, கையில் விளக்குடன் ஒரு முட்டாளைப் போல் அவன் கருந்துணியின் கூட்டுக்குள் ஒளிந்திருந்தான். இன்னொரு பக்கம் தன் விருப்பத்திற்கு விடப்பட்ட பெஸ்ஸி அவலட்சன நடனம் போன்ற தன் அசைவுகளை தொடர்ந்தாள், மிகைப்படுத்தப்பட்ட டென்னிஸ் போஸ்களில் உறைந்து நின்றாள், புறங்கையால் அடிப்பது, முன்னேறி அடிப்பது, ராக்கெட்டை உயர்த்திப் பிடித்து அல்லது தரையருகே கொண்டு சென்று.. காமிராவின் கண்ணாடி துளையிலிருந்து வரும் நோக்கை பந்துகளாய் மாற்றி அவள் திருப்பி அடிப்பதாக தோன்றியது.
“நிறுத்து, என்ன முட்டாள்த்தனம் இது? என் மனதில் இருந்தது இதுவல்ல.” காமிராவை துணியால் மூடிய அன்டோனியோ அறைக்குள் அமைதியின்றி மேலும் கீழும் நடந்தான்.
எல்லாம் அந்த ஆடையின் தவறுதான், டென்னிஸ்ஸும் அதன் போர் பாவனைகளும்… வீதியில் போகிறவள் மாதிரி உடை அணிந்திருந்தால் அவன் உத்தேசித்த புகைப்படைத்தை எடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவித கண்ணியம் தேவைப்படுகிறது, பகட்டின் வெளிப்பாடு, அரசிகளின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களைப் போல. மாலைநேர உடையில் மட்டுமே பெஸ்ஸி புகைப்படத்துக்கு ஏற்ற பொருளாக இருக்கக்கூடும், கழுத்தின் கீழ் இறக்கமான ரவிக்கையில் தோலின் வெண்ணிறமும் துணியின் அடர்நிறமும் தங்களிடையே தெளிவான கோட்டை வகுத்தபடி, ஆபரணங்களின் மினுமினுப்பால் மெருகூட்டப்பட்டு, வெறும் உடலாக பார்க்கையில் கிட்டத்தட்ட தனியொரு பெண்ணாக அல்லாமல் காலாதீத இருப்பாக, பெண்மையின் சாரமான ஒன்றை வெளிப்படுத்தலாம். இங்கு சமூக நோக்கில் பார்த்தால் ஆடை என்பதும் அதுவும் அதேயளவு பொதுவான ஒன்றின் அடையாளம் தான், ஓர் உருவக சிலையின் உடலில் சரியும் ஆடை போல.
அவன் பெஸ்ஸியை நெருங்கி, அவளின் கழுத்துப் பகுதியில் இருக்கும் பித்தான்களை அவிழ்த்தான், மார்புக்கு மேலுள்ள பகுதி தெரியும்படி ஆடையை தோள்களில் சரியவிட்டான். பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த குறிப்பிட்ட வகையான பெண்களின் புகைப்படங்கள் அவன் மனதில் ஓடியது. மரச்சட்டகத்தின் வெள்ளை பின்னணியிலிருந்து முகமும், கழுத்தும், ஆடையில்லாத தோள்களின் வரைகோடும் எழுந்துவர பிற அனைத்தும் வெண்மையில் மூழ்கி மறைந்திருக்கும்.
காலத்தின், வெளியின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தற்போது அவன் எடுக்க விரும்பிய உருவப்படம் (Portrait) இதுதான்; அதை எப்படி செய்வது என்பதில் அவனுக்கு ஐயமிருந்தாலும், வெற்றிபெற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். பெஸ்ஸி மீது வெளிச்சம் விழும்படியாக ஸ்பாட்லைட்டை அமைத்துவிட்டு காமிராவை அருகில் கொண்டு சென்றான், துணிக்கு அடியில் ஆர்வமின்றி லென்ஸை சரிசெய்து கொண்டே அதன்வழி நோக்கினான். பெஸ்ஸி அங்கு ஆடையின்றி இருந்தாள்.
அவள் தன் ஆடையை காலடியில் சரியவிட்டிருந்தாள், உள்ளே வேறேதும் அணிந்திருக்கவில்லை. ஓரடி முன்னால் வந்தாள் – இல்லையில்லை ஓரடி பின்னால் சென்றாள், அது படத்தில் அவளின் முழு உடலும் நெருங்கி வருவது போல் தோன்ற வைத்தது. காமிராவின் முன்னே நிமிர்ந்து நின்று நேராக நோக்கினாள், அமைதியாக, தனித்து இருப்பவளைப் போல.
அவளின் காட்சி கண்களுள் நுழைந்து தன் காட்சிப் புலத்தை முழுமையாக நிறைப்பதை அன்டோனியோ உணர்ந்தான், துண்டு துண்டான, வழக்கமான காட்சிப் பிம்பங்களின் அலையில் அடித்து செல்லப்படாமல் அது காலவெளியில் தனித்து நின்றது. பார்வையில் ஓர் ஆச்சர்யம் தென்பட்டதும் அதனுடன் படம்பிடிக்கும் செயல் அனிச்சையாக இணைந்து கொள்வதுபோல் அன்டோனியோ செயல்பட்டான், உடனடியாக விளக்கைப் போட்டு, காமிராவை சீரமைத்து, அழுத்தினான், இன்னொரு படத்தகட்டை பொருத்தி மீண்டும் ஓர் அழுத்து, படத்தகடுகளை மாற்றி அடுத்தடுத்து எடுத்துக் கொண்டே இருந்தான்.. துணிக்குள் மூச்சுத் திணறலுடன் முணுமுணுத்தான், “இதே தான், ஆம், மீண்டும், இப்போது உன்னை சரியாக பிடிக்க முடிகிறது, இன்னொன்று..”
அவனிடம் படத்தகடுகள் தீர்ந்துவிட்டிருந்தது. துணிக்கு அடியிலிருந்து திருப்தியுடன் வெளிவந்தான். பெஸ்ஸி அவன் முன் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தாள், காத்திருப்பவளாக.
“நீ உடை அணிந்துகொள்,” உணர்ச்சிமிகுதியில் அதற்குள்ளாக வெளியே செல்லும் அவசரத்தில் இருந்தான். “நாம் வெளியே போகலாம்.”
அவள் திகைப்புடன் அவனை நோக்கி நின்றாள்.
“உன்னை படம்பிடித்து விட்டேன்,” என்றான்.
பெஸ்ஸி உடைந்து அழுதாள்.
அன்றைய தினமே அவளிடம் தான் காதலில் விழுந்துவிட்டதை அன்டோனியோ உணர்ந்தான். அவர்கள் இணைந்து வாழத் தொடங்கினர், அவன் மிகவும் நவீனரக கேமராக்களும் பிற சாதனங்களும் வாங்கினான்; இருட்டான அறை ஒன்றை ஏற்பாடு செய்தான். இரவில் தூங்கும்போதும் அவளை படம்பிடிப்பதற்கான ஏற்பாட்டை செய்திருந்தான். பெஸ்ஸி காலையில் எழுவதே ஃப்ளாஷ் ஒளி முகத்தில் பளிச்சிடும் எரிச்சலுடன் தான், அன்டோனியோ அப்போதும் தொடர்ந்து அவளின் நகர்வுகள் ஒவ்வொன்றாக படம் எடுத்துக்கொண்டே இருப்பான், அவள் தூக்கம் கலைந்து எழுவது முதல், அதற்காக அவனிடம் சீற்றம் கொள்வது, தலையணையில் முகம் புதைத்து மீண்டும் தூங்க முயல்வது, இருவரும் சமாதானம் ஆவது என படங்கள் தொடரும். இந்த புகைப்பட வன்புணர்வை காதலை வெளிப்படுத்தும் ஒருவகை செயல்பாடுகளாக அவள் ஏற்றுக்கொள்வதும் ஒரு புகைப்படமாக பதிவாகும்.
அன்டோனியோவின் இருட்டறைக்குள் படச்சுருள்களும் கழுவப்பட்டதும் படாததுமான படங்களுமாக சிதறி நிறைந்திருக்க, ஒவ்வொரு சட்டகத்தின் உள்ளிருந்தும் பெஸ்ஸி எட்டிப் பார்த்தாள். தேன்கூட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் வெளிவருவதைப் போல, ஆனால் எல்லாவற்றிலிருந்தும் ஒரே தேனீ – பெஸ்ஸி ஒவ்வொரு உணர்விலும், ஒவ்வொரு கோணத்திலும், அவளாக போஸ் கொடுத்தது அல்லது தெரியாமல் எடுத்தது, அடையாளம் கொண்ட ஒரு நபர் படிமங்களின் துகள்களாக சிதறி பரவியதுபோல.
“ஆனால் ஏன் பெஸ்ஸியை மட்டும், ஏன் இந்த பித்து? உன்னால் வேறு எதையும் படம்பிடிக்க முடியாதா?” நண்பர்களிடமிருந்து அவன் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இதுதான், பெஸ்ஸியிடமிருந்தும்.
“இது பெஸ்ஸியை பற்றியது அல்ல,” அவன் சொன்னான். “பின்பற்றும் செயல்முறையை பற்றியது. யாரை வேண்டுமானாலும் நீங்கள் படம்பிடிக்க தேர்வு செய்யலாம், அல்லது எதை வேண்டுமானாலும், எப்போதும் அதையே படம்பிடிக்க வேண்டும், பிரத்யேகமாக, காலையும் மாலையும் என எல்லா நேரத்திலும் மீண்டும் மீண்டும். சாத்தியமான அனைத்து படங்களும் தீர்ந்து போனால் மட்டுமே புகைப்படம் எடுப்பதற்கு ஓர் அர்த்தம் இருக்க முடியும்.”
ஆனால் அவன் பிரதானமாக ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கவில்லை: பெஸ்ஸி வீதியில் நடந்து செல்லும் போது அவன் அவளை கவனிப்பது தெரியாமல் அவளை படம்பிடிக்க வேண்டும், மறைத்து வைக்கப்பட்ட காமிராக்களின் பார்வையில் விழ வைத்தால் நல்லது, அவன் மறைந்திருப்பது மட்டுமில்லாமல் அவளை பார்க்காமலும் இருக்க வேண்டும், அவனது பார்வையோ அல்லது வேறு யாருடைய பார்வையும் இல்லாத சமயத்தின் ஆச்சரியத்துடன் அவளை படம்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட எதையும் கண்டுபிடிக்கும் நோக்கமெல்லாம் அவனுக்கு இருக்கவில்லை, இது சராசரி உலகியலில் எழும் பொறாமையோ சந்தேகமோ அல்ல. கண்ணுக்குத் தெரியாத பெஸ்ஸியை அவன் கைப்பற்ற விரும்பினான், முழுத்தனிமையில் இருக்கும் பெஸ்ஸி, அவனோ அல்லது பிற யாரோ உடனில்லாமல் இருக்கும் பெஸ்ஸி.
இதை பொறாமை என்று சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை, எவ்வாறாகினும் இத்தகைய லட்சியங்களை சமாளித்து உடனிருப்பது சவாலான விஷயம்தான். பெஸ்ஸி சீக்கிரமே அவனைப் பிரிந்து சென்றாள்.
அன்டோனியோ தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானான். ஒரு நாட்குறிப்பில் பதிவுசெய்ய தொடங்கினான் – புகைப்பட நாட்குறிப்புதான், வேறென்ன. பூட்டிய வீட்டுக்குள் கழுத்தில் காமிராவை தொங்கவிட்டுக்கொண்டு சுற்றிவந்தான், தன் வசதியான நாற்காலியில் தளர்வுடன் கிடந்தபடிக்கு வெறுமையை நோக்கி வலுக்கட்டாயமாக படங்களை எடுத்தான். பெஸ்ஸியின் இல்லாமையை அவன் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.
அனைத்து புகைபடங்களையும் ஓர் ஆல்பமாக தொகுத்தான்: ஆஷ் ட்ரேவில் நிரம்பி வழியும் சிகரெட் துண்டுகள், கலைந்திருக்கும் படுக்கை, ஈரத் திட்டுகள் நிறைந்த சுவர் போன்றவற்றை அதில் நீங்கள் பார்க்கலாம். இவ்வுலகில் புகைப்படத்துக்குள் அதிகம் வராதவற்றின் மீது அவனுக்கு ஆர்வம் உண்டானது, அப்படியான பொருட்களை தொகுத்து ஒரு கையேடாக ஆக்க எண்ணினான், அவை புகைப்படத்தின் சட்டகத்துக்குள் மட்டுமல்ல மனிதர்களின் பார்வையிலிருந்தே திட்டமிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவை. ஒவ்வொரு பொருளின் மீதும் பல நாட்களை கழித்தான், ஒளி நிழல் மாறுபாடுகளை பதிவுசெய்யும் பொருட்டு தொடர் படங்கள் எடுத்ததில் சில மணி நேரத்துக்குள் படச்சுருள்கள் தீர்ந்து போயின. முற்றிலும் காலியான அறை மூலையால் ஒருநாள் ஆட்கொள்ளப்பட்டான், அங்கு ஓர் உடைந்த குழாயைத் தவிர வேறேதும் இருக்கவில்லை – அவ்விடத்தை, அதை மட்டுமே தொடர்ந்து படமெடுக்கத் தோன்றியது அவனுக்கு, வாழ்நாள் இறுதி வரையிலும் கூட.
அபார்ட்மெண்ட் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. பழைய செய்தித்தாள்கள், கசங்கிய கடிதங்கள் ஆங்காங்கே தரையில் சிதறி கிடந்தன. அவற்றை படமெடுத்தான். செய்தித்தாள்களில் இருந்த படங்களும் படமெடுக்கப்பட்டன, அதன்வழியே அந்த கண்ணுக்குத் தெரியாத செய்தியாளர்களுக்கும் அவனுடைய காமிராவின் கண்களுக்கும் ஒரு மறைமுக தொடர்பு உருவானது. அப்படங்களுக்காக மற்ற காமிராக்கள் எங்கெங்கோ அலைந்து நோக்கியிருக்க வேண்டும் – போலிஸ் கைதுகள், தீப்பிடித்தெரியும் வாகனங்கள், ஓடும் தடகள வீரர்கள், அமைச்சர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
இப்போது அன்றாடப் பொருட்களின் படங்களையும் தொலைதூர செய்தி புகைப்படங்களையும் கலவையாக பொருத்திப் பார்ப்பது அன்டோனியோவுக்கு விசேஷமான மகிழ்ச்சியை அளிக்கிறது . செய்தி புகைப்பட கலைஞரின் வாழ்வை எண்ணினான், விதவிதமானவற்றை பின்தொடர வாய்ப்பளிப்பது – கூட்டநெரிசல்கள், இரத்தகளரிகள், ஒப்பாரிகள், விருந்துகள், குற்றச்செயல்கள், நாகரிக பாணி சார்ந்த தற்கால நடப்புகள், முறைமைசார்ந்த விழாக்களின் பொய்த்தன்மை. செய்தி புகைப்பட கலைஞர் சமூகத்தின் இரு எல்லைகளையும் ஆவணப்படுத்துபவர், பெரும் பணக்காரர்கள் முதல் பரம ஏழைகள் வரை. விதிவிலக்கான தருணங்களை பதிவு செய்பவர், அவை எங்கும் எல்லா காலத்திலும் நடந்துகொண்டே இருப்பதுதான் என்றாலும்.
அப்படியானால் விதிவிலக்கான தன்மைக்கு மட்டும் ஏதேனும் விசேஷ அர்த்தம் உள்ளதா என்ன? அன்டோனியோ தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ஞாயிற்றுக்கிழமை புகைப்படக்காரர்களுக்கு சரியான மறுதரப்பு இந்த செய்தி புகைப்பட கலைஞர் தானா? அவர்களின் உலகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதா? அல்லது ஒன்று இன்னொன்றை அர்த்தப்படுத்துவதா?
இப்படி எண்ணிக்கொண்டே அவன் புகைப்படங்களை கிழிக்கத் தொடங்கினான், பெஸ்ஸி இடம்பெற்ற இடம்பெறாத படங்கள், ஆர்வமிகுதியில் அவன் செயல்பட்ட இம்மாதங்களில் சேர்ந்திருந்த அனைத்துப் படங்களும் இரையாயின. சுவர்களில் தொங்கிய இன்னும் கழுவப்படாத படங்களை துண்டு துண்டாக்கினான், செல்லுலாய்ட் சுருள்களை வெட்டி எரிந்துவிட்டு படத்தொகுப்புகளை கத்தியால் குத்திக் கிழித்தான், முறையான இந்த அழித்தொழிப்பின் எச்சங்கள் யாவும் தரையில் கிடந்த செய்தித்தாள் விரிப்பில் கொட்டப்பட்டு குவியலாகக் கிடந்தது.
ஒருவேளை ஒட்டுமொத்தமாக புகைப்படக்கலை என்பதே துண்டு துண்டான தனிப்பட்ட படிமங்களின் குவியல்தான் என அவனுக்குத் தோன்றியது, அதன் பின்னணியில் என்றும் மாறாத காட்சியாக படுகொலைகளும் முடிசூட்டுதல்களும் இருந்துகொண்டிருக்கும்.
அக்குவியலை மொத்தமாக குப்பையில் எரிவதற்காக செய்தித்தாள்களின் விளிம்புகளை மடித்து பெரிய பொட்டலமாக ஆக்கினான், ஆனால் முதலில் அதை புகைப்படம் எடுக்கத் தோன்றியது. அவன் விளிம்புகளை மடித்திருந்த விதத்தில் பொட்டலத்தின் இரு வெவ்வேறு செய்தித்தாள்களில் இருந்து பாதிப் பாதிப் படங்கள் தற்செயலாக அருகருகே அமைந்து சரியாக பொருந்தி வந்திருந்தன. மீண்டும் அவன் பொட்டலத்தை லேசாக அவிழ்த்ததும் பெரிய அட்டைப்படத்திலிருந்து கிழிந்த வழுவழுப்பான துண்டுப்பகுதி ஒன்று சிதறி கீழே விழுந்தது. ஒரு ஸ்பாடலைட்டை போட்டான்; தன் புகைப்படத்தில் எல்லாமும் பதிவாக வேண்டுமென்பது அவன் லட்சியம், பாதி கிழிந்த கசங்கிய படங்கள், ஒரேசமயம் அவற்றின் உண்மையற்ற தன்மையை சாதரணமாக உணரவைத்தபடி, வண்ண மைகளின் நிழல்களாக, அர்த்தம் ஏற்றப்பட்ட திடப்பொருட்களாகவும் அதேசமயம் அந்த அர்த்தத்தை விரட்டியடிக்க முயலும் கவனத்தை விடாப்பிடியாக தன் பக்கம் இழுத்து வைப்பனவாகவும்.
இவை அனைத்தையும் ஒரே புகைப்படத்திற்குள் கொண்டுவர அவன் அபரிமிதமான தொழில்நுட்ப திறனை பெற்றிருக்க வேண்டும், அப்போதுதான் அன்டோனியோ படங்கள் எடுப்பதை நிறுத்துவான். சாத்தியமான ஒவ்வொன்றையும் செய்து பார்த்து ஒரு முழு வட்டம் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது அன்டோனியோவின் முன் எஞ்சியிருப்பது ஒரேயொரு வாய்ப்பு – அது புகைப்படங்களை புகைப்படம் எடுப்பது மட்டுமே என்பதை உணர்ந்தான், அல்லது இத்தனை நாளும் தெளிவில்லாமல் அவன் தேடிக் கொண்டிருந்த உண்மையான தேடல் பயணமே அதுதான்.
ஆங்கில மூலம்- https://archive.vanityfair.com/article/1983/8/the-adventure-of-a-photographer
டி.ஏ. பாரி
டி.ஏ.பாரிஇலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
மனமும், புகைப்படக்கருவியும் மனித மையமானவை. அவற்றால் அள்ளப்படும் காட்சிகளும் அத்தகையனவே அல்லது அவ்வாறே மனிதர்கள் விரும்ப்கின்றனர்.
காட்சிகளைக் காட்சிகளாக்குவதாக நம்பும் மனிதர்கள், காட்சிக்கு ஆடை அணிவிப்பதைக் கடமையாகவே கருதுகின்றனர். அவர்களின் கட்டுக்கு மீறி காட்சியில் நிர்வாணமும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது.
புகைப்படம் சித்திரமல்ல; காட்சி. இன்னும் நுணுக்கமாய், அகக்காட்சி. இதைத் நன்கு அறிந்திருப்பதாலேயே புகைப்படம் எடுக்கும்போது நாம் ’கவனமாக’ இருக்கப் பார்க்கிறோம்; ஓரளவு வெற்றியும் பெறுகிறோம்.
தமிழ்மொழி சக்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.