“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்” , முணுமுணுப்பாக பாடிக்கொண்டே, கண்ணாடியைப் பார்த்து தலை சீவிக்கொண்டிருந்தார் உலகநாதன்.
“இது அந்த சிவாஜிப் பாட்டல்லே. நான் கேட்டுட்டுண்டு” கண்ணாடி வழியே பார்த்தால், பக்கத்து கட்டிலில், கால்களை கட்டிக் கொண்டு முட்டியின் மேல் முகத்தை வைத்துக் கொண்டு பினு அவரையேப் பார்த்துக்கொண்டிருந்தான். ஒன்றுமறியா வெகுளியென இப்படி கண்களை விரித்துக் காட்டிப் பேசிக் கொண்டிருக்கிறானிந்த கிறுக்கன் என உலகநாதனுக்கு எரிச்சலாக இருந்தது.
“ம்ம்ம்ம்” என்று முனகிக் கொண்டே அவனை முற்றிலுமாக தவிர்த்தபடி அறையை விட்டு வெளியில் வந்தார். முன்னால் ரிசப்ஷன் கூடத்தில் அந்த ஏழுமணிக்கே பளீச்சென துடைத்தாற் போல் அமர்ந்திருந்த ஹீமரட்டி, அவரைப் பார்த்ததும் சட்டென எழுந்து சிரித்தார். மேலங்கியின் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவரிடம் இரண்டு சிகரெட்டுகளை நீட்டியதும், இன்னமும் குழைந்து கொண்டு வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்.
“முஞ்சினா ஹோகுத்தினே சார்” என்றார்.
“ஆ! பேக மருளுத்தேனே” என சொல்லிவிட்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தார். அருகிலிருக்கும் ராமையா பாலிடெக்னிக்கில் இருந்து சில மாணவர்கள் அங்கே அறை எடுத்து தங்கியிருந்தனர். பினு போன்ற சில ஐடி நிறுவன ஊழியர்களும் உண்டு. இங்கே எப்படி ஜெகதீஷ் பொத்தார் ரூம் பிடித்தான் எனத் தெரியவில்லை. ” இது தும்ப எக்கனாமிக்கல் சார். இல்லீந்தே மேக்ரி சர்க்கில், சிவாஜி நகர், மல்லேஸ்வரம், பீன்யா இன்டஸ்ட்ரியல் ஏரியா, எல்லாவு க்ளோஸ் பை. ஹத்திரதள்ளி இதே” என்றான்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் உலகநாதனுக்கு பெங்களூர் டூர் வரும். இந்த முறை பொத்தார் உடுப்பிக்கு போயிருந்ததால், இந்த ஹாஸ்டலிலேயேத் தங்கிவிட்டார். எவ்வளவுதான் ஓட்டல், போக்குவரத்து என பாத்து பாத்து மிச்சம் பிடித்தாலும், இந்த ஆண்டு மார்கெட்டிங் டல்லடித்தது.
பெங்களூரே மாறிக் கொண்டிருக்கின்றது. எங்கும் புதிய ஆட்களும் முகங்களுமாக இருந்தனர். பெரிய முகர்ஜி இருந்த காலத்தில் இரண்டே ட்ரிப்பில் ஆர்டரை ஓக்கே செய்து விடுவார். இப்போது அவருடைய பையன் பொறுப்பேற்றிருக்கிறானாம். சாம்பிள் கொண்டு வா என்கிறான். குவாலிட்டியில் அறுத்து பார்ப்பேன் என்கிறான். கொட்டேஷனில் கேள்விகள் கேட்டு குடைகிறான். காசர்கோட் பக்கத்தில் நேத்ராவதி ஆற்றில் புதிய ஜெட்டி பிராஜெக்ட்டிற்கு இங்கிருந்து பிஸ்டன்கள் அனுப்புகிறார்கள். பொறுமையாகத்தான் இந்த இளைஞர்களை சமாளிக்க வேண்டும். இரண்டு சிங்கிள் மால்ட் விஸ்கி பாட்டில் கொண்டு வந்திருந்தார். நடப்பு ஆண்டிற்கான விற்பனை இலக்கில், இந்த ஆர்டர் முக்கியமானது. ரமாவதி எம்பிஏ படிக்க ஆசைப்படுகிறாள் என சொல்லியிருக்கிறாள். அதுவும் டெல்லியில்தானாம். அம்மா வீட்டுக்கு அருகில் இருந்தால் காலேஜுக்கு வசதி என்கிறாள். விவாகரத்தில் காட்டிய தீவிரமான வீறாப்பை, பெற்ற பெண் படிப்புச்செலவுக்கென கேட்கும்போது காட்ட முடிவதில்லை. அவள் அம்மா பெரிய உத்தமன் என்று நம்பிக் கட்டியிருக்கும் அந்த டெல்லி பத்திரிகைக்காரனிடம் பணம் பெயரவில்லை என்பதால்தானே தன்னிடம் கேட்கிறாள் என்றொரு மிதப்பும் இருந்தது உலகநாதனுக்கு.
அடுத்தவன் கட்டிய பெண்ணை கல்யாணம் கட்டிய அந்த பத்திரிகைக்காரன் ஒரு கிறுக்கன். கேட்டால் ஏதாவது முற்போக்கு, ஃபெமினிச ஆதரவு என்பான். இந்த பொத்தார் ஒரு பொம்பளக் கிறுக்கன். ஊரில் குடும்பத்தை விட்டு இங்கே பொந்து போன்ற அறை எடுத்துக் கொண்டு ஊர் மேய்கிறான். இந்த எலிப்புழுக்கை பினு எதற்கு இந்த அறையில் காய்கிறது. கேட்டால் அம்மாவிற்கு துணையாக பெண்டாட்டியை திருச்சூரில் விட்டிருக்கிறேன் என்கிறான். அந்தப் பெண்ணும் இவனை மாதிரியே அகலக்கண்ணுடன் போட்டோவில் முழித்து முழுத்துப் பார்க்கிறது.
“ஏன் ஃபேமிலியை கூட்டிட்டு வந்து இங்க குடித்தனம் பண்றதுதானே?” என்றால், தோள்களைக் குலுக்கி ‘ப்ச்ச்….’ என்று மழுப்புகிறான். தீர்க்கமாக முடிவெடுக்கத் தெரியாத தற்குறி.அறைகளுக்கு பெட்ஷீட் மாற்ற வரும் பையன்களிடம் மரியாதையாகப் பேசி, அவர்களை சிகரெட் வாங்க அனுப்ப வேண்டாமென உலகநாதனுக்கு அட்வைஸ் செய்கிறான். இவன் தகுதிக்கும் பவிசுக்கும் இந்த மாதிரி மொட்டைத்தன வாசம்தான் லபிக்கும். சரியான வெகுளி கிறுக்கன். சின்ன முகர்ஜி ஒரு காரியக் கிறுக்கன். அப்பாவிடம் இருந்து பிசினெஸை வாரிசுரிமையாக சுவீகரித்துக் கொண்டு மற்றவரை தாலியறுக்கிறான். இன்னும் என்னென்ன கிறுக்குகளோ.
ஒரு செட் தோசையும் காப்பியும் வாங்கி சாப்பிட்டுவிட்டு, சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தபடி மேற்கே பார்த்தார். முனையில் ஒரு பஸ் திரும்புகிறது. ஆனால் படிகள் எல்லாம் கொத்துகொத்தாய் மனிதர்கள் தொங்கும் அளவிற்குக் கூட்டம். மேக்ரி சர்க்கிள் போய்விட்டால் அங்கிருந்து கொஞ்சம் சௌகரியமாக ஓலா வைத்துக் கொண்டு போய்விடலாம். சின்ன முகர்ஜியின் ஆட்கள் சற்று மரியாதையாகப் பார்ப்பார்கள்.
“எந்தா சாரே, டிராப் செய்யட்டே…. ஈ சர்க்கிள் தாண்டி விட்டுடறேன். அங்ஙனே பஸ் கொஞ்சம் ஃப்ரீயா கிடைக்கும்”. திரும்பினால் பக்கத்தில் பைக்கில் பினு. மீண்டும் எரிச்சல் சுள்ளென ஏறியது. மலையாளம் கலந்த தமிழில் என்னவோ கொஞ்சிக் கொஞ்சி பேசிக்கொண்டு வருகிறான் பார். இப்போதே லேட் ஆகிக் கொண்டிருக்கிறது.
சட்டென அவன் பின்னால் ஏறிக்கொண்டு. “சீக்கிரம்… சீக்கிரம்… போ” என்றார். அத்தனை நெருக்கத்தில் பினு போட்டிருந்த செண்ட் வாசனை இன்னமும் மன ஒவ்வாமையைக் கூட்டியது. அவர்கள் ஐயங்கார் பேக்கரியைத் தாண்டுவதற்குள், பஸ் அவர்களைப் பக்கவாட்டில் முந்திக் கொண்டு செல்வது போல் நெருங்கிவிட்டது. அந்த சமயமென பைக் உதறிக் கொண்டு வேகம் குறையத் தொடங்கியது.
உலகநாதனுக்கு பொறுமை குறைய, “ஃபாஸ்ட்டா போ…” என்று பினுவை உந்தினார். எதிர்க்காற்றில் அவர் பேசியது அவன் காதில் அரைகுறையாக விழ, “எந்தா…” என்று திரும்பினான். அதற்குள் பஸ் கிட்டத்தட்ட அவர்களை அணைந்தாற்போல் நெருங்க, உலகநாதன் எம்பி பினுவின் மீது கவிந்து, “இடிச்சிருவான் போலருக்கு. ஃபாஸ்ட்டா போடா” என்று எக்கி ஆக்ஸிலேட்டரைப் பிடித்து முறுக்கிவிட்டார்.
“யேய்ய்ய்…யேய்ய்…” என்று பினு கத்த, அந்த வட்ட சந்திப்பில் பஸ் மளமளவென இடதுபுறம் திரும்பத் தொடங்கியது. ஓட்டுநரின் பிளைன்ட் ஸ்பாட்டில் சுத்தமாக மறைந்திருந்த பைக்கை, பேருந்தின் நீள உடல் திரும்பி இடித்துத் தள்ளத் தொடங்கியது. உலகநாதனுக்கு சூழலின் அபாயம் விளங்கிவிட்டது. தொங்கியபடி வந்த இடது கால் தரையில் உரச, அப்படியே உடல் எடையை மாற்றி, நான்கைந்து முறை தெற்றியபடி பின் சீட்டிலிருந்து சாலைக்கு தாவி இறங்கி நடைபாதை விளிம்பில் தடுக்கி, அப்படியும் கீழே விழாமல், சற்று ஓடி, பின் நிலை கொண்டார். இரத்த அழுத்தம் சரேலென இறங்கி குப்பென்று வியர்த்து விட்டது. கால்கள் எல்லாம் எடை குறைந்தது போலிருக்க, சாலை முனையில் திரும்பி சில அடிகள் நடந்தார். அங்கே இருந்த இடைநிலை பள்ளிக்கூடத்தின் வாசல் கரும்புச்சாறு கடையில் இருந்த மாணவர் கூட்டமெல்லாம் கலைந்து இப்புறமாக ஓடிவந்து கொண்டிருந்தனர். “பஸ் பைக்கே டிக்கி… பைக்கை டிக்கி….’ ஆக்ஸிடெண்ட் மாடிதெ” என்ற குரல்கள். உலகநாதன் தன் நடையை நிறுத்தாமல், எதிர்ப்புறம் மெயின் ரோட்டுக்கு திரும்புவதற்காக வேகம் குறைந்த ஆட்டோவை நோக்கி நடக்கத் தொடங்கினார். அந்த திருப்பத்தினை பாதி அடைத்துக் கொண்டு பஸ் நின்றுவிட, படியில் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் குதித்திறங்கி திசைக்கொரு பக்கமாக ஓடி வர, இந்தப் புறம், தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல், பள்ளிக்கூட வளாகத்தை தாண்டி உலகநாதன் நடந்து சென்று, ஆட்டோவில் ஏறினார்.
“ஏனு சார், ஆக்சிடெண்ட்டா” என்று டிரைவர் கேட்க,
“ஏதோ பைக்ல ட்ரிபிள்ஸ் வந்திட்டிருப்பாங்கப் போல” அப்போதுதான் புதியதாக அந்த சம்பவத்தைப் பார்ப்பது போல திரும்பி விபத்து நடந்த இடத்தைப் பார்த்தார். பஸ் டிரைவர் இறங்கி சுற்றிக் கொண்டு நடைபாதைப் பக்கம் வந்து நின்று கொண்டிருந்தான். பஸ்ஸின் பின்சக்கரத்தின் அடியில் சிக்கியபடி பைக் தரையில் விழுந்து கிடந்தது. கால்களை விரித்துக் கொண்டு பக்கத்தில் பினு தரையில் அமர்ந்திருந்தான். இன்னமும் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது போலத் தெரிந்தது.
“பாருங்க. சின்னப் புள்ளங்க படிக்கிற ஸ்கூலுக்கு முன்னாடி இப்படில்லாம் வண்டியை ஓட்டிட்டு வந்திடறாங்க” என்றான் ஆட்டோ டிரைவர் சத்தமாக. எதிரில் இருந்த ரோஸ் சட்டை அணிந்திருந்நவர், கோபமாக, “இவனுங்கள எல்லாம் பிடிச்சு ஜெயில்ல போடனும்” என்றார். அவர் முகமெல்லாம் பறங்கிப் பழம் போல சிவந்திருந்தது.
“மேக்ரி சர்க்கிள் போப்பா” என்று உலகநாதன் சொன்னதும் ஆட்டோ இடதுபுறமாக திரும்பி மெயின் ரோட்டை நோக்கித் திரும்பியது. ரோஸ் சட்டைக்காரர், வயர்கூடையில் சாப்பாட்டு கேரியரும், தோளில் மாட்டிய புத்தகப் கைப்பையுமாக சாலையைக் கடந்து பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆட்டோவின் ரியர்வியூ கண்ணாடியில் விபத்து நிகழ்ந்த இடம் மெள்ள மெள்ள தூரமாவதைப் பார்த்துக் கொண்டே வந்த உலகநாதன், அந்தக் காட்சி முழுவதும் மறைந்ததும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
அன்றும் சின்ன முகர்ஜி உலகநாதனுக்கு கருணைக் காட்டவில்லை. குவாலிட்டி ரிப்போர்ட்டுக்கு அடுத்து முந்தைய டெலிவரி ரிப்போர்ட்டுகளைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
“மூணு கன்சைன்மெண்ட்டா டெலிவரி பத்து பதினஞ்சு நாள் தள்ளிப் போயிருக்கு லோகுஜி. பாபுஜி கையால ரிப்போர்ட் எழுதியிருக்கார் பாருங்க”
இவன் இவ்வளவு முரண்டு பண்ணுவதால்தான் பொத்தார் தன்னை மாட்டிவிட்டு ஊருக்குப் போய்விட்டிருக்கிறான் போல என நினைத்துக் கொண்டார் உலகநாதன். சின்ன முகர்ஜியை சுற்றியிருக்கும் ஆட்கள் எல்லாம் பெரிய முகர்ஜியுடன் இருந்தவர்கள்தான். அப்புறம் ஏன் இப்படி வழி கொடுக்காத மதில் சுவரென நிற்கிறார்கள் இப்போது என்று உலகநாதன் சலித்துக் கொண்டார். மீட்டிங் முடித்துவிட்டு சின்ன முகர்ஜியின் அறையை விட்டு கிளம்பி வெளியே வந்ததும், உலகநாதன், ‘எக்ஸ்யூஸ் மீ. ப்ரீஃப்கேஸை அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்” என தனியாக அறைக்குத் திரும்பினார்.
தனியாக இருந்த சின்ன முகர்ஜியிடன், இலகுவான குரலில், “இந்த ஆபிஸ் பிரஷர்ல எப்படி தம்பி உடம்பைப் பாத்துக்கிடறீங்க? ரொம்ப டென்ஷனாயிடும். அப்பப்ப ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டாத்தான் வண்டி ஓடும்” என்றவர், பொத்தார் கொடுத்திருந்த கார்டை எடுத்துப் பார்ப்பது போல,
“ஜெகதீஷ் கூட இதைப் பத்தி சொல்லிட்டிர்ருந்தான். ஏஞ்சல் டான்ஸ் பார்னு, ப்ரிகேட் ரோட் பக்கம் ஒண்ணு புதுசா இருக்குன்னு”, எவ்வளவுதான் இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தாலும், சின்ன முகர்ஜியின் முகம் சற்று இளகி விட்டிருந்தது தெரிந்தது. உலகநாதனுக்கு பின்னாடியிருந்த அறைக்கதவு மூடியிருக்கிறதா என உறுதி செய்வது போலப் பார்த்தான்.
“எட்டரை மணிக்கு சொல்லி வச்சிருக்கேன். மறக்காம வந்திருங்க” என்று அதே இலகுவான குரலில் சொல்லிவிட்டு புறப்பட்டார் உலகநாதன்.
ஏஞ்சல் பாரில் பொறுப்பில் இருந்த சிந்திக்காரனுடன் பேசுவது அவ்வளவு கடினமாகவில்லை அவருக்கு. நடனப்பெண்கள் உள்ளே வரும் பாதைக்கு நேர் எதிரே, ஒரு வளைவான சோபாவை ஒதுக்கி வைத்துக் கொண்டார். சின்ன முகர்ஜி தனியாகத்தான் வந்தான். அவன் அத்தனை நாள் காட்டிய கறார் கண்டிப்பெல்லாம், அவன் கூட இருந்த அலுவலக ஆட்களுக்கு. பெரிய முகர்ஜியின் ஆளுமையின் நிழலிலிருந்து தன்னை வெளிப்போக்கிக் கொள்ள, அவருடைய பழைய ஆட்கள் தன்னை மதிக்க அவன் அவ்வளவு முறைப்பாக இருந்ந்திருக்கிறான் என உலகநாதன் கணித்து வைத்திருந்தார். ஏதேதோ இந்திப் பாட்டுகளுக்கு பெண்கள் நடனமாட சின்ன முகர்ஜி பக்கார்டி ரம்மை சீப்பிக் கொண்டே ரசித்துக் கொண்டிருந்ந்தான். உலகநாதன் காத்திருந்த தருணமும் வந்தது. ஒரு பழைய சங்கர்நாக் பாடலுக்கு, நம்பமுடியாத வகையில் சின்ன முகர்ஜி மிகவும் உற்சாகத்துடன் கைதட்டி ரசிக்கத் தொடங்கியதுடன், எழுந்து நின்று ஆடவும் ஆரம்பித்து விட்டான். உலகநாதனும் நன்றாக ஆடிக் கொண்டிருந்த அழகிகளை விட்டுவிட்டு, சின்ன முகர்ஜியின் மீது நூறு ரூபாய் நோட்டுக்களை வீச ஆரம்பித்தார். அந்த ஒளிரும் விளக்குகள் நடுவே சின்ன முகர்ஜியும் ஒரு கோணத்தில் பினு போல அலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தான். “கொஞ்சமாவது ரோஷமான ஆண்மகனாக நடந்து கொள்” என்று ஓங்கி ஓர் அறைவிடனும் போலிருந்தது உலகநாதனுக்கு. நடு இரவு இரண்டரை மணிக்கு சின்ன முகர்ஜியை தோளில் சாத்திக் கொண்டு கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய்தான் அவன் காரில் ஏற்றிவிட்டார். மறுநாள் மாலைக்குள் தொண்ணூத்தெட்டு இலட்சத்திற்கான காண்ட்ராக்ட்டை சின்ன முகர்ஜி உறுதி செய்தான். வெள்ளிக்கிழமை மேரியாட்டின் மொட்டை மாடியில் மதிய உணவூடே ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்தனை உபரி செலவுகளையும் கணக்குப் பார்த்தால் இன்னமும் ஒரு சிங்கிள் மால்ட் பாட்டில் மிச்சமிருந்தது.
வெள்ளிக்கிழமை மாலை சீக்கிரமே அறைக்குத் திரும்பினால், அறை பூட்டியிருந்தது. ஹீமரெட்டி “அவரு நன்னாபலி கீ பிட்டதாரு” என்று சொல்லிவிட்டு சாவியை உலகநாதனிடம் கொடுத்தார்.
“யாவாகு பர்த்தானே?” என்று கேட்டபடி ஹீமரெட்டிக்கு இரண்டு சிகரெட்டுகளை வழக்கம் போல் எடுத்துக் கொடுத்தார்.
“அவரு கம்பெனி பஸ்ஸு எய்ட் தர்ட்டிக்கு குட்டஹள்ளி சர்க்கிளுக்கு பர்த்தே. அல்லி ஊட்டதனந்தரா நடந்து பருவனு” என்றார்.
பினு பஸ்ஸில் போய் வருகிறான் என்றதும்தான் உலகநாதனுக்கு உறைத்தது. இரண்டு நாட்களாக சின்ன முகர்ஜிக்கு வால்பிடித்துக் கொண்டிருந்ததில் அவருடைய நாள் முழுவதும் கழிந்துபோனது.
நினைவு வந்தவர் போல ஹீமரெட்டி, ” இவத்து போலிஸ் ஸ்டேஷன் ஹோக பேகு. லேட் ஆகும்” என்றார்.
பஸ்ஸுக்கு அடியில் பைக் சிக்கிக் கொண்டது போலிஸ் கேஸ் ஆகியிருக்க வேண்டும். உலகநாதனுக்கு சற்று சங்கடமாக இருந்தது. சனிக்கிழமை காலை குளித்துவிட்டு வரும்போது, வழக்கமாக அசட்டு பிசட்டென உளறிக் கொண்டிராமல் ஏதோ ஃபோனில் சன்னமாகப் பேசிக் கொண்டிருந்தான். உலகநாதன் உடையணிந்து கிளம்பும்வரையிலும் பேசிக் கொண்டேயிருக்க, சம்பிரதாயமாக,
“என்ன ஊருக்கா?” என்றுக் கேட்டு வைத்தார். அப்புறம் அவராகவே,”அன்னிக்கு முக்கியமான மீட்டிங்க். அதான் அப்படியே ஆட்டோ பிடிச்சுப் போயிட்டேன்” என்றார் சற்று தயக்கத்துடன்.
,
‘ஆ! அது சாரமில்லா” ஃபோன் வாயை மூடிக் கொண்டு, சிரித்தான். என்னவோ இவரை மன்னித்து விட்டது போலொரு போலித்தனம் என அவனை உற்றுப் பார்த்தவர், எரிச்சலை உள்ளடக்கிக் கொண்டு, “போலிஸ் என்ன சொல்றாங்க” என்றார்.
“ஆக்சிடென்ட் ஸ்கூலுக்கு முன்னிலாயினல்லே. அந்த ஹெட்மாஸ்டரோ யாரோ கம்ப்ளெய்ன்ட் செஞ்ஞு. போலிஸ் பைக்க ரிலீஸ் செய்யானுல்லா ” என்றான்.
அதற்குள் ஃபோனில் ஏதோ சத்தம் கேட்க, எடுத்துப் பேசியவன் “இதோ இப்போழ் ஞான் சாருனட சம்சாரிக்குஹயானு” என்றான். இவர் நிமிர்ந்து பார்க்க, ஃபோனை இவர் பக்கம் நீட்டி, “வொய்ஃப் பேசனுமாம்” என்றான்.
உலகநாதன் ஒன்றும் புரியாமல் ஃபோனை வாங்கினார். மலையாளமும் தமிழுமாக அப்புறமிருந்து பேசிய பெண்ணின் குரலில் பயம், பதற்றம், ஆற்றாமை, கெஞ்சல், அழுகை எல்லாம் இருந்தது.
போலிஸில் பெரிய கேஸ் ஆக்கிவிடப் போகிறார்கள் என்ற பயம். மூன்று நாட்களாக இவன் எதுவும் பிடிகொடுக்காமல் பேசுகிறான் என்கிற ஆற்றாமை.
“அவர் நிங்ஙள் குறிச்சு ஒருபாடு பிரஷம்சிச்சு அங்க்கிள். ஈ கேஸ் க்ளோஸ் செய்ய சஹாயிக்காமோ அங்க்கிள்” என்று புலம்பத் தொடங்கினாள்.
“இங்கல்லாம் அப்படித்தான்மா. கொஞ்சம் இழுத்தடிச்சுத்தான் முடிப்பாங்க. நான் பாத்து சொல்றேன். தைரியமா இரு” என்றார். அவர் பேசிய தமிழ் அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு புரிந்ததோ. அழுகையுடன் திரும்பத் திரும்ப நன்றி சொன்னாள். ஃபோனை திருப்பிக் கொடுக்கும்போது, பினுவின் கட்டிலின் பக்கமேஜையிலிருந்த சிறிய ஃப்ரேமில் பெரிய கண்ணுடன் அவரைப் பார்த்து இறைஞ்சுவது போலிருந்தது.
“எந்த ஸ்டேஷன்? ட்ராஃபிக் ஸ்டேஷந்தானே? என்ன சொல்றாங்க?” என்றார். பினு சற்றே மழுப்பலாக,
“போலீஸ் அல்லே. நிங்ஙள் பறஞ்சது போல, அவர் கேஸை இட்டிக்கனு போகான் ஷ்ரமிக்குன்னு” என்றான். அவன் பேச்சில் இருந்த, ‘உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்கிற தோரணை அவரை மேலும் சீண்டியது. பர்ஸை எடுத்து சரி பார்த்துக் கொண்டவர், தோள் பையையும் எடுத்து மாட்டிக் கொண்டு
“எந்த ஸ்டேஷன்ல இருக்கு பைக்? வா சொல்றேன்” என்று கிளம்பினார்.
“அது மல்லேஸ்வரம் ஸ்டேஷனில் கொண்டு போயி. ஆ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஸ்ட்ராங்கா கம்ப்ளெய்ன்ட் செஞ்ஞு. ஞான் மேனேஜ் செய்யு” என்று மழுப்பலாக எதோ சொல்ல வந்தவனைப் பார்த்து கோபமாக, “ஏதாவது சென்ஸ் இருக்கிறதா உனக்கு? ஒரு ட்ராஃபிக்ஸ் ஆக்சிடென்ட் கேஸை அந்த ஸ்டேஷனுக்கு கொண்டு போய்விட்டார்கள் என்றால் ஏதோ பெரிய சிக்கல் எனக் கூடவா புரியாது. இப்பவே போய் பார்க்கலாம் வா” என அதட்டினார்.
.
ஸ்டேஷனில் இருந்த ரைட்டர் கார்த்திகேயன் நன்றாகவே தமிழ் பேசினார். உரையாடலைத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே உலகநாதனின் பக்குவம் அவரை இளகி பேசவைத்தது.
“ஸ்கூல் ஏரியாவில் ட்ரிபிள்ஸ் போனது மட்டுமல்லாம, ராங் சைட்ல ஓவர் டேக் பண்ணிருக்காங்க. ஆக்சிடெண்ட்டு ஆனப்புறம், அங்க இருந்த ஹெட்மாஸ்டர்ட்ட ரோட்ல வாக்குவாதம் செஞ்சிட்டிருந்திருக்கார். பஸ் டிரைவர், பீட் கான்ஸ்டபிள் எல்லாரும் வலுவா ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காங்க. முக்கியமா அந்த ஹெட்மாஸ்டர் ஐயாகிட்ட நேர்ல ருத்ர தாண்டவம் ஆடிட்டார்” என்றார்.
பினு வேகமாக,
“ஞான் ட்ரிபிள்ஸ் வருன்னது கண்டோ என வெறுத சோதிச்சு. ஒச்சயொண்ணும் பறஞ்சிட்டில்லா.” என்றான். அதே பரிதாப மூஞ்சியுடன்.
கார்த்திகேயன் தலையை குறுக்காக ஆட்டி, “அவர் மத்திய சர்க்கார் கிட்ட நல்லாசிரியர் விருதெல்லாம் வாங்கியிருக்கார். இங்க எல்லாருக்கும் அவர் மேல எவ்வளவு ரெஸ்பெக்ட்டு தெரியுமா” என்றார் கோபமாக.
உலகநாதன் சற்று பினுவின் கையைப் பிடித்து அமர்த்திவிட்டு, கார்த்திகேயனிடம் தன்மையான குரலில்,
“சின்னப் பசஙக சார். பாலிடெக்னிக்ல படிக்கிறாங்க”, பிறகு பினுவை சற்றுத் திரும்பிப் பார்த்துவிட்டு, “இவர் ஐடிலதான் வேலை செய்யறார். ஆனா பசங்களுக்கு ஹெல்ப்பு செய்யப் போய் இப்படி ஆயிடுச்சு. ஊர்ல வயசான அம்மாவும், வொய்ஃபும். ரொம்ப முடியாம இருக்காங்க. அவசரத்துக்கு….”, அவர் பேசுவதைக் கேட்டும் கேட்காமலும் கார்த்திகேயன் ஏதோ பேரேட்டை புரட்டிக் கொண்டிருந்தார்.
சட்டென தோள்ப்பையை கீழே இறக்கி அதன் ஜிப்பை திறந்தார். உள்ளிருந்த விஸ்கி பாட்டில் சற்றே தெரியும்படி வைத்து அப்படியே பையை ரைட்டர் டேபிளின் பக்கவாட்டில் தரையில் வைத்தார். “என்னது… ” என்று கார்த்திகேயன் திடுக்கிட்டு அவர் குனிந்து பார்க்க
“இருக்கட்டும் சார். ஐயாகிட்ட கொஞ்சம் சொல்லுங்க. படிக்கிற பசங்களுக்கு ஹெல்ப்புன்னு இப்படி சிக்கலாகிப் போச்சு. வொய்ஃப் வேற ஊர்ல பிரசவதுக்கு இருக்காங்க. நைட்டு ஊருக்கு கிளம்பனும். கொஞ்சம் பைக்கை ரிலீஸ் பண்ணிக் கொடுத்திட்டா மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு போயிடுவோம். கேஸுக்கு எப்பக் கூப்பிட்டாலும் வந்திருவாரு”, பினுவைப் பார்த்து ஆமோதிப்பாக தலையாட்ட, அவனும் தலையாட்டினான்.
ரைட்டர் பேரேட்டை இன்னமும் சற்று நேரம் புரட்டியவர், என்னவோ விழித்துக் கொண்டாற்ப்போல,
“ஒரு மன்னிப்பு கடுதாசி எழுதிக் கொடுத்திருங்க. முக்கியமா அந்த ஹெட்மாஸ்டர் பேரைப் போட்டு மன்னிப்பு கேக்கற மாதிரி. பக்கத்துல ராய் மெக்கானிக்னு இருக்கும். போய் சொல்லிட்டீங்கன்னா வண்டிய எடுத்திட்டுப் போய் சரி பண்ணிக் கொடுத்திருவான். நம்ம பையன்தான். சகாயமா முடிச்சுக் கொடுப்பான். அப்புறமா ஐயா கேட்டார்னா கூப்பிட்டு விடறேன்” பினுவைத் திரும்பிப் பார்த்து “பாத்து நடந்துக்குங்க. திரும்பி கேஸ் வந்தா ஐயாகிட்ட சமாளிக்க முடியாது” உலகநாதன் பக்கம் கையைக் காட்டி, “சார் சொன்னதாலதான் இவ்வளவு தூரம் செய்யறேன்” என்றார்.
ராய் மெக்கானிக்கில் இருந்த ஆள் உடம்பை இறுக்கப்பிடித்திருக்கும் மஞ்சள் வண்ண டிஷர்ட் அணிந்திருந்தான். கூடையை கவிழ்த்து வைத்தாற்ப் போன்ற சுருள்முடித் தலை.”கார்த்திகேயன் சார் சொல்லி அனுப்பியிருந்தாரா? என்ன வண்டி, என்ன நம்பர்” என்று கேட்டுக் குறித்துக் கொண்டான். “கிரே கலர் ஸ்ப்லெண்டரா…. அங்க ஸ்டேஷன்ல பாத்தேன். பின்பக்கம் பூரா வேலை பாக்கனும் சார். நாளைக்கு எடுத்திட்டு வந்து எஸ்டிமேட் போட்டு வைக்கிறேன். எப்படியும் ஒருலட்சத்து அம்பதாயிரமாவது ஆகும். ஸ்டேஷனுக்கும் வேற கொடுக்கனும்” என்றான்.
உலகநாதன் தலையை ஆட்டிவிட்டு அவன் கையில் நான்கு இரண்டாயிரம் நோட்டுத்தாள்களைக் கொடுத்தவிட்டு அப்படியே கைகுலுக்கினார். அவன் சந்தோஷமாக “கவலையேப் படாதீங்க சார்” என்றான்.
பக்கத்தில் இருந்த வடா பாவ் கடையில் நல்ல கூட்டம் இருந்தது. “டீ சாப்பிடறயா? இங்க வடா பாவ் நல்லாருக்கும். இரண்டு வாங்கிட்டு வா” என்று பினுவிடம் காசு கொடுத்துவிட்டு, சாலையோரம் போட்டிருந்ந்த பிளாஸ்டிக் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டார்.
அதே பழைய வெள்ளந்தி சிரிப்புடன் வந்து டீயைக் கொடுத்தவனிடம்,
“நாளைக்கு எஸ்டிமேட் கொடுக்கிற போது ஏல்லாத்துக்கும் தலையாட்டி வைக்காத. உலக நடப்பு தெரியாம கிறுக்கனாட்டம் இருக்க. ஆனா கண்டமேனிக்கு சண்ட போட்டு சிக்கிக்கிற” என்றார். பினு ரோஷமாக சண்டை போடுவதை நினைத்துப் பார்த்தால் அவருக்கு பெரும் சிரிப்பாக இருந்தது.
“ஆ ஹெட்மாஸ்டர் ஒண்ணும் கண்டில்லா. நிங்ஙள் ஆட்டோ டிரைவரோடு பறஞ்சத கேட்டு வந்து .என்னோடு ஆக்ரோஷித்து. காணாது பறயண்டாம் என ஞான் திரிச்சு விளிச்சு அதில் ஆயாள் அஃபென்ஸ் ஆகி” என்றான்.
உலகநாதன் கண்களை விரித்து அவனை நிமிர்ந்துப் பார்த்தார். அவன் நேரெதெரில் எங்கேயோப் பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென திரும்பி அவரைப் பார்த்துவிட்டு சிரித்தான்.
“கிறுக்கனா இருக்கிறது என்ன உனக்கு மட்டுந்தான் பாத்தியப்பட்ட உரிமையா என்ன” என்று சொல்லிவிட்டு, இன்னமும் சத்தமாக சிரித்தார் உலகநாதன்.
ஸ்ரீதர் நாராயணன்
ஸ்ரீதர் நாராயணன் . அம்மாவின் மதில்கள், கத்திக்காரன் என்ற சிறுகதை புத்தகங்களின் ஆசிரியர். நேர்காணல்கள், புத்தக விமர்சனங்கள் போன்றவற்றிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் அதிக விருப்பும் ஈடுபாடும் கொண்டவர்.