/

நித்யஜாதம்: உமா மகேஸ்வரி

அப்பத்தா அரற்றிக் கொண்டிருந்தாள் “வெயிலுகந்தம்மா, காளியாத்தா, பேச்சியம்மா , மாடசாமீ,சீலைக் காரியம்மா…ஆயிரங் கண்ணுடையாளே உன் அரைக் கண்ணாலயாச்சும் இந்தக் கோராமையப் பாக்க மாட்டியா” நேரில் நிற்பவளிடம் நீதி  கேட்பது  போல் அவள்  மன்றாட்டு நீண்டு கொண்டிருந்தது.

அம்மா எதுவுமே காதில் விழாத து போல கடந்து நடந்தாள். “ஆத்தா, சோறுண்கலயா” அனிச்சையாகக் கேட்டபடி, பின் கொசுவத்தைச் சரி செய்தவாறே நடந்தாள்.

அவன் கட்டிலில் கிடந்தான் நொறுங்கிய கட்டை போல. அம்மா அவன் இடது நெற்றியில் பெரிய கிண்ணம் போல் தோண்டப் பட்ட குழியை வருடினாள். தொடத் தொட அந்தத் தடயம் மேவி விடும் என்று நம்புகிறாற் போல. நெடுநேரம் நீவிக் கொண்டிருந்தவள் கலைந்த அவன் தலைமுடியைப் பரத்தி அதை மறைக்க முயன்றாள். ஆஸ்பத்திரியில் கிடந்தப்பயுஞ் சரி, இப்பயும் சரி கூப்பிட்டா கடும் பிரயத்னத்திற்குப் பிறகு கண்ணைத் திறப்பான். “போதும் விட்டுடுங்க” என்று இமைகள் உடனே மூடிக் கொள்ளும்.

போன வாரத்திலிருந்து கஞ்சியும் உள்ளிறங்குவதில்லை.முதுகெல்லாம் குதறிப் புண்ணாகிக் கிடக்கிறது.அம்மாவுக்கு அச்சலாத்தியாக இருந்தது.அடுப்படிக்கு நடந்து அதை எடுத்தாள் .அவனுக்கு மருந்து புகட்டும் ஈயச் சங்கு, திடீரென்று பெரியதாகவும்,தூக்க முடியாத பாரமாகவும் ஆயிற்று.நிரப்ப நிரப்ப நிறையாததாக அதன் ஆழம் குழிந்து கொண்டே போனது.அவள் பிரயாசையோடு அதைப் பொறுமையாக நிறைத்தாள்.

“எம் புள்ள இந்தப் பாடுபடணுமா” பெருமூச்சோடு கண்களுக்குள்ளேயே அடங்கியது சிறு துளி.

 “அய்யா,ராசா,இத இத்தனூண்டு குடிச்சுட்டுப் படிப்பியாம் .என்னயப் பெத்தாருல்ல?”  நாக்கைக் கடித்துக் கொண்டாள். எத்தனை காலமாகச் சொல்லி வரும் வார்த்தைகள்.அந்தத் துளி உடைந்து கன்னத்தில் பெருகியது..”இதக் குடிச்சிட்டுப் படுப்பியாம் போதும். ஒறங்கு சரவணா நிம்மதியா”முணுமுணுப்பில் அவன் இமைகள் அசைந்தன.திறக்கவில்லை.உள்ளங்கையில்  அவன் தலையை ஏந்திக்  கொண்டு,சங்கை உதட்டோரம் வைக்க அவன் ஆவலோடு உறிஞ்சினான்.

 “நான் என்னத்தச் செய்வேன்,ஒரு பொட்டப் புள்ளயவும் வச்சுக்கிட்டு…இது சரியா.எம்புட்டு நாளைக்குப் போராடும் எம் புள்ள,” மனதிற்குள் அனத்தியவாறே அடுப்பு மேடையில் சங்கைக் கழுவிக் கவிழ்த்தாள். ஏதோ நினைப்பில் அதை எடுத்து குப்பைக்  கூடையில் போட்டாள். மறுபடி துழாவி  அதைத் தேடி, வீட்டின் எதிரிலிருந்த கருவேலம் புதருக்குள் எறிந்தாள்.மினுங்கி மறைந்தது அது.

 ஒளிகள் ஒளிந்து கொண்டன.ஒரு துளி கட்டிலுக்கு அடியில். ஒற்றை ஜொலிப்பு உச்சந்தலையில் உதித்துக் கொதித்தது. வெளிச்சம் தீற்றிய அம்மாவின் முந்தானை அசைந்து நகர, நகர, மற்றொருமொரு மழுங்கிய சுடர் தங்கையின் கண் நுனியில் தோன்றித் தீண்டியது. அணைந்த அடுப்புக்குள் குமுறும் ஜ்வாலை. கிளைத்துத் திரண்ட இருளுக்குள்ளிருந்து தெறித்தோடின ஒலிகள் ஏராளமாக. பரபரப்பாகத் தள்ளப் படும் ஸ்டெரக்சரின் சக்கரங்கள்.காவலாளியின் விசில் சத்தம் தலையணைக்குள்ளிருந்த ஜோதியை ஊதி அணைத்தது. பொத்தென்று முகத்தோடு மோதி வெடித்தது நாராசமாக. பாலக் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று ,நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, மிக வேகமாக வந்த லாரியின் பெரிய விளக்குகளும், சக்கரங்களும் என்னை  நெருங்கியதுதான் இறுதி ஞாபகம் 

சோர்ந்த ,தேய்ந்த செருப்பொலிகள்.செவிலியரின் சிரிப்பொலிகள். நெடுகக் காத்திருக்கும் நோயாளிகள். துணை வந்தவர்களின் பேச்சு.இங்கேயும் “இது வைரம்…தெரியுமா” பீற்றிக் கொள்ளும் ஒருத்தி “அப்படியா” என்று அவள் கையைத் தொட்டுப் பார்க்கும் இன்னொருத்தி.” வலின்னா வலி அப்டியொரு வலி. இந்த டாக்டரு கிட்ட வந்தேனா, ஒரே மாத்திரைல சரியாயிடுச்சு” “அய்யோ, வலி மாத்திரை போடாதிங்க. வயிறு புண்ணாகிடும்.”” டாக்டர் எழுதித் தந்து தான போடுறேன். அதுக்காக வலியோடவே வாழ முடியுமா,தாங்கத் தான் முடியுமா,” தலையசைப்பு.மருத்துவர் வந்ததும்  அவசரமாக எழுந்து நின்று வணங்குபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இன்னொரு மருத்துவருக்காகக்  காத்துப் பொறுமையிழந்த  வரிசையிலிருந்து ஒருத்தி செவிலியர் மேஜைக்கு ஓடி” அரைமணி நேரத்தில வருவாருன்னிங்க. ஒரு மணி நேரமாக் காணோமே? எப்ப வருவாரு” என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

 ” இட்ஸ் ஓகே.இட்ஸ் ஓகே”என்று அழும் குழந்தையைத் தட்டிக் கொண்டிருந்தாள் இளம் தாய் ஒருத்தி.

 ” டோக்கன் நம்பர் ஒண்ணு யாருங்க ? உள்ள போங்க” ஒரு ஒடிசலான, நேர்கோட்டைப் போன்ற உடல் வாகுடைய பெண் எழுந்து உள்ளே போனாள். அவள் பார்க்க எண் ஒன்று போலவே இருப்பதாக நினைத்த இளம் தாய்  சிரிப்பை அடக்கிக் கொண்டாள். அடுத்தடுத்து மனிதர்கள் எண்களானார்கள்.

அபிநயா யோசித்த படியே  மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.” எனக்கு இவனை இப்டிப் பார்க்கத் தாங்க முடில. காடு கரை அம்புட்டயும் வித்தாச்சும் அவனை வீட்டுக்கு வர வைக்கிறது  ஒம் பொறுப்பு பாப்பா,” அம்மா சொல்லி அழுதது நேற்றுப் போலிருக்கிறது. மாசக் கணக்காயிற்று. அறுவை சிகிட்சை,பரிசோதனைகள், மருந்துகள். அவன் அப்படியே தான் கிடக்கிறான்.

கட்டில்கள். கூடம் முழுக்கக் கட்டில்கள். செவிலி கையிலிறங்கும் ட்ரிப்பை மாற்றி விட்டுப்  போனாள். மரத்த முகங்கள். கண் மூடிக் கிடக்கும் நோயாளிகள். அனைத்துக்கும் மேலே இருந்ததென்னவோ நீலம். வெற்று நீலம் .விஷ நீலம்.அதைத் துழாவும் அந்தப் பாதங்கள் யாருடையவை எனக் குழப்பமாயிருந்தது.

கொலுசொலியால் என்னை  அழைக்கும் பாதங்கள்.எண்ணற்ற கண்களால் என்னை வெறித்தபடி .”வா,வா,வந்து விடு” என்று உத்தரவாக ஆரம்பித்து, நச்சரிப்பாகக் கெஞ்சலாக,கொஞ்சலாகத் தொடந்து …இடைவிடாமல்…அது தான். அதில் தான் நான் அடைக்கலம். அதுவே என் சரண் .என் மீட்சி.

அவளா, அவளுடையனவா அந்தப் பாதங்கள். அவை புறக்கணிப்பையும், அலட்சியத்தையும் தவிர வேறெதையும் தொனித்ததில்லையே ஒரு போதும். ஆடையின் நிறத்திற்கேற்ப மாறும் வண்ண மணிகள் கோர்த்த, கற்கள் பதித்த கொலுசுகள்.

“என்னையா, நானா, என்னைத் தானே? உன்னால் முடியாது” என ஏறித் தாழும் விழிகள். ஆள் காட்டி விரலும்,கட்டை விரலும் பற்றித் திருகும் தங்கச் சங்கிலி. இவையோ சதா என்னை எங்கோ கூப்பிடும்,எதிலிருந்தோ பெயர்த்தெடுக்கும் மாபெரும் பாதங்கள் …அவை ஒரு பெண்ணினுடையவை என ஏன் தோன்றுகிறது.அந்தக் காலடியோசை தவிர வேறெதுவும் எனக்குக் கேட்கவில்லை . …..நெருங்கி,நெருங்கி வரும் அவ்வோசை முன்பெல்லாம் அச்சுறுத்தியது. பயங்களும், பதட்டங்களும் அனிச்சையாக விலக, அந்தப் பெரிய பாதக் காரியைக் காணும் ஆவல் மட்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. 

அபிநயா மொபைலுக்குள் குனிந்திருந்தாள். வரிசையாக வரும் அவன்  குறுஞ்செய்திகளுக்கு இரண்டு கட்டை விரல்களும் ஒற்றி, ஒற்றி வேகமாகப் பதில் அனுப்பின. முன்பு “உங்க நம்பர் எனக்கு வேணும். , சொல்லுங்களேன்.” என்று கல்லூரி வாசலில் அவன் கேட்ட போது முறைத்தவள் தானா நான் என்று வியந்து கொண்டாள் “கொஞ்சம் வெளியே வாயேன்,” என்று புன்னகைத்துச் சொன்ன ஒரு செய்தியால் செலுத்தப் பட்டவள்  போல எழுந்து நடந்தாள். அவன்  நகங்களைக் கடித்தபடி மருத்துவமனைப் பெருமாள் கோவிலில் நின்றிருந்தான் அவன் .” யாரும் பார்த்துடப் போறாங்க” முணுமுணுத்தபடியே அவனை நெருங்கியவளை ,”எவ்வளவு மெலிந்து விட்டாள், இந்தக் கண்கள் இப்படி எப்போதும் அலைக் கழியாதே”  என்று நினைத்தான். “அபி. நீ என்னோடு வா . வந்துடு எதையும் யோசிக்காம.   செய்தி அனுப்பு .உன் முடிவு தான்” என்று பேசியபடியே,அவள் உள்ளங்கையை அழுத்தி விட்டு நகர்ந்தான்.அவள் அவன் விரைந்து நடந்து,கார்க் கதவைத் திறப்பதைப் பார்த்த படியே திகைத்து நின்றாள்.

 ஆஸ்பத்திரி கான்டீன் இட்லி காய்ந்திருந்த து.சாம்பாரில் தோய்த்து  ,விழுங்க முடியாமல் விண்டு  போட்டாள் .வேகமாகப் படியேறும் போது தன் சுரிதாரின் மேல்,கீழ் வெவ்வேறு நிறமாயும் ,துப்பட்டா சம்பந்தமில்லாத மஞ்சளிலும் இருப்பதைப் பல நாட்களுக்குப் பிறகு கவனித்தாள்.

” நான் கூப்புட்டா கண்ணைக் கூட முழிக்கல. அவர் பேரும் நினைவில்ல”சொன்னபடியே நகர்ந்தாள் அந்தச் செவிலி். “அண்ணா, சரவணா” இப் போதாவது அவன் விழித்தால் வாழ்க்கை எப்போதும் போலாகி விடும் என்று நம்பினாள் இன்னமும்..அவன் இமைகள் வீங்கி,அழுந்த மூடி இருந்தன. மொபைலைத் திறந்த போது அவன் செய்திகள் ஆக்ஞைகளாக அவளை முடுக்கின.ஆனால் அவன் சரவணனைப் பார்த்தபடி நின்றாள். பச்சை நிறத் திரைகள் நாற்புறமும் கட்டிலை மூடின.

 “இன்னிக்கு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க ” நாளைக்கு வியாழக் கிழமை என்பது போல்  சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டு மருத்துவர் அடுத்த கட்டிலுக்கு நகர்ந்தார்.அவள் அம்மாவை அலைபேசியில் அழைத்து விவரம் சொன்னாள் . பணத்தைப் புரட்டிக் கொண்டு வருகிறேனென்றாள்  அம்மா.அவளின் விசும்பல் இவளை  எதுவும் செய்யவில்லை.அவள் பைகளில் பொருட்களை அடுக்கத் துவங்கினாள்.

மதியமே அம்மா வந்து விட்டாள் .ஆம்புலன்ஸில்  சரவணனோடு அவளும்,அம்மாவும். வீட்டின் உள் நுழைந்த போது  சுவரில் மாட்டிய அப்பாவின் படத்தில் அவர் கண்கள் அசைந்தன.சாம்பல் நிறப் பறவையின் நிழல் சன்னலிலிருந்து தரையில் படபடத்தது.

அவளும், சரவணனுமாகத் திண்ணையில் உட்கார்ந்து சோப்புக் குமிழ்கள் விட்ட போது, உடனுக்குடன் உடைவது அவனுடைய குமிழ்கள் தான். அவளுக்குப் பிடிக்கவில்லையென்று கவட்டையால் குறி வைத்துப் பறவைகளை வீழ்த்துவதை விட்டு விட்டான். வீர பாண்டித் திருவிழா. ராட்சச ராட்டினம் வான் விளிம்பைத் தொடும் போது அலறிச் சாய்ந்து கொள்ள இனி சரவணனின் தோள்களில்லை.

அபிநயா கண்ணீரைச் சுண்டி எறிந்து தன்   கல்லூரிப் பையிலிருந்த புத்தகங்களை வெளியில் வைத்து விட்டுஅதில்  கொஞ்சம் உடைகளை  அடுக்கினாள் “எதுவுமே நீ கொண்டு வர வேண்டாம்” அவன் குறுஞ் செய்தியோடு  முத்தக் குறியீடு.சிகரெட் நெடியை மறைக்க வாயில் போட்ட மிட்டாய் கரைந்த அந்த முத்தங்கள். எத்தனையோ நாளாயிற்று அவற்றைப் பெற்று.

 “அண்ணா” அவன் அருகில் தயங்கி நின்றாள். அவன்  சோர்ந்த விழிகள்  நிமிர்ந்து மின்னி ஒடுங்கின. அம்மா கொல்லைப் பக்கம் குவிந்த பாத்திரங்களோடிருந்தாள். அவளுக்குக் கையசைத்து விட்டு, வட்டச் சம்புடத்தில் அம்மா வைத்திருந்த  புளியோதரையை எடுக்காமல், படியிறங்கினாள்.

“அபி,இரு .அவசரப் படாதே .அம்மா சொல்வதைப் போல் நான் படிச்சு வேலைக்குப் போய்த்தான் இந்தக்  குடும்பம் நிமிரணும்..உன் கழுத்தும் நிறையணும்” முதுகைத் தொட்ட குரல். அவள் சரவணனைப் பார்த்தாள் .அசைவற்றுக் கிடந்தான்.

கல்லூரிப் பேருந்து நிறுத்தத் திலேயே அவன் காத்திருந்தான். அபி கல்லூரிக்குப் போகவில்லை..காருக்குள் அவனுடைய முத்தங்கள் அவளைக் கிளர்த்தின..

கொலுசொலி சன்னமாக ஆரம்பித்து வலுத்துப் பெருத்தது.தாங்க முடியாததாக. கட்டிலில்  நான் கிடக்க,   காற்றுப் போல் ஒருத்தி உள்நுழைந்தாள். அவள் என்னைத் தொட்டு உலுக்கினாள் அதி மென்மையாக. மாதக் கணக்காக மரத்துக் கிடந்த பாதங்கள் விரல், விரலாக விழிப்பதை வியந்தேன். குருதியின் ஒட்டம் புத்தம புதியதாகப் பாய,நான் எழுந்து , எத் தடுமாற்றமும் எப்படி  நடக்கிறேன்?கால காலமாக நான் காலூன்றிய தரையைக் காணவில்லை யாருமற்ற வெறுமை. அவளைத் தவிர .”வா” இயல்பாக என்னோடு இயைந்து நடந்தாள் .குரல் விதிர்க்கக் கேட்டேன்.” எங்கே போகிறோம்” பதிலற்ற புன்னகை.பாதை பச்சைப் பசேலென்று ஒளிர்ந்தது. அவள் முகம் ஒரு கணம்  கூட உற்று நோக்க முடியாதபடி பேரொளியோடிருந்தது.இது வரை எங்குமே பார்த்திராத மலர்கள்..பறிக்கத் தடையேதுமற்ற கனிகள்..கமறிக் கொண்டு சொன்னாள்.”அநித்யத்திலுருந்து நித்யத்துக்கு. சூன்யத்திலிருந்து பரிபூரணத்தின் தாள முடியாத இன்பத்துக்கு.இதற்கு மேல் சொன்னால் அது வெற்று வியாக்யானமாகி விடும்.”

எடையற்று என்மேல் சரிந்து தழுவினாள். திணறினேன். சாம்பல் குருவி சட்டென்று மறைந்தது. அவள் அணைப்பு இறுகி, இறுகி  என்னைக் கரைத்தது ஆனந்தமாக. அந்தப் பெரிய பாதங்கள் நெஞ்சில் அழுந்த விரும்பினேன். அவற்றிற்குப்  பொருந்தாத சிற்றுடல் அவளுடையது.. அது என்னை ஏந்திக்  விலக்கியது எங்கோ. வெகு தூரத்திற்கு. மிகப் பிரகாசமான  யாரும்,எதுவுமற்ற  ஆகாயத்தின் அந்தரத்திற்கு.

நான் கட்டிலில் கிடக்கும் என்னைக் கண்டேன் கடைசியும்,முதலுமாக.வேறெதுவும் தெரியவில்லை. அம்மா  தரையில் படுத்தபடி அபிநயா  கல்லூரி முடிந்து வரக் காத்திருந்தாள்.

 அதற்குள் முதல் சங்கொலியைக் குடிமகன் எழுப்ப,பந்தல் போடத் தொடங்கினார்கள். அக்கம் பக்கத்துப் பெண்கள் வாயைப் பொத்தியவாறே வரத் தொடங்கினார்கள். படி நெல்லு, தீபம் போட விளக்கு என அவர்கள் கேட்க, கேட்க இன்னும் மகள்  வரவில்லையே என்று குழம்பினாள் அம்மா.

“ஆத்தா,ஒனக்குக் கண்ணில்லையா? கிழடு நானிருக்க பச்ச மண்ணைக. கொண்டுபோவியா” அப்பத்தா நெஞ்சில் அறைந்து கொண்டாள்.

உமா மகேஸ்வரி

குடும்ப உறவுகளில் இருக்கும் மானுட நாடங்களை நுட்பமாக எழுத்தில் கொண்டு வருபவர். மானுட மனதின் சிந்தனை மாற்றங்களை சட்டென்று எழுந்து பற்றிக்கொள்ளும் வசியம் நிறைந்த வலுவான படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். நினைவுகளில் இருந்து தவ்வித்தாவும் பெண்களின் அக அலைக்கழிப்புகளை, சிறுகதை வடிவ ஒருமைகளை மீறி எழுதி வெற்றியும் கொண்டவர்

உரையாடலுக்கு

Your email address will not be published.