ஸ்கூல் கட்டிடம் கருங்கற்களால் உறுதியாகச் சிறைத் தன்மையோடுதான் கட்டப்பட்டு இருந்தது. மலைகளின் மடியில் இருந்த அந்தக் கட்டிடத்திலிருந்து வெகு தூரம் தள்ளி இருந்தது மாணவியர் விடுதி. யூகலிப்டஸ் மரங்களுக்கு வடக்கே தூய வெண்ணிறச் சுவர்களோடு. அதிலிருந்து பறவைக் கூண்டைப் போல சதா பேச்சொலிகளும், சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. வார்டன் சிஸ்டர் அந்தக் கட்டிடத்தைப் பார்த்து எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது என்று நிம்மதியோடு சிலுவைக் குறியிட்டுக் கொண்டார். பிறகு தன் அறைக்குத் திரும்பி நடந்தார். உள் நுழைந்த போது பின்புற பால்கனிக் கதவு திறந்திருக்கிறதா என்று உறுதி செய்து கொண்டு, அதை வெறுமனே சாத்தி விட்டு, தன் காவி நிற அங்கியைக் கழற்றி வீசி விட்டு கண்ணாடி முன் நின்றார். பொங்கிக் குவிந்த மார்பகங்கள். அழகான வளைந்த இடை. பளபளக்கும் தோள்கள்.
“என்ன அழகு நீ” அம்மாவின் குரல் காதில் கேட்டது. நான்காவது பெண்ணாகப் பிறந்த போதே திருச் சபைக்கு அர்ப்பணிக்கப் பட்டதாலோ, என்னவோ அம்மா, அவள் பிரிவில் கண் கலங்கவில்லை. இங்கு வந்த போது இளமைப் பருவத்தின் துவக்க விளிம்பு. ஆனால் வெளிறிக் கரு வரிகள் ஓடும் சருமம். மெலிந்த உடல். வீட்டின் காலி அடுப்படி மளிகை டப்பாக்கள் போலச் சொரசொரப்பாக. இங்கே பாலும், நெய்யும், கோழிக் குழம்பும், வெண்பன்றி வறுவலும்… உணவில் இத்தனை விதமென்று தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ரகங்களும் அவளை மெருகேற்றின. பெருமூச்சோடு அலமாரியைத் திறந்தார் வார்டன். சம்பிரதாயமான உடைகளற்று அதற்குள் ஒரு ரகசிய உலகம் இருந்த து. வண்ணங்களும், வாசனைகளுமான தனி உலகம்.. . லேஸ் வேலைப் பாடுகள் நிறைந்த வித விதமான உடைகள். பூக்கள் வரைந்த ஜரிகை வேய்ந்த புடவைகள். “பிங்க் அவனுக்குப் பிடிக்கும்” என நினைத்து பிங்க்கில், முட்டிக்குக் கீழ் மட்டும் நீண்ட உடையைத் தேர்தெடுத்து டர்க்கி டவலோடு குளியலறைக்குள் நுழைந்து ஸ்விட்ச் போட்டாள். அவன் ஒளிர்ந்து தோன்றினான். திடுக்கிட்டு அலறப் போனவளை, வாயை மூடினான். “உண்மையிலேயே நான் தான் டாலு” பரபரப்போடு அவளை இழுத்தணைத்துக் கொண்டான்.
“நீ எப்ப இங்க வந்த ஜோ?” ஆசுவாசமாக அவன் மார்பில் புதைந்த படியே கேட்டாள்.
“அப்பவே. நீ தான் பால்கனிக் கதவைத் திறந்து வைத்து விட்டு நடக்கப் போயிருந்தாய்”
“ம்ம்”.. . அவன் விரல்கள் அவள் உள்ளாடையின் மேல் வருடின. ஷவரையும் திறந்து விட்டிருந்தான். அவள் விளையாட்டாக அவன் மேல் தண்ணீரை எறிந்தாள். கட்டிலுக்கு அவளைத் தூக்கி நடந்தான். முத்தங்கள் நீண்டு நீண்டன. மெத்தையில் துடிக்கும் ஈர உடல்கள் மெல்லக் கொதிப்பேறின. குளிர்ந்த நட்சத்திரங்கள் அறைக்குள் இறைந்த அக்கணம் வரை.
“நாம் இதையெல்லாம் விட்டு திருமணம் முடிப்போமா”
“முடியாது ஜோ” அவன் தோளில் முத்தமிட்டாள்.
“வருடக் கணக்காக நடக்கும் இந்தப் போலி நாடகத்தைத் தொடர்ந்து தான் ஆகணும்”. மீண்டும் உடல்கள் மூர்க்கமாகப் புரண்டன.
மாணவியர் அறைகளில் அரட்டை. படிப்புக் கூடத்திலும், நூலகத்திலும் நிசப்தம். வேப்ப மரங்களின் அடியில் வட்டமாக மினி, மிடி, நைட் பேண்ட், அழகிய சுருக்கம் வைத்த நவீன ஸ்கர்ட்ஸ் என்று விதவிதமான உடைகளில் சிறுமிகள் உட்கார்ந்து அவரவர் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தனர். பேட்மிட்டன் விளையாட்டு ஒருபுறம். மூடப் பட்டு விட்ட நூலகத்திலிருந்து புங்கை மரங்களினூடே தோளில் புத்தகப் பையோடு தனித்தனியாக நடப்பவர்கள் சிலர். கேண்டீனில் டீயும், பப்ஸூமாக சிறு வட்ட மேஜைகளில் உட்கார்ந்திருப்பவர்கள். மணி மாலை ஆறைத் தாண்ட அவசர அவசரமாக அறைகளுக்கு ஓட்டமும், நடையுமாகத் திரும்புபவர்கள். கருங்கல் சுவரால் இரண்டாவது, மூன்றாவது மாடிகளை மீற முடியவில்லை. லோடஸ் ஹால் 457 ம் அறையில் ஷீபா 604 வது தடவையாகத் தன் முகத்தைச் சுவர்க் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
“நல்லாத் தான்யா இருக்கு அது. போதும் பார்த்தது” மாலாவின் கிண்டலை அவள் பொருட்படுத்தவே இல்லை. ஐ லைனர் பிசகாமல் இருக்கிறதா? என்று சரி பார்த்தாள். முற்றுப் புள்ளி அளவேயான குட்டிப் பொட்டைச் சரியாகப் புருவங்களுக்கு நடுவே அழுத்தினாள். கொஞ்சம் யோசித்து விட்டு அதை எடுத்துக் கீழே எறிந்தாள். போட்டிருந்த த்ரீ போர்த்திற்கும், ஸ்லீவ் லெஸ் டாப்பிற்கும் அது பொருத்தமாக இல்லை என்று நினைத்தாள். ஸ்ட்ராப் லெஸ் ப்ராவிற்குள் ததும்பி மிதந்த மார்புகளைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டாள்.
கௌசி “உன் ஆளுக்காகவா இவ்ளோ மேக்கப் ,அவ்வளவு தூரத்ல இருந்து பென்சில் கோடு மாதிரி தான் தெரிவ நீ “ என்று சிரித்தாள். ஷீபா அவன் பெயரை மெல்ல மனதில் முனகிக் கொண்டாள். எப்போதும் வீட்டிலிருந்து துணைக்கு ஆளின்றி வெளியே அனுப்ப மாட்டார்கள். அப்படியும் எட்டாம் வகுப்பில் தோழிகளோடு கோவிலுக்குப் போகும் போது தொடர்ந்து வருவான். திரும்பும் போது வீடு வரை வந்து அவள் உள் நுழைவதைப் பார்த்த பிறகு தான் போவான். அவள் வகுப்புத் தோழி வனிதா
“ஒன்னயே தான் அவன் பார்க்கிறான். என்னனு தான் கேளேன்.”
“வேணாம்பா. அப்பா ஏற்கனவே ஆளனுப்பி என னைக் கண்காணிப்பார். அப்றம் என்னை டவுன்ஸ்கூலுக்குப் படிக்க அனுப்ப மாட்டார். பெரியப்பா இன்னும் கோபக் கார ர். அவனை வெட்டிப் பொலி போட்டுடுவார்”
“அப்ப நீ லவ்வே பண்ண மாட்டியா”
“ம்ஹூம். எதுக்கு வம்பு. இந்த லவ்வு. காதல் னா ஒரே அழுகை. சண்டை. சச்சரவு. சாவு இதானே? அதெல்லாம் எனக்கு வேணாம்பா”
“சும்மா போய் எதுக்கு என்னை பாலோ பண்றீங்கனு கேளு. நாங்க பார்த்துக்கிறோம்” மிகவும் தயங்கி
“எதுக்கு என் பின்னாடியே வரீங்க “என்று கேட்டு விட்டாள் ஒரு தடவை.
“நான் உங்க பின்னாடி எங்கேங்க வரேன்,நீங்க கோவில் பிரகாரம் சுத்துறீங்க. நானும் சுத்துறேன். சரி ,உங்க நம்பர் குடுங்க. “
“எனக்கு போனே இல்ல.. . வேணாம். விட்டுடுங்க. இல்ல,எங்க வீட்லருந்து உங்கள அடிப்பாங்க” என்று சொல்லி விட்டு “வெடுக்” எனத் திரும்பி நடந்தவள் பின்னாலேயே தான் நடந்தான்.
இன்னொரு முறை சண்டிகேஸ்வர ர் சந்நிதி இருட்டில் மடக்கி
“எதுக்குங்க இப்டிப் பயப்படுறிங்க. எல்லாம் நான் பார்த்துக்குறேன். உங்களுக்காக உயிரையே தருவேன் தெரியுமா”
“உங்களுக்காக ஒரு —— யும் தர முடியாது. என்னய விட்டுடுங்களேன். அப்புறம் என் படிப்பை நிறுத்துவாங்க”
“சரி. ஆனா நீங்க படிக்கிற ஊரில் தான் நானும் படிப்பேன்” என்று மீண்டும் அவள் பின்னாலேயே தான் நடந்து கொண்டிருந்தான். அப்புறம் எப்படி மனம் அவன் வசமாயிற்று என்று தெரியவில்லை. இந்த மொபைல் தான் காரணம் என்று லீலா சொல்கிறாள். ஷீபா புன்னகைத்துக் கொண்டாள் உள்ளூற.
அலங்காரக் கண்ணாடிக் காட்சிகள் ,கிண்டல்கள் தான் அறைக்கு அறை நடந்து கொண்டிருந்தன. இதையேதும் கண்டு கொள்ளாமல் புத்தகங்களுக்குள்ளும்,லேப்டாப்பிலும் மூழ்கியிருப்பவர்கள் உண்டு. அப்போது தான் வந்திருந்த துணி வெளுக்கும் பெண்ணிடம் உருப்படி எண்ணிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் சிலர். வாளி , தோளில் துவாலையோடு மாலைக் குளியலுக்கு நடந்து கொண்டிருந்தார்கள் சிலர். குடி தண்ணீர்க் குழாயில் பாட்டில்களை நிரப்புபவர்கள். பூவரசம் மரத்தடியில் சாய்ந்தபடி வான் வெறிப்பவர்கள்..
“என்னவாம்?”
“கவிதையாம்ல”
“ஓ”
வாட்ச்மேன்,மோட்டார் போடுபவர் தவிர மருந்துக்கும் ஆண்களற்ற பள்ளி. இடம் கிடைப்பதே சிரமம். பஸ் நெருக்கடியில் முடியாதவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் நின்றால் உடனே எழுந்து “நீங்க உட்காருங்க” எனும் சிறுமிகளை “நீ அந்த ஸ்கூல்லயா படிக்குற?அந்தப் பிள்ளகள் தான் இப்டி நல்ல குணமாயிருக்கும்” என்று சொல்லுமளவு கல்வியோடு நற்பண்புகளையும் ஊட்டி வளர்க்கும் பள்ளி எனும் பெயர் பெற்றது.
அவ்வளவு ஒழுங்குமுறைகள், சட்ட திட்டங்கள், அவற்றினால் உருவாகும் அயர்வு அத்தனையையும் உற்சாகமாக க் கூவிக் கிழித்துக் கொண்டு, ஒரு மாயச் சரடு போல் ஒவ்வொரு மாலையும் விடுதி வெளிச் சுவரை ஒட்டி நகரும் அருகாமை நகரில் இருந்து வரும் ரயில் வண்டி. அறை ஜன்னல்கள் விரியத் திறந்திருக்கும். இரண்டாவது, மூன்றாவது மாடிகளின் நீண்ட வராந்தாக்களில், பால்கனிகளில், மொட்டை மாடியில் குழுமியிருந்த சிறுமியர் கூட்டம் ஸ்தம்பித்துக் காத்திருந்தது அந்த ரயில் கடந்து போகும் அந்த இரண்டே இரண்டு நிமிடத்திற்குத் தான்.
6. 28,29,30… அந்தக் கூவலும், தடக்தடக் சத்தமும் கேட்கத் தொடங்கி விட்டது.
முதல் ஜன்னல் வரும் போதே
“ஹே,ஹோ,ஏய் க்ரீன் டிஷர்ட்,குள்ள வாத்து ,ஒட்டடைக் குச்சி ,ரெட்டை ஜடை” போன்ற கத்தல்கள்
“ஹே யெல்லோ சுடிதார், நீ ரொம்ப அழகாருக்கே”
பதிலுக்கு இந்தப் பெண் “நீ ரொம்ப மொக்கையாயிருக்க” என்று கத்தும்.
“ப்ளூ ஸ்கர்ட், செமடி நீ” என்று காகித ராக்கெட்டுகள் பறந்து ஈவிரக்கமற்ற கருங்கற் சுவரில் மோதி விழும். “டாட்டா, பைபை, நாளைக்குப் பார்க்கலாம்” என்று அசையும் கைகளுக்கு அநேகமாக எல்லாக் கைகளும் திருப்பி அசையும். ஒரு நிமிடம் தான். கடைசிப் பெட்டி கண்களை விட்டு மறைய. மறுபடி ரிமோட் இயக்கியது போல படிப்பவர்கள் புத்தகத்துக்குள் குனிவார்கள். அரட்டைகள் தொடரும். இல்லாத காதலனை நினைத்து கசிந்துருகுபவர்கள் நோட்டில் கிறுக்குவார்கள். டெடி பேர் அணைத்துக் கட்டிலில் கிடப்பவர்கள் கண் மூடுவார்கள். குளிருக்கு ஜன்னல்கள் சாத்தப்படும். விசில் ஊதி ஊதி ஓய்ந்த வாட்ச் மேன் “அடங்க மாட்டேன்றாளுகளே” என்று முணுமுணுத்தபடி டீ குடிக்கப் போவார். அன்று தற் செயலாக அந்தப் பக்கம் நடக்க வந்த வார்டன் இவற்றை உற்று நோக்கினார். பிறகு பெருமூச்சோடு மரங்களூடே நடக்க ஆரம்பித்தார் தன் அறைக்கு.
இரண்டடுக்குக் கட்டிலில் படுத்திருந்த கார்த்திகாவைத் தேடி வந்த கீர்த்தி அருகில் சாய்வாள். இருவரும் ஒரே போர்வைக்குள் நெருக்கி அணைத்துக் கிடப்பார்கள். மற்றவர்கள் அவசரமாக அறையை விட்டு வெளியேற அவசரமாகத் தாழ்ப்பாள் போட்டுத் தழுவி உடல்களின் ரகசியங்களைப்பரிமாறத் தொடங்குவார்கள்.
“இவ ஏன் இங்க வரா ராதாக்கா?”
“அவ பிரச்னை அவளுக்கு” ராதா சிரிப்பாள்.
“கதவைத் தட்டுவோமா”
“கொஞ்சம் பொறு”
“தூக்கம் தூக்கமா வருது”
தாழ்ப்பாள் போடாமல் கதவு சாத்தித்தானிருக்கும். தள்ளியதும் திறக்கும். . ஆனால் அறை விளக்குகள் அணைக்கப்பட்டு வெளி விளக்கின் மங்கலொளியில் போர்வைக்குள் ஆவேசமான அசைவுகள் தென்படும்..
எப்படியும் அடுத்த அறைக்கு ,வரலாம் போகலாமேயொழிய அவரவர் அறை , அவரவர் இடம் தவிர மாறிப்படுத்தால் கண்காணிக்க வரும் பெண், ஆண்ட்டி என்று அன்போடு அழைக்கப் படுபவள், விரட்டி விடுவாள்.
“விடிய விடியவா காவல் காக்கவா முடியும்” ராதாக்கா.
“சிறை காக்கும் காப்பு என் செய்யும், நிறை காக்கும் காப்பே காப்பு” என்பாள் ஷாலினி.
“இவ ஒருத்தி. அதான் வருஷாவருஷம் நீ தான திருக்குறள் போட்டில பர்ஸ்ட். அப்றம் ஏன் இப்பயிம்”
“அக்கா, ஸிச்சுவேஷன் கோட்கா” சிரிப்பு. எதற்கெடுத்தாலும் சிரிப்பு. வகுப்புக்குக் கிளம்பும் நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் மோதினாலும், சும்மா நடக்கும்போது முன்பு வந்தாலும், எதுவுமேயில்லை என்றாலும் சிரிப்புதான். அவ்வளவு சிரிப்பையும் துடைத்தெடுத்துக்காலம் பறித்துக் கொள்ளும் என்பதை அறிந்தாற் போன்ற அவசரச் சிரிப்பு.
இரவு உணவுக்கு மெஸ் மணி அடித்தது. 7. 30 லிருந்து 9வரை உணவு நேரம். ஆனால் 8மணிக்கு மேல் போனால் ருசியான வகைகள் தீர்ந்திருக்கும். இருந்தாலும் ஆறி இருக்கும். ஒரே அறையில் இருப்பவர்கள் சேர்ந்து சாப்பிடுவதெல்லாம் இல்லை. ஒரே அறையில் நண்பர்கள் இருப்பதும் இல்லை. பெரும்பாலும் நண்பர்களுக்கு வெவ்வேறு அறை தான் தரப்படும். அதனால் ஒரே ஊரிலிருந்து வந்தவர்கள், கொஞ்சம் ஒத்துப் போகிற, மனம் விட்டுப் பேச முடிகிறவர்கள் ஒரே மேஜையை வெகு நேரம் ஆக்ரமித்துப் பேசிச் சிரித்துச் சாப்பிடுவார்கள். இன்று மாத த்தின் கடைசிச் சனிக்கிழமை இரவு. வழக்கம் போல் 3பிரிவுகளாக நீண்ட உணவுக் கூடத்தில் அவரவர்க்கென்று குறிக்கப்பட்ட மேஜைகளில் உணவை வட்டிலில் வாங்கிச் சாப்பிட வேண்டியதில்லை. விடுதி வளாகத்தில் வெளியே மரத்தடியில் சாப்பிடலாம். கலந்த சாதங்கள். தக்காளி சாதம் , புளியோதரை அல்லது எலுமிச்சை சாதத்தோடு தயிர்சாதம். மற்றும் ஏதாவது ஒரு சுண்டல் , சிப்ஸ் என்று நிறையப் பேருக்குப் பிடித்தமான உணவு. மரத்தடிகளில் பொருத்தப் பட்ட குழல் விளக்கொளியில் உட்கார்ந்து அரட்டையோடு சாப்பாடு. அது முடிந்து அறைக்குத் திரும்ப, குட்நைட் சொல்லிக் கொண்டிருக்கும் போது விடுதி அறிவிப்புகளுக்கான மைக் உயிர் பெற்றது.
“எல்லோரும் வார்டன் அறைக்கு முன் கூடுங்கள்” என்ற கனிவான உத்தரவு. ஒருவரும் முகத்தை மற்றவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
“எதுக்கு இந்நேரத்தில்?”
“என்ன சொல்லக் கூப்பிடுறாங்க”
“எதாச்சும் நாளை குட்டி பிக்னிக்கா”
“இன்றே விசிட்டர்ஸ் டே முடிஞ்சிருச்சே “
“என்னவாயிருக்கும்” என்று முணுமுணுக்கும் கேள்விகள். தோள் மீது கைகள். வார்டன் அறைக்கு முன் நீண்ட வராந்தாவில் நின்றார்கள். நெடு நேரம் போலத் தோன்றியது. உட்கார்ந்து காத்திருந தார்கள். அவர்கள் வெளியே வரவில்லை. சாப்பிட்டு விட்டு வருவாங்க என்றார்கள் உதவி அக்கா.
கதவு திடீரென்று திறந்தது. அனைவர் முகத்திலும் திகில் தான். அவ்வளவு எளிதாக பெரிய வார்டன் தரிசனம் தருவதில்லை. அஸிஸ்டண்ட் வார்டனை மட்டும் தான் சந்திக்க முடியும். ஸ்கூல் லீவ் சொல்ல, ஊருக்குப் போக, வேறு சிறு பிரச்னைகளுக்கு.
திறந்த கதவுக்கு முன் மெத்தனமும், கம்பீரமுமாக நடந்து வந்தார்கள் வார்டன். சிரிப்பே அறியாத கண்டிப்பு மட்டுமே பதிந்த அந்த முகம். மணிக்கட்டுக் கீழ் கைகளும், முகமும் தவிர வெண் அங்கி மறைத்த உடல். சுருக்கங்களில் கடூரம் நெளியும் நெற்றி. மாணவிகளின் வணக்கத்தை மறுதலிப்பதைப் போன்ற தலையசைப்பு. “ப்ரைஸ் த லார்ட்” என ஆரம்பிக்க கூட்டமும் அதை எதிரொலித்தது.
“மை டியர் சில்ரன், மத்த பள்ளி, கல்லூரிமாணவர்களிடமும் ஒழுக்கத்தை , நல்ல பண்பை எதிர்பார்க்க முடியாது. ஆனா நீங்க புனித மேரியின் மாணவிகள். ஆண்களைப் பார்த்து பல்லிளிப்பதும், கையசைப்பதும் நல்லால்ல. are you all prostitutes waving at boys from your windows?”
சிறுமிகள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். “நோ திஸ் இஸ் க்ரூயல்” என்று ஒரு கத்தல்.
“அவங்க ஜஸ்ட் ஹாய் சொல்வது போல் கையசைச்சாங்க. பதிலுக்கு நாங்களும் டாட்டா சொன்னா தப்பா ? அதுக்கு இவ்ளோ பெரிய வார்த்தை நீங்க சொன்னது நல்லால்ல சிஸ்டர்” என்றது ஒரு குரல்.
“நீங்க எங்கள் மனதைப் புண் படுத்துறிங்க சிஸ்டர். நீங்க sorry கேளுங்க pls sister” இன்னொரு உடைந்த குரல்.
“ஸாரி என்ன, நீங்க இதுக்கு மன்னிப்புக் கேட்டாகணும் ஸிஸ்டர்”
“ஆமா. நீங்க சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்குங்க. மன்னிப்புக் கேளுங்க”
அடுத்தடுத்துக் குரல்கள் வெடித்துப் புறப்பட கண்டுகொள்ளாமல் அவர்கள் முகங்களில் கதவு அறைந்து சாத்தப்பட்டது. உள்ளே போய் விட்டார்கள் வார்டன்.
“என்ன திமிர் பாரேன் ”
“ப்ராஸ்ட்டிடுயூட்னா என்ன பவானிக்கா” என்றது ஒரு ஆறாம் வகுப்புச் சிறுமி.
“வெளிய வாங்க. juz say sorry. நாங்க போய்டுறோம்”
கூச்சல். குழப்பம். கூப்பாடு.
“எல்லோரும் அவங்கங்க ரூமிற்கு போங்க. இல்லாட்டி உங்களை ஸ்கூலை விட்டு வெளியே அனுப்புவோம்” என்று வாட்ச்மேனும், உதவிப் பெண்மணிகளும் அதட்டித் துரத்த வேறு வழியின்றி அறைகளுக்குப் போனார்கள்.
“டிஸ்மிஸ் பண்ணுவாங்களா மாலாக்கா”
“அது எப்படி முடியும்?விடுதி முழுசையும்? நாம் நூற்றுக்கணக்கா இருக்கோம். தப்பு அவங்க மேல தான இருக்கு?”
“ஆமால்ல?”
“ஆமாம்தான். சீரியஸா பேசிட்டிருக்கோம்”
“என்ன பண்ணுவது”
கீழிருந்து வாட்ச் மேன்
“லைட் ஆப் பண்ணிட்டுத் தூங்கப் போங்கமா. உங்க டைம் பதினோரு மணி வரை தான?”
“தாத்தா ,பேசிட்டிருக்கோம்ல?லைட் ஆப் பண்ண முடியாது “
“அப்ப நான் மெயினை ஆப் பண்ணவா” என்றார் அந்த மனிதர் ஈவிரக்கமின்றி. பவானி தடதடவென்று படியிறங்கிப் போய்,
“தாத்தா, அவங்க பேசிய வார்த்தை சரியா?” அவர் தலை குனிந்தார்.
“இதில நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லமா. என் வேல போய்டும். அவங்க லைட் ஆப் பண்ணச் சொன்னாங்க. அத நான் சொல்றேன்”
“ஏன் தாத்தா உங்க உண்மையான பேத்தினா இப்டிச் சொன்னா நீங்க சும்மா இருப்பிங்களா”
“கட்டுப்பாடான பள்ளிக் கூடம், காலேஜின்னா இப்டித் தாம்மா. போய் தூங்குங்க. போங்க”
அவர் நீண்ட குச்சியைத் தரையில் தட்டிக் கொண்டே குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து அடுத்த வரிசைக் கட்டிடத்திற்குப் போனார்.
“என்ன பண்றது”
“ப்ரின்ஸிபல் மேம் கிட்ட சொல்வோம்”
“நாளைக்கு சன் டே”
“நைன்த்திலிருந்து எல்லோருக்குமே க்ளாஸ் இருக்கு. அவங்க வருவாங்க”
“புரிஞ்சிப்பாங்களா”
“கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க”
“ப்ராஸ்ட்டிடுயூட்ஸ்.” சொல்லிப் பார்த்த மாலா அழத் தொடங்கி விட்டாள். நிறையப் பேர் விசும்பிக் கொண்டு, மொபைல் போனில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
“தாத்தா சொன்னது போல இப்ப தூங்குவோம். காலைல பார்க்கலாம்.”
விடுதி அமைதியானது. இருட்டில் நிறையச் சிறுமிகள் உட்கார்ந்திருந்தனர்.
“அப்டினா என்ன?” என்பதே அறியாத சின்னஞ்சிறுமிகள் கூகுள் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.” அவங்க ஆண்களைப் பார்க்க, பேச முடியாத தால இந்த வார்த்தையா?” லதா.
“ஏன்? ப்ரதர், பாதர் எல்லாம் ஆம்பளைங்க இல்லயா?அவங்க இவங்க ரூமிற்கு வர்ரதில்லயா, வந்தா கதவை ஏன் அடைச்சுக்கிறாங்க?, உள்ள என்ன ப்ரேயரா நடக்கும்னு நினைக்கிற?” பூங்குழலி.
“ச்சே,ச்சே ,நாமளும் இந்த மாதிரி பேசக் கூடாது. தப்பு. தூங்கு” ஸ்ரீஜா.
எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் பாவனா, “என்ன ப்ரச்னை ?”
“நான் எப்பவோ தூங்கிட்டேன்” என்று பொய்க் குறட்டை விட்டாள் பூங்குழலி.
உண்ணாவிரதமிருப்பது என்று முடிவெடுத்தார்கள். சுவர்களில் “மன்னிப்புக் கேட்கும் வரை உண்ணாவிதம்” என்று எழுதிய காகிதங்கள் ஒட்டப்பட்டன. துப்பட்டாக்கள் மரங்களில் கட்டப் பட்டு மன்னிப்புக் கேளுங்க என்று எழுதப்பட்டுப் பறந்தன. காலையில் காபிக்குக் கூட ஒருவரும் மெஸ்ஸிற்குப் போகவில்லை. சுட்டடுக்கிய ஊத்தப்பங்களும் அப்படியே கிடந்தன. ஆண்ட்டி என்று எல்லோரும் செல்லமாக க் கூப்பிடும்,உடல் நலமில்லாதவர்கள் தங்கும் அறைப் பொறுப்பாளியான பெண் மட்டும் ஒவ்வொரு அறை ஜன்னலாக வந்து , “சாப்பிட வாங்க கண்ணுகளா” என்று கெஞ்சிப் பார்த்தாள். பிறகு ஊத்தப்பப் பொட்டலங்களை ரகசியமாக எடுத்து வந்து “வாங்கிச் சாப்பிடு, சாப்பிடு” என்று முடிந்த வரை கொடுத்தாள்.
மாலா, பவானி, பூங்குழலி உட்பட ஒரு சிறு கும்பல் காலை 11 மணி போல் பள்ளி முதல்வர் அறை வாசலில் காத்து நின்றது. யாரோ உள்ளே பேசிக் கொண்டிருந்தார்கள். வர நேரமாகும் போல என்று நின்றிருந்த போது பழனித் தாத்தா “வார்டனைத் தான் மேடம் கூப்பிட்டு விட்டாங்க. உள்ள இருக்காங்க. ஓடுங்க க்ளாஸிற்கு” என்றார்.
வார்டன் சிஸ்டரை விடக் கனிவான முகம் தான் ப்ரின்ஸிபலுக்கு. நேராகவே ஆரம்பித்தார்.
“என்னாச்சு உங்களுக்கு? ஏன் குழந்தைகளை அப்படிச் சொன்னீங்க? அவங்க பண்ணினதில் என்ன பெரிய தப்பிருக்கு? அப்படியே இருந்தாலும் நீங்க இப்படிப்பட்ட வார்த்தயச் சொல்லியிருக்கக் கூடாது. போய் அவங்க கிட்ட sorry கேளுங்க.” என்று விட்டு மேஜைக்கு வந்திருந்த பைலில் குனிந்தார்.
வார்டன் எதுவுமே பேசவில்லை. அறையை விட்டு வெளியே வந்து பிரார்த்தனைக் கூடத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தார். நெடு நேரம். நீண்ட நேரம். வெளி வரும் போது வெயில் தாழ்ந்திருந்தது.
மதியமும் அவர்கள் சாப்பிட மெஸ் போகவில்லை. சாயங்காலம் மறுபடி வார்டன் ரூம் முன்பு கூட உத்தரவு.
“என்னவாகும்” ஆவலோடு நடந்தார்கள். இப்போது சிஸ்டர் உடனே வெளி வந்தார்கள். நல்ல சிவந்த நிற முகம் இப்போது கன்றிப் போயிருந்தது. குறுகிய உடல். பேச ஆரம்பித்த போது கூடவே கண்களும் சிவந்தன. “ப்ரைஸ் த லார்ட்”
“ப்ரைஸ் த லார்ட்”
“மை டியர் சில்ரன்” குரல் நடுங்கியது. “உங்களை நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது”
“எப்படி சிஸ்டர்?” கீச்சிட்டவள் வாயைப் பக்கத்தில் இருந்தவள் பொத்தினாள்.
“உங்களை அப்படிச் சொன்னது தப்பு. ஐ யம் ஸாரி. என்னை மன்..”
“சிஸ்டர்,அதெல்லாம் வேணாம் சிஸ்டர்”
“மன்னிச்சிடுங்க என்னை”
மெளனம்.
“Thank you sister. we love you sister “கூட்டம் குதூகலித்தது.
“தேங்க்யூ ,தேங்க்யூ வெரிமச்.”
சந்தோஷக் கூவல்களோடு மெஸ்ஸை நோக்கிய படையெடுப்பு. மறுநாள் வார்டன் சிஸ்டர் அறையில் பூட்டுத் தொங்கியது. சிஸ்டர் வேறு எங்கோ போய் விட்டார்கள். இனி வேறு யாரோ வருவார்கள். அன்றும் ரயில் வந்தது. உலகத்தின் எல்லா உல்லாசங்களையும் எடுத்துக் கோர்த்தது போல “தடக், தடக்” “தடக் தடக்” என்று தாளமிட்டுக் கொண்டு.
“ஹே, ஓய்,ஹாய்” ஏனோ எந்த ஜன்னலும் திறக்கவில்லை. பால்கனிகளில் யாருமில்லை. மொட்டை மாடி மொட்டையாக க் கிடந்தது.
“எங்கே போனாங்க எல்லோரும்”, பையன்கள் திகைத்து “மிஸ் யூ ஆல்” என்று கத்தக் கத்த ரயில் நகர்ந்து ஓடி மறைந்தது. அடுத்த நாள் காலை ஒரு வரிசை அறைகளில் மட்டும் பதட்டம்.
வேன் ஹாஸ்டல் உள்ளிருந்து விரைந்து வெளியேறியது. ரத்தம். வழியெல்லாம் படியெல்லாம் ரத்தம்.
“என்னாச்சு”
“ஷீபா இருக்காளே”
“ஆமா ,நம்ப 10th A ஷீபா. அவளுக்கென்ன”
“கத்தரிக்கோலால மணிக்கட்டைக் குத்திட்டாளாம்”
“ஐயோ”
“அப்புறம்?”
“ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க”
“ஏன் இப்படிச் செஞ்சா. அதிகம் பேசக் கூட மாட்டாளே, எதுக்கு?”
“தெர்லயே”.
சூழ் மரங்களும் அதையே சொல்லிக் கை விரித்தன.
உமா மகேஸ்வரி
குடும்ப உறவுகளில் இருக்கும் மானுட நாடங்களை நுட்பமாக எழுத்தில் கொண்டு வருபவர். மானுட மனதின் சிந்தனை மாற்றங்களை சட்டென்று எழுந்து பற்றிக்கொள்ளும் வசியம் நிறைந்த வலுவான படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். நினைவுகளில் இருந்து தவ்வித்தாவும் பெண்களின் அக அலைக்கழிப்புகளை, சிறுகதை வடிவ ஒருமைகளை மீறி எழுதி வெற்றியும் கொண்டவர்
மிக அருமையான நடை..
நுட்பமான கரு