மூடிய கண்ணாடி ஜன்னலுக்குப் பின் தெரிந்த குல்மொஹர் மரம் ஒரு ஒட்ட வைத்த ஓவியம் போலிருக்கிறது என்று நினைத்த மறு நொடியே அது மெல்ல உயிர் பெற்றசைந்தது. கைகளை நெட்டி முறித்து சோம்பல் கழித்தாள். விடிந்து வெகு நேரமாகி இருக்க வேண்டும். சூரியன் பரபரவென்று உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. ஏ.சி அறைசோம்பல், துக்கம், தூக்கம், அலுப்பு.. என்றேதேதோ… இல்லை. எல்லாம் வெற்று வார்த்தைகள். கற்பனைகள்.
உண்மையில் இது குளிரூட்டப்பட்ட தூய்மையான ஒரு மருத்துவமனையின் அறை. மாதக்கணக்காக இருந்திருந்து என் அறையே போல், என் பூமியே போல் குமிழ்ந்து என்னை உள் வாங்கிக் கொண்டிருக்கிறது.
அருகில் இருந்த சிறு கட்டிலில் ப்ரவீண் இல்லை. எங்கே போயிருப்பார்? யோசித்து படியே கட்டிலை விட்டிறங்க முயற்சித்த போது தான் அதை உணர்ந்தாள், படு சாதாரணமாக, இன்று வெள்ளிக் கிழமை என்பது போல. “ஆம், என் கால்களைக் காணவில்லை. இனி என்ன செய்ய முடியும்?” நைட்டி காலியான மளிகைச் சாமான் வாங்கித் தூக்கிப் போட்ட பை போலத் துவண்டு கிடந்தது. வெளியில் இந்த அதிகாலையில் யாரோ, ஏதோ கத்திக்கொண்டு போகிறார்கள். குப்பென்று வியர்த்தது.
“நர்ஸ், ப்ரவீண், அம்மா, யாராவது வாங்களேன்” சொல்ல நாவெழவில்லை. பக்க வாட்டில் மெல்லத் துழாவி அவசர அழைப்பு மணியை அழுத்தினாள். அடுத்த நிமிடமே அந்த நர்ஸ் அங்கே தோன்றினாள்.
“குட்மார்னிங்கா, சார் மருந்து வாங்கப் போயிருக்காங்க. என்ன வேணும்கா?”
நிரந்தரமாகச் செதுக்கப் பட்டு ,அதனாலேயே செயற்கை தொனிக்கும் புன்னகையோடு அவள் கேட்டாள்.
“அது…வந்து.”
“சொல்லுங்ககா. என்ன செய்யுது உடம்புக்கு?” அந்தச் சிறு பெண். அனிச்சையாக ரப்பர் பட்டையை இவள் கையில் சுற்றி ரத்த அழுத்தம் பரிசோதித்தாள். சிறிய தெர்மாமீட்டரை நெற்றியில் ஒற்றி உடல் உஷ்ணத்தையும்.
“நார்மல்கா” என்று விட்டு அனிச்சையாக அடுத்த அறைக்கு நகரப் போனவளின் மணிக்கட்டைப் பற்றி நிறுத்தினாள் வீணா.
“உங்க பேரென்ன,ம்….உச்சினிமாகாளி, என் கால்களைக் காணவில்லை” சொல்லி விட்டு எச்சில் விழுங்கினாள்.
“என்னது!”அதிர்ந்த நர்ஸ் அவள் நைட்டியை அகற்றிப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சோடு “என்னகா கெட்ட கனவா? உங்க கால் நல்லாருக்கே”
“யேய்,என்ன நீ . நான் சொல்ட்டே இருக்கேன். என் கால் ரெண்டயும் காணோம் ,காணோம்,காணோம்”. வீணாவின் கத்தலில் அவள் முகமும், அந்த அப்பாவிப் பெண் முகமும் ஒரு சேரச் சிவந்தன.
0
கட்டிலில் சரிந்து கிடந்தாள். கண்ணீர் திசைகளற்று வழிந்தோடிக் கொண்டிருந்தது. மிக நேர்த்தியாய் வெட்டி எடுக்கப் பட்டது போல். மாயமாக உருகி எங்கோ ஓடி மறைந்தது போல. சட்டென்று பென்சில் சித்திரத்தை அழித்துத் துடைத்தது போல. “என் கால்கள் எங்கே போயிருக்கும்? சொன்னால் அந்த நர்ஸ் புரிந்து கொள்ளவில்லையே.”
கதவு திறக்க அறை நிறைந்தது மருத்துவர், செவிலியர், ப்ரவீண் என்று.
ஏதோ ஒரு ஊசி புஜத்தில் ஏறியது. மென்மையான குரலில் டாக்டர்,”வீணா….நீட்டுங்க, காலைக் கொஞ்சம் நீட்டுங்க” என்றார். ஒளிக்க முடியாது அதிரும் அவர் கண்கள் மட்டும் சட்டென்று தன் முகத்தை சகஜமாக,உணர்ச்சிகளைக் காட்டாததாக மாற்றிக் கொண்டார்.
“இல்லாத காலை எப்டி டாக்டர் நீட்ட முடியும்?”
செவிலிகளைக் காலை நீட்ட வைக்கச் சொல்லி சிறிய மரச் சுத்தியலால் பாதங்கள் ,கணுக்கால் ,முழங்கால் என்று தட்டித் தட்டி
“வீணா, சொல்லுங்க உணர முடியுதா நான் தட்டுவதை?”
அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“இங்க”
தலையசைப்பு
“இப்போ” ஓங்கியே தட்டி விட் டார் வலி தெரியட்டும் என்று.
“இல்ல”
இப்போது டாக்டரால் பதற்றத்தை மறைக்க முடியவில்லை . மருந்துகளை எழுதி,விருட் என்று கிழித்து ப்ரவீணிடம் “இதெல்லாம் வாங்கிட்டு வாங்க” என்று விட்டு அவசரமாக வெளியேறிப் போனார்.
கட்டிலின் மேல் பகுதி உயர்த்தப்பட்டு ,நீட்டப்பட்ட இட்லித் தட்டை மெளனமாகச் சாப்பிட்டவள் நினைத்தாற் போல் நிமிர்ந்து “ப்ரவிண்,நீங்க சாப்டலயா? போய்ச் சாப்பிட்டு வாங்க” என்று இட்லி விள்ளலைச் சாம்பாரில் தோய்த்தாள்.
“வீணா ,உனக்கென்ன ஆச்சு திடீர்னு?”
“நிஜமாவே தெரியலபா. நீங்க சாப்பிடுங்க… என்னால் நாலு இட்லியெல்லாம் சாப்பிட முடியாது. இங்கயே சாப்பிடறிங்களா?” தன் பயத்தையும்,அதிர்ச்சியையும் இவரிடம் காட்டக் கூடாது. என்ன தான் செய்வாரு இவரும். பாவம் இரண்டு மாசமா ஆஸ்பத்திரியே கதினு. இதெல்லாம் ஏன் நடக்கிறது. கார் ஏன் சாலையோர மரத்தில் முட்டி மோதி என்னை இப்படி முறித்துப் போட்டது?
ப்ரவீணின் முகம் வறண்டிருந்தது.
“வேணாம். முடிஞ்ச வரை சாப்பிடு. இரு ,வந்திடுறேன்”. மருத்துவமனை தாண்டி நடந்து வெளியில் இருந்த கடையில் “கோல்ட் ப்ளேக்’ என்று விட்டு நீட்டிய பாக்கெட்டிலிருந்து ஒன்றை உருவி பற்ற வைத்து ஊதியதும் தான் அவன் மனம் சற்றே ஆசுவாசமுற்றது.
இன்னொன்று ” இவளுக்கு என்ன தான் ஆயிற்று” புகை கருவளையங்களாக மிதந்தது.
“ஒரு நிமிடம் நின்று நிலை கொள்ளமாட்டாள் வீட்டில். இந்தப் பக்க அடுப்பில் பால் குக்கர். இன்னொன்றில் குக்கரில் வேகும் உருளைக்கிழங்கு. புளி நனைத்த கிண்ணம், நறுக்கிய சின்ன வெங்காயம், அரைத்த வத்தல், சீரக மசாலா என்று நிறைந்த அடுப்பு மேடை. இடையே இவன் “டவல்,டவல்”, என்று குளியலறையிலிருந்து கத்துவான். காற்றாயோடி வந்து எடுத்து நீட்டி விட்டு,முன் வாசலில் கிடக்கும் செய்தித் தாளைப் பொறுக்கி டீபாயில் போட்டு விட்டு,சிட்டாய்ப் பறப்பாள் அடுப்படிக்கு உடனேயே.
ஷாப்பிங் போகும் போது, கோவில் பிரகாரத்தில் நடக்கையிலெல்லாம் அது நடையாய் இருக்காது. ஓட்டம், ஓட்டம், ஓட்டம் தான். பஞ்சு மிட்டாய் விற்பவனைப் பார்த்தால், குவிந்து கிடக்கும் புதுமண்டப பேன்ஸி ஸ்டோர்ஸ் நகைகளைக் கண்டால், ஷாப்பர்ஸ் ஸ்டாப் அருகே நெளிந்து, வினோதமான நெளிந்து நடக்கும் கம்பளியில் செய்த பொம்மைகளின் வளைந்த கால்களில் வியந்து. எதற்கெடுத்தாலும் ஓட்டம் தான். மழையின் முதல் துளிக்கே மாடிக்கு ஓடி உலரும் துணிகளை உருவி வருவாள். ” நிதானிச்சுப் போனா என்ன?”
“அப்டியே பழகிடுச்சுங்க. அப்பா ஊரில், லீவ் நாளில் சித்தப்பா வீட்டுக்கும்,எங்க வீட்டுக்குமா எந்நேரமும் ஓட்டம் தான். கோயில் வாசலில் நிற்கும் பசங்க கிண்டலடிப்பாங்க” என்னப்பா ரன்னிங் ரேஸானு”.
“ம்ம்” துணிகளை மடிப்பவளைப் வைத்த கண் வாங்காமல் பார்ப்பான்.
“என்ன பார்க்கிறிங்க,ஆபிஸ்க்கு ஓடலயா?”
“ஆமா ,வீணா”
என்ன பேர் இது வீணானு .நீ வீணா என்ன?”
“உங்களுக்கு மட்டுமென்ன ,ப்ரவீண்,நீங்க வீண் ஆ?”
அடுப்படிக்கு ஓடுவாள் மறுபடி.
அவள் தான் இப்போது கால்களைக் காணோமென்று உளறிய படி படுத்துக் கொண்டிருக்கிறாள். “சார்” நர்ஸின் குரல்.” உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க”
அயர்வோடு உள் நுழைந்தான்.
“என்ன சொல்லப் போகிறார், சின்ன விபத்து; அடி பெரிசுதான்.. L1 ,L2 blablah.. இம்மீடியட் சர்ஜரி. இப்படி இருந்த, ஆள் காட்டி விரலைக் கொக்கியாக்கி எலும்பை, எண் ஒன்றாக விரல் நிமிர்த்தி, நேராக்கியிருக்கோம் என்றெல்லாம் சந்தோஷமாகச் சொன்னவர். இன்று காணாத கால்கள் பற்றிப் பேசுவார்”
வரிசைகள் இன்றி டாக்டரின் கதவு திறந்தது.எதிர் நாற்காலியைக் காட்டினார் .எதிரே மாட்டியிருந்த அந்தக் கடலின் சித்திரம் நிஜமான ஆசுவாசத்தைத் தந்தது.ஆனால் அதில் பாதி முழுகும் கால்கள் போல மிதக்கும் பாறைகள்.
“ப்ரவீண், கவலைப்படாதிங்க.ஏற்கனவே பட்ட அடிகள், முறிவுகள் தாண்டி நடப்பார்களா என நினைத்தேன். முந்தாநாள் தான் எட்டு வைத்துப் பார்த்தாங்க. இன்னிக்கு காலைக் காணோம்கிறாங்க .எதற்கும் இந்த test லாம் எடுத்துட்டு, இந்த மாத்திரை மருந்துகளை வாங்கிட்டு வந்திடுங்க. பார்க்கலாம்.எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்வோம். நம்புவோம்.தைரியமாருங்க. சரியா”
மெளனமான தலையசைப்போடு அங்கிருந்து மருந்தகம் நோக்கி நடந்தான். மணவறையில் தன் விரல் பிடித்துச் சுற்றி நடந்த மருதாணிப் பாதங்கள். “எப்ப பாரு என்னை விட்டுட்டு ஓடுறியே என்று கொலுசு வசையொலிக்கப் பின் தொடர்ந்த கால்கள், சோபாவில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து டிவி பார்க்கும் போது “சும்மா காலை இப்டி நீட்டு” என்று தன் மடி மேல் வைத்துக் கொண்டு வருடிய மீச்சிறு பாதங்கள்.
“காணாமல் போன காலுக்கு எதுக்கு பரிசோதனை? எதுக்கு இவ்ளோ மருந்து”
“வினு ,டாக்டர் சொல்ற படி நாம் கேட்டுத் தான் ஆகணும்”
“ஒண்ணு சொல்ட்டா”
“ம்?”
“நம்ப வீட்டுக்குப் போயிடலாமா?”
“எப்படி? ஸ்டெரச்சர்லயா,வீல் சேரிலா”
“தொலைந்த காலால் நடக்க முடியாது ப்ரவீண்”
“நர்ஸ், டாக்டர் எல்லாம் இப்ப வந்துடுவாங்க. இந்த முறை உன் மூளைக்கும் ஒரு டெஸ்ட் இருக்கு”
“ஓ” இப்ப இதல்லாம் சொல்விங்க. அப்றம் ஆபிஸிலிருந்து சிகாகோ , கலிபோர்னியா, நியூயார்க்னு போறப்ப எல்லாம் என்னை மறந்துடு விங்க. எப்பவாச்சும் ஒரே ஒரு” i miss u.wish u were here “அவ்ளோதான்.
“என்ன?”அவன் புருவங்கள் நெரிந்தன.
மனதின் முணுமுணுப்பை எப்படிக் கேட்டான்?
“ஒண்ணுமில்ல’ கண்ணை மூடிக் கொண்டாள்.
“என் கால்கள்,அம்மாவைப் போலச் சின்னப் பாதங்கள். ரோமங்களேயற்ற மழுமழுப்பு. அதை விட அவற்றின் வேகம். விசை. எங்கே போயிருக்கும்” ஜன்னல் வழி பார்த்தாள்.
“அந்தப் புடவைக்குள் துள்ளும் கால்கள். ஜீன்ஸ் அணிந்து,ஹைஹீல்ஸ் அணிந்தவளின் டக்,டக் கால்கள் .மிடி உடுத்தியவளின் பறக்கும் பளிங்குக் கால்கள்….என் கால்கள் போலவே. இல்லையில்லை. என் கால்களே தான். இவள் என் கால்களைத் திருடி விட்டாளா, என்னதிது, ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறேன்? எனக்கு என்ன ஆயிற்று?” மளுக்கென்று உடைந்து தளும்பின கண்கள் …கண்களையும் பரிசோதிக்க வேண்டுமென்று மருத்துவர் சொன்னாராம்…..கண்ணீர் பெருகியது.
கதவைத் தள்ளித் திறந்த படியே “ஸ்ரீ” என்றபடி உள் நுழையும் அம்மா. அம்மாவிற்கு வீணா என்ற பெயர் பிடிக்கவில்லை. அப்பா “மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி” பாட்டிலிருந்து சொன்ன பெயராம். வீ யில் ஆரம்பிக்கும் பெயர் தான் வைக்க வேண்டுமென்று ஜோஸிய நம்பிக்கை உள்ள அப்பா.அம்மா ஸ்ரீ முதலில் சேர்த்து ஸ்ரீ வீணா என அழைக்கிறார்கள்.
“அம்மா என் கால் இரண்டும் காணோம்மா” கலங்கிச் சொன்னாள்.
“என்னடி பெனாத்துற ‘நைட்டியை விலக்கி தந்த நிற வழுவழுப்புக் கால்களைப் பார்த்து நிம்மதியாகி “இந்தா இருக்கில்லடி? ஆரம்பிச்சட்டயா வழக்கம் போல உன் கிறுக்குத் தனத்தை. உனக்கென்ன வேணும்.? உனக்கென்ன இல்ல? ஏன் இப்டிப் பிறந்ததிலிருந்து என்னைப் பாடாப் படுத்துற. மாப்பிள்ளை அவ்வளவு சங்கடப்படுறாரு. உங்கப்பா” சும்மா உளறுவா ஒம் மக… அவ பாட்டுக்குச் சரியாகி நடந்துடுவா”னு உன்னைப் பார்க்க வரவே பயப்படுறாரு. “இல்ல,நீ சொல்லு. உனக்கு என்னதான் இல்ல. என்ன வேணும் உனக்கு. எதுக்கு இப்படி அடம் பிடிச்சு செல்லம் கொழிக்கிற. நோயெல்லாம் சீராட்டக் கூடாதுனு எத்தனை வாட்டி சொல்றது உனக்கு”
“ஆமாம்மா, எனக்கு எல்லாம் இருக்கு. எதுவும் வேணாம். ம்ஹூம் எனக்கு எல்லாமிருந்தும் எதோ இல்ல. அது வேணும். இல்லமா, எனக்கு எதுவுமே இல்ல .எல்லாமே வேணும். ஒனக்குப் புரியாது” அம்மாவின் கண்கள் பயத்தில் விரிந்தன. “என்னாச்சு இவளுக்கு . பைத்தியம் பிடிச்சுப் போச்சா” தன்னிடமிருந்து விலகி. நாகரிகமாகத் திரும்பி மறைந்து விசும்பும் மகளை இழுத்து மடியில் போட்டுக் கொண்டாள்.”அழு. நல்லா மனசைத் திறந்து அழு. எதையும் கற்பனை பண்ணாம விட்டு அழு.தன்னால நடப்ப” அம்மா ஸ்ரீவீணாவின் நடுங்கும் முதுகை மெலிந்த விரல்களால் வருடினாள். அலைந்த தலை முடியைக் கோதினாள். அழுகை. அத்தனையும் மறந்து உடைந்து சிதறும் அழுகை.
“தாயே பத்திர காளி, இந்தப் பிள்ள மனசில என்ன இருக்குனே தெரியல. இவளைச் சரியாக்கு. இந்தப் பாடுபடுதே எம் பிள்ள” மனதிலோடும் கண்ணீரைக் கட்டுப் படுத்திக் கொண்டு சின்னஞ் சிறியதாகி விட்ட ஸ்ரீக் குட்டியைத் தடவினாள்.
எழுந்து தலையை முடிச்சிட்டுக் கொண்டாள் ஸ்ரீ.எதுவுமே நடக்காத து போல “அம்மா ஒனக்கு காபி சொல்லவா”
“ஒண்ணும் வேணாம். குடிச்ச மட்டில ஓடியாந்தேன். நீ என் கையைப் பிடித்து நடந்து, இந்தா இங்கனக்குள்ள இருக்கிற பாத்ரூமில போய் முகம் கழுவிக்கிறியா, கழுவித் துடைச்சு பொட்டு வச்சுக்கிட்டா கொஞ்சம் வெடிப்பாருப்ப”
“அம்மா,நான் காலே இல்லாம எப்டி..”
“வாய மூடு. நான் போறேன். எப்ப நீ இந்த அழிச்சாட்டியமெல்லாம் விட்டு நடக்கிறியோ அப்ப உன்னப் பார்க்க வரேன்”, அம்மா முந்தானையால் வாயை அடைத்து அழுதாள் சத்தமின்றி. பிறகு பைகளில் எடுத்து வந்த பழங்கள், ஹார்லிக்ஸ், அவளுக்குப் பிடித்த பொரிகடலை உருண்டை எல்லாவற்றையும் பக்கவாட்டு டேபிளில் அடுக்கினாள்.அறையை விட்டு,கதவைச் சாத்தி விட்டுப் போயே விட்டாள்.
ஸ்ரீ வீணா பெருமூச்சோடு ஜன்னலிடம் “எல்லாம் எப்போது சரியாகும்”என்று கேட்டாள். அது மெளனமாக நின்றது.
எல்லாச் சோதனை முடிவுகளும் அவளுக்கு ஒன்றுமில்லை என்றன. எலும்புகள் கூடி விட்டன. ஆனாலும் அவள் சக்கர நாற்காலியோடு மட்டுமே நடக்கக் கூடும் என்பதும் மருத்துவர்களின் அனுமானம். அறுவைச் சிகிச்சைக்கு முன்னரே அதைத் தெரிவித்துக் கையெழுத்து வாங்கியிருந்தார்கள் மருத்துவமனை விதிகளின் படி. தையல் பிரிக்குமுன்னரே அவளை நடத்திப் பார்த்த போது அவள் பாதம் கூச எட்டு வைத்து நடந்தாள். இப்போது என்னடாவென்றால் கால்களைக் காணோம் என்கிறாள்.
ரிபோர்ட்களைப் புரட்டிய டாக்டரின் முகத்தையே உற்றுப் பார்த்தபடி எதிரே உட்கார்ந்திருந்தான் ப்ரவீண். சித்திரக் கடல் அவன் மனதிற்குள் அலையடித்தது.
“வீணாவை ஒரு மனநல மருத்துவரிடம் காட்ட வேண்டும். இதே ஹாஸ்பிடலிலும் இருக்காங்க. அவங்க சம்மதிப்பாங்களா” டாக்டர் முகம் இன்னும் குறிப்பேட்டிலிருந்து நிமிரவில்லை.
ப்ரவீண் குலைந்த குரலில் “ஏன் டாக்டர்,அவளுக்கு என்ன, மூளையில் ஏதாவதா பிரச்னையா, கண்ணிலா”
“இல்லை எல்லாமே நல்லாதானிருக்கு.”
“அப்ப அவ காலைக் காணோம் என்பது பொய்யா டாக்டர்” பதைபதைத்தான் அவன்.
“இல்லை. ஸ்ரீ. வீணா பொய் சொல்லவில்லை. அவங்க காலை அவங்க மனம் உணரவில்லை. எதனாலோ அப்டி நினைக்கிறாங்க நீங்க phantom legs என்று கேள்விப் பட்டிருப்பிங்க… அதாகவும் இருக்கலாம். இப்ப எதையும் sure ஆ சொல்ல முடில தம்பி”
“இல்லை டாக்டர். தெரியல .இதை குணமாக்கிடலாமா? சர்ஜரி பண்ணனுமா எதும்?”
“தேவையில்லை .பெரும்பாலும் தானாகவே சரியாகி விடும். ஆனால் இவங்களுக்கு பல எலும்பு முறிவுகள் என்பதால்….ஆனால் அதெல்லாம்.சரியாகிடுச்சு. she is young. அவங்களை சைக்கியார்டிஸ்ட் இடம் பேச வைத்துப் பார்க்கலாம்.நாளைக்கு.சரியா?”
“சரி டாக்டர் .அவளுக்கு நல்லாகிட்டா போதும்”
அவன் நன்றி சொல்லி வெளியேறினான்.
இவள் என்னவோ முணுமுணுத்தபடி ஜன்னலைப் பார்த்துப் படுத்திருந்தாள்.
“எல்லா ரிசல்ட்டும் சரியா இருக்கு. உன்னை மனநல மருத்துவரிடம் பேச வைக்கணுமாம்.அதுக்காவது ஒத்துழைப்பாயா?”
“நான் பைத்தியமா?”. அப்பாவிச் சிறுமி போல அழத் துவங்கும் விழிகளோடு கேட்டாள்.
“ச்சேச்சே ,இல்லடி இல்ல.எதோ பயத்தால். phantom legs ஸோ என்னவோ மெடிகல் டெர்ம் சொல்றாங்க..புரியல.அவங்களுமே வருத்தம தான. படுறாங்க.உன் காலிருப்பதை உன்னாலேயே உணர முடியலயாம்”
“எனக்கென்ன நேர்த்திக் கடனா இருக்கிற காலை இல்லைங்கிறதுக்கு. நிஜம்மாவே என் கால் போயிடுச்சு ப்ரவீண். ப்ளீஸ் பிலிவ் மீ. அது எப்படி உங்க கண்ணுக்கெல்லாம் தெரியுதுனு புரில”
ஆயாசமாக, மெளனமாக உட்கார்ந்திருந்தான்.
“ரொம்ப டயர்டா இருக்கு வினு . நான். இன்னிககு வீட்டுக்குப் போய்த் தூங்கவா, உங்கம்மா அல்லது மாரிக்கா உனக்கு துணைக்கு வரச் சொல்லவா?நாளைக்குக் காலைல office போயே ஆகணும் . உன் கவுன்சலிங் சாயங்காலம் தான்”
“நீங்க தினமுமே வீட்லயே தூங்குங்க ப்ரவிண். அம்மா வர மாட்டாங்க. மாரிக்காவே இங்க இருக்கட்டும். அவங்களுக்கு வீட்ல என்ன வேலை”
“நம்ப இங்க இருக்கப்போ நமக்கு மதியம் சமைச்சுத் தராங்க இல்ல?”
“நானும், அக்காவும் இங்கேயே கேண்டீன்ல சாப்பிட்டுக்கறோம். நீங்க நல்ல ஹோட்டல்ல..இப்ப போய் மாரிக்காவை காரில் அனுப்புங்க.”
“சரி,நிம்மதியாத் தூங்கு.நான் கிளம்புறேன்”
அவன் வெளியேறினான்.
மாரிக்கா “தாயீ” என்று மருத்துவ மனையின் நிசப்தத்தைக் கலைப்பது போல் கூவிக் கொண்டு வந்தாள்.
இவள் “ஷ்” என்று ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்தாள்.
“உனக்குப் போயி இந்தக் கதி வந்திருக்கே பாப்பா, தாயீ. அந்தக் கருமாரிக்கே கண்ணில்லாமப் போச்சா, நீயில்லாம வீடு வீடாவே இல்ல தாயி. அல்லாஞ் சரியாக்கிடுவா நம்ப ஆத்தா சீலக்காரி. நீ நிம்மதியாத் தூங்கு பாப்பா”
“சரி.தானாவே சரியாய்டும்னு தான் சொல்றாங்களாம். நீங்க சாப்பிட்டிங்களா மாரிக்கா”
“என்னத்த.சோறு தொண்டைக்குள்ளயே இறங்கல தாயி.நீ வந்து சிலுசிலுனு நடந்தாத்தேன் எல்லாம் நல்லாகும். நான் பெத்த பிள்ளக கூட உன்னய மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டதில்லயே. உனக்கிப்போயி…”
“அப்டிலாம் புலம்பக் கூடாது மாரிக்கா .இங்கே திட்டுவாங்க .படுத்துத் தூங்குங்க”
“இது தம்பி படுக்கிற மெத்தையில்ல?நான் வேணா அங்கிட்டுப் போய் படுத்துக்கவா”
“இதுவும். ஆஸ்பத்திரி மெத்தை தான் ..உங்க தம்பி பெட் இல்ல.இங்கயே தூங்குங்க மாரிக்கா”
“அப்ப சரி. நீ படிக்கணுமா ,லைட்ட அமத்திடவா”
“கொஞ்ச நேரம் படிக்கிறேன் நர்ஸ் வருவாங்க .ராத்திரி சாப்பிட மாத்திரை தர .லைட் ஆப் பண்ணிடுவாங்க. நீங்க தூங்குங்க”
மாரிக்கா சிறிய கட்டிலில் கூனிக் குறுகிப் படுத்துக் கொண்டாள்.
விளக்குகள் அணைக்கப் பட்ட பிறகும் உறக்கம் வரவில்லை. ஒரு நாள் .இரண்டு நாள். மூன்று நாள் .மன நல மருத்துவர் அவள் கால்கள் இருக்கின்றன என்பதைப் பேசியும், புகைப்படமெடுத்துக் காட்டியும் அவள் நம்பவில்லை. உறக்கமில்லா இரவுகளில் அவள் கால்கள், அம்மாவின் கால்கள், அப்பாவின் கால்கள் என்று எண்ணற்ற கால்கள் அவள் மனம் முழுவதும் பின்னிப் பின்னித் தோன்றின…கோலமிடக் குனிந்தநிலையில் பச்சைநரம்பு புடைத்த அம்மாவின் கால்கள். வெரிகோஸ் வெயின் வந்த அப்பாவின் கால்கள். குழந்தையில் பாதத்தில் உட்கார வைத்து அவள் கழிவு வெளியேற்றிய ஆச்சியின் கால்கள். துணிக்கொடிகளில் யாரோ கால்களைக் கழற்றிப் போட்டிருந்தார்கள்.
பசு நீல அலையாடும் கொட்டகுடி ஆற்றங்கரையில் நீரில் ,முழங்கால் முங்க உட்கார்ந்திருந்தாள். சிறு மீன்கள் விஸ்வரூபமெடுத்து அவள். கால்களைக் கவ்விச் செல்லக் கண்டு அலறினாள்.
நடமாடுபவர்கள் ஒருவருக்குக்கூடவா கால்கள் இருக்காது, எல்லோரும் அந்தரத்தில் நடந்து போனார்கள். அடுப்பில் குக்கருக்குள் தன் கால்கள் வெந்து, குழம்பிக் குழைந்து போவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பருந்துகளின் அலகில் இரையாகப் பறக்கும் தன் கால்களைக் காப்பாற்றக் கடவுளில்லையா என இறைஞ்சினாள்.
“நட, நட, நட என்று அப்பா தன் இரு பாதங்களின் மீது குட்டி ஸ்ரீயின் பாதங்களை வைத்து, கைகளால் அவள் இரு கைகளைப் பற்றிக் கொண்டு நடக்கப் பழக்கும் புகைப் படம் ஒன்று அப்பா வீட்டில் இருக்கிறது. இன்னும் ஓட்டப் பந்தயங்களின் போது மெடல் வாங்கும் புகைப்படங்கள்… “இனி கோயில் பிரகாரம் எப்படிச் சுற்றுவேன்? வீட்டைத் தாண்டி ஊரெல்லையில் இருக்கும் சிறிய குன்று வரை ப்ரவீணுடன் நடக்க மாட்டேனா? வேலப்பர் கோயில் படிகளில் விரைந்தோட வேண்டுமே…. கரைந்து கரைந்து காணாமல் போயின என் காலடிகள்….இப்படியே எண்ணங்கள் பெருக விடிய விடிய உறங்காமல் ஜன்னல் விளிம்பில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
ப்ரவீண் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்தால் இருபது நிமிடம் இருந்தாலே அதிகம் .வேண்டுமென்றே யாராவது காலில்லை; நடக்க முடியாதென்று சொல்வார்களா. ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? என் கால்கள். நொண்டிக் கட்டத்தில் வாகாகக் ஒட்டாஞ்சில்லை நகர்த்தி விளையாடியது. நந்தவனச் செடிகளுக்கிடையே சித்ராவோடு கண்ணாமூச்சி ஆடிய நாட்கள். அவற்றைத் தேய்த்தழித்தது யார்? ஏன்? இப்படியே குழம்பித் தவித்தாள்.
“உனக்கு என்ன செய்யுதுனு சொன்னால் தானம்மா சரியாக்க முடியும்”
அந்த மருத்துவருக்குத் தகப்பனின் குரல். உண்மை தானே? அடுத்த நாள் மாரிக்கா கடைக்குப் போகிறேன் என்று போனார்கள். பிறகு மருத்துவமனைச் சமையலறையில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெயைச் சுட வைத்து எடுத்து வந்தாள்.
“மாரிக்கா”
“இதா வந்திட்டேன்ல மாரிகா. எங்க ஒங் காலை இப்டி நீட்டு”
என்று தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
“அக்கா,எனக்குத் தான்…”
இவள் ஆரம்பிக்க “சரி,சரி இப்டித் திரும்பி உட்காரு. உன் காணாமப் போன காலை நானும் பாக்குறேன். என்ன இப்ப ,நீ சொல்றது தேன் சரி,சரினுட்டுப் போறேன்”
அவள் இவள் காலை நைட்டியிலிருந்து உருவி எடுத்தாள். இவள் தொடை வரை ஏறிய நைட்டியை கூசி இறக்க “ஒண்ணும் அய்யரவுப் படாத. நர்ஸூங்க அல்லாரும் வந்திட்டுப் போய்ட்டாங்க.. தம்பியும் எப்பச் சரியாகுமோன்னு தன்னால தவதாயப் பட்டுட்டு ஆபிஸ் போயிருச்சு. ரூமு கதவையும் பூட்டிட்டேன்.நீ பாட்டுக்கு செவனேனு இரு.எங்கே தொடுறேனு தெரியுதா”
உதடு பிதுக்கல். தோள்களை ஏற்றி இறக்கல்.
“சொகம்மாயிருக்கா” வெதுவெதுப்பான எண்ணெய் தடவி நீவினாள்.
இவள் கண் செருகத் தலையசைத்தாள்.
“எங்க அப்பாரு,தாத்தா,பாட்டனாரு எல்லோரும் சுருண்ட நரம்பு, எலும்பு முறிவுக்கெல்லாம் இப்டி எண்ணெய் தடவிக் கட்டுப் போடுறவுக. மாக் கட்டில்ல. வார வாரம் எண்ணெய் தடவி இழுத்து விட்டுக் கட்டுவாக .என்ன ஒரு 40நாள். நானும் பார்த்துப் பார்த்து , எங்கப்பா கிட்ட கேட்டுக் கேட்டு இதப் பழகிட்டேன். அதில நான் இரட்டப் பிள்ள பெத்தவளா எப்பேர்ப்பட்ட சுளுக்கும்,பிசகும் போய்டும்.”
“உங்களுக்கு இரட்டைப் பிள்ளையா அக்கா? சொல்லவே இல்ல?”
“இருந்தாத் தான சொல்ல.அத விடு கண்ணு பெத்தது அஞ்சு.செத்த து மூணு”
இவள் முகம் துவண்டது. அவள் விரல்கள் காலின் சதைகளை, நரம்புகளை உருவி விட்டவாறிருந்தன. அழுத்தமான நீவலின் வலி உடலெங்கும் இதமாகப் பரவ இவள் கிறங்கினாள்.
“அப்டியே படுத்துக்கபா”
என்று நைட்டியின் கைகளைச் சுருட்டி விட்டு தோள்,கை,கழுத்து, பிடரி,மணிக்கட்டு, விரல் நுனிகள் வரை வருடி இழுத்துச் சொடுக்கினாள்.
“கொஞ்ச நேரம் ஊறி விட்டு,வென்னி விளாவி ஊத்துறேன். நோவெல்லாம் பறந்திடும். சொகுசாத் தூங்கிடுவ “
எப்பவோ அவள் தூங்கி விட்டாள்.
“தூங்கு தாயி தூங்கு கண்டதையும், கடியதையும் நினைக்காம நிம்மதியாத் தூங்கு.” முணுமுணுத்து விட்டு மாரி தரையில் சாய்ந்து படுத்தாள்.
உறக்கத்திற்குள் ஏதேதோ அசைந்தது. அப்பாவின் மேல் கமழும் விபூதி மணம் . அம்மாவின் கோபக் குங்குமம். ப்ரவீணின் முகத்தில் ஜொலிக்கின்ற சிகரெட் கங்கு . அப்புறமென்ன. அருகில் நெருங்கினால் தானே துயரம் மிக உயரமாகத் தோன்றும்? விலகினால் விட்டுத் தொலை தூரம் போய் விடும். எதையும் தலைக்குள் அனுமதிக்காமல் இருந்தாலே போதும் எல்லாமே நினைக்கும் போது நன்றாகத் தானிருக்கிறது.
“நன்றாகத் தானிருக்கிறது” என்று மெலிதாகக் கிசுகிசுத்தது ஒரு குரல். அதை உடனடியாகப் பற்றிக் கொண்டாள். ஜன்னலோர நட்சத்திரத்தின் குரலா. “தேக பலம் தா என்றால் அவனும் தேகத்தைத் தந்திடுவான். பாத பலம் தா என்றால் அவனும் பாதத்தைத் தந்திடுவான்”கார்த்திகை மாதம் தொடங்கிடுச்சா?. ஒரேயொரு நட்சத்திரம் தான். ஒளியோவெனில் மனதை அள்ளிப்பறிக்கும் பேரொளி. அதன் கூர் விளிம்புகள் கைகளாக விரிந்தழைத்தன. ஊன்றிய கால்களாக வேறிரு விளிம்புகள். முகமாகவும் நடுவில் ஒன்று. அதில் துளிர்த்தலையும் விழிகள்.எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த ஒருவன்? நீட்டிய அந்த உள்ளங்கை மேடுகளின் மத்தியில் உதித்த பாதம் அவளுடையது தான். அதல பாதாளத்திலிருந்து துளிர்க்கிறது அது. மெல்ல எழுந்து பிரபஞ்சத்தோடு ஒன்றும் ஓரிலை போல அவனோடு ஒன்றுகிறாள். மரகதப் பச்சை வானில் மஞ்சட் புஷ்பங்கள் சிதற கரு நீல பூமி திறந்த து. சரும வெம்மை, தீண்டல்கள், முத்தங்கள் என அத்தனையும் புதிது. அறியாத கதவுகள் அரவமின்றித் திறக்க இரவு குறுகியதாகிற்று.
ஆரஞ்சுப் புள்ளிகள் வானில் உதித்த போது அனிச்சையாக அருகில் அவனுக்காகத் துழாவினாள். இப்படிக் கனவு கூட காண ஆகுமா என்று இடிப்பார்கள் அம்மா, அத்தை, சித்தி, மாரிக்கா ஏன் நானே கூட. நல்ல தெளிந்த விழிப்பில் குற்றம் உணர்வேனோயென்று அஞ்சுகிறாள்… சக்கர நாற்காலி, வாக்கர் எல்லாவற்றையும் நகர்த்தி விட்டு மாரிக்காவை எழுப்பாமல் பூனை நடையிட்டு பாத் ரூமை அடைந்தாள். வெகு நாளாக, ஏன், மாதங்களாகக் காணாத தன் முகத்தைப் பளிங்கு மேடையில் பார்த்து அதிர்ந்தாள். நானா இது. நீர் நிம்மதியாய்க் கன்னங்களில் வழிந்தது. கலைந்த தலை முடியைச் சிடுக்கின்றி வாரிப் பின்னினாள் .என்னவோ குறைகிறதே,
“மாரிக்கா”
“வந்திட்டேன்” வந்தவள் அதிர்ந்தாள்.
“நீயா ஏன் இங்க வந்து நிக்கிற? என்னை எழுப்பி இருக்கலாம்ல” வியப்பில் அவள் அகன்ற விழிகள் இன்னும் விரிந்தன. கைகள் முகத்தை வருடிச் சுற்றித் திருஷ்டி கழித்தன.
“பொட்டுக் கூட வச்சுக்காம, இரு வரேன்”
ஓடி அறை அலமாரியிலிருந்த கோகுல் ஸாண்டல் டப்பாவிற்கருகில்
நிறைய வித விதமான பொட்டு அட்டைகளைக் கண்டு பிடித்து,
“வட்டமா ஒண்ணியுங் காணும், இத்தனூண்டா” என்று ஒரு சிவப்பு முற்றுப் புள்ளியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள்.
அவள் புருவமத்தியில் அதை ஒட்டிக் கொண்டாள்…முகம் தீபமேற்றினாற் போலாகி விட்டது. கட்டிலில் அமர்ந்து,
“பசிக்குதுகா” என்றாள்.
“இந்தா, போனில் சொன்னா லேட்டாவும் நானே போய் வாங்கிட்டு ஓடியாறேன். சூதானமாரு தங்கம்” மாரிக்காவின் சந்தோஷப் பதற்றம் இவளுக்குச் சிரிப்பு வந்தது. ப்ரவீணை அழைக்க அலைபேசியைத் தொட்டாள். “தூங்குவாரு, அவரே வரட்டும்” என்று தலையணையில் சாய்ந்தாள்.
உமா மகேஸ்வரி
குடும்ப உறவுகளில் இருக்கும் மானுட நாடங்களை நுட்பமாக எழுத்தில் கொண்டு வருபவர். மானுட மனதின் சிந்தனை மாற்றங்களை சட்டென்று எழுந்து பற்றிக்கொள்ளும் வசியம் நிறைந்த வலுவான படைப்புகளை தமிழுக்குத் தந்தவர். நினைவுகளில் இருந்து தவ்வித்தாவும் பெண்களின் அக அலைக்கழிப்புகளை, சிறுகதை வடிவ ஒருமைகளை மீறி எழுதி வெற்றியும் கொண்டவர்