வைரஸ் தாக்குவதற்கு முன்பு, கடந்த இரண்டு தசமங்களாக, நாளுக்கு பத்து பன்னிரண்டு மணி நேரத்திற்கு வாரத்தில் ஆறு நாளும் டாக்ஸி ஓட்டி வந்தார் என் மாமா. சில சமயங்களில் அமெரிக்கச் சட்டமன்றக் கிளையின் அருகில் உள்ள சொகுசு ஹோட்டல் வாசலில் பல மணி நேரம் காத்திருக்கும் அவசியம் ஏற்பட்ட போதிலும், மாதா மாதாம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே சென்றது என்றாலும், அவர் டாக்ஸி ஓட்டுவதை நிறுத்தவில்லை. 1978ல் முதன்முதலில் அமெரிக்கா வந்தபோது குடியேறிய அதே அடுக்ககத்தில்தான் இப்போதும் வசிக்கிறார். நலம் விசாரிக்க அவரை அழைத்தபோது, இக்குடியிருப்பிலேயே தான் இறந்து போகக்கூடும் என்ற சாத்தியத்தைச் சிந்தித்துப் பார்க்க இத்தனை நாள் தவறிவிட்டேனே என்று கூறினார். இதை அவர் வருத்தத்துடன் அல்ல குதூகலமாகத்தான் சொன்னார். “ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது இதெல்லாம் அவர்கள் சொல்லவேயில்லையே. 70 வயதுக்கு மேல் ஆகிவிட்ட பிறகு அவர்கள் இதைச் சேர்க்க வேண்டும் இல்லையா? அதுவும் ஒப்பந்தத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். முக்கிய குறிப்பு : நீங்கள் வாழும் கடைசி இடமாக இது இருக்கலாம்.”
அவர் இறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியளித்தேன், அது உண்மையல்ல என்று எங்கள் இருவருக்குமே தெரியும் என்றாலும். அவருக்கு வயது 72. தினமும் காலையில் தன்னுடைய வண்டியில் ஏறுவதற்கு முன்னால், குடியிருக்கும் கட்டிடத்தின் பன்னிரண்டு மாடிகளை படிகளில் ஏறி இறங்கி தசைகளைச் சுறுசுறுப்பாக்கி தயார் படுத்திக் கொள்வார்.
“எனக்குத் தெரிந்தவர்களிலேயே வலிமையான ஆள் நீ தான்,” நான் அவரிடம் சொன்னேன். “வேற்று கிரக வைரஸால்தான் உன்னையெல்லாம் அடித்துத் தாக்க முடியும்.”
தொலைப்பேசியைக் கீழே வைப்பதற்கு முன் அவரைப் பார்ப்பதற்காக நான் நியூ யார்க்கிலிருந்து கார் ஓட்டி வருகிறேன் என்று சொன்னேன். அன்று மார்ச் 12, 2020. நகரத்தை முற்றுகையிட்டு முழுதாக ஆட்கொள்ள வைரஸ் காத்திருந்தது. “நாம பல சரக்கு கடைக்குப் போவோம்,” என்றேன். “உன் ஃபிரிட்ஜை முழுசா நிறைக்கிற அளவுக்குப் பொருட்களை வாங்கி அடுக்குவோம். வைரஸ் மறைந்து போகிறதுக்குள்ள உனக்கு வயதும் கூடிப்போகும் உடம்பும் நல்லா எடை ஏறிடும்.” அடுத்த நாள் அதிகாலையிலேயே நான் நியூ யார்க்கில் இருந்து கிளம்பிச் சென்றேன். டி.சி. க்கும் நியூ யார்க்கிற்கும் இடையிலான நெடுஞ்சாலை அப்போதே பெரிய பெரிய வண்டிகளால் நிரம்பியிருந்தது. நியூயார்க்கிற்கு இதுவரை ஒருமுறைதான் வந்திருக்கிறார் மாமா. ஆழமாக நிலத்தடியில், நகரம் முழுதும் பரவிக்கிடக்கும் விலையுயர்ந்த இவ்வளவு வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளுக்கெல்லாம் என்னவாகும் என்று என்னிடம் கேட்டார். அவர் தனது சொந்த வண்டியை வாங்குவதற்கு முன்னால் வெள்ளை மாளிகையில் இருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருக்கும் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். எப்போதுமே ஓட்டாத இந்தப் பெரிய கார்களை வெறுமனே நிறுத்தி வைப்பதற்காக அமெரிக்கர்கள் ஏன் இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது எனக்கு விளங்குவதேயில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார். வாகன நெரிசலில் வண்டியோட்டி ஒரு மணி நேரத்தைக் கடந்த பிறகு அவரை அழைத்து, அவர் கேள்விக்கான பதிலை இப்போதாவது அவரிடம் கூறிவிடலாம் என்று தோன்றியது. என்னதான் அமெரிக்கக் கனவுகள் என்று நேர்மறையைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசினாலும் உள்ளுக்குள் பேரழிவைப் பற்றிய பெரு மோகம் எங்களைப் பிடித்து ஆட்டுகிறது. சும்மா நின்றிருந்த காலியான பெரிய கார்கள் எல்லாம் இப்போது நான்கு வழி நெடுஞ்சாலையை முழுதாக அடைத்துக் கொண்டிருக்கின்றன. சாலையில் உருண்டோடுவதற்கு இப்படியான ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் அவை காத்திருந்தன.
நான் ஒருவழியாக டி.சி. க்கு வெளியே புறநகரில் என் மாமாவின் அடுக்ககத்தை அடைந்தபோது, அவர் கட்டிடத்திற்கு வெளியே நீள் சிமெண்டு இருக்கையில், தொடைகளின் மேல் முழங்கைகளை ஊன்றி இரண்டு உள்ளங்கைகளையும் அழுந்தச் சேர்த்து அமர்ந்திருந்தார். நான் இருந்த இடத்திலேயே என்னை இருக்குமாறு தன் கைகளால் சைகை செய்துவிட்டு என் வண்டிக்கு சில அடிகள் பின்னால் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி நடந்து அதில் ஏறிக்கொண்டார். அங்கிருந்து எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார். “வண்டியை நிறுத்திவிட்டு வந்து ஏறு. நான் ஓட்டுகிறேன்.”
நாங்கள் குழப்பத்தில் இடக்கு முடக்காக ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டோம். கன்னங்களில் வழக்கமான முத்தங்களைக் கொடுத்துக்கொள்வதற்குப் பதிலாகத் தோள்களில் மூன்று முறை தட்டிக்கொண்டோம். நாங்கள் கடைசியாகச் சந்தித்து ஆறு அல்லது ஏழு மாதங்களோ கூட ஆகியிருக்கலாம். நான் அவர் டாக்ஸியில் அமர்ந்து குறைந்தது ஒரு தசாப்தமாவது ஆகியிருக்கும். அவரது கட்டிடத்திலிருந்து விலகி வண்டி நகர்ந்தபோது, என் சிறு வயதில் என்னையும் என் அம்மாவையும் பல சரக்கு அங்காடிக்கு அவர் அழைத்துச் சென்றபோதெல்லாம் நாங்கள் ஆடிய ஒரு விளையாட்டு இப்போது நினைவிற்கு வருவதாக அவர் என்னிடம் கூறினார்.
“உனக்கு அது நினைவிருக்கா?” அவர் கேட்டார். “அந்த விளையாட்டு நாம எப்படி ஆடினோம் என்பது இப்போது உனக்கு ஞாபகம் இருக்கா?”
பெரிய கடை அங்காடிகளும் வாகன விற்பனையகங்களும் வரிசையாக இருந்த பரந்த நான்கு வழிச் சாலைக்குள் வலது புறமாகத் திரும்பினோம். நான் வளர்ந்த காலங்களில் இவை எதுவுமே இல்லை. என்ன காரணத்தினாலோ என் மாமாவின் கேள்விக்கு ஒரு எளிய பதிலளிப்பது அநாவசியமாகத் தோன்றியது எனக்கு. ஆமாம்… நிச்சயமாக எனக்கு அந்த விளையாட்டுகளெல்லாம் நினைவில் இருக்கிறது. ஒரு வாரத்தில் எனக்கு மிக பிடித்தமான கணங்களே அவைதாம். எனவே நான் ஆமாம் என வெறும் தலையை மட்டும் அசைத்து எங்களுக்கு முன்னால் பெருகிக்கொண்டிருக்கும் வாகன நெரிசலைப் பற்றிய புகாரென எதுவோ சொன்னேன். மாமா வாஞ்சையுடன் என் பின்புற தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு மீட்டரை திருப்பி இயக்கினார். அவருடைய டாக்ஸியில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் இப்படித்தான் தொடங்கும். மீட்டரை திருப்பிவிட்டு பின்னிருக்கையை நோக்கித் திரும்பி என்னிடம் கேட்பார், “எங்கே போகனும் சார்?” நாங்கள் அவ்விளையாட்டை ஆடிய சில மாதங்களில் ஒரே இடத்தை இரண்டாவது முறையாகச் சொன்னதேயில்லை. முதலில் உள்ளூரில்தான் தொடங்கினோம் – வாஷிங்டன் நினைவுச்சின்னம், அதைச் சுற்றியுள்ள அருங்காட்சியகங்கள் – ஆனால் அதன் பின்னர், வெகு விரைவிலேயே, நாங்கள் தூர இடங்களுக்கு எங்கள் ஆட்டத்தை விரிவுபடுத்தினோம்: பசிபிக் பெருங்கடல், டிஸ்னி வேர்ல்ட் மற்றும் டிஸ்னி லேண்ட், மவுண்ட் ரஷ்மோர், யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா. பின்னர், உலக வரலாறும் புவியியல் பற்றியும் நான் படித்து அறிந்துகொண்டதும் அது மேலும் விரிந்து எகிப்து, சீனப் பெருஞ்சுவர் என்று போனது. தொடர்ந்து, பிக் பென் மற்றும் ரோமில் உள்ள கொலீஸியம்.
“எத்தியோப்பியாவை தேர்ந்தெடுக்குமாறு உன்னிடம் நான் அறிவுறுத்தவில்லை என உன் அம்மா என்னிடம் கோபப்பட்டாள்,” மாமா சொன்னார். “அவன் எதையாவது கற்பனை செய்யப் போகிறான் என்றால் அது தன் சொந்த நாட்டைப் பற்றிய கற்பனையாக இருக்கட்டும் என்று என்னிடம் அவள் சொல்வது வழக்கம். நீ ஒரு சின்னக் குழந்தைதான். அமெரிக்காவில் பிறந்தவன். உனக்கென ஒரு நாடு இல்லை, நான் அவளுக்குப் புரிய வைக்க முயன்றேன். நீ விசுவாசமாக இருந்தது எங்களிடம் மட்டும்தான்.”
நாங்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு முன் எங்கள் எதிரே இருந்த சாலை விளக்கு சிவப்பு நிறத்திற்கு மாறியது. பின் மூன்று முறை பச்சை விளக்கு தோன்றி மறைந்த பிறகுதான் அங்கிருந்து நகர முடிந்தது. இந்த வேகம் என் மாமாவை பொதுவாக கோபப்படுத்தியிருக்கும். அசையாமல் ஓரிடத்தில் இருப்பதை தான் விரும்புவதேயில்லை என்று அவரே ஒருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த விளையாட்டை நாங்கள் கடைசியாக ஆடியபோது எங்கள் கற்பனை சாகசப் பயணங்களின் பாதகமற்ற தன்மையைப் பற்றி மாமா என் அம்மாவுடன் வாதிட்டார். “இவனை எங்கேயும் அழைத்துச் செல்லும் வசதி நம்மிடம் இல்லை. அதனால் இந்த டாக்ஸியின் பின் இருக்கையிலிருந்தபடியே அவன் இந்த உலகைக் காணட்டுமே,” என்றார்.
நாங்கள் இறுதியாக மேற்கொண்ட பயணம் ஆஸ்திரேலியாவிற்கு. தான் காரில் உடன் பயணிக்கும்போது இவ்விளையாட்டை ஒருபோதும் மீண்டும் விளையாடக்கூடாது என்ற நிபந்தனையுடன் எங்களை விளையாட அனுமதித்தார் அம்மா. அவருடைய நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொண்டவுடன் என் மாமா மீட்டரை இயக்கினார். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பைப் பற்றியும் வனவிலங்குகள் பற்றியும் எனக்குத் தெரிந்த அத்தனையும் வரிசையாகச் சொன்னேன். கடைக்கு வந்த பிறகும் நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தேன். அம்மா என்னை காரை விட்டு கீழே இறங்கச் சொன்னார். என்னுடைய பயணம் இந்தக் கார் நிறுத்துமிடத்தில் முடிவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் மாமா என் அம்மாவிடம் கடைக்குள் போகுமாறு கையசைத்துச் சொல்லிவிட்டு என்னை தொடர்ந்து பேசச் சொன்னார். “சரி, ஆஸ்திரேலியாவைப் பற்றி உனக்குத் தெரிந்ததெல்லாம் என்னிடம் சொல்,” என்றார். அப்போதுதான் ஆழ்ந்த சோர்வு என்னை அழுத்தத் தொடங்கியிருந்தது. நான் என் காலணிகளைக் கழற்றி என் கால்களை இருக்கையில் நீட்டிச் சாய்ந்தேன். காரின் வினைல் இருக்கையில் என் முகம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, பெட்டிக்குள் இருந்து தடித்த வரைபடம் ஒன்றை எடுத்து என் தலைக்குப் பின்னால் வைத்தார். நான் கால்களை மடித்துக்கொண்டேன்.
“தூங்கு,” என்னிடம் சொன்னார். “ஆஸ்திரேலியா இங்கிருந்து வெகுதூரம். பயணக் களைப்பில் இருப்பாய்.”
நாங்கள் அங்காடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது நான் என் மாமாவிடம் எங்களின் கடைசிப் பயணத்தைப் பற்றி ஏதாவது நினைவிருக்கிறதா எனக் கேட்க நினைத்தேன். கார்கள் நிறுத்தும் பரந்த இடத்திற்குள் வலது புறமாகத் திரும்புவதிலேயே மும்முரமாக இருந்தார். ஏற்கனவே கார்களால் நிறைந்து இருந்தது. அரை டஜன் போலீஸ் வாகனங்களாவது நுழைவாயிலை ஒட்டி சூழ்ந்திருந்தன. வெறும் சில நூறு அடிகளே காலியாக இருந்தன. ஆனால் கார்களின் வரிசையையும் தள்ளுவண்டியில் பொருட்களை நிரப்பிக் கொண்டு வாசலில் காத்திருக்கும் கூட்டத்தையும் பார்த்தால் நாங்கள் உள்ளே நுழைவதற்குள் கடை அலமாரியில் எடுப்பதற்கு ஒரு பொருள் கூட மிச்சமிருக்கும் சாத்தியம் இல்லையென்று தோன்றியது.
அவ்வாகன வெளியில் நுழையும் கடைசித் திருப்பத்திற்குள் ஒரு வழியாக திரும்புவதற்கு எங்களுக்கு மேலும் இருபது நிமிடமாவது பிடித்திருக்கும். என் மாமா தனது ஆள்காட்டி விரலால் மீட்டரைத் தட்டி இச்சிறிய வெற்றியை அங்கீகரித்தார். மீட்டரைப் பார்த்து நான் கட்டணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதும் அதன் அர்த்தம்.
“கடைசியாக… அமெரிக்காவில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் பணக்காரனாகிவிட்டேன்,” என்றார்.
பின்புறத்தில்தான் வண்டியை நிறுத்த இடம் கிடைக்கும் என்று தோன்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சுற்றி வந்தோம். ஆனால் அதுவும் தோல்வியுற்றபோது பக்கத்து உணவகத்தின் பார்க்கிங்கை நோக்கி நீண்ட புல் தரையின் மீது வண்டியை ஏற்றிச் சென்றார். அதன் சுவர்களில் ‘வாடிக்கையாளர்களுக்கு மட்டும்’ என்ற பலகை பொருத்தப்பட்டிருந்தது. அவர் வண்டியின் எஞ்சினை அணைப்பதற்காகக் காத்திருந்தேன். ஆனால் அவர் தன் இரு கைகளையும் ஸ்டீயரிங் மீது வைத்திருந்தார். மீண்டும் வண்டியை ஓட்டுவதற்குத் தயாராக இருந்தாலும் எந்தத் திசையை நோக்கித் திரும்புவது என்று அறியாவதர் போல உடல் சற்று முன்னோக்கிக் குனிந்திருந்தது. அவரை தொந்தரவு செய்வது என்ன என்பதை ஓரளவு புரிந்துகொண்டதாக நினைத்தேன்.
“நீ கடைக்குள் வர வேண்டாம்,” நான் அவரிடம் சொன்னேன். “நீ இங்கேயே காத்திரு. நான் வெளியே வந்த பிறகு என்னை வந்து கூட்டிக்கொண்டால் போதும்.”
அவர் என்னை நோக்கி முகத்தைத் திருப்பினார். நான் வண்டியில் ஏறிய பிறகு இப்போதுதான் ஒருவர் முகத்தை ஒருவர் நேரடியாகப் பார்த்துக்கொள்கிறோம்.
“இப்படி வண்டி பார்க்கிங்கில் காத்திருக்க எனக்கு விருப்பமில்லை. இதைத்தான் நான் ஒவ்வொரு நாளும் செய்கிறேன்.”
“சரி, வேறு என்ன வேண்டும்?”
அவர் மீட்டரை அணைத்தார். பிறகு என்ஜினை. ஆனால் சாவியை வெளியே எடுக்கவில்லை.
“நான் வீட்டுக்குத் திரும்பப் போகனும்,” என்றார். “இங்கிருந்து வெளியே போறது எப்படின்னு யாராவது எனக்கு சொல்லனும்.”
தினாவ் மெங்கேஸ்டு – 1978ல் எத்தியோப்பியாவில் பிறந்தவர். அரசியல் அடக்குமுறைகளிலிருந்து தப்பி பிழைத்திருப்பதற்காகத் தன்னை அரசியல் அகதியாக ஏற்கும்படி இத்தாலி அரசிடம் இவரின் அப்பா வேண்டுகோள் விடுத்தபோது தன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தார். தன்னுடைய இரண்டாவது வயதில் இவர் தன தாய் மற்றும் சகோதரியுடன் அப்போது அமெரிக்காவிற்குப் பெயர்ந்துவிட்டிருந்த தன் அப்பாவுடன் இணைந்து கொண்டார். 2007ல் தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் இதுவரை மூன்று நாவல்களை வெளியிட்டுள்ளார். முதல் இரண்டு நாவல்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதி வெளியிடும் சிறுகதைகளைப் பிற்பாடு தன் நாவல்களின் பகுதியாக ஆக்கிக் கொள்ளும் வழக்கமுள்ளவராதலால் இவரின் நாவல்கள் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் தொடங்கி வைக்கும். புனைவுகள் அளவிற்கே ஆப்பிரிக்க உள்நாட்டு போர்களும் அழிவுகளும் பற்றிய இவரின் கட்டுரைகளும் முக்கியமானவை. தன் நிலத்தின் நிலையற்ற வாழ்விலிருந்து பிழைத்திருப்பதின் பொருட்டு மக்கள் வெளியேறும் சூழல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் முன்னிறுத்தும் புதிய குரல்களில் முதன்மையானவராக இவர் கருதப்படுகிறார்.
நரேன்
சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் சிறுகதைகளை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார் நரேன். இவரின் முதல் நூல் 'இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்' மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு 2020-ல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்ததுள்ளது.