/

லக்ஷ்மி மணிவண்ணன்  கவிதைகள்

1

ஒரு பெண்ணின் மீது
வெளியில் இருந்து
ஒரு ஆசை வந்து விழுகிறது
அடுத்தவர் அறியாதவாறு
அதன் மெல்லிய இதழ்களைத்
தொட்டு எடுத்து
கீழே விடுகிறாள்
அப்புறமும் அது இருப்பது தெரிகிறது
சற்றே முரடான காம்பினை எடுத்து
விட்டவனுக்குத் தெரியாமல்
கீழே விடுகிறாள்
அப்புறமும் அது வடுத்தடமாக
தன்னில் தெரிய
முடிவாக

தனக்கே தெரியாமல் மெதுவாக எடுத்து
கீழே வைக்கிறாள்
ஒரு புழு எழுந்து
ஓடுவது போல
சென்று கொண்டிருக்கிறது
அது

2

மழை அப்படியே கீழிறங்கி
விழவில்லை
தென்னை ஓலைகளில் இறங்கி
ஓரத்து இலைகளின் வழியாக
இறங்குகிறது
விழுந்த நீரின் பிம்பங்களை காலால் உடைத்துக் கொண்டு பூமியின்
உள்ளே இறங்குகிறது
மோட்டுக் கூரையின் தளத்தில் விழுந்து
மலைப்பாம்பென குழாய்களின் வழியே
அகத்தினுள்
இறங்குகிறது

தடுக்க ஒன்றுமே இல்லையென்றாலும் என்ன?
மாபெரும் ஒத்திசைவில்
பூவாக தடதடவென தாளத்தில் விழுந்து
பின்
உள்ளே இறங்குகிறது

ஆயிரம் வடிவங்களில்
உள்ளே இறங்குகிறது
உள்ளிருக்கும் கருணையில்
வெளியில் இருந்து கொண்டு வந்த
ஒன்றை நீட்டி
சரியாகத்
தொடுகிறது
பார்க்க மழை போலிருக்கும்
கனிவு

3

நடிகை போல கதவு திறந்து
புதிய மாலில்
சிரித்த வண்ணம்
வெளியேறிச் செல்லும்
சாதாரண பெண்ணிடம்
எத்தனை பேர் சூழ வருகிறாய் என்று கேட்டேன்
நிறைய பேர் நிறைய பேர்
அதைத்தான் நீயும் பார்த்துவிட்டாயே
என்ற வண்ணம்
கலைந்து செல்கிறாள்

அவள் விட்டுச் சென்ற இடத்தில்
உதயமாயிற்று
ஆளில்லா
பெருஞ்சபை

அவள் குலுங்கி சிரித்ததில்
உருவானது
ஒரு
சித்திரச்சபை

4

நீ வெளியில் வந்ததும்
ஓடி விடலாம்
செய்தியின் அறையைக் கடந்து வா
பற்றின் பள்ளியறை
விட்டு வா
வெளியில் தான்
பொன் வண்டுடன்
நின்று கொண்டிருக்கிறேன்
ஓடி விடலாம்

பகலென்றும் இல்லை
இரவென்றும் இல்லை
எப்போது வேண்டுமானாலும் வா
பகலை விட
இரவு நுட்பம்
இரவைக் காட்டிலும்
பகல் அலங்காரம்
வெளியில் வா
ஓடிவிடலாம்

செய்தியின் அறையைத் தூக்கி
எறிந்து விட்டு
பற்றின் பிடியில்
இறங்கி
உள்ளேயே கூட இரு
வெளியிலிருந்து
உள்ளே உள்ளே
ஓடி விடலாம்

5

நான் என்னைப் பற்றி
ஒன்றை நினைத்து வைத்திருக்கிறேன்
அது அப்பழுக்கு இல்லாதது
அது குற்றங்கள் புரியும்
தவறுகள் செய்யும்
பிழை புரியும் ஆனால்
அமிர்தமானது
ஒருவரை அழைத்தால் அங்கு நோக்கியே
அழைக்கிறேன்
ஒருவர் என்னைப் பிரிந்து சென்றால்
அங்கிருந்தே பிரிந்து செல்கிறார்

லக்ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணன் (அ.மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) (நவம்பர் 23, 1969) தமிழில் கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூக விமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

தமிழ் விக்கியில்

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.