அகழ் இதழை ஆரம்பிக்கும்போது இரு மாத இதழாக வெளியிடும் எண்ணத்தில் இருந்தோம். அந்தக்கால இடைவெளி ஆக்கங்களைப் பெற்றுக்கொள்ளவும், செப்பனிடவும் போதுமானதாக இருக்கும் என்று கணித்து இருந்தோம். பின்னர் காலாண்டு இதழாகக் கொண்டுவர நேர்ந்தது. ஒருகட்டத்தில் கால இடைவெளியை சீராக்க வேண்டும் எனும் எண்ணத்தில் மாத இதழாகக் கொண்டுவர முடிவு செய்து, தீவிரமாக முயன்று கடந்த தை மாதம் முதல் அவ்வாறு தொடர்ச்சியாகக் கொண்டு வந்தோம். அது சிறந்த எதிர்வினைகளை பெற்று தந்தது. பரவலான வாசிப்பை பெற்று தந்தது. இப்போது இன்னொரு மாற்றமாக, ஒருநாள் கழித்து மறுநாள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக ஆக்கங்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.
இதழ் எனும் வடிவத்தை கடந்து ஓர் இணையதளமாக செயல்படவே இம்முடிவு. இப்படி ஒரேயொரு ஆக்கத்தை மட்டும் வெளியிடுவதால் வாசகர்களால் குறிப்பிட்ட இடைவெளியில் எல்லாவற்றையும் வாசித்துவிட முடியும் என நம்புகிறோம். “அகழ்” ஓர் உரையாடல் களமாக இருக்க வேண்டும் என்பதே எம் விருப்பம். எந்த உரையாடல் வெளியும் வாசகர்களின் ஞாபகத்தை விட்டு விலகாமல் இருக்க வேண்டும். ஞாபகத்தை தக்க வைப்பதே இன்றைக்கு அறிவுச்சூழலின் முக்கிய போராட்டம். தொடர்ச்சியான வாசிப்புக்குள் பலரை உள்ளீர்த்துக்கொள்ளவும் பல்வேறு தரப்புகளின், முரண்களின் உரையாடல் புள்ளியாகவும் அகழ் இருக்கவேண்டும் என்பது எமது திண்ணமான எண்ணம். எனவே மாதம் மாதம் வெற்றிகரமாக அகழைக் கொண்டுவந்த அனுபவத்தில் இருந்து ஒருநாள் கழித்து மறுநாள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக ஆக்கங்களை வெளியிட இருக்கிறோம். வாசகர்களின் தொடர் வாசிப்புக்குள் அகழ் இதன் மூலம் நுழையக்கூடும். உரையாடலின் பகுதியாக மாறக்கூடும்.
வாசகர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை அகழ் தளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் ஆக்கங்களைத் தவறவிடாமல் வாசிக்கலாம். வழக்கம் போல அகழுக்கான பங்களிப்புகளும், இணையதளம் சார்ந்த கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. மேம்பாட்டுக்கான இடம் எப்போதும் இருக்கிறது.
சிறந்த முன்னெடுப்பு. ஆயினும் இந்த வடிவ மாற்றத்தில் படைப்புக்களின் தரம் குறைவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு. அதில் அதிக அக்கறையுடன் செயற்படவும்.
மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும் சிறக்கட்டும்!
மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்.