/

நீரின்  நிறம் : லோகேஷ் ரகுராமன் 

அன்று காலை அவனாகவே எழுந்துகொண்டு பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானான். அன்று அவனுக்கு பள்ளி அறை நாள் தான்.  காலை எட்டரைக்கு ஆரம்பித்து மதியம் பதினொன்றரைக்கு முடிந்துவிடும். வீட்டில் இருந்து ஏழரை மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும். பிறகு பள்ளியிலேயே இருந்து விளையாடிவிட்டு மதியம் இரண்டு – இரண்டரை போல வீட்டுக்கு வருவான். அவனது அம்மா மதிய  உணவும் சேர்த்தே கட்டிக்கொடுத்துவிட்டாள். அதனை வாங்கிக்கொண்டு ஷூ லேஸை கட்டிக்கொண்டான். பின்னர் அம்மா கொண்டு வந்து கொடுத்த ஜெர்கினை அணிந்தபிறகு, புத்தகப்பையை எடுத்துக்கொண்டு “பாய் மா, பாய் பா” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.

அவனது பள்ளி சிட்டி வெஸ்டில் இருக்கிறது. பள்ளியின் பெயருமே கூட சிட்டி வெஸ்ட் நேஷனல் ஸ்கூல் தான். அவனது வீடு தால்லாவில் இருக்கிறது. வீட்டில் இருந்து தால்லா லூவாஸ் ஸ்டேஷனுக்கு ஐந்து நிமிட நடை.  அங்கிருந்து பெல்க்ராட் செல்லும் லூவாஸைப் பிடிப்பான். புத்தகப்பையின் பக்கவாட்டில் சொருகி வைத்திருந்த டிராவல் கார்டை எடுத்து ஒரு ஸ்வைப். லூவாஸின் கதவு திறக்கப்படும். ஏறிக்கொள்வான். பின்னர் இறங்கும் இடத்தில் இன்னொரு ஸ்வைப். பயண தூரத்தைக் கணக்கிட்டு அதுவே பயணத் தொகையை  கார்டில் இருந்து எடுத்துக்கொள்ளும். லூவாசில் ஏறியதும் ஒரு முறை குனிந்து தன் ஷூ லேஸை இறுக்கிக் கட்டிக்கொண்டான். லூவாஸைப் பிடிக்க வந்த அந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே இரண்டு முறை குனிந்து ஷூ லேஸை கட்டியிருந்தான். இத்தனைக்கும் பல தடவை ஷூ வையும் மாற்றியாகிவிட்டது. லேஸையும் மாற்றியாகிவிட்டது. எப்படித் தான் அவிழ்கிறது என்பது பிடிபடவேயில்லை. பெல்க்ராட் நிலையம் வந்ததும் இறங்கிக்கொண்டான். இறங்கி பத்து தப்படிகள் தான் சிட்டி வெஸ்ட் செல்லும் லூவாஸ் நிற்கின்ற நடைமேடை. ஐந்து நிமிட காத்திருப்பு. அதற்குள் ஒரு முறை குனிந்து ஷூ லேஸை இறுக்கிக்கொண்டான்.

அங்கே அவனோடு ஹாலி இணைந்து கொண்டாள். ஹாலியும் இவனும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறார்கள். சிட்டி வெஸ்ட் செல்லும் லூவாஸ் வந்தது. இருவரும் ஏறிக்கொண்டார்கள். சரியாக இருவது நிமிடத்தில் லூவாஸ் அவர்கள் பள்ளி இருக்கும் சிட்டி வெஸ்ட் நிலையத்தை அடைந்தது. இறங்கியதும் நிலைய வாசலிலேயே எதிர்ப்பட்டு விடும் அவர்களது பள்ளிக்கூடம்.

இரண்டு வருடங்கள் முன்பு வரை அவனை பள்ளியில் கொண்டுபோய் விட ஒருவர் தேவைப்பட்டது. இப்போது அந்த வயதை கடந்து விட்டிருக்கிறான். இன்று அவனால் தனியாகவே பள்ளிக்கு சென்று வர முடிகிறது.

இன்றைக்கு அவனுக்கு முதல் இரண்டு பாடவேளைகளில் கிளாசுக்குள் அமர்ந்திருந்தபடி டெஸ்ட் எழுத வேண்டும். அந்த டெஸ்டுமே பெயருக்கு தான். அதற்கு அடுத்த மூன்று பாடவேளைகளும் விளையாட்டு தான்.  இந்த கல்வி வருடத்தின் கடைசி நாள் இன்று அவனுக்கு.

***

சியென்னா, ஹாலி, ஆடம் மற்றும் ஷான் எப்போதும் இவர்களுடன் தான் அவன் புழங்குவான். அன்றும் அவர்களோடு தான் விளையாடினான்.  அவர்கள் பள்ளியில் இரண்டு பாஸ்கெட்பால் கோர்ட்டுகள் உள்ளன. அவற்றில் காலியாக இருக்கும் ஒன்றை இவர்கள் தேர்வு செய்துகொள்வார்கள். அதில் சென்று அந்த கோர்ட்டில் வரையப்பட்டிருக்கும் வெண்ணிற வரிகளில் ஓடியபடி சுற்றிச் சுற்றி வந்து லைன் டாக் (line tag) விளையாட்டு ஆடுவார்கள். ஓடிப் புடிச்சு போன்ற ஒரு விளையாட்டு தான். ஆனால் கோட்டின் மேலேயே ஓட வேண்டும்.  ஒருவர் பிடிக்க வேண்டும். மற்றவர்கள் கோட்டின் மேல் வரிசையாக நின்று ஓடுவார்கள். மேலும் கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிச் செல்லும் இடத்தில் துரத்தப்படுபவர்கள் பிரியலாம் இணையலாம்.

துரத்துபவரும் கோட்டிலேயே தான் ஓடிச் சென்று மற்றவர்களை துரத்திப் பிடிக்க வேண்டும். எவரேனும் கோட்டை விட்டு அகன்று  சென்றுவிட்டால் அவர் அவுட்.  விளையாடும் ஒவ்வொருவருமே ஒருமுறை மற்றவர்களைத் துரத்திப் பிடிக்க வேண்டும்.

ஆடம் தான்  முதல் ஆட்டத்தின் கேட்சர்.  அவன் அந்த முறை சியேன்னாவை துரத்திப் பிடித்து அவுட்டாக்கினான்.  அடுத்த ஆட்டத்தில் பிடிக்க வந்த ஷானும் சியென்னாவையே கோட்டுக்கு வெளியே தள்ளி அவுட்டாக்கினான். தொடர்ந்து இப்படி நடந்ததால், அவன் அவர்கள் இருவரிடத்திலும் சென்று “டோன்ட் ஆல்வேஸ் டார்கெட் ஹெர்” என்று எச்சரித்தான். சியென்னா ஒரு ஆட்டிசக் குறைப்பாடுள்ள குழந்தை.

தொடர்ந்து பல ஆட்டங்கள். அவனும் பல முறை கேட்சர் ஆக இருந்தான். பல முறை அவுட்டும் ஆனான். யோசித்துப் பார்த்த போது, அவன் எவரிடமும் பிடிபடவில்லை. ஆனால் கோட்டுக்கு வெளியே தள்ளி விழுந்து அவுட்டாகியிருக்கிறான். கீழே பார்த்தான். அவிழ்ந்த ஷூ லேஸ் தான் தடுக்கியிருக்கிறது.

மீண்டும் இறுக்கி கட்டிக்கொண்டான். பின்னர் ஒரு முறை ஹாலி அவனை துரத்திப் பிடிக்க வந்தாள்.  முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஆடம், சட்டென நின்று இடைவெட்டி, வெட்டிய கோட்டில் ஓடினான்.  அப்போது இவனது அவிழ்ந்த ஷூ லேசில் ஆடமின் ஷூ பட்டு தடுக்கி இவன் அவுட்டாக நேரிட்டது. இப்படியே பலமுறை நடந்தது. முதலில் இதெல்லாம் தன்னிச்சையாக நடக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு திடீரென ஐயம் வந்து ஆட்டத்தின் நடுவில் நின்ற போது, சட்டென ஷான் பாய்ந்து வந்து அவனது அவிழ்ந்த ஷூ லேசில் கால் வைத்து அவனை இடறச் செய்து கீழே விழ வைத்தான். ஆடமும் ஷானும்,  “ப்ரணவ், யூ ஆர் அவுட் ஃபார் தி ஃபிப்த் டைம், சோ யூ கேனாட் ப்ளே வித் அஸ் ஹியர் ஆஃப்டர் ஃபார் டுடே” என்றார்கள். மற்ற மூவரும் அந்தந்த இடத்தில் அப்படியே  நின்றபடி இவன் விழுந்ததைப் பார்த்துக் கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். சியேன்னாவுமே அவனைப் பார்த்து பல் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்தடுத்த ஆட்டங்களில் வெளியில் நின்று கொண்டிருந்த அவன், அவர்கள் ஆடும் போது சென்று இடைமறித்து கேட்டான்.

“வொய் ஆர் யூ கைஸ் புல்லியிங் மீ நவ்?”

“டோன்ட் ச்சீட் மீ”

அவர்கள் அவன் சொன்ன எதனையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவனைத் தாண்டி தாண்டி சென்று ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

மற்றொரு முறை ஹாலி கேட்ச்சராக இருந்த போது அவளுடன் சேர்ந்து இவனும் ஆடமை துரத்திப் பிடித்து நிறுத்தி, மீண்டும் அக்கேள்வியைக் கேட்டான். ஆடம்  வேகத்தில் இவனைப் பிடித்துக் கீழே தள்ளி,

“பீகாஸ், யுவர் கலர் இஸ் பூ (poop) கலர்” என்றான்.

கீழே பிடித்துத் தள்ளிவிட்டதில் வலது கையில் சிராய்ப்பு ஏற்பட்டது. எழுந்து சென்று, அருகில் இருந்த பாஸ்கெட் பால் கம்பத்தின் அடியில் சாய்ந்து குத்துக்காலிட்டு அமர்ந்து, தலை குனிந்தபடி அழுதுகொண்டிருந்தான்.

***

அன்று அவனைத் தேடி நானே அவன் பள்ளிக்குச்  சென்றேன். ஆர்வமாக சென்றவன் அவனாகவே எப்போதும் வந்துவிடுவான். ஆனால் அன்று அவன் வராதது சற்று பதட்டமளித்தது.  நான் சென்றபோது பள்ளிக்குள் எவரும் இருந்ததாகத் தெரியவில்லை. அன்றைய நாள் முடிந்து அனைவரும் சென்றுவிட்டிருந்தார்கள். கேட்டில் வாட்ச்மேன் மட்டுமே இருந்தார். நான் தூரத்தில் இருந்தே, பாஸ்கெட் பால் கோட்டில் அமர்ந்திருந்தவனைக் கண்டுகொண்டேன்.  அவன் அருகில் வேறு எவரும் இல்லை. அடியேதும் பட்டிருக்குமோ என்று கவலையுற்று  விரைந்து நடந்து அவனருகில்  சென்றேன். அவன் தலை குனிந்திருந்தது.  முழங்காலிட்டு அவனருகில் அமர்ந்து பார்த்த போது, அவன் கன்னங்களில் கண்ணீர் தடம் வெளிர்ந்து காய்ந்திருந்தது. ஆனால் அழுகை இன்னும் அவன் தொண்டைக் கழுத்தில் விம்மிக் கொண்டிருந்தது.

“கீழே விழுந்திட்டியா? அடியேதும் பட்டிருச்சா கண்ணா?”

அவன் பதில் சொல்லவில்லை. நானே  தேடிப் பார்த்த வரை பெரிதாக அடியேதும் படவில்லை. வலது கையில் ஒரு சிராய்ப்பு மட்டும் தான்.  ஒழுகி சிவப்பேறி காய்ந்து கருத்திருந்தது.

நாங்கள் கொடுத்தனுப்பிய மதிய உணவையும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. எல்லாம் அப்படியே இருந்தது.

“என்ன நடந்ததுன்னு சொல்லுடா கண்ணா, அப்போ தானே அப்பாக்கு தெரியும்”

அவன் நடந்ததைத் சொன்னான். அதைக் கேட்ட பிறகு, எனக்கும் உள்ளூர அவமானமாய் இருந்தது. ஆனால் மகன் முன் காட்டிக்கொள்ளக்கூடாது என்று இட்டுகட்டுபவன் போல நடந்துகொண்டேன்.

“சரி பரவாயில்ல. சரியாகிடும்.  இந்தா கொஞ்சம் தண்ணி குடி. ரொம்ப அழுதுருக்க”

அவனைத் தேற்றிக் கிளப்பி எங்கள் கார் நோக்கி அழைத்துச்சென்றேன். காரில் ஏறிய பிறகு முதல் வேலையாக சாப்பிடாமல் வைத்திருந்த மதிய உணவை உண்ணச் சொன்னேன்.

அவன் மௌனமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு வந்தான். நான் அவனிடம் மேற்கொண்டு எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. நானும் அமைதியாக கார் ஓட்டிக்கொண்டு வந்தேன். ஆனால் உள்ளுக்குள் பொருமிக்கொண்டு இருந்தேன். ‘மல நிறத்தவன்’ என்றிருக்கிறார்கள். அதுவும் என் பிள்ளையை. அவர்கள் அவனை புறக்கணிக்கவில்லை. அவமானப்படுத்தியிருக்கிறார்கள். என்னைச் சொன்னால் கூட இந்த அளவுக்கு மனதுக்குள் கிடந்து புழுங்கமாட்டேனோ என்னவோ?  நானும் கவனித்துப் பார்த்துவிட்டேன். பிள்ளையைச் சொன்னால் தான் இப்படி ஒரு பாதுகாப்பின்மையை அடைகிறேன். என் கண்முன்  அவன் நிராதரவாக நிறுத்தப்படும் பிம்பம் ஒன்று தோன்றிவிடுகிறது.  அப்போதெல்லாம் உடல் நடுக்கத்துடன் கூடிய ஒரு வித குமட்டல் உணர்வு ஏற்படுகிறது. எதுக்களிப்பது போலத் தோன்றும். இப்போதும் அப்படியே. மகன் பார்த்திடாத போது வாயில் இருமுறை கைவைத்து இருமிக்கொண்டேன். காரின் ஸ்டியரிங்கை விட முடியாதவனாக இன்னும் சற்று இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். பாவம், என் மகன். பாவம், என் மகன். என் உடம்பில் அனலெழுந்து  தகித்தது. காரின் ஏசியை ஒன்று கூட்டி வைத்துக் கொண்டேன்.

***

வீட்டுக்கு வந்ததும் மதுவிடம் சொன்ன போது, அவள் அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

“வி மஸ்ட் ரைட் டு தி ஸ்கூல் அத்தாரிட்டி. ஐ வில் மெயில் தெம் அபௌட் திஸ் இன்சிடெண்ட்” என்றாள்.

நான், ‘எவ்ளோ தடவ தான் நாமளும் இப்படி மெயில் போடப்போறோம்ன்னு பாக்கறேன். லைப்ரரிகுள்ள போய் சம்பந்தப்பட்டவங்களை சாரி கேட்க சொல்லி விட்டுருவாங்க. சாரி, கேட்க வச்சா ஆச்சா… திரும்பத் திரும்பல்ல நடக்குது.’ என்றேன். அவள் பதில் எதுவும் பேசவில்லை. ஆனால் பத்து பத்தி கம்ப்ளெய்ண்ட் ஒன்றை அன்றைய இரவுக்குள் தட்டச்சு செய்து அனுப்பியிருப்பாள்.

வரும் வாரத்தில் இருந்து ப்ரணவுக்கு வெகேஷன் ஆரம்பிக்கிறது. எப்போதும் இந்த ஜூன் ஜூலை மாதங்களில் தான் அவனுக்கு வெகேஷன் வரும். இம்முறை மூவரும் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தோம். விமான புக்கிங்களை போன மாதமே செய்து முடித்து வைத்திருந்தேன். போன வருடம் தான் செல்ல முடியாமல் ஆகிவிட்டது.  இந்த வருடத்தில் தவற விடக்கூடாது. நான் இந்தியாவில் இருந்து  கனெக்ட் செய்து  என் அலுவல்களைப் பார்த்துக்கொள்வேன்.  நாங்கள் கிளம்ப இன்னும் நான்கு நாட்களே இருந்தது. 

மறுநாள் அலுவலகத்தில் தேநீர்ப் பொழுதில், என் இந்திய நண்பன் சுரேந்தரிடம் நேற்று நடந்ததைக் குறித்து உரையாட நேர்ந்தது. சுரேந்தர் என்னை விட இரு வயது மூத்தவன். இந்தியாவில் இருந்து டப்ளினுக்கு எனக்கு முன்பே வந்துவிட்டவன். சுமார் பத்து வருடமாக இங்கே இருக்கிறான். நான் வந்து 7 வருடங்கள் ஆகிறது. இருவரும் காபி வெண்டிங் மிஷினில் காபியை பிடித்துக்கொண்டு வந்து அமர்ந்தோம்.

அவன் நான் சொன்னதை கேட்டுவிட்டு “வீ ஹாவ் டு லிவ் வித் தட், நோ அதர் கோ” என்றான்.

பின்னர், “யூ ஆர் நாட் அலோன்” என்றான்.

“என்னோட வொய்ஃப்க்கும் இப்படி ஒரு இன்சினிடெண்ட் நடந்திருக்கு. அவ பெல்க்ராட் லூவாஸ்ல போயிருக்கா.  ரன்னிங் லூவாஸ்ல ஒக்காந்துட்டு ஃப்யூ ஐரிஷ் விமென் பப்ளிக்கா சிகரெட் பிடிச்சுட்டு இருந்துருக்காங்க. ஃபுல்லி என்க்லோஸ்டா இருந்ததுனால இவ அவங்கள்ட்ட போய் கேட்டிருக்கா. லூவாஸ் குள்ள இருந்துட்டு சிகரெட் பிடிக்கிறது நியூசன்ஸ்ன்னு பேசியிருக்கா. அவங்க இவள பாத்து கேட்டிருக்காங்க. “வீ நோ இட். பட் ஹு ஆர் யு டு ஆஸ்க்  திஸ்? வேர் டு யு பிளாங்? லுக் ஹவ் ஆல் அதர்ஸ் ஆர் கீப்பிங் தெம்செல்வ்ஸ் ஷட்”  என் ஃவொய்ப் கூட வந்திருந்த இன்னொரு லேடி, அவங்களும் ஐரிஷ். அவங்கள கை காமிச்சு “லெட் ஹெர் ஆஸ்க் அஸ் டு ஸ்டாப், தென் வீ வில்” ன்னு சொல்லிருக்காங்க. ஆனா கூட வந்த அந்த ஐரிஷ் லேடியும்  அவங்கள ஒரு வார்த்தை கேக்கல. பச்சையா  கார்னர் பண்ணியிருக்காங்க. இத்தனைக்கும் அடல்ட் லேடீஸ். அவங்களே இப்படி. டீன் ஏஜர்ஸ் அதுக்கும் மேல இருப்பாங்க. போதாக்குறைக்கு ட்ரக்ஸ் ஹாபிட் வேற. கேட்கவே வேண்டாம். எப்படா  சான்ஸ்  கிடைக்கும்னு  அவங்க வெயிட் பண்ணிட்டு இருந்தாமாதிரி தோனிப் போய்டுதுல்ல”

“பேசாமல் இந்தியாவுக்கே போயிடலாம் போல”

“அங்க மட்டும் என்ன? புல்லியிங் இல்லாம குழந்தைங்க வளந்துடுமா? கொஞ்சம் திக்கா கண்ணாடி போட்டா சோடாபுட்டிம்பாங்க, கொஞ்சம் ஹயிட்டா இருந்தா நெட்டைக்கொக்கும்பாங்க. முகம் கொஞ்சம் ஒடுங்கிப்போயிருந்தா கோயான்ம்பாங்க இந்த ஸ்டீரியோடைப்பிங், டைப்காஸ்டிங்க்லாம் எதிர்கொள்ளாம நம்மலாள வாழ்க்கையை கடத்த முடியுமா  எப்படி?”

“இதே தான் நேத்து மதுவும் சொன்னா. ஆனா எனக்கு தான் இதுக்கு அது பரவால்லன்னு தோணுது. அடிச்சாலும் புடிச்சாலும் நமக்குள்ளன்னு ஆகிடுது”

“அப்போ உனக்கும் இங்க நீ கம்ப்ளெய்ண்ட் பண்றவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல இல்லையா?”

“பரவாயில்ல. இட்ஸ் ஓக்கே”

அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். பின்னர் “நத்திங் ராங் இன் தட். ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்” என்றான்.

“சனியம்புடிச்ச இந்த ‘ரேசிஸம்’ ஒரு மனுஷனுக்குள்ள எப்ப பொறக்குது, எப்படி பொறக்குது?”

“எப்ப பொறக்குதுன்னு கேட்டா –  ஒரு மனுஷன் குழந்தையா இருக்கும் போதே. எப்படின்னு கேட்டா – தன்னோட அப்பா அம்மாவை அது அடிக்கடி பாத்துட்டே இருக்கறதுனால.”

“யு நோ குழந்தைங்க எப்போதும் நிறங்களால் நெறஞ்சவங்க. அதுக்கு தான் அவங்க ட்ராயிங் பெயின்டிங்ன்னு தன்னை இன்வால்வ் பண்ணிக்கிறாங்க. சோ தே ஆர் ஆல்வேஸ் கலர் அவேர். 

என்னோட பொண்ணு மூணு வயசா இருந்த போது நாங்க இங்க வந்தோம். இனிஷியல் டேஸ்ல ஷி லிட்ரலி ஃபெல்ட் ஹோம் சிக். நாடு கடந்து வந்த அந்த டிபரன்ஸ் அவளோட பிஹெவியர்ஸ்ல தெரிஞ்சுது. ஷி வாஸ் நாட் ஏபில் டு அடாப்ட். ஷி யூஸ்ட் டு ட்ரா அ லாட் தென். அப்போ அவகிட்ட இந்தியக் கொடிய வரைய சொல்றதும் ஐரிஷ் கொடிய வரைய சொல்றதும் ஒன்னு தான் எனக்கு பட்டுச்சு. அதை வச்சு நான் அவள ஒரு தடவ சமாதானப் படுத்திப்பாத்தேன்.  திஸ் இஸ் ஆல்சோ யுவர் ஹோம்ன்னு சொல்லிப்பாத்தேன். அவளால் சமாதானமாக முடியல.  ஆல் ஆஃப் மை எஃபோர்ட்ஸ் வெண்ட் இன் வெயின். ரெண்டுமே மூவண்ணக் கொடிகள் தான். அதே மூவண்ணங்கள் தான். ஆர்டர் கூட அதே தான்.  ஆனா வெர்டிகலி அலைண்ட்.  ஆனா அந்த வெர்டிகலி அலைண்ட் மேட்டர் கூட அவள விலக்கிடுது. நான் ஒன்ன நெனச்சு போனா, அங்க வேற  ஒன்னு நடக்குது. இட்ஸ் நாட் ஜஸ்ட் கலர். இதை வச்சு தான் புரிஞ்சுகிட்டேன்.  ஹென்ஸ், ‘ரேஸ்’ இஸ் நாட் ஜஸ்ட் கலர் அண்ட் விசுவல். இட்ஸ் பேட்டர்ன் மாட்சிங் அண்ட் பிராஸசிங்.

ஒரு ‘வைட்’ கபுல், அப்போது பொறந்த ஒரு ‘நிகர்’ குழந்தையை தத்தெடுத்து வளத்தாங்க. அந்தக் கொழந்த அவங்கள பாத்து பாத்தே வளருது. அந்தக் கொழந்த தன் சொந்த உருவத்த எதிலயும் பாத்ததில்லை. அது வளர்ந்து மூணு நாலு வயசுல, அதோட நிகர் அம்மா, அப்பாவ கொண்டு வந்து அது முன்னாடி நிறுத்தினா, அது அவங்க மேல விலக்கம் கொண்டுடுது. அவங்க ரெண்டு பேரும் அதுக்குரியவங்க இல்லன்னு அதுக்கு தெரிஞ்சு போய்டுது”

இதுக்கு என்ன சொல்லுவ? ரேஸிஸம் ஒழியணும்ன்னா, அந்த எண்ணமே ஒழியணும். அந்த எண்ணம் ஒழியணும்ன்னா கொழந்த தன் அம்மா அப்பாவையே கண்ணெடுத்து பாத்து பாத்து பழகவே கூடாது. இதெல்லாம் சாத்தியமா சொல்லு?

வி ஷுட் அக்ஸ்ப்ட் தி டிபரேன்ஸ். பட் ஷுட் நாட் ப்ளே ஆன் இட் நம்ம ஆபிஸிலேயே ஏதோ வீ யார் ஸம்ஹௌ கம்ஃபர்டபில். பட் எவரிபடி ஹாவ் தட் இன்ஹரன்ட் ஜீல்.  த திங் இஸ், வி ஷுட் பி டாட் ஹவ் டு மாஸ்க் இட். ஆனால் ஒருத்தன் இன்செக்யூர் ஆகும் போது அந்த மாஸ்க் அவுந்துடுது”

“சரி, டைம் ஆச்சு. ஹாவ் ஒன் க்ளையண்ட் கால்” என்று கூறி வேகவேகமாக கையில் இருந்ததை குடித்துவிட்டு எழுந்து சென்றான்.

நான் தனியனாக அந்த கேஃபிடேரியாவில் அமர்ந்து யோசித்தவனாய் இருந்தேன். சுரேந்தர் அந்தக் குழந்தை உதாரணத்தைச் சொன்ன போது, எனக்கு ஒரு சம்பவம் நினைவு வந்தது. ப்ரணவை நான் முதன்முதலாக இங்கு அழைத்து வந்தபோது அவனுக்கு ஒரு வயது கூட ஆகியிருக்கவில்லை. அவன் நன்றாக தவழ்ந்து கொண்டிருந்த காலம். அப்போது நாங்கள் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் கனெக்ட்டிங் ஃப்ளைட்டுக்காக ஐந்து மணி நேரம் காத்திருக்க நேரிட்டது. அன்டயத்தில் அங்கே இறங்கியிருந்தோம். நல்ல தூக்கக்கலக்கம். நான் முகம் கழுவி தண்ணீர் பிடித்து குடிக்க ஏதேனும் வாங்கி வர மதுவையும் அவனையும் ஓரிடத்தில் அமரச் செய்துவிட்டுச் சென்றுவிட்டேன். மது அவனை மடியில் கிடத்திப் போட்டுவிட்டு சற்று கண்ணயர்ந்துவிட்டாள். அவன் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு இருந்திருக்கிறான் போல. அவள் மடியில் இருந்து அவனாக கீழே விழுந்து, காத்திருப்பு லாபியின் இருக்கைகளுக்கு அடியில் தவழ்ந்து தவழ்ந்தே பக்கத்தில் இருந்த லாபிக்கு சென்றுவிட்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் எங்கோ நடுவில் அமர்ந்தபடி சுற்றியும் முற்றியும் பார்த்து கத்தி அழ ஆரம்பித்திருக்கிறான். சுற்றியும் ஐரோப்பிய முகங்கள்.  எவருடைய குழந்தையோ இப்படி அழுகிறதே என்று அவர்களும் அவனைத் தூக்கி ஆசுவாசப் படுத்த முயற்சித்திருக்கிறார்கள். தோளில் போட்டு தட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவனது அழுகை மேலும் மேலும் வலுத்திருக்கின்றது. அவனை அவர்களால் சமாளிக்கவே இயலவில்லை. அந்த சமயம் பார்த்து அங்கு ஒருவர் வந்திருக்கிறார். அவர் வருவதைப் பார்த்ததும் அவனது அழுகை சற்று குறைவதாகப்பட்டிருக்கிறது. அவனும் நிதானமாகியிருக்கிறான். அவனைத் தூக்கி வைத்திருந்த ஐரோப்பியர்களும் அவரிடம் குழந்தையை கைமாற்றி விட்டிருக்கிறார்கள். நான் திரும்பி வர ஒரு பதினைந்து இருவது நிமிடம் ஆகியிருக்கலாம். நான் பார்த்த போது அவர் அவனை தட்டிக் கொடுக்க அவர் தோளில் சமர்த்தாக  இருந்தான். பின்னர் அவர் என்னைக் கண்டு கொண்டு நடந்ததைக் கூறி, குழந்தையை என் கையில் தந்தார். நான் ‘நீங்கள் இந்தியரா?’ என்று கேட்டதும் ‘இல்லை, பங்களாதேஷி’ என்று அறிமுகப் படுத்திக்கொண்டார். மதுவும் அப்போது அவனைத் தேடிக்கொண்டு வந்துவிட்டிருந்தாள். பிறகு நாங்கள் அவரிடம் நன்றி கூறி விடைப்பெற்றுக்கொண்டோம். (அவர் என்னை விடச் சற்று கலர் கூட இருந்தார்.  என் முகத்துக்கும்  அவர்  முகத்துக்கும் துளியும்  சம்பந்தம்  இருக்கவில்லை.  அப்படியிருக்க அவரிடம் போய் எப்படி இவன்? )

இதெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பிரணவுக்கு அப்போதே நிற வித்தியாசம் தெரிந்திருக்கிறது. முகச் சாடையெல்லாம்  புரிய ஆரம்பித்திருக்கிறது. சுற்றி இருந்த வெள்ளையர்கள் தன் தந்தையைப் போல் அவனை தோளில் போட்டுக்கொண்டு தட்டி அவனை அரவணைத்துக்கொண்டாலும் எதுவோ அவர்களை அவனிடம் இருந்து விலக்கியிருக்கிறது. அந்த பங்களாதேசியைப் பார்த்த மாத்திரத்தில், அவனது மனம் நியரஸ்ட் பாசிபில் மேட்சை கண்டுகொண்டு சமாதானம் அடைந்திருக்கிறது.  நம் முகங்களில் உலகப் பந்தின் ஒரு மூலையில் இருந்து நாம் கடந்து வந்த தொலைவும் கூடவே ஒட்டிக்கொண்டிருப்பது ஆச்சரியம் தான். எவரையும் ஏமாற்றிவிடமுடிவதில்லை.

இப்படி என்னன்னவோ உள்ளே  தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. காலியான காப்பி கப்பை நான்கைந்து முறை வெறுமே மோவாயில் வைத்து தூக்கி தூக்கி உறிஞ்சி குடித்தபடி இருந்தேன்.  பின்னர் தான் உரைத்து எழுந்துகொண்டேன்.

காலி காப்பி கப்பை ஹவுஸ் கீப்பிங் கவுண்டரில் கழுவிக் கொடுத்துவிட்டு, ரெஸ்ட்ரூம் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு டிஸ்யூ பேப்பரை எடுத்து கைகளையும் முகத்தையும் ஒருமுறை துடைத்துக்கொண்டேன். பிறகு கையில் இருந்ததைத் தூர எறிய கார்பெஜ் கூடையைத் தேடிப்போனேன். வாடிக்கையாக குப்பைப் போடும் இடத்தில் இருக்கும் அந்த கரிய நிறக்கூடையில் குப்பையை போட்டுவிட்டதும் தான் உணர்ந்தேன், அந்தக் கூடை நிரம்பி வழிந்திருப்பதை. அதற்கருகிலேயே இன்னொரு கூடையும் எப்போதிமிருக்கும். அதில் விளம்பர வாக்கியமாக இப்படி எழுதியிருந்தது. “ப்ளீஸ் யூஸ் மீ டூ”. அதற்கு கீழே சிறிய எழுத்துக்களில் “ஐ வில் ஆல்சோ அக்ஸப்ட் கார்பெஜ்”. அந்தக் கூடை வெள்ளை நிறத்தில் இருந்தது. எக்கிப் பார்த்த போது அது காலியாகக்  கிடந்தது.

***

ப்ரணவ் இன்னும் சிறியவனாக இருந்தபோது நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பான். குழந்தைகளின் எண்ணக்குவைகள் கேள்விகளால் அடுக்கப்பட்டிருக்கும் போல. ஒரு புதிய உலகம் அந்தக் கேள்விகளில் இருந்து  துலங்கி வருவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். நான் அவன் கேள்விகளுக்கு பதிலளிக்க முற்படும் போதெல்லாம் இந்த பதில் அவனிடம் எடுபடுமா என்று சரிபார்த்துகொள்ள வேண்டியிருக்கும். பல சமயங்களில் நானே  என் பதிலால் நிறையமாட்டேன். என்னுடைய apriori அபிப்ராயங்களை வைத்துக்கொண்டு அவனுடைய naive அபிப்ராயங்களை சரியாக விளக்கிட என்னால் முடிந்ததில்லை. அதில் நியாயம் இருப்பதாக எனக்குப்படவில்லை. குழந்தைகள் கேள்விகளால் தங்களை நிறைத்து வைப்பவர்கள். வயதாக வயதாக கேள்விகள் நம்மிடம் குறைந்துவிடுகின்றன.  மரிக்கும் போது நம்மிடம் எந்தக் கேள்வியும் எஞ்சுவதில்லையோ என்னவோ? தங்களை  அணுகணமும் கேள்விகளால் நிறைத்துக்கொள்பவர்கள் குழந்தைகளாகவே எஞ்சிவிடுகிறார்கள்.

“ப்ரணவ், நாம வர ஜூன்ல ப்ளைட்ல பாட்டி தாத்தாவை பாக்கப் போகப்போறோம்.”

அது அவனுக்கு நினைவு தெரிந்த முதல் விமானப் பயணம். அவன் ஜூன் மாதம் வர இன்னும் எவ்வளவு மாதம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க ‘ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே, ஜூன்’ என்று வாய்விட்டுச் சொல்லிப்பார்த்து விரல்விட்டு எண்ணிப்பார்த்துக் கொண்டான். எண்ணிக்கையில் எதுவோ அவனை குழப்பியது.  உடனேயே அவன் அந்தக் குழப்பத்தில் இருந்து வெளிவந்து தன் விரல்களை விடுவித்துக்கொண்டு கேட்டான்.

“ப்ளைட்னா என்னதுப்பா?”

“ஏரோப்ளேன்”

“அது எப்படி இருக்கும்?”

“வானத்துல ‘பேர்ட்’ பறக்குதுல்ல”.

“ஓ  நம்ம அந்த ‘பேர்ட்’ மேல ஏறி போகப்போறமா?”

“இல்ல.  அது ரொம்ப பெரிய பேர்ட். நம்மள மாதிரி நிறைய மனுஷங்களை கேரி பண்ணிட்டு போகும்”

“அந்த ப்ளைட் எப்படியிருக்கும்?”

நான் அவனை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று மேலே பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தை காண்பித்தேன்.

“எந்த பேர்ட் மாதிரி இது இருக்கு?”

நான் எனக்கு தெரிந்த பறவைகளை மனதுக்குள் பட்டியலிட்டேன். காகம், குருவி, மைனா. அவையெல்லாம் இந்த ஊரில் இருக்குமா? இல்லை இல்லை. இதில் ஒன்றைச் சொன்னால், ‘அந்த பேர்ட் மாதிரி ப்ளைட் ஏன் விங்ஸ்அ பீட் பண்ண மாட்டேங்குது’ என்று கேட்டுவிடுவான். சட்டென “ஈகிள்” என்றேன்.   அப்போது உயரத்தில் ஒரு பருந்து சிறகயர்த்தாமல் பறந்து கொண்டிருந்தது. அதை அவனிடம் காண்பித்தேன். அவன் ஏற்றுக்கொண்டது போல தெரிந்தது.

பிறகொரு ஒரு முறை டேக் ஆஃப் பண்ணிக்கொண்டிருந்த ப்ளைட்டை காரில் கடக்க நேரிட்டது. அவனாகவே அதனை கண்டு கொண்டு அப்பா நிறுத்து வேடிக்கைப்  பாக்கலாம் என்று காரை நிப்பாட்டினான்.  பின் சீட்டில் மதுவும் அமர்ந்திருந்தாள். அவன்  கார் ஜன்னல் கண்ணாடியில் முகத்தை ஒட்டிக் கொண்டவனாக ஆச்சரியத்தோடு  விமானம் மேலெழுவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

“அப்பா இந்த ப்ளைட்ட யாரு கண்டுபுடிச்சா?”

“கண்ணா,  யாரு கண்டுபுடிச்சான்னு கேட்க கூடாது. யாரு இன்வெண்ட் பண்ணினான்னு கேட்கணும். எத்தனை தடவை சொல்லிக்கொடுத்துருக்கேன்”

மது அவனை திருத்தினாள். பிறகு “ரைட் பிரதர்ஸ்” என்று பதில் சொன்னாள். அவளுக்குள் ஒரு டீச்சரம்மா கையில் பிரம்புடன் எப்போதும் வலம் வந்து கொண்டிருப்பாள்.

அவன் உலகத்தில் எல்லாமே கண்டுபிடிக்கத்தான் படுகிறது. எதுவுமே உருவாக்கப்படுவதில்லை.

முன்பு எப்போதோ, “அப்பா, என்னை யாரு கண்டுபுடிச்சா?” என்று கேட்டான்.

“உன்ன யாரு கண்டுபுடிச்சா? தாத்தா பாட்டியா?”

கண்டுபிடித்தல் என்பதில் ஒரு விளையாட்டு இருக்கிறது.  யாரோ இவ்வளவு நாள் அந்தப் பொருளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.  இப்போது தான் அதை கண்டுபிடிக்கிறார்கள் போல. கண்டுபிடிக்கப்படும் பொருளானது ஏற்கனவே அங்கே இருக்கிறது. ‘அதற்கு முன்’ என்ற ஒன்று அதற்கு உண்டு. அதுவே ‘உருவாக்கியது’ என்றால் ‘அதற்கு முன்’ என்பதே அதற்கு இல்லை. சில சமயம் பெரியவர்களாகிய நாமுமே discoveryயயும் inventionஅயும் சரியான முறையில் பிரயோகிப்பதில்லை. குழப்பிக்கொள்வோம்.  நான் எப்படி அவனுக்கு இதனை எடுத்துச் சொல்வது? யோசித்தேன். கஷ்டம் தான். ‘புதிதாக வந்தது’ என்றால் அதற்கு முன் இருந்த இன்மையைப் பற்றி அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏற்கனவே இருந்த ஒன்றில் இருந்து வந்தது என்றால்  சுலபமாகிவிடுகிறது. அவனால்  எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டும் விடும். நான் அவன் வழிக்கே வந்தேன்.

“ஆமா, முன்னாடி பறவையா இருந்தது இப்போ ப்ளேனா மாறியிருக்கு. அப்போ ப்ரணவ் சொல்றது கரெட்க் தான டீச்சரம்மா” என்று மதுவை மறுத்துப் பேசி அவளைச் சீண்டினேன். நானும் இந்த அளவுக்கு தழைபவனாகவெல்லாம்   இருந்திருக்கவில்லை, ப்ரணவ் பிறப்பதற்கு முன்பு வரை. மது இன்றும் இருப்பது போல. ஒரு டீச்சரின் கெடுபிடியுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பேன். எனக்கே அதில் ஆச்சரியம் தான். ஆனால் இன்று ப்ரணவ் மூலமாக நானே என்னை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறேனோ என்னவோ?

பின்னர் ஒருநாள் வீட்டில் இருந்த போது, வாயில் பார் சாக்லெட்டை ராப்பரோடு வைத்து சப்பிக்கொண்டிருந்தபடி “ப்ளைட் எப்படிப்பா இங்கேந்து இந்தியாவரை பறக்குது?” என்று கேட்டான்.

நான் குளோப் உருண்டையை எடுத்து வந்தேன்.  “இது தான் பூமி. இதோ இருக்கோம் நம்ம” அவன் கைவிரலைப் பிடித்து குளோபின் ஒரு பகுதியை சுட்டிக் காண்பித்தேன்.

விரல் நுனியில் சாக்லேட் ஒட்டியிருந்ததால் அவன் தொட்ட இடத்தில் சாக்லேட் லைட்டாக அப்பியது. 

‘இங்கேயிருந்து இங்க இப்படி பறக்கப் போறோம் நம்ம’ என்று நான் காற்றில் கோடிழுத்து காண்பித்தேன்.

“அப்பா, அப்பா பூமி சுத்தும்ன்னு சொல்லிருக்கியே. இது சுத்தவே இல்லையே”

அட ஆமாம். இப்போது என்ன செய்வது? அப்போதெனப் பார்த்து  எங்கிருந்தோ  பறந்து வந்த ஒரு ஈ, குளோப் உருண்டையின் அவன் கைவைத்து அப்பியிருந்த இடத்தில் வந்து அமர்ந்துகொண்டது.

அவன் அதனையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் மெதுவாக அந்த குளோபை சுழற்றிவிட்டேன். அந்த ஈ மேலே உயர்ந்து மீண்டும் அதேபோல் கீழிறங்கி தான் அமர்ந்த அதே இடம் என்று நினைத்து அமர்ந்து  கொண்டது. ஆனால் அது முன்பு அமர்ந்திருந்த இடம் இல்லை இப்போது.

அவனே, “அப்பா, இப்படி தான் நாமளும் இந்தியாவ ரீச் பண்ணுவோமா ப்ளைட்ல”. நான் “ஆமாம், ஆமாம்” என்றேன். ஒரு ஈ வந்து என் வேலையை சுலபமாக்கிவிட்டது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அடுத்த நொடி, “அப்பா, அப்பா பாவம் அந்த ஈ ஏமாந்து போச்சு. அதுக்கு இப்ப சாக்லேட்டே கிடைக்கல” என்றான்.

அன்றிலிருந்து அவனுக்கு ஏரோபிளேன்கள் மீது தீராத ஒரு மோகம்.  இன்று கேட்டால், “நான் பைலட் ஆகப் போறேன்” என்பான். எங்கள் இருவரது மொபைல்களிலும் ப்ளைட் ஓட்டும் கேம் ஆப்களை நிரப்பி, “ரன்வே லேந்து எப்படி நான் டேக் ஆப் பண்றேன் பாரு” என்று எங்களிடம் காண்பித்தபடி விளையாடிக்கொண்டிருப்பான்.

***

போன முறை, அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்னாள் அந்தரத்தில் விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, “அப்பா, அப்பா பைலட் ரூம் குள்ள நான் போய் பாக்கலாமா”  என்று கேட்டுக் கேட்டு எங்களைப் பிடிங்கிக் கொண்டிருந்தான்.

நான் இரண்டு மூன்று முறை ஏர் ஹோஸ்டஸ்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, பெர்மிஷன் கேட்டு வாங்கி,  அவனை மட்டும் அந்த அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டேன். திரும்பி வந்து, “அங்க இருந்த அங்கிள் ஒருத்தர் என்னைப் பார்த்து வெல்கம் ஜென்டில் மென்ன்னு சொல்லி சிரிச்சார்ப்பா” என்று சொன்னான்.

“அந்த அங்கிள் கிட்ட ஏதாச்சும் கேட்டியா?”

“குறுக்க பேர்ட் எதாச்சும் வந்துச்சுன்னா அத ஹிட் பண்ணாம எப்படி ப்ளைட்ட ஹாண்டில் பண்ணுவீங்க”  என்று கேட்டிருக்கிறான். அதற்கு அவரோ, “இது இருக்கறதுலயே பெரிய பேர்ட் இல்லயா. இதை பாத்து அது பயந்துடும். தூரமாக இருக்கும் போதே விலகி பறந்து போயிடும்” என்றிருக்கிறார்.  ஆனால் அப்படியில்லை. அவர் அவன் சிறுவன் என்று ஒன்றை முழுதாக சொல்லாமல் தவிர்த்திருக்கிறார். இப்போதெல்லாம் இங்கே வானில் பறவை தாக்குதல்கள் நிறைய நிகழ ஆரம்பித்திருக்கின்றன. பொதுவாக விமானம் தரையிறங்கும்போதும் வானேறும் போதும். வானத்தை பங்கிட்டுக்கொள்ள சில நேரங்களில்

அவற்றால் முடிவதில்லை. தங்களோடு சேர்ந்து பறப்பது தன் இனம் இல்லை என்று எப்படியோ தெரிந்து வைத்திருக்கின்றன. அதை ஆங்காரத்தோடு இப்படி தெரியப்படுத்துகின்றன. நாம் தான் பூமியில் இருந்து அண்ணாந்து வானத்தை வியந்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் வானத்திலும் ஒரு பாதுகாப்பின்மை நிலவுகிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் காட்டிக்கொடுக்கின்றன. ஒருவேளை நமக்கு எப்படி வானம் தெரிந்ததோ பறவைகளுக்கு பூமி பொன்னுலகமாகத் தெரியலாம். எவர் கண்டார்கள்?

இம்முறை அவன் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி அமைதியானவனாகவே வந்தான். நானும் கூட அப்படித்தான் இருந்தேன். மது மட்டும் தான் கேசுவலாக தென்பட்டாள். அவள் என்னிடம் தனியாக, “இன்னும் அதையே மனசுல போட்டு கொழப்பிட்டிருக்கியா? எல்லாம் சரியாகிடும். நல்ல வேளை. இந்த இந்தியா ட்ரிப் வில் பீ ய ப்ரீத்தர் டு யூ” என்றாள். நான் ப்ரணவைப் பார்த்து காண்பித்து ‘போன தடவ எப்படி துறுதுறுன்னு வந்தான்?’ என்றேன். “அவனுக்கும் அங்க போனா சரியாகிடும்”

“எப்படி இருந்தாலும் ப்ரணவ்வோட செவன்த் ஸ்டாண்டட்லேந்து அவன இந்தியால சேக்கறதா தான நம்ம பிளான். அவனை இப்பயே சேத்துட்டா என்ன? எனிஹவ் அவனுக்கு சிட்டிசன்ஷிப் இருக்கு.  அவன் மேஜர் ஆனதும் எப்பன்னாலும் விருப்பப்பட்டா அவன் இங்க வந்துக்கலாம் தானே”

“ரொம்ப யோசிக்காத. ப்ளீஸ் ஹெல்ப்  யுவர்செல்ஃப் டு பி காம்”

ஆனால் என் மனம் அவள் பேச்சை கேட்டதாக தெரியவில்லை  சுரேந்தரிடம் பேசியது அப்போது என் எண்ணங்களை ஊடறுத்து நினைவுக்கு வந்தது. அவன் என்னை நானும் அத்தகையவன் தான் என்று ஓரிடத்தில் சொன்னான் அல்லவா?  அவர்கள் என் மகன் மீது பிரயோகித்ததை நான் அவர்கள் மீது பிரயோகிக்க வேண்டும். இங்கு இப்படி அமர்ந்துகொண்டு என்ன செய்வது? நான் சுற்றியும் முற்றியும் என் உடன் பயணித்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்தேன்.  அனிச்சையாகவே அவர்களின் முகங்களையே வெகுநேரமாகப் நோட்டமிட்டு எடைபோட்டுக்கொண்டிருந்தேன்.

விமானத்துக்கு வெளியே இரவு கவிந்திருந்தது. மற்ற பயணிகள் அனைவரும் உறங்கிப் போயிருந்தார்கள். ஏர்ஹோஸ்டஸ்கள் அவர்களின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். என்னால் எல்லா முகங்களையும் என் இருக்கையில் அமர்ந்தபடிக்கே பார்க்கமுடியவில்லை.  நான் ஒரு உந்துதலில் எழுந்து கொண்டு விமானத்தின் முன்பக்கத்து கதவு பகுதிக்குச் சென்று, திரும்பி நின்று கொண்டு முகங்களை நோட்டமிடத் துவங்கினேன். ‘இப்போது எல்லாம் நன்றாக தெரிகிறது. அனைத்தும் வெண்ணிற முகங்கள். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை, என்னை யாரும் பார்க்கவில்லை’ என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.   அப்போது, கதவுப் பகுதியில் மறைவாக அமர்ந்திருந்த ஏர்ஹோஸ்டஸ் பெண், எழுந்து கொண்டு, “டு யு நீட் எனி ஹெல்ப் சார்?” என்று கேட்டாள். நான் சுதாரித்துக்கொண்டு “நோ நாட் நீடெட். ஜஸ்ட் கேம் டு அக்சஸ் லவாட்டரி. வெரி கைண்ட் ஆஃப் யு” என்றேன்.  பிறகு அவளுக்காக ஒரு முறை லவாட்டரிக்குள் சென்று வந்தேன். முதலில் வெறுமே ஃபளஷ்ஷை அழுத்திவிட்டு வெளியே வந்துவிட தான் எண்ணினேன். இல்லை வேண்டாம். உடனே சென்றால் சந்தேகம் வந்துவிடும். அதனால் கழிவறை இருக்கையில்  சற்று நேரம் அமர்ந்துகொண்டேன்.  அங்கமர்ந்து கொண்டு மீண்டும் நான் கண்ட முகங்களை ஓட்டிப் பார்த்தேன். அனைத்தும் வெண்ணிற முகங்கள். ஒரு கணம் அவர்கள் அனைவரின் மேலும் அசூயைக் கொண்டவன் போல நடித்துப் பார்த்துக்கொண்டேன். என் முகத்தை அஷ்ட கோணலாக்கி வைத்துக்கொண்டேன். ஆனால்  எதுவும் சரிபட்டுவரவில்லை. உயரத்தில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியிருந்தது. அது என்னை பார்த்துக்கொண்டிருந்தது. நான் தலையை குனிந்த படி அமர்ந்துகொண்டேன். எனக்குள் பதிந்திருந்த நினைவுச்சல்லடைக்குள்  வைத்து, அம்முகங்களில் ஒவ்வொரு முகமாக பொருத்திப் பார்த்து பகுக்கத் துவங்கினேன். அதோ முதலிருக்கையில் அமர்ந்திருந்தாரே அவர். அவர் மொராக்கன். அதற்கு பின்னால் இருவர். அவர்கள் இத்தாலியர்கள். இந்தப் பக்கம் ஒரு ஐல் இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த வயதான மூதாட்டி. அவர் ஸ்பானிஷ். ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் ஸ்காண்டினேவியர்களாக இருக்கலாம். ஆனால் ஐயமாகயிருக்கிறது. என் மனப்பதிவால் அந்த வெண்ணிற முகங்களையும் இப்படி கூர்மையாகப் பகுத்து வகைப்படுத்த முடிந்ததை நினைத்து ஒரு கணம் ஆச்சரியப்பட்டுக்கொண்டேன். அதோ அந்த ஏழாம் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அவர்கள் பக்கா ஐரிஷ் காரர்கள் தான்.  ஒரு தம்பதி அவர்களின் குழந்தையுடன் அமர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே வேகமாய் எழுந்து போய் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் முகத்தில் ஒரு குத்து விட்டால் என்னவென்றிருந்தது. எழுந்து கொண்டேன். ஃபிளஷ்ஷை அழுத்தினேன். கதவு திறந்து வெளியே வந்தேன். என் மீது படர்ந்த ஏர்ஹோஸ்டஸ் பெண்ணின் நோட்டத்தை உணர்ந்தேன். அட இவளை விட்டுவிட்டோமோ? ஆமாம் இவள் எந்த நாட்டைச் சேர்ந்தவள்? அவளிடம் திரும்பி என் முகத்தை சரிபடுத்திக்கொண்டு, ஒரு வாட்டர் பாட்டில் தர முடியுமா என்று கேட்டு வாங்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தேன். அப்போதெனக்கு அந்த ஐரிஷ் முகங்களைத் தவிர மற்ற முகங்கள் எல்லாம் நல்லதாகப்பட்டன. உள்ளே ஒரு ஆசுவாசம் ஊறி வந்தது. தன் இரையை சரியாக கண்டுகொண்டுவிட்ட ஆசுவாசம். அவர்களை இப்போது பார்த்த போது எனக்கு நடிக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. தானாகவே எரிச்சல் மண்டிக்கொண்டு வந்தது. நான் சுரேந்தரிடம் சொல்வேன். நானும் அத்தகையவன் அல்ல. எனக்கு இவர்கள் எல்லோரின் மேலும் வெறுப்பில்லை. இவர்களின் மேல் மட்டும் தான். இது என்  மகனுக்கு இவர்கள் நிகழ்த்திய ஒன்றுக்கு நான் கொடுக்கும் எதிர்வினை அவ்வளவே.

அந்த ஐரிஷ் தம்பதியினரின் குழந்தை ஐல் சீட்டில் அமர்ந்திருந்தது. அவர்கள் உள்ளே இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். என் கை எளிதாக அவர்களை எட்டாது.  நானும் சற்று உடம்பை வளைத்து தாக்க வேண்டும். அதனால் என் வேகத்தை கட்டுப்படுத்தி என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களைக் கடந்து என் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன்.

கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை ஒரே மடக்கில் காலி செய்தேன். ஒரு அரைமணி நேரம் கழித்து  மீண்டும் அதே போல எழுந்து கொண்டு கழிவறைக்குச் சென்று வந்தேன். இம்முறை அந்தக் குழந்தையையே ஏதாவது செய்துவிடலாம், சென்று தாக்கலாம் என்று தோன்றியது.  இவர்கள் மட்டும் என்ன? என் குழந்தையிடம் தானே காட்டினார்கள்.  நாளை இந்தக் குழந்தையும் தன் ஏழு வயதில் இன்னொரு இந்தியக் குழந்தையை ‘மலநிறத்தவன்’ என்று சொல்லக்கூடும். அதற்கு எல்லா வழிவகைகளையும் அந்தப் பெற்றோர்கள் செய்து கொடுத்துவிடுவார்கள். அதனால் இதில் தவறேதும் இல்லை.

நான் அதனை நோக்கிச் சென்றேன்.  அது விழித்துக்கொண்டிருந்தது.  முன்னால் இருந்த எதையோ எட்டிப் பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. அதனை பெற்றவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.  நான் அதனருகே நெருங்கிய போது முகத்தை இனியவனாக வைத்துக்கொண்டேன். அதன் கன்னம் நல்ல சப்பியாக இருந்தது.  அதும் என்னைப் பார்த்துச் சிரித்தது. சட்டென ஒரு யோசனை வந்தவனாக, அதன் கன்னத்தின் சதைபத்தை அழுத்தித் திருகி, வேண்டுமென்றே நறுக்கென்று கிள்ளிவிட்டு விலகி நடந்து சென்றேன். இந்நேரம் அது வீல் என்று அழுதிருக்கவேண்டுமே? ஆனால் அது அழவில்லை. நான் கிள்ளிய எந்தச் சுவடுமே அதனிடம் இல்லை. நான் சரியாக கிள்ளவில்லையோ? நன்றாக அழுத்தித் தானே கிள்ளியிருந்தேன். இதுவே ப்ரணவாக இருந்தால் வீல் என்று கத்தி சுருதி வைத்திருப்பான்.

நான் என் தோல்வியால் பரிதவித்துக்கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு முறை எழுந்து செல்ல முயற்சித்தேன். அருகில் இருந்த மது முழித்துக்கொண்டாள். தூக்க கலக்கத்தில், “என்னப்பா?” என்றாள். நான் என் நெளிவான முகத்தை வைத்துக்கொண்டு ‘ஒன்றுமில்லை’ என்றேன். அவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். ப்ரணவ் ஜன்னல் அருகே உறங்கிக் கொண்டிருந்ததான். ஒரு முறை அவனைக்  கிள்ளிப் பார்த்துக்கொள்வோமா என்றிருந்தது. நானே என் வலக்கை விரல்களை கொண்டு என்னைக் கிள்ளி மீண்டும் நடந்ததை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டேன். இதோ இப்படித் தானே. நமக்கே நன்றாக வலிக்கிறதே.

நான் “ஐ மிஸ்ட் இட்” என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, கைவிரல்களை மடக்கி முன்னிருந்த இருக்கையில் குத்திக் கொண்டிருந்தபடி இருந்தேன். 

அந்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்து கொண்டு பின் திரும்பி, “மிஸ்டர், வாட் டு யு வாண்ட்?” என்றார்.

***

எங்கள் வீடு சென்னையை அடுத்த புறநகர் பகுதியான நந்திவரத்தில் அமைந்துள்ளது.  தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடையில். முதன் முதலாக எனக்கு வேலை கிடைத்த போது அங்கு தான் வீடு பார்த்து செட்டில் பண்ணி வைத்துக்கொண்டேன். இப்போது என் அம்மாவும் அப்பாவும் அங்கிருக்கிறார்கள்.

இங்கு வந்தால் இரண்டு நாட்களுக்கு திக் பிரமை பிடித்தது போல் இருக்கும். ஜெட் லாக் தான் காரணம். கூடவே வெயிலுக்குப் பழக உடம்பு கடினப்படும். ஆனால் இம்முறை கூடவே இன்னொன்றும் சேர்ந்து கொண்டு என்னை அழுத்துகிறது. அங்கிருந்த போதே இரவுகளில் சரியான தூக்கம் இல்லை. விமானத்திலும் இடைவெட்டிய தூக்கம் தான். வெறும் கண்கள் மட்டும் தான் மூடியிருந்தது. தூக்கம் கண்கூடவே இல்லை.

விமானத்தைவிட்டு  இறங்கியபோதே மது என்னை எச்சரித்துவிட்டாள்.

“வந்ததும் வராதததுமா  உங்க அப்பா அம்மாகிட்ட போய் இந்த விஷயத்தைப் பத்தி ரிவீல் பண்ணிட்டிருக்காத. ப்ரணவ் பத்தி நல்லா தெரியும். அவன் சொல்லமாட்டான். உன்ன நெனச்சா தான் பயம்”

முதலிரு நாட்களுக்கு வீட்டை விட்டு நாங்கள் எவரும் வெளியே செல்லவில்லை.  நான் ஏசி ரூமிலேயே பாதி நாள் கழித்தேன்.  மது மட்டும் எவர் வீட்டுக்கோ சென்றுவிட்டு வந்தாள்.  ப்ரணவ் என்னுடைய ஃபோனையோ டீவியையோ மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அம்மாவும் அப்பாவும் இப்படி நாங்கள் இருப்பது வாடிக்கை தான் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். மூன்றாம் நாள் மாலை வேளையில் நான் ப்ரணவைக் கூட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் எங்கள் வீட்டு மொட்டை மாடி டாங்கில் ஏறி நின்றுவிட்டு வர எண்ணி மேலே சென்றேன்.

மாடியில் நல்ல காத்து. ஆடி மாதம் துவங்கப் போகிறது. டாங்கில் நின்று பார்த்த போது ஏதோ ஒன்றைப் புதிதாக உணர்ந்தேன். விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் வந்த போதே அதனை உணர்ந்திருந்தேன். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஏரி உண்டு.  நாங்கள் இறங்கி வந்த மேம்பாலம் அந்த ஏரியை ஒட்டி கொஞ்ச தூரம் வரை அமைந்திருக்கும்.

முன்பெல்லாம்  ஏரியில் நீர் நின்று தளும்பும்.  மேம்பாலத்தில் இறங்கும் போதே குளிர்ந்த ஏரிக்காற்று நம்மை தழுவும். ஏரி முழுதாக ஆகாயத்தாமரை பூண்டுச் செடிகள் மலிந்து கிடக்கும். ஆனாலும் துளி நீர் குறைந்து பார்த்ததில்லை. இன்று அப்படி இல்லை. பெரிய பெரிய JCB இயந்திரங்களும் எர்த் மூவர்களும் மண் லாரிகளும் நின்று கொண்டிருக்கின்றன. பூண்டுச்செடிகளை அகற்றி கரையை அகலப்படுத்தி ஏரியை தூர்வாருகிறார்கள் போல. தண்ணீரே சுத்தமாக இல்லை.  பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் களிமண் வண்டல் தான் கண்ணுக்குத் தெரிந்தது.  வேலையை சமீபத்தில் தான் துவங்கியிருக்கிறார்கள் போல.

எதற்காகவோ அப்பாவும் மேலே வந்தார். அவரிடம் கேட்டபோது, “வரும் நவம்பர், டிசம்பர் மழை காலத்துக்குள்ள ரெடி பண்ணிடுவாங்க. இவ்வளவு நாளா கேட்பாரற்று கிடந்துது. இன்னிக்கு அந்த ஏரிக்கு ஒரு விடிமோட்சம் பொறந்துருக்கு” என்றார்.  “கரைய சுத்தி நாம நடக்க நடைமேடை எல்லாம் போடப் போறாங்களாம்”. பிறகு அவர் கீழிறங்கிச் சென்றுவிட்டார்.

நானும் ப்ரணவும் வாட்டர் டாங்க்கின் பக்கவாட்டு சுவரில் கால்களைக் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்து கொண்டோம். நாங்கள் வெறுமே ஏரியையும் அன்றைய சூரிய அஸ்தமனத்தையும் மாறி மாறிப்  பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஏரியில் நின்றிருந்த சாந்து நிற எர்த் மூவர் இயந்திரங்கள் தங்கள் அலகுகளால் பூமியைக் கொத்தியிருந்தபடி மோனத்தில் ஆழத் துவங்கியிருந்தன.  அன்றைய நாளின் வேலை முடிந்துவிட்ட சுவடு தெரிந்தது. கரையோரத்தில் இருந்த செம்மண் தடத்தில் இருலாரிகள் மேலேறிக் கொண்டிருந்தன.

நான் நீர்மடியில் அலகு கொத்தி நின்றிருக்கும் அந்த நீள் கழுத்து எர்த் மூவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவையுமே ஒரு பறவையாகி இருந்தது ஏரிக்குள். ஏரி தனக்குள் இறங்குபவற்றை பறவையாக்கிவிடுகிறது. அல்லது அப்படியாகிவிடச் சொல்லி அது நிர்பந்திக்கிறது. நீர் இல்லாத போது நிலம் கொத்தி நின்றிருக்கிறது அந்த ராட்ச இயந்திரப் பறவை. இந்த ஒப்புமையை உடனேயே ப்ரணவிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றிருந்தது.

நீரில்லாத ஏரி பாழ். இத்தகைய வெறுமைக் காட்சியைப் பார்த்து இப்படியெல்லாம்கூட எது யோசிக்க வைக்கிறது? இப்படி யோசித்துப் பார்ப்பதே கடந்த சில நாட்களாக குறைந்துவிட்டிருந்தது. என் பொருத்திப் பார்க்கும் சட்டகத்தை நினைவில் மீட்டுக் கொண்டு வந்தேன். ‘நீரில்லாத ஏரி’யையும் இப்படி ரசித்துப் பார்க்க, அதற்கு முன்னிருந்த “நீர் நின்ற ஏரி” தேவைப்படுகிறது. “நீர் நின்ற ஏரி” என்கிற அந்த apriori அறிவு தேவைப்படுகிறது. அதுவரையில் இருந்தது, இல்லாமல் ஆகிவிட்டதும் ஏக்கமாக மாறி இப்படி எல்லாம் தோனவைக்கிறது. ஏரியில் இருந்த நீர் என்பது இந்த ஏக்கத்தின் apriori form.

இல்லை. அதெல்லாம் ஒன்றுமில்லை. தொலையட்டும். தேவையில்லையாமல் பெரிது படுத்திக்கொண்டிருக்கிறேன். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எனக்கு நானே அறிவுச் சலவை செய்து கொண்டிருக்கிறேன். I’m becoming too imbecile nowadays. “வெறுமை” வெறும் வெறுமையாக எஞ்சலாகாதா? அதற்கு இது போன்ற apriori பூச்சுகள் தேவையா என்ன? Idiotic. அவை வெறும் இயந்திரங்கள் தாம். பறவையும் இல்லை ஒன்றுமில்லை. ப்ரணவிடம் இதைப்பற்றி பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. அதுவும் ஏரியில் நீர் இல்லாதது  ஓர் தற்காலிகமான  நிலை. நாளைக்கே அதில் நீர் நிரந்து வரப்போகிறது. அதற்காகவா இப்படிக் கிடந்து அரற்றிக்கொண்டிருக்கிறேன்? பேசாமல் அமைதியாக இருப்போம்.

“??!!”

ஆனால்…

இன்னும், என்ன ஆனால்?

நிரந்து வரும் அந்நீருக்கு  நிறமிருக்கப்போவதில்லை.

அடக்கண்டிராவியே!

அப்பொதெனப் பார்த்து வானில் ஒரு சடசடப்பு. பத்துப் பதினைந்து பறவைகள் நிறைந்த ஒரு பறவைக் கூட்டம் வானத்தில் தென்பட்டது.  அவற்றின் இறக்கை பகுதி பழுப்பு நிறத்தில் இருந்தது. அவை ஏரியின் அருகே  தாழப் பறந்து வந்து, நான்கைந்து முறை ஏரியை வட்டமடித்துவிட்டு தரை இறங்கப் பார்த்தன.

“அப்பா, அப்பா, அங்கப் பாரு அந்த பேர்ட்ஸை”

பார்த்த மாத்திரத்திலேயே அந்த பறவைகளை நினைவில் இருந்து மீட்டுவிட்டேன். போன முறை இங்கே வந்திருந்த போது, தளும்பி நின்ற ஏரி நீரில் அலைவுறும் ஆகாயத் தாமரை திட்டுகளின் மேல் கால் பாவி நின்றபடி அலகுகளைக்கொண்டு நீரில் ஆழ்ந்திருந்த இப்பறவைகளை முன்னரே கண்டிருக்கிறேன்.

“ப்ரணவ், போன வாட்டி இங்க வந்தபோது நாம பாத்தோமே அந்த பேர்ட்ஸ் தான்டா இது. உனக்கு ஞாபகம் இருக்கா?”

போன முறை வந்திருந்த போது ஏரிக்கு அருகிலேயே  ப்ரணவைக் கூட்டிச் சென்றேன். அப்போது அந்தப் பறவைகளும் இருந்தன. அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததில், இவை இந்த ஜூன்  ஜூலை சீசனுக்கு கடந்த ஐந்தாறு வருடங்களாக தவறாமல் வந்து விடும் பறவைகள் என்று சொன்னார்.  உலகத்தில் எந்த மூலையில் இருந்தெல்லாமோ இப்படி வருகின்றன என்றார். நான் அந்தப் பறவைகளை பின்னணியில் வைத்து ப்ரணவைக்கூட ஃபோனில் ஒரு  புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது.

ப்ரணவ் அருகில் இருந்தபடி  எதையோ என்னிடம் சொன்னான்.

“அப்பா, அப்பா அதுங்க கீழ இறங்காம மறுபடியும் திரும்பி போகுதுங்க பாரு”

நான் அவை வந்த வழியே திரும்பிப்போவதை அண்ணாந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.

“பாவம், யாரோ அதுங்கள நல்லா டிசீவ் பண்ணிட்டாங்க போலருக்கு” என்றான் சட்டென.

ஒருகணம் நான் நெகிழ்ந்துவிட்டேன். நான் வானத்தைப் பார்த்திருந்தபடிக்கு எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.

“யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள்”

“கண்டத் தட்டுகள் தாண்டிய பசியோ தாகமோ தணியாமல் அவை ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றன.”

அன்று இரவும் எனக்கு தூக்கம் வரவில்லை. மதுவும் ப்ரணவும் நன்றாக உறங்கிப் போனார்கள். நான் என் காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு சில பாட்டுகளை ராண்டமாக ஓடவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். எதிலுமே ஒன்றிப் போகமுடியவில்லை. ஒரு கட்டத்தில் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்த  பாட்டும் நின்று போனது.  ஆனாலும் அக்கருவியை காதில் இருந்து அகற்றுவது குறித்த சிந்தையே என்னிடம் இல்லை.  இப்படியிருப்பதே நன்றாகப் பட்டது.  இருட்டில் தனிமையின் இன்னொரு திரைமூடலை ஒலிக்கப் படாத அந்த செவிக்கருவி  நல்கிக் கொண்டிருந்தது.

நான் வெகுநேரமாக என் தொலைபேசித் திரையையே துழாவிக்கொண்டிருந்தேன். அப்போது  ஒரு வேகத்தில் விரல் தெரியாமல் பட்டு கூகுள் போட்டோஸ் அப்ளிகேஷன் திறந்து கொண்டது. அதிலிருந்த புகைப்படங்களை ஸ்வைப் செய்து ஸ்வைப் செய்து காலக்கோட்டில் பின் நகர்ந்து சென்று கொண்டிருந்தேன். எண்ணங்கள் ஒழிந்துக்கிடக்க இத்தகைய ஸ்வைப்களே போதுமானதாக இருக்கிறது. 2022இல் ஆரம்பித்து 2020க்கு  வர தோராயமாக அரை மணிநேரம் பிடித்தது.

அருகே புரண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த ப்ரணவைப் பார்த்தேன்.  என் தொலைபேசியின் திரை வெளிச்சத்தில் அவனது வலது கை சிராய்ப்பு தோலுரிந்து ஆறி வரிவரியாக வெளிறி வருவதைப் பார்க்க முடிந்தது. அவ்வரிகளில் இன்னும் அவனது நிறம் ஏற வேண்டும். அவ்வளவு தான். நான் அவன் தலையை இருமுறை கோதிவிட்டேன்.  வலது கன்னத்தில் மெலிதாக இரு முத்தங்கள் வைத்தேன். அன்றைய மாலை அவன் சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது. கண நேரத்தில் அவனிடம் வெளிப்பட்ட காருண்யம் அது.  அதை எண்ணத்தில் நிறுத்தினேன்.

நான் மீண்டும் ஸ்வைப்களினூடான என் பயணத்தில் மூழ்கினேன். சட்டென திரையில் அந்தப் பறவைகளின் பின்னணியில் ப்ரணவ் நின்று கொண்டிருந்த அந்த புகைப்படம் தோன்றியது. நான் ஸ்வைப் செய்வதை நிறுத்தி, எதனாலோ உந்தப்பட்டவனாக, அந்த ஃபோட்டோவில் அந்தப் பறவைகள் இருந்த பகுதியை மட்டும் தனியாக க்ராப் செய்து, கீழே கொடுக்கப்பட்டிருந்த கூகுள் லென்ஸ் ஆப்ஷனில் திறந்தேன்.  திரையில், படத்துக்கு கீழாக தோன்றிய முதல் சுட்டியில் “Brown-winged Sea Egret, Native of South Ireland” என்றிருந்தது. 

அதுவரை எனக்குள் நான் தேக்கி வைத்திருந்த அந்த தூய சிந்தையை மற்றொரு சிந்தை உடனேயே தரைக்கு இழுத்து வந்து சிதைத்தது. மறுநாள் காலையில் நான் தாமதமாகத் தான்  எழுந்துகொண்டேன். நான் ஆழ்ந்து உறங்கிப்போயிருந்ததாக மது என்னிடம் சொன்னாள்.

லோகேஷ் ரகுராமன்

சிறுகதையாசிரியர். "விஷ்ணு வந்தார்" சிறுகதை நூல் வெளியாகியிருக்கிறது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.