/

சில பாலஸ்தீனக் கவிதைகள்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

பாலஸ்தீன் மீதான போர், பெருகிக்கொண்டே இருக்கும் ஒரு துயரம். எம்.ஏ.நுஃமானின் மொழிபெயர்ப்பு தொகுப்பு உட்பட பல பாலஸ்தீனக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. மீண்டும் போர், பெரும் துயராகும் நிலையில் சில பாலஸ்தீனக் கவிதைகளை மொழிபெயர்க்கத் தோன்றுவதை முழுதாக விளக்க முடியவில்லை. மொரித் பர்கோட்டியின் (Mourid Barghouti) நேர்காணலில் “பர்கோட்டி குறித்து பர்கோட்டி” என்ற கவிதையைப் பற்றி அவர் சொன்ன சில வரிகள்: “பல சமயங்களில் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டிருக்கிறது: நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்? உங்கள் மனதில் ஒரு வாசகரைக் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்களா? ஒரு கவி, வெற்றுக் காகிதத்திடம் செல்லும்போது தன் உள்ளிருக்கும் இசையைக் கேட்கச் செல்வதாக நினைக்கிறேன். ஆனால் அந்த இசை பல ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாக ஒரு உலகளாவிய இசைக்குழுவால் கோர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் நாமறியாத பிறரால் வாசிக்கப்பட கவிதைகளை பதிப்பிக்கிறோம். இந்தச் சிறிய கவிதையின் முதல் இரு வரிகளை தொடங்கியபோது, நான் என்னுடனே பேசிக்கொண்டிருக்கிறேன், வாசகர்களுடன் அல்ல என்று உணர்ந்தேன். அலங்கார விவரணைகள் மீதான என் வெறுப்பையும் எளிமையான உறுதியான மொழியின் மீதான விருப்பத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளவது போல. மறுக்கப்பட்ட வரலாறும், அச்சுறுத்துலுக்குள்ளான நிலமும் உடைய பாலஸ்தீனியனாக, உலகின் புரிதலையும் கவனத்தையும் கோருபவனாக, இந்தக் கவிதையை பதிப்பிக்கத் தயங்கினேன். ஆனால் நான் இதன் வாசகனாக வேண்டும் என்பதனால் இதைப் பதிப்பித்தேன். வலி, பாலஸ்தீன வலி கூட, உரக்கக் கத்துவதாக இருக்க வேண்டியதில்லை என்று மொரித் பர்கோட்டியை நம்பவைக்க முயன்றேன்.”

000

கருணையின்றி

ஒரு இனிய இசை
ஆனால் அதன் இனிமை உனக்கு ஆறுதல் தரவில்லை.
இந்நாட்கள் உனக்குக் கற்பித்தது இதுதான்:
ஒவ்வொரு நீண்ட போரிலும்
ஒரு ராணுவவீரன் இருப்பான், கவனம் சிதறிய முகமும்
சாதாரண பற்களுமாய்
தன் கொட்டாய்க்கு வெளியில்
பளீரென்ற ஹார்மோனிகாவுடன் அமர்ந்திருப்பான்
அதை கவனமாக புழுதியிலிருந்தும் குருதியிலிருந்தும் பாதுகாத்திருப்பான்
இந்தப் போருக்குத் தொடர்பற்ற
பறவையைப் போல
ஒரு காதல் பாடலை
தனக்காகப் பாடுவான்
அதில் பொய்யிருக்காது.
ஒரு கணம்,
நிலவொளி என்ன நினைக்குமென வெட்குவான்:
ஹார்மோனிகாவுக்கு நரகத்தில் என்ன பயன்?
நிழலொன்று நெருங்குகிறது
மேலும் பல நிழல்கள்.
சக ராணுவ வீரர்கள், ஒருவர் பின் ஒருவராய்
அவனோடு இணைந்து பாடுகிறார்கள்.
அந்தப் பாடகன் மொத்த ரெஜிமெண்ட்டையும்
ரோமியோவின் பால்கனிக்கு கூட்டிச் செல்கிறான்
அங்கிருந்து
யோசிக்காமல்
கருணை இல்லாமல்
சந்தேகங்கள் இல்லாமல்
அவர்கள் கொலை புரிவதைத் தொடர்கிறார்கள்.

பர்கோட்டி குறித்து பர்கோட்டி

”அமைதி சொன்னது
உண்மைக்கு அலங்காரங்கள் தேவையில்லை.
குதிரையோட்டி இறந்தபின்
வீட்டுக்குச் செல்லும் குதிரை
எல்லாவற்றையும் சொல்கிறது
எதையும் சொல்லாமல்.”

மொரித் பர்கோட்டி (1944-2021) 
ஆங்கில மொழிபெயர்ப்பு: ரத்வா ஆஷூர்

000

சிலுவையில் ஒரு தேசம்

அவர்கள் எங்களை, ஒரு முழு தேசத்தை, சிலுவையில் தொங்கவிட்டார்கள்
எங்களை சிலுவையிலறைந்து
பாவமன்னிப்பு கோரச் சொன்னார்கள்.
இந்தப் பின்னடைவு
உலகின் அந்தியல்ல
நாம் அடிமைகளுமல்ல.
கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்
இறந்தவர்களை அடக்கம் செய்யுங்கள்
மீண்டெழுங்கள்.
ஓ துயர் நிறைந்த மக்களே
நீங்களே உலகம்
நீங்களே அருளின் ஒற்றை ஊற்று.
நீங்களே இந்த வாழ்க்கையில்
வரலாறும்
ஒளிமிக்க எதிர்காலமும்.
வாருங்கள்,
கை கோர்ப்போம்
தீக்குள் நடப்போம்.
சுதந்திரமானோரின் எதிர்காலம், எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
எவ்வளவு தூரத்திலிருந்தாலும்
அருகில்தான் இருக்கிறது.

தௌஃபீக் சய்யாத் 1929-1994
ஆங்கிலத்தில்: மொஹம்மத் சவாய்

000

கொள்ளைநோய்

என் நகரத்தில் கொள்ளை நோய் பரவிய நாளில்
நான் காட்டுக்கு ஓடினேன்
வானை நோக்கி விரிந்த கைகளுடன்
துயரின் ஆழங்களிலிருந்து காற்றை அழைக்கிறேன்:
“ஓ காற்றே, எங்களை நோக்கி மேகங்களை விரட்டி வீசு
மழையைக் கொண்டு வா
என் நகரத்தின் காற்றை சுத்தம் செய்ய
வீடுகளை, மலைகளை, மரங்களை சுத்தம் செய்ய!
ஓ காற்றே, எங்களை நோக்கி மேகங்களை விரட்டி வீசு
மழை கொட்டட்டும்
மழை கொட்டட்டும்
கொட்டட்டும்.”

ஃபத்வா துக்கான். 1917-2003
ஆங்கிலத்தில்: மொஹம்மத் சவாய்

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.