என்ன ஆயிற்று இவளுக்கு என்று விஸ்வநாதன் எட்டிப் பார்த்தான். மைத்ரி சட்டைப் பொத்தான்களைப் போட்டுக்கொண்டே சீப்பை எடுத்துக்கொண்டு லலிதாவிடம் போனாள். “அம்மா, தல வாரிவிடும்மா” என்றாள். “உங்கப்பாவுக்கு என்னடி ஆச்சு? நான் வேலயா இருக்கேன்ல?” என்றாள் லலிதா. மைத்ரி தானே வாரியபடி வந்து பையில் புத்தகங்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள். விஸ்வநாதன் இருக்கும் திசையை அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
மைத்ரி தினமும் குளித்து முடித்துவிட்டுச் சீருடை அணிந்துகொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு அப்பாவிடம் வருவாள். விஸ்வநாதன் சீருடையைச் சரிசெய்து அவளுக்குத் தலை வாரிவிடுவான். பிறகு நெற்றியில் பொட்டு வைப்பான். “சின்னதா வைங்கப்பா” என்பாள் மைத்ரி. “சின்னதா, குட்டியூண்டு வெச்சிருக்கேண்டா” என்று சொல்லி அவள் கன்னத்தில் தட்டுவான். பிறகு சமையலறைக்குப் போய்க் காலை உணவை எடுத்து வருவான். அதை இவன் ஊட்டிவிடும்போது அவள் பையைத் தயார் செய்துகொள்வாள். புத்தகங்கள், பென்சில், ஸ்கேல், அழி ரப்பர், சிறிய பெட்டி, தண்ணீர் பாட்டில் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அங்குமிங்கும் போய் எடுதது வைத்துக்கொள்ளுவாள். விஸ்வநாதன் பின்னாலேயே போய் ஊட்டிவிடுவான். சாப்பிட்டு முடித்ததும் வாயைத் துடைத்துவிடுவான். “ஒரு வாய் தண்ணி குடிச்சிக்கோ” என்பான். அதற்குள் அவள் வாசல் பக்கம் இருக்கும் கூடத்துக்குச் சென்று காலுறைகளைத் தேட ஆரம்பிப்பாள். விஸ்வநாதன் காலணிகளை எடுத்து வந்து மாட்டிவிடுவான். பள்ளிக்கூட வண்டியின் ஒலி கேட்டதும் “பை பா, பை மா” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடுவாள். விஸ்வநாதன் ஜன்னல் ஓரத்தில் போய் நின்றுகொள்வான். அங்கிருந்து பார்த்தால் பள்ளி வாகனம் தெரியும். மைத்ரி படியிலிருந்து இறங்கி வாகனத்தில் ஏறும்வரை பார்த்திருந்து கை காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகருவான். அதன் பிறகே அவனுடைய அன்றாட வேலைகள் தொடங்கும்.
இன்று மைத்ரி தானாகவே தலை வாரிக்கொள்கிறாள். பொட்டு வைத்துவிட விஸ்வநாதன் நெருங்கியபோது அதைத் தவிர்த்துவிட்டுப் பையை எடுக்கப் போகிறாள். சமையலறைக்குப் போய்ச் சிற்றுண்டியை எடுத்து வந்ததும் ஊட்டிக்கொள்ள வாய் திறப்பதற்குப் பதில் கையில் வாங்கிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து அவளே சாப்பிட ஆரம்பிக்கிறாள். காலணிகளை எடுத்து வந்தால் அவளே மாட்டிக் கொள்கிறாள். “என்னடி ஆச்சு இன்னிக்கு?” என்றபடி அவள் காலை இழுத்துக் காலணியின் கயிற்றை ஒழுங்காகக் கட்டிவிட்டான். அவள் பையை எடுத்து மாட்டிக் கொண்டு “பை மா” என்று சமையலறையைப் பார்த்துக் கத்திவிட்டு, இவனைப் பாத்து வெறுமனே கை ஆட்டிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.
விஸ்வநாதன் வழக்கம்போல் ஜன்னல் ஓரம் போய் நின்றான். வாகனத்தில் ஏறியதும் இவனைப் பார்த்துச் சிரிக்கும் வழக்கம் கொண்ட மைத்ரி இன்று இவன் பக்கமே திரும்பாமல் உட்கார்ந்துகொண்டாள். விஸ்வநாதனின் மனம் குழம்பியது.
சமையலறைக்குச் சென்றான். லலிதா வேலைகளை முடித்துவிட்டுக் குளிக்கப் போயிருந்தாள். சோபாவில் உட்கார்ந்தபடி யோசிக்க ஆரம்பித்தான்.
லலிதா குளித்துவிட்டு வந்ததும் அவளிடம் தன்னுடைய கவலையைப் பகிர்ந்துகொண்டான். அவள் தன்னுடைய வேலைகளைக் கவனித்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். கடைசியில், “இதுக்கா இப்படி அலட்டிக்கறீங்க? அவளுக்கு இன்னிக்கு என்னமோ மூடு மாறியிருக்கும். அவங்கவங்க வேலைய அவங்கவங்களே செஞ்சிக்கணும்னு ஸ்கூல்ல ஒருவேள சொல்லியிருப்பாங்க. உடனே பெரிய மனுஷி மாதிரி தானா எல்லாத்தயும் பண்ணிக்க ஆரம்பிச்சிருப்பா. நல்லதுதானே. நமக்கு வேல மிச்சம். அந்த நேரத்துல நீங்க எனக்கு எதாவது ஹெல்ப் பண்ணலாம்” என்றாள் சர்வ சாதாரணமாக.
“இல்ல லலிதா. இது என்னமோ வேற மாதிரி இருக்கு.”
“தேவையில்லாம இமாஜின் பண்ணாதீங்க. இந்தாங்க. இது எடுத்துண்டு போய் டேபிள் மேல வைங்க” என்று குக்கரை எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கி வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். வழக்கமாகக் குளிக்கும்போது ஒரு கணமேனும் ஏற்படும் சிலிர்ப்பு இன்று ஏற்படவில்லை. மைத்ரியின் நடவடிக்கைகளைப் பற்றி யோசித்துக்கொண்டே குழாய்களைத் திறந்ததில் வெந்நீரின் அளவு அதிகரித்துவிட்டது. அதைச் சமனப்படுத்துவதற்கான முயற்சி எதுவும் செய்யாமல் அப்படியே குளித்து முடித்தான். உடையணிவது, சாப்பிடுவது, கிளம்புவது, லலிதாவை அவள் அலுவலகத்தில் விட்டுவிட்டுத் தன் அலுவலகத்திற்குச் செல்வது என எல்லாமே பழக்கத்தின் தடத்தில் இயந்திர இயக்கம்போல நடந்தன. லலிதா வண்டியை விட்டு இறங்கியதும் அவள் முகத்தைப் பார்த்து, “ரொம்ப அலட்டிக்காதீங்க. அவ சின்னப் பொண்ணு, ஏதாவது மூட் அவுட் ஆயிருப்பா. நான் விசாரிக்கிறேன். பாத்து பத்திரமா போங்க” என்றாள். அப்போது இருந்த மனநிலைக்கு அந்தச் சொற்களும் அவள் பேசிய தொனியும் விஸ்வநாதனுக்கு ஆறுதல் அளித்தன.
லலிதா சொன்னதுபோலக் குழந்தை ஏதோ சங்கடத்தில் இருக்கிறாள். சொல்லத் தெரியாமல் தவிக்கிறாள். பள்ளிக்கூடத்தில் ஏதாவது நடந்திருக்கலாம். சீக்கிரமே தன்னிடமாவது அவள் அம்மாவிடமாவது என்ன நடந்தது என்று சொல்லிவிடுவாள். அதன் பிறகு சரியாகிவிடும். இன்னும் ஓரிரு நாட்களில் சகஜமாகிவிடுவாள். தேவையில்லாமல் மனதைப் போட்டு உளப்பிக்கொள்ள வேண்டாம் என்று விஸ்வநாதன் நினைத்துக்கொண்டான். மாலை நெருங்க நெருங்க மன இறுக்கம் குறைய ஆரம்பித்தது. பார்த்துக்கொள்ளலாம், பெரிதாக எதுவும் இருக்காது என்ற நம்பிக்கை வந்தது.
படி ஏறும்போதே லலிதாவும் மைத்ரியும் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது விஸ்வநாதனுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது. அப்படியே விட்டுவிடலாம்; எதுவும் கேட்க வேண்டாம், இரண்டு மூன்று நாள் கழித்துப் பார்த்துக்கொள்ளாம் என்று நினைத்தபடி வாசலுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினான். மைத்ரிதான் கதவைத் திறந்தாள். விஸ்வநாதன் வழக்கம்போல் அவள் கன்னத்தைத் தடவக் கை நீட்டினான். அவள் கதவைத் திறந்ததும் சட்டென்று உள்ளே ஓடிவிட்டாள். விஸ்வநாதனுக்குச் சுருக்கென்றது. ஏற்கனவே முடிவு செய்தபடி இப்போது எதுவும் கேட்க வேண்டாம், அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தபடி உள்ளே வந்தான்.
மைத்ரியின் பை திறந்து கிடந்தது. புத்தகங்கள் இறைந்து கிடந்தன. காலணியை அலமாரிக்குள் வைக்காமல் வெளியே போட்டிருந்தாள். காலுறைகளைத் துவைக்கப் போடாமல் அப்படியே வைத்திருந்தாள். இதையெல்லாம் பார்த்ததும் விஸ்வநாதனுக்கு வழக்கம்போலக் கோபம் வந்தது. வழக்கம் போல, “மைத்ரி இங்க வா” என்று கோபத்துடன் அழைத்து எல்லாவற்றையும் ஒழுங்காக எடுத்துவைக்கச் சொல்லத் தோன்றது. அடக்கிக்கொண்டான். காலணிகளைத் தானே எடுத்து வைத்துவிட்டுக் காலுறைகளைத் துவைக்கும் வாளியில் போட்டான். சிதறிக் கிடந்த புத்தகங்களைச் சற்று ஒழுங்குபடுத்திவிட்டு உள்ளே சென்றான்.
குளித்துவிட்டு வந்து சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சாப்பிடச் சென்றான். மைத்ரி உணவு மேஜையில் இல்லை. “எங்க அவ” என்று கேட்டான். காலையில் பேசிய எதுவுமே நினைவில்லாதவளாக லலிதா, “உங்க லேப்டாப்ப எடுத்துண்டு பெட்ரூம்ல உக்காந்து விளையாடிண்ட்ருப்பா” என்றாள் இயல்பாக. விஸ்வநாதன் தன்னுடைய அறையை எட்டிப் பார்த்தான். லேப்டாப் அங்கேயேதான் இருந்தது. சாப்பிட உட்கார்ந்தான். லலிதாவும் சாப்பிட வந்தாள். “கொழந்த சாப்டுட்டாளா?” என்று கேட்டான். “பசிக்கலயாம். சாயங்காலம் சேன்ட்விச் சாப்ட்ருக்கா. அப்புறமா சாப்பிடறாளாம்” என்றாள் லலிதா.
இரவு சாப்பிடும்போது பக்கத்தில் மைத்ரி இல்லாமல் இருந்ததே இல்லை. லேப்டாப்பில் விளையாடிக்கொண்டிருந்தாலும் அப்பா சாப்பிட வந்ததும் லேப்டாப்பை உணவு மேஜைக்கு எடுத்து வந்துவிடுவாள். அவள் விளையாடிக்கொண்டே இருக்க, விஸ்வநாதன் ஊட்டிவிடுவான். லலிதா வந்து அதட்டுவாள். “என்னடி இது பழக்கம்? சாப்டும்போது என்ன வௌயாட்டு? மூடி வெச்சிட்டு நீயே எடுத்து சாப்புடு. நீங்க ரொம்ப
செல்லம் குடுத்து அவள கெடுக்கறீங்க. வேளாவேளைக்கு ஊட்டிவிட அவ என்ன சின்னக் கொழந்தையா?” என்று சத்தம் போடுவாள். வாரத்தில்
இரண்டு மூன்று நாட்களாவது இப்படி நடக்கும். மற்ற நாட்களில், “அம்மா கோச்சுப்பா. லேட்டாப்ப மூடி வெச்சிட்டு சீக்கிரம் சாப்டுட்டு போய் வௌயாடு. இல்லன்னா அம்மா லேப்டாப்ப எடுத்து பூட்டி வெச்சுடுவா” என்று மைதிரியின் காதில் கிசுகிசுப்பான். அவளும் சமர்த்தாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அடுத்த நிமிடமே லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பெட்ரூமுக்குள் ஓடிவிடுவாள்.
விஸ்வநாதன் இயல்பு நிலையை மிகவும் விரும்பினான். “மைத்ரி, லேப்டாப் வேணாமா?” என்று படுக்கையறையைப் பார்த்துக் குரல் கொடுத்தான். பதில் இல்லை. கொஞ்சம் சத்தமாகக் கூப்பிட்டான். பதில் இல்லை. லலிதாவைக் கலவரத்துடன் பார்த்தான். அவள் சற்றே சலிப்புடன் எழுந்து சென்று பார்த்தாள்.
“நன்னா போத்திண்டு தூங்கறா. விட்ருங்கோ. நான் அப்பறமா எழுப்பி சாப்பட வெக்கறேன். லேப்டாப்ல ஒருநாள் வௌயாடாட்டா என்ன. நல்லதுதான். இப்படியே போனா சீக்கிரமே கண்ணாடி போட்டுருவா. உங்களுக்கு அதப் பத்தியெல்லாம் கவலயில்ல. கொழந்த சாப்டாளா, கொழந்த தூங்கினாளா, கொழந்த ஏன் இன்னிக்கி வௌயாடலன்னு கேட்டுண்டு இருப்பேள்…” என்றாள்.
விஸ்வநாதனுக்கு கோபம் வந்தது. அவன் அதிகம் செல்லம் கொடுப்பதாக அவள் குறைபட்டுக்கொள்வது புதிதல்ல. ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்று கோபம் வந்தது. கோபம் வந்ததும் சட்டென்று கத்தும் வழக்கம் அவனுக்கு இல்லை. கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். பிறகு, “லலிதா, அவ சகஜமா இல்லியோன்னு கவலயா இருக்கு. நீ என்னடான்னா என்னென்னமோ பேசற” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நன்னாதான் பேசி சிரிச்சிண்ட்ருந்தா. ஹோம் ஒர்க்கல்லாம் சடசடன்னு முடிச்சிட்டு வந்து காமிச்சா. . .”
“லலிதா, நான் சொல்றதே உனக்குப் புரியல. அவ எங்கிட்ட மட்டும் வித்யாசமா நடந்துக்கறான்னு சொல்றேன். உனக்கு புரியலயா?”
“புரியறது. நன்னா புரியறது. நீங்க என்ன ஹிந்திலயா பேசறேள்? புரியாம என்ன. நீங்க தேவையில்லாம இமாஜின் பண்ணிக்கறேள்னு தோண்றது. வளர்ற வயசுல பசங்க திடீர் திடீர்னு அப்படித்தான் இருக்கும். தானா சரியாயிடும். ரொம்ப அலட்டிக்காதீங்கோ. அவகிட்டயே போய் கேட்டு கொழந்த மனச குழப்பாதீங்கோ. சைல்ட் சைக்காலஜில முக்கியமான விஷயம் அப்சர்வேஷனும் பேஷன்ஸும்தான். கொஞ்சம் பொறுமயா இருங்கோ” என்றாள்.
விஸ்வநாதனுக்கு அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆனால் அவன் மனம் சமாதானமாகவில்லை. என்றாலும் அமைதியாகச் சாப்பிட்டான். பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தான். செய்திகள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், ஆங்கிலத் திரைப்படங்கள் என்று அரை மணிநேரத்தில் பலவற்றை மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத் தொலைக்காட்சியை அணைத்தான். எழுந்து சென்று அதன் பிரதான விசையையும் அணைத்துவிட்டு வந்து லேப்டாப்பைத் திறந்து சிறிது நேரம் இணைய வெளியில் உலாவினான். மனம் எதிலும் ஈடுபாடு கொள்ளவில்லை. லேப்டாப்பை மூடிவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மைத்ரியின் தலையைக் கோதிவிட்டான். மங்கிய இரவு விளக்கில் மாசற்ற அவள் முகத்தைப் பார்க்கும்போது மனம் நெகிழ்ந்தது. தன்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொள்ளும் அவள் உற்சாகம் நினைவுக்கு வந்தது. லலிதா சொல்வதுபோல் இது இரண்டொரு நாளில் சரியாகிவிடும் என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். குழந்தை சாப்பிடாமல் தூங்குகிறாளே என்று வருந்தினான். தூக்கத்திலிருந்து எழுப்ப மனமின்றிப் படுத்துக்கொண்டான்.
லலிதா சமையலறையை ஒழித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டாள். வழக்கமாகக் குழந்தைக்கு அந்தப் பக்கம் படுத்துக்கொள்பவள் இன்று விஸ்வநாதனின் அருகில் வந்து படுத்தாள். அவன் தோளில் சாய்ந்தபடி மார்பில் தட்டிக்கொடுத்தாள். விஸ்வநாதனின் கை அவள் தோள்களைத் தன்னோடு சேர்த்து அணைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. லலிதா அவன் மார்பில் தன் உதடுகளைப் பதித்தாள். அவன் அவளைத் தன்மீது மேலும் இறுக்கிக்கொண்டான்.
மறுநாள் காலையும் முன்தினம்போலவே நடந்தது. மைத்ரி எழுந்து ஓவல்டின் குடித்துவிட்டுக் குளிக்கப் போனாள். தானாகவே சீருடை அணிந்துகொண்டு தலை வாரிக்கொண்டு வெளியே வந்தாள். சமையலறையில் ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்து வைத்திருந்த பருப்பு சாதத்தை எடுத்துக்கொண்டு உணவு மேஜைக்கு வந்து அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். ஓரிரு கவளங்கள் சாப்பிட்டதும் “அம்மா சிப்ஸ் போடும்மா” என்று குரல் கொடுத்தாள். “வேலையா இருக்கேன். உங்க அப்பாவ கேளுடி” என்று சத்தமாகச் சொன்னாள் லலிதா. அதைக் கேட்டு விஸ்வநாதன் எழுந்து போய் சிப்ஸ் எடுத்து வந்து கொடுத்தான். மைத்ரி அவன் முகத்தைப் பார்க்காமலேயே அதை வாங்கிக்கொண்டாள். ‘என்னடி ஆச்சு உனக்கு? அப்பாகிட்ட பேச மாட்டியா?’ என்று கேட்கத் துடித்தான். லலிதா சொன்னதுபோல, இரண்டு மூன்று நாட்கள் போகட்டும், குழந்தையை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கட்டுப்படுத்திக்கொண்டான். தன் மடியில் உட்கார்ந்துகொண்டு ஊட்டிவிடச் சொல்லி அடம்பிடிப்பவள் இப்படி இருக்கிறாள் என்றால் ஏதோ பெரிதாக நடந்திருக்க வேண்டும். அதுவும் என் விஷயத்தில் நடந்திருக்க வேண்டும். லலிதாவிடம் அவள் சாதாரணமாகத்தான் பேசுகிறாள். வெளியில் சொல்ல முடியாமல் மனதில் ஏதோ வைத்திருக்கிறாள். அது என்ன என்று அழுத்திக் கேட்பதுகூட அவளை மேலும் மன அழுத்தத்திற்குள் தள்ளிவிடக்கூடும். அவசரப்படக் கூடாது. லலிதா சொன்னதுபோலக் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.
மைத்ரி சாப்பிட்டு முடித்தாள். கிண்ணத்தை மேஜையிலேயே வைத்துவிட்டு எழுந்து போய்க் கை கழுவினாள். புத்தகங்களை எடுத்துப் பையில் திணித்துக்கொண்டாள். தண்ணீர் பாட்டிலை எடுத்துப் பையின் பக்கவாட்டு அறையில் சொருகினாள். காலணிகளை அணியத் தொடங்கினாள். இடையில் ஒருமுறைகூட அப்பாவின் முகத்தைப் பார்க்கவில்லை.
இத்தனை நாள் தனக்குத் தெரிந்த, தான் நன்கு அறிந்த, தனக்கு மிகவும் செல்லமான குழந்தை திடீரென்று வேறொரு நபராக, வளர்ந்த பெண்ணாக மாறிவிட்டதுபோல் தோன்றியது. மனம் பதைத்தாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் விஸ்வநாதன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
*
லலிதா வழக்கம்போல மாலை ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள். இவ்வளவு சீக்கிரமாக வர முடிகிறது என்பதால்தான் இந்த வேலையை ஒப்புக்கொண்டாள். மைத்ரி வழக்கம்போல் நான்கு மணிக்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்து சாவி வாங்கி வீட்டைத் திறந்து கொஞ்சம் சாம்பார் சாதம் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சநேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். வழக்கமாக லலிதா வந்து அவளை எழுப்பி ஓவல்டின் கலந்து கொடுப்பாள். மைத்ரி அதைக் குடித்துவிட்டு விளையாடப் போவாள்.
மைத்ரி தொலைக்காட்சியில் ஏதோ பார்த்தபடி ஓவல்டின் குடித்துக்கொண்டிருந்தாள். “அம்மா, பிஸ்கெட் வேணும்” என்றாள். லலிதா சிறிய தட்டில் நான்கு பிஸ்கெட்களைப் போட்டு எடுத்து வந்து கொடுத்துவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து மைத்ரியின் தலையைக் கோதினாள். மைத்ரி அம்மாவின் மீது சாய்ந்து உட்கார்ந்துகொண்டு பிஸ்கெட்டைச் சாப்பிட்டபடி ஓவல்டின் குடித்தாள்.
சிறிது நேரம் கழித்து லலிதா, “என்னடி ரெண்டு நாளா மூஞ்சிய தூக்கி வெச்சிண்ட்ருக்க? என்ன ஆச்சு?”
மைத்ரி சட்டென்று எழுந்தாள். “நானா? இல்லயே…” என்றாள். “நாந்தாம் பாக்கறன. ரெண்டு நாளா அப்பா கிட் பேசறதில்ல. சாதம் ஊட்டிக்கறதில்ல. நீயே ட்ரெஸ் பண்ணிக்கற, நீயே ஷு மாட்டிக்கற, அப்பாவோட லேப்டாப்ப தொட மாட்டேங்கற… பாத்துண்டு தானே இருக்கேன்.”
மைத்ரி அம்மாவை நேராகப் பார்த்தாள். லலிதா தொலைக்காட்சியை அணைத்தாள். அப்போது இரண்டாவது மாடியிலிருந்து யாரோ வேகமாக இறங்கி வரும் சத்தம் கேட்டது. அந்தக் காலடிச் சத்தம் இவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. லேசாகத் திறந்திருந்த கதவு வழியே ஒரு முகம் எட்டிப் பார்த்தது. பிரபு. “மைத்ரி, ஷட்டில் வௌயாடப் போறோம். வரியா?” என்றான். “ஓவல்டின் குடிச்சிட்டு வரேன்” என்றாள் மைத்ரி. “நான் வெயிட் பண்றேன்” என்றபடி பிரபு உள்ளே வந்தான். “ஹாய் ஆன்ட்டி” என்றான். “நீ போடா. அவ ஓவல்டின் குடிச்சிட்டு, எனக்கு ஒரு வேல இருக்கு. அத செஞ்சிட்டு வருவா” என்றாள். “ஓகே ஆன்ட்டி” என்றபடி பிரபு கிளம்பினான். லலிதா எழுந்து போய்க் கதவைச் சாத்திவிட்டு வந்தாள். பிரபு தடதடவெனப் படியிறங்கும் சத்தம் மூடிய கதவைத் தாண்டிக் கேட்டது.
“சொல்லுடி, என்ன ஆச்சு” என்றாள் லலிதா.
மைத்ரி தன் உருண்டை விழிகளால் அம்மாவைப் பார்த்தாள்.
“அம்மா, ஐ வோக் அப் யேலி லாஸ்ட் சண்டே. ஞாபகம் இருக்கா” என்றாள்.
“யேலியா… ஒம்போது மணிக்கு… ஆமாம், சொல்லு”
“நீகொடதான் அன்னிக்கு லேட்டா எழுந்த…”
“ஆமாம் சொல்லுடி…”
“அப்பா ஹேட் கான் ஃபார் டென்னிஸ். நா எழுந்து ஸ்டார்ட்ட் ப்லேயிங் இன் லேப்டாப். நீகூட சத்தம் போட்டியே…”
“ஞாபகம் இருக்கு, சொல்லுடி…”
“பாட்டி வீட்டுக்குப் போகணும், சீக்கிரம் கிளம்புன்னு சொன்னியே…”
“ஆமாம்…”
“ஐ கேம் பேக் லேட். சீக்கிரமா கொண்டுவிடறதுதானேப்பான்னு நீகூட தாத்தா கிட்ட சொன்னியே…”
“விஷயத்த சொல்லுடி. நீ என்னமோ சினிமா பாத்துட்டு வந்தா மாரி சீன் பை சீனா சொல்ற…”
“இரும்மா சொல்றேன். நா வரதுக்குள்ள அப்பா தூங்கிட்டா. நீயும் சீக்கிரம் தூங்க போயிட்ட. நாளைக்கு மண்டே, நீயும் வந்து படுன்னு சொன்ன. ஐ ஸ்லெப்ட் வெல் இன் த நூன்மா, கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்னு சொன்னேன். சீக்கிரம் வான்னு சொல்லிட்டு நீ போய்ட்ட…”
லலிதா பொறுமையிழந்தாள். ஆனாலும் அவசரப்பட்டால் விஷயத்தைக் கறக்க முடியாது என்று பேசாமல் இருந்தாள். தான் தூங்கிய பிறகு என்ன நடந்தது என்ற கேள்வி அவளுள் எழுந்து கலவரப்படுத்தியது.
மைத்ரி சில விநாடிகள் பேசாமல் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். லலிதாவால் பரபரப்பைத் தாங்க முடியவில்லை. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. நாக்கு உலர்ந்தது. தண்ணீர் அருகிலேயே இருந்தும் அதை எடுத்துக் குடிக்கத் தோன்றாமல் தன் குழந்தை சொல்லப்போகும் அந்தச் செய்திக்காகக் காத்திருந்தாள்.
“அம்மா…” என்றாள் மைத்ரி. அவள் குரல் தணிந்திருந்தது. லலிதா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
“அப்பா லேப்டாப்பை ஷட் டவுன் பண்ணல. இட் வாஸ் இன் ஸ்லீப் மோட். நா மவுச கிளிக் பண்ணினேன். பாஸ்வேர்ட் கேட்டுது. ஐ டைப்ட் Maitri ஆஸ் யூஷுவல். க்ரோம் ஓபனா இருந்துது. அத பாத்து பயந்துட்டம்மா… ஐ வாஸ் டெரிப்லி ஷாக்ட்” மைத்ரியின் குரல் கம்மியது. லலிதாவுக்குப் படபடப்பு கூடியது.
“என்னடி இருந்துது?”
“எப்படிம்மா சொல்றது? டூ பேட்மா. டூ வல்கர்மா. டூ வல்கர். எனக்கு வயித்த கலக்கிடுத்தும்மா. சட்டுனு மூடிட்டேன். அழுகயா வந்தது…” என்று சொல்லும்போது அவள் கண்களில் நீர் வழிந்தது. லலிதாவின் மனம் கொதித்தது. குழந்தையைத் தன்னோடு சேர்ந்து அணைத்துக்கொண்டாள்.
“அப்புறம் ஐ குட்ன்ட் ஸ்லீப்மா. அதுக்கப்புறம் அப்பா கிட்ட பேசவே புடிக்கலம்மா. அப்பா கிட்ட வந்தாலே அந்த சீன்தான் ஞாபகம் வருதும்மா” என்று அழுதாள்.
லலிதா குழந்தையை நெடுநேரம் தன் அரவணைப்பில் வைத்துக்கொண்டு தட்டிக்கொடுத்தபடி ஆறுதல்படுத்தினாள். ‘இந்த மனுஷனுக்கு ஏன் இப்படி புத்தி போகுது? பொண் கொழந்த இருக்கற வீட்டுல பண்ற காரியமா இது? அப்படியே பண்ணினாலும் அதை சரியா மறைக்கத் தெரிய வேணாம்? அப்படி என்ன கேர்லஸ்னெஸ்… அப்படி என்ன சபலம்… சீ…’ என்று மனதுக்குள் பொங்கினாள்.
சிறிது நேரம் கழித்து மைத்ரியின் கண்களைத் துடைத்துவிட்டு, “இங்க பாருடா செல்லம். அப்பா எதோ அந்த மாதிரி பண்ணிட்டா. நீ இதயே நெனச்சிண்ட்ருக்காத” என்றாள்.
“கான்ட் ஃபர்கெட்மா. . .”
“இது ஏதோ ஆக்ஸிடென்ட்டுன்னு நெனச்சிக்கோ. அப்பா கிட்ட நா பேசிக்கறேன்.”
“நா சொன்னேன்னு சொல்லாதம்மா. நீ பாத்ததா சொல்லு.”
“அப்படித்தாண்டா சொல்லப்போறேன். என் செல்லம்…” என்று அவளைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“நீ இத மனசுல வெச்சிண்டு பேசாம இருக்காதடி. அப்பாக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ பேசாம இருந்தா ரொம்ப அப்செட் ஆயிடுவார். அவரை நான் பாத்துக்கறேன். நீ வழக்கம் போல பேசு. வௌயாடு” என்றாள்.
மைத்ரி பதில் சொல்லாமல் அம்மாவைப் பார்த்தாள்.
“ட்ரை பண்றம்மா” என்றாள். “லேப்டாப்பை ஓபன் பண்ணவே பயமா இருக்கும்மா. ஐம் ஸ்கேர்ட்.”
“கொஞ்ச நாள் கழிச்சா எல்லாம் சரியாயிடுண்டா. நீ கவலப்படாத.”
மைத்ரியின் கண்களில் சட்டென்று ஒரு வெளிச்சம் தோன்றியது. “அம்மா, ஒரு ஐடியா” என்றாள். லலிதா சற்றே வியப்புடன் அவளைப் பார்த்தாள். “லேப்டாப்ல ரெண்டு ஃப்லாட்பார்ம் கிரியேட் பண்ணிடலாம். சிக்ஸ்த்லயே கம்ப்யூட்டர் மிஸ் சொல்லித்தந்துருக்காங்க. ரெண்டு ப்லாட்ஃபார்ம், ரெண்டு பாஸ்வேர்ட். ஒன் மினிட்ல ஸ்லீப் மோட். எப்டி ஐடியா?” என்றாள். கொஞ்ச நேரத்திற்கு முன் அழுத குழந்தையா இது என்று வியந்தாள் லலிதா.
“சரி, நீ போய் விளையாடிட்டு வா, நான் டிபன் பண்றேன்.”
லலிதாவும் மைத்ரியும் விஸ்வநாதன் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டார்கள். விஸ்வநாதன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மைத்ரி லேப்டாப்பை எடுத்தாள். அதைப் பார்த்து விஸ்வநாதன் மகிழ்ச்சி அடைந்தான். லலிதா சொன்னதைப் போல இரண்டே நாட்களில் மைத்ரி இயல்பாகிவிட்டாள். என்ன ஆயிற்று என்று பிறகு கேட்டுக்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டான்.
விஸ்வநாதன் சாப்பிட்டு முடித்ததும் மைத்ரி லேப்டாப்பைக் கொண்டுவந்தாள். அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். விஸ்வநாதனுக்கு மனம் பொங்கியது. “சொல்லுடா” என்றான் வாஞ்சையுடன். “லேப்டாப்ல தனித்தனி ப்லாட்ஃபார்ம்ஸ் க்ரியேட் பண்ணியிருக்கம்பா. உங்க ப்லாட்ஃபார்ம்க்கு பாஸ்வேர்ட் போடுங்க” என்றாள்.
“எதுக்குடா?” என்றான் விஸ்வநாதன்.
“மல்ட்டிப்ல் யூசர்ஸ் இருக்கும்போது அதுதான் கன்வீனியன்ட். கம்ப்யூட்டர் மிஸ் சொன்னாங்க.”
“பழைய பாஸ்வேர்டே போடு…”
“யு ஷுட் நாட் யூஸ் த ஓல்ட் பாஸ்வேர்ட் வென் யூ ஸ்ப்லிட்பா” என்றாள்.
“இதுவும் உங்க மிஸ் சொன்னாளா?”
மைத்ரி தலையாட்டினாள். உதட்டில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. APPA என்றும் MAITRI என்றும் இரண்டு தளங்களைக் கணினித் திரை காட்டியது. புன்னகையுடன் அதில் முதலாவதைத் தேர்ந்தெடுத்துக் கடவுச் சொல்லை அடித்தான். மைத்ரி அதைப் பார்க்காத வண்ணம் முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டாள்.
அரவிந்தன்
அரவிந்தன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். சென்னையில் வசிக்கிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே, தமிழ் இந்து போன்ற பல்வேறு பிரபல இதழ்களில் பணியாற்றியவர். காலச்சுவடு பதிப்பகத்தில் தற்போது பதிப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.