/

அடியார்க்கு நல்லார் – ஒரு தமிழ் அசைவியக்கம்

பூம்புகாரில் இளங்கோவடிகள் சிற்பம்

சமீபத்தில் எழுத்தாளர் இரா.முருகவேள் எழுதிய, ‘மிளிர்கல்’ நாவலைக் குறித்த உரையாடல் ஒன்று நண்பர்களுக்குள் எழுந்தது. Facet grade Ruby எனும் ‘இரத்தினக் கற்களுக்காக 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள்’ என நாவலுக்குள் வருகிற சொல்லாடல், எங்களின் உரையாடலை ‘சிலப்பதிகாரம்’ குறித்த வேறு தளத்துக்குள் நகர்த்தியது.

குறிப்பாக, மாநாய்க்கன், மாசாத்துவன் எனும் இரு வணிகக் குடும்பத்தின் வாரிசுகளின் கதை ஒரு சமூக அசைவாக மாறி, வெவ்வேறு காலகட்டத்தில் தென்னிந்திய நிலப்பரப்பின் இலக்கிய, இலக்கண, கலை வரலாறுகளைப் பதிவு செய்திருப்பதைக் குறித்து எங்கள் பேச்சு நகன்றது. அது நிலம் சார்ந்த வெளிப்பாடாகவும் இருந்ததால், சேர, சோழ, பாண்டிய நாட்டெல்லைகளைக் கடந்து கொங்கு, ஈழ மண்டலம் வரைக்கும் விரிந்து சென்றபோது, கொங்கு மண்டலத்துக்கும் சிலப்பதிகாரத்துக்குமான தொடர்பு மீண்டும் பேச்சுக்குள் வந்தது. ஒருகட்டத்தில் ‘இன்றிருக்கும் சிலப்பதிகார அசைவியக்கமே கொங்கு மண்டலத்திலிருந்து தொடங்கியதுதான்’ என்று நான் கூறினேன்.

நண்பர்கள் உடனே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர். என் கருத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தபோது, ‘சிலப்பதிகார  உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பற்றியும், அவருடைய உரைநூலின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும் என் நண்பர்களிடம் விவரித்தேன். ஒரு முக்கியமான வரலாற்று பாத்திரமான அடியார்க்கு நல்லார் பற்றி நவீன வாசிப்பு சூழலில் பெரிய அறிமுகம் இல்லை என்பது புரிந்தது. பிற்பாடு  அந்த உரையாடலின் விளைவாய் ஒரு கட்டுரை எழுதியபோது அது என் வழக்கமான மொழியில் திரண்டு வராதது எனக்கே வியப்பாய் இருந்தது. ஒருவிதத்தில் பொது வாசகர்கள் வரலாற்றெழுத்தை வாசித்து அறிந்துகொள்வதில் உள்ள சிக்கலை அதுவே எனக்கு புரிய வைத்தது.

கல்வெட்டுக்கள் வாசிப்பு பயிற்சிகளில் தீவிரமாக இருந்தபோது, ஒரு பத்தி எழுதும்போது கூட, என்னுடைய மொழி பண்டைய ‘கூட்டெழுத்து’ தன்மைக்கு  துப்புரவாக மாறுவதை கவனித்தேன். அடியார்க்கு நல்லார் பற்றிய வரலாற்று நூல்கள் யாவும் 1870-களில் தொடங்கி 1960கள் வரையிலான ஆண்டுகளில் வெளிவந்தவை. அந்தக் காலகட்டங்களில் புழக்கத்தில் இருந்த கூட்டெழுத்து உரைநடைச் சத்தம் மற்றும் ‘அகடமிக்’ ‘காய்ச்சலை’விட்டு வெளியே வருவது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை. ஆனால் இன்றைய வாசிப்புக்கு எல்லாவற்றையும் நவீனப்படுத்த வேண்டியுள்ளது. நம் நாயகர்களை, இன்றைய மொழியில் அறிமுகம் செய்துகொள்ள வேண்டியுள்ளது.

அடியார்க்கு நல்லார் ஒரு புனைவு கதாபாத்திரமாக சித்தரிக்கத்தக்க வாழ்க்கை வாழ்ந்தவர். சிலப்பதிகார உரைக்கான அவருடைய மெனக்கெடலையும் தீவிரத்தையும் பார்க்கும்போதும் அவர் நெஞ்சில் நெருப்பு போல இலக்கிய நாட்டம் எரிந்திருப்பதை உணர முடிகிறது.

’கண்ணகி- கோவலன் கதை’ என்ற நிலையில், தமிழ்நாட்டில் சிலப்பதிகாரம் குறித்த உரையாடல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பது நாமறிந்ததே. தமிழில் எழுதப்பட்டு, அதிகபட்ச ஆய்வுகளுக்குள்ளான காப்பியம் என்றால் அது இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்தான். ‘பழந்தமிழ் நாட்டின் நிலவியலில் தொடங்கி, மரபுகள், மக்கள் வாழ்க்கை, பழக்கவழக்கம், இசை, இலக்கிய, இலக்கண வளம், பொருள் வறுமை, சடங்கு, சொர்க்கம் நம்பிக்கைகள், அறம் குறித்த பார்வை எனப் பல கூறுகளைத் தாங்கி நிற்கிறது சிலம்பு’ எனும் கூற்று அந்த ஆய்வுகளாலேயே வெளிப்பட்டன.

மூன்று காண்டங்கள், முப்பது காதைகள், 5001 பாடல் வரிகள் கொண்ட ‘சிலப்பதிகார’ ஆய்வுகளுக்கு அஸ்திவாரமிட்டது அதற்கு எழுதப்பட்ட உரை நூல்கள்தான். சிலம்பதிகாரத்துக்கு வெவ்வேறு காலகட்டங்களில் உரை எழுதியோருண்டு. மிகப்பழயது என்றால் கி.பி1025-ல் மூலநூல் முழுமைக்கும் எழுதப்பட்ட அரும்பதவுரை. (அதற்கும் முன்னதாக உரை ஒன்று இருந்ததாகக் கருதப்படுதற்கான குறிப்புகள் இருக்கின்றன).  இவற்றில், ஏறத்தாழ 12-ம் நூற்றாண்டில் சிலம்புக்கு உரையெழுதியதோடு, இன்று வரை அசைவுகளோடு இருக்கும் ‘தமிழியக்கத் தகிப்புகளுக்குப்’ பெரும் தீனி தந்து போனவர் அடியார்க்கு நல்லார்.

இன்று மேம்போக்காக கையாளப்படும் ‘பண்டைய வரலாறு’ குறித்த பெருமித கனவுகளுக்குப் பின்னால், ஓர் உரையாசிரியனின் ‘ஆழமான உழைப்பும், தானறிந்தது தெரிந்தது அனைத்தையும் சொல்லிவிட வேண்டுமென்ற தகிப்பும்’ இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அடியார்க்கு நல்லன்!

சிலப்பதிகாரத்துக்கு அரும்பதவுரை எழுதப்பட்ட பிறகு ஏறத்தாழ நூற்றுச் சொச்சம் ஆண்டுகள் கழித்து, அதனை மேலும் ஆழமாக வாசித்து, விரிவுரை எழுதியவர் அடியாருக்கு நல்லன் என்று பேர்கொண்ட அடியார்க்கு நல்லார். சிலப்பதிகார உரை ‘பதிக’த்தில் இடம்பெறும் மூன்று பாடல்களில் அடியார்க்கு நல்லார் யார் என்பது பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. (இங்கே பதிகம்; பாயிரம் என்பது மொத்த நூலுக்கு எழுதப்படும் முன்னுரை, முகவுரை போன்றது. அதை உரையாசிரியரே எழுதியிருக்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை).

சிலப்பதிகார உரை பதிகத்தின் முதல் பாடலில், ‘எல்லாப் பொருளும் தெரிந்திப் படியார்க்கு நல்லமிர்தம் பாலித்தான் நன்னூல் அடியார்க்கு நல்லன் என்பான்’ என்ற வரிகளுண்டு. இரண்டாம் பாடலில், ‘சேரன் தெரித்த சிலப்பதிகாரத்திற் சேர்ந்த பொருள் ஆருந் தெரிய விரித்துரைத்தான் அடியார்க்கு நல்லான், காருந் தருவும் அனையான், நிரமையர் காவலனே…’ என்ற வரிகள் இடம்பெறுகின்றன.

சேரர்களாலேயே சமணக் காப்பியமான சிலம்பு எழுந்தது. அதன் பொருளை விவரித்துச் சொன்னவரின் ஊர், ‘கொங்கு நாட்டில் அமைந்த நிரம்பை எனும் பகுதி; இது விசயமங்கலத்தை அடுத்த நிரம்பையூர்’ என தேவாரப் பாடலின் ஊர்த்தொகை பதிகத்தைச் சான்றாகக் கொண்டு சிலர் அடியார்க்கு நல்லாரை கொங்கு நாட்டவர் என்று குறிப்பிடுகிறார்கள். ‘காரும் தருவும் அனையான்’ என்ற வரியினால், கால்நடைகளும், செல்வமும் கொண்டவர் என்றும் கருத இடமிருக்கிறது.

மூன்றாவது பாடலில், ‘அருமை உரைசெய் அடியார்க்கு நல்லார் அவதரித்து வருமைப் பொழில் நிரம்பைப் பதியுங் கொங்கு மண்டலமே’ என்ற வரிகளுடன், பொப்பண்ண காங்கேயர்கோன் எனும் கொங்கு வள்ளலின் ஆதரவுடன் சிலப்பதிகாரத்துக்கு ‘அடியார்க்கு நல்லார்’ உரைசெய்தார் என்ற நேரடிக் குறிப்பு இடம்பெறுகிறது. அதன்படி, அடியார்க்கு நல்லார் ‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்’ என்பது அறிதலுக்கு நெருக்கமாகிறது. இருந்தும், அவர், ‘கொங்கில் பிறந்தவர் எனினும் ஈழ நாட்டில் அமைச்சராக இருந்து, இங்கிருந்தே தன் சிலப்பதிகார உரையினை எழுதினார்; அதற்கு ஈழத்தில் நிலவும் கண்ணகி வழிபாடே காரணம்’ என்ற கருத்து ஈழத்து ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. உரைக் குறிப்புகளின் வழியாக அவர் சைவ சமயம் சாந்தவர் என்பது உபகுறிப்பு.

இறையனார் களவியல்

பண்டைய தமிழ்நாடு குறித்த சமூக, இலக்கிய வரலாற்றுத் தகவல்களை ஓரளவு விளக்கமாகப் புரிந்துகொள்ள இரண்டு நூல்கள்தான் நமக்கு மிக முக்கியமான ஆதார நூல்கள். அவை இரண்டுமே மூல நூல்கள் அல்ல. மூல நூலுக்கு எழுதப்பெற்ற உரைநூல்கள்.  செய்யுளுக்கு எழுதப்பட்ட பொருள் விளக்க நூல்கள்.

‘இறையனார் களவியல்’ எனும் மூல நூல் முதலாவது சங்க காலத்தில் இயற்றப் பெற்றதாகக் கருதப்படுகிறது. தமிழரின் காதல் வாழ்வை விவரிக்கும் இந்த நூல் எழுதப்பட்டதன் பின்னணியாக ஒரு மரபுக் கதை உண்டு. அதாவது, தமிழ்ச்சங்கம் அமைத்திருந்த பாண்டிய நாட்டில் 12 ஆண்டுகள் பெரும் பஞ்சம் பீடித்த நிலையில், சங்கத்துப் புலவர்கள் தங்களைக் காத்துப் பிழைத்துக்கொள்ள, அவர்களே ஏதேனும் நல்வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளுமாறு வழியனுப்பி வைத்தாராம் பாண்டிய மன்னர். பிறகு, பஞ்சம் நீங்கி பாண்டிய நாடு செழித்தபோது, மீண்டும் புலவர்களை வரச் செய்திருக்கிறார். அப்போது அவர்களிடையே எழுத்து, சொல், யாப்பு ஆகிய மூன்று இலக்கணங்களை அறிந்த புலவர்கள் மட்டுமே எஞ்சினர். பொருள் இலக்கணம் அறிந்த புலவரே இல்லை என்றதும் பாண்டிய மன்னர் வருந்தினாராம். மன்னனின் கவலையைப் போக்க நினைத்த இறையனார் (சிவன்!) மூன்று செப்பேடுகளில் அறுபது பாடல்களை எழுதிவைத்துவிட்டு மறைந்தாராம். அது மன்னர் கைகளில் கிடைத்தபோது, புலவர் நக்கீரர் அதற்கு உரை எழுதினார் என்பது அந்த மரபுக் கதை.

கி.மு ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில், நக்கீரன் எழுதிய உரையிலேயே மூன்று சங்கங்களின் வரலாற்றையும் சிறப்பித்துக் கூறும் வகையிலான செய்திகள் இடம்பெற்றன. செவி வழியாக தொடர்ந்து, ஏறத்தாழ 200 ஆண்டுகள் கழித்து, முசிறி நீலகண்டனார் என்பவரால் அது எழுத்துவடிவம் பெறப்பட்டது. ‘தமிழ் முதல் சங்கத்தை 89 வேந்தர்கள் வளர்த்தது, இரண்டாம் சங்கத்தில் 59 புலவர் அமர்ந்தது, 49 புலவர்களுடன் மூன்றாம் சங்கம் சிதைந்தது’ வரையிலான சங்கப் பலகையின் செய்திகள் இறையனார் களவியல் உரையிலேயே முதல்முறை பதிவாகியிருக்கிறது.

உரையெழுந்த சிலம்பு

இறையனார் களவியல் எனும் மூலநூலுக்கு எழுதப்பட்ட நக்கீரர் உரைக்கு அடுத்த இடத்தில், கண்ணில்வைத்து ஒற்றிக் கொள்ளவேண்டுமென்றால் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையைச் சொல்லலாம். முச்சங்கங்கள் பற்றிய குறிப்புகள், சங்கத்தில் அமர்ந்திருந்த புலவர்கள், பாடியோர், மூல நூல்கள், உரை நூல்கள், சங்க கால நில எல்லை, ஆட்சி செலுத்திய மன்னர்கள், சங்கங்களில் அரங்கேற்றப்பட்ட கவிகள், அமைந்த இடங்கள் உள்ளிட்ட செய்திகளை அடியார்க்கு நல்லார் தொகுத்தளிக்கிறார்.

‘கபாடபுரத்தில் இரண்டாம் ஊழி தாக்கிய சூழலில், தொல்காப்பியத்தைப் புகழ் பெறச்செய்த நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையில் அகத்தியன், தொல்காப்பியர், கருங்கோழி மோசியர், வெள்ளூர் காப்பியர், மதுரை மாறர், சிறுபாண்டரங்கர், துவரைக் கோமகன், கீரந்தை எனப் பேர் கொண்ட புலவர்கள் இருந்தனர்’ என்ற இறையனார் களவியல் உரையின் கூற்றை சிறு மாறுதல்களுடன் அடியார்க்கு நல்லாரும் தன் சிலப்பதிகார உரை நூலில் வழிமொழிகிறார்.

அடியார்க்கு நல்லாரின் உரையெழுந்த காலக் கணிப்புக்குச் சான்று அளித்து உதவுபவர்களின் முதன்மையானவர் நச்சினார்க்கினியர். பாண்டி நாடான மதுரையைச் சேர்ந்த நச்சினார்கினியர் தொல்காப்பியம், கலித்தொகை, சீவகசிந்தாமணி முழுமைக்கும், வேறு யாரும் உரை எழுத முற்படாத பத்துப்பாட்டுக்கும், உரை கிடைக்காத குறுந்தொகையின் இருபது பாடல்களுக்கும் உரை எழுதியவர்.  செம்மையாகப் பொருள் கொள்ள முடியாத சிந்தாமணியை முதன்முதலாக  ‘எழுத்து எழுத்தாக உரைசெய்தார்’ என்று இவரை வியப்பவர்களும், ‘செய்யுளைத் திரித்து உரையெழுதினார்’ எனக் கடிந்து வைத்திருப்பவர்களும் (மறைமலையடிகள்) உண்டு.

இந்த நச்சினார்கினியரின் காலம் 14-ம் நூற்றாண்டு. அதாவது சோழன் அநபாயன் என்ற இரண்டாம் குலோத்துங்களைக் குறித்து எழுதியதாலும்  (கிபி-1150 மறைந்தார்) நன்னூல் சூத்திரக் கருத்தை மேற்கோள் காட்டியதாலும் (13-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) தன் குறிப்புகளில், நல்லார்க்கு அடியாரின் சிலப்பதிகார உரையின் கருத்துக்கள் சிலவற்றை மறுத்து எழுதியதாலும் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர்க்கு காலத்தால் மூத்தவர் என்று கணிக்கப்பட்டது.

மற்றொரு சான்றாக, அடியார்க்கு நல்லார்க்கு ஆதரவளித்தவராகச் சொல்லப்படும் பொப்பண்ண காங்கேயர் கோன், போசாள மன்னர் விஷ்ணுவர்தனின் மந்திரியாக இருந்த கங்கராஜன் என்பவரின் மகன். இவரின் காலம் முதல் குலோத்துங்கச் சோழனுக்குப் பிந்தையது. (முதலாம் குலோத்துங்கன் 1122-ல் மறைந்தார்.) எனில் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதிய காலம் 12-ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாமென கணிக்கப்பட்டது.

இயல் இசை நாடகம்

‘சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுவது என்பது அவ்வளவு எளிய காரியமில்லை. முத்தமிழிலும் திறன் படைத்திருக்க வேண்டும். அடியார்க்கு நல்லார் அப்படியான திறனைக் கற்றறிந்தவர்’ என்று இவரை வியப்போர் உண்டு. அதற்குக் காரணம் அடியார்க்கு நல்லார் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டின் இசைத் தமிழும் நாடகத் தமிழும் தட்டழிந்து கொண்டிருந்தன. ஏடறிந்த புலவர்கள்  இல்லாமை என்பதோடு கலை, இலக்கியச்  செல்வங்களின் அழிவு இந்திய தீபகற்பம் முழுக்க ஒலித்துக் கொண்டிருந்த காலகட்டமும் அது.

இதற்கு ஓர் நல்ல உதாரணம் அடியார்க்கு நல்லார் வாழ்ந்ததாக நம்பப்படும் காலகட்டத்திலேயே நாளந்தா பௌத்த பல்கலைக் கழகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஏறத்தாழ மூன்று மாத காலம் அங்கிருந்த நூல்கள் தீயில் அணையாமல் எரிந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில்தான் தனது சிலப்பதிகார உரையை எழுதியிருக்கிறார் அடியார்க்கு நல்லார்.

இன்று நம் வசமுள்ள பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கி.பி பத்தாம் நூற்றாண்டு காலகட்டம் வரை வெகு மக்கள் பயன்பாட்டில் இல்லை. அதற்கு உரையும் இல்லை. அதைக் கற்று, ஆராய்ந்து பதினோராம் நூற்றாண்டில் சோழ நாட்டு இளம்பூரணார் தொல்காப்பிய உரை எழுதினார். அவருக்குப் பிறகு, அடியார்க்கு நல்லார் சிலம்புக்கு எழுதிய உரையின் மூலமாக இயல், இசை, நாடகமெனும் முத்தமிழ் இலக்கிய வளத்துக்கு ஒளியேற்றியிருக்கிறார். 

‘பண்டைய தமிழர்கள் இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் திறன் பெற்று இருந்தனர்’ என்பதற்குச் சான்றாக மொத்தப் பெருங்கதையும் சிதைவுறாமல் முழுமையாகக் கிடைத்த ஒரே காப்பியம் சிலம்பு மட்டும்தான். காப்பியத்தின் மொழிப்புலம் இயல் தமிழுக்குச் சான்று. கானல்வரி, வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக்காதை ஆகிய ஐந்தும் இசைத் தமிழ் வளத்துக்குச் சான்று. அரங்கேற்று காதையும், இந்திரவிழவு எடுத்த காதையும் நாடகத்தமிழ் வளத்துக்குச் சான்று. இதில் இசை, நாடக இலக்கணங்களை, அவற்றிலுள்ள நுணுக்கங்களை அறிந்து உரையெழுத அடியார்க்கு நல்லார் ஐந்து நூல்களைக்1 கற்றுத் தேர்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

சார குமாரனின் ‘இசை நுணுக்கம்’, யாமளேந்திரரின் ‘இந்திர காளியம்’, அறிவனாரின் ‘பஞ்ச மரபு’, ஆதிவாயிலார் இயற்றிய ‘பரத சேனேபதீயம்’, கடைச் சங்க பாண்டிய மதிவாணன் இயற்றிய ‘நாடகத் தமிழ்’ ஆகியனவே அவ்வைந்து நூல்கள். சிலம்பில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் திறனறிந்து விவரித்த வகையிலும், முத்தமிழ் இலக்கிய நயங்களையும், உத்திகளையும் சிறப்பாகக் கையாண்டதிலும் அடியார்க்கு நல்லார்க்கு இந்த ஐந்து நூல்கள் பெரிதும் உதவியிருப்பதை அறிய முடிகிறது. இந்த ஐந்து நூல்கள் மட்டுமின்றி, அறிந்தவை, அழிந்தவை முதல், நடு, இறுதி காணாத நூல்கள் என்று  ஒரு பெரிய பட்டியலையும் அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகார உரைகளுக்கிடையே தருகிறார். உரையாசிரியரின் விசாலமான அறிவுத் தேர்ச்சிக்கு இது சான்றாகிறது.

நல்லிணக்க நல்லார்

சிலம்பின் மூல நூல், மூவேந்தரையும் சரிசமமெனப் போற்றுகிறது. நிலத்தின் தெய்வங்களை ஒரே சீரில் எதிர்கொள்கிறது. மக்களின் நம்பிக்கைகளை புறமொதுக்கவில்லை. பரத்தையர், ஆய்ச்சியர், குறவரென எவரின் கலைகளையும் தூய்த்து, தாழ்த்தி பேதம் காணவில்லை. அதேசமயம் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத பல மாற்றுக் கருத்துக்கள்கூட சிலப்பதிகாரத்தில் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், விருப்பு வெறுப்பின்றி அதன் பண்பாட்டு அசைவுகள் நமக்கு முக்கியம். இந்தத் தன்மையை  சிலம்புக்கு உரை எழுதும்போது கொஞ்சமும் நழுவவிடாமல்  அடியார்க்கு நல்லார் பின்பற்றியிருக்கிறார்.

உதாரணமாக, சைவ சமயத்தாரான நல்லார் சமண காப்பியமான சிலம்புக்கு உரை எழுதியபோது, பாடல்களின் இடையே வரும் சமண மதக் கருத்துக்களுக்கு சமண மத நோக்குடனே பொருள் விளக்கியிருக்கிறார். அதில் காழ்ப்பில்லை; உவப்பில்லை.

சிலம்பில், கவுந்தியடிகள் கண்ணகியை அழைத்துக் கொண்டு  வயல்வெளி வழியே செல்லும் காட்சி ஒன்று உண்டு. அப்போது, வாய்க்காலின் அடைகரை வழியே சென்றால் அங்கு வாழும் நத்தைகளும், நண்டுகளும் நம் காலில் மிதிபடக் கூடும். அது ‘கொலைபாதகம்’ (உயிர்க்கொல்லாமை) என்பது போல ஓர் வரி வரும். அந்த இடத்தில், ’கொலை’ என்று சொல்லுக்கு ‘நோய்’ என்று  சமணக் கருத்தின்படி உரைதருகிறார் அடியார்க்கு நல்லார். அதோடு, அருகக் கடவுளின் நாமங்களாக 48 பெயர்களை இளங்கோவடிகள் சுட்டும் இடத்தில், ஒவ்வொரு பெயருக்கும் எது வேர்ச்சொல் என்று விளக்கம் தருகிறார் நல்லார்.

உரை எழுதும்போது வழக்காறுகளைப் பயன்படுத்தியதிலும் எதுகை மோனையைக் கையாண்டதிலும், மேற்கோள்கள் தந்து, வியப்பளிக்கும் விதத்தில் ஒரு சொல் இருபொருள் தரும்விதமாகச் சிலேடை விளையாட்டு ஆடியதிலும் அடியார்க்கு நல்லாரின் அறிவும் உழைப்பும் பெரிதெனத் தெரியவரும். அனைத்தையும்விட, எடுத்துக்காட்டு மேற்கோள்கள் எந்த நூலில், பாடல் வரியில் இடம்பெற்றிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டுச் சொல்லும் அறத்தைக் கடைபிடித்திருக்கிறார். (இன்று அப்படிச் செய்வது ஓர் சலிப்புறும் வேலையாகக் கருதப்படுவதால் நாம் அதைச் செய்வதில்லை.)

விளக்கமும் விரிவும்

சொல்லும் உரையின் பொருளை விளங்கச் சொல்லுவதோடு, விரித்துச் சொல்வதில் இவரின் தவிப்பும் துடிப்பும் திகைக்கவைக்கும். உதாரணத்துக்கு சங்கத்தமிழ் நூலான குறிஞ்சிப் பாட்டில், தமிழரின் குறிஞ்சித் திணை ஒழுக்கத்தை ஆரிய அரசனுக்குப் புகட்டும் கபிலர், தலைவி மழைக்காட்டில் நுழைந்தும் தோழிமாருடன் அருவியிலும், சுனையிலும் நீராடிவிட்டு, தாழையாடை புனைய பூக்கள் பறித்துவந்து பாறையில் கொட்டும் இடத்தில் 99 வகையான பூக்களைத் தொகுத்தளிக்கிறார்.

சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரிடமும் இந்தப் பண்புண்டு. சிலம்பின் பாடல் வரியொன்றில் ‘அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்’ என இடம்பெற்றிருக்கும். அதற்கு உரை எழுதும்போது , அகிலின் ஐந்து வகைகள், துகிலின் 37 வகைகள், ஆரத்தின் ஆறுவகை தொகுதி, வாசனையின் 15 மேலான பலவகை, 14 வகை மலைச் சரக்குகள் என்று ஒரு பெரும் பட்டியலையே தந்துசெல்கிறார். இன்று காட்டன், நைலான் என்று பெயரிடுவதுப் போல இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பனிப்பொத்தி என்று அப்போது பயன்பாட்டிலிருந்த துணிவகைகளின் பட்டியலையே அடியார்க்கு நல்லார் வாயிலாக அறிய முடிகிறது. கற்பூரம் என்று வரும் இடத்திலும் சூடன், சீனச் சூடன் என இருவகைகளைக் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரப் பாயிரத்துக்கு உரை எழுதும்போது, எட்டு வகை2 பொருள் ஆராய்ச்சியின் அத்தனை கருக்களையும் விவரித்துவிடுகிறார். ஒரு சிறு குறிப்புக்குள் அதன் அனைத்து தொடர்புடைய செய்திகளையும் விவரிப்பது இவர் இயல்பு.

சிறப்பும் தனித்துவமும்

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ஒரு செயலை நயம்படச் செய்தால்,  அடியார்க்கு நல்லார் உரையில் அதற்கு உறுதுணை செய்யப் புறப்பட்டவர்போல விளக்கங்களைக் கொடுப்பதில் வல்லவர். உதாரணமாக, ஆய்ச்சியர் குரவையிலேயே வாழ்த்துப் பாடலின்போது, வழக்கத்திலிருந்து மாறாக பாண்டியன், சோழன், சேரன் என்று மூவேந்தர் வரிசை மாற்றிச் சொல்லப்படும். அதற்கு,  ஆய்ச்சியர் குரவை நடைபெறும் நிலம் மதுரையில். அங்கு ஆட்சிபுரிபவன் பாண்டியன். காப்பியம் செய்தவர் ‘விழைவு வெறுப்பற்ற சேரமுனி…’ என்று விளக்கமளிக்கிறார் நல்லார்.

அதே ஆய்ச்சியர் குரவைப் பாடலில் ‘முந்நீரினுள் புக்கு’ என்ற வரிக்கு, ஆற்று நீர், ஊற்றுநீர், வான்மழை என்றே பின்வந்த பலரும் கருதினர். ஆனால், அடியார்க்கு நல்லார், ‘மண்ணைப் படைத்து, மண்ணைக் காத்து, மண்ணை அழிக்கும்’ மூன்று செயல்களைக் கொண்டு முந்நீரினை அணுகுகிறார்.  அரங்கேற்று காதைக்கு உரை எழுதும்போது, கவிஞன் என்பவன் மூன்று தமிழிலும் வல்லவனாய் இருக்க வேண்டும் என்கிறார். இசைக் கருவிகள் குறித்தும், மாதவி யாழ் வாசிக்கும் இடங்களிலும், ஆய்சியர் குரவையிலும், புறஞ்சேரியிறுத்த காதையிலும், இசை நாடகம், நடனம், முத்திரை, அரங்கம் எனப் பல செய்திகளை விரிவாக விவரிக்கிறார்.

இந்திர விழவு ஊரெடுத்த காதையில், ‘சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென’ என்ற வரிகளைக் கொண்டும், கட்டுரைக் காதையில் ஆடித் திங்கள், தழல்சேர் குட்டத் தட்டமிஞான்று, வெள்ளி வாரத்து’ என்ற குறிப்புகளைக் கொண்டும் கண்ணகியும் கோவலனும் எப்போது புகார் நகரிலிரிலிருந்து புறப்பட்டார்கள் என்று காலக் கணிப்பையும் தன் உரையில் தந்திருக்கிறார். இன்றைய நாள்காட்டிகள் இல்லாத காலத்தில் துல்லியமான ‘காலக் கணிப்பு’ என்பது ஓர் கணித விஞ்ஞானமாகவே (Mathematical Science) கருதப்பட்டிருக்கக்கூடும். விதந்தோதுவது போலத் தோன்றினாலும் கற்பனை செய்து பார்த்தால் வியப்பு வரத்தான் செய்கிறது.

இருப்பும் பதிப்பும்

சிலப்பதிகாரம் முழுவதற்குமான அடியார்க்கு நல்லாரின் உரை நமக்குக் கிடைக்கவில்லை. அல்லது அவரால் எழுதப்படவில்லை என்ற கருத்தும் இருக்கிறது. அதாவது மதுரை காண்டம் முடிந்ததுமே அவரின் உரையும் நின்றுவிடுகிறது. வஞ்சிக் காண்டத்தின் ஏழு காதைகளுக்கு அடியார்க்கு நல்லாரின் உரை இல்லை. மதுரைக் காண்டத்திலுமேகூட ஊர்சூழ் வரிக்கு மேல் அடியார்க்கு நல்லாரின்  உரை கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் சிலப்பதிகார 30 காதைகளில் 11 காதைகளின் இறுதியில் தனி வெண்பாக்கள் சிலவை இடைச் சொருகலாக இருக்கக்கூடும் என்ற செய்திகள் உண்டு. உதாரணமாக, நான்மணிக்கடிகை-யில் வரும் பாடல் ஒன்று சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகிறது. அதற்கு அடியார்க்கு நல்லார் உரை கிடைக்கவில்லை. ஒன்று, மூல ஏட்டிலிருந்து அது நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது, பின்வந்த ஏடுகளில் பிரதி எடுக்கப்படாமல் விடுபட்டிருக்கலாம்.

முதன்முதலாக 1880-ம் ஆண்டில் சித்திரை மாதத்தில் மீனாட்சிசுந்தரம் அவர்களின் மாணாக்கர் சோடசாவதானம் சுப்புராயச் செட்டியார், ‘சேரர் குலத்துதித்த இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் புகார் காண்டம்’ எனச் சில பிரதிகளைப் பரிசோதித்து, சென்னை மெமோரியல் அச்சகத்தில் பதிப்பித்திருக்கிறார். பக்கங்கள், 176, விலை, ரூபா 1 அணா 12 காசுகள். அடியார்க்கு நல்லார் உரையைச் சுருக்கியே அவர் அச்சிட்டிருந்தார்.

பிறகு, 1892-ல் உ.வே.சாமிநாதரின் முதல் பதிப்பு, அரும்பதவுரை மற்றும், அடியார்க்கு நல்லாரின் (முழுமையற்ற) உரையுடன் வெளியானது. ஆதீன வித்துவான்கள், ஓதுவார்கள், உபாத்தியாயர்கள், பிள்ளை, செட்டி, முதலியார் என மடங்கள், தனிநபர்களென சேகரிக்கப்பட்ட 22 பிரதிகளைக் கொண்டு அடியார்க்கு நல்லார் உரையை ஒருங்கமைத்துப் பதிப்பித்தார்.

அந்த நூல் வெளியாகி 30 ஆண்டுகளுக்குப் பிறகும் புதிய சான்றுகளுடன் அடங்கிய வேறு பிரதிகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், கொழும்பு, ஆழ்வார்திருநகரி(நெல்லை), திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்து வேறுசில பிரதிகள் உ.வே.சாமிநாதருக்குக் கிடைத்தன. அவற்றைக் கொண்டு சில பிழைதிருத்தங்களைச் செய்து இரண்டாவது பதிப்பினை வெளியிட்டார். இந்தப் பணிகளுக்கு சேதுபதி சமஸ்தான மகாராஜாவும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர்களும், திருவாவடுதுறை ஆதீனமும் உ.வே.சா-வுக்கு ஆதரவளித்தன.

புலமையும் பொறுப்புணர்வும்

அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை என்பதும் தமிழ் பண்பாட்டின் அடிவேரிலிருந்து கிளம்பிய பெருங்கொடை. கடைச் சங்க காலத்துக்கு முன்னும் பின்னும் இருந்த முத்தமிழ் இலக்கிய, இலக்கண வளங்களைத் தெளிவுற நம் கையளித்த தமிழ்ச்சொல்லாளன் அவர். காலமிழந்து, நூல்கள் இழந்து நின்ற தமிழ் நிலத்தின் பல்கலைச் செழுமை தாங்கி நிற்கும் சிலப்பதிகாரப் பனுவலை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கற்று, உணர்ந்து,  உரை எழுதிட பெரும் புலமையும் பொறுப்புணர்வும் வேண்டும். அது அடியார்க்கு நல்லார்க்கு வாய்த்திருந்தது. ‘உயிர் அழிந்துபோகும் செயல் அப்படியல்ல…’ என்பதை இன்னாரிடமிருந்தும் ஒரு சொல்லாகப் பெற்றுக் கொள்கிறேன்.

***

அடிக்குறிப்புகள்

1. ஐந்து நூல்கள் : இந்த ஐந்து நூல்களில், இசை நுணுக்கம், இந்திர காளியம் இரண்டும் இசைத் தமிழ் நூல்கள், மற்ற மூன்றும் நாடக நூல்கள். சார குமாரனின் இசை நுணுக்கத்தை பாண்டியன் குமாரனுக்கு இசை கற்றுத்தருவதற்காக ‘சிகண்டி’ என்பவர் மூன்றாம் நூற்றாண்டளவில் இயற்றியிருக்கிறார்.  யாமளேந்திரரின் இந்திர காளியம் – எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனத் தெரிகிறது. அறிவனாரின் பஞ்ச மரபு, ஒன்பது வகை இசைப்பாக்களைக் கூறுகிறது. நீண்டகாலம் இல்லாமல் அழிந்துபோனதாகக் கருதப்பட்ட இந்த நூல் தற்போது (1973 முதல்) சில பல இடைச் சொருகல்களுடன் பதிப்பிலிருக்கிறது. 

ஆதிவாயிலார் பரத சேனாபதீயம் நூலில் நாடகத்துக்கான அரங்கேற்ற வயது, பயிற்சி காலம், அரங்கு அமைக்கப்படும் நிலத்தின் இலக்கணம் உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன. இந்த நாடகத் தமிழ் நூலை இயற்றியவர் பாண்டிய மன்னன் மதிவாணன். இவர் கபாடபுரத்தை ஆட்சி செய்த 59 பாண்டிய மன்னர்களில் ஒருவர். கவிகளை அரங்கேற்றிய பாண்டியர்கள் மூவரில் ஒருவர் எனும் புகழ்கொண்டவர். அடியார்க்கு நல்லார் உரை வழியே இந்த ஐந்து நூல்களும் 12-ம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்தில் இருந்தன என்பதும் உறுதியாகிறது.

2. பொருள் ஆராய்ச்சி : எட்டுவகைப்பட்ட பொருள் ஆராய்ச்சி : திணை, பாடல், செய்யுள், நிலம், காலம், வழு, வழக்கு, இடம். இதில் திணை இரண்டு (அகம்; புறம்), பாடல் -14 (கைக்கிளை முதல் பெருந்திணை வரை 7; வெட்சி முதல் பாடான்திணை வரை -7), செய்யுள் -6 (வெண்பா, ஆசிரியப்பாம் கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடற்பா), நிலம் -4 (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்), காலம் -12 (சிறுபொழுது-6; பெரும்பொழுது-6), வழு -14 (அகத்திணை வழு-7; புறத்திணை வழு-7), வழக்கு -2 (நாடக வழக்கு; உலகியல் வழக்கு), இடம்-2 (வழக்கிடம்; செய்யுள் இடம்

உதவிய நூல்கள்

1. மு.அருணாசலம் – 12,13,14,15, 16, & 17-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு (தொகுதிகள்)
2. இளங்கோவடிகளருளிச்செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும் -(1920பதிப்பு)
3. ம.இராசசேகர தங்கமணி -பாண்டியர் வரலாறு
4. மு.இராகவய்யங்கார் நூல்கள்
5. பொ.செகந்நாதன்- அடியார்க்கு நல்லார் வரலாறு ஆராய்ச்சி-1966 (யாழ்பாணம்)
6. இளம்பூரணர் தொல்காப்பியம், மூலமும் உரையும்- சாரதா பதிப்பகம்.
7. அடியார்க்கு நல்லார் உரைதிறன் – ச.வே.சுப்பிரமணியன்-1976
8. சிலம்பின் கதை – பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்
9. Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons -Scott, David (1995)
10. சிலம்பு ஒலித்தது- திராவிடநாடு இதழ்.01-04-1951
11. சேரன் செங்குட்டுவன் – மு.இராகவையங்கார்.
12. ஈழத்தில் கண்ணகி கலாசாரம் – பால.சுகுமார் -2009
13. அறிவனார் இயற்றிய பஞ்ச மரபு : மூலமும் உரையும்  – ஜெமினி 1975 

கார்த்திக் புகழேந்தி

எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார். தமிழ் விக்கியில்

உரையாடலுக்கு

Your email address will not be published.