/

ச.துரை கவிதைகள்

வளரும் அதிசய பிராணி

~

தெரிந்தோ
தெரியாமலோ
அந்த அற்புதம்
என் தலையில் விழுந்துவிட்டது
எப்போதும்
கை கால்களில்தான் விழும்
இன்றென்னவோ தலையில் விழுந்துவிட்டது
அதை பார்த்த எல்லோரும்
உண்மையிலே
நல்ல அற்புதம்தான் என்கிறார்கள்
விழுந்த அற்புதத்தை பார்த்தேன்
அது என்னை பாவமாய் பார்க்கிறது
சமயத்தில் இப்படி எதாவது நிகழும்போது
நாம் ஒருவரை ஒருவர் பார்த்து
சிரித்துக் கொண்டால்தான் உண்டு அற்புதமே.

~

பிராணிக்கு
எண்பது வயதாகிவிட்டது
இப்போதெல்லாம்
அதை நான் தூக்குவதில்லை
அதுவும் அதை எதிர்பார்ப்பதில்லை
பாலை வேகமாகவும்
ரொட்டியை மெதுவாகவும் தின்னுகிறது
என்கிற குறைமட்டும் உள்ளது
இத்தனை வயதுவரை
ஒரு பிராணி உயிரோடிருப்பது
வியப்பென்கிறார் அண்டை வீட்டார்
நான் சிரித்தேன் வாழ்நாள் முழுக்க
அற்புதங்களை மட்டுமே
தேடி அலைந்தவனிடம்
வேறு என்ன இருக்கும்
இதுபோல் என்னிடம் நிறைய‌
கிழட்டு அற்புதங்கள் இருக்கின்றன என்றேன்.

~

மிக சிறிய
அளவு மட்டுமே
வளரும் தன்மை கொண்ட
பிராணிகள்தான் அற்புதங்கள்
அவைகள் எப்போது தங்களை
நிகழ்த்த வேண்டுமென்ற காலத்தை
அறிந்து வைத்திருக்கின்றன
என் சிறும வயதில்
எனக்குள் அற்புதங்கள் எதுவும்
நிகழாதவரை அதுவே என் வாழ்வின்
மாபெரும் அற்புதமாக இருந்தன‌

~

பிராணியின் பிடரி முடியை
கத்தரித்து கொண்டிருந்த போது
அதன் மீதிருந்த
துர்நாற்றத்தை கவனித்தேன்
இப்போதெல்லாம் நான் அதை
சரிவர கவனிப்பதேயில்லை
பொருட்படுத்துவதுமில்லையென
குற்ற உணர்வாகிவிட்டது
அது சிணுங்கியபடியே
என் மடியிலே படுத்தது
நானும் அணைத்தபடி படுத்தேன்
எத்தனை காலமாகிற்று
இதுபோல் நாம் ஒன்றே உறங்கி
உன் பூ மயிர்கள் என் நாசி தீண்ட
உன்னை நுகர்கிறேன் பிராணியே
அது மெல்ல சொன்னது
அழுத்தி அணைக்காதே அற்புதம் விழித்துவிடும்.

ச.துரை

ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.

தமிழ் விக்கியில் 

2 Comments

உரையாடலுக்கு

Your email address will not be published.