இந்த நூற்றாண்டின் எளிமையான விஷயம் எழுத்தாளராக, கவிஞராக அறியப்படுவது. ஆனால், சிரமங்கொண்ட காரியம் ஒரு தொழில்முறை பதிப்பாளராக இருப்பது. பேரிடர் அச்சங்களுக்கிடையில், அச்சு ஊடகங்கள், சஞ்சிகைகள், நூற்பதிப்பு என ஒரு பதிப்புத் சரிவுப் பாதையில் மெல்ல ஊர்ந்துகொண்டே இருக்கிறது. மறுபுறம் படைப்பாளர்களே புதிய பதிப்பகங்களைத் தொடங்கும் நிகழ்ச்சி நிரல்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
சரியாகச் சொன்னால், எழுத்தாளர் – எடிட்டர் – பதிப்பாளர் – விற்பனையாளர், வாசகர் என்ற கண்ணி மிகச் சிக்கலான நிலையில் இயங்கிவரும் காலகட்டமிது. வாசிப்பு குறித்த செயல்த்திட்டம் மட்டுமல்ல, நூல் உருவாக்கத்தின் வேலை அம்சமுமே வெகுவாக மாறியிருக்கிறது. அச்சுக் கூடங்களுமேகூட பெரும்பாலும் ‘அவுட் சோர்ஸிங்’ முறைக்குத் தாவிவிட்டன. ‘பிரிண்ட் ஆன் டிமாண்ட் (POD)’ முறையில் நூலின் ஒரேயொரு பிரதியைதைக்கூட யாரும் அச்சிட்டுக்கொள்ளலாம் இன்றையதினத்தில். CMYK, RGB வர்ண பேதங்களே அறியாமல் ஒரு ‘செல்ஃப் பப்ளிஷர்‘ உருவாகிவிட முடியும். அதைக் காகிதமில்லா வடிவங்களில் மார்க்கெட் செய்து, பிரபலமடையவும் செய்துவிட முடியும்.
நூல், நூலாக்கம் மட்டுமல்ல… தன் எழுத்தை அச்சில் பார்க்கிற காரியமும் இந்த நூற்றாண்டின் சர்வ சாதாரணமான செயல். நவீனத் தொழிநுட்ப மாற்றங்களால், வாங்கும் சக்திகொண்ட எவரும் தனக்கென பிரத்யேக ‘எலெக்ட்ரானிக் பிரிண்டர்’ ஒன்றை தன் மேசையில் நிறுவிக்கொள்ளலாம்.
1968-ல் ஜப்பான் தேசம் முதன்முதலாக எலெக்ட்ரானிக் அச்சு இயந்திரத்தை வடிவமைத்து, அதை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியபோது, அச்சுத் துறையின் ‘மாபெரும் புரட்சி’ என அந்தச் செயல் வர்ணிக்கப்பட்டது. அதன் தாக்கம், 1990-களில் அதுவரை எழுத்துருக்களைத் தாளில் அச்சிடப் பயன்படுத்தப்பட்டுவந்த ‘கம்போசிங் குச்சிகளை’ பரணில் ஏற்றியது. கம்போசிங் வேலையை டெஸ்க்டாப் பப்ளிஷிங் (DTP) கைப்பற்றியது. பதிப்புத்துறைக்குள் அதுவரை புழங்கிவந்த ‘கம்ப சூத்திர’ பாவனைகள் தொழில்நுட்ப வசதிகளால் எளிமைப்பட்டுப் போனது. அதன் விளைவு சமூக உரையாடல்களிலுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இன்று (2023-ல்) மென்பொருள்களும் தரவுத் திரட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கிகளும் அச்சுத் தொழிலின்மீது தொடர் தாக்கங்களையும் தாக்குதல்களையும் செலுத்திக்கொண்டிருக்கின்றன. இது இந்த நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் கதை.
ஒருவகையில் ‘இந்தத் தொழில்நுட்பச் சாத்தியத்தின் விளைவிலிருந்தே நானும் எழுத வந்தவன்’ என்கிற கதியில் அச்சுத் தொழில்நுட்ப வரலாற்றின் கடந்தகால நிகழ்ச்சி நிரல் குறித்து எழுத நினைத்தேன்.
சுமார் இருநூறு ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் ‘அச்சுத் தொழில்நுட்பத்தின்’ வரலாறை அறிவதென்பது, 19-ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றையும் சமூக வரலாற்றையும் சேர்த்தே அணுகுவதைப் போன்றது. இந்தக் காலகட்டம்தான் ‘தமிழ்ப் பதிப்பு துறை’யின் வளரிளம் பருவம். சங்க இலக்கியங்களின் துணையுடன் தமிழ் மொழி, இலக்கண, இலக்கியங்களின் வீச்சினை, 2000+ ஆண்டு காலப் பழமைக்கு உந்தித்தாவச் செய்யும் பாய்ச்சலுக்குமேகூட 19-ம் நூற்றாண்டுதான் அஸ்திவாரம் போட்டுத் தந்திருக்கிறது!
இரும்புக்கை மாயாவி!
கிறிஸ்து பிறப்பு குறித்த காலக்கருத்து ஏற்பட்டு சுமார் 1500+ வருடங்கள் கழிந்திருந்த போது, தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட பக்தி இலக்கிய உருவாக்கமும் நூலாராய்ச்சியும் நூல் தொகுப்புப் பணிகளும் தீவிரப்பட்டுக்கொண்டிருந்தன. அந்தத் தகிப்பில் உருவான பல ஆக்கங்களும் ஏட்டுச் சுவடிகளாகவே (ஓலை, காகிதங்களில் ஆணியாலும், மை தொட்டுக் கையாலும் எழுதப்பட்டவை) பதிவாகி வந்தன.
சமஸ்தான வேந்தர்கள், ஆதீன கர்த்தர்கள், செல்வப் பெருந்தகைகள் என வசதி படைத்தவர்கள் அன்றைக்கிருந்த எழுத்துப் புலவர்களையும் கவிகளையும் ஆதரித்து இலக்கிய, இலக்கணப் படைப்புகள் உருவாக்கப்படுவதற்கும் தொகுக்கப்படுவதற்கும் தங்கள் செல்வங்களில் ஒரு பகுதியைச் செலவளித்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக ராமநாதபுரம் சேதுபதிகளும் ஊற்றுமலை, மருங்காபுரி, எட்டையபுர ஜமீன்களும் அவைக்களப் புலவர்களையும் கவிகளையும் ஆதரித்து வந்தனர். தஞ்சை மராட்டிய மன்னர்கள் விலாசங்கள் எழுதுவோரை ஊக்குவித்தனர். காஞ்சி செல்வந்தர்கள், பதிகங்களைப் பாடச் செய்தனர். எழுதியோர் பலருக்கு ‘கவிச்சிங்கம்’, ‘கவிராஜ சாமி’ எனப் பட்டங்களும், வீடு, தோட்டமென அசையாச் சொத்துக்களும் ‘ராயல்’ அன்பளிப்பாகக் கிடைத்தன.
இந்த சமயத்தில் பக்தி மடங்கள் ஒவ்வொன்றும் தங்கள் தரப்பிலிருந்து, இலக்கிய வாரிசுகளை, மாணாக்கர்களை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை மடம், ஈசானிய மடங்களிலிருந்து புறப்பட்ட தமிழ் கற்ற மாணக்கர்களால் சிற்றிலக்கியப் படைப்புகள் பெருகிக் கொண்டிருந்தன. அதன் விளைவாக அல்லது அந்தச் சூழலோடு பிணைந்து கிறிஸ்தவமும், முகமதிய சமயமும் தங்களுடைய சமயப் பரவலின் துணைக் கருவியாக, துதிப் பாடல்கள், சமய விளக்க நூல்களைத் தமிழில் ஏட்டுச் சுவடுகளாக உருவாக்கத் தொடங்கின. இந்தத் தேவையின் பொருட்டாக ‘அச்சு இயந்திரம்’ என்ற ஓர் நவீன மிருகம் ஓர் இரும்புக்கை மாயாவியைப் போல இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்தது.
மொழி – மதம் – உரிமை
இந்திய நிலத்தில்… அதுவும் தென்னிந்தியக் கடல்புரம் வழியாகவே அச்சு இயந்திரம் முதன்முதலில் நுழைந்தது. தாழாத எடையினாலோ என்னவோ, அது கடலோர நிலப்பரப்பின் ஓரத்திலேயே நீண்டகாலமாகத் தங்கியும்விட்டது. அதிலும், குறிப்பிட்ட சிலரே அந்த நவீன மிருகத்தைக் கையாளும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். அதனாலேயே கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களுக்கு வெகு மக்களின் கண் வசத்துக்கு அந்த மிருகம் தட்டுப்படவேயில்லை.
1835-ம் ஆண்டில்தான் முதன்முதலாக இந்தியர்கள் தங்களுக்கெனச் சொந்தமாக அச்சுக்கூடம் அமைத்துக் கொள்வதற்கான உரிமை ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது. இதையடுத்து 1849-ம் ஆண்டில், ஆறுமுக நாவலர் தனது முதல் அச்சுக்கூடத்தை பிரிட்டிஷ்-சிலோனில் அமைந்திருந்த வண்ணார்பண்ணையில் நிறுவுகிறார். பிறகு மெட்ராஸிலும் கிளை விரிக்கிறார். அதாவது, 1450-களில் முதல் அச்சு இயந்திரம் ஜெர்மன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, 1550-களில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொங்கணி (கோவா) தேசத்துக்குக் கொண்டு வரப்பட்ட (06-09-1556) நிலையிலும், கொச்சியில் உள்ள அம்பலக்காட்டில், மரச் சில்லுகளில் தமிழ் எழுத்துக்களைச் செதுக்கி முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டபோதிலும் ‘அச்சுத் தொழில்நுட்பம்’ ஓர் தென்னிந்தியப் பிரஜையின் கைகளை வந்தடைய ஏறத்தாழ 400 ஆண்டுகள் கழித்திருந்தன.
இதனாலேயே, 19-ம் நூற்றாண்டின் மத்திம காலம் வரைக்கும் ஒப்பீட்டளவில் கிறிஸ்தவ சமய நூல்கள்தான் அதிகளவு தமிழில் வெளியிடப்பட்டுவந்தன. கத்தோலிகர்களும், சீர்திருத்த கிறிஸ்தவர்களும் தங்களின் சமயக் கொள்கை பரப்பும் நூல்களுக்காக தமிழ் எழுத்துக்களுக்கு அச்சு உருக்களைத் தயாரித்து, அதன் வழியே தங்கள் மதநூல்களைப் பதிப்பித்து, வெளியிட்டனர். அதற்கான உரிமைகள் பாதிரிமார்களிடமிருந்தது. அன்றைக்குக் காலத்தில் தலைமை பாதிரி என்பவர், பிரதேச ஆட்சியருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் மிக்கவராக இருந்தார். முந்தைய ஆட்சியதிகாரத் தொடர்புகளால் முகமதியர்களும் தங்களின் மத நூல்களை 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
கிராக்கிகளின் காலம்!
மை தொட்டு எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகள் அன்றைக்குக் காலகட்டத்தில் விலை மதிப்பு மிக்கவை. கல்வியறிவு கொண்ட பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த சாதனமாக அது இருந்தது. எளிய மக்களால் தூது, மடல் வடிவத்தில் அவற்றைக் கையாளவும் பார்க்கவும் மட்டுமே முடிந்தது. பெரும்பாலானோர்க்கு வாய்த்ததெல்லாம் சொல்வழித் தகவல்கள்தான். இந்தச் சூழலில், ‘அச்சுப் படி’ யாக உருவான காகித நூல்கள் ஓரளவு கட்டுப்படியாகும் விலையிலும் அபரிமிதமாகவும் உருவாகிக்கொண்டிருந்தன. யாழ்ப்பாணம், தரங்கம்பாடி, நாகை, புதுச்சேரி, தஞ்சை, மதராஸ், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் அச்சுக்கூடங்கள் பெருகத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக நூல் நுகர்வோர் எண்ணிக்கை முன்னேறிய வகுப்பினரிடையே சீராக உயர்ந்துகொண்டிருந்தது.
எழுத்தறிவோடு, வசதி வாய்ப்பும் பெற்ற எவரும் தாங்கள் இயற்றிய நூல்களைப் பதிப்பித்துக் கொள்ள முடியும் என்ற நிலை மெல்ல மெல்ல உருவெடுத்தது. முக்கியமாகத் தங்களிடமிருந்த பண்டைய தமிழ் சுவடிகளை, அலசி ஆராய்ந்து, ‘அந்தப் புதிய தொழில்நுட்பத்தில்’ அச்சாக்கம் செய்து, பாதுகாக்கும் எண்ணம் அதிகரித்தது. இதனால் பழைய ஏட்டுச் சுவடிகள், ஓலைச் சுவடிகள் சேகரிப்புக்கு ‘கடும் கிராக்கி’ ஏற்பட்டது.
ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர், சி.வை.தாமோதரன், திருமயிலை சண்முகர், தாண்டவராயர், வீராசாமி, சிவக்கொழுந்து தேசிகர், முகவை கவிராயர் உள்ளிட்ட பலர் இந்த முயற்சிகளில் தீவிரமாக இயங்கினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தோர் கையிலிருப்பது ‘பண்பட்ட நூல்’ எனத் தெரிந்தால் அதற்கு மதிப்பான தொகை கொடுத்துப் பெறும் வழக்கம் ‘தங்கத்துக்குப் பணம்’ போலானது.
இந்தப் பின்னணியாக தஞ்சையில் மராத்திய மன்னர்களின் நூலாராய்ச்சிக் குழுவும், மதுரையில் பாண்டித்துரை தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச் சங்கமும் முக்கிய காரணிகளாக இருந்தன. அதோடு, நாடு பிடித்து ஆட்சி செலுத்திவந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் தங்களது பிரஜைகளுக்குக் காரண காரியத்தின் பொருட்டு, தமிழ் கற்றுக்கொடுக்கும் விதமாக புதிய திட்டமிடல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
லார்டும் கர்னலும்
குறிப்பாக 1812-ல் ‘கல்விச் சங்கம்‘ ஒன்றை மதராஸ் கலெக்டராக இருந்த லார்ட் எல்லீஸும் (Francis Whyte Ellis) கர்னல் மெக்கன்சியும் (Colin Mackenzie), தொடங்கியிருந்தார்கள். எட்டு ஆண்டுகளில் அந்தச் சங்கம் வேகமாக வளர்ந்து ஓர் அச்சகத்தையும், புத்தக விற்பனை நிலையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடியொற்றி உருவாக்கியிருந்தது. மெக்கன்சியும் எல்லீஸும் தென்னிந்தியப் பகுதிகளில் கிடைக்கும் பழைய ஓலைச் சுவடிகளையும் ஏட்டுச் சுவடிகளையும் தேடிச் சேகரித்து, அதைப் நூலாகப் பதிப்பிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர்கள்.
எல்லீஸ் திருக்குறள் சுவடியைக் கண்டறிந்து, அதன் 13 அதிகரங்களை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்ததோடு, வள்ளுவர் உருவ நாணயத்தையும் வெளியிட்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை கால்டுவெல் பாதிரியார் எழுதுவதற்கு 40 சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பாக, தென்னிந்திய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து எல்லீஸ் பதிவு செய்திருக்கிறார்.
மெக்கன்சி ஓலைச் சுவடிகளோடு பல கல்வெட்டுகளையும் தொகுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு & கன்னட மொழிகளில் அடங்கிய அந்தச் சுவடிகளை கிழக்கிந்திய கம்பெனி 10,000 பவுண்டுகளுக்கு 1821-ல் விலைக்கு வாங்கியது. 1855-ல் அவை இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1870-க்குப் பிறகு அவை பிரெசிடென்சி கல்லூரிப் பேராசிரியர்களால் பட்டியலாகத் தயாரிக்கப்பட்டது. அதன் மொத்த எண்ணிக்கை 71180. அவற்றில் தமிழ்ச்சுவடிகளின் எண்ணிக்கை 16398.
இந்த அடிப்படையில், 19-ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டம் முழுவதிலும் பழந்தமிழ் சுவடிகள், ஏடுகள், நூல்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு, அவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து அச்சுப் பதிப்புகளாக வெளியிடும் பணிகளே பெரும் முக்கியத்துவத்துடன் இருந்ததைப் புரிந்துகொள்ள முடியும். அந்தக் காலகட்டத்தையே, தமிழ் நூல்களின் ‘பரிசோதனை & பதிப்புக் காலமாக’ நாம் டிக்ளேர் செய்துகொள்ளலாம்.
இறக்குமதிகளின் குவியல்!
தமிழ்நாட்டின் நவீன அறிவுசார் பார்வைக்கு வெளிச்சம் பாய்ச்சியதில் ஐரோப்பிய கண்டத்துக்கும் கருத்துக்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பது மறுக்க முடியாதது. ஆட்சி அதிகார முரண் நடவடிக்கைகளுக்கிடையே இந்தச் சரித்திரக் குறிப்பை நாம் மறைத்து வைத்துவிட முடியாது. அச்சு நூலாக்கம், மொழிப்பெயர்ப்பு, உரைநடை எனப் பல்வேறு பாய்ச்சலுக்கு வாய்க்கால் வெட்டித் தந்தது மேற்கத்திய திசைதான். மதநூல்களுடன் அங்கிருந்து இறக்குமதியானவர்கள் தென்னிந்தியாவில் ஏற்பட்ட தங்களது அனுபவங்களையும், கண்டெடுப்புகளையும் தங்கள் நாட்டவர்களோடு பகிந்துகொள்ள முடிவெடுத்தபோது, ‘ஜர்னல்’கள் மற்றும் நாளேடுகளை இங்கு அறிமுகம் செய்தார்கள். அதிகாரம் மற்றும் தொழில்நுட்ப வெளிச்சத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் அதில் தங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
மேற்கத்திய நாடுகளில் இனவியல், மொழியியல் ஆராய்ச்சிகள் உத்வேகத்தை அடைந்தபோது, பேரரசுக் கனவுகளோடு தொழில்மயமாக்கலும் அங்கு சமூக அழுத்தமாக மாறியிருந்தது. அதன் விளைவு ஆங்கிலேய இலக்கிய ஆக்கங்களிலும் எதிரொலித்தன. அதைப் படித்த இந்திய இளையோர்களிடையே ஒருவித கிளர்ச்சி மனநிலையும் உருவாகத் தொடங்கியது.
இந்த சூழலுக்கிடையே மத நிறுவனங்கள், அச்சுப் பணிகளின் மூலம் தங்களுடைய பிரசாரங்களை மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் அப்போது கிறிஸ்தவம் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் கையிலெடுத்திருந்தது. கும்மி, ஊஞ்சல், தாராட்டு, அம்மானை, ஒப்பாரி என எளிய மக்களை அது நெருங்கிச் சென்றது. இஸ்லாமும் புகழ்ப்பாவணி, கும்மிப்பதம், சலவாத்துப்பாட்டு, எனத் தங்கள் படைப்பு வடிவத்தை மாற்றிப் பார்த்தது. இதன் தொடர்ச்சியாக, வைதீக மதங்களும் கடவுளரின் புகழ்பாடும் போற்றி, மகிமை, கீர்த்தனை பதிகம், பத்து, தலபுராணம் ஆகியவற்றை இயற்றிக் கொண்டிருந்தன. இருந்தபோதும் தமிழ் பக்தி இலக்கிய, மதவழிப் புராணங்கள் ஓர் பழமைவாதக் கனவாக, தேய் வழக்காக மாறிக் கொண்டிருந்தது. இறக்குமதி இலக்கியத்தின் புதிய கொழுந்துகள் சுடர்விடத் தொடங்கின.
இதற்குச் சரியான உதாரணம், தமிழ் புனைவுகள் வரிசையில் முதலிடத்திலிருக்கும் பிரதாப முதலியார் சரித்திரமும் அதை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையும். மாயூரம் பிள்ளை 1856-ல் தரங்கம்பாடி முனிசீபாகப் பணிசெய்தவர். தென்னிந்திய நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டவர். கிறிஸ்தவ மத அந்தாதிகளையும், திருவருள் மாலைகளையும் எழுதியவர். அவரே தமிழின் முதல் புனைவை எழுதப் புறப்பட்டார். காப்பியம், வெண்பா, பிரபந்தம், பள்ளு, சிந்து… என ஏறத்தாழ நூற்றுச் சொச்சம் வகைகளைக் கொண்டிருந்த தமிழ் இலக்கியத் துறை, இறக்குமதியான மேற்கத்தியப் பார்வைகளோடு அப்போது புதுவேடம் பூண்டது. இதற்கு தென்னிந்தியர்களின் ஆங்கிலக் கல்விப் பயிற்சி முதன்மைக் காரணமாக இருந்தது.
பகுத்தறிவின் உதய காலம்!
இருபதாம் நூற்றாண்டுத் துவக்கம் வரலாற்றறிதலின் யுகமாகவே தோன்றுகிறது. அதுவரை தொகுத்து, அச்சாக்கம் செய்து, ஆராய்ந்து, எழுதிய நூல்களை மதிப்பீடு செய்து, கண் முன் இருக்கும் திடப் பொருள் சான்றுகளுடன் பிணைத்துப் பார்க்கும் வரலாற்றுப் பார்வை இந்தக் காலத்திலிருந்தே தொடங்கியது. கூடவே, ‘தனிநபர்‘ என்பவர் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகக் கருதப்படத் தொடங்கியதும் இங்கிருந்துதான் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ‘நான்’ என்று தன்னைக் குறித்து எழுதப்படும் தனிச் சரித்திரம் மதிப்பு பெற்றதும் இங்கிருந்துதான்.
சற்று முந்தைய காலம் வரை செவிவழிப்பாடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், இனக்குழு வாழ்க்கையை முந்தைய புராணக் கதைகளோடு தொடர்புபடுத்தும் தெய்வீகப் புனைவுகளுக்குமே செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. இங்கும் மத அமைப்புகளின் கைகளே ஓங்கியிருந்தன. திருத்தொண்டர் சரித்திரம், அக்பர் சக்ரவர்த்தி, எட்வர்ட் அரசர் என அவரவர் மார்க்கங்களின் அடிப்படையில் கதைசொல்லல் செயல்பாட்டிலிருந்தது. வரலாற்றுப் பார்வையுடன் பக்கச் சார்பின்றி தனிநபரின் குரலைப் பதிக்கும் பழக்கம் ஏற்படச் சிறிது காலம் பிடித்திருக்கவேண்டும்.
விதிவிலக்காக, 1893-ல் திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த எச்.ஏ கிருஷ்ணன் என்பவர், தான் கிறிஸ்தவ மதம் மாறியது ஏன் என்று விளக்கமளித்து எழுதியதே 19-ம் நூற்றாண்டில் பதிப்புக்குள்ளான, தனிநபர் ஒருவரால் எழுதப்பட்ட ஒரே தன் வரலாற்று நூல்! தனிமனித வாழ்வு அவ்வளவு பெரிய தாக்கத்துக்கு உட்படாத நிலை அல்லது அழுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு அச்சுத் தொழில்நுட்பம் சென்றடையாத சூழல் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.
அச்சுத் தொழில் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் வேறு பல தொழில்நுட்பங்களும் வளர்ந்தன. அதில் முதன்மையானது போக்குவரத்து. ரயில் தண்டவாளங்களும், விமானப் பிராயணமும் பயண இலக்கியத்துக்கு உயிரூட்டியது. தேசங்களில் சரித்திரம். உலக அரசியலின் போக்குகள், போர் விவரணைகள், புரட்சிக் காரணிகள் இருபதாம் நூற்றாண்டில் மிக விரிவான பேசுபொருள்களாகின. மேற்கத்திய இறக்குமதி இப்போது நாலா திசைகளிலும் பரவியிருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியை கவனிக்கும்போது சமூக அமைப்பு மீதான விமர்சனப் பார்வை, உழைப்புச் சுரண்டல், அதிகாரக் கட்டுமானம் தந்த அழுத்தங்கள், அரசியல் கிளர்ச்சி, விடுதலை உணர்வு என தீப்பிடித்துக் கொண்ட வீட்டுக்குள் நிற்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. முற்போக்கு இலக்கியங்களில் உதய காலத்தில் காந்தலின் சூட்டை அரசியல் பிரசாரமும், பகுத்தறிவு பார்வைகளும் கையிலெடுத்துக்கொண்டன. மொழி, இனம், உரிமை சார்ந்த உத்வேகங்களுக்கு பண்டைய தமிழ்ச் சங்க இலக்கியங்களை முன்னிறுத்தியவர்கள் இந்த முறை புதிய நூல் நுகர்வோர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே தமிழுணர்ச்சிப் புத்தகங்கள்தான் ஆனால், இப்போது அது பண்டிதர்களிடமிருந்து பாமரர்களின் கைகளில் இடம்பெயர்ந்திருந்தது.
அதன் பின்னொட்டாக புறக்கணிக்கப்பட்ட மக்களறிவு இலக்கியத்தில் அவர்களின் அசலான குரலுடன் பதியப்பட்டன. நுணுக்கமான அம்சங்களைக் கொண்ட அதுவரை ஏட்டில் ஏறாத மக்கள் பாடல்களும், கதைகளும் அச்சிலேறின. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இனக்குழு வாழ்க்கையிலிருந்து பதிவுகள் வெளியாகின. செய்யுள் மரபுத் தளத்தை, நவீன கவிதை விரிவாக்கியது. பகுத்தறிவை ஏடுகள் பேசிக் கொண்டிருந்தபோது, பாமர அறிவை முச்சந்தி இலக்கியம் எனும் வெகு மக்கள் இலக்கியம் கைசேர்த்துக்கொண்டது.
அறிவுப்புரட்சி
அச்சு இயந்திரம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. அது தமிழ்ச் சமூகத்தின் ‘அறிதல் மற்றும் நம்பிக்கைகள்’ குறித்த உரையாடலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவைத்தது. குறிப்பாக, அறிவுப் புரட்சிக்கும் கல்விப் பரவலுக்கும் தனிமனித சுதந்திரம் குறித்த விழிப்புகளுக்கும் முதற்சுழியாக அச்சு இயந்திரத்தின் வருகையும் இருப்பும் அமைந்தது. தென்னாட்டில் அதுவும் தமிழகத்தில் இயங்கி வந்த அச்சுக்கூடங்களே இதற்கான வார்ப்புப் பட்டறைகளாக இருந்தன. அவற்றில் பல காலத்தால் செயலிழந்தன. பல நவீன மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு, புதிய இலக்குகளை உருவாக்கிக்கொண்டன.
பின்னிணைப்பு
19 முதல் 20-ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டம் வரையிலான 150+ ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இயங்கிவந்த பிரபல அச்சுக்கூடங்கள் பற்றிய விபரம் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கிறது. இது முழுமையான பட்டியல் அல்ல. உரிமையாளர்களின் பெயர் முன்னதாகவும், அச்சுக்கூடத்தின் பெயர் அடுத்தும், அவை இயங்கிய ஊர், பகுதி அதையடுத்தும் தரப்பட்டிருக்கின்றன. ஆண்டுக் குறிப்பு, அச்சுக்கூடங்கள் நூல்களை வெளியிட்ட காலகட்டத்தையே (வெளியிட்ட நூல்களிலிருந்தபடி) குறிப்பிடுகிறது. இந்த அச்சுக்கூடங்களில்தான் திருக்குறள் முதல் பதிப்பு தொடங்கி நந்திக்கலம்பகம், வீரமாமுனிவரின் தேம்பாவணி, தனிப்பாடல் திரட்டு உரை, மத, கல்வி நூல்கள் உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்கள் அச்சாகியிருக்கின்றன.
19-ம் நூற்றாண்டு (1801 -1900)
1) மிசியோன் அச்சுக்கூடம், தரங்கம்பாடி -1806
2) சன்மவிராக்கினி மாதா கோயில் அச்சுக்கூடம். புதுச்சேரி -1853
3) பப்ளிக் இன்ஸ்ட்ரெக்ஷன் பிரஸ், மெட்ராஸ் -1860
4) பெரியதம்பி முதலியார், வாணிநிகேதன அச்சுக்கூடம், மணலி -1863
5) வேதகாருண்ய அச்சுக்கூடம், நாகர்கோவில் – 1870
6) தேவநாயகம் பிள்ளை, சர்சு மிஷன் பிரஸ், பாளையங்கோட்டை – 1871
7) முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி – 1871
8) விவேக விளக்க அச்சுக்கூடம், புரசைப்பாக்கம் – 1872
9) கவிரஞ்சனி அச்சுக்கூடம், சென்னைப்பட்டணம் – 1873
10) சற்குணாநிதி அச்சுக்கூடம், தில்லையம்பூர் (கும்பகோணம்) – 1873
11) முகம்மது சமதானி அச்சுக்கூடம், காரைக்கால் – 1875
12) பொன்னுசாமி செட்டியார்; இலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம் – சென்னை பட்டணம் – 1875
13) கந்தசாமிபிள்ளை, பாரதிவிலாச அச்சுக்கூடம், பழனி – 1878
14) சுப்பிரமணிய ஐயர், வித்தியாவர்த்தினி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம் – 1880
15) அண்ணாமலை முதலியார், அருட்பிரகாச அச்சுக்கூடம் -1880
16) சின்னகன்வினைய செட்டியார், சகலகலாநிலைய அச்சுக்கூடம், தஞ்சாவூர் – 1881
17) ஏழுமலைப்பிள்ளை, விவேக விளக்க அச்சுக்கூடம், புரசைபாக்கம் – 1882
18) கலாநிதி அச்சுக்கூடம், கோயமுத்தூர் – 1882
19) புஷ்பரத செட்டியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், மெட்ராஸ் – 1885
20) குவலபரஞ்சனி அச்சுக்கூடம் – 1887
21) சபாபதி பிள்ளை, ஸ்ரீ மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சி (திருசிரபுரம்) – 1888
22) மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை – 1888
23) சுந்தரம் முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், பூந்தமல்லி- 1890
24) ஸ்ரீலட்சுமி நாராயணவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை- 1892
25) கொ.மாணிக்கம் முதலியார் மணோன்மணி விலாசம் பிரஸ், மெட்ராஸ்- 1893
26) சிரோன்மணி அச்சுக்கூடம், பிடாரித்தங்கல் (திருமழிசை!)- 1893
27) அமெரிக்கன் அச்சுக்கூடம், சென்னை – 1894
28) நாராயணசாமி நாயுடு, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை – 1895
29) முருகேச முதலியார், இந்து தியாலஜிகல் அச்சுக்கூடம் – 1895
30) மதராசு ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை – 1897
31) தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி அச்சகம், மெட்ராஸ் -1898
32) ஸ்டார் ஆப் இந்தியா அச்சுயந்திரசாலை, சென்னை-1899
33) மஹாலக்ஷுமி விலாஸ அச்சுக்கூடம், சென்னை -1900
20-ம் நூற்றாண்டு (1901- 1956)
1) அல்பினியன் அச்சுயந்திரசாலை, சென்னை – 1901
2) கம்மர்ஷியல் அச்சுயந்திரசாலை, சென்னை – 1903
3) எதிராஜ முதலியார் , பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அச்சுக்கூடம், சென்னை- 1906
4) அண்ணாமலை முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை- 1907
5) ஸ்ரீ குஞ்சிதசரண அச்சுக்கூடம்,சிதம்பரம் – 1908
6) ரூபி அச்சுக்கூடம், புரசைவாக்கம் -1908
7) பி.நா.சிதம்பர முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை – 1908
8) புஷ்பாலயாம்பா விலாஸ அச்சுக்கூடம், திருக்கோவலூர் – 1911
9) இரத்தினவேலு முதலியார், வாணிவிலாச அச்சுக்கூடம், சென்னை – 1913
10) ஸ்ரீவாணிபூஷணம் அச்சுக்கூடம் – 1914
11) மாணிக்க சுந்தரச் செட்டியார், நடேசர் அச்சுயந்திரசாலை, கோயமுத்தூர் – 1916
12) கணேச அச்சுக்கூடம், சென்னை – 1918
13) மினர்வா அச்சுக்கூடம் , சென்னை- 1918
14) பிரபாகர அச்சுக்கூடம் – சிந்தாத்திரிப்பேட்டை – 1920
15) கோல்டன் அச்சுக்கூடம், சென்னை – 1923
16) இரங்கசாமி முதலியார் & சன்ஸ்; பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை -1924
17) ஏஷியாடிக் அச்சுக்கூடம், -சென்னை -1928
18) மாறன் அச்சுக்கூடம், புரசைவாக்கம், சென்னை – 1928
19) கேசரி அச்சுக்கூடம், சென்னை – 1928
20) விஸ்வகுலோத்தாரண அச்சுக்கூடம் , சிந்தாதிரிப்பேட்டை- 1929
21) கோமாளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம் – 1930
22) துரைசாமி முதலியார், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை – 1931
23) கருப்பன் செட்டியார், தி தனவணிகன் பிரஸ், கோட்டையூர் – 1931
24) ஜனோபகார பிராஞ்சு அச்சுக்கூடம், அரியலூர் – 1934
25) சிதம்பரம் புருஷாந்தி அச்சுக்கூடம், சிதம்பரம் – 1934
26) பியர்லெஸ் பிரஸ், சென்னை – 1935
27) இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடம், காஞ்சீபுரம் – 1935
28) சரவண முதலியார், கலைமகள் விலாச அச்சுக்கூடம், திருவொற்றியூர் – 1936
29) சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை -1956
கார்த்திக் புகழேந்தி
எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார். தமிழ் விக்கியில்
வெகு சிறப்பு அதிகாரி வாழ்த்துக்கள்
நன்றி வாத்தியார்!
மிகவும் சிறப்பான கட்டுரை. நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன்.
குறிப்பாக அறிவுப்புரட்சிக்கும் கல்விப் பரவலுக்கும் தனிமனித சுதந்திர குறித்த விழிப்புகளுக்கும் முதற்சுழியாக அச்சு இயந்திரத்தின் வருகையும் இருப்பும் அமைந்தது.
நன்றி!
அச்சு வரலாற்றின் வரலாறு அச்சு அசலாக நற்றாய்
முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி – 1871 பற்றி தரவுகள் இருக்கின்றனவா?
கிடைத்தவரை இருக்கும் குறிப்புகளைத் திரட்டிவைத்திருக்கிறேன். இன்னும் சில தகவல்களைச் சேகரித்து தோதான சமயத்தில் பகிர்கிறேன். நன்றி.