/

சொல்லும் சடங்கும் : கார்த்திக் புகழேந்தி

“நிஜமாவா… இதுவரை ஒருதடவை கூட ஆஸ்பத்திரி பக்கம் போனதே இல்லையா..?” குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவரிடம் திரும்பத் திரும்ப அதைக் கேட்டார் சக அலுவலக நண்பர். ‘இது என்ன வம்பா போச்சு’ என்கிற ரீதியில் முறைத்துவிட்டு, ‘ஆமா போனதில்ல… அதுக்கு என்ன இப்போ?’ என்று சாயா டம்ளரை மேசை மேலேவைத்தார் பெரியவர்.

பொதுவாகவே, நாஞ்சில் நாடு என்பது அங்குள்ள மனிதர்கள், விலங்குகள், வீடுகள், மரங்கள், பறவைகள் எழுத்தாளர்களுக்கு நிகராக மருத்துவமனைகளாலும் நிறைந்த ஊர். தடுக்கி விழ நினைத்தாலும் மருத்துவமனைகளில் தான் விழமுடியும் யாரும். அதனாலேயே அங்கு மருந்து வணிகம் தமிழ்நாட்டின் மற்ற எந்த மாவட்டங்களையும் விஞ்சி நிற்கும். அப்பேர்பட்ட ஊரில் அதுவும் ‘பார்மா’ துறையில் என்னுடன் ஒன்றாகப் பணிபுரிந்து வந்த என் வெளியூர் நண்பருக்கு, அதே ஊரைச் சேர்ந்த பெயரியவர் ஒருவர், ‘தன் வாழ்நாளில் ஒருதடவைகூட மருத்துவமனை பக்கம் போனதில்லை…’ என்று சொன்னது ஆச்சர்யமாக இருந்திருக்கலாம்.

நாங்கள் இருவரும் வேலையிலிருந்த பார்மாசூட்டிகல் நிறுவனம் நாஞ்சில்நாட்டின் தலைநகரான நாகர்கோவிலின் மையப் பகுதியான வடசேரி தபால் நிலையம் அருகே அமைந்திருந்தது. நிமோனியா, ஹெச்.பி.வி., எம்.எம்.ஆர் போன்ற வேக்ஸின்களும் அன்டி-டி, இம்முனோகுளோப்ளின் உள்ளிட்ட உயிர்க்காக்கும் மருந்துகளும்தான் அந்த நிறுவனத்தின் பிரதானமான விற்பனைப் பண்டம். இரண்டு முதல் எட்டு டிகிரி  (2°-8°C) செல்சியஸ் குளிர்பதன நிலையில் பிரமாண்ட அறைகளில் பாதுகாக்கப்படும் இந்தவகை மருந்துகளை, குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லும் டெலிவரி வேலை எங்களுக்கு! 

ஒருமுறை அதிகாலை நான்கு மணிக்கு வயல்வெளிக்குச் சென்ற பெண் ஒருவரை ஒருவரைப் பாம்பு கொத்திவிட்டதாக, ஆரல்வாய்மொழி அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து எங்கள் அலுவலகத்துக்குள் போன் வந்தது. ‘குறிப்பிட்ட’ மருந்துடன் அடுத்த கால் மணி நேரத்தில் 15 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த ஊரின் மருத்துவமனையை அடைந்திருந்தேன். சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் உயிர்ப் பிழைத்துவிட்டார் என்று தெரியவந்தபோது, மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்த மொத்த ஊரும் அடைந்த உற்சாகத்துக்கு அளவே கிடையாது.

தக்கலை அருகே மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் தாய்க்கும் மகவுக்கும் ‘பாஸிட்டிவ்- நெகட்டிவ்’ ரத்த வகைச் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. உடனடியாக Rho(D) மருந்து அவருக்குச் செலுத்தப்பட வேண்டும். பேறுகால வலியில் பெண்கள் துடித்துக் கதறும் அந்த வார்டுக்குள் நள்ளிரவில் தன்னந்தனியாக சென்று குறிப்பிட்ட மருந்தை டெலிவரி செய்தது அவ்வளவு திகிலான அனுபவம் எனக்கு. இப்படி பல ‘முதல்’ வைத்திய அனுபவங்கள் அளித்த அந்த வேலையில் எனக்கு இரண்டு நல்ல விஷயங்கள் இருந்தன.

ஒன்று றெக்கை கட்டிக்கொண்டு ‘வி’வேகமாக விதவிதமான பைக்குகளை இயக்குவது… மற்றொன்று, போன வேகத்திலேயே திரும்பி வரவேண்டிய அவசியமில்லாமல் ஊர்சுற்ற வாய்ப்பது!  

அப்படியான ஒரு ஊர்சுற்றிப் பயணத்தில்தான், அந்தப் பெரியவரைச் சந்தித்தோம். எண்பது, தொன்னூறு வயதைக் கடந்த தேகம். நடையில் பேச்சில் அதெல்லாம் தெரியவில்லை. கண் பார்வையில் அவ்வளவு துல்லியம். கட்டன் சாயாவைக் குடித்து முடித்ததும் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். 

பேச்சு வளர்த்தியில் நாங்கள் இருவரும் அவரிடம் சகஜமாகியிருந்தோம். கூடவே நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதும் பெரியவருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. சுருட்டுப் புகையை ஓங்கி ஓர் இழு இழுத்து, ‘கிம்ம்ம்’ என்ற செருமலுடன், “ஒங்களுக்குச் சீட்டெழுதிக் கொடுக்கானே வைத்தியன், அவனுக்கு மொத்தம் எத்தன மருந்துக பேரு தெரியும்?” என்றார். பொக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. இந்தக் கேள்விக்கு எப்படி நாங்கள் பதில் சொல்வது? 

“நாஞ்சொல்லட்டா நானூறு மருந்துக பேர..? செடிய பார்த்தே சவரி எது சக்களத்தி எது; முறி எது முடக்கத்தான் எதுன்னு வைத்தியம் சொல்லிருவன்… நாம்போய் அவங்கிட்ட நிப்பனா’ என்று சிரித்தார். ‘நீங்க சித்த மருத்துவரா…’ என்றேன். ‘சித்தனுமில்ல குத்தனுமில்ல…’ என்றவர் என் நண்பரின் கையைப் பிடித்து நாடி பார்த்துவிட்டு, ‘ஒண்ணுக்குப் போகும்போது கடுக்குதா..?’ என்றார். அவர் அவஸ்தையாக நெளிந்தார்.

நாகர்கோவிலின் விசித்திரத்தை அப்போதுதான் உணரத் தொடங்கினேன். நவீன மருத்துவப் புழக்கம் செழித்த அளவுக்கு, அதே ஊரில் மரபான பண்பாட்டு மருத்துவமும் தொழிற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற பார்வை அங்கிருந்தே உருவாகியது எனக்குள்! சங்க இலக்கிய வாசிப்புப் புழக்கத்தில், நோய்மை, சிகிச்சைகள் குறித்த பழைய பதிவுகள் அறிமுகமான போதும் சரி; கல்வெட்டியலில் ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய ஆதூல தலங்கள் பற்றிய பார்வைகள் விரிந்தபோதும் சரி… வழிவழியாகத் தொடர்ந்த இந்த நாட்டார் மருந்தியல் அறிவு எப்படி நம் பண்பாட்டில் என்னவாக மிச்சமிருக்கிறது என்ற கேள்வி எனக்குள் இருந்தே வருகிறது. 

“உலகில் எங்கு நோய்கள் கிளந்தெழுந்தாலும் அதைத் தீர்க்கும் மருந்தை இயற்கை கொண்டிருக்கும்…” ஆங்கில மருத்துவம் கற்றபின், நாட்டுப்புற மருத்துவத்தை அனுபவத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்ட அமெரிக்க மருத்துவர் ஜார்விஸ் தன்னுடைய நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine: A Vermont Doctor’s Guide to Good Health  Deforest Clinton Jarvis  -1958) நூலில் குறிப்பிடுகிற வாக்கியம் இது. எல்லா இயற்கைவழி அறிதல்களையும் போல மருத்துவமும் பண்பாட்டையே உறைவிடமாய் கொண்டிருக்கிறது.

உலகின் மிகப் பழமையான மருத்துவ சிகிச்சை முறை இயற்கையிலிருந்து கிடைத்த தாவரப் பொருள்கள் சார்ந்தே உருவாகியிருக்கிறது என்பது மருத்துவ ஆய்வாளர்களின் நம்பகம். மிக முதன்மையாக விலங்குகள், பறவைகளிடமிருந்து மருந்துவ, சிகிச்சை நுட்பங்களை மனித இனம் கற்றுக் கொண்டிருக்கிறது. காயம்பட்ட விலங்கினங்களைப் பின்னாலே சென்று, அவை எந்தெந்த செடிகொடிகளைத் தின்று காயத்தை ஆற்றுகின்றன… விஷத்தை முறிக்கின்றன… எப்படி உயிர்ப்பிழைக்கின்றன என்று கவனித்ததன் வழியாகவே மனித இனம் முதன்முறையாக மருத்துவநுட்பங்களைக் கைக்கொள்ளத் தொடங்கியது. 

இடம்விட்டு இடம் அலைந்த அலைகுடி வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்த மனிதக் கூட்டம் பிணியிலிருந்து தங்களின் உயிரைத் தற்காத்துக் கொள்ளவும் பிழைத்திருக்கவும் குறிப்பிட்ட தாவரங்களின் குணங்களையும் அவை வளரும் இடங்களைப் பற்றிய அறிவையும் கற்று தேர்ந்தது. அந்த அறிவை ஓர் செயல்பாட்டு மரபாகத் தனது இனக்குழுவினரிடையே கடத்தவும் செய்தது. 

கிறிஸ்துப் பிறப்புக்கு ஏறத்தாழ 3000 ஆண்டுகள் முந்தைய நாகரிகங்கள் தழைத்த எகிப்து, மத்திய கிழக்கு மற்றும் சீனம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வாழ்ந்த மனித இனம், தாவரங்களைப் பிணி நீக்கிகளாகப் பயன்படுத்துவது குறித்த ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றன. இதைத் தொல்லியல் ஆய்வு முடிவுகளும் இலக்கிய ஆக்கங்களும் நிருபிக்கின்றன. 

சீனர்கள் கி.மு 2600 அண்டுகளுக்கு முன்பு,  தங்களின் மருத்துவ நூலினை வெளியிட்டதாக நம்பப்படுகிறது. ஃபூ-ச்ஸி என்ற சீனத்தரசர் மருத்துவ தத்துவத்தைக் கண்டுபிடித்தார் என்பது அவர்களின் வாய்மொழி வரலாறு! எகிப்தியர்கள் எழுதிய மிகப் பழமையான நூல் (Ebers Papyrus) தாவரங்களைக் குறித்ததே… தாவர மருந்துகளை ஹெர்பல் என்று அழைத்ததும் அவர்களே! எகிப்தியரான ‘செக்கட் எனாநக்’ என்பவரே வரலாற்றில் முதல் மருத்துவராக அறியப்படுகிறார்.  

இந்தத் தொடர்ச்சியிலிருந்து, கி.மு 300-ம் ஆண்டளவில் உரோம மருத்துவமும் கி.பி 600-ல் யுனானி மருத்துவ முறையும், கிபி 900-ல் கிரேக்க மருத்துவமும், கி.பி.1700-1800ம் ஆண்டுகளுக்கிடையே அலோபதி, ஹோமியோபதி மருத்துவ முறைகளும் உலகளவில் தோற்றம் பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவற்றுக்கு முன்பு, அந்தந்த நிலத்தில் வாழ்ந்த மக்களறிவின், பண்பாட்டின் தொடர்ச்சியாக ‘இயற்கை மருத்துவ சிகிச்சை முறையும் சேர்ந்தே தொழிற்பட்டிருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது! 

மனித குலத்துக்கும் இயற்கை சக்திகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த பிணி நீக்கும் போராட்டத்தின் விளைவே, இயற்கை அல்லது நிலச்சார்பு மருத்துவ (Indigenous Medicine) முறையாக உருவெடுத்தது. அதுவே பழங்குடிகளிடையே வழங்கிவந்த இயற்கை மருத்துவ அறிவின் ஆரம்பக்காலத் துளிர்ப்பு. மனித இனத்தின் பழமையான அறிவுத் தேடல். அந்தந்த நிலத்தில் வளர்ந்த தாவரங்களின் அடைப்படையிலான தனித்தன்மைகொண்ட மருந்தறிவை, பூர்வீக மனித இனம் (Primitive) ஒவ்வொன்றுமே தானறிந்த வகையில் கையாண்டது. 

உலகம் முழுக்க வெவ்வேறு சமூகங்கள் இயற்கையில் பிணி நீக்கத்தை, அறிவை தேடியது போலவே தமிழ் சமூகமும் தன்வரையில் மருத்துவ ஞானத்தை கண்டறிந்து வைத்திருந்தது. ஆனால், மக்கள் பண்பாட்டில், இனக்குழு நம்பிக்கைகளில், உணவு, வழிபாடு, சடங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வாய்ப்பாட்டு உள்ளிட்டவைகளில் காணப்படும் நமது மரபான மருத்துவக் குறிப்புகள் பற்றித் தேடும்போது, மரபும் நவீனமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளி ரொம்பவே ஆச்சர்யம் அளித்தது. வாய்மொழி மரபு என்பது பழக்கப்பட்ட ஒன்றாக மாறி நமது அன்றாடங்களில் நிலைத்து வருவதும் ஆலோபதி அறிமுகங்களுக்குப் பிறகு அந்த நவீன ஏற்பு எங்கு, எப்படியான சூழலில் நிகழ்ந்தது என்பதும் வாய்மொழியில் பதிவாகியிருக்கிறது. 

மருந்தியலும் நம்பிக்கைகளின் அசைவும்

தமிழ்நாட்டில் வழங்கிவந்த பண்டைய மருத்துவ முறைகளில் தாவர (மூலிகை) வைத்தியம்; சடங்கு வைத்தியம்; இரண்டும் கலந்த நம்பிக்கை வைத்தியம் ஆகிய மூன்று பகுப்புகள் மக்கள் வாய்மொழியிலும் நம்பிக்கைகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அதோடு, உணவுப் பழக்கம், நலம் பேணுதல் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளிலும் மரபான பண்டைய மருத்துவ அறிவின் தெறிப்புகள் காணப்படுகின்றன.  சுருங்கச் சொன்னால் பிறப்பு, தற்காப்பு, இறப்பு ஆகிய மூன்று நிலைகளுக்கும் இடையே நோய்மையும் மருந்தும் ஒரு தலையாய தொடர்பாடலாகவே பாமரப் பண்பாட்டில் விளங்கியிருக்கிறது. 

இந்த மரபறிவை ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திச் செல்ல சடங்குகளும் விழாக்களும் நம்பகங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தே மக்களிடையே உருவாக்கப்பட்டிருக்கின்றன.  நோய் நீக்கும் மருந்து மூலக்கூறுகளை நேரடியாகப் பிரித்தெடுக்கும் அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறும் காலகட்டத்திலும் மருந்து மூலப்பொருள் கொண்ட தாவரத்தின் மீதான ‘தெய்வீக நம்பகங்கள் இன்றுவரை நம் பண்பாட்டிலிருந்து விலகிச் செல்லவில்லை. இதற்கு நல்ல உதாரணம் வேம்பு! 21ம் நூற்றாண்டில் வேம்பு சார்ந்த நவீன ஆய்வுகள் பல நடக்கின்றன. வேப்பிலை இல்லாத சோப்பு விளம்பரமோ பற்பசை விளம்பரமோ இல்லை. 

‘வேம்பில் மாரித் தெய்வம் வாழும்’ என்ற நெடிய நம்பிக்கை நம்முடையது. இன்றும் தமிழகத்தின் நோய் நீக்கும் தாவர, சடங்கு, மந்திர வைத்தியங்களில் வேப்பிலை முக்கியத்துவமானது, வழிபாட்டுத்தன்மை கொண்டது.

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘தாவர வழிபாடுகள்’ குறித்து மேற்கத்திய அறிஞர்கள், செய்த ஆய்வுகளில், ‘வேம்பின் நோய் தீர்க்கும் தன்மையை அதன் தெய்வீக நம்பிக்கையுடன் சேர்த்து வியந்தபடியேதான் தங்களின் குறிப்புகளை எழுதிவைத்திருக்கிறார்கள். இந்திய நிலமெங்கும் வேம்பின் மீதான பார்வை அவ்வாறே விளங்குகிறது. வட கிழக்கு இந்தியப் பழங்குடிகள் தொடங்கி, ஆப்பிரிக்க பழங்குடிகள் வரை வேம்பு நாற்பது நோய்களைக் குணப்படுத்தும் தாவரமென வகைப்படுத்துகிறார்கள். இவை மரபு ரீதியாகப் பரவிய பண்பாட்டு அசைவு! 

அதேநேரம் வேம்பு நோய் நீக்கும் தாவரம் என்ற பண்பாட்டு அறிதலும் தென்னிந்திய மக்களிடயே வெகுவாகப் பரவியிருக்கிறது. உதாரணமாக, ஐரோப்பியர்கள் அம்மை நோய்க்கு வேம்பினை மருந்தாகப் பயன்படுத்தத் தொடங்கியது கி.பி 18-ம் நூற்றாண்டில் தான். ஆனால் தமிழ்நிலத்தில் கிறிஸ்து காலகட்டத்துக்கு முன்னரே வேம்பை அம்மை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தும் பழக்கம் செயல்பாட்டிலிருந்திருக்கிறது.  

அதோடு தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறந்து ஏழாம் அல்லது ஒன்பதாம் நாள் காப்பிடும் சடங்கில், அத்தைக்காப்பு, ஐம்பொன்காப்பு, பொன்காப்பு அணியச் செய்யும் பழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அப்போது பச்சிளம் மகவுக்களின் கைகளில் வேப்பிலையைச் சுற்றி விடுவதனால், தீய சக்திகள் அதனை அணுகாது என்பது நம்பிக்கையாகிறது. அதேபோல, திருவிழாக் காலங்களில் ஊர் ஆண்களின் கையில் அணியும் ’காப்பு’ என்பது மக்களை நோயிலிருந்து வேம்பு (மஞ்சளும்) காக்கும் சடங்கிலிருந்து நிலைத்திருக்கிறது. 

மூவேந்தர்களில், பாண்டிய மன்னர்கள் தங்களின் குடிப் பூவாக வேம்பம்பூ மாலையை அணிந்தனர். ‘இவ்வீரர் இன்ன அரசனைச் சார்ந்தவர் என்று வேறுபாடு அறிய வீரர்களும் போரின் போது அவரவர் பூக்களைச் சூடிக்கொண்டு ஆர்ப்பர்’ என்பது தொல்காப்பியக் கருத்து. 

“வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர்.” -புறம்.338-6

இதேபோல, நம்பிக்கை-சடங்கு அடிப்படையிலான நாட்டுப்புற வைத்தியத்தில் (Native Medicine) பலவிதமான தாவரங்கள் முதன்மை கருப்பொருளாக விளங்குகின்றன. அவை சங்க இலக்கியங்கள் தொடங்கி நாட்டார் பாடல்கள் வரை பரவிக்கிடக்கின்றன. 

பிள்ளைப் பேறு வேண்டி, அல்லி முளையும், முல்லை முளையும் தின்று, தவமிருந்து, குழந்தை பெற்றதாக நாயுடு இனப் பெண் ஒருவர் பாடும் பிள்ளைப்பேற்றுப் பாடல் நாட்டார் வாய்மொழி இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது. செவ்வல்லி, வெள்ளல்லி, கரு நெய்தல் (கருங்குவளை அல்லது கருவல்லி) ஆகிய மூன்று அல்லிகளும் நாட்டுப்புற மருத்துவத்தில் பிள்ளைப்பேற்று கால மருந்து மூலங்களாக விளங்கிவந்திருக்கின்றன. 

நற்றிணையில் சூலுடையாள் மகவு ஈன்றதும் ஒளிர்கின்ற வெண் கடுகை, நெய்யுடன் கலந்து அரைத்து அடிவயிற்றில் பூசிக்கொண்டாள் என்கிறது. கடுகு சங்க காலம் முதலே, பெண்கள் பயன்படுத்திவந்த அருமருந்தாகத் தொடர்கிறது. தமிழ் மருத்துவத்தில் மருந்தை அரைத்துப் பூசும் பழக்கமே முதன்மையாக இருந்திருக்கிறது. தாவரங்களின், வேர், பட்டை, இலைகள், பூக்கள், காய்கள், கனிகள், கீரை என்று அனைத்துப் பாகங்களிலிருந்தும் மருந்து அரவைகள் தயாரித்து நுகரப்பட்டிருக்கின்றன. 

அதேபோல, தேன் நாட்டுப்புறத்தின் ஒப்பற்ற மருந்தாக இன்றுவரை பயன்பாட்டிலிருக்கிறது. ‘தேனும் வெல்லமும், நெய்யும் கலந்து அதனோடு சுக்கு அரத்தை, சித்தரத்தை, சதகுப்பை, வாயு விளக்கம், திப்பிலி, அதிமதுரம், வசம்பு சேர்த்து உருவாக்கின “கடைமருந்து’ உணவைச் செரிக்க வைத்து, பசியைத் தூண்டி, உறக்கத்தைத் தரும்’ என்கிறது தாலாட்டுப் பாடல் ஒன்று. உணவில் மருந்தையும் மருந்தையே உணவாகவும் கொள்ளும் வழக்கத்துக்கு நீண்ட மரபுண்டு. அந்த வகையில் தென்னிந்திய நிலத்தில் மிளகு ஒரே நேரத்தில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் தொடர்கிறது. கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் ஹிப்போகிரிட்ஸ் (Hippocrates) இந்திய மிளகை ‘மருந்து’ என்றே குறிப்பிடுகிறார். கிரேக்க நாட்டு வணிகர்கள் தங்கத்துக்கு ஈடாக இங்கிருந்து மிளகைப் பண்டமாற்று பெற்றனர் என்கிறது சங்கப்பாடல். (‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ அகநானூறு- 149). 

ரோம் பேரரசின் கடற்படைத் தளபதியாக இருந்த பிளினி (Gaius Plinius) தனது வரலாற்றுக் குறிப்புகளில், மிளகை உணவில் சேர்க்கும் பழக்கத்தைத் தொடங்கிய இனக்குழுவினரைக் குறித்து வியந்து எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து கடல்கடந்து மிளகு ஏற்றுமதியானது குறித்த குறிப்புகள் மதுரைக் காஞ்சியிலும் பட்டினப்பாலையிலும் இடம்பெறுகின்றன. 

மிளகுக்கு ஈடாக நாட்டு மருந்துகளில் பூண்டு மிக உயர்ந்த மருந்துணவாக பலகாலம் கருதப்பட்டிருக்கிறது. பூண்டு பற்றிய மருத்துவக் குறிப்புக்கு வயது சுமார் 5,000 ஆண்டுகள். இன்றும் கருவுற்ற பெண்களுக்குப் பூண்டை உரித்துப் பாலில் வேகவைத்து, சக்கரை, ஏலப்பொடி, நெய் சேர்த்து களி கிண்டி அளிப்பது பாலூற வைப்பதோடு, வயிற்றுப்புண் ஆற்றும் என்கிற தொல் வைத்தியம் நம் வீடுகளில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘உல்லி சேசமேலு தல்லிகூட சேயது’ என்பது தெலுங்குப் பழமொழி. அதன் பொருள், ”பூண்டு செய்யும் நன்மையைப் பெற்ற தாய்கூட செய்யமாட்டாள்”. 

பூண்டுக்கு நிகராக இஞ்சியும் மருத்துவ அறிவில் முக்கியத்துவம் பெற்றது. பித்தத்தோடு தொடர்புடைய அனைத்து நோய்மைக்கும் இஞ்சி மாமருந்தென்கிறார்கள். இஞ்சிக்கு அடுத்த இடம் துளசிக்கும் தும்பைக்கும் வாய்க்கிறது. தும்பை இலைச்சாற்றை அஸ்திஜுரம் எனும் குளிர்நடுக்க நோய்க்கு மருந்தென்கிறார்கள். அதேநேரம், பள்ளரினப் பெண் ஒருவர் பாடும் ஒப்பாரிப் பாடல் ஒன்றில், ‘துளசிக்கும் தும்பைக்கும் வித்தியாசம் தெரியாத வைத்தியன் தன் கணவனைக் கொன்றுவிட்டான்’ என்று பழி சொல்கிறார்.

உணவில் மருந்து இருப்பது போலவே நோய் உண்டாக்கும் தன்மைகளும் இருக்கின்றன.  ‘அரிசி ரகங்களிலேயே நோய் உண்டாக்கும் ரகங்கள் உண்டு’ என நம்பிக்கை இருக்கிறது. அகமுடையார் சமூகத்தவர்களின் வாய்மொழிப் பாடல் ஒன்றில், “சீரகச் சம்பா சீக்குப்பிணி ஆகுமிண்டு; ஆத்தூருச் சம்பாவே அருமையா வச்செறக்கினேன்” என்று வாயாடுகிறார்கள்.

சோற்றுக்கு ஆகாத அரிசி என்று சீரக சம்பாவை விலக்குகிறது அந்தப்பாடல்! இன்று அதிலேயே பிரியாணி சமைத்து யுடியூபில் வீடியோ போடுகிறோம். சரி தவறு என்பதற்கப்பால் பண்பாட்டில் நிகழக்கூடிய மாற்றத்தை இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒதுக்கி வைக்கப்பட்ட பொருள் எப்படி விசேஷ உணவாக மாறியது? அல்லது விசேஷ உணவு எல்லாமே ஒதுக்கிவைக்கப்பட வேண்டிய கூறுகளுடையவா? நாம் யோசிக்க வேண்டிய கோணம் இது. 

இப்படி மரம் செடி, கொடி, புதர், புல், பூண்டு, காய், கனி, பூ, இலை, பட்டை, வேர் எனத்  தொகுத்தால் 54 வகை தாவரங்களை நம் அன்றாட வாழ்வுக்குள் உணவுப் பொருளாகவோ, உணவில் கலந்தோ, பயன்படுத்திவருகிறோம் என்கிறது ஓர் உணவியல் ஆய்வு!

நவீன காலக் கடப்பாடு

தமிழ் மக்கள் பயன்பாட்டிலிருந்த மருந்து மூலங்கள், அவற்றைக் கையாள்வதின் மீதான நம்பகங்கள் போலவே, நவீன அலோபதி மருத்துவம் இங்கு வேர்விடத் தொடங்கிய காலகட்டத்தில், சொலவடைகள் தாலாட்டு, ஒப்பாரி, நாட்டுப் பாடல்களென அந்த தாக்கம் பரவலாக வெளிப்பட்டிருக்கிறது. இதனை இனவரையியல் பார்வையோடு அணுகினால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மரபான மருத்துவ அறிவுத் தொடர்ச்சியும் நவீன மருத்துவத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் மாற்றமும் தமிழ் நிலத்தவர்களிடையே தொழிற்பட்ட விதம் புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது. பண்பாடு என்பது பழங்கதையாக மட்டும் எஞ்சுவதில்லை என்பதையும் அது, குறிப்பிட்ட காலம் வரையிலேனும், சமூக மாற்றங்களுக்கு தொடர்ந்து முகங்கொடுப்பதோடு தன்னுள் அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதும் தெரிய வருகிறது. 

தமிழ் நிலத்தின் மருத்துவ மரபுத்தொடர்ச்சி சடங்கு நம்பிக்கைகள், உணவுப் பழக்கங்களுக்கு அடுத்தபடியாக வாய்மொழி ஆக்கங்களிலேயே பெருமளவு தென்படுகிறது. அதிலும் சொலவடைகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் மறைமுகமாகப் புழங்கும் ‘பொதி’வுகள் அதிகம் கிடைக்கின்றன. இன்றைய கலாச்சார ஆய்வுகள், வெறுமனே மையப்படுத்தப்பட்ட கலை வடிவங்களுக்கோ பண்பாட்டுக் கூறுகளோ மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், பலதரப்பட்ட மக்களிடம் புழக்கத்தில் உள்ள வழக்கங்கள் ஏன் கவனம் அளிக்கின்றன என்பதை இந்த மறைபொருட்கள் வழியே அறிய முடிகிறது. 

உதாரணமாக, தென்னிந்திய நிலவியல் தட்பவெட்பத்திற்கு, எண்ணெய் தேய்த்து நீராடும் வழக்கம் காலங்காலமாகக் கைக்கொள்ளப்படுகிறது. அதன் வழியே உடல் நலனைப் பேணச் செய்வதை, ”வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்கிறது சொலவம். வாணியன் என்பவர் எண்ணெய்ச்செட்டி. இதே போல எண்ணெய் தேய்த்துக் குளித்தலில் தாய்க்கும் பிள்ளைக்கும் தாய்மாமனுக்கும் இடையேயான உறவு தாலாட்டு, ஒப்பாரியென நாட்டுப் பாடல்களில் தெறித்து விழுகின்றன. பதிணென் கீழ்கணக்கு நூலான  ஆசாரக்கோவை, உடலைப் பேணும் சுகாதார விதிகளில் உண்ணல், உடுத்தல், உறங்கல் வரிசையில் எண்ணெய்த் தேய்த்துக் குளித்தலையும் முன் வைக்கிறது.

‘எண்ணெய் உடலுக்குக் குளிர்ச்சி அளிக்காமல் போகாது’ என்ற நிலையில், கோனார் சமூகத்தவர்கள் பாடும் ஒப்பாரிப் பாடல் ஒன்றில், ‘எண்ணெய் குளிர்ச்சி இல்லெ, ஏலக்கா வாசமில்லே என்னப் பெத்த ஈஸ்வரியா இல்லாம இருந்துவர நீதியில்லே’ என்று தன் தாய் இறந்த பிறகு, தான் பிறந்த வீட்டின் சூழலே தலைகீழாக மாறிவிட்டதைப் பதிவு செய்கிறாள் மகள்.

பொதுவாகவே, உடலின் தட்பவெப்ப நிலையைத் தக்க வைக்கும் வைகையிலான உணவுப் பழக்கமும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது. மா, கரும்பு வெல்லம், எள் சூட்டைக் கிளப்புமென்றும், பால் தயிர் எண்ணெய் குளிர்ச்சியை ஊட்டும் என்றும் இவை இரண்டையும் சரிநிகரெனக் கொள்வது உடல்சூட்டைக் கெடுக்காது என்பது இன்றும் பேச்சறிவாகத் தொடர்க்கிறது. ஆங்கில மருத்துவம் இதனை “The Hot-Cold Theory’ எனக் குறிப்பிடுகிறது. 

நலன் பேணுதல் போல, உடலைத் தொட்டு நோய்மை உள்ளிட்ட கூறுகளைக் கண்டறிவதும் மருத்துவ அறிவில் முக்கியமானது. அதற்குச் சிறந்த உதாரணம் காய்ச்சலைக் கழுத்தில் தொடு அறிவது. மிகக் நுணுக்க உதாரணம் நாடி பார்ப்பது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்களே இந்த அறிதல் முறையை அதிகம் கடைபிடித்திருக்கிறார்கள். நாடி மருத்துவத்தின் அடிப்படையாக ‘வாதம், பித்தம், சிலேட்டுமம்’ ஆகிய நாடிகளை முறையே ‘ஆள்காட்டி, நடுவிரல், மோதிர விரல்’ நரம்புகளிலும், குருநாடியினை ஐந்து விரல்களின் நரம்புகளும் மணிக்கட்டில் இணையும் புறங்கைப் பகுதியிலும் தொடுதல் மூலமாகக் கண்டு, சோதித்திருக்கிறார்கள். 

கட்டுரையின்  தொடக்கத்தில் நாஞ்சில் நாட்டில் நான் சந்தித்ததாகச் சொன்ன பெரியவர், (நாடி வைத்தியர்) ‘வீணையின் ஒரே நரம்பில் வெவ்வேறு தொனி வெளிப்படுவதுபோல, ஒரே நரம்பின் வெவ்வேறு இடங்களில் மூன்று நாடிகளையும் அதன் துடிப்புகளையும் சோதிக்க முடியும்…’ என்றார். அன்னாரின் கூற்றுப்படி, “நாடிகளில் குருநாடியே உயிர்நாடி. அதை பிறர் கண்டறியக் கூடாதென ஒரு பட்டுத் துணியை நோய் கண்டவரின் கை மணிக்கட்டு மேல் விரித்து, தான் எந்த இடத்தில் நாடியைச் சோதிக்கிறோம் என்பதை நோயாளியோ, பிறரோ தெரிந்து கொள்ளாத விதத்திலேயே குருநாடி பார்க்கப்பட்டிருக்கிறது. நாடி மருத்துவத்தை கற்றுக் கொடுக்கவும் பல தயக்கங்கள் இருந்திருக்கின்றன. ‘அரைகுறைக் கல்வி மருத்துவத்தைக் கெடுக்கும்’ என்பது அவரின் கருத்து. 

இந்த நாடி பார்த்தல் முறையை ‘தாது பார்த்தல்’ என்றும் குறிப்பிடுவதுண்டு. கை மணிக்கட்டுப் பகுதியோடு, கால்கள், கழுத்தில் குரல்வளையில் இடது வலது பக்கங்களிலும் நாடி பார்த்திருக்கிறார்கள். சில நேரங்களில், ஆணுக்கு வலதுபுறமும் பெண்ணுக்கு இடது புறமும் நாடி பார்க்கும் ‘கொள்கை’யைக் கடைபிடித்திருக்கிறார்கள். விலங்குகளில் பசுக்களுக்கு அதன் மூக்குத் துளைகள் சேருமிடத்திலும் குதிரைகளுக்கு காதிலும், யானைக்கு கண், வாய், வால், கன்னம் துதிக்கை நுனி ஆகிய இடங்களில் நாடி பார்த்திருக்கிறார்கள். நாடி வசப்படாமல் சிகிச்சை செய்யாமலும் வைத்தியர்கள் சலித்திருக்கிறார்கள்.  

“வைத்தியரு வந்திட்டாரு வலது கையிலத் தாது பாக்க, எடது கையைப் பட்டெடுத்து எடது கையில தாது பார்க்க, தாது ஓடாம சலிப்பு தட்டி உக்காந்தாரு” என்கிற பறையரினப் பெண்கள் பாடும் நாட்டுப்புற ஒப்பாரிப்  பாடல் இது பற்றிய குறிப்பைத் தருகிறது.

மரணங்களுக்குப் பிறகு பாடப்படும் பழைய ஒப்பாரிப் பாடல்களில் வைத்தியர், வைத்தியன், பண்டிதன் எனத் தமிழ் மருத்துவர்களும், பிற்காலத்துப் பாடல்களில் ‘டாக்குடரையா’ என ஆங்கிலமுறை மருத்துவர்களும் இடம்பெறுகிறார்கள். அதேபோல பிள்ளைப்பேறு பார்க்கும் நாவிதர் இனத்தைச் சேர்ந்த முதிய பெண்களை மருத்துவச்சி என்றும் விளிக்கிறார்கள்.

இந்த மருத்துவச்சிகள் மருந்து இடிக்கும் சிறு உரலுக்குப் பெயர் கலுவம். சிறு குழவிக் கல்லைக் கொண்டு நுணுக்கி நுணுக்கி, வழுவழுப்பான பொடிகளையும், சூரணங்களையும் இடித்து இடித்து அவர்கள் உண்டாக்கும் மருந்துக்குப் ’பொடி மருந்து’ என்றும் பேருண்டு. அன்றைக்குக் காலகட்டத்தில் தமிழகத்தின் சில ஊர்கள் நாட்டுப்புற மருத்துவத்திற்கெனப் பேர் பெற்றதாகவே விளங்கியிருக்கின்றன. அதில் மதுரை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்திருக்கிறது. 

“மருதை தலைவாசலிலே மருந்திடிக்கும் மாளிகையாம், மருந்தை இடிப்பேனோ அப்பா உங்க மாயோலை வாசிப்பனோ…” என்று கலுவத்தில் மருந்து இடிப்பது பற்றிய பற்றிய நாட்டுப்புறப் பாடல் மதுரை நகரின் வைத்திய மருந்தின் சேர்ப்புகளை விளக்குகிறது.

“சிறுமிளகும், சீரகமும் சீரு வருதும்பேன்

சீரிடும் தாயை சீமைக்கனுப்பியாச்சே… 

வால்மிளகும் சீரகமும் வரிசை வருதும்பேன் 

வரிசையிடு தாயை வனத்துக்கனுப்பியாச்சே!” 

என்று மருந்திலா கால அவகாசத்தில் தன் தாயை இழந்த வேளாள சமூகப் பெண், அந்த சிறுமிளகையும், சீரகத்தையும், வால்முளகையும் பார்க்கும்போதெல்லாம் தன் தாயை நினைத்துப் புலம்புகிறதாக ஓர் ஒப்பாரிப் பாடல் நாட்டுப்புறத்தில் இடம்பெற்றுள்ளது.  இதே பாடலைத் தனக்குச் சீதனமாக கொடுத்த தாய் உயிரோடு இல்லாதது எண்ணி மகள் பாடுவதாகவும் மாற்றிப் பாடப்பட்டு வந்திருக்கிறது.

உண்ணும் உணவு, உடல் நலம் பேணுதல் தாண்டி ஏற்படும் நோய்மையை நீக்கும் முழுமையான மருத்துவ அறிவில் பழங்குடிகளையடுத்து அன்றைக்குக் காலகட்டத்தில் ஒரு சில இனக்குழுக்கள் மிக ஆழமாகக் கற்று கடைபிடித்துவந்தன. உதாரணமாக, நாவிதர், பறையர், கள்ளர், வண்ணார் (மருத்துவர்-சாதிப்பிரிவு) உள்ளிட்ட இனக்குழுவினரும் சில கிளைப் பிரிவினரும் இதில் முதன்மையாளர்களாக விளங்கியதை ஒப்பாய்வு நூல்களில் காணப்படும் அதிகளவிலான குறிப்புகளில் இருந்து பெற முடிகிறது. 

1984-ம் ஆண்டில் வெளியான நாட்டுப்புறப்பாடல்கள்- சமூக ஒப்பாய்வு நூல் இவ்விதமான சமூக வகுப்பினரைடையே மருத்துவ அறிவு எவ்வாறு தொழிற்பட்டது என விவரிக்கிறது. அந்த நூலில், பறையர், கள்ளர் சாதியரை உள்ளூர்-அசலூர் அல்லது மதுரை வைத்தியர்கள் என்றும், நாயுடு சாதியரை செஞ்சி வைத்தியர் என்றும் அழைக்கப்பட்டது தெரிய வருகிறது.

நாயுடு இனத்தவர் பாடும் ஒப்பாரிப் பாடல் ஒன்று, ”செஞ்சி வைத்தியரும், உங்களுக்குத் தீராது இன்னாரே.. மதுரை வைத்தியரும் உங்களுக்கு மரணமின்னு சொன்னாரே..” என்கிற ரீதியில் செல்கிறது. இதே பாட்டை கள்ளர் சமூகத்தவர்கள், தெஞ்சி வைத்தியரோ.. தெம்மருதை பண்டிதரோ… என மோனை நயத்தோடு பாடுகிறார்கள்.

செஞ்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மருத்துவத்தில் செழிப்புற்று விளங்கியிருக்கின்றன. சான்றாக மதுரை வைகையைச் சுற்றியுள்ள அழகர்மலை, திருப்பரங்குன்றம், ஆனைமலை, நாகமலை, செஞ்சி, பாலாற்றுக் கரையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் மருந்துத் தாவரங்கள் அதன் பயன்கள் குறித்து பறையர், கள்ளர், வண்ணார், வன்னியர், கோனார், அகமுடையார், வெள்ளாளர் உள்ளிட்ட இனக்குழுச் சமூகத்தவர்கள் மிகுந்த தேர்ச்சி பெற்று விளங்கியிருப்பது அவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வழியே தெரியவருகிறது.

தமிழ்நாட்டின் மேற்கு, கிழக்கு மலைத் தொடர்களில் சித்தமருத்துவம் சிறப்புற்று விளங்க அங்கு விளையும் மூலிகைத் தாவரங்கள் முதன்மைக் காரணிகளாக விளங்குவது போல உள்நாட்டு மருத்துவம் தாவர, மருந்தறிவு பெற்ற இனக்குழுச் சமூக மக்களால் தனி அந்தஸ்தோடு விளங்கியிருக்கிறது. இவர்களாலேயே பெரும்பாலான பண்டுவ, வாகட மருத்துவக் குறிப்புகள் பாடல், செய்யுள்களாக ஓசைநயத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன. 

அந்தப் பாடல்களுக்கிடையே நாட்டுப்புற மருத்துவமே உயிர் காக்கும் என்று அழுந்தச் சொல்லியிருப்பதும் பதிவாகியிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆங்கில மருத்துவம் உள்நாட்டில் வேகமாகத் தலையெடுத்து வந்ததையடுத்து, மரபான மருத்துவ அறிவுடையோர் அல்லது அதன் பயனாளர்களின் பார்வையை இந்தப் பாடல்கள் முன்வைக்கின்றன. 

கிபி 16-ம் நூற்றாண்டளவில் தென்னிந்திய நிலத்துக்குள் போர்த்துக்கேயர்களின் மருத்துவப் பரவல் தொடங்கியிருந்தது. பிரான்சிஸ்கோ டி அல்புகர்க் கிபி 1506-ம் ஆண்டில் தனது சாந்தாகுரூஸ் (ஹோலி கிராஸ்) மருந்துவமனையை கொச்சியில் தொடங்கியபோது, இங்குள்ள மருத்துவ முறைகளின் கலாசாரமாற்றம் தொடங்கியது. எனினும் போர்த்துகேயர்களைக் காட்டிலும் ஒரே நோய்க்கு பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சை முறைகளைத் தென்னிந்தியர்கள் வசமிருந்தது. 

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் லின்சோடென் என்பவர் இது குறித்து 1596-ல் ஒரு குறிப்பைத் தருகிறார். “தென்னிந்தியப் பழங்குடிகள் மலேரியாவைக் குணப்படுத்த மூலிகை, களிம்பு எனப் பல வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். ஆனால், போர்த்துகேயர்களிடம் ரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை தவிர வேறு நிவாரணங்கள் இல்லை” என்கிறார்.

வயிற்றுப் போக்குக்கு உள்நாட்டு வைத்தியர் அளித்த மருந்துகளைப் போல தங்களின் மருந்து உறுதியாகவோ, விரைவாகவோ பலனளிக்கவில்லை என போர்த்துக்கேய மருத்துவர் கிரேஸியா-டா-ஒரட்டா என்பவர் தனது குறிப்பு ஒன்றில் எழுதியிருக்கிறார். இருந்தபோதும், சமூகத்தில் ஐரோப்பிய முறை மருத்துவத்தின் தாக்கம் முழுவீச்சில் பரவித் தொடங்கியது. 

கி.பி-1670ல் தஞ்சை மண்டலம் மராட்டியர் வசப்பட்ட பிறகு, ஐரோப்பிய பாணி மருத்துவம் ராஜாங்க ரீதியிலும் தமிழ் நிலத்தில் செல்வாக்கடைந்தது. சரபோஜி நாட்டுப்புற மருந்தகம் ஒன்றையும் மேலைநாட்டு மருந்தகம் ஒன்றையும் திறந்து வைத்தாரெனக் குறிப்புகள் இருக்கின்றன. இந்த மருந்தகங்களின் நிர்வாகச் செலவுக்கு நிலதானம் அளித்திருக்கிறார்  சரபோஜி. மேலும், தனது காலகட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்களை ஒன்றுதிட்ரட்டி மனிதர்க்கும் விலங்குகளுக்குமான மருத்துவ நூல்களை வெளியிடச் செய்தார்.

அவ்வகையான நூல் படிகளின் காணப்படும் பழம்பாடல் ஒன்று, “தாதுப் பரிட்சை (நாடி பார்த்தல்), வருங்கால தேசம், சரீர லட்சணம், வாகடம்,  குளிகை, பற்பம், செந்தூரம், லட்சணம், குணவாகடம், மூலிகை, தைலம், லேகியம், பக்குவர், நிர்ணயம் ஆகியவற்றோடு ஆதிப்பெரும் கேள்வி உடையவனே மருத்துவன்” என்கிறது.

பற்பம், செந்தூரக்கட்டு, களங்கு, குளியல், வேது (ஆவி பிடித்தல்), பேதி, நாடி உள்ளிட்ட‘தேவ’ மருத்துவமும், மருந்திட்டு காய்ச்சிய நீர், சூரணம், வடகம், தைலம், பட்டினி, சாறு முதலிவயவற்றால் நோய் நீக்கும் ‘மானுட’ மருத்துவமும் கீறல், கட்டிகை, குருதிவாங்கல், அட்டைவிடல் முதலிய ‘அகர’ மருத்துவ முறையும் அடிப்படை சிகிச்சை முறைகளாகக் கையாளப் பட்டிருப்பதும் தெரியவருகின்றன. 

அதன்பிறகான, 17-ம் நூற்றாண்டிலேயே விஞ்ஞான முறை மருத்துவத்தின் செல்வாக்கான காலகட்டமாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக, ரத்த சுழற்சியின் அடிப்படையை 1628-ல் வில்லியம் ஹார்வே நிரூபித்ததும், ரத்த நுண்நாளங்கள் குறித்த ஆய்வு விளக்கத்தை மார்ஸெல்லோ மால்பிகி நிரூபித்ததும் ஐரோப்பிய மருத்துவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த   மைல்கற்களாகின. இதன் தாக்கம் சமூகத்தில் மேல் அடுக்குகளில் இருந்தவர்களிடமிருந்து படிப்படியாக கீழ்த்தட்டு மக்களிடையேவும் மாற்றத்தை உள்வாங்கச் செய்தது. ஆனால், முழுமையான ஏற்போ, மறுப்போ இன்றளவும் நிகழவில்லை! 

ஐரோப்பிய பாணி மருத்துவம் சில வேளைகளில் நோயைக் குணப்படுத்தினாலும் கூட, உள்ளூர் மருத்துவர்களின் சடங்கு முறை தவிர்த்த சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து ஐரோப்பியர்கள் தங்களின் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிவந்தனர். அதன் வழியாக, ஐரோப்பியர்களிடமிருந்து சில மருத்துவப் பழக்கங்கள், நாட்டுப்புற மருத்துவர்களிடம் கலப்புற்றது.  

அதன்பிறகு, சுரத்தைக் கண்டறியும் சுரமானி (தெர்மாமீட்டர்) பயன்பாடு, மருந்தை உடலுக்குள் செலுத்தும் ஊசி மருந்து முறை ஆகிய அலோபதி மருத்துவக் கலைச் சொற்கள் வாய்மொழிப் பதிவுகளிலும் இடம்பிடிக்கத் தொடங்கின. அதில் மிகப் பழைய பதிவுகள் தேயிலைத் தோட்டக் கூலிகளாகச் சென்ற பறையர் சமூகத்தவர்களின் பாடல்களில் அதிகம்  எதிரொலித்திருக்கின்றன.

“வடமருதை பேட்டையிலே வண்ண டிகிரி வச்சு, 

வயசறிஞ்சு ஊசிபோட வாராத நோய்வு எண்டான் 

வரிஞ்சு விட்டான் காயிதத்த. 

சின்ன டிகிரி வச்சு சீக்கறிஞ்சு ஊசிபோட 

தீராத நோய்வு எண்டு  கொலகாரன் சீமைக்கு 

திருப்பிவிட்டான் காயிதத்த…” என்பது பறையர் சமூகத்தவர் பாடல்! 

இதேபோல, எக்ஸ்ரே தொழில்நுட்பம் குறித்து வண்ணார் சமூகத்தவர் பாடல் ஒன்றில், “பங்குனி மாத்தையிலே படம்புடிச்சுப் பாக்கையிலே, படத்துக்கு அமையாதிண்டான் பாடைக்கு அமையுமிண்டான்” என்று ஆங்கில (அலோபதி) மருத்துவர் சொன்ன இழவுக் குறிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற பெரும்பாலான பாடல்கள் கிறிஸ்தவ மிஷனரி மற்றும் பழமைவாய்ந்த அரசினர் மருத்துவமனைகள் தோன்றிய கிராமப்புறங்களிலேயே எழுந்திருக்கின்றன. ‘இரட்சண்ய சேனை’ எனும் கிறிஸ்தவ அமைப்பின் பெயரால் குமரி மாவட்டத்தின் வடசேரி நகரின் மேற்கில் 1893-ம் ஆண்டு கேத்தரின் பூத் மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதேபோல, 1945-ல் மதுரை வட்டாரத்தின் புகழ்பெற்ற ‘எர்ஸ்கின்ஸ் மருத்துவமனை’ இன்றைய அரசினர் ராஜாஜி மருத்துவமனை) துவங்கப்பெற்றது. முதலாம் உலகப் போரில் (1914-18) உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்காக தொடங்கப்பட்ட ஸ்காட்லாந்து எர்ஸ்கின் தொண்டு அமைப்பு, மதுரையில் தங்களது சிவில் மருத்துவமனையை அமைத்தது. 

இந்தக் காலவெளியிலேயே அலோபதி மருத்துவம் தொடர்பான வாய்மொழிகள் நாட்டார் பாடல்களில்  அதிகரித்திருப்பதைக் கணிக்க முடிகிறது. அதிலும், அலோபதி மருத்துவப் புழக்கம் ஆங்கிலேயர்களோடு தொழில்முறையில் நெருங்கிப் பழகிய, ஒடுக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய சமூகத்தவர்களான வண்ணார், பள்ளர், பறையர் ஆகியோர் பாடல்களிலே அதன் ஆரம்பக்காலத்தில் முதன்மைப் பதிவுகளாக இடம்பெறுகின்றன. பிற சமூகத்தவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாடுவோராக இருந்தாலும், அவை குறித்த வாய்மொழி இலக்கிய உருவாக்கத்தில் பெருமளவு பங்கேற்கவில்லை. மாறாக நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்கள். பதிக்கப்பட்டவை, புழக்கத்தில் உள்ளவை இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவையே! 

இன்றைக்கு மரபான மருத்துவம் இருமுனைகளில் எதிர்ப்பை ஈட்டுகிறது. ஒன்று, அலோபதி மட்டுமே தீர்வு எனும் நவீன மனநிலை. மறுபுறம் பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளும் ஜாதிப் பெருமைப் போன்ற பழம்பெருமைகளும் இருக்கின்றன. எல்லா விஷயங்களைப் போலவே இரண்டு துருவங்களுக்கும்  நடுவே ஒரு சமநிலை நமக்கு தேவையாக இருக்கிறது. அந்த சமநிலைக்கு பண்பாட்டறிவு அவசியமானதாகிறது. மருந்தின் பொருள், குணம், பெயர், செயலூக்கத்தை அறிந்துவைத்திருப்பது பண்பாட்டறிவின் தொடர்ச்சியாக உலகெங்கிலும்     கருதப்படுகிறது. அந்த பண்பாட்டறிவு சொல்லிலும் சடங்கிலும் மறைந்திருக்கிறது. அந்த மூடுதுணிக்கு பின்னால் மரபறிவு குரு நாடி போல துடித்துக்கொண்டேதான் இருக்கிறது.

கார்த்திக் புகழேந்தி

எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார். தமிழ் விக்கியில்

2 Comments

  1. அபாரம் எவ்ளோ விசயங்கள் எழுத்தளாரின் மெனக்கெடலுக்கு ராயல் சல்யூட்

உரையாடலுக்கு

Your email address will not be published.