/

புதுவது கிளந்து : கார்த்திக் புகழேந்தி

சமீப நாள்களாக என் மனதிலிருந்து நீங்காத ஒரு சொல் இருக்கிறது. அதுதான் ‘கூளப்பநாயக்கன் காதல்!’கேட்டதுமே ஏதோ 1950-களில் வெளிவந்த சினிமா அல்லது புத்தகத்தின் தலைப்பாக இருக்கலாம் என்று தோன்றுகிறதா? உங்கள் கணிப்பு சரிதான். ‘தமிழ் இலக்கிய வரலாறு’ தொகுப்புகளின் ஆசிரியர் மு.அருணாசலம் 1943-ம் ஆண்டில், பதிப்பித்து வெளியிட்ட புத்தகத்தின் தலைப்புதான் அது.

அசல் நூல் எழுதப்பட்டது கி.பி 17-ம் நூற்றாண்டின் கடைசியில். எழுதியவர் சுப்பிர தீபக்கவிராயர் என்ற புலவர். மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர். ‘ஜோஸப் பெஸ்கி’ என்கிற வீரமாமுனிவருக்குத் தமிழ் பயிற்றுவித்த ஆசான்களில் ஒருவர். ‘சதுரகராதி’ உள்பட அந்தக் காலகட்டத்தில் உருவான பல தமிழ் நூல்களில் இவரின் பங்களிப்பும் உண்டு. அப்பேர்பட்ட கவிராயர் 1706 – 1732ம் ஆண்டுகளுக்கிடையே நிலக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்துவந்த பாளையக்காரர் கூளப்ப நாகம நாயக்கன்மீது பாடிய ஒருவகை சிற்றிலக்கியம்தான் [அல்லது பிரபந்தம்] ‘கூளப்ப நாயக்கன் காதல்’!

‘அட ‘காதல்’ என்கிற பெயரில் ஓர் சிற்றிலக்கிய வகைமையா?’ என்று உண்டான வியப்புடன் தமிழின் 96 வகையான சிற்றிலக்கியங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். (பட்டியல் கீழே) அப்படி ஓர் ‘ஜெனர்’ தென்படவே இல்லை. மாறாக, ‘பவனிக்காதல்’ என ஒரு சிற்றிலக்கிய வகைமை இடம்பெறுகிறது! ‘வீதியுலா வந்துசென்ற தலைவனைக் கண்டு காமுறும் பெண் ஒருத்தி, அவன்மீது எழுந்த தனது காதலை, காமத்தை பிறருக்குச் சொல்லிப் பாடுவதே பவனிக்காதல்! ஆனால், ‘கூளப்பநாயக்கன் ‘காதல்’ நூல் பவனிக்காதல் அல்லது தூது இலக்கிய வகையைச் சேர்ந்ததல்ல. 

அன்றைய திண்டுக்கல் வட்டாரத்தைச் சுற்றியிருந்த 26 பாளையங்களில் ஒன்றான, நிலக்கோட்டை பாளையத்தின் தலைவன், குறிஞ்சி மலைச் சாரலுக்கு தன் படை, பரிவாரங்களோடு வேட்டைக்குக் கிளம்புகிறான். அந்த மலங்காட்டில் தோழியருடன் பூப்பறிக்க வந்து, வழிதப்பி தனியே சிக்கிக்கொண்ட பெண் ஒருத்தியைக் காண்கிறான். அவள் அழகில் மயங்கி, அவள்மீது காதலாகி, அவளை வர்ணித்துக் கவிதை பாடி, அவளோடு காமுற்று, இன்பக்களி கூடுகிறான்… 

எல்லாம் நல்லபடியாக முடிந்த பிறகு, தன்னுடைய பரிவாரங்களுடன் தலைவன் ஊர் திரும்பிவிட, அவனை எண்ணி, ஏங்கித் தவிக்கிறாள் தலைவி. அதைக் கண்டு தலைவியின் தாய், தன் மகளைத் தூற்றுகிறார். ஆனால், அடுத்த சில நாளைக்குள் தலைவியை மணம் முடிக்க, பல்லக்கும் பரிவாரமும் அனுப்பிவைக்கிறான் தலைவன். அதைக் கண்டு பெண்ணின் தாய் முதலில் வருந்தினாலும், பிறகு மனம்மாறி, மகளை வாழ்த்தி வழியனுப்பிவைக்க ‘காதல்’ நிறைவு பெறுகிறது! 

அதாவது களவில் ஆண்-பெண் கூடி, பின்னர் பெண்ணின் தாய், மகளை வாழ்த்தி அனுப்பிவைத்த முறையைப் பாடி, தலைவன் வாழ்வில் எப்படி ஒரு பெண்ணை அடைந்தான் என்று புலவர்கள் தங்கள் கற்பனையைத் தூவிவிட்ட 17ம் நூற்றாண்டு காலகட்ட இலக்கிய வகை ‘காதல்!’ 

இதுபோல ‘குமாரலிங்கவேந்தன் காதல்’, ‘சிவகங்கை இராசேந்திர பூபதி காதல்’, திருமலைக் கறுப்பன் காதல் (1740), கந்தர் காதல், பழனிக்காதல்… எனப் பல சிற்றரசர்கள் பேரில் ’காதல்’ பிரபந்தங்கள் பாடப்பட்டிருக்கின்றன. கொங்குநாடு பழையகோட்டையைச் சேர்ந்த நல்லத்தம்பிச் சக்கரை மன்றாடியார் என்ற வள்ளல் மீது வீரபத்திரக் கவிராயர் என்ற புலவர் ‘காதல்’ என்ற தலைப்பிலேயே ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார். 

இவற்றில் பெரும்பாலானவை அச்சில் ஏறவில்லை. தப்பிப் பிழைத்தவை சில 20-ம் நூற்றாண்டில் பதிப்பு கண்டிருக்கின்றன. இருந்தும் சுமார் இரண்டு  நூற்றாண்டுகளுக்கும் மேலாக ‘காதல்’ பிரபந்தம் எழுதப்பட்டிருக்கிறது. காலத்தால் கொஞ்சம் நெருக்கமாக எழுதப்பட்டதென்றால், கடந்த நூற்றாண்டில் திருநெல்வேலி ராஜவல்லிபுரம் வள்ளல் முத்துச்சாமி மீது, தச்சைநல்லூர் புலவர் அழகிய சொக்கநாதர் தீட்டிய ‘காதல்’ என்கிற பிரபந்தம் கிடைக்கிறது. 

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகப் பாடப்பட்டுவந்த ‘காதல்’ என்ற சிற்றிலக்கியம் தமிழின் 96 வகை சிற்றிலக்கியப் பட்டியலில் இடம்பெறவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்ட ‘பிரபந்த மரபியல்’ நூலிலும் இதுபற்றிய குறிப்போ இலக்கணமோ இடம்பெறவில்லை. சுப்ரதீபக் கவிராயர் எழுதிய வேறு நூல்களுக்கு இலக்கண ‘அந்தஸ்து!’ உண்டு. ஆனால் ‘காதல்’ பிரபந்தத்துக்கு அது கிட்டவில்லை. 

‘காதல்’ மட்டுமல்ல, எட்டு முதல் 18ம் நூற்றாண்டுகள் வரை தமிழில் எழுதப்பட்ட பலவகையிலான இலக்கிய ஆக்கங்கள் இந்தப் பிரபந்த வரிசையில் இடம்பெறவில்லை. உதாரணமாக, விலாசம், சிந்து, ஏசல், செலவு(பயணம்), யாத்திரை, சிலேடை வெண்பா, வசைப்பதம் என்று இன்னும் சில சிற்றிலக்கிய வகைகளுக்கு எந்தவிதமான ‘ஜாபிதா’-வும் இல்லை! 96-வகை சிற்றிலக்கியங்களில் இடம்பெறும் உலா, பிள்ளைத்தமிழ், கோவை, தூது, கலம்பகம், அந்தாதி போன்றவற்றுக்கு உண்டான மதிப்பு எதுவும் அவற்றுக்குக் கிடைக்கவில்லை.  

எனில், எதன் அடிப்படையில் தமிழ் ‘சிற்றிலக்கியங்கள்-96’ என்று பட்டியலிடப்பட்டது? அதன் பின்னணி என்ன? இந்தக் கேள்வி சுவாரசியமான ஒன்று.

நிலக்கோட்டை நாயக்கர்

பிரபந்தம் – சிற்றிலக்கியம்

ரு படைப்பின் உள்ளடக்கமே அதன் குறிப்பிடத்தக்கத் தனிப்பண்பை (Genre) பாணியைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தனிப்பாடல்களின் தொகுப்பு. அவை போரையும் காதலையும் இலக்காகக் கொண்டவை. விதிவிலக்காக ‘பதிற்றுப்பத்து’ அதற்கென ஒரு தனி இலக்கண வரம்பைக் கொண்டிருந்தது. வம்சாவளிபோல… மொத்தமுள்ளவற்றை அகம், புறம் என்ற இலக்கணங்களால் வகுத்துக்கொண்டோம். பிறகு 18 மேல் கணக்கு- 18 கீழ்கணக்கு என்று பிரித்துக்கொண்டோம்.  

சங்கங்கள் மருகத் தொடங்கிய காலத்தில், ‘அறவொழுக்க கருத்து’ பிரதானமான இலக்கணமாக இருந்தது. திருக்குறள் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்டவை அதற்கான உதாரணங்கள். கூடுதலாக, ‘எண் கணக்கும்’ ‘மொழி விளையாட்டும்’ அந்தக் காலக்கட்ட இலக்கிய ஆக்கங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.  அந்தாதி(அந்தம்-ஆதி), இரட்டைமணி மாலை(2), மும்மணிக் கோவை(3), நான்மணிக்கடிகை(5) உள்ளிட்டவை அதற்கான உதாரணங்கள். அடிப்படையில் இப்படி விதவிதமான ஆக்கங்களையே ‘பிரபந்தம்’ என்ற சொல்லால் அடையாளப்படுத்திவந்தோம். 

இன்னும் சொல்லப்போனால், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த ஆழ்வார்களால் எழுதப்பட்டு, மக்களின் வாய்ப்பழக்கத்திலும் சுவடிகளிலும் இருந்த வெவ்வேறுவிதமான பாடல்கள் பல்லவராட்சி காலத்தில் தொகுக்கப்பட்டன. அவற்றுக்குத் ‘திருமொழி’ எனப் பெயர் உண்டானது. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த காட்டுமன்னார்கோவில் ரங்கநாத முனி என்பவர்தான், ஆழ்வார்களின் 3,776 பாடல்களைத் தேடித் தொகுத்து, அதற்கு நாலாயிரம் திவ்ய ‘பிரபந்தம்’ என்று பேரிட்டார். அதேபோல, சைவப் பெரியார்களால் எழுதப்பட்டு, தனித்தனியாகக் கிடைத்த சிறு நூல்களையெல்லாம் 10-ம் நூற்றாண்டில் சேகரித்துத் தொகுத்த திருநாரையூர் நம்பியாண்டார்  நம்பி, அவற்றை ‘பதினோரு திருமுறைகளாக’த் தொகுத்தார். 

இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக நாம் ‘பக்தி இலக்கியங்கள்’ என்று பின்னாளில் பேரிட்டுக் கொண்டாலும் திருமொழி, திருமுறை உள்ளிட்டவற்றில் இடம்பெற்ற, இடம்பெறாத அனைத்து சிறு சிறு இலக்கிய ஆக்கங்களும் ‘பிரபந்தம்’ என்ற புரிதலுடனேயே அணுகப்படவேண்டியவை. 

அதாவது, ‘பிரபந்தம்’ என்ற வடசொல்லுக்கு ‘நன்றாகக் கட்டப்பட்ட’ என்ற பொருள். ஆனால், அவை மனித வாழ்வு, தெய்வ நம்பிக்கை உள்ளிட்ட கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் விதவிதமான பாணிகளில் பாடிய இலக்கியங்கள். வெகுகாலமாக ‘பிரபந்தம்’ என அழைக்கப்பட்டு வந்த அவற்றை, 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தினர் குறிப்பிடத்தக்க அரசியல் வலுப்பெற்ற போது, ‘சிற்றிலக்கியங்கள்’ என்று மாற்றுப் பெயர் சூட்டினார்கள். ஆக பிரபந்தம் என்றாலும் சிற்றிலக்கியம் என்றாலும் அதன் பொருள் நோக்கம் ஒன்றுதான்! 

தோற்றமும் மீறலும்

தமிழ் என்ற மொழி தோன்றியதுபோல, அதில் இசை, எழுத்து, செய்யுள், காப்பியம் என இலக்கியங்கள் தோன்றியதுபோல… அவற்றுக்கான ‘இலக்கண’ நூல்கள் தோன்றியதுபோல… பின்னாளில் உரைநடை, சிறுகதை, நாவல்கள் தோன்றியதுபோல ‘சிற்றிலக்கியப் படைப்புகளின் தோற்றமும் ஒருவகை ‘புதிய முயற்சி’யே! 

‘பழமையின் நிழல் இன்றி, புதிது புதிதாக இலக்கியங்கள் தோன்றுமென்கிறது தொல்காப்பிய செய்யுள் இலக்கணம். 

‘தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே…’-தொல்.செய்யுளியல்.231  

அந்த வகையில் இந்தக் கலவையான புதிய இலக்கிய முயற்சிகளின் தடயம் ஏழாம் நூற்றாண்டுக்கும் முன்பே தென்படுகின்றன. ஆனாலும் தொகுத்து, சேகரித்து, எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படையில், ‘முதல் சிற்றிலக்கியம் கி.பி 7-ம் நூற்றாண்டின் கடைசியில் எழுதப்பட்டிருக்கலாம்’ என்று கணக்கிடுகிறார்கள்.

அதாவது கிபி 640-670ஆம் ஆண்டுகளில் மதுரையில் ஆட்சியிலிருந்த நின்றசீர் நெடுமாறன் மீது பாடப்பட்ட, ‘பாண்டிக்கோவை’தான் தனித்து எழுதப்பட்ட முதல் பிரபந்தம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. அதன்பிறகு 12-ம் நூற்றாண்டில் இந்தவகை படைப்புகள் அதிகளவில் தோன்றத் தொடங்கின. 16 முதல் 18-வரையிலான நூற்றாண்டுகளில் தாள் சுவடிகள் புழக்கம் அதிகரித்தபோது, கணக்கற்ற அளவில் சிற்றிலக்கியங்கள் எழுதப்பட்டன. 

இதற்குச் சில அரசியல் காரணங்களும் உண்டு. முதலாவதாக 7-12 வரையிலான நூற்றாண்டுகளில் பல்லவ-பாண்டிய-சோழப் பேரரசுகள் எழுச்சியுடன் இயங்கிவந்தன. பல்லவர் ஆட்சியில் சமய விவாதங்கள் தீவிரமாக இருந்ததென்றால், சோழர்களும் பாண்டியர்களும் போர், வெற்றி, உலா, மெய்கீர்த்தி என்று தனிப் பாணியில் தங்களது புகழ்பாடும் இலக்கிய ஆக்கங்கள் உருவாக வழி ஏற்படுத்தினார்கள். 

இதையடுத்து, தேசியக் கட்சியிலிருந்து உடைந்தும், முரண்பட்டும் புதிய புதிய மாநிலக் கட்சிகள் தலையெடுப்பது போல, அன்றைய பேரரசுகள் சிதறுண்டு, 11-13ம் நூற்றாண்டு வாக்கில் புதிய புதிய சிற்றரசர்கள் செல்வாக்கு பெறத் தொடங்கினார்கள். சிறு சிறு வள்ளல்களும் பக்திமான்களும் சமூக அரங்கில் புகழ்பெறத் தொடங்கினார்கள். கூடவே, அவர்களைப் புகழ்ந்துபாடும் கவிகளும் பெருகத் தொடங்கினார்கள்! இதனால் பழைய யாப்பு, அணி உள்ளிட்ட இலக்கண இறுக்கங்கள் மீதான மீறல் மெல்ல மெல்ல நிகழத் தொடங்கியது. இதற்கு ஒரே நேரத்தில் வரவேற்பும், எதிர்ப்புகளும் கிளம்பியது. 

‘எதெல்லாம் பிரபந்தம்…’

ரியலிஸம், சர்ரியலிஸம், மேஜிக்கல் ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ப்ரீமார்டனிஸம், டிரான்ஸ்மார்டனிஸம் என இன்றைக்குக் காலகட்டத்தில் மேற்கத்திய இலக்கியப் பார்வையுடன் படைப்புலக வரையறைகள் செய்யப்பட்டது போல சிற்றிலக்கிய வரலாற்றிலும் படைப்புகளின் ’தன்மைசார் இலக்கணங்கள்’ எழுந்திருக்கின்றன. 

கி.பி 8-ம் நூற்றாண்டிலேயே வைணவ நம்மாழ்வாரும், சைவர் சுந்தரரும், மன்னரையும் மனிதர்களையும் புகழ்ந்து செய்யுள்கள் பாடப்பாடுவதைக் கண்டித்திருக்கிறார்கள். ‘எதெல்லாம் பிரபந்தம்…’ என்று வகுக்கும் விதமாக, ‘அவற்றுக்கு இலக்கண வரம்பு’  உருவாக்கும் வேலையும் அதே காலத்தில் தொடங்கப்பட்டது தொடங்கியது. உதாரணமாக ‘முன்னர் இருந்த’ 15 முன்னோடிப் புலவர்களின் நூல்களை ஆராய்ந்து, அவற்றிலிருந்த எழுத்தியல் கூறுகள்(96) சொல்லியல் கூறுகள்(59) இனவியல் கூறுகள்(205) ஆகிய பொருத்தங்களைப் பட்டியலிட்டு, ‘பன்னிரு பாட்டியல்’ என்று பிரபந்தங்கள் எழுதுவதற்கான ஒரு பொது இலக்கணத்தை உருக்கியிருக்கிறார்கள். இதற்காக 12 புலவர்கள் ஒன்றிணைந்து தங்களின் 74 செய்யுள் இலக்கியங்களை ஒருசேர ஆராய்ந்து, அதன் மையக் கருத்து, பொருத்தப்பாடுகளைக் கொண்டு, ‘பன்னிரு பாட்டியல்’ என்ற இலக்கண நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மொத்தம் 61 வகையான சிற்றிலக்கியங்கள் ‘அக்மார்க்’ முத்திரை பெற்றிருக்கின்றன.   

தொல்காப்பியர் சிலை

இதே போல 12-ம் நூற்றாண்டில் அப்போது புதிதாக உண்டான நூல்களையும் சேர்த்து வெண்பா பாட்டியலும், 14-ம் நூற்றாண்டில் நவநீத பாட்டியல் நூலும், 16-ம் நூற்றாண்டில் சிதம்பரபாட்டியல் மற்றும் பிரபந்த மரபியல் நூல்களும் எழுதப்பட்டிருக்கின்றன.  சிற்றிலக்கியங்கள் பெருகத் தொடங்கிய 17-ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் மற்றோர் அமர்வு கூடி, இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூலும் உருவாகியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ‘ஏற்கப்பட்ட’ சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கை கூடக் குறைய இருந்திருக்கின்றன. ஒரு பட்டியலில் இருந்தவை மற்றொன்றில் இல்லை. 

குறைந்தபட்சமாக 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவநீதப் பாட்டியலில் 44 சிற்றிலக்கிய வகைகளையும் அதிகபட்சமாக, பிரபந்த தீபிகை என்ற அண்மைக்கால நூலில் (19ம் நூற்றாண்டு) 98 வகை சிற்றிலக்கியங்களும் ‘லிஸ்ட்’ செய்யப்பட்டிருக்கின்றன. 

பல்லவராயனும் படிக்காசு புலவரும்!

அப்படியானால் இந்த 96 பிரபந்தங்கள் அல்லது சிற்றிலக்கியங்கள் என்ற குறிப்பு எப்போதிருந்து பிரதானமானதாக மாறியது? 

‘96 பிரபந்தங்கள்’ பற்றிய இலக்கியக்குறிப்பை முதன்முதலில் தருபவர் கி.பி 17-18ம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசு புலவர்தான்! ராமநாதபுரம் சேதுபதி, அரியலூர் ஜமீன், சிவகங்கைத் திருமலைத் தேவர் எனப் பல மன்னர்களைப் புகழ்ந்து பாடிய இவர், வெள்ளூர் கலம்பகம் (மயிலாடுதுறை), தொண்டை மண்டலச் சதகம், கொங்குமண்டலச் சதகம் என்று நில எல்லை கடந்து எழுதியவர். கடவுள், மனிதர்கள் மட்டுமல்ல… எந்த ஒரு பொருளைக் குறித்தும் ‘சதகம்’ (நூறு விஷயங்கள்) பாடலாம் என்ற மனமாற்றத்தை அன்றைய தமிழிலக்கியத்தில் உருவாக்கியவர் இந்தப் படிக்காசுப் புலவர்! 

வெண்பா எழுத புகழேந்தி; பரணிக்கு ஜெயங்கொண்டான், விருத்தத்துக்கு கம்பன்; கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டகூத்தன், கலம்பகத்துக்கு இரட்டையர்கள் (முடவர்; குருடர்-Physically Challenged), வசைபாட காளமேகம், ‘பண்பாகச் சந்தம்படிக்க படிக்காசு புலவர்’ எனப் புகழ் பெற்றவர் இவர். பாடல் எழுதுவதில் அவ்வளவு நயம். இவர்தான் புதுக்கோட்டை மன்னனைப் புகழ்ந்து எழுதிய ’உலா’ நூலில் முதன்முதலாக ‘96 பிரபந்தங்கள்’ என்ற வரலாற்றுக் குறிப்பைத் தருகிறார்.

வள்ளலாக விளங்கிய புதுக்கோட்டை மன்னன் திருமலைராயப் பல்லவன் சேதுபதி ஆட்சிக்கு உள்பட்ட சிற்றரசர். தனியாட்சி நடத்த விரும்பி தஞ்சை மராட்டியர் உதவி கோரிய நிலையில், 1686-ல் இவரின் ஆட்சி பறிபோனது. அதே ஆண்டில் பல்லவராயனும் இறந்தார். அவரைப் போற்றி, படிக்காசு புலவர் பாடிய, ‘சிவந்தெழுந்த பல்லவராயன் உலா’ என்ற நூலில், ‘தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்’ எனப் போற்றிப் பாடியிருக்கிறார். அதாவது, ‘96 பிரபந்தங்களால் புகழப்பட்டவன் நீ…’ எனக் குறிப்பிடுகிறார். இந்த உலா நூல் எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. இருந்தாலும் சுவடியை வாசித்த குறிப்பை உ.வே.சா தருகிறார்.

படிக்காசு புலவரின் சமகாலத்தில் அதாவது 18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘பிரபந்த மரபியல்’ நூல் 96 சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிட்டபோதும், அதில் 66 வகையான படைப்புகளுக்கே இலக்கணம் இடம்பெறுகிறது. கொஞ்சம் பின்னோக்கிப் போய், 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘இலக்கண விளக்கப் பாட்டியலைக் கருத்தில் கொண்டால் அதிலும்’ 77 பிரபந்தங்களுக்கே இலக்கணம் சொல்லப்படுகிறது. 

இப்படி இன்னும் பின்னோக்கிச் செல்லச் செல்ல இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. சரியாகச் சொன்னால் 8-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை புதிய புதிய  பிரபந்தங்கள் உருவாகிவந்திருக்கின்றன. அவற்றுக்கு கோட்பாடுகள் அல்லது இலக்கணங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார், 18ம் நூற்றாண்டளவில் அது ‘96’ என்ற எண்ணில் நிலைத்துவிட்டது!

ஐரோப்பிய வரவுக்குப் பிறகு, இத்தாலியைச் சேர்ந்த பாதிரியார் ஜோசப் பெஸ்கி பாதிரியார் (வீரமாமுனிவர்), தமிழின் முதல் அகராதியைக் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கினார். 1732-ம் ஆண்டு தனது 52-வது வயதில், பழைய நிகண்டுகள், தாள் சுவடிகள் வழியாக அவர் சேகரித்த சொல், தரவுகளைக் கொண்டு சதுரகராதியைத் தொகுக்கும் வேலைகளை அவர் தொடங்கினார். இருந்தும்  வீரமாமுனிவரின் மறைவுக்குப் (1747) பிறகு, 1819-ல் தான் அவர் பெயரிலேயே நான்கு பகுதிகளுடன் சதுரகராதி வெளிவந்தது.

அதுவும் பல ஆண்டுகள் சீர் செய்யப்பட்டது. அப்படியாக திருப்பணங்காடு குப்புசாமி என்பவரால் பரிசோதிக்கப்பட்ட பதிப்பில், தொகை அகராதியில் இடம்பெறும் ‘பிரபந்தங்கள்’ என்ற சொல்லுக்கு  ‘பிள்ளைக்கவி’ தொடங்கி சிறுகாப்பியம் வரை 96 சிற்றிலக்கிய வகைமைகள்’ என்று பொருள் கொடுக்கப்பட்டன. கூடவே 96 சிற்றிலக்கியங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டது. (1894-ம் ஆண்டு பதிப்பு; பக்கம் எண்-315) ஆனால், 1830-களில் ஜோஸப் பெஸ்கி எழுதிய தொன்னூல் விளக்கம் என்ற நூலில், 93 சிற்றிலக்கியங்களையே திரட்டிச் சேர்த்திருக்கிறார்.

எது எப்படியானாலும் ‘தமிழ் சிற்றிலக்கியங்கள்-96’ என்பதே கடைசிக் குறிப்பாக நிலைத்துவிட்டது! 

பாட்டியல் வரையறை! 

சரி… இந்தப் பிரபந்தங்களுக்கு அதாவது சிற்றிலக்கியங்களுக்கு ’பாட்டியல் நூல்’கள் வகுத்த இலக்கிய வரம்புகளில் அரசியலும் உண்டு. 8-ம் நூற்றாண்டில் முதன்முதலில் உருவான ‘பன்னிரு பாட்டியல்’ இலக்கண நூல், செய்யுள்கள் அல்லது பா இனங்களைப் பிரித்தளிக்கிறது. அதாவது வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா, ஆசிரியப்பா என அறிந்திருப்போமில்லையா… அப்படி ஒவ்வொரு வகை ’பா’க்களை (செய்யுள்) எழுதுவோருக்கென குறிப்பிட்ட சாதி, கடவுள், நாள், ஓரை, விரை, பூ, நிறம், நிலம் என ஏழு பொருத்தங்களை வகுக்கிறது பன்னிரு பாட்டியல்! 

அதன்படி, வெண்பாவுக்கு சாதி அந்தணர் (பார்ப்பனன்); நிலம் முல்லை. அகவற்பாவுக்கு சாதி அரசர் (சத்ரியன்); நிலம் குறிஞ்சி. கலிப்பாவுக்கு சாதி வணிகர் (வைசியன்); நிலம் நெய்தல். வஞ்சிப்பாவுக்கு சாதி வேளாளன் (சூத்திரன்); நிலம் மருதம்…  என பா இனங்களைப் பகுத்திருக்கிறார்கள். 

 இதில் கவனிக்கத்தக்கது ‘அந்தந்த சாதியர் அந்தந்த சாதிக்காக பாவகைகளைக் கொண்டு பாடல்கள் பாடுவதே சிறப்பானது’ என்ற கருத்து பாட்டியல் இலக்கண நூலில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ’வெண்பா, அகவல், கலி, வஞ்சி, விருத்தம்’ இதெல்லாம் மங்கலப் பொருள்களைப் பாடவே பயன்படுத்தப்படவேண்டும். ஒன்றுக்கொன்று கலந்து பாடினாலும் ஏற்கப்பட்டிருக்கிறது.

மொழியும் அதிகாரமும்! 

16,17,18,19-ம் நூற்றாண்டளவில்தான் சிற்றிலக்கிய உருவாக்கம் முழு வீச்சில் நடைபெற்றிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் பல்வகைப் பிரபந்தங்கள் எழுதப்பட்டாலும், அவை ஏன் பின்வந்த பிரபந்தங்கள் பட்டியலிலோ, பாட்டியல் இலக்கண நூல்களிலோ இடம்பெறவில்லை என்பதற்கு அன்றைய அரசியல் நிலவரமும் முக்கிய காரணமாகிறது. 

குறிப்பாக 16-17-ம் நூற்றாண்டுகளில் நாயக்கர்களின் ஆட்சி தமிழ்நிலத்தில் வேரூன்றியிருந்தது. அவர்கள் தெலுங்கு மொழிக்கு கொடுத்த முக்கியத்துவத்தைத் தமிழ் புலவர்களுக்கு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது இருந்தது.  உதாரணமாக 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்கால புலவர்களான வரதுங்கராம பாண்டியன், உமறுப்புலவர், தாயுமானவர் உள்ளிட்டோருக்கு இந்தக் கருத்து இருந்திருக்கிறது.    

சுப்பிரதீபக்கவிராயரே மன்னர் திருமலைநாயக்கன்மீது ஒரு ‘காதல்’ பிரபந்தம் பாடியிருக்கிறார். ஆனால், அதற்கு நாயக்க மன்னரான திருமலை பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தக் கோபத்தினாலேயே, ‘நிலக்கோட்டை பாளையக்காரர்’ மீது ‘கூளப்பநாயக்கன் காதல்’ என்ற பிரபந்தம் பாடினார் சுப்ரதீபக்கவிராயர் என்று செய்திகள் உண்டு. இது ஒருவித மொழிரசியல் காரணமாக இருக்கலாம். 

ஆனால், இதை அப்படியே முழுக்க ஏற்க முடியாதபடி, திருமலை நாயக்கர் குமரகுருபரருக்கும், சொக்கநாத நாயக்கர் திரிகூடராசப்ப கவிராயருக்கும் ஆதரவளித்து, நிலக்கொடை வழங்கியதான குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன.

மொழியும் கூறுகளும்

பிரசித்திபெற்ற மற்ற பிரபந்தங்களுக்கும் ‘காதல்’ உள்ளிட்ட பிரபந்தங்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டுக்கு அவற்றுக்கிடையேயான மொழியும் மற்றும் கையாளப்பட்ட கதைக்கருவும் முக்கியமான கூறுகளாக இருந்தன. 

காதல் பிரபந்தத்தின் மொழி மக்களுக்கு நெருக்கமான வட்டாரத்தமிழில் எழுதப்பட்ட ஒன்று. பேச்சு வழக்கும், வாய்மொழிச் சொற்களும் அதில் பெருமளவு கையாளப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மரபுகளை மீறி 20-ம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற, ‘புதுக்கவிதை’க்கான தடயங்களும் அதில் தென்படுகின்றன. 

அதோடு, உடலில் ‘மூடுதுணி போர்த்தும்’ பாசாங்கு எதுவும் இன்றி, பாலியல்-உடல் வர்ணனைகளை அநாயசமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தலைவனின் புகழையும் காதல் வேட்கையையும் காமத்தையும் தெருப்பாடகனின் ஆலாபனையில் கேட்பதைப்போல ஒலிக்கின்றன.

உதாரணமாக, நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள ‘கொடுமணல்’ ஊரில் கி.பி 18-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த ஓர் உழவர் குடிச் செல்வந்தர் மீது ‘காதல்’ பிரபந்தம் பாடப்படுகிறது. அதன் பேர் கந்தசாமிக் காதல்! 

கொங்கு வட்டாரப் பேச்சுத் தமிழ் சொற்கள் இனிக்க இனிக்க இடம்பெருகின்றன. கொங்கு நாட்டின் மலைவளமும் அங்குள்ள செடி, கொடி, விலங்குகள் குறிப்பாக காளைகளின் வகை முதற்கொண்டு செய்திகள் இடம்பெறுகின்றன. அந்தப்பகுதி நிலத்தில் வாழும் சேடர், செங்குந்தர், சேணியர், வேடர், வணிகர், வலையர், வண்டி ஒட்டர், ஒக்கிலியர், தெலுங்கர், கடியர், குச்சியாரியர், மறவர், உப்பிலியர் என இனக்குழு மக்களின் வாழ்க்கைநிலை இடம்பெறுகிறது. 

கந்தசாமி வேட்டைக்குச் செல்லும் இடத்தில், அவர் கையாளும் ஆயுதங்களாக, துப்பாக்கி, சாட்டைக் கயிறு, சக்கி மிக்கி, ஒட்டு பருடு, சுத்தி, பிடி அம்பு, சக்கரம், பன்றிவேல், வளைதடி, கைவெடி, சாகுழல் என்று ஆயுதங்கள் பல வருகின்றன. கந்தசாமியீடு வேட்டையாடச் செல்லும் வீரர்கள், கொம்பன் யானையைப் பிடித்துவந்து, நெல் வயலில் ஏர் நடத்துவார்கள் என்கிறது பாடல் வரிகள்!

அதோடு, ‘காமக்குளத்து வயல் கைவசமா நீ கொடுத்தால், சாமத்துக்குள்ளாக சலகை வயல் நானுழுவேன்…’. தாமசமில்லாமல் வெகு காமவெள்ளந் தாவிவர; பூமிதனில் மாங்குயில் புறாவொலி குகுகுவென உன்னியொரு போகமிட உற்பன விலாசமதில் பொன்னிநதி போல் பெருகிப் பின்னையொரு போகமிட விளங்கி வரும் போகம் விதமான சம்போகம்…’ என்று தலைவன் கூற்றில் இரட்டை அர்த்த வரிகளில் கூடல் விளக்கப்படுகிறது. 

ஆக, 19-ம் நூற்றாண்டில் இலக்கியப் பாய்ச்சலில் ‘காதல்’ பிரபந்தங்கள் தேங்கிப் போக அதனுடைய மரபிழந்த பேச்சு மொழியும் பாலியல் லட்சணங்களும் முக்கிய காரணங்களாகிவிட்டன. வள்ளுவத்தின் காமத்துப்பாலுக்கும், பாசுர ரசங்களுக்குமான தொடர்ச்சியாக இவை கருதப்படவில்லை. நவீனத் தமிழ் இலக்கியப் பாய்ச்சலில், கி.ராஜநாராயணன், கழனியூரன் உள்ளிட்டோர் ‘மறைவாய் சொல்லப்பட்ட கதைகள்; வயது வந்தோருக்கு மட்டும்’ உள்ளிட்ட நூல்களைத் திரட்டி எழுதும் வரை இந்தத் தொடர்ச்சியின்  கண்ணி அறுபட்டே கிடந்தன. 

எத்தனை பட்டியலிட்டுச் சுருக்கினாலும், நிலைப்படுத்தினாலும், புறமொதுக்கினாலும் தொல்காப்பியக் கூற்றுபோல ‘புதுவது கிளந்து’ வந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் வரலாற்று நிஜம்! 

கட்டுரைக்குத் துணைபுரிந்த நூல்கள் 

1. பன்னிரு பாட்டியல் – தா.மவெள்ளைவாரணம். செந்தமிழ் கல்லூரி, திருப்பனந்தாள். 

2. சிற்றிலக்கியங்கள் – திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, தமிழாய்வுத்துறை – முனைவர் மு.ஜோதிலட்சுமி.  

காதல் கொத்து (1981) – ம.இராசேந்திரன், த.நா.அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை

3. கொடுமணல் இலக்கியங்கள் – (1981) – செ.இராசு, த.நா.அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை.

4. பிரபந்த மரபியல் (1976) – மு.அருணாசலம்; த.நா.அரசு

5.வைணவ சமயம் – 1982 – டாக்டர் ப.அருணாசலம் – பாரி புத்தகப்பண்ணை 

6. Tamil Dictionary (சதுரகராதி)- Veera Maha Munevur-1894 

7. தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்

8. திருவில்லிபுத்தூர்_ஆண்டாள்_பிள்ளைத்தமிழ்

9. சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

10. ஏழாம் திருமுறை 

11. கல்வெட்டு  இதழ் -த.நா அரசு தொல்பொருள்துறை 

12. தண்டலையார்சதகம் -1924, செந்தமிழ்ப்பிரசுரம் 

13.படிக்காசுப் புலவர் சரிதம் – நாராயணசாமி 1928-05-25

14. சிற்றிலக்கிய ஆராய்ச்சி -டாக்டர் இரா.கண்ணன்

15. பிரபந்த தீபிகை – முத்துவேங்கட சுப்பைய நாவலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 1982 

16. உலா இலக்கியங்கள் – ந.வீ.செயராமன்; மணிவாசகர் நூலகம் , 1966

17. தொன்னூல் விளக்கம் மூலமும் உரையும் -வீரமாமுனிவர் -பதிப்பு FXC நடராசா.

பிற்சேர்க்கை: 

பட்டியலிடப்பட்ட 96 வகை சிற்றிலக்கியங்கள் : பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.

1. அங்கமாலை, 2. அட்ட மங்கலம், 3. அனுராக மாலை, 4. அரசன் விருத்தம், 5. அலங்கார பஞ்சம், 6. ஆற்றுப்படை, 7. இணைமணி மாலை, 8. இயன்மொழி வாழ்த்து, 9. இரட்டைமணி மாலை, 10. இருபா இருபஃது, 11. உலா, 12. உலா மடல், 13. உழத்திப் பாட்டு, 14. உழிஞை மாலை, 15. உற்பவ மாலை, 16. ஊசல், 17. ஊர் இன்னிசை, 18. ஊர் நேரிசை, 19. ஊர் வெண்பா, 20. எண் மாலை, 21. எழுகூற்றிருக்கை, 22. ஐந்திணைச் செய்யுள், 23. ஒருபா ஒருபஃது, 24. ஒலியலந்தாதி, 25. கடிகை வெண்பா, 26. கடை நிலை, 27. கண்படை நிலை, 28. கலம்பகம், 29. காஞ்சி மாலை, 30. காப்பு மாலை, 31. காப்பியம், 32. குழமகன், 33. குறவஞ்சி, 34. கேசாதி பாதம், 35. கைக்கிளை மாலை, 36. கையறுநிலை, 37. கோவை, 38. சதகம், 39. சாதகம், 40. சின்னப்பூ, 41. செருக்களவஞ்சி, 42. செவியறிவுறூஉ, 43. தசாங்கத்தயல், 44. தசாங்கம், 45. தண்டக மாலை, 46. தாண்டகம், 47. தாரகை மாலை, 48. தானை மாலை, 49. தும்பை மாலை, 50. துயிலெடை நிலை, 51. தூது, 52. தொகைச் செய்யுள், 53. நயனப் பத்து, 54. நவமணி மாலை, 55. நாம மாலை, 56. நாற்பது, 57. நான்மணி மாலை, 58. நூற்றந்தாதி, 59. நொச்சி மாலை, 60. பதிகம் (பத்து), 61. பள்ளு, 62. பயோதரப் பத்து, 63. பரணி, 64. பல்சந்த மாலை, 65. பவனிக் காதல், 66. பன்மணி மாலை, 67. பாதாதி கேசம், 68. பிள்ளைத்தமிழ், 69. புகழ்ச்சி மாலை, 70. புறநிலை, 71. புறநிலை வாழ்த்து, 72. பெயர் நேரிசை, 73. பெயர் இன்னிசை, 74. பெருங்காப்பியம், 75. பெருமகிழ்ச்சி மாலை, 76. பெருமங்கலம், 77. போர்க்கெழு வஞ்சி, 78. மங்கல வள்ளை, 79. மடல், 80. மாலை வகை, 81. முதுகாஞ்சி, 82. மும்மணிக்கோவை, 83. மும்மணி மாலை, 84. மெய்க்கீர்த்தி, 85. வசந்த மாலை, 86. வரலாற்று வஞ்சி, 87. வருக்கக் கோவை, 88. வருக்க மாலை, 89. வாகை மாலை, 90. வாதோரண மஞ்சரி, 91. வாயுறை வாழ்த்து, 92. விருத்த இலக்கணம், 93. விளக்கு நிலை, 94. வீரவெட்சி மாலை, 95. வெற்றி கரந்த மஞ்சரி, 96. வேனில் மாலை. 

கார்த்திக் புகழேந்தி

எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார். தமிழ் விக்கியில்

2 Comments

  1. அருமை கார்த்தி…ஆழ்ந்த கட்டுரை…ஆழமான வாசிப்பு….தொ.ப இருந்தால் மெச்சிக்கொள்வார்….

    • Interesting read indeed. Wether some of the sittrilakkiangal were considered too risqué for the modest audience and so found no support from the wealthy and modesty keepers?

உரையாடலுக்கு

Your email address will not be published.