/

காணிக்கை : கா.சிவா

ஸ்ரீனிவாசன் வரவேற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தான். இவனுடைய அண்ணன் ராமச்சந்திரனின் மகனுக்கு திருமணம். எழுபது வயதான அப்பா பட்டாபி மணமேடையில் ஓரமாக இடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தாலும். மணமக்களை பார்ப்பதைவிட மண்டபத்திற்குள் நுழைபவர்களைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சற்று பதட்டமாக இருப்பதாக இவனுக்குத் தோன்றியது. அண்ணனும் அண்ணியும் மணமேடையிலேயே நிற்கிறார்கள். எத்தனை திருமணங்களில் கலந்து கொண்டிருந்தாலும், திருமணத்தை நடத்துவதற்காக மேடையில் சேகரித்து வைக்கும் பொருட்களில் ஒன்றிரண்டு மறதியில் விடுபடத்தான் செய்கிறது. அதை எடுத்துக் கொடுப்பதற்காக அவர்களுக்குத் துணையாக இவன் மனைவியும் மேடையிலேயே உடன் நிற்கிறாள். இவனும் அங்குதான் நின்றிருந்தான். அப்பா பட்டாபிதான் இவனை அழைத்து சிவலாங்குடியிலிருந்து வருபவர்களை மரியாதையுடன் அழைத்து வருமாறு கூறினார். அப்போதுதான் அப்பாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது.

மண்டபத்தின் தரைத் தளத்தில் உணவுக்கூடமும் முதல்தளத்தில் மணமேடையும் அமைந்திருக்கிறது. தாமத முகூர்த்தம் என்பதால் திருப்பூட்டுக்கு முன்னதாகவே காலைப் பந்தி முடிந்துவிட்டது. இவன் கீழே வரவேற்புக்கு நிற்குமிடத்திலிருந்து உணவுக் கூடத்தை எட்டிப் பார்த்தான். இரண்டு பெண்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். சிவலாங்குடியிலிருந்து எவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை ஸ்ரீனிக்கு இல்லை. அவர்களின் எந்தத் தேவைக்கும் இவர்கள் குடும்பத்திலிருந்து ஒருவரும் சென்றதில்லை. அவர்களுடன் நாற்பது ஆண்டுகளாக எந்தத் தொடர்பும் கொண்டிருக்காத இந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறைப் பையனுக்கு திருமணம் என பத்திரிக்கை கொடுத்தால் வந்துவிடுவார்களா என்ன. ஆனால் அப்பாவிற்கு அந்த ஊர் ஆட்கள் வந்து தன் பேரனை வாழ்த்தவேண்டும் என்று ஆசை… இல்லையில்லை பேராசை. அதற்காகவே தேவகோட்டையில் திருமணத்தை நடத்தவேண்டும் என பிடிவாதம் பிடித்தார். தந்தையின் விருப்பத்தை மீறமுடியாமல் அண்ணன் ஒப்புக் கொண்டார்.

அந்த ஊரைவிட்டு வந்து நாற்பதாண்டுகள் ஆனபோதும் அவ்வூரைப் பற்றிய நினைவுகள் மறையாமல் அப்படியே நீடிக்கின்றன. அங்கிருந்து வந்த பிறகு வேலை நிமித்தம் வெளியூர் செல்லும்வரை மாதம் ஒருமுறையாவது சிவலாங்குடியில் வாழ்ந்த வாழ்க்கையை அப்பா இவர்களிடம் லயித்துக் கூறுவார். அது செவியில் கேட்டுக் கேட்டு மனதில் அப்படியே தங்கிவிட்டது. அவர் கூறியதில் அப்போதைய நிகழ்வுகள் சித்திரம்போல் இவன் மனதில் இப்போதும் நீடிக்கிறது.

ஸ்ரீனி, அம்மா, அப்பா, அண்ணன் நான்கு பேரும் வேறொரு ஊரிலிருந்து புதுப்பட்டிவரை பேருந்தில் வந்தார்கள். அங்கிருந்து நெல் அரைப்பதற்காக வந்த மாட்டு வண்டியில் ஏறி சிவலாங்குடி வந்து இறங்கினர். அப்பா ஆசிரியர் பயிற்சி முடித்து முதல்முறையாக பணியமர்த்தப்பட்டது இந்த ஊர் பள்ளிக்குதான். அவரது சொந்த ஊரைப் பற்றியோ அங்கு அவரின் பொருளாதார நிலை பற்றியோ ஸ்ரீனிக்கு நினைவில்லை. அப்பாவிடம் பிறகு சிலமுறை கேட்டபோதும் அதைப்பற்றி இப்போ எதற்கு எனக் கூறிவிட்டார். ஸ்ரீனியைப் பொறுத்தவரை அவன் வாழ்க்கை தொடங்கியது சிவலாங்குடியில்தான்.

சிவலாங்குடிக்கும் இவர்தான் முதல் வாத்தியார். சிவலாங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களான போசம்பட்டி, பெரியகோட்டை, கன்னுத்தோப்பு, பெருந்தாக்குடி, வம்பரம்பட்டி மாதிரியான பத்து ஊர்களுக்கு அமைக்கப்பட்ட முதல் பள்ளியின் முதல் ஆசிரியர் இவர்தான். இதை உணர்ந்தபோது அப்பா பெரிதும் நெகிழ்வுற்றார். இத்தனை ஊரைச் சேர்ந்த அறியாப் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு தனக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டார்.

சிவலாங்குடியைச் சேர்ந்த மக்களும் தங்களது முதல் ஆசிரியர் மேல் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தனர். ஐயர் ஒருவர் அவர்கள் ஊரில் இதுவரை தங்கியதே இல்லை. முதல் முறையாக ஆசிரியராக அமைந்த ஐயர் பட்டாபிராமனை சாமி என்றே எல்லோரும் அழைத்தார்கள். கல்வி கொடுப்பதற்காகவோ அல்லது குலத்துக்காகவோ அவர்கள் அழைத்ததை இவர் மறுக்கவில்லை.

பட்டாபிராமன் அந்த ஊருக்கு வந்த நேரம் ஊர் மக்களின் மனதினுள் வெளியே தெரியாத புகைச்சல் கனன்று கொண்டிருந்தது. சிவலாங்குடியில் வெள்ளாளர், கோனார், வல்லம்பர் என மூன்று இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய சமமான எண்ணிக்கையில் இருந்தார்கள். எல்லோருடைய மதிப்புக்கும் பாத்தியமாய் இருந்து ஊரை வழி நடத்திக் கொண்டிருந்த சிங்காரம்பிள்ளை இரண்டு மாதங்களுக்கு முன் காலமானார். திருவிழா நடத்துவது, புள்ளி வரியை தீர்மானிப்பது, மடை திறப்பது என எல்லா விசயங்களுக்கும் முடிவெடுத்த ஆள் இப்போது இல்லை. கோடைகாலம் என்பதால் மடை திறப்பது பற்றிய பிரச்சனையில்லை. ஆனால் அம்மனுக்கு மதுஎடுப்புத் திருவிழா நடத்தவேண்டும். அதற்கு பணம் திரட்டவேண்டும். திருவிழாவில் இடம் பெறும் நிகழ்ச்சிகளை முடிவு செய்து அதற்கு ஆகும் செலவுகளை கணக்கிட்டு அதற்கேற்ப ஒரு புள்ளிக்கு இவ்வளவு கட்டவேண்டும் என நிர்ணயம் செய்யவேண்டும். சிங்காரம்பிள்ளையின் மகன் செல்வாவை தலைவராக கொள்ளலாம் என வெள்ளாளர் தரப்பில் கூறினாலும் மற்ற இரு தரப்பினருக்கு அதில் விருப்பமில்லை. சிங்காரம்பிள்ளை வெளியூர் சென்று படித்தவர் உலகஞானம் கொண்டவர். அதனால், பெரியவர்களெல்லாம் அவர் கூறுவதை ஒப்புக்கொண்டார்கள். அதற்காக அவர் மகனையும் ஏற்கமுடியாது. எப்போதுமே அதே இனத்தைச் சேர்ந்தவர்தான் தலைவராக இருக்கவேண்டுமா எங்கள் இனத்தில் ஆள் இல்லையா என அவர்கள் பொருமினார்கள். மூன்று இனத்தவரிலும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுத்து சீட்டுக் குலுக்கிப்போட்டு யார் என்பதை முடிவு செய்யலாமா என தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த விசயம் பட்டாபி ஐயர் காதுக்கு வந்ததும் இவருக்கு ஒரு யோசனை தோன்றியது. மக்கள் மனதில் பிரிவென ஒன்று தோன்றிவிட்டதால் எந்த முறையில் ஒருவரை தேர்ந்தெடுத்தாலும் மற்ற இரு இனத்தவருக்கும் வருத்தமும் பிணக்கும் நீடிக்கத்தான் செய்யும். அதற்குப் பதிலாக மூன்று இனத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் மூவரையுமே ட்ரெஸ்டியாக வைத்துக் கொள்ளலாம். எந்த முடிவையும் மூவரும் சேர்ந்தே எடுக்கலாம். ஒவ்வொரு இனத்திற்கும் பிரதிநிதி இருப்பதால் யாருக்கும் வருத்தம் தோன்றாதல்லவா என மூவிடத்திலும் கூறி எல்லோரையும் மனமொன்றி ஒப்புக் கொள்ள வைத்தார.

அன்றைக்கு சிவலாங்குடிக்கு பாத்தியமான இரண்டு கண்மாய்கள் இருந்தன. ஆனாலும் மழை காலத்தில் தேங்கும் நீர் கொண்டு ஒரு கோகம் மட்டுமே நெல் விவசாயம் செய்தார்கள். மற்ற காலத்தில் மக்களுக்கு பெரிதாக வேலையில்லை. கொல்லைகளில் மானாவரிப் பயிர்கள் ஏதேனும் விதைப்பார்கள். எனவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தடையேதுமில்லை. பட்டாபி ஐயர் குடும்பத்திற்கு ஊரின் நடுவே ஆட்களில்லாமல் கிடந்த ஒரு வீட்டை ஒருப்பாரித்துக் கொடுத்தார்கள்.

நான்கு மைல் நடந்துபோகும் அவசியமில்லாமல் ஊரில் பள்ளி அமைந்ததில் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாத்தியாரின் பிள்ளைகள் மீதும் அவர் மனைவி லட்சுமியின் பேரிலும் பிரியம் கொண்டிருந்தார்கள்.

பட்டாபி ஐயர் தனது சம்பளத்தில் சரிபாதியை வேறு ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். ஒருநாள் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததை பிள்ளைகளும் கேட்க நேர்ந்துவிட்டது. “நம்ம பிள்ளைகளும் வளர்றாங்க. இன்னும் எத்தன காலத்துக்கு பணத்த அனுப்பிக்கிட்டே இருப்பீங்க..” என்ற மனைவி கேட்டபோது அதை கேட்டபடி பிள்ளைகள் உள்ளே வந்துவிட்டனர். ஒருகணம் திகைத்தாலும் உடனே இயல்பாகி “நான் பிறந்த கடன் இருக்குதில்ல. அத நான் கட்டித்தானே ஆகனும்.. ” என மூவருக்கும் பொதுவாகக் கேட்டார். பிள்ளைகள் எதுவும் புரியாமலும் மனைவி ஏதோ புரித்தவராகவும் தலையாட்டினர்.

காலையில் வயலுக்கும் கொல்லைகளுக்கும் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் சற்று தாமதமாகவே பள்ளிக்கு வருவார்கள். எனவே, பட்டாபி ஐயர், காலை பத்து மணிக்கு பள்ளியின் முதல் மணியை அடிக்கச் சொன்னார். ஒரு இஞ்ச் கம்பியை வளைத்து அதில் தொங்கவிடப்பட்ட இரண்டடி துண்டு தண்டவாளத்தை அதில் பொருத்துவதற்கான போல்ட்டைக் கொண்டு அடிப்பதுதான் மணி அடிப்பது. அதற்கும் பிள்ளைகளுக்குள் போட்டி நிலவும். யாரை அடிக்கவைப்பது என்பதற்கும் ஒரு முறைமையை ஏற்படுத்தினார். காலையில் முதலில் வரும் பிள்ளைக்கு காலை மணியையும் படிப்பில் சிறப்பாக இருக்கும் பிள்ளைகளுக்கு மதியம் மற்றும் மாலை மணியை அடிப்பதற்கும் அனுமதித்தார்.

இரண்டு ஆண்டுகள் லேசாக தூறி வெள்ளாமையை நசிய வைத்த மழை இவர் வந்த ஆண்டு தேவையான அளவு பெய்து செழிக்கவைத்தது. இவர் வந்த நல்நிமித்தத்தால்தான் இப்படி நிகழ்ந்தது என்ற எண்ணம் ஊர்க்காரர்களுக்குத் தோன்றியதால் இவர் குடும்பத்தினர் மேல் கொண்ட மதிப்பு மேலும் உயர்ந்தது.

இதற்கு முன்பு ஊரில் ஐயர் இல்லாததால் பெண் ருதுவாவது, குழந்தை பிறத்தல், துக்க நிகழ்வு போன்றவற்றிற்கு தீட்டு கழிக்கவேண்டும் என்ற பெரியவர்களின் வழக்கத்தை செயல்படுத்துவது இங்குள்ளவர்களுக்கு பெரும் சிரமமானதாக இருந்தது. புதுப்பட்டியில் இருப்பவர்களை அழைத்தால் இவ்வளவு தூரம் வருவதற்கு மறுத்துவிடுவார்கள். அருகிலுள்ள ஊர்களில் அழைப்பு இருக்கும்போது தொலைவில் சென்று வெயிலில் அலைவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அதைவிடவும் தூரமாகச் சென்று அழைத்து வருவதற்கு இவர்களிடம் வசதியிராது. எனவே இவர்களே மஞ்சள் பொடி கரைத்த நீரை மாவிலையால் வீடு முழுக்கத் தெளித்து நிறைவின்றி ஆறுதல் கொண்டிருந்தார்கள். பட்டாபி ஐயர் வந்த பிறகு இந்த நிகழ்வுகளுக்கு நடத்தப்படும் சடங்கினை இவரே நடத்தினார். மற்ற ஊர் ஐயர்கள் கேட்பது போன்று பணம் கேட்காமல் தரப்படும் அரிசியை மட்டும் பெற்றுக்கொள்வார். இவருடைய இந்த பெருந்தன்மை ஊர்க்காரர்களுக்கு மிகவும் நிறைவளித்தது. அவர்களின் பேச்சு வழியாகவே அடுத்த ஊர்க்காரர்களும் பட்டாபி ஐயர் பற்றி அறிந்து அவர்களின் இல்லத்தில் நடத்தவேண்டிய சடங்குகளுக்கு இவரை அழைத்தனர். சிவலாங்குடியில் பணியில்லாத நாட்களில் மட்டும் அருகிலிருந்த ஊர்களுக்கும் நடந்தே செல்வார். அவர்கள் தரும் அரிசி காய்கறிகளை வேட்டியில் கட்டி தலைமேல் வைத்துக் கொண்டு வருவார். இப்படிக் கிடைக்கும் அரிசியும் காய்கறிகளுமே குடும்பத்தின் உணவுத் தேவைக்கு போதுமானதாக இருந்ததால் ஊருக்கு அனுப்பியது போக எஞ்சிய சம்பளப் பணத்தை முழுமையாகவே பிள்ளைகள் பேரில் புதுப்பட்டி இந்தியன் வங்கியில் போட்டு வைத்தார். பிள்ளைகள் இருவரும் பின்பு பொறியியல் படிப்பதற்கு அந்தப் பணமே அடித்தளமாக அமைந்தது.

ஊரில் நிகழும் எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் இவரையே முதன்மையாக அழைத்தார்கள். யாரிடமும் அதிர்ந்து பேசாத, கோபம் என்பதையே அறியாதவராக, எதையும் நேர்மறையானதாகக் கூறும், மூன்று இனத்தவருக்கும் நடுநிலையானவராக விளங்கிய இவரின் இருப்பு நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பெரும் உவகையையும் நிறைவையும் அளித்தது.

சிவலாங்குடியில் அமைந்தது ஓராசிரியர் பள்ளிக்கூடம்தான். பிள்ளைகளின் வருகையை கவனிப்பது, அவர்களை ஒழுங்குபடுத்தி அமர்த்துவது, பிள்ளைகளின் வருகைக்கேற்ப சத்துணவு தயார் செய்வதற்கான உணவுப் பொருட்களை அளந்து கொடுப்பது போன்ற எல்லாப் பணிகளையும் பட்டாபி ஐயரே கவனிக்கவேண்டும். அதற்கு பிறகுதான் பாடம் நடத்துவதில் ஈடுபடுவார். பள்ளி இரு பக்க சுவர்களில் கரும்பலகை பொருத்தப்பட்ட ஒரே வராண்டாவாக நாட்டு ஓடு வேய்ந்து கட்டப்பட்டிருந்தது. வடமேற்கு மூலையில் இரண்டடி சுவர் வைத்து பொருட்கள் வைப்பதற்கு தடுப்பு அமைக்கபட்டிருந்தது. பள்ளிக்குப் பின்புறம் சமையல் செய்வதற்கு தென்னந்தட்டிகளை கொண்டு மேற்கூரையிடப்பட்ட கொட்டகை இருந்தது. ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்புவரையான மாணவர்களை மேற்குப் புறம் அமைக்கப்பட்ட கரும்பலகையை நோக்கியும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை கிழக்குபுறம் அமைக்கபட்ட கரும்பலகையை நோக்கியும் அமர வைத்திருந்தார். மூன்று வகுப்புகளுக்கும் பொதுவான கணக்கு, அறிவியல் மற்றும் மொழிப்பாடங்களை ஒன்றாக நடத்துவார். ஒரு வகுப்புக்கு மட்டும் தனியாக நடத்த வேண்டியவற்றை பள்ளிக்கு வெளியே ஆலமர நிழலில் இயற்கைக் காற்று வீசுமிடத்தில் நடத்துவார். மற்றவர்கள் பள்ளிக்குள்ளேயே அமர்ந்து படிப்பார்கள். அவர்களை கண்காணிப்பதற்கு படிப்பில் பின்தங்கியிருப்பவர்களை நியமித்திருந்தார். அவர்கள் அமைதியாக படிக்காமல் அருகிலிருப்பவர்களிடம் பேசிக் கொண்டோ சேட்டைகள் செய்து கொண்டோ இருப்பவர்களின் பெயர்களை கரும்பலகையில் குறித்து வைப்பார்கள். பட்டாபி ஐயர் அந்தப் பிள்ளைகளை அடிக்கவோ திட்டவோ மாட்டார். அவர்களின் அம்மாவோ அப்பாவோ எவருக்கு இவன்கள் பயப்படுவார்களோ அவர்களிடம் சொல்லி கண்டிக்கவைப்பார். அவர்களே புத்திமதி சொல்லி அடக்குவார்கள். அவரது பிள்ளைகள் அப்படி நடந்துகொண்டாலும் இவர் அவர்களின் அம்மாவிடம்தான் சொல்லுவார். இதனால் பையன்கள் தங்களுடைய சச்சரவுகளை எல்லாம் பள்ளிக்கு வரும் வழியிலேயே தீர்த்துக் கொண்டார்கள்.

சிவலாங்குடிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பட்டாபி ஐயரை தேவகோட்டை மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரியிடமிருந்து கடிதம் வந்தது. பட்டாயி ஐயர் கிளம்பியே ஆகவேண்டியதாயிற்று. ஊர் மக்களும் இவரிடம் படித்த பிள்ளைகளும் மிகவும் மனவருத்தத்துடன் விடை கொடுத்தார்கள். மற்ற விவரங்களெல்லாம் ஸ்ரீனிவாசன் நினைவில் இருந்தது அப்பா கூறியது என ஒரு மாதிரி முன்னுக்குப் பின் அருவக் காட்சிகளாக தோன்றினாலும் அந்த ஊரிலிருந்து கிளம்பிய காட்சி இப்போதும் ஸ்ரீனிவாசன் மனதில் மறையாமல் நீடிக்கிறது. அப்படியே மனம் இப்போது பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது நிகழ்ந்தவற்றை நோக்கிச் சென்றது.

தாத்தா மிக முக்கியமானதாகக் கருதும் ஊரையும் அதன் மக்களையும் காட்டுவதற்காக ஸ்ரீனிவாசன் தன் மகன் ஹரிகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றான். புதுப்பட்டியிலிருந்து ஆட்டோவில் செல்லலாம் என அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் கூற அப்படியே சென்றனர். செல்லும்போது ஸ்ரீனிவாசனின் மனம் வியப்பிலேயே ஆழ்ந்திருந்தது. மண்பாதைகளை கண்ணில் காணவே முடியவில்லை. எல்லாமே தார்ச் சாலைகளாக மாறி சூரியவொளியில் லேசாக உருகி வெம்மையை கசிந்தன. ஆற்றுக்கு குறுக்கே செல்லாமல் அம்புராணி வழியாகச் சென்று பாலத்தின் வழியாக சுற்றிச் சென்ற ஆட்டோ முன்பு ஒருமணி நேரம் கடந்த தூரத்தை பத்து நிமிடங்களில் சென்று சேர்த்துவிட்டது. மண் சுவரில் பனைவோலைகளால் வேய்ந்த கூரை வீடுகள் ஒன்று கூட இல்லை. தமிழ்நாடே மாறிவிட்டது என்றபோதும் தன் மனதில் இருந்த சிவலாங்குடியின் சித்திரம் கிழிபட்டதை விழிவிரிய நோக்கினான். ஹரிகிருஷ்ணன் இயல்பாகவே இருந்தான். அருகருகே இருந்த ஒவ்வொரு வீடுகளும் இப்போது தனித்தனி சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு தனித்திருந்தன. வேம்பு, புளியன் போன்ற பெருமரங்கள் நின்றிருந்த இடங்களிலெல்லாம் சிறிய அலங்காரப் பூச்செடிகள் வண்ணப்பூக்களுடன் மெல்ல அசைந்து கொண்டிருந்தன. பல கிளைகளை விரித்து நிழல் பரப்பியிருந்த ஆலமரம் இப்போது விழுதுகள் தாங்கியிருக்க ஒரு கிளையை மட்டுமே மேல் நோக்கி நீட்டி நின்றது. பள்ளி இருத்த இடத்தில் உபயோகத்தில் இல்லாததால் நிலைகுலைந்த சிமெண்ட் தளம் போட்ட ஒரு கட்டடம் நின்றது. பள்ளியை வேறு பெரிய கட்டடத்திற்கு மாற்றியிருப்பார்கள் என்று ஸ்ரீனிக்கு தோன்றியது. இவர்கள் வசித்த வீடிருந்த இடத்தை அனுமானிக்க முடிந்ததே தவிர உறுதியாக கணிக்க முடியவில்லை. ஸ்ரீனிவாசன் திகைத்து நிற்பதைக் கண்டு ஹரிகிருஷ்ணன்தான் அங்கு சாலையில் அமைக்கப்பட்டிருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் “ஊர்ப் பெரியவங்க வீடு எதும்மா” எனக் கேட்டான். அவள் புதியவர்களை வியப்புடன் கண்டு நான்கு வீடு தள்ளியிருந்த பெரியவீட்டைச் சுட்டினாள்.

அந்த வீடு இருக்கும் இடத்தைக் கொண்டு அது மூன்று ட்ரெஸ்டிகளில் ஒருவராக இருந்த செல்வாவின் வீடாக இருக்கலாம் என்று எண்ணினான். வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் தொடரொன்றை இரண்டு பெண்கள் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடுத்தர வயது பெண்ணும் அவருக்கு அம்மாகவோ மாமியாராகவோ இருக்கக்கூடிய வயதில் இன்னொருவரும் இருந்தார்கள். இவர்களின் நடையோசையில் கலைந்து இவர்களை நோக்கி திரும்பி யாரெனப் புரியாமல் நோக்கினார்கள். தொடரை காணும்போது இடையூறு செய்ததின் எரிச்சலும் அவர்கள் பார்வையில் மிளிர்ந்தது.

“அம்மா… நான் பட்டாபி ஐயரோட சின்னப்பையன் சீனி. இவன் எம்பையன் ஹரிகிருஷ்ணன்..” என பெரியவளைப் பார்த்துக் கூறினான்.
“எந்த ஊருப்பா…” என அவர் கேட்டதினால் அவருக்கு நினைவில்லை எனப் புரிந்தது.

“ஒரு நாப்பது வருசத்துக்கு முன்னால இங்க வாத்தியாரா வந்தாரேம்மா. பட்டாபி.. பட்டாபி ஐயர்… ஞாபகம் இருக்காம்மா…” என பெயரைக் கொஞ்சம் அழுத்திக் கூறினான்.
அந்த அம்மாளின் முகம் மகிழ்வில் விரிந்தது. சட்டென எழுந்து வேகமாக வந்தார். ஸ்ரீனிவாசனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “சீனியா… நல்லா வயசாயிடுச்சேப்பா… இது ஒம் பையனா. அய்யாவோட சாயல் இருக்கே… வாங்கப்பா. உள்ள வாங்க..” என அழைத்துச் சென்று நாற்காலிகளில் அமரவைத்தார். அவரின் செயலைப் பார்த்து முகத்தில் வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் நின்ற பெண்ணைக்காட்டி
“இவ எம்மருமக. எம்புள்ள புதுக்கோட்டை வரைக்கும் போயிருக்கான். பேரப் புள்ளகளெல்லாம் வெளியூர்ல படிக்குதுங்க.” என்று கூறியவர் தொடர்ந்து “அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா… மூத்தவன் நல்லாயிருக்கானா” எனக் கேட்டார். அந்த அம்மாளின் பற்கள் குறைவினால் உட்குவிந்த உதடுகளையும் சுருங்கிய கன்னங்களையும் கொண்டு அவர் யாரென தன் நினைவிற்குள் துழாவினான் ஸ்ரீனி. எப்படியோ செல்வாவின் மனைவியின் முகத்தை நினைவிற்கு கொண்டுவந்து இவர் முகத்தோடு பொருத்திக் கொண்டவுடன் சற்று ஆசுவாசமானது. இவர்கள் மகன்தானே தன்னோடு படித்த குமார். அப்பா அவர் பார்வையிலேயே கதையை சொல்லி பதிய வைத்ததில் இவன் பக்க பார்வை மறந்துவிட்டிருந்தது. இப்போது தயக்கம் விலக இயல்பாக பேச முடித்தது.

“அம்மா நீங்க நல்லாயிருக்கீங்களா. அய்யா எப்ப தவறுனாங்க..” அவரின் தோற்றத்தைக் கண்டு அனுமானித்துக் கேட்டான். “அது ஆயிடுச்சுப்பா அஞ்சு வருசம். இப்பத்தான் போன மாரியிருக்கு. காலந்தான் எவ்வளவு வேகமா ஓடுது…”

“எங்கம்மா தவறி பத்து வருசமாயிடுச்சும்மா… அப்பா நல்லாயிருக்காங்க. வயசாயிடுச்சே அதான் கொஞ்சம் தளந்துட்டாரு…” இவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு பேப்பர் குவளைகளில் மாம்பழ குளிர்பானம் கொண்டுவந்தார் அவரின் மருமகள்.

“குமாரு சம்சாரமாம்மா.. ” என கேட்டான். “ஆமாப்பா. கோட்டையூர்தான். என் தம்பி மகதான்…” என்று கூறியதும் அவளை நோக்கி வணக்கம் சொன்னான்.
“இவ்ளோ வருசத்துக்கப்புறம் வந்திருக்கீங்களே. ஒம்மகனுக்கு கல்யாணமா..”
“கல்யாண விசயந்தான்மா. இவனுக்கில்ல. என் அண்ணன் பையனுக்கு. பொண்ணு வீட்டுக்காரங்க சென்னையில இருக்காங்க. பையனும் சென்னையிலதான் வேலை பாக்குறான். அங்கேயே கல்யாணத்த வைக்கலாம்னுதான் அண்ணன் நெனச்சாரு. ஆனா அப்பாதான் சிவலாங்குடிக்காரங்க கல்யாணத்துக்கு வந்தாகனும்னு சொல்லி தேவகோட்டையில கல்யாணத்த வைக்கச் சொல்லிட்டாரு…” அந்தம்மா முகத்தில் சிறு குழப்பம் தோன்றியது.

“முறையா அண்ணனும் அண்ணியும்தான் வந்திருக்கனும். இந்த முகூர்த்தத்த விட்டா இன்னும் ரெண்டு மாசம் தள்ளி போயிர்ற மாதிரியிருக்கு. நாள் ரொம்ப கம்மியா இருக்கிறதால சொந்தக்காரங்க வீடுகளுக்கு அண்ணனும் அண்ணியும் அலைஞ்சிகிட்டு இருக்காங்க…”

“அதுவும் சரிதான். முன்னெயெல்லாம் ரெண்டு மூணு ஊர்ல இருந்தவங்க இப்போதான் பேர் தெரியாத ஊர்லயெல்லாம் போயி குடியிருக்காங்களே. எம் பேத்திக்கு சடங்கு வச்சப்ப குமாரு அலைஞ்ச அலைச்சலத்தான் பாத்தேனே..”

“அண்ணன்தான் வர்றேன்னாரு. அப்பாதான் நம்ம ஊருக்காரங்கடா. விசயம் கேள்விப்பட்டாலே வந்திருவாங்க. மொறையெல்லாம் பாக்கமாட்டாங்கன்னு சொன்னாங்க…”

“ஆமாம்மா. சாமி சரியாத்தான் சொல்லியிருக்காரு. இப்படி விசயம்னு சொன்னாப் போறாதா. நாங்க வந்து நிப்போமே..” என்று கூறியபோது அவரின் உணர்வை ஸ்ரீனியால் உய்த்துணர முடியவில்லை. பல்லில்லாமல் எழுந்த சொல்லும் தசையில்லாத கன்னங்களும் கூறிய உணர்வை மழுங்கச் செய்துவிட்டன.

“அம்மா… மத்த ரெண்டு ட்ரஸ்டிங்க வீடுகளுக்கும் பத்திரிக்கை கொடுக்கனும். அப்புறம் என்கூட படிச்சவங்களுக்கெல்லாம் சொல்லனும். சந்திரன், சிவசாமி, மாயாண்டி இவங்கெல்லாம் இப்ப இருப்பாங்கல்லமா…”

“இந்த வெயில்ல ஏம்பா அலையிற. சாயந்திரம் குமார் வந்திடுவான். அவன எல்லாருக்கும் போன்ல சொல்லிருவான். இப்பதான் போன்லயே பத்திரிக்கைய அனுப்புறாங்களே. அதையும் அவனே பண்ணுவான். ஒங்கூட்டாளி ஒனக்காக இதைக்கூட. செய்யமாட்டானா…”

“இல்லம்மா.. எல்லாரையும் நேர்ல அழைக்கனும்னு அப்பா சொன்னாங்க…”

“இவங்கெல்லாம் வேத்து மனுசங்கன்னு நெனக்கிறீங்க. நேர்ல கூப்பிட்டா மட்டுந்தான் வருவாங்கன்னு முடிவு பண்ணியிருக்கீங்க. அப்படித்தானே…”

“இல்லம்மா… அதுக்காக சொல்லலை. இவ்ளோ தூரம் வந்திட்டமே. நேர்லயே குடுத்திடலாம்னுதான்…”

“அதுல எனக்கொன்னும் இல்லப்பா. இப்ப யாரும் வீட்ல இருக்கமாட்டாங்க. அவங்க வீட்லயெல்லாம் பெரியவுக யாருமில்ல. வெளியூர்லேர்ந்து வாக்கப்பட்டு வந்த பொண்ணுகதான் இருக்குதுங்க. ஒன்னய யாருக்கும் தெரியாது. நீங்க சங்கடப்படுவீங்களேன்னுதான் சொல்றேன்… அப்புறம் ஒன் இஷ்டம்…”

நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த ஹரிகிருஷ்ணன் “அப்பா அவங்கதான் கொடுத்தர்றேன்னு சொல்றாங்கல்ல. பின்ன ஏன்பா தயங்குறீங்க. நாம இன்னும் அறந்தாங்கிக்கு வேற போகனுமே..” என்றபோது குரலில் அலுப்பு இருந்தது.

அவரிடம் கேட்டு ட்ரஸ்டிகள் உட்பட எல்லோருடைய பெயர்களையும் கேட்டு பத்திரிக்கையில் எழுதி அளித்தான். குமாரின் பெயரெழுதிய பத்திரிக்கையை அவர் கூறியபடி அவன் மனைவியிடம் கொடுத்து “கண்டிப்பா வந்திரனும்மா. எல்லோரும் வந்து வாழ்த்தனும்னு எங்க அப்பா ரொம்ப ஆசைப்படறாங்க..” என்று கூறி கொடுத்து வணங்கினான். “குமாரிடம் போனில் பேசலாமா..” எனக் கேட்டதற்கு “அவன் கட்சிக் கூட்டத்துக்கு போயிருக்காம்பா.. இப்ப போனை அணைச்சோ சத்தமில்லாமலேயோ வச்சிருப்பான்.. ஒன் எண்ணைக் கொடு. வந்தவுடனே பேசச் சொல்றேன்” என்று கூறினார். இவன் எண்ணைக் கூற அவன் மனைவி தன் அலைபேசியில் பதிந்து கொண்டாள். அவன் எண்ணை கேட்டு பதிந்து அழைத்தான். தொடர்பு கிடைக்கவில்லை. அவர்கள் கூறியது உண்மையாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது.

“ரொம்ப சந்தோசம்மா. நாங்க கெளம்புறோம். எல்லாரையும் பாக்கலாம்னு நெனைச்சேன். சரி கல்யாணத்துல பாத்துக்கலாம். குமார பேசச் சொல்லுங்கம்மா…” என்று எழுந்தான்.
“சீனி சாப்பிட்டு போகலாம்பா. எத்தனையோ வருசத்துக்கு அப்புறம் வந்திருக்கீங்க. வெறும் வயித்தோடயா போவீங்க..”

“புதுப்பட்டியிலதாம்மா சாப்பிட்டுட்டு ஆட்டோ ஏறினோம். இப்பதானே ஜூஸ் குடிச்சம். அதோட அறந்தாங்கிலே நெருங்குன சொந்தக்காரங்க. அங்க சாப்பிட வந்திடுங்கன்னு சொல்லியிருக்காங்கம்மா…” என்று கூறியபோது சட்டென பள்ளி பற்றி நினைவு வந்தது. “இப்போ பள்ளிக்கூடம் எந்தப் பக்கம் இருக்கு…” எனக் கேட்டான்.

“பள்ளிக்கூடமா… அதையேன் கேக்குற. அதே எடத்துலதான் இருக்கு. வர்றப்ப பாக்கலையா…”

“பாத்தேன். பள்ளிக்கூடம் முன்னாடி இருந்த எடம்துல ஒரு கட்டடம் புழக்கமில்லாம கெடக்குது. அதான் வேற எடத்துல இருக்கான்னு கேட்டேன்…”

“அதே கட்டடம்தான். புதுசா கட்டடம் கட்ட முடிஞ்சவங்களால நல்ல வாத்தியாரக் கொண்டுவர முடியல. வர்ற வாத்தியாருங்க ஆறு மாசத்துக்கு மேல வரமாட்டேங்குறாங்க. இங்க வரப் பிடிக்காம லீவப் போட்டுடுடறானுங்க. ரெண்டு மாசத்துக்கப்புறம் வேற ஆளப் போடுவானுங்க..”

“அப்ப புள்ளைங்க படிப்பு…”

“அதான் எல்லாப் பசங்களும் பக்கத்து ஊருகள்ல புதுசா வந்த பள்ளிக்கூடங்களுக்கு மாறிடிச்சுங்க. பசங்க போதுமான அளவு இல்லேன்னு பள்ளிக்கூடத்தையே அரசாங்கம் மூடிடுச்சு.. ம்ம்.. எத்தனை புள்ளைங்க படிச்ச எடம் இப்போ பாழடைஞ்சு கெடக்குது..” பெருமூச்சுடன் விரக்தி வெளிப்பட்டது. சில கணங்களில் விழிகள் விரிய “எல்லாம் இந்தச் சாமிக்கண்ணுனால வந்தது..” என்று ஆங்காரத்தோடு கூறியவர் இவன் முகத்தில் படர்ந்த குழப்பத்தைக் கண்டு “ஒங்கப்பாவ மாத்தச் சொல்லி பிராது மேல பிராது அனுப்பினது சாமிக்கண்ணுதானே. அது ஒனக்குத் தெரியாதா. அந்தப் பாவத்துக்குதான் காலு கை இழுத்துக்கிட்டு சாவு எப்ப வருமோன்னு பல வருசமா ஏங்கிக்கிட்டிருக்கான்…”.

அவர் கூறியதைப் பற்றி அப்பா இதுவரை சொன்னதில்லை என்பதை வியப்போடு எண்ணினான். ஆனால் சாமிக்கண்ணு உடல் நலங்குன்றி இருப்பதையறிந்து உள்ளம் இளகியது. நலமின்றி இருப்பதே துயரம். அதோடு பழியும் சேர்ந்தால் பெருங்கொடுமை. அதுவும் தன் அப்பாவின் பெயரைக் கொண்டு அவரைப் பழிக்கிறார்கள். அப்பாவே இதைக் கருதாதபோது இதை நீடிக்க விடக்கூடாது எனத் தோன்றியது.

“சாமிக்கண்ணு அய்யாவ நான் பாக்கலாங்கலாம்மா..” என இவன் கேட்டபோது அவருடன் ஹரியும் அதிர்ச்சியடைந்தான். அவர் மறுக்க முயல்வதற்குள் “அப்பா.. இப்ப அவர எதுக்கு பாக்கனும். நமக்கே இன்னும் நெறைய வேலையிருக்கே..” என்று தன் மறுப்பைத் தெரிவித்தான்.

“ஹரி எனக்கென்னவோ நாம கல்யாணத்துக்கு அழைக்க வத்ததைவிட அவர பாத்து பேசறதுதான் முக்கியமான விசயமாப்படுது. இல்லை அதுக்காகத்தான் இங்கே வந்த மாதிரியும் தோணுது…” எனக் கூறியவுடன் அந்தம்மாவும் மறுக்க முயலாமல் “சரி போகலாம்பா..” எனக்கூறி விழிகளாலேயே மருமகளிடம் விடைபெற்றுக் கிளம்பினார். இவர்களும் அவரிடம் கைகளால் விடை பெற்றனர்.

“அம்மா, சாமிக்கண்ணுதான்னு எங்கப்பா மேல புகார் கொடுத்தார்னு யாரும்மா சொன்னது. அவர் எதுக்குமா இதச் செய்யப்போறார்..” இவன் குரலில் ஊர்க்காரர்களே தவறாக அவர்மேல் பழி போட்டிருப்பார்களோ என்ற தொனி ஒலித்தது.

“அவரேதான்பா சொன்னாரு. நீங்க இங்கேயிருந்து போன ஒரு வாரத்துக்கப்புறம் ஊர்க்கூட்டம் நடந்துச்சு. அப்ப ஒங்கப்பாவ திரும்ப இங்கேயே போடுறதுக்கு முயற்சி பண்ணலாம்னு பேச்சு வந்துச்சு. அப்பதான் சாமிக்கண்ணு, ஒருத்தர வேற எடத்துக்கு மாத்தமுடியுமே தவிர இவருதான் வேணும்னு யாரையும் குறிப்பிட்டு கேக்கமுடியாதுன்னு சொன்னாரு…”

“ஒனக்கு எப்படித் தெரியும்னு திருப்பிக் கேட்டப்பதான் தான் பிராது குடுத்ததாலதானே அவர மாத்துனாங்கன்னு தெனாவட்டா சொன்னாரு. ஆனா ஏன் பண்ணினாருன்னு சொல்லலை. அதைப்பத்தி யாரும் கேட்டுக்கவும் இல்ல. மனுசனோட சின்னப்புத்தி எப்ப வேலை செய்யும், யார வெறுக்குங்கிறதுக்கெல்லாம் காரணம் சொல்லிற முடியுமாயென்ன…” என்று அவர் கூறியதும் ஸ்ரீனி வேறெதும் கேட்காமல் அவர் கூறியதை தனக்குள் உசாவினான்.

ஓரமாக பள்ளமுண்டாக்கி அதற்குள் முடங்கிய நாய்களையும் நான்கைந்து குஞ்சுகளுடன் தரையைக் கொத்திக் கிளறிக் கொண்டிருந்த கோழிகளையும் ஹரி ஆர்வத்துடன் பார்த்துக்கொணடே வந்ததை ஸ்ரீனி கவனித்தான். நகரத்தில் விரைவாக செல்லும்போது இவற்றை அவன் காண்பதில்லை என்பது நினைவுக்கு வந்தது. கால்மணி நேர நடைக்குப்பின் இளமஞ்சள் பழங்கள் தொங்கிய கிளைகளை அசைத்தக் கொண்டிருந்த எலுமிச்சை மரம் நின்ற வீட்டின் வெளிக்கதவை திறந்து குமாரின் அம்மா உள்ளே சென்றார். இவர்களும் சென்றார்கள். திண்ணையில் அமர்ந்திருந்த சாமிக்கண்ணுவின் மனைவி இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அவர் அப்போதே ஒல்லியான தேகத்துடன் இருந்ததால் இப்போது முதுமையடைந்த தோற்றத்தில் இருந்தாலும் ஸ்ரீனிக்கு அடையாளம் தெரிந்தது. குமாரின் அம்மா இவர்களைக் காட்டி விவரம் கூறியதும் வாங்கப்பா எனக் கூறியபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஸ்ரீனி ஹரியை திண்ணையிலேயே அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு அறையை நெருங்கினான். அறை வாசலிலேயே துர்நாற்றம் போல கவிச்சி வாடை முகத்தில் அறைந்து குமட்டலை வரவழைத்தது. வாயை மூடி சில கணங்கள் திரும்பி நின்ற பிறகு வெளிக்காற்றை நன்றாக சுவாசித்துக் கொண்டபின் அறைக்குள் நுழைந்தான். மெத்தையிடாத மரக்கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தார். முதுகு அழுந்தாதவாறு தலையணை வைக்கப்பட்டிருந்தது. சற்று மெலிந்திருப்பார், உடல் குறுகியிருக்கும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு வந்தபோதும் எண்ணியதைவிட அதிகமான உருமாற்றத்துடன் அடையாளம் தெரியாதவாறு சாமிக்கண்ணு கிடந்தார். இவனைப் பற்றி அவர்கள் சொல்லிவிட்டதால் இவன் வணங்குவதற்கு முன்பே தன் செயல்படும் இடக்கையால் செயல்படாத வலக்கையை தூக்கி கைகளைக் கூப்ப முயற்சி செய்தார்.

“ஐயா, சிரமப்படாதீங்க…” என்று கூறி அவரது கைகளை தனது கைகளால் பிடித்தான். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

“நீங்க மனசப் போட்டு கொழப்பிக்காதீங்க..சீக்கிரம் குணமாயிடுவீங்க. டாக்டருங்க சொல்ற மாதிரி நடந்துகிட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும். சென்னையில என் ப்ரண்டு ஒருத்தன் இப்படித்தான் இருந்தான். இப்போ நல்லாயிட்டு வேலைக்கு போயிட்டிருக்கான்..”

இவன் கூறுவதை மறுப்பதுபோலவும் எதையோ கூற விழைவதாகவும் அவர் தலையசைத்தார். “எங்க அப்பா இங்கேயிருந்து போனது ஒங்களாலன்னு நெனைக்கிறீங்க. ஆனா அது உண்மையில்ல. அஞ்சு வருசம் ஒரே எடத்துல வேல பாத்ததால எங்கப்பாவோட சம்மதத்தோட. அரசாங்கமேதான் மாத்துச்சு. அவரு எந்த வருத்தமும் இல்லாம சத்தோசமாத்தான் இருக்காரு… இப்ப அவரு பேரனுக்கு கல்யாணம் வச்சிருக்கு. ஒங்களையெல்லாம் அழைக்கச் சொன்னாரு. ஒங்கமேல வருத்தமிருந்தா இப்படி சொல்லியிருப்பாரா…”

அவர் முகம் குழப்பமடைந்து லேசாக தெளிவதைக் கண்டான். “பத்திரிக்கை குடுக்குறேன். நீங்களும் கண்டிப்பா வரணும். ஒங்களப் பாத்தா அப்பா ரொம்ப சந்தோசப்படுவாங்க…” என்றபோது அவர் முகத்தில் ஒளி படர்வதாகத் தோன்றியது. சில நிமிடங்கள் அவரை பார்த்துக் கொண்டிருந்தான். அவரும் இவனைப் பார்ப்பதும் தனக்குள்ளே ஆழ்வதுமாக இருந்தார். மீண்டுமொரு முறை அவர் கைகளைப் பற்றியபின் விடுவித்து வணங்கினான். அவரும் தலையாட்டினார். தனக்குள் ஒரு நிறைவு தோன்றியதை இப்போதும் ஸ்ரீனி உணர்ந்தான்.

அங்கிருந்து வரும்போது மனதில் உறுத்திக் கொண்டிருந்த இரண்டு கேள்விகளை வந்ததுமே அப்பாவிடம் கேட்க வேண்டுமெனத் தோன்றியது. அப்பாவும் இவர்கள் வருவதை எதிர்நோக்கியே ஊஞ்சலில் அமர்ந்தபடி காத்திருந்தார்.

“என்னப்பா எல்லாரையும் அழைச்சிட்டீங்கள்ல. வர்றேன்னு சொன்னாங்களா…” ஆர்வம் மேலுற அவர் கேட்டபோது சிறு தயக்கம் தோன்றியபோதும் ஹரியை ஒருமுறை நோக்கிவிட்டு “எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம்பா.. கண்டிப்பா வர்றேன்னு சொல்லியிருக்காங்க…” என்று கூறினான். பரிதவிப்புடன் இருந்த அவரது முகம் இயல்பானபின் “அப்பா ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கனும். முன்னாடியே தோனுச்சு. சரி போயிட்டு வந்து கேக்கலாம்னு இருந்தேன்’

“என்கிட்ட கேக்கிறதுக்கென்ன. கேளு..”

“சிவலாங்குடிக்காரங்கள அழைக்கிறதுல ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க..”

“படிச்சு முடிக்கிறதுக்குள்ளேயே வேலைய வாங்கிடற இக்காலம் மாதிரியில்ல அப்ப. படிக்கிறப்பவே எனக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. நாலு வருசத்துக்குள்ள ரெண்டு பேரும் பொறந்திட்டீங்க. ஆனா எனக்கு வேலையில்ல. அந்த ஊர்ல நம்ம குலத்து ஆளுகளே அதிகமா இருந்ததால பூஜை புனஸ்காரத்துக்கும் அவங்கவங்களுக்கு வேண்டியவங்களையே கூட்டிப்பாங்க. வேலையில்லாதவனோட மனக்கிலேசத்த வார்த்தையால சொல்லி உணர்த்திடவே முடியாது. பொண்டாட்டியையும் புள்ளைகளையும் அடுத்தவங்களோட வருமானத்துல பாத்துக்கிறது ரொம்பவே வேதனையா இருந்துச்சு. கொஞ்சநாள் இல்ல.. பத்து வருசம். அதுவரைக்கும் என்னை யாருமே மனுசனாக்கூட மதிக்கல. அப்பதான் சிவலாங்குடிக்கு ஆசிரியரா நியமிச்சு கடிதம் வந்துச்சு…”

அவர் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியதால் முகத்தில் லேசாக பரவசம் படர்ந்தது.
“புது ஊரு, புது மனுசாள்னு பயந்துகிட்டேதான் உங்களையும் அழைச்சின்டு போனேன். ஆனா அந்த சனங்க என்னய எப்படி மதிச்சாங்கன்னு ஒனக்குதான் தெரியுமே. ஒன்னுக்கும் ஒதவாம குப்பையில கெடந்தவன கோபுரத்துல வச்சி வணங்குற மாதிரி என்கிட்ட நடந்துகிட்டாங்க. அங்கே கெடைச்ச மரியாதை வேறெங்கேயும் எனக்குக் கெடைக்கல. அடுத்து போன தேவகோட்டை ஸ்கூல்ல பதினஞ்சு வாத்தியார்ல நானும் ஒருத்தன் அவ்வளவுதான். அடுத்தடுத்து போன ஸ்கூல்கள்லயும் அப்படித்தான். ஒனக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்..” என்று கூறியவர் மேல்நோக்கி ஊஞ்சலின் கம்பிகளில் பார்வையை ஊன்றினார். அது பழைய நினைவுகளில் அமிழ்வதான தோற்றத்தை இவனுக்கு அளித்தது.

அப்போது அவரை கலைப்பதற்கு சற்று தயக்கமாக இருந்தபோதும் இப்போதே கேட்டுவிட உள்ளம் உந்தியதால் “அப்பா இன்னொன்னையும் ஒங்ககிட்ட கேக்கனும்…” என இழுத்தான். அவர் நினைவுகளிலிருந்து மீளாமலேயே “ம்ம் …” என்றார்.

“சாமிக்கண்ணுவ ஒங்களுக்கு ஞாபகமிருக்கா…” என்று அவரைப் பார்த்தான். அவரது முகத்தில் ஒரு திடுக்கிடல் நிகழும் என எதிர்பார்த்தவன், ஏமாற்றமடைந்தான்.
இயல்பாக இவனை நோக்கியவர் “இருக்கே அவருக்கென்ன..” என்றார். அவரின் உடல்நிலையைக் கூறி அவரது மனதை சங்கடப்படுத்த விரும்பாமல்
“இல்லப்பா… அவருதான் உங்கள சிவலாங்குடிய விட்டு மாத்துறதுக்கு காரணம்னு சொன்னாங்க..” என்றான்.

அப்பா முகத்தில் கோபமோ வெறுப்போ தோன்றவில்லை. “ஆமா.. அவருக்கிட்டேயிருந்து தொடர்ந்து என்மேல கம்ளைன்ட் வர்றதேன்னு கூப்பிட்டாங்க. கம்ளைன்ட் உள்நோக்கத்தால போட்டிருக்காருன்னு குளோஸ் பண்ணிடலாம். ஆனாலும் ஒங்களுக்கு தெரியனுமேன்னுதான் சொல்றோம்னு சொன்னாங்க…”

எப்படி அவரால் எவ்வுணர்ச்சியும் காட்டாமல் பேசமுடிகிறது என வியந்தபடி ஸ்ரீனி பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆனா… நான் அதுக்கு சம்மதிக்கல. வேற எடத்துக்கு என்னைய மாத்திடுங்கன்னு நானே எழுதிக்கொடுத்தேன். அப்புறம்தான் மாத்துனாங்க..”

“ஏன் அப்படிச் செஞ்சீங்க. ஊர்ல உள்ள அத்தனை பேருக்கும் ஒங்களப் பிடிக்குது. அதக் கருதாம ஒரே ஒருத்தருக்கு பிடிக்கலைன்னு ட்ரான்ஸ்பர் கேட்டிருக்கீங்க…”

“என்ன காரணமாவேணா இருக்கட்டும். அந்த ஒருத்தரோட மனம் எப்படி வெந்திருந்தா கம்ளைன்ட் கொடுத்திருப்பாரு. தொடர்ந்து நான் அங்க இருந்து இன்னும் வேகவைக்கனுமாயென்ன. கூடவே கூடாது. அது ரொம்பப் பாவம்னு எனக்கு அந்த ஷணம் தோனுச்சு..”

அப்பாவை அப்படியே கட்டிக்கொண்டு தூக்கி சுழற்றவேண்டும் என ஸ்ரீனியின் மனம் விழைந்தது. ஆனால் விழிகள் கசிய அவர் கையை சில கணங்கள் பிடித்துக் கொண்டிருக்கவே அவனால் முடிந்தது.

வந்து கொண்டிருந்த ஓரிருவரை புன்னகையுடன் கைகள் கூப்பி வரவேற்று பன்னீர் தெளித்து உள்ளே அனுப்பிய ஸ்ரீனியின் உள்ளம் அன்றே அப்பாவிடம் விவரத்தை சொல்லியிருக்க வேண்டும் என இடித்துரைத்தது. அப்போதிருந்த அவரின் நெகிழ்ச்சியான மனநிலையை சிவலாங்குடியிலிருந்து எவரும் வருவதற்கான அறிகுறி தெரியவில்லை எனக் கூறி வருத்தமுறச் செய்ய தயங்கியது தவறு. அதனால்தான் இப்போது பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார். இப்போது அவர் அடையப்போவது பெரும் ஏமாற்றமல்லவா. பரவாயில்லை கடந்த ஒருவாரமாக மகிழ்வாக இருந்தாரல்வா அது நல்லதுதானே என எதிர்ப்பதில் எழுந்தது.

ஹரி பாதிப்படிக்கட்டில் இருந்து “திருப்பூட்டப் போறாங்கப்பா… ஒங்களக் கூப்பிடறாங்க…” என இவனை அழைத்தான். இவன் மீண்டுமொருமுறை சாலையை நோக்கிவிட்டு பெருமூச்சுடன் படியில் ஏறி மணமேடையை அடைந்தான். அப்பா இவன் முகத்தேயே கூர்ந்து பார்ப்பதை உணர்ந்தபோதும் அவர் முகத்தை பார்ப்பதை தவிப்புடன் தவிர்த்து மணமக்கள்மேல் பார்வையை ஊன்றினான்.

எல்லோரிடம் ஆசி பெற்றுக் கொண்டு திருமாங்கல்யம் வைத்திருந்த தாம்பாளம் மணமேடைக்கு வந்தது. திருமணத்தை முன்னின்று நிகழ்த்திய ஐயர் கையால் சைகை காட்டவும் கொட்டுமேள ஓசை மற்ற சத்தங்களை அடக்கி மேலெழுந்து ஒலித்தது. எத்தனை திருமணங்களைக் கண்டபோதும் ஒவ்வொரு திருப்பூட்டின் போதும் ஸ்ரீனியின் மனம் நெக்குருகி விழிகளில் நீர்துளிர்க்கவே மனதில் வாழ்த்தெழுகிறது. அப்படியே திரும்பி அப்பாவை நோக்கினான். அப்பா நிறைந்து மகிழ்ந்திருப்பதாகத் தோன்றியது. அக்காட்சியை நம்பமுடியாமல் நீர் படந்த விழிகளை அழுத்தி துடைத்துவிட்டுப் பார்த்தான். நிறைவில் மலர்ந்த முகத்துடன் விழியில் நீர்கசிய நின்றார். அவரின் பார்வை சென்ற திசையில் நோக்கியபோது இவன் மனமும் உற்சாகம் கொண்டு விம்மியது.

சிவலாங்குடியிலிருந்து ஒரு பத்துபேர்கள் வந்திருந்தார்கள். நடுவில் குமார் நின்றான். தோற்றம் மாறியபோதும் முகம் பெரிதாக மாறவில்லை. சுற்றியிருந்த மற்றவர்களையும் நினைவில் மீட்க முயற்சி செய்தான். தெரிந்த முகங்களாக இருந்தாலும் பெயர்களை சட்டென பொருத்த முடியவில்லை.

வேகமாக வணங்கியபடியே ஓடினான். எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தபின் குமாரின் கைகளைப் பற்றிக் கொண்டான். “ரொம்ப சந்தோசம் குமாரு. வரமாட்டீங்கன்னே நெனச்சிட்டேன். ஆனா வந்துட்டீங்க. எங்கப்பா எவ்ளோ சந்தோசமா இருக்காரு பாரேன். அவருதான் காலையிலேர்ந்தே வாசலையே பாத்துக்கிட்டிருந்தார்…’

“மழுக்கோவிலக் கட்டியிருக்கோம்ல. இன்னைக்கி மொதப் பூசை. தொடங்குறப்ப அங்க இருக்கனும்னு மொறை. அத ஆரம்பிச்சு விட்டுட்டு வேகமா வந்தோம். கொஞ்சம் தாமதமாயிருச்சு..” என்று கூறிவிட்டு மெதுவாக நடந்து வந்த அப்பாவை நோக்கி வேகமாகச் சென்று கைகளை குமார் பற்றிக் கொண்டான். ஒவ்வொருவரும் அப்பாவிடம் தங்களைப் பற்றிக் கூறுவதும் அப்பா அவர்களின் கைகளைப் பிடித்தபடியே பழைய சம்பவங்களை நினைவு கூறுவதுமாக நிகழ்ந்ததை வந்திருந்த அனைவரும் மனம் நெகிழப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மணமக்களை வாழ்த்தியபின் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குமாரின் அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்தது. அதைத் துண்டித்தபடியே இவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான். கிளம்ப ஆயத்தமானார்கள். அப்பாவின் முகம் அவர்கள் இன்னும் சற்றுநேரம் இருந்து செல்லலாமே என ஏங்குவதை ஸ்ரீனி உணர்ந்தான். ஆனால் அவர்களுக்கு இருக்கும் வேலையை கவனிக்க செல்லவேண்டுமே என்றும் தோன்றியது.

ஒரு வழியாக கிளம்பினார்கள். விடைபெறும்போது ஸ்ரீனியிடம் மெதுவாக “எப்பவும் தனித்தனியாதான் மொய் செய்யிறது வழக்கம். அது ஒனக்கே தெரியும். ஆனா இங்கே அப்படியில்லாம ஊரோட பொதுப் பணத்திலேர்ந்து மொய் செஞ்சிருக்கோம். அது ஊர்க்காரங்க எல்லோருடைய ஆசியாகவும் சமமா இருக்கனும்னு முடிவு பண்ணினோம். இது மாதிரி யாருக்கும் பண்ணினதில்ல. எங்க ஊரோட மொத வாத்தியாருக்காக இப்படிப் பண்றதுன்னு முடிவு பண்ணினோம்… இது அவருக்கான காணிக்கைனு கூட சொல்லலாம்” என்று அவன் கூறியபோது ஸ்ரீனியின் முகத்தில் மகிழ்விற்கு பதிலாக ஏதோ யோசிப்பதான பாவனை தோன்றியது. அதைக் கவனித்த குமார், “சாமிக்கண்ணுதான் இந்த யோசனையவே சொன்னவரு…” என்று கூறியதும் குமாரை அணைத்துக் கொண்டான். குமாரின் தோளில் ஸ்ரீனியின் இரு சொட்டு கண்ணீர் துளிகள் உதிர்ந்தன.

000

கா. சிவா

கா.சிவா ‘விரிசல்’ சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

5 Comments

  1. ஏதோ இருக்கு என படிக்கத் தூண்டும் நடை ,பூடகமாய் செல்லும் கதை நெகிழ்ச்சியான முடிவு .சாமிக்கண்ணுவிற்கும் பட்டாபிராமனுக்கும் இடையில் நடந்தது என்ன என்ற கேள்வியின் முடிவில் சிறுகதையின் பலம். நன்று. சிவா.

  2. “சாமிக்கண்ணு இந்த யோசனையவே சொன்னவரு” என்று குமார் கூறியவுடன் ஸ்ரீனியின் கண்களைப் போலவே என் கண்களிலும் இருக்கட்டும் கண்ணீர் உதிர்ந்தன. எழுத்தாளரின் வெற்றி. வாழ்த்துக்கள் சிவா.

  3. “சாமிக்கண்ணு இந்த யோசனையவே சொன்னவரு” என்று குமார் கூறியவுடன் ஸ்ரீனியின் கண்களைப் போலவே என் கண்களிலும் இருக்கட்டும் கண்ணீர் உதிர்ந்தன. எழுத்தாளரின் வெற்றி. வாழ்த்துக்கள் சிவா.
    இரு சுட்டுக் கண்ணீர்*)
    சொட்டு*

உரையாடலுக்கு

Your email address will not be published.