
சிறு சிறு மணிகளாகக் கோர்த்த பொற்சரம் போல சரக்கொன்றை மலர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. நின்று கொண்டிருந்த மருதன் அம்மலரின் மென்மையை உணர தன் வலது கையை நீட்டினான். அப்போது பின்புறமாக இவன் தலையைக் கோதி வேகமாகச் சென்ற காற்று இவன் தொடமுடியாதவாறு அம்மலர்களை மேல்நோக்கி தள்ளியது. கையை கீழே தளர்த்தியவன் மலர்கள் தன் இடத்திற்கு வந்தபின் மீண்டும் நீட்டினான். ஆனால் அப்போதும் தொடமுடியாமல் விரல்கள் வெறும் காற்றையே துலாவியது. கைகளை தாழ்த்திவிட்டு அம்மலர்களின் அழகில் திளைத்தான். எதிர் பக்கத்திலிருந்து வீசிய காற்றில் மரத்தின் கிளைகள் தாழ மலர்கள் இவன் தலையில் உரசியதும் தோன்றிய சிலிப்பில் விழிகளைத் திறந்தான்.
“என்ன மருதா… கனவுல எந்தக் கன்னிய தொரத்துற…” என்றவாறு சேந்தன் நின்றான். குடிசைக்கு வெளியே வானம் வெளிறத் தொடங்கியிருந்தது.
“இப்பக் கிளம்பினாத்தான் வெயிலேறுறதுக்குள்ள செட்டிப் பாளையம் போகமுடியும்… சட்டுனு எந்திரி” என்றான்.
செங்கற்களை அடுக்கி களிமண்ணால் பூசப்பட்ட சுவர்களுக்குமேல் பனைவோலை வேயப்பட்ட குடிசை. தரை களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தது. படுப்பதற்காக விரித்திருந்த அகலத் துணியை எடுத்து உதறி மடித்து மூலையில் இருந்த மரப்பெட்டியின் மீது வைத்துவிட்டு வெளியே வந்தான். இரு வரிசையாக அமைந்திருந்த மற்ற குடிசைகளில் இருந்து தண்ணீர்த் தொட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தவர்களோடு இவனும் சேர்ந்து சென்றான். இவனை நோக்கியவர்களிடம் மென் முறுவலைக் காட்டியபடி குளித்து விட்டு குடிசைக்கு வந்தான்.
சேந்தன் உடை மாற்றி தயாராக இருந்தான். “நீ ரொம்ப ஏங்கிக்கிட்டிருந்த நாள் இன்னைக்கி. சுறுசுறுப்பக் காணோமே..” என்று சேந்தன் கூறியதற்கு மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாகச் சொன்னான்.
அன்றொருநாள் ஆதவனார் ஒரு சிற்பியிடம் “எதிர்பாராத ஏதோவொரு ஒளியில கலையின் தரிசனம் கெடைக்கிறப்ப மனசெல்லாம் பரவசமா எங்கேயோ பறக்குற மாதிரி இருக்கும். அதான் கலையால கிடைக்கிற இன்பம். ஆனா படைக்கிறப்ப நிதானமா இருந்தாத்தான் அது பூரணமா கைகூடும். மனச குதியாட்டம் போடவிடாம கைக்குள்ள வச்சிருக்கிறது நல்ல கலைஞனா ஆகுறதுக்கு முதன்மையான தகுதி..” என்று கூறிக் கொண்டிருந்ததை கேட்டான். அந்தச் சொற்கள், மருதன் மனதைக் குதிக்கவிடாமல் வலைபோல் இறுக்கியிருத்தன.
இங்கு வந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டன. அப்பா இவன் பிறந்த ஓராண்டிற்குள்ளாகவே பாம்பு கடித்து இறந்துவிட்டார். வானம் பார்த்த வயல்களில் வேலை செய்து கிடைக்கும் தானியங்களில் அம்மா இவனை வளர்த்தார். அப்போது, மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் படுக்கை அமைப்பதும் சிலைகள் செதுக்குவதுமான வேலைகள் ஆரம்பித்தன. அவ்வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக ஊர் தலையாரி கூறியதும் அம்மா பனிரெண்டு வயதான இவனை அனுப்பி வைத்தார்.
ஆதனார்தான் இங்கு தலைமைச் சிற்பி. மருதன் இங்கு ஒன்றுமே தெரியாமல்தான் வந்தான். உளியையும் சுத்தியலையும் சரியாகப் பிடிப்பதுதான் முதல் பாடம். இரண்டிற்கும் ஒத்திசைவைக் கொண்டு வருவது இரண்டாவது. பணியின்போது நிதானமாக இருப்பது மூன்றாவது. இம்மூன்று பாடங்களையும் சில நாட்களில் கற்றுக் கொள்பவர்களை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். மருதன் சிறுவன் என்பதால் அவன் பிஞ்சு விரல்கள் சட்டென அந்த நுணுக்கத்தைக் உள்வாங்கிக் கொண்டு இயங்கின.
தலைமைச் சிற்பி ஆதனார் முதலில் மலையைச் சுற்றிப் பார்ப்பார். பாறைகளை தட்டிப் பார்த்து எந்தக் குகைக்குள் படுக்கை அமைக்கவேண்டும் எங்கே சிலைகள் செதுக்கவேண்டும் என்பதைக் குறிப்பார். அவருடன் செல்லும் மூன்று பேர் அந்தப் பணிகளை செய்வதற்கான ஆட்களை தேர்வு செய்து பணிகளைப் பற்றி கூறுவார்கள். எப்படிச் செதுக்கவேண்டும் என்பதற்கான வரைபடத்தை துணிகளில் வரைந்து விவரிப்பார்கள்.
மருதனை முதலில் குகைகள் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தினார்கள். இது நுணுக்கமான பணி இல்லையென்றாலும் நிதானமாக செய்ய வேண்டியிருந்தது. சுண்ணாம்புக் கல்லால் கட்டம் கட்டமாக கோடுகளை வரைந்திருப்பார்கள். முதலில் கோட்டின் மீது இரண்டு விரல்கடை செதுக்கியபின் கட்டத்திற்குள் உள்ளதை அகற்றவேண்டும்.
கற்றுக் கொடுத்தபோது குறைவான நேரமே சுத்தியலையும் உளியையும் பயன்படுத்தியிருந்தான். பணிக்கென சென்று முழுநாள் வேலை பார்த்ததும் அன்று மாலை கைகளும் விரல்களும் தனித்தனியாக கழன்று விடுவதைப்போல சொடுக்கியது. உடனிருந்த சேந்தன் “குறைவாக செய்” என்று கூறியதை கேளாமல் முதல் நாளே நல்ல பெயர் எடுக்கவேண்டும் என எண்ணியது தவறாகப் போய்விட்டது. கைகளுக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்தபோது வலி சற்று மட்டுப்படுவதாக தோன்றினாலும் இரவு காய்ச்சல் வந்துவிட்டது.
மறுநாள் இவன் ஓய்வெடுக்கிறேன் என்றபோதும் சேந்தன் விடவில்லை. சிறிது நேரமாவது வேலை பார்த்தால்தான் உடல் பழகும் என்று அழைத்துச் சென்றான். வலியினூடாக மதிய உணவு நேரம்வரை உடைத்தபின் அருகிலிருந்த வேப்ப மரத்தினடியில் படுத்துவிட்டான். அன்று இரவு அவ்வளவு வலி தெரியவில்லை. நான்கு நாட்களில் உடல் பழகிவிட்டது.
சில மாதங்களுக்குப் பிறகு படுக்கை உருவாக்குவதற்கும் அதன்பின் தரையை சமப்படுத்தி மென்மையாக்கும் பணிக்கும் இவனை மாற்றினார்கள். அது இவனது பணியின் திறத்தால்தான் என சேந்தன் கூறியதும் இவன் மகிழ்வுடன் இன்னும் நுணுக்கமாக உளியை கையாளக் கற்றுக் கொண்டேயிருந்தான். இடத்திற்கு தகுந்த மாதிரி உளிகளில் கூர்மையானதையோ சிறியதையோ பெரியதையோ தேர்ந்தெடுப்பதே முதன்மையான விசயம். அடுத்தது அதற்கேற்ற சுத்தியலை தேர்வது. பாறையின் தன்மையையும் செய்யும் பணியின் தன்மையையும் உணர்ந்து அடிப்பதன் வேகத்தை நிர்ணயக்க வேண்டும். இவற்றை ஆசிரியர்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. பணிகளின் போதே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் பதிவாகி அந்த முடிவுகள் எட்டப்படவேண்டும். பணிகளின் படி வரிசையை இதற்காகவே அமைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். சிலை வடிக்க தன்னை ஏன் அனுமதிப்பதில்லை என மருகிக் கொண்டிருந்தவனிடம் “அவசரப்படாதே அவர்களுக்குத் தெரியும்” என சேந்தன் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
நேற்று பணி முடித்தபோது பணிகளை ஒதுக்குபவர் மருதனிடம் வந்து “நாளையிலிருந்து மேல்பக்கம் எட்டாவது சிலையை செதுக்குவது உன் பணி” என்று கூறி சிலையின் மாதிரி வரையப்பட்ட துணியைக் கொடுத்துவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்றார். ஒருகணம் திகைத்தவன் சேந்தனின் முக மலர்வைக் கண்டு தன் முகம் மலர்ந்தான். சிலை செதுக்குபவர் என்றால் தனி மரியாதைதான். மற்ற பணிகளைச் செய்பவர்களை சற்று இளக்காரமாகவே நோக்குவார்கள். பல வயதானவர்கள் இன்னும் குகை உடைப்பதையே செய்து கொண்டிருக்கிறார்கள். தன்னையும் கடைசிவரை அப்படியே வைத்திருப்பார்களோ என சில நேரங்களில் புலம்பியிருக்கிறான். அப்போதெல்லாம் சேந்தன்தான் தேற்றுவான். இப்போதும் சேந்தன் தரை வேலையே பார்த்துக் கொண்டிருக்கும்போது இவனுக்கு சிலை செதுக்கும் பணியை அளித்திருக்கிறார்கள். ஆனாலும், சேந்தன் முகத்தில் துளியும் வருத்தமில்லை. மருதனின் திறன் மீது அவனுக்கு மரியாதை உண்டு.
நான்கு மைல் தூரம் நடந்து செட்டிபாளையத்தை அடைந்தபோது சூரியன் கால்வாசி தூரம் ஏறிவிட்டது. தூரத்திலிருந்து பார்த்தபோது சூரியவொளி பட்டு மிளிர்ந்த பழுப்பான மலை பெரும் பனித்துளி போல காட்சியளித்தது. அருகில் வரவர அதன் உயரம் கூடிக்கொண்டே செல்வதை எப்போதும்போல வியந்தபடியே பார்த்தான். பணிக்கு வந்தவர்களுடன் கரடுமுரடான மலையில் ஏறுவதற்கு ஏதுவாக இருந்த சிறிய பாதையில் இவனும் ஏறினான்.
மற்றவர்கள் குகையினுள் அவரவர் பணிக்குச் செல்ல மருதன் இன்னும் மேலே ஏறி சுற்றி வந்தான். கீழே இருந்து பார்த்தால் எளிதாக தெரிந்துவிடாத பகுதி. இரண்டாள் உயரத்திற்கு மேல் சுண்ணாம்புக்கல்லால் வரிசையாக எட்டு கட்டங்கள் போடப்பட்டிருந்தன. ஏறி நின்று பணி செய்வதற்கு பனஞ்சட்டங்களைக் கொண்டு சாரம் கட்டியிருந்தார்கள். செதுக்குபவர்கள் யாரும் வரவில்லை. இடுப்பில் செருகியிருந்த துணியை விரித்து செதுக்க வேண்டிய சிற்பத்தின் வடிவத்தைப் கூர்ந்து பார்த்தான். அப்போது ஒரு பார்வை தன் முதுகில் ஊர்வதை உணர்ந்தான்.
000
குணவதி விடிகாலையிலேயே எழுந்துவிட்டார். காலைக்கும் சேர்த்தே இரவு சோறு வடித்திருந்தார். உண்டதுபோக எஞ்சிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். எப்போதும் சாப்பிடும் மண் ஏனத்தில் கஞ்சியும் தண்ணியுமாக ஊற்றினார். பீங்கான் ஜாடியில் ஊறிக்கொண்டிருந்த மாங்காய் துண்டில் ஒன்றை எடுத்து கஞ்சியில் போட்டு பிசைந்தார். மா ஊறுகாயின் வாசனை இல்லாத பசியைத் தூண்டியது. ஏனத்தை அப்படியே தூக்கி வாய்படாமல் குடித்து முடித்தபோது ஏப்பம் வந்தது. மாலைவரை வயிறு கம்மென்று இருக்கும்.
ஓலைக் குடிசையின் கதவை மூடி பனங்கயிறினால் ஒரு முடிச்சுப் போட்டுவிட்டு கதவின் அருகில் நிறுத்தியிருந்த திடமான கம்பை எடுத்து ஊன்றியபடி கிளம்பினார்.
இந்தக் கம்பு ஊன்றும் அவசியம் ஏற்பட்டது இரண்டு ஆண்டுகளாகத்தான். குணவதியின் தனித்துவமே அவரது உயரம்தான். இளம் வயதில் எந்தக் கூட்டத்திலும் தனித்துத் தெரிவார். அந்தத் தனித்துவத்தினாலேயே அவரின் ஊர் பண்ணையார் வீட்டுக்கு மருமகளானார்.
கணவர் வேலபூபதி இவரை நல்லவிதமாகவே வைத்திருந்தார். வீட்டிற்கு வெளியே அவரது செயல்கள் பலரின் ஏச்சுக்கு ஆட்பட்டபோதும் வீட்டிற்குள் அமைதியானவராகவே இருந்தார். கந்தன் இவர்களுக்கு ஒரே மகன். நாள் முழுக்க வெளியே சுற்றிவிட்டு மாலையில் வீட்டிற்குள் வந்ததும் கந்தனைத்தான் அழைப்பார். வந்ததும் அவனை தூக்கிச் சுழற்றி கொஞ்சும்போது இவ்வளவு ஆசையுள்ளவர் சீக்கிரமே வருவதற்கென்ன என குணவதிக்குத் தோன்றும்.
ஐந்து வயதுவரை அப்பா கொஞ்சும்போது மகிழ்ந்திருந்த கந்தன் அதன் பிறகு அலுப்புக் கொண்டான். அவன் நண்பர்கள் பார்த்தால் கேலி செய்வார்கள் என்பதற்காகத்தான் என குணவதி எண்ணிக் கொண்டார். ஆனால் தான் இன்னும் சின்னப்பயல் இல்லை என்ற உணர்வினால்தான் அவ்வாறு நடந்து கொண்டான் என்பது பிறகுதான் தெரிந்தது.
பத்து வயதிருக்கும்போது கந்தன் வெளியே விளையாடச் சென்றால் வெளிச்சம் இருக்கும்போதே வந்துவிடுவான். அன்று நன்றாக இருட்டிய பிறகும் வராததால் குணவதி ஆட்களை விட்டு தேடச் சொன்னார். அவனுடன் விளையாடும் பிள்ளைகளின் வீட்டிற்குச் சென்று கேட்டபோது வெகுநேரத்திற்கு முன்பே அவன் சென்றதாகக் கூறவும் இவர் உள்ளத்துடிப்பு அதிகரித்து கைகால்களில் லேசாக நடுக்கம் தோன்றியது. அந்த ஊரில் சிறுவர்களுக்கு நேர்ந்த பலவித அசம்பாவித சம்பவங்கள் மனதிற்குள் அடுத்தடுத்து எழுந்துகொண்டே இருந்தது. தளர்ந்த நடையுடன் வீட்டிற்கு சென்று திண்ணையில் விழுவதுபோல அமர்ந்தார். என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. மனதிற்குள் ஓடிய காட்சிகளை நிறுத்தவும் முடியவில்லை. தலையை சுவரில் மோதவேண்டுமென ஒரு ஆவேசம் தோன்றிய கணத்தில் கொல்லையிலிருந்து “அம்மா…” என்ற கூப்பாடு கேட்டது.
மாடுகளுக்கு வைக்கோல் பறிக்கச் சென்ற சண்டியன் . “தம்பி இங்கதான் இருக்காரும்மா…” என்று தொடர்ந்து கூறவும் வேகமாக எழுந்து ஓடினார். தன்னால் இவ்வளவு வேகமாக ஓடமுடியுமா என்ற வியப்பும் உள்ளே தோன்றியது. தரைவரை வேயப்பட்டிருந்த வைக்கோல் போர்மேல் சாய்ந்து தரையில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தான் கந்தன். கண்கள் கலங்கி சிவந்திருந்ததை சண்டியன் கையிலிருந்த விளக்கின் ஒளியில் கண்டார்.
அவனை அணைத்துக்கொண்டு அமர்ந்து அவன் முகத்தை தன் மார்பின்மீது சாய்த்துக் கொண்டார். “கந்தா கந்தா…” என்று கன்னத்தில் தட்டினார்.
“என்னாச்சுடா… ஏன் இங்க வந்து ஒக்காந்திருக்க.. சொல்லுடா…” என உலுக்கினார். கண்களிலிருந்து சொட்டிய நீர் அவன் தலையிலும் கன்னங்களிலும் பட்டு வழிந்தது.
அம்மாவின் கண்ணீர் தன்மேல் விழுந்ததை உணர்ந்ததும் அவனும் உடல் குலுங்க அழுதான். இவருக்கு பதட்டம் அதிகரித்தது. “என்னதான்டா நடந்துச்சு… சொல்லிட்டு அழேன்…”
“நானும்… நானும் …” அவன் வாய் திணறியது.
“நீயும் என்னடா…”
“நானும் அப்பா மாதிரித்தானாம்மா…”
“யாரு சொன்னாங்க..”
“எல்லோரும்தான் சொல்றாங்க.. அது உண்மையாம்மா.”
“யாரும் இன்னொருத்தர் மாதிரி பொறக்கிறதில்லை. ஆனா அவரு மாதிரி வரனும்னு நெனைச்சா வரலாம்..”
“நான் அப்பா மாதிரி வரமாட்டேன். நான் அவரமாதிரிக் கிடையாது..”
“அதச் சும்மா சொல்லக் கூடாது. செஞ்சு காட்டனும். அவரு மாதிரி இல்லைன்னா நீ எப்படிங்கிறத உன் நடத்தையால நீதான் நிரூபிக்கனும்..” என்று கூறியபோதே தனக்கு எப்படி இப்படியெல்லாம் பேச வருகிறது என்ற ஆச்சர்யமும் குணவதியின் உள்ளுக்குள் தோன்றியது.
“நான் வேற மாதிரின்னு காட்டுவேன்… காட்டுவேன் பாருங்க..” என்று சபதம் ஏற்பதுபோல தனக்குத்தானே சத்தமாகக் சொல்லிக் கொண்டான்.
அதன் பிறகு அப்பாவிற்கும் பிள்ளைக்கும் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லை. முதல் இரண்டு நாட்கள் கந்தனை அழைத்தபோது நிதானமாக நடந்துவந்து “என்ன விசயம்… எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்று கேட்பதான பாவனையில் அவன் வந்து நின்ற தோரனையே வேலபூபதிக்கு எல்லாவற்றையும் உணர்த்திவிட்டது. அதன் பிறகு அவனிடம் சொல்வதெல்லாம் குணவதி மூலமாகத்தான். பையனின் மாற்றம் அவருக்குள் ஏதோவொன்றை உடையச் செய்ததை குணவதியால் உணரமுடிந்தது. வீட்டிற்குள் மனம் புழுங்கி இருந்தாலும் வெளியே அவரது கம்பீரம் மாறவில்லை. அவரால் தன் செயல்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
கந்தன் நடவடிக்கைகள் முழுவதுமாக மாறிவிட்டன. காலையில் எழுந்து சாப்பிட்டுவிட்டுச் செல்பவன், வீட்டிற்கு இரவில்தான் வந்தான். எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு படுத்து விடுவான். இறுக்கமாக முகத்தை வைத்திருப்பவனிடம் எதைக் கேட்டாலும் பதிலை வாங்கமுடியாததால் குணவதியும் அப்படியே விட்டுவிட்டார். தீய பழக்கங்கள் எதற்குள்ளும் விழவில்லை என்பது மட்டுமே ஆறுதல்.
கந்தனுக்கு பதினைந்து வயதானபோது ஒருநாள் குணவதியின் அருகில் அமர்ந்தான்.
“அம்மா நான் துறவியாகப் போறேம்மா…”
அவன் சொன்ன வார்த்தைகள் சுட்டும்பொருள் சரிதானா, அல்லது தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்கிறோமா என ஒரு கணம் திடுக்கிட்டு குழம்பினார்.
“டேய்… என்ன கேட்ட..” என சத்தமாகக் கேட்டார்.
“உன் காதுல சரியாத்தான் கேட்டுச்சு. நான் துறவியாகப் போறேன்..”
சட்டென கன்னத்தில் ஓங்கி அறைந்தார். “என்னடா பேச்சு இது. அர்த்தம் தெரிஞ்சுதான் பேசறியா. சும்மா வெளையாட்டுக்குக் கூட இப்படிப் பேசாத. இன்னொரு கன்னமும் பழுத்திரும் சொல்லிட்டேன்..” என ஆவேசமாக கத்தினார். அவன் எந்த உணர்வையும் காட்டாது இறுக்கமாக அமர்ந்திருந்தான். அந்த இறுக்கத்தைக் கண்டதும் உடல் நடுங்கியது. தொண்டை வறண்டுவிட்டது. அவன் அனுமதி கேட்கவில்லை தகவலைத் தெரிவிக்கிறான் என்பதை உணர்ந்து தளர்ந்தார். கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் கால்களின் மேல் சிந்தியது. அவனைத் தடுப்பதற்கான எந்த உபாயமும் இல்லாத கையறுநிலையில் விக்கித்து திகைத்தார். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கு எந்த முன் அனுபவமும் இல்லை. வெறுமனே அவனைப் பார்த்தபடி இருந்தார்.
“எனக்காக சேர்ப்பதாகவே சொல்லி அப்பா பலவிதமான வேலைகளையும் செய்கிறார். அவர் சேர்த்த எதையும் நான் ஏற்காமல் உதறிவிட்டுச் செல்கிறேன்..” என்று இதுவரை கேட்டிராத குரலில் கூறியபடி எழுந்தான்.
“அப்பாக்கிட்ட நான் சொல்லி மாத்தப் பாக்குறேன்டா… இதுக்காக போகாதேடா..”
“மொதல்ல அப்பாவுக்கு வலிக்கிற மாதிரி ஏதாவது செய்யனும்னுதான் சமணர்கள் பக்கம் போனேன். அவங்க சொன்னதையெல்லாம் கேட்டு உணர்ந்தப்பறம் அப்பாவெல்லாம் ஒரு பொருட்டே இல்லம்மா. என்னப் பத்தி கவலப்பட்டு ஒடம்பக் கெடுத்துக்காதம்மா…” என்று கூறிவிட்டு குணவதியின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பாதங்களை கைகளால் தொட்டு வணங்கினான். எழுந்து திரும்பிப் பாராமல் வெளியேறினான்.
இரவு வந்த வேலபூபதியிடம் மகனைப் பற்றி சொல்லத் தொடங்கியபோதே “ம்ம்…” என்று அவரிடமிருந்து முனகல் வெளிப்பட்டது. அவ்வொலியிலேயே அவர் இந்த விசயத்தை அறிந்திருக்கிறார் என குணவதி உணர்ந்தார். அதன் பிறகு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பதினைந்து நாட்கள் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நேரத்திற்கு ஒழுங்காக உண்ணாமல் எப்போதாவது சிறிது மட்டுமே கவனமின்றி உண்டார். அவர் உள்ளம் பிரித்து எடுக்கமுடியாதவாறு ஏதோவொரு வளைமுள்ளில் சிக்கிக் கொண்டது போலவும் அவ்வப்போது முயற்சித்து மீட்க முடியாமல் தளர்வது போலவும் தோன்றினார்.
வெளியாட்கள் யாரையுமே பார்க்காமல் இருட்டுக்குள்ளேயே இருந்தவர் பதினாறாவது நாளில் இறந்தார்.
குணவதி அந்த மலைக்கு அருகில் வந்தபோது வெயில் லேசாக உயரத் தொடங்கியிருந்தது. நேற்று ஆதனார் காட்டிய இடத்தை நோக்கி மெதுவாக நடந்தார். கம்பை ஊன்றியபடி மலையில் ஏறுவது சற்று கடினமாக இருந்தது. கம்பை ஊன்றும் இடத்தில் கிடக்கும் சிறுகற்கள் நகர்ந்து சில சமயங்களில் தடுமாற வைத்தன. அதனாலேயே ஒவ்வொரு முறை ஊன்றும்போதும் முழுக்கவனம் கொடுக்க வேண்டியிருந்தது.
சிறு ஏற்றத்திற்குபின் இறங்கி வளைந்த பாதையில் நடந்ததும் சிற்பங்கள் அமைக்கும் இடம் கண்ணில் பட்டது. சுண்ணாம்புக் கல்லால் குறிக்கப்பட்டிருந்த எட்டாவது கட்டத்தை உற்றுப் பார்த்தார். அதில் செதுக்கப்படவுள்ள சிற்பம் துலக்கமாக மனதிற்குள் தோன்றியது. அந்த முகம் கந்தனின் சாயலில் இருந்தது. உடலில் ஒரு சிலிர்ப்பு எழ சற்று பின்னால் நடந்து நிழல் கிடந்த இடத்தில் அமர்ந்தார். சற்று நேரத்திற்கு பிறகு நேற்று ஆதனார் சுட்டிக் காட்டிய இளைஞன் ஆர்வம் மின்ன நிதானமாக நடந்து வந்ததைக் கண்டார்.
000
ஆதனார் எப்போதும்போல அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்ததும் ஊழ்கத்தில் அமர்ந்தார். சமண மதத்தினை ஏற்றுக் கொண்டதற்கு முதன்மையான காரணம் தியானத்தின் மீதான ஈர்ப்பே. இவரின் பதினைந்து வயதில், ஒருநாள் இவரும் தந்தையும் ஊருக்கு அருகிலிருந்த மலையில் ஏறினார்கள். அப்பா ஒரு சிற்பி. ஊரில் ஐயனார் கோவில் அமைப்பதற்காக சிலை செய்யக் கோரியிருந்தார்கள். அதற்காக வாகான பாறை கிடக்கிறதா எனத் தேடி மலைமேல் ஏறினார்கள். சரியான அளவில் இருந்தால் ஊரில் சொல்லி அப்படியே நகர்த்தி வரச்சொல்லலாம். பெரிய பாறையாக இருந்தால் தேவையான அளவிற்கு உடைத்து வைத்துவிட்டு வந்து கூறவேண்டும்.
இவர்கள் தேடிச் சென்ற மாதிரி பாறை கிடைக்கவில்லை. வெயில் அதிகமாக இருந்ததால் மொட்டைமலை சூடேறி கொதித்தது. காலுக்கு பாதணி இருந்தபோதும் வெக்கையில் உடல் சோர்ந்தது. தேடியது கிடைத்திருந்தால் விரைவில் கீழே இறங்கியிருக்கலாம். கிடைக்காததால் தேடியதில் வெயிலேறியதை கவனிக்கவில்லை.
மலை எதிரொளிக்கும் வெயிலில் அதிகப் பழக்கமில்லாததால் ஆதன் படும் சிரமத்தைக்கண்டு அப்பாவிற்கு தன் பேரில் கோபம் வந்தது. மரமே இல்லாத மலையில் நிழலுக்கு வழியில்லை. ஏதாவது பொந்துபோன்ற இடம் இருக்குமா எனத் தேடினார். சிறு கற்களால் ஆன சிறு மடு தெரிந்தது. அதற்கு அருகில் பாறை பிளவு பட்டிருப்பது தூரத்திலேயே தெரிந்தது. பலமுறை வந்திருந்தபோதும் இதுவரை இவர்கள் அதைக் கண்டதில்லை. வேகமாக அங்கு சென்றார்கள். ஐந்தடி உயரத்திற்கு சிறு வழி தெரிந்தது. அப்பாதான் உள்ளே தலையைவிட்டுப் பார்த்தார். புழங்குமளவிற்கு உள்ளே இடம் இருந்தது. கையிலிருந்த கம்பால் உள்புறமாக மூன்று தடவை தட்டியபிறகு உள்ளே நுழைந்தபின் ஆதனையும் உள்ளே அழைத்தார்.
வெயிலிலிருந்து உள்ளே சென்றதால் சில கணங்கள் இருளாக தெரிந்தபின் காட்சி தெளிந்தது. உள்ளே ஒருவர் அமர்ந்திருந்தார். ஆதன் “ஆஆ..” என்று திகைக்கவும் அவன் பார்த்த திசையில் அப்பாவும் பார்த்தார்.
“பயப்படாதே ஆதா.. அவரும் நம்மைப்போலவே நிழலுக்கு வந்திருக்கிறார்” என்று கூறிவிட்டு தரையில் அமர்ந்து ஆதனையும் அமர வைத்தார்.
ஆதன் மொட்டைத் தலையுடன் இடையில் சிறு துண்டை மட்டும் உடுத்தி கண் மூடி அமர்ந்திருந்த அந்த மனிதரையே பார்த்தான்.
“அவரு என்னப்பா பண்றாரு… ஏம்பா மொட்டை அடிச்சிருக்காரு… ஏம்பா துண்டு மட்டும் கட்டியிருக்காரு…” என அடுத்தடுத்த கேள்விகளை அப்பாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான். அப்பா அமைதியாக இரு என உதட்டின் மீது விரலை வைத்து சைகை செய்தார். இவனும் துடிக்கும் உள்ளத்தை அடக்கியபடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்களை மூடியிருந்தாலும் இவர்கள் வந்ததை அறிந்துவிட்டார் என தோன்றியது. அவர் முகம் காலை நேரத்துக் குளத்து நீரைப்போல அமைதியாகவும் ஒரு குளிர்த்தன்மையுடனும் இருந்தது. சிறிது நேரம் கழித்து கண் விழித்து இவர்களை நோக்கி புன்னகைத்தார்.
ஆதன் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். “ரொம்ப வெயிலா…” என்று மிக இயல்பாக பேச்சைத் தொடங்கினார்.
“ஆமா, சிலை செய்றதுக்கு பாறை தேடி வந்தோம். இன்னைக்கி என்னவோ ரொம்ப வெயிலு. பையன்னால தாங்க முடியாதுன்னு தோனிச்சு..”
“ஓ நீங்க சிற்பியா… பிள்ளையும் கத்துக்கிறானா..”
“ஆமா.. எல்லா சிலையும் செய்வேன். ஒங்க சாமிங்க சிலையும்கூட செஞ்சிருக்கேன்..”
“அதானா.. என்னய சிநேகமா பாக்கறப்பவே தெரிஞ்சது… நானும் எங்களுக்கு வசதியான இடம் தேடித்தான் வந்தேன். இந்த எடம் வசதியா இருக்கும்னு தோனுது. இங்க இருக்குற பாறையும் விரிசல் விடாததாத்தான் தெரியுது. இத்த குகையையே பெரிசு படுத்திட்டு சில படுக்கைகளும் செதுக்கலாம்னு யோசிச்சேன்…”
அப்பா அந்த குகையை விரிவு படுத்துவதிலும் படுக்கைகள் அமைத்து குகையின் வெளிப்பக்கம் ஐந்து தீர்த்தங்கரர்களின் உருவத்தை செதுக்குவதிலும் ஈடுபட்டார். ஆதன் அப்பாவிடம் ஏற்கனவே சிற்பங்கள் செதுக்குவதின் அடிப்படைகளை கற்றிருந்தாலும் இந்த சமணமலையை உருவாக்கியபோது நுணுக்கமாகவும் முழுமையாகவும் கற்றுக் கொண்டான்.
அந்தப் பணிகளின்போது நாகநந்தரை தினமும் சந்திக்க வேண்டியிருந்தது. “வாழ்க்கையின் துயரை வெல்வதற்கு அதன் மூலத்தை புரிந்து கொண்டாலே போதும்”. “எது ஒன்றை அறிந்து கொள்கிறோமோ அதன் மீதான அச்சம் மறைந்து விடுகிறது…” என்பது போன்ற எளிய கருத்துக்களை முதலில் கூறி திகைப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தினார். அப்போது அவர் சொல்வதெல்லாமே மெய்தான் என்று தோன்றியது. எத்தனை தூரம் சிந்தித்து இந்த கருத்துக்களை வந்தடைந்திருப்பார்கள், அவற்றைத் தான் அறிவது தவம் செய்யாமலேயே வரத்தைப் பெறுவது போன்றது என்றும் தோன்றியது.
பிறகொரு முழுநிலவு நாள். பள்ளிக்கு எதிரே இருந்த சிறு பாறை மீது ஆதனும் நாகநந்தரும் அமர்ந்திருந்தார்கள். நிலவின் ஒளி முழு மலையையுமே பளிங்காக மிளிர வைத்திருந்தது. ஆதனின் மனம் அக்காட்சியில் லயித்துப் பொங்கி பரவசத்துடன் விதை நெல்லுக்கு விழைவு கொண்ட நன்நிலம்போல திரண்டிருந்தது. நாகநத்தர் இயல்பாக வர்த்தமானரைப் பற்றி சொல்லத் தொடங்கினார். வர்த்தமானரின் பிறப்பு, அவரது வாழ்க்கை, அவரது தேடல், அவர் உணர்ந்து தெளிந்து அறிந்தது. வாழ்நாள் முழுக்க பாரதமெங்கும் நடந்தே மக்களை கண்டு தான் உணர்ந்ததை அவர்களுக்கு உரைத்தது என எல்லாவற்றையும். ஒரு சொல்கூட சிந்தாமல் அனைத்தும் ஆதனின் மனதில் விழுந்தது. துளிர்விட்டு முளைத்தது. கிளைத்து வளர்ந்தது.
ஆதன் அடுத்த முழுநிலவு நாளில் ஆதனார் ஆனார். வருத்தமுற்ற அம்மாவிற்கு அப்பாவே புரியவைத்து தேற்றினார்.
மதுரையை சுற்றியுள்ள பத்து மலைகளில் சமண பள்ளிகளை அமைப்பதிலும் சிற்பங்கள் செதுக்கியதிலும் இவரது பங்கு முதன்மையானதாக அமைந்தது. புதியவர்களை சிற்பக் கலைக்குள் கொண்டு வருவதிலும் முனைப்புக் காட்டினார். தங்குவதற்கும் உணவுக்கும் உறுதி கொடுத்ததால் ஏராளமானவர்கள் இவரிடம் வந்தார்கள். அவர்களில் யாருக்கு எந்தப் பணியை அளிப்பது என்ற முடிவை இவர் எடுப்பார். மற்றவை எல்லாம் சரியாக நடந்து வருகிறது.
குணவதி இந்நேரம் வந்திருப்பார் என்ற எண்ணம் தோன்றியது. குணவதி முதலில் சந்தித்த தருணம் நோக்கி மனம் இயல்பாகச் சென்றது. பரங்குன்றத்தில் சமணப் பள்ளியை எப்படி அமைப்பது என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் வந்தாள். பின்னப்படாத கூந்தலும் பொலிவிழந்து வாடிய முகமுமாக அவள் இருந்தாள். “சாமீ ..” என்று நாகநந்தரின் காலில் விழுந்தாள்.
அவர் சற்று பின்னால் நகர்ந்து விரல் தொடுகையை தவிர்த்துவிட்டு “எழுந்திருமா… பையன் பேரென்ன…” எனக் கேட்டார்.
வியப்புடன் எழுந்த அந்தப் பெண் “கந்தன் சாமி. எம் பையன் பேரு”
“கந்தன்ங்கிற பேர அச்சணந்தின்னு மாத்திக்கிட்டார். மக்கள் சேவையில ஈடுபடத் தொடங்கிட்டார். நீங்க அவரப் பத்தி கவலைப்படாம உங்க வாழ்க்கையப் பாருங்க”
“அவனில்லாம எனக்கு தனியா எந்த வாழ்க்கையுமில்ல சாமி. என் பேரு குணவதி. இந்தப் பேரையும் மாத்திடுங்க. நானும் நீங்க சொல்ற சேவையப் பண்றேன்..” என்றாள்.
நாகநந்தர் முகமும் வியப்படைந்தது. “உங்க பையன் எங்களோட கொள்கைகள் மேல நம்பிக்கை வச்சு வந்தார்மா. உங்க புள்ள வந்திட்டார்னு உங்களயும் சேத்துக்க முடியாதுமா. இதுல சேர்றதுக்கு பேர மாத்துனா மட்டும் பத்தாதுமா”
“வேறென்ன பண்ணணும்னு சொல்லுங்க செய்யிறேன். எம் பையன் செய்யிறத நான் செய்ய மாட்டேனா.. எனக்கு எம்பையன் கூட இருக்கனும். அதுக்கு நீங்க என்ன சொல்றீங்களோ அதச் செய்யிறேன்..”
“ஒங்க கணவர் எங்கம்மா..”
“ஒத்த வாரிசு இப்படிப் போயிட்டானே.. பரம்பரை அத்துப் போச்சேன்னு மனசொடிஞ்சு அதே துயரத்தில போயிட்டாரு சாமி..”
“சாமியாராப் போயிட்டாரா..”
“இல்லை சாமி… இந்த உலகத்த விட்டே போயிட்டாரு..”
“ஓஓ அப்ப ஒங்க வீட்டுக்காரரோட கவல பரம்பரை அத்துப் போச்சு. அவர் பேரு காலத்தில மறைஞ்சிடுங்கிறதுதானே”
“ஆமா சாமி… அதுக்காகத்தான் மத்தவங்க பல்லுல பட்டாலும் பரவாயில்லையின்னு பலவிதத்திலேயும் சொத்து சேத்தாரு. அத்தனையையும் விட்டுட்டு ரெண்டு பேரும் வெவ்வேறு திசையில போயிட்டாங்க. இப்ப நாங்கெடந்து அல்லாடறேன்..”
“இப்ப நாஞ்சொல்ற மாதிரி செஞ்சா ஒன்புருசன் ஆத்மாவும் சாந்தியடையும் ஒன் புள்ளை பேரும் காலத்துக்கும் அழியாம நீடிக்கும்…”
ஒருகணத்தில் முகம் பொலிவுற.”சொல்லுங்க சாமி செய்யிறேன்..” என்றாள்.
“நாங்க அமைக்கிற பள்ளியில தீர்த்தங்கர்களோட சிலைய செதுக்குறோம். அதுக்குக் கீழே அத செதுக்கிறதுக்கு உதவி பண்ணவுங்க பேர பொறிக்கிறோம். நீங்க நிதி கொடுத்தீங்கன்னா ஒங்க பையன் செஞ்சதா அவரு பேர கல்லுல பொறிக்கலாம். நீங்க விரும்பற மாதிரி அவரு பேரு எப்பவும் இருக்கும்”
உடனேயே ஒப்புக் கொண்டார். நாகநந்தர் ஆதனாரைக் காட்டி “இவர்தான் சிற்பி. இவர்கிட்ட ஒரு சிலையை செதுக்குறதுக்கு ஆகுற செலவக் கொடுத்திடுங்க. செலைய செதுக்கின பிறகு பக்கத்துல உங்க பையன் பேர பொறிச்சிடுவார்” என அனுப்பி வைத்தார்.
குணவதி சென்ற பிறகு நாகநந்தியிடம் “குருவே அந்தப் பணம் பாவப்பட்டதுன்னுதான் அச்சணந்தி அதை ஒதறிட்டு வந்தாரு. அந்தப் பணத்தை வச்சு அவரு பேர்ல சிலை செதுக்கி வைக்கிறது நியாயமா..” எனக் கேட்டார்.
“பணத்தை சேர்த்தவன் இறந்து போயிட்டான். அவனோட பாவம் இந்தப் பணத்துல படிஞ்சிருக்குன்னு நெனைக்கிறியா..”
“நாலு பேரோட வயித்தெரிச்சல்ல வந்த பணம். அந்தப்பழி அதில இருக்குமே..”
“இப்போ சிலை செய்யிறதுக்கு அதப் பயன்படுத்தினா அந்தப் பழி யாருமேல படியும்னு நெனைக்கிற”
ஆதனாரால் சட்டென பதிலளிக்க முடியவில்லை.
“அந்தப் பழியினாலதான் அவர் நிம்மதி போற மாதிரி பையன் துறவியாகிட்டான். அவரும் அலமந்துபோய் இறந்துட்டார். இப்ப அந்தப் பணத்துல நாம செய்யிற காரியத்தினால அவங்க மதம் சொல்ற மாதிரி அவரு போன எடத்திலயாவது நிம்மதியா இருப்பாரு. அந்தப் பணம் கெட்ட செயல்களுக்கு பயன் படாமலும் தடுக்குறோம்…”
“என்னாச்சு. இன்னும் சமாதானம் ஆகமாட்டேங்குதா..”
ஆதன் நிறைவடையாத மனதுடன் பதில் சொல்லாமல் நின்றார்.
“பழிங்கிறது மனிதனோட மனசுலேயும் சிந்தனையிலேயும்தான் படியுமே தவிர பணத்து மேலேயோ சொத்துங்க மேலேயோ இல்லை. பாவத்தை கங்கையில கரைக்கிறதுன்னா உடம்புல இருக்கிற அழுக்கையில்லை. மனசுல இருக்குற பழிங்கிற அழுக்கைத்தான். சிலரோடது தண்ணியில கரையும், சிலரோடது அவங்க ஒடம்போட தீயிலதான்..”
ஆதனார் குருவை நோக்கி கைதொழுதார்.
குணவதி மகனை எதேச்சையாக காணும்போது மனம் உருகி அப்படியே நின்று விடுவார். அச்சணந்தி மனம் தடுமாறாமல் கடந்து செல்வார். ஆனாலும் இக்கட்டை தவிர்க்கும் விதமாக நாகநந்தி அச்சணந்தியை அடுத்த பள்ளிக்கு மாற்றிவிடுவார்.
பல நாட்கள் மகன் கண்ணில் பாடாதபோது உசாவத் தொடங்குவார். யார் மூலமாவது மகன் இருக்கும் பள்ளியை அறிந்ததும் இதன் அருகேயுள்ள ஊரில் குடியிருக்கத் தொடங்குவார். இப்படி மகன் இருந்த ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிலை அமைக்க கணவர் விட்டுச் சென்ற சொத்துகளை விற்று நிதியளித்தார்.
குணவதி நிதியளிப்பில் இதுவரை ஆறு சிலைகள் செதுக்கப்பட்டு ஒவ்வொரு சிலையருகிலும் “ஸ்ரீ அச்சணந்தியின் செயல்” எனப் பொறிக்கப்பட்டுள்ளன.
ஏழாவது சிலை இன்று செதுக்க ஆரம்பிக்க வேண்டும். மருதன் தன் முதல் சிலையாக இதை செதுக்கப் போகிறான். மருதனும் குணவதியும் வந்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் வேகமாக நடந்தார் ஆதனார்.
000
மருதன் முதன்முதலாக செதுக்குவதற்கு தரப்பட்டது பார்சுவநாதர் உருவம். 23- வது தீர்த்தங்கரான இவர் மகாவீரருக்கு முன் பிறந்தவர். நாகம் அவரது வாகனம் என்பதால் ஏழு பத்தி விரித்த நாகத்திற்கு கீழ் நிற்பவராக பார்சுவநாதரை சிலை வடிக்க வேண்டும்.
ஆதனாரும் குணவதியும் இவனையே பார்த்து நின்றார்கள். முதலில் அவர்கள் பார்வை ஓர் அச்சத்தையும் தவிப்பையும் அளித்தது. ஆனால் சுண்ணாம்புக் கல்லில் உத்தேச உருவத்தை வரையத் தொடங்கியதும் மனம் முழுக்க அச்சிற்பத்தில் ஆழ்ந்துவிட்டது.
முதலில் கோஷ்டத்திற்கான செவ்வகத்தின் வரையறையை வகுத்துக் கொண்டான். இப்போது கோஷ்டத்திற்குள் கட்டையான உடலை நான்கு முறை வளைத்து ஏழு பத்திகள் விரித்து நிற்கும் நாகத்திற்கு கீழ் இரண்டு கைகளையும் தொங்கவிட்டு கருணை பொங்கும் முகத்துடன் நிற்கும் பார்சுவநாதரைக் கண்டுவிட்டான். ஒருகணம் உடல் சிலிர்த்து அடங்கியது. இப்போது இவன் பணி அச்சிற்பத்தின்மேல் மரத்தின் பட்டைகள்போல் ஒட்டிக்கொண்டிருக்கும் தேவையில்லாத பகுதிகளை நீக்க வேண்டியது மட்டும்தான்
ஏழு பத்திகளின் மேல் படிந்திருந்த பாறைத் துண்டுகளை நீக்க ஆரம்பித்தான். பெரிய துண்டுகளாக நீக்க வேண்டிய இடங்களில் பட்டை உளியை வைத்து சுத்தியலால் தட்டினான். இத்தனை ஆண்டுகள் பயிற்சியில் சுத்தியலுக்குத் தரவேண்டிய விசை இயல்பாக கைவரப்பெற்றது. பாறை நெகிழ்ந்து கொடுக்க துண்டுகள் காத்திருந்தாற்போல விடுபட்டு உதிர்ந்தன. இந்தச் சிலை செதுக்கப்பட வேண்டுமென பலயுகங்களாக இந்தப் பாறை தவமிருந்தது போல தோன்றியது. அப்படியே கீழிறங்கி முகம் மார்பு வயிறு கால்கள் என நீக்கிக் கொண்டே வந்தான்.
பெரிய துண்டுகளை நீக்கி முடிக்க பதினைந்து நாட்கள் ஆகின. மாலையில் ஒளி குறையும்வரை செதுக்கினான். சிலை அவன் மனதில் இறக்கி வைக்க முடியாத பாரமாய் அப்படியே நிலைத்திருந்தது. துயரமாய் இல்லாமல் இன்ப அவஸ்தையாய் உணர்ந்தான். கருவுற்றிருக்கும் பெண்களை எண்ணிக் கொண்டான். சிற்பம் செதுக்கி முடிக்கும்வரை நீடிக்கும் எனத் தோன்றியது. இந்த அவஸ்தை விரைவில் தீரவேண்டும் எனவும் எப்போதும் தீர்ந்துவிடக் கூடாதெனவும் மனம் மருகிக் கொண்டிருந்தது.
முதல் இரண்டு நாட்கள் மட்டுமே ஆதனார் உடன் நின்றார். குணவதி எல்லா நாட்களுமே இவனுக்கு முன்பே வந்து இவன் கிளம்பும்போதும் இருந்தார்.
பதினாறாம் நாளிலிருந்து சிறிய உளி கொண்டு மிக மென்மையாகத் தட்டி சிற்பத்தின் மேல் படிந்த அழுக்கை அகற்றுவது போல சிறுதுகள்களாக அகற்றினான். ஒவ்வொரு நாளும் சிற்பம் பொலிவடைந்து வந்தது. குணவதியின் முகத்திலும் பூரிப்பு கூடி வருவதைக் கண்டான்.
முப்பதாவது நாளில் மென்னுளி கொண்டு பார்சுவநாதரின் முகத்தில் ஒட்டியுள்ள தூசியை துடைப்பது போல மிகச்சிறு பிசிறுகளை விடுவித்தான். நான்காவது நாளின் முடிவில் சிற்ப வேலை முழுமையடைந்தது. பார்சுவநாதர் முழுமையடைந்து கருணையை பொழியத் தொடங்கினார். பன்னெடுங் காலத்திற்கும் அவரது கருணை ஊறி பெருகி பரவிக் கொண்டேயிருக்கும் என்ற எண்ணம் தோன்றி மேனி சொடுக்கிற்று. சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தவன் தன்மேல் மோதிய பார்வையின் அழுத்தத்தால் திரும்பிப் பார்த்தான்.
குணவதியின் முகத்தில் நிறைவின்மை தெரிந்தது. இவன் பார்த்ததும் வலது காலின் முட்டிக்குக் கீழே தன் ஆட்காட்டி விரலை வைத்து அழுத்திக் காட்டினார். இவனுக்குப் புரியவில்லை. சிற்பத்தை திரும்பிப் பார்த்தான். எல்லாமே மிகச் சரியாக இருந்தது.
குணவதி மீண்டும் தன் ஆட்காட்டி விரலை வலது காலில் வைத்து அழுத்தி “என் மகனுக்கு இந்த எடத்துல நாகம் தீண்டிய ஒரு வடு இருக்கும்..” என்றார். இவர் மகனுக்கு வடு இருப்பதற்கும் பார்சுவநாதருக்கும் என்ன தொடர்பு. இவர்தான் இச்சிற்பத்தை செதுக்குவதற்கான நிதியளிக்கிறார் என்று ஆதனார் கூறினார். ஆனால் சிற்பத்தில் திருத்தம் சொல்வார் என எதிர்பார்க்காததால் என்ன செய்வது குழம்பினான்.
இருவருக்கும் இடையே மாலை வெயிலில் நிழல் ஒன்று நீண்டு வந்தது. நிழலின் முடிவில் ஆதனார்தான் வந்தார். அவரைக் கண்டதும் சற்று ஆசுவாசமடைந்தான். அருகில் வந்து சிலையைப் பார்த்தவர் முகத்தில் நிறைவு தோன்றியது. இவன் முகத்திலிருந்த குழப்பத்தைக் கண்டு “என்னாச்சு மருதா…” என்றார்.
“இந்தம்மாவோட மகன் காலில் வடு இருக்குமாமே..”
“அடடா அதை மறந்துவிட்டேனே. ஆமா அவங்க சொல்ற மாதிரி வலதுகால் முட்டிக்குக் கீழே பக்கத்தில ஒரு புள்ளி வச்சிரு. வச்ச ஒனக்கும் வைக்கச் சொன்ன எங்களுக்கும் மட்டும்தான் தெரியும். வேற யாருக்கும் தெரியாது. அப்படி வைக்கிறதனால அந்த தீர்த்தங்கரராவே அவங்க பையன் ஆயிட்டதா அவங்களுக்கு ஒரு நிறைவு..”
மருதன் மெல்லியதாக ஒரு புள்ளி ஒன்றை வைக்க குணவதி முகத்தில் மாலை வெயிலின் ஒளியைவிட அதிகமான பிரகாசம் தோன்றியது. தன் இடுப்பில் சொருகியிருந்த சிறு பையை எடுத்து ஆதனாரின் கையில் அளித்துவிட்டு கை கூப்பினார். மருதனின் தலைமீது கை வைத்து “நல்லா இருப்ப” என இருவருக்கும் கேட்குமாறு கூறியவர். “ஆயிரம் சிலை செஞ்சு ஒலகம் இருக்குற வரைக்கும் எம்மவன் பேரு நெலைக்கனும்னு நெனச்சேன். ஏழுதான்னு கடவுள் முடிவு பண்ணிட்டான்..” என மெலிதாக தனக்குள் கூறியபடி கம்பை ஊன்றியபடி மெதுவாக நடந்து சென்றார்.
000
ஒரு நாள் ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் வந்தான் மருதன். அவனுக்காக காத்திருந்த ஆதனார் சிறிய துணியொன்றை அளித்தார். அதில் சிற்பத்திற்கு மேலே பொறிக்க வேண்டிய வாசகம் இருந்தது.
“ஸ்ரீ அச்சணந்தியின் செயல்”
“சாமி இந்த அச்சணந்தி யாரு…”
“குணவதி அம்மாவோட மகன். அவங்க மகனோட பேரு காலத்துக்கும் நிக்கனும்னுதான் அவங்களோட சொத்துகளை வித்து நிதியளிச்சாங்க. இதுவரைக்கும் ஆறு எடத்துல இந்தப் பேர பொறிச்சிருக்கோம்…”
“சரி சாமி ..” என்றபடி சாரத்தின் மீது ஏறத் தொடங்கினான்.
“மருதா” என ஆதனார் அழைக்க திரும்பினான்.
“ஒரு விசயம். நம்மள பாத்துட்டுப்போன குணவதியம்மா அன்னிக்கே இறந்துட்டாங்க… அவங்களுக்கும் வயசாயிடுச்சு. சிற்பத்தப் பாத்துட்டு நிறைவாத்தான் போனாங்க. ஒன்னும் வருத்தப்படாத. ஒனக்கு தெரியனும்னுதான் சொன்னேன்”
“வேலைய முடி சாயுங்காலம் வந்து பாக்குறேன்” என்று கிளம்பினார்.
மாலை ஆதனார் வந்தபோது மருதன் சிறு பாறையில் அமர்ந்து வானும் பூமியும் இணைந்திருந்த மெல்லிய கோட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மருதா முடிச்சிட்டியா…” என ஆச்சர்யத்தோடு கேட்டவர் பொறித்திருந்ததை பார்த்தார்.
“ஸ்ரீ அச்சணந்தி
தாயார் குணவதி
யார் செய்வித்
த திருமேனி ஸ்ரீ”
இவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அவர் முகம் இயல்புக்கு மாறாக இறுக்கமடைந்தது.
மருதன் மனதில் பெரும் தவிப்பும் கலக்கமும் தோன்றியது.
“சாமி.. இந்தம்மா இறந்திட்டாங்கன்னு சொன்னதும் சட்டுன்னு எங்கம்மாவோட நெனைப்பு வந்திடுச்சு. அம்மா எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டுச்சு. அவங்களுக்குன்னு நான் எதுவுமே பண்ணல. இந்தம்மா பையன் பேரப் பொறிக்கிறதுக்கு பாடு பட்டாங்களேன்னுதான். தப்புதான் என்னை மன்னிச்சிடுங்க சாமி…”
“அவங்க ரெண்டு பேரையும் காலத்தில நிறுத்திட்டதா நெனைக்கிற தானே..”
மருதன் ஆமோதிப்பதாக தலையதைத்தான்.
“அந்தப் பையன் அப்படியே பறக்கனும்னு விரும்பித்தான் இந்த மதத்துக்கு வந்தான். அந்தம்மா நான் சொன்னப் புரிஞ்சிக்காம அவனை இப்படி கல்லுல கட்டி வச்சாங்க. நீ இப்ப அந்தம்மாவையும் கட்டி வச்சிட்ட…”
மருதன் தலை குனிந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான். வருத்தத்தில் முகம் இறுகிச் சுருங்கியது.
“காலத்தில் நிக்கனும்னு ஏங்காத மனுசனில்லை. ஆனா அதுவொரு கட்டுன்னு யாரும் உணர்ரதில்லை. நீ ஒருத்தங்கள கட்டியிருக்க. நீ தெரியாம செஞ்சதுதானே. அப்படி நடக்கனும்னு இயற்கை விரும்பியிருக்குன்னுதான் அர்த்தம். காலத்தை அவ்வளவு சுலபமா கணிச்சிட முடியுமாயென்ன. எது நெலைக்கனுங்கிறத அதுதான் முடிவு பண்ணும். அல்லது அதக் கட்டுப்படுத்துற அதவிட மேலான ஒன்னு..” என்று கூறிவிட்டு மருதனின் தோளில் கைபோட்டு அணைத்தபடி நடந்தார்.
“இதுக்காக வருத்தப்படாம அடுத்து செய்ய வேண்டியதச் செய்..”
000

கா. சிவா
விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
கதையின் ஆசிரியர் பெயர் இல்லையே?