
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் மனைவி ரமாவுடன் சென்று கொண்டிருந்தேன். பழம்பெருமை கொண்ட இரண்டு ஊர்களுக்கிடையே நேர்சாலை என்பதே ஒரு மகிழ்வை ஏற்படுத்தியது. பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஒற்றையடிப் பாதையாகத் தொடங்கியிருக்கும். இப்போது நான்கு வழிச் சாலையாக மாறியுள்ளது. அந்த ஒற்றையடி இராமானுஜருடையதாகவும் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழுந்தவுடன் உடலில் சிலிர்ப்பு எழுந்தது. உடனேயே “என்னாச்சுங்க” என்றாள், என் தோள்மேல் கை வைத்திருந்த ரமா. எதுவும் சொல்லாமல் ஒன்றுமில்லையென தலையாட்டினேன். சாவகாசமாக மீண்டும் கேட்பாள் என்று தோன்றியபோது மெல்லிய புன்னகை எழுந்தது. அதே கணம் அவளின் தோள் ஆதுரத்துடன் என் நடு முதுகில் ஒட்டி விலகியது. அகலமான சாலையின் இரண்டு பக்கமும் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள். வாகன நெரிசல் இல்லாத சாலையில் அவ்வப்போது பெரிய கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தன.
“கிளம்புறப்போ வெயிலா இருந்துச்சு. இப்போ மேக மூட்டமா இருக்குல்ல..” என்றாள்.
“ஆமா, மேகம் நமக்கு குடை பிடிக்கிது பாரு…” என்றேன் கேலித் தொனியில்.
“அட ஆமாங்க. நமக்கு மட்டும்தாங்க நெழலா இருக்கு..” என்றாள் உண்மையான வியப்புடன்.
அப்போதுதான் கவனித்தேன். எங்கள் தலைக்குமேல் சிறு மேகக் கூட்டமொன்று சீரான வேகத்தில் நாங்கள் செல்லும் திசையில் நகர்ந்து கொண்டிருந்ததை. எதேச்சையாய் நடப்பதை நமக்கு மட்டுமென நடப்பதாக நம்புவதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
கூகுள் மேப்பம்மாள் கூறியபடி வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தூரமிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்புதான் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு குடமுழுக்கு நடந்தது. அந்த நிகழ்விற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தோம். எதிர்பாராமல் அன்று என் அலுவலகத்தில் தவிர்க்கக்கூடாத உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றதால் செல்லமுடியவில்லை. நாற்பத்தெட்டு நாட்களுக்குள் செல்வது சிறப்பென்பதால் இப்போது செல்கிறோம்.
காலியான சாலையின் இடது ஓரத்தில் சிறியவர்களும் பெரியவர்களும் ஆணும் பெண்களுமாய் ஒரு இருபது பேர் நடந்து செல்வது தூரத்திலேயே தெரிந்தது. அவர்கள் கைகளில் எக்காளமும் தாளக் கருவியும் மேளமும் வைத்து இசைத்துக் கொண்டிருந்தார்கள். முருகன் பக்தி சபை, குன்றத்தூர் என எழுதப்பட்ட பதாகையை இருவர் பிடித்திருந்தார்கள். இவர்களும் அங்குதான் வருகிறார்கள் என்று தோன்றியது.
“எவ்ளோ தூரத்திலேர்ந்து நடந்து வராங்களோ. இன்னும் நடக்க வேண்டியிருக்கே” என பிள்ளைகளைப் பார்த்து இரக்கத்துடன் கூறினாள் ரமா.
“பிள்ளைகலெல்லாம் உற்சாகமாத்தான் இருக்காங்க… ஆனா அவங்க வாசிக்கறத கேக்கத்தான் எரிச்சலா இருக்கு” என்றேன். மெல்லிய ஒலியைக் கூட துல்லியமாக கிரகிக்கும் செவிகள் அமைந்தது வரமா சாபமா என்ற சந்தேகம் எப்போதும் எனக்கு எழும். ரமா ஒன்றும் சொல்லவில்லை. ரமாவின் அருங்குணங்களில் சட்டென மௌனித்து விடுவதும் ஒன்று..
பலர் கூடி இம்மாதிரியான வேறு வேறு ஒலி எழுப்பும் வாத்தியங்களை இசைக்கும்போது ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒலித்து என் மனதில் ஒருவித லயமின்மையை ஏற்படுத்தி இதயத்துடிப்பைக் கூட்டிவிடும்.
என் மனம் பல வருடங்களுக்கு முன் நடந்த எங்கள் ஊர் திருவிழாவின் தினத்திற்கு சென்றுவிட்டது. இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது தலையாரி தீப்பந்தம் பிடித்தபடி எங்கள் வீட்டிற்கு முன் வருவதற்கு. அவர் தீப்பந்தத்தை ஏந்தி முன்னால் செல்ல பின்னால் பெண்களெல்லாம் பாரிகளையும் பாளைகளையும் சுமந்து நளினமாக பின்னால் சென்றார்கள். சிறுவர்கள் கரகச் செம்பைத் தலையில் வைத்து குதித்தாடியபடி முன்புறம் சென்றார்கள். ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை கண்காணித்தபடியும் பிற பெண்களை ரசித்தபடியும் சாலையோரமாக நடந்தார்கள். நான் இரண்டும் கெட்டான் வயதில் இருந்ததால் சங்கோஜத்துடன் கரகாட்டக் கோஷ்டியுடனும் ஆண்கள் பக்கமும் மாறி மாறி நகர்ந்து கொண்டிருந்தேன்.
கரகக் கூட்டத்திற்குமுன் மேளமும் தாளமும் இசைத்தபடி சென்றார்கள். முதலில் வெறும் சத்தமாக ஒலித்தாலும், திருவிழாவின் மகிழ்வான மனநிலையில் சற்று உற்சாகத்தை அளிக்கத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளமும் உடலும் இயைய பல சிறுவர்கள் குதித்தாடத் தொடங்கினார்கள். அவர்கள் இசைத்ததில் ஒருவருடைய தாளம் பிசகி தனித்து ஒலித்ததை என் செவியுணர்ந்தது. இதனால் என் மனமுமோ உடலோ அந்த இசையுடன் இயையாமல் நீரில் மிதக்கும் நெகிழிப் பொம்மைபோல சூழலில் இணையாமல் நின்றேன். ஆடிய சிறுவர்கள் ஆட்ட மும்முரத்தில் தானாகவே எப்படியோ என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆடிக் கொண்டிருந்தவர்கள் நடுவே ஆடாமல் திகைத்து தனித்து நின்றேன். என் மாமன் முறைக்காரர்கள் சிலர் என்னை ஆடச் சொல்லி கூவினார்கள். அதனால் பலரின் பார்வையும் என்னை நோக்கித் திரும்பியது. சுற்றி ஆடிய சிறுவர்கள் உச்சகட்ட வேகத்தில் ஆடியபடி என்னையும் உற்சாகப்படுத்தி ஆட்டுவிக்க முயன்றார்கள். நானும் செயற்கையான உற்சாகத்துடன் ஆட முயன்றாலும் பிசகி ஒலித்த தாளத்தின் காரணமாக மனதால் உடலுடன் ஒன்ற முடியவில்லை.
அனைவரும் என்னையே பார்ப்பதாகவும் பெண்கள் முகங்களில் மெல்லிய பரிகாசப் புன்னகை தவழ்வதாகவும் தோன்றியது. உரிய பயிற்சியின்றி ஏனோதானோவென இசைக்கப்படும் அந்த முரட்டு இசை மீது மெல்லிய எரிச்சல் தோன்றியது.
மனம், அடுத்த நிகழ்வை நோக்கி தன்னிச்சையாக தாவியது. மனம் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கோர்த்துத் தொகுத்து சேமித்துள்ள முறைமை எப்போதுமே வியப்பளிப்பதாகவே இருக்கிறது.
முதல் நிகழ்விற்கு பல வருடங்கள் கடந்தபின் நிகழ்ந்தது இது. எங்களுக்கு திருமணமான புதிது. ரமாவின் நெருங்கிய உறவினரின் இறப்பு வீடு. ரமா உள்ளே துயரார்ந்த முகத்துடன் அமர்ந்திருக்க நான் வெளியே சாமியானா பந்தலுக்கு கீழே போடப்பட்ட நாற்காலியில் பாதி வெயில் உடலில் பட அமர்ந்திருந்தேன். பேசுமளவிற்கு பழக்கமானவர்கள் யாருமில்லாததால் திறன்பேசியில் மேய்ந்து கொண்டிருந்தேன். அதிலேயே மூழ்கியிருந்ததால் பாடை கட்டியதையோ மேளகாரர்கள் வந்து தயாரானதையோ கவனிக்கவில்லை. எதிர்பாராமல் மேளச் சத்தமும் கொம்போசையும் உரத்துக் கேட்டதும் திடுக்கிட்டு இசைகேடாக என் உடலசைய பிளாஸ்டிக் நாற்காலியின் கால் வளைந்தது. ஆவென சத்தம் எழுப்பியபடி அப்படியே தரையில் விழுந்தேன். ரமா இருக்கும் திசையில் அனிச்சையாக விழியோட்டி அவள் கவனிக்கவில்லை என்பதை கண்டதும் ஆசுவாசத்துடன் எழுந்தேன். ஆனால் மனதில் அந்த திடுக்கிடலினால் உண்டான துடிப்பு குறையவில்லை.
பிறகு சடங்குகளை எல்லாம் செய்து சடலத்தை தூக்கி செல்லும்போது அந்த கருவிகளை இசைத்தார்கள். மேளக்காரர்கள் ஓரளவிற்கு ஒத்து அடித்தபோதும் கொம்பூதியவர் தவறான தருணத்தில் முன்னதாகவே முடித்தார். மேளக்காரர்களோடு அவரால் இணையவே முடியவில்லை. ஏற்கனவே தோன்றிய திடுக்கிடல் மறையாத நிலையில் மனதில் தோன்றியிருந்த எரிச்சல் வெறுப்பாக மாற்றம் கொண்டது.
இதன்பிறகு யதேச்சையாக இக்கருவிகளின் முரட்டு இசை காதில் விழும் போதெல்லாம் தானாகவே ஒரு எரிச்சல் தோன்றிவிடுகிறது.
இன்னும் முந்நூறு மீட்டர் தூரத்தில் வலதுபுறம் திரும்பவேண்டுமென கூகுள் மேப்பம்மாள் கூறியதும் நினைவுகளின் கண்ணி அறுந்தது. மனம் எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும் அறிவு தன் வேலையை கண்ணும் கருத்துமாய் செய்து கொண்டுதானிருக்கிறது.
பிரதான சாலையிலிருந்து முன்னூறு மீட்டர் தூரத்திலேயே கோவில் அமைந்திருக்கிறது. ரமா பூ வாங்குவதற்காக சென்றாள். நான் புதிதாக வண்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்ட கோபுரத்தை அழகான கோணத்தில் படமெடுக்க முயற்சித்தேன். எப்படி எடுத்தாலும் எண்ணியபடியாக இருப்பதில்லை. எடுக்கப்பட்ட பல படங்களில் எதிலும் மனநிறைவின்றி பரவாயில்லை என்று தோன்றும் ஏதோ ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அழிப்பதுதான் எப்போதும் நடக்கிறது.
படமெடுக்க மணல் தரையில் மெதுவாக அடிவைத்து நகர்ந்தபோது காலில் தட்டுப்பட்ட ஒன்றை கூர்ந்து பார்த்தேன். மூன்றடி விட்டமுள்ள மரத்தின் அடிப்பகுதி. குடமுழக்கு விழாவிற்காக மரத்தை தரைவரை வெட்டியுள்ளார்கள். ஒரு கணத்தில் மனம் பொங்கி விழியோரம் ஒரு துளி கசிந்தது. மரத்தை ஒரு உயிரென ஏன் யாரும் கருதுவதில்லை. இடையூறு என தோன்றிவிட்டால் உடனேயே வெட்டிவிடுகிறார்கள். இப்போது மோட்டார் பொருத்திய ரம்பம் வந்தவுடன் மிக எளிய செயலாக மாறிவிட்டது.
மரம் என்பது வெறும் கட்டையல்ல. அது மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழக் கூடிய உயிர். அது புழு பூச்சி பறவை ஊர்வன என பல நூறு உயிர்களை வாழ வைக்கிறது. மலர் காய் கனி என பொலிந்து அனைத்து உயிர்களுக்கும் அளிக்கிறது. இதைப் பற்றியெல்லாம் கருதாமல் சிறு சிரமத்தையும் தாள முடியாமல் மிக எளிதாக அகற்றுகிறார்கள். எத்தனை உயிர்கள் அதனால் பரிதவிக்கப் போகின்றன என்பது பற்றி எந்தப் சுரணையும் இருப்பதில்லை. அம்மரத்தைச் சுற்றி வசித்த மனிதர்களின் மனதில் சிறு வெறுமை ஒரு தடமாக எஞ்சும். அவர்களோ அதற்கான காரணத்தை அறியாமல் அவ்வெறுமையை போக்க வேறு வழிகளைத் தேடியபடி வாழ்க்கையை கழிப்பார்கள்.
ரமா அருகில் வந்து தோளைத் தொட்டதும் சிந்தனையோட்டத்தை நிறுத்தினேன். கையில் நெருக்கிக் கட்டிய செவ்வரளிப் பூச்சரத்தை வைத்திருந்தாள். “கீழே பாத்தியா…” என்று கேட்டதும் “அங்கேயிருந்து ஒங்களப் பாத்தபோதே அதையும் பாத்தேன். இங்கதான் அன்னதானம் போட்டாங்களாம். கொட்டகை போட முடியாம நடுவுல நின்னுச்சாம்… அதனாலதான்னு பூக்காரம்மா சொன்னாங்க” என்று சொல்லிவிட்டு “நாம யோசிக்கிற மாதிரியே எல்லாரும் யோசிக்கனும்னு எதிர்பாக்க முடியாதே. சரி வாங்க உள்ளே போகலாம்” என்று கையை பிடித்து உந்தினாள்.
மூன்று நிலை கோபுரத்திற்கு முன்பே இருந்த விநாயகரை வணங்கியபின் படிக்கல்லை தாண்டி கோபுரத்திற்கு அடியில் நடந்து உள்ளே சென்றோம். ஒவ்வொரு கோவிலிலும் இப்படி கோபுரத்திற்குள் நுழையும்போதும் விசேசங்களின்போது புதுக்கப்படுவதால் ஒளி கொள்ளும் விளக்குபோல என்னிடமிருந்த கசடுகள் நீங்கி உள்ளம் தூய்மையடைவதாக தோன்றும். இந்த எண்ணத்தால் மேனியில் மெல்லிய சிலிர்ப்பெழும். ரமா ஒருமுறை கேட்டபோது தலையாட்டி கடந்தேன். அதன் பிறகு அவள் கேட்பதில்லை.
நிலைவெள்ளி கம்பிகளை ஊன்றி பிரித்திருந்தபடி வரிசையில் மக்கள் நின்றனர். நாங்கள் வரிசையின் கடைசியில் சென்று நின்று சுவர்களில் புதிதாக வரையப்பட்ட ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு முன் நின்ற முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் இரண்டு சீட்டுகளை நீட்டியபடி ஓர் ஆண் வந்து நின்றார். நான் கண் காட்டியதும் ரமா அந்தப் பெண்ணிடம் விசாரித்தாள். என்னிடம் திரும்பி “இந்த வரிசையில போறதுக்கு அம்பது ரூபாயாம். வாங்க, தர்ம தரிசன வரிசைக்கு போவோம்” என்று கூறியபடி வரிசையிலிருந்து விலகி நடந்தாள்.
சாமியை பணம் கொடுத்துப் பார்ப்பதை நாங்கள் விரும்புவதில்லை. “பணம் கொடுத்துப் பாக்குறவங்களுக்கு சாமி அதிகமான அருளையா தரப்போறாரு. சாமியப் பாக்குறதுக்கு நேரமில்லையினா அவங்களோட அவசர வேலையவே பாக்க வேண்டியதுதானே.. இங்கே எதுக்கு வரணும்” என்பது ரமாவின் வாய்மொழி.
சில கோவில்களில் பெரும்பான்மையினர் கட்டண தரிசனத்தில் காத்து நிற்க, நாங்கள் தர்மதரிசனத்தில் விரைவாக சாமியைப் பார்த்ததும் நடந்திருக்கிறது. மற்ற எல்லாவற்றையும்விட. சாமிதான் பெரிது என்ற எண்ணத்துடன் அவசரமின்றி காத்திருந்து பார்க்கும்போதுதான் மனம் நிறைவதாகத் தோன்றுகிறது.
இங்கே கட்டண வரிசையும் தர்ம வரிசையும் ஏறக்குறைய ஒரே அளவிலேயே இருந்தது. தாங்கள் கட்டணம் கட்டிச் செல்கிறோம் என்ற பெருமிதம் ஒருபக்கமும், நாங்கள் தர்ம தரிசனத்தில்தான் செல்வோம் என்ற இறுமாப்பு மறுபுறமும் என்ற எண்ணம் தோன்றியது. வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க கோவிலை சுற்றிலும் பார்க்க அவகாசம் கிடைத்தது. அவசரமாகச் சென்று கருவறை தெய்வத்தை மட்டும் வணங்கிவிட்டு செல்வதில் என்ன பயன். அதற்காகவா இவ்வளவு பெரிய கோவிலை பெரியதும் சிறியதுமான சிற்பங்கள், ஓவியமாக புராண கதைகள், தனித்தனி சன்னதிகளில் வெவ்வேறு ரூபத்தில் சாமிகள் என பலவற்றுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.
வல்லக்கோட்டை முருகன் கோவில் உருவானதன் புராணக் கதையை சித்திரமாகத் தீட்டியிருந்தார்கள். இந்திரன் இங்கு வந்து முருகனை வழிபட்டு தன் பாவங்களை போக்கிக் கொண்டானாம். அதேபோல இங்கு வந்து வணங்குபவர்கள் நல்வாழ்வைப் பெறுவார்கள் என்பது உள்ளுரை என்பதுபோல பலவற்றையும் பேசியபடி நகர்ந்து கொண்டிருந்தோம்.
கோபுரத்தின் பக்கவாட்டில் முருகன் இணையருடன் நிற்கும் புடைப்புச் சிற்பங்களை அமைத்து வண்ணம் தீட்டியிருந்தார்கள். முருகனின் குமிழ் இதழ்களில் தவழ்ந்த மென்முறுவலும் கண்களில் தெரிந்த கருணையும் மனதை மலரச் செய்தது. இதைக் கூறியதும் “தெய்வானைக்கும் வள்ளிக்கும் எவ்ளோ அழகா வண்ணந்தீட்டி இருக்காங்க. அதுவும் கை விரல்களுக்கும் நகங்களுக்கும் கூட துல்லியமா தீட்டியிருக்காங்க..” என்று கூறியபடி வரிசை நகரும்வரை விழி விரித்து நோக்கிய அவளை நெக்குருக நான் நோக்கிறேன்.
வரிசைக்கு அமைக்கபட்டிருந்த நிலைவெள்ளியிலான தடுப்புகள்மேல் சிறிய தகடு பதித்து அதன்மேல் இரு இணையர்களின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்புகள் அமைப்பதற்கான செலவினை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என ரமா கூறினாள். வெறுமே உண்டியலில் பணத்தை இடுவதைவிட இப்பணிகள் மேலானவை என்ற எண்ணம் அதில் தொனித்தது. வரிசையின் ஆறு மடக்குகள் நகர்ந்து சன்னதிக்கு நேராக செல்லும் வரிசைக்கு வந்தபோது வழியில் பார்த்த இசை கோஷ்டியினர் வந்தார்கள்.
அந்த முகங்களில் சோர்வு தெரிந்தாலும் மலர்ச்சி கூடுதலாக துலங்கியது. கோவிலை சுற்றி வந்து சன்னதிக்கு முன் கூடினார்கள். சன்னதிக்கு முன்புறம் சற்று விசாலமாகவே இடம் இருந்தது. வரிசையில் நின்று தரிசனம் முடித்தவர்கள் அமர்ந்து இளைப்பாறுவதற்கு வசதியாக விடப்பட்டிருந்தது. அவர்கள் வாத்தியங்களை இசைப்பதற்கு தயாரானார்கள். என் மனம் நிலையற்று லேசாக பதட்டம் கொண்டது. “அமைதியா சாமி கும்பிட வந்திருக்கோம் இங்கே வந்து இந்த மொரட்டு வாத்தியங்களை வாசிச்சா மனம் எப்படி குவியும். கோயிலுக்கு வந்த திருப்தியே கெடைக்காதே..” என ரமாவிடம் பொருமினேன்.
“போன தடவ வயலூருக்கு போனோமே ஞாபகம் இருக்கா…” என்று ரமாவிடம் கேட்டபோதே மனம் வயலூர் முருகன் கோவில் நுழைவாயிலுக்குச் சென்று காலூன்றிவிட்டது. நாங்கள் சென்றபோதே சன்னதிக்கு அருகே பலகைகளால் அமைத்திருந்த சிறு மேடையில் ஐந்து பேர் அமர்ந்திருந்தார்கள். வலது பக்கம் வயலினை ஏந்திய ஒரு சிறுவனும் வலது கையருகே தம்புராவை தாங்கிய ஒரு மங்கையும் இடது பக்க கையருகே புல்லாங்குழல் பிடித்துக் கொண்டிருந்த ஒல்லியான பெரியவரும் அவருக்கு முன் மிருதங்கத்தை வைத்திருக்கும் இளைஞனும் சூழ நடுவில் நீலவண்ணப் பட்டுப்படவை துலங்க ஒரு நடுத்தர வயது பெண்மணி அமர்ந்திருந்தார். மாநிறமானாலும் அவர் முகத்திலிருந்த மலர்ச்சி அம்மேடையின் ஒளியைக் கூட்டியது.
அவர்களை பார்த்தபடியே வரிசையில் சென்று நின்றோம். செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகமாக இருந்த கூட்டத்தைக் கண்டு ஒரு மலைப்புத் தோன்றியது. பெரிதாக யாரும் சத்தமாக பேசாதபோதும் கூட்டத்தினால் எழும் கலவையான ஓசையே கோவிலை மூழ்கடித்திருந்தது. எனக்கு ஒருமாதிரி மூச்சுத் திணறுவது போலிருந்தது. அப்போது எங்கோ ஆழத்தில் மெல்லிய ம்ம்ம்.. எனும் ரீங்காரம் கேட்டது. பின் மெல்ல அந்த ஒலி அதிகரித்தது. இந்த ஒலி அதிகரிக்கும்போது கூட்டத்தின் ஓசை குறைந்தபடியே வந்ததை வியப்புடன் உணர்ந்தேன்.
எனக்கு கர்நாடக இசை குறித்தோ அதன் ராகங்கள் பற்றியோ எந்த அறிமுகமும் இல்லை. திரைப்பட பாடல்களை அதிலும் குறிப்பாக இளையராஜா பாடல்களைக் கேட்டு அவை ஏற்படுத்தும் உணர்வெழுச்சிகளில் திளைப்பதோடு சரி. ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியை முதல்முறையாக அங்குதான் பார்த்தேன். அதுவும் கோவிலில் நிறைந்துள்ள கூட்டத்தின் வரிசையில் நகர்ந்தபடி. வாத்தியங்களின் மெல்லிசை ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒரே ஒலியென மாறியபோது அந்தக் குரல் மேலெழுந்தது. ஒரு போர்வைபோல பரவிய அந்த இசையின்மேல் அந்தக் குரல் அமர்ந்ததும் போர்வை மெல்ல பறக்கத் தொடங்கியது. அந்த மலர்ந்த முகம் கொண்ட பாடகியின் குரல் வழியே வெளிவந்த வார்த்தைகளின் பொருள் எனக்கு சரியாகப் புரியவில்லை. ஆனால் இசையில் ஆழ்வதற்கு அதுவொரு தடையாக இல்லை.
இசையின் ஒலி உச்சஸ்தாதியை அடைந்தபோது கூட்டத்தின் ஓசை சுத்தமாக இல்லாமலாகி விட்டது. அல்லது அப்பாடகியின் குரல் மட்டுமே என் காதுகளில் நிறைந்தது. அந்தக் குரல் இதுவரை நான் சென்றிடாத புல்வெளிக்கு நடுவிலும் அருவிக்கு அருகிலும் மலையின் உச்சிக்கும் என்னை அழைத்துச் சென்றது. காணாத காட்சிகளையெல்லாம் காணவைத்தது. சுற்றி நின்ற அத்தனை பேரும் ஏன் ரமாவும் கூட அப்போது மறைந்துவிட்டனர். நான் மட்டும் தனியனாய் தன்னந்தனியனாய் அந்தக் குரல் மட்டும் உடனிருக்க உலகை வலம் வந்தேன். எப்படி நிகழ்ந்தது அந்த அற்புதம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அந்தக் கூட்டத்தின் ஓசையை தவிர்க்க நினைத்த மனதின் விளையாட்டா அல்லது அந்த இசையின் மாயமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவேயில்லை. மறக்க முடியாத முருக தரிசனமாக அமைந்தது அன்று.
அதுபோல் மற்றொன்று இன்றுவரை அமையவில்லை. அப்படி அமையாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி முரட்டு வாத்தியங்களின் தொந்தரவு இல்லாமலாவது இருக்கலாம் என்ற ஏக்கம் இப்போது தோன்றியது.
அந்த முரட்டிசைக் குழுவில் அனுபவசாலியாக இருந்த நாற்பது வயதையுடைவர் முருகனின் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூற மற்றவர்கள் அரோகரா என முழங்கினார்கள். முதலில் கலைசலான குரல்கள் எழுந்தாலும் பத்தாவது பெயரைக் கூறும் போது ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலித்தது.
இங்கிருந்து உடனே அகன்று செல்லவேண்டும் என்ற துடிப்பு முதலில் எழுந்தது. ஆனால் அதைச் செய்யமுடியாது. இவ்வளவு தூரம் வந்து வரிசையில் ஒருமணி நேரம் நின்ற பிறகு உள்ளே சென்று தரிசனம் செய்யாமல் செல்வது சரியல்ல என்று தோன்றியது. ரமா என் முகத்தினைக் கண்டுணர்ந்து தோளின் மேல் உள்ளங்கையை வைத்து மெதுவாக அழுத்தினாள். ஒன்றும் செய்வதற்கில்லை. நிகழ்வதை எதிர்கொள்வோம் என உறுதி தோன்றியது.
அரோகரா கோசத்தை முடித்துவிட்டு இசைக்கத் தயாரானார்கள். அதை எதிர்கொள்ள என் மனம் முழு விழிப்பு நிலையில் தயாரானது. மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் வெள்ளைத்தோல் பொருத்தப்பட்ட மேளத்தை அவரவர் வயிற்றுக்கு நேராக இருக்குமாறு கழுத்தில் தொங்கவிட்டிருந்தார்கள். பித்தளையில் செய்யப்பட்ட நீளமான நான்கு எக்காளக் கருவிகளை இளைஞர்கள் கைகளில் பிடித்திருந்தார்கள். அவற்றின் எடை அவர்களின் கைகளின் தசைத் திரட்சியில் தெரிந்தது. மற்றவர்கள் தங்கள் கைகளில் ஜால்ராக்களை வைத்திருந்தார்கள்.
எங்கள் வரிசை மெதுவாக முன்னகர்ந்தது. மேளத்திலிருந்து மெதுவான தட்டல் ஒலி எழுந்தது. அதற்கேற்ப என் மனதிலும் படபடப்பு ஏற்பட்டது. மெதுமெதுவாக ஒலியின் அளவு கூடிக் கொண்டே வந்தது. எப்போதென்று தெரியாமல் எக்காளத்தின் ஓசையும் இணைந்தது. பெரிய தடாகத்தின் பரப்பில் சிறு கல் பட்டதுபோல ஓசை சுற்றிலும் பரவியது. சுற்றி நின்ற மக்கள் அனைவரின் பார்வையும் செவியும் அவர்களையே கூர்ந்திருந்தன. ஜால்ராவை வைத்திருந்தவர்களும் தங்களது ஒலியையும் இசையுடன் கலந்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். மேளத்தின் ஓசை கூடுவதற்கேற்ப எக்காளங்கள் கூவ ஜால்ராக்கள் இணைய ஒரு லயம் கூடிவிட்டது. இசைக்கேற்ப அவர்களின் உடல்களும் அசைய அத்தனை பேரும் ஒரு கையின் விரல்களென தோன்றினார்கள். அவற்றைக் கண்டு கொண்டிருந்தவர்களின் உடலிலும் அதிர்வுகள் தோன்றின. சில பெண்களும் சிறு பிள்ளைகளும் இசைக்கு தங்களை ஒப்புக் கொடுப்பதுபோல தலையையும் கையையும் ஆட்டினார்கள். ஆண்கள் மிகுந்த பிரயாசையுடன் உடலை கட்டுப்படுத்தி நின்றார்கள். தடாகத்தின் பரப்பில் அலைகள் வேகவேகமாக கரையை நோக்கி வந்தன. அவர்களின் முதுகில் வியர்வை பரவி நனைந்தது. சன்னதிக்குள் செல்வதற்கான மேடான தரையில் நின்று பார்த்தபோது வட்டமாக சூழ்ந்து நின்ற அவர்கள் ஒரு பிரமாண்ட மலரின் இதழ்கள் போலவும் காற்றிற்கேற்ப அவை அசைவது போலவும் தோன்றியது. இசையின் வேகம் கூடக் கூட வளையம் தோன்றிய தடாகத்தில் வளையங்கள் மறைந்து தடாகமே சுழலத் தொடங்கியது. உடல் சிலிர்த்துக் கொண்டேயிருந்தது. இசையின் சீர்மை இதுதானா என மனம் அரற்றியது. அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து தெய்வானையும் வள்ளியும் இருபுறம் கொண்டு நின்ற முருகனின் எதிரில் வந்து விட்டேன். எங்கோ ஓர் இருள் சூழ்ந்த அந்தரத்தில் முருகனுடன் தனித்திருப்பதாகத் தோன்றியது. இசை என்னை உச்சிக்கு தூக்கி அங்கேயே நிறுத்தியிருந்தது. சுழல் காற்றின் மையத்தில் இருக்கும் சருகுபோல மிதப்பதாகத் தோன்றியது. மேனி விதிர்க்க விழிகள் கசிய முருகனின் அழகை பார்த்துக் கொண்டே இருந்தேன். பலபல்லாண்டுகள் அது நீடிக்க வேண்டுமென உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்தது.
“ஆரத்தி தொட்டு கும்பிடுங்க…” என்று ரமா கூறிய போதே நிலை மீண்டேன். தீபம் தொட்டு வணங்கிவிட்டு திருநீறு பெற்று நெற்றியில் பூசிக் கொண்டேன். இசைத்தவர்களை பாராட்டி வணங்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் வேகமாக வெளியே வந்தேன்.
அவர்கள், சாதாரண எளிய மனிதர்களாக ஆளாளுக்கு ஒவ்வொரு தூண்களில் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அருள் இறங்கிய சாமியாடியென இருந்த அவர்களிடம் எதுவும் சொல்லாமல் நானும் கீழே அமர்ந்தேன். என்னை உரசியபடி ரமாவும் அமர்ந்தாள்.
“மனசு ஒத்திசைந்தா எல்லாமே இனிமையாகிடும். இது, இசைக்கும் கலைகளுக்கும் மட்டுமில்ல வாழ்க்கைக்கும்தான்” ரமா என் தோள்மீது கை வைத்தபடி சொன்னாள். அவள் முகத்தில் இதுவரை நான் கண்டிராத ஒளி படர்ந்திருந்தது.
௦௦௦

கா. சிவா
விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளும் "கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு" எனும் கவிதைத் தொகுப்பும் "தண்தழல்" எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
உங்களுக்கான லயத்தை பிடித்து விட்டீர்கள் , தொடர்ச்சியான அனுபவத்தால் கதையமைக்கும் நுப்பமும் விவரிப்பும் கை வந்து விட்டது. நுண்ணிய தகவல்களால் கதை சிறப்படைகிறது. நன்றி.
மிக்க நன்றி சார் 🙏
கதையின் நுட்பம் ஒத்திசைவு என்னும் போதும் , உங்களின் ஆழ்ந்த தேடலின் இசைவு இதில் கை உயர்த்தி உள்ளது. வாழ்த்துக்கள் சிவா sir.
மிக்க நன்றிங்க Priya 🙏
விகடனில் கூட இப்படியான சிறுகதை இன்று வராது. வேண்டுமானால், ராணி வாராந்தரியில் வரலாம். அகழ் இதழ் ஆசிரியர் குழுவினர் மட்டுமல்ல.. கா.சிவாவும் கவனமாக இருக்க வேண்டும்.
புற விவரணைகளும், அகத்தத்தளிப்பும் பொருந்தி வர ஒரு கதை இயல்பாக அமைய வேண்டும்; வம்படியில் ‘தரிசனம்’ என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டக்கூடாது. காட்டாக, புதுமைப்பித்தனின் சித்தி என்ற கதையை வாசிக்கலாம். கா.சிவா படைப்பாக்கத்தில் இன்னும் இன்னும் இன்னும் தேர்ச்சி பெற்று நல்ல கதைகள் தர வேண்டுமென ‘முருகனை’ பிரார்த்திக்கிறேன்.
உங்கள் கருத்திற்கும் வேண்டுதலுக்கும் நன்றி 🙏
இசையே ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கிறது ஆளூமைப்படுத்துகிறது ஆனாலும் உங்களைப் போன்று அனைவராலும் விவரிக்க முடியாது
மிக்க நன்றிங்க
இசைதான் கடவுள். இந்த ஆன்மிகம் சிலருக்கே வாய்க்கிறது. இசையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு லயமற்ற இசை மனதை ஒருநிலைப்படுத்துவதில்லை. மனதைக் கலைத்துப் போட்டுவிடுகிறது. மனம் ஒருநிலைக்கு வர ஏதுவாகின்ற எல்லாமே கடவுள் தன்மையை உணர்த்துவதாகிறது. இலக்கியமும். இளையராஜாவின் பல பாடல்கள் நம்மை லயிக்கவைத்து ‘கடவுளை’ உணர்த்திவிடுகிறது. இந்த எளிய கருத்தை கதை அழுத்தமாக வைக்கிறது சிவா. வாழ்த்துகள்.
மகிழ்ச்சியும் அன்பும் சார்..