செல்வசங்கரன் கவிதைகள்

குதிரை வால்

என் மகிழ்வான எண்ணத்தைப் பார்க்கிறேன்
குதிரையின் கத்திரிக்கப்பட்ட வாலைப் போல தெரிந்தது
சாலையில் அந்த நேரத்தில் ஒரு திருப்பம் வந்தது
திரும்பினேன்
வலது பக்கம் திரும்பியது திரும்பினேன்
நேற்று மாதிரியே பகல் கலைந்து இரவு வந்தது
நேற்று மாதிரியே மழை மேலிருந்து கீழே பெய்தது
நேற்று மாதிரியான ஒரு மகிழ்ச்சி
கத்திரிக்கப்பட்ட வாலைப் பார்ப்பதற்கு பதிலாக
கத்திரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

சிறிய கடல்

கையாலாகாதவன் என
அவர் என்னை அழைப்பதற்கு அவரிடம்
சிறிய நியாயம் உள்ளது
ஆனால், அதை அடைவதற்கான
சிறிய வழியை மறந்துவிட்டார்
சிறியதாக மறைத்து நிற்கின்றதை சிறியதாக
விலக்கிவிட்டேன்
சிறிய நன்றி ஒன்றை உதிர்த்தார்
சிறிய என்பதன் கைகளை தூக்கி இன்னொரு
சிறிய என்பதன் தோளில் போட்டேன்

பிரளயம்

நடந்து செல்லுகையில் ஒரு கால் பக்கத்துக் காலை
தனது அடுத்த ஸ்டெப் என்றே எண்ணியது
பக்கத்துக் கால் அதன் பக்கத்துக்காலை
தனது முந்தைய ஸ்டெப் என்று நினைத்தது
ஒரு கால் அருகில் வசிக்கும் இன்னொரு காலை
பார்த்துக் கொண்டிருக்கிறது
பிரளயமே கூட அவ்வமயத்திற்கு வாய்ப்புள்ளது
அப்பொழுது,
ஒன்றின் காதில் மெதுவாக போட்டு வைத்தேன்
நன்றாகப் பார்
இரண்டு கண்களென்பதால் அப்படி இருக்கலாம்

நீர்ப் புரிதல்

நீரை எடுத்து என் மீது ஊற்றினேன்
ஒரு குவளையைப் போல உடம்பு
வாங்கிக் கொள்ளுமென நினைத்தால்
ஏமாந்து போவோம்
தரை ஒரு அண்டாவைப் போல
எல்லாவற்றையும் வாங்கியது
எல்லாம் நீருக்குரிய நீர் இது ஒரு நீர்ப் புரிதல்
நீரை வைத்து நீரைக் கழுவி விட்டாற் போல
எல்லாம் தெளிவானது

கண்ணாடி ஆறு

எல்லா நிலைக் கண்ணாடிகளும்
ஒரு ஆறு
பெருக்கெடுத்து உள்ளே ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்
அசையாதவை
ஆற்றைக் கடக்க முடியாததுதான் அதன் விதி
அந்தச் சமயத்தில் அது
தேங்கிக்கிடக்கின்ற சிறிய குளம்
ஒரு கவளம் நீரை மொண்டு கொள்ள
கைமறதியாக
ஒரு கல்லை யாம் அதில் வீசிவிட்டோம்
இறந்து விழுகையில்
ஒருவன் கடைசியாக அசைகின்றதைப் போல
அந்த ஆறு உடைந்து அசைந்தது

எதிர்கால இலை

அந்த மரத்தின் எதிர்கால இலை
அதுவும் ஒரேயொரு இலை
தரையிலிருந்து சூரியன் எவ்வளவு கூசுமோ
அவ்வளவு கூசியது
இடையில் சிறிது தூரம் இருந்தது
இந்த உலகம் அழிவதற்கு போதுமான தூரம்
எனக்கு தெரிந்தவர்கள் யாரும் அந்த தூரத்தில்
விழுந்து சாகவில்லை
இரண்டு பேர்கள் படுத்த படுக்கையாக கிடந்தார்கள்
தொலைந்து போன குழந்தையாக
இலைக்கு பக்கத்திலிருந்த காலியிடம் தோன்றியது
பயன்படுத்தாத பொருள் பயன்படுத்தப்படாமலே
களைப்படைந்துவிடுவது போல
அதுவாகத்தான் இருக்குமென்று தெரிகிறது
அதனுடைய நோக்கம்

கரை

அவன் பேசும் போது அவன் முகத்தையே
பார்ப்பது சுலபம்
பேச்சை பார்க்கச் சொன்னான்
அப்படித்தான் சொன்னது அவன் முகம்
எனக்கு இமைகள் தெரிந்தது
மண் சரிவு தெரிந்தது மழைக்காலம் தெரிந்தது
ஒற்றைப் பனை தெரிந்தது
ஒரு கருக்கு அதில் ஒடிந்து தொங்கியது தெரிந்தது
எல்லாம் கடந்து நீந்திக் கொண்டிருந்தேன்
தேவைப்படுகிற போது என் கையைப் பிடித்து
என்னை நானே தூக்கிவிடக்கூடிய
அப்பொழுது வந்த கரை அது என்னுடைய கரை
அவனுடைய கரை அங்கு இருக்கிறது

செல்வசங்கரன்

விருதுநகரில் வசித்து வருகிறார், தமிழ்ப் பேராசிரியர். சிற்றிதழ்களில் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதிவருகிறார். ஆதவன் (கே.எஸ். சுந்தரம்) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ‘அறியப்படாத மலர்’ (2013), ‘பறவை பார்த்தல்’ (2017), ‘கனிவின் சைஸ்’ (2018), ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி’ (2020), மத்தியான நதி, 'கண்ணாடி சத்தம்' உட்பட பல கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

1 Comment

  1. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல கவிதைகள் நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.