மருபூமி : அஜிதன்

அத்தியாயம் ஒன்று

“என் பெயர் பெஷீர். மொகமது பெஷீர்”

நான் என் கைரளீய அரபியில் என்னால் இயன்ற அளவு உரக்க அவனிடம் கூறினேன். அந்த காரஃபானின் தலைவன் நெடுநேரம் கண்களை சுருக்கி என்னை பார்த்துவிட்டு,
“நல்லவனே, தனியாக எப்படி இந்த மணற்பாலையை கடந்து இங்கு வந்து சேர்ந்தாய்? மாஷால்லா!” என்றான்.

நான் எதுவும் சொல்லாமல் மறையும் சூரியனையே பார்த்தபடி நின்றேன். அந்திச்சூரியன் தூரத்து மணல் வெளியின் தூசிப்பரப்பின் மீது வெறும் ஒரு ஒளித்துளியாக அதன் எல்லா தோரணைகளையும் உதறி பெரும் ஆசுவாசத்துடன் மெல்லப் புதைந்துக் கொண்டிருந்தது.

அரபி நெருங்கி வந்து தன் இடையில் தொங்கிய தோல்பையை திறந்து எனக்கு நீர் அளித்தான். நெருங்கிய போது தான் அவன் வயதை நான் கண்டுகொண்டேன். மருதாணி வைத்த நீண்டதாடிக்குள் ஓர் அறுபது வயதுக்காரனின் முகம். கருகிய அந்த மாநிற முகத்தில் சுருங்கிய நான்கு மடிப்பு நெற்றியும், கூரிய நாசியும், மெலிந்த உதடுகளும். அவனது பழுப்பேறிய கண்களிலும் புன்னகையிலும் எளிய பாலைவனத்தின் வசீகரம் இருந்தது.

நான் நன்றி கூறி அவன் அளித்த நீரை வாங்கி இரு மிடறு அருந்தினேன். பாலைவன வழக்கப்படி மெல்ல உதடுகளை நனைத்து, குளிர்ந்த நீரை வாயெங்கும் கொண்டுசென்று சுவைத்து, பின் கண்களை மூடி முழுதொண்டையையும் தழுவிச்செல்லும்படியாக மெதுவாக அதை விழுங்கினேன். இயல்பாக என் கை வான் நோக்கி உயர்ந்தது. அவனை கண்களால் வாழ்த்தி நீரை திருப்பியளித்தேன்.

”எங்கிருந்து வருகிறாய் நல்லவனே? எங்கே செல்கிறாய்?”

முதல்முறையாக அக்கேள்வி எனக்கு முற்றிலும் பொருளற்றதாக ஒலித்தது. எங்கு செல்கிறேனோ அங்கு, எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்து, அதற்கு மேல் என்ன கூறிவிட முடியும்? அவன் கண்கள் என்னை விட்டு அகலாது உற்றுப்பார்த்தன.

”மக்காவிலிருந்து வருகிறேன் அன்பரே, ரியாத் வழியாக இங்கு வந்துசேர்ந்தேன்”. சற்று தயங்கி மேலும் சொன்னேன் “இப்போது கிழக்கே செல்லவேண்டும்”

”யா அல்லா, உனக்கு என்ன பைத்தியமா? கிழக்கே பாலைதான் உள்ளது. நீ எங்களுடன் வா”

நான் புன்னகைத்து ”அல்லாவின் கருணை என் மீதிருந்தால் நான் பஹ்ரைன் சென்றடைய வேண்டும். இன்னும் எழுபது மைல் தொலைவுதான் என்றார்கள்”

காரஃபான் தலைவன் காலால் மணலை எற்றி சற்றே சீற்றம் அடைந்தவனாக திரும்பினான். ஏதோ முணுமுணுத்தபடி கையில் ஏந்தியிருந்த ரைஃபிள் துப்பாக்கியை தன் ஒட்டகத்தின் விலாவில் கட்டிவிட்டு சற்று வேகமாக என்னை நெருங்கி வந்தான்.

”இதோ பார் நண்பனே, என்னால் மனதறிந்து உன்னை இந்த பாலைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. கிழக்கே இன்னும் அறுபது மைல்களுக்கு கடும் பாலை மட்டுமே, நீரோ, மரமோ கிடையாது. அலையலையாக நரம்போடிய மணல் குன்றுகள். ஆனால் உன் கண்களை பார்த்தால் உன்னை துளியும் மனம் மாறச்செய்ய இயலாது என்று தெரிகிறது. அல்லா உன் மேல் கருணையோடிருக்கட்டும்”, அவன் ஒற்றை மூச்சில் சொல்லிமுடித்து தன் சாட்டையை சொடுக்கினான், “மூத்தவனே!” என்று தன் மகனை அழைத்தான்.

சற்றே வினோதமாக ஓடிவந்த அந்த இளைஞனிடம் “நம் விருந்தாளிக்கு தேவையானதை கொடு, இவர் இன்றிரவு நம்முடன் தங்கட்டும்” என்றபடி என்னை பார்த்தான். என் கண்களை பார்த்து மேலும் உறுதி செய்துக்கொண்டு அவனிடம் சொன்னான். “நாளை அதிகாலை இவர் புறப்படுவார். இன்ஷால்லா!”

அவனது மூத்த மகன் அங்கு மணற்பரப்பில் அவர்கள் தற்காலிகமாக எழுப்பியிருந்த ஆறு பெரிய கூடாரங்களில் ஒன்றிற்கு என்னை அழைத்து சென்றான். பாலைவன கிணற்றை சுற்றி அவர்கள் சீராக அவற்றை வடிவமைத்திருந்தனர். அந்தியின் அரையிருளில் அவை இருளை விழுங்கிய பூதங்களாக பிரமைபிடித்து நின்றன. சில கூடாரங்களின் உள்ளிருந்து சிறு பேச்சசொலிகளும் சலசலப்பும் கேட்டன. அவற்றில் ஒன்றன் முன் சற்று வயதான இரு பெண்கள் அமர்ந்துகொண்டு ஆட்டின் தோலால் செய்யப்பட்ட, அதன் உடல் வடிவிலேயே உப்பியிருந்த பையை கயிற்றில் கட்டி குலுக்கிக் கொண்டிருந்தனர். அவ்வாறு பைகளில் ஆட்டுப்பால் தயிரை பாதி நிறைத்து, அதை கயிற்றில் கட்டி தொங்கச்செய்து, மாறி மாறி முன்னும் பின்னுமாக குலுக்குவது தான் அவர்கள் வெண்ணையை பிரித்தெடுக்கும் வழிமுறை. ஊரில் புழையோரம் இரவில் கேட்கும் தவளை சத்தங்கள் போல உள்ளே தயிர் கொப்பளிக்கும் ஓசை எழுந்தது. கூடவே அதன் கடுமையான புளித்த காரநெடியும்.

கூடாரங்களை சுற்றிலும் ஆடுகளுக்கான பட்டி. இருட்டிய பிறகும் அவை ஓலமிட்டபடியே இருந்தன. கிணற்றிலிருந்து அவற்றுக்கு சிலர் வாளிகளில் நீர் இறைத்து கொண்டு சென்றனர். காற்றில் அவற்றின் மூத்திரவாடை அவ்வபோது கனமாக எழுந்து வந்தது. ஆனால் நான் அதற்கு மிகவும் பழகியிருந்தேன். மூன்று மாதங்களுக்கு மேல் நான் மேற்கே பெடூக்களுடன் சேர்ந்து ஆடு மேய்த்திருக்கிறேன். அவற்றின் வாடையும், சத்தமும் உள்ளே ஆழத்தில் பதிந்துவிட்ட ஒன்று. பாலைவனத்தின் வயிறு போல அவை ஓயாது எல்லாவற்றையும் உண்டு செரித்தன. சிறு இலைகளும், காய்ந்த புற்களும், கற்பாசிகளும், முட்களும் கூட அவற்றுக்கு போதும். பசி மட்டுமே நித்தியமாக அவற்றை உயிர்ப்பித்தன. துணியையோ, கயிற்றையோ கூட சற்று கவனக்குறைவாக விட்டால் அவை தின்று விடும். இந்த பாலைவனம் மட்டுமே அப்பெரும் பசியை தாங்கிக்கொள்ள முடியும், அதை பொத்தி வைக்க முடியும் என தோன்றும்.

ஆடுகளைத் தவிர அங்கே கூடாரங்களை சுற்றி ஏராளமான ஒட்டகங்களும் கழுதைகளும் நின்றன. அவை ஏமனிலிருந்து சுமார் முன்னூறு மைல்களுக்கு மேல் சுமந்து வந்திருந்த பொதிகள் எல்லாம் கூடாரம் ஒன்றில் பத்திரமாக அடுக்கப்பட்டிருந்தன. கூடாரங்களை ஒவ்வொன்றாக கடந்து சென்று சற்றே ஒளியூட்டப்பட்ட அந்த கடைசி கூடாரத்தை வந்தடைந்தோம்.

என்னை அழைத்து சென்ற இளைஞனின் பார்வையிலும் உடலசைவுகளிலும் அவன் தந்தையின் கூர்மை இருக்கவில்லை. சற்றே குள்ளமான கரிய உருவம். கொஞ்சம் பருமனாக இருந்தாலும் உடல் வலுமிக்கவனாக இருந்தான். இடமும் வலமுமாக ஆடியாடி அறிவு முதிர்ச்சி அற்றவர்களுக்கே உரிய அழுத்தமான நடையுடன் முன்னால் நடந்து சென்றான். சட்டென்று தோன்றியது, அவனால் இவ்வுலகில் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை என. எத்தனை உயரிய நிலை அது! மிகவும் சுந்தரமான ஒரு மழுங்கல்.

கரிய பழுப்பு நிற ஆட்டுத் தோல்களால் சேர்த்து தைக்கப்பட்ட அந்த கூடாரம் தான் அங்கிருப்பவற்றிலேயே மிகப்பெரியது. தொங்கும் திரைகளால் அதற்குள் அறைகள் போல பகுக்கப்பட்டிருந்தன. “உள்ளே வாருங்கள், சகோதரரே”, அவன் என்னை அழைத்துச்சென்று தரையில் விரிக்கப்பட்ட பழைய கம்பளம் ஒன்றில் அமரச்செய்தான். திரைக்கு மறுபுறம் முக்காடு அணிந்த பெண்கள் சிலர் சுற்றியமர்ந்து இடைவெளியில்லாமல் ஒரே குரலில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் உருவம் அவ்வபோது காற்றிலாடிய திரையில் தெளிந்து மீண்டும் மங்கியது. அந்த இளம் வயதினன் தன்னை இஸ்மாயில் என்று அறிமுகம் செய்துகொண்டான். நான் அமர்ந்துகொண்டபின் என் எதிரிலேயே மணலை குவித்து ஒரு மேடாக சமப்படுத்தி அதன்மீது ஒரு பையிலிருந்து கரித்துண்டுகளை எடுத்து அடுக்கிக்கொண்டே அவன் பேச துவங்கினான். பதில்கள் எதையும் எதிர்பாராதவனாய், ஒரு கடமையைப் போல அவன் பேசினான்.

“நீங்கள் என் தந்தையிடம் சொல்வதை கேட்டேன். எதற்கு கிழக்கே போக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறீர்கள்? எங்களுடன் வடக்கே வரலாம் அல்லவா, நாங்கள் பாக்தாத் வரை செல்கிறோம். குவைத் சென்று ஒரு மாதம், பின் அங்கிருந்து ஃபூரத் ஆற்றின் கரைவழியாக பாக்தாத். வளம் மிக்க மண் அங்கே. சரி, உங்கள் விருப்பம் தான், அதற்கு நான் எதிர் கூறுவது சரியாக இருக்காது, ஆனால் பாக்தாதிலிருந்து நீங்கள் எங்கும் செல்லமுடியும். அங்கே வெள்ளையர்களின் வாகனங்கள் உண்டு, விளக்குகள் உண்டு, மின்சாரம் உண்டு, இன்னும் என்னவெல்லாமோ, அவர்களுக்கு வானத்தில் பறக்கவும் நீருக்குள் மூழ்கிச்செல்லவும் தெரியும். பாக்தாதில் இல்லாதது எதுவுமே இல்லை நண்பரே, யோசித்து பாருங்கள், எதையும் ஆழமாக சிந்தித்து பார்த்தே முடிவுகள் எடுக்க வேண்டும்”

அவன் முகத்தில் மிகவும் துல்லியமான ஒரு அறியாமை மிளிர்ந்தது. நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. பாக்தாத்! எத்தனை பெரிய ஊர், எத்தனை பெரிய பண்பாடு. பேரரிஞர்களின் ஊர், திருடர்களின் ஊர், மன்சூர் அல் ஹலாஜின் ரத்தம் ஒழுகிய ஊர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரத்யேக அழைப்புக்குரல் இருந்தது. தலைக்குள் அது விழுந்து தவிர்க்கமுடியாதாகி பழுத்து உதிரும் போது நான் அங்கிருப்பேன். மீண்டும் மீண்டும் அதே மக்கள்தான், எளியவர்கள், வசதியானவர்கள், புன்னகைப்பவர்கள், வசைபாடுபவர்கள், உழைப்பவர்கள், சுரண்டுபவர்கள். மனிதனின் எல்லா மேன்மைகளும் தவறாது அவன் கீழ்மைகளால் நிகர் செய்யப்பட்டிருந்தன. இந்த ஐந்து வருடங்களில் நான் பாரசீகத்தையும் எகிப்தையும் கடந்து அல்ஜீரியா வரை சென்றுவந்து விட்டேன். எங்கிருந்து தொடங்கினேன் என்று நினைவில் இல்லை, எங்கு எந்த புள்ளியில் இங்கு இவ்விடத்தில் நான் வந்தடைவது தீர்மானிக்கப்பட்டிருக்கும்? நான் பிறந்த தருணத்திலா? அல்லது என் இல்லத்தில் இருந்து முதல் காலடி எடுத்து வைத்தபோதா? வைக்கத்தை அடுத்த அந்த சிற்றூருக்கும் இந்த பாலைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்? இது வரை வந்தது விதியென்றால் அதுவே என்னை கொண்டு செல்லட்டும் என நினைத்துகொண்டேன்.

அவன் கரித்துண்டுகளை சிறு நெருப்பால் விசிறிப் பற்றவைத்துவிட்டு கேட்டான், ”நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், கிழக்கே வெகு தொலைவா?”

“ஆம், ஹிந்துஸ்தான்.”

“யால்லா!” அவன் ஆச்சரிய குரல் எழுப்பி அருகில் வந்தான், “நான் சிறுவயதில் கைபரை கடந்து முல்தான் வரை வந்திருக்கிறேன், பல பாலைகளை தாண்டி அங்கு நாங்கள் அத்தரும் பேரிச்சையும் கொண்டு சென்றோம், அதை தாண்டியும் ஊர்கள் நிறைய இருக்கின்றனவா?”

”ஆம், நிறைய நிறைய ஊர்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அவை நீண்டு கொண்டேயிருக்கும். சென்றுகொண்டேயிருந்தால் மீண்டும் துவங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்து விடுவோம் என்கிறார்கள்”

இஸ்மாயில் என்னை சற்று நேரம் கண்ணெடுக்காமல் திகைத்துப்பார்த்தான். அவனை தேவையில்லாது குழப்பிவிட்டேன் என தோன்றியது. நான் கால்களை நீட்டிக்கொண்டு சற்று சரிந்து அமர்ந்தபடி சொன்னேன் “வெள்ளையர்கள் அப்படி பல முட்டாள்தனமும் சொல்கிறார்கள்”.

அவன் சட்டென்று விடுபட்டவனாக கண்கள் விரிய உரக்க நகைத்தான் “ஆமாம். என்ன முட்டாள்தனம்!”

நானும் அவனுடன் சேர்ந்து சிரித்தேன். பல மாதங்களுக்கு பின் நான் அன்றுதான் சிரிக்கிறேன் எனத் தோன்றியது. அப்போது திரைக்கு மறுபுறமிருந்து ஒரு ஒற்றை சிரிப்பொலி எழுந்தது. கரிய வானில் வெள்ளித்தீற்றல் போல. மதுரம், மென்மை. பின் சில சலசலப்புகள் எழுந்து அதை அடங்க சொல்லின. திரை பொங்கியமைந்ததில் விளக்கொளி முகங்கள் தோன்றி மறைந்தன. அப்போது தான் நான் கவனித்தேன். நாங்கள் பேசத்துவங்கிய போதே அவர்கள் பேச்சொலிகள் நின்றுவிட்டிருந்தன.

யாரவள்? வேறு யார், அவள்தான், ஆயிரம் பெண்களாக எழுந்து வருவதெல்லாம் அவள் ஒருவள்தான். அவள் குறும்பும் மீறலும் தேசாந்தரங்கள் எங்கும் வீசுவது. நிழல் போல என்னை தொடர்வது.

“சகோதரா, தே பாணம் அருந்துகிறீர்களா?”

அவன் கேட்டது என் சிந்தனையை இரண்டாக பிளந்தது. கண்கள் மூடி பெருமூச்செரிந்து “ம்ம்” என்றேன்.

அவன் ஒரு சிறு கிண்டியில் நீரை நிரப்பி நெருப்புக் கங்கின் மீது வைத்து மெல்ல விசிறினான். நெருப்பு சற்று சீறி முனிந்து தீ பொறிகளை உமிழ்ந்தது. வெம்மை அலைபோல எழுந்து என் புறங்கைகளை சுட்டது, மெல்ல உள்ளங்கையால் வருடி குளிரேற்றிக்கொண்டேன்.

“சகோதரா, உனக்கு ஹபூபுகள் பற்றி தெரியுமா? தரையிலிருந்து வான் வரை எழுந்து வரும், மணலும் புழுதியும் சேர்ந்து எல்லாவற்றையும் மூடி மூழ்கடித்துவிடும். ஹபீப் அல்ல ஹபூப், புரிகிறதா?” அந்த வார்த்தை விளையாட்டை எண்ணி தானே ஒரு கணம் வியந்து கொண்டான். “ஹபீப் போன்றதல்ல ஹபூப், அவள் அணைப்பு ஆளைக்கொல்வது. பின் கோடையில் தான் அவை மிக அதிகமாக எழும். தனியாக செல்லும்போது அவற்றிலிருந்து தப்புவது மிகவும் சிரமம். புழுதியும் சேர்ந்து எழுந்தால் மூச்சில் அடைத்துக்கொள்ளும், மூச்சை இழுக்க இழுக்க மேலும் புழுதி உள்ளே செல்லும், யால்லா!” அதை கற்பனை செய்து பார்த்தது போல உடலை ஒருகணம் உலுக்கிக்கொண்டான். “நாங்கள் எப்போதும் அவை அதிகம் எழாத பாதையிலேயே பயணம் செய்வோம். பாலைநில பெடூக்களுக்கு மட்டும்தான் அவை வருவதை கண்டுகொள்ளமுடியும்”

அவன் ஒரு சிறு புட்டியிலிருந்து மூலிகைகளை போல எதையோ எடுத்து கொதிக்கும் நீரில் போட்டான். கலத்திலிருந்து நன்றாகவே ஆவியெழ துவங்கியது. அரை நிமிடம் கொதிக்கவிட்டு அவன் மெல்ல அதை வெண் துணியொன்றால் வடிகட்டி ஒரு வெண்களிமண் கோப்பையில் ஊற்றி என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான். ”எங்கள் வரவேற்பை ஏற்றுக்கொள்க, நண்பரே”

நான் நன்றி கூறி அதை பெற்றுக்கொண்டேன். நறுமணத்துடன் கோப்பையிலிருந்து ஆவி எழுந்து நடமாடியது. அதை மெல்ல ஊதி ஒரு மிடரு அருந்தியபோது தெரிந்தது. அது தேயிலையே அல்ல. இங்கே பாலைவனத்தில் பெடூக்கள் அருந்தும் ஒரு பானம் அது. ஒருவகை மரப்பட்டையை நீரில் இட்டு காய்ச்சியெடுப்பது. ஆனால் என் தலையின் இருபுறமும் பெரும் எடை கொண்டு அழுத்திய வலிக்கு அது இதமாக இருந்தது. அன்று மட்டும் நான் கடும் வெப்பத்தில் இருபத்தினான்கு மைல்கள் நடந்திருந்தேன். சூடான அப்பானத்தை அருந்தியபடியே மெல்ல இடதுகையால் என் பாதங்களை பிடித்து அழுத்தி நீவிக்கொடுத்தேன். இனிமையான உளைச்சல் ஒன்று விர்ரென்று தோன்றி நரம்புகளினூடாக பரவியது. ஆம், இனிமை இனிமை.

நான் அவனிடம் கேட்டேன், “அப்படியென்றால் நீங்கள் பாலைவன மக்களில்லையா?”

”யா அல்லா, நாங்கள் வியாபாரிகள், எங்களிடம் தங்க நாணயங்களும் வெள்ளி நாணயங்களும் உண்டு சகோதரா, நாங்கள் ஒருபோதும் பெடூக்களுடன் ஏதும் வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் குளிப்பதில்லை, தொழுகைகள் செய்வதில்லை. நாங்கள் ஒட்டகங்களை மட்டும் அவர்களிடம் இருந்து வாங்கிக்கொள்வோம். அவர்களை போல யாரும் ஒட்டகங்களை வளர்க்க முடியாது. வெளியே பார்த்தீர்கள் அல்லவா, அல் மஹ்ரா ஒட்டகங்கள்… யால்லா, நாங்கள் பெடூக்கள் அல்ல”

அவன் பேசிக்கொண்டே ஒரு துணிப்பையிலிருந்து கோதுமை மாவை கைகளாலேயே அள்ளி எடுத்து சிறிது நீரை ஊற்றி பிசையத் தொடங்கினான். நடுவே என்னை ஏறிட்டுப்பார்த்தவன் அச்சிறு ஒளியிலும் நான் புன்னகைப்பதை கண்டுகொண்டான்.

அவன் மேலும் உணர்ச்சிவசமானவனாக சொன்னான் “ரியாத்திலும் பாக்தாத்திலும் ஏமனிலும் எங்களை பெடூக்கள் என்றே பார்க்கிறார்கள், அங்கிருக்கும் சீமைக்காரர்களுக்கு புரிவதில்லை, அவர்கள் வேறு நாங்கள் வேறு, எங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பே கிடையாது நண்பரே, புரிகிறதா?”

முதல்முதலாக அவன் முகத்திலும் கூட யார் மீதோ சற்று துவேஷத்தை பார்த்தேன். “ஆமாம், சரிதான்” நான் ஆமோதித்தேன். பானத்தை அருந்தியபடியே நான் அவன் மாவை பிசைவதை பார்த்திருந்தேன்.

பிரிட்டிஷார் இங்கு ஆட்சிக்கு வந்த பிறகு பாலைவன நாடோடி மக்களுக்கான ’பெடூவின்’ என்னும் சொல் மிகவும் பிற்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் புழக்கமானது, எனவே பெடூக்களில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தங்களை அச்சொல்லில் இருந்து வேறுபடுத்திக்கொள்ள பலவிதமாக முயன்றனர். இவர்களும் நாடோடிகள்தான், இவர்களுக்கும் நிலையான வீடென எதுவும் கிடையாது என்றாலும், உண்மையில் வெள்ளையர்களிடம் வியாபாரத் தொடர்பு இருந்ததால் மொராக்கொ முதல் பாரசீகம் வரை இவர்களின் கைகளில் நன்றாகவே செல்வம் புழங்கியது.

அதே நேரம் ஆடுகளும் ஒட்டகங்களும் மட்டுமே மேய்த்து திரிந்த ஒரு பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியவர்களாக பணப் பரிவர்த்தனைக்குள்ளேயே வரமுடியாமல் நின்று விட்டனர். கிழிந்த ஆடைகளும் தோல்பைகளில் நீரும் என அவர்கள் கடும் பாலைகளில் மட்டுமாக தங்களை தனித்துக்கொண்டனர். அவர்கள் மைய அரபி மொழிகூட பேசவில்லை, அவர்கள் பண்பாடு இன்னமும் பல்லாயிரம் வருட பாலைவன பண்பாடாகவே நீடித்தது. ஆயுதங்கள் இல்லாததால் அவர்களால் வியாபாரிகளுடன் பொருத இயலவில்லை. ஆனால் உண்மையான வியாபாரிகளுக்கு பெடூக்கள் மீது மறைமுகமாக பெரும் மதிப்பிருந்தது. பாலைவனத்தின் ஆத்மாவில் குடியிருப்பவர்கள் என்று மூத்த காரஃபான் தலைவர்கள் அவர்களை வியப்பும் பணிவுமாக குறிப்பிடுவதை கண்டிருக்கிறேன். இவர்களும் பெடூக்கள் தான், செல்வம் உள்ள பெடூக்கள். அச்செல்வம் இப்பாலைவனத்தில் எதை எடுக்கிறது எதை கொடுக்கிறது என்பதை அறியா நாடோடிகள்.

இஸ்மாயில் பிசைந்த மாவை மொத்தமாக ஒரே பெரிய ரொட்டியாக கைகளாலேயே அடித்து தட்டையாக்கினான். காற்றிலேயே தூக்கி தூக்கியெறிந்து திறமையாக அதை கிழியாமல் பிடித்தான். முதலில் அதை நெருப்பு கங்குகளின் மீது விரித்தான், சற்று இறுகியவுடன் அக்கங்குகளை எடுத்துவிட்டு சூடான மணல் மீதே அதை விரித்து வைத்தான். ரொட்டி வெறும் மணலின் மீதே கிடந்து வெந்தது. பெடூக்கள் மிக அரிதாகவே பாத்திரங்களை பயன்படுத்தினர். மணல் மீது இப்படி ரொட்டியை வேகவைப்பது அதன் எல்லா இடத்திலும் சமமாக முறுகச்செய்யும். கோதுமை பொன்னிறமாகி மெல்ல கருகத் துவங்கியவுடன் உணவின் வாசம் எழுந்து நாவில் என்னையறியாமல் எச்சில் ஊறியது. நான் உணவுண்டு இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகியிருந்தன, அதற்கு முன்னும் பல நாட்கள் அரைப் பட்டினிதான். அது ஒன்றும் புதிதல்ல, இந்த ஐந்து வருடங்களில் பசியின் சுவைக்கு நான் நன்றாகவே பழகியிருந்தேன். காலி வயிற்றை பற்றிப்படர்ந்து அந்த தீ எழும்போது, என்ன ஒரு வாசம்! நாவில் எச்சிலூற அதை சுவைப்பேன், எத்தனை ருசி! பல பொழுதுகள் நான் அதை மட்டுமே உண்டேன். சமயங்களில் அதிர்ஷ்டம் இருந்தால் சிறு பசியேப்பமும் கூட வாய்க்கலாம். பாலைவனம் என்பதால் முடிவில் சற்று தாகத்தையும் அருந்திக்கொள்ளலாம். பசிக்கும் உணவுக்கும் தொடர்புண்டு என்பதையே நான் மறந்திருந்தேன், அது உடலின் ஒரு பகுதியாக, நிரந்தரமாக ஆகிவிட்டிருந்தது.

இஸ்மாயில் ரொட்டியை திருப்பிப்போட்டு அதன் மீது தீ கங்குகளையும் சுடுமணலையும் அள்ளி வைத்தான். உள்ளே ரொட்டியிலிருந்து ஆவியெழ, அதன்மீது பரப்பப்பட்ட மணல் நீர் கொதிப்பது போல கொப்பளித்தது. கலம் ஏதுமில்லாமல் இப்படி ரொட்டி சமைப்பது பெடூக்கள் எல்லாரிடமும் பரவலாக இருந்த வழக்கம். முழுமையாக வெந்த பின்னர் கைகளால் ஓங்கி இருபுறமும் தட்டி மணலை உதிர்ப்பார்கள். பெரும் பகுதி உதிர்ந்துவிடும். ஆனால் சிறிது புழுதிமண்ணுடன் உண்பதே அதன் சுவை. இஸ்மாயில் நெருப்பு கங்குகளை கைகளாலேயே எடுத்து போட்டான், ரொட்டியை வெறும்கைகளாலேயே பிரட்டிப்போட்டு பின் ஊதி அடித்து மணலை உதிர்த்தான். அவன் கைகள் முற்றிலும் காய்த்துப் போயிருப்பதை கவனித்தேன். ரொட்டியை எடுத்து ஒரமாக மடித்து வைத்தான். கட்டைவிரல் கனத்தில் நீள்வட்டமாக இருந்த அதை நான்கு பேர் தாராளமாக உண்ணலாம்.

”சஹிபா! அன்பே” என்று அவன் குரல் கொடுக்க அடுத்த ’அறை’யிலிருந்து அவன் தங்கை வந்தாள். என்னை வணங்கிவிட்டு அவள் மெல்ல அமர்ந்து எங்களுக்கு பரிமாற துவங்கினாள். திரைக்கு அப்பாலிருந்து அடக்கிய சிரிப்பொலிகள் எழுந்தன. சஹிபா கையில் கொண்டுவந்திருந்த வாளியில் ஆட்டுத் தயிரில் சிறிது மிளகும் உப்பும் இட்டு வேகவைத்த ஆட்டிறைச்சி பெரிய வெண் துண்டுகளாக ஊறிக்கிடந்தது. அவள் அதை எடுத்து ரொட்டியிலிருந்து பிய்த்த ஒரு பாதியின் மீது மூன்று நான்கு துண்டுகளாக வைத்துவிட்டு சிறு புன்னகையுடன் என்னிடம் நீட்டினாள். எப்படியும் ஒரு ராத்தல் இறைச்சி இருக்கலாம். அவள் கண்கள் என்னை ஒரு கணம் சந்தித்து பின் தாழ்ந்தன. பின் அரைநொடியில் மீண்டும் அவை எழுந்தன. நான் அவள் நீட்டியதை கைகளில் வாங்கிக்கொண்டு புன்னகைத்தேன். என் உடல் கூசியது. தாடியும் மீசையுமாக பரதேசி கோலத்தில் நான் அப்போது இருந்தேன். என் பெரிய மூக்கு அவளுக்கு வித்தியாசமாக தெரிந்திருக்கலாம். இல்லை, அவள் பார்வை சுட்டெரிக்கும் தீவிரத்துடன் என்னை தொட்டது. என் உடல் என்னையறியாமல் புல்லரித்து திமிற நான் பார்வையை விலக்கிக்கொண்டேன். தலைக்குள் ஆயிரம் மின்னல்கள் வெட்டியது போல அவள் பார்வை மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. அந்த ஒருகணம் அவர்களுடன் பாக்தாத் வரை சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது. மறு நொடியே நான் என்னை நிந்தித்துக் கொண்டேன். அவள் எழுந்து சென்றாள். அவளது மென்மையான வாசம் மட்டும் அங்கு தங்கியிருந்தது. அனைத்துக்கும் பின் இப்பூமியில் மனிதனை வாழ வைக்கும் அந்த வாசம். அதற்கு என் ஆயிரம் முத்தங்களை அளிப்பேன்.

இஸ்மாயில் எஞ்சிய ரொட்டியில் கால்வாசியை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தான். அவன் இறைச்சி எடுத்துக்கொள்ளவில்லை என்பதை கவனித்தேன்.

“தந்தை அருகே சுற்று வட்டத்தை வேவு பார்க்க சென்றிருக்கிறார். இந்த பகுதியில் திருடர்கள், கொள்ளையர்கள்தான் அதிகம். கொஞ்சம் அசந்தாலும் ஒட்டகங்களையோ ஆடுகளையோ அவிழ்த்து சென்றுவிடுவார்கள். அவர்கள் இல்லையென்றால் ஓநாய்கள். இரண்டு மூன்று மைல் இடைவெளி விட்டு அவை எங்களை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால் தந்தையின் கண்களில் இருந்து எதுவும் தப்பாது, ஒற்றை கண்ணைமூடி வெடிவைத்தால் ஒரு மைல் தொலைவில் இருந்துகூட சிறு குருவியின் அலகை அவரால் சுட முடியும்”

“அதை நீ பார்த்திருக்கிறாயா?”

“இல்லை, அப்படி எதுவும் குருவிகள் இதுவரை வசமாக வந்ததில்லை”

நான் ரொட்டியை பிய்த்து எடுத்தேன். வெளியே கடினமாக இருந்தாலும் உள்ளுக்குள் மிக மென்மையாக அது வெந்திருந்தது. தயிரில் நெடுநேரம் வெந்து கனிந்திருந்த இறைச்சியில் ஒரு துண்டை அதனால் கிள்ளியெடுத்து வாயில் போட்டு மென்றேன். என் வயிறு கொடிய மிருகம் ஒன்றை போல உருமியது. உணவை ஏற்காதது போல குடலை பிரட்டியது பசி. இன்னும் என் மீது சினம் கொண்டிருப்பது போல அது முரண்டது. நான் மெல்ல தொண்டை குழியில் மென்று இறக்கினேன். வயிற்றின் தீ ஆயிரம் கைகளால் அதை பற்றிக்கொண்டது. மீண்டும் மீண்டும் எழுந்தது உறுமல் ஒலி. கத்தியால் குத்தி இறக்கியது போல ஓரங்களில் வலித்தது. மேலும் மென்றேன். மூச்சு முட்டியது.

இஸ்மாயில் என்னை பார்த்து புன்னகைத்தான். “உங்களுக்கு நல்ல பசியிருக்கும் என தெரிந்தது சகோதரா, அதனால் தான் சஹிபாவிடம் இறைச்சி எல்லாவற்றையும் வைக்க சொன்னேன்.” அவன் வெண்பற்கள் அனைத்தும் தெரிய நகைத்தான்.
என் கண்களில் அனிச்சையாக கண்ணீர் பெருகியது.

000

பதிப்பகத்தார் அறிவிப்பு : வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையை ஒட்டிப் புனையப்பட்ட ‘மருபூமி’ சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பாக தனி நூலாக அச்சிலும் இணையவழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது அஜிதனின் முதல் சிறுகதைத் தொகுதி.

அஜிதன்

அஜிதன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்

2 Comments

  1. வார்த்தைகளாலேயே வண்ணம் பூசி உயிர் கொடுத்து என்னவொரு படைப்பு! மனக்கண்ணின் முன்பு வருபவ்ற்றில் சில, சிறு விவரம் புரியாத அச்சம், அழகு, உறவு என்று எத்தனை பரிமாணங்கள்! சிறப்பு.

  2. பாலைப் பெண்கள் தயிரிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கும் தழுக் சத்தத்துக்கிடையே ஊரின் புழை நினைவுக்கு வருகிற இடம் நற்சேர்க்கை. எழுத்தோட்டம் ஒட்டகத்தின் நிழல்போல கூடவே கூட்டிச் செல்கிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.