/

போர்க் ரோஸ்ட் : அஜிதன்

வழுக்கையை மறைக்க தலையின் ஒரு புறமாக நீளமாக வளர்த்திருந்த முடிக்கற்றை எண்ணை ஊறி வலது காதின் மீது தொங்கியபடி காற்றில் ஆடி நின்றது. அதையும் பார்த்துக்கொண்டு என்னால் அப்பாவின் அந்த தீவிர முகபாவனையை பொருட்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் என் கண்களில் தெரியும் சிரிப்பை ஒருபோதும் புரிந்துகொண்டவரல்ல. கையில் கவனமாக நுணுக்கி வைக்கப்பட்ட அரைச்சொட்டு டூத் பேஸ்டுடன் தன் தள்ளா முதுமையையும் பொருட்படுத்தாது தீர கடமையை ஆற்ற காத்திருந்தது டூத் பிரஷ். அப்பா என்னை கொல்லைப்புறத் தோட்டத்து மாமரத்தின் அடியில் ரகசியமாக கூட்டிச்சென்று மிகுந்த யோசனைக்கு பின் சொன்னார்,

“லேய், இந்த பன்னி எறச்சி எங்க கிடைக்கும்னு தெரியுமால?”

இந்த வயதில் இவருக்கு என்ன இது விபரீத ஆசை? நான் மேற்கொண்டு எதுவும் கேட்கும் முன்னம் அவரே சொன்னார்.

“ஆச்சிக்கு நேத்து ராத்திரி பூராம் சுவாசமுட்டுலெ, அதிக காலம் இருக்க மாட்டா.”

பின்னால் திரும்பி வீட்டை ஒரு நோட்டம் விட்டுவிட்டு, ”காலைல போய் என்ன செய்யீம்மான்னு கேட்டென், ’லே மக்கா, எனக்கு பன்னியெறச்சி சாப்பிடனும்லே, நான் சாவதுக்கு முன்ன வாங்கித்தாலெ’ ங்கா. எங்க கிடந்து இந்த ருசிய பிடிச்சான்னு தெரியல”

நான் என்னையறியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தேன். அப்பா சட்டென்று மேலும் தீவிரமாகி என்னை அணுகிவந்து. “நீ எங்கியாம் கிடைக்குமான்னு பாக்கியா? எனக்கு எங்க கேக்க என்னன்னு ஒன்னும் தெரியல பாத்துக்க”

அந்த கணம் அப்பாவின் முகபாவம் உண்மையில் சற்று பரிதாபமாகவே இருந்தது. அவர் அனேகமாக தன் வாழ்நாளில் முதல்முதலாக என்னிடம் நேரடியாக உதவி என்று கேட்டது இதுவாகத்தான் இருக்கும். பத்தாம் வகுப்பிலிருந்தே நான்தான் வீட்டுப் பொறுப்புகளை பெரும்பாலும் கவனித்து வருகிறேன் என்றாலும் அவர் அதை பெரிதாக காட்டிக்கொள்ளமாட்டார். ஆனால் இப்போது தெளிவாகவே அவர் என் முன் இறங்கி வந்துவிட்டார். இது கூட இல்லையென்றால் என் பொடிமீசைக்கு பின் என்ன மதிப்பு? இது ஒரு துவக்கம் தான் என தோன்றியதால் உள்ளே எழுந்த அகங்காரத்தை அதிகம் வெளிக்காட்டாமல் நானும் சற்று கவலைகூர்ந்த முகத்தை வைத்துக்கொண்டு “செரி பாக்கேன்” என்று சொல்லி பைக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

உண்மையில் பன்றிக்கறிக்கு எங்கு செல்வது என்று எனக்கு எந்த யோசனையும் இல்லை. எனக்கு தெரிந்தது ஒரே வழிதான். ஆற்றுப் பாலத்திற்கு வந்து நின்றுவிட்டு ஜோஸுக்கு போனை அடித்தேன். அவன் வீடு ஆற்றை கடந்து உருவாகிவரும் புதிய குடியிருப்பில் இருக்கிறது. எங்கள் வீட்டைப்போல பழையது அல்ல அது, மேயின் ரோட்டை ஒட்டியே இருக்கும். கட்டி நான்கைந்து வருடங்கள்தான் ஆகியிருக்க வேண்டும். கோவிலை ஒட்டியுள்ள எங்கள் வீட்டிலிருந்து அத்தியாவசியத்திற்கு பேருந்து பிடிக்க வேண்டும் என்றாலே முக்கால் கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

ஜோஸ் ஏதோ தாளமுடியாத நகைச்சுவைக்கு மத்தியில் போனை எடுத்தது போல, பேசி முடித்ததும் அதை மீண்டும் தொடரப்போவது போல, தன் வழக்கமான அதியுற்சாக குரலில் “லே சொல்லு” என்றான்.

”ஒரு வேல இருக்கு, ஆத்து பாலம் வாரியா?”

“குளிக்க போறேன் மக்கா, பத்து மினிட்டு, நீ வீட்டுக்கு வாயான்”

‘’ஆஞ்செரி, நேரம் ரெடியாவு” நான் வண்டியை எடுத்து புறப்பட்டேன்.

ஜோஸ் வீட்டிற்கு செல்லும் சாலையின் இருபுறமும் குளங்களும் வயல்களுமாக வந்து கொண்டிருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிமுடித்த நாளில் இருந்து நான் அவன் வீட்டு பக்கமாக அதிகம் போகவில்லை. ஆனால் அவனது ரிசல்ட்டை குறித்து அவனைவிட நான் தான் அதிகம் கவலைகொண்டிருப்பேன். படிப்பு வரவில்லை என்றாலும் கைவசம் தொழில்நுட்பத்தால் வகுப்பு தேர்வுகளில் டீச்சருக்கு சந்தேகம் வராத அளவுக்கு கூடுதல் குறைவு இல்லாமல் மதிப்பெண் எடுத்து விடுவான். ஆனால் பொதுத்தேர்வில் ஜோஸ் என்ன செய்தான் என்று எங்கள் எல்லாருக்கும் மர்மமாகவே இருந்தது.

பத்து ‘மினிட்’டில் நான் வீட்டை அடைந்தபோது, அவன் குளிக்க சென்றிருக்கவில்லை. வீட்டை நெருங்கும் முன்னாலேயே ”ரா நூ காவாலைய்யா ஆ ஆ ஆ” என்று தெருவெல்லாம் அதிரவிட்டுக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் துண்டுடன் தலையாட்டிக்கொண்டு நின்றவனை “சீக்கிரம் குளிச்சிட்டு வாலெ கோம்பையா”என்று கடிந்தேன். சென்ற மாதம் தான் நானும் அவனும் மார்த்தாண்டம் சென்று அந்த ஸ்பீக்கர் செட்டை எடுத்து வந்தோம். வந்ததில் இருந்து இந்த நிலைமைதான். இன்னும் சில நாட்கள் கழித்து வேறெதாவது நாட்டம் வந்துவிடும்.

வீட்டு சிட்-அவுட்டில் அவனது கொள்ளுப்பாட்டி அமர்ந்திருந்தாள், காலம் கைமறதியாக விட்டுச்சென்ற வஸ்துவைப்போல. அவளுக்கு தொன்னூறு வயது கூட இருக்கலாம். கண் சுத்தமாக தெரியாது, ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை குடிகொண்டிருக்கும். அவள் அதிகம் பேசி நான் கண்டதில்லை. ஆனால் இப்போது நீட்டி வடித்த காதுகளில் பாம்படமும் கருப்பு கண்ணாடியும் அணிந்து அமர்ந்திருந்தவள் எந்த நொடியிலும் தமன்னாவுடன் இணைந்து ’காவாலா’ என்று கேட்டுவிடுவாள் என்றிருந்தது. அருகே சிட்-அவுட் கம்பியில் கட்டிவைத்த பலா இலையை அவளைப் போலவே நீண்ட காதுகள் கொண்ட குட்டி ஆடு ஒன்று நிமிண்டிக்கொண்டிருந்தது.

நான் மதில்சுவருக்கு வெளியிலேயே வண்டியை விட்டுவிட்டு காத்திருந்தேன். புதிதாக நட்டிருந்த முருங்கை மரம் சட்டென்று வளர்ந்துவிட்டிருப்பதை கண்டேன். மரம் முழுக்க பூத்து குலுங்கி, தரையெங்கும் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அங்கங்கே நூல் நூலாக முருங்கை பிஞ்சுகள் தொங்கின. சிட்-அவுட்டை அடுத்த அறையில் சன்னல் வழியாக ஒரு சிறு அசைவு தெரிந்தது. நான் திரும்பிப்பார்த்தேன். ஜோஸின் தங்கை ஸ்டெல்லா தான் அது.

அவள் என்னை பார்த்தபோது நான் சற்றே அடக்கத்துடன் சிரித்து “ஏய், என்னா நல்லா இருக்கியா?” என்றேன். என் முகம் காரணமில்லாமல் இளம்சூடானது.

ஸ்டெல்லா கன்னம் குழிவிழ சிரித்து ஒன்றும் சொல்லாமல் தலையாட்டினாள்.

பின் ஏதாவது சொல்லவேண்டும் என்பது போல “அண்ணன் இதா வந்திருவான்” என்று விட்டு ஜன்னல் அருகே ஹேர்கிளிப் ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே இருளுக்குள் மறைந்தாள். என் இதயத்துடிப்பு சற்று அதிகமாகியிருப்பதை உணர்ந்தேன். அவளை ஆறாம் வகுப்பிலிருந்தே கண்டுவருகிறேன். அப்போதெல்லாம் பெயர் என்ன என்று கேட்டால் மழலையாக தலையை ஒடித்து ”தெல்லா” என்பாள். ஆனால் அந்த வயதிலிருந்தே அவள் என்னை ’அண்ணா’ என்று அழைப்பதில்லை.

சென்னையிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஜோஸின் அக்காள் மகன் பிவின் மேல் சட்டை மட்டும் அணிந்து முற்றத்து மண்ணில் அம்மணமாக விளையாடிக் கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தேன். ஏதோ கொட்டாங்கச்சியில் மண்ணை அள்ளி அதன் சிறிய ஓட்டை வழியாக ஒழுகச் செய்துகொண்டிருந்தான். கால்களை அகட்டி அமர்ந்திருந்த அவன் ஒவ்வொரு முறை முன்னோக்கி குனிந்து மண்ணை அள்ளியபோதும் அவனது ஆண்மொக்கு ஆபத்தான முறையில் மண்ணில் தொட்டு மீண்டது. அருகே சிவப்பு எறும்புகள் வேறு ஊர்ந்தன. ஆனால் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுக்கு பின்னால் காளிபிளவர் தழை வாசனை அடிக்கும் முயல்களுக்கான சின்ன பட்டி இருந்தது. பின்னால் கொல்லைப்புறத்தில் கிர்னிக்கோழி, கூண்டில் ஒரு டாபர்மேனும் சங்கிலியில் கட்டியிடப்பட்ட ஒரு சிறிய பொமரேனியன் நாய் ஒன்றும். பின் மொட்டை மாடியில் புறாக்கள், மேலும் ஆடுகள், சண்டைகோழி, கீன்னிபிக் என என்னென்னவோ.

ஜோஸின் வீட்டில் கிட்டத்தட்ட ஏழெட்டு வகை பிராணிகள் ஒரே நேரத்தில் வளர்க்கப்பட்டன. அது அவனுக்கும் அவன் தந்தைக்குமான பைத்தியம். எப்போதும் ஏதாவது ஒன்று வாங்குவதும் விற்பதுமாக இருப்பார்கள். அவனும் அவன் தந்தையும் பெரும்பாலும் அது குறித்தே உரையாடிக்கொள்வார்கள். “லேய் அந்த ஜமுனாபாரிய கொடுத்துருவோமாலெ?”, “வேணாம்ப்பா கெடக்கட்டு, குட்டி எடுக்கமுடியுமான்னு பாப்போம், இப்பம் கொடுத்தா முப்பத்தஞ்சு தாண்டாது” இப்படித்தான் அவன் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்குள் உரையாடல் செல்லும். அவனது தந்தை லாசர் மார்த்தாண்டத்தில் ரப்பர் எஸ்டேட்டுகளில் தேன்கூடுகள் வைத்திருக்கிறார். அதுதான் அவருக்கும் லாபம் தரும் நல்ல வருமானம். மற்றபடி மிருக வளர்ப்பில் காசு வந்தும் போனபடியும் தானிருக்கும்.

ஜோஸின் மீது அவருக்கு அளவுகடந்த பாசம் உண்டு, பிறர் கேலி செய்யும் அளவிற்கு. எப்போதாவது பள்ளியில் அவரை ஆசிரியர்கள் அழைத்து ஜோஸை குறித்து தங்கள் மனக்குறைகளை கூறுவார்கள். அப்போதெல்லாம் அவர் ஆசிரியர்களை பாராது, ஜோஸை நோக்கி திரும்பி நின்று கொண்டு அவர்கள் ஏதோ அவன் அழகை வர்ணிப்பதை போல, அவன் முடியை கோதி, கன்னத்தை தடவி பார்த்துக்கொண்டு நிற்பார். “ஏன்பிலெ மக்கா” என்பார் வாஞ்சையுடன். அதைக்கண்டு ஒருமுறை எங்கள் ஆங்கில ஆசிரியை மரியம் டீச்சர் தலையில் அடித்துக்கொண்டார்.

பதினைந்து நிமிடம் கழித்து முக்கால் டிரௌசருடன் சாவகாசமாக ஜோஸ் வந்தான். வந்தவழியில் பாட்டியின் பாம்படத்தை சுண்டிவிட்டபடி “என்னல காலைலயே எதோ வேலன்னா?” என்றான்.

”லேய் உங்க அக்காமவன் அன்னா ஜட்டி போடாம எறும்புக்கூட்டுகிட்ட இருக்கான் பாத்துக்கோ”

ஜோஸ் திரும்பி “லே பிவினு உள்ள போல, கருப்பட்டி மண்டையா” என்றான்.

பிவின் ஏறிட்டு பார்த்து உக்கிரமாக ”போலே” என்று வாயசைத்தான், ஜோஸ் என்னை நோக்கி திரும்பி “நமக்க மரியாதைய பாத்தேல்லா, செரி நீ சொல்லு” என்று வினவினான்.

நான் சுருக்கமாக முடிந்தவரை சிரிக்காமல் விஷயத்தை சொன்னேன். ஆனால் என்னால் முழுதாக முடியவில்லை. ஜோஸ் கண்கள் விரிய “தள்ளே!” என குரலெழுப்பினான். ஏளனம், ஆச்சரியம், அலுப்பு என எல்லாவற்றுக்கும் அவன் பயன்படுத்தும் வார்த்தை அது. ’முதியவளே!’ என்று தோராயமாக அர்த்தம் புரிந்துக்கொள்ளலாம். இந்த சந்தர்ப்பத்தில் அந்த அர்த்தம் சரியாகவும் வந்தது.

”சிரிக்காதல, எங்க கிடைக்கும் சொல்லு”

”மக்கா, போர்க் நாம ஈஸ்டர் சமயத்துல எடுக்கது தான் பாத்துக்கோ, மத்த சமயத்துல இங்க ஒன்னும் கிடைக்காதே”

“வீட்டுல சீனாட்டு சொல்லி எறங்கி வந்திருக்கேன்”

“நாகர்கோவில் தான் போணும், வடசேரி கிட்ட…” சட்டென்று சிந்தனையில் ஆழ்ந்தான். “மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ கிட்ட சில சமயம் கிடைக்கும் கேட்டியா?”

“செரி வா ஏறு”

“இந்த சப்ளி வண்டிலயா? உள்ள போடுல, என் வண்டிய எடுக்கேன்” என்றுவிட்டு வீட்டிற்குள் பாய்ந்தான்.

நான் வண்டியை உருட்டி உள்ளே இடும்முன் சாவியும் ஒரு அழுக்கு துணியுமாக வந்து, சாவியை உள்ளே போட்டுவிட்டு அழுக்குத்துணியால் பெட்ரோல் டேங்கை படீர் படீரென்று இரண்டுமுறை அடித்தான். ஐந்து கிலோமீட்டருக்கு மேல் செல்வதானால் செய்யும் சடங்கு அது. நானும் அவனும் வழியில் போஞ்சியும் குடித்து அரை மணிநேரத்தில் மார்த்தாண்டம் சென்றடைந்தோம். போர்க் ஸ்டால் ஒன்றும் அவன் சொன்ன இடங்களில் கண்களில் படவில்லை. விசாரித்து சற்று டவுனுக்கு வெளியே ஒரு பெரிய சதுப்பின் கரையில் ஒரு கடையை கண்டுபிடித்தோம். மேலே பேனரில் ஒரு அழகான பன்றிக்குட்டி உற்சாகமாக சிரித்து நின்றது. கீழே கடையில் பாதியாக வெட்டப்பட்ட மாபெரும் பன்றி ஒன்று இரண்டு கொக்கிகளிலாக தலைகீழாக தொங்க அதில் பாதியளவே இருந்த மெலிந்த ஒருவர் பக்கத்தில் நின்றபடி இறைச்சியை வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னால் ஒரு பெரிய மேசையில் மற்றொரு பெரிய வெண்பன்றி படுத்திருக்க, அதை ஒருவர் ரெஸர் பிளேடால் சவரம் செய்துக்கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனையில் எதையோ சட்டென்று நினைவுகூற முயல்வது போல வாயை திறந்தபடி கண்கள் மூடியிருந்தது அது.

பன்றி இறைச்சியை நான் அப்போது தான் நேரில் பார்க்கிறேன். வெட்டுதடியின் மீது குறுக்காக வெட்டி வைத்திருந்த அந்த கறித்துண்டு நாலைந்து அடுக்குகளாக வெண்மையில் இருந்து அடர்சிவப்பிற்கு சென்றது. முதலில் வெண்பழுப்பு தோல்வரி, பின் இரண்டு அடுக்குகளாக கொழுப்பு. மேல் அடுக்கு சற்று மென்மையாகவும் அடுத்தது சற்று இறுக்கமாகவும், அதன் கீழ் தசைகளின் மூன்று அடுக்கு ரோஸிலிருந்து சிவப்பிற்கு. அவர் அந்த பெரிய கறித்துண்டை ஒவ்வொரு முறை தொட்டு வெட்டி எடுக்கும்போதும் அது சிணுங்குவது போல மெல்ல தளும்பியது. அதன் சிவப்பு தசைகளின் ஊடாகவும் வெண்வரிகள் பளிங்கு போல ஓடின. ஏதோ வட இந்திய இனிப்பைப்போல அதை மெண்மையாக அரிந்து எடுத்து பச்சைத் தாமரை இலையின் பின்புறம் வைத்து மடித்தபோது அனிச்சையாக சற்று நாவூரியதை எண்ணி வியந்துக்கொண்டேன். ஆழத்தில் எழுந்த மேலும் முக்கியமான கேள்வி, ‘மாந்தோப்பு வீட்டு வடிவுடையம்மாள் இந்த சுவையை எங்கிருந்து அறிந்தாள்?’. ஆச்சி எங்கள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியே சென்றே நான் கண்டதில்லை.

அப்பா தனக்கே உரிய கஞ்சத்தனத்தில் மொத்தமாகவே என் கையில் இருநூறு ரூபாய் தான் கொடுத்திருந்தார். அங்கு விலைப்பலகை கிலோ முந்நூறு என்று சொன்னது. பன்றிக்கறிக்கு என்ன பெரிதாக வந்துவிடப்போகிறது என்பது பிள்ளைவாளின் எண்ணமாக இருந்திருக்கலாம். சிறு வரிசையில் நின்று நாங்கள் அந்த மெலிந்த பீடி உடம்புக்காரரை அடைந்தபோது ஜோஸ் ”அண்ணே. ஒரு கிலோ, நெய் குறைவாட்டு” என்றான்.

அவர் நிமிர்ந்து என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஏன்டே வரக்கூடியவன் எல்லாம் நெய் வேண்டாம்ணு சொன்னா எங்கடே போறதுக்கு, பன்னில உள்ளது தான தாறோம்”

ஜோஸ் சிரித்தபடி ”இவனுக்க ஆச்சிக்கு குடுக்கதுக்காக்கும், தலைக்கு பிடிச்சிரப்பிடாது. பாத்து போடுங்க” என்று விட்டு என்னைப்பார்த்து கண்ணடித்தான். நான் சம்மலாக அவரை பார்க்க அவர் சற்று புரியாமல் திகைத்து பின் வெட்டத் துவங்கினார். மிச்சப் பணத்தை ஜோஸ் கொடுத்து கறியை வாங்கிக்கொள்ள, பைக்கில் ஏறி அமர்ந்த போது தான் எனக்கு அந்த கேள்வி தோன்றியது. ”லேய், இத யாரு சமைக்கப்போறது?”

ஜோஸ் எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசித்திருந்தான். அவன் அம்மாவுக்கு பன்றிக்கறியின் மணம் பிடிப்பதில்லை, எனவே அவன் வீட்டிலிருந்து இண்டக்‌ஷன் ஸ்டவ்வை அவர் அறியாமல் எடுத்துவந்து எங்கள் ஊர் பாழடைந்த லைப்ரரி அருகே வைத்து சமைப்பது தான் திட்டம். ஊரை அடைந்ததும் அவன் என்னை ஜங்ஷனில் இறக்கிவிட்டு என்னிடம் வாங்கவேண்டிய பொருட்களை வேகவேகமாக சொன்னான். நான் முடிந்த அளவு மனப்பாடம் செய்துகொண்டேன். ”குறுமிளவு பொடியா வாங்காத முழுசா வாங்கு, தக்காளி மற்றது மறிச்சது ஒன்னும் வேண்டாம் கேட்டியா?” என்று தனியாக சொன்னான். நான் பொருட்களை வாங்கிக்கொண்டு லைப்ரரி பக்கம் செல்வதற்குள் அவன் ஸ்டவ்வுடன் வந்துவிட்டான்.

அந்த லைப்ரரியில் எந்த காலத்திலும் புத்தகங்கள் படிக்கப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. சனி, ஞாயிரு மட்டும் அதை திறந்து சில வயசாளிகள் அரட்டை அடிப்பதை பார்த்திருக்கிறேன். அதுவும் ஒக்கி புயலுப்பின் திறப்பதை நிறுத்திவிட்டார்கள். ஒரு மரம் விழுந்து சரிந்து பாதி ஓடுகளை உடைத்துவிட்டது தான் காரணம். இப்போது மதில்சுவர் கூட அடைக்கப்பட்டு சுற்றிலும் இருந்த தென்னை தோப்பில் பச்சை புல் அடர்ந்து காணப்பட்டது. ஜோஸ் முதலில் மதிலை எகிறிக்குதித்து ஸ்டவ்வையும் சமையல் பொருட்களையும் அவன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் கொண்ட கட்டைப்பையையும் வாங்கிக்கொண்டான். பூட்டிக்கிடந்த அந்த லைப்ரரியில் இருந்து எப்படி மின்சாரம் எடுப்பது என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்த பகுதியில் வீடுகளோ ஆள் நடமாட்டமோ பெரிதாக ஒன்றும் இல்லையென்றாலும் நான் ஒருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டு மதிலை ஏறித்தாவினேன்.

ஜோஸ் அங்கு பலமுறை வந்திருப்பவன் போல நேராக லைப்ரரிக்கு பின்னால் சென்று பழைய மர சன்னலை தட்டித் திறந்தான். பையிலிருந்து எக்ஸ்டென்ஷன் கேபிள் ஒன்றை எடுத்து கையை உள்ளே விட்டுத் துழாவி சுவிட்ச் போர்டை கண்டடைந்து அதில் செறுகி லைனை இழுத்தான். பத்து நிமிடத்தில் சமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக நான் சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அவன் சொன்னது போல உறிக்க துவங்கினேன். இஞ்சியையும் தோல்சீவி சிறிது சிறிதாக நறுக்கினேன்.

எங்கள் நண்பர் குழுவில் ஜோஸ்தான் தேர்ந்த சமையல்காரன், அதுவும் இறைச்சி சமைப்பதில் நிபுணன். விடுமுறைகளில் நாங்கள் ஆற்றில் மீன்பிடித்து தோப்பில் வைத்து வறுத்து சாப்பிடும்போது அவன் தான் பெரும்பாலும் சமையலை தலைமை தாங்குவான். சமையல் பொருட்களும் பாத்திரங்களும் எல்லாம் அவன் அம்மா கொடுத்து விடுவார். ஜோஸின் அம்மா அவனைவிட சிறந்த சமையல்காரர். நான் பள்ளியில் பெரும்பாலும் அவன் வீட்டு மீனும் இறைச்சியும் கொண்டுதான் வீட்டுச் சோற்றை உள்ளே இறக்குவேன்.

என் அம்மாவுக்கு தெரிந்த சமையல் என்பது துவையலும் அரைத்து வைப்பதும் மட்டும்தான். பெரும்பாலான நாட்கள் அவர் விரதங்களிலேயே கழிப்பார். திங்கள், புதன், வெள்ளி, சனி, அம்மாவாசை, ஏகாதசி, பௌர்ணமி, பிரதோஷம், புரட்டாசி, மார்கழி மற்றும் இதர நாட்களில் வேண்டுதல்கள் பரிகாரங்கள் செய்துகொள்ளும்போது. வீட்டில் எப்போது ஒருவித விபூதி வாசம் கமழும்.

ஜோஸ் இறைச்சியை மஞ்சள் தூள், உப்பு, சிறிது எலுமிச்சை பிழிந்து இருபது நிமிடங்கள் வரை ஊறவைத்து பின் சுத்தமாக கழுவி எடுத்தான். வெண்கொழுப்பில் மஞ்சள் நிறம் சற்றே ஊறி பொன்னிறமாக மாறியிருந்தது.

”லே சுந்தரலிங்கம், இன்னா பாத்தியா?” அவன் என்னை என் அப்பாவின் பெயரை சொல்லித்தான் அழைப்பது வழக்கம்.

”என்னல இது? இப்படி இருக்கு கலரு?”

“இப்படி செஞ்சாதான் வாடை போவும். ஃபுல்லா நெய்யில்லா, வேவிச்ச பொறவு பாரு”

நான் அவன் சொன்ன சில்லரை வேலைகளை செய்து விட்டு அடுத்தது என்ன என்றறியாமல் அவனருகில் சென்று நின்று கொண்டிருந்தேன். ஜோஸ் ஒரு அதிகாரியை போல வந்து பார்வையிட்டான், “வெளுத்துள்ளிய இன்னும் சின்னதா வெட்டணும்பிலே, வேவும் போது அப்படியே மெல்ட் ஆவனும் பாத்துக்க. இஞ்சி நறுக்கிருக்கல்லா அந்த சைஸ்”

”ஆஞ்செரி” நான் மீண்டும் நறுக்க அமர்ந்தேன்.

“லே வெளுத்துள்ளீன்னு சொல்லச்சில தான் நியாபவம் வருவு, மத்தவளுக்க நம்பர் வாங்குனியால?”

அவன் உத்தேசித்தது எங்கள் வகுப்பு சுரேகா என்ற சோகைப் பெண்ணை. அவனாகவே எனக்கு அவள்தான் சரிவருவாள் என்று முடிவு செய்து வகுப்பெங்கும் பரப்பிவிட்டது அது. இப்போது நான் அவளிடம் பேசியே ஆகவேண்டிய கட்டாயம். அவளை திருமணம் செய்துகொள்வது போல கொடுங்கனவும் ஒருமுறை வந்துசென்றது.

”லே, கேக்கேம்லா சொல்லுலே” அவன் சிரித்தான்.

“போல அங்க, அவளும் அவளுக்க பல்லும்”

“அவளுக்கு என்னல, பல்லு சரியில்லன்னா பல்லுக்கு ஒரு கிரில்லு போட்டுவிடு.”

நான் அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் கால்களை நோக்கி ஓங்கினேன். அவன் துள்ளிக்குதித்து “லேய் லேய், சைக்கோ லேய்” என்றான்.

இறைச்சியை குக்கரில் போட்டு அதில் கொத்தம்மல்லி தூள், மஞ்சள், உப்பு, கரம் மசாலா பாக்கெட்டுகளை பிரித்து கொட்டியபடி, “எனக்கென்ன, அமேரிக்கால ஒவ்வொருவனும் பன்னெண்டாம் கிளாஸ் முடிக்கும்போ ஸ்கூல்லயே டேட்டிங்க் வைக்கானுவ, இங்க நம்ம பயக்கதான் ஒன்னுத்துக்கும் வழியில்லாம கைலபுடிச்சி கக்கூஸ நெறைக்காணுவ, வெட்டுனது போதும் கொண்டு வாலெ”

சின்ன வெங்காயமும், இஞ்சியும், பூண்டும் எல்லாம் பாதி குக்கருக்குள் சென்றது. மீதியை தட்டிலேயே வைத்துவிட்டு சிறிது தேங்காய் எண்ணை ஊற்றி கையால் இரண்டு முறை விரவினான். பின் மிளகை ஒரு சிறிய துனியில் சுற்றி கல்லில் வைத்து தட்டி பொடித்தெடுத்தான். அதன் காரம் மூக்கில் ஏறி தும்மல் வந்தது. மிளகுத் தூளை எடுத்து கிட்டத்தட்ட அரை கையளவு உள்ளே போட்டு மூடி ஸ்டவ்வை மீண்டும் ஆன் செய்தான்.

”லே, வத்தல் பொடி போடலயா? இது ஏன் மிளகு இவ்வளவு எடுத்து போடுக?” நான் கேட்டேன்.

”போர்க்குக்கு ஒன்லி பெப்பர் தான் பாத்துக்கோ, இது தனி இனமாக்கும்”

“இவ்வளவு மொளவு போட்டா ஆச்சி ரெண்டு சொம சொமச்சு மேல போயிருவால”

“போறது கர்த்தருட்ட தான பிரச்சனையில்ல”

”லேய் நீ கதைய மாத்திருவ போலல்லா இருக்கு”

“பின்ன போர்க்கும் தின்னுட்டு வேற எங்க போவாவ?” அவன் சற்று தீவிரமாக சொன்னான். எனக்கும் அது நியாமென்றே பட்டது. யோசித்துப்பார்த்தேன், வடிவுடையம்மாள் யேசுவுடன் பரலோகத்தில். ஜோஸுக்கு ஆச்சியை நன்றாக தெரியும், அவளுக்கும் அவன் மீது தனிப் பிரியம் உள்ளதாக எனக்கு தோன்றும். ஆச்சிக்கு உடம்பு சரியில்லாமல் ஆனது கடந்த ஐந்து வருடங்களாகத் தான். அதற்கு முன் அவளை நான் நோய் கண்டு பார்த்ததேயில்லை. என் அம்மாவைவிட பல மடங்கு ஆரோக்கியமாக இருப்பாள். அம்மாவை போல அல்லாமல் அவள் சருமம் நல்ல தேன் நிறத்தில் மிணுக்கமாக இருக்கும். தனியாகவே ஆற்றுத்துறையில் சென்று குளித்து துணிதுவைத்து வருவாள். வீட்டுக்கு பின்னால் வாழைத்தோட்டத்தில் வேலை செய்வாள். தனக்குள்ளேயே ஏதாவது மெல்லிய குரலில் பாடிக்கொண்டோ, பேசிக்கொண்டோ இருப்பாள். எப்போதும் ஒருவித தனிமையில், ஆனால் உற்சாகமாக. அவளது உற்சாகத்துக்கு எல்லாம் காரணம் எங்கள் தாத்தா நேரத்தோடு போய் சேர்ந்துவிட்டது தான் என்று தோன்றும். நாற்பத்தைந்து வயதிலிருந்தே வெள்ளை ஆடைதான், வேறொன்றும் பிரச்சனைகள் இல்லை. திருமணங்கள், விஷேஷங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை, குழந்தைகளை கொஞ்ச வேண்டியது இல்லை, தேவையில்லாமல் சிரித்து பேசவேண்டியது இல்லை. பரமசுகம்.

ஐந்து வருடங்களுக்கு முன்தான் அவளுக்கு சட்டென்று மூட்டு வலி வந்து நடக்க முடியாமல் ஆனது, பின் ஒவ்வொன்றாக மூச்சு திணறல், ரத்த அழுத்தம், மறதி. உடலே போதும் என சொல்லிவிட்டது போல. சென்ற கொரோனா காலத்தை அவள் கடக்கமாட்டாள் என்றே நாங்கள் எல்லாரும் நினைத்தோம். தடுப்பூசியும் கூட எங்கள் வீட்டில் என்னைத்தவிர வேறு யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. கொரோனா எல்லாருக்கும் வந்து சென்றது, ஆச்சியை தவிர. அல்லது அவள் படுக்கையிலேயே இருப்பதால் எங்களுக்கு பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக கடும் மூச்சுமுட்டல் இருக்கிறது. அனேகமாக இன்னும் சில நாட்கள். எனக்கு பெரிதாக வருத்தங்கள் எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவளுடனான இனிய நினைவுகள் ஏற்கனவே தொலைதூரத்துக்கு சென்றுவிட்டன. எங்கள் வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஆளாக அவளே இருந்திருக்கிறாள். ஆனால் இப்போது நான் வீட்டிலிருந்தே மிகவும் விலகிவிட்டேன். அடுத்து எங்கு படிக்க செல்வேன் என்றும் தெரியாது. இனி வீட்டில் தொடர்ந்து இருப்பேனா என்றும் தெரியாது. மாடியறையில் கிடக்கும் அவளை பார்த்தே பலநாட்கள் ஆகிவிட்டன.

குக்கரில் வைத்த இறைச்சி ஒவ்வொரு விசிலுக்கும் மணம் மாறியது, முதிலில் வந்த மாமிச வாடை போய் இப்போது மிளகும் கொழுப்பும் சேர்ந்து எழும் பிரத்யேக மணம் எழுந்தது. மூன்று விசில் வந்ததும் ஜோஸ் ஸ்டவ்வை அணைத்தான். குக்கரே அந்த காரத்தை தாங்க இயலாதது போல உஸ்ஸ் உஸ்ஸ் என்று சத்தமெழுப்பிக் கொண்டிருந்தது.

பத்து நிமிடம் தம்மில் வைத்து திறந்தபோது உள்ளே கறி நன்றாக வெந்து கொழுப்பில் மிதந்தது.

“பாத்தியாலெ உருக்கு தங்கமாக்கும்” ஜோஸ் உற்சாகம் அடைந்து பாத்திரத்தை சரித்து காண்பித்தான். ஏறத்தாழ ஒரு டம்ளர் அளவுக்கு கொழுப்பு உருகி பொன்னிறமாக ஊறி நின்றது. ஜோஸ் அதை ஒரு சிறு பாத்திரத்தில் வடித்து எடுத்துக்கொண்டான்.

“அவ்வளவும் நெய்யி. குடிக்கியா?” என்றான் சீண்டலாக நீட்டினான்.

“ஐய்யோ” என்று சிரித்து விலகினேன், “இத என்ன செய்யதுக்கு?”

”நீ பாரு”

அவன் அடி கணமான தவா போன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து வைத்து அந்த ’நெய்’யையே கால்வாசி ஊற்றி சூடாக்கினான். அரிந்து வைத்த பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிச்சம் வைத்திருந்த இஞ்சியும் பூண்டும், பின் பச்சை மிளகாய், கரிவேப்பிலை என்று ஒவ்வொன்றாக உள்ளே சென்றது. ஜோஸ் ஒவ்வொன்றையும் உள்ளே இடும் முன் தேர்ந்த சமையல்காரர்களை போல கொஞ்சம் வாயில் இட்டு சுவைத்தான், பச்சைமிளகாய் உட்பட. தவாவில் ஒவ்வொன்றும் வறுபட்டு முறுக, மீண்டும் மஞ்சள், கொத்தமல்லி, மசாலா தூள், உப்பு எல்லாம் கைப்பக்குவத்தில். மீண்டும் அரை கையளவு மிளகுத்தூள்.

”லேய்”, நான் அவனை முறைத்தேன்.

“பயராதல, நெய்யிருக்குல்லா, இது போட்டாத்தான் உரைக்கும்.”

”ம்ம்”

“நீ போர்க் ரோஸ்ட் சாப்டிருக்கியா?”

”இல்ல”

“அதான் இப்டி சொல்லுக, இறச்சில உள்ளதுலெயே டேஸ்ட் இதாக்கும். எல்லாம் அந்த நெய்யிக்க கணக்குதான். சரியா அத பாலன்ஸ் ஆக்கி எடுக்கணும் கேட்டியா? கேரளாவுல செய்வானுவ பாக்கணும், நான் ஏன் மாமனுக்க கூட அங்கமாலி போவேம்லா, அங்கன டெய்லி இது தான். தள்ளே!” என்று எதையோ தாங்கமுடியாதது போல தலையில் கைவைத்தான்.

வெங்காயமும், இஞ்சிப் பூண்டும், மசாலா பொடிகளும் சேர்ந்து விழுதாக மயங்கி கிட்டத்தட்ட கரிய நிறத்தை எட்டியது. அப்போது அவன் வடித்து வைத்திருந்த போர்க் இறைச்சியை உள்ளே கவிழ்த்தான். மணம் கொஞ்சம் கொஞ்சமாக வேறொன்றாக மாறியது. எச்சிலூற அவன் சமைப்பதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய வேளை உச்சத்தை அடைந்திருந்தாலும் கோடை மழையின் மேகங்கள் திரண்டு ஒரு வித கால மயக்கத்தை உண்டாக்கின. கிட்டத்தட்ட நாள் முழுவதும் சமைப்பது போல.

“லேய், அந்த மிச்ச நெய்ய ஊத்தாண்டாமா?”

”யாருலெ இவன், எல்லாத்தையும் தூக்கி ஊத்துனா ரெண்டு நாளைக்கு எந்திக்க முடியாது. பாலன்ஸ் ஆக்கும், புரிஞ்சா?”

பாலன்ஸ்! நான் புரிந்தது போல தலையாட்டினேன். அவ்வளவு கொழுப்பை வீணடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்டவ் உச்சத்தில் இருக்க, அவன் அடியில் குடுத்து பிரட்டிக் கொண்டேயிருந்தான். போர்க் மெல்ல மெல்ல நிறம் மாறுவதைக் கண்டேன். முதலில் ஒருவித பச்சை கலந்த மஞ்சளில் இருந்த இறைச்சி மெல்ல பொன்னிறமானது. ஜோஸ் இப்போது எலுமிச்சையை பிழிந்து அதன் மேல் சமமாக தெளித்தான். சற்று நேரத்தில் போர்க் சிறிது சிறிதாக காப்பி நிறத்திற்கு மாறி கருகத்தொடங்கியது. நீர்த்தன்மை இப்போது முற்றிலுமாக வற்றிவிட்டிருந்தது. அங்கங்கே கிடந்த கொழுப்புத்துண்டுகள், கரியில் பிறண்ட பொன்னிறமாக மெல்ல உருகுவதும், அவற்றிலிருந்து ஜிவ்வென்று குமிழிகள் எழுவதுமாக இருந்தன. அவைமட்டும் உயிருள்ளவை போலவும், சீறுவது போலவும். அவன் பிரட்ட பிரட்ட என் கண்கள் அவற்றையே பின் தொடர்ந்தன. நீர் முற்றாக சென்றதும் வேக்காடு நின்றுப்போய் துண்டுகள் வறுபடத் துவங்கின.

சற்று நேரத்தில் துண்டுகள் எல்லாம் தனித்தனியாக பிரிந்து நிற்க, ஜோஸ் சட்டென்று ஒரு கணத்தில் அடுப்பை அணைத்தான். தவாவை மூடியிட்டு மூடிவிட்டு கண்களை அடைத்து தியானம் போல பெருமூச்சுவிட்டான். நெற்றியில் வியர்வை துளியிட்டது.

“முடிஞ்சா, லே அவ்ளவுந்தானா?” நான் ஆர்வமாக கேட்டேன்.
அவன் ஒலியெழாவண்ணம் தாழ்குரலில் “ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு மெல்ல எழுந்து சென்றான்.

நான் அவன் செல்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மெல்ல நடந்து தோப்பின் எல்லை வரை சென்று அங்கே ஓடைக்கரைக்கருகே ஒன்றுக்கு போய்விட்டு ஆசுவாசமாக நடந்து வந்தான். கைகழுவி விட்டு அருகில் வந்து ஒன்றும் சொல்லாமலே மூடியை திறந்து ஒரு துண்டை எடுத்து நீட்டினான். அவன் அதை ஒருமுறைக்கூட சுவைத்துப் பார்க்கவில்லை. நான் உள்ளங்கையில் வாங்கி நன்றாக ஊதி வாயில் இட்டு மென்றேன். இறைச்சியின் ருசி தன் பரிவாரங்களை முதலில் அனுப்பிவிட்டு மெல்லத்தான் நுழைந்தது. மிளகுக் காரமும் ஒருவித கரிந்த வெங்காயத்தின் இனிமையும் முதலில் நாவை நிறைத்தது, பின் மெல்லிய புளிப்பும் சிறு துவர்ப்பும். அடுத்து வந்த நெய்யின் புரதத்தின் சுவை மெல்லும்போதே நாவில் பழிந்து ஊறி நிறைத்தது. நான் கண்கள் மூடி “ம்ம்ம்” என்று உச்சுக்கொட்டினேன். அவன் அழகிய பற்கள் தெரிய சிரித்தான்.

மெல்ல தவாவை ஒரு கிண்டு கிண்டியபடி, “நேரம் ஆவ ஆவ இன்னும் டேஸ்ட் கூடும்” என்றபடி, தன் படைப்பை பார்த்து மீண்டும் புன்னகைத்தான். எனக்கு ஒரு கணம் ஆச்சியின் முகம் நினைவில் வந்து சென்றது.

அன்று மதியம் இரண்டு மணி போல நாங்கள் ஜோஸின் வீட்டை அடைந்தோம். அவன் அம்மாவிடம் மெல்ல விஷயத்தை சொல்ல அவர் சிரித்துக்கொண்டே முற்றத்திற்கு வந்து “சொல்லக்கூடாதா மக்கா, உள்ள வா” என்று அழைத்தார். நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அவரே பரிமாறினார். ஸ்டெல்லாவும், ஜோஸின் அக்காளும், பொடியன் பிவினும், ஜோஸின் கொள்ளுப்பாட்டியும் எல்லாரும் சேர்ந்து உண்டோம். ஜோஸ் பேக்கரியில் இருந்து ‘பிரட்’ வாங்கி வந்திருந்தான். போர்க் ரோஸ்டிற்கு அது தான் நல்ல காம்பினேஷன் என்று. அதை எப்படி சாப்பிடவேண்டும் என்று எனக்கு சொல்லித்தந்தான். ‘பிரட்’டை கால்வாசி பிட்டு, அதில் ஒரு கறித்துண்டும் ஒரு கொழுப்புத் துண்டும் சேர்த்துவைத்து ஒன்றாக வாயில் போட்டு மெல்லவேண்டும். அன்று எல்லாரும் உண்மையில் வயிறு புடைக்க உண்டு எழுந்தோம். சமைத்ததில் மிச்சமெடுத்திருந்த நெய்யில் சோற்றை பிரட்டி இரண்டு நாய்களுக்கும் வைக்கப்பட்டது. நான் ஆச்சிக்கு ஒரு சிறிய சம்புடத்தில் சில துண்டுகளை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானேன். ஜோஸின் அம்மா சற்று நேரம் தூங்கி எழுந்து செல்லுமாறு வற்புறுத்தினார். நான் நேரமாகிவிட்டதை சொல்லி எழுந்தேன்.

வாசலை கடந்த போது சட்டென்று திண்ணையில் அமர்ந்திருந்த ஜோஸின் கொள்ளுப்பாட்டி தோராயமாக என்னைப் பார்த்து “வீடெங்க பிள்ளே?” என்றாள். அவள் அப்படி திடீரென்று பேசுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் அவளுக்கு தெரிவது போல என்ன அடையாளத்தை சொல்ல என்று திணறியபோது ஜோஸ் இடைமறித்து, “அந்த மாந்தோப்பு வீடு இருக்குல்லா, அங்கதான். சுந்தரலிங்கம் சாருக்க மகன்” என்றான்.

”வடிவுக்க பேரனா? நல்ல குட்டில்லா. ஆத்துல இறங்குனா கேறவே மாட்டா, இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் லா நீஞ்சிட்டி கெடப்பா. நல்லா இருக்காளாப்போ?”

”ஆம் பாட்டீ”.

“ஆத்துக்கு இஞ்ச பக்கம் இருந்து நாங்க விளிப்போம், அவ சின்ன பிள்ளையாட்டு ஒத்தைக்கு இஞ்ச கரைக்கு நீஞ்சி வருவா, போறவு அங்கன நீஞ்சி போவா”

ஜோஸ் என்னைப் பார்த்து புன்னகைத்தான்.

”லேய் ஜோஸூ நீயும் இந்த பிள்ளையும் ஒரே சோறையாட்டு வரவேண்டியதுலே தெரியுமா? கத தெரியுமா?”

ஜோஸ் “ஆஞ்சேரி சேரி போதும், சும்மா கெடங்கோ” என்றபடி என் தோளைப் பிடித்து மெல்ல தள்ளி போகும்படி சைகை செய்தான். அவன் இந்த கதைகளை பலமுறை கேட்டிருப்பதை போல தோன்றியது. ஆனால் எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று சரியாக புரியவில்லை.

நான் பைக்கை எடுக்கும்போது பின்னால் அவர் “லேய் உந்தாத்தா இருக்காம்லா…” என்று துவங்க அவன் “ஆம்போதும் போதும் வாய மூடுதியளா?” என்று சத்தமடுவது கேட்டது.

பின் மதியம் நான் வீட்டை அடைந்தபோது திரு. சுந்தரலிங்கம் பிள்ளை முற்றத்து திண்ணையில் மோட்டுவளையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். உடலேல்லாம் விபூதி பட்டையுடன் அரைமயக்கத்திலிருந்த அவரிடம் சென்று சம்புடத்தை உயர்த்தி காண்பித்தேன்.

அவர் லேசாக முகத்தை சுழித்து ”மேல கொண்டுபோய் ஆச்சிக்கு கொடு. நீயே கொடு. நான் சொன்னென்னு சொல்லு” என்றார்.

நான் மாந்தோப்பு வீட்டின் அந்த பழமையான படிகளை ஏறிக்கடந்து மச்சில் இருந்த அந்த சிறிய அறைக்குள் சென்றேன். ஆச்சி சன்னல் அருகே இடப்பட்டிருந்த அந்த பெரிய தேக்கு மரக்கட்டிலில் படுத்திருந்தாள். மரச்சட்டகங்களும் மரத் தடுப்புகளுமாலான சிறிய சன்னல். அதன் வழியாக பெரிய நூற்றாண்டு பழமையான மாமரத்தின் கிளைகள் மட்டும் தெரிந்தன. அருகே மேசை மீது பித்தளை சொம்பில் நீர் வைத்திருந்தார்கள். மொத்தமாகவே காலத்தில் பின்னோக்கி போன ஒரு உணர்வு. அரையே நீரால் நிரப்பப்பட்டதைப் போல கணமாக உணர்ந்தேன். ஆச்சி வாயை சிறிது திறந்தபடி உறங்குவதை நெருங்கிச்சென்று கண்டபோது எனக்கு ஒரு கணம் அடிவயிற்றை அழுத்தியது. மெல்ல நான், தட்டில் கொண்டு வந்திருந்த ’பிரட்’டையும் சம்புடத்தையும் மேசையில் வைத்துவிட்டு ஆச்சியை தொட்டு எழுப்பினேன். அவரது தோல் குளிர்ந்து சுருக்கங்களுடன் இருந்தது. மெலிந்த உடலில் தோள்பட்டை எலும்புகள் புடைத்துத் தெரிந்தன.

அவள் மெல்ல கண் திறந்து என்னைப்பார்த்தாள், அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை போலிருந்தது. எழுந்து அமர்ந்தவளிடம் நான் சற்று சத்தமாக “ஆச்சீ, அப்பா கொண்டுவர சொன்னாங்க, இங்க வைக்கவா?” என்று கேட்டேன்.

அவள் “ம்ம்” என்று குழந்தையைப்போல தீர்க்கமாக தலையாட்டினாள். நான் சம்புடத்தை திறந்து ‘பிரட்’டுக்கு அருகில் வைத்துவிட்டு அவளை திரும்பிப்பார்த்தேன். முகத்தில் பெரிதாக உணர்ச்சிகள் எதுவும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை, அது சற்று ஏமாற்றத்தை அளித்தது. மெல்ல அறைவிட்டு நீங்கும்முன் மீண்டும் ஒரு முறை அவளை கடைசியாகத் திரும்பிப்பார்த்தேன். ஆச்சி நடுங்கும் கைகளுடன் இருப்பதிலேயே நெய்யூறிய ஒரு கொழுப்புத்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்தாள்.

000

அஜிதன்

அஜிதன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்

16 Comments

  1. மூர்த்தி சோமம்பட்டி விஸ்வநாதன் சோம்பட்டி says:

    அஜிதன் அபாரம் சமையல் கலையும் தெரியுமா? நல்ல கதை ஒவ்வொரு நாளும் உங்கள் வளர்ச்சி அபாரம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  2. மைத்ரி நாவல் என்பழய நினைவுகளை என் மனைவியுடன் பயணிக்கும் நினைவுகளை எனக்கு அஜிதன் அவர்கள் மீட்டுத்தரும் யார் நன்றி

  3. நல்ல பசியில் இருக்கும்போது பசியை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த சிறுகதயை படித்து விட்டு சாப்பிடலாம் என்று எண்ணியது பெரும் பிழையாக ஆகிவிட்டது உடலில் இருக்கும் மொத்த நீரும் சுரந்து நாவில் வந்து தேங்கி நின்றது விட்டது நல்ல ருசியான ஒரு புனைவு

  4. Ajithan story telling awesome unlike his father deep description of every bit great father great son you are all blessed 🙏

  5. வடிவுடை ஆச்சி போர்க் ரோஸ்ட் மூலமாக மீட்டெடுப்பது ஜோசின் தாத்தாவை என்று நினைக்கிறேன்

    • சரவணன்,
      எட்டிப்பார்த்த சின்ன்ன்ன நூல் பிசிரைச் சரியாகப் பிடித்து விட்டீர்கள். அந்த, இப்போது சொல்லப்படாத பழங்கதை, ஜோஸின் தாத்தாவின் ‘ORIGINAL PORK ROAST RECIPE ‘ உடன், இதன் prequel ஆகக் கூறப்படக் காத்திருக்கலாமா?
      போர்க் ரோஸ்ட் 2 ?

  6. வாய்ப்பில்லை சார்…..மாபெரும் வெளியின் சிறு வாயிலை திறந்து வைப்பது மட்டுமே பெரும் படைப்புகளின் இயல்பு… வெண்முரசில் வருவது போல “அவரவர்க்கான அஸ்தினாபுரியை அவரவர் கண்டடைய வேண்டியதுதான்”

  7. நல்ல சரளமான நடை. வாழ்த்துக்கள் அஜிதன்.

  8. நல்ல இதமான சுவையான நடை …நெய்யூரிய போர்க் போல…
    வாழ்த்துகள் அஜிதன்!!!!

  9. அஜிதன், அருமையான சுவையான கதை. வாழ்த்துக்கள். பத்மநாபபுரம் அரவிந்தன்..

  10. சரளமான நடை. மெலிதான நகைச்சுவை. பதின் பருவ இளைஞர்களுக்கே உரித்தான உரையாடல்கள் . சமையல் குறித்த விவரணைகள் அருமை. வாழ்த்துகள் அஜிதன்.

  11. வாழ்த்துக்கள் அஜிதன். எழுத்தாளர் பெருமாள்முருகன் . வருகரி என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். பன்றி இறைச்சி சமையல். இரண்டு சிறுகதைகளிலும் இறைச்சியின் நறுமணம். . ஒன்று மட்டும் தெரிகிறது. எந்த இறைச்சியும் இலக்கியத்தில் இடம்பெறும் இந்த இறைச்சி போல சுவையாக இருக்கப் போவதில்லை.

  12. முதல் முறையாக நான் படித்த அஜிதனின் கதை . இது வரை ஜெமோ கதை மட்டுமே படிப்பேன். இன்று மெய்சிலிர்த்தது. “அப்பனுக்கு புள்ள தப்பாம புறந்திருக்கு”

  13. இது நடந்தபோது நான் 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் வீட்டிற்கு திரும்பி வந்து அம்மாவிடம் சொன்னேன், நான் எனது கணினி அறிவியல் புத்தகத்தில் இருந்து கேக் தயாரிப்பதற்கான செய்முறையை கண்டுபிடித்துள்ளேன். அம்மாவிடம் அதை பின்பற்றவும் ஆனால் மூலப்பொருளாக முட்டையை அகற்றவும் கேட்டேன். ஏனென்றால், நான் அப்போது கடுமையான சைவ உணவு உண்பவன்.

    என் அம்மா முட்டை இல்லாமல் கேக் செய்ய முடியாது என்று கூறினார். அது எனக்கு ஆச்சரியமான தருணம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு 5 வருடங்கள் கேக் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டேன். ஆனால் மேற்கொண்டு தொடர முடியவில்லை.

    இந்த மாதிரி ஆள் நான். ஆயினும்கூட, நீங்கள் என்னை மனதளவில் பன்றி இறைச்சியை உண்ணும்படி செய்துள்ளீர்கள் 😄.

    மங்களம் மட்டுமே ஆன படைப்பில் படிமங்கள் கிரியேட் பண்ணிருக்கீங்க. ஹாட்ஸ் ஆஃப் அண்ணா!

  14. எப்பா.. எப்பா.. இது ஜோசு வீட்டு கறியா….comedy short story

உரையாடலுக்கு

Your email address will not be published.