/

அகழ் : நூல் அறிமுகங்கள்

ஒற்றைக் குரல் – நுண் கதைகள் – இளங்கோ கிருஷ்ணன்

தமிழ் இலக்கிய வரலாற்றை உற்று நோக்கும் ஒருவர் செய்யுளில் தொடங்கி இன்று நவீன கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என்று காலத்துக்கு ஏற்ப படைப்பு வடிவங்கள் மாறித் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்வதை அறிய முடியும். அதிலும் ஒரு நூற்றாண்டு வரலாறு கொண்ட தமிழ்ச் சிறுகதைகளை இலக்கியச் செழுமை மிக்க உலகின் எந்த ஒரு மொழியின் சிறுகதைகளுக்கு இணையாகவும் வைக்க முடியும், சிறுகதை என்ற வடிவத்திலேயே பலவிதமான அப்பிராய பேதங்கள் இங்கே நிலவுவதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் எல்லா வரையறைக்குள்ளும் பொருத்திக்கொள்ளும் அபாரமான பல கதைகள் இங்கே உண்டு.

அதன் தொடர்ச்சியாகச் சமீப காலங்களில் குறுங்கதைகளும் தமிழில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழின் முக்கியமான படைப்பாளிகளான சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன், பெருந்தேவி, கே.என்.செந்தில், போகன் சங்கர் போன்றோர் இவ்வடிவில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதிலும், குறுங்கதை என்பதன் வரையறையில் இவர்கள் ஒவ்வொருவருக்குமே வேறு வேறு அபிப்பிராயங்கள் இருப்பதை இக்கதைகளை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, யுவன் தன்னுடைய ‘தலைப்பில்லாதவை’ நூலின் பின்னுரையில் ‘முழுமையான ஒரு கதையை ஆகக் குறைந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்கும் முயற்சி’ என்பதாக இத்தகைய கதைகளைப் பற்றிய தன் அவதானத்தை முன்வைக்கிறார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் குறுங்கதைகள் இன்னும் சிக்கனமாய், ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து முடிவை நோக்கிச் செலுத்தும் உத்திக்கு மாறாக முதலும் முடிவுமில்லாமல் அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தினை அளிப்பதோடு மற்றவற்றை வாசகக் கற்பனைக்கு விட்டுவிடுகிறார். பெருந்தேவி, மாய யதார்த்தம், கற்பனாவாதம், பிறழ் உலகம், அறிவியல் புனைவு எனப் பல்வேறு வகைமைகளில் குறுங்கதைகளை எழுதியுள்ளார்.

இவ்வரிசையில் இளங்கோ கிருஷ்ணன் தான் தேர்ந்துகொண்ட வடிவத்தை ‘நுண்கதைகள்’ என்றழைக்கிறார். தமிழில் இதுபோன்ற ஒரு சில கதைகளை ஜி.நா. முயன்றிருக்கிறார். இளங்கோ தன் முன்மாதிரியாக போர்ஹேஸ், யாசுனாரி கவபாத்தா, காப்கா, லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான பெர்ணாண்டோ சொரண்டினோ ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இது போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அடிவேரையும் ஆதி விதைகளையும் பற்றி அறிந்துகொள்வது அவற்றை இன்னும் சற்று அணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவும்.

என்னளவில் குறுங்கதை மற்றும் நுண்கதை வடிவங்கள் சவாலானதாகவும் அதன் காரணமாகவே தனித்த வசீகரம் கொண்டவையாகவும் தென்படுகின்றன. இவ்விரு வடிவங்களிலும் எழுதிக்கொண்டிருக்கும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் மொழி மீது தனித்த அக்கறையும் மொழித் துல்லியத்தின் மீது தீவிரமான நம்பிக்கையும் கொண்டிருப்பதை ஓர் ஒற்றுமையாகக் குறிப்பிடத் தோன்றுகிறது.

இவ்விரு வடிவங்களை மட்டும் எடுத்துக்கொண்டால் குறுங்கதைகளைச் சிறுகதைகளுக்கு நெருக்கமாகவும் நுண்கதைகளைக் கவிதைகளுக்கு அருகிலும் வைத்துக்கொள்ளலாம். இளங்கோவும்கூட இந்நூலின் முன்னுரையில் ‘சில கதைகள் கவிதையாக மாற்றச் சாத்தியமான உணர்களோடு இருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறார்.

தன்னளவில் முதலும் முடிவும் கொண்டு முழுமையடைந்த கதைகள்(கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மழை பற்றிய சித்திரங்கள்), சிறுகதையாக விரித்து எழுதச் சாத்தியமுள்ள கதைகள்(பூனை), கவிதைக்கு நெருக்கமாக இருக்கும் கதைகள்(ஒற்றைக் குரல், அந்தி), குறியீட்டுக் கதைகள்(யாரோ என் சிகரெட்டைத் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்), வரலாற்றை முன்வைத்து சமகாலத்தைப் பகடி செய்யும் கதைகள்(படை) என பல்வேறு வகையான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

கீழ் வானத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் சூரியப் பழத்தைத் தின்ன ஓடும் கன்றுக்குட்டி, காற்றில் மீன் போல நீந்தும் தும்பி என்று இக்கதைகளில் பயின்றுவரும் மொழியும் அது நிகழ்த்திக் காட்டும் சொற் சித்திரங்களும் கவித் தருணங்களும் இளங்கோ தேர்ந்துகொண்ட வடிவத்துக்கு நியாயம் சேர்க்கின்றன. மேலும் கதைக்கு இடையில் சொல்லப் படாமல் விடப்படப்படும் இடங்களும் சில கதைகளின் இறுதியில் நிலவும் அமைதியும் இளங்கோவுக்குள் இருக்கும் தேர்ந்த புனைகதையாளரை அடையாளப்படுத்துகின்றன.

பத்ம வனம், ஒற்றைக் குரல், அகத்தியம் போன்ற கதைகள், பெருங்காப்பியங்களில் கேட்கப்படாத உபகுரல்களை ஒலிக்கவிடுவதின் மூலம் முக்கியமான கதைகளாகத் தம்மை நிறுவிக்கொள்கின்றன.

தனித் தனியான கதைகளைக் காட்டிலும் இத்தொகுப்பின் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது வெளிப்படும் மறைபிரதியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மீள் வாசிப்பில் இன்னும்கூட பிடிபடலாம். அந்த மறைபிரதி வெளிப்படுத்தும் இன்னதென்று அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாத அவ்வுணர்வுகள் எனக்கு முக்கியமானவையாகப்படுகின்றன.

இக்கதைகளை வாசித்து முடிக்கையில் இவற்றின் வடிவம் சார்ந்தும் பேசுபொருள் சார்ந்தும் சில கேள்விகள் எஞ்சி நிற்கின்றன. இவ்வாறான அளவில் சிறிய கதைகள் எழுதப்படுவதில் தற்காலத்தின் அவசர நுகர்வுச் செயல்பாட்டின் தாக்கம் எத்தகையது? வருங்காலத்தில், டோப்போமைன் சுரப்புத் தீனிகளான முப்பது விநாடி ரீல்ஸ்களின் இலக்கிய வடிவமாக இவைக் குறுக்கிப் பார்க்கப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறதா? ஒரு நாவலோ, செறிவானதொரு சிறுகதையோ மேற்கொள்ளும் விஸ்தீரணத்தையும் அடைய முயலும் ஆழத்தையும் அவற்றின் வழியே அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் தீவிர உளக் கிளர்ச்சியையும் இக்கதைகளால் ஏற்படுத்த இயலுமா? அல்லது ஒரு நல்ல கவிதை தரும் மின்னல்வெட்டை இவற்றில் உணரவியலுமா? இக்கதைகளின் காலாதீதம் எத்தகையது? அதே நேரத்தில், மனிதன் தோன்றிய இருபது லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால் இரண்டாயிர வருடம் என்பதே மிகச் சிறிய அலகு என்னும்போது காலாதீதம் என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா என்ன?

உடனே விடை காணவியலாத இக்கேள்விகள் எழுவதும் அவை தீவிரமான உரையாடல்களுக்கு இட்டுச் செல்வதுமே இத்தொகுப்பின் வரவை அர்த்தப்பூர்வமானதாகவும் அவசியமானதாகவும் ஆக்குகிறது. இத்தொகுப்பைத் தொடர்ந்து தமிழில் ‘நுண்கதைகள்’ என்ற வடிவில் புதிய கதைகள் வரும்போது மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கக்கூடும்.

இத்தொகுப்பின் அட்டைப்படம், வடிவமைப்பு, கதைகளுக்கு நடுவே பயன்படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் என்று யாவரும் பதிப்பகத்தினர் இந்நூலினைப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். இவ்வருடத்தின் மிக முக்கியமான வரவு.

கார்த்திக் பாலசுப்ரமணியன் – நட்சத்திரவாசிகள், தரூக் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

000

மகாபாரதம்: ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை :கணேஷ் தேவி : தமிழில்: அரவிந்தன்

இந்தியாவின் மிக முக்கிய நிகழவாகவும் அதை ஒட்டிய முக்கிய கதையாடல்களாகவும் இரு விஷயங்களை சொல்லலாம் ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். மகாபாரத நிகழ்வுகளை பேச்சுவழக்கில் சொலவடைகளாக மாற்றி பேசும் வழக்கம் இயல்பான விஷயமாக மாறி பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. மகாபாரதம் எழுத்துவடிவில் வருவதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக வாய்மொழிக் கதைகளாக அக்கதைகள் பேசப்பட்டுள்ளன. ஹராப்பா காலத்திற்கு பின்பு புத்தர் காலம் வரை அது வாய்மொழிக்கதைகளாகவே வளர்ந்துள்ளது. ஏன் மகாபாரதம் இன்றும் வாசிக்கப்படுகிறது. அதன் கூறுகள் இந்திய மனங்களில், பேச்சுகளில், இலக்கியங்களில் இன்றும் எப்படி இடம்பெறுகிறது. அதைப்பற்றிதான் கணேஷ் தேவியின் ‘மகாபாரதம்: ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை’ நூல் மிக விரிவாக விவாதிக்கிறது.

வாய்மொழிக்கதைகளை நூலாக தொகுத்தவர் வியாசர். உலகின் வேறு எந்த ஆதிகாவியத்தை விடவும் பொருண்மையிலும் உள்ளடக்கத்திலும் இன்றுவரை மக்களின் மனங்களில் இருக்கும் ஒரு காவியம் இது மட்டுமே. மேற்குலகில் சொல்லப்பட்ட ஆதிகாவியங்களான, இலியட், ஒடிசி போன்றவை புத்தக வாசிப்பாக மட்டுமாக மாறி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மகாபாரதம் இந்தியாவில் இன்றும் நூல், நாடக, நிகழ்த்துக்கலை, திரை போன்ற வடிவங்களாக உயிர்ப்புடன் பண்பாட்டு நிகழ்வாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மகாபாரதத்தைப் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் இன்று களம் இருந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் சோதனை காலங்களை மகாபாரத கதைகளுடன் இணைத்து அர்த்தப்படுத்திக் கொள்ளமுடிகிறது. மகாபாரதம் இந்திய மனங்களை காலங்காலமாக தொடர்ந்து செழுமைபடுத்திவருகிறது. அதில் வரும் கதாபாத்திரங்களாக தங்களையும் மற்றவர்களையும் உருவகப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

இந்திய நிலம் முழுவதிலும் வெவ்வெறு வகை மகாபாரதங்கள் இன்றும் இருக்கின்றன. மாறுபட்ட ஒரு வடிவில் பீலர் பழங்குடியினரிடமும் மகாபாரதம் இருக்கிறது. மரம் வளர்ந்து புதிய கிளைகளை பரப்புவது போல கதையாடல்கள் வளர்ந்துள்ளன. ஒரு தனிமனிதனால் புரிந்துக் கொள்ள முடியாத மிகப்பரந்த வாழ்வியல் அனுபவத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது மகாபாரதம்.

இதில் மையப்பாத்திரம் என்று யாரையும் சுட்ட முடியாது. மகாபாரதம் நிகழும் காலம் முழுவதும் இருக்கும் பீஷ்மர் கதாநாயகன் அல்ல, கிருஷ்ணன் மையப்பாத்திரமில்லை, பாண்டவர்களுக்கு வெற்றியை தேடித்தரும் அர்ஜூனன்கூட மையப்பாத்திரமில்லை. ஆனால் கண்ணுக்கு தெரியாத காலம் என்னும் பாத்திரம் யமன் உருவில் தொடர்ந்து வருகிறது. அதுவே மையப்பாத்திரமாக இருக்க முடியும் என்கிறார் ஆசிரியர். புத்தருக்கு பின்இருக்கும் தம்மம் போல காலச்சகரமாக கிருஷ்ணனின் கையில் சுதர்சன சக்கரமாக காலமே குறியீடாக இருக்கிறது. தேரும் குதிரைகளும் ஆதிகாலத்து நவீன குறியீடாகவும் இருக்கின்றன.

வேதம், உபநிடதம், வேதாந்தங்கள், சுருதிகள், சாஸ்திரங்கள் போன்றவை அந்த காலகட்டத்தில் எல்லோராலும் பயன்படுத்தமுடியாத நிலை இருந்தது. அவை பிராமணர்களால் மட்டுமே படிக்க இயலும் என்றிருந்தது. அப்போது ஷத்திரியர்களால் இயற்றப்பட்ட ராமாயணமும் மகாபாரதமும் அனைத்து மக்களுக்கும் பயன்பட்டன. மக்கள் அதை எளிதாக பிடித்துக் கொண்டனர். தொகுக்கப்பட்டபின் 20 நூற்றாண்டுகளாக இந்த இதிகாசம் மக்கள் மனங்களில் நிறைந்திருந்தாலும் அது வாசிப்பவரின்/கேட்பவரின் மனதில் என்ன உணர்ச்சியை தூண்டுகிறது என யோசிக்கத்தால் அது சாந்த உணர்ச்சிதான் என்கிறார் ஆசிரியர். அபிநவ குப்தர் தன் வாதமாக இதை முன்வைக்கிறார் என்கிறார்.

புராண-வரலாற்று படைப்பாக மகாபாரதம் படைக்கப்பட்ட விதமே அழகுடன் இருக்கிறது. அதன் உள்ளடக்கம், உணர்ச்சி நிலைகள், நாடகீய தருணங்கள், எதுவும் எளிதில் தனிமனிதனால் கடந்து செல்ல முடியாதவை என்று கூறுகிறார் கணேஷ் தேவி.

மகாபாரத மாந்தர்கள் அப்போதைய கடவுளர்களுடன் தொடர்பில் இருப்பதாக சுட்டப்பட்டு யமன், சூரியன், இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள், கங்கை போன்ற புராணபாத்திரங்கள் வரலாற்றுப் பாத்திரங்களுடன் தொடர்ப்பில் அமைந்தன. இந்த கூறு மக்களின் மனதில் ஆழமாக சென்று சேர்ந்தது. யமனின் சாயல் கொண்ட யதிஷ்டிரன், வாயுவின் வாரிசாக பீமன், சூரியனின் வாரிசாக கர்ணன் என்று எல்லா பாத்திரங்களும் தேவ வடிவில் வருவதும் பின் மனிதர்களாக மாறி சோதனைகளை அடைவதும், கடைசியில் தனிமனித அனுபவங்களை வெற்றிகளாக பெறுவதும் தொடர்கிறது. இந்த அனுபவம் படிப்பவரின் மனதை கொள்ளை கொள்கிறது. நீக்கமற நிறைந்திருக்கும் துன்பங்களை இன்பமாக துய்க்க இந்த அனுபவம் பயன்படுகிறது.

மிகுந்த சிரத்தையோடு மொழிபெயர்த்திருக்கிறார் அரவிந்தன். மூலநூலினை வாசிக்கும் அனுபவத்தை ஒத்திருக்கிறது அவரது மொழிபெயர்ப்பு. அதற்காக பல மெனக்கெடல்களுடன் தான் இப்பணியை செய்திருக்கிறார்.

மகாபாரதத்தையும் இந்திய சிந்தனையுள்ளிலும் பயணம் செய்ய இந்த நூல் நமக்கு வாய்ப்பளிக்கிறது. கணேஷ் தேவி சொல்லும் துணைநூல்கள் மிக முக்கியமானவை. பலமுறை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் சுவாரஸ்யமான நூல் ‘மகாபாரதம்: ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை’.

கே.ஜே. அசோக்குமார் – சாமத்தில் முனகும் கதவு, குதிரைமரம் & பிறகதைகள், ரமணிகுளம் (நாவல்) உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

000

வேறு வேறு சூரியன்கள் : சந்திரா

ஒருவேளை நமது சொற்கள்
வனத்தில் மரக்கிளைகளையோ
ஆரஞ்சு மொட்டுகளையோ
அண்மித்து பேதமற்று ஒன்றாகிவிடுமென்றால்
ஒரு மகத்தான நம்பிக்கையை
நாம் எப்போதும் காப்பாற்றியிருக்கிறோம் என்று பொருள்

  • செஸ்லா மிலோஸ்

வாழ்வு என்னவோ அதுவே வார்த்தையாக வருகிறது . ஏலக்காய் மூட்டைகளோடு மலையேறி இறங்கும் தோள்களின் மீது படிந்த வாசனையை கவிதையாக சொல்லி தீராத சந்திரா தங்கராஜ் ஒருபடி மேலே போய் தனது அடுத்த அத்தியாயத்தை வேறு வேறு சூரியன்கள் தொகுப்பின் மூலம் கொடுத்துள்ளார். எப்போதும் அவரது வாழ்வியலின் பொருட்டு மறக்காது இருக்கும் மலையும் மலை சார்ந்த வாழ்வியலும் இக்கவிதைகளிலும் தொடர்ந்து வந்ததாலும் இத்தொகுப்பு இன்னொரு பரிமாணம் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை இத்தொகுப்பு முழுக்க வரும் வெளிச்ச கீற்றுகள் பல்வேறு வடிவங்களில் படிமமாக அமைந்துள்ளது.

சந்திராவின் “வேறு வேறு சூரியன்கள்” தொகுப்பின் கவிதைகள் பிரமாண்ட காலவெளிக்குள் உணர்வுகளை கட்டமைத்து வெளிப்படுகின்றன. அவை வெறுமனே கற்பனைகளால், வெற்று வித்தைகளால் நிரப்பப்படாமல் வாழ்வின் கூறுகளால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன படிமங்களாலும், உரையாடல்களாலும் இந்த கவிதைகளில் காட்சிகளாய் விரியும் நாடோடித் தன்மையும், நிலமும் புதுமையாக இருக்கின்றன. சூரியன் இந்த தொகுப்பு முழுவதும் ஒரு சிறுமிக்கு பின்னேயே வரும் தந்தையைப் போல வந்துகொண்டிருக்கிறது. எந்தவிதமான அதிகபிரசங்கித்தன வேலையையும் செய்யாமல் இயல்பை இயல்பாய் காண்பிக்கும் சந்திராவின் “வேறு வேறு சூரியன்கள்” கவிதைத் தொகுப்பை வாசித்து முடிந்தபோது வெளிச்சமான வாழ்வை வாழ்ந்துவிட்டு வந்ததுபோல் இருந்தது.

ச.துரை – மத்தி, சங்காயம், தீடை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.