உழைப்பு வேணுமில்ல தோழர்? : பெருமாள்முருகன்

தோழர் பி.எம். அவர்களுக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். நான் தேடிப் போனபோது காட்டுப்பட்டி மேட்டுக்காடுகளுக்கு இடையே பெருங்காளான் போல நின்றிருந்த கரட்டில் வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஒருகாலத்தில் தீவிரச் செயல்பாடு கொண்டிருந்த தோழர்களைச் சந்தித்து அவர்கள் அனுபவங்களைத் தொகுத்து எழுதி நூலாக்கம் செய்யும் என் திட்டத்தைச் சொன்னேன். ‘என்னயக்கூட அமைப்பு நெனப்புல வெச்சிருக்குதா? புத்தகம் எழுதிப் புரட்சி வரப் போகுதா?’ என்று இருகேள்விகளை ஒருசேரக் கேட்டுச் சிரித்தார்.

இடுப்பில் மடித்துக் கட்டிய சிறுவேட்டியும் தலையில் துண்டும்தான் உடைகள். தலையிலும் நெஞ்சிலும் மயிர்கள் நரைத்திருந்தாலும் ஐம்பது வயது சொல்லத்தக்க உடம்பு. பார்த்ததும் கைநாட்டுப் பேர்வழி என்றே தோன்றும். அந்தக் காலத்தில் புகுமுக வகுப்பு வரைக்கும் படித்தவர் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தோற்றத்தில் இல்லை. தன்னைப் பற்றிய தகவல் எப்படிக் கிடைத்தது என்று விசாரித்தார். என் பின்னணி பற்றியும் கேட்டுக் கொண்டார்.

‘க்யூ பிராஞ்ச் இல்லயே?’ என்று கேட்டுச் சிரித்தார்.

‘என்னயப் பாத்தா அப்பிடித் தெரியுதா?’ என்றேன்.

‘க்யூ பிராஞ்சுக்காரனப் பாத்தாத் தெரியாது. உணரத்தான் முடியும். உங்களப் பாத்தா அப்படித் தோணல தோழர்’ என்றார்.

‘இன்னம் அந்தத் தொந்தரவு இருக்குதுங்களா தோழர்?’ என்று கேட்டேன்.

‘அது எப்பவும் முடியாது. நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கறமுன்னு ஆறு மாசத்துக்கு ஒருமுற பாத்து அறிக்க குடுக்கறது அவுங்க வேல. சாகற வரைக்கும் அந்தத் தொடர்பு அறாது.’

அவர் தீவிரமாகச் சொன்னார். ‘அவுங்களாச்சும் வர்றாங்களே’ என்று முனகுவது போலச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை வேறுபுறம் திருப்பினேன். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் பிறகு ஒரு பெருமூச்சோடு பேச்சைத் தொடர்ந்தார்.

‘எல்லாத்தயும் மாத்தீர முடியும்னு நெனச்சு வேல செஞ்சோம். அது ஒருகாலம். நம்மள மாத்திக்கறதே கஷ்டம்னு தோணுது. அது இந்தக்காலம்’ என்று பெருமூச்சு விட்டார். இலைகள் அடர்த்தி குறைந்து வெயில் புள்ளிகள் துளைத்த ஊஞ்ச மரத்தடி நிழலில் உட்கார்ந்தோம்.

‘பிள்ளைகல்லாம் படிச்சு வேலக்கிப் போயிட்டாங்க. நெலத்தக் கொத்திக்கிட்டும் இந்த வெள்ளாடுகள மேச்சிக்கிட்டும் எம்பொழப்பு ஓடுது. உழைப்பு வேணுமில்ல தோழர்? உழைப்பு தான மனித சமூகத்த இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்குது’ என்றார்.
‘ஆம்’ எனத் தலையசைத்து ஆமோதித்தேன். முழுநேர ஊழியராகச் சில காலம் அமைப்பில் அவர் வேலை செய்த தகவல் எனக்குத் தெரியும். பிறகு பகுதி நேர ஊழியராக இருந்தார் எனவும் அதன் பிறகு மாதாமாதம் லெவி கொடுக்கும் அளவில் மட்டும் தன்னைச் சுருக்கிக் கொண்டார் எனவும் அறிந்தேன். இப்போது அவரைத் தேடி வெவ்வேறு அமைப்புத் தோழர்கள் வருவதாகவும் எல்லோரையும் ஏற்று உபசரித்து வழியனுப்புவதாகவும் தகவல். முழுநேர ஊழியராக இருந்தவர் ஏன் மாறிப் போனார் என்னும் கேள்விக்குத் தோண்டித் துருவி ஏதேனும் பதில் பெற வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது. அதை நோக்கிப் பேச்சைச் செலுத்தினேன்.

பேச்சு சுவாரசியம் இருந்தாலும் அவர் கண்கள் வெள்ளாட்டைக் கவனித்துக் கொண்டேயிருந்தன. கரட்டைச் சுற்றிலும் வெள்ளாமைக் காடுகள். எந்தப் பக்கமாவது இறங்கிப் பயிர்களில் வாய் வைத்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார். ஒருபுறம் அவை சரிந்து இறங்குவதைப் பார்த்து எழுந்து கொண்டார். பக்கத்தில் இருந்த மரக்கிளையை எட்டிப் பிடித்து அதில் ஏறியிருந்த கொடியொன்றை இழுத்தார். தீவனச் சுருணையாய்க் கொடி அவர் கைக்கு வந்தது. ‘பக்கூஉ… பக்கூஉ’ என்று கூப்பிட்டார். திரும்பிப் பார்த்த வெள்ளாடுகள் கொடிச் சுருணையைக் கண்டு அவரை நோக்கி ஓடி வந்தன. இரண்டு தாயாடுகள்; ஐந்து குட்டிகள். தலையீத்து மூட்டுக்குட்டி ஒன்று. வயிறு மினுங்கும் அது சினை என்று தெரிந்தது.

என்னைப் பார்த்துத் திரும்பிய அவர் ‘வெள்ளாட்டுக்கு நான் தீனி கொடுக்கறன்னு நெனைக்காதீங்க தோழர். இதுங்கதான் எனக்குச் சோறு போடுதுங்க. யாரு கையையும் எதிர்பார்த்து நானில்ல பாருங்க’ என்று சிரித்தார்.

கையிலிருந்து கொடியை அவை இழுத்தன. அப்படியே கீழே உதறியது போலப் போட்டார். மொய்த்துக் கொண்டு தின்னத் தொடங்கின. நகர்ந்து சிறிது தூரம் நடந்து ஒரு பெரும் பாறாங்கல்லின் மேல் ஏறினார். கொஞ்சம் தடுமாறிப் பின்தொடர்ந்தேன். அங்கிருந்து பார்க்க வானம் அருகில் வந்துவிட்டது போலவும் பூமி வெகுதூரமாகவும் தெரிந்தன. வடதிசையில் கை நீட்டி ‘இதே மாதிரி தூரத்துல ஒரு கரடு தெரியுது பாருங்க தோழர். களியுருண்டய நிறுத்தி வெச்சாப்பல ஒரு நெவுலு. அதுதான் எங்கக்கா ஊரு. சின்னச்சமுத்திரம். அங்க ஒரு ஏரி இருக்குது. நெல்லு நட முடியலீனாலும் ஆரியப்பயிரு நடற அளவுக்குத் தண்ணி வசதி உள்ள ஊரு’ என்று காட்டினார். கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தேன். வயல் வழியே போனால் பத்துக் கல் தொலைவு இருக்கலாம். நெற்றிக்கட்டில் ஒற்றைக்கையை வைத்து அவ்வூரைப் பார்த்தபடி மேற்கொண்டு சொல்லத் தொடங்கினார்.

தோழர் பி.எம்.முக்கு அவர் சாதி வழக்கப்படி பதினாறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. அதன் பிறகுதான் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். நகரத்திற்கெல்லாம் போய்ப் படிப்பது வழக்கமில்லை என்றாலும் அவரது ஆர்வத்தைக் கண்டு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஊக்கப்படுத்தியதால் மேற்படிப்புக்குத் தோழர் போனார். படிக்கப் போன இடத்தில் எதேச்சையாக அமைப்போடு தொடர்பு ஏற்பட்டுப் புரட்சிப் பித்துப் பிடித்தது. துயர்களை எல்லாம் ஒருசேர மாற்றுவதுதான் புரட்சி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? புரட்சியைச் சாதிக்க இருந்த ஒரே குறை மக்களை அமைப்புக்குள் கொண்டுவர முழுநேர ஊழியர் பற்றாக்குறைதான். புகுமுக வகுப்புத் தேர்வு எழுதி முடித்ததும் அமைப்பின் முழுநேர ஊழியராகத் தோழர் மாறினார்.

மனைவி கருவுற்றிருந்த ஐந்தாம் மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தையும் கைவிட்டார். எங்கே இருக்கிறார் என்னும் விவரமெல்லாம் வீட்டாருக்குத் தெரியாது. அமைப்பு ரகசியம் அது. திடுமென எப்போதாவது வீட்டுக்கு வருவார். ஓரிரு மணி நேரம் தங்குவார். நள்ளிரவில் வந்து விடியும் முன் வெளியேறிவிடுவதும் உண்டு. சில சமயம் அதிசயமாக ஓரிரு நாள் இருப்பார். மகள் பிறந்து மூன்றாண்டுகள் வரைக்கும் அப்படித்தான். மகள் முகமே சரியாக மனதில் பதிந்திருக்கவில்லை. எப்படியும் பத்தாண்டுக்குள் புரட்சி வந்துவிடும் என்று முழுமையாக நம்பியிருந்தார். அதன் பிறகு குடும்பத்தோடு நிம்மதியாகக் காலம் கழிக்கலாம் என்று கணக்குப் போட்டிருந்தார்.

அமைப்புக்குள் அப்போது ஒரு பிரச்சினையைக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சாதி, வர்க்கம், சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள உறவு இவற்றைப் பற்றி விவாதம். இந்திய சமூகத்தில் வர்க்கப் பிரிவினையை விடவும் சாதிப் பிரிவினைதான் வலுவாக இருக்கிறது என்றொரு கருத்தை முன்வைத்த அறிவுஜீவிகளை எதிர்கொண்டு ‘சாதியை விடவும் வர்க்கமே வலுவானது’ என அமைப்பு சார்பில் பதிலளிக்க வேண்டியிருந்தது. அமைப்பின் மேல்கமிட்டி முதல் கீழ்க்கமிட்டி வரைக்கும் அதுதான் விவாதம். பல நாட்கள் இரவு பகலாக விவாதித்தும் தீராத ஒருநாளில் மனம் சோர்ந்த தோழர் பி.எம். தம் வீட்டுக்கு வந்திருந்தார்.

பிடிமானம் விட்டுப் போன மனநிலை. காட்டுக்குள் வீடு தனியாக இருந்ததால் அவர் இருப்பு யாருக்கும் தெரியவில்லை. வெளியே போகும் எண்ணமும் இல்லை. அவரைக் கண்டு அஞ்சி ஓடிய மகளைத் தன்வசப்படுத்த முயன்றார். ‘அப்பா… அப்பாடா கண்ணு’ என்று சொல்லி அவர் மனைவி இணக்கமாக்கப் பார்த்தார். பெற்றோரும் சரி, மனைவியும் சரி அவரை எதுவுமே சொல்லவில்லை. கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார். வேளாவேளைக்குச் சாப்பிட அழைப்பு வந்தது. வீட்டின் நிலை எப்படி இருக்கிறது என்பதைச் சோற்றில் உணர்ந்தார்.

முதல் நாள் பகலும் இரவும் சேர்ந்து தூங்கியதில் இரண்டாம் நாள் இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. விடிகாலையில் ஏதேதோ சத்தம் வாசலில் கேட்டதால் எழுந்து வெளியே வந்தார். வண்டிகளில் மாடுகளைக் கட்டிக் கொண்டிருந்தார் அப்பன். ‘எங்கப்பா?’ எனச் சட்டென்று கேட்டுவிட்டார். அப்பன் பதில் சொல்லாமல் முறைப்போடு தோழரைப் பார்த்தார். ‘கொஞ்சம் தண்ணி கொண்டா’ என்று உள்ளே பார்த்துச் சொன்னார். ‘இந்த சகுனச் சனியன் வேற’ என்று முணுமுணுத்த தோழர் சொம்புடன் வெளியே வந்த அம்மாவைப் பார்த்தார்.

‘உங்கக்கா ஊட்டுத் தோட்டத்துல இன்னக்கி ஆரியப் பயிர் நடவு. இரவது ஆளு நடவுக்கு வர்றாங்கய்யா. எல்லாருக்கும் சோறுசாறு ஆக்கோணும், தண்ணிகிண்ணி குடுக்கோணும். அதான் கூடமாட ஒத்தாசைக்குப் போறம்’ என்று விவரம் சொன்ன அம்மா அத்தோடு நிறுத்தவில்லை. பேச்சோடு பேச்சாக ‘நீயும் வர்றயா? உங்கக்காவப் பாத்து வருசமாயிருக்குமே. பாத்துட்டு வரலாம்’ என்று அழைப்பு விடுத்தார்.

மகன் வருவான் என்று அவர் எதிர்பார்த்துச் சொல்லவில்லை. பேச்சுக்குத்தான் கூப்பிட்டார். போகலாம் எனச் சட்டென்று அவருக்குத் தோன்றிவிட்டது. ‘செரி, வர்றம்மா’ என்று வேகமாய்த் தயாரானார். அவரை விடவும் ஐந்தாறு வருசம் மூத்தவர் அக்கா. பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ‘தம்பி தம்பி’ என்று அத்தனை பாசமாக இருந்த அக்கா திடீரென்று வீட்டை விட்டுப் போனதால் தடுமாறிப் போனார் தோழர். ஆதரவு வேண்டியிருந்த குழந்தை வயது அது. அடிக்கடி அக்கா வீட்டுக்குப் போனார். மச்சானுக்கு அது பிடிக்கவில்லை. ‘உன்னயக் கட்டிக்கிட்டு வந்தனா? இந்த உருளையனையும் சேத்துக் கட்டிக்கிட்டு வந்தனா?’ என்று கோபப்பட்டார். படிப்படியாக அக்கா வீட்டுக்குப் போவது நின்று போனது. ஆனால் அக்காவின் நினைவு எப்போதும் குறையவில்லை.

புறப்பட்டு நின்ற வண்டியில் தோழரும் ஏறி உட்கார்ந்தார். ‘வண்டி ஒட்டறது அய்யாவுக்கு மறந்து போச்சாமா?’ என்று மகனுக்குக் கேட்கும்படி சொல்லிக் கொண்டே வண்டியை அப்பன் ஓட்டினார். மாட்டுவண்டி ஓட்டுவது மட்டுமல்ல, காட்டு வேலைகளுமே மறந்துவிட்ட மாதிரிதான் தோழர் பி.எம்.க்குத் தோன்றியது. பள்ளியில் படித்த போது எல்லா வேலைகளும் செய்தவர் என்றாலும் மூன்று வருசம் இடைவிட்டுப் போயிற்று. இனிமேல் உடல் வளைந்து வேலை செய்ய முடியுமா என்றிருந்தது. மக்கள் துயர்களை மொத்தமாகத் தீர்க்கும் புரட்சிப் பெருவேலையில் ஈடுபட்டிருக்கிறோம், பழகிய விவசாய வேலைகள் இடைவிட்டுப் போனாலும் ஒருவாரம் பத்துநாள் மீண்டும் ஈடுபட்டால் கைவந்துவிடுமே என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

இருள் பிரியும் முன் கிளம்பிய அவர்கள் நல்ல வெளிச்சம் வந்தபோது அக்காவின் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். தம்பியைப் பார்த்துச் சந்தோசப்பட்ட அக்கா ‘வேலநாள் பாத்து வந்திருக்கறயே, உனக்கு ஒன்னும் செஞ்சு போட முடியாதேடா’ என்று வருத்தமாகச் சொன்னார். குழந்தையை அணைப்பது போல அவன் தலையைத் தன் மாரில் சாய்த்துக்கொண்டு தடவினார். ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ வேலயப் பாருக்கா’ என்று சொன்னவர் மச்சானுடன் போய்ச் சேர்ந்து கொண்டார். மச்சான் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவன் கேட்டதற்கு ஒவ்வொரு வார்த்தையில் பதில் சொன்னார். அமைப்பு வேலைகளில் தோழர் ஈடுபட்டதும் முழுநேரமாகப் போனதும் குடும்பத்தில் யாருக்குமே உடன்பாடில்லை. மச்சான் அதை நேரடியாக வெளிப்படுத்துகிறார் என்று நினைத்துக் கொண்டார்.

மச்சானின் புறக்கணிப்பைப் பொருட்படுத்தாமல் அவரோடு பேசினார். பெரிய சட்டியில் மோர் ஊற்றிக் களியைக் கரைத்து வைத்திருந்தார்கள். ஆளுக்கு இரண்டு சொம்பு குடித்துவிட்டுக் காட்டுக்குக் கிளம்பினார்கள். காட்டுக்கும் வீட்டுக்கும் கொஞ்ச தூரம். அக்காவும் அம்மாவும் இன்னும் சில பெண்களின் துணையோடு சமையல் வேலையைத் தொடங்கினார்கள். மச்சானையும் அப்பனையும் தொடர்ந்து தோழரும் நடவு வேலை தொடங்கும் காட்டுக்குப் போனார். ஐந்து ஏக்கர் பரப்பு முழுதும் உழுது பாத்தி கட்டியிருந்தது. குனிந்ததும் கிணற்றில் தண்ணீர் தெரிந்தது. ஆயில் எஞ்ஜின் மூலம் தண்ணீர் வெளியேறியது. பாத்திகளுக்குத் தண்ணீர் மாறும் வேலையை அப்பன் தானாகவே எடுத்துக் கொண்டார். பாத்திக்குள் இருந்த மேடுபள்ளத்தை மண்வெட்டியால் நிரவிச் சமப்படுத்தித் தண்ணீர் சீராகப் பாய விடும் வேலையை ஒருவர் பார்த்தார். மச்சான் காட்டில் வேலை செய்யும் ஆள்காரராக அவர் இருக்கக் கூடும்.

நாற்று விட்டிருந்த செரவில் பிடுங்கிக் கட்டி வைத்திருந்த ஆரியப் பயிர்க் கத்தைகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் மச்சான். தனக்கு எந்த வேலையும் இல்லை என்று தோழருக்குத் தோன்றியது. ஏதாவது செய்ய வேண்டுமா என்று மச்சானைக் கேட்கவும் தயக்கமாக இருந்தது. பல்லே துலக்கவில்லை என்பது நினைவுக்கு வர வேப்பங்குச்சியை ஒடித்து வாயில் வைத்தபடி கிணற்று மேட்டில் நின்று கொண்டார். இவ்வளவு தூரம் வந்து வேலை எதுவும் செய்யாமல் இருப்பது என்னவோ போல இருந்தது. நாற்றுச் செரவுப் பக்கம் எதேச்சையாகப் போவது போலச் சென்று ‘எதுனா செய்யட்டுமா மச்சான்?’ என்று கேட்டார். முகத்தில் இளக்கம் இல்லாமல் திரும்பிப் பார்த்த மச்சான் யோசித்து ‘எல்லாத்தயும் மேற்பார்வ பாத்துக்கிட்டு உக்காந்திரு, போதும்’ என்றார். ‘மூடிக்கிட்டு இரு’ என்பதைத்தான் இப்படி நயமாகச் சொல்கிறாரோ?

ஒரு அணப்புப் பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ந்து முடிகையில் பொழுது நெற்றிக்கட்டுக்கு வந்திருந்தது. நடவுக்குப் பதினாறு பெண்களும் மூன்று ஆண்களும் வந்து சேர்ந்தார்கள். காட்டுக்குள் பறவைக் கூட்டம் நுழைந்த மாதிரி பேச்சும் சிரிப்புமாய்க் கலகலப்பாக இருந்தது. கையில் ஆளுக்கொரு நாற்றுக் கத்தையை எடுத்துக் கொண்டு நீர் பாய்ந்திருந்த அணப்புக்குள் இறங்கி இரண்டு ஆளுக்கு ஒருபாத்தி எனப் பிரித்து நடவை ஆரம்பித்தார்கள். ஆம்பளை ஆட்கள் நாற்றுக் கத்தைகளைக் கொண்டு போய்ப் பாத்திகளில் குறிப்பிட்ட இடைவெளியில் அங்கங்கே போட்டார்கள்.

வேப்பங்குச்சி விரல் நீளம் வரும்வரை பல் துலக்கிக் கொண்டேயிருந்த தோழரை விளித்த அப்பன் ‘பயா… கொஞ்சம் குடிக்கத் தண்ணி கொண்டா. வாய்க்கால்ல கலங்கலா வருது’ என்று சத்தமாகச் சொன்னார். அப்பன் மண்வெட்டி தூக்கி வெட்டி மடை மாறிக் கொண்டிருக்கத் தான் கிணற்று மேட்டு நிழலில் ஒணத்தியாக உட்கார்ந்திருக்கிறோமே என்று குற்றவுணர்வு கொண்டிருந்த அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது போலிருந்தது. குழாயில் கொட்டும் நீரில் கை நீட்டிப் பிடித்து அவசரமாக வாய் கொப்பளித்தார். வெல்லம் கரைத்தது போல நீர் இனித்துக் கிடந்தது. வேட்டியை மடித்துக் கட்டியவர் அங்கிருந்த மண்குடத்தில் நீர் பிடித்துத் தோளில் வைத்துக்கொண்டு மண் சொப்பு ஒன்றையும் கையில் எடுத்தபடி நடவு அணப்புக்கு நடந்தார்.

இரண்டாம் அணப்புக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்தது. அப்பன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்த நடவுப் பெண்ணொருத்தி ‘எனக்கும் கொஞ்சம்’ என்று சத்தம் கொடுத்தாள். அவளுக்குக் கொண்டோடிப் போய்த் தண்ணீர்ச் சொப்பை நீட்டினார். இன்னொரு பெண்ணும் தண்ணீர் கேட்டாள். நீட்டிய சொப்பை அவள் வாங்கவில்லை. சிரித்துக்கொண்டே ‘கையில ஊத்துங்க’ என்று சொல்லி இருகையையும் குவித்து வாங்கிச் சேற்றைக் கழுவிவிட்டு அடுத்து ஊற்றியதைக் குடித்தாள். தோழருக்கு ஒருமாதிரி இருந்தது. மச்சான் சொல்லாமலே எல்லோருக்கும் தண்ணீர் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டார்.

பாத்திச் சேற்றுக்குள் அவர் கால் வைக்காமல் சொப்பில் சிலருக்குத் தண்ணீர் கொடுக்க முடிந்தது. சிலர் பாத்தியிலிருந்து வெளியே வந்து அவர் முன் குனிந்து கைகளை ஒட்டி நீர் ஊற்றச் சொல்லிக் குடித்துவிட்டுப் போனார்கள். ‘சொப்புலயே குடிங்க’ என்று தோழர் சொல்லிப் பார்த்தார். அவர்கள் சிரித்தார்களே தவிரச் சொன்னதைக் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் இனம் பிரித்துவிட்டார். பதினாறு பேரில் ஆறு பேர் மட்டும் சொப்பை வாங்கிக் குடித்தார்கள். மற்ற பத்துப் பெண்களும் ஆண்கள் மூவரும் கை ஒட்டித்தான் குடித்தார்கள். அவர் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தார். யாரும் கேட்கவில்லை.

‘தண்ணி ஊத்த ஒராளு கெடச்ச ஒடனே எல்லாருக்கும் தாகம் பிச்சுக்கிட்டு வருதாட்டம் இருக்குது. வேல நடக்கட்டும்’ என்று மச்சான் தூரத்திலிருந்து குரல் கொடுத்தார்.

அதற்குப் பின் யாரும் தண்ணீர் கேட்கவில்லை. குடத்தோடு கரை மேல் உட்கார்ந்தவர் யோசனை எங்கெங்கோ ஓடியது. இருபது பேரும் ஒரே இடத்தில் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். அப்படி என்றால் எல்லோரும் உழைக்கும் வர்க்கம்தானே? அவர்களை ஒன்று சேராமல் தடுப்பது எது? சாதிதான். ஒரே உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பிரிவினர் சொப்பை வாங்கித் தண்ணீர் குடிக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் கையேந்திக் குடிக்கிறார்கள். எப்படி அவர்களை ஒருங்கிணைக்க முடியும்? சாதியைக் கடந்து இவர்களை வர்க்கரீதியாக அணி திரட்ட முடியுமா? வெயில் சுடுவது தெரியாமல் யோசித்தபடி உட்கார்ந்திருந்தவரை மீண்டும் அப்பன் குரல்தான் எழுப்பியது.

அப்பனுக்கு மீண்டும் தண்ணீர் கொண்டு போய்க் கொடுத்தார். அவருடன் பாத்தியைச் சரி செய்து கொண்டிருந்த ஆள்காரர் தனக்கும் தண்ணீர் கேட்டுக் கையேந்தினார். சொப்பில் குடிப்பதாக இருந்தால் தருவதாகத் தோழர் சொன்னார். ஆள்காரர் சிரித்துக்கொண்டே ‘நாங் குடிச்சிருவன். உங்க மச்சான் அவுங்ககிட்ட ஒருவார்த்த கேட்டுச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விட்டார். தாகத்தில் வேலை செய்கிறாரே என்று வலுக்கட்டாயமாக அழைத்துக் கையில் தண்ணீர் ஊற்றினார். நடவுப் பெண்களிடமிருந்து தண்ணீர்க் கோரிக்கையே வரவில்லை.

‘ஆருக்காச்சும் தண்ணி வேணுமா?’ என்று அவராகவே சத்தமாகக் கேட்டார்.

‘போடற தண்ணி இருந்தா வேண்ணா குடுங்க’ என்று ஒரு பெண் சொல்லவும் காடே சிரித்தது.

‘நீங்கெல்லாம் போட ஆரம்பிச்சிட்டா அப்பறம் நாங்கெல்லாம் எங்க போறதாம்?’ என்று ஆண் ஒருவர் சொன்னதும் மீண்டும் சிரிப்பு.

தோழருக்குச் சிரிப்பு வரவில்லை. தான் தீவிரமாக யோசிக்கும் விஷயம் இவர்கள் எல்லோருக்கும் கேலியாக இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தார். இனித் தண்ணீர் தேவைப்படாது என்று தெரிந்ததும் குடத்தைத் தூக்கிக் கொண்டு கிணற்று மேட்டுக்குப் போனார். அங்கிருந்த மின்ன மரத்தடியில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்தார். எல்லோரும் வேலை செய்யும்போது தான் மட்டும் படுத்திருக்கிறோம் என்றுகூடத் தோன்றவில்லை. கண்களை மூடிக்கொண்டு தீவிரமாக உள்ளுக்குள் ஆழ்ந்து போனார். கண் முன்னால் நடக்கும் ஒரு அநீதிக்கு எதிராக எதுவுமே செய்ய இயலாமல் இப்படிச் சோர்ந்து கிடப்பது கேவலம் என்று தோன்றியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப் போனார்.

எவ்வளவு நேரம் தூங்கினாரோ தெரியவில்லை. ‘பயா பயா’ என்னும் அம்மாவின் சத்தம் கேட்டு விழித்தார். அம்மாவும் அக்காவும் சோற்றுப்பானைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். அடுக்குச் சட்டிகள் இரண்டில் ஆரியக் களி உருண்டைகள். இன்னும் இருசட்டிகளில் அவரைப் பருப்புச் சாறு. அவற்றை இறக்கும்போது வாசனை பிடித்தே தெரிந்து கொண்டார். வீட்டுக்குப் போயிருந்தால் இந்தச் சட்டிகளையாவது தூக்கி வந்திருக்கலாம். வேர்த்து வடியும் அம்மாவின் முகத்தைப் பார்க்கக் கூசித் தலையைத் திருப்பிக் கொண்டார்.

பயிர் நடவு முடிந்து எல்லோரும் வந்து கொண்டிருந்தார்கள். மோட்டாரை எப்போது நிறுத்தினார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை. இரவுபகல் தூங்கியது போதாமல் மோட்டார் சத்தத்திலும் தூங்கியிருக்கிறோம், சத்தம் நின்றபோதும் தூங்கியிருக்கிறோம் என்று நினைத்துப் பெருமூச்சு விட்டார். உழைப்பிலிருந்து அந்நியமாகிப் போனோமோ? எல்லோரும் கிணற்றுப் பக்கம் வந்ததும் ஆயில் என்ஜின் குழியில் இறங்கி ஸ்டார்ட் செய்து ஓட விட்டார் ஆள்காரர். வாய்க்காலில் வழிந்தோடும் நீரில் எல்லோரும் கைகால்களைக் கழுவினார்கள். அவர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார். என்ஜின் நிற்கும் சத்தம் கேட்டது.

‘பயா… வா… எல போட்டாச்சு’ என்று அக்கா அழைத்தார்.

தோழர் பி.எம். அண்ணாந்து பார்த்தார். கிணற்று மேட்டில் வரிசையாக ஏழெட்டு வாழையிலைகள் போட்டிருந்தன. அதில் சிலர் போய் உட்கார்ந்தார்கள். இலையில் களி உருண்டையை அம்மா வைத்தார். பின்னாலேயே அக்கா குழம்பு ஊற்றினார். கெட்டிப் பருப்புக் கடைசல் வெண்ணெய் போல இலையில் நின்று மெல்லப் படர்ந்தது. அதைப் பார்க்கப் பந்தி வரிசை போலிருந்தது. அப்பன், மச்சான், ஆறு பெண்கள் வரிசையில் தெரிந்தார்கள். ஓரத்து இலை ஒன்று தோழருக்கெனக் காலியாக இருந்தது. அவர்களுக்கு வைத்து முடித்ததும் வாரியோரம் கையில் கொட்டயிலையைக் கையில் ஏந்தி நின்றிருந்த பெண்கள் பக்கம் அம்மா போனார். வாய்க்காலோரம் இருந்த கல்லின் மேல் சட்டியை வைத்து அவர்களுக்குப் போட ஆரம்பித்தார். இருகைக்குள் அடங்கும் கொட்டயிலையை நீட்டிக் களி உருண்டையை வாங்கிக் கொண்டார்கள். ஆண்கள் மூன்று பேரும் அப்படியே செய்தார்கள். வாங்கியவர்கள் வாய்க்கால் தென்னைகளின் பக்கம் போய் ஒதுங்கிக் குந்துகால் வைத்து உட்கார்ந்து உண்டார்கள்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தோழருக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பட்டது. சட்டெனக் காட்டுக்குள் இறங்கினார். சற்று தூரத்தில் இருந்த கடலை பிடுங்கிய காட்டுக்குப் போய் அங்கே நின்றிருந்த கொட்டச்செடியில் ஓர் இலையை இணுங்கிக் கொண்டு வந்து கையிலேந்தி அம்மாவுக்கு முன்னால் நின்றார். ‘ஐயோ’ என்றார் அம்மா. என்னவோ ஏதோ என்று எல்லோரும் பார்த்தார்கள். அவருக்கெனப் போட்டிருந்த வாழையிலை காற்றில் அசைந்து கொண்டிருந்தது.

‘என்னவாம்?’ என்றார் மச்சான்.

‘வாழ எலயில தின்னா ஐயாவுக்குத் தொண்டையில எறங்காதா?’ என்று கேட்டார் அப்பன்.

‘எல்லாருக்கும் வாழ எலயில போட்டா நானும் அதுல திங்கறன்’ என்று தோழர் பி.எம். சத்தமாகச் சொன்னார். அவர் குரலில் உறுதி இருந்தது.

‘அத்தன வாழயெல இல்லியேப்பா’ என்று பரிதவிப்புடன் அக்கா சொன்னார்.

‘செரி, எல்லாருக்கும் கொட்டயெலயிலயே போடுங்க’ என்று தோழர் அதே சத்தத்துடன் சொன்னார்.

‘எந்திரிச்சு வரச் சொல்றயா?’ என்று அம்மா கேட்டார்.

‘ஆமா. எல்லாருக்கும் கொட்டயெலயிலயே போடுங்க’ என்று மீண்டும் சொன்னார் தோழர்.

‘எல்லாருக்கும் கொட்டயெலயிலயே போடுங்க’ என்பது ஒரு முழக்கமாய்க் காடு முழுதும் எதிரொலித்து அவர் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.

‘நாங்கெல்லாம் பாதியில எந்திரிச்சு வர முடியாது. அவந்தான் கொட்டெலய நீட்டிக்கிட்டு நிக்கறானே, அவனுக்கு அதுலயே போடுங்க’ என்று மாமியாரைப் பார்த்துச் சொன்னார் மச்சான்.

‘ஆமா, போடு’ என்று அப்பனும் சொன்னார்.

தயங்கிய அம்மா வேறு வழியில்லாமல் ‘கழுவிக்கிட்டு வா’ என்று சொன்னார். தன் கையிலிருந்த இலையை வாய்க்காலில் தேங்கி நின்ற நீரில் கழுவிக் கொண்டு வந்து நீட்டினார். அதில் களியையும் சாற்றையும் வாங்கிக் கொண்டுபோய் மூன்று ஆண்களோடு குந்த வைத்து உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். அவர்கள் முனகுவது போல ஏதோ பேசிக்கொண்டு அவரிடமிருந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தார்கள். அவர் ஏதும் பேசவில்லை. களிக்கும் குழம்புக்கும் பொருந்திச் சுவை கூடியிருந்தது. வாழையிலையில் உட்கார்ந்து தின்றிருந்தால் இந்தச் சுவை வந்திருக்காது என்று நினைத்தார்.

அவர்களோடு இயல்பாகப் பேசுவது போல ‘கொழம்பு அருமையா இருக்குதில்ல? எங்கம்மா கைப்பக்குவம் அது’ என்று சொன்னார். அவர்களும் ஆமோதிப்பது போல ஏதோ சொன்னார்கள். ஆனால் எல்லோரும் வாய்க்குள்ளேயே பேசினார்கள். அவ்வப்போது மச்சானைப் பார்த்துக் கொண்டார்கள். பெண்கள் பக்கம் சத்தமே இல்லை. இரண்டாம் உருண்டை வாங்குவதற்கு எல்லோரும் போனபோது அவரும் அவர்களுடனே போய் இலையை நீட்டி வாங்கிக் கொண்டார். அம்மாவின் அழுத முகம் தெரிந்தது. ‘ஏண்டா பயா… இப்பிடிப் பண்ற?’ என்று மெதுவாகக் கேட்டுக் கொண்டே குழம்பு ஊற்றினார் அக்கா. அவர் குரலிலும் அழுகைக் குறிகள் இருந்தன. அப்பனும் மச்சானும் எந்தச் சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அநியாயத்திற்கு எதிராகத் தன்னால் இயன்றதைச் செய்துவிட்ட திருப்தியோடு தோழர் பி.எம்.மும் சாப்பிட்டு முடித்தார்.

உணவுக்குப் பிறகு மீதமிருந்த காட்டில் நடவு நடந்தது. முன்னிருந்த கலகலப்பு இல்லை. எல்லாம் முடியப் பொழுதிறங்கும் நேரமாகிவிட்டது. அக்கா வீட்டிற்குப் போய் வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான். அப்பனும் மச்சானும் அவர்களுக்குள் பேசிக்கொண்டு போனார்கள். அவர்களுக்குப் பின்னால் தோழர் எதுவும் பேசாமல் நடந்தார். பேச்சில் தோழரால் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களும் தோழரை நோக்கி எதுவும் பேசவில்லை.

வீட்டுக்குப் போனதும் ‘அப்ப நாங்க கெளம்பறங்க மாப்பள. வெளிச்சமிருக்க ஊடு போய்ச் சேந்தர்றங்க’ என்றார் அப்பன்.

‘அப்பா… எல்லாரும் உள்ள வந்து உக்காருங்க. காப்பித்தண்ணி வெக்கறன். ஒருவாய் குடிச்சுட்டுப் போவீங்க’ என்று அழைத்தார் அக்கா.

அம்மா உள்ளேதான் இருந்தார். படியேறிய அப்பனின் பின்னாலேயே தோழரும் போனார்.

‘அதுக்கு மேல காலெடுத்து வெக்காத. நில்லு’ என்றார் மச்சான்.

அக்காவும் அம்மாவும் வெளியே ஓடி வந்தார்கள். அப்பன் அப்படியே நின்றார். அக்காவைப் பார்த்து மச்சான் சொன்னார்.

‘உந்தம்பி ஒன்னுமில்லாத பயதான்னு நெனச்சன். அதுக்கு மேல இப்பச் சாதி மாறிட்டான். இன்னமே கொட்டெலய வெச்சிக்கிட்டுக் கையேந்தித்தான் திங்கோணும். சாதிமாறிப் பயலுக்கு என்னூட்டுல எடமில்ல. பாதம் பட்ட அந்தப் படியக் கழுவிச் சாணி போட்டு வழிச்சுடு.’

‘ச்சீ’ என்று ஒற்றைச் சொல்லை அருவருப்போடு உதிர்த்த தோழர் பி.எம். வேகமாக வந்து வண்டியைப் பூட்டினார். அப்பனும் அம்மாவும் ஓடிவந்து ஏறிக் கொண்டார்கள். அதற்கப்புறம் இப்போது வரைக்கும் அக்கா வீட்டில் காலெடுத்து வைக்கவில்லை. முழுநேர ஊழியத்திலிருந்தும் விலகிக் கொண்டார்.

௦௦௦

பெருமாள்முருகன்

பெருமாள்முருகன், பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார். படைப்புகளில் கொங்கு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்து, அதிகம் அறியப்படாதிருந்த கொங்கு வேளாண் வாழ்க்கையைப் பதிவு செய்தவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

தமிழ் விக்கியில்

2 Comments

  1. அற்புதமான கதை. சாதியில் வர்க்கம் பார்க்கும் வர்க்கத்திலும் சாதி பார்க்கும் இந்திய மண்ணையும் மக்களையும் இந்திய கம்யூனிஸ்ட்கள் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை. புரிந்து கொண்டாலும் தத்துவவெறி சமத்துவம்பேச இடம்தறாது. அது சாதி வெறியினும் கொடியது. கதை அதைத்தான் பேசுகிறது…

  2. பெருமாள் முருகனின் இந்த கதை ஒரு காலத்திய புரட்சிகர அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சி, தோழர்களை பற்றி மலரும் நினைவாக உள்ளது. படிக்கும்போது ஆனந்தமாக இருந்தாலும், நம்மள மாத்திக்கிறதே கஷ்டம்னு தோணுற காலகட்டத்தில் நாம் இருப்பதால் பெருமூச்சு தான் வருகிறது.
    – A. கருணாகரன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.