டாக்டர் அம்பேத்கர் அளித்த திருமண விண்ணப்பம் : சவிதா அம்பேத்கர்

தமிழில் : த.ராஜன்

[“பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை” புத்தகத்தின் ஓர் அத்தியாயம்]

நாயக அந்தஸ்து கொண்ட நபர் டாக்டர் அம்பேத்கர். நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டு, சந்திக்க ஆரம்பித்தோம் என்பது எனக்கு மிகவும் பெருமையாகவும் மேன்மைமிக்கதாகவும் இருந்தது. இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவரிடம் வெளிப்பட்ட பண்பாடும் புலமையும் பணிவும் என்னுடைய இளம் மனத்தில் ஆழமான சுவட்டை விட்டுச்சென்றன. அவரிடம் நான் எல்லையற்ற மரியாதை வைத்திருந்தேன். அவர் மீதான இந்த அதீத மரியாதையின் காரணமாகவும், அவருடைய உடல்நிலையையும் குடும்பச் சூழலையும் கணக்கில்கொண்டும் அவருடன் மிகுந்த ப்ரியத்துடன் உரையாடினேன். வருங்காலத்தில் அவரை நான் மணந்துகொள்வேன் என்று அந்த நேரத்தில் யாராவது என்னிடம் சொல்லியிருந்தால், நிச்சயமாக அந்த நபரை ஒரு முதல்தரப் பைத்தியக்காரராகக் கருதியிருப்பேன். மருத்துவர்–நோயாளி என்ற அளவில்தான் அவருடனான என்னுடைய உறவு இருந்தது; மரியாதையும் அனுதாபமும் நாட்டு மக்களின் நன்மைக்காக அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற மனமார்ந்த விருப்பமும் அதன் பொருட்டு அவருக்கு மருத்துவக் கவனமும் சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்பதும் தவிர வேறெதும் என் இதயத்தில் இருந்ததில்லை.

அது டிசம்பர் மாதத்தின் ஒரு நாள். பம்பாய் வந்திருந்தபோது அவர் எங்களுடைய ஆலோசனை அறைக்கு வந்திருந்தார். டாக்டர் மால்வன்கர் அவருடைய உடலைப் பரிசோதித்துவிட்டு, அதற்கான சிகிச்சையைச் சொன்னார். டாக்டர் அம்பேத்கர் கிளம்பும்போது என்னிடம் வந்து, “வாருங்கள், நான் உங்களுடைய தாதர் வீட்டில் இறக்கிவிடுகிறேன். நான் ராஜ்கிரஹாவுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றார். இது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. இந்த நிகழ்வுக்கு முன்பும்கூட நாங்கள் அடிக்கடி வெளியே சென்று அரட்டையடித்திருக்கிறோம். அரிதாக ஊர்சுற்றுவதற்காகவும் சென்றது உண்டு. என்னுடைய குடும்பத்துக்கு இவை எல்லாமே தெரியும். ஆனால், எங்களுடைய எல்லா அரட்டைகளும் ஊர்சுற்றல்களும் மருத்துவர்–நோயாளி என்ற அளவில்தான் இருந்தன.

ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் வெவ்வேறு விஷயங்கள் பற்றிப் பேசுவோம். நாங்கள் ஊர்சுற்றுவதற்காக வெளியே சென்றால், தேநீரும் சிற்றுண்டியும் சாப்பிடுவது வழக்கம். டாக்டர் சாஹேபை அறிந்தவர்கள் என்னை விழிகள் விரிய வியப்புடன் பார்ப்பார்கள். மகத்தான மனிதருடன் சுற்றித்திரியும் இந்த இளம்பெண் யார் என்ற ஆச்சரியம்தான் அது என்பதில் ஐயமில்லை. அவர் தன்னை அறிந்தவர்களிடம் என்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. ஆனால், அவரை நான் எப்போதும் உயர்வான இடத்திலேயே வைத்திருந்தேன். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கியதும் அவரை இன்னும்இன்னும் மேலாகப் புரிந்துகொண்டேன். அவருடைய சாதனைகளையும் வரலாற்றுப் பணிகளையும் அருகிலிருந்து பார்க்கத் தொடங்கியதும் திகைத்துப்போய்விட்டேன். அந்நாளில் அவர் சொன்னார்: “பாருங்கள் டாக்டர், என் மக்களும் என் சகாக்களும் நான் மணம்புரிந்துகொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், எனக்குப் பிடித்த, உகந்த குணங்கள் கொண்ட, என்னுடைய மனநிலைக்கு ஏற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது எனக்கு மிகவும் கடினம். லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும். அதற்காக என் மக்களின் கோரிக்கையை நான் அக்கறையுடன் பரிசீலிப்பதுதான் முறையானது.” நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தேன். பிறகு, “உங்களைக் கவனித்துக்கொள்ளக்கூடிய ஒரு நபர் நிச்சயம் இருக்க வேண்டும்” என்றேன். டாக்டர் சாஹேப், “எனக்கு உகந்த நபருக்கான தேடலை உங்களிடமிருந்து தொடங்குகிறேன்” என்றார்.

இதைக் கேட்டதும் நான் பதைபதைப்புக்கு ஆளானேன். எனக்கு உண்மையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே அமைதியாக இருந்தேன். டாக்டர் அம்பேத்கர் தன் திட்டப்படி டெல்லி கிளம்பிச்சென்றார். நான் என் வேலையில் மும்முரமானேன். அவர் என்னிடம் சொன்ன எல்லாவற்றையும் மறந்தும்போனேன். ஆனால், அவர் மறக்கவில்லை என்று உணர்ந்துகொண்டேன். ஜனவரி 25 அன்று, டெல்லியிலிருந்து வந்திருப்பதற்கான அஞ்சல்தலையைக் கொண்டிருந்த ஒரு தடிமனான கடித உறை எனக்குக் கிடைத்தபோதுதான் அதை உணர்ந்துகொண்டேன். அது டாக்டர் அம்பேத்கரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை ஊகித்துவிட்டேன். அதைத் திறந்ததும் என்னுடைய ஊகம் சரி என்பது தெரிந்தது. நான் அது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. ஏனென்றால், அவருடைய சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், உடல்நலம் பற்றியும் சிகிச்சைகள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை கேட்டு எழுதியிருப்பதாகவே நினைத்தேன். ஆனால், எல்லாவற்றையும் ஒருவரால் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? சில சம்பிரதாயமான பேச்சுக்குப் பிறகு நேரே விஷயத்துக்கு வந்தார்: ‘நான் உங்களிடமிருந்து என்னுடைய தேடலைத் தொடங்கியிருக்கிறேன் என்பது நிச்சயமாக உங்களுக்கும் இதில் உடன்பாடு இருந்தால் மட்டும்தான். இதைப் பற்றி யோசித்துவிட்டு எனக்குத் தெரியப்படுத்துங்கள்.’ மேலும் தொடர்ந்தார்: ‘உங்களுக்கும் எனக்குமான வயது வித்தியாசத்தைக் கருத்தில்கொண்டும், என்னுடைய உடல்நிலையை வைத்தும் நீங்கள் என் விண்ணப்பத்தை நிராகரிப்பீர்களேயானால் அதற்காக நான் கொஞ்சமும் புண்பட மாட்டேன்.’

கடிதத்தை வாசித்ததும் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. டாக்டர் அம்பேத்கர் என்னைப் பற்றி இப்படியான உணர்வுகளைக் கொண்டிருப்பார் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவரால் நான் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன் என்றபோதும், அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தபோதும், அவருடைய மனைவியாகும் ஆசையை நான் நிச்சயமாக வளர்த்துக் கொண்டிருக்கவில்லை.

டாக்டர் அம்பேத்கரின் கடிதத்தையும் அவருடைய திருமண விண்ணப்பத்தையும் அன்றைய நாள் முழுவதும் தீர யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குள் குழப்பப் புயல் வீசிக்கொண்டிருந்தது. என் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று இரவு முழுவதும் வியந்துகொண்டிருந்தேன். மிக முக்கியமான ஆளுமையை ஒருவரால் எப்படி நிராகரிக்க முடியும்? அதேநேரத்தில், ஆமாம் என்றும் எப்படிச் சொல்வது? யாரிடம் நான் அபிப்ராயம் கேட்க வேண்டும்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்துகொண்டிருந்தன. இரவு முழுவதும் யோசித்த பிறகு டாக்டர் மால்வன்கரிடம் ஆலோசனை கேட்பதாக முடிவெடுத்தேன். டாக்டர் மால்வன்கரும் டாக்டர் அம்பேத்கரும் நல்ல உறவை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் என்னுடைய சீனியர். பரந்த அனுபவம் கொண்ட மனிதர். அதனால், அவரிடம் ஆலோசனை பெறலாம். அடுத்த நாள் டாக்டர் மால்வன்கரிடம் சென்றேன்.

வழக்கம்போல் வேலையைத் தொடங்கினேன். ஆனால், என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரிடம் சென்று பேசுவதற்கான தைரியமும் எனக்கு இல்லை. ஒருவழியாக, என்னுடைய எல்லா தைரியத்தையும் ஒன்றுதிரட்டி, உருகிய இதயத்தோடு டாக்டர் மால்வன்கரிடம் சென்று கடிதத்தைக் கொடுத்தேன். அவர் கடிதத்தை வாசித்துவிட்டு ஒருகணம் யோசித்தார். பிறகு சொன்னார்: “டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். உன்னிடம் எதையும் அவர் திணிக்க முற்படவில்லை. எனவே, நிதானமான மனநிலையுடன் எல்லாக் கோணங்களிலும் யோசித்துவிட்டு முடிவெடு.”

குழப்பமான மனநிலையுடன் வீடு திரும்பினேன். என்னால் முடிவெடுக்க முடியவில்லை. துணிவுடன் என் அண்ணனிடம் சென்று, நான் என்ன முடிவெடுக்க வேண்டுமெனக் கேட்டேன். அவர், “ஆ! அப்படியென்றால் நீ இந்தியாவின் சட்ட அமைச்சி ஆகப்போகிறாய்! அதை நிராகரிக்க நினைக்காதே! அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்!” என்றார். என்னுடைய தம்பிகளில் ஒருவன் என்னைக் கேலிசெய்ய ஆரம்பித்துவிட்டான். “இங்கே பார், டாக்டர் அம்பேத்கரின் தொண்டர்கள் தங்கள் உயிரைவிட டாக்டர் அம்பேத்கரை அதிகம் நேசிக்கிறார்கள். தங்களுடைய பாபாசாஹேபின் விருப்பத்தை இந்த மருத்துவச்சி நிராகரிக்கிறாள் என்று அவர்கள் அறிய நேர்ந்தால் நீ ஆபத்தில் மாட்டிக்கொள்வாய். நீ வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவதற்கும் நிறைய வாய்ப்பு உண்டு! அதனால், அவரிடம் சென்று உடனடியாகச் சம்மதம் சொல்லிவிடு. இல்லையென்றால், உன்னைக் காப்பாற்ற முடியாது.”

நான் இளவயதினள். அனுபவமற்றவள். அம்பேத்கரை ஒப்பிட்டால் நான் எதற்கும் லாயக்கற்றவள். அவருடைய ஆளுமை, அவருடைய பணி, அவருடைய தியாகம், அவருடைய புலமை என இவையெல்லாம் இமயமலையைவிட வல்லமை கொண்டவை. அவருடைய உயர்ந்த ஆளுமைக்கு எதிராக என்னை வைத்தால் நான் மிகவும் வற்றிச்சுருங்கிய நபர். டாக்டர் அம்பேத்கர் போன்ற மகத்தான நபரை ஒருவரால் எப்படி நிராகரிக்க முடியும்? சம்மதம் சொல்லும்படி என்னுடைய சகோதரர்கள் என்னை விரட்டிக்கொண்டிருந்தனர். ஒரு முழு நாள், ஒரு முழு இரவு யோசனைக்குப் பிறகு என் மனதை மாற்றிக்கொண்டேன்: சரி! சம்மதம்! காரணம், நான் ஒரு மருத்துவர். அவருடைய உடல்நலம் என்ன நிலையில் உள்ளது என்பதை நன்கறிவேன். அவருக்கு மருத்துவ உதவுபுரியுமாறு, என்னுள் இருந்த மருத்துவச்சி என்னைத் தூண்டிக்கொண்டிருந்தாள். சுதந்திர இந்தியாவின் அரசமைப்பை உருவாக்கும் வரலாற்றுப் பொறுப்பை அவருடைய தோள் மீது அரசு வைத்திருந்தது.

எனவே, அவருடைய உடல்நிலையை நல்லபடியாகக் கவனித்துக்கொள்வது மிகமிக அவசியம். அதன் பொருட்டு, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நான் முடிவெடுத்ததும், டாக்டர் அம்பேத்கருக்குக் கடிதம் எழுதினேன். அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னேன். நான் சம்மதம் தெரிவித்ததற்கு ஒரே ஒரு காரணம்தான்: டாக்டர் சாஹேபின் உடல்நிலை மேம்பட வேண்டும், சூழ்நிலை என்னவாக இருந்தாலும். அப்போதுதான், நாட்டின் அரசமைப்பை எழுதும் வரலாற்றுச் செயலை அவரால் மிகச் சிறந்த முறையில் ஆற்ற முடியும்.

நான் என்னுடைய சம்மதத்தைத் தெரிவித்த பிறகு, நானும் என்னுடைய தம்பி பாலுவும் ஏதோ வேலைக்காக வெளியே செல்ல நேர்ந்தது. உள்ளூரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாகச் சுற்றும்முற்றும் பார்த்தேன். பெரும்பாலான பெட்டிகளில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ‘ஜெய் பீம்’ என்ற வாசகத்தைக் கவனித்தேன். மற்ற நகரங்களுக்குச் செல்லும் ரயில் பெட்டிகளில் ‘ஜெய் பீம்’ என்று வரையப்பட்டிருந்தது. அங்கே குழுமியிருந்தவர்களும் ‘ஜெய் பீம்’ என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய தம்பியிடம் கேட்டேன்: “பாலு, என்ன நடந்துகொண்டிருக்கிறது? யார் இந்த ஜெய் பீம்? இந்தக் கோஷத்தை முழக்கமிட்டுக்கொண்டிருக்கும் இவர்களெல்லாம் யார்?”

பாலு சிரித்தான். “பீம் உன்னுடைய ஆள்தான். முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் இவர்களெல்லாம் அவர் மீது கண்மூடித்தனமாக அன்பு வைத்திருக்கும் விசுவாசமுள்ள தொண்டர்கள்.”

இந்த மக்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை நான் முதன்முதலாக உணர்ந்துகொண்டது அப்போதுதான். இந்த ஏழை, துயர் மிகுந்த, தலித் தொண்டர்கள் எப்படி இவ்வளவு கவனமாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டதும் அப்போதுதான். உடைமைகள் பறிக்கப்பட்ட ஏழை எளிய கோடிக்கணக்கான மக்களின் ஒரே தலைவராகவும் வழிகாட்டியாகவும் டாக்டர் சாஹேப் திகழ்ந்தார். ஒருவகையில், அவர் முடிசூடா மன்னன். அரசன் என்று அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லைதான். அதே நேரத்தில், சர்வ நிச்சயமாக அவர்களுடைய அரசனாக அவர் இருந்தார் என்ற உண்மையைப் புறக்கணித்துவிட முடியாது.

லட்சக்கணக்கான ஆதரவற்றவர்களின் ராஜாவுக்கு இப்போது நான் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தேன். என்னுடைய இசைவைத் தெரிவித்த பின்னர் யோசித்துக்கொண்டிருந்தேன்; நான் ஒரு மகத்தான, அதே நேரத்தில் கடினமான பொறுப்பை என்னுடைய தலை மீது இழுத்துப்போட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன். இதை எப்படிச் சமாளிக்கப்போகிறேன் என்ற கவலையும் ஏற்பட்டது. இந்த மகத்தான, கடினமான, அபாயகரமான பொறுப்பை என்னால் நிறைவேற்ற முடியுமா? ஆம் என்று சொல்லிப் பெரும்பிழை இழைத்துவிட்டேனா? இப்படிப்பட்டதொரு மகத்தான மனிதரின் எதிர்பார்ப்பை என்னால் அளவிட முடியுமா? என்னுடைய முடிவின் விளைவு என்னவாக இருக்கும்? சமூகத்திடமிருந்து நான் எப்படியான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? இப்படியான பல கேள்விகள் என்னுடைய தலைக்குள் குழப்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தன. இறுதியாக, என்னுடைய எண்ணவோட்டங்களை மட்டுப்படுத்தி, முடிவெடுத்தேன்: ஏற்கெனவே சம்மதம் சொல்லியாயிற்று, இனி பின்வாங்குதலுக்கு இடமில்லை. பொறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நான் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கலாம். சுமக்க வேண்டிய வலிகள் அத்தனையையும் சுமப்பேன். சர்வ நிச்சயமாக என்னுடைய பொறுப்புகளைத் திறமையுடன் நிறைவேற்றுவேன். நான் டாக்டர் சாஹேபின் வாழ்க்கையுடன் ஒன்றுகலந்து, அவருக்குள் என்னைக் கரைத்துக்கொள்வேன் என்று உறுதியான தீர்மானம் எடுத்தேன்.

௦௦௦

பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை

எதிர் வெளியீடு

தமிழில் : த. ராஜன்

த.ராஜன்

"பழைய குருடி" சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியரான த.ராஜன், தற்பொழுது பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார்.  ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க அணியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். மூன்றாண்டுகள் அந்நாளிதழின் ‘நூல்வெளி’ மற்றும் கலை, இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாளராக இருந்தவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.