/

கதிர்காமத்துக்குப் போகும் வண்ணத்துப்பூச்சிகள் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

நிலாந்தன் கவிதைகளை முன்வைத்து

ஓவியம் : நிலாந்தன்

ஈழக்கவிஞர் நிலாந்தன் 1990-களின் இறுதியில் நாடகமாக வெளியிடுவதற்காக எழுதிய ‘மண்பட்டினங்கள்’ நெடுங்கவிதை, 2009- முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகும், இந்தியாவில் மதவாதத்தை ஆதரிக்கும் ஒரு அரசு, பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் வலுப்பெற்றிருக்கும் இருண்ட சூழலிலும், கூடுதலாக முக்கியத்துவம் பெறுகிறது. கவிதை, நாடகம், வரலாறு,கதைப்பாடல் என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாக தன் கவிதைகளை எழுதிவரும் நிலாந்தன் தமிழ் நவீன ஓவிய வரலாற்றிலும் தவிர்க்க இயலாத ஓவியர் ஆவார். அவர் கவிதைகளில் வலுவாக எழும் உருவங்களும், காட்சிகளுமே அதை உணர்த்திவிடுகின்றன.

வேதத்திற்கு முன்னரும் உள்ள தமிழர் வாழ்வின் தொன்மத்தையும், சிந்துச் சமவெளியிலிருந்து அவர்கள் தொடர்ந்து துரத்தப்பட்டுக் கொண்டேயிருப்பதையும் உருவகமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் படைப்புக்கு ‘மண்பட்டினங்கள்’ என்ற தலைப்பும் அத்தலைப்பு எழுப்பும் உருவங்களும் மிகத் தீவிரமாய் வெளிப்படுகின்றன. திரும்பத் திரும்ப ஒரு இனத்தால், ஒரு கலாச்சாரத்தால் எழுப்பப்படுகிற மண்பட்டினங்களையும் அது உடைந்தழிவதையும் பேசுகிறது நிலாந்தனின் இந்தப் படைப்பு. அப்படிப் பேசுவதன் வழியாக அழிவின் முனையிலுள்ள எல்லா இனங்களின், கலாச்சாரங்களின் கதைகளையும் ‘மண்பட்டினங்கள்’ ஞாபகப்படுத்திவிடுகிறது.

‘அசிரியர் ரோமர் ஆரிய ஜேர்மானியர்
யாரெல்லாமோ முயன்றார்.
ஆனால் முடிந்ததா யூதர்களின் வேர்களையறுக்க?’

என்று எழுதப்பட்டிருப்பதை, தற்போதைய சூழலில், ‘முடிந்ததா பாலஸ்தீனர்களின் வேர்களையறுக்க?’ என்றும் கேட்டுப் பார்க்கலாம்.

நினைவு நீளும் போது, காலமும் களமும் முரண்கொள்ளும் நாடகம் தொடங்கிவிடுகிறது. நினைவுகளைத் துண்டிக்க முயலும் அழிவின் மூர்க்கத்துக்கு முன்னால் ஒரு கலாச்சாரம், தன்னில் திரையிட்டுக் கொள்ளும் சீலையாக, ‘மண்பட்டினங்கள்’-ல் கவிதை உருக்கொண்டு விடுகிறது. வேறு யாராலுமிதுவரை வாசிக்கப்படாத அபூர்வமொழியினால் எழுதிய, தமது முதலாவது தலைப்பட்டினத்தை சிந்துச் சமவெளியில் கட்டிய மனிதர்களின் மொழியை நாம் கவிதை என்றும் புரிந்துகொள்ளலாம்.

“ஓ…கடலே
மூத்த கடலே
அன்பான பெருங்கடலே
நீ மண்பட்டினங்களின் உறவாயிரு”

“ஓ …காடே
மூத்த காடே
அன்பான பெருங்காடே
நீ மண் நகரங்களின்
ஆறுதலாயிரு.”

“பட்டினங்கள் மீது
பட்டினங்கள் எழும்
பட்டினங்களை எதிர்த்துப் பட்டினங்கள் எழும்
பட்டினங்கள் பட்டினங்களை வெல்லும்
பட்டினங்கள்
போர்ப்பட்டினங்கள்
வீரப்பட்டினங்கள்
வெற்றிப்பட்டினங்கள்”

000

நிலாந்தன் முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் எழுதிய மண்பட்டினங்களையும் முள்ளிவாய்க்கால் நிகழ்ந்த பிறகு எழுதிய கஞ்சிப்பாடலையும் திரும்பத் திரும்பப் படிக்கும்போது யுவான் ருல்பாவின் பெட்ரோ பராமோ நாவலில் வரும் இறந்தவர்கள் வசிக்கும் கோமாலா ஊர்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

“ஆற்றின் சப்தத்தைப் பின்தொடர்ந்து, பாலத்திற்கருகில் இருந்த வீட்டை அடைந்தேன். கதவைத் தட்டுவதற்காகக் கையை உயர்த்தினேன். ஆனால், அங்கே எதுவுமே இல்லை. வீசும் காற்று கதவைத் திறந்தது போலிருந்தது. என் கை, கதவிருந்த வெற்றுவெளியில் நீண்டது.” (பெட்ரோ பராமோவின் ஆரம்ப அத்தியாயத்தில்)

இங்கே ஸ்தூலமாக எதுவும் மிஞ்சுவதில்லை. இங்கே எல்லாரும் பொருட்களைப் போல விட்டுவிட்டுச் செல்பவை ஞாபகங்கள்தான்; ஞாபகங்கள்தான்; ஞாபகங்கள்தான். ஞாபகம்தான் கலாச்சாரத்துக்கு தொடர்ச்சியான நாடகபாவம் ஒன்றைத் தருகிறது. ஆனால், ஞாபகங்கள் பெரும் இன அழிவுகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

வரலாற்றில் எங்கோ நங்கூரமிட்டிருக்கும் பெருமிதங்களின் நினைவுகளும், அவமதிப்புகளின் நினைவுகளும் ஒரு தொடர்ச்சியையும் பாடத்தையும் எப்படித் தருகின்றனவோ, அதேவிதத்தில் புதிய ரணங்களையும் புதிய பகைமைகளையும் தற்காலத்தில் ஏற்படுத்திவிடுபவை. சகிப்புத்தன்மை, மன்னிக்கும் பண்பு ஆகியவற்றைக் கொண்ட மரியாதையின் சின்னமான ராமன், தற்காலத்தில் இப்படித்தான் இன்னொரு இனத்தின் மீதான வெறுப்பு மற்றும் அந்த இனத்தை வெற்றிகொண்டதன் அடையாளமாக இந்தியாவில் மாறியிருக்கிறார்.

ஞாபகம் ஒரு முரண். டால்ஸ்டாயின் குட்டிக்கதையில் நாய் நக்கும் இரும்பு ரம்பம் போல. நாவால் சுவைக்க சுவைக்க காயமும் உயிர்ப்பும்; நாவால் சுவைக்க சுவைக்க ரத்தமும் அழிவும்.

000

‘மண்பட்டினங்கள்’ படைப்பை மற்ற ஈழக்கவிதைகளின் பின்னணியில் வாசிக்கும்போது தமிழ் நவீன கவிதைகளுக்கில்லாத ஒரு வித்தியாசத்தை எனக்கு நிலாந்தன் உணர்த்துகிறார். எல்லாமும் எல்லாரும் அழிந்தபிறகும் குமுறிக்கொண்டிருக்கும் பெருங்கடலைப் போல ஒரு கதைப்பாடல் ஈழக் கவிஞர்களை இணைக்கிறது.

ஈழத்தமிழரின் இனப்போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னால் துயரங்கள் தொடங்குவதற்கு முன்னால் 1968-ல் எழுதப்பட்ட வ ஐ ச ஜெயபாலனின் ‘பாலி ஆறு நகர்கிறது’ கவிதையில் இனிமையான காட்சிகளுக்கிடையில் , ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட கடைசி தமிழ் மன்னன் பண்டார வன்னியனின் ஞாபகமும் வருகிறது. நிலாந்தனிலும் அதே ஞாபகம் துயரத்துடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

வண்ணநிலவனின் அபூர்வமான படைப்பான ‘குளத்துப்புழை ஆறு’ கவிதை, ஜெயபாலனின் கவிதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. குளத்துப்புழை ஆறு ஜெயபாலனுடையதைப் போல தொடரும் நினைவுகளின் ஆறு கிடையாது. மிகச்சிறிய அழகான ஆறு. ஆனால் கலாச்சாரத்தின் பொது நினைவு கலக்காதது. பொது நினைவின்றி தனித்தொன்மத்தையும் தனிக்கனவையும் கொண்டிருப்பது.

வள்ளலார் முதல் பெரியார் வரை இங்கே தமிழ் மனமும் தமிழ் உணர்வும் தமிழ் சமூகமும் நவீனமடைந்ததால் நாம் கவிதையில் பொதுத் தொன்மத்தை இழந்தோமா? தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகனாகக் கருதப்படும் புதுமைப்பித்தனே விமர்சன விழிப்புடைய ராட்சசனாக நிகழ்ந்துவிட்டதால் நமது நவீன கவிதை தனிமனத்தின் கவிதை ஆகிவிட்டதா? ஈழ நவீன கவிதையைப் பொருத்தவரையிலோ கலாசாரப் பொது நினைவும், பொது உள்ளடக்கங்களும் அவர்களிடையே பலமானதொரு சரடாகப் பகிரப்படுகிறது. அதனால்தான் அவை பெரும்பாலும் பாடலின் தன்மையையும் கொண்டுவிடுகின்றன.

“அந்நாளில்,
பண்டார வன்னியனின்
படை நடந்த அடிச்சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்.
அவன்
தங்கி இளைப்பாறித்
தானைத்தலைவருடன்
தாக்குதலைத் திட்டமிட்டுப்
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின்வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சற்றே கண்ணயர்ந்த
தரைமீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்.
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்றும் குளிக்கின்றார்
எங்கள் ஊர்ப் பெண்கள்.
ஏதுமொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.”

– வ.ஐ.ச. ஜெயபாலன்

000

சு. வில்வரத்தினம், வ ஐ ச ஜெயபாலன், அகிலன், றஷ்மி போன்ற வேறு வேறு உள்ளடக்கத்தையும், காலகட்டத்தையும், இடத்தையும் சேர்ந்த ஈழக்கவிஞர்களை இணைப்பது ஒரு கதைப்பாடலின் தொனிதான் என்று தோன்றுகிறது. வாழ்க்கையையும் யுத்தத்தையும் அழிவையும் சாட்சியாக பார்த்துக்கொண்டிருக்கும் கடலைப் போல ஒரு கதைப்பாடலை அவர்கள் சேர்ந்து கோர்த்திருப்பதாகக் கருதுகிறேன்.

ஒரு சிறுகதையாக எழுதப்பட்ட ஆனால் ஒரு கதைப்பாடலின் அடியொற்றிய, பூதாகரமான நிழல்கள் தெரியக்கூடிய உமா வரதராஜனின் ‘அரசனின் வருகை’ சிறுகதையையும் இவ்விடத்தில் சேர்த்தே வாசிக்க வேண்டும். அக்கதையில் ஒரு சர்வாதிகார அரசன் ஊருக்குள் நுழையும் நிகழ்வு உரைக்கப்படுகிறது. அவன் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லும் ஒடுக்குமுறைகளும் அழிமானங்களும் ஈழத்துயரை மட்டுமில்லாமல் தற்போதைய இந்தியச் சூழலையும் நெருக்கமாக ஞாபகப்படுத்துபவை. ஒரு கதைப்பாடலின் தொனியில் விவரிக்கப்பட்டு இறுதியில் அந்த அரசன் மறையும் இடம் இருளில் நடக்கும் நிழல்களின் கூத்து போன்ற தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது; தொல்கதையின் தன்மையைக் கொண்டிருப்பது.

றஷ்மி பாடுகிறார்,

“ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு
நான் கைகளில்லை
கால்களில்லை
கண்களும் காதுகளுமில்லை
மூக்குமில்லை
நான் ஆண் இல்லை
பெண்ணுமில்லை…
நான் ஏதோவொன்று,
இல்லை இல்லை எதுவுமில்லை
கதவுகளைத் திறந்துவிட்டபடி
காதுகளுள் சா நுழையக்
காத்திருக்கும் ஒன்று.”

000

அழிவின் விபரீதிமும், துயரமும் ஒரு குடிக்கு, ஓர் இனத்துக்கு, நம் மொழியைப் பகிர்ந்துகொண்டு கடல்தாண்டி வாழ்ந்த ஒரு சகோதர சமூகத்துக்கு, அதிநவீனமாகிய இந்தக் காலகட்டத்தில்தான் நடந்திருக்கிறது. அதன் ஞாபகத்தை நிலாந்தன் ‘கஞ்சிப்பாடல்’ தொகுப்பில் பயங்கர எதார்த்தங்களாக உருவாக்கியிருக்கிறார். கஞ்சிப்பாடல் கவிதையில் தமிழ் வாழ்க்கையின் ஒரு எளிய புழங்குபொருளான பெண்கள் கட்டும் சேலை, அழியாத படிமமாக உருவாகியுள்ளது.

தமிழ் ஞாபகத்தில் மங்கலமாகக் கருதப்படும் கூறைப்புடவை, ஈழ யுத்தத்தின் கடைசி நாட்களில், அன்றாட வாழ்க்கையைக் காப்பாற்றும் பொருளாகிறது. சேலைகளைத் தைத்து மண் மூட்டை கட்டுகிறார்கள். சேலைகளால் மறைப்பு கட்டப்படுகிறது. சேலைகளால் தற்காலிகக் கூரைகளை வேய்கிறார்கள். சேலைகள் குழந்தைகளைப் போர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சேலை படிப்படியாக தன் மங்கலத்தை இழந்து அதைப் பயன்படுத்தியவர்கள் இல்லாமலாகி, அநாதைக் கொடியாகப் பறக்கத் தொடங்குகிறது. சுந்தர ராமசாமி சொல்வதைப் போலன்றி, அது உயரத்தில் மலத்தின், ரத்தத்தின் வீச்சத்துடனும் சரிகையுடனும் தற்காலிகமாக உருவான சேரிகளில் பிணக்காட்டின் மேல் பறக்கும் காட்சியை எழுதியுள்ளார் நிலாந்தன்.

ஒரு அழிந்த வாழ்க்கை மற்றும் பண்பாட்டின் ஒட்டுமொத்த உருவகமாக மாறும் சேலை, வாழ்வு மக்கிய பிறகும் மக்காமல் பனைமரத்தில் பறந்துகொண்டிருக்கிறது. சேலை சீலை ஆகும்போது நாடகத்தின், ஓவியத்தின் திரையிடலின் முக்கியமான அங்கமாகவும் இருக்கும் சீலை ஞாபகத்துக்கு வருகிறது. எது திரையிடுகிறது? எந்தச் சீலையில் நாடகம் திரையிடப்படுகிறது? யார் நாடகத்தைக் காண்கிறார்கள். யாருக்காக கடல் பெருங்குமுறலுடன் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது?

“பிணக்கூறை
கூறைச்சீலை மங்கலகரமானது
இன்பமான நினைவுகளால் நெய்யப்படுவது
தேடித் தெரிந்து வாங்கப்படுவது
ஒரு திரவியம் போல
கனவுப் பெட்டகத்துள் பூட்டி வைக்கப்படுவது

ஒரு யுகமுடிவில்
மங்கலமானது எதுவும் இல்லாத
மூன்று ஊர்களில்
கூறைச் சீலை
உரப்பையைவிட மலிவாகக் கிடைத்தது

மண்மூட்டைகளாற் சூழப்பட்ட வாழ்வில்
உரப்பை திரவியமாகியபோது
சேலைகளைத் தைத்து
மண்மூட்டை கட்டினோம்
சேலைகளால் மறைப்பு கட்டினோம்
சேலைகளை நிலத்தில் விரித்தோம்
சேலைகளைப் போர்த்திக் கொண்டோம்
சேலைகளால் கூரை வேய்ந்தோம்
சேலைகளாலான மண் மூட்டைகள் அழகானவை
ஆனால் மங்கலமானவையல்ல
பிணத்துக்கு உடுத்திய கூறையைப் போல

சேலைகளால் வேயப்பட்ட சேரியை
பான் கி மூன்
வானிலிருந்து பார்த்தார்
புகைந்து கொண்டிருந்தது நிலம்

சூரியொளியில் மினுங்கியது
சரிகை”

000

நிலாந்தனின் மண்பட்டினங்களிலும் , கஞ்சிப்பாடலிலும் தொடரும் ஒரு காட்சியும் அது தொடர்பான தொன்மமும் என்னைத் துரத்தியபடி உள்ளன. கோடைக்காலத்தில் வன்னிப் பெருநிலத்தில் வண்ணத்துப் பூச்சிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அலையலையாக ஊர்வலம் போகும் காட்சியே அது. அந்த வண்ணத்துப் பூச்சிகள் தெற்கிலிருந்து வடக்கிலுள்ள கதிர்காமத்துக்குப் பயணம் போவதாக ஈழமக்களிடம் ஒரு தொன்மம் உருவாகியிருக்கிறது.

இந்தக் கதிர்காமத்துக்குப் போவதாக கருதப்படும் வண்ணத்துப்பூச்சிகளின் பாதையும் அதைத் தொன்மமாக்கிய ஒரு பொது நினைவின் பாதையும் எங்கே குறுக்கிடுகிறது என்ற கேள்வி எனக்கு பெரும் விந்தையை உருவாக்கியது. தன் கவிதைகளில் சின்னச் சின்ன உயிர்களைச் சேர்த்துப் பாடுபொருளாக்கிய கவிஞர் சோலைக்கிளி, தவிர்க்க இயலாமல் எனக்கு இந்த வண்ணத்துப்பூச்சிகள் வழியாக ஞாபகத்துக்கு வந்தார்.

கதிர்காமம் ஈழமக்களுக்கு தமிழ்நாட்டில் திருச்செந்தூரைப் போல, பழனியைப் போல முருகக்கடவுள் குடியிருக்கும் புனிதத்தலமாகும். கதிர்காமம் கோயிலில் முருகனின் ஓவியம் வரையப்பட்ட திரைச்சீலைதான் வழிபடப்படும் உருவம். அதற்கப்பால் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் காற்றும் வெளிச்சமும் கூட புகாமல் அந்த இடம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. பூசகரைத் தவிர ஆதிமூல அறைக்குள் யாரும் செல்ல முடியாது. முருகன் ஓவியச் சீலையாகத் தொங்கும் இடத்திலேயே காணிக்கைகளைச் செலுத்திவிட வேண்டும்.

கதிர்காமம் தொடர்புடைய நினைவு தமிழ்நாட்டிலும் சிவகாசி காலண்டர் படங்களாக பதிக்கப்பட்டிருக்கிறது. கதிர்காமம் மலைக்கோயிலின் படம் என் சிறுவயதில் ஏற்படுத்திய கற்பனைகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன.

முருகன் படமாக இருக்கும் ஓவியச்சீலைக்குக் கீழே காணிக்கைத் தேங்காயைச் செலுத்தினால் ,அந்த தேங்காய் தானே உடைக்கப்பட்டு வெளியே வரும் என்று திருநெல்வேலியில் நாங்கள் இருந்த வளவில் வசித்த அருணாசலத்தாச்சி என்னிடம் கதையாகச் சொல்லியிருக்கிறாள். அவள் தனது இளமையில் போட்மெயிலில் பயணித்து ராமேஸ்வரத்தில் இறங்கி, இலங்கைக்குச் சென்று கதிர்காமம் முருகனைத் தரிசித்தவள். அவள் வீட்டுப் பூஜையறை படங்களில் ஒன்றில்தான் கதிர்காமம் மலைக்கோயில் எனக்கு அறிமுகமானது. கதிர்காமம் ஆலயத்தில் முருகனின் ஓவியத்திரை மாற்றப்பட்டுக் கொண்டேயிருப்பது. முருகனின் படம் இருக்கும் திரைக்குப் பின்னால் ஒரு சூட்சும எந்திரம் இருப்பதாகவும் அதை யாரும் பார்க்க முயன்றால் தேங்காயைப் போல தலை சிதறிவிடும் என்றும் எனக்கு அருணாசலத்தாச்சி ஒரு இரவில் கதைசொன்னாள்.

ஈழத்தமிழர்களின் தொன்ம உருவமாக உள்ள முருகன் ஏன் திரைச்சீலையாக இருக்கிறார். நிலாந்தனின் கஞ்சிப்பாடல் கவிதையில் அநாதையாகப் பறந்துகொண்டிருக்கும் அழிவின் ஒட்டுமொத்த உருவகமான சீலைக்கும் தொடர்பு உண்டா? இன்னமும் அங்கே தெற்கே இருந்து வடக்கே கோடையில் வண்ணத்துப்பூச்சிகள் கதிர்காமத்துக்குப் பயணம் போகின்றனவா, எப்போதுமாகிவிட்ட அந்தக் கோடையில்?

வன்னிக்காடு – வைகாசி – 2013

வண்ணாத்திப்பூச்சிகள்கதிர்காமத்திற்குப் போகும் வழி.
சிறுமஞ்சட் பூப்பரவிய
வேட்டைப் பாதை.
மடுக்காட்டில்
வீரை பழுத்திருக்கும்.
முழங்காவிற் காட்டில்
பாலை பழுத்திருக்கும்.
முறிப்புக்காட்டில்
கொண்டல் பூத்திருக்கும்
பறங்கியாற்றில்
வண்ணாத்துப்பூச்சிகள்
சிறகாறும்
வேட்டைக்காரர்கள் இல்லை
வேட்டைப்பாடல்களும் இல்லை
காவலரணில்
சலித்திருக்கும் சிப்பாயின்
கைபேசி அழைப்பிசை மட்டும்
இடைக்கிடை கேட்கும் காடு

வண்ணத்துப்பூச்சிகளே! வன்னிப்பெருநிலத்தின் வண்ணத்துப்பூச்சிகளே! முருகன் திரைக்குப் பின்னாலிருந்து நம் தலைகளைச் சிதறடித்துவிடும் சூட்சும எந்திரத்தை ஒருபோதும் பார்க்காதீர்கள் வண்ணத்துப்பூச்சிகளே!

***

மண்பட்டினங்கள் படிக்க

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.