ஸ்ரீ அரவிந்தர் 15-08-1918 அன்று எழுதிய கட்டுரை. இது ‘Renaissance in India’ என்ற பெயரில் தொகுக்கப்பட்ட புத்தகத்தின் முதல் கட்டுரை.
இந்த தலைப்புடன் (Renaissance in India) திரு ஜெ.ஹெச் கசின்ஸ் (J.H Cousins) பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்1. இந்தப் பெயர் புத்தகத்தின் மெய்யான உள்ளடக்கத்தை குறிக்காமல் அவரது சிந்தனையின் பின்னணியாக உள்ள கருத்தை குறிக்கிறது. இவை சமயம், கலை மற்றும் இலக்கியம் பற்றி கிழக்கு மற்றும் மேற்கின் மாறுபட்ட சாரத்தை மேற்கோள்காட்டி எழுதப்பட்ட கட்டுரைகள். மேலும் இவை இந்தியாவில் உள்ள சமீபத்திய கலை மற்றும் கவிதை படைப்புகளை அடிப்படையாக வைத்து ஆன்மீக கலை, கவிதை இயக்கத்தின் சாத்தியங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள்.
முதலில் ஒரு கேள்வி. அது எழுத்தாளரே தொடக்க பத்தியில் எழுப்பும் கேள்விதான். உன்மையாகவே இந்தியாவில் மறுமலர்ச்சி உள்ளதா? அது உண்மையில் பெரும்பாலும் நாம் அந்த சொல்லின் மூலம் என்ன சொல்லவருகிறோம்(அர்த்தப்படுத்துகிறோம்) என்பதை சார்ந்தது. அது வருங்காலத்தையும் சார்ந்தது. மேலும் ஒரு விஷயம் எங்கு இட்டுச் செல்லும் என்பதை அதன் தொடக்க நிலையிலே சொல்வது சரியான நேரமும் இல்லை. இந்த சொல் நம் மனதை அது முதலில் பயன்படுத்தப்பட்ட ஐரோப்பிய பண்பாட்டின் திருப்பு முனைக்கு இட்டுச் செல்கிறது. இந்தத் திருப்புமுனை ஒரு மறுவிழிப்பாக(மீட்பாக) இல்லாமல் தலைகீழ் மாற்றமாக கவிழ்த்தலாக இருந்தது. அந்நிகழ்வு கிறித்துவ, டியூட்டனிய(teutonised) நிலப்பிரபுத்துவ ஐரோப்பியாவை பழைய கிரேக்க-லத்தீன் ஆன்மாவும் வடிவமும் கைப்பற்றியதனால் ஏற்பட்ட சிக்கலான, முக்கியான விளைவுகள். அவ்விதமான மறுமலர்ச்சி இந்தியாவில் உறுதியாகச் சாத்தியமில்லை. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கும் சமீபத்தில் ஐயர்லாந்தில் நிகழ்ந்த கெல்டிக்(Celtic) இயக்கத்திற்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது. இந்த இயக்கம் மறுஉருவாக்கத்திற்கும் மறுகட்டமைப்பிற்குமான ஆன்ம விசையை அளிக்கும் சுயவெளிப்பாட்டிற்கான விழிப்படைந்த தேசிய ஆன்மாவின் தேடுதல். நெடுங்கால ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து கெல்டிக் ஆன்மாவிற்கு திரும்புதலின் மூலம் இது ஐயர்லாந்தில் கண்டுணரப்பட்டது. அதுபோன்ற ஒரு இயக்கம் இந்தியாவிலும் தோன்றுகிறது, மேலும் 1905 ஆம் ஆண்டு அரசியல் நிகழ்வுக்கு பிறகு அது குறிப்பிடும் வகையில் மாறியுள்ளது. ஆனால் கெல்டிக் இயக்கத்துடனான இந்த ஒப்பீடு முழு உண்மையையும் வெளிப்படுத்துவதில்லை.
ஒட்டுமொத்தமாக தற்போது சுயபிரக்ஞை வெளிப்பட்டுள்ள இடத்தில் உருக்கொள்ளும் சாத்தியங்கள் ஆங்காங்கே தென்படும் முரண்பட்ட ஆதிக்கங்களின் உருவில்லா குழப்பமாகவே இது உள்ளது. ஆனால் இதற்கு மக்களின் மனதில் போதிய அளவில் இடம் உண்டு என்று சொல்லிவிட முடியாது. இவை முற்போக்கு இயக்கத்தின் பிரதிநிதிகள், முன்செல்பவர்களின் குரல்கள், முன்னோடிகளின் கைவிளக்குகள்(torchlight). நாம் ஒட்டுமொத்தமாக பார்ப்பது என்னவென்றால், முற்றிலும் புதிதான அந்நியமான உலகில் விழித்தெழும் ஒரு மகத்தான சக்தியை. அவளது கை கால்கள் பலதரப்பட்ட நுண்ணிய தளைகளால் கட்டுண்டிருப்பதை அவள் காண்கிறாள். அவளுடைய கடந்தகாலத்தால் தானே உருவாக்கிய தளைகள், சமீபத்தில் வெளியிலிருந்து போடப்பட்ட தளைகள். இவற்றிலிருந்து விடுபட, விடுபட்டெழுந்து தன்னை பிரகடனம் செய்ய, உலகம் முழுக்க தன் ஆன்மாவை விஸ்தரிக்க, உலகில் தன் முத்திரையை பதிக்க அவள் எத்தனிக்கிறாள். நாம் எத்திசையிலும் தளைகள் விடுபடும் ஒலியைக் கேட்கிறோம்; ஆங்காங்கு கூரிய தெறிப்புகளையும் முறியொலிகளையும் கூட. ஆனால் அசைவின் சுதந்திரம் இன்னும் அடையப்படவில்லை. பார்வை இன்னும் தெளியவில்லை, ஆன்மாவின் மொட்டு ஓரளவே திறந்துள்ளது. பேருருவள்(Titaness) இன்னும் எழவில்லை.
இந்தியா எப்பொழுதும் விழித்தே இருந்ததால் அதற்கு மறுவிழிப்பு அவசியமற்றது, அதனால் மறுமலர்ச்சி என்ற சொல் இந்தியாவிற்கு பொருந்துமா என்று திரு கசின்ஸ் கேட்கிறார். அதில் உண்மையுள்ளது. வெளியிலிருந்து வரும் ஒருவருக்கு அது வெளிப்டையானதாக இருக்கலாம். ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டில் உண்டான பெரும் வீழ்சியின் கசப்பான தாக்கத்திலிருந்து மீளாத நம்மால் அவ்வாறு பார்க்க முடியாது. சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு குறுகிய ஆனால் மிகவும் அபாயகரமான காலம் இருந்தது. வாழ்வின் மகத்தான கனல் குறுகும் காலம்; முழுச்சிதைவை நோக்கி நகர்ந்த காலம். ஐரோப்பிய உள்நுழைத்தலுக்கு வாய்ப்பளித்த படைப்பூக்கமிக்க ஆன்மா சமயத்தில், கலையில் மந்தமான காலம். அறிவியலும் தத்துவமும் அறிவுசார் ஞானமும் இறந்த அல்லது வெறும் பாண்டித்யமாக உறைந்த காலம். இவை எல்லாம் ஆற்றலின் மிக கீழான நிலையைக் குறிக்கின்றன. இந்திய காலச் சுழற்சி கருத்துபடி ஒரு புதுயுகம் தொடங்க இருக்கும் அந்திம காலம். அந்த காலமும் அதைத் தொடர்ந்து வந்த திணிக்கப்பட்ட ஐரோப்பிய பண்பாடும் மறுவிழிப்பை அவசியமாக்கின.
இங்கு நாம் மூன்று உண்மைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். இந்தியாவின் மகத்தான கடந்த கால பண்பாடு மற்றும் வாழ்க்கையோடு அது மந்தத்தன்மைக்குள் புகுந்த காலத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டும். இந்தியா மெதுவாக மட்குவதாக தெரிந்த மேற்குடனான தொடர்பின் முதல் காலகட்டம். பிறகு, வெறும் ஒன்றல்லது இரண்டு தசபந்தங்களுக்கு முன்பு வெளிப்பாட்டில் தெளிவடைந்த எழுச்சி இயக்கம். தேசிய உயிர்சக்தியின் வீழ்ச்சியின் போதும்கூட, விடாது தக்கவைத்துக்கொண்ட இந்திய ஆன்மீகத்தின் மீது திரு கசின்ஸ் கவனத்தை செலுத்துகிறார். உண்மையில் அதுவே இந்தியாவை தனது பாதையின் எல்லா இக்கட்டான கணங்களிலிருந்தும் காப்பாற்றியது. மேலும் அதுவே இந்தியாவின் புத்துயிர்ப்பின் துவக்கப்புள்ளியாகவும் உள்ளது. இந்த அழுத்தத்தை ஏற்ற எந்த தேசத்தின் உடலும் உயிரும் நெடுங்காலம் முன்பே சிதைந்திருக்கும். ஆனால் நிச்சியமாக, வெளிப்புற உறுப்புகள் சீழ் பிடித்தன; ஒரு நொடி புதுப்பித்தலின் ஆற்றல் தேங்குதலின் ஆற்றலால் முறியடிக்கப்பட்டதாக தோன்றியது. தேங்குதல் என்பது மரணம். இப்போது மீட்பும் மறுவிழிப்பும் வந்துவிட்டது. நிச்சியமாக இந்தியா அவளது சாரமான ஆன்மாவை, தனது தனித்துவமான உயிரை தக்கவைத்துக் கொள்வாள். ஆனால் அநேகமாக அவளது உடலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புத்தொளிர்கொண்ட அந்த உயிர் புதிய தத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டு தனக்கென உருவாக்கிக் கொள்ளும் புதிய உடலே இந்தியாவின் புத்துயிர்ப்பு என்று நான் நினைக்கிறன். இது முந்தைய காலம் வெளிப்படுத்திய வாழ்க்கை உண்மைகளுடன் முரண்பட்டுள்ள உண்மை அல்ல. மாறாக முந்தய கால உண்மைகளை மறுமொழிவதாகவும், அதன் குறைகளைக் களைந்து முழுமையாக வெளிப்படுத்துபவையாகவும் அது இருக்கும்.
இந்தியாவின் இந்தப் பண்டைய ஆன்மா மற்றும் தனித்துவமான உயிர் என்பது தான் என்ன? ஐரோப்பிய எழுத்தாளர்கள் இந்திய மனதின் பொதுவான மீபொருண்மை(Metaphysical) ஈடுபாட்டில் ஆர்வம்கொள்கின்றனர். இந்தியாவின் வலுவான சமய உள்ளுணர்வும், சமய இலட்சியவாதமும், மாற்றுலுக தன்மையும் இந்தியாவின் ஆன்மாவே இவை மட்டும்தான் என்று எழுதவைக்கிறது. முடிவிலியின் நோக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட, அருவ(abstract -மெய்சாரா), மீபொருண்மைசார், சமய மனம், வாழ்க்கைக்கு பொருந்தாத, மாயை என்று வாழ்விலிருந்து திரும்புக்கொள்கின்ற, கனவுகொண்ட, நடைமுறைக்கொவ்வாத ஒன்றென ஐரோப்பிய எழுத்தாளர்கள் இந்தியாவை சொல்லினர். மற்ற விஷயங்களைப் போலவே இந்தியர்களும் தங்களது புதிய மேலை ஆசிரியர்களும் எஜமானர்களும் சொல்லும் இந்தக் கருத்தை சில காலத்திற்கு பணிந்து எதிரொலித்தனர். அவர்கள், தங்களது மீபொருண்மையையும் இலக்கியத்தையும் சமயத்தையும் பெருமிதத்துடன் பேச கற்றுக்கொண்டனர். ஆனால் எல்லாவற்றிலும் அவர்கள் கற்றுக்கொள்பவர்களாகவே பின்பற்றுபவர்களாகவே இருந்தனர். இந்தியக் கலைகளிலும் குறிப்பிடத்தக்க அழகும் ஆற்றலும் இருக்கிறது என்று ஐரோப்பியா கண்டுணர தொடங்கியது. எனினும் அதைத் தவிர்த்து இந்தியா வேறு எவற்றைக் குறிக்கிறது என்பதை அது காணவே இல்லை. ஆனால் இந்திய மனம் தன்னை விடுவித்துக் கொண்டு, தனது கடந்த காலத்தை தெளிவோடு, சுய பரிசீலனையோடு கண்டது. மேலும் அது விரைவிலேயே தான் ஒட்டுமொத்தமாக பொய்யான ஒரு சுயபிம்பத்தை நோக்கி இட்டுச் செல்லப்பட்டதைப் புரிந்துகொண்டது. அனைத்து ஒற்றைப் படையான விதந்தோதல்களும் எந்த பாகுபாடுமின்றி பொய்யாகவே இருந்தன. ஒரு காலத்தில் ஜெர்மனி மீது இருந்த பொதுவான கருதுகோள் போல இது இல்லையா? ஏனென்றால் அவள்(ஜெர்மனி) தத்துவத்திலும் இசையிலும் மகத்தானவளாக இருந்தாள். ஆனால் அவள் வாழ்க்கையில் பெருந்தவறு புரிந்தவள். நடைமுறைக்கொவ்வா கனவுகாண்பவர்களின், இலட்சியவாதிகளின், புத்திமான்களின், உணர்வெழுச்சிக் கொண்டவர்களின், பொறுமைசாலிகளின், சாதுவானவர்களின், மேலும் நிச்சியமாக உழைப்பாளிகளின் தேசம்; ஆனால் அரசியல்ரீதியாக பொருந்தாத, “கவரக்கூடிய, வேடிக்கையான ஜெர்மனி” என்று சொல்லவைத்தது. ஐரோப்பா அந்த தவறிலிருந்து பயங்கரமான ஒரு விழிப்பை அடைந்தது. இந்தியாவின் புத்துயிர்ப்பு முற்றுபெற்றபின் பின், அவளும் இதே போன்ற ஒரு விழிப்பை அடைவாள். இதுபோன்ற கடினமான ஒரு விழிப்பையல்ல. ஆனால் நிச்சயமாக, இந்திய ஆன்மாவின் உண்மையான இயல்புக்கும் தகுதிக்கும் ஏற்றவாறு ஒரு திடுக்குறச் செய்யும் ஒரு விழிப்பை.
கண்டிப்பாக ஆன்மிகம் இந்திய மனதின் முதன்மை விசைதான். முடிவிலி பற்றிய உணர்வு(sense) அதற்கு இயல்பானது. வாழ்க்கையை அதன் புற ஒளி கொண்டு மட்டுமே சரியாக பார்த்துவிடமுடியாது. அதன் ஆற்றலை மட்டும் கொண்டு முழுதாக வாழந்துவிடமுடியாது. இந்தியா தொடக்கத்திலிருந்து, ஏன் தனது அறிவு வளர்ச்சி காலத்திலும் அறியாமையின் காலத்திலும் கூட இந்த உள்ளார்ந்த புரிதலை(insight) இழக்கவில்லை. அவள் பொருண்மையின் மகத்தான விதிகளிலும் விசைகளிலும் ஆர்வம்கொண்டிருந்தாள்; பொருண்மை அறிவியல் மீது கவனம் கொண்டிருந்தாள். அன்றாட வாழ்வின் கலைகளை ஒருங்கிணைக்க அவளுக்குத் தெரியும். ஆனால், மீபொருண்மையுடன் சரியாக இணையாதவரை பொருண்மை தனது சரியான பொருளை அடைவதில்லை என்று அவள் கண்டாள். இந்த பிரபஞ்சத்தின் சிக்கலை இன்றைய மனித சொல்லாடலினால்(terms) விளக்கிவிட இயலாது என்பதையும் அவனது மேலோட்டமான ஒளியைக் கொண்டு பார்த்துவிட இயலாது என்பதையும் அவள் உணர்ந்தாள். இதைக் கடந்த ஆற்றல்கள் உண்டென்பதையும், மனிதனுக்குள்ளே இருக்கும் ஆற்றல்களை அவன் அறிவதில்லை, அவன் அறிவது அவனில் சிறு பகுதியையே என்றும், காணக்கூடியவற்றைக் காட்சிக்கு அப்பாற்பட்டவையும், உணரக்கூடியவற்றை உணர்வுக்கு அப்பாற்பட்டவையும், எல்லைக்குட்பட்டதை முடிவிலியும் சூழ்ந்துள்ளது என்பதையும் அவள் காண்கிறாள். மேலும், இந்தியா கண்ட மனிதன் தன்னை கடக்கும் ஆற்றல் கொண்டவன். அவன் இன்னும் ஆழமாகவும் முழுமையாகவும் மாறக்கூடியவன் என்ற உண்மை சமீபத்தில் ஐரோப்பியாவில் தோன்றிய, இன்னமும் கூட அவர்களது பொது அறிவுக்கு மிக பெரிதாக இருக்ககூடிய உண்மை. அவள், மனிதனைக் கடந்து எண்ணற்ற கடவுளர்களையும், கடவுளர்களைக் கடந்து கடவுளையும், கடவுளைக் கடந்து விவரிக்க இயலா மனிதனின் சொந்த சாசுவதத்தைக் கண்டாள். நம்முடைய வாழ்க்கையைக் கடந்த பல வாழ்க்கைகளும், நம்முடைய தற்போதைய மனதைக் கடந்த பல மனங்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மாவின் பேரழகையும் கண்டாள். பிறகு, எந்த அச்சத்தையும் சிறுமையையும் அறிந்திராத, ஆன்மிகம், அறிவு, அறம், தைரியம் என்று எதிலிருந்தும் பின்வாங்காத அவளது உள்ளணர்வின் சாதுவான துணிவுடன் அவள் பிரகடனம் செய்தாள்; மனிதனால் ஒரு கடவுளாக முடியும், கடவுளுடன் ஒன்றாக முடியும், விவரிக்க இயலா பிரம்மனாக முடியும். அவன் தனது விருப்புறுதியையும்(Will) ஞானத்தையும் சரியாக பயிற்றுவிப்பான் எனில் அவன் இவற்றில் அடையமுடியாத எதுவுமில்லை. மேலும் தனது மனநிலையை தனித்துக்காட்டும் நடைமுறை தர்க்கம், அறிவியல் உணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்முறை(Organized method) ஆகியவற்றுடன் உடனடியாக தனது பாதையைத் தேடத் தொடங்குகிறாள். அவளது பல கால உள்ளார்ந்த புரிதலால், பயிற்சியால் அவளது ஆன்மிகம், உளப் பண்பு, முடிவிலியைப் பற்றிப் பிடித்து அதை அடையும் பெரும் விழைவு, அழிக்கமுடியாத சமய உணர்வு, இலட்சியவாதம், யோகம், கலை மற்றும் தத்துவம் என்று இவையனைத்தும் அவளுள் பொதிந்துள்ளன.
ஆனால் இது அவளது ஒட்டுமொத்தமான மனநிலையாக ஆன்மாவாக இல்லை, அப்படி இருக்கவும் முடியாது. ஆன்மிகம், உலகத்தில் சூன்யத்திலிருந்து செழித்தோங்குவது அல்ல. நாம் இந்தியாவின் கடந்தகாலத்தை பார்க்கும்பொழுது, அவளது வியப்பிலாழ்த்தும் உயிர்சக்தியையும், என்றும் தீராத வாழ்வின் இன்பத்தையும், வாழ்வின் ஆற்றலையும், கற்பனைக்கெட்டா தொடர் படைப்பூக்கத்தையும், நம்மால் பார்க்கமுடிகிறது. குறைந்தது மூவாயிரம் வருடங்களாக கண்டிப்பாக அதற்கும் மேலாக, அவள் பெரும் அளவில், அறுபடாமல், பிரம்மாண்டமாக, குன்றாத பன்முகத்தன்மையுடன் உருவாக்கிகொண்டிருக்கிறாள். குடியரசுகளை சாம்ராஜ்யங்களை பேரரசுகளை, தத்துவங்களை, பிரபஞ்சத் தோற்ற அறிதல்களை அறிவியல்களை, நம்பிக்கைகளை(creed), கலைகளை, கவிதைகளை, எல்லாவித நினைவுச்சின்னங்களை, மாளிகைகளை, கோவில்களை, குமுகங்களை, சமூகங்களை, சமய மரபுகளை, சட்டங்களை சடங்குகளை, பொருண்மை அறிதல்களை, உள அறிதல்களை, யோக முறையை, அரசியல் கட்டமைப்பை, மேலாண்மையை, ஆன்மீக கலைகளை,உலகாயத(Wordly) கலைகளை, வணிகங்களை, தொழிற்சாலைகளை, நுண் கைவினைகளை- என்று இந்த பட்டியல் முடிவில்லாதது. மேலும் இதில் உள்ள ஒவ்வொன்றிலும் அதிக செயல்பாடுகள் உள்ளன. அவள் உருவாக்கிக்கொண்டேயிருக்கிறாள்; நிறைவதில்லை, தொய்வடைவதில்லை. அவள் முடிவடையப் போவதில்லை. வெளித்தோற்றத்தில் அவள் ஓய்வெடுப்பதற்கான இடமும் தேங்குதலுக்கான தரிசாவதற்கான நேரமும் கண்ணில் படுவதாகயில்லை. அவளது எல்லைகளையும் கடந்து விரிகிறாள். அவளது கப்பல்கள் சமுத்திரங்களை கடக்கின்றன. அவளது செல்வங்களில் பெருமளவு யூதேயாவிலும்(தற்போதைய ஜெருசலேம் பாலஸ்தீன பகுதி) எகிப்த்திலும் ரோமிலும் ததும்பி நிறைக்கின்றன. அவளது குடிகளால்(colony) கலைகள், காவியங்கள்(epic) நம்பிக்கைகள்(creed) ஜப்பானிய இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களில்(Archipelago) பரப்பட்டன. அவளது தடங்கள் மெசொப்பொதாமியாவின் மண்ணில் காணப்படுகின்றன. அவளது சமயங்கள் சீனாவையும் ஜப்பானையும் கைப்பற்றுகின்றன, மேற்கில் பாலஸ்தீன் அலெக்ஸாண்ட்ரியா வரை பரவுகின்றன. மேலும் உபநிடதங்களின் படிமங்கள், புத்தரின் கூற்றுகள் ஏசுவின் உதட்டில் எதிரொலிக்கின்றன. எல்லா இடங்களிலும், தன் சொந்த மண்ணில் உள்ளது போலவே, உயிர் ஆற்றலின் வெள்ளப்பெருக்குள்ளது. அவளது பண்டைய கட்டிடக்கலையில், சிற்பக்கலையில், கலையில், கட்டுபாடு, மேன்மையை முழுதும் வெளிப்படுத்தாமை, இடைவெளிகள் ஆகியவை இல்லை என்றும் அவள் முயற்சித்து எல்லா சிறு பிளவுகளையும் நிரப்புபவளாகவும், ஒவ்வொரு அங்குலத்தையும் உபரிகொண்டு நிறைவு செய்பவளாகவும் இருக்கிறாள் என்று ஐரோப்பிய விமர்சகர்கள் முறையிடுகின்றனர். நன்று! அது குறையோ இல்லையோ. அது அவளது உயிர் பெருக்கின், அவளுள் உள்ள முடிவிலியின் பெருக்கின் அத்தியாவசியம். அவளது மேன்மைகளை(riches) அவள் கொண்டாடுகிறாள். முடிவிலியானது ஒவ்வொரு அங்குலத்தையும் கிளர்ந்தெழும் உயிராலும் ஆற்றலாலும் நிறைத்துள்ளது. ஆகையால் அவள் அதை செய்தே ஆகவேண்டும்.
ஆனால் இந்த உச்சபட்ச ஆன்மீகமும், வாழ்வின் இன்பம் மற்றும் ஆற்றல் பெருக்கமும், படைப்பும் மட்டுமே இந்தியாவின் மொத்த ஆன்மாவையும் உருவாக்கவில்லை. வேறுபட்ட செல்வத்திற்கு பழக்கப்படாத கண்களுக்கே, இவ்விடம் குழப்பமிக்கதாகத் தெரியும்; உபரியின் ஆடம்பரமான ஒழுங்கின்மையாக, தெளிவான சமநிலை, வடிவமைப்பு, வரையறை அற்ற கட்டின்மையாக தெரியும். இந்திய ஆன்மாவின் ஆற்றல் என்பது வலுவான அறிவுத்திறன். அது ஒரே நேரத்தில் எளிமையும்(austere) மிகையும்(rich), வலிமையும் நுட்பமும், ஆற்றலும் மென்மையும், கோட்பாட்டில் மகத்துவமும் நுட்பங்களில் ஆர்வமும் கொண்டது. அதன் முதன்மையான தூண்டுதல் என்பது முறைமையும் ஒழுங்கும் தான். ஆனால், அந்த முறைமை என்பது உள்ளார்ந்த விதிகளுக்கான உண்மைக்கான தேடலின் விளைவாக, எப்போதும் விழிப்புணர்வு(conscientious) கொண்ட பயிற்சியை கருத்தில்கொண்டு கண்டெடுத்த முறைமை. இந்தியா முதன்மையாக தர்மம் மற்றும் சாஸ்திரங்களின் நிலமாக இருந்துவந்துள்ளது. அவள் ஒவ்வொரு மனிதனின் அல்லது பிரபஞ்ச செயல்பாட்டின் உள்ளார்ந்த உண்மையையும் விதிகளையும் தேடுகிறாள். அதன் தர்மத்தை கண்டுகொண்டபின் அதை விரிவான சித்திரமாக்க, வாழ்க்கை விதிகளில் அதன் பொருத்தத்தை விளக்க முயல்கிறாள். அவளது முதல் காலகட்டம் ஆன்மாவின் கண்டெடுப்பால் ஒளிமயமானது; இரண்டாவது காலகட்டம் தர்மத்தின் கண்டெடுப்பை முற்றுபெறச் செய்தது. மூன்றாவது காலகட்டம் சாஸ்திரங்களின் முதல் எளிய கருத்துருவாக்கமாக விரிந்தது. ஆனால் இவை முற்றிலும் வெவ்வேறானவை அல்ல. இவை மூன்றும் எப்பொழுதும் இருந்துள்ளன.
மூன்றாவது காலக்கட்டத்தில் உயிர்ச்சக்தியை அறிவியல் மற்றும் கலையாக விஸ்தரிப்பது பெரும் விகிதத்தில் நிகழ்ந்துள்ளது. அசோக காலக்கட்டத்திலிருந்து முகமதிய காலக்கட்டம் வரை உண்டான அறிவு உற்பத்தி என்பது வியப்பூட்டக்கூடியது. இன்றைய அறிவு என்பது மிஞ்சிய அறிவின் சிறு பகுதி. அந்த மிஞ்சிய அறிவென்பது என்றோ எழுதப்பட்ட அறியப்பட்ட அறிவின் சிறு பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அச்சு மற்றும் நவீன அறிவியல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இந்த அறிவு செயல்பாட்டிற்கு நிகரென ஏதுமில்லை. எல்லா ஆய்வுகளும் உற்பத்திகளும் ஞாபகம் மற்றும் அழியக்கூடிய பனை ஓலையின் உதவிகொண்டு தொழிநுட்ப வசதிகள் இன்றியே செய்து முடிக்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான இலக்கியம் என்பது தத்துவம் மற்றும் இறையியல், சமயம் மற்றும் யோகம், தர்க்கம் மற்றும் வியாக்யானம்(rhetoric), இலக்கணம் மற்றும் மொழியியல், கவிதை மற்றும் நாடகம், மருத்துவம் மற்றும் வானவியல், அறிவியல் என்ற எல்லைகளுக்குள் அடங்கிவிடக்கூடியதல்ல. அது அரசியல் மற்றும் சமூகம், ஓவியத்திலிருந்து நடனம் வரை, அறுபத்திநான்கு சாதனைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது, அப்பொழுது அறியப்பட்டவற்றுள் எவையெல்லாம் வாழ்வுக்கு பயனளிப்பவை அல்லது மனதிற்கு ஆர்வமூட்டக்கூடியவை, நடைமுறை வாழ்வின் சிறு நுட்பங்கள்; குதிரைகளை யானைகளை வளர்த்தல் மற்றும் பயிற்றுவித்தல் போல, எல்லாவற்றிற்கும் சாஸ்திரங்கள் இருந்தன கலைகள் இருந்தன, அவற்றிற்கான தொழில்முறை சொற்கள் இருந்தன, அவற்றுக்கு பேரளவிலான இலக்கியங்கள் இருந்தன. மிகப் பெரிதானவற்றுக்கும் மகத்தானவற்றுக்கும் சிறியவற்றுக்கும் அற்பமானவற்றுக்கும் என்று எல்லா துறைகளுக்கும் ஒரே அளவிலான, அனைத்தையும் இணைத்துக்கொள்கிற, செறிவான, நுண்ணிய அறிவையே பயன்படுத்தியுள்ளது. ஒருபக்கம், வாழ்வை எல்லாக் கூறுகளிலும் அறியவேண்டும் என்ற விழைவு, நிறைவடையாத ஆர்வம் உள்ளது. மற்றொரு பக்கம், ஒருங்கமையும் உணர்வு, பிசகாத முறைமை, ஒத்திசைந்த ஞானம் மூலம் வாழ்வை கடந்து செல்லுதல்; சரியான தாளத்தில், கதியில். ஆக, உள்பொதிந்துள்ள, ஓங்கிய ஆன்மீகம், தீராத படைப்பூக்கம், பகுத்தறிவு, அறவுணர்வு, அழகியல் உணர்வு ஆகியவை செயலின் உச்சியில் உள்ள, வலிமையான ஊடுருவுகின்ற பிசகாத அறிவு கொண்ட ஒரு மனம் இந்திய பண்பாட்டில் ஒத்திசைவை உருவாக்கியது.
கண்டிப்பாக, இந்த செழுமையான உயிர்ச்சத்க்தியும் அறிவுத்திறனும் இல்லையென்றால் இந்தியா தனது ஆன்மிகம் கொண்டு செய்தவற்றை அதிகளவில் செய்திருக்க முடியாது. வாழ்வை பாதி கொன்ற மற்றும் அறிவுத்திறனை ஒதுக்கிய, அச்சுறுத்திய மண்ணிலிருந்து ஆன்மீகம் செழிப்புற வளரும் என்று நினைப்பது பெருந்தவறு. அவ்வாறு வளரும் ஆன்மிகம் ஆரோக்கியமற்றதாக குழப்பமானதாக அபாயகரமான எதிர்வினைகளுக்கு உட்படக்கூடியதாக இருக்கும். ஒரு இனம் செழிப்பானதாக(richly) வாழும்போது ஆழமாக சிந்திக்கும்போது அங்கு ஆன்மீகம் தனது ஆழ அகலங்களை கண்டடைகிறது. மேலும் அது அறுபடாததாக பலதரப்பட்ட அளவில் பயனளிப்பதாக இருக்கிறது. நவீன ஐரோப்பாவில் உயிர் விசையின், அறிவுப் பெருஞ் செயல்களின் நெடுங்கால வெடிப்பிற்கு பின்பே ஆன்மிகம் வெளிப்படத் தொடங்கியது. ஆன்மிகம், முன்பு இருந்தது போன்று வாழ்வுத் துயரின் மருத்துவனாக அல்லாமல் ஆழமான மிகப்பெரிதான தெளிவிற்கு தொடக்கமாக இருக்கும் சிறு நம்பிக்கையுடன் வெளிப்பட்டது. இந்திய ஆன்மீகத்தில் புத்த சிந்தனையையும் உலகை புறந்தள்ளும் மாயாவாதத்தையும் ஐரோப்பிய கண்கள் பார்க்கின்றன. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், இது வீழ்ச்சியின்போது அதிகளவில் வெளிப்பட்ட தத்துவநிலையின் ஒரு முகமே ஆகும். அதுவும் கூட, ஆன்மீகம், அறிவுத்திறன், அறவியல் என்று ஒவ்வொன்றையும் தனித்தனியாக அதன் எல்லைக்கே சென்று அதன் உச்ச பட்ச சாத்தியத்தை அறியவிழையும் இந்திய மனம் ஒரு திசையில் சென்று கண்ட ஒரு முடிவு. ‘உபரி’ இன்றி, ஞானத்திற்கும் சிந்தனைக்கும் அனுபவத்திற்கும் எதிராக இருக்கும் மந்தமான சாமானிய மனதின் எல்லைகளை உடைக்க முடியாது என்பதை அது அறிந்தே இருந்தது. தத்துவ சிந்தனையின் ஒவ்வொரு கோடுகளையும் ஆன்மீக அனுபவத்தின் ஒவ்வொரு கோடுகளையும் உச்ச பட்ச தூரத்திற்கு கொண்டு சென்று அந்தப் புள்ளியிலிருந்து எல்லா இருப்பையும் காண விரும்பியது. அப்படி நின்று காண்கையில், அது தரும் உண்மையையோ ஆற்றலையோ அடையவிரும்பியது. அது தெய்வ இயல்பின் முழுமையை அறிய முற்பட்டது. அவ்வியல்பையும் கடந்து எவ்வளவு மேலாக செல்லமுடியுமோ அவ்வளவு; அதிதெய்வீகத்திற்குள். அது ஆன்மீக நாத்திகத்தை(Spiritual atheism) உருவாக்கியப்பொழுது அதன் சாத்திய எல்லைக்கே சென்றது. அது உலகாயத நாத்திகத்தில்(materialistic atheism) ஈடுபடும் பொழுதும், தணியாத அறிவுத் தீவிரத்தின் விளைவால் ஓரப் பார்வைக்கொண்டே அதில் ஈடுபட்டாலும் கூட, அதை நேர்மையாக, துணிவாக, பட்டவர்த்தனமாக, இலட்சியவாதத்துடனும் அறவியலுடனும் சிறிதளவும் சமரசம் இன்றி உருவாக்கியது.
எல்லா இடத்திலும் இந்தப் பண்பை காணமுடியும். இந்திய மனதின் இலட்சிய கருத்துக்கள், மனித ஆன்மாவின் சுய-பிரகடனத்தின், அதன் சுதந்திர தாகத்தின் உச்சத்தை உள்ளடக்கியது. அதே நேரத்தில் அது ஆத்ம தியாகத்தின், சரணடைதலின், தன்னளித்தலின் உச்சத்தையும் உள்ளடக்கியது. இலட்சிய செழிப்பான வாழ்வு உச்ச அழகை நோக்கிச் சென்றது, இலட்சிய எளிய வாழ்வு உச்ச தன்னிறைவான நிர்வாணத்தை நோக்கிச் சென்றது. அதன் கருத்துக்களாலேயே, இறுகிய வாழ்க்கை முறைகளாலேயே தன் உள்ளுணர்வுகள் குருடாக்கப்படாத அளவிற்கு அவை தெளிவானவை துணிவானவை. சாதிய முறையை அதன் சமூக கட்டமைப்பின் சின்னமாக கொள்ளும்படி அது விதிக்கப்பட்டால், மனித மனமும் உயிரும் சாதியைக் கடந்தது என்று சாதியை விட்டகழ அது மறந்ததில்லை. அது, கீழான மனிதனிலும் நாராயணனைக் கண்டது. எல்லா அரசியல் தேவைகளும் சூழ்நிலைகளும் முடியாட்சிக் கொள்கையை ஆதரிக்கச்செய்தால், அரசரின் தெய்வீகத்தை அறிவிக்கச் செய்தால் தன் முந்தைய குடியரசுப் பிராந்தியங்களை கைவிடச்செய்தால்,குடியரசை மேம்படுத்தமுடியாமல் போனால், அது கிராம அளவில், மன்ற அளவில் சாதிக்குள் குடியரசுக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அது முதலில் மக்களில் தெய்வீகத்தை முன்னிறுத்தியது, ஆகையால் அரசரைப் பார்த்து, “ அரசே, நீ மக்களின் முதன்மை சேவகன் இன்றி வேறு யார்? ” என்று அதனால் கேட்க முடிந்தது. அது முன்வைத்த பொற்காலத்தின் கருத்தென்பது ஆன்மீக அரசின்மை(free spiritual anarchism). அதன் ஆன்மீக தீவிரம் கூட புலனின்பங்களை மறுக்கவில்லை. அதிலும்கூட புலன் அனுபவத்தின் தீவிரத்தையும் ஆழத்தையும் கண்டது. நேரெதிரானவற்றை பின்தொடர்தல் எந்தவித முறைகேடுக்கும் வழிவகுக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஹெடோனிஸ(Hedonism)2 காலகட்டத்தில் கூட ஐரோப்பாவில் பலமுறை உருவான சீர்கேடு போல இங்கு உருவாகவில்லை. இந்திய மனம் ஆன்மீகமானதும் அறம்சார்ந்ததும் மட்டுமல்ல அது அறிவுத்திறனும் கலையுணர்வும் கொண்டது. அறிவுத்திறன் மற்றும் அழகின் ஒத்திசைவு இரண்டும் ஒழுங்கின்மைக்கு எதிரானவை. எல்லா தீவிரத்திலும் இந்திய மனம் அத்தீவிரத்தில் விதியை கண்டடைகிறது. அதன் பயன்பாட்டின் வரையறையையும் கட்டமைப்பையும் கண்டடைகிறது. இதுவல்லாமல், தன்னளவிலேயே பொதிந்த ஒரு குணம், ஒருங்கிணைக்கும் பண்பு, நேரெதிரானவற்றை சமன் செய்கின்றது. ஒன்றின் உச்ச பட்ச தூரத்திற்கு சென்றாலும், அது அடைந்த ஞானத்தை ஒன்றிணைக்க திரும்புகிறது, ஒத்திசைந்த சமமான செயலை, அமைப்பை விளைவிப்பதற்காக. கிரேக்கர்கள் சுய-கட்டுப்பாடால் வந்தடைந்த சமநிலையை ஒத்திசைவை இந்தியா தனது அறிவுத்திறனால், அறவுணர்வால், அழகியல் முறையால், மனதின் படைப்புத் தூண்டுதலால் வந்தடைந்துள்ளது.
நான் இந்த உண்மைகளை சொல்லவேண்டியுள்ளது ஏனெனில் சமீப காலத்தில் முதன்மையானதாக இருக்கும் இந்திய மனதின், ஆன்மாவின் சில முகங்களை மட்டுமே பார்ப்பவர்களால் இவ்வுண்மைகள் புறக்கணிக்கப்படக் கூடியவையே. இக்காலம் என்பது கடந்தகால வீழ்ச்சியின் போது நிகழ்ந்த இறுதி படிதல் தான். அது வருங்காலத்தின் துவக்கப்புள்ளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இக்காலத்தில் இந்தியாவின் கடந்தகாலம் அழியாமல் இருக்கிறது. வேறு வடிவங்களெடுப்பதற்கு காத்திருக்கிறது. வீழ்ச்சி என்பது படைப்பூக்கத்தின் சரிவு, அதை எழுச்சியின் மகத்துவத்தை காணாமல் புரிந்துகொள்ளமுடியாது. புத்துயிர்ப்பு என்பது மீண்டுமெழுதல், அதற்கு உயிரளிப்பது அதே ஆன்மா தான்; அது எடுக்கும் வடிவங்கள் முற்றிலும் புதிதாக இருந்தாலும். நாம் புத்துயிர்ப்பின் சாத்தியங்களை, அது வெளிப்படுத்தும் ஆற்றல்களை அது திறக்கும் எல்லைகளை கணிப்பதற்கு நாம், இந்திய ஆன்மாவில் ஆதிக்கம் செலுத்தி அதைத் தூண்டுவது மீபொருண்மை என்ற கருத்தை விடவேண்டும். அதன் உண்மையான ஆதார ஸ்வரம் என்பது ஆன்மீக உணர்தல், அது ஒற்றை ஸ்வரம் அல்ல மாறாக பல் முகங்கள், பலவண்ணங்கள் கொண்டது. அது கையாள்வதில் நெகிழ்வானது; உச்ச ஸ்தாயியில் தீவிரமானது. ஆன்மீகதின் ஸ்வரமே எப்பொழுதும் ஆதிக்கம் கொண்டது, முதலாவது, நிலையானது, மீண்டும் மீண்டும் வரக்கூடியது, மற்றெல்லாவற்றிகும் துணையாவது. இந்தியா மகத்துவத்தின் முதல் காலகட்டம் ஆன்மீக காலகட்டம். அதில் அவள் ஆர்வத்துடன் உள்ளார்ந்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும், உள மற்றும் ஜட இருப்பின் புரிதலாலும் இருப்பின் உண்மையை தேடினாள். அப்பொழுது அவள் மேல் பதிந்த முத்திரையை அவள் ஒருபொழுதும் இழக்கவில்லை. அவள் அதை புதிய ஆன்மீக அனுபவத்தால் மேன்மையாக்கினாள். அவளது வீழ்ச்சி காலத்தில் கூட அவள் இழக்காத ஒன்று இது.
ஆனால் இந்த ஆன்மீக பண்பு அருவம், மறைவானவை புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்று மேல் நோக்கி மட்டுமே செல்வது அல்ல. அது சிந்தனையின் பல தளங்கள், வாழ்வின் வளங்கள் என்று கீழ்நோக்கியும் தன் ஒளியை வீசக்கூடியதுதான். ஆகவே இந்திய மகத்துவத்தின் நீண்ட இரண்டாவது காலகட்டம் அறிவின், அறவுணர்வின், ஆன்மீகத்தின் ஒளியில் வாழ்வை உருவாக்கவும் வழிநடத்தவும் ஞானமடைந்த விருப்புறுதியின்(will) காலகட்டம். சமஸ்கிருத பண்பாட்டின் உயரிய செவ்வியல் காலம் அறிவுத்திறன் அறிவியலின்,கலையின், இலக்கியத்தின், அரசியலின், சமூகவியலின், உலக வாழ்வின் மேம்பாடாக வளர்ந்த காலம். இந்த காலம் அழகியல் சார்ந்ததாக மட்டும் அல்ல உணர்வு, புலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. ஆனால் பழைய ஆன்மீகம் இந்த செயல்பாடுகளுக்கு பின்னணியிலும் இருந்துள்ளது. பின்னை செவ்வியல் காலகட்டம், கீழ்நிலை வாழ்வு உயர்வதையும் அதன் மேல் ஆன்மாவின் பண்புகள் சேர்வதையும் கண்டது. இது புராண தாந்திரீக அமைப்புகளின் மற்றும் பக்தி சமயங்களின் உணர்வு. இந்திய ஆன்மாவின் சிறந்த இறுதி மலராக மலர்ந்த வைணவம் சாராம்சத்தில், அழகை,உணர்வை, புலன்களை ஆன்மீகத்தின் சேவைக்காக எடுத்துக்கொண்டது. சுழற்சியின் ஒரு வளைகோட்டை அது முற்றுபெறச்செய்தது.
இந்த வளைகோட்டை தொடர்ந்து வந்த வீழ்ச்சியின் அந்திம காலத்தை பின்னடைதலின் மூன்று இயக்கங்கள் உருவாக்கின. முதலில், குறிப்பிடும் அளவிலான ஆற்றல் பெருக்கின் சரிவும், படைத்தல் இன்பத்தின் மங்குதலும்; வீழ்ச்சியின் காலகட்டத்தில் கூட இந்த ஆற்றல் சற்று மெச்சும் வகையிலும், சிறப்பாகாவும் இருந்தது, மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே முழு செயலின்மை நோக்கிச் சரிந்தது. ஆனாலும், பண்டைய மகத்துவதுடன் ஒப்பிடுகையில் அதன் வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகவே இருந்தது. இரண்டாவதாக, பழைய அறிவுச் செயல்பாட்டின் முடக்கம்(cessation), அறிவியல், படைப்பூக்க உள்ளுணர்வின் துயில். மீதமிருந்தது, கடந்தகாலத்து ஞானத்தின் பிழைப்புரிதலின் மீட்டல்களாக மாறியது. அறிவார்ந்த கடந்தகாலம் உருவாக்கிய எச்சத்தில் மனமும் உயிரும் இறுகியது. பழைய அதிகாரமும் ஆட்சியும் சர்வாதிகாரமாக இருகிற்று, பிறகு எப்பொழுதும் நடப்பது போலவே அவை தனது உண்மையான பொருளையும் ஆன்மாவையும் இழந்தன. இறுதியாக, ஆன்மிகம் எஞ்சுகிறது, ஆனால் கடந்த காலத்தின் பெரிதான தெளிவான ஞானக் கனலுடன் தற்போது எரிவதில்லை. தற்போது சில ஆன்மீக உண்மைகளை முன்வைக்கப்பட்டு பிற உண்மைகள் புறந்தள்ளப்படுகின்றன. இந்த இழிவு, இந்திய பண்பாட்டின் பெரும் பாய்ச்சலில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியது. தொடக்கம் மிக சிறப்பாக இருந்தது, வளர்ச்சி மகத்தானதாக இருந்தது ஆனால் ஒரு கட்டத்தில் முன்னகர்தல், தகவமைப்பு, புது மலர்தல் நிகழ்ந்திருக்க வேண்டும். பழைய நாகரீகம் சட்டென நின்றது, பாதி பின்னடைந்தது, பாதி தன் வழியைத் தொலைத்தது. சந்தேகமின்றி சாரம் எஞ்சியது இன்றும் இனத்தின் இதயத்தில் எஞ்சியுள்ளது, பழக்கங்களிலும் நினைவுகளிலும் மட்டுமல்ல அதன் செயல்களிலும் எஞ்சியுள்ளது, ஆனால் குழப்பத்தின் புகையால் மறைக்கப்பட்டுள்ளது. இதன் அகப்புற காரணங்களை விவாதிக்க அவசியமில்லை, ஆனால் இது உண்மை. இது புதிய மற்றும் முன்னறியாத சூழலை இந்திய மனம் சந்தித்ததின் கணநேர கையறுநிலை.
இந்தக் கணத்திலேயே ஐரோப்பிய அலை இந்தியாவை தாக்கியது. வாழ்வதற்கு ஆற்றலற்றவை அழிந்தன, பெரும்பாலானவை நீர்த்துப்போனது, மிஞ்சியவை உயிர்ப்பிழந்தன. இவையே புதிதான எதிரான ஒரு நாகரீகம் உள் நுழைந்ததின் முதல்கட்ட விளைவுகள். ஒரு புதிய செயல்பாடு வந்தது, ஆனால் அது தொடக்க நிலையில், அந்நிய கலாச்சாரத்தின் குழப்பமான நகலெடுப்பாக இருந்தது. தனது சொந்த நோக்கங்களே இறந்துபோதல், அந்நிய நோக்கங்களை பணிவாக நகலெடுத்தல் ஆகிய இரட்டை அழுத்தங்களால் போதிய வீரியமற்ற வாழ்வின் ஆற்றல் முழுகி அழிந்திருக்கும். இந்தத் தருணம் பிற நாடுகளுக்கு நாகரீகங்களுக்கு எவ்வளவு அபாயகரமானது இக்கட்டானது என்று வரலாறு நமக்கு காட்டுகிறது. அதிர்ஷ்டவசமாக, ஆற்றல் கணநேரம் தூங்கவே செய்தது, இறக்கவில்லை. இந்த ஐரோப்பிய பண்பாடு எந்த விதமான தற்காலிக மட்குதலையும் சிதைவையும் ஏற்படுத்தியிருந்தாலும், அது மூன்று தேவையான தூண்டுதல்களை அளித்தது. அது செயலற்று இருந்த அறிவு, விமர்சன தூண்டுதலை உயிர்ப்பித்தாது. அது படைப்புக்கான விழைவை விழிப்படையச் செய்தது. அது புத்துயிர்பெறும் இந்திய ஆன்மாவை, புதிய சூழ்நிலைகளை, கருத்துக்களை, அவற்றை உடனடியாக புரிந்துக்கொள்ளவதற்கான தொகுத்துக்கொள்ளவதற்கான வெற்றிகொள்ளவதற்கான தேவைகளை நேருக்கு நேராக சந்திக்கவைத்தது. தேசிய மனம் தனது கடந்தகாலத்தை புதிய கண்களுடன் கண்டது. அதே நேரத்தில் அது நவீன ஞானத்துடன் அதை பொருத்திப்பார்த்தது. இந்த விழிப்படைந்த பார்வையுடன் தூண்டுதலுடன் இந்திய மறுமலர்ச்சி எழுகிறது, அது தன் எதிர்கால பண்பை தீர்மானிக்கவேண்டும். பழைய ஆன்மீக ஞானத்தை அனுபவத்தை அதன் சிறப்புடன் ஆழத்துடன் முழுமையுடன் மீட்கவேண்டும், அதுவே முதல் மற்றும் முக்கியமான பணி. இந்த ஆன்மீகத்தின் ஒழுக்கு தத்துவத்தின், இலக்கியத்தின், கலையின், அறிவியலின் புதிய வடிவங்களுள் செல்ல வேண்டும், இது இரண்டாவது பணி. நவீன சிக்கல்களை இந்திய ஆன்மாவைக் கொண்டு சுயமாக கையாள வேண்டும், ஒருங்கிணைந்த ஆன்மீக சமூகத்தை உருவாக்குதலின் முயற்சி, இதுவே மூன்றாவது பணி, கடினமானதும் கூட. இந்த மூன்று பணிகளில் அது அடையும் வெற்றியின் மூலம் மானுடத்தின் எதிராக்காலத்தில் அதன் பங்கை அளவிடலாம்.
ஆன்மா, மெய்மைகளின் உயர் எல்லை. வாழ்வு, சாத்தியங்களின் கீழ் எல்லை. அது வளர்ந்து, இந்த மெய்மைகளை கொண்டு தனது உண்மைகளை நிறைவை அடைய எத்தனிப்பது. நமது அறிவுத்திறன், விருப்புறுதி(will), அறவுணர்வு, அழகுணர்வு ஆகியவை பிரதிபலிக்கும் ஆடிகள் கடத்துனர்கள். வாழ்வை மிகைப்படுத்தி அதை எழுச்சியூட்ட அழகுபடுத்த உயர் ஆற்றல்களை விளிப்பது, மேற்கின் வழிமுறை3. ஆனால், இந்தியாவின் வழிமுறை அதற்கு முரண்பாடானது. தனக்குள் ஆன்மாவை, உயர் ஆற்றல்களின் புலப்படாத் தீவிரங்களைக் கண்டடைவது, வாழ்க்கையை ஒரு வழியில் அமைத்து அதை ஆன்மாவின் வெளிப்பாடாக ஆன்மாவிற்கு செவிசாய்க்கக்கூடியதாக மாற்றுவது அதன் மூலம் வாழ்வின் ஆற்றலை அதிகரிக்கச்செய்வது அதன் வழி. அறிவுத்திறன், விருப்புறுதி, அறம், அழகியல் மற்றும் உணர்வுகளை அதன் சாமானிய நிலையில் இயங்கவைப்பதுடன், அவற்றை உயர் நிலைகள் நோக்கி எடுத்துச்செல்லுதல் இந்தியாவின் பண்பு. இந்தியாவில் மறுமலர்ச்சியின் பணி என்பது இந்த ஆன்மாவை, வாழ்வின் உயர் நோக்கை, ஆழ்ந்த சாத்தியங்களை மீண்டும் ஒரு முறை படைப்பூக்கமிக்கதாக, ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக மாற்றுவது. ஆனால் அது சற்று விழிப்படைந்ததாகவே உள்ளது. இந்திய செயல்பாடு இன்னமும் ஐரோப்பிய நோக்கு மற்றும் செயல்முறையின் தாக்கத்திலேயே முன்னகர்கிறது. நமக்குள் உள்ள ஆன்மாவிற்கு அவை அந்நியமானவை என்பதால் அச்செயல்பாடு எண்ணத்தில் எளிமையாகவும், வடிவத்தில் வலிமையற்றும், விளைவுகளில் பயனின்றியும் உள்ளது. ஏனெனில் அது நம்முடைய வேர்களிலிருந்து வரவில்லை என்பதால். ஒரு சில திசைகளிலேயே சுய ஞானத்தின் தெளிவான ஒளி தெரிகிறது. ஒரு பேரொளி வரும்பொழுதே நாம் இந்தியாவின் மறுமலர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை இன்றி உண்மையை பற்றி உரையாட முடியும்.
***
- ஜேம்ஸ் ஹெச் கசின்ஸ் 1918ல் எழுதிய ‘Renaissance in India புத்தகம்’. ஜேம்ஸ் ஹெச் கசின்ஸ் ஐயர்லாந்தில் பிறந்தவர். எழுத்தாளர், நடிகர், விமர்சகர், ஆசிரியர் மற்றும் கவிஞர். ரபீந்திர தாகூர், ருக்மினி தேவி அருண்டேல் , அப்துர் ரஹ்மான், மகாத்மா காந்தி போன்றவர்களுடன் தொடர்பு கொண்டவர். ஜெயராம் என்ற புனை பெயரிலும் எழுதினார்.
- Hedonism – இன்பவியல் என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம். இது இன்பமே மதிப்புப்பெற்ற ஒரே இலக்கு என்ற மெய்யியல் கோட்பாடு ஆகும்.
- கசின்ஸ் சொன்ன பிராத்தனைக்கும்(invocation) தூண்டுதலுக்கும்(evocation) இடையிலுள்ள வித்தியாசம் – ஸ்ரீ அரவிந்தரின் குறிப்பு.
சியாம்
சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.
வாழ்த்துக்கள் ஜீவா….